– எஸ். சுரேஷ் –
மரணத்தைப் பற்றி, மிகையின்றி
நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.
நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை
தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.
கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை
அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்!
சில சமயம் அதற்கு பலம் போதாது,
பறக்கும் ஒரு ஈயைக்கூட தாக்கி வீழ்த்த முடியாது.
எத்தனை எத்தனை கம்பளிப்பூச்சிகள்
அதை ஊர்ந்து கடந்திருக்கின்றன.
எத்தனை மொட்டுக்கள், முளைகள்,
கரங்கள், செதில்கள், கொடுக்குகள்,
மணவறைச் சிறகுகள், குளிர்கால உறைகள்
அரைமனது வேலையில் அது
தோற்றுப் போனதைக் காட்டுகின்றன
வெறுப்பால் பயனில்லை
போர்களாலும் ராணுவப் புரட்சிகளாலும் கைகொடுத்தும்
இதுவரை பெரிதாய் உதவவில்லை.
முட்டைகளுக்குள் இதயங்கள் துடிக்கின்றன
குழந்தைகளின் எலும்புகள் குருத்து விடுகின்றன.
விதைகள், கடினமாய் உழைத்து,
தங்கள் முதல் சிறு இரு இலைகளாய் முளைவிடுகின்றன
உயர்ந்த மரங்களும் சில சமயம் வீழ்கின்றன
இது சர்வவல்லமை கொண்டது என்பவன்
ஒரு வாழும் சான்றாவணம்
அப்படியில்லை என்பதற்கு
ஒரு கணமேனும்
இறவாமையை இயல்பாய்க் கொள்ளாத
உயிரில்லை இவ்வுலகில்
மரணம்
எப்போதும் அந்த ஒரு கணம்
காலம் தாழ்த்தியே வந்து சேர்கிறது.
கண்ணுக்குத் தெரியாத கதவின்
நாதாங்கியை வீணாய்ப் பிடித்திழுக்கிறது.
நீ இத்தனை தூரம் வந்துவிட்டதை
அது இல்லையென்று செய்துவிட இயலாது.
– விஸ்லாவா ஸிம்போர்ஸ்கயா
முதுமை குறித்தும் மரணத்தின் நீங்காத அச்சுறுத்தல் குறித்தும் சென்ற வாரம் பேசினோம். இவ்வாரம் மரணத்தை மட்டும் தனியாக கவனிப்போம்.
மரணம் நமக்குப் புதிதல்ல. முன்னறிவிப்பு இன்றியும், கட்டியம் கூறியும் ஏதோ ஒரு வடிவில் அது வருவதை நாம் எதிர்கொண்டதுண்டு. முன்னறிவிப்பின்றி வரும் மரணம் உயிரைப் பறிப்பதைத் தவிர இறப்பவர்களின்மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. எச்சரித்தபின் வரும் மரணம் சாகப்போகிறவரையும் அவரது நேசத்துக்கு உரியவர்களையும் அச்சுறுத்துகிறது. இப்படிப்பட்ட கணங்களில்தான் நாம் நம் வாழ்வைப் பற்றி முழுமையாய் சிந்தித்துப் பார்க்கிறோம்: நாம் செய்த பிழைகள், நாம் புறக்கணித்த பாதைகள், நம் தேர்வுகள் என்று பல. நம் வாழ்வு ஒரு சில காட்சிகளாய்ச் சுருங்குகிறது, வாழ்க்கையில் எது முக்கியம் என்பது தெளிவாகிறது. என் நண்பனின் தந்தைக்கு ப்ரோஸ்டேட் கான்சர் வந்திருந்தது, அவர் என்னிடம் சொன்னது இது – “எனக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது, ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகள் என்னுடன் இருப்பதற்காக அமேரிக்காவிலிருந்து வந்திருக்கின்றனர். என் பேத்தியைப் பார்த்தாயிற்று. இன்னும் என்ன வேண்டும், எனக்கு? நான் திருப்தியாக இருக்கிறேன்”.
இப்படிப்பட்ட சோதனைக் காலங்களில் நாம் நம் மத நம்பிக்கைகளுக்குத் திரும்புகிறோம். மரணத்தை ஏற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கவே சமயங்கள் இருக்கின்றன என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. வாராணசி போன்ற திருத்தலங்கள் மரணத்தோடு தொடர்பு கொண்டவை. மரணத்துக்கு அருகில் இருப்பவர்கள் வாராணசி வருகின்றனர். மரணப் படுக்கையில் விழுந்தவர்கள் தங்குமிடம் அது, இங்கு சாகும்வரை பஜனைகள் செய்கின்றனர். வாராணசி அமைதியளிக்கும் நகரம் (அதே சமயம், பலருக்கும் இந்த நகரம் பிழைக்க வழி செய்து தருகிறது).
மரணம் நம் கர்மவினையின் நேரடி விளைவு என்று சிலர் சொல்கின்றனர். வேறு சிலர் இந்த உலகையே மகோன்னதமான ஒரு நாடகம் அரங்கேறும் பிரம்மாண்டமான மேடையாகப் பார்க்கின்றனர். பிறப்பும் மரணமும் மாயை என்ற இந்த நாடகத்தின் இருவேறு பாகங்களாகின்றன. நாம் நேசித்த ஒருவர் மரணமடைவதன் வலி எளிதில் மீள முடியாதது என்ற நிலையில், இந்தக் காயங்களை ஆற்ற சமய நம்பிக்கை உதவுகின்றனர். பெருமளவில் அது வெற்றியும் பெறுகிறது என்று நினைக்கிறேன்.
மரணத்துக்கும் நம்பிக்கைக்கும் உள்ள உறவு முரண்தன்மை கொண்டதாக சில சமயம் தோற்றமளிக்கலாம். தங்கள் நம்பிக்கைக்காக கொல்லப்படும்போது, “உன்னைக் காக்க வேண்டிய கடவுள் இப்போது எங்கே?” என்ற கேள்வியே கேட்கப்படுகிறது. வெவ்வேறு முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை படையெடுத்து படுகொலைகள் செய்தபோதும் சரி, செங்கிஸ் கானின் படையினர் முஸ்லிம்களை படுகொலை செய்தபோதும் சரி, ஜெர்மனியில் யூதர்கள் ஒழிக்கப்பட்டபோதும் சரி, “கடவுள் எங்கே?” என்ற கேள்வியே கேட்கப்பட்டது, அதிலும் குறிப்பாக, “எங்கே உன் கடவுள்?” என்றுதான் கேட்டார்கள். தோற்றுப்போனவர்கள் தங்கள் தெய்வநம்பிக்கையை இழப்பார்கள் என்பதுதான் பொது நம்பிக்கை. ஏனெனில், தெய்வநம்பிக்கை தோற்றுப் போனவர்களைக் காப்பாற்றவில்லை என்பது தெளிவு. ஆனால் தோல்வியடைந்தவர்களே மேலும் தீவிரமாக தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்கின்றனர். அவர்கள் தங்கள் சம்பிரதாயங்களைத் தீவிரமாகக் கடைபிடிக்கின்றனர், கடவுள் நம்பிக்கை இரட்டிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத நிலையில் கடவுள் நம்பிக்கை மட்டுமே அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.
இலக்கியத்தில் மரணம் நிறைய பேசப்பட்டிருகிறது, மிகச்சிறந்த படைப்புகள் மரணம் குறித்து எழுதப்பட்டிருக்கின்றன. ஜேம்ஸ் ஜாய்ஸ் கதையொன்று, ‘Dead’. வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீது மரணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பேசும் இந்தக் கதையைத் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். மரணமும் நினைவும் சார்ந்த உளவியலை மிக அருமையாக ஆய்வு செய்யும் படைப்பு இது. தாராசங்கர் பந்தொபாத்யாயின் ஆரோக்ய நிகேதன், மரணத்தைப் பற்றிய நாவல்தான். கதை நெடுக மரணத்தை எதிர்கொள்கிறோம், அதிலிருந்து மனிதர்கள் எவ்வாறு வெவ்வேறு வகைகளில் மீள்கின்றனர் என்பதைப் பேசும் நாவல் இது: சிலர் மரணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், சிலர் எந்த எதிர்ப்புமின்றி சரணடைகின்றனர், சிலர் வேறு வழியில்லை என்று ஏற்றுக்கொள்கின்றனர், சிலர் வன்மையாகப் போராடுகின்றனர், சிலர் அதை முழு மனதோடு வரவேற்கின்றனர் (ஆரோக்கிய நிகேதன் அடிப்படையில் உத்தமமான ஒரு இந்திய நாவல், அதன் பாத்திரங்களின் முடிவுகளை இந்திய வாசகர்களால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் அன்னிய வாசகர்களுக்கு இது வினோதமாக இருக்கும்). பாக்னரின் ‘As I Lay Dying’ என்ற நாவல் ஒரு தாயின் மரணத்தை அவளது குடும்பத்தினர் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற கதை. தாமஸ் மன் எழுதிய ‘Magic Mountain’ என்ற கதையின் சானடோரியத்தில் மரணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஸ்வீடிஷ் இயக்குனரான இன்க்ரிட் பெர்க்மான் மரண நினைவாகவே இருந்தார். உலக சினிமா வரலாற்றின் மிகவும் புகழப்பட்ட துவக்க காட்சி அவரது செவன்த் சீல் என்ற படத்தில் வருவதாகவே இருக்கும். அதில் மரணம், கருப்பு ஆடை அணிந்திருக்கும், ஒரு போர்வீரனுடன் செஸ் ஆடிக் கொண்டிருக்கும். மரணத்தின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அந்தப் போர் வீரன் செய்யும் முயற்சிகளை திரைப்படம் விவரிக்கும். பெர்க்மனின் ‘Cries and Whispers’ கான்சரால் இறந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை, அவள் தன் சகோதரிகளில் இருவருடன் கொண்டுள்ள உறவைச் சித்தரிக்கிறது. ‘Winter Light’ மரணத்தையும் நம்பிக்கையையும் இணைத்துப் பேசுகிறது. பெர்க்மானின் சிறந்த படங்களில் சில என்று இவை அனைத்தையும் நாம் கருத முடியும். கார்ல் தியோடர் ட்ரேயர் இயக்கிய திரைப்படம் ‘Gertrude’. அது மரணம், நம்பிக்கை, அதிசயங்கள் என்ற மூன்றுக்குமிடையே உள்ள உறவைப் பேசுகிறது.
கவிதையில் ‘Do not go gentle into that good night’ என்ற டிலன் தாமஸ் கவிதை மிகவும் புகழ்பெற்றது. கடைசி மூச்சு வறை விட்டுக்கொடுக்காமல் போராடும்படி அதில் அவர் தன் தந்தையிடம் வலியுறுத்துகிறார். இங்கே பாரதியார் இருக்கிறார், காலா என் காலருகே வாடா, எட்டி உதைக்கிறேன் என்று யமனை அழைக்கிறார். ஆனால் இதுவரை பார்த்திருக்கிறோம், விஸ்லாவா எதுவானாலும் முற்றிலும் மாறுபட்ட பார்வையை அளிக்கிறார். இங்கே அவர் மரணத்தோடு உரையாடுகிறார், நமக்கு, ‘Death, without Exaggeration’ என்ற கவிதை கிடைக்கிறது.
அவர் மரணத்தைக் கண்டு ஆத்திரப்படுவதில்லை. மாறாக, அதைப் பார்த்துச் சிரிக்கிறார்:
இது சர்வவல்லமை கொண்டது என்பவன்
ஒரு வாழும் சான்றாவணம்
அப்படியில்லை என்பதற்கு
கவிதையின் இறுதியில் ஒரு திருப்பத்தை அளிக்கிறார், அது மரணத்துக்கு ஒரு புது பரிமாணம் தருகிறது –
கண்ணுக்குத் தெரியாத கதவின்
நாதாங்கியை வீணாய்ப் பிடித்திழுக்கிறது.
நீ இத்தனை தூரம் வந்துவிட்டதை
அது இல்லையென்று செய்துவிட முடியாது.
இப்படி யோசிக்க ஒரு மாபெரும் கவிஞரால் மட்டுமே முடியும். விஸ்லாவா அவர்களில் சிறந்தவர் என்பதை நான் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.