அந்த முகம் என் முன் தெரிகிறது,
அதை வருட கை நீட்டும்பொழுது மறைகிறது.
வேறொரு முகம் மெதுவாகத் தோன்ற,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்.
தெரிந்த முகம்தான், ஆனால் யாரென்று தெரியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் மறைகிறது.
அடுத்து தோன்றும் முகம், பரிச்சயப்பட்ட முகம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
நான் கை நீட்டி அதைத் தொடுகிறேன்.
எனக்குள் சந்தோஷம்.
லேசாகப் புன்னைகைக்கிறேன்.
“என்னப்பா, இன்னிக்கி ரொம்ப சந்தோஷமா இருக்க?”
என்ற குரல் கேட்டவுடன் அந்த முகம் மறைகிறது.
தெரியாத ஒருவன்.
“சாப்பிடலாம் வா. அம்மா கூப்பிடுகிறாள்,” என்கிறான்.
நான் கண்ணை மூடிக் கொள்கிறேன்.
மறுபடியும் அந்த முகத்தை காண ஏக்கமாய் இருக்கிறது.
ஆனால் மறைந்த முகம் மீண்டும் வருவதில்லை.
ஒளிப்பட உதவி – artcameroon.com