எதற்காக எழுதுகிறேன்? – சத்யராஜ்குமார்

சத்யராஜ்குமார்

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. கேட்கப்படும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் கிடைக்குமென்றாலும், ஒரே ஆளிடமும் எல்லா சமயத்திலும் இதற்கு ஒரே ஒரு பதில் இருக்காது. குறைந்தபட்சம் என்னுடைய அனுபவம் அப்படித்தான் இருக்கிறது.

எந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படுகிறேன், எந்தக் காலகட்டத்தில் கேட்கப்படுகிறேன் என்பதைப் பொறுத்து பதில் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது.

‘எதற்காக எழுத ஆரம்பித்தேன்’ என்பதில் இருந்து துவங்க வேண்டும்.

படித்த புத்தகங்கள் மனசுக்குள் கலைடாஸ்கோப் பிம்பங்களை எழுப்ப காகிதத்தில் அவற்றைக் கொட்டுவது படித்தலின் நீட்சியாகத்தான் ஆரம்பித்தது.

வீட்டில் கதைகளைப் பற்றிய விவாதங்கள் நடக்கும். எழுதுபவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிக் கொள்வார்கள். கதை எழுதுபவருக்குப் புத்தகங்களில் அதிகப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. பெயரைக் கொட்டை எழுத்தில் வெளியிடுவதையும் கவனிக்க முடிந்தது. பத்திரிகைகளைத் தபாலில் அணுக முடிவதையும், எழுத்தாளர்களுக்கான புகழையும் பார்த்து அச்சில் எழுத வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.

ஒப்பீட்டளவில் அப்போதைய கால கட்டத்தில் பிரபல அச்சிதழ்களில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. வீடுகளில் வானொலிக்கு அடுத்தபடியாக அவையே பிரதான பொழுதுபோக்கு சாதனமாயிருந்தன. குறிப்பிட்ட தரத்தில் எழுதுவது அவசியமாயிருந்தது. என் முதல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு ப்ளஸ் டூ லெவெல் பையன் எஸ். ஏ. பி, ராகிரா, ஜராசு போன்ற ஜாம்பவான்கள் ஆட்சி நடத்தும் குமுதத்தில் எழுத முயற்சி செய்தால் வேறென்ன ஆகும்.

ஊர் பேர் தெரியாத புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு பிட் நோட்டீஸ்தனமான பத்திரிகையில்தான் ஒரு கதை எழுத முடிந்தது. எதிர்பார்த்த பேரும், புகழும், அங்கீகாரமும் அதனால் கிடைக்கவில்லை.

“எவ்வளவு குடுத்தாங்க?”

“என்ன புக் இது? இதுல படமே இல்லையே?”

மொத்தத்தில் நான் பேப்பரில் எழுதி நாலு பேரிடம் வலியச் சென்று கொடுப்பதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஸோ, எதற்காக எழுதுகிறேன்? அந்தச் சமயத்தில் கேட்டிருந்தால் தெளிவாக ஒரே ஒரு பதில்தான்.

புகழ்.

எழுத்தை நீ வாசகர்களிடம் சேர்ப்பது முக்கியமில்லை. எழுத்து வாசகர்களை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். எனக்கு மனதில் பட்டதை சுவாரஸ்யமான மொழியில் பகிர்வதற்காக எழுத ஆரம்பித்தது, எப்படியாவது பகிர வேண்டும் என்பதிலிருந்து இப்படித்தான் பகிர வேண்டும் என்ற சட்டதிட்டத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டது.

பிரபல வார இதழ்களில் எழுதிப் புகழ் பெற வேண்டும்.

இலக்கு தெளிவானதும் அதை நோக்கி நகர்வது எளிதாகி விடுகிறது. அதைத்தான் இலக்கியம் என்கிறோம். வார இதழ் இலக்கியம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் சாவி, அதன் பின் இதயம் சிறுகதைக் களஞ்சியம், தாய், இதயம் பேசுகிறது, குமுதம், விகடன்,கல்கி, அமுதசுரபி, கலைமகள் இப்படி நான் எழுதும் பத்திரிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. வாசகர் கடிதங்கள் வீட்டுக்கு வந்தன. வாசகர்களும் தேடி வந்து சந்தித்து உரையாடி விட்டுப் போனார்கள். நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், “யார் அதுன்னு கேட்டிங்களே இவர்தான் சத்யராஜ்குமார்” என்று யாராவது ஒருவர் யாராவது இன்னொருவரைக் கூட்டி வந்து அறிமுகம் செய்வார்கள். இதோ நீ கேட்ட ப்ராபல்யம் கிடைத்து விட்டது. இதற்காகத்தானா எழுதுகிறேன்? இல்லை போலிருக்கிறது. அப்படி இருந்தால் அதையேதானே இன்னமும் செய்து கொண்டிருந்திருப்பேன்.

“புக்ல எழுதினா பணம் கிடைக்குமா?” ஒவ்வொரு எழுத்தாளனையும் யாராவது ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டு இம்சைப்படுத்தாமல் இருக்க மாட்டார்.

“கிடைக்கும் ஸார்.”

“எவ்வளவு குடுப்பாங்க?”

“சன்மானம் அம்பது ரூவா. சில புக்ஸ்ல எழுபத்தஞ்சு கூட கிடைக்கும். “

பார்வை கொஞ்சம் கேவலமாக மாறிப் போய்விடும். “அவ்வளவுதானா?”

ஓ எழுபத்தஞ்சு எல்லாம் ஜாஸ்தி இல்லையோ? “குமுதம் மாதிரி புக்ஸ் இன்னும் அதிகமா தருவாங்க ஸார். நூறு ரூவா அனுப்புவாங்க.”

“மாசத்துக்கு ஒரு பத்து கதை புக்ல வருமா?”

“அப்படிச் சொல்ல முடியாது. வேணா நாலு வரும்.”

“பத்து வருதுன்னு வெச்சிப்போம். அப்பவும் மொத்தமா மாசம் எழுநூத்தம்பது ரூபா. எழுதிப் பொழைக்க முடியாது போலிருக்கே?”

என்னய்யா பெரிய பணம்? அவர்கள் முகங்களில் பொட்டென்று அறையலாம் போல வந்தது. சரளமாக பிரபல இதழ்களில் எழுத ஆரம்பித்ததால் ‘கவிதை எமக்குத் தொழில்’ என்று சொன்ன பாரதியைப் போல ‘கதை எமக்குத் தொழில்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்த காலகட்டத்தில் இப்படி அபசகுனமாய்ப் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.

நாவல்கள் எழுதினால்தான் அதிக பணம் சம்பாதிக்க முடியும், எழுத்தையே தொழிலாக்கிக் கொள்ள முடியும். பணம் இலக்கானதும் அந்த முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். அது என்ன ஆனது என்பதை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஸோ, எதற்காக எழுதுகிறேன்? ‘எழுத்து எமக்குத் தொழில்’ என்று மார் தட்டிக் கொள்வதற்காக. இலக்கு மாறி விட்டது பாருங்கள். பதிலும் மாறி விட்டது. அந்தச் சமயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் பணத்துக்காகவே எழுதுகிறேன் என்று எளிதாகச் சொல்லியிருப்பேன்.

நான் பகுதி நேர எழுத்தாளனா, முழு நேர எழுத்தாளனா என்று தீர்மானிக்க இயலாத நிலையில் எஞ்சினீரிங் படிப்பு, வேலை, அமெரிக்கா என்று ஓடம் திசை மாறிப் போனது.

முக்கியத்துவங்கள் மாறிப்போயின. முக்கியமாய் அமெரிக்கா வந்த பின் எழுதிச் சம்பாதிக்கும் பணம் முக்கியமில்லாமல் போனது. தீவிரமாய் எழுதுவதற்கான பயிற்சி இருந்தும், பத்திரிகைகளில் பதிப்பிக்க வாய்ப்பிருந்தும் அதை வலுக்கட்டாயமாய்க் கை விட்டதை புகழ் மீதான போதை குறைந்ததால் என்றும் சொல்லலாம்.

அது நாள் வரைக்கும் எங்கிருந்து கதை பெற்றேனோ அந்தத் தமிழக நகரத்து, கிராமத்து சூழலை இழந்து விட்ட பிறகு, அதையே பிரதானமாக வெளியிடும் பத்திரிகைகளிலிருந்து ஒதுங்கினேன்.

ஆனால் அனுபவங்களைக் கதையாய் எழுதும் வியாதி மட்டும் விடவில்லை, அதெல்லாம் பிறவியிலேயே ஒட்டிக் கொள்ளும் மரபியல் குறைபாடாயிருக்கும். இங்கே கிடைப்பதென்னவோ எல்லாமே அமெரிக்க அனுபவங்கள்.

அவற்றைக் கொண்டு இணையத் தளத்தில் ‘துகள்கள்’ என்னும் தலைப்பில் எழுத ஆரம்பித்தேன். சுமார் நானூறு, ஐநூறு வாசகர்கள். பணமும் இல்லை, புகழும் இல்லை. ஜஸ்ட் எழுத வேண்டும். அவ்வளவுதான். சில அனுபவங்களைச் சக மனிதர்களிடம் பரிமாற விளைகிறேன். அதற்காக எடுத்துக் கொண்ட எழுத்து என்ற இந்த வடிவம் வடித்து முடிக்கும்போது எனக்கே ஒரு பரவசம் தருகிறது.

சும்மா எழுத ஆரம்பித்து – புகழ் வேண்டும் என்று தடம் பிறழ்ந்து, அப்புறம் இல்லை, இல்லை பணம் வேண்டும் என்று திசை மாறி மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வருகிறது பாருங்கள்.

அப்படியானால் எதற்காக எழுதுகிறேன் என்றால் சும்மா அது ஒரு கலையுணர்வோடு கூடிய தகவல் பரிமாற்ற சந்தோஷம் அவ்வளவுதான். அதுதான் நிஜமான காரணம் போல் தோன்றுகிறது. அதன் மூலமாய்ப் பணம், புகழ் எல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே… இல்லா விட்டாலும் நஷ்டமில்லை. அப்படித்தான் என் வாழ்க்கை இது வரை நகர்ந்திருக்கிறது.

ஆனால், எதற்காக எழுதுகிறேன் என்பது தாண்டி ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சில விதிவிலக்கான நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் தமிழில் எழுதி லட்ச லட்சமாய் சம்பாதிப்பதில்லை.

ஒரு பத்தியாகட்டும், நாலு பக்கமாகட்டும். இலக்கியச் செறிவானதாகட்டும், சும்மா மொக்கையான கட்டுரையாகட்டும். எழுதுவதற்காக ஒவ்வொருவரும் பணம், நேரம் உட்பட பல விஷயங்களைத் தியாகம் செய்து தன்னார்வமாகத்தான் ஒரு படைப்பைத் தமிழுக்கு அளிக்கிறார்கள். நிறைய மெனக்கெடுகிறார்கள். அதனால் குடும்பங்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தற்கொலை வரை போனவர்கள் இருக்கிறார்கள்.

எழுதுபவர்களுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டாம். பொன்னாடை போர்த்த வேண்டாம். தமிழில் எழுதுவதும் தமிழுக்கான ஒரு சேவைதான் என்று உணர்ந்தால் மட்டும் போதும்.

oOo

(தமிழ் வார, மாத இதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர். இலக்கிய சிந்தனை விருது பெற்றவர். கல்கி, கலைமகள், அமுதசுரபி உட்பட பல இதழ்களில் இவரது பல சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. தயாராகி வரும் ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்துக்கு கதை-திரைக்கதை எழுதியுள்ளார்)

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.