Month: October 2018

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

ஒரு நல்ல நூல் அதற்கான வாசகர்களைக் கண்டடையும் என்பதைக் கேட்க நேர்ந்தால் முன்பெல்லாம் நான் கிண்டலாகச் சிரிப்பதுண்டு. ஆனால் எனது வாசிப்பு மெல்ல விரிவடையத் தொடங்கியவுடன் சிரித்திருக்கக் கூடாதோ என எண்ணினேன். தொழில் நுட்பத்தோடு கடும் போட்டியைச் சந்திக்க வேண்டிய தற்காலச் சூழலிலும் அச்சு நூல்கள் வெளிவருவது குறைந்தபாடில்லை. நம் முன் வந்து குவியும் பல்லாயிரம் நூல்களில் எவற்றை வாசிப்பது, எவற்றைத் தவிர்ப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இருக்கும் குறைந்த வாழ்நாளில் தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்துவிட வேண்டும் என்று தீவிர வாசகன் தேடத் தொடங்குகையில் சிறந்த நூல்கள் அவனைக் கண்டடைந்து காதலி போல் அணைத்துக்கொள்கின்றன.

இன்றைய தமிழ்ச் சூழலில் அப்படியான சிறந்த நூல்களை எழுத்தாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் இப்பட்டியல்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப கட்ட வாசகர்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன என்றுதான் கூறவேண்டும். அந்த வகையில் இந்நூலும் நண்பர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டு எனக்கு அறிமுகமானாலும் நான் இதை வாசித்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அது இந்த நாவலின் தலைப்பு.

‘மெனிஞ்சியோமா’ என்ற இச்சொல் நான் கேள்விப்படாத சொல். சில தலைப்புகள் தங்களது வித்தியாசத்தன்மையாலேயே வாசகர்களைக் கவர்ந்துவிடும். நானும் அந்தத் தலைப்பின் வசீகரத்தால் கவரப்பட்டுத்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்க, வாசிக்க வசீகரம் மெல்ல கலைந்து வலியும் வேதனையும் என்னைச் சூழ்ந்துகொண்டன. தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தைப் பாதிக்கும் ‘BRAIN TUMOR’ என்ற நோயை இயல்பாக கடக்க முடிந்த என்னால் மூளையைப் பாதிக்கும் உயிர் கொல்லியான மெனிஞ்சியோமாவை வைத்து எழுதப்பட்டுள்ள இந்நாவலை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை. நோய்மையைக் கருவாகக் கொண்ட இப்புனைவு இதுவரை நான் வாசித்திராத களமாகவும் தமிழ் நாவல் சூழலுக்குப் புதிதாகவும் இருந்தது.

அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு இணையாக நோய்களும் புதிது, புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தனது அசாத்திய அறிவினால் மரணத்தை வென்று விடுவானோ என்ற அச்சத்தில் இயற்கை இந்த நோய்களின் வழியாக உலக இயக்கத்தை  சமன்படுத்துகிறதோ என நான் எண்ணுவதுண்டு. ஒருகாலத்தில் மூப்பினால் மட்டுமே நிகழ்ந்த மரணம் இன்று வயது வித்தியாசமின்றி கிடைத்தவர்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுகிறது. நவீன வாழ்க்கை முறையால் நீர், நிலம், காற்று, உணவு, சுற்றுச்சூழல் என எல்லாவற்றிலும் கலந்துள்ள நச்சு ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பாம்பாய் படமெடுத்து அவனைக் கொத்துவதற்கான நேரம் பார்த்துக் காத்திருக்கிறது.

பெரும்பாலும் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் ‘மெனிஞ்சியோமா’ இந்த நாவலில் இருபத்தைந்து வயது இளைஞனது வாழ்வைப் புரட்டி போடுகிறது. மூன்று வயது குழந்தைக்குச் சர்க்கரை வியாதி,  ஐந்து வயது குழந்தைக்குப் புற்றுநோய், பத்து வயது சிறுவனுக்கு இதயக் கோளாறு போன்றவை தினசரி செய்திகளாகிவிட்டதால் நாவலின் நாயகனுக்கு ‘இத்தனை சிறுவயதில் இவ்வளவு கொடிய நோயா? அவனுக்கு இந்நோய் வருவற்கான காரணக்கூறுகள் என்ன?’ போன்ற தர்க்கபூர்வமான கேள்விகளை எழுப்ப அவசியமில்லாமல் போகிறது.

பிறந்த ஏழாவது மாதத்திலேயே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் சந்துருவைப் பீடிக்கும் மெனிஞ்சியோமாவும், அதற்காக அவனுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையும், அதன் பக்க விளைவாக தொடர்ந்து நான்கு வருடங்கள் வலிப்பு நோயால் அவன் படும் அவஸ்தைகளும், அவனது நோய்மையையும் நோய்மையால் ஏற்படும் நொய்மையையும் ஒரு பார்வையாளனாக மட்டுமிருந்து பார்த்துக் கலங்கித் துடிக்கும் அவனது தந்தையின் துயரமும் இந்த எழுபது பக்க நாவலில் விரவிக் கிடக்கின்றன. FRISIUM 10 mg என்ற மாத்திரை வழியாக வலிப்பிலிருந்து சந்துருவுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தாலும் அறுவை சிகிச்சையின் காரணமாக உடலின் இடதுபாகம் தனது பழைய பலத்தை இழந்து விடுகிறது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எழுதப்பட்டுள்ள அலுவலகத் தோழி கவிதாவின் கடிதம் ஒரு கையிலும் மாத்திரை மற்றொரு கையிலுமாக சந்துரு நிற்கும் நாவலின் முடிவில் அவனது எதிர்கால வாழ்வைப் பற்றிய பயமும் நிச்சயமின்மையும் அவனோடு சேர்ந்து வாசிக்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

இது போன்ற கொடிய வியாதிகள் வரும்போது நம் உடல் நமக்கானதாக இருப்பதில்லை. மருத்துவர்களைக் கடவுளாகக் கருதி அவர்களிடம் உடலை ஒப்படைத்து சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழி எதுவும் நமக்குப் புலப்படுவதில்லை. நோயாளிகளின் இந்தப் பலவீனத்தையும் நோயைப் பற்றிய அறியாமையையும் மருத்துவர்கள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வது அதிகரித்து வருகிறது. பரிசோதனை எலிகளைப் போல மனிதர்களைப் பயன்படுத்தி புதிய சிகிச்சை முறைகளையும் புதிய மருந்துகளையும் சோதித்துப் பார்ப்பதை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி மருத்துவ உலகம் செய்து வருகிறது. நாவலில் மருத்துவர்களான ரோஜருக்கும் மைக்கேலுக்குமிடையே நிகழும் உரையாடல் இதை உறுதி செய்கிறது. சந்துருவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடிக்கும் மருத்துவர் நரேன் ஏன் தன் நோயாளிகளின் வலிப்பு நோயை குணமாக்காமல் இழுத்தடிக்கிறார்? என்று யோசிக்கையில் அறம் சார்ந்த விழுமியங்கள் பற்றிய சந்தேகம் எழுதவதைத் தவிர்க்க முடியவில்லை.

மருத்துவமனைகளும் சிகிச்சைகளும் ஒரு சாதாரண மனிதனுக்கு எத்தனை அச்சம் தரக்கூடியவை என்பதை சுய அனுபவம் வழியாக அறிந்திருக்கிறேன். மருத்துவமனையில் கழிக்ககூடிய ஒருநாள் இரவென்பது மரணத்தை விட கொடுமையானது. ‘நிசப்தத்தினைப் போல் ஒரு கொடூர அலறல் இந்த உலகத்தில் இல்லை’ என்ற நாவல் வரி அறுவை சிகிச்சை முடிந்து வரும் இரவை மருத்துவமனையில் கழிக்கும் சந்துருவின் ஒட்டுமொத்த துயரத்தை வாசகருக்குக் கடத்துகிறது.

மருத்துவமனை ஊழியர், தாதி, தந்தை இவர்களின் முன்னால் தன் நிர்வாணம் வெளிப்பட்டவுடன் சந்துரு உணரும் அவமானமும் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற அவனது கையறு நிலையும் இப்படி ஒரு நோய் வந்தால் நம் நிலையும் இதுதானே என்ற பதற்றத்தைத் தருகிறது. தினமும் பல மெனிஞ்சியோமா நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவருக்கும் தாதியர்களுக்கும் பத்தோடு பதினொன்று என்ற வகையில் சந்துரு முக்கியமற்றவனாக இருக்கலாம். ஆனால் அவனே உலகம் என்று வாழும் அவனது தந்தையின் நிலையோ பரிதாபகரமானதாக இருக்கிறது. துக்கத்தையும் வலியையும் ஒருபோதும் மனிதர்களால் பகிர்ந்துவிட முடியாது. தனது உயிரைவிட மேலான மகன் தன் கண் முன்னால் செத்து, செத்து பிழைப்பதைப் பார்க்க மட்டுமே முடிந்த அந்த தந்தையின் வலி சந்துருவின் வலியை விட ஆயிரம் மடங்கு  கொடுமையானது. சந்துருவுக்கு முன்னால் தான் உடைந்து போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் தனக்குள்ளேயே அவர் அழுது தீர்க்கிறார். ஒரு கட்டத்தில் சந்துரு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும்போது தந்தையும் மகனும் உரையாடுமிடம் சற்று நாடகத்தனமாக இருந்தாலும் வாழ்க்கை இதுபோன்ற நாடகத் தருணங்களை மனிதர்களுக்குத் தொடர்ந்து தந்துகொண்டேதான் இருக்கிறது.

“கடவுள் இருக்காரான்னு தெரிலப்பா” என சந்துருவின் தந்தை புலம்புகையில் “இவ்ளோ பெரிய ஆபரேஷன் நடந்தும் பையன் பொழச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் சார். கடவுள் இருக்காரு சார். நமக்கு நம்பிக்கை வேணும். அவ்ளோதான்” என்று மருத்துவரின் அட்டெண்டர் சொல்வது நாவலின் முக்கியமான இடம். ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் “எதுக்கு இதெல்லாம்? என்ன மாதிரி டிசைன் இது? என்ன மாதிரி கடவுள் இது? இந்த மாதிரி சமயத்தில்தான் கடவுள் இருக்காரா இல்லையான்னு நம்பிக்கையே போய்விடுகிறது” என்று மாதவன் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்வின் மீதான, கடவுளின் மீதான, மனிதர்களின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் குலையும் தருணம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துவிட்டுத்தான் செல்கிறது. ஆனாலும் மனிதர்கள் சாக விரும்புவதில்லை. இந்த உலகில் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற உயிரின் வேட்கையும் எத்தனை மோசமான இருட்டையும் கடக்க சிறு வெளிச்சமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும்தான் மனிதர்களைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது.

ஏன் குறுநாவல் வடிவத்தை நாவலாசிரியர் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி ஒரு வாசகராக எனக்குள் எழுகிறது. விரித்து எழுதுவதற்கான தேவை இருக்கும்போது சுருக்கி எழுதப்பட்டது போலுள்ள இந்த வடிவம் சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஒரு சராசரி மனிதன் இந்த நோயை எதிர்கொள்ளும் போது நிகழும் நடைமுறைச் சிக்கல்களை இன்னும் விரிவாக பேசியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இது போன்ற அறுவை சிகிச்சை கட்டாயம் செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற சூழலில் அதற்கான பணத்தேவை, அந்த பணத்தை ஏற்பாடு செய்வதில் சராசரி மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மருத்துவர்களின் பயமுறுத்தல்கள், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் நெருக்கடிகள், மருந்துகளின் விலைகள் இப்படி பல தகவல்களைச் சொல்லக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றைத் தவிர்த்ததற்கான காரணம் புரியவில்லை.

இப்புனைவை வாசிக்கையில் சந்துருவின் தாய் இருந்திருந்தால் என்ற சிந்தனை மனதின் ஒருபுறத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இல்லாத கதாபாத்திரத்தை மனதில் கொண்டு வாசிப்பது சரியில்லை என்றாலும் கூட என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பது பொதுப்புத்தியாக உள்ள சமூகத்தில் இரண்டு ஆண்கள் அதுவும் தந்தையும் மகனுமாக ஒரு கொடிய நோயை எதிர்கொள்கையில் கொந்தளிக்கும் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் ஓர் இறுக்கமான சட்டகத்திற்குள் நாவல் நகர்வது போன்று இருந்தது. சந்துருவின் தாய் இருந்திருந்தால் இந்த நாவல் மகனும் தந்தையும் சொல்ல விரும்பிய ஆனால் சொல்லாமல் மறைத்த பலவற்றை ஆழமாக வெளிப்படுத்தி வாசகர்களை நெகிழச் செய்திருக்க வாய்ப்ப்புண்டு என்று தோன்றுகிறது.

“சந்துருவிடம் இப்போது எந்தவித பாரமுமில்லை. என்னிடமும். உங்கள் தோள்களில் இறக்கி வைத்துவிட்ட பாம்புச்சிலுவையது. நெளிந்து நெளிந்து உங்கள் தலைக்கு ஏறும் முன் அப்பாம்பினை முறித்துப் போடுங்கள்”, என்று நாவலாசிரியர் கணேச குமாரன் நாவலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். தூக்கி சுமக்க முடியாத பாரங்களைக் கூட சொற்களின் வழியாக இறக்கி வைத்துவிடலாம் அல்லது மற்றவர்களுக்குக் கடத்திவிடலாம். அப்படியாக அவர் என் மீது இறக்கி வைத்த பாம்பினைத் தலைக்கு ஏறும் முன், எனக்கான சொற்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதுவது அல்லாது வேறு எப்படி முறித்துப் போடுவது?

மெனிஞ்சியோமா

கணேச குமாரன்

யாவரும் பப்ளிஷர்ஸ்

டிசம்பர் 2014 (முதல் பதிப்பு)

கதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்

ரா கிரிதரன்

(Ashenden சிறுகதை தொகுப்பில் சாமர்செட் மாம் எழுதிய ஓரு முன்னுரையை இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் கதை என்றால் என்ன என வரும் விளக்கஙகள் நன்றாக இருப்பதால் இதைச் செய்திருக்கிறேன். வாசக நண்பர்கள் ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.)

யுத்த காலத்தில் என் உளவுத்துறை அனுபவத்தைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதியிருந்தாலும் புனைவுக்காக சில நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக மாற்றி உள்ளேன். தகவல்கள் பலகீனமான கதைசொல்லி. அது கதையைத் தொடக்கத்துக்கு மிக முன்னாலிருந்து தொடங்கி, எங்கெங்கோ அலைந்து திரிந்தபின், தீர்க்க முடியாத சில சிக்கல்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்டு ஒற்றை வரித்தடமாக நீர்த்துபோய் முடிந்துவிடும். மிக சுவாரஸ்யமான நிகழ்வுக்கான பீடிகையோடு தொடங்கிவிட்டு சம்பந்தமற்ற ஏதோ ஒரு புள்ளிக்குத் தாவிவிடும். முடிவுக்குத் தேவையான உச்சகட்டங்களை அது உதாசீனப்படுத்துவிடுகிறது. இதுவே புனைவுக்கான சிறந்த மாதிரி எனச்சொல்லும் புதினாசிரியர்களின் பள்ளியும் உண்டு. நமது வாழ்க்கை எவ்விதமான திட்டங்களுக்குள்ளும் அடங்காமால் காட்டாறு போல நம்மை கொண்டு செல்கிறது எனும்போது புனைவு மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது; வாழ்வை பிரதி செய்வதல்லவா அது? வாழ்வில் காரணக் காரிய தொடர்பற்று நடக்கும் சம்பவங்கள் போலப் புனைவும் இருக்கலாம். முடிவை நோக்கி செல்லும் எந்த பயணத்துக்கான சாத்தியக்கூறையும் அது மீறியபடி செல்லலாம். முடிவில் வரும் எதிர்பாரா திருப்பம் அல்லது திடுக்கிடலால் எழுத்தாளர்கள் சில சமயம் வாசகர்களை ஆச்சர்யப்படுத்துவது போல் வேற எதுவும் இவர்களை புண்படுத்தாது. அப்படி ஒரு சந்தர்பம் அவர்கள் எழுதும் கதையில் வந்தாலும் அதை சாமர்த்தியமாக விலக்கப்பார்ப்பார்கள். உங்களுக்கு ஒரு கதையை அவர்கள் தருவதில்லை. மாறாக நீங்களே ஒரு கதையை உற்பத்தி செய்துகொள்வதற்குத் தேவையான பொருட்களைத் தருகிறார்கள். சிலசமயம் குழப்படியான நிகழ்வு என நினைக்கும்படியான சம்பவத்தை நமக்குத் தந்துவிட்டு அதிலுள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள அழைப்பு விடுப்பார்கள். சில சமயங்களில் கதாபாத்திரத்தை மட்டும் தந்துவிட்டு விலகிவிடுவார்கள். சமையல் சாமான்களைத் தந்துவிட்டு சமைக்க எதிர்பார்ப்பார்கள். இது கதை எழுதுவதற்கான ஒரு வழிமுறை என்பதோடு பல நல்ல கதைகளும் இவ்வகையில் எழுதப்பட்டுள்ளன. செகாவ் இதில் கைதேர்ந்தவர். பெரிய கதையைவிட மிகச் சிறிய கதைக்கு இது இன்னும் சிறப்பாகப் பொருந்தும். உணர்வுநிலை பற்றிய விவரணை, சூழ்நிலை அல்லது சூழல் போன்றவை ஆறு பக்கங்களுக்கு நம் கவனத்தை ஈர்த்துவைக்கலாம். ஆனால் ஐம்பது பக்கக் கதை என்றால் இந்த விவரணைகளைத் தாங்குவதற்கு ஒரு முதுகெலும்பு அவசியம். அப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பு தான் கதை. கதைக்கென இருக்கும் சில பிரத்யேக குணாதிசயங்களிலிருந்து நாம் தப்ப முடியாது. கதைக்கென ஒரு தொடக்கம், மத்திமப்பகுதி மற்றும் முடிவு இருக்கும். தனக்குள் முழுமையாக அமைந்திருக்கும். தொடக்கத்தில் வரும் நிகழ்வுகளுக்கான காரணங்களை கணக்கில் கொள்ளாது அவற்றின் விளைவுகளால் நிகழும் பிற சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டு முடிவு வரை செல்லும்போது வாசகர்களுக்கு ஒரு புள்ளிக்கு பின்னே மேலதிக சந்தர்ப்பங்கள் தேவைப்படாது போகும்படி திருப்தி உண்டாகும். அதாவது ஒரு கதை ஒரு புள்ளியில் தொடங்கியபின்னே ஒரு புள்ளியில் முடிவடைய வேண்டும். தேவையற்ற திசைகளில் விரிந்து செல்லாது, முடிவை நோக்கிய ஒரு திட்டவட்டமான பாதையில் வளைந்து செல்லவேண்டும். படம் வரைந்து காட்டவேண்டுமென்றால் ஒரு அரைவட்டப்பாதையை நீங்கள் காட்டாலாம். முடிவில் ஒரு திருப்பத்தையோ ஆச்சர்யமான திடுக்கிடும் சம்பவத்தையோ செய்வதில் தவறில்லை; அதைச் சரியாகச் செய்யும்போது. செகாவை போலி செய்யும்படி மோசமாக எழுதப்படும் திருப்பங்கள் மோசமானவையாக முடிந்துவிடும். கதையின் முழுமைக்குப் பங்குபெறும்படியான முடிவுகள் மிகச் சிறப்பான தர்க்க ஒழுங்குடன் இணைந்துகொள்ளும். உச்சகட்ட முடிவுகளில் தவறொன்றும் இல்லை. சொல்லப்போனால் அது வாசகர்களைத் திருப்தி செய்யும்படியான கோரிக்கையும் கூட. இயல்பான சம்பவத்தொடர்ச்சி மூலம் ஒழுங்காக இணையாத முடிவுளே தவறானவையாக மாறிவிடுகின்றன. உச்சகட்ட முடிவுகளைச் சேர்ப்பதென்பது நடைமுறை இயல்புக்கு மீறிய செயல்தான் என்றாலும் வாசகர்களை ஈர்த்து வசியப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்று.

வாழ்க்கையை புனைவு நகல் செய்கிறது என்பது கேள்விக்குட்படுத்தத் தேவைப்படாத வாதமல்ல. மற்றொன்றைப் போல இதுவும் ஒரு இலக்கியக் கோட்பாடாகும். சொல்லப்போனால், வாழ்க்கையை கச்சாப்பொருளாகப் பயன்படுத்தி புனைவு புது வடிவங்களை உருவாக்குகிறது எனும் இன்னொரு கோட்பாடும் சாத்தியமே. ஓவியம் தீட்டுவதிலிருந்து ஒரு ஒப்புமையை நாம் அடையமுடியும். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலவெளி ஓவியர்களுக்கு இயற்கையை உள்ளது உள்ளபடி வரைவதில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. அதை ஒரு அலங்கார ஆடம்பரம் என்றே அவர்கள் நினைத்தனர். ஒரு காட்சியை பார்வைக் கட்டமைப்பின் கண்ணோட்டத்தோடு அமைத்தனர். அதாவது, மரம் இருக்கும் எதிரில் சமன்செய்வதற்காக மேகத்தை வரைவார்கள். இருளும் வெளிச்சமும் சீராக உருவாக்கி கண்ணுக்கு ஒரு சமன்பாட்டை ஏற்படுத்துவார்கள். ஒரு நிலக்காட்சியை வரைய வேண்டும் என்பது அவர்கள் எண்ணமல்ல மாறாக கலைப்படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணுவது. வேண்டுமென்றே ஒரு வெளியை அங்கு நிகழ்த்திக்காட்டுகிறார்கள். பார்வையாளர்களின் யதார்த்தத்தேடலை மீறிவிடாமல் இயற்கைக்காட்சிகளை இடமாற்றித் தருகிறார்கள். உள்ளது உள்ளபடியே படம்பிடிப்பதை இம்பிரஷனிஸ்டுகளுக்காக விட்டு வைத்திருந்தனர். சூரியஒளியின் தீர்க்கம், நிழலின் வண்ணங்கள், காற்றின் ஒளியமைப்பு என இயற்கையின் உன்னத அழகை மட்டும் உருவாக்கிக்காட்டுவதற்கு அவர்கள் முயன்றனர். உண்மையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டனர். கையும் கண்ணும் மட்டும் கொண்டவர்களாக மாற ஓவியர்கள் விரும்பினர். புத்திகூர்மையை அவர்கள் வெறுத்தனர். அவர்களது ஓவியங்களை இன்று கிளாட்டின் ஓவியத்தோடு நிரையில் வைக்கும்போது எத்தனை கற்பனையற்ற சித்திரங்களாக அவை இருக்கின்றன என ஆச்சர்யமாக உள்ளது. கிளாடின் வழிமுறையும் சிறுகதை ஆசிரியர்களில் உச்சகட்டமானவராக கய் தெ மாப்பஸானின் வழிமுறையும் ஒன்றுதான். அது அற்புதமான ஒன்று என்பதால் பிறவற்றை விட மேலும் அதிக காலம் நீடிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. மத்தியவர்க்க ருஷ்யர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே எப்படி இருந்தனர் என்பது பற்றிய அக்கறை குறைந்து வரும்போதும் மற்றும் செகாவின் கூற்றை விட அதில் வரும் மனிதர்களே அதிகம் கவர்கிறவர்களாக இருக்கும்போதும் இந்த வழிமுறை மேலும் உபயோகமாக இருக்கும். நான் சொல்லும் வழிமுறையில் வாழ்க்கையை நகல் செய்யும் முயற்சி இல்லை மாறாக வாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கும் சுவாரஸ்யமாவை, நாடகத்தனமானவை இருக்கும். அப்படித் தேர்ந்தெடுத்தவற்றை வாழ்வுக்கு நெருக்கமாக வாசகர்களை அந்நியப்படுத்திவிடாத மனதுக்கு நெருக்கமான காட்சிப்படுத்துதல் இருக்கும். தகவல்களிலிருந்து ஒரு நேரடியான அழகமைப்பு உருவாகி இருக்கும். முடிவில் வரும் படைப்பு என்பது எழுத்தாளரின் உணர்ச்சி மனநிலையின் பிரதிபலிப்பாகவும் இருக்கும். ஏனென்றால் ஒரு எல்லை வரை அது அவனே தான். வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஈர்த்து வைத்திருக்கும். அதில் வெற்றிபெற்றால் வாசகன் அதை உண்மை என ஏற்றுக்கொள்வான். அவனுடையதாகக்கொள்வான்.

இந்த புத்தகம் ஒரு புனைவு என என் வாசகர்களுக்கு நிறுவுவதற்காகவே நான் இதையெல்லாம் சொல்கிறேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக புனைவு எனும் பெயரில் வந்த பல கதைகளை நான் அப்படி தைரியமாகச் சொல்ல மாட்டேன். அவை உண்மைக்கு நெருக்கமான நினைவுகள். உளவாளியின் வேலை மிகவும் சலிப்பூட்டக்கூடியது. மிக அன்றாடத்தனம் கொண்ட தேவையில்லாத வேலைகள். கச்சாப்பொருட்களாக அவை அளிப்பது பெரும்பாலும் தேவையில்லாத தகவல்கள்தான். தன்னால் முடிந்தளவு எழுத்தாளர் அவற்றை தங்குதடையின்றி, புனைவுச்சங்களுடன் இயல்பாகச் சொல்ல வேண்டும்.

1917 ஆம் ஆண்டு நான் ரஷ்யா சென்றேன். போல்ஷுவிக் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் ரஷ்யாவை உலக யுத்தத்திலேயே தொடர்ந்து ஈடுபட வைக்கவும் என்னை அனுப்பினார்கள். என் முயற்சிகள் பயன்தரவில்லை என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். பெறோகிராடிலிருந்து லாடிவோஸ்டாக் சென்றேன். ஒரு நாள், சைபீரியா வழி சென்றபோது ரயில் ஒரு நிலையத்தில் நின்றது. வழக்கம்போல சிலர் இறங்கினர், சிலர் தேநீர் போட்டுக்கொள்ள நீரைத் தேடி சென்றனர், சிலர் சாப்பாடு வாங்கி வரவும், காலை நீட்டிக்கொள்ள சிலரும் இறங்கினர். கண் தெரியாத ஒரு வீரர் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்தனர் சில வீரர்கள். சிலர் பின்னே நின்றனர். இருபது முப்பது வீரர்கள் இருக்கலாம். அவர்களது உருப்புகள் கரைபடிந்து கிழிந்திருந்தன. பெரிய உருவம் கொண்டவனான கண் தெரியாத வீரன் மிகவும் சிறியவன். மெல்லிய தாடி அவன் இதுவரை மழித்திறாத தாடையில் மென்மையாகத் தெரிந்தது. பதினெட்டு வயது கூட நிரம்பியிருக்காது என நினைக்கிறேன். அகலமான சப்பை முகம். நீளமான மூக்கு மற்றும் நெற்றியில் அவனைக் குருடாக்கிய குண்டு விட்டுச்சென்ற பெரிய காயத்தடம். மூடிய கண்கள் சலனமற்ற பாவத்தைத் தந்திருந்தன. அவன் பாடத்தொடங்கினான். இனிமையான தடித்த குரல். அக்கார்டியன் வாசித்தபடி பாடினான். ரயில் காந்திருந்தபடியால் அவன் ஒவ்வொரு பாடலாகப் பாடிக்கொண்டிருந்தான். அவனது பாடல் வரிகள் எனக்குப் புரியாவிட்டாலும் அவனது பாடலில் தெரிந்த தனிமையும் பதனப்படாத தன்மையும் எனக்கு கைவிடப்பட்டவர்களின் ஓலமாகக் கேட்டது. தனிமையான பள்ளத்தாக்குகள், முடிவடையாத காடுகள், ரஷ்யாவின் அகலமான நதிகள், கிராமப்புரத்தின் கரடுமேடுகள், உழப்படும் நிலங்கள், சோளத்தின் பதியக்காலம், பெர்ச் மரக்கிளைகளில் புகுந்து வரும் காற்றோசை, பனிக்காலத்தின் நீள இரவுகள், கிராமங்களில் நடனமாடும் பெண்கள், அந்தியில் கலங்கிய ஓடைகளில் குளிக்கும் இளைஞர்கள் என உணர்ந்தேன். யுத்தத்தின் கொடூரம், யுத்த களங்களின் தனித்த இரவுகள், புழுதி படிந்த சாலையில் நெடிய நடை, யுத்தகளத்தின் அச்சுறுத்தல்களும், வெறுமையும், இறப்பும் என் நினைவில் உறைந்துவிட்டன. அது கொடுமையான அனுபவம். என்னை அசைத்துப்பார்த்த தருணம். பாடகனின் காலருகே இருந்த குல்லாவில் வீரர்கள் பணம் நிரப்பினர். அவர்கள் அனைவரையும் அதே உணர்வு தொற்றியிருக்கும். தாளயியலாத பரிவும், புரிபடாத பயமும் சேர்ந்த ஒரு உணர்ச்சி. ஏனென்றால் கண் தெரியாத வீரனின் முகத்தில் ஏதோ ஒன்று எங்களை அச்சுறுத்தியது. அவனது முகபாவத்தில் தெரிந்த உணர்ச்சியிலிருந்து அவன் தனிமைப்பட்டவனாக, சுகமான உலக வாழ்விலிருந்து அறுபட்ட ஆன்மா என்பதை உணர்வீர்கள். அவன் மனிதனைப் போலவே இல்லை. வீரர்கள் மெளனமாக தங்களை ஒப்புகொடுத்து நின்றிருந்தனர். கண் தெரியாத பயணியின் உரிமைக்காக ஒன்றாக நிற்பவர்கள் போலிருந்தது அவர்களது உடல்மொழி. அவர்களது முகங்களில் எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிடும் கோபமும், எங்கள் முகங்களில் அளவிடமுடியாத இரக்கமும் தெரிந்தாலும், அவை எதுவும் நிர்கதியற்ற அந்த குருடனின் வலியைப் போக்கவியலாது எனும் நிலையை உணர்ந்திருந்தோம்.

Image Credit : Existential Ennui

இறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை

இஸ்ஸத்

ஒரு முறையேனும் பார்த்திட வேண்டும்..
என் ஆவி நீங்கிய நிர்வாண உடலை அருவருப்பின்றி குளிப்பாட்டுபவரை.
எனக்காக இரு வரி இரங்கல் எழுதப் போகும் கவிஞனை, எழுத்தாளனை அல்லது என்னைப் போன்றவனை.
என் உடல் போர்த்த வேண்டி நெய்யப்பட இருக்கும் அணியை உருவாக்க காத்திருக்கும் பருத்திச் செடியை, பஞ்சை, நூலை, நெசவை, நெசவாளியை அல்லது நெய்து தயார் நிலையில் எங்கோ ஓர் மூலையில் உறங்கிக் கொண்டுடிருக்கும் அந்த சிரிய வெள்ளை துணி மூட்டையை.
என் பூத உடலை சுமப்பவரை அல்லது சுமக்க பிரயாசைப்படுபவர்களை.
என் உடல் சுமந்து செல்லப்படுகையில் ஏதோவொரு பச்சாதாபத்தில் தன் வாகனத்தை விட்டு வீதியில் இறங்கி நிற்கும் அந்த ஓர் சிலரை.
என் உடல் புதைக்க குழி தோண்டப்பட இருக்கும் இடுகாட்டின் குறிப்பிட்ட பரப்பை, என்னை குழியினுல் இடப்போகின்றவரை.
என் குழியை மூட மண் போட காத்திருப்பவர்களை, குழி மூடி பலர் விடை பெற்ற பின்பும் நின்று நிதானித்து எனக்காக பிரார்த்தித்து நகர்பவர்களை.
என் மண்ணறை மேலே பிடுங்கி நடப்பட்ட்டும் வேர் விட்டு பூக்காமல் கருக காத்திருக்கும் நித்திய கல்யாணியை.
எல்லாவற்றிற்கும் மேலாக என் இந்த எதிர்பார்ப்பில் இல்லாத, எனக்காக கழிவறை சென்று வாய் பொத்தி வெடித்தழ காத்திருக்கும் முகமறியா அந்த யாரோ ஒரு

 

மூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

துல்லிய நீல வானம். மேற்கே பதுங்கும் சூரியன். மேகப் பூங்கொத்துக்களில் செந்தீ. ஊளையிடும் வடக்குக் காத்து. ஆறின் கடல் சங்கமம். பாறைகளில் சலம்பும் ஒலி. சிதறிப் பரவிய கூழாங்கல். செம்போத்து நாரையின் கேவல். படபடக்கும் சிறகோசைப் பறவைகள். குரலோசையால் எழுத்து நின்றது.

‘பறக்கற குருதைல முனி.காவ நிக்கும் தேவரு.அவரு செனந்தா அம்புட்டுத்தான். ரத்தம் பாக்காம ஓயாது. வாலிபம் மதத்து நிக்குது. அவரு என்னேரமும் குமரு. ஜல்லுங்குது கால்ல சதங்கை. சேணத்தில கொடி சொருகியிருக்காப்ல. கறுப்பு பட்டு உடுத்தியிருக்காரு. மேல நீலச் சட்ட. விர்ருங்குது சாட்டைக் கம்பு. உறுத்துப் பாக்குது விழி. செவப்பா நாக்கு காங்குது. ரத்தம் குடிச்ச வொதடு.வெடச்சு நிக்குது காது. வெள்ளாட்டுப் பாலின் வீச்சு. ராப்போதுல சுத்தி வாரான். நெலா வானத்ல ஒளிஞ்சுகிச்சு நாய்க்கெல்லாம் மூச்சு போச்சு. பூதமெல்லாம் பம்மி வருது.”

‘‘அய்யோ, நிறுத்தேன் முத்தம்மா’’

‘நம்மத் தேவரு மக்கா’

‘‘எனக்கு கேரா இருக்கில்ல’’

‘இதுக்கேவா பாட்டுப் படிக்கற’

‘‘பொறவு எதுக்கு சொல்லுதாக’’

‘அவுக உலா வந்தாயளா?’

‘‘விடமாட்டீயளா, ரவைப் போது’’

‘அந்தக் காச்சிய கண்டாக’

‘‘என்னத்த அப்படி கண்டாக?’’

‘என்னான்னு சொல்ல மக்கா’

‘‘சொல்லாம நிப்பாட்டிப் போடேன்’

‘அதுக்கா வந்து நிக்கேன்’

‘‘வம்பு வலிக்காம முடியல்ல’’

‘செட்டியாரு சம்சாரம் வந்தாக’

‘‘சிலுக்கப்பட்டி சின்ன மீனாளா’’

‘இலுப்பைக்குடி எங்கிட்டு வரும்?’

‘‘மேலே சொல்லு ஆத்தா’’

‘புனுகு அடிச்சு வீசுது’

‘‘ராவைக்கு அது என்னாத்துக்கு?’’

‘வாசம் வளச்சுப் போவுது’

‘‘தாக்கம் அப்படி போச்சாக்கும்’’

‘சிலும்பிட்டு நிக்கான் சிங்கம்புணரி’

‘‘யாரு அவுக நொழையறாக?’’

‘முனி பாக்க நொழயலாமா?’

‘‘அப்ப சேதம் ஏதுமா?’’

‘பொறவு? அடிச்சுப் போட்டகள்ள’

‘‘யார, ரண்டு உசிருமா?’’

‘ரத்தம் கக்கி செத்தாக’

‘‘போலீசு கேசு உண்டுமா?’’

‘முனிக்க சட்டம் உண்டுமா?’

‘‘அப்ப செட்டியாரு தப்பிச்சாரு’’

‘கேனப் பேச்சு மக்கா’

‘முனி முனைஞ்சா நிக்குமா?’

எழுத்திலிருந்து குதித்து நின்றாள். ஒரு முனி வேண்டும். சலம்பலைச் சாடும் முனி. சுவடில்லாத கடுங்காவல் அரசன். கருங்குதிரை ஏறும் காவலாள்.

“அப்ப,சேவுகன் செத்தானே?’’

‘அவன் கத வேற’

‘’பாவாட இல்லியா காரணம்?”

‘அது அப்பாவிப் புள்ள’

“பொறவு ஏன் செத்தாரு?’’

‘அவளுக்கு கன்னி கழியல்ல. சொய சுகம் கண்டுகிட்டா. பசிச்சா சோறு வேணுமில்ல? எம்புட்டு பட்டினி கிடக்க? யாரு கைய இழுத்தா? எவ குடியக் கெடுத்தா? களவாடி வாச இருக்கில்ல; யாருமில்லன்னு அதுல பொரண்டுட்டா. சேவுகன் அதப் பாத்துட்டாரு. அவள வப்பாட்டியா கேட்டிருக்காரு. த்ராணி செத்த மனுஷன். அவ போய்யான்னு ஒதுங்கிட்டா. இவருக்கு வஞ்சம் புடுங்கிச்சு. அக்கம் பக்கம் சொன்னாரு. கள்ளச் சிரிப்பு சிரிச்சாரு. பாவாடய ஊரே தொறத்திச்சு. நிம்மதியா கொறட்ல தூங்குனாரு. மக்காநா மசானம் போய்ட்டாரு’

“இதுவும் முனிக்க வேலயா?’’

‘பொறவு? நெனெச்சா செஞ்சிடுவாரே?’

இப்ப முனி எங்கேயிருப்பாரு? எழுத்தில் எழும்பியவள் நினைத்தாள். குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம். சைலி அவசியம் என்றார்கள். கையிருப்பு பட்டாக வடிவெடுத்தது. சொத்து நகையாக மின்னியது. பெருமை பந்தியாய் இறைந்தது. பொருத்தமின்மை பார்வைகளில் சிரித்தது. லாங்ஷாட் புகைப்படங்களில் அவர்கள். காணொலிகளில் பக்கவாட்டுத் தோற்றம். எப்படி இணைந்தது புரியவில்லை. ஹோமத்தீயில் இரும்பை உருக்குவார்களா? சுடாமல் சுட்டுவிடும் எரியோ?

“முத்தம்மா, இன்னும் உண்டுமோ?”

‘ஏகமா கொட்டிக் கிடக்கு’

“அல்லாம் ஒழுக்க மாட்டாக்கும்?”

‘பேர் சொல்லிக்கு நடந்தது அதில்ல’

“அவரு என்ன செஞ்சாரு?”

‘முனியுட பாதைல படுத்திருந்தாரு.’

“வீட்டுக்குள்ள வருவாரா தேவரு?’’

‘அவரு ஜட்ஜூ மக்கா, வீட்டில எட்டிப் பாக்காதவரு’

“அப்ப தெருவில படுத்திருந்தாரோ?’’

‘ஆமாங்கேன்,மேலக் கேளு; ராவுல வந்தாரா தேவரு. சதங்கைய ஓங்கி ஒலிச்சாரு. சாட்டையால பேர்சொல்லியத் தொட்டாரு. இவரு கொறட்ட விட்டிட்டிருக்காரு. கட்டிலோட கண்மாய்ல வச்சுப்புட்டாரு. காலயில ஊரே சிரிக்குது’

“குடியில அங்கன படுத்திருப்பாரு”

‘மக்கா,கோட்டி செய்யாதீஹ. தப்புன்னு கன்னத்ல போடு’

எழுத்தில் இறங்கியவள் சிரித்தாள். புனித நெருப்பில் ஆஹூதி.வாழ்த்திச் சிதறிய அக்ஷதை. மலர்களின் சிலிர்ப்பு மழை. அப்பாவின் கன்னங்களில் ஈரம். பகலில் பார்த்த அருந்ததி. பொருள் புரியா சடங்குகள். அக்குரல்கள் மீண்டும் ஒலித்தன.

“பகல்ல காங்குமா முனி?’’

‘சூரியத் தேவரு பகலுக்கு’

“அவரு காயறாரே அல்லாரையும்”

‘அது எச்சரிக மக்கா’

“இத்தன காவல் என்னாத்துக்கு”

‘மீறி வெளயாடயில புடிக்கத்தான்’

எழுத்தின் நாயகி திகைத்தாள். சிறு வயதின் பாடல். ஒரு குடத் தண்ணியில ஆமா, ஆமா, ஆமாம் ஒத்தப் பூ பூத்தது, இரு குடத் தண்ணியில ஓஹோ, ஓஹோ, ஓஹோ ரண்டு பூ பூத்தது. ஏழு குடத் தண்ணில… எருக்கு அல்லவா பூத்தது? ஏழுக்கும் எழும்பாப் பூ!

“அக்குறும்பா இருக்கு முத்தம்மா”

‘ஒண்ணொணுக்கும் வில இருக்கு’

“என்னா சொல்ல வர?”

‘அறம் பொழச்சா அரம். மாட்டினா அறுத்து வீசிடும். மாட்டாத வர பொழச்சுக்க. முனி மன்னிச்சும் போச்சு’

“அவருக்கும் கருண உண்டுமா?”

‘தெய்வத் தேவரு அவரு’

“மெய்யாலும் அப்படிச் செஞ்சாரா?”

‘மேக்கத்தி காத்து வீசிச்சு. நெலாவச் சுத்தி கோட்ட. அப்பமே ஊருக்கு தெரிஞ்சிரிச்சி. இந்திரனுக்கும் வருணனுக்கும் சண்ட. கொட்டிக் கவுக்குது மழ. கண்ணுல காங்கல பூமி. ஆட்டுக்கு கூளம் இல்ல; செம்பட்டி சந்த சரக்கு. நிகுநிகுன்னு கண்ணப் பறிக்கும். சின்னவனுக்கு அதான் உசுரு.மேய் மழ நிக்காம பேயுது. வய வரப்பு வேலயில்ல. காஞ்சு எரியுது வவுறு. முனிக்க நேந்த ஆடு. அதுவும் கத்துது பசியில. வவுறு எல்லாத்துக்கும் ஒண்ணுதான? ஈனமா கத்திகிட்டு நிக்குது. கண்ணுல தண்ணீ முட்டுது. தாளல வெட்டிப்புடுன்னு கேக்குது. அவுத்தா வெள்ளத்ல போயிறும். அது எங்களத் தின்னாது. நாங்க அதத் தின்னுட்டோம்.  பொறவு முனிகிட்ட அழுதோம். சாராயத்தோட மன்னிச்சு விட்டாரு’

எழுத்தின் நாயகி சிந்தித்தாள். அறமும், அறப்பிழையும், எதுவென்பது?

இனி என்ன செய்ய? ’மம ஜீவன ஹேது’. நம் வாழ்வின் பொருள். நாம் இணை என்றும். நம் வாழ்வின் நிறைவு. எரியின் தழலே சாட்சி. ஒருவரின் நிழலென வருவோம். இருவருமாக சபதம் எடுப்போம். காதலாகிக் கண்ணீர் மல்குவோம். ஒரே உணவை உண்போம். முதலடியில் பகிர்வது பலம். இரண்டில் துடிப்பைப் பகிர்வோம். செல்வம் மூன்றாவதில் சமனாகும். நாலில் மகிழ்வு பெருகட்டும். ஐந்தில் வாரிசு வளரட்டும். ஆறில் பருவம் மாறாதிருக்கட்டும். ஏழில் தோழமை பெருகட்டும். எழாப்பூவின் ஏழு அடிகள்.

அன்றும் நீல வானம். கற்பனை செய்த முதலிரவு. எண்ண வண்ணங்களில் திளைப்பு. நாடிகளில் பயம் ஓடியது. அன்னையும் தோழியும் அருகில்லை. இயற்கைக்கு இத்தனை செயற்கையா? கலவியும் கள்வமும் ஒன்றோ? தூக்கணாங்குருவி கட்டும் கூடு. பெண்ணிற்கு இல்லாத உரிமை. நிதானமாக அருகே வந்தான். ’எனக்கு உன்ன புடிக்கல’

குரல்கள் இப்போ கிசுகிசுத்தன.

“முனிக்கு கண்ணாலம் ஆயிட்டோ?”

‘ராச்சுத்தறவன எவ கட்டுவா?’

“மெய்யாலுமா சொல்ற, ஆத்தா”

‘கண்ணாலம் அவருக்கு என்னாத்துக்கு?’

“எல்லா சாமியும் பண்ணிருக்கே”

‘இவரு ஐயப்பன் அம்சம்’

“நீலா இருக்குதே கொட்டாய்ல”

‘பொற வாசலோட சரி. அவரு பொம்பளய இச்சிக்க மாட்டாரு’

“அது எப்படி ஆத்தா?’

‘மேக்கூரை வனைய விடாது. செனந்து செனந்து காக்கும். ரா முச்சூடும் சுத்தும். கண்ணாலம் கட்டலன்னா விடேன். அதுக்கு நாட்டமில்லன்னா விட்டுடணும்.’

நெருப்பை அணைத்த கண்ணீர்.

 

இங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை

பிரவின் குமார்

அந்த கடையை நெருங்கும் நேரம் மட்டும் படபடப்பும், அவசரமும் எப்படியோ உடலுக்குள் ஒட்டிக்கொள்கிறது. அத்திசை மட்டும் வேண்டாம்… கிடைக்காத ஏதோ ஒன்றை ரோட்டில் தேடிக்கொண்டு நடந்து போ…. இன்னும் கொஞ்ச தொலைவு நடந்தால் வீட்டிற்கு திரும்பும் சந்து… அதுவரை நிமிராதே… இப்பொழுது மட்டுமல்ல பனிரெண்டு வருடங்களாக மனதின் சொல்படி இணங்க மறுத்து காந்தலின் விசை ஈர்ப்பு போல் அந்த கடையின் பக்கம் திரும்புவதில் தான் ஒரு லயிப்பு உண்டாகிறது.

எனக்கு தெரியும் நான் வரும் நேரங்களில் சட்டையின் கை மடிப்பை உயர்த்திக்கொண்டும், எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட தலையை விறுவிறுப்பாக அலங்கரித்துக்கொண்டும் கடையின் வாசலில் வந்து நிற்கும் ஐசக் இப்போது இல்லை என்று. அன்னை மரியா சலூன் கடை கொஞ்ச வருடங்களாக காயத்ரி மளிகை கடையாக மாறிவிட்டிருந்தது. பல பொழுது அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இருந்தும் கூட அந்த கடைக்கு இதுவரை நான் சென்றதில்லை. நெற்றியை சொரிந்துகொண்டு நிற்கும் ஐசக்கின் முகத்தை அந்த கடையில் ஏதோ ஒரு மூலையில் தேடவேண்டி இருக்குமோ என்னும் பயம்.

வீட்டிற்கு திரும்பும் தெருவை வந்தடைந்ததும் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் என் மகளுக்காக ஹக்கீசும் எனக்காக நாப்கினும் வாங்கிக்கொண்டேன் நாப்கினுக்கு மட்டும் ஸ்பெஷலாக செய்தி தாள்களை அணிவித்து கொடுத்தார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு விரையும் மாணவர்களின் நடமாட்டம் அத்தெருவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நானும் என் ஆசிரியர் பணியை முடித்து தான் வீட்டிற்கு விரைந்துகொண்டிருக்கிறேன்.

ஐசக்கின் தங்கை எதிரில் வந்துகொண்டிருந்தாள் அவன் நிலை குறித்து அவளிடம் விசாரிக்க நினைக்கும் நேரத்தில் பாலத்தீன் கவரில் ஊசலாடிக்கொண்டிருந்த ஹக்கீஸ் கவரும், என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியும் எனக்கு நினைவூட்டியது நான் தாயும், மனைவியும் ஆனவள். பாதங்களை முன்வைத்தும் மனதை பின்வைத்தும் நடந்து சென்றேன். எதிரில் வந்தவளின் முகத்தை பார்க்காமல் மீண்டும் தரையில் ஏதோ ஒன்றை தேட நேர்ந்தது.

வீட்டு வாசலை நெருங்கும் முன்பே குழந்தையின் விசும்பல். என் அம்மாவின் இடுப்பில் இருந்து என் இடுப்பிற்கு தாவியவளின் கால்கள் பட்டாம்பூச்சி சிறகாய் அடித்துகொண்டது. “அம்மா வந்துட்டேன்டா செல்லம் வீட்டுக்கு லேட்ஹா வரேன்னு கோவமா அம்மா மேல” தினசரி நான் உபயோகிக்கும் சொற்கள் ஐஸ்வர்யா மெர்லினுக்கு மட்டும் எப்படி சிரிப்பை கொடுக்கின்றதோ… புடவையில் இருந்து நைடிக்கு மாறியதும் ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றேன். மாடியில் நின்றுகொன்று ஐசக்கின் வீட்டை சுட்டிக்காட்டி அவளோடு உரையாடிகொண்டிருந்தேன்.

விடைத்தாள்களை திருத்த வேண்டிய வேலை அதிகம் இருந்தது மாணவர்களின் தெளிவான கையெழுத்தின் உதவியோடு சில விடைத்தாள்களை வேகமாவும் பொறுமையாகவும் திருத்திக்கொண்டிருந்தேன். திடிரென்று ஐஸ்வர்யா மெர்லின் சிணுங்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அவளை தட்டிகொடுத்துக்கொண்டே மடியில் வைத்து பாலூட்டினேன். நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது ஆனால் அவன் நினைவுகளின் பாரத்தை எப்படி இறக்குவது…? அவன் நினைவுகளை சிதைக்க நினைக்கும் பல வருட போராட்டத்தில் அவனே தான் கடைசியில் வெற்றி காண்கிறான். இப்பொழுதும் கூட மடியில் குழந்தையை வைத்துக்கொண்டும் நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டும் தவித்துகொண்டிருக்கிறேன். அன்று ஐசக் சொல்லிய வார்த்தை “அவ்ளோ சீக்கிரம் என்னைய மறந்துட முடியாது செலஸ்டினா” அந்த வார்த்தைகள் தான் ஒவ்வொரு இரவும் அவன் காதலை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டான்.

ஐஸ்வர்யா மெர்லின் இப்பொழுது தூங்கிவிட்டாள் அவளை மார்பின் மேல் கிடத்திக்கொண்டு படுக்கையின் மீது மெல்ல சாய்ந்தேன். எப்பொழுதும் போல் அவளிடம் என் கதையை சொல்லும் வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தேன். “ஐஸு இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா…? அந்த ஐசக் பய இந்த நாள்ல தான் அவனோட காதல என்கிட்ட சொன்னான்”
ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது சிறப்பு வகுப்பை முடித்துக்கொண்டு நான் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் சலூன் கடை வாசலிலே எனக்காக காத்திருக்கும் அவன் நான் வரும் நேரங்களில் மட்டும் கடைக்கு எந்த ஒரு கஸ்டமரும் வந்துவிட கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்துகொண்டிருப்பான்.. தன் காதலை சொல்ல நினைத்து தவறவிட்டு போன நாட்கள் எத்தனை என்பது அவன் ஒருவனுக்கே தெரியும். அன்று அவனுடைய நாளாக அமைந்துவிட்டது. ஐசக் என்னை பின்தொடரும் நேரங்களில் சிறு நடுக்கங்கள் ஏற்பட்டாலும் உதட்டிலிருந்து வெட்கச்சிரிப்பு எப்படியோ முளைத்துவிடுகிறது.

“செலஸ்டினா நில்லு” பலபொழுது என் பின்னே தொடர்ந்துகொண்டிருப்பானே ஒழிய என் பெயரை சொல்லி இதுவரை உறக்க கூப்பிட்டது கிடையாது. மெதுவாக திரும்பினேன் ரிப்பன் கட்டிய சிறிய பெட்டியை பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினான். “என் தங்கச்சியும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டா ஆனா நீ தான் இன்னும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற” அதை வாங்க மறுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். “சரி இத புடி செலஸ்டினா” “எதுக்கு ஐசக்” அவன் கை விரல்கள் அவன் சிகையையே கோதிக்கொண்டிருந்தது. தரையை பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே… எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” ஒரு ஆணின் தயக்கத்தையும், வெட்கத்தையும் ஐசக்கின் உடல் நெளிவுகளில் முதல் தடவையாக ரசிக்க நேர்ந்தது. அப்பொழுது ஐசக் அழகாக இருந்தான். தாடியை சொறிந்துகொண்டு என் பதிலுக்காக காத்திருந்தான். அவன் கொடுத்த பரிசை வாங்கிக்கொண்டு லேசாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

சீருடையை கூட கழற்றாமல் ஐசக் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தேன். சிவப்பு நிறத்திலான பேப்பரில் சுற்றப்பட்டு இருந்த சிறிய பெட்டியில் கருப்பு நிற இங்குப் பேனா ஒன்றை வைத்திருந்தான். உடனே எழுதி பார்க்க வேண்டும்போல் தோன்றியது எனது குறிப்பேட்டின் கடைசி பக்கத்தில் எழுதுவதற்கு தயாராய் அப்பேனா என் விரல்களின் பிடியில் நின்றுகொண்டிருந்தது. என்ன எழுதுவது…? ஐசக்கின் பெயரை எழுதி பார்க்கவே எத்தனித்தேன் ஐசக்… உடலின் ரோமங்களின் மேல் ஊர்ந்து செல்கிறானோ… ஒவ்வொன்றும் தலை தூக்கியது. அவன் பெயருக்கு கீழ் என்னுடைய பெயரையும் எழுதினேன் செலஸ்டினா… இருவரின் பெயரையும் ஒரு ஆர்ட்டின் வடிவத்திற்குள் அடைத்தேன்.

காலையில் வேலைக்கு கிளம்ப இருக்கையில் ஐசுவின் அப்பாவிடம் இருந்து போன் வந்தது. அடுத்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று கிளம்பி வர இருப்பதாக சொன்னார். ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து அன்றிரவே வெளிநாட்டிற்கு விமானம் ஏறியவர் அவளின் முதல் பிறந்தநாள் அன்று கூட வீடு திரும்பவில்லை. தோன்றும் நேரங்களில் தொடு திரையில் ஐஸ்வர்யா மெர்லின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இருவருக்கான ஸ்பரிசம் பல மைல்களுக்கு இடையில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தது. வங்கிக்கு கட்டவேண்டிய வீட்டு கடன் பணத்தை என் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.

வாழையடி வாழையாக கடன் சுமையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஐசக்கின் அம்மாவை விட்டால் கடன் வாங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் வேறு ஆட்களும் இல்லை. அன்றிரவு ஐசக் என் வீட்டிற்கு வந்திருந்தான். எப்பொழுதும் வட்டி பணத்தை வசூலிக்க அவன் வருவது தான் வாடிக்கை. அவன் அம்மாவின் வசை சொற்கள் எங்கள் வீட்டு வீதியில் தாண்டவமாடுவதை அவன் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் வேண்டுவதும் கூட அது தான். அவன் ஒருவனே என் குடும்பத்தின் நிலை அறிந்தவன். எப்போதும் போல் அப்பா வாஞ்சையாகவே அவனிடம் “ரெண்டு வாரமா வேல இல்லாம வீட்ல தான் இருக்கேன் தம்பி இன்னும் எந்த ஒரு காண்டிராக்டும் வரல அடுத்த வாரம் கொடுத்திடுறேனு அம்மா கிட்ட சொல்லிடுறியா…?” அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்க என் அப்பா எப்போதும் தவறியது இல்லை. “சரிங்கனா பொறுமையாவே கொடுங்க நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்” சிரித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டே வேலைக்கு சென்றேன்.

பள்ளியில் சந்திப்பதற்கு முன்பே தெருவில் பார்க்கும் மாணவர்கள் “குட்மார்னிங் மிஸ்” என்று என் மீதான மதிப்பை வெளிபடுத்தினார்கள். அன்னை மரியாள் தேவாலயத்து ஊழியர்கள் சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறில் வைத்து வழிபட்ட ஓலையை சாம்பல் புதன் தினத்தில் வைத்து எரிப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்துக்கொண்டிருந்தனர். அதில் நன்கு பரிட்சயமான ஒரு ஊழியர் என்னை பார்த்ததும் நெருங்கினார்.

“செலஸ்டினா டீச்சர் உங்க வீட்லியும் போன வருஷம் குருத்தோலை இருக்குல”

“இல்லீங்க பிரதர் நான் கொஞ்ச வருஷமா எதிலும் கலந்துகுறது இல்ல”

“ஓ.. சரி ஈஸ்டர் அப்போவாவது சர்ச்சுக்கு வந்துட்டு போங்க…”

பள்ளியை நோக்கி விரைய துடங்குகையில் மீண்டும் ஐசக் மனதிற்குள் தடம் பதித்து உலாவினான். சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், சிலுவை பாதை என்று பாதரிகளின் கட்டளைப்படி அனைத்து வேலைகளையும் முன்னமே செய்துமுடிப்பான். அன்றைய குருத்தோலை ஞாயிறிலும் கூட அதற்கான வேளையில் இயங்கிக்கொண்டிருந்தான் ஐசக்.

ஓலையில் சிலுவையை வடிமைத்து கொடுப்பதில் ஐசக் கைதேர்ந்தவன் அவனை சுற்றி சிறுசுகள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு “எனக்கு அண்ணா.. எனக்கு அண்ணா…” என்று அவனிடம் மன்றாடிகொண்டிருந்தார்கள். சிலுவையை வடிவமைக்க தெரியாமல் வெற்று ஓலையை வைத்துக்கொண்டு நான் அதனுடன் போராடிகொண்டிருந்ததை ஐசக் கவனித்தும்விட்டான். ஐசக்கின் மனம் என் கையில் இருக்கும் ஓலை அவன் கரங்களில் தஞ்சம் அடையவே காத்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஐசக்கின் தங்கை என்னிடம் இருந்த ஓலையை பிடுங்கிக்கொண்டு அவனிடம் விரைந்தாள் “இந்தானா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு” அவனிடம் கொடுத்துவிட்டு வரிசையில் நிற்க சென்றுவிட்டாள். உதடுகள் விரிய ஐசக் அந்த ஓலையை சிலுவையின் வடிவில் அவன் இதயத்தை உருமாற்றிகொண்டிருந்தான்.

ஓசான்னா பாடல் ஒலிக்க மரியாள் தேவாலயத்தை நோக்கி பாதிரிகள் எங்களை வழிநடத்தி சென்றார்கள். என் பின்னே ஐசக்கும் அவனது நண்பர்களும் சலசலத்தபடி இருந்தனர். நீண்ட நேரமாக மெல்லிய குரலில் ஐசக் என்னை அழைத்துகொண்டிருந்தான் என்னவென்று திரும்பி பார்க்கவோ, அவனுக்கு மருமொழியவோ அப்போதைய சூழலில் என் மனம் தைரியம் கொள்ளவில்லை. தேவாலயத்தை நெருங்கும் வரையிலும் அவனது முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்தது. குருத்தோலை பவனி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் தேவயாலத்தின் பின்புறம் அமைந்த சூசையப்பர் சிலை அருகே ஐசக் எனக்காக காத்திருப்பதை அவன் தங்கை என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றாள். அவன் மீதான கோபமே என்னை அவனிடம் கொண்டு சேர்த்தது.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற… என்ன அவசரம் உனக்கு…?”

தன் சிகையை கோதிக்கொண்டே “ஸாரி செலஸ்டினா… இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் புடிக்குது இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்டேன்”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அரசியல் உருவங்களை சுவற்றில் வரைந்து காட்சியளிக்க அப்பா ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கும் பணத்தில் அவரின் குடிக்கு போக துளியாய் விழும் சில்லறைகளில் தான் எனக்கும் அம்மாவுக்குமான வாழ்கை நகர்ந்துகொண்டிருந்தது.

சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அப்பா கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை ஐசக் என் கையில் திணித்தான். “அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா” நான் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவன் விடுவதாக இல்லை இம்முறை மட்டும் வாங்கிகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அதற்க்கு பிறகான வட்டி பணம் முழுவதும் அவன் மூலமாக தான் கட்ட நேர்ந்தது. கடைசியாக நான் ஊர்வலத்தில் வைத்து வழிபட்ட குருத்தோலையை என் ஞாபகமாக வைத்து கொள்வதாக சொல்லி என்னிடம் இருந்து வாங்கி சென்றான். நிச்சயம் அந்த குருத்தோலை உயிர்ப்புடன் இப்பொழுதும் அவனிடம் இருக்கும்.

மதியஉணவு இடைவேளையின் போது என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர் பிறந்தநாள் என்று அனைவருக்கும் இனிப்பை பகிர்ந்துகொண்டிருந்தார். கலகலப்பான பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் ஆசிரியர்கள் அவரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். என் ஒருத்தியால் மட்டும் ஆர்வமின்றி அதிலிருந்து விலகி செல்ல மனது முனைந்தது. வெளியே வந்து பால்கனி வழியாக செம்மண் போர்த்திய மைதானத்தை வெறித்து பார்த்தேன். இதே மைதானத்தில், இதே பள்ளியில் என் பிறந்தநாளையும், நான் தேர்ச்சி பெற்றதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து ஐசக் என்னை கொண்டாடி இருக்கிறான். வேலைக்காக எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலை மிதிக்க இருந்த என்னை படிப்பிற்காக கல்லூரி வாசலை மிதிக்க வைத்தான். என் பெயருக்கு பின்னால் இருக்கும் B.A. B.Ed., என்னும் பட்டம் அவன் உழைப்பினால் ஆனது, கை நீட்டி வாங்கும் சம்பளங்களில் கூட அவனது முகம் தான் பிரதிபலிக்கிறது. எத்தனையோ முறை என் கைசெலவிற்க்கும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுத்து உதவி இருக்கிறான் என் சம்பள பணத்தை அவனது சட்டை பாக்கெட்டில் திணித்து உரிமை கொண்டாட நினைத்த சந்தர்ப்பம் இதுவரை நிறைவேறாமலே போய்விட்டது.

ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐஸ்வர்யா அப்பாவும் இன்று இரவு வந்துவிடுவதாக செய்தி அனுப்பினார் முதல் வருட பிறந்தநாளை விட இந்த வருட பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஐஸ்வர்யாவின் அப்பா எண்ணி இருக்கிறார். வேலைகள் பல வரிசையில் காத்துக்கொண்டிருந்தது தலைமை ஆசிரியரிடம் இரண்டு நாட்களுக்கு விடுமுறை சொல்லிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.

ரோட்டோரத்தில் அமைந்த ஒயின் ஷாப்பிற்குள் இருந்து ஒரு சிலரை மிரட்டல் தொனியுடன் போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒயின் ஷாப்பிற்கு வருகை தந்தவர்கள் போலிஸ் வண்டியை சுற்றி சலசலத்தபடி குழுமி இருந்தார்கள். நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் சைரின் சத்தத்தை கிளம்பிக்கொண்டு போலிஸ் ஜீப்பிற்கு முன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அதை தான் உணர்த்தியது.

அங்கே நின்றிருக்க பிடிக்காமல் நடையில் வேகத்தை கூட்டினேன். ஐசக்கை முதுகில் அடித்து தரதரவென ஜீப்பில் ஏற்றிய சம்பவம் மீண்டும் மனத்திரையில் ஓடத் துடங்கியது. அப்போது நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்த சமயம். எங்கள் காதல் விவகாரம் வீட்டிற்க்கு மட்டுமல்ல எங்கள் குடியிருப்பு பகுதியிலும் கூட அனைவருக்கும் தெரிந்திருந்தது. பெரிதாக எந்த ஒரு தடையும் இல்லை ஐசக் தனக்கு மருமகனாக அமைய நேர்ந்தால் தோன்றும் நேரங்களில் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அப்பாவின் எண்ணம். ஐசக்கின் வீட்டிற்கு நான் மருமகளாக செல்ல நேர்ந்தால் தன் மகன் படித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறான் என்று கௌரவமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்பது ஐசக் அம்மாவின் எண்ணம். இதில் என் அம்மா மட்டும் தான் எந்த ஒரு முக சாயலையும் வெளிபடுத்தாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

நான் கல்லூரி முடித்து தினமும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தில் என்னை காதலிப்பதாக சொல்லி ஓயாது நச்சரித்து பின்தொடர்ந்துகொண்டிருந்தவனை பற்றி ஐசக்கிடம் நான் பேசியதே இல்லை. ஆனாலும் அந்த விஷயம் ஐசக்கின் நண்பர்கள் மூலம் எப்படியோ அவன் காதிற்கு எட்டி விட்டது. அன்றிரவே ஐசக் எங்கெங்கோ அலைந்து அவனை பற்றி விசாரித்து நேரில் சென்று அவனை எச்சரித்திருக்கிறான். பேச்சுவார்த்தையில் துடங்கிய சம்பவம் கடைசியில் அடிதடியில் போய் முடிந்திருக்கிறது. ஐசக் அவசரத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு வெறியோடு அவனை அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். மறுநாள் காலையில் ஐசக்கை போலிஸ்காரகள் கைது செய்யும் பொழுது தான் தெரிந்தது அவன் இறந்துபோன விஷயம். மாரில் அடித்துக்கொண்டு ஐசக்கின் அம்மா ஜீப்பின் பின்னால் ஓடியதும், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கண்டடைந்து கண்களாலே ஐசக் எனக்கு சமாதானம் சொல்லியதும் இப்பொழுதும் நெஞ்சில் நீங்கா தழும்புகளாய் பதிந்திருக்கிறது.

அதற்கு பிறகான நாட்களில் விசாரணைக்காக நீதி மன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்துகொண்டிருந்தேன். தான் கைது செய்யப்பட்டதை விட தன் காதலி அடிக்கடி வீட்டிற்க்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்துகொண்டிருந்தது தான் ஐசக்கிற்கு வருத்தத்தை கொடுத்தது. எவ்வளவு பணம் செலவழித்தும் ஐசக்கிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என்னை சந்திப்பதையும் ஐசக் தவிர்த்து வந்தான். கடைசி சந்திப்பில் தான் ஐசக் முதல் முறையாக அழுததை என்னால் பார்க்க நேர்ந்தது. அழுதுகொண்டே என்னிடம் அவன் கேட்டுக்கொண்ட விஷயம் “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வரதா” என் பதிலுக்காக காத்திருக்காமல் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றான். வருடங்கள் ஓடி விட்டது அவனுடன் கழித்த நாட்களின் ஏதோ ஒரு நினைவில் தினமும் என்னை சந்தித்து கொண்டு தான் இருக்கிறான் சிரித்துக்கொண்டும்… அழுதுகொண்டும்…

ஆயிரம் புன்னகை உதட்டில் தவழ ஐஸ்வர்யாவின் அப்பா இரவு வீட்டிற்குள் நுழைந்தார். முத்தங்களாலே ஐசுவின் உறக்கத்தை கலைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகான அரவணைப்புகளும் தழுவல்களும் அவ்விரவு நீண்டுக்கொண்டே இருந்தது. பல வடிவங்களில் பரிசு பொருட்களும் துணிமணிகளும் என்னையும் ஐசுவையும் சூழ்ந்துகொண்டிருந்தது. ஐசுவின் அப்பா எனக்கென்று பிரத்தியேகமா வாங்கி வந்திருந்த பரிசை என்னிடம் கொடுத்தார் வெளிநாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று இருந்தது மீண்டும் பழைய காதலனின் நினைவுகளை என் கணவன் வாங்கிக்கொடுத்த பேனாவே தோண்டிக்கொண்டிருந்தது. எழுதி பார்க்க மனமின்றி அப்பேனாவை பீரோவில் வைத்து பூட்டினேன்.

மறுநாள் ஐஸ்வர்யாவின் அப்பா ஐசுவின் பிறந்தநாள் ஒட்டியும் ஈஸ்டர் தினத்தை ஒட்டியும் துணிமணிகள் வாங்க எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார். ஐஸ்வர்யாவிற்கு துணியை எடுத்தபின் எனக்கு புடவை எடுத்து கொடுக்க இரண்டாம் மாடிற்கு அழைத்து சென்றார். ஈஸ்ட்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டம் அலைமோதியது எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கடைசியாக ஒருவரை அணுகினோம்.

வார்த்தைகளின்றி கேட்க்கும் நிறங்களில் புடவைகளை சரசரவென விரித்துக்கொண்டிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்தில் அவனால் என்னை அடையாளம்கொள்ள முடிந்தது என்னால் தான் சட்டென்று அடையாளம்கொள்ள முடியவில்லை மொட்டை அடித்து பாதி முளைத்திருந்த மயிர், உடல் மெலிந்து கூனி குறுகி நேருக்கு நேர் சந்திக்க வலுவற்று கீழே குனிந்தபடி சுழன்று கொண்டிருந்தது அவன் பார்வை. அவனே தான் ஐசக்…! வெளிவர துடித்துக்கொண்டிருந்த கண்ணீரை மனதின் பலம் கொண்டு முடிந்தவரை தடுத்தேன். ஐஸ்வர்யாவின் அப்பா சுட்டிகாட்டிக்கொண்டிருந்த புடவைகளை சலிப்பின்றி கான்பித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்துகொண்டிருந்தது அவனும் கண்ணீரோடு போராடுகிறான். எங்கள் இருவருக்குமான சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..? செலஸ்டினா… செலஸ்டினா… என்று தன் வாழ்நாளை கொண்டாடிகொண்டிருந்தவன் அதே செஸ்டினாவை பார்க்க விருப்பமில்லாமல் நாதியற்று நிற்கும் நிலைமை. என் மீதும், ஐஸ்வர்யா மீதும், ஐஸ்வர்யாவின் அப்பா மீதும் அவனது பார்வை வீசிக்கொண்டே இருந்தது. அவன் படும் அவஸ்த்தையை என்னால் பார்த்துகொண்டிருக்கமுடியவில்லை. உடல் எரிந்து சாம்பலாகிகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது கையில் சிக்கிய ஏதோ ஒரு புடவையை எடுத்துக்கொண்டு காரணங்கள் தேடி சமரசம் செய்து ஐஸ்வர்யாவையும், ஐஸ்வர்யா அப்பாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். படி இறங்கும் நேரத்தில் திரும்பி பார்க்கும் பொழுது இதழ்கள் விரிய ஐசக் லேசாக சிரித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் இழந்து வெறுமையின் அரவணைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அந்த சிரிப்பு.

மேற்கொண்டு வேறு எந்த கடைக்கும் செல்லாமல் அர்த்தமற்ற காரணங்களை சொல்லி விடாப்படியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். சுதந்திரமாக கத்தி அழுவதற்கு ஒரு சுவர் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வீட்டிற்கும் வந்ததும் தாழ்பாளின் துணைகொண்டு கதவை அடைத்தேன். தரையில் சரிந்து கால்களை மடக்கி கழுத்தை தொங்கவைத்து அழுது தீர்த்தேன்.. ஒரு புறம் ஐசக்கின் குரல் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தது…

பீரோவின் மேல் இருந்த பெட்டியை கீழே இறக்கினேன் ஐசக் கொடுத்த இங்குப் பேனா பொலிவிழந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆசையா… தோல்வியா… ஏமாற்றமா… எதுவென்று தெரியவில்லை ஐசக்கின் பெயரை எழுதி பார்க்க முனைந்தது. கட்டில் மேல் இருந்த என் டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் ஐசக்கின் பெயரை எழுதினேன்.. காற்றில் வரைய முயற்சிக்கும் எழுத்தக்களை போல் உருபெறாமலே இருந்தது ஐசக்கின் பெயர்… அந்த இங்குப் பேனா எழுதவில்லை. பேனாவை தரையில் உதறினேன் அந்த மை திட்டு திட்டுகளாக ஐசக்கின் ரத்தத் துளிகளை போல் காட்சியளிதுக்கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்த இங்குப் பேனா எழுதவில்லை… இனி எழுதப்போவதும் இல்லை. இந்நேரம் ஐசக் நான் கொடுத்த குருத்தோலையை வைத்து அழுதுகொண்டிருப்பான் என்று மட்டும் தோன்றியது.