♪
மேலும் அந்தக் கனவை
நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும்.
அதன் முகம்
அதன் நிறம்
எனதறையின் சுவரெங்கும்
இன்னும் பழைய மாதிரியே
பிரத்தியேகமான வடிவங்களோடு இருக்கின்றன.
மேலும் அதன் தன்மை குறித்தும்
அதன் பரம்பரை குறித்தும்
இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது.
கண்கள் பச்சை நிறமுடையன
சில நேரங்களில் மட்டும்
நீல நிறமாக மாறக் கூடியன
தோல்கள் மேகத்தைப் போல
மென்மை
உடல் கடலைப் போல்
எல்லையுடையது.
அந்தக் கனவு
ஆதியிலிருந்து வானத்தின் மற்றும்
பூமியின் மையப்புள்ளியில்
காற்றுக் குமிழியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.