நொட்டை – விஜயகுமார் சிறுகதை

ஐயோ இப்படி ஆகிவிட்டதே! என்று உள்தாழிட்டு அழுதுகொண்டிருந்தது அந்த புத்துயிர்.

1
“மாமா நான் சுத்தட்டா?” புகழேந்தி கேட்டதைப் பார்த்து வாத்தியார் சட்டென்றும் முறைத்தார். புகழேந்தி பார்வையை நகற்றாமல் மாமாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வாத்தியார், “இன்னும் மீசையே ஒழுங்கா வளரல, அதுக்குள்ள சுத்தணும்? இதுக்குதான் உன்ன இங்கெல்லாம் கூட்டிவரதில்ல. ஒழுங்கா சொல்லறத மட்டும் செய்” உச்ச சாயலில் கடிந்தார். புகழேந்தி முகம் சிறுத்து சுண்ட ஆரம்பித்ததை உணர்ந்த வாத்தியார், “இப்போ வேண்டாம், இதெல்லாம் என்னோட போவட்டும், வேண்டாம்டா” என்று சன்ன குரலில் சூழலை சரிகட்டினார். புகழேந்தி உற்சாகத்தையும் ஆவலையும் மீட்டு சரி என்பதுபோல் தலையாட்டினான்.
அந்த விலாசமான மண்டியில் ஒரு மேசை ஒரு நாற்காலியைத் தவிர வேறொன்றுமில்லை. சூரியன் வழக்கம்போல் பிரகாசித்தாலும் மூடப்பட்ட ஜன்னல்களினால் இருட்டு மண்டி முழுவதும் அப்பி இருந்தது. அந்த இருட்டும் அவர்கள் சுமந்து வந்த பையும் புகழேந்திக்கு மேலும் பரவசம் தந்தது. வாத்தியார் ஸ்விட்சை தட்டிவிட்டு நிதானமாக மேசையருகில் வந்து புகழேந்தியை வரச்சொல்லி சமிங்கை செய்தார். அவன் அருகில் வந்து பையிலுள்ள கச்சா பொருட்களை எடுக்க முற்பட்டான்.
“கொஞ்சம் பொறு”, வாத்தியார் கையசைத்தார். சட்டையை கழற்றி ஒரு மூலையில் எறிந்தார். வெற்றுடலும் கா.ம.கா கட்சி கரை வேட்டியுமாக அவனைப் பார்த்து புன்முறுவிவிட்டு அமர்ந்து மேசையை இருகைகளாலும் உலாவிவிட்டார். மேல்முகமாக முகத்தை ஏந்தி ஆகாயத்தை நுகர்ந்தார். ஒரு கலைஞனைப் போல் காட்சி தந்த வாத்தியாரின் முதுகு கிராம ரஸ்தா போல் குண்டுகுழியாக இருந்ததை புகழேந்தி கவனித்தான்.
புகழேந்தி, “இது என்ன முதுகுல?”
“ம்ம்?”
“இல்ல! முதுகுல என்ன.”
“அதுவா? அது கையெழுத்து. அந்த குரூப் போட்ட கையெழுத்து”, வாத்தியார் சுருக்கி சொன்னார்
“கையெழுத்தா? காயம் ஆனா மாரில இருக்கு. அதுவும் இத்தன காயம். சின்ன சின்னதா. எப்ப ஆனது? சின்ன வயசிலையா?” கேள்விகளை அடுக்கியவனை வாத்தியார் “வந்த வேலையை மொதல்ல பாப்போம்” என்று அடக்கினார்.
“டேபில தொட, கொண்டுவந்த ஐட்டத்தை எடுத்து அந்த செவுரோரமா அடுக்கு. அடுக்கீட்டு கொஞ்சம் தூரமா பொய் நிக்கணும், கேட்டுச்சா?”
“சரிங்க”, வாத்தியாரின் சித்தத்தை பாக்கியப்படுத்தினான். அவரின் காரியதரிசி போல கைங்கரியம் செய்தான்
வாத்தியார் தன் வித்தையை உருட்ட ஆரம்பித்தார். முதலில் பெரிய கைக்குட்டை அளவிற்கான துணியை மேசைமேல் வைத்து நீவிக்கொடுத்து அதன்மேல் ‘ஆர்.பி’ என்ற குடுவையிலுள்ள ரசாயன பொடியை எலுமிச்சை கணத்திற்கு கொட்டினார். அதற்க்கு சரிபாதி செம்மண் எடுத்து கலந்தார். அந்த கலவையின் மேல் பொருக்கி எடுத்து வந்த உடைந்த கண்ணாடி சிதில்கள், சின்ன ஆணிகள், உடைந்த பிளேடுகள், சின்ன பால்ராசு குண்டுமணிகள் என்று குவித்து வைத்தார். அந்த கலவையை முதல் கட்டமாக லேசாக குவித்து கட்டினார்.
எடுத்து வந்த பெட்ரோலை ஒரு சிரிஞ்சில் உறுஞ்சி ஒரு சின்ன கண்ணாடி வயலில் அதை செலுத்தினார். அந்த கண்ணாடி வயலை சற்றே தடிமனான கற்களோடு சேர்த்து ரப்பர் பாண்ட் போட்டு கட்டினார். அதை ரசாயன கட்டோடு சேர்த்து வைத்து அதன் மேல் ஒரு துணியை போட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி சின்ன நூல்களால் அழகாகவும் சரியான இறுக்கமாகவும் கட்டினார். கைப்பந்து போல் இருந்த அந்த வஸ்த்துவை எடுத்து வாத்தியார் கணம் பார்ப்பதை சற்று தூரத்திலிருந்து புகழேந்தி பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்படித்தான் சுத்தணுமா?”
ஆமோதிக்கும் வண்ணம் கண் சிமிட்டி. அருகில் வரச்சொல்லி தலையசைத்தார்.
“இனி நாம போடுவோம்டா கையெழுத்து, யாரு முஞ்ஞில வேணுன்னாலும்” வாத்தியார் பெருமித்தார்.
“கையெழுத்து!..” அவன் சன்னமாக சொல்லி சிலிர்த்தான்.
நல்ல கைவினை பொருள் போல இருந்த அந்த குண்டின்மீது ஒரு பேனாவால் ஏதோ எழுதினார்.
“யார்மேல வீசணும்னு எழுதுறீங்களா?” என்று கேட்டு உற்று பார்த்தான். அவர் எதுவும் எழுதவில்லை மாறாக கிறுக்கி வைத்திருந்தார் எந்த நேர்த்தியும் இல்லாமால். “ஏன் இப்படி கிறுக்கிறீங்க? எவ்வளவு அழகா இருந்துச்சு. இப்படி பண்ணீட்டிங்க?” புகழேந்தி.
“டேய், எதுலேயும் ஒரு நொட்டை வேணும்டா. ஒரு குறையும் இல்லாம எதையும் செய்யக்கூடாது. அப்படி நோட்டை இல்லாம செஞ்சா சாமி கோவிச்சுக்கும். அப்புறம் சாமியா பாத்து ஒரு குறை வைக்கும். நம்ம காரியம் கெட்டு போய்டும். அதுனால நாமலே பாத்து ஒரு குறை வச்சுடனும். நம்ம காரியமும் சீரா நடக்கும். தொன்னூத்தொம்பது நமக்கு; அந்த ஒன்னு சாமிக்கு. நூறையும் செஞ்சுட்டா அது காரியத்துக்கு ஆகாது. கொழந்தைக்கு மை வைக்கரமாதிரி.”
“அப்ப முழுசா எதையும் செய்யக்கூடாதா மாமா?”
“செய்யலாம். அப்படி செஞ்சா நாமளும் சாமி ஆய்டுவோம். முழுசும் சைபரும் ஒண்ணுதான். ரெண்டும் காரியத்துக்கு ஆகாது. காரியம் கடந்ததுக” சொல்லி சிரித்தார்.
“குறை வச்சா எல்லாம் சரியா நடக்குமா?”
வாத்தியார், “எது பண்ணாலும் அதுல ஏதாவது வில்லத்தனம் இருக்கும். நாம அத கண்டுபிடிக்கணும். முடியலையா, நம்ம காரியத்துல ஒரு நொட்டை நாமலே வச்சுடனும். நமக்கு தெரியாத அந்த வில்லத்தனத்தை இது சரிக்கட்டிரும்”, தத்துவித்தார்.
“மாமா இது புருடா”
“செஞ்சுதான் பாரேன்”
“கையெழுத்து, நொட்டை, வில்லத்தனம்” புகழேந்தி சொல்லிப்பார்த்து மனனம் செய்தான்.
மொத்தம் நாங்கு வெடிகள் சுற்றினார்கள். மண்டி ஜன்னலருகே வெயிலில் காயப் போட்டனர். பாமாஸ்திரம் தயாரானவுடன் அடுத்தநாள் போருக்கு வாத்தியார் தயாரானார்.
ஒருமுறை புகழேந்தியின் பள்ளி ஆசிரியர் ஒருவர் இவன் சரியாக வணக்கம் வைக்கவில்லை என்று மொத்த, இதை கேள்விப்பட்ட இவனது மாமா ஆசிரியரை மொத்த, மாமா உபயத்தில் பள்ளி மாற்றம். “நீ யாருக்கும் வணக்கம் வைக்க தேவையில்லடா” என்று அவர் சொன்னதிலிருந்து புகழேந்திக்கு மாமா வாத்தியாராக மாறிப்போனார். ஆபத்பாந்தவனாக அநாதரக்ஷகனாக. அவரின் நிழல் தொடர விரும்பினாலும் எந்த தகராறுக்கும் வாத்தியார் இவனை அழைத்துசெல்வதில்லை.
“மாமா, நாளைக்கு நானும் வாரேன், வேண்டான்னு சொல்லாதீங்க”
“நாளைக்கு அந்து குரூப் கட்சி மீட்டிங், அரைக்கால் டவுசர் போட்டவனெல்லாம் வரக்கூடாது. இது பெரிய சமாச்சாரம்டா” கடிந்தார்.
“நான் டவுசரா போட்டுருக்கேன் இப்ப?”
“உங்கொப்பன் உன்ன கலெக்டர் டாக்டர் ஆக்கணும்ங்கிறான் நீயென்னடான எங்கூட வரணும்ங்கற. ஏன் உன் முதுகிலையும் ஏதாவது கையெழுத்து வேணுமா இல்ல ஜெயிலுக்கு கித போவணுமா? இங்க வந்தத யாருகிட்டயும் சொல்லக்கூடாது. யாரும் உன்ன கேக்க மாட்டாங்க. இருந்தாலும் சொல்றேன். என்ன கேட்டுச்சா? அப்புறம் இது தான் கடைசி இனி இங்க யாரும் இத பண்ணமாட்டாங்க” வாத்தியார் முடித்துக்கொண்டார். புகழேந்தியை கலப்புக்கடை மசால்தோசை வாங்கிக்கொடுத்து வீட்டருகில் இறக்கி விட்டார்.
இதுதான் கடைசி என்றபோதே புகழேந்தி முடிவு செய்திருந்தான். அந்த நாள் இரவே இரு கட்சியிடயே கைகலப்பு ஆகி இருந்தது. வாத்தியார் தரப்பு ஆட்களுக்கு வீழ்ச்சியாகவே அமைந்ததை ஊர் அறிந்தது. ஆனால் வாத்தியார் அமைதிகாத்தார். வில்லத்தனங்களை ஆராய்ந்தார். சில பஞ்சாயத்துகளுக்கு ஊர் பெருசுகள் போய் வந்தன. அடுத்தநாள் வாத்தியார் மண்டியிலிருந்து ஒரு குண்டை எடுத்துக்கொண்டு சென்றார். மறைந்து சென்ற புகழேந்தி ஓட்டை பிரித்து இறங்கி ஒரு குண்டை லவட்டினான்.
வாத்தியாரை பின்தொடர முயற்சித்துக்கொண்டிருந்தான். அவர் நடவடிக்கைகள் ஒரு தினுசாக இருப்பதை உணர்ந்த புகழேந்தி இன்று சம்பவம் உண்டு என்பதை உறுதி செய்தான். இருட்டி வந்தது. எதிர் கட்சி அலுவலக காம்பவுண்ட் சுவர் அருகே வாத்தியார் மறைந்திருந்தார். புகழேந்தி மறைந்தும் மறையாமலும் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தான். எதிராளிகள் அலுவலகம் உள்ளிருந்து வெளியே வந்தனர். மறைந்திருந்த வாத்தியார் பாமாஸ்திரத்தை எய்தினார், அது படீர் என்று வெடித்து புழுதிகிளப்பியது. இருட்டில் ஊர் ஜனங்கள் அங்கங்கே ஓட வாத்தியார் இருட்டில் மறைந்தார். குழப்பத்தில் புகழேந்தி அந்த புழுதிக்குள் தன் பங்கையும் குருட்டாம்போக்கில் எறிந்துவிட்டு ஓடினான். ஊர் ரஸ்தாவிலிருந்து பிரிந்து பீ க்காட்டிற்குள் ஓடி மேவுக்காடுகள் கடந்து ஊரை சுற்றி வீடு அருகில் வந்துதான் நின்றான். வழிநெடுகிலும் ஏதோ ஒரு கண் தன் முதுகின்மேல் குத்தி நின்றதுபோலவே இருந்தது. வீடு வந்து சேர்ந்தும் படபடப்பு நிற்கவில்லை. இருந்தும் சாகச கிளர்ச்சி அவனை உண்டது.
அடுத்தநாள் புகழேந்தி வீர செயலின் பெருமிதத்தில் அந்தரங்கமாக மிதந்தலைந்தான். “ங்கொக்கமக்கா! என்ன ஸ்பீடு! பட் பட்ன்னு அடிச்சுக்குது. யாருகிட்ட? இனி நம்ம பக்கம் வருவானுங்க?” கதாநாயகன் போல் தன்னை பாவித்து வெறும் காற்றில் வாள் சுற்றியும் கம்பு சுற்றியும் திரிந்தான். பின்பு ஏதோ ஒன்று மனசில் பட தன் கிறுக்குத்தனத்தை நிறுத்திக்கொண்டான். அன்று இரவே தொலைக்காட்சியி செய்தியில், “கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் இரு கட்சிகளுக்கிடையே நடந்த வன்முறையில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது. அதில் உயிரிழப்பில்லை எனினும் இருவர் பலத்த காயமடைந்தனர். காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.”
அடுத்தநாள் காவல் வாகனங்கள் கலெக்டர் சமரசங்கள் ஊர் பெருசு கூடுகைகள் ஒரு அரசியல் பிரமுகர் வரவு என்று ஊர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆத்திரத்துடன் வீடு வந்த அப்பா புகழேந்திக்கு பிரம்புபச்சாரம் செய்தார். நொட்டையில்லாமல் களமாடியதால் வந்த வினையென்று அவனுக்குப் பட்டது. வீட்டார் யாரும் வெளியே செல்ல விடவில்லை. சில நாட்களில் எல்லாம் அமைதியானது. புகழேந்தியை வெளி ஊரில் படிக்கவைக்க ஏற்பாடானது. வீட்டார் அவனை கல்வி விடுதியில் விட்டு சென்றனர். தனக்கான வீரயுகம் முடிவடைந்ததை உணர்ந்தான். இனி கல்வியுகமும் தத்துவயுகமும். வீரயுகத்தின் நீட்சியாக ‘கையெழுத்து, நொட்டை, வில்லத்தனம் கண்டறிதல்’ என்ற முவ்வறிவை தன்தத்துவமாக பயற்சித்து வந்தான்.
பின் நாட்களில் ஏதோ ஒரு காரியத்தை முழுதுமாக வாத்தியார் செய்ய; படுகளம் சென்றவர் மீளவில்லை. இந்த செய்தி வெகு நாட்களுக்குப்பின் புகழேந்திக்கு வந்து சேர்ந்தது. வில்லத்தனம் அரங்கேறியிருப்பதை உணர்ந்தான். தன்தத்துவம் கைகொடுத்ததால் செய்தி பெரிதாக பாதிக்கவில்லை. ஆகையால் நொட்டை வைக்கும் கலையை மேலும் கூர்தீட்டினான். பரிட்சையில் சதமடிக்கும் இயல்திறன் இருந்தும் பூரணம் செய்யாமல் இருந்தான். ஆனால் அதன் பலன்கள் வெவ்வேறு வகையில் அவனை ஆதரித்தது. அந்த பலன்களின் ரிஷிமூலம் அவனது தன்தத்துவம் என்றே நினைத்தான்.
கல்வியுகம் முடிந்து கர்மயுகம் தொடங்கிது. தகவல் தொழிநுட்ப நிரல் நிரப்புபவனாக வேலையை ஆரம்பித்து தற்போது வெளிநாட்டில் நிரல் கட்டுமானராகவும் நிர்மாணிப்பளராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தான். அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய நிரல்களில் தனக்கான பிரத்யேக கையெழுத்தை வைக்க ஆரம்பித்தான் சிறிய நொட்டையோடு. அது சிறந்த மேலாண்மையை பாவனைசெய்ய அதுவே அவனக்கு உச்சங்கள் அள்ளித்தந்தது. எந்த காரியத்திலும் வில்லத்தனத்தை எதிர்பார்த்தும் கண்காணித்தும் வந்தான். தன்தத்துவப்படி வாழ்க்கையை செலுத்தினான்.
ஊரில் புகழேந்தியின் கூட்டாளிக்கு திருமணம் நிச்சயமாக அவன் பெற்றோர்களுக்கு கண் திறந்தது. பெண் பார்த்திருப்பதாகவும் பெண் வீட்டார் அவனை பார்க்கவேண்டும் என்பதாகவும், சில பத்திர வேலைகள் இருப்பதாகவும் ஊர் வந்து சேரச்சொல்லி அப்பா கட்டளையிட்டார். கிரகஸ்த்த யுகம் தொடங்கவிருப்பதை உணர்ந்தான்.

2
இரு கைகளிலும் காப்பி டம்பளர்களின் விளிம்பை பிடித்து எடுத்துகொண்டுவந்த அக்கா, ” டேய் இந்த டா” என்று ஒன்றை புகழேந்தியின் கைகளில் அலுங்காமல் கொடுத்துவிட்டு அவனை உரசி ஒட்டி அமர்ந்து “இது அம்மா போட்டது” என்றாள். புகழேந்தி ஒரு மீடர் அருந்திவிட்டு அக்காவைப் பார்த்தான். “அப்பாகிட்ட சொல்லி நம்ம வீட்டு நிளவை இடித்து கொஞ்சம் பெரிய கதவு போடணும். வீட்டை அம்சமா கட்டணும்னு கட்டி இப்ப பாரு இப்படி ஆகிடுச்சு.”
“ஏன்டா”
“பின்ன, நீ இந்த சைசுல பெருத்தீன்னா கதவுல சிக்கிக்க மாட்ட?”
அக்கா செல்லமாக அவனை முறைத்துவிட்டு சமயலறை நோக்கி கத்தினாள், “அம்மா… நான் குண்டா இருக்கேன்னு சொல்றான்மா..”
இருவரும் சிரித்துக்கொண்டனர். அக்கா காப்பியை கொஞ்சம் குடித்தவுடன், “சூடு, சீனி, டிக்காஷன் எதுவும் பத்துல” என்று டம்பளரை வைத்துவிட்டு அவன் தலை அக்கறையாக கோதினாள்.
“நீ அத அலுங்காம ஒரு சொட்டு கீழ சிந்தாம கொண்டுவரும்போதே நெனெச்சேன், இந்த காப்பில ஒரு வில்லத்தனம் இருக்கும்ன்னு”
“முருகா…, இன்னுமாடா இத ஃபோலோ பண்ற? நீயெல்லாம் அமெரிக்கா காரன்னு வெளிய சொல்லாத”
“ஸ்ரீல ஸ்ரீ புகழானதா சொன்ன கேக்கணும்”
அக்கா, “ஆமா..” என்று அவனை தோலில் செல்லமாக தட்டினாள்.
பதிலுக்கு அக்காவின் புஜத்தில் குத்திக்கொண்டே சமையலறை நோக்கி கத்தினான், “அம்மா…! அக்கா என்ன அடிக்கிறா.”
சத்தம் கேட்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த அப்பா அருகிலுள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். “உங்களுக்கு காப்பி எடுத்து வரவா?” என்ற அக்காவின் கேள்விக்கு ஆமாம் என்று தலையசைத்துவிட்டு பேப்பரை கையில் எடுத்தார். அக்கா உள்ளே சென்றவுடன் எதுவும் சொல்லாமல் புகழேந்தி அமர்ந்திருந்தான்.
சிறிது மௌனத்திற்கு பிறகு அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டு சட்டென்று கேட்டார், “ஏம்பா பேங்க்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கிற?” அந்தக் கேள்வியின் கணம் உள்ளிரங்க புகழேந்திக்கு ஓரிரு வினாடிகள் ஆனது. ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்துகொண்டு, ” அம்பது அம்பதியஞ்சு இருக்கும் வெளியில ஒரு பத்து கொடுத்து வெச்சிருக்கேன்”
“ம்ம்ம்”
“வேண்டி இருக்கா? எடுத்து தரவா?”
“உனக்கு அந்த ஈரோடு செல்வம் தெரியும் இல்ல? அதாம்பா அந்த வாட்ச் கடைக்காரன்! நம்மளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பல வருஷமா நின்னு போச்சு. அவனுடைய இடம் ஒன்னு விலை சொல்லுவான் போல. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு. பெருசா ஒன்னும் பார்ட்டி சிக்கல போல. போன் பண்ணி வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான். அனேகமா நம்மளையே கிரையம் பண்ணிக்க சொல்லுவான்னு நினைக்கிறேன். அதிகமா விலை சொல்லுவான். கொஞ்சம் அடிச்சு பேசணும் அதான் உன் சித்தப்பாவை வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு எங்கேயும் வெளிய போகாம நீயும் கூட இருந்து பாரு. எல்லாம் சரியா வந்துச்சுன்னா உன் பெயரிலேயே கிரையம் பண்ணிக்கலாம்”
புகழேந்தி மனதிற்குள், “என்ன என் பெயரில் கிரயமா? அதுவும் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற இடமா? இது கைகூடி வரவேண்டும்.” “வாட்ச் கடைக்காரன்… வாட்ச் கடைக்காரன்…” என அகம் உச்சாடனம் செய்தது. மனம் அதையே நினைத்துக் கொண்டிருந்தது. நாளைதான் வரப்போகிறார்கள் என்றால் இன்னும் நேரம் இருக்கிறது. நள்ளிரவு வரையில் தனக்கான அனேக அனுகூல காரிய சாத்தியங்களை யோசித்துக் கொண்டிருந்தான். அந்த குழப்பத்திலேயே தூங்கியும் போனான். அதிகாலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்று தெளிந்து வந்தது. தான் இடப்போகும் கையெழுத்து கோர்வையும் துலங்கியது. வாட்ச் கடைக்காரனுக்கு எதிராக அதுவே சரியான அஸ்திரம். வெடிகுண்டின் மேல் வாத்தியார் இட்ட கிறுக்கல்களுக்கு அது சமம்.

பல பரிவர்த்தனை அமர்வுகளை கண்ட சித்தப்பா நேரமாகவே வந்திருந்தார். அப்பாவும் சித்தப்பாவும் தங்களது அனுபவ யுத்திகளை கூர்தீட்டிக் கொண்டிருந்தார்கள். பொருண்மை தளத்தில் நடவடிக்கைகளை அவர்கள் யோசித்துக்கொண்டிருக்க புகழேந்தியோ சூக்ஷம தளத்தில் தனது காரியத்தை ஏற்கனவே முடித்திருந்தான். இனி தனக்கான கருமம் விழிப்புடன் வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் என்று நினைத்து அமைதியாக இருந்தான்.

பிற்பகலில் எதிரணி மூன்று பேராக வந்திருந்தார்கள். தங்கள் அணியிலும் அப்பா சித்தப்பா தன்னையும் சேர்த்து மூன்று பேர்தான். வீட்டுக்குள் வந்தவர்களில் ஒருவர் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு சுவற்றின் ஒரு மூலையில் தன் கண்களை நிலை குத்தி நிறுத்தினார். அவரது உக்கிர முகம் சற்று சலனம் மாறியது. புகழேந்தி இதை கவனித்தான். தனது நொட்டை வேலை செய்கிறது என்று நினைத்தான்.

ஆரம்ப உபச்சாரங்கள் முடிந்தது. எதிர்பார்த்தது போலவே எதிரணி ஒரு சோதனை கணையை எய்தது. அதை உள்வாங்கிய தளபதியாரான சித்தப்பா தன் எதிர் கணையை எய்தார். அவர்கள் அது சாதகமா பாதகமா என்று குழம்பி நின்றார்கள். அவர்கள் ஒரு அஸ்திரத்தை எறிந்தார்கள் அதை அப்பா லாவகமாக தடுத்து நிறுத்தினார். சித்தப்பா ஒரு தீப்பந்தத்தை பூங்கொத்துகளை கட்டி அனுப்பினார். அவர்கள் பூங்கொத்துக்களை எடுத்துக்கொண்டு தீப்பந்தத்தை ஒரு ரதத்தில் வைத்து திருப்பி அனுப்பினர். அவர்கள் மற்றும் ஒரு பலமான அஸ்திரத்தை வீச அதை அப்பா தடுத்து நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தார். அந்த அமைதி அவர்கள் சேனையை கலங்கடிக்க ஒரு பூங்கொத்தை அனுப்பிவைத்தனர். வந்த பூங்கொத்தை ஓரமாக வைத்துவிட்டு அப்பா தாக்குதலுக்கு மேல் தாக்குதலாக நடத்தினார். களம் உச்சகதியில் நடந்து கொண்டிருந்தது. வெற்றிக்கோப்பை கண்ணுக்கு தெரிய புகழேந்தி பரமாத்மாவைப் போல் புன்னகை செய்தான். வில்லன்கள் பணிந்தனர். பேரம் படிந்தது. இரண்டு நாட்களுக்குள் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொள்வதாகவும் பதினைந்து நாட்களுக்குள் கிரையம் முடித்துக் கொள்வதாகும் சொல்லிவிட்டு சென்றனர்.

அனைவரும் பூரித்து இருந்தார்கள். சித்தப்பா அருகே வந்தார். ஒரு பெருமித பாவனையோடு,”என்னடா பாத்தியா? படிச்சா மட்டும் போதாது! எங்கள மாதிரி பேச கத்துக்கணும்”

புகழேந்தி ஏதும் பேசாமல் அந்த மெல்லிய புன்னகையை தக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

“அது என்னடா கையில?” புகழேந்தி ஒரு AA பேட்டரியை காண்பிக்க அதை வாங்கிக்கொண்ட சித்தப்பா, “இந்த காலத்து பசங்களுக்கு எல்லாம் அவ்வளவு வினையம் பத்தாது. அவங்க சூட்டிப் எல்லாம் வேற மாதிரி. யார் யார் கிட்ட எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும்குற விவரமெல்லாம் பத்திரத்தில.” என்று பொதுவாக சொன்னார்.

சித்தப்பா அந்த பேட்டரியை கையில் உருட்டிக்கொண்டு,” நாளைக்கு பொண்ணு பாக்க போறோமே அந்த வீட்டுக்கு இந்த வாட்சு கடைக்காரன் ஒருவகையில் சொந்தம்தான். புகழேந்தி பெயரில்தான் கிரையம் செய்யப் போறும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடும். அப்புறம் ஒரே கெத்து தான்.”

புகழேந்தி புன்னகை செய்தவாறு அந்த சுவற்றின் மூலையில் பார்த்தான். அங்கு சுவர் கடிகாரம் ஓடாமல் நின்று போயிருந்தது.

3
களம் கலைந்துவிட்டதை உணர்ந்த அக்கா மீண்டும் புகழேந்தியை வம்பிழுக்க வந்தாள், “என்னடா, புது சொத்து புது பொண்ணு! பெரியமனுஷன் ஆகிட்டுவர்ர” புகழேந்தி யோசித்தவாறே தலையசைத்தான். அக்கா,”நாளைக்கு பொண்ணு பாக்க போறோம் நீ ஒண்ணுமே விசாரிக்க மாட்டேங்குற? வீட்ல எல்லாரும் கிட்டத்தட்ட முடிவே பண்ணீட்டாங்க. என் புருஷன் மட்டும்தான் உன்கிட்ட கேக்கணும்ங்குறாரு.”
புகழேந்தி வலிந்து ஒரு அசட்டு சிரிப்பை தருவித்தான்.
“ஆனா நான் அதெல்லாம் வேண்டாம். நாமளே முடிவு பண்ணுவோம். என் கல்யாணத்துல என்கிட்ட கேட்டா முடிவு பண்ணுனீங்க ன்னு சொல்லிட்டேன்” உதட்டை சுளித்து கேலி செய்தாள்.
“உன்ன கொன்னுருவேன்”
“அட! உன் பிலாஸபி படியே உன்ன கேக்குலங்குற ஒரு நொட்டை இருக்கட்டுமே. என்ன இப்ப”
“இது அராஜகம், நான் பொண்ணுகிட்ட பேசணும், புடிச்சிருந்தாத்தான் ஒத்துக்குவேன்”
“நீ கழிக்கற்ற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. பொண்ணு லட்சணம் ஓவியமாட்டா இருக்கு.” என்று அவன் மன அலைவரிசைக்கு இறங்கினாள். “பொண்ணு ஸ்கூல்ல உன் ஜூனியர்தான்” என்று அவனது ஆர்வத்தை உசுப்பினாள்
“யாரு?”
“ஊர் பிரஸிடண்ட் வீட்டு பொண்ணு. பேரு அனு”
“அது எதிர் க்ரூப்பில்ல? அந்தவீட்ல ஒரு பொண்ணுதான் இருக்கும். குண்டா. அதுபேர் அனு இல்லையே”
“அந்த பொண்ணுதாண்டா, இப்போ நீ பாக்கணுமே! ஒல்லியா வடிவா இருக்கு. பேர மாத்திக்கிச்சு”
“அக்கா அது பேரு குசுமாவதி, நானே பயங்கரமா ஓட்டிருக்கேன். அதெல்லாம் செட் ஆகதுக்கா. அதுவே வேண்டாம்னு சொல்லிரும். என்னை நல்ல ஞாபகம் வச்சிருக்கும். அவளோட பேர வச்சு ரொம்ப காயப் படுத்தீருக்கேன். அந்த கட்சிகாரங்களுக்கும் நமக்குதந்தான் ஆகாதே அப்புறம் எப்படி?” என்றான்.
“அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சுக்குவாங்க. எல்லாம் மறந்திட்டு ரெண்டு கட்சிகாரங்களும் ஏவாரம் கிரயம்ன்னு பண்ணிக்கிறப்போ; அந்த பொண்ணும் மறந்திருக்கும். அந்த குடும்பம் தான் ரொம்ப இன்டெரெஸ்ட்டா இருக்காங்க”
புகழேந்தி, “மறக்கறமாரிய நான் செஞ்சுருக்கேன். அவ பேரு குசுமாவதி”
“அட இவங்களே சேந்துட்டாங்க உங்களுக்கு என்ன? அதெல்லாம் யார் ஞாபகத்திலயும் இருக்காது. இந்தமாதிரி பொண்ணு நம்ம குடும்பத்துக்கு கிடைக்காது; ரொம்ப பண்ணாத; இதுதான் கடைசி” குரலை உயர்த்தினாள்
இதுதான் கடைசி என்றதும் புகழேந்தி அமைதியானான்.

4
அடுத்த நாள் இரண்டு உயர்ரக கார்களில் நெருங்கிய மாமாக்கள் கரை வெட்டியுடனும் அத்தைகள் சகல அலங்காரங்களுடனும் வந்திருந்தனர். அம்மாவும் அப்பாவும் நிகழ்விற்கான தகுந்த தேஜஸுடன் காணப்பெற்றார்கள். அக்கா எல்லா வேலைகளையும் பரவச பரபரப்புடன் செய்தாள்.
“அக்கா! பொண்ணு புடிக்கலேன்னா நீதான் அப்புறம் சமாளிக்கணும். இப்பவே சொல்லிட்டேன்”
“அதெல்லாம் புடிக்கும். நான் இருக்கேன் பாத்துக்குறேன். எல்லாம் சரியாய் நடக்கும்.”
“எல்லாம் சரியா நூறு பர்ஸன்ட் நடந்தா சரிதான்”
“ஏன்?, அப்பத்தான் எல்லாம் கெட்டு போகுமா? நான் வேண்ணா சக்கரையில்லாம சூடில்லாம ஒரு காபி போட்டு தரட்டா? பிலாசபி வேல செஞ்சிடும்?” அக்கா முறைத்தபடியே சொன்னாள்.
புகழேந்தி ஒன்றும் சொல்லாமல் கீழிறங்கினான்.
கார்கள் ட்ராபிக்கில் மாட்டாமல் பஞ்சர் ஆகாமல் சின்ன கீறல் கூட விழாமல் பெண் வீட்டுமுன் வந்து நின்றது. பெண் வீட்டார் பெரிய இடம். வீட்டு வாசலிலேயே பெண் வீட்டார் மலர்ந்த முகத்துடனும் அதே பழைய கட்சி வணக்கத்துடன் வரவேற்றனர். அப்பா எப்போதும் போல கம்பீரமான வணக்கம் வைத்தார். அம்மாவும் அக்காவும் ஒரே அச்சில் செய்தது போல ஒரே வகையாக சிரித்தனர். இன்டெர்வியூவிற்கு செல்வதுபோல் உடையந்துவந்த புகழேந்திக்கு ஒரு அந்நிய உண்ரவு ஏற்பட்டது. காம்பவுண்டு மிக விலாசமாக இருந்தது. உள்ளே பத்து கார்களை தாராளமாக நிறுத்தலாம். வீட்டு வாசலில் இடப்பட்ட பூக்கோலம் பெண்வீட்டாரின் இந்த நிகழ்வின் ஈடுபாட்டை காண்பித்தது. எல்லோரும் வீட்டினுள் சென்றனர். புகழேந்தி உள்ளே செல்லும்போதே கதவை கவனித்தான். அது பல்வேறு அடுக்குகளாக உயர்ரக தேக்கில் பல நுண் வேலைப்பாடுகளுடன் இருந்தது. உள்ளே சென்றதும் வீட்டின் விலாசமான முன் அறையும் அதில் வைக்கப்பட்ட பொருட்களும் இருக்கைகளும் இவர்களது நீண்ட கால சுபிக்ஷ வாழ்வை காண்பித்தது. எது உபயோகிக்கும் பொருள் எது கலைப்பொருள் என்றே தெரியவில்லை. அனைத்திலும் நேர்த்தி. அந்த வீட்டில் ஒரு புது வாசனை வந்தது. அவர்கள் வீட்டிலேயே இருபது இருபதியைந்து பேர் இருப்பார்கள். இவன் வீட்டு ஆண்கள் அந்த பெரிய ஹாலில் போடப்பட்ட வெவ்வேறு அளவிலான சோபாவில் அமர்ந்தார்கள். புகழேந்தி ஒரு ஓரமாக இருந்த பிளாஸ்டிக் நாற்காலி நோக்கி சென்றான், அந்த வீட்டு முக்கியஸ்தர் ஒருவர் இவனை நடுவில் உள்ள ஒற்றை சோபாவில் அமருமாறு பணித்தார். அப்படி ஒரு இருக்கையில் அவன் அமர்ந்ததே இல்லை. அவர்கள் எல்லோரும் தற்போதய மழை நிலவரம், வெள்ளாமை, பரஸ்பர தொழில் விசாரிப்பு என்று பேச்சு சென்றுகொண்டிருந்தது. எல்லாம் சுமூகமாக சென்றது அதனால் பெண் எப்படி இருப்பாள் என்று ஒரு சித்திரம் இவனிற்குள் உருவாகிவந்தது. “ஏன் இப்படி வளவளன்னு பேசுறாங்க?, எப்படியும் எனக்கு பிடிக்கப்போறது இல்ல. அக்கா உன்ன நெனச்சாதான் எனக்கு பாவமா இருக்கு. எப்படி சமாளிக்க போற? நம்ம ஒரே பிடியா இருந்திட வேண்டியதுதான். அதான் அக்கா இருக்காளே. நல்லவேள அக்கா இருக்கா”, புகழேந்தி நினைத்துக்கொண்டே கொஞ்சம் திரும்பி பக்கவாட்டில் பார்த்தான். ஒருவர் மட்டும் மெல்லிய உடல் வாகில் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை சகிதமாக அட்டணங்கால் போட்டு இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாமல் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் புகழேந்திக்கு சிறு நம்பிக்கை தென்பட்டது.
எல்லோருக்கும் காபியும் புகழேந்திக்குமட்டும் ஹார்லிக்ஸும் வந்தது. யார்யாரோ என்னென்னமோ விசாரித்தார்கள். எல்லாம் ஒரு மேடை நிகழ்ச்சிபோல நிகழ்ந்துகொண்டிருந்தது.
கைபேசி சினுங்கியது:- குறுந்செய்தி
அக்கா: டேய்
புகழ்: என்னக்கா
அக்கா: கொஞ்சம் சிரிச்சமுகமா வச்சுக்கோ. ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்காத. குனிஞ்சே இருக்காத. யாரவது பேசினா நல்லா பேசு.
புகழ்: ம்ம்ம்..
அக்கா: யாராவது வணக்கம் வெச்ச திருப்பி வணக்கம் வெய்.
புகழ்: எல்லாம் போதும்! இதுவே ஜாஸ்தி
புதிய எண்: ஹாய்
அக்கா: எல்லாருக்கும் இங்க ஓகே.
புகழ்: மொதல்ல நான் ஓகே பண்ணனும். எனக்கு புடிக்கலேன்னா நீதான் அப்புறம் பாத்துக்கணும்.
அக்கா: எல்லாம் தகுந்த குறையுடன்தான் நடக்குது இங்க. அதனால செட் ஆகிடும்.
புகழ்: நான் பொண்ணுகிட்ட பேசணும்
அக்கா: ம்ம்ம்

புகழேந்தி கைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான். அக்காவிடமிருந்து எதுவும் வரவில்லை. அருகில் யாரோ பெண்வீட்டார் வந்து அமர்ந்து பேச்சுக்கொடுத்து சென்றார். சற்று கவனமாக சரியான ஆளுமையுடன் பேசினான்.
அக்கா எட்டிப்பார்த்தாள். புகழேந்தி உடனே கைபேசியை எடுத்து அக்காவுக்கு தட்டினான்.

புகழ்: இப்ப வந்து பேசினாரே அவர்தான் குசுமாவதியோட அப்பாவை? முகம் மறந்துபோச்சு.
அக்கா: இல்லடா. அங்கதான் உக்காந்திருக்கார் பாரு.
புகழ்: இங்க எல்லாரும் ஒரே கணத்தில இருக்காங்க
புதிய எண்: ஹாய்
அக்கா: ஓவரா பேசாத. சும்மா கால் ஆட்டிக்கிட்டே இருக்காத. போதும் போன பாக்கெட்ல போடு.
புதிய எண்: நான் அனு.

“இது என்னடா வம்பா போச்சு; இப்ப என்ன டைப் பண்றது? ரிப்ளை பண்ணுவோமா, இல்ல வேண்டாம். ஒருவேள பாத்துட்டு புடிக்கலேன்னா? ஏன் பேச்ச வளர்க்கணும்?” என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் வந்து, “தம்பி இப்படி வாங்க; அனு உங்ககிட்ட பேசணுமுங்கிது”. என்றார். புகழேந்தி இருக்கையிலேயே சன்னமாக உடல் நெளிந்து அப்பாவைப் பார்த்தான். யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அப்பா திரும்பி, “போப்பா பெரியவங்க கூப்பிடறாங்கல்ல?”
“சும்மா வெட்கப்படாதீங்க தம்பி” என்று பின்புறமிருந்து ஒரு குரல் வந்தது.
அக்கா கதவோரம் நின்று “புகழ் இங்க வா” என்றாள். இவன் அசட்டையாக எழுந்து அக்காவிடம் சென்றான். எல்லோரது கண்களும் இவன் மிதிருந்தது.

“என்னக்கா பேசறது?”
“இது என்னடா வம்பா இருக்கு. நீதானா பேசணும்னா. சும்மா பேசு. என்ன பண்ற என்ன படிச்சன்னு.”
“நீயும் வாக்க”
வெளியே கார் நிறுத்தும் ஓடு மேய்ந்த கூடாரம் அருகில் நிழலில் ஒரு குட்டிப் பெண்ணை பிடித்தவாறு அவள் நின்றிருந்தாள். ஒல்லியான தேகமாக மென்பச்சை பட்டு உடையில் வழவழப்பான மாநிறத்தில் செங்கருப்பு கூந்தலுடன் அனு இவனை பரிச்சயமாக பார்ப்பதுபோல் மென்சிரிப்புடன் பார்த்து நின்றாள். மேல்வயிற்றில் ஒரு பதட்டமான பறவை குடிவந்திருந்தது. காது மடல் சூடாகின. நடு முதுகில் வியர்வை வழிந்தோடியது. அடித்தொடைகள் வெகு நாட்களுக்கு பிறகு லேசாக ஆடியது. மூச்சு கனத்து தொண்டை கம்மியது. பக்கத்திலிருந்த அக்காவையும் இப்போது காணவில்லை. உதறும் கால்களுடன் அருகில் சென்றுநின்றான்.
“எப்படி இருக்கீங்க” என்று ஆரம்பித்தாள்.
ஏதோ ஒன்று ஞாபகம் வந்தவனாக லேசாக வயிற்றை உள்ளிழுத்துக்கொண்டு, “நல்லா இருக்கேன். நீங்க?”
“ம்ம். என்ன ஞாபகம் வெச்சிருக்க மாட்டீங்கன்னு நினச்சேன்”
“அப்படியெல்லாம் இல்ல”
லேசாய் தலையை சாய்த்தவளாக “நான்தான் அப்போ உங்க நம்பருக்கு மெசேஜ் பண்ணுனேன்” என்றாள்.
“இப்போதான் பார்த்தேன்.” என்று அமைதியானான்
சில வினாடிகள் மெளனமாக நகர. அந்த அமைதியை உணர்ந்து மீண்டும் ஆரம்பித்தான். “போஸ்ட் க்ராஜூயேட் எங்க பண்ணுனீங்க?”
அவள் ஏதோ விளக்கி பேச ஆரம்பித்தாள். இவன் கவனம் கடந்தகால எதிர்கால உலா சென்றது. அவள் ஏதோ கேட்டுக்கொண்டும் பேசிகொண்டும் சற்று பார்வையை விலக்கி தங்களை சுற்றி எடுத்துச்சென்றாள். நற்தருணத்தை உணர்ந்த உள்மிருகம் தன் கண்களால் அவள் மேனிமேய்ந்தது. சிறு நெற்றி குண்டு கண்கள் அளவாய் ஊதிய கன்னம் குவித்துவைக்கக்கூடிய உதடுகள். பெருங்கூட்டு உடலென்றாலும் ஒட்டிய வயிறு உருண்ட புஜங்கள் என்று அவளது போஷாக்கு; ஆரோக்கிய அழகாக நிமிர்ந்து நின்றும் உள்ளொடுங்கியும் அகலவிரிந்தும் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவளது தலைமயிரும் விரல் நகங்களும் நாளைய அரோக்கியத்தையும் பறையடித்தது. அவள் பார்வையை திரும்ப கொண்டுவருவதற்குள் புகழேந்தி விரைந்து வந்து அவள் கண்களில் தன் கண்களை நிலைநிறுத்தினான்.
கொஞ்சம் தூரத்தில் இரு பெண்கள் “பேசி முடித்தாகிவிட்டதா?” என்று கேட்பது போல் எட்டிப் பார்த்தார்கள். அதன் அர்த்தம் புரிந்த அனு. “வீட்ல கேட்ட நான் புடிச்சிருக்குன்னு சொல்லிருவேன்” என்று சன்னமாக பாடிவிட்டு; “வாடி” என்று அந்த குட்டிப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பி அவர்களிடம் சென்றாள். அனுவிற்கு இவன் பதில் தேவைப்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. அந்த காதல் உரிமை புகழேந்திக்கு உதடுகளில் மென் சிரிப்பாகவும் கண்களில் பூரிப்பாகவும் பொழிந்து தள்ளியது. வயிற்றில் குடியேறிய பதட்டமான பறவை அவன் தோள்ப்பட்டைக்கு நகர்ந்து அவனை தூக்கிக்கொண்டு பறந்தது. கால்கள் அந்தரத்தில்.

5
தரை தட்டாமல் அப்படியே உள்ளே வந்து அமர்ந்தான். அந்தப் பறவையையும் அவனையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. புறஉலகம் இவனுக்கு மங்கலாக நிழலாடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் இருவீட்டு பெரியவர்கள் காலண்டருடன் நாட்கள் பற்றியும் நல்ல நேரங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். புகழேந்தியையும் பறவையையும் நல்ல நேரம் சூழ்ந்து கொப்பளித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் தூரத்தில் அக்கா நிறைந்த கண்களுடன் இவனைப் பார்த்துக்கொண்டிருப்பதுகூட புகழேந்திக்கு உரைக்கவில்லை.
அருகில் யாரோ ஒருவர், “ஒரு காலத்தில ரெண்டு கட்சிகாரங்களுக்கும் சுத்தமா ஆகாது. இப்ப பாருங்க சம்பந்தம் பண்ற அளவுக்கு வந்திருச்சு. ரொம்ப சந்தோசம். எல்லாம் சரியா நடக்கணும்” என்றார்.
“சரியா நடக்கணும்” என்றது மட்டும் அழுத்தமாக புகழேந்தியின் காதுகளில் விழுந்தது. தரை இறங்கினான். “எல்லாம் சரியா நடக்குதா? ஆமாம். கூடாது. எல்லாம் சரியா நடந்தா!, அப்புறம்! இல்லை! ஒரு நொட்டை வேண்டும் இங்கே. ஒரு குறைகூட கண்ணுக்குப் படவில்லையா? ஏன் மியூசியம் போல இந்த வீட்டை அடுக்கிவைத்துள்ளார்கள். எல்லாரும் என்ன நாடகத்திலா நடிக்கிறார்கள். கொஞ்சம் அப்படி இப்படி நடந்துகொண்டால்தான் என்ன. வெளியே கட்டி வைத்துள்ள நாய்கூட ஒழுங்கா நடந்துக்குதே? இவ்வளவு பேர் உள்ளார்கள். கொஞ்சம் குழைத்தால் தான் என்ன.” அவனை தூக்கிப் பரந்த பறவை மீண்டு பதட்டமடைந்து வயிற்றுக்குள் சென்றது.
கடிகாரத்தைப் பார்த்தான் அது சரியான மணி காண்பித்துக்கொண்டிருந்தது. நாற்காலிகள் அதனதன் இடத்தில். உள்ளே காற்று சரியான விகிதத்தில் இதமாக அடித்துக்கொண்டிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். குழந்தைகள் சாப்பிட்டிருந்தார்கள். வயோதிகள்கள் ஜீரணித்திருந்தார்கள். மாணவர்கள் கனமற்றிருந்தார்கள் கிரஹஸ்தன் சந்தோசமாக துறவி ஒன்றுமில்லாமல் தலைவன் நிம்மதியாக என்று உலகமே சரியாக இருப்பதாக பட்டது.

புகழேந்தி, “இல்லை இல்லை இது நடக்கக்கூடாது. நொட்டை இல்லையென்றால் வில்லத்தனம் நடக்கும். வில்லன் எழுவான். யார் வில்லன் இங்கே? யார் அவன்? அவன் கரம் பாய்வதற்குள் நாம் கையெழுத்திட வேண்டும். அதுதான் நம் பிரம்மாஸ்திரம். கொஞ்சம் சட்டையில் மை கொட்டிக்கொள்ளலாமா? பேணா இல்லையே. யாரையாவது தெரியாததுபோல் கீழே தள்ளி விடலாமா? யாரும் மிக அருகில் இல்லையே. யாரது? ஆ! அந்த ஆள் யார். வந்ததிலிருந்து பேசவில்லை. ஏன் அவன் முறுக்கிவைத்த ஜமுக்காளம் போல் அமர்ந்திருக்கிறான். அமர்ந்திருக்கிறானா இல்லை கிடக்கிறானா? என்ன ஒரு ஏளனம். ஏன் எல்லோரும் அவனிடம் மரியாதையாக நடந்துகொள்கிறார்கள். அவன்தான் இங்கே எல்லாமுமே. பொறு அவன் என்னைத்தான் இப்போது பார்க்கிறான். ஏன் முறைக்கிறான். புரிந்தது. அவன்தான் வில்லன். இங்கே வில்லத்தனம் அரங்கேறப் போகிறது. எழுந்து சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லப் போகிறான். அவனது தீர்ப்புதான் இறுதியாக இறுக்கப் போகிறது. ஏன் எல்லோரும் எழுகிறார்கள்? புறப்படும் நேரம் வந்துவிட்டதா? ஆம். எல்லா முகங்களும் மலர்ந்திருக்க அவன் முகம் மட்டும் இறுகி எங்களை நோக்கி உமிழ்வதுபோல் உள்ளதே. எங்களை மறுத்தாலும் பரவாயில்லை; உமிழ்ந்தா வெளியே அனுப்புவான். இல்லை விடக்கூடாது. கடவுளே! என் மூளை வேலை செய்யவில்லையே! நிதானம்! இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ஒரு நொட்டை வைப்பதற்கான; நம் கையெழுத்தைப் போடுவதற்க்கான சந்தர்ப்பம் ஒன்று உள்ளது. ஆ! அதோ நான் குடிக்காமல் வைத்த ஹார்லிக்ஸ் டம்ளர். பேப்பர் எடுப்பதுபோல அதை தட்டிவிடு. ஆம் அதுதான் சரி. அதுதான் நம் கையெழுத்து.
புகழேந்தியின் வீட்டார்கள் எல்லோரும் சிரித்த முகமாக எழுந்து விடைபெறும்முன் நடக்கும் கும்பிடுகளும் கைகுலுக்கல்களும் செய்துகொண்டிருந்தனர். புகழேந்தி எழுந்தான். அப்பா அந்த வில்லனை நோக்கித் திரும்பினார். இதுதான் சரியான கடைசி தருணம் என்று உணர்ந்து அந்த டம்பளரை நோக்கி கையை நீட்டியவாறு ஒரு எட்டு வைத்தான். அவன் கை நீலும்தோறும் டம்ளர் விலகிச்செல்வதுபோல் இருந்தது.
“அருகில் இருந்தாலும் தூரமாக அல்லவா இருக்கிறது”
அப்பா, இன்னும் அமர்ந்திருந்த அந்த வில்லனை நோக்கி கும்பிட்டவாரே, “அப்புறம் நாங்க போயிட்டு வர்றோம்” என்றார்.
புகழேந்திக்கும் டம்ளருக்கும் இன்னும் ஒரு கை தூரம்தான் இருந்தது.
வில்லனுடைய அருகிலிருந்த ஒருவர் அவரை கைத்தாங்கலாக தூக்கினார். புகழேந்தி பார்த்தான்.
சற்று விலகிய வேட்டியுடன் நிற்கமுடியாமல் கைகள் கூப்பி உடைந்த குரலில் “போயிட்டு வாங்க சம்மந்தி” என்று சொன்னவருக்கு இருகைகளையும் சேர்த்து மொத்தம் நான்கு விரல்கள்தான் இருந்தது. தொடைவரை சூம்பிய எலும்புக் கால் ஒன்று வெளியே தெரிந்தது. தோள்பட்டைவரை அகன்ற சட்டைக்குள் அவர்மேல் ஏற்கனவே போடப்பட்ட கையெழுத்து இப்போது புகழேந்திக்கு நன்கு துலங்கி தெரிந்தது.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.