தேடன்
வெளிறிய, கரும்புள்ளியோடு, தடித்த, வால் துண்டிக்கப்பட்ட என நான்கு பல்லிகள்
டியூப் லைட் பின்னாலும் சாமி படங்களுள் ஒளிந்தும் கடிகாரத்தில் உறவாடியும் குடும்பம் நடத்துக்கின்றன
வீட்டின் ஒவ்வொரு கதவை திறந்து மூடும் போதும் தெறித்து ஓடுகின்றன;
ஒட்டிய பதற்றம்
ஒரு பட்டாம்பூச்சியின் இரண்டு ரெக்கைகளை பிய்த்துத் தின்கின்றன அவை
ஒருமுறை அப்பாவின் கடிந்த பாதச்சுவடோடு நசுங்கி
கண்கள் பிதுங்கி இதயத்துடிப்பு நிற்பதை கூட பார்க்க முடிந்தது
‘த்தொ..த்தொ.. த்தொ… பாவம்’
என்றாள் அம்மா
வாரியெடுத்து பக்கத்து வீட்டு மனையில் கொட்டிவிட்டோம்
பட்டாம்பூச்சியை தின்றுவிட்ட பல்லி சத்தம் எழுப்புகிறது
‘த்த்தத்த்த்த்த்த்..’
அம்மாவும் ‘த்த்த்த்த்த்…’ என்று சத்தமிடுகிறாள்
பட்டாம்பூச்சியை தப்பிக்க வைக்க பார்த்து தோற்றுப்போன தங்கை
‘அச்சோ பாவம்’ என்கிறாள்
கழிவறைக் குழிக்குள் விழுந்த பல்லியை தண்ணீர் ஊற்றி மூழ்கடித்து ஆசுவாசமாக கழிவகற்றிவிட்டு வந்தான் தம்பி
வாலில்லா பல்லியை தேடிக் கொண்டிருக்கிறேன்
அதோ தெரிகிறது கண்ணாடியில்