Author: பதாகை

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: நிழலின் தனிமை – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

 

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஒரு முறை ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக அவளின் காதலன் என்னையும் என் நண்பர்களையும் அடிப்பதற்காக வந்தான். உண்மையில் அவன் முதன்மையாக அடிக்க வந்தது என்னைத்தான். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவன் என் நண்பனைப் பார்த்து ஒனக்கும் இந்த பிரச்சனைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என கேட்க என் நண்பன் என்னை மட்டும் தனியாக விட மனதின்றி உண்டு என சொன்னதால் அடிக்கப்பட்டான். நான் உட்பட நண்பர்கள் எதுவுமே செய்யாமல் நின்றிருந்தோம்.

இதில் உண்மை என்னவென்றால் அந்தப்பெண்ணிடம் நான் பெரிதாக பேசியதோ கிண்டல் செய்ததோ இல்லை. ஆனால் அவள் காதலன் என் நண்பனை அடித்ததன் மூலமாக அங்கே ஒரு குற்றம் நிகழ்ந்தது. இங்கே உண்மையில் குற்றவாளி யார் என்று யோசிக்கலாம். தவறுதலான புரிதலின் அடிப்படையில் இந்த குற்றம் நடப்பதற்கான காரணமாக அமைந்த அந்தப் பெண்ணா அல்லது குற்றத்தை நேரடியாக நிகழ்த்திய அவள் காதலனா அல்லது அந்தப் பெண் அவ்வாறு புரிந்து கொள்ளும்படியாக நாங்கள் செய்த செயலின் மூலமாக நாங்களா. இதில் இன்னுமொரு கோணமும் இருக்கிறது. என் நண்பன் அடிக்கப்படும் பொழுது பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் என் நண்பனின் பார்வையில் ஒரு வகையில் குற்றவாளிகளே.

அப்படியானால் குற்றம் என்பது என்ன. இப்படிச் சொல்லலாமென்று நினைக்கிறேன். குற்றம் என்பது ஒரு பிறழ் நிகழ்வு மட்டுமே. அது நிகழும் பொழுது அந்த நிகழ்வில் அதோடு தொடர்புடைய எல்லாவரும் ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைகிறார்கள். அது ஒரு பிறழ்நிகழ்வு என்பதனாலேயே விரும்பியோ அல்லது இன்றியோ அதில் மனிதர்கள் பங்காளர்களாக ஆகிறார்கள். ஆனால் குற்றம் என்பதை வெறும் பிறழ் நிகழ்வாக விளங்கிக்கொள்வதின் சிக்கல் என்பது ஒரு சமூகம் குற்றத்திற்கான தண்டனையை, அது மேலும் நிகழாவண்ணம் தடுக்கும் பொருட்டு அதில் ஈடுபடுபவர்க்கு வழங்க வேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது. அப்படியானால் சமூகம் ஒரு பிறழ் நிகழ்வில் ஒரு அனுமதிக்கப்பட்ட எல்லையை வகுத்துக்கொண்டு அதற்கப்பால் செல்பவர்களை தண்டிக்கும். அதன் மூலம் அந்த எல்லையை தாண்டாதவாறு எளிய மனிதர்களை கட்டுக்குள் கொண்டு வந்து தன் ஒழுங்கு சிதையா வண்ணம் தற்காத்துக்கொள்வது அதன் நோக்கம்.

நிழலின் தனிமை என்ற இந்த பழியின் கதை சமூகம் தன்னை காத்துக்கொள்ள ஏற்படுத்தியிருக்கும் இந்த எல்லைக் கோடும் அதை ஒரு பொழுதும் மீற இயலாத எளிய மனிதர்களையும் தீவிரமாகச் சித்தரிக்கிறது. கதைசொல்லியின் முன்னே அந்த எல்லைக் கோடு அவனால் மீறப்படுவதற்காக நாவலில் நான்கு முறை வந்து நிற்கிறது. வீரப்பூர் திருவிழாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கருணாகரன் முன்னால் கத்தியோடு அவன் நிற்கும்  தருணமும்,கடைசியாக நலிவுற்று சாவை அணைத்தபடி குடிசையில் படுத்திருக்கும் கருணாகரனை எதிர்கொள்ளும் தருணமும், மருத்துவமனையில் வைத்து சுலோவின் கணவனுடனான சண்டையிலும், பின் சுகந்தியின் கணவனான பழந்துணி வியாபாரி இருமும் அந்த இரவும். ஆனால் அந்த மூன்று தருணங்களையுமே எதுவும் செய்ய இயலாதவானாக , கையறுநிலையிலிருப்பவனாக அவன் தாண்டிவருகிறான். உண்மையில் அவன் அந்த கோட்டை சற்றேனும் நெருங்குவது சுலோவின் கணவனுடன் மருத்துவமனையில் வைத்து வரும் சண்டையில் மட்டுமதான். ஆனால் அதிலும் அவன் சாத்தியமான ஒரு எல்லைக்குள் நின்று அவனுக்கும் சுலோவுக்குமான உறவை அம்பலப்படுத்திவிட்டு ஓடிவிடுகிறான். மாறாக கருணாகரனோ அல்லது அவன் மகனோ இயல்பாகவே அந்தக் கோட்டை மீறிச் செல்கிறார்கள். அது சார்ந்த குற்றவுணர்ச்சிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. இந்த மனநிலை இவர்களுக்குள் எவ்வாறு உருவாகி வருகின்றது.

அது மிக மிக இளமையிலேயே உருவாகிவிடுகிறது என்று தோன்றுகிறது. அதை நாம் கதைசொல்லியின் பால்யகால சித்தரிப்பிலிருந்து அவதானிக்கலாம். அவன் சிறுவயதில் குருவி வேட்டையில் ஈடுபடும் சித்திரத்தில் அவன் நண்பனை பின்தொடர்ந்து செல்பவனாகவும், அதை வேடிக்கைப் பார்ப்பவனாகவும், அந்தக் குருவிகள் அடித்துவீழ்த்தப்படும் பொழுது குற்றவுணர்வு கொள்பவனாகவும் இருக்கிறான்(அவன் வளர்ந்த பிறகு கருணாகரனுடன் செல்லும் வேட்டையிலும் அவனுள் அந்த மாறாச்சிறுவனை நாம் காணலாம்).பால்யகால கருணாகரனுடைய அல்லது அவன் மகன் கௌதமனுடைய சித்திரமெதுவும் நாவலில் நேரடியாக இல்லையென்றாலும் கதைசொல்லியின் நண்பனாக அவனுடன் வேட்டையில் ஈடுபடும் தங்கவேலு பாத்திரத்தின் மூலம் ஓரளவு அவதானிக்கமுடியும். ஆனால் கதைசொல்லி தாண்டமுடியாமல் தவிக்கும் அந்தக்கோட்டை நாம் மானுட அறமென்று வரித்துக்கொள்ளலாமா. முடியுமென்றே நினைக்கிறேன். கதைசொல்லியின் முன்னால் அந்தக்கோடு நின்றிருக்கும் தருணங்களில் அவன் செயல்களை புரிந்துகொள்வதின் வழி அதைச் செய்யமுடியும். கருணாகரனிடம் அவன் கடைசிக் காலத்தில் நடந்துகொள்ளும் முறை, சுலோவின் கணவனுடனான சண்டையில் சுலோ தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை அடுத்தநாள் காலைவரை காத்திருந்து உறுதிசெய்துகொள்வது, சுகந்தியுடனான அந்த கடைசி இரவில் அவளை விட்டு ஓடுமுன்பு அவள் கணவனுக்கான மருத்துவரை ஏற்பாடு செய்தல் என நீளும் பட்டியலில் இருந்து நாம் அவன் குற்றவுணர்வின் முன்பும் கருணையின் முன்பும் மாறி மாறி மண்டியிடுயிடுவதைக் காணலாம். மானுட அறமென்பது குற்றவுணர்வு, கருணை ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுவதே.

நாவலின் கடைசியில் வரும் நாடகத்தனமான முடிவு வாசகனுக்கு நாவலை இரண்டு விதமாக படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஒன்று கதைசொல்லியால் பழிவாங்கப்படவேண்டிய கருணகரன்தான் கதையில் அவன் பழிவாங்க பின்தொடரும் கருணாகரன் அல்லது கதையின் கடைசியில் சாரதா குறிப்பிடுவதைப்போல இவன் வேறு கருணாகரன். என்னளவில் அவன் உண்மையிலேயே சாரதாவைப் பாலியல் வல்லுறவு செய்த அதே பழைய கருணாகரன் தான்.

அதற்கான காரணம் நாவலில் அவன் வேட்டைக்கு செல்லும் சித்திரம் அளிக்கும் தெளிவு , மற்றொன்று அவன் மகன் கொலை செய்துவிடுவது(கருணாகரனின் இளமையின் மூர்க்கம் அவனுள்ளும் இருந்ததா). இவையிரண்டையும் அத்தனை வலுவான காரணமாகக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவற்றை ஒரு காரணமாக் கொள்வதின் மூலம் நாம் நாவலில் வரும் இரண்டு கருணாகரன்களின் சித்திரங்களையும் இணைத்துக்௧ொள்ள முடியும்.

ஆனால் இவன்தான் பழைய கருணாகரன் என்றால் சாரதா ஏன் இவன் அவனில்லை என்று சொல்கிறாள்.இதற்கான காரணத்தை நாம் சாரதா பாத்திரத்தை புரிந்துகொள்வதின் மூலம் அறியலாம். ஒன்று இந்த மொத்தக் கதையையும் இயக்குபவளாய் இருக்கும் சாரதா ஒருபொழுதும் தான் நேரடியாக இதில் ஈடுபடுவதில்லை. அவள் கதைசொல்லியை ஒரு பகடையாக பயன்படுத்துகிறாள். ஆனால் உள்ளுக்குள் கதைசொல்லியால் ஒருபொழுதும் கருணாகரனை கொலை செய்துவிட முடியாது என அவள் அறிவாள். ஆனால் கடைசியில் கருணாகரனை முற்றிலும் கைவிடப்பட்டவனாக சாவின் வாலைப் பற்றிக்கொண்டு கிடப்பவனாக அந்தக்குடிசையில் சந்திக்க நேரும் அந்த நொடியில் கதைசொல்லியால் அதை நிறைவேற்றமுடியும் என்று அறிந்து அவள் சட்டென்று அதிர்வுடன் பழிவாங்கும் கதையிலிருந்து விலகிவிடுகிறாள்.

சுலோ நாவல் முழுக்க வருகிறாள். ஆனால் மிகச்சாதாரணமான பெண் அவள். தொடக்கத்தில் மிக உற்சாகமாக இளமைக்கேயுரிய துள்ளலுடன் கதைசொல்லியை காதலிக்கும் பொழுதும்,

பின் அவன் அவளைக் கைவிடும் பொழுது பெரிதாக எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதுமாக அவளின் கதாப்பாத்திரம் மிகச்சாதாரண ஒரு பெண்ணுக்கேயுரியது. ஆனால் நாவலில் கருணாகரனின் பழியை அவள் தான் ஏற்கிறாள். உண்மையில் காமம் தாண்டிய பழியின் வன்மத்தோடு அவளோடு உடலுறவுக் கொள்ளும் கதைசொல்லியைப் பற்றி எதுவும் அறியாமல் தன் அப்பாவின் பழியை ஏற்றுக்கொள்ளுகிறாள் அவள்.

இந்த நாவலில் வரும் நிறத்தினூடான வர்ணணைகள் என்னை வெகுவாகக் கவரந்தன. வன்மம் மற்றும் பழியின் உணர்ச்சியை குறித்த சித்திரங்களிலெல்லாம் சாம்பல் நிறமும்  காமம் அல்லது காதல் குறித்த சித்திரங்களிலெல்லாம் பிங்க் நிறமும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாவல் பயன்படுத்தும் புனைவு உத்தியை பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும். இந்தக் கதை முழுக்க மிகப் பழக்கமுள்ள சினிமாத்தனமான திருப்பங்களும் நிகழ்வுகளும் நிறைந்திருந்தாலும் கதைக்குள்ளே கதைசொல்லியே அதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதன் வாயிலாக ஒருவித நேரிய spoof தன்மை வாசக மனதில் உருவாக உதவி புரிகிறது.

நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு

கடலூர் சீனு

குருதி… நீரினும் அடர்த்தியானது.
…….நாவலிலிருந்து…..

சில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்து சில வருடங்கள். தூரத்தில் எங்கோ நிலநடுக்கம். கடலூர் முழுக்க வதந்தி. மறுநாள் அதிகாலை சுனாமி வரப்போகிறது. குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அந்த கிராமத்தில் உள்ள ஒருவர், வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் பத்திரமாக மூட்டை கட்டி வண்டியில் ஏற்றினார். முடக்கு வாதம் வந்து, பயனில்லாமல் போன முதிய தகப்பனை மட்டும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை வதந்தி எல்லாம் அடங்கி ஊரார் கிராமம் திரும்பிய பிறகே அது வெளியே தெரிய வந்தது. வதந்தியாக அன்றி சுனாமி வந்திருந்தால்? எந்தச் சுவடுமின்றி ஒரு உயிர் போயிருக்கும். கூடுதலாக அரசின் நிவாரணத் தொகையும் கிடைத்திருக்கும்.

இரவெல்லாம் பூட்டிய அறைக்குள் அந்த முதிய மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும்? இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல்லாம் என்னவாக இருந்திருக்கும்? நினைக்கவே விதிர்க்க வைக்கும் அந்த மின்சார வன்தொடுகை உணர்வையே அளித்தது, ‘காச்சர் கோச்சர்’ எனும் விவேக் ஷான்பாக் எழுதிய கன்னட நாவலின் வாசிப்பனுபவம்.

அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு ஹோட்டலில், இன்னும் அருந்தப்படாத காப்பி நிறைந்த கோப்பை முன் அமர்ந்திருக்கும் கதைசொல்லியின் நினைவுகளாக விரிந்து பரவி நிறையும். அதே போல இந்த ‘காச்சர் கோச்சர்’ கதையும், ஒரு காபி கிளப்பில் காப்பிக்காக அமர்ந்திருக்கும் கதைசொல்லி தான் வந்து நின்றிருக்கும் விடுவிக்க இயலா சிடுக்கு )கதைக்குள் இந்த நிலைக்கே காச்சர் கோச்சர் என அனிதா பெயர் சூட்டுகிறாள்) நிலை குறித்து வாசகருக்கு சொல்லும் கதையாக விரிகிறது.

திமிர் கொண்ட சோம்பேறி வாழாவெட்டி அக்கா, விட்டேத்தி அப்பா, சுயநல அம்மா, சம்பாதிக்கும் புள்ளியான திருமணம் செய்து கொள்ளாத சித்தப்பா, அவர் நிறுவனத்தில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் கதைசொல்லி, அவனை மணம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்துக்குள் நுழையும் அனிதா. பொருளாதார மையம் எனும் ஒரே தூணான சித்தப்பா வெங்கடாஜலத்தை அண்டி வாழும் குடும்பம், அப்படி அண்டி வாழ்வதற்கு செய்யும் செயல்கள் தொட்டு அண்டி வாழும் கீழ்மை உட்பட அனைத்தையும் கேள்வி கேட்கும் அனிதாவை எவ்வாறு எதிர்கொள்கிறது? அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன? நிலை என்ன? அதை கதைசொல்லியே அவனது பார்வைக் கோணத்தில் வாசகருக்கு விவரிக்கும் வண்ணம் வடிவம் கொண்டதே இந்த நாவல்.

கீழ் நடுத்தர வர்க்கமான கதைசொல்லியின் குடும்பம் கைக்கும் வாய்க்கும் வருமானம் சரியாக இருக்கும் மாதச் சம்பள வாழ்க்கைக்குள், அதன் சாதக பாதகங்களை ஒன்றாக இணைந்தே கடக்கிறார்கள். நீரொழுக்கில் சிக்கிய எறுப்புக் கூட்டம் தன்னை பந்தாக திரட்டி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில், நிற்க நிலம் கிடைக்கும் வரை பிழைத்துக் கிடக்குமே, அதே போன்றதொரு வாழ்வு. அவர்கள் வீடே ஒரு பெரிய அளவு எறும்புப் புற்று ஒன்றினுள் இருக்கிறோம் என உணரும் வண்ணம் எறும்புகளால் நிறைந்த வீடு. அத்து மீறி ஒழுங்குகளை குலைக்கும் எறும்புகளைத் தேடித்தேடி விதவிதமாக வேட்டை ஆடுவதே, அம்மாவின் உபரி நேரப் பணி.

வேலை போன பின் இழப்பீட்டு தொகையை கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டுத் தொழில் துவங்குகிறார்கள். வருமானம் பெருகுகிறது. சொந்த வீடு. பொருட்கள் சேர்கின்றன. பழைய வீட்டை ஒழித்து, புதிய வீடு புகும் சித்திரம் கணுக்கணுவாக விவரிக்கப்படுவதன் வழியே அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அகவயமான மாற்றம் துவங்கும் தருணம் புறவயமாக சித்தரிக்கப்படுகிறது. முன்பு பத்தாத சம்பள வாழ்வில் அதன் காரணமாகவே, ஏமாற்றங்கள் அளிக்கும் எதிர்பார்ப்புகள் யாருக்கும் இல்லை. இந்த புதிய வீடு, வணிக செல்வம் அளிக்கும் விடுதலை அவர்களை கண்டதையும் வாங்கி குவிக்க வைக்கிறது.

சித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம். வணிகத்துக்காக நிழல் வேலைகளில் இறங்கும் சித்தப்பாவை கண்டு கொள்ளாத விட்டேத்தி அப்பா. இவர்கள் குடும்பத்தின் முதல் அடுக்கு. இவர்கள் நிறுவனத்தில், வேலை செய்யும் தகுதியே இன்றி சும்மா இருந்து சம்பளம் பெறும் கதைசொல்லி, அவனது அம்மா இந்த குடும்பத்தின் இரண்டாவது அடுக்கு. இந்தச் சூழலில் தனது தேர்வான சித்ராவை உதறிவிட்டு வீடு கைகாட்டும் அனிதாவை மணக்கிறான். தனது கணவனின் சம்பாதிக்கும் திராணி, குடும்ப நிலை அறியாமல் இந்த அடுக்கு நிலைக்குள் நுழைகிறாள் அனிதா. இரண்டாம் அடுக்கில் இருக்கும் தனது நிலைக்கு வரப்போகும் ஆபத்தாக அனிதாவின் வரவை எதிர்கொள்ளும் அம்மா. திருமணம் செய்து வெளியே போன அக்கா மாலதி, தனது திமிரின் காரணமாக புகுந்த வீட்டை உதறி விட்டு மீண்டும் பிறந்த வீடு திரும்புகிறாள். பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து தனது திமிரால் முன்பு தான் விடுத்து செல்லும்போது அந்த குடும்பத்தில் எந்த அடுக்கில் நின்றாளோ, அதே அடுக்கில் சென்று நிற்க மாலதி செய்யும் வேலைகள். அடுக்கு நியதிகளுக்கு கட்டுப்பட்டு தகவமையாமல், தனது இயல்பால் அமைப்பையே குலைக்க முனையும் அனிதா. இவர்களால் காச்சர் கோச்சர் அடையும் கதைசொல்லி.

அசோகமித்திரன் படைப்புலகம் மையம் கொள்ளும் கீழ் நடுத்தர வர்க்க குடும்ப நிலை. அவரது கதைகளில் துலங்கும் அதே மெல்லிய கசந்த நகைச்சுவை நோக்கிலான விவரணை. ஆனால் அசோகமித்திரன் புனைவுலகில் இருந்து இக்கதையில் ஷான்பாக் முன்னகர்ந்து தனித்துவம் கொள்ளும் இடங்கள் மூன்று. ஒன்று, குடும்பம் எனும் அமைப்பு பெண்ணியல்பில் இருந்து வெளிக்கொணரும் தீமையின் சித்தரிப்பு. இரண்டு, குடும்ப உறுப்புகள் பொருளாதாரத் தூணை அண்டி வாழும் வாழ்வில் அதற்குள் அமையும் அடுக்குகள் உருவாக்கும் உளத் திரிபு. மூன்று, வலிமையான நாடகீய முரண்.

”வெங்கா… வெளிய வா. உன்னோட டுவ்வி கூப்புடுறேன் ”-வீட்டுக்குள் தலைமறைவாகி இருக்கும் சித்தப்பாவை தேடி நெடுநேரம் தெரு முனையில் நின்றுவிட்டு வீட்டு வாசலுக்கு வருகிறாள் சுகாசினி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திரிபுகள் உயர்ந்து அம்மா சுகாசினியை அவமதித்து திருப்பி அனுப்புகிறாள். வெங்காவுக்கு பிடித்த டுவ்வி செய்த சமையல் வாசலில் சிதறிக் கிடக்கிறது. அவமானப்பட்டு வெளியே செல்லும் சுகாசினி, வெறுமனே அதை வேடிக்கை பார்த்து நிற்கும் தனது கணவன். மனம் பொறாமல் கேள்வி கேட்கிறாள் அனிதா.

கீழே கொட்டிய சமையலின் வாசனை கதைசொல்லியை சீண்டுகிறது. மிச்சத்தை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என அவனை எண்ண வைக்கிறது. இந்தச் சித்திரம் வருகையில் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் சென்னிகராயர் நினைவு எழுவதை தவிர்க்கவே இயலாது. இந்த ‘கச்சார் கோச்சர்’ நாவலே வேறொரு வகைமையில் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் ”தலைகீழ் ”வடிவம் என்றே சொல்லிவிட முடியும். சென்னிகராயரை நா ருசி எவ்வாறு வழிநடத்துகிறதோ அவ்வாறே இந்தக் கதைசொல்லியையும் வழிநடத்துகிறது. புனைவு நெடுக வெவ்வேறு பண்டங்களின் ருசி, தாளிப்பு வாசனை, இவை பின்னே செல்கிறது கதைசொல்லி மனம். அனிதாவே அவனுக்கு வாசனையாகத்தான் அறிமுகம் ஆகிறாள்.

கீழே கொட்டிய சித்தப்பாவுக்கு பிடித்த அந்த சமையலை இன்று சமைக்கலாமே என அனிதா குத்தலாக சொல்லும்போது முனை கொள்ள துவங்குகிறது குடும்ப உறுப்பினர்களின் உளத்திரிபுகள். சண்டை முற்றி பிறந்த வீடு போன அனிதா, வீட்டிலிருந்து புறப்பட்டவள் ஒரு நாள் கடந்தும் இன்னும் இங்கே வந்து சேரவில்லை- இந்த இடைவெளியில் நிகழும் காத்திருப்பில் கதைசொல்லியின் நினைவுகள் வழியே துலங்கி வருகிறது அந்த குடும்ப உறுப்பினர்களின் உளப்பாங்கு. கணவனை அடியாட்களை வைத்து மிரட்ட எந்த தயக்கமும் இல்லை அக்காவுக்கு, பக்கத்து வீட்டில் நடந்த மரணத்தைப் பேசி சத்தமே இல்லாமல் ஒரு வன்முறைக்கு அடி எடுத்து கொடுக்கிறாள் அம்மா, “எதுவா இருந்தாலும் நம்ப ஆளுக இருக்காங்க செஞ்சுடலாம் சிம்பிள்தான்,” என்று திமிர் காட்டும் சித்தப்பா, மகள் இரவில், ”வெளியே தங்குவது” சார்ந்து கூட எந்த புகாரையும் வெளியே காட்டாத விட்டேத்தி அப்பா. இவர்கள் மத்தியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் சொற்களை சொல்லிவிட்டு போன அனிதா என்ன ஆனாள்?

செய்யும் செயலிலோ, நிகழ்விலோ யாருக்கும் எந்த குற்றபோதமும் இல்லை. ஆத்மீக உள்ளுணர்வு அல்ல, அறம் சார்ந்த எளிய கேள்வி கூட எழாத, அல்லது இல்லாத, குடும்பத்தினர்கள். கடவுளோ குறைந்த பக்ஷம் ஜோசியமோ கூட தேவைப்படாதவர்கள். அனிதா திரும்பி வராமல் போனால், அதற்கான காரணங்கள் இவர்களாகவே இருந்தாலுமேகூட, அது குறித்து எந்த அலட்டலும் இல்லாதவர்கள். கொஞ்சமேனும் குற்றபோதம் கொண்டிருப்பதால்தான் நாயகன் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த சிக்கலை விடுவிக்க அல்லது இதிலிருந்து வெளியேற என்ன வழி என திகைக்கும் கதைசொல்லிக்கு உள்ள தீர்வு என்ன?

பாலியல் ரீதியாக சுகாசினியை அவமதித்து வெளியேற்றும் அம்மா, குடும்பச் சூழலை இயல்புக்கு கொண்டு வர வீட்டுச் செடிகளை பராமரிக்க துவங்குகிறாள். காரணமே இன்றி வாடி நிற்கும் செடி ஒன்றுக்காக வருத்தப்படுகிறாள். இப்படியாக ஒவ்வொரு ஆளுமையையும் உருவாக்கி அவர்களுக்கிடையே உள்ள உரசலை அதன் நிலையில் வைத்தே சித்தரித்துக் காட்டுவது இதன் கலை வெற்றி.

இந்தப் புனைவு கையாளும் அத்தனை சித்தரிப்புகளும் கதைமாந்தர்களின் குறியீடு என மாறிப்போகிறது. குறிப்பாக எறும்புகள் சார்ந்த வர்ணனை. மொசு மொசு என உடலெல்லாம் ஏறி மொய்க்கும் தீதற்ற கருப்பு எறும்புகள், கட்டெறும்புகள், வீட்டு எறும்புகள், குருதிச்சொட்டு வடிவில் வண்ணத்தில் திரிந்து, தசையில் விழும் அமிலச் சொட்டென கடிக்கும் செவ்வெறும்புகள். இந்த எறும்புகள் எவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டி நிற்கின்றன- இறுதி அத்தியாயத்தில் பெண்கள் பேசும் குடும்ப வன்முறை உரையாடல்கள். அனிதாவுக்கும் நாயகனுக்குமான முதல் பிணக்கே, எதுவும் செய்யாமல் போய்க் கொண்டிருக்கும் எறும்பு ஒன்றை தன்னியல்பாக நாயகன் நசுக்குவதில் இருந்தே துவங்குகிறது. பழைய வீட்டில் நாயகன் விளையாட்டுகளில் ஒன்று எறும்புகளை விதவிதமாக கொல்வது. எரியும் கங்கினை எறும்பு வரிசை மேல் உருட்டுவது, வரிசையில் இருந்து ஒற்றை எறும்பை விலக்கி, அதைச் சுற்றி நீர் வட்டம் போட்டு, அதை தவிக்க விட்டு, அந்த வட்டத்தை மெல்ல மெல்லச் சுருக்கி, எறும்பு நிற்கும் மையத்தை இறுதியாக ஒரு சொட்டு விட்டு நிறைத்து, துடித்து துடித்து எறும்பு மடிவதை வேடிக்கை பார்ப்பது. இந்த முறைவரிசையில் இருந்து தப்பிய எறும்பு அனிதா. இந்த எறும்பின் மீது கங்கு உருள போகிறதா, அல்லது நீர் வட்டம் வளைக்கப் போகிறதா?

கதைசொல்லி, இன்னும் வந்து சேராத அனிதாவை முன்னிட்டு, அவன் குடும்பம் சார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெய்ட்டர் வின்சென்ட் சொல்கிறான், குருதி நீரினும் அடர்த்தியானது. எறும்பைச் சுற்றி நீர் வட்டம் அமைக்கும் நாயகனுக்கு, வின்சென்ட் மட்டுறுத்துகிறானா? அல்லது வழிகாட்டுகிறானா?

இந்தப் புனைவின் உள்ளுணர்வு சென்று தைக்கும் புள்ளி மிகுந்த அமானுஷ்யமானது. கல்யாணம் செய்து கொண்டு போகும் மாலதி, நினைத்திருந்தால் புகுந்த வீட்டை அங்கிருந்தே ஆட்டிப் படைத்திருக்கலாம். அவள் விரும்பும் வண்ணம் எதையும் அவளது வன்முறையை கொண்டு ஈடேற்றி கொண்டு இருந்திருக்கலாம். மாறாக அவள் அந்த வீட்டை விட்டு மீண்டும் இங்கு ஏன் வருகிறாள்? நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார்? சுகாசினி போன்ற காதல் துணை கிடைத்தும் அதை வன்முறையாக மறுத்து இந்த குடும்பத்துக்கு ஏன் திரும்புகிறார்?

வேறு வழி இன்றி பிணைந்திருக்கும் குடும்பம். அந்த பிணைப்பின் மறுதலையாக உள்ளே உறங்கும் திரிபு. புழங்க சற்றே ஒரு வெளி கிடைத்ததும் அந்த திரிபு விதை மெல்ல மெல்ல முளை விட்டு மலருகிறது. மோகமும், அது கொண்டு வந்து சேர்க்கும் காமமும், இரண்டும் இணைந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள கிளர்த்தும் க்ரோதமும், என மனிதனின் அடிப்படை இச்சைகள், குறிப்பாக, பெண்களுக்குள் அது எந்த கலாச்சார தளைகளும் அற்று விகசிக்கிறது. அப்படி உள்முகமாக விகசிக்கும் அடிப்படை இச்சைகள் ஒருவருக்குள் போலவே மற்றவருக்குள்ளும் ஸ்பூரிப்பதைக் கண்டு தன்னியல்பாக, ஒருவரை ஒருவர் ஆக ஆழத்தில் இனம் கண்டு அதன் பயனாக ஒன்றி இருக்கிறார்கள். அப்படி ஒன்றி இருக்கும் ஒன்றே குடும்பம் எனும் அமைப்பாக பராமரிக்கப்படுகிறது எனும் நோக்கு அளிக்கும் பீதியே இந்த நாவல் அளிக்கும் தரிசன உணர்வு.

ஏழே அத்தியாயம் கொண்ட நூறு பக்க குறுநாவல். பொருந்திக் கொள்ள இயலாமல் ஒரு இருபது வருடங்கள் ஒரு திரிபு கொண்ட குடும்பத்துக்குள் வாழ்ந்து, அந்த திரிபுகள் கொஞ்சம் கொஞ்சமாக மோகமும் க்ரோதமுமாக முளை விடுவதை பதைக்கப் பதைக்க பார்க்கும் ஒரு சக உறுப்பினனாக (செறிவான சித்தரிப்பின் வழியே, நாடகீய முரண்கள் வழியே) வாசகனை மாற்றி, அந்த குடும்பத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார் விவேக் ஷாஷான்பாக். ஆசைத்தம்பி குறைவற மொழிபெயர்த்திற்கும் இந்த ‘காச்சர் கோச்சர்’ தமிழுக்கான முக்கியமான வரவுகளில் ஒன்று.

கடவு பெற்றோர்- பானுமதி. ந சிறுகதை

பானுமதி. ந

லதா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லா மின்னியங்கிகளையும், தானியங்கிகளையும் நிறுத்தியாகிவிட்டது. வருணும் படுத்தாமல் சாப்பிட்டு விட்டான். டாக்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிடும். இன்னும் சமயம் இருக்கிறது. உறை மூடி ஸ்டேண்டில் வைத்துள்ள வீணையை எடுத்து ஒருமுறை வாசித்தால் என்ன? ஆம்,இது இங்கேதான் இருக்கப் போகிறது. அவளில்லாமல், மெட்டுக்களில் சுருதி குறைந்து, வாசிப்பார் இல்லாமல் முறுக்கு தளர்ந்த தந்திகளுடன் கவனிப்பாரற்று மூலையில் இருக்கப் போகிறது. வீணையைத் தடவிக்கொண்டே அவள் உட்கார்ந்திருந்தாள். அதன் நரம்புகளைச் சுண்டி அந்த நாதத்தில் கரைந்து போகப் பார்த்தாள். அது என்ன பாட்டு-‘சரச சாம தான பேத தண்ட சதுரா’ எத்தனைப் பொருத்தம் இன்றைக்கு. அவள் தண்டத்தை கையில் எடுத்துவிட்டாள். இனி பின்வாங்குவதில் பொருளில்லை.

எத்தனை கனவுகளோடு அவள் திருமணம் செய்து கொண்டாள். யு.எஸ் மாப்பிள்ளை என்று ஒரே பெருமை; அவள் தோழிகள் வெளியே சிரித்து உள்ளே வெந்த நாட்கள். ‘ராம நீ சமானமெவரு’ என்று உண்மையாகவே அவன் அவளைப் பெண் பார்க்கையில் வாசித்தது எத்தனை அபத்தம்! இரு வருடங்களுக்கு முன்னர்தானே, எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் மேல் தளத்தில் அவள், அவன், நாலரை வயது வருண் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தபோது,ஒரு சிறுமி ஓடி வந்து ‘டாடி’ என அவனைக் கட்டிக்கொண்டாளே அப்போதுதானே தெரிந்தது.’ஹேய், டியர்’ என்று ஒரு அமெரிக்கப் பெண் அவனை முத்தமிட்ட போது, ’இவள்தானா அவள்’ என அந்தப் பெண் இவளைப் பார்த்தபோது, இவள் கையை இழுத்துப் பற்றி குலுக்கியபோது இதெல்லாம் கனவு என  நினைத்தாள். தலை குப்புற கீழே, மிகக் கீழே, முடிவற்ற குழியில் அடிக்கடி விழுந்து கொண்டிருப்பதாக அவள் காணும் கனவின் பொருளிதுதானா?

’உனக்கு டீஸென்சின்னா என்னன்னே தெரியாதா?அவ உன்னோட பேசப் பேசப் பாக்கறா, பக்கியாட்டம் முழிக்கறே, அவதான் முதல்; என் கல்யாணம் தெரிஞ்சப்போ ’நா உன்னப் பிரிய மாட்டேன்.நீ உன் வொய்ஃப்வோட குடும்பம் நடத்து; ஆனா, என்ன சிங்கிள் பேரன்ட்டா மாத்தாதே, மரியாவுக்கு அப்பா வேணும்னு’ பெருந்தன்மையா சொன்னா. எத்தன நல்ல குணம், நீ மாஞ்சு போறியே’

“அப்ப, அவளோடயே இருக்கறதுதானே; என்ன எதுக்கு கல்யாணம் பண்ணின்ட’’

‘அம்மா, அப்பால்லாம் விடலியே’

சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லயே இவனுக்கு என சினந்தாள் அவள். இரு வருடங்கள் நீண்ட போராட்டம். எத்தனை குத்தல்கள், சீண்டல்கள், அவமரியாதைகள்! ஏன் சகித்துக் கொண்டாள் என்று அவளுக்கே கழிவிரக்கமாக இருக்கிறது.

சித்தன்னவாசலில் அவள் ஒரு இளவரசியைப் போல் வளர்ந்தாள்; சாமுவேல் அப்படித்தான் அவளை நினைத்திருந்தான். தாமரை சித்திரக்குளம். இலேசாக அலை அடிக்கும் குளத்தில் அவள் மொட்டுக்களும், பூக்களும் நிறைந்த இடத்தில் நின்றிருக்க, அவன் வரைந்த ஓவியங்கள். ’கால் உளயறதுரா,நீதான் தூக்கிண்டுபோகணும்’ என்று சிணுங்குவாள். ’இப்ப முடிஞ்சுடும்’என்று தன் வேலையே கண்ணாய் இருப்பான். அவள்தான் நூறுமுறை அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள், அவன் ’லதா’ எனக் கூப்பிட்டதேயில்லை. ஏன் அப்படி என்பது இன்றுவரை மர்மம்தான். எங்கிருந்தோ பச்சிலைகளும்,வேர்களும் கொண்டுவருவான். நிலக்கரியும், செங்கல்லும் இருக்கவே இருக்கிறது. வழவழக்கும் பாறைத்திப்பிகளைச் சித்திரத்தில் பதித்துவிடுவான். தாவர வேர்களை நுணுக்கி தூரிகைகள் செய்து கொள்வான். எத்தனை சித்திரங்கள் அவளை மையமாக வைத்து, அவளது எட்டாவது வயதிலிருந்து கல்யாணம் அவளுக்கு ஆகும்வரை, பாலையாக, திரிசடையாக, மணிமேகலையாக, மாதவியாக, விளக்குப் பாவையாக, பைரவியாக, மீராவாக இன்னும் எவ்வளவோ! தியான மண்டபத்தில் நடுநாயகமாக அவளைக் கையில் வீணையுடன் அமர்த்தி, அதுவும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு அவன் வரைந்த ஓவியம் இன்றும் அவர்களின் கிராமத்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

ஒருமுறை விளையாடிக்கொண்டே சாமுவை அலைக்கழித்தவள் அந்த சமணப் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டாள். அவன் குகை வாசலில் காவல் நின்றான்; தூக்கம் கலைந்து எழுந்த அவளுக்கு உள்ளே ஏதோ பொங்கியது; ’போலாமா?’ என அவன் கேட்டபோது பொங்கிய வெள்ளம் வண்ணமற்ற குமிழிகளாக வெடித்து அழிந்தது. சிறு குன்றுகளின் மீது வழிந்திறங்கும் சாய்கதிர்கள். குகை மண்டபத்தில் எரியும் கண்ணாடி விளக்கு. கரைகளுக்குள்ளேயே அலையடித்துக் கொண்டு விம்மும் குளம். ’அபீட்,அபீட்’ என்று கத்திக்கொண்டே சாட்டையை சுழற்றி வீசினாலும் பூமியில் மௌனமாக உறங்கும் பம்பரம். மலையிடுக்குகளில் உள் நுழைந்து ‘அக்கோவ்’ குருவியின் குரலோடு தனித்த கார்வையில் காற்று. தலையில் விழும் பூக்களின் மகரந்தத்தூள்கள், காலடியில் சரசரக்கும் சருகுகள். அவன் உபாசகன், அனைவருக்குமானவன், அவளுக்கு மட்டுமென அவனில்லை; யாருக்குமாக இல்லாமல் எல்லாருக்குமாக தன்னைக் கண்டு கொண்டவன். அவன் அப்படித்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். இந்தத் தெளிவிற்குப் பிறகு அவள் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள், யாராக இருந்தாலும் சரி, வீட்டில் பார்க்கும் வரனாக இருக்கட்டும் என்றாள்.

அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான மறுநாள். அதிசயமாக சாமு அவள் வீட்டிற்கு வந்தான். ’லதாங்கி’ என்று தலைப்பிட்டு அவளை மணப்பெண் கோலத்தில் வரைந்திருந்தான். மறு தினம் அவன் திருக்குற்றாலத்தின் சித்திர சபைக்குப் போய்விட்டதாக அவள் கேள்விப்பட்டாள். திருமண நாளன்று அவன் வரைந்திருந்த மாதிரியே அவள் சிங்காரித்துக் கொண்டாள். நாகஸ்வரத்தில் ‘கல்யாணி’ வாசிக்கும் போதெல்லாம் ‘லதாங்கியாக’ அது ஒலிப்பதை வலிந்து விலக்கினாள்.

‘அவன நெனச்சிண்டு எங்கிட்ட தாலி வாங்கிண்டயாக்கும்?’ என்று அவள் கணவன் சென்ற வாரம் கேட்டான்.

“ஆமாம், நீ ஏஞ்சல நெனைச்சிண்டு என்னப் ப்ராண்ட்ர மாரி”

‘ப்ராஸ் மாரி பேசற நீ’

“அது வேற இருக்காக்கும்”

‘நா எப்படி வேணாலும் இருப்பேன். நீ ஒழுங்கா இரு’

“இத்தன நா இருந்தாச்சு, இனி ஒழுங்கில்லாம இருக்கணும்னு பாக்கறேன்”

‘யூ,பிட்ச், உனக்கு கொழுப்பு அடங்கல. எந்த இளிச்சவாயன மடக்கிட்ட இப்ப; இல்ல அந்த மாகாதலன் இங்கயே வந்துட்டானா?’

“நா பிட்ச், அப்படின்னா நீ ஸ்கொண்ட்ரல். என்ன கல்யாணம் பண்ணிக்கறச்சேயே உனக்கு புள்ள பொறந்தாச்சு. அஞ்சாறு வருஷம் நாடகமாடி எப்படி மறச்சிருக்க நீ”

‘ஏஞ்சலுக்கு நீ உறைபோட காணமாட்ட., எல்லாத்லயும் அவ எனக்கு ஏத்த மாறி நடந்துப்ப; நீயும் இருக்கயே’

‘’இப்படி கம்பேர் பண்ண கூசல உனக்கு’’

‘சும்மா சொல்லு, ரதி மன்மத ஆட்டமெல்லாம் அவனோடயே முடிஞ்சுடுத்தா.’

அவள் அவனைத் தள்ளிவிட்டு திமிறினாள்; அவன் இழுத்து வைத்து அறைந்தான்.

மறு நாள் காலை உணவின்போது அவன் மீண்டும் ஆரம்பித்தான். ’இந்த மில்லட் தோசைய விட்டா வேற ஒன்னும் தெரியாதா, இல்ல அவனுக்கு இதுதான் புடிக்குமா?’

“டாடி, யார் அது?’’

‘உன்னத்தாண்டா சொல்றா அப்பா, பேசாம சாப்டு’

‘வருண், உங்க அம்மா உன்ன விட்டுட்டு வெளில போறாளா?’

“எப்பயாச்சும் போவாங்க, எனக்கு சாக்கோ நட்ஸ் ஐஸ்க்ரீம் வாங்கிண்டு வருவாங்க”

‘சீக்ரமா வருவாளா, லேட் ஆகுமாடா?’

இப்படி ஒரு வக்ர எண்ணம் எப்படி வருகிறது? ‘வருண்,உன்ன விட்டுட்டு நான் போனதெல்லாம், உன் டாடி வேலைன்னு சொல்லிண்டு போறாரே அந்த ‘ஏஞ்சல்’ ஆஃபீஸுக்குத்தான்’

“ஆமாண்டா, அங்கதான் வருவோ, அவளோட ஒரு அங்கிள் வருவான்.”

அவள் உணவு மேஜையை விட்டு எழுந்துவிட்டாள். வருண் புரியாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மட்டும் மொத்தமாக தோசைகளைத் தின்றான்.

அவன் ஏஞ்சலையும் தொட்டு அவளையும் தொடுவது சகிக்க முடியாததாக இருந்தது. உண்மை தெரிந்த இரு வருடங்களாக வீடு நரகமாகிவிட்டது. அதற்கு முன்னால், அவன் இவளுடைய நண்பனைப் பற்றி தரமற்றுப் பேசியதில்லை, கிண்டலாகப் பேசுவான், அவ்வளவுதான். இவளையும் கேலி செய்வான். ஒருக்கால் அவள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ? ஆனால்,உறவின் புழுக்கம் மூச்சுத் திணறச் செய்கிறதே!

‘உன்னால அவள விடமுடியாதுன்னா, நாம டைவர்ஸ் செஞ்சுக்கலாம்’

“அதெல்லாம் நடக்காது. எங்க அம்மா, அப்பா ஒத்துக்கமாட்டா; ஒத்துண்டாலும் இன்னொரு கல்யாணம்னு நிப்பா; அதவிட நீ அவங்கிட்ட திரும்பறதுக்கு நா விடவே மாட்டேன்.”

மனித மனம் இத்தனை வஞ்சம் கொண்டதா?என்ன எதிர்பார்க்கிறான், தாசி போல, அடிமை போல, அவனைத் தெய்வமாக கொண்டாடச் சொல்றானா?

எண்ணங்களிலிருந்து விடுபட்ட அவள் வீணையை உறையில் இட்டு மூடினாள். வருண் அவனுடைய பைகளைப் பிரித்து எல்லாவற்றையும் பரப்பியிருந்தான். ’என்னடா இது, நேரமாச்சுடா, திருப்பியும் இதெல்லாம் உள்ள அடைச்சு எவ்ளோ வேல? படுத்தறடா’

“நீ மட்டும் வீணையை எடுத்தேல்ல”

‘அது ஊருக்கு கிடையாதுடா’

“நீ என்ன சதீஷ் வீட்ல விட்டுடு. அப்பா வந்தவுடனே அவரோட நா வரேனே”

‘தாத்தாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு வரல்லயா நீ?’

‘‘அப்போ, அப்பா வரமாட்டாரா?’’

‘இந்த அப்பா புராணத்த நிறுத்து; பைக்குள்ள சாமான வை. அந்தக் கார் பெரிசுடா, அதைத் திணிக்காதே’

“எனக்கு அதுதான் வேணும்”

முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். பலவந்தமாக காரைப் பிடுங்கி எறிந்தாள். வாசலில் டாக்ஸி வந்து நின்ற ஓசை கேட்டது. அவனையும் இழுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். இந்தப் பிசாசை நம்ப முடியாது, சைல்ட் ஹெல்ப் போலீசை கூப்பிட்டுவிடும்.

உழவர் சந்தையும், எம்பயர் ஸ்டேட் பில்டிங்கும், க்ரேட் லேக்கும், ஹட்சன் நதியும், அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகின்றன.வருண் அவளுடன் இருப்பானா?

செக்கிங் முறைகள் முடித்து, அதிக பணம் கொடுத்து வருணுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து எமிரேட்ஸ் விமானத்தில் அமரும் வரை அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ’சரிதானா’ என ஒரு குரல் உள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் நடந்து கொண்டது சரியென்றால் இதுவும் சரிதான்.

அவள் படுத்திருந்த அறைக்கு அவன் வந்ததை அவள் முதலில் அறியவில்லை. ‘என்ன விட்டுடு, உன் கொஞ்சலையெல்லாம் அவகிட்ட வச்சுக்க’

“உனக்கு என்ன புடிக்கலைன்னா அவனப் போலன்னு நெனைச்சுக்கோ”

‘அவனுக்கு நீ உற போட காண மாட்ட; அசிங்கமா பேசாம போய்டு’

“அப்ப அவங்கிட்டயும் அனுபவமிருக்கு”

‘மானங்கெட்டுப் பேசாதே. எனக்கும் அவனுக்கும் அந்த மாரி எண்ணமேயில்ல’

‘உன் மாரு, தொடை, கழுத்து, முகம்னு சரமாரியா வரஞ்சிருக்கான். நீயும் மேலாட இல்லாம நின்னுருக்கே’

“பாவி, இப்படியெல்லாம் பேசாத, அப்படிக்கும் உன்ன மாரி தரங்கெட்டவனில்ல அவன். பொறந்த மேனிக்கி நின்னாக்கூட  சபலப்படமாட்டான்’’

“அப்படிச் சொல்லு பத்தினியே; அப்ப நின்னுருக்கே”

அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் பேயடி அடித்தான். வருண் இந்தக் கலவரத்தில் முழித்துக்கொண்டு அலறினான்.

பற்றத் துடித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் செல்கையில் வருணுக்கு அவள் என்னவாகத் தெரிவாள் என ஓடிய எண்ணத்தை ஓடுதளத்தை விட்டு மேலெழுந்த விமானம் சத்தமாக எதிரொலித்தது.

 

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

மதுரையின் புதிய தரிசனம்

“பாட்டி பூமியெங்கும் கதைகளை
புதைத்து வைத்திருக்கிறாள்
பிரசவிக்கும் குழந்தை கதை வாசம்
பட்டே பூமி பார்த்து வருகிறது
பாட்டி காற்றெங்கும் கதைகளை தூவி
வைத்திருக்கிறாள்
கல்லாய் மாறிய அகலிகை போல்
காற்றாய் மாறிய கதைகள்
பாட்டியின் சுவாசம் பட்டு மறுமொழி
கொள்கிறது
கதை மொழியாகும் பொழுது பாட்டி
கதையாகிறாள்”

சு.வெங்கடேசன் தனது ஆதிப்புதிர் கவிதையில் சொன்னது தான் காவல்கோட்டத்திற்குள் பயணப்படும் ஒவ்வொரு வாசகருக்கும் ஒளியூட்டி. கதைகள் கூறும் விந்தை உலகங்கள், வடிவமைக்கும் மனிதர்கள், ஏற்படுத்தும் பரவச அனுபவங்கள் நம்மில் பலருக்கு பால்யத்தில் கடந்த உன்னத தருணங்கள். கதைகள் கடத்தும் அதிர்வலைகள் சொல்பவரின் திறனையும், கேட்பவரின் கற்பனையையும் ஊடுபாவாய் நெய்து முப்பரிமாணமாய் விரிகிறது. கதை சொல்லியின் திறன், கேட்பவர் மனதில் உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில் மதிப்பிடப்படுகிறது. விரியும் கதையின் தளத்தின் வழியே தான் நாம் நமது அனுபவங்களைக் கொண்டு, வாழ்வின் மேன்மையை, துயரங்களை, இழப்புகளை தரிசிக்கிறோம். சொல்லும் கதையும், எழுதும் கதையும் வேறு வேறா என்ன? நாவலாசிரியர் தன் உயிருள் கரைந்த உணர்வை, எழுத்துக்களில் நெய்து விரிக்கிறார். வாசகர் தன் அனுபவ உணர்வுகளால், நாவலாசிரியர் சொன்னதை, சொல்லாததை எல்லாம் தேடிக் கண்டடைகிறார். அப்புள்ளியில் தான் நாவல் முழுமையடைகிறது.

காவல் கோட்டம் நாவலைப் பற்றி வெங்கடேசன் குறிப்பிடும் போது “மதுரையின் காவல் , காவல் நிலை என்கிற புள்ளியிலிருந்து முன்பின் பயணிப்பது தான் காவல்கோட்டம்” என் கிறார். பொதுவாக மதுரையின் 600 ஆண்டுகளின் வரலாறு என்று சொன்னாலும், 550 வருடங்களை 200 பக்கங்களிலும், மீதம் உள்ள 50 வருடங்களை 800 பக்கங்களிலும் விவரித்துள்ளார். காவல் கோட்டம் நாவலைப் பற்றிய பகிர்வு என்பது, மதுரையின் பல்வேறு பரிணாமங்களின் பகிர்வே!!

மல்லல் மூதூர்

மதுரை நகரத்தின் வசீகரமே அது தன்னுள் பொதித்து வைத்திருக்கும் பழமை தான். ஷாப்பிங்மால்கள், மேற்கத்திய உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று மதுரை நவீனமயமாக்கப்பட்டாலும், கிராமத்துச்சிறுமியின் பொருந்தா நவீன ஒப்பனையைப் போல் தான் அது தோற்றமளிக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் போது, அது தனது நவீனப்பூச்சினை உதிர்த்து விட்டு, தனது உண்மைத் தோற்றத்தில் பழமை ஒளிர அழகாய் காட்சியளிக்கும். மதுரை நகரத்தின் சிறிய சந்து, சிதிலமான ஒற்றைச்சுவர் கூட ஆயிரமாண்டுகால வரலாற்றின் மெளன சாட்சியமாக நிற்கும். வரலாற்றின் பக்கங்களில் மதுரையின் குறிப்பைத் தேடிப் போனால், கி.மு மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தெனிஸ் “கிழக்கின் ஏதென்ஸ்” என்று மதுரை நகரைப் பற்றி பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களில் மதுரை பற்றிய விவரணைகள் இருக்கின்றன. மதுரையின் பழம்பெருமைக்கு ஆதாரம் புனைவுகளில் மட்டுமல்ல, தொல்லியல் ஆய்வுகளும் சான்றளிக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய கீழடி அகழாய்வு, 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்த நகரத்தின் தொல்லியல் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறது. 258 கிமீ நீளமுள்ள வைகைநதியின் கரைகள் தொடர்ச்சியாக மக்களின் வாழ்விடங்கள் கொண்டதாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.

மதுரை நகரின் அமைப்பு அந்தந்தக் காலங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளது.

“மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்”

என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.

“தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க்கதவின்
மழையாடு மலையினி வந்த மாடமொடு
வையையன்ன வழக்குடை வாயில்”

என்று கூறும் மதுரைக்காஞ்சி, வலிமிக்க தெய்வமாகிய கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடுநிலை என்றும், அதில் விளக்கேற்றியதால் நெய் உருகிக் கரிந்த கதவு என்றும் கோட்டை அமைப்பை விளக்குகிறது. ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகரின் அமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளின் வழி தெரிந்து கொள்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையப்புள்ளியாகக் கொண்டு, பல அடுக்குகளாய் இதழ்கள் கொண்ட தாமரை மலரைப் போல் மதுரை நகர் அமைந்திருக்கிறது என்பது அழகியலும், வரலாறும் முயங்கும் தகவல். நாயக்கர் காலத்து நிர்வாகம் உருவாகத் துவங்கியது முதல், பல மாற்றங்களை சந்தித்து, ஆங்கிலேயர் நிர்வாகத்தில் மதுரை அமைப்புரீதியாக, நிர்வாகரீதியாக இறுதிவடிவம் பெற்றதையே காவல்கோட்டம் கூறுகிறது.

இரவின் ஒளியில்

இரவு எல்லாக் காலத்திலும் ரகசியங்களின் பொக்கிஷமாகவே திகழ்கிறது. இரவின் அழகை, இரவின் மயக்கும் தன்மையை கவிஞர்கள் எல்லாக் காலத்திலும் பதிவு செய்திருக்கின்றனர். பதுமனாரின் “ நள்ளென்றன்றே யாமம்” என்னும் குறுந்தொகைப் பாடல், காலம் கடந்து நிற்கும் இரவின் விவரிப்பு. மதுரைக்காஞ்சியில் இடம் பெற்ற
“குடமுதல் குன்றம் சேர குணமுதல்

நாள் முதிர் மதியம் தோன்றி நிலாவிரிபு
பகல் உரு உற்ற இரவு வர”

என்ற இரவின் வருகையின் வர்ணனை மதுரையை இரவின் ஒளியில் காணச் செய்கிறது.

“ இரும்பிடி மே எந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப்பதித்த கூர்நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினைநுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக்கச்சினர்
மென்நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்”

இரவில் கள்வர் களவுக்கு செல்வதையும் கூட, பெண்யானையின் தோலை ஒத்த கருமை சூழ் இரவில் கூர்மையான உடைவாள் ஏந்தி, மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பில் சுற்றி சென்றனர் என விவரித்து, அவ்வாறு செல்பவரை களிறை இரையெனக் கொள்ளும் புலியைப் போல் காவலர் தெருக்களில் உலவினர் என்ற மாங்குடி மருதனாரின் வர்ணனையில் துவங்குகிறது காவல்கோட்டத்தின் அஸ்திவாரம். 2500 கால மதுரையின் வரலாறு களவையும், காவலையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களின் ஊடே, இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே என்ற புரிதலோடு,காவல்கோட்டத்தினை வாசிப்பதே அதனை முழுமையாக உள்வாங்க உதவும்.

வடிவமற்ற வடிவம்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்று வெளியாகும் நாவல் வரை, நாவல் பல வடிவங்களைக் கடந்து வந்துள்ளது. வாசகராய் கையில் காவல் கோட்டத்தை ஏந்துகையில், எவ்வாறு இது ஒரு நாவல் எனப்படுகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுவதற்கு, காவல்கோட்டம் வெளிவந்த புதிதில் எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்கள் முக்கியமான காரணியாகும். 1054 பக்கங்கள் கொண்டதாலேயே வேறு பேச்சின்றி நாவல் எனப்படுவதா? இதற்கான துலக்கம், ஜெயமோகன் எழுதிய “நாவல் கோட்பாடு” புத்தகத்தில் கிடைக்கிறது. “ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியாக வடிவப் பிரக்ஞை உள்ளது. எனவே வடிவங்கள் பற்றிய விவாதம் என்பதுஎல்லா படைப்பாளிகளுக்கும் உள்ள பொது அம்சங்களை ஷரத்துகளாகக் கொண்டு ஒரு வடிவ நிர்ணயத்தை உருவாக்குவது எப்படி என்பதாக இருக்க முடியாது. மாறாக, எப்படி ஒவ்வொரு படைப்பாளியும் தன் இலக்கிய வடிவத்தை மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு முன்னகர உதவ முடியும் என்பதாகவே இருக்க முடியும். மிகச்சிறந்த உதாரணங்களாக, “போரும் அமைதியும்” “கரமசோவ் சகோதரர்கள்” போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் “வடிவமற்ற வடிவம்” தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவு தான். பெரும் காடு போல தழைத்து ஈரமுள்ள நிலமெங்கும் பரவி நிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனக் கொள்ளலாம். மலைகள் போல, வடிவமின்மையும் வடிவமாக இருப்பதே நாவல் எனப்படுகிறது.” அவ்வகையில், காவல் கோட்டம் வடிவார்த்தமாக நாவல் என ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த தயக்கமும் இல்லை.

வரலாற்றின் மறுவாசிப்பு

வரலாற்றுத் தகவல்கள், தரவுகளை ஆகியவற்றை மறுவாசிப்பு செய்வதே வரலாற்றுப் புனைவின் அடிப்படையான நோக்கம். துண்டுகளாய் கிடைப்பவற்றை அடுக்கி, அவற்றை தன் கற்பனையில் சித்திரமாய் இணைக்கும் வேலையை நாவலாசிரியர் செய்கிறார். மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. மாலிக் கபூர் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாறு. அவற்றை காவல்காரர்களின் வாழ்வோடு இணைத்தது புனைவு. கிபி.1371 ஆம் ஆண்டு குமாரகம்பணனின் மதுரைப்படையெடுப்பு, சுல்தான் களை வென்றெடுக்கிறது. அவரது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் புலமை பெற்றதால், “மதுரா விஜயம்” என்ற காவியத்தை இயற்றினார். இன்றளவும், அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆதாரநூலாக மதுராவிஜயம் திகழ்கிறது. வெங்கடேசன் கங்காதேவியை அமணமலையில், காவல் பணி செய்யும் கருப்பணனின் மனைவி சடச்சியை சந்திக்க வைக்கிறார். அவரது சித்திரத்தின் முதல் கோடு அதுவே. வரலாற்றில் கிடைக்கும் வெற்றுத்தகவல்களை அழகிய சித்திரமாக மாற்றுவதே வெற்றிகரமான வரலாற்றுப்புனைவாக அமையும். தமிழில் பிரபல சரித்திர நாவல்களாக அறியப்படும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை காலம் கடந்து நிற்பவை. ஆனாலும், மொழிநடையிலும் கூட நாடகத்தன்மையுடன் இருக்கும். ஒரு சரித்திர நாவலை வாசிக்கும் உணர்வு வாசகர் மனதில் மேலோங்கி இருக்கும். ஆனால், காவல் கோட்டம் நாம் காலஎந்திரத்தில் ஏறிச்சென்று அந்நிகழ்வுகளின் ரத்தசாட்சியாக இருந்ததாக உணரச் செய்கிறது. இதுவே, வெங்கடேசனின் வெற்றி. காவல்கோட்டத்தின் தனித்துவத்திற்கு சான்று.

காவல் கோட்டம்

நகரத்தின் பாதுகாப்பை, கட்டுக்கோப்பை உறுதி செய்யும் கோட்டையின் அமைப்பு, ஆட்சியாளர்களின் கெளரவச் சின்னமாக அறியப்படுகிறது. அது வெவ்வேறாக உருவாகும் சூழல் நகரம் சந்திக்கும் மாற்றங்களின் சாட்சியமாக அமைகிறது. குமாரகம்பணனின் மதுரை விஜயத்தின் போது, மதுரைக் கோட்டை குட்டையாக, முதுமைபூண்டு, சுட்ட செங்கல்களின் அடுக்காக காட்சியளிக்கிறது. அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில், மிகச் சிறப்பான திட்டமிடலோடு கல்கோட்டை எழுப்பப்படுகிறது. அதிலிருந்து, ஏறத்தாழ 400 ஆண்டுகள் கழித்து, பிளாக்பர்ன் தலைமையில், கோட்டையை இடிப்பது வரை, மதுரையின் தலைமை பல கைகள் மாறிவிட்டது. சிறிய அத்தியாயத்தில் சொல்லப்பட்டாலும் கூட, கட்டபொம்முவின் கதை அழுத்தமாய் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பீரங்கி தாக்குதலைத் தாக்குப்பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு முறை நின்றது ஆச்சரியமே. கட்டபொம்மு நாயக்கரை, வீரபாண்டிய கட்டபொம்மனாக ஆக்கி, வீரவசனம் பேச வைத்த தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்று உணர்வு ஏனோ மனதில் வந்து போகிறது.

மதுரைக் கோட்டையை இடிக்கும் முடிவை எடுத்த கலெக்டர் பிளாக்பர்ன், அதை முழுமையாய் நிறைவேற்றி மதுரையை விட்டு வெற்றிகரமாய் வெளியேறும் வரைக்குமான சித்தரிப்பு காவல்கோட்டத்தின் மையமான, உயிரோட்டமான பகுதியாக அமைந்துள்ளது. மாடத்தை தாங்கி நிற்கும் கோட்டை வாயில் சித்திரம் ஒன்றை ஒரு இளைஞரின் தோளில் வழிகிற இரத்தத்தினூடே பச்சை குத்தும் குறத்தி மிக அழகான படிமம். கோட்டைச் சுவரை காவல் காத்த இருபத்தோரு சாமிகள், கோட்டை வாயிலை காவல் காத்த நான் கு சாமிகள் மக்களின் நம்பிக்கையில் ரத்தமும் சதையுமானவர்கள் . கோட்டைச்சுவரை இடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். இரவு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாமியாய் கோட்டையில் இருந்து இறங்க ஆரம்பிக்கின்றன. வெங்கடேசன் களமாடிய பகுதி இது. வெங்கடேசன் மிகுந்த சிரத்தையோடு வரிக்கு வரி அத்தனை அழகாய் செதுக்கியிருக்கிறார். எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கிய வேகத்தில், அவர்மீதான வெற்று விமரிசனங்கள் காற்றோடு கலந்து விட்டன.

இரவின் மடியில்

காவல்கோட்டம் நாவல், தாதனூரின் காவல் பணியையும், களவு நுணுக்கங்களையும் கொண்டு பின்னப்பட்டது. மதுரையின் ஆட்சி மாற்றங்கள் நடந்த 600 ஆண்டுகால வரலாற்றில், தாதனூரின் காவல் உரிமை பறி போனது. திரும்பக்கிடைத்தது. திரும்ப பறிக்கப்பட்டது. சடச்சியின் வாரிசுகள் இரவின் மடியில் வளர்ந்தவர்கள். இரவின் ருசியை துளித்துளியாய் உணர்ந்தவர்கள். திருமலை நாயக்கர் அரண்மனையை விட்டு இருள் வெளியேறிய போது, அவரின் கெளரவமும் வெளியேறுகிறது. தாதனூர்க் களவின் முத்திரை, ராஜமுத்திரையை வெல்கிறது. காவல் உரிமையைப் பரிசாக வெல்கிறது. வெங்கடேசன் அதை “நான்மாடக் கூடலின் வீதிகளில் திரிகிற இருளின் கழுத்தில் வடம்போட்டு, சாவடியின் தூண்களில் தாதனூர்க்காரர்கள் கட்டி வைத்திருந்தனர்” என் கிறார். பார்வையால் அல்ல, புலன் களின் விழிப்பால் காவல் காக்கிறார்கள். சப்தங்களின் வழி களவுக்கு நேரும் அபாயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏட்டு வீராச்சாமியின் வீட்டிற்கு இரவில் வரும் காவல்காரர்கள் ஓசையின்றி பித்தளை செம்பில் தண்ணீர் குடித்துச்செல்லும் ஒரு காட்சி போதும் அவர்களின் இயக்கத்தை சொல்ல. இரவின் அழகை, இரவின் ரத்தவேட்கையை, இரவின் ரகசியங்களை, இரவின் மடியில் விளையாடியபடி, கரும்பளிங்குச் சிலையென மதுரையை விவரிக்கிறார் வெங்கடேசன்.

கோட்டத்தினுள்ளே…

மதுரையின் முழுமையான தொகுக்கப்பட்ட வரலாறு என்று நெல்சன் அவர்களின் “மதுரா கன்ட்ரி மானுவல்” கூறப்படுகிறது. நாயக்கர்களின் வரலாறு தனியாக “ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்” என்ற சத்தியநாதய்யரின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் இருப்பதை அடுக்கி வைப்பது வரலாற்று ஆசிரியரின் வேலை. தன் மனதின் கற்பனையை வடிவமாக்குவது நாவலாசிரியரின் வேலை. வரலாற்று நாவலாசிரியர் முன்னால் உள்ள பெரும் சவால், இவ்விரு வேலைகளையும் பொருத்தமான புள்ளியில் இணைத்து, வரலாற்று இடைவெளிகளை தன் கற்பனையால் நிரப்பி அழகிய வேலைப்பாடு மிகுந்த படைப்பாக வாசகர் முன் வைப்பது. வெங்கடேசன் வரலாற்றின் சட்டகத்திற்குள் தன் கற்பனையை செதுக்கி இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். எனினும், சில அவசியமான இடங்களை வெற்றிடமாகவே விட்டிருக்கிறார்.

வெங்கடேசன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஒரு வாக்கியத்திற்குள் மூன்று தலைமுறைகளைக் கடக்க வேண்டிய தேவை இருந்தது என்று. முதல் அத்தியாயத்தில், நிறைசூலியாய் மதுரை நகரை விட்டு வெளியேறும் சடச்சி, இரண்டாவது அத்தியாயத்தில் கிழவியாய் பேரக்குழந்தைகளோடு தோன்றுகிறாள். இத்தனை வேகமான பாய்ச்சல், அவசியமானாலும் கூட, சில விடுபடுதலுடனே இருக்கிறது. நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்குமான உறவு நிலை குறித்த சித்திரம் அத்தனை தெளிவாக இல்லை. அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட, திருமலை நாயக்கரின் மிஷனரி ஆதரவு நிலைபாடு குறித்த ரகசியக் கதைகள் இன்றும் உலவுகையில் நாவல் அது பற்றி மெளனம் சாதிக்கிறது. மதுரையில் மீனாட்சி கோவிலின் விரிவாக்கம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்லும் போது, “இருந்தையூர்” என்று பரிபாடலில் குறிப்பிடப்பட்ட, திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற, இன்றும் இருக்கும் கூடலழகர் கோவிலைப் பற்றிய குறிப்பு நாவலில் எங்கும் இல்லை. நாயக்கர்களின் குலங்கள், உட்பிரிவுகள், அவற்றிற்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மண உறவுகள் போன்றவற்றை மிக விரிவாக இந்நாவல் பேசுகிறது. எனினும், அது அங்கங்கே சிறிய வெளிப்பாடுகளாக உள்ளன. பின் இணைப்பாகவேனும், இப்பிரிவுகள் குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அது கூடுதல் புரிதலுக்கு வழிவகுத்திருக்கும். அமண மலையில் உள்ள தீர்த்தங்கரது சிலைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நேமிநாதன் செட்டியார் மட்டுமே சமணராய் வந்து போகிறார். 600 ஆண்டுகால வரலாற்றில், சமணக்குடும்பங்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 280 பக்கங்களிலேயே யூனியன் ஜாக் அத்தியாயம் துவங்குகிறது. அது வரை நாயக்கரின் போர் தந்திரங்களும், தாதனூரின் களவு நுணுக்கங்களும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அதிகாரம் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், வாழ்க்கை முறையிலிருந்து சாமானியர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்!!

எல்லா காலகட்டத்திலும் எளியவர்களின் உயிர்துறத்தில் கற்பனை செய்ய முடியாத தீரத்துடனும், எளிய மதிப்பீடுடனும் வெளிப்படுகிறது. நாவலின் துவக்கத்தில் கனகநூகாவின் தற்பலி, கோட்டை வாசல் வாணம் தோண்ட திம்மன் உள்ளிட்ட நான் கு இளைஞர்களின் பலி ஆகியவை அதிகாரவர்க்கத்தின் விதிமுறைகள் என்றால், எளியவர்களின் விதிமுறைகள் அநியாயமாய் பலி கொள்ளும் சின்னானின் உயிர். இது ஒரு புறம் என்றால், உயிர்ப்பலி கொத்து கொத்தாய் நிகழும் தாது வருஷப் பஞ்சம் பற்றிய விவரிப்பு. மிகத் துல்லியமாக பஞ்சத்தின் அனைத்துக் கூறுகளையும் செய்த ஒரே பதிவு காவல்கோட்டம் தான்.

சிறிய சிறிய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை. ரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தாதனூரில் களவாடிய குறவன், ஆஞ்சநேயரின் வடிவங்களை மூட்டையில் களவாடி வரும் பெருசு, கிழவிகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகும் பெருசுகள் என ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லவும் இடமிருக்கிறது.

பெண்மையின் பேருரு

ஆண்ட வர்க்கத்திலும், எளிய வர்க்கத்திலும் வெங்கடேசனின் பெண் பாத்திரங்கள் சுயமரியாதையுடன், தெளிவாய் சிந்திப்பவர்களாக, அன்பால் அரவணைப்பவர்களாக, பன்முகத்திறமை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ராஜாளியைப் பார்த்த நிமிடத்தில் போரைத் துவங்க ஆணையிடும் கங்காதேவி, தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ராயரின் மூன்றாம் பட்டத்தரசி துக்காதேவி, மாமனாருக்காக ராயரிடம் வாதாடும் விஸ்வநாத நாயக்கரின் மனைவி வீரநாகம்மா,, என்று துவங்கும் பட்டியல் நல்லாட்சி வழங்கிய ராணி மங்கம்மாள், ராணி மீனாட்சி என தொடர்கிறது. எல்லையற்ற தைரியம் கொண்ட சடச்சியில் துவங்குகிறது தாதனூரின் வீரப்பரம்பரை.அது பல தலைமுறை கடந்து, வெள்ளை சிப்பாயை தனியொருத்தியாய் தலையை அறுத்து கையில் ஏந்திச்செல்லும் கழுவாயி வரை கடத்தப்பட்ட உள்ளுணர்வாய் மிளிர்கிறது. ஆதிக்க வர்க்கப் பெண்களின் வாழ்வு வீரமரணம் அடைந்த கணவன்மார்களோடு உடன் கட்டை ஏறுவதில் கருகும் போது, எளிய வர்க்கப் பெண்களின் வாழ்வு சுதந்திரமான வாழ்க்கைத்துணைத் தேர்வில் மலர்கிறது. தாதுவருஷப் பஞ்சத்தில் பேசப்பட வேண்டிய இரு வேறு பெண்களான நல்லதங்காள் மற்றும் குஞ்சரம்மாளின் சித்தரிப்பு . ஒன்று கையறு நிலையின் குறியீடு. மற்றொன்று களிமிகு வாழ்க்கையில் ஊறியவர், பேருரு கொண்டு மக்களின் துயர்துடைத்த மூதன்னையின் வடிவமானவர்.

சித்தாந்தப் பார்வையில் பொருள் முதல்வாதம் மார்க்சியத்தின் அடிப்படை. “மனித சமூகம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும், கலாச்சார – பண்பாடு – அரசியல் அம்சங்களை மேல் கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அடித்தளமே மேல் கட்டுமானங்களின் உருவாக்கங்களையும், தன்மைகளையும், இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது. எனினும் மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால், அடிக்கட்டுமானம் பாதிப்படையும் சாத்தியங்கள் உண்டு” என்பதே மார்க்சியம் வரையறுக்கும் சமூகப்பார்வை. மார்க்ஸ் இந்தியச் சமூகத்தைப்பற்றி குறிப்பிடுகையில் “ தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக்கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கும் பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என் கிறார். இந்தச் சித்திரமே விரிவாக காவல்கோட்டமாய் நம் கைகளில் உள்ளது. ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகாரம் கைப்பற்றுதல் தொடர்பான முரண்பாடு, சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுக் கூறுக்களிடையே ஆன முரண்பாடு இந்த இரு அம்சங்கள் ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைக்க வழி வகுத்தவை. பள்ளிக்கூடம் அமைத்ததும், ரயிலின் வருகையும் சாதிய வேறுபாடுகளைக் களையும் கருவிகளாயின.
வரலாறு என்பது தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பே. அத்தொகுப்பை சித்தாந்த சட்டகத்திற்குள் வைத்துப் பார்த்தால், அதன் சீர்மை புரியும். தொடர்ச்சியான முரண் இயக்கத்தில் பின்னப்பட்டது வரலாறு என்ற தெளிவு கிடைக்கும்.

எந்த ஒரு நாவலும் முதல் பக்கத்தில் துவங்குவதுமில்லை, கடைசிப்பக்கத்தில் முடிவதுமில்லை. வாசகர் தனது அனுபவத்தின் வழியாக அவற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பி, படைப்பாளியை கூட சில தருணங்களில் வென்று புதிய தரிசனங்களைக் கண்டடைகிறார்கள். அதுவே, ஒரு நாவலின் ஆகச்சிறந்த வெற்றியாகும்.

தமிழிலக்கத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாவலாக மட்டுமல்லாமல், மார்க்சிய அழகியலின் மிகச்சிறந்த படைப்பாகவும் காவல் கோட்டம் திகழ்கிறது.

அன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து

நரோபா

சி. சரவணகார்த்திகேயன் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி. சமூக ஊடகங்களில் முனைப்புடன் இயங்கி வருபவர். முன்னரே கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் வனைகிறார். ‘மின் தமிழ்’ எனும் மின் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் திகழ்கிறார். அதன் நீண்ட நேர்காணல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ‘ஆப்பிளுக்கு முன்’ சென்ற ஆண்டு வெளியானது. சமூக வலைதளங்களில் அதிகமும் வெளிபடுவது அவருடைய திராவிட இயக்கச் சார்பு முகமே. அந்நிலையில் காந்தியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவை தன்னுடைய முதல் நாவலின் களமாக தேர்ந்தது ஒரு வாசகனாக சன்னமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. குறுகுறுப்புக்கு காந்தியைப் பற்றி சரவணகார்த்திகேயன் என்ன எழுதியிருக்கிறார் என்பதொரு காரணமென்றால் மற்றொரு காரணம் நாவலின் பேசுபொருள். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள்.

தமிழ் புனைவுப் பரப்பில் காந்தி கையாளப்படுவது புதிதல்ல. புதுமைபித்தனின் ‘புதிய நந்தன்’ துவங்கி மணிக்கொடி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் காந்தி ஒரு பாத்திரமாகவோ அல்லது அவருடைய தாக்கத்தில் வாழ்வை விளக்கிக்கொள்ளும் முயற்சிகளோ, அவருடைய இயல்புகளை தமதாக கொண்ட லட்சியவாத சாயல் கொண்ட கதைமாந்தர்களோ பல்வேறு எழுத்தாளர்களின் புனைவு வெளியில் உலவுகிறார்கள். அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் ஹென்றியும்கூட காந்திய சாரத்தை தமதாக்கிக் கொண்ட ஒருவன்தான். சி.சு. செல்லப்பா மற்றுமொரு முக்கியமான காந்தியுக எழுத்தாளர். ‘சுதந்திர தாகம்; ‘சத்தியாகிரகி’ போன்ற கதைகள் காந்தியின் மீது வழிபாட்டுணர்வு கொண்ட படைப்பூக்கமிக்க ஆளுமைகளில் ஒருவராக அவரைக் காட்டுகிறது. சிதம்பர சுப்பிரமணியனின் ‘மண்ணில் தெரியுது வானம்’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ போன்ற நாவல்களில் காந்தியொரு பாத்திரமாக வந்து போகிறார். ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் காந்தியத்தையே தனது தரிசனமாக கொண்டுள்ளது. உன்னத கொள்கைகள் லட்சியவாதத்தின் பொருட்டு ஒருவனை இறுக்கும்போது அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதைப் பற்றிய சித்திரத்தை அந்நாவல் அளிக்கிறது. ஊடாக அய்யன்காளி காந்தி சந்திப்பை மையமாக்கிய ‘மெல்லிய நூல்’ நாவலின் தரிசனமாக மேலெழுகிறது. வெகுமக்கள் இலக்கிய பரப்பில் நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி என பலரும் காந்திய தாக்கம் கொண்ட புனைவுகளை எழுதி இருக்கிறார்கள். காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், தேவிபாரதி, உட்பட பலரும் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு தமிழில் இதுவரை இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே வெளிவந்ததுள்ளன என்று எண்ணுகிறேன். ஒன்று மாலனின் ‘ஜனகணமன’ மற்றொன்று ‘ஆப்பிளுக்கு முன்’.

“காந்தி இந்திய மனவெளியில் அவருடைய மரணத்தின் ஊடாகவே மீள்பிறப்பு எடுத்தார்” என்கிறார் மகரந்த் பரஞ்சபே. தமிழ் காந்திய புனைவுப் பரப்பில் காந்தியின் மரணம் ஆழ்ந்த தாக்கம் செலுத்தியிருப்பதை வாசிப்பின் ஊடாக உணர முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ ஆகியவை காந்தியின் மரணத்தை தம் பிரதிகளில் தீவிரமாக சித்தரிக்கின்றன. காந்தி சென்ற யுகத்தின் லட்சியவாதத்தின் குறியீடாக, பின்னர் அதன் வீழ்ச்சியின் சாட்சியாக புனைவு வெளியில் நடமாடுகிறார். ஞானக்கூத்தன், இசை, சபரி, மனுஷ்யபுத்திரன் என காந்தி தமிழ் நவீன கவிதைகளில் லட்சியவாதத்தின் பகடியாக உருமாறுகிறார். தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, மாலனின் ‘ஜனகணமன’, சரவணகார்த்திகேயனின் ‘நான்காவது தோட்டா’, மற்றும் ‘ஆப்பிளுக்கு முன்’, நரோபாவின்  ‘ஆரோகணம்’ என இவை அனைத்துமே காந்தியின் மரணத்தை பேசுபவை. மரணத்திலிருந்து காந்தி இந்திய சமூகத்திற்கு அளித்தவை என்ன என்று ஆராய்பவை. அவருடைய பெறுமதியை மதிப்பிடுபவை. நிதர்சனத்தில், இறந்த காந்தி மீளெழவில்லை- ஆனால் புனைவுகளில் ஒவ்வொரு முறையும் மேலும் ஆற்றலுடன் காந்தி உயிர்த்தெழவே மரிக்கிறார்.

பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத, அதே சமயம் கிளர்ச்சி தரும் கிசுகிசுக்களுக்கே உரிய ஆற்றலுடன் பன்மடங்கு வீரியத்துடன் உலவும் கதைதான் காந்தியின் ‘பிரம்மச்சரிய பரிசோதனைகள்’. காந்தியைப் பற்றிய பொதுவெளி விவாதங்களில் அவர் தரப்பை வீழ்த்தவும் அவரை சிறுமை செய்யவும் இறுதியாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமும் இதுதான். காந்தியை வாசிப்பவர்களிடத்தேகூட இது சார்ந்து ஒரு மவுனமும் உறுத்தலும் ஐயமும் நிலவுவது உண்டு. ஜெயமோகன், பிரேம், மற்றும் லாய்ட் ஐ ருடால்ப் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து சில புரிதல்களை அளித்தனர். இந்தச் சூழலில் இதை பேசுபொருளாக தன் முதல் நாவலுக்கு கைகொள்வதற்கு ஒரு துணிவு வேண்டியதாய் இருக்கிறது. அவ்வகையில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் சவால் மிகுந்த, சற்றே சமநிலை இழந்து அடி பிறழ்ந்தாலும் தலைகுப்புற விழும் கழைக்கூத்தாடிபோல் சமநிலையுடன் பயணிக்க யத்தனித்து, சில உதறல்கள் மற்றும் அதிர்வுகள் இருந்தாலும்கூட விழாமல் மறு எல்லையை அடைந்துவிட்டிருக்கிறார்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் முப்பதுகளின் பிற்பகுதியில் துவங்குகிறது. தரம்பால் 37ல் காந்திக்கு தூக்கத்தில் நேர்ந்த விந்து விரயம் பற்றி வருத்தத்துடன் எழுதிய கடிதத்தைப் பற்றி ‘காந்தியை அறிதல்’ நூலில் எழுதுகிறார். தன் பிரம்மச்சரியம் கறைபடியாமல் இருக்க மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தை காந்தியின் சகாக்கள் எப்படியோ பிரசுரம் ஆகாமல் தடுக்கிறார்கள். சுஷீலா நய்யார், பிரபாவதி துவங்கி மநு வரை பலரும் காந்தியுடன் பிரம்மச்சரிய சோதனையில் வெவ்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். நாவல் மநுவுக்கும் காந்திக்கும் இடையிலான உறவையே பேசுகிறது.

காந்தியின் இந்த சோதனைகள் கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே துவங்கிவிடுகிறது. அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? நாவல் மிகச் சன்னமாக இதை தொட்டு காட்டுகிறது. ஆகாகான் சிறையில் தனக்கு உதவியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து விலக்கி வைக்கவே அவர் முயல்கிறார். கஸ்தூரி பாவின் மரணத்திற்கு பிறகு வரும் ஒரு நிகழ்வு மநுவின் தூய்மையான வெள்ளந்தித் தன்மைக்கு சான்றாக திகழ்கிறது. பாவிடம் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் மநு சொல்வது வழக்கம். இறந்த பிறகும் பாவின் நினைவிடத்தில் சென்று அன்றைய நாளைப் பற்றி சொல்கிறாள் மநு. காந்தி இதைப்பற்றி கேட்கும்போது மநு ஒரு பதில் அளிக்கிறார். “பா இருப்பதும் இல்லாததும் என் தேர்வல்ல, ஆனால் சொல்வது என் தேர்வல்லவா?” மெதுவாக அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பரிணாமம் கொள்கிறது. காந்திக்கு அணுக்கமாக இருந்த பிறர் பின்னுக்குச் செல்கிறார்கள். மகாதேவ் தேசாயும், பாவும் இருந்த இடத்தை ஏறத்தாழ மநு நிரப்புகிறார். காந்தியின் அணுக்கர்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு அந்த உறவு வலுப்படுகிறது. பியாரிலாலுக்கு மநு மீதிருந்த ஈர்ப்பு, அதை பியாரிலாலின் சகோதரி சுஷீலா தனக்கு சாதகமாக பயன்படுத்தி காந்தியை மநுவிடமிருந்து விலக்க முற்படும் ஆசிரம அரசியல்களையும் நாவல் தொட்டுக் காட்டுகிறது. நாவலின் பாத்திர வார்ப்பில் மநுவின் பாத்திரம் காந்தியைக் கடந்து மேலெழுந்து செல்கிறது. துவக்க காலத்தில் இருக்கும் அவளுடைய குறுகுறுப்பு, மெல்ல தன்னை காந்தியிடம் பூரணமாக ஒப்புவித்தல், பிற்பாடு தக்கர் பாபாவுடன் நிகழும் உரையாடல், மன உறுதிக்கும் ஆசிரம சில்லறை அரசியலுக்கும் இடையில் ஊசலாடுதல், நாவலின் இறுதியில் தேவதாஸ் காந்தி மநு சார்ந்து எந்த செய்தியும் பரவுவதை விரும்பவில்லை என்பதால் அவரை அவசர கதியில் வெளியேற்றிய பின்பான வெறுமை, எல்லாவற்றிற்கும் மேலாக மநுவிண் பதின்ம வயதிற்கே உரிய வெள்ளந்தித்தனம் (காந்தி அதை தூய்மை என்றே கருதுகிறார்).

காந்தி பிடிவாதக்காரராக, பிறழ்வு கொண்டவராக, ஏறத்தாழ சர்வாதிகாரியாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை மீறி அவருடைய ஆளுமை பேருரு கொள்ளும் தருணங்களும் நாவலில் உண்டு. நவகாளி யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் காந்தி வரும் வழியில் சில இஸ்லாமிய இளைஞர்கள் மலத்தை இட்டு வைத்தனர். காந்தி தானே சுத்தம் செய்யத் துவங்குகிறார். பிறர் வேண்டாம் எனச் சொல்லியும் மறுக்கிறார். “இது மனித மனதினைவிட நாற்றம் கொண்டதல்ல” என்கிறார். நவகாளி பயணத்தின்போது மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளைப் பற்றி பேசுகிறார். அதை மொழியாக்கம் செய்ய வேண்டிய நிர்மல் குமார் போசுக்கு பெரும் சங்கடம். இதை இப்படி பொதுவெளியில் பேசித்தான் ஆக வேண்டுமா என மறுக்கிறார். உயிருக்கே ஆபத்தாக போய்விடலாம் என எச்சரிக்கிறார். ஆனால் காந்தி தன்னுடன் நவகாளியில் பயணத்தில் இருக்கும் சகாக்களின் நடத்தையால் புண்பட்டிருந்தார். “எதுவும் என்வரையில் அனாவசியம் இல்லை. என்னை எதிரியாய் பாவிப்பவர்களோ, வெறுப்பவர்களோ செய்யும் செயல்களைக் காட்டிலும் என் மீதான அக்கறையில், அன்பில் என்னைச் சுற்றியுள்ளோர் செய்வதே என்னைப் பெரிதும் புண்படுத்துகிறது,” என்கிறார்.

நாவலின் உயிர்த்துடிப்பான பகுதி என்பது காந்தி- தக்கர் பாபா மற்றும் தக்கர் பாபா- மநு ஆகியோருக்கு இடையே நிகழும் உரையாடல் பகுதி. செய்தி ஆவணத்தன்மை கொண்ட பெரும்பகுதிகள் உள்ள புனைவில் இந்த விவாதப் பகுதியே ‘ஆப்பிளுக்கு முன்’னை நாவலாக்குகிறது என்றுகூட துணிந்து சொல்லலாம். தக்கர் பாபாவுடனான உரையாடல் புனைவெழுத்தாளனாக சரவணகார்த்திகேயனை அடையாளம் காட்டக்கூடிய இடம். தக்கர் பாபா சொல்கிறார், “உடல் என்பது நினைவில் காடுள்ள மிருகம். அது எப்போதும் காமத்தை மறவாது.” காந்தி காமத்தை தாய்மையின் மற்றொரு பரிமாணம் என வாதிடுகிறார். காமத்தை, பால்தன்மையை கடந்து தாய்மையை அடைய வேண்டும் என்கிறார் காந்தி. காந்தியின் மனப்பிறழ்வுக்கு அவர் அளிக்கும் பாசாங்கு என்பதாக இது பொருள் படக்கூடும். ஆனால் காந்தி அப்படி எண்ணவில்லை. கீழை ஆன்மீக மரபில் பிரம்மச்சரியம் செயலூக்கத்துடன் தொடர்புறுத்தப்படுகிறது.

லாய்ட் ஐ ருடால்ப் எழுதிய பின் நவீனத்துவ காந்தி பற்றிய அர.சு. ராமாவின் கட்டுரை இப்படிச் சொல்கிறது. “நான் என் வாழ்நாள் எல்லாம் தொடர்ந்த பிரமச்சர்யத்தைக் கடைபிடித்திருந்தால் என் உற்சாகமும் உத்வேகமும் இன்றுள்ளதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். அதை என் தேசத்துக்கும் என் உய்வுக்கும் பயன்படுத்தியிருக்க முடியும்,” என்றார் காந்தி. மேலும், “உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் ஜீவசக்தியை வீணாக்காமல் சரியான வழியில் பயன்படுத்துபவனுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது… முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு எண்ணற்ற ஆற்றல் உண்டு, அது தானாகவே செயல் வடிவம் பெற்று வெற்றி காண்கிறது… தன் சக்தியை விரயம் செய்பவனுக்கு இந்த ஆற்றல் எட்ட முடியாத ஒன்று”.

நாவலில், ஆன்மாவையும் உடலையும் மிகவும் எளிமைபப்டுத்துகிறீர்கள் என்கிறார் தக்கர் பாபா. அதற்கு காந்தி அளிக்கும் பதில் கூர்மையானது. “எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு என்பது உடலின் குற்றங்களிலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் நோக்கம் கொண்டது. அப்படி ஓர் ஓட்டையைப் போட்டு தள்ளுபடி தருவதன் மூலம் உண்மையில் பாவ மன்னிப்புகளே பாவங்களை அதிகரிக்கின்றன.”

மேலும் பின் நவீனத்துவ காந்தி நூலில் காந்தியின் புலனடக்கம் குறித்து உள்ள ஒரு கோணம் எனக்கு முக்கியமானது-

தன்னை வென்றவன் தரணியை வெல்வான் என்பது போன்ற புராதன நம்பிக்கைகள் கொண்டிருந்தார் காந்தி. விஸ்வாமித்திரர் கதையே அவர் காமத்தையும் கோபத்தையும் வெற்றி கொண்டு இந்திரிய ஜெயத்தின் ஆற்றலால் திரிசங்கு சொர்க்கம் போன்ற உலகங்களையும் படைக்கும் தவவலிமை பெற்றதைத்தானே சொல்கிறது? இவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளாமல், தன் புலனடக்கத்தால் தன்னோடு வாழ்ந்த மக்களின் துயர்களைக் களைந்து அவர்கள் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முயன்றார் காந்தி. அவர் தன் புலனடக்கத்தால் படைக்க நினைத்த உலகம் மிக எளிமையானது. திரிசங்கு சொர்க்கத்தைப் போல் தேவலோகத்துக்கு இணையான பிரம்மாண்டம் கொண்டதல்ல அது- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற எளிய இலக்கு கொண்ட சாதாரண கனவு. எளியவர்கள், ஏழைகள் இவர்கள் துன்பமற்று வாழ ஒரு உலகைப் படைக்க விரும்பினார் காந்தி.

காந்தியின் தாய்மைத் தரிசனமும் பெண்ணிய மற்றும் அகிம்சை நோக்கில் முக்கியமான புரிதல் அளிப்பவை. வந்தனா சிவா இக்கோணத்தை வளர்த்தெடுத்ததைப் பற்றி பிரேம் தனது கட்டுரையில் விவரிக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ கூட அதீத ஆண் மைய அரசியலுக்கு எதிராக காந்தி கைக்கொண்டது பெண் மைய அரசியல் எனும் கோணம் துலங்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக்கூட பால் கடந்த நிலையை நோக்கி சென்றவர் எனும் கோணம் உண்டு. காந்தி தனது பரிசோதனைகளை மறைக்கவில்லை. பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகிறார், கடிதங்கள் எழுதுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், இதை எல்லாம்விட ஒரு படி மேலே சென்று, பிரம்மச்சரிய பரிசோதனையின் அனுபவங்களை மநுவை நாட்குறிப்பில் எழுதச் சொல்லி அதை தானே திருத்தியும் கொடுக்கிறார். சார்ந்தோரின் பூரண சம்மதத்துடன், அவர்கள் வீட்டாரின் அனுமதியுடன் சோதனையில் ஈடுபடுத்துகிறார். அவர்களுக்கு விருப்பம் இல்லை எனும்போது விடுவிக்கவும் செய்கிறார். மநு எழுதிய நூலின் பெயர் “பாபு என் தாய்”. காந்தியே சொல்வது போல் அவர் இத்தேசத்திற்கே தந்தை, ஆனால் மநுவுக்கு மட்டும் அவர் அன்னையாக தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறார். பிறரிடம் அப்படியான உணர்ச்சிகளை ஏற்படுத்தத் தவறிய காந்தி மநுவைப் பொருத்தமட்டில் அந்த இலக்கை அடைகிறார். பிரம்மச்சரிய பரிசோதனைகள் தடைபட்டு மீண்டும் துவங்கியபோது முன்பிருந்த வெளிப்படைத்தன்மை இல்லையென சரவணகார்த்திகேயன் நாவலில் எழுதியிருப்பது எனக்குமே ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை சொன்ன பிறகும், நாவல் காந்திக்கோ அல்லது மநுவிற்கோ சார்பு நிலை எடுக்கிறதா? என்றால் இல்லை. காந்தியை புரிந்துகொள்ள சில கோணங்களை திறந்து வைக்கிறார். அவற்றை ஏற்பதும், நிராகரிப்பதும் வாசகரின் பொறுப்பு. பெரும்பான்மையினருக்கு காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளின் தர்க்கம் உவப்பாக இருக்காது. இந்நாவல் அவர்களை தொந்திரவு செய்யும் என்பதே என் அவதானிப்பும். மநு எனும் தனி மனுஷி மீது எவ்வித தாக்கத்தை காந்திக்கு பின்பான அவருடைய நெடிய வாழ்வில் இவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. மனித நேய நோக்கில் வாசக மனம் அவர் நோக்கி இரங்குவதை தவிர்க்க முடியவில்லை.

ஆகாகான் சிறைச்சாலையில் மநுவின் வருகையுடன் துவங்கும் நாவல் காந்தியின் மரணத்துக்கு பின்பான மநுவின் வெறுமையுடன் நிறைவுறுகிறது. காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்வதோ, தாழ்வதோ, மாறாமல் இருப்பதோ வாசகரின் வாசிப்பைப் பொருத்ததாகும். என் நோக்கில் காந்தி மேலும் அணுக்கமாகவே ஆகிறார்.

நாவல் முழுக்கவே படர்க்கையில் நகர்கிறது. விவரணைகளற்ற, தட்டையான இதழியல் மொழி. இந்நாவலையே இதழியல் நாவல் என்று வகைபடுத்தலாம். புனைவுத் தன்மை குறைவாக கொண்ட நாவல். ஆகவே வழக்கமான நாவல் போன்ற வாசிப்பனுபவத்தை மொழிரீதியாக இது அளிக்காமல் போகலாம். பெரும் முரண்கள், நாடகீய தருணங்கள் ஏதுமற்று பயணித்தாலும்கூட ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. நாவலின் மிகப்பெரிய சிக்கல் அதன் மொழி. வெகுஜன தளத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. தேய்வழக்குகளும் நிறைய இருக்கின்றன. “நண்பகல் ஒரு குறியீடு போல் அனலைக் கக்கிக் கொண்டிருந்தது,” போன்ற பயன்பாடுகள் நாவலின் ஓட்டத்திலிருந்து விலகியிருக்கின்றன. நாவலின் உணர்வு நிலைக்கு தொடர்பில்லாத, வெகுஜன இலக்கியத்திற்கே உரிய கிளர்ச்சி ஏற்படுத்தும் தன்மை சில இடங்களில் வாசிப்பின் கவனத்தை சிதறடிக்கிறது. வெகுஜன – தீவிர இலக்கியம் இரண்டிற்குமான நடுவாந்தர போக்கில் மொழி நிகழ்கிறது. உணர்வுரீதியாக பெரும் பாதிப்பை நிகழ்த்த தவறுகிறது. எனினும் இந்த உணர்வு விலக்கம்கூட இதழியல் நாவல்களின் ஒரு கூறுமுறைதான். சரவணகார்த்திகேயன் இக்கருவை மிகுந்த பொறுப்புடன், விழிப்புடன் கையாள முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆனால் ஒரு விலையோடு- அது நாவலின் கலைத்தன்மையை மட்டுப்படுத்துகிறது. மநு- காந்திக்கு இடையிலான உறவை காமத்திலிருந்து, எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியாக, தத்துவச் சிக்கலாக வளர்த்தெடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எனக்குள் இருக்கும் காந்தியர் அடைந்த நிறைவை புனைவு வாசகன் அடையவில்லை என்பதே உண்மை.

இத்தகைய ஒரு கருவை எழுத்தில் வார்க்கும் திறன் மற்றும் துணிவும், ஒரு களத்திற்காக வாசித்து உழைப்பை அளிக்கும் தீவிரமும் சரவணகார்த்திகேயனிடம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களோடு அவருடைய ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் ஒரு முக்கியமான முயற்சியாக அடையாளம் பெறுகிறது. வருங்காலங்களில் மேலும் பல சுவாரசியமான புனைவுக் களங்களில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.