Author: பதாகை

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி..

அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது.

எனது பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இந்தக் காலப்பகுதியில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்க வாய்ப்பு கிடைத்தது. ஓரளவுக்குச் சிங்களம் பேசவும் பழகிக்கொண்டேன். தற்பொழுது ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் கற்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆதர்ச/ தாக்கம் செலுத்திய தமிழ்/ உலக எழுத்தாளர்கள்?

அனோஜன்: முகமாலையில் போர் ஆரம்பித்தவுடன் வடக்கும் தெற்கும் துண்டிக்கப்பட்டது. பின் தொடர்ச்சியான மின்வெட்டு ஊரடங்குச் சட்டத்தால் யாழ்ப்பாணம் இருளிலும் மௌனத்திலும் வீழ்ந்திருந்தது. வெறுமை பீடித்திருந்த அக்காலத்தில் கிடைத்த நேரத்தில் வாசிப்பை இன்னும் கூட்டினேன். ஊரடங்குச் சட்டம் பகலில் நீக்கப்பட்டபின் எதேச்சையாக நூலகத்தில் ஜெயமோகனின் புத்தகங்களைக் கண்டு வாசித்தேன். எனக்குள்ளிருந்த நிறைய அகப்பிரச்சினைகளை, inferiority complex போன்ற சிக்கல்களுக்கான விடைகளை அவர் எழுத்திலிருந்து கண்டுபிடித்து என்னை மீட்டேன். மிகப்பரவசம் தந்த இனிய நாட்கள் அவை. சுற்றிலும் வன்முறையும் படுகொலைகளும் நிகழ்ந்தபோதும் என் அக உலகம் கற்பனையால் பல எல்லைகளைத் தகர்த்துக்கொண்டிருந்தது. ஜெயமோகன் அதற்கு முக்கிய காரணம். பல எழுத்தாளர்களை அந்த நேரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாலும் ஜெயமோகன் எனக்குரிய அந்தரங்கத்திற்கு நெருக்கமான எழுத்தாளராக இருந்தார். எழுத்தாளர் என்பதைத் தாண்டியும் அவர் மேல் பற்றிருக்க அதுவுமொரு காரணம்.

ஆதர்சம் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டிருக்கலாம், எனக்கு ஆதர்சம் என்றால் ஜெயமோகன், அ. முத்துலிங்கம், சு. வேணுகோபால், ஷோபாசக்தி, எம். கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை உடனடியாகச் சொல்வேன். இவர்கள் என் மேல் நிறைய தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.

முதல் சிறுகதை எப்போது வெளியானது? சிறுகதையை வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தது ஏன்?

அனோஜன்: ஆரம்பத்தில் எழுதிப்பார்த்த சில கதைகளை இணைய இதழ்கள் பிரசுரித்து இருந்தாலும் என்னுடைய முதல் சிறுகதையாகக் கொள்வது ‘இதம்’ என்கிற கதையைத்தான். ‘ஆக்காட்டி’ என்கிற சிற்றிதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ‘இதம்’ சிறுகதையை அவ்விதழ் 2015 இல் பிரசுரமாக்கியது. தவிர நிறைய எழுத களம் அமைத்துத் தந்ததும் அவ்விதழ்தான்.

இதுதான் சிறுகதை வடிவம் என்று பொதுமைப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன், ஒவ்வொரு காலகட்டத்திலும் உடைத்தும் வார்த்தும் நகர்ந்தவாறே இருக்கின்றது. ஆனால், அதற்குள் இருக்கும் கூர்மை எனக்கு மிகப்பிடித்தது. அதனாலே நான் அதிகம் விரும்பும் வெளிப்பாட்டு வடிவமாகச் சிறுகதை இருக்கிறது.

தற்கால ஈழ இலக்கியத்தின் போக்கு என்ன? சவால் எவை?

அனோஜன்: அதிகம் போர் என்பதுதான் முன்னிறுத்தப்படுகிறது. பெரும்பாலான படைப்புகள் சூடான அரசியல் கருத்துகளோடு மட்டும் நின்று விடுகின்றன. இலக்கியம் அதற்குரிய இடம் அல்ல என்பதை இன்னும் பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை. அதைச் சுற்றி எழும் விவாதங்கள் அரசியலை முதன்மைப்படுத்திப் பேசி பரபரப்பை உண்டு செய்து ஓய்கின்றது. அரிதாகவே இலக்கியம் சார்ந்து பேசப்படுகிறது.

கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.

இங்கு போர் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதைத்தாண்டி நிறையவே வித்தியாசப்பட்ட பரிமாண வாழ்க்கை இங்கேயுண்டு. இலங்கையை ஓரளவுக்கு அதிக பயணங்கள் ஊடாக சுற்றிப்பார்த்தவன் என்ற முறையில் நான் காணும் கோணம் வேறொன்றாகவே இருக்கின்றது.

எண்பதுகளின் போரின் கதைகளை ஓரளவுக்கு ஷோபாசக்தி எழுதிவிட்டார், அதன் பின்னைய கதைகளை சயந்தன், குணா கவியழகன் போன்றோர் எழுதியுள்ளார்கள். எனினும் ஒருசேரப் பார்க்கும்போது 2009-க்குப்பின் ஏற்பட்ட மாற்றமும் அது தந்த சூழலில் எழுந்த மற்றுமொரு வாழ்க்கையையும் யாரும் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை.

தமிழர்களின் வாழ்க்கை தனியே வடக்கிலும் கிழக்கிலுமோ, மலையகத்திலுமோ இல்லை. சிதறுண்டு வாழும் தமிழர்களின் வாழ்க்கை இலங்கையின் பல பாகங்கள் வரை பரவியிருக்கிறது. அவர்களுடன் பேசிப்பார்க்க அவர்களின் தேடலும் மனநிலையும் முற்றிலும் வேறோர் தளத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ள இயலுகிறது. இங்கேயிருக்கும் அரசியல் கொந்தளிப்புகள் அற்ற, நாம் அறியாத மற்றோர் உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் படைப்புகளில் இன்னும் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். அவர்களை அணுகிச் செல்லும் எழுத்தாளர்கள் இல்லை என்பது சவாலானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்.

சீரான விமர்சனச் சூழல் இங்கில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. எழுதப்படும் அழகியல் விமர்சனங்களை அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகும் மனநிலை பெரும்பாலும் இன்னும் விட்டுப் போகவில்லை. சில எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுக்குக் கிடைக்கும் கறாரான அழகியல் விமர்சன மதிப்பீட்டை, விமர்சனம் எழுதியவரை புலி எதிர்ப்பு / புலி ஆதரவு என்ற சட்டகத்தில் வைத்து எதிர்வினை ஆற்றி தம் மீதான நிராகரிப்புக்குச் செயற்கையான அனுதாபம் கோருவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது. சமீப காலமாக இந்தப் போக்கு அதிகமாகியுள்ளதாகவும் தோன்றுகின்றது. முக்கியமாக ‘புலி எதிர்ப்பு’ எனும் சாயத்தை விமர்சகர்களிடமும், படைப்பாளிகளிடமும் பூசி தம்மைத் தற்காத்துக் கொள்ளும் போலி மனோபாவம் ஒருபக்கம் வலுப் பெறுகிறதோ என்று அச்சம் கொள்கிறேன். படைப்பில் இருக்கும் அரசியலும் விவாதிக்கப்பட வேண்டியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கு படைப்பிலக்கியத்திற்கு உகந்ததல்ல. அழகியல் என்பது இலக்கியத்தின் முதல் இடம் என்பதே என் புரிதலாக இருக்கிறது.

இலங்கை தமிழ் சூழலில் தோற்றம் பெற்ற மிக முக்கிய படைப்பாளிகளின் படைப்புலகம் சார்ந்த விரிவான கட்டுரைகள் இன்னும் இங்கிருந்து எழுதப்படவில்லை. வெறுமே ஒற்றை வரி ஆதரிப்பும் நிராகரிப்புமே அதிகமாகவுள்ளது. எதிர்காலத்தில் விரிவாகப் பல முன்னோடிகளின் படைப்புலகம் சார்ந்து கட்டுரைகள் எழுதி புத்தகமாக்கும் எண்ணமுண்டு.

காமத்தை எழுதுவதன் சவால் / தேவை என்ன? கிளர்ச்சியுடன் நின்றுவிடாமல் காமம் அக விசாரணையாக, மனித இயல்புகளின் மீதான விசாரணையாக திகழ வேண்டும் என்று நம்புகிறேன்.

அனோஜன்: ஏன் காமத்தை எழுதவேண்டும் என்று கேட்டால், நமது வாழ்க்கையை எழுத காமத்தை எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். நீங்கள் குறிப்பிடும் கருத்துகளுடன் நூறுவீதம் உடன்படுவேன். காமத்தை எழுதுதல் என்பது காமத்துக்கு பின்பே இருக்கும் வாழ்க்கையை எழுதுதல் என்பதுதான். சித்தரிப்புகளில் வெறுமே அதிர்ச்சியூட்டும் விவரணைகளுடன் நின்று விடுதல் ஒருபோதும் காமத்தை எழுதுதல் என்பதாகாது. அதன் தருணங்களுக்கு பின்பேயுள்ள உணர்வுகளைத் தொட்டு எடுக்க வேண்டும், இங்கே வாசகர் வாசிப்புக்கு வேலை கொடுக்கும்போது கொஞ்சம் பிசகினாலே வெறும் சித்தரிப்புகளாக எஞ்சிவிடும். அந்த இடங்களே சவாலானவை.

போர் உங்கள் கதைகளில் அதிகம் விவரிக்கப்படாமல் பின்னணியில் சித்தரிப்பதற்கு ஏதும் காரணங்கள் உண்டா?

அனோஜன்: போருக்குள் பால்யத்தில் இருந்திருந்தாலும் எங்களுக்குள் குதூகலமான வாழ்க்கையும் ஒருபக்கம் இருந்தது. இறப்புகள் மத்தியிலும் கிரிக்கெட்டும், கால்பந்தும் எல்லோரையும் போல நண்பர்களுடன் இணைந்து விளையாடியும் இருக்கிறோம். வெற்றுச் சன்னங்களை விதம்விதமாக போட்டி போட்டு சேர்த்திருக்கிறோம். காதல், காமம், பிரிவு, உறவுச் சிக்கல் எல்லாம் சராசரி வாழ்க்கையில் இருக்கும் இயல்புடன் நம்மிடமும் இருந்தன. போர் மேலதிகமான ஒன்றுதான். புறநிலையான ஒன்றாகவே போரின் வெளிப்படை அழிவுகளை பார்க்கிறேன். போரின் உக்கிரம் பிரம்மாண்டமானதாக இருப்பினும் அகவயச் சிதைவே எனக்கு இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது. போர் தந்த அகவய உணர்வை என்னைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் தேடுவதிலே எனக்கு அதிக நாட்டம். உள்மனதைத் தேட எனக்குக் கிடைக்கும் திறப்புகள் அவ்வாறே எழுத வைக்கின்றன.

நாவல் எழுதும் உத்தேசம் உண்டா? களம் என்ன?

அனோஜன்: உண்டு. ஆரம்பித்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகமயமாதல், பொருளாதாரச் சூழல் விதைத்திருக்கும் வாழ்க்கை புறவயமான இயங்குதலை இலகுவாக்கி இருந்தாலும் அகப்பிரச்சினைகள் இன்னும் அதே இறுக்கத்துடன்தான் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அந்நியமாதல். சமூக வலைத்தளங்கள் கூட்டாக இருப்பது போன்ற மாயையைத் தந்தாலும் இன்னும் இன்னும் தங்களுக்குள் அந்நியமாகிக் கொண்டே இருக்கிறார்கள். உறவுச்சிக்கல் அந்நியமாதலில் அதிகம் சிக்கி அடிவாங்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஒரு உறவுச்சிக்கல் சார்ந்த நாவலுக்கான கருவே உதித்தது. பார்க்கலாம் எவ்வாறு வரும் என்று. எழுத எழுதவே என்ன எழுதுகிறேன் என்று எனக்கே தெளிவாகும்.

நவீன தொழில்நுட்பம் படைப்பூக்கத்தை சிதைக்கிறது, சமூக ஊடகங்கள் கவனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே. .அதைப் பற்றி?

அனோஜன்: இவற்றைப் பொதுமைப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். அவர்கள் அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறையிலே தங்கியுள்ளது. சமூக வலைத்தளம் நம்மைப் புனையும் இடம். நிஜ வாழ்க்கையில் கிடைக்காத வாழ்க்கையை அதில் செய்து பார்க்கலாம்/ காட்டிக் கொள்ளலாம். அதனூடாக ஒரு அகச் சமநிலையை உருவாக்கி நமக்குள் திருப்தியடையலாம். அங்கேயே மூழ்கி வெற்று வம்புகளுக்குள் சுழன்றவாறிருந்தால் கவனச்சிதைவை ஏற்படுத்தும்தான். அதன் எல்லையைத் தெரிந்து வைத்திருந்தால் நம் இடத்தைத் தொலையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பத்தை படைப்பூக்கத்தை அதிகரிக்க அதிகம் பயன்படுத்தலாம். இன்றுள்ள தொடர்பாடல்களை துரித கதியில் சாத்தியப்படுத்தித் தந்தது தொழில்நுட்பம்தான். மின்மடலில் உடனுக்குடன் விரிவாகப் பேசிக்கொள்ள முடிகிறது. நண்பர்களுடன் வாட்ஸப் குழுவை ஏற்படுத்தி இலக்கியம் பேச முடிகிறது. இதெல்லாம் முன்னைய தலைமுறைக்கு சாத்தியம் இல்லாதவொன்று. அவர்கள் நண்பர்களைத் திரட்டவும் பேச இடமும் தேடி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார்கள். கடிதங்கள் எழுதி நாட்கணக்காக பதிலுக்கு காத்திருந்திருக்கிறார்கள். நமக்கு தொழில்நுட்பம் அதை மிக எளிமைப்படுத்தியுள்ளது. கிண்டிலில் இன்று பல புத்தகங்களை உடனே வாங்கி வாசிக்க இயலுகிறது. சில காலங்கள் முதல் தமிழ்நாட்டில் இருந்து புத்தகங்கள் தருவிக்க அதிகளவான நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று பெரும் உடைவை தொழில்நுட்பம் செய்து தந்திருக்கின்றது.

காட்சி ஊடகங்கள் இன்றைய புனைவெழுத்தின் மீது என்னவிதமான தாக்கம் செலுத்துகின்றன?

அனோஜன்: கலைகள் தொடர் நெருப்பு போல ஒன்றிலிருந்து ஒன்று பற்றி எரிந்து செல்லும். காட்சி ஊடகங்களில் முதன்மையாக இருக்கும் திரைப்படங்கள் புனைவெழுத்தை அதிகம் பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. காட்சி மொழி அகத்துடன் மேம்போக்காகவே உரையாடும் என்பதே என் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருக்கும் சிக்கல் என்பது நமது சொந்த அவதானிப்புகளை அழிக்கலாம். புனைவில் சம்பவங்களை கோர்க்கும்போது ஆசிரியனின் கோணம் அங்கேயிருக்கும், காட்சியூடகம் தரும் தாக்கம் அக்கோணத்தை அழித்துவிடலாம். இதனால் நுட்பமான தழுவல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனை அனைவருக்கும் உரிய ஒன்றாகப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் சிலரிடம் இந்தச் சிக்கலை அவதானிக்க முடிகிறது.

அதே நேரம் காட்சி ஊடகங்கள் காட்டும் காட்சிகள் பல்வேறு கற்பனைகளைத் திறந்தும் விடுகின்றன. அதிலிருந்து பற்றி மேலேறிச் செல்வதே புனைவு எழுத்தாளரின் தனித்துவம்.

எழுதுவது சார்ந்து ஏதும் தனிப்பட்ட வழக்கங்கள் உண்டா? (இடம்)

அனோஜன்: இல்லை. எச்சூழலிலும் எழுதவேண்டும் என்பதையே விரும்புகிறேன். அதனால் அவ்வாறானவொன்றுக்குள் சிக்க விரும்பவில்லை. அதில் கவனமாகவே இருக்கிறேன்.

கதைகளை திருத்துவது உண்டா?

அனோஜன்: நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட சிலரிடம் அனுப்பி பிரசுரத்துக்கு முதல் அபிப்பிராயம் கேட்பதும் உண்டு. உடன்படக்கூடிய இடங்களைத் திருத்துவதுண்டு.

ஒரே அமர்வில் கதை எழுதி முடித்து விடுவீர்களா?

அனோஜன்: பொதுவாக இரண்டு அமர்வில் எழுதி முடிப்பதுண்டு. சில நேரங்களில் அதிகம் எடுத்துக் கொள்வதும் உண்டு. மூன்றாம் அமர்வில் பெரும்பாலானவற்றை திருந்தி செப்பனிட்டு விடுவேன்.

‘எதற்காக எழுதுகிறேன்’? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அனோஜன்: ‘கவிஞர் இசை’ ஒரு கட்டுரையில் இவ்வாறு சொல்வார், “எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல் இருக்கிறது. அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்குச் சொல்ல முனைகிறான்.” இசையின் இந்த வரிகள் எனக்கு மிக நெருக்கமானவை. எனக்குள் சொல்ல ஒன்றுள்ளது. என் கோணத்தில் நான் கண்ட ஒன்றை, அதை எழுதிப்பார்க்கும்போது அதுவே எனக்கு ஒரு விடையைத் தருகிறது. அது கொஞ்சம் புதிராகவும் இருப்பதோடு என் அகங்காரத்தையும் உசுப்பிவிடுகிறது. அதனாலே மேலும் எழுதத் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டு தமிழ் இலக்கிய சூழல், ஈழத் தமிழ் இலக்கிய சூழல் சமகால ஒப்பீடு?

அனோஜன்: ஈழ இலக்கியம் முற்போக்கு, லட்சியவாதம், தேசியவாதம் என்பதற்கூடாக வளர்ந்தது. கலைகளைப் பிரச்சாரத்துக்கு உபயோகித்தமையே அதிகம். இப்போதுதான் அதில் மாற்றம் காண முனைகிறது. படைப்புலகம் சார்ந்து, இலக்கியத்தின் அடிப்படையான நுண்மையான நுண்ணுணர்வுகள் மீதான விவாதங்கள் எல்லாம் இங்கு எழும்பவில்லை. இப்போது அதற்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டு இலக்கிய சூழல் நல்ல இடத்திலே உள்ளது என்பதே என் கணிப்பு. இலக்கியம் என்ற போர்வையில் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்படும் வெகுஜன எழுத்துகள் கடும் அயர்ச்சியைத் தருகின்றன. புதிதாக வாசிப்பவர்கள் முதலில் அங்கு சென்று வீழ்ந்தாலும் கணிசமானவர்கள் போகப்போக விலகி தீவிரமான இலக்கிய பக்கம் வருகிறார்கள்.

‘சதைகள்’ ‘பச்சை நரம்பு’ தொகுதிக்கு என்ன விதமான வரவேற்பு/ விமர்சனங்கள் கிட்டின?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பு இலங்கையிலே அச்சாகி வெளியாகியது. விநியோகம் சிக்கலாகவே இருந்தது. இலங்கையிலுள்ள சில மூத்த எழுத்தாளர்கள் தனிப்பட்ட சந்திப்பில் நிறை குறைகளை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்கள். ‘ஆக்காட்டி’ இதழ் மட்டும் அச்சில் ஒரு விமர்சனக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. ‘நோயல் நடேசன்’ தன் வலைத்தளத்தில் ‘சதைகள்’ தொகுப்பை குறிப்பிடத்தக்க தொகுப்பாகச் சுட்டி எழுதியிருந்தார். பெரிய வரவேற்பு இருக்கவில்லதான். ஒரு அறிமுக எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு இருந்தது. ‘அசங்கா’, ‘ஜீட்’ என்கிற கதைகளை அதிகளவானோர் பாராட்டி இருந்தார்கள். அதே நேரம் பெண்களின் மீதான உவமைகள், வர்ணனைகள் அவர்களை பண்டப் பொருட்களாக சித்தரிக்கின்றன என்று பெண்ணிய தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்திருந்தது.

‘பச்சை நரம்பு’ இப்போதுதான் வெளியாகியுள்ளது. விநியோகத்தில் தடங்கல் இல்லை. அதனால் என்னை ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் புத்தகத்தை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. விமர்சனங்கள் இனிமேல்தான் வெளிவரத் தொடங்கும் என்று நினைக்கிறேன். ‘போகன் சங்கர்’ பாராட்டி இருந்தார், மேலும் சகவயது சமகால எழுத்தாளர்கள் சமூக வலைத்தளத்தில் நிறைகுறைகளைச் சுட்டி எழுதியிருந்தது மகிழ்வளிக்கின்றது.

‘சதைகள்’ தொகுதியில் இருந்து ‘பச்சை நரம்பு’க்கு என்னவிதமான பரிணாமம் நேர்ந்திருக்கிறது?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பிலுள்ள கதைகளைத் திரும்பிப் பார்க்க முதிராத வயதில் சில கதைகளை எழுதியது போல் தோன்றவும் செய்கிறது. எனக்கான புனைவு மொழியை என் முன்னோடிகளில் இருந்தே பெற்றேன். ‘சதைகள்’ தொகுப்பில் அவர்களின் தாக்கம் நேரடியாக அதிகமாக இருந்ததாக தோன்றுகின்றது. தவிர, எனக்கான தனித்துவ பார்வையிலும் முன்னோடிகளின் தாக்கம் இருந்ததை உணர்ந்திருக்கிறேன். ‘பச்சை நரம்பில்’ முன்னோடிகளிடம் இருந்து மேவி எனக்கான தனித்துவ மொழியையும், என் தனித்துவ பார்வையையும் கண்டடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.

கடவுளின் சாயல் – ப.மதியழகன்

ப. மதியழகன்

1

என்னை விட்டு அகலுங்கள்
மரணதேவதை என்னை வந்தடையட்டும்
இந்தப் பாவிகளை விட்டு தூரப் பறக்க மரணம் எனக்குச் சிறகுகள் தரும்
வாலிபத்தில் இலை போல இலகுவாக இருந்த உடம்பு
வயோதிகத்தில் இரும்பென கனக்கிறது
கடந்த காலத்தில் நான் செய்த பாவகாரியங்களை நினைவுகள்
ஞாபகப்படுத்தி என்னைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்கின்றன
மரணம் என்னிடமிருந்து பிரித்துக் கொண்டவர்களை எண்ணி
துயரத்தில் ஆழ்கிறது என்மனம்
பசி வேளையில் எனக்கு உணவளித்தவர்களை
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்
எனக்குள் காதலை விதைத்தவளை நான் இறப்பதற்கு முன்
இன்னொருமுறை பார்க்க வேண்டும்
எந்த எதிர்பார்ப்புமின்றி என்னை
வளர்த்தெடுத்த என் அன்னையின்
பாதங்களைக் கண்ணீரால் கழுவுகிறேன்
வயிறு நிறைந்தால் போதுமென்றிருந்த என்னை எழுப்பி எனக்குள்
அறிவுத்தாகத்தை ஏற்படுத்திய குருமார்களை
என்னால் மறக்க முடியுமா?
எனது காதலை அவள் ஏற்க மறுத்தாலும்
அவள் ஏற்றி வைத்த நெருப்புதான்
இன்றும் என் நெஞ்சில் கனலாக
எரிந்து கொண்டிருக்கிறது
எனது கவிதை நதிக்கு அணை போட்டுவிட்டது மரணம்
எனது கடைசி கவிதையை
காற்றில் கைவிரல்களால் எழுதிச் செல்கிறேன்
விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்களுக்குத் தான்
அந்தக் கவிதையின் பொருள் விளங்கும்.

2

நான் எப்படி பைத்தியக்காரன் ஆனேன்
இந்த உலகம் முகமூடி அணியாதவர்களை
என்ன பெயர் சொல்லி அழைக்கும்
பந்தயத்திலிருந்து விலகி வேடிக்கைப் பார்ப்பவனுக்கு என்ன பெயர்
நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யத் துணிந்தவர்கள்
மத்தியில் உண்மையின் பாதையை
தேர்ந்தெடுத்தவனுக்கு வேறென்ன பெயர்
தோற்றத்தில் மயங்கும் கன்னிகைகள்
என் அவலட்சண உருவத்தைப் பார்த்து
என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள்
பணத்தின் மூலம் எதையும் சாதித்துக் கொள்ளும் உலகில்
நான் இன்னும் பிச்சைக்காரன் தானே
ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஆதாமின்
சந்ததிகள் தானே நாம்
மனிதன் தன்னை கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்க
நான் மட்டும் என்னை ஏன் பாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்
என் எதிரிகள் என்னிடத்தில் மட்டும் எப்படி தங்களை
கடவுளாக நிரூபித்துக் கொள்ள முடிகிறது
எல்லா மனிதர்களுக்கும்
நான் ஏன் அடிமையாக இருப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறேன்
கேளிக்கை விடுதியாகிவிட்ட இந்தப்பூமியில்
கடவுளைத் தேடிக் கொண்டிருப்பது என் தவறா?
மனம் தூய்மையாக இருந்தால் போதும் இறைவன் வசிக்க
வான்முட்டும் ஆலயங்கள் எதற்கு என்று கேட்டது தவறா?
மனசாட்சியின் குரலுக்கு யாரும் மதிப்பளிப்பதில்லையே ஏன்
எனக்கு அளிக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளில்
நான் ஏன் மரணத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்று
என்னிடம் நீங்கள் கேட்டிருக்கலாமே
சமீபகாலமாக என் வீட்டைச் சுற்றி இருப்பது கடவுளின் காலடியா?
பொய்யான உலகத்தில் பொம்மைகளோடு விளையாடிக்
கொண்டிருப்பவர்கள் தானே நாமெல்லோரும்
இந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு கடவுள் தான் காவலாளியா?
இந்தப் பைத்தியக்காரனிடம் கடவுள் ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்?
கடவுள் பரிசளித்த இந்த உடலை பாவ காரியங்களுக்கு
பயன்படுத்திக் கொள்வது தவறல்லவா?
பைத்தியக்காரர்கள் வரிசையில் கடவுளுக்கு அடுத்தபடி
என் ஒருவனின் பெயர்தானே இடம்பெற்றிருக்கிறது
இந்த உலகம் விழித்துக் கொண்டே
நாம் காணும் கனவு என்று இறைவன் உங்களுக்கும்
புரியவைப்பான் அல்லவா?
என்னுடைய மரணக் கவிதைகளுக்கெல்லாம்
கடவுள்தானே முற்றுப்புள்ளி வைக்கின்றான்
கடவுள் இந்த உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வரை
என்னை பைத்தியக்காரனாகத்தானே அலைய வைப்பான்
இந்த உலகின் அதிபதிக்கு அடிமை சேவகம் செய்வதற்கு
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தானே
என்னை புறக்கணித்துவிடலாம் எனக்குப் பிறகு வருபவனுக்கு
நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

3

நீ எனக்குத் தந்த வாய்ப்புகளையெல்லாம்
நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்னை விட்டுவிடு வாழ்க்கையின் அநித்யத்தை
நான் உணர்ந்து கொள்ளவில்லை
பெண்களின் வதனங்களிலேயே மயங்கிக் கிடந்துவிட்டேன்
பிறமனிதர்கள் வியக்கும் வண்ணம்
வாழ வேண்டுமென்பதே என் குறிக்கோளாக இருந்தது
விதி வகுத்தவன் என் முன்பு வந்து நிற்பான் என்று
கனவில் கூட எண்ணியதில்லை
இதுநாள் வரை தவறு செய்கின்றோமே என்ற
சின்ன உறுத்தல் கூட என்னிடம் இருந்ததில்லை
இரைக்கு ஆசைப்பட்டு கடவுள் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டேன்
பலமுறை என் எதிரில் வெளிப்பட்டும் கடவுளை
என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை
நியாயந் தீர்க்க கடவுளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டென்று
இப்போது தான் எனக்குப் புரிந்தது
பொக்கிஷமாக நான் நினைத்ததெல்லாம் உப்புக்குப் பெறாதவை
என்ற உண்மை இப்போதுதான் எனக்கு விளங்கியது
வாழ்க்கைப் புத்தகத்தில் என் பக்கத்தை யாரும் வாசிக்க வேண்டாம்
உண்மை கசப்பாகத்தான் இருக்குமென்று இறைவன்தான்
எனக்கு உணர வைத்தான்
நான் முக்கியத்துவமளித்து செய்ததெல்லாம் என்னை
வருத்தப்படச் செய்துவிட்டன
புலன்கள் என்னை இழுத்துச் சென்று நாற்சந்தியில் நிறுத்திவிட்டன
என்னை இழுத்துச் செல்வதற்கு மரண அலைகள் வந்துவிட்டன
வாழ்க்கையில் ஒவ்வொருநாளும்
பொக்கிஷமென்று இப்போதுதான் நான் உணருகிறேன்
ஒவ்வொரு தோல்வியிருந்தும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள தவறிவிட்டேன்
நெறிதவறி வாழ்ந்த எனக்கு மரணத்திற்கு பிறகான வாழ்வு நிம்மதி தராது
என் ஆத்மாவின் ராகங்களை நிச்சயம் அவள் கேட்டு கண்ணீர் வடிப்பாள்
வெளியேறும் வழி தெரியாதவரை நாமெல்லோரும் அடிமைகள்தானே
அவளை முத்தமிட்டுச் செல்லும்
அலைகளில் என் கண்ணீரும் கலந்திருக்கும்
விதியின் கைகள் மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது
இறந்த பின்னும் அவள் சிரிப்பொலி
என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்
இமை திறக்க முடியாத ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் எனக்கு
கடவுளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது
பாவிகளின் கூடாரத்திலிருந்து எனக்கு கிடைத்த விடுதலையை
பின்னொரு நாளில் நீங்களெல்லோரும்
விழாவாக கொண்டாடுவீர்கள்!

4

மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படாதா
தேவ வசனம் எனது காதுகளில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
உண்மையின் பாதையில் செல்லும் துணிச்சல்
ஒரே ஒருவருக்குத்தான் இருந்தது
வாழ்க்கையின் வேர்களாக இருக்கும்
அவரை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா
நீ விதைத்த விதை முளைவிட எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்
மலர்ச்சியான உன் திருமுகத்தைக் காண
எனக்குத்தான் கொடுப்பினை இல்லை
உன்னைக் கருவில் சுமந்தவளை
எண்ணிக் கண்ணீர் வடித்திருப்பாய் அல்லவா
ஒரே தேவ ஆட்டுக் குட்டியையும்
தொலைத்துவிட்டதல்லவா இந்த உலகம்
ஏதேனும் ஒரு சமயத்தில்
எதேச்சையாக எதிர்ப்பட நேர்ந்தால்
என்னைப் பார்த்து புன்னகை புரிவாயா
உன்னைப் பின்தொடர்ந்தவர்களெல்லாம்
என்னைப் போன்ற விளிம்புநிலை மனிதர்களதானே
எனக்கு வேறெதுவும் வேண்டாம்
உனது நிழலில் இளைப்பாறுவதே எனக்கு ஆறுதலளிக்கும்
என் மரணத்திற்குப் பிறகு என்னவர்கள் என்னைப் புறக்கணித்தாலும்
உனது கூடாரத்தில் நீ எனக்கு அடைக்கலம் தரவேண்டும்

5

உனது இரத்தக்கறைப் படிந்த
சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
உனது உதிரத்தால் புனிதமான மண்ணல்லவா இது
நீ அன்று கேட்டதைப் போலவே
நான் இன்று உன்னைப் பார்த்துக் கேட்கிறேன்
என்னை ஏன் கைவிட்டீர்
உனது தாயின் துயரம் என்னவென்று
ஒரு குழந்தைக்குத் தந்தையான
என்னால்தான் உணர முடியும்
ஆணியை அடிக்கும்போது உனக்கு வலித்திருக்குமே எப்படி
பொறுத்துக் கொண்டிருப்பாய்
உன்மீது காறி உமிழ்ந்தவர்களிடம்
சொல்லி இருக்கலாமே நீதான் கடவுளென்று
உன் உதிரம் பட்ட மண்ணை என் கல்லறையில் தூவுவார்களா
என் மரணத்திற்குப் பிறகு என் கண்களை மூடாதீர்கள்
அவன் வாழ்ந்த உலகத்தை நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்
உனது மரணத்தின் துயரிலிருந்து
இந்த உலகம் இன்னும் மீளவில்லை
உயிர் பிரியும் தருணத்தில் உனது கண்கள் யாரைத் தேடியிருக்கும்
முள்முடி தரித்த உன் ஒருவனால்தானே
இந்த உலகத்தில் உயிர்த்தெழ முடிந்தது
துயரச்சிலுவையை நான் ஒருவன் மட்டுமே இவ்வுலகில்
சுமந்து கொண்டிருக்கிறேனே ஏன்
உன் குரலுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்
நீ என்னை எப்போது அழைப்பாய்?

பெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?

அந்த மரக்கூண்டை இரு கைகளாலும் பற்றியபடி என்னை தாங்கிக் கொண்டேன். உள்ளங்கையின் ஈரத்தில் மரம் வழுக்கியது. சிமிண்ட் தரை குண்டும்குழியுமாக இருந்தது. அறைக்கு வெளியேயும் உள்ளேயும் கால்கள்.. கால்கள்.. சிலவை சப்பாத்துகளும்  சிலவை செருப்பும் அணிந்திருந்தன. எல்லாமே என்னை நோக்கி நெட்டித் தள்ளியபடி.. மைக்குகளை போல.. ஆர்வம் விழுங்கியவைகளாக.

”உங்க பேரை சொல்லுங்க…” கேள்விகளால் நிறைந்த உலகம்.

கருப்பு அங்கி அவரை வழக்கறிஞர் என்று மூளையில் ஏற்றியது.

”சித்ரலேகா..”

அம்மா தலைமையாசிரியை. மாணவிகளை அழைப்பது போல என்னையும் முழு பெயரிட்டுதான் அழைப்பாள். அப்பாவுக்கு நான் எப்போதுமே பாப்பாதான். தவிர இருவருக்கும் நான் மட்டுமே பாப்பா.

”வயசு..”

இருபத்தியோரு வயதிற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தொடக்கமும் அதே வயதில்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே இரண்டு மாத காலங்களிருந்தது. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாளி்ல் நான் தினேஷ் வீட்டில் கழித்த நான்கு மணி நேரத்தை மட்டுமேயும் கணக்காக கொள்ளலாம்.

”அப்பா பெயர்..?”

அதைதான் கெடுத்திருந்தேன் என்று அம்மா தலையலடித்துக் கொண்டு கதறினாள். தினேஷை என் நண்பன் என்ற அளவில் அவளுக்கும் தெரியும். தினேஷ் அவளின் பழைய மாணவனும் கூட.

”தினேஷ் என்பவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?” வழக்கறிஞருக்கு நடுத்தர வயதிருக்கும். முகம் கடினமாக தெரிந்தது.

”கேள்வியை நிதானமாக்குங்கள்..” என்றார் நீதிபதி. பெரிய மேசைக்கு பின்புறம் அமர்ந்திருந்தார். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட தரை அவருடையது.

“லவ்வாடீ பண்றே லவ்வு..” என் விஷயத்தை அம்மா கண்டுப்பிடித்திருந்தாள்.

ஆனால் அப்போது திருமணமுமாகியிருந்தது. முன் திட்டமெல்லாம் இல்லை என்றாலும் சமீபத்தில் நடந்த இதே போன்றதொரு சம்பவம் எங்களை பயமுறுத்த, இரண்டு மாதங்களுக்கு முன் கோயிலிலும் அதை தொடர்ந்து திருமணப்பதிவும் செய்திருந்தோம்.

காதல் என்ற வார்த்தைக்கே அப்பா ஓங்கியடித்தார். அதுவும் தினேஷுடன் என்ற போது, என்னை சுவரோடு ஓடுக்கி கழுத்தைப் பிடித்து உயரத் துாக்கினார். கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு அம்மா ஓலமிட்டு அழுதாள். சித்தப்பா, பெரியப்பா, மாமா, பெரியப்பாவின் மகன்கள் என எல்லோருடைய ஆதரவும் அவர்களுக்கிருந்தது. தனியாளாய் நான் வாய் கிழிப்பட்டு நின்றேன்.

”இனிம அவன பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..”

இரத்தம் கறையாகப் படிந்து வாய் முழுக்க இரத்த வாடை வீசியது. நான் பெரியப்பாவின் மகனை.. அண்ணனை பார்த்து பதில் சொன்னேன். என் வயதையொத்த அவனால் என்னை புரிந்துக் கொள்ள முடியும்.

அவனை பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. எனக்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஆனால் முதன்முதலாக நான் அவனிடம் என்னை வெளிப்படுத்தியபோது ”என்னை உண்மையிலுமே விரும்புனீங்கன்னா.. எனக்காக எதும் செய்ய நினைச்சீங்கன்னா இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க..” என்றான். நான் அவனுக்காக எதுவுமே செய்ததில்லை.

”நான் அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..”

”அப்டீன்னா அவர் உங்க கணவர்.. அப்படிதானே..” என்றார் வழக்கறிஞர்.

ஆனால் வீடு அவனை ………..ப்பய என்றது. ”உள்ளத சொல்லுடீ.. என்னடீ ஆச்சு..?” அம்மாவின் பயத்திலிருந்த மற்றொரு பரிமாணத்தை அப்போது நான் உணரவில்லை.

அன்று இரவு முழுக்க எல்லோரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.. தினேஷின் தொடர் குறுஞ்செய்திகளைப் போல. பொதுவாக இரவு நேரத்தில் எங்களுக்குள் செய்தி பரிமாற்றம் இருக்காது. தினேஷ் ஏதோ வித்யாசமாக உணர்ந்திருக்க வேண்டும்.

”அந்த மசிறுதான் புளீக்.. புளீக்குன்னு மெசேஜ் அனுப்புது..” அப்பா கோபமாக என் அலைபேசியை எடுக்க, அதை விட கோபமாக அதை பிடுங்கி ஏதோ பதிலனுப்பினான் அண்ணன். ”ஓடுகாலீ.. பொட்டப்புள்ளய தலைல துாக்கி வச்சுட்டு ஆடுனீங்கள்ள.. இப்ப அனுவீங்க நெல்லா..”

”கொஞ்சம் பேசாம இருங்கண்ணீ.. அண்ணனே முடியாதவரு.. ரொம்ப டென்ஷன்ல வேற இருக்காரு.. எதாவது ஆயிட போவுது..”

நான் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தேன். அய்யய்யோ.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா.. கடவுளே.. அப்பா என்று கதறினேன்.

”சொல்லுடீ.. சொல்லுடீ.. இனிம பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..” வேகமாக என்னருகே வந்தார் அப்பா. கூடவே பெரியப்பாவும். ”தம்பி பொறுமடா.. பொறும..” என்றார்.

”செரி.. பொறுமையாவே சொல்றேன். இங்காரு பாப்பா.. எல்லாத்தையும் வுட்டுட்டு மொதல்ல படி.. மத்ததெல்லாம் அப்றம் பாத்துக்குவோம்..”

எனக்கு குழப்பமாக இருந்தது. ‘அப்றம்னா.. படிச்சு முடிச்சவொடனே பெரிய அளவில ரிசப்ஷன் வைச்சு ஊரைக் கூட்டி சொல்வாங்களோ..’ கோபத்தில் பேசி விடுவதும் பிறகு அணைத்துக் கொள்வதும் அப்பாவின் குணம்.

”மயிலே மயிலேன்ல்லாம் புருசாரம் புடிக்க முடியாது.. படிப்ப நிறுத்திட்டு சூட்டோட சூடா எவனாயாது பாத்து முடிச்சிட்டாதான் தேவல.. பாவீ.. பாவீ.. ஒத்தையாச்சேன்னு உருவி உருவி வளத்ததுக்கு நல்லா துாக்கி நெஞ்சுல அடிச்சிட்டா.. இனிமகாட்டி வெளில போற வேல வச்சுக்கீட்டீன்னா வௌக்கமாறு பிஞ்சுடும்..” கோபத்தில் உடல் நடுங்க கத்தினாள் அம்மா.

விளக்குமாற்றின் வீசலில் கண்ணாடியில் வீறல் ஏற்பட்டது.

”ஆமாங்க.. தினேஷ் என்னோட கணவன்தான்..” நீதிபதியைப் பார்த்து சொன்னேன். அவரது பார்வையில் கனிவிருந்தது போல தோன்றியது.

”உங்களுக்கு திருமணம் நடந்தது எப்போது..?”

அன்றிலிருந்து சரியாக நான்கு மாதங்களாகி இருந்தது. திருமணத்தன்று எல்லோரும் எப்படி உணர்வார்களோ தெரியவில்லை.. நாங்கள் இருவருமே பயந்திருந்தோம். கோவில் வாசலில் எழும் சிறு சரசரப்புக்கு கூட நடுங்கி ஒடுங்கினோம். இத்தனைக்கும் அந்த மதிய நேரத்தில் அங்கு யாருமேயில்லை.. அர்ச்சகர் உட்பட. சாமி கூட பூட்டியக் கதவுக்குள்தான் இருந்தது. கோவில் வாசலுக்கு வந்ததும் மஞ்சள் கிழங்கு சுற்றிய தாலிக்கயிற்றைக் கழற்றி அவனிடம் கொடுத்து விட்டு, காலேஜ் டைம் முடிஞ்சிடுச்சு.. நா கௌம்பறன்..” என்றேன்.

திருமணம் பதிவாகி இருந்ததால் அதை ரத்து செய்வதற்கு முன் தினேஷ் மீது அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

”ஏன்டா.. பன்னி மேய்க்கற பயலுக்கு மேசாதி பொண்ணு கேக்குதா.. ஒங்காளுல எவளுக்கும் எதும் இல்லேன்னு இங்க படுத்து எந்திரிக்க வந்தியாடா..”

அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்களும் அந்த அதிகாரிக்கு கோபம் வரும்போது துாபம் போட்டார்கள்.. ஜோக் என்பதாக கருதிக் கொண்டு எதையோ சொல்லும் போது சிரித்து வைத்தார்கள். சத்தம் போடும் போது முகத்தை அதட்டலாக்கினார்கள் இப்போது சிரிக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.

”ஏம்மா.. ஒனக்கு இந்த கட்டாயக் கல்யாணத்தில சம்மதம் கெடயாதுதானே.. பேசி முடிச்சப் பொறவு மாத்தக்குடாது..” என்றார் என்னைப் பார்த்து.

”இல்லேன்னு சொல்லு..” அம்மா என் தொடைசதையை கொத்தாக அள்ளி திருகினாள்.

கண்ணாடியில் வீறல் அதிகமானது.

”ஏன்டா.. ஏன்டா.. ஆயிரம் வேல கெடக்கு.. அத வுட்டுட்டு ஒங்க எழவே எடுக்க சொல்றீங்க..” லத்தியால் மேசையைத் தட்டினார். ”காதல்.. கல்யாணம்னு இனிம ஒன்ன இந்த பக்கம் பாத்தேன் ஊட்டிய முறிச்சுடுவன் ஜாக்ரத..”  என்றார்.

அம்மா என்னை கைப்பிடியிலிருந்து விலக்கவேயில்லை.

பிறகுதான் அவன் என் மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று நீதிமன்றம் சென்றிருந்தான்.

அப்பா சிலிண்டரை திறந்து விட்டதில் வீடெங்கும் சமையல் வாயுவின் நாற்றம்.

வீறல் ஆழமாகி கண்ணாடி துண்டானது அன்றுதான்.

பெற்றோருடன் செல்லவே விருப்பம் என்றேன் நீதிபதியிடம். எனக்கு முன் நீண்ட மைக்குகளை அப்பா தடுத்துக் கொண்டே வந்தார். என் முகத்தை துப்பாட்டாவால் மூடி வைத்தாள் அம்மா. விறுவிறுவென்று நடக்க வைத்து காரில் ஏற்றினர். என்னருகில் அப்பா வியர்த்து நாறி உட்கார்ந்திருந்தார். அம்மா உட்பட யாருமே பேசிக் கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல.. அம்மா மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க ஆரம்பித்த பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.

”உங்க கணவர் வீட்டுக்கு எப்போ போனீங்க..?”

அம்மாவுக்கு அன்று மெடிக்கல் போர்டிலிருந்து பதிவுத்தபால் வந்திருந்தது. நீண்ட விடுப்பு எடுத்திருந்ததால் அம்மாவின் பணியிடத்துக்கு வேறு யாரோ முயற்சி செய்வது குறித்த பிரச்சனை மும்முரமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன்.

தினேஷின் வீடு சிறிய குடிசையாக இருந்தது. எங்களைக் கண்டதும் எல்லோருமே பதறிப் போனார்கள். ஆனால் தினேஷின் வார்த்தைகளுக்கு அங்கு பூர்ண கும்ப மரியாதையிருந்தது. வயதை விட.. வருடங்களை விட அவன் நிதானமானவன். என் பெரியப்பாவின் மருமகளை போல எனக்கும் கணவன் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று தோன்றியது. பூஜையறை என்று ஏதுமில்லை. குடிசையின் கிழக்கு மூலையில் தகரப்பெட்டியை இரண்டாக திறந்து குறுக்கே சிறு கழியை நிறுத்தி, உள்ளே இரண்டொரு சாமி படங்கள் வைத்து பூஜையறையாக்கியிருந்தனர். விளக்கை தேடினேன். கூரையில் சொருகியிருந்த சிறு பித்தளை விளக்கை நீட்டினான். திரி, எண்ணெய் என்று நான் ஏதேதோ கேட்க, “வேணும்னா மெழுகுவர்த்தி வாங்கியாரவா..” என்றான்.

”ஏய்.. அதெல்லாம் வேதக்காரங்க வீட்ல தான் ஏத்துவாங்க…” என்றேன் கிசுகிசுப்பாய். அவனிடம் நெருங்கி நின்றுக் கொண்டேன். இனி ஆயுசு முழுக்க இவனுடன்தான். திருட்டுத்தனமெல்லாம் தேவையில்லை. தினேஷிடம் வந்து விட்டேன்.. இனி என்ன செய்து விட முடியும் என்ற தைரியம் வேறு.

ஆனால் “கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு போயிடுங்க..” அவசரப்படுத்தினார்கள் தினேஷின் நண்பர்கள்.

”இதெல்லாம் ஒங்க வீட்டு ஆளுங்களுக்காக டெம்பரவரியா செய்ற ஏற்பாடுதான்.. திரும்பி வந்ததும் காலேஜ்ல சேந்துக்க.. நா வேணும்னா வேலக்கு போறேன்..” என்றான் தினேஷ்.

”அப்டீன்னா என் புள்ளைங்களுக்கு ஒன்ன பத்தி என்னான்னு சொல்லுட்டும்.. உங்கப்பா அரைகொறை என்ஜினியருன்னா..?”

அந்த நேரத்தில்தான் வெளியில் கட்டியிருந்த ஆடு கர்ணக்கொடுரமாக அலறியது. குடிசை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த சேலைத் தடுப்பை விலக்கியதும் என் தைரியமெல்லாம் வழிந்தோட, தினேஷின் கைகளை பிடித்துக் கொண்டேன். ஆனால் சுதாரிக்கும் முன் என்னை சேர்ந்த மனிதர்களின் ரௌத்திரத்தில் நானும் அவனும் பிரிக்கப்பட்டிருந்தோம்.

அதை தொடர்ந்த நாட்களில் கிடைத்த இடைவிடாத வசவுகளும் அடிகளும் எனக்கு உறைக்கவேயில்லை.

தினேஷுக்கு என்னாச்சு..?

”கடைசியாக தினேஷை எப்போது பார்த்தீர்கள்..?” என்றார் வழக்கறிஞர்.

சாதித் தலைவர் என்னை அசிங்கமாக திட்டியபோது அப்பாவும் கூடவேதான் இருந்தார் பிறகு அவர் அப்பாவையும் திட்டினார்.

”பொட்டப்புள்ளங்கள என்னா மயித்துக்கு படிக்க அனுப்புன..”

”அது ஒரே பொட்டைதாண்ணே அவருக்கு..” சொன்னது யார் என தெரியவில்லை.

”பொட்டப்புள்ளயெல்லாம் ஒரு புள்ளைன்னு ஒண்ணோட நிறுத்திக்கிட்டியாக்கும்.. இந்த சிறுக்கியால இன்னைக்கு சாதி மானமேல்ல எடுப்பட்டு நிக்குது.. வூட்டம்மா என்னா பண்ணுது..”

”எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஹெச்செம்மா இருக்காங்க..”

“அரசாங்க பள்ளியொடமா..”

”ஆமா..”

”அப்ப பொட்டச்சீங்க வெளிய அனுப்பீட்டு நீ ஊ..   கெடந்தியா..” அசிங்கமாக சைகைக் காட்டினார். இத்தனை கூட்டம் எதற்கு..? அப்பா ஏன் இப்படி பம்முகிறார்..? பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள், மாமா எல்லோருமே கூட பவ்யமாகதான் இருந்தார்கள்.

”அவுசாரியா போய்ட்ட.. ஆனா கூட உங்கப்பன் மூஞ்சிக்காக நல்லப்பயல கைக்காட்டீ வுடுறன்.. கட்டிக்க..” என்றார் அந்த ஆள் என்னிடம்.

”சரீன்னு சொல்லு சனியனே..” அப்பா வாய்க்குள்ளேயே பேசினார்.

”அந்த மயித்துக்கிட்ட என்ன பேச்சு.. வீட்டுக்கு கூட்டீட்டு போங்க.. ஆளுங்கள அனுப்பி வக்கிறேன்.. எல்லாம் சரியாயிடும்.. ஒண்ணும் மனசில வச்சுக்க வேணாம்..”  அப்பாவிடம் சமாதானமாக பேசி எங்களை அனுப்பி வைத்தார் அந்த ஆள்.

”பெத்தவங்களை காயப்படுத்தினோம்னு உங்களுக்கு தோணவேயில்லையா..” இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல வழக்கறிஞரை பார்த்தேன்.

”இந்த கேள்வி தேவையில்லாதது. பதில் சொல்லும் அவசியமற்றது..” என்றார் நீதிபதி எனக்கு ஆதரவாக.

எதுதான் அவசியமானது..? தினேஷிற்கு உயிர் அநாவசியம் என்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட பிறகு எதுதான் அவசியம்..?

கேள்விகள் சூழ்ந்த உலகமிது..

”இதை தவறு என்று உணர்கிறீர்களா..? அல்லது சற்று நிதானித்திருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா..? இப்போது உங்கள் மனநிலை என்ன..? இந்த மனநிலையை என்னவாக உணர்கிறீர்கள்..? எனக்கு முன் நீளும் ஒலிப்பெருக்கிகள் ஆன் ரெகார்ட்.. ஆஃப் ரெகார்ட் என்று கேள்விகளை பிரித்து விட்டு, பிறகு ஆஃப் ரெகார்ட்டை ஒலிப்பரப்பியது. எங்கோ நடந்து செல்லும்போது கூட தோ.. அவதான்.. என்று விரல் சுட்டினார்கள்.  “கொஞ்சமாது கவலை இருக்கா.. என்றார்கள். யார் யாரோ ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. உங்க கிட்ட பேசுணும். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. என்றார்கள்.

அன்றைக்கு விவாதம் முடிந்த தருணத்தில் ”நீங்க எதும் சொல்ல விரும்புறீங்களா..” என்றார் நீதிபதி என்னிடம்.

குழப்பமாக தோன்றினாலும் வழக்கம்போல மௌனமாகவே நின்றிருந்தேன்.

ஆனால் மூன்று வருடங்களை கடந்த பிறகும் அதே குழப்பம் அப்படியே நீடிக்கிறது.

நீதிபதி எதிரில் இருப்பதை போல நினைத்துக் கொண்டு வாய் விட்டு சொன்னேன்..

”நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்களேன்..”

அப்போது அறுநுாற்று ஒன்றாவது தோசையை திருப்பி போட்டுக் கொண்டிருந்தேன்.

பிறகும் பிறிதொரு கேள்வியிருந்தது.

”தினேஷ் என்ன தப்பு பண்ணுனான்..?”

 

 

நாதியற்றவர்கள் – ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை

ராகேஷ் கன்னியாகுமரி

நாங்கள் பல நாட்கள் அப்பா இரவு பதினோரு மணிக்குப் பின் வந்து சேரும் நேரத்தில் வாங்கி வரும் ஆளுக்கு இரண்டு சோளா பட்டூராதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரே உணவு . அவர் அந்நேரத்திலும் ஊட்டிக்கூட விடுவார் . என் அப்பாவின் கருணை மற்றும் அன்பைத் தவிர எதுவுமே எனக்கு நினைவில் வருவதேயில்லை, எவ்வளவு யோசித்தாலும். நான் இப்போதும் நம்பத் தயாராக இல்லை, மதராசியில் ஒரு ஆள் எட்டொன்பது மணிநேரம் வேலை செய்தாலே நானூறு ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று நண்பனின் அப்பா சொன்னதை.

அவரை, போன மாதம் நண்பனை காணச் சென்றபோது, நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு சைதாப்பேட் என்ற ஒரு வார்த்தை கேள்விப்பட முடிந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது.  எங்கள் ஊர் பெயர்கள் எல்லாம் ஆண்கள் கோபத்துடன் அடிக்கப் பாயும் போது போடும் கூச்சலைப் போல இருக்கும். அதைக் கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு பெண்ணை ஒரு அம்மா அன்பாகவோ சற்று அதட்டியோ கூப்பிடுவதைப் போன்ற ஒரு பெயராகதான் சைதாப்பேட் என்ற வார்த்தை அவர் சொல்லும்போது தெரிந்தது. பிஜனோர் என்ற ஊரில் தாழ்ந்த சாதியில் நான் பிறந்ததாக ஆ.எம்.மிஸ்ரா என்ற ஆசிரியர் ஒன்றாவது படிக்கும்போது சொன்னது புரியவே எட்டாவது வரை படிக்க வேண்டியிருந்தது.

ஜஸ்ராம் யாதவ் என்றவரிடம் தான் அப்பா வேலை பார்த்துவந்தார்.

முகல்சராய் நிறுத்தத்திலிருந்து மதராஸ் செல்லும் விரைவு ரயில் வண்டி கான்பூர், ஜான்சி, இட்டார்சி, நாக்பூர், பல்லார்ஷ்ஷா, வாராங்கல், விஜயவாடா மார்க்கமாக போவதாகவும், இன்னும் சற்று நேரத்தில்  புறப்படும் எனவும் அம்மாவின் குரலையொத்த ஒரு பெண் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பது என் அம்மாவின் கவலை தோயிந்த முகத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது.

நானும் நண்பனின் அப்பாவும் இந்த ரயிலில் ஏறி சுமார் ஒரு மணிநேரமேனும் தாண்டி இருக்கும். அவள் புறப்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் புறப்படுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. வெயில் ஜன்னல் வழியே உள்ளே அடித்துக்கொண்டிருந்தது. நண்பனின் அப்பாவின் முழுப் பெயர் எனக்கு இப்போதும் தெரியாது. நானும் அவரை அப்பா என்று தான் அழைத்துக்கொண்டு இருக்கிறேன். ரயில் ஏற இந்தப் பெரிய கட்டிடத்தின் முன்வரும்போதே அவர் திரும்பத் திரும்ப சொன்ன ஒரே விஷயம் எக்காரணம் கொண்டும் இருக்கையில் அமர்ந்த பின்பு இடத்தை விட்டு நகரக்கூடாது. அப்படி நகர்ந்து விட்டால் நாளை மறுநாள் வரை நான் கீழேயோ அல்லது கக்கூசின் அருகிலோதான் இருக்க நேரும் என்று.

ஒரு ரயில் பெரும் சத்தத்துடன் எங்கள் ரயிலின் அருகில் வந்து நின்றது.  அதில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒருவர்தான் இருந்தார். நான் இருந்த இருக்கையில் சுமார் ஆறு பேர் இருந்தோம். ஒருவேளை அந்த ரயில் திரும்பி வருவதாக இருக்கலாம். நாங்கள் இப்போதுதானே போகப் போகிறோம்.

எனது பழைய பள்ளிக்கூட கிழிந்த பையில்தான் எனது இரண்டு கால்சட்டை மற்றும் கொஞ்சம் பழைய சட்டை மூன்றையும் அடுக்கி வைத்திருந்தேன். இருபுறமும் பை கொஞ்சம் கிழிந்திருந்தது. ஆனாலும் அது ஒரு அழகான பைதான். என் அம்மாதான் இவரிடம் என்னையும் மதராஸ் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். முதலில், சின்னப் பையனை ஏன் அங்கு வரை அனுப்ப வேண்டும், இரண்டு வருடம் யாதவ்ஜியிடமே வேலைக்குப் போகட்டும் பின்னால் வேண்டுமானால் அங்கு அழைத்துச் செல்கிறேன், என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா எந்த பதிலையும் சொல்லாமல் அழுதுக்கொண்டு மட்டுமே நின்றாள். பின் அவராகவே சரி என்னோடே வரட்டும் என்றார். என்னை நோக்கி, அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பலாம் என்று சொன்னார்.

இன்று அந்த வெள்ளிக்கிழமை. அம்மா அழகான இரண்டு பெரிய ஆலூ பராட்டாவை நெடுநாள்களுக்குப்பின் மிகவும் பிடித்த புதினா சட்டினியுடன் தந்தாள். இன்னும் ஒன்று சாப்பிட ஆசை இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தில் இருந்ததே அதிகம் போனால் நாலோ ஐந்தோ பராட்டாவுக்கான மாவுதான். வீட்டில் அம்மா, என் மூன்று தங்கைகள், மற்றும் மங்கலாக கண்தெரியும் அப்பா வழிப்பாட்டி, எல்லோர்க்கும் இவ்வளவு மாவில்தான் வயிற்றை நிரப்ப வேண்டும். எனக்குத் தெரியும், அவர்களுக்கு அம்மா இனி தரப்போகும் பராட்டாக்கள் நான் சாப்பிடுவதில் பாதி அளவுக்கூட இருப்பது கடினம். அம்மா எப்போதும் பின் கதவினை ஒட்டியே அமர்ந்திருப்பாள், நினைவுதெரிந்த நாள்முதல்.

பக்கத்து ரயில் மெதுவாக செல்லத் தொடங்கியது. ஆனால் கொஞ்ச நொடிகள் கழிந்தபோது புரிய தொடங்கியது, நான் இருந்த ரயில்தான் முன்னால் சென்றுகொண்டிருப்பது. மேலே காற்றாடி வேகமாகச் சுழலும் சத்தம் இப்போது தெளிவாக காதில் விழத் தொடங்கியது. ஆனாலும் வியர்வை நிற்கவே இல்லை. காலை நீட்டக்கூட முடியவில்லை. அதிகமான ஆட்கள் நிரம்பி இருந்தனர். வேறு ஒரு ரயில் இப்போது கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்தது. அதைப் பார்க்கும்போது ஒன்று புரிந்தது, பலர் இப்படிச் சேர்ந்து இருக்கவில்லை. தனித்தனியாகதான் ஒவ்வொரு ஆளும் இருந்தனர். ஒரு பெட்டியில் மட்டுமே எங்களைப் போல நிறைய பேர் கூடி இருந்தனர். நான் அப்பாவிடம் கேட்டேன், ஏன் அந்தப் பெட்டிகளில் கூட்டமே இல்லை? அது முன்னமே பணம் கொடுத்து தனித் தனி இருக்கை அவர்களுக்கென உடம்படி செய்யப் பட்டதென்று சொல்லி  நாங்கள் இப்போது வெளியிலிருந்து பயணச் சீட்டு வாங்கி வந்ததையும் நினைவுபடுத்தினார். அது காசு அதிகம் என்றும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில் இருந்த வேறு ஒரு பெரியவரின் எங்கே போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

என் பக்கத்தில் இருந்த ஒருவர் காலின் இடையிலிருந்து ஒரு பழைய பெரிய பிளாஸ்டிக் நெளிந்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை ஆடி ஆடி கஷ்டப்பட்டுக் குடித்தார். கொஞ்சம் என் தொடையிலும் தெறித்தது. அவர் பாட்டிலை மூடி மீண்டும் அதே பையில் வைத்தார்.  நான் போட்டிருந்த கால்சட்டை அப்பா சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன் வாங்கித் தந்தது. எனக்குப் பிடித்த நிறமே சிகப்புதான். அவரிடம் கெஞ்சி தான் இந்த நிறத்தை எடுக்க முடிந்தது. ஒரு வேளை அது தீபாவளியாகவோ அல்லது ஹோலியாகவோ இருக்கலாம். எனக்குச் சரியாக நியாபகம் இல்லை. அம்மாவிடம் கேட்டால் சரியாகச் சொல்வாள்.  ஆனால் இதை எடுத்துத் தந்த வருடம்தான் அவர் செத்துப்போனார்.  யாதவ்ஜியின் கக்கூஸ் தொட்டியில் ஏதோ அடைப்பு என அதிகாலையிலே அவர் வீட்டின் முன் உள்ள கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் ஸ்ரிவாஸ்தவா வந்து சொல்லிவிட்டு போனார். அப்பா அவசரம் அவசரமாக எழுந்து அவர் பின்னால் ஓடியதைப் பாட்டியின் அருகில் கிடந்து அரை உறக்கத்தில் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பத்து மணிக்கு பள்ளியில் போய் அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் என் நண்பனின் அப்பாவான இவர்தான் பள்ளிக்கு வந்தார். ஆசிரியரிடம் ஏதோ சொன்னவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அன்று எனக்கு அதிகமான ஜலதோஷம். மூக்கு நிற்காது வடிந்துக் கொண்டிருந்தது. அவர் என் கையை கொஞ்சம் அழுத்திதான் பிடித்திருந்தார். அந்நேரம் பார்த்து காக்கி நிக்கர் அவிழப் பார்த்தது. அதை ஒரு மாதமாகவே ஒரு முட்டுப்பின்னால் தான் கோர்த்து வைத்திருந்தேன். நான் வேறு தூக்குப் பையை வலது கையில் போட்டிருந்ததால் இடது கையால் என் நிக்கரைப் பிடிக்க கொஞ்சம் வசதி இருந்தது. அவர் நேராக யாதவ்ஜியின் வீடு இருக்கும் சாலைக்குதான் என்னை அழைத்துச் சென்றார். பல நாட்கள் அப்பாவுடன் இந்த வழியாக வந்துள்ளேன். யாதவ்ஜி இருந்தால் என்னை வீட்டின் உள்ளே செல்ல விடமாட்டார்கள். என்னை அவர்கள் பசு கட்டியிருக்கும் தொழுவத்தின் அருகிலூடே வீட்டின் பின் பக்கத்துக்கு கூட்டிச் செல்வார்கள். ஆனால் யாதவ்ஜி வீட்டில் இல்லை என்றால் வலது புறமாக இருக்கும் கதவு போட்டு மூடி வைத்திருக்கும் சிறிய வழியோடு அழைத்துச் செல்வார் அப்பா.

நான் தூரத்தில் வரும்போதே கடைசி தங்கை, நண்பனின் அம்மா கையில் இருப்பது தெரிந்தது. ஒரு பெரும் அழுகையின் சத்தம் நெருங்க நெருங்க கேட்கதொடங்கியது. சுமார் இருபது முப்பது பேர் நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்கும்போதே அது அம்மாவின் குரல் என அடையாளம் கண்டு கொண்டேன். என் அண்ணன் மற்ற இரண்டு தங்கைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நின்றிருந்த கால்களின் இடைவெளி வழியே என் அப்பா கீழே மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் கண்கள் திறந்திருந்தன. அப்பாவின் உடம்பில் இருந்துதானோ என்னவோ, மல வாடை அடித்துக்கொண்டிருந்தது. அம்மா நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். அப்பா வெறும் ஒரு துண்டை மட்டுமே கட்டி இருந்தார். ஒரு புறம் தொடைக்கு மேல் அது ஏறி இருந்தது.

யாதவ்ஜியை அங்கே காணவே இல்லை. என் நண்பனின் அப்பாவுடன் பார்த்துள்ள இரண்டு பேர் யாதவ்ஜியின் தம்பியுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அவர் இவர்கள் இரண்டு பேரையும் அடிக்கப் பாய்ந்து வந்தார்.  சிலர் அவரைத் தடுத்தனர். பின்னர் அப்பாவை உடனே அங்கிருந்து தூக்கி கொண்டு போக வேண்டும், என்று கத்தினார். என் அப்பா அவசரம் அவசரமாக போட்டுக்கொண்டு ஓடிய அந்த அக்குள் கிழிந்த சட்டை அந்த வீட்டின் முன் மரத்தில் தொங்குவதை என்னால் கண்டு நிற்கவே முடியவில்லை. அப்பாவின் உடம்பை எனக்கு பார்க்கவே தைரியப்படவில்லை, சட்டையில்லாமல். நேராக ஓடிச் சென்று அதை எடுத்து வந்தேன். அதில் இருந்த ஒரு பான் பராக்கும், ஒரு கட்டு பீடியும் கீழே விழுந்தது. ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு கீழே சிதறி ஓடியது.  நான் அனைத்தையும் எடுத்து என் நிக்கரின் பாக்கெட்டில் போட்டுவிட்டு சட்டையை அப்பாவின் அருகில் இருந்த பாட்டியிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி அப்பாவின் முகத்தை மெதுவாகத் துடைத்தாள். ஒரு பைக்கை யாரோ கொண்டு வந்தனர். என் நண்பனின் அப்பா (இவர்தான்) ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். அப்பாவை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். வண்டியை எடுத்து வந்தவர் சற்று தள்ளி நின்றுகொண்டார்.

பின்னால் என் அண்ணனை ஏறச் சொன்னார்கள். அண்ணன் கண்ணீருடன் ஏறி அமர்ந்து அப்பாவை அணைத்துக்கொண்டான். வண்டியை மெதுவாக முன்னகர்த்திச் செல்லத் தொடங்கினர். சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த மாமாவின் கையில் யாதவ்ஜியின் தம்பி கொஞ்சம் காசு கொடுப்பதைக் கண்டேன். பின் அனைவரும் வண்டியின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அம்மா அலறிக்கொண்டே வண்டியின் பின்னால் நடந்தாள். நான் தங்கைகளை பிடித்துக்கொண்டே வந்தேன். தலையை விரித்த நிலையில் இருந்த பாட்டி தடுமாறி கீழே விழவே மீண்டும் பேட்டா…பேட்டா…என்ற கதறலுடன் எழுந்து ஓடத் தொடங்கினாள். கொஞ்சம் தூரம் சென்றவுடன் என்னை அறியாமல் யாதவ்ஜியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாதவ்ஜி மேலே மொட்டை மாடியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்ததை தூரத்திலிருந்து கண்டேன். வேறொரு ரயில் மறுபுறம் எங்கள் எதிர்த் திசை நோக்கி சத்தம் எழுப்பிக்கொண்டே மிக மிக வேகமாகச் சென்றது.

இரண்டாவது நாள் மாலை வேளை எங்கள் வண்டி வேகமாக நெல்லூர் என்ற இடத்தை அடைந்தது. மிகக் கடுமையான மழையை அன்று பார்த்தேன், பல மாதங்களுக்குப் பிறகு. நான் இருந்த ஜன்னல் ஓரத்தில் மழை நீர் உள்ளே தெறித்தது. என்னுடன் இருந்த யாரும் நீரைத் தடுக்க சொல்லவேயில்லை. நேரம் செல்லச் செல்ல ரயிலின் வேகத்துடன் மழையின் வேகம் போட்டிபோடத் தொடங்கியிருந்தது. நாங்கள் மதராஸ் வந்து சேரும் வரை மழையும் எங்களுடனே பயணித்தது.

மக்களின் திரள் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. மிகச் சரியாக சொல்வதென்றால் நாலாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுடன் அலகாபாத் கும்பமேளா சமயத்தில் கண்ட கூட்டத்தைப் போல் இருந்தது. மெதுமெதுவாக என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார் அப்பா. ரயில் நிலையத்தின் முன்னால் முட்டளவு நீர். அந்த இடத்தில் ரயில்  கட்டிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நினைக்கிறேன். எங்கும் இருட்டு. இந்தக் கட்டிடத்தில் இருந்து வந்த வெளிச்சத்திலும் வாகனங்கள் அங்கும் இங்கும் மெதுவாகச் செல்லும்போது தந்த வெளிச்சத்திலும் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா அவரது நண்பருக்கோ, வேலை பார்க்கும் முதலாளிக்கோ பல முறை கைபேசியில் பேச முயன்றுக்கொண்டே இருந்தார். கோபத்தில் அவர் யார் அம்மாவையோ  வசவால் திட்டிக்கொண்டே நடந்தார். நான் எதுவும் கேட்க பயந்துக்கொண்டே பின்னால் அவருடன் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.

ஏதோ குகை போல ஒரு வழி கீழே இறங்கிச் செல்ல தொடங்கியது. அதில் ஒரு இரண்டு மூன்று படி இறங்கியவுடன் கீழே நின்ற காவலர் மேலே திரும்பிச் செல்ல கைகாட்டினார். நானும் அப்பாவும் கீழே எட்டிப் பார்த்தோம். ஒரு ஆள் கழுத்தளவு தண்ணீரில் நின்று அந்த காவலருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்பா சொன்னார், மழை நன்றாக தொடர்ந்து பெய்கிறதால்தான் இவ்வளவு தண்ணீர் உள்ளே வந்துள்ளது. அதனால் சுரங்கப்பாதை வழியே மறுபுறம் செல்ல முடியாது. எனக்கு ஆசையாக இருந்தது.  நான் இதுவரை மண்ணுக்குள் இறங்கி நடந்ததே இல்லை. பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் பெரிய விருப்பம் இருந்தது. என் ஊரில் உள்ள ராம்நகர் கோட்டை முதல் ராம்நகரின் வேறு பகுதியில் உள்ள துர்கா மந்திர் வரை அப்படி ஒரு பாதை உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது அது மூடி வைக்கப்பட்டுள்ளதாக அம்மா சின்ன வயதில் சொல்லுவாள். நான் பல நாள் நினைத்ததுண்டு, நாங்கள் புது வீடு கட்டும்போது ஒரு கிணறு தோண்டவேண்டும் என்றும் அப்படிச் செய்யும்போது சுரங்கப்பாதை என் கிணற்றைக் கிழித்து இரண்டு பக்கமாக போகும் என்றும் அதில் இறங்கி நடந்து திரும்பி வரவேண்டும் என்றும். ஆனால் இன்று அந்த ஆசையில் பாதியை இந்த மழை இல்லாதிருந்தால் நிவர்த்தி செய்திருக்கலாம். என்னுடைய தலையில் பள்ளிக்கூடப் பையை வைத்துக்கொள்ள அப்பா சொன்னார். புது இடம் மற்றும் புது மழையினால் ஒரு வேளை காய்ச்சல் வந்தால்? நான் அவர் சொன்னது போலவே செய்தேன். மழை காரணமாக செல்போன் சமிக்ஞைக்களும் இல்லை என்றார். மிகவும் மெதுவாக ஒவ்வொரு ஆளின் பின்னாலாக நடந்து சென்னை பார்க் என்ற சிறிய ரயில் நிலையத்தை அடைந்தோம். அப்பா பயணச்சீட்டு வாங்க வரிசையில் போய் நின்று கொண்டார். நானும் அவரின் அருகில் போய் நின்றேன். மழை பேய்க்காற்றுடன் இப்போதும் அடித்துக்கொண்டுதான் இருந்தது.

மழையின் காரணமாக ரயில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தே வரும் என்று அறிவித்தனர். அங்கும் மிக அதிக கூட்டம்.  பட்டணம் என்பதன் பொருளே எனக்கு இப்போதுதான் புரியத்தொடங்கியிருந்தது. அப்பா என்னிடம் பேசிக்கொள்ளவே இல்லை.  ரயில் மிக மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் வந்த வண்டியைப்போல மிகப்பெரிய முன்பெட்டி இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அதில் ஏறி நின்றோம். ரயில் மெதுமெதுவாக நகர்ந்தது. ரயிலில் யாருமே எதுவுமே பேசாமல் இருந்தது எனக்கு புதியதாக தெரிந்தது. இந்த மக்கள் யாரிடமும் பேசமாட்டார்கள் போல…! ரயில் ஒவ்வொரு இடமாக நின்று கொண்டே சென்றது. ஒரு இடத்தில் அதிக நேரம் நிறுத்தி இருந்தனர். பிறகு தெரிந்தது, ரயில் அதற்கு மேல் போகாது என. ஏதோ ஆற்றின் மேல் தண்டவாளத்தைத் தாண்டி தண்ணீர் செல்லத் தொடங்கியிருப்பதாக யாரோ சொல்வது கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இறங்கி நடக்கத்தொடங்கினர்.

அப்பா என்னிடம் நடந்தே போய்விடலாம், பக்கம்தான் அவர் குடியிருக்கும் வீடு என்றார். மழையில் மீண்டும் நனைந்துகொண்டே நடக்கத்தொடங்கினோம். நாம் வந்த கெட்ட நேரம் என முனகிக்கொண்டே  நடந்தார். மிகப்பெரிய மின்னல் மழையைக் கிழித்து இறங்கியது. இடி முழக்கம் என் நெஞ்சில் சிறியதொரு பயத்தை விதைத்தது. எங்கோ தனிமையில் காட்டிலோ பாலைவனத்திலோ நடந்து செல்வதாகப்பட்டது.  கை கால் கொஞ்சம் நடுங்க தொடங்கியிருந்தது. அப்பாரயில் நின்ன இடம் பேரு என்ன என்றேன். மாம்பல் என்று சொன்னார். அடுத்த நிறுத்தம்தான் சைதாபேட் என்றும் அது வரை சென்று நிறுத்தி இருந்தால் இவ்வளவு நடக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும் என்றும் சொன்னார். அதோடு ரயில் நிலையத்தின் அருகில்தான் வீடு என்றும் வீட்டில் இருந்தால் ரயில் போவதைப் பார்க்கலாமாம். அந்த இடத்தில் இருக்கும் பாலத்தின் மேலே தான் தண்ணீர் செல்வதாக சொன்னார். ஏதோ சகதி நிறைந்த ஒரு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். அது வயலுக்குள் இறங்கி நடப்பதைப் போல தோன்றியது. எங்கும் இருட்டின் அமைதி. நீர். நீர். சகதி…. எங்கள் ஊரில் ஹோலி முடிந்த அடுத்த நாள் இப்படிதான் சாலைகள் எங்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. ஆனால் பட்டணமான இங்கு ஒரு மழை பெய்தால் வாகனங்கள் இல்லை, மின்சாரம் இல்லை. அவ்வளவு பேர் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் எங்குதான் சென்று மறைந்தார்களோ? நாங்கள் நடந்து செல்லும் பாதையில் இரண்டு மூன்று மாடுகள் நனைந்துகொண்டே நின்றிருந்தன. கொஞ்சம் தூரமாக பத்திருபது பன்றிகளும் ஒரு ஓலைக் குடிசையின் முன்னால் ஒண்டி நின்றுக்கொண்டிருந்தன.

நாங்கள் சென்று ஒரு இடத்தில் நின்றோம். தூரத்தில் செல்போனில்  இருந்து வரும் சிறிய வெளிச்சத்தால் அடித்துப்பார்த்தார். அதுதான் அந்த ஆறு. ஆறு நிறைந்து அதன் அலை மிக மெதுவாக கரையில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் மோதியபடி இருந்தது. ஆற்றின் நீர் குடிசையின் அருகிலேயே வேகமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே எனக்கு உடம்பும் குளிரால் நடுக்கம் கண்டிருந்தது. அப்பா மெதுவாக அவரின் கைப்பையில் இருந்த ஒரு சாவியால் கதவைத் திறந்தார். அதுவும் சிறிய ஒரு ஓலைக் குடிசை. நாங்கள் உள்ளே சென்று பைகளை வைத்துவிட்டு மாற்றுத் துணிகளை அணிந்துவிட்டு அமர்ந்தோம். அவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த மதுக் குப்பியை திறந்து வேகமாக இரண்டு மூன்றுமிடறு வாயெடுக்காமல் குடித்தார்.

என்னா குளிர்?

ஆமா

சாப்பிட வேணாமா? நாம படுத்து தூங்குவோம். வேணுமுன்னா ஒரு வாய் இதக் குடிச்சுக்கோ. குளிர் தெரியாது. உடம்பு ரொம்ப நடுங்குது. மழை வேற நிற்காம பெய்துக்கிட்டே இருக்கு. ராத்திரி எப்படியும் நின்றிடும்.  மதராஸ்காரன் மழை பாக்கிறதே இப்படி எல்லாம்தான். நம்ம ஊர் போல கிடையாது. தண்ணீர் இங்க ஊருக்குள்ள வரும், இல்லன்னா ஏதாவது ஆபத்து அப்படின்னு தெரிஞ்சா சர்க்கார் துரிதமா உதவுவாங்க. நம்ம ஊர் கோயில்லகூட வருஷா வருஷம் மிதிபட்டு ஒரு ஆயிரம் பேர் சாவானுங்க. அங்க கடவுள் கூடகாப்பாத்த மாட்டார். ஆனா இங்க சர்க்கார் கடவுள் செய்ய வேண்டியதக்கூட செய்து தருவாங்க. ம்ம்ம்…. இப்போ கூட மழை நிற்கவேயில்லை அப்படீனா போலீஸ் வந்து சொல்லி நம்மள பத்திரமா கூட்டிகிட்டு போயிடுவாங்க. அதனால மழை நைட் நின்னாச்சுன்னா நாளைக்கு காலையில மாமூல் வாழ்க்கை தொடங்கிடும்.  இப்போ இருக்கிறத சாப்பிட்டு தூங்குவோம், என்றார்.

அப்பாவின் நம்பிக்கையும் அவரது பல வருட மதராஸ் வாழ்க்கையும் நிறைய கற்றுக் குடுத்திருக்கு இந்த ஊர் பற்றி. அரசாங்கத்தையும் மக்களையும் பற்றி. எங்கள் ஊரில் இருக்கும் அம்மாவையும், தம்பி தங்கையையும் யோசித்தேன். அழ ஆசை வந்தது. ஆனால் இவரைப் போல் இங்கே எவ்வளவு கஷ்டபட்டேனும் குடும்பத்தை காப்பாற்றுவேன். குளிர் என்னை ஆட்டிப்படைத்தது. ஒரு நம்பிக்கையில் மது குப்பியில் இருந்து இரண்டு வாய் குடித்தேன். குமட்டியது. அப்பா எதுவும் சொல்லவில்லை. நான் அப்பாவின் பையைத்  திறந்து எடுத்து வந்திருந்த நாலு சப்பாத்தியை அவருக்கும், எனக்கு மீதி இரண்டையும் எடுத்தேன். பின் அந்த பாலித்தேன் பையில் இருந்த இரண்டு வெங்காயத்தை ஆளுக்கொன்றாக வைத்துவிட்டு அதில் இருந்த மூன்று பச்சை மிளகாயில் இரண்டை அவருக்கு கொடுத்து ஒன்றை நானும் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறையத் தொடங்கியது. அவர் மீண்டும் குப்பியில் இருந்ததைக்  குடித்துவிட்டு கொஞ்சம் எனக்கும்  தந்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார். இரண்டு நாள் பயணத்தின் களைப்பு மற்றும் குளிர் காரணமாக நானும் மெதுவாக ஒரு மூலையில் படுத்துக்கொண்டேன்.

என் அப்பாவின் முகம் பல நாட்களுக்குப் பின்னர் எனக்கு மனதில் தெளியத்தொடங்கியது அவரது உடம்பின் மணம் மூக்கில் நன்றாக உணர முடிந்தது. அவரது அழகான வெற்றுடம்பில், கழட்டி வைத்திருந்த சட்டையைப் போட வேண்டும் என்று விரும்பி, அதை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நான் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தேன்.

 

 

கல்பனாவின் கடிதம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்திவிட்டு மெதுவே இறங்கி வரும்போதே அவள் அதிசயித்தாள், தனக்கு யார் கடிதம் போட்டிருக்கக் கூடுமென. நேற்று பெய்த மழை வாசலில் தேங்கியிருக்கிறது. அதில் அந்தக் கடிதம் விழுந்திருக்கக் கூடாது. நல்ல வேளை, ஈரம் படவில்லை. காய்ந்த இடம் பார்த்து போட்டுவிட்டுப் போயிருப்பது யார், ஜோசஃப்போ? ஜோசஃபாக இருந்தால் மோரோ, தண்ணீரோ கேட்டுக் குடித்துவிட்டு சில கதைகள் பேசிவிட்டுத்தான் போவார். ”பாப்பா, முக்கத்து வீட்டு வேணு, அதாம்ப்பா, முல்லைக் கொடி வெளிய படந்திருக்குமில்ல, அவருதான், மொத்தம் ஆறு புக் எஸ் எஸ் எல் சி, அதாம்மா, உங்க பதினோராவது, வாங்கினாரு. அந்த எக்ஸாமினரே அவரு வீட்டிக்குப் போயி இனி எழுதாதையா, நானே உனக்கு வேல பண்ணி வைக்குறேன்னு கால்ல விழுந்துட்டாரு” என்று சிரிப்பார்.  ஆனால் ஜோசஃப்  எப்பொழுதோ ரிடயர் ஆகிவிட்டாரே. கடிதமே வராத ஒரு வீட்டிற்கு அதிசயமாக ஒன்று வந்திருக்கிறதே, அந்த ஆள் யாரெனப் பார்ப்போம் என்றுகூடத் தோணவில்லையே, இந்த தபால்காரருக்கு என எண்ணியதற்காக தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.

சிறு வயதில் ஜோசஃப் கொண்டு வரும் கோலி மிட்டாய்க்காக (கோலி மிட்டாயா, கோழி மிட்டாயா?) அவள் காத்திருப்பதுண்டு. அவரை ‘சான்டா க்ளாஸ்’ தாத்தா எனதான் நினைத்திருந்தாள் பலகாலம். அவளுடைய அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை அவர் கொடுத்தபோது இதே போல் பிரித்துக்கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்ததும் அவர் பதறியதும் நிழலாடின.

எங்கிருந்து வந்திருக்கிறது இந்தக் கடிதம்? யார் எழுதியிருப்பார்கள்? தபால் முத்திரை தெளிவாக இல்லை, அனுப்பியவரின் முகவரியும் இல்லை. தன்னுடையதைப் போல் சாய்ந்த எழுத்தில் தனக்குத் தெரிந்து எழுதுபவர் யார்?

ஒருகால் அப்பாவாக இருக்குமோ? கண்ணம்மா என்று முகவரியில் எழுதியிருந்தால் அது நிச்சயமாக அப்பா. அவள் அவசரமாக முகவரியை மீண்டும் பார்த்தாள். இல்லை, கல்பனா என்றுதான் இருந்தது. ஏன்  ஏமாற்றமும், ஆசுவாசமும் ஒருங்கே வருகிறது என அவளுக்குப் புரியவில்லை. அம்மா சிரிப்பது போல் கேட்டது, சிரிப்பைப் பழிப்பாக, பழிப்பைச் சிரிப்பாக மடைமாற்றம் செய்பவள் அம்மா. ”ஏன்டி, ஸ்வீட்டை இன்னமும் சாப்ட்ல, தயிர்ஞ்ஜாம் வேண்டாமா?”

‘கடேசில சாப்ட்றேம்மா’

“என்ன கடசியோ? டிரெஸ், பேனா  எல்லாத்தையுமே கடசி, கடசின்னுட்டு”

‘இப்போகூட இந்த லெட்டர பிரிக்கறதவிட அதக் கடேசியா செய்யத்தான் தோணுதம்மா’ அம்மா நிச்சயமாக பழித்துக் கொண்டிருப்பாள். ஆனாலும், அம்மா கடிதம் எழுத மாட்டாளா, என்ன? அவள் மீண்டும் ஒருமுறை முகவரியைப் பார்த்தாள். அம்மாவின் எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.

அவள் யதேச்சையாக கையிலிருந்த காகிதத்தில் காற்றில் படபடக்கும் அந்த நீலப் பறவைகளைப் பார்த்தாள். உயிரற்ற பறவைகள். அவை உயிரும் கொண்டு வருமோ என்னமோ?

எல் ஜி ராய் எழுதியிருப்பானோ? கல்பனாவிற்கு சிரிப்பு வந்தது. எல் ஜி ராய் எழுதியிருப்பாரோ என்று நினைக்க வேண்டுமோ? அன்றுகூட எதிர்பாராத மழை. முழுதுமாக நனைந்த அவன் சீட் முன் நின்று தன் ஆர்டரைக் காண்பித்த நேரம்- அவனுக்கு வெல்கம் சொல்வதா, மேஜையிலிருந்து கைகளை எடுக்கிறீர்களா என்று சொல்வதா,  எனத் திகைத்தாள். அவன் ‘சாரி’ என்றபின்தான் அவள் இயல்பிற்கு வந்தாள்.

“நீங்கள் ப்ரேஞ்ச் மாறி வந்திருக்கிறீர்கள். சாரி”

‘இல்லையே, விசாரித்துவிட்டுத்தானே வந்தேன்’

“சாரி, போய் போர்டைப் பாருங்கள்.”

அவன் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் குழப்பத்துடன் வந்தான்.

“சரியாகத்தானே வந்திருக்கிறேன்” என்றான் அழாத குறையாக.

‘என்ன சார், ப்ரமோஷனில் வருகிறீர்கள், நேரத்திற்கு வர வேண்டாமா? லேட்டு முத நாளே. உங்க கன்ஃபர்மேஷன் ஒரு நாள் தள்ளிப் போகும் தெரியுதா?’ என்றாள் அவள்.

அவனுக்கு உயிர் வந்தது. ”சாரி, சாரி,” என்றான்.

அவனுடன் நிறைய ப்ரேங்க்ஸ். எப்போதும் எதற்காவது அவளிடம் மாட்டிக் கொள்வான். ஸ்டாக் இன்ஸுரன்ஸ் தேதியை அவன் ஒருமுறை கவனிக்கவில்லை. அது வங்கியில் அடமானத்தில் இருந்த கேஷ் க்ரெடிட் ஸ்டாக்ஸ். சோதனையாக அந்த ஸ்டாக்ஸ் திருடும் போய்விட்டது. மதிப்பு பத்து லட்சம். என்ன செய்வான் அவன்? நெக்லிஜென்ஸ், கேர்லெஸ்னஸ், கூட்டுச் சதி- காப்பு நிச்சயம். எப்படியெல்லாம் பயமுறுத்தினாள் அவனை அவள். அக்கவுண்டைப் பார்த்து அவளே அந்த காப்பீட்டைச் செய்துவிட்டாள் என்று அறிந்ததும் அவன் விட்ட பெருமூச்சு, அவள் கைகளை விடாது பற்றிக் கொண்டே இருந்தது, ‘பிசாசு’ என்று செல்லமாகத் திட்டியது, ‘முத்துடைத்தாம நிறை தாழ்ந்த பந்தற்கீழ்’ என மனம் விம்மியதோ?  ராய் வெட்ஸ் சர்மிஷ்டா என அழைப்பிதழ் வந்தபோது  பூத்த பவளமல்லி சற்று வாடியே வாசம் வீசியது.’ராய் வெட்ஸ் சர்மிஷ்டா, கல்பனா வெட்ஸ் ஹர் ஐய்ஸ்’ என கவித்வ சோகம் கவ்வியது. பச்சை ஓடு தெறித்து விரிந்து பருத்திக்காடு கிளியைப் பார்த்துச் சிரித்தது.

அவன் எழுதியிருப்பானோ, இந்தக் கடிதத்தை?அவனுக்கு தமிழ் எழுத வராதே? வடக்கே போன பிறகு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே அவர்களுக்குள் கடிதங்கள். முதல் குழந்தை ஆண் என்று ஒரு கடிதம். அந்தப் பயலுக்கே இப்போது இருபது வயதிருக்குமில்ல? அவளை ’சேட்டர் பாக்ஸ்’ என்றே கூப்பிடுவான் ராய்.

ஒருகால் சாதனா வீட்டிலிருந்தோ? அவளுக்குத் தமிழ் தெரியும், ஆனால், பிடிவாதமாக ஆங்கிலத்தில்தானே எழுதுவாள்? அன்று அவ்வளவு கோபத்திலும் சரமாரியாக ஆங்கிலத்தில்தானே திட்டினாள். ஒருவேளை, அதற்காக மன்னிப்பு கேட்டு எழுதியிருப்பாளோ?

நசநசவென்று மழை அன்றைக்கு பெய்து கொண்டிருந்தது. அதற்கே மின்சாரம் நின்றுவிட்டது. சாதனா ஏற்றிய மெழுகுவத்தியில் தங்கள் மூவரின் உருவமும் கரும் பூதங்களெனச் சுவற்றில் அலைபாய்ந்ததை கல்பனா பார்த்துக் கொண்டேயிருந்தாள். தன் நிழலை சாதனாவின் நிழலில் சேர்த்தாள்; அவள் தலையிலடித்துக் கொண்டு சிரித்தது நிழலில் மிகக் கோரமாக இருந்தது. பின் சங்கரின் நிழலில் அழுத்தமாக இணைக்கப் பார்த்தாள். விளையாட்டாகத்தானா என்று அவளுக்கும் தோன்றாமலில்லை. மிக அடிக்குரலில் சாதனா திட்டியது வியப்பென்றால் முதலில் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு எதுவுமே பேசாமல் அங்கிருந்தும் நகராமல் இருந்தானே அந்த சங்கர், அவனுடைய நிழலிலா என் நிழலை ஒட்டப் பார்த்தேன் என்று அவளுக்கு கசந்து வந்தது. இந்த வயதில் அப்படி ஒரு கசப்பு சாத்தியமா தனக்கு? அந்தக் கசப்பில் ஓர் இனிமையை அவள் உணர்ந்த மாதிரி சங்கருக்கும் ஏதாவது தோன்றியிருக்குமோ? அவன் இருளில் ஆடும் சலனங்களை அறிந்திருப்பான் என்றால் அவளிடம் எப்போதோ பேசியிருப்பானே? சரி, பின்னர் யார்? அந்த ஹோட்டலில் சந்தித்த பேராசிரியரா?

எல்லோரும் போகிறார்களேயென்று அவளும் அன்று ஐயப்ப பூஜைக்குப் போனாள். கருப்பும், காவியுமாக சரண கோஷங்கள், பூக்கள், சந்தனம், வியர்வை என கதம்ப வாசனை. மேளமும், நாகஸ்வரமும், குழந்தைகளின் அழுகையும், சலசலவென கலவையான பேச்சுச் சத்தமும் இழுத்துப் பார்த்தாலும், வழுக்கியோடும் எண்ணங்களும், யாரை ஏமாற்ற இங்கே இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்ற சாட்டையடியும் அவளுக்கு. மெதுவே நழுவி வருகையில் பயங்கரமாகப் பசித்தது. அருகில் இருந்த அந்த உணவு விடுதியிலும் மக்கள் திரள். அதில் நீந்தி ஒரு காலியான இருக்கையை ஒருவாறு அடைந்தாள். எதிரெதிரே ஒருவர் ஒருவராக அமரும் இருக்கைகள் ஒன்றில் நடுத்தர வயதுள்ள கண்ணிய தோற்றமுடைய ஒருவர் உட்கார்ந்திருந்தார். ’யாரும் வருகிறார்களா?’ எனக் கேட்டுவிட்டு ‘இல்லை, நீங்கள் உட்காருங்கள்’ என்ற பதிலால் பாதி பசி போய்விட்டது போல் உணர்ந்தாள். இவள் விரைவாக சாப்பிட்டு முடித்தும்கூட அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ’பில் வந்தால் பரவாயில்லை’ என இவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு ‘பில்’ முதலில் வந்தது. அவர் பணத்தை அட்டைக்குள் வைத்துவிட்டு எழுந்து போனார். அதை எடுக்க வந்த பணியாளரிடம் அவள் தன் பில்லைக் கொண்டுவருமாறு சொல்கையில், ‘இப்போ எழுந்து போகிறாரே, அவர் உங்களுடன் வந்தவரில்லியா, அவர் கொடுத்துவிட்டாரே’ என்றவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பணியாளரை ஓடிப் போய் அவரை கூப்பிட்டு வரச் சொன்னாள்.

அவர் திகைத்து உடனே சமாளித்துக் கொண்டுவிட்டார், ”ஸாரி, மேம். நான் சாப்பிட்டதற்கான தொகை என்றே நினைத்தேன். அதனாலென்ன, பரவாயில்லை, நான் ‘ட்ரீட்’ கொடுத்ததாக இருக்கட்டுமே,” என்றார். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. தன் செலவு தன்னுடையது என்று பிடிவாதம் பிடித்தாள். அப்படி ஆரம்பித்த சந்திப்பு பாரதியும், ஓஷோவும், ரமணரும், அரவிந்தரும், திருமழிசை ஆழ்வாரும், ராஜா இசையமைத்த திருவாசகமுமென இரு வருடங்கள் கரை புரண்டு ஓடிற்று. காட்டாறு எங்கு தொடங்கும், எத்திசையில் பாயும், எப்போது திசை மாறும், எப்போது மறைந்து போகும், யார் சொல்லக்கூடும்? தொடர் நட்பிற்கான, தொடர் உறவிற்கான, எது தன்னிடம் இல்லை என அவள் சிந்தித்து அலுத்துவிட்டாள். அவள் முதன்முதலாகப் பரிசெனப் பெற்றது ஒரு தங்கச் சங்கிலி. அதன் கண்ணிகள் ஒவ்வொரு இடமாக விட்டு விட்டுப் போகையில் அவள் பற்ற வைத்துக் கொண்டேயிருந்தாள், பத்தர் மறுக்கும் வரை.

அதெல்லாம் இருக்கட்டும், இந்த எழுத்து அவருடையதில்லை. மருத்துவர்களைவிட கிறுக்கலான எழுத்து அவருடையது. மேலும், விலாசத்தை ‘டைப் ‘ செய்யும் வழக்கம் உள்ளவர். எழுதுவதைவிட பேசுவதிலல்லவா அவருக்கு விருப்பம் அதிகம்? அவரும் இல்லையென்றால் வேறு யார்?

எதற்கு இந்த சிந்தனை? பிரித்துப் பார்த்தால் தெரிந்து போகிறது. அவள் கூடத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு, பிரிக்கலாம் என நினைத்தாள். சுவரின் ஈரம் முதுகில் ஜில்லென்றிருந்தது. தமிழ் டீச்சர் லஷ்மிகாந்தம் நினைவிற்கு வந்தார். ‘நனை சுவர் கூரை கனைகுரல் பல்லி’ – என்ன ஒரு சொற்றொடர்! அவள்கூட நனை சுவரில் நின்று அந்தக் கடிதத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வாசலில் தேங்கியுள்ள மழை நீரில் தன் முகத்தைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.