Author: பதாகை

நாடக நன்றி

– ஸ்ரீதர் நாராயணன் –

நீள்வரிசையில் நிரப்பி வைத்திருக்கும்
காப்பிக் கோப்பைகளிலிருந்து
ஒன்றை எடுத்து நீட்டுகிறாள்,
கருநீலச் சாயமிட்ட நகங்களுடையவள்.

சதுர சாளரத்தின் வழியே
மின்னி மறையும் முகங்களுக்கு
நன்றியுடனான சிரிப்பை
நகலெடுத்து தருகிறார்.

நகப்பூச்சுக்காரிக்குத் தெரியாது,
நாடக நன்றியில் ஒன்றை
எனக்கானது என நான்
எடுத்து வைத்துக் கொள்வது.

நிறமாற்றம்

ஜிஃப்ரி ஹாஸன்

நிறங்களை மாற்றி மாற்றி
எழுதுகிறது விதியின் பேனை
சூரியனை நீலமாக வரைந்தது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
கடலை வரைந்தது
ஆரஞ்சு நிறத்தில்
நட்சத்திரங்களையும்
இருண்ட கருமை நிறத்தில்
நிலவையும் வரைந்தது
கிளியை கறுப்பு நிறத்திலும்
காகத்தை பச்சை நிறத்திலும் வரைந்தது
கொக்குகளை ஊதா நிறத்திலும்
செவ்வரத்தையை
வெளிர் நீல நிறத்திலும் வரைந்தது
உண்மையின் குரல்கள் மௌனமான
கணப்பொழுதுகளில் விதியின் கைகள் திறக்கும்
சாளரங்களின் வழியே
உலகம் இப்படித்தான்
தன் முகத்தை கணத்துக்குக் கணம்
நிறம் மாற்றிக்கொள்கிறது

அ முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைமுறை சிக்கல்கள் – பாஸ்கர் லக்ஷ்மன்

பாஸ்கர் லக்ஷ்மன்

நான் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில், கென் என்ற ஒரு மிக நல்ல மனிதருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடமிருந்து அமெரிக்க வாழ்க்கை முறைகள் குறித்து பல விஷயங்கள் கற்றறிந்தேன். அவருடைய தந்தை வழிவந்தவர்கள் இத்தாலியையும், தாய் வழிவந்தவர்கள்  போலந்தையும் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர்களுக்கு ஓரளவு இத்தாலி மற்றும் போலந்துடன் தொடர்பு இருந்தது எனவும், தானும் தன் மகளும் முழுமையான அமெரிக்கர்கள் எனவும் சொன்னார். அதிகபட்சம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறையினர்கள் அமெரிக்க கலாசாரத்துடன் ஒன்றி வாழப் பழகிக்கொள்கிறார்கள்  இன வேற்றுமை உணர்வுச் சிக்கல்களைப் பற்றி விவாதித்தபோது “இன்று கடுமையானச் சட்டஙகள் உள்ளன. எல்லா இனத்தவரும் வெளித் தோற்றத்தில் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மனதளவில் வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம் பாராட்டுதல், உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை மறைந்ததாகக் கூற முடியாது. விரைவில் மறையும் வாய்ப்பு குறைவுதான்” என்று கென் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.

. அ.முத்துலிங்கத்தின் “அமெரிக்கக்காரி” படித்தவுடன் நினைவில் வந்தது கென்னுடன் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த உரையாடல்தான். புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர்கள் கடந்து செல்லும் அனைத்தையும் மதியின் வாழ்க்கையில் காண முடிகிறது. பிரச்சினைகளின் தொடக்கம் ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பயன்பாடு. புலம்பெயரும் ஊரைப் பொறுத்து எதிரெதிர் துருவத்தில் அமையும் சீதோஷ்ண நிலைக்கு சரிசெய்து கொள்வதும் கடினமானது. சிறு வயதில் அறிந்தும் அறியாமலும் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சில எண்ணங்களை விடவும் முடியாமல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் ஒருவித குழப்பமான சூழலுடன்தான் முதல் சில துவக்க ஆண்டுகள் செல்லும். மேலும் புதிய கலாச்சாரத்தின் சில நல்ல கூறுகளைக் கடைபிடிப்பதிலும் மனச் சிக்கல்கள் தோன்றுவதைக் காண முடியும். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் குறித்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் விவாதிப்போமே அதே போன்று பேஸ்பால், பேஸ்கட்பால், அமெரிக்க ஃபுட்பால் பற்றிய விவாதங்கள் நடக்கும். முழுவதும் பங்கு பெற முடியாவிட்டாலும், விவாதத்தைப் புரிந்து கொள்ளவாவது  நாம் அந்த விளையாட்டுகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. என் மகன் பள்ளியில் படிக்கும்போது, காலை அவசரத்திலும் இணையத்தில் விளையாட்டு முடிவுகள், அது சம்பந்தமான கட்டுரைகள் படித்து விட்டுத் தான் கிளம்புவான். அவன் வயதொத்த மாணவர்களிடையேயான அழுத்தமே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் மதியின் அறியாமையை அ. முத்துலிங்கம் அழகாக சித்தரித்திருக்கிறார்.

அமெரிக்கக்காரியின் கதைக்களம் 90-களின் இறுதியில் அமெரிக்காவில் நடந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இன வேற்றுமைச் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. என்னுடன் பணிபுரியும் சக அமெரிக்கர் பதினைந்து வயதான தன் பெண்ணிற்கு இன்னும் ஒர் ஆண் நண்பர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். ஆனால் இலங்கையில் வளர்ந்த மதி பதினெழு ஆண்டுகள் தரை பார்த்து நடந்திருக்கிறாள். இந்த கலாச்சார வேறுபாட்டின் விளைவே, மதியால் தன் காதலர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலோ அல்லது காதலர்களைத் தேர்வு செய்வதிலோ வெற்றி காணாமல் இருந்ததற்கான காரணம் எனலாம். தன்னைத் தேடி வந்த மூன்று ஆண்களுக்கும் உறவின் ஆரம்பமாக இருந்தது, மதிக்கு உறவின் முடிவானது. இந்த நாட்டில் குழந்தைகளுடன் கூட தொடர்ந்து உரையாடவும், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தனி மனித சுதந்திரத்துக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இங்கு மதிப்பளிக்கப்படுவதால், அவர்கள் சுதந்திரமாய் முடிவெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், எதையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மதி பெரியவர்களின் சொல்படியும், கட்டளைகளுக்கு அடிபணிந்தும் வாழ வேண்டும் என வளர்க்கப்பட்டவள். புலம் பெயர்ந்தவுடன் சொந்தமாக முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவதில் சங்கடங்களை எதிர் கொள்கிறாள். முதல் காதலன் தன் அறைக்கு அழைத்தவுடன், அவனுடன் உரையாடி அவனைப் புரிந்து கொள்ளவோ அல்லது தன் தரப்பை விளக்கவோ மதி முயலவில்லை. தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்திய மூன்றாவது காதலனுடனாவது இரண்டு மணி நேர கார் பயணத்தில் தன் மனநிலையை விளக்கியிருக்கலாம். இந்த உரையாடல்கள் மூலம் அமெரிக்க வாழ்வின் யதார்த்தாங்களை ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருக்கலாம்.

மதி புலம் பெயர இலங்கையின் உள் நாட்டுப் போரும் ஒரு காரணி. தன் தாயைத் தவிர வேறு உறவும் இல்லை. இலங்கையிலிருந்து அமெரிக்கா வந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே நபர். இத்தனைச் சிக்கல்களிருந்தும் விடுபட்டு தெளிவு பெற மூன்று ஆண்டுகள் மதிக்குத் தேவைப்படுகிறது. மதிக்கு வியட்நாமைச்  சேர்ந்த லாங்ஹன் பிடித்ததற்கு காரணம், அவன் தன்னை படுக்கை அறைக்கு அழைக்காததா அல்லது தனிமையும், சிறிது முதிர்ச்சியும் கொடுத்த புரிதலா? வேறு காரணங்களும் இருக்கலாம். திருமணத்திற்கு பின்பான லாங்ஹன்னின் அன்பும், அரவணைப்பும் மதிக்குத் தன் இலட்சியத்தை அடைய உதவுகிறது.  நான்கு ஆண்டுகளாக குழந்தை பிறக்காததற்கு தான் மட்டுமே காரணம் என்பதால், தன்னைப் பிரிந்து செல்லலாம் என லாங்ஹன் சொல்வதை மதி நிராகரிப்பது கதையில் ஓர் அருமையான தருணம். பொதுவாக அமெரிக்கர்களிடையே திருமண பந்த்ததின் பிணைப்பு மிகவும் மெலிதானது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் என் எண்ணமும் இதையொட்டித் தான் இருந்தது. ஆனால் இருபந்தைத்து வருடத்திற்கு மேல் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக தொடரும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

தன்னால் முடியவில்லை என்றாலும் வியட்நாமியுடன் சேர்ந்து வாழும் இலங்கைக்காரியான தனக்கு ஆப்பிரிக்க இனத்தவரின் விந்தீடு மூலம் பிறக்கும் பெண் குழந்தை கலாச்சார சிக்கல்கள் எதிர்கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் என்பதே மதிக்கு பெரியளவில் நிம்மதியைக் கொடுக்கிறது.

இலக்கியம் பற்றிப் பேசும்போது நாம் பொதுமைப்படுத்திப் பேசுவது இயல்பு. ஆனால், மதி புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினாலும் அவள் அவர்களின் பிரதிநிதியல்ல. இனத்தேசீயவாதம் காரணமாக போர் நிகழ்ந்த இலங்கைச் சூழலில் மதியின் தேர்வுகள் கவனிக்கத்தக்கவை. அவள் வியட்நாமியனைக் காதலித்து மணம் புரிந்து, ஆப்பிரிக்கரின் விந்தணுவை ஏற்று பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். எத்தனை தமிழர்கள் இப்படிச் செய்வார்கள்? தன் பின்னணியையும் தன் தாயகத்தையும் பார்த்து தன் பெண்ணைப் பார்க்கும்போது மதியின் மனநிலை என்னவாக இருக்கும்?

மதி அமெரிக்கக்காரியோ இல்லையோ, அவளை ஒரு தனித்துவம் கொண்ட மனுஷியாகப் படைத்திருப்பதில் அ. முத்துலிங்கம் வெற்றி பெறுகிறார். அதுவே இதை ஒரு உயர்ந்த படைப்பாகவும் ஆக்குகிறது.

oOo

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை

மீட்டெடுக்க முடியாத முகம்

– ஸ்ரீதர் நாராயணன் –

“எனக்கு உதவவும்” என்று
ஒடிசல் எழுத்துகளில்
கோணலட்டையை விலாச அட்டையாக
வைத்துக் கொண்டிருந்தான்.

குளிரும், குத்துப் பார்வைகளும்
விரவிய வெட்டவெளியில்
சகஜமான தோரணையில்
நின்றிருந்தான்.

சில சில்லறைக் காசுகளும்,
ஒரு கோப்பை காப்பியும்,
இரண்டு சிகரெட்டுகளும்,
அரைப்புட்டி சாராயமும்,
அருகில் சென்று கொடுத்திருந்தால்
இரண்டு ஜோக்குகள் கூட
சொல்லி சிரித்திருப்பான்.

எத்தனை நாட்களோ
யாசகம் கொண்டிருந்தவன்
நின்றிருந்த இடத்தில்
மடிந்திருந்த புற்களுடன்,
விலாச அட்டையையும்
நினைவில் மீட்டெடுக்க
முடியாததொரு முகத்தையும்
விட்டுவிட்டுப் போய்விட்டான்.

அலைகளுக்கப்பால்

பானுமதி. ந

அலைகடலில் மிதவைகள் கனவைச் சுமந்து செல்கின்றன. அலைகளை எதிர்த்தும் அவற்றுடன் இசைந்தும்,செல்லும் அவைகள் ஒளிக்கதிரில், புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றன.

வண்ணக் கொடிகள் கட்டிய என் ஓடம் தனித்துத் தெரிகிறது. அதைக் காற்று சீண்டும்போதெல்லாம் கொடிகள் சீறுகின்றன, நிலைக்கு வருவதற்கு தவிக்கின்றன. பறக்காத கொடியில் பார்வை இலயிப்பதில்லை.

இதனுள் மூன்று பெட்டகங்கள் இருக்கின்றன. எல்லாம் உன் பொருட்டுத்தான்; ஒருக்கால் என் பொருட்டாகவும் இருக்கலாம். சொல்லவும், சொல்லாமல் சொல்லவும் எனக்கு நிறைய இருக்கிறது. உனக்கும் இருக்கலாம்? பின்னரும் அக்கரை போனது ஏன்?

மல்லியும், முல்லையும் சேர்ந்து பூத்த அதிசயம் நம் நட்பு. மாதவிப் பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காலை. நீ எதிர் வந்தாய். நான் உன் எதிரில். ஆனால், எதிரியாக வரவில்லை. ஒரு தயக்கப் புன்னகை; தலையசைப்பில் நாம் மீண்டும் எதிரெதிர்.

எனக்குச் சிறு சபலம். என்னுடன் வருவாய் என. நடந்த பாதையில் மீண்டும் பயணிக்க மாட்டாயோ? அப்படியென்றால் அப்பால் அலைகள் தழுவும் கரையை நோக்கி ஏன் சென்றாய்? எனக்கு எதிர்த்திசை என்பதாலா? இந்தப் பிரிவினைகள் நமக்கு இல்லை என்று சொல்ல நான் தவித்தேன். நான் நீயாக நினைத்தபோது நீயும்         நானாக நினைத்திருப்பாய். அது நமது வெற்றி. அதன் நினைவாகத்தான் அந்த பச்சைப் பெட்டகம்.ஆனால் அது நிறையவேயில்லை. இருந்தும் அதிலுள்ள பவள மணிகளை நான் எண்ணிப் பார்க்கையில் என்னுள் உணரும் இன்பம் உன்னிலும் வருகிறதா என இந்தக் கடல் கேட்டு வந்து என்னிடம் சொல்லும்.

எனக்கோ நிறங்கள், ஆசைகள், ஆவல்கள். உனக்கு பிடித்தது வெள்ளை அல்லவா?அதனால்தான் இரண்டாம் பெட்டகத்தில் முத்துக்கள். அது என் இயல்பின் வெளிப்பாடு என்பதும் உனக்குப் பிடிக்கும் என்பதால்தான். நீ வெண்முத்துக்களைச் சேர்த்து உன் மார்பில் அணைப்பதை என் வெண்கொடி நிச்சயம் வந்து சொல்லும். எனக்குத் தெரியும், உன்னால் அனைவர் எதிரிலும் அதை எடுத்து அணிய முடியாதென்று. ஆனாலும் என் வெள்ளைக்கொடி உன் கைவிரல்கள் அதை அளைவதை என்னிடம் மீண்டு வந்து சொல்லும்.

ஏனோ, நாம் அன்றொரு நாள் தற்செயலாக நின்றிருந்த சிறு குளக்கரையோரம் மீண்டும் சென்றேன். அதில் மண்ணெடுத்து கோபி சந்தனமெனக் குழைக்கிறார்கள். வாசனைத் துளி ஏதுமில்லை. கலாபச் சந்தனத்தின் விழைவு இல்லை. மண்ணனிந்த நெற்றி அல்லது நெற்றி அணிந்த மண்ணா?

கோபிகைப் பெண்கள் கூட்டமாக மரணித்த குளம். உனக்குச் சொல்ல நினைத்த அந்தக் கதை இன்னமும் சொல்லப்படவேயில்லை.அந்தக் குறையாத அன்பை வார்த்தைகளால் நான் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் உன் கண்கள் என்னைக் கெஞ்சும்-சொல்லிவிடாதே, நான் மரணப்பட்டுப் போவேன் என்று.

வெராவலில் கண்ணனின் காலில் அம்பு பட்டுவிட்டதாம்; அவன் என்னமோ சிரித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் குழல்தான் காற்றில் மிதந்து அவர்கள் உயிரை உருக்கியது. அவன் இல்லாமல் போவதைத் தாங்காத அந்தப் பெண்கள் இறந்த கோபி தலாபில் உன்னை நினைத்துக் கொண்டு,ஏதோ தோன்றி இந்தக் கடலின் கரைக்கு வந்து அலைகள் மூலம் தோணியில் என் கனவுகளை உனக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன கற்றுக் கொள்ள வந்தாய்? கேத்தி பந்தாரின் மௌனச் சந்துகளில் ஓடியோடி உன்னை அழைத்த குரல் எது? எந்தக் காற்றின் உயிரோசையாய் அதை நீ இனம் கண்டாய்? துறந்தும், மறந்தும், துடிப்பும், தவிப்புமாய் அந்தக் கண்களில் நான் கண்ட துயரம்தான் என்ன? அதை நான் எப்படி உணர்ந்தேன்? அந்தத் துயரை நீ அணை தேக்கிப் பாதுகாப்பது உன் வெற்றி என்று யார் சொன்னார்கள்? தன் வாதையை முழுதும் மௌனமாக சகித்துக் கொள்ளும் வனமிருகமா நீ?

உன் கோட்டைக் கதவுகளை நான் தட்டித் தகர்த்தெறிய உண்மையாக முயலவில்லை. அதன் சிறு பிளவொன்றில் கால் நுழைத்து, உடல் நுழைத்து ஒரு சிலிர்ப்பாக உன் உளம் நிறைக்க விழைந்தேன். யாசகன் கேட்காத உணவை கைகள் கோர்த்து இருத்தி வைத்துக் கொடுக்க ஏன் இந்த விழைவு என என் தன்மானம் தடுத்தது. வண்ணங்களின்  உலகை உனக்குக் காட்ட ஆசைப்பட்டேன்.

மண்ணையே பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கு விண்ணைக் காட்ட வேண்டும். புல் வேய்ந்த குடிசையில் ஒரு வாரமேனும் உன் ஸுஃபி பாடல்கள் என் ஆத்மாவை துளைக்க வேண்டும். ஆகையால்தான் நீல வானை மட்டுமே காட்டும் வெற்றுப் பெட்டகமும் இதில் வைத்துள்ளேன். நீ அதை நிரப்பி அணுப்புவாய் என. நீ சிரிக்கிறாய் என நினைக்கிறேன். வரமாட்டாய் எனத் தெரிந்தும் என் மிதவைகள் பயணப்படுகின்றன.

சிந்து நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறித்து நலுங்கும் நிலாக் கதிர்கள் இன்று மாலை அரபிக் கடலின் மேல் படர்ந்து அடர்ந்து சிவந்து அடங்கிய சூரியனின் கதிர்களல்லவா? இந்தக் கடலலையும் மீறும் அந்த துப்பாக்கி குண்டுகளை நீ இயக்கவில்லை என்று சொல்வதற்காகவாவது வருவாயா?