Author: பதாகை

முன் நின்று கல் நின்றவர்

மூன்று வாரங்களுக்கு முன், சூரியன் பிரகாசமாக புன்னகைத்துக் கொண்டிருந்த ஓர் வேலை நாள். காலை 8:30 மணி. கனத்த போர்வையாக குளிர். வழக்கமாக இந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் கிட்டதட்ட பாதி தூரத்தைக் கடந்து கொண்டிருப்பேன். ஆனால் அன்று இருபது நிமிடங்களாக ஒரே இடத்தில் என் கார் நின்று கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 மைல்கள் கிராமப் பாதையில் போய், பின்னர் ஒரு மோட்டார் சாலையில், பெரு வழிகள் சாலையில் போய் இணையும் சந்திப்பிற்கு ஒரு மைல் தொலைவிற்கு முன்பிருந்தே, கார்கள் தேக்க நிலையில் இருந்தன. அவ்வப்போது மெல்ல ஊர்ந்தன. நானும் சாலையின் இரு புறங்களையும் பார்த்துக்கொண்டே ஊர்ந்தேன்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இந்தச் சாலையில் போய் வந்து கொண்டிருந்தாலும் இப்போது கண்களில் படுபவை இதுவரை படாதவை. வலது புறம் பெரிய புல்வெளி மேடு. மேட்டின் உச்சியில், தூரத்தில், சடசடக்கும் கொடிகள் போல சிறுமரங்கள். சட்டென ஒரு ராட்சச பறவை போல், தாழப் பறக்கும் கிளைடர் விமானம் போல் மேக நிழல், சாலையை, என் காரை, தடவி, கடந்து செல்வதை கவனித்தேன். அது அப்புல்வெளியை அலை அலையாய் நடுக்கிவிட்டு, சாரலாகத் தூவிவிட்டுச் சென்றது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். நிழல் கடந்தவுடன் சூரியன் திரும்ப பிரகாசமாக புன்னகைத்தான்.

புல்வெளி முழுக்க துளிநீர் மின்னிக்கொண்டிருந்தது.

சட்டென இமைப்பன என்ற வார்த்தை தோன்றியது. மின்னி மின்னி தெரிவதை இமைப்பன என்ற வார்த்தையால் கம்பர் குறிப்பிட்டிருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ஒரு குறள் நினைவிற்கு வந்தது. பலமுறை நினைத்து புன்னகைத்துக் கொண்ட குறள்தான் அது.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விசும்பு என்ற சொல்லிற்கு, பொதுவாக மேகம், வானம் என்ற பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதை விண்வெளியாக எடுத்துக்கொண்டு அக்குறள் இன்னொரு திறப்பு நிகழ்த்தியிருப்பதைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

குழந்தை ரயில் வண்டிப் பெட்டிகள் போல் தொடர்ச்சியாய், ஒன்றையொன்றை சிறு முடிச்சுகளால் தொட்டுக்கொண்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்தன. அல்லது ஒரு கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட tags போல.
விசும்பிலிருந்து புல்லும், புல்லிருந்து குறளும், குறளிலிருந்து ஜெமோவும் வந்தபின், இந்த வருடம், 2017 ஜனவரியில் அவர் கோவையில் மூன்று நாட்களாக நிகழ்த்திய “குறளினிது” என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளும் நினைவிற்கு வந்தன.

தேய்வழக்கு – இந்த சொல்லிற்கு உடனடியாக ஓர் உதாரணம் சொல் என்றால் திருக்குறள் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் திருக்குறள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. கொதிக்கும் பஸ்ஸினுள்ளும் கொந்தளிக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் எங்கெங்கும் தென்படுவது ஆச்சரியம்தான்.
திருக்குறளிற்கான உரைகளுடனும் மொபைல் ஆப்களே வந்துவிட்டன. சலிக்கச் சலிக்க, சுற்றிச் சுற்றி எங்கும் தென்பட்டாலும், பொன், பொன்தானே.

குறளை ஒரு கவிதை நூலாக வாசிக்கலாம் என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஜெயமோகன். குறள் நீதி நூல் அல்ல; கவிதை வடிவில் நீதியைச் சொன்ன நூல். அந்த மூன்று நாள் உரைகளின் முக்கிய சாரங்களில் ஒன்று இது. அவரது பார்வைகளில், கட்டுரைகளில், அதிகம் கவனத்தை ஈர்க்காதவைகளில், திருக்குறளைப் பற்றிய பார்வையும் ஒன்று என்பது என் எண்ணம்.

இன்றைய தமிழ் சூழலில், அதிகம் பேசப்பட்ட குறள்களையும் அதிகம் பேசப்படாத குறள்களையும் எடுத்தாண்டு ஆற்றிய மிக முக்கிய உரையானது அது.

அதில் ஒரு குறளை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நடுகற்கள் என்பவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்திருக்கும் ஓர் வழக்கம்.
இங்கிலாந்தில், Stonehenge என்ற இடத்து பிரமாண்ட நடுகற்களை இதுவரை இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்.

என்னை முன் நில்லன்மின் – என்று துவங்கும் ஒரு குறளின் விளக்கங்களின் சாரம்- பகைவர்களே! என் தலைவன் முன் (எதிர்த்து) நிற்காதீர்; அப்படி நின்றவரெல்லாம் தற்போது நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அப்படி மாறப்போகிறீர்கள் என்று பகைவரை எச்சரிக்கை செய்தலாகும்.

என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.

ஜெயமோகன் தர்மபுரியில் வாழ்ந்த வந்த காலத்தில் ஒரு முறை கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், அவரைச் சந்திக்க அங்கு போயிருக்கிறார்.

இருவரும் மாலையில் அதியமான் கோட்டை என்ற இடத்தில் இருக்கும் ஏரிக்கரையில் நின்றிருக்கும் பல நடுகற்களை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். வேறு யாருமே அங்கில்லை. சூரியன் மறையும் நேரம். தன்னை விட மிக நீண்ட நிழல் கொண்ட நடுகற்கள். விளக்க முடியா சோகம் கவ்வும் தருணம். அந் நேரத்தில் கவிஞர், அதியமானை எதிர்த்து நின்றவர்கள் நிற்கும் நடுகற்கள் இவை என இக்குறளை நினைவு கூறுகிறார்.
ஜெயமோகனுக்கு அக்குறள் தரும் திறப்பு வேறு.

இவ்வுலகின் பேரரசன், காலம்தான். மாபெரும் சக்கரவர்த்தி. THE EMPEROR. மாந்தர்கள் அனைவருமே அச்சக்கரவத்தியின் பகைவர்கள்தான். அவன் முன்னால் எவரும் தோற்றே ஆக வேண்டும், கற்களாகத்தான் நின்றே ஆகவேண்டும். எவரும் வெல்ல முடியாது; தப்ப முடியாது. உடல் கொண்டு நிற்பவர், என்றாவது ஒரு நாள் கல் கொண்டு நிற்கத்தான் வேண்டும்.

என் ஐ (அரசன்) முன் நின்று கல்லாய் நின்றவர்….

இப்புவி, காலத்தின் பகைவர்களாகிய நமது நடுகற்களால் நிறைந்திருக்கிறது.

காலந்தோறும் நடந்து கொண்டிருப்பதுதான் இது. ஆனால் குறளின் வடிவில், இந்த திறப்பு நிகழும் போது கண நேரம் உறைந்துவிட்டேன்.

நேரடி விளக்க “கல்லாய்” இறுகியிருக்கும் குறள், உண்மையில் விதையாய், அச்சொற்களின், அவ்வாக்கியங்களின் அனைத்து சாத்தியங்களாகவும் திறக்கும் சிறந்த உதாரணம் இந்த உரை.

எல்லாரும் ஒரு நாள் நடுகல்லாய்தான் போக வேண்டும் என்றாலும் சிலரின் கற்கள் பெரியதாயும் நீண்டதாயும் ஆகின்றன. அவர்களது எண்ணங்களால், செயல்களால், படைப்புகளால்.

இந்தக் குறள் சொற்பொழிவின் இரண்டாம் நாளன்றுதான் வானவன் மாதேவி இயற்கை எய்துகிறார். அதை அன்றைய சொற்பொழிவின் ஆரம்பத்தில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இனி என்றைக்கு, யார், இந்த உரைகளை கேட்கும் போதும் வானவன் மாதேவியைப் பற்றி எண்ணாமல் இருக்கமுடியாது. வானவன் மாதேவியின் கல் நிச்சயம் பெரியதாய், அவரது மனவுறுதியாலும் செயல்களாலும் நிறைந்திருக்கும்.

23 மார்ச் அன்று இயற்கை எய்திய தமிழின் மிக மிக முக்கிய எழுத்தாளர், திரு.அசோகமித்திரன் அவர்களின் கல் அவரது படைப்புகளால் ஆனது. மாலை நிழலைவிட மிக நீண்டதாய், ஆனால் எக்காலத்திலும் குறையா நீளமாயும், உறுதியும் நிறைந்திருக்கும். பிரமாண்டதாய் உயர்ந்திருக்கும்.

உண்மையில் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான். படைப்புலக காட்டில், அவர் ஒரு நிஜப்புலிதான். மிகக் கம்பீரமான புலி. வெளியிலிருந்து புரியாமல் பார்ப்பவர்களுக்குத்தான் அவர் வெறும் புலி வேஷம் கட்டினவர். கல் நின்றவர், பெருங்கல் நின்றவர், அழியா கல் நின்றவர் அசோகமித்திரன். காலமெனும் சக்கரவர்த்திக்கு எதிராய் பெருங்கல்லாய், பேரமைதியாய், கம்பீரமாய் நிற்கிறார் – அவருக்கு வணக்கங்கள்.

அசோகமித்திரனுக்கு ஒரு அஞ்சலி – எஸ். சுரேஷ்

எஸ். சுரேஷ்

அசோகமித்திரனை வாசிக்கும்போது, முதல் பார்வையில் அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதைச் சுலபமாக வரையறை செய்து விடலாம் என்று தோன்றுகிறது. சாதாரண மனிதர்களைப் பற்றி எழுதிய ஒரு யதார்த்தவாதி, என்று சொல்லி விடுகிறீர்கள். அதன் பின் தொடர்ந்து வாசிக்கும்போது உங்கள் பார்வை விரிகிறது, அசோகமித்திரன் பற்றிய உங்கள் கணிப்பும் விரிவடைகிறது. அவர் அபத்தங்களை எழுதியவரா? நம் வாழ்வின் அபத்தம் மிகுந்த கணங்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு வெளிச்சமிட்டவரா? அவரது எழுத்தில் இருத்தலியல் சிக்கல்களுக்கு இடமுண்டா, என்று கேட்டுக் கொள்கிறீர்கள். உங்கள் கேள்விகள் அத்தனைக்கும், ‘ஆம்,’ என்ற பதில் உரத்து ஒலிக்கிறது. அதன் பின் இன்னும் கொஞ்சம் படிக்கிறீர்கள். அவரது கதைகளில் மாயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள். அவரது கதைகளின் வெளி தொடர்ந்து விரிகிறது, ஆனால் அவற்றின் ஒருமைப்பாடு ஒரு போதும் குலைவதில்லை. அசோகமித்திரனை எந்த வகைமைக்குள்ளும் முழுமையாய்ப் பொருத்த முடியாது என்று மெல்ல மெல்ல நீங்கள் உணர்கிறீர்கள். அசோகமித்திரன் நம் வாழ்வைப் பற்றி எழுதினார்- அவரது எழுத்து, வெளிப்பார்வைக்கு மிக எளிமையாகத் தெரிந்தாலும், நம் வாழ்வைப் போலவே சிடுக்குகள் நிறைந்ததாய் இருக்கிறது.

அசோகமித்திரனின் குவிமையம் வெளிச்சமிடுவதுதான், அதை அவர் பலவகைகளில் நிகழ்த்துகிறார். நம் அன்றாட வாழ்வின் அற்ப சந்தோஷங்களில், அச்சங்களில், ஏமாற்றங்களில் அவர் ஒளியூட்டுகிறார். ஒரு சிறு நிகழ்ச்சி மனிதர்களைப் பற்றி நிறைய சொல்கிறது. அவரது கதைகளில் ஒன்றில், கையில் ஒரு பைசா இல்லாத ஒருவன், இருபத்தைந்து பைசா கடன் கேட்க தன் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். அந்தக் காலத்தில் பஸ் டிக்கெட்டின் விலை அது. அவன் தன் நண்பன் வீட்டுக்கு வந்ததும்தான் தெரிகிறது, அவன் வெளியே எங்கோ போயிருக்கிறான் என்பது. அவனது மனைவி காய்கறிக்காரனிடம் ஏதோ வாங்கிக் கொண்டிருக்கிறாள்- அவனுக்கு அவள் பணம் கொடுக்கும்போது ஒரு இருபத்தைந்து பைசா கீழே விழுந்து விடுகிறது, அவள் அதைக் குனிந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். அவன் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். கதை முடிகிறது. அந்தப் பெண்ணின் கையிலிருந்து விழும் இருபத்தைந்து பைசாவில்தான் கதை இருக்கிறது. அவனுக்கு அது கிடைத்தால் போதும், ஆனால் அதை அவன் வாய்விட்டு நண்பனின் மனைவியிடம் கேட்க முடியாது. கதை நம் உள்ளத்தில் தொடர்ந்து விரிகிறது.

இதுதான் அசோகமித்திரனின் தனித்தன்மை. அவரது கதைகள் நம்முள் நிலை கொள்கின்றன, நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன. “புண் உமிழ் குருதி” என்ற கதையில் வருவது போல், அவை நம்முள் ரத்தம் சுரக்கின்றன. இப்போது சொன்ன கதையும்கூட மானுட நிலையை அருமையாக விவரிக்கிறது. உண்மை பிடி கொடுப்பதில்லை. எப்போதும் சந்தேகம் தீர்வதில்லை, முழு உண்மை வசப்படுவதில்லை. ஒரு பெயிண்டர், ஏழை, பஸ் ஒன்றில் பயணிக்கிறான். அங்கு ஒரு முதியவர் அவனிடம் பரிவுடன் பேசுகிறார். பஸ்ஸை விட்டு கீழே இறங்கியதும்தான் அந்த பெயிண்டருக்கு தன் பாக்கெட்டில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிகிறது. முதியவர்தான் தன்னிடம் திருடியிருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். பின்னொரு நாள் எதிர்ப்படும் அந்த முதியவரை வழிமறித்து குற்றம் சாட்டவும் செய்கிறான். ஆனால் அந்த முதியவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார். பெயிண்டர் குழம்பிப் போகிறான். எது உண்மை, அவனது மனக்காயம் ஆறுவதாயில்லை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் நம்மால் நம் வாழ்வை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வில் நிறைய விஷயங்கள் சந்தேகங்களால் செலுத்தப்பட்டிருக்கின்றன. உண்மை என்ன என்று தெரியாமல், ஏதோ ஒரு சந்தேகத்தில், அந்த பெயிண்டரைப் போல் நாமும் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இப்படிதான் வாழ்ந்தாக வேண்டும். போர்சுகீசிய கவிஞர் பெசோவா சொல்கிறார், “ஒரு மனிதன் சொல்வது, வெளிப்படுத்துவது எல்லாமே முழுமையாய் அழிக்கப்பட்ட பிரதியின் விளிம்பில் எழுதப்பட்ட குறிப்பே. குறிப்பில் இருப்பதைக் கொண்டு பிரதியில் என்ன இருந்திருக்கும் என்பதன் சாரத்தை நாம் பெற முடியும், ஆனால் எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, அர்த்தங்களின் சாத்தியங்கள் பல”. இந்தக் கதையை பெசோவாவின் மேற்கோள் கச்சிதமாய் விவரிக்கிறது.

அசோகமித்திரன் சிறு நிகழ்வுகளின் கவிஞன் மட்டுமல்ல. சில கதைகளில், ஒரு சிறு நிகழ்வில் முழு வாழ்வே கண்முன் விரிகிறது. ‘தொப்பி’ கதையில் தன் அப்பா அவமானப்படுத்தப்பட்ட இடத்துக்கு ஒருவன் வருகிறான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான் என்றாலும் அப்பாவுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவன் இதயத்தைப் பிணித்துக் கொண்டிருக்கிறது. கதைச் சூழலும் மொழியும் எனக்கு ரூல்ஃபோவையும் மாய யதார்த்த எழுத்தையும் நினைவுபடுத்தின. இந்தக் கதை மாய யதார்த்த வகை இல்லைதான், ஆனால் ரூல்ஃபோவைப் படிக்கும்போது உங்கள் அனுபவம் எப்படியிருக்கிறதோ அதற்கு மிக நெருக்கமான அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. நம் வாழ்வின் முக்கியமான மற்றொரு இயல்பை இந்தக் கதை வெளிச்சமிடுகிறது. நாம் அனைவரும் ஆறா வடுவொன்றோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரியான பதில் அளிக்க முடியாத ஒரு அவமானம். நம் உயிரைப் பிணிக்கின்றது, முடிவில் நாம் யார் என்பதையும் தீர்மானிக்கின்றது.

“பாவம் டல்பதடோ” கதையும் இப்படிதான். மாயத்தன்மை கொண்ட ஒரு பின்புலம். தன் மகளின் இழப்பை எதிர்கொள்ள முடியாத ஒரு முதியவரின் தவிப்பு. நேரடியான கதையாகவே வாசிக்க முடியும், ஆனால் நான் இதை ஒரு மிகுகற்பனைக் கதையாக வாசிக்க விரும்புகிறேன். இத்தனையும் நிஜமாகவே நடந்ததா, அல்லது நிம்மதி பெற முடியாத ஒருவர் அழிவுக்கெல்லாம் தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைகிறாரா? இந்தக் குறுநாவல் மனதைத் தடுமாறச் செய்யும் ஒன்று, முன் சொன்னது போல், நம்முள் குருதி சுரக்கச் செய்கிறது. இழப்பை வாசகனாலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வுக்கும் சாவுக்கும் உரிய அபத்தம் நம்மைத் தாக்குகிறது – எத்தனை செய்து என்ன சாதித்து என்ன, நம் உணர்ச்சிகள் ஒரு சிலரை மட்டுமே சார்ந்து இருக்கின்றன. அவர்களில் ஒருவரை இழந்தாலும் அதிலிருந்து மீள முடிவதில்லை.

அசோகமித்திரனை அபத்தங்களின் கவிஞன் என்றும் சொல்லலாம். ஏறத்தாழ நிஹிலிசம் என்றே சொல்லப்படக்கூடிய அளவில் ‘பயணம்’ போன்ற கதைகள் வாழ்வின் பொருளையும் நோக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. யோகியும், வழிபாடுகுரியவருமாய் இருந்த ஒரு ஆன்மீக குருவின் வாழ்வு அபத்தமான வகையில் முடிவுக்கு வருவது, வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றையும் குறித்து நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. ‘மணல்’ கதையில் அம்மா திடீரென்று இறந்து போவது சரோஜினி வாழ்வை புரட்டிப் போடுகிறது. ‘இன்னும் சில நாட்கள்’ கதையில் சாமிநாதனின் கதி, ‘மாலதி’ குறுநாவலில் மாலதியின் வாழ்க்கை, பெற்ற குழந்தையின் திருமணத்துக்கு முந்தைய நாள் கணவன் காணாமல் போனபின் அவனது மனைவி வாழும் வாழ்க்கை, எல்லாமே மானுட வாழ்வின் அபத்தங்களைச் சுட்டுகின்றன. யாராலும் தம் விதியை மாற்ற முடிவதில்லை. ஆனால் அசோகமித்திரன் விதி வலியது என்ற நம்பிக்கை கொண்டவரல்ல. அவரது பாத்திரங்கள், சரோஜினியும் மாலதியும் தம் சூழலுக்கு எதிராய் போராடுகின்றனர், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அதுவல்ல அசோகமித்திரனின் அக்கறை. வாழ்வின் தீர்மானமின்மை குறித்து நாம் அறியாதிருத்தல், அதுதான் அவரது மையக் கவலை.

அசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலானவற்றில் கடவுள் இல்லை. அவர் சமயம் பற்றியோ தெய்வநம்பிக்கை பற்றியோ அதிகம் பேசியதில்லை. அது அவரது மைய அக்கறையாக இருந்ததில்லை. சிக்கலான சூழ்நிலைகளில் அகப்பட்டுக் கொள்ளும் பாத்திரங்களைக் காப்பாற்ற கடவுளோ தெய்வ நம்பிக்கையோ கை கொடுப்பதில்லை. மாறாய், அவர் எல்லாவாற்றையும் தர்க்கப்பூர்வமாய் காண்கிறார். அவரது கூர்மையான பார்வையில் கடவுளின் தேவையில்லை. அவர் மனிதர்களை மனிதர்களாய் பார்த்தார். அவர்களை மறைக்கும் அடையாளங்களை அகற்றி அவர்களின் மானுடத்தை வெளிச்ச்சமிட்டார். அதனால்தான் வேலை நியமன உத்தரவு பெற்ற இஸ்லாமியர், லாரி சக்கர ட்யூப்களில் காலணி அணிந்து சாலை போடும் தொழிலாளி, தன் பணத்தை இழக்கும் பெயிண்டர்- யாராக இருந்தாலும் நம் உணர்வுகளைத் தொடுகிறார்கள். அவர்கள் உண்மையாய் இருப்பது அசோகமித்திரன் அவர்களைச் சாதாரண மனிதர்களாய் காட்டுவதால்தான். அடையாளங்களால் பிரிந்து நிற்கும் மனிதர்களாய் அவர்களை பார்க்கிறார்.

இந்த மானுட நேயம்தான் அசோகமித்திரனை குறியீடுகளுக்கு அப்பால் பார்க்கச் செய்கிறது. ஒரு சிறுகதையில், மணப்பெண் தான் காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ளும் நாளன்று தன் முடிவு சரியானதுதானா என்று மீண்டும் தன்னைக் கேட்டுக் கொள்கிறாள். எது மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டுமோ, அது அந்த நாளைய நிகழ்வுகளைத் தொடர்ந்து சுய-ஐயங்களுக்கான கணமாக மாறுவதை அசோகமித்திரன் சித்தரிக்கிறார். இது போன்றதுதான் முதல் முறையாக நடிக்கும் நடிகை பற்றிய கதையும். நடிகையில் அம்மாவைக் கவனிக்கிறார் அசோகமித்திரன், திரையுலகத்தின் அபத்தங்கள் குறித்து அவர் வருந்துவதாய் கதை முடிகிறது.

மொழிபெயர்க்கப்பட்ட அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பின் முன்னுரையில் பால் சக்காரியா, அசோகமித்திரன் கதையின் பெண் பாத்திரங்கள் குறித்து எழுதுகிறார். பெண்கள்பால் அசோகமித்திரனுக்கு உள்ள பரிவு மிகப் பெரியது. அவர்கள் நிலையை அவர் உணர்ந்திருக்கிறார், ஆணைவிட பெண்ணிடமே சமூகம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது. புரிதலால் ஒத்திசைவு ஏற்படுகிறது, இந்த ஒத்திசைவுதான் பாத்திரங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. அசோகமித்திரனின் கருணை கடல் கடந்து, அமெரிக்காவையும் அணைத்துக் கொள்கிறது- அவரது ‘ஒற்றன்’ நாவலில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பெண்கள் புரிந்துணர்வுடன் விவரிக்கப்படுகின்றனர்.

புரிந்துணர்வின் மறுபக்கமாக இன்னொன்று சொல்லலாம் – அசோகமித்திரனின் புரிந்துணர்வு காரணமாகவே அவர் எதையும் காவியத்தன்மை கொண்ட கதையாகப் பார்ப்பதில்லை. ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு காவியத்துக்கு உரிய அத்தனை தன்மைகளும் கொண்டவை. இந்து-முஸ்லிம் பிரிவினை, கொலைகார ரஜாக்கர் இயக்கம், நிஜாமின் சரணாகதி, அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் கலவரங்கள். இது போன்ற ஒரு களம் பல எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும். ஆனால் அசோகமித்திரன், தான் இப்போது வரலாற்றின் அங்கமாய் இருப்பதை அறியாத ஒரு சிறுவனின் பார்வையில் வரலாற்று மாற்றங்களை விவரிக்கிறார். ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ நிச்சயமாக அசோகமித்திரனின் சிறந்த நாவல்தான். இது போன்ற கதைகளை கொந்தளிப்புடனும் சார்புடனும் அணுகும் பிற நாவல்கள் போலில்லாது பதினெட்டாம் அட்சக்கோட்டில் வெளிப்படும் கருணையே அதைத் தனித்துக் காட்டுகிறது. இந்த நாவலின் இறுதிக் கட்டம் மிகவும் உக்கிரமானது. இங்கு இந்தக்க் கதையின் நாயகன் இளம்பருவத்தைக் கடந்து ஒரு முழு ஆணாய் மனதளவில் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள கொடூரத்தை திடீரென்று புரிந்து கொள்கிறான். வெறுப்பு உமிழ்பவர்கள் அனைவரும் படித்தாக வேண்டிய நாவல் இது, குறிப்பாக இதன் இறுதி பக்கங்கள். பிரிவினை மரணம், அழிவு, நம் மானுடத்தின் இழப்பு என்று தீயவைக்கே கொண்டு செல்கிறது. அசோகமித்திரன் இதை மென்மையான குரலில் சொல்கிறார், ஆனால் அது நம்முள் எதிரொலிக்கிறது. அசோகமித்திரனை வாசித்தும் பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, இன்னும் மேன்மையான மனிதர்களாய் நாம் மாறவில்லை என்றால் நம்மிடம் ஏதோ குறையிருக்கிறது என்றுதான் பொருள்.

ராமதூதம்

ரா. ராமசுப்பிரமணியன்

ராமன் பட்டாச்சாரியார் தாடியை மழித்து ஒரு மூன்று வாரங்கள் ஆகிறது. அவரை எப்போது பார்த்தாலும் நன்கு தாடியை மழித்து தலைமுடியில் டை அடித்து வகுடு எடுத்து வாரி நெற்றியில் தென்கலையார் திருநாமமும் ஸ்ரீசூர்ணமும் இட்டுக்கொண்டு இருப்பார். கோவிலுக்கு வருபவர்களுக்கே ஸ்ரீனிவாச பெருமாளை சேவிப்பதா இல்லை பட்டாச்சாரியாரை சேவிப்பதா என்ற குழப்பம் வருமென்றால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் தாடியை மழிக்காமல் சோகத்தில் இருக்கிறார் என்பதற்கு பல காரணம்.

அவர் மகன் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னைக்கு வேலை பார்க்கச் சென்று இரண்டு மாதங்கள் ஆகிறது. வீட்டில் ஓடித் திரியும் ஸ்ரீலக்ஷ்மியும் சமஸ்கிருதத்தில் எம். ஏ. படிக்க சென்னை சென்று மூன்று மாதமாகிறது. முதல் வாரம் வந்தபோது இருந்தது நான்காவது வாரம் வந்த ரகுநந்தனின் தலையில் காணோம். அவன் உச்சித் தலையில் இருந்து நீண்டு வளர்ந்திருந்த பின்சிகையை கிராப் பண்ணிவிட்டான். காலையில் பெருமாள் திருமஞ்சனத்துக்கும் நைவேத்யத்துக்கும் பால் தரும் மதுஸ்ரீயைப் பராமரிப்பதற்கு ஆளில்லாமல் அங்கிருந்து தொழுவத்திற்கு சிவசங்கரன் இழுத்துச் சென்றதும் கோவில் வாசலில் வாட்ச்மேனாக இருந்த சுப்பையா காச நோயால் இறந்த துக்கம்கூட இருக்கலாம்.

காலையில் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய கோவில் கதவைத் திறந்து கொண்டு ஆஜராகும் ராமன் பட்டாச்சாரியார் ஏனோ முகில்வண்ணனிடம் முற்றிலுமாக அதனை விட்டுக் கொடுத்து கோவில் பின்புறத்தில் இருக்கும் தெப்பக்குளத்தைப் பார்த்தபடி நரை கூடிய தலைமுடி காற்றில் அசைந்தாடியபடி உட்கார்ந்திருக்கையில் அம்மங்கார் பில்டர் காபி சொம்பைக் கொண்டு வந்து தரையில் “டொக்” என வைத்ததும் அதில் இருந்து வந்த காபியின் மணம் அவர் அம்மங்காரிடம் அதனைக் கேட்கச் செய்தது.

“முகிலன் வந்தாச்சா?”

“இன்னும் வரலை. வேணும்னா போன் செஞ்சு பாக்கிறேன்”

ராமன் பட்டாச்சாரியார், தமிழ் பண்டிதர். அந்தக் கோவிலில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். காலை மாலை தவிர்த்த தருணங்களில் ஓர் அரசு பள்ளியில் தமிழாசிரியர். அந்தக் கோவில் மூலவர் திருவேங்கடமுடையார் எனப்படும் ஸ்ரீநிவாச பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கூடிய வரதராஜ பெருமாள். மிகவும் சின்ன கோவிலாய்த்தான் இருந்தது. உற்சவர், மூலவர் தவிர்த்து ஓரத்தில் சிறிய திருவடி எனும் அனுமனும், மூலவருக்கு சன்னதிக்கு முன் பெரிய திருவடி எனும் கருடனும் மட்டும்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கருடன் எண்ணையில் ஊறியிருப்பார் என்றால் அனுமன் வெண்ணையிலும் செந்தூரத்திலும். அனுமன் சன்னதிக்கு மேல் அமைந்திருக்கும் வேலைப்பாடுகளில் “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதப்பட்ட காகிதச் சுருள் தோரணங்களும், அதன்கூடவே நூலாம்படை பந்தல்களும் படர்ந்து இருக்கும். இதைத் தவிர உற்சவர் கோவிலுக்குள் பெருமாள் சுற்றி வர ஒரு சின்ன தோளுக்கினியான் எனப்படும் சப்பர பல்லாக்கும் பூஜை பாத்திரங்களும் சொம்புகளும் நிறைந்திருக்கும். கோவிலுக்குள் நுழைகையில் இருக்கும் நடையின் வலது பக்க அறையில்தான் பெருமாளுக்கு தளிகை நடக்கும் மடப்பள்ளி. விசேஷ நாளென்றால் புளியோதரை மணம் கோவில் பிரகாரம் எங்கும் வீசும்.

கோவில் உடமையாளார் திரு. வேணு நாயக்கருக்கு பிசினெஸ் ஓகோ என்று போனது தான் போனது கோவிலுக்கு கோலியனூரில் இருந்து ஆசாரியர் பட்டறையில் இருந்து கருட அனுமந்த வாகனங்கள் வந்திறங்கின. வாகனங்கள் வந்திறங்கிய உற்சாகத்தில் உற்சவம் நடத்தும் உத்வேகம் கூடியது. பத்து நாள் ப்ரஹ்மோற்சவம் என முடிவானதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடியது. பத்துநாள் உற்சவத்துக்கு இரு வாகனத்தில் பெருமாள் ஏளுவது இரண்டு ஆண்டுகளில் பட்டருக்கும் பக்தருக்குமே அலுத்து விட்டதால் உடனே அடுத்து நாகர், சந்த்ர பிரபை, சூரிய பிரபை, வெட்டுங்குதிரை, யானை, அன்ன பக்ஷி வாகனம் வந்திறங்கின. வாகனத்தில் வரதராஜரையே ஏளப்பாடு செய்யவேண்டாமே என்று தான் அடுத்த இரு வருடத்திலேயே ராதே கிருஷ்ண விகிரஹமும், சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமர் விகிரஹங்கள் திண்டிவனத்தில் வார்த்தெடுக்கப்பட்டு வந்திறங்கின. அதன் பின் தான் சில சமயங்களில் அனுமந்த வாகனத்தில் ராமர் ஏள ஆரம்பித்தார்.

சொம்பு நிறைய காபி குடிப்பது தான் ராமன் பட்டாச்சார்யாருக்கு வழக்கம். முன்பெல்லாம் ஏழு மணிக்கே நடை திறந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தபின் ஆபிசுக்கு போக வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு முதலில் வீட்டு பெருமாளுக்கு பூஜை, பின் கோவில் பெருமாளுக்கு திருமஞ்சனம் முடித்து அலங்காரம் செய்து தளிகை நைவேத்தியம் முடிந்தபின் வேலைக்குச் சென்று விடுவார். ரகுநந்தன் படித்துக் கொண்டு இருக்கும்போது வீட்டு பூஜையை சில நேரங்களில் பார்ப்பதும் அவ்வப்போது கோவில் பூஜைக்கு கீழ்சாந்தியாய் வேலை செய்வதுமாக இருப்பான். இப்போது அவனும் இல்லை. முகிலனோ சைக்கிளில் தூரத்தில் இருந்து வரவேண்டும். காபி சொம்பை அடுக்களையில் வைத்து விட்டு ஹாலில் டிவி முன் வந்து அமர்ந்தார். ஹாலில் சுவரில் பெருமாள் படங்கள், கிருஷ்ணர் படங்கள், ராமர் படங்கள், தசாவதாரங்கள், தனி அவதார படங்கள், வைஷ்ணவ ஆசார்யர்கள் படங்கள், திவ்ய தேச மூலவ உற்சவ மூர்த்திகள், ஆழ்வார், வைணவ பெரியார்கள் படங்கள் என பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய்ப் பார்த்து வந்த ராமர் பட்டாச்சாரியாருக்கு ராதே கிருஷ்ணர், கிருஷ்ணர் சத்யபாமா, காளிங்க கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர், புன்னைமர கிருஷ்ணர் எனத் தென்பட்டது. கூடவே ராமர் பட்டாபிஷேக படமும்.

குழந்தை கிருஷ்ணர், தேரோட்டி கிருஷ்ணர், ராதே கிருஷ்ணர் அனைவரும் கடவுள் என இருந்ந்தாலும் ஏனோ ராமர்களில் ராஜாராமனே கடவுள் என வணங்கப்படுவதாய் தோன்றியது. எதிரில் இருந்த ஸ்டூலில் இருந்த ரிமோட்டை அழுத்தியதும் சினிமா பக்தி பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றும்போது சில ஸ்வாமியார்களின் அருளாசிகள் ஓடிக்கொண்டு இருந்தன. திடீர் என்று ஒரு சானலில் “பால கனக மய” என்ற தியாகராஜர் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

அது சினிமா பாடல். கீழே சாகர சங்கமம் என்று படத்துடைய பெயர் போடப்பட்டிருந்தது. தெலுங்கு சேனல். மேடையில் ஒரு பெண் நன்கு பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தாள் . ஓரத்தில் ஒரு பெண் நல்ல கமகத்துடன் பாடுவதாய் பாவனை செய்தாள். பல்லவி முடிந்து சிட்டை ஸ்வரங்கள் வீணையிலும் வயலினிலும் ஒலித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் மிருதங்கம் வாசிப்பவர் முத்தாய்ப்பு வைத்து முடித்தார். இடையில் சிட்டை ஸ்வரம் முடிந்து “ரா… ரா…” என்று அனுபல்லவி ஆரம்பித்தபோது காட்சிகள் மேடைக்கும் சமயலறைக்கும் மாறியதும் மஞ்சு பார்கவியும் கமலஹாசனும் அபிநயம் பிடித்தபடி இருந்தபின் “தேவாதி தேவா ரா.. ரா.. மஹானுபாவா” என்று வரிக்கு கோதண்டம் ஏந்திய ராமரை கமலஹாசன் அபிநயம் பிடித்தபோது அப்படியே ராமரை பார்ப்பது போல் இருந்தது. முகத்தில் மீசை மட்டும் கொஞ்சம் இடித்தது. ஆனால் ராமர் க்ஷத்ரிய தெய்வம் என்பதால் அவருக்கு மீசை உண்டு என்று அவருடைய ராமபக்தி தர்க்கம் செய்தது. பாடல் முழுவதும் முடிந்தபின்னும் பாடலை முணுமுணுத்தபடி அங்கவஸ்திரத்தையும், நூல் துண்டையும் தோளில் போட்டுக் கொண்டு கிணத்தடிக்கு குளிக்கச் சென்றார்.

அந்த கோவிலில் ஒரு மாதத்துக்கு முன்புதான் ப்ரஹ்மோற்சவம் முடிந்தது. பொதுவாய் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஆஸ்தான அத்யந்த பட்டர். ஆனால் அந்த வருடம் முழுக்க ஏதோ ஒரு வகை துக்கம் அவருள். பெருமாள் தெருவில் உலா வந்தபோதுகூட கோஷ்டியில் இல்லாது கோவில் வந்திருந்த பக்த நண்பர்களுடன் அரசியல் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ஏழாம் நாளன்று வேடுபறி உற்சவம் நடந்தபோது பெருமாளின் கால் தண்டையை திருமங்கை ஆழ்வார் பறித்த காட்சி அரங்கேறியபோது கோஷ்டியுடன் சேர்ந்து,

“வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடியுய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெளிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”

என்று பாசுரம் பாடி கண்ணீர் மல்கினார்.

அன்று அதற்காகவே ஒரு நாள் லீவு போட்டுவிட்டு தலையில் டை அடித்து நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டு அவருடைய மஞ்சப்பையில் திவ்ய பிரபந்த புத்தகங்களும், வேத மந்திர மஞ்சரிகளும் எடுத்துக் வைத்துக் கொண்டு செல்போனில் வரும் அழைப்புக்கும், கோவில் வாசலில் வரவிருக்கும் காருக்கும் காத்திருந்தார். அழைப்பு வந்த ஐந்தே நிமிடத்தில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து ஹார்ன் சத்தம் வந்தது. காரின் முன் சீட்டில் ட்ரைவர் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் இருந்தனர். பின் சீட்டில் அமர்ந்த ராமன் பட்டாச்சாரியார் அலுப்பில் கண் அசந்து எழும்பியது திண்டிவனத்தில்தான். காரை விட்டு இறங்கியபின் மேலே ஒரு போர்டில் நீல வண்ண எழுத்துருவில் “திருமுருகன்” என்று எழுதப்பட்டிருந்தது. கீழே “பொற்கொல்லர்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

அந்த இடத்துக்குள் செல்ல ஆரம்பித்தபோது உள்ளிருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. திருமுருகனும் அவருடைய சகாக்களும் சேர்ந்து கொண்டு அந்த பொன்னொளிர் திரவியத்தை மோல்டுகளில் ஊற்றியபோது விராட புருஷனின் அவய லக்ஷணங்களை விவரிக்கும் மந்திரங்கள் ஓதப்பெற்றது. அன்றிலிருந்து ஏழாம் நாள்தான் சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் சமேதராய் கோவிலுக்கு வந்திறங்கினர். வந்திறங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு மாசம் வரும் புனர்பூச நட்சத்திரமன்று ராமருக்கு திருமஞ்சனமும் சிறிய தளியலும் எப்படியாவது நடந்தேறியது. கோவிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வரும் பக்தரை ராமருக்கு செய்ய வைத்து விடுவார். ராமநவமி அன்று பானகமும், நீர்மோரும் அண்டாவில் செய்து பக்தகோடிகளுக்கு தருவார். வரதராஜ பெருமாளுக்கே பொன்னில் ஆபரணம் இல்லை என்றாலும் ராமர் விக்ரஹத்துக்கு பொன்னால் ஆன ஆரம் ஒன்றை வாங்கித்தர வேணு நாயக்கரிடம் வேண்டினார்.

ராமரும் அவருக்கும் நித்யம் அருள் புரிந்தார். ஒவ்வொன்றும் அருளினார். ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்துக்கும் எப்படியாவது ஒரு உபயதாரரை ஏற்பாடு செய்து பட்டாச்சாரியாருக்கு செலவில்லாமல் பார்த்து கொண்டார். அந்த பொன்னால் ஆன ஆரத்தை ராம விக்ரஹத்துக்கு போட்டு பார்த்து அகம் மகிழ்ந்தார் பட்டாச்சாரியார்.

அதன் பின் ஒரு நாள் காலை ஏழு மணிக்கு நடை திறந்து கர்ப்பகிரஹத்துக்கு முன் இருக்கும் சிறு முகப்பில் கண்ணதாசன் எழுதி எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த கிருஷ்ண கானங்களை ஸ்டீரியோவில் ஒலிக்கச்செய்து வால்யூம் திருகை மெல்ல திருகும்போது கோவில் கோபுரத்தில் இருந்த இரு ஒலிபெருக்கிகளில், “கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்,” என்று பாடல் ஒலிப்பது கொஞ்சம் அவருக்கும் கேட்டபோது பக்கவாட்டில் இருந்த சன்னதியின் க்ரில் கதவைச் சேர்த்து பிடித்திருக்கும் பூட்டு எண்ணெய் வழிந்து கொண்டு திறந்தே இருந்ததைப் பார்த்து பதறினார்.
2.

ஸ்டூலில் இருந்த செல்போனில் அழைப்பு.

சற்று நேரத்தில் வாசலில் கார் வந்து நின்றது. காரில் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் வேணு நாயக்கரும் இருந்தனர்.

“கொஞ்சம் தெருமுக்குல இருக்குற பூக்கடைல வண்டிய நிறுத்துங்கோளேன்” என்றபடி காரில் ஏறினார் .

கடையில் இருந்த முண்டாசு கிழவர் பேத்தி கட்டி வைத்திருந்த பூப்பந்தினை ஒரு நீல கலர் ரப்பர் ஷீட்டை விரித்து அதில் அவ்வப்போது தண்ணீரை தெளித்து இருந்ததால் நீர்த் துளிகள் அதில் எஞ்சி இருந்தன.

பட்டாச்சாரியாரை பார்த்து மிகவும் சகஜமாக ஆள்காட்டி விரலை நீட்டி ஒன்றா என்றும் அடுத்த நடு விரலையும் நீட்டி இரண்டா என்றும் கேட்டார் காரில் இருந்து மோதிர விரலையும் சேர்த்து நீட்டி மூன்று என்று பதில் வந்தது. எதிரில் இருந்த பூப்பந்தில் மூன்று முறை முழத்தை அளந்து பக்கத்தில் இருந்த வாழை இலையை மடித்து ஓரத்தில் இருந்த வெள்ளை நூல் கண்டில் இருந்து நூல் இழுத்து அதை சுற்றி நீட்டி , “பதிவு உண்டா சாமி?” என்று கேட்டார்

“உண்டு”

கடையின் மேலிருந்து ஒரு வாழைக்குலையில் இருந்து தனியாக ஒரு வாழைப் பழ சீப்பை பிரித்து அதில் இருந்து இரண்டு பழத்தையும், வெற்றிலையும் களி பாக்கையும் சேர்த்து நீட்டினார் கிழவர் .

கார் உடனே கிளம்பி பஸ் ஸ்டாண்டின் எதிரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்றது.

அறைக்குள் நுழைந்த உடனே வேணு நாயக்கரும், ராமன் பட்டாச்சாரியாரும் இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்தனர்.

ராமன் பட்டாச்சாரியாரின் நெற்றியில் இருந்த நாமத்தை பார்த்துவிட்டு “சாமிக்கு சொந்தூரு ஏது?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அவருடைய காக்கிச் சட்டையில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக்கில் “ஏ. அல்போன்ஸ்” என்ற பெயரைப் படித்து அவருடைய நீண்ட மீசையில் இருந்த ஓரிரு வெள்ளை முடியையும் பார்த்து விட்டு, “திருநெல்வேலி பக்கத்துல ஸ்ரீவைகுண்டம்”

“ஸ்ரிவேண்டமா…. நமக்கு நாசரேத்தில்லா”

ஓரமாய் இருந்த அறைக்கு இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றார். அவருடைய ராமர், லக்ஷ்மணர், சீதை அனுமன் தென்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதுக்கு மேலாக இன்னும் துக்கம் தான் மூண்டது.

லக்ஷ்மணருடைய கோதண்டமும் அதை ஊன்றி இருந்த கையும் முழுவதுமாக உருக்கப்பட்டிருந்தது. ராமருடைய பீடம் வெல்டால் அறுக்கப்பட்டிருந்ததால் சரியாக பெஞ்சில் நிறுவ முடியாமல் சுவரில் சாய்க்கப்பட்டிருந்தது. சீதையும், அனுமனும் மட்டுமே களவாண்டபோது இருந்த அதே உருவில் இருந்தனர்.

கண்ணீர் நிறைந்த முகத்துடன் அல்போன்சை பார்த்தபோது, “சாமி நம்மால மீட்க முடிஞ்சது இம்புட்டுதான். பழங்காலத்து ஐம்பொன் சிலைகள்தான் முழுசா கிடைக்கும். புதுசல்லாம் திருடுறதே ஐம்பொனுல்ல இருக்கிற தங்கத்தையும், வெள்ளியையும் உருக்கி எடுக்குறதுக்குதான”

எதுவும் பேசாமல் மஞ்சப்பையில் இருந்து பூ ஆரத்தில் எடுத்து சில கண்ணிகளை அறுத்து சிலைகளின் கழுத்தில் போட்டு, வெற்றிலை தாம்பூலத்தையும் கதலி பழத்தையும் பெஞ்சில் இட்டு நைவேத்தியம் செய்து விட்டு,

ஆபதாம் அப ஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தானம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாஷனம்
த்விஷதாம் கால தண்டந்தம் ராமச்சந்திரம் நமாம்யஹம்

என்று ஸ்லோகத்தை முணுமுணுத்தார் பட்டாச்சாரியார்.

இரு ஏரிகள்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Two Lakes,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

பூகோள நிகழ்வுகள்
மட்டுமல்ல ஏரிகள்.
பொம்மை உயிர்காட்சியகம் மற்றும்
பொய்யான ஜப்பானிய தோட்டத்தோடு
நிறைந்த ஏரி ஒன்று எனக்குத் தெரியும்.
ஒரு சிகப்பு சாலை சுற்றியிருக்க அது முழுவதுமாகப் பொய்த்தோற்றம். அதன் பிம்பங்களில்
தனித்த வண்டிகள், வாசமான எஞ்சின்கள் மற்றும் ஒரு பெரிய
எஃகு பட்டறை.

ரெண்டாவது ஏரி
மலையடிவாரத்தில் மாசற்று
இருக்கிறது;
இல்லாதது போல். ஒரு பக்கம்
விடுதியில் இறந்த இங்கிலாந்துக்காரர்கள்
புலிகள் மீது அமர்ந்து சீட்டாடுகிறார்கள்.
மீசை முகத்தினூடாக தூசித்துகள்கள் மிதக்கின்றன.
பில்லியர்ட் அறையில் மேஜை சீர்குலையாமல் இருக்கையில்,
ரத்தம் உறைந்த சமையலறை கத்தி
அப்பகுதியின் நாட்டார் கதையில்
பத்திரமாகத் தோன்றியிருக்கிறது.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

காதலுக்குப் பின் காதல் – டெரக் வால்காட் கவிதை தமிழாக்கம்

செந்தில் நாதன்

அந்த நாளும் வரும்
அன்று, மிக்க மகிழ்ச்சியுடன்
உன் வீட்டுக்கு வரும் உன்னை
நீயே வரவேற்பாய், உன் நிலைக் கண்ணாடியில்
ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிச் சிரித்தபடி

வா, வந்து உட்கார், சாப்பிடு என்பாய்.
அந்த அன்னியனை, உன் சுயமாய் இருந்தவனை, மீண்டும் நேசிப்பாய்.
மது ஊற்றிக் கொடு. ரொட்டி வைத்துக் கொடு. உன் இதயத்தை
அதனிடமே திருப்பிக் கொடு, உன்னை வாழ்நாள் முழுக்க

நேசித்த அந்த அன்னியனிடம், எவனை மற்றவர்களுக்காகப்
புறந்தள்ளினாயோ, உன்னை உள்ளும் புறமும் அறிந்த அவனிடம்.
புத்தக அலமாரியிலிருந்து காதல் கடிதங்களை,

புகைப்படங்களை, தாளாமல் எழுதிய குறிப்புகளை, ஒழித்துவிடு.
உன் பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் இருந்து உரித்தெடு.
உட்கார். உன் வாழ்க்கையை ருசித்துத் திளைத்திடு.

oOo

(Derek Walcott எழுதிய Love After Love என்ற ஆங்கில மொழி கவிதையின் தமிழாக்கம். மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த டெரக் வால்காட், 1992 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான வால்காட் கடந்த 17/03/2017 அன்று காலமானார்.

இந்தக் கவிதை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது Sea Grapes கவிதைத் தொகுப்பில் உள்ளது. ”மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும்,உன்னை நீ ஏற்றுக்கொள். உன் வாழ்க்கையை அதன் அனைத்துச் சுவைகளுடன் நீயே ருசி” என்பது இந்தக் கவிதையின் அடிநாதம்)