Author: பதாகை

ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ்

அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க? எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும்? எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்டுல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே?

ஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத்  துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.

அதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும்  மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள்   பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப்   பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி  விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.

வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில்  அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கதாகாலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.

இந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை  விடுகிறது? தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர்  உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

வாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன்  மருமகளைப் போல்,  தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக்  காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது? பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட்டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.

ஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.

சிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும்? புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.

I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all,  we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேரழிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.

இறுதி நிலம்

ஏ. நஸ்புள்ளாஹ்


எனது எல்லாவிதமான அவாவுதலும்
முதல் நிலத்தின் மையப் புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுற்றுக் கிடக்கிறது.
எ்னக்கான நிலமொன்று
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்.

எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அந்நிலத்தில் விளையும்
அப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.

எனது முதல் நிலம்
வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப் பிரியை
என்பதை எனக்குள்ளிருக்கும்
நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின்
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படிதான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்.

எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக் கொண்டு
நான் முதல் நிலத்திலேயே
தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன்
வாழ்வது எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
மன்னிக்க,
நான் என்பது எழுத்துப் பிழை.

 

வேரும் கனியும்

நரோபா

எலிசபெத் கில்பர்ட்டின் இந்த டெட் உரையை அண்மையில் கேட்க நேர்ந்தது. எலிசபெத் நவீன அறிவியல் யுகம் துவங்கிய இந்த ஐநூறு ஆண்டுகளிள் படைப்பூக்கத்தின் பளு தாங்கவியலாமல் மரித்துப் போன படைப்பாளிகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

கருங்கல்லை சுமந்து செல்ல முயலும் தும்பியை போல் எழுத்தாளன் எப்போதும் தன்னை மீறிய கனவுகளைச் சுமந்து சிறகடிக்கிறான். அவனைப் பறக்க செய்யும் படைப்பூக்கமே அவனை மெல்ல அழிக்கவும் செய்கிறது. ‘படைப்பூக்க தடை’ அவனை முடக்குகிறது. நாவலோ கதையோ எங்கோ முட்டிகொள்ளும்போது அவன் பதட்டம் அடைகிறான். மேலும் அவனுடைய முந்தைய படைப்புகளின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து செல்கிறான். இவை எல்லாம் அவனை அழுத்துகின்றன. இயலாமை வாட்டுகிறது.

எலிசபெத், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து தானடைந்த முறையை பகிர்கிறார். பண்டைய ரோமானிய, கிரேக்க வழக்கத்தில் படைப்பூக்கம் வெளியிலிருந்து வந்ததாக நிலவிய நம்பிக்கையை சுட்டி காட்டுகிறார். சாக்ரடிஸ் அதை ‘டிமான்’ என்றழைத்தார். ஒரு டிமான் தனக்குச் சிந்தனைகளை வந்து சொல்லிச் செல்கிறது என அவர் பதிவு செய்கிறார். ரோமானியர்கள் படைப்பூக்கத்தை தனித்த ஆளுமையாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள், அவர்கள் அதை ‘ஜீனியஸ்’ என்றழைத்தார்கள். படைப்பாளிக்கு துணை வரும் ஒரு விசித்திர உயிரினம். படைப்பாளி வழியாக ‘ஜீனியஸ்’ வெளிப்படுகிறது.

ஒரு படைப்பு உருவாக்கத்தில் இப்போது இருவரின் பங்களிப்பு இருக்கிறது. எலிசபெத் எழுதி கொண்டிருக்கும்போது எங்கேனும் தடை ஏற்பட்டால் கைகொள்ளும் யுத்தியை பற்றி சொல்கிறார். ‘கடவுளோ, இல்லை ஜீனியசோ, இல்லை பெயரற்ற எதுவோ, இந்த படைப்பை நாமிருவரும் சேர்ந்தே உருவாக்குகிறோம், என்னளவில் நான் சரியாகவே செய்கிறேன், நீ உன் பங்களிப்பை சரியாக ஆற்றினால் மட்டுமே அது சிறந்ததாக இருக்கும்’ என வாய் விட்டுக் கூறுவாராம். இந்த யுத்தி அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது என்கிறார்.

நவீன அறிவியலின் வளர்ச்சியை ஒட்டி நவீன இலக்கியத்தின் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடியும். நவீன இலக்கியம் படைப்பாளியின் நுண்ணகங்காரத்தை சார்ந்து இயங்குவதாக நம்பப்படுகிறது. படைப்பு எழுத்தாளன் வழியாக வெளிப்படுகிறதா? அல்லது படைப்பாளி அதை முழுவதுமாக உருவாக்குகிறானா? எனும் விவாதம் வெகுகாலமாக இங்கே நிகழ்ந்து வருகிறது. ரோலான்ட் பார்தஸ் ‘எழுத்தாளனின் மரணம்’ எனக் கூறும்போது படைப்பையும் படைப்பாளியையும் குழப்பிக்கொள்ள கூடாது என்கிறார். படைப்பின் வழியாக படைப்பாளியின் அகத்தையும், உள்நோக்கங்களையும் கண்டடைவது வியர்த்தம், அவை எவ்வழியிலும் வாசிப்புக்கு அவசியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இந்திய பின்புலத்தில் நம் மரபிலக்கியங்களை பற்றி சிந்திக்கையில் நம்மிடம் ‘ஜீனியஸ்’ போன்ற கருத்தாக்கங்கள் இல்லையென்றாலும், படைப்பு இறைவனின் ‘அருள்’ என்ற நம்பிக்கை வலுவாக இருந்திருக்கிறது. காளிதாசனைப் பற்றிய கதை ஓர் உதாரணம். அன்னை அவனுடைய நாக்கில் எழுதுகிறாள். அவன் பெரும் படைப்பாளியாக ஆகிறான். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் தானும் அப்படி ஆக நினைத்து அலைந்து திரிந்த அனுபவத்தை சொல்கிறார். ஒரு சிற்றூரின் திண்ணையில் அப்படி கனவும் காண்கிறார். வள்ளுவரின், கம்பரின் தனிப்பட்ட ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் என நமக்கேதும் பெரிதாக கிடைக்கவில்லை. படைப்புக்களை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள். சங்கப் புலவர்கள் தொடங்கி தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எழுதிய கவிராயர்கள் வரை, எழுதியவர்களின் அடையாளம் பூடகமாகவே இருக்கிறது. செயின்ட். பீட்டர் பசிலிக்காவின் ஓவியங்களை தீட்டியவர் மைக்கேல் என்ஜெலோ என நாம் அறிவோம். சித்தன்னவாசல் ஓவியங்களை தீட்டியவர் எவர் என நாம் அறிந்ததில்லை. குடுமியான் மலையின் பிரமிக்கத்தக்க தலைகோலி சிற்பத்தை வடித்த கலைஞன் எவனென்று தெரியவில்லை. காரணப் பெயர்களும், புனைப் பெயர்களும் நம் மரபிலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. வள்ளுவனோ, கம்பனோ எவனென தெரியாததால் வாசிப்பில் நமக்கு என்ன குறைந்தது என கேட்டு பார்க்கிறேன். ஒன்றுமில்லை. தமிழின் நவீன இலக்கிய அலையின் துவக்க முகங்களான பாரதியையும், புதுமைப்பித்தனையும் எண்ணிக் கொள்கிறேன். பாரதியின் கவிதைகள் அளவுக்கே அவனுடைய ‘பித்தன்’ எனும் பிம்பம் நம்மை ஆக்கிரமிக்கிறது. பஷீர் என்றவுடன் படைப்பை மீறி அவருடைய சூஃபி பிம்பமும் இனைந்து கொள்கிறது.

இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இரு வேறு விவாதங்கள் நினைவில் எழுகின்றன. ஒருமுறை ஜெயமோகனோடு திருவண்ணாமலையில் மலைவலம் வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் கேட்டேன், “ஆன்மீகவாதியும் எழுத்தாளனும் எங்கோ ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகிறார்கள். தங்களுக்குள் ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள், ஆன்மீகவாதியும் படைப்பாளியும் வெவ்வேறு வழிகளில் அதை நிறைக்க முயல்கிறார்கள் என தோன்றுகிறது. ந. பிச்சமூர்த்தி அவருடைய நேர்காணலில் இவ்வாறான ஒரு நிலையை பற்றி சொல்கிறார். சொல்லற்று போகும் ஒரு நிலையே தனக்கு உகந்தது என்கிறார். சொற்களில் இருந்து சொல்லற்ற ஒரு நிலைக்கு தாவி விட வேண்டும் என அவர் நினைப்பது சாத்தியமா என தெரியவில்லை. ஆன்மீகவாதி நிறைவை நோக்கி உண்மையிலேயே செல்கிறான், எழுத்தாளன் நிறைவின்மையை மூலதனமாக்கிக் படைக்கிறான், அதைக் கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறான் என நினைக்கிறேன்“, என்றேன்.

ஜெயமோகன் சீறினார். “இது உங்களுக்குச் சொந்தமாக தோன்றியது போல் இருக்கலாம், ஆனால் இது ஒரு நவீனத்துவ சிந்தனை. இந்தச் சிந்தனையின் ஊற்று இருத்தலியலில் இருக்கிறது. இங்கே மரம் இருக்கிறது, அது பூக்கிறது, அது இத்தனை கன அடி சூனியத்தை நிறைக்கிறது என்றா சொல்வீர்கள்? படைப்பு தன்னியல்பாக நிகழ முடியும்,” என்றார்.

ஆட்டிசத்தை பின்புலமாக வைத்து நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு நாவல் பாதியில் முட்டிக்கொண்டது. பெரும் மனவாதையாக இருந்த அச்சமயத்தில் கவிஞர் ரமேஷ் சுப்பிரமணியத்தை ஒரு மாலைப் பொழுதில் பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்தேன். ரமேஷ் ஓவியரும்கூட, பவுத்தத்தில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவரிடம் எனது சிக்கலை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இரண்டு விஷயங்களை கூறினார். “எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்க முடியும். ஒன்று நன்றி அறிவித்தல், இந்த இயற்கையும் வாழ்வும் எனக்கு எத்தனையோ அனுபவங்களை அளித்திருக்கின்றன, என்னை செழுமை செய்திருக்கின்றன, அதற்கு ஓர் எளிய நன்றியாக, ஒரு நிகர் வாழ்க்கையை, ‘போலச் செய்தலை’ திரும்பி அளிக்கிறேன், இதை நம் மரபில் சமர்ப்பணம், அர்ப்பணிப்பு என கூறுவார்கள். இரண்டாவது காரணம், ‘லீலை’, வாழ்க்கையே ஒரு விளையாட்டு, அதில் நாம் படைப்பவையும் ஒரு விளையாட்டு, இந்த விளையாட்டு இல்லை என்றால் வேறொன்றை கைகொள்ளலாம், இதில் துன்புற என்ன இருக்கிறது?”

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களை சொல்லும் பகுதியில் வரும் இரண்டு துதிகள் இந்திய மனநிலையை இயக்குவதாக புரிந்து கொண்டேன்- “ யோகமும், ஞானமும், சாங்கியமும், கல்வியும் சிற்பக்கலை உட்பட அனைத்து கலைகளும், வேதங்களும், சாத்திரங்களும், விஞ்ஞானமும், என அனைத்தும் அந்த ஜனார்த்தனனிலிருந்து உதித்ததே”. மற்றொரு புகழ்பெற்ற துதி- “உடல், வாக்கு, மனம், புலன், புத்தி, இயல்பால் உந்தப்பட்டோ அல்லது சுயத்தின் பொருட்டோ நான் ஆற்றும் அனைத்தும் பிறர் பொருட்டே, அவை அனைத்தும் நாராயணனுக்கே அர்ப்பணம்”

இந்த நம்பிக்கை படைப்பை உருவாக்க, அதன் அழுத்தங்களில் இருந்து படைப்பாளி தன்னை விடுவித்துக் கொள்ள உதவும், உதவியும் இருக்கிறது. ரோமானியர்களின் ஜீனியசைப் போல, கிரேக்கர்களின் டிமானை போல, நம்மை நம்மிலிருந்து விலக்கிக்கொள்ள வந்த ஒரு மிகப் பொருத்தமான வழிமுறைதான் இது போன்ற நம்பிக்கைகள் என தோன்றுகிறது. நவீன படைப்பாளியாக அதிகம் வாசிக்கவும், எழுதவும், படைப்பாற்றலால் வதைபடாமல் இருக்கவும், அங்கீகாரத்துக்கு அப்பால் இயங்கவும், நெடுநாள் வாழவும் நாம் இதை தேர்வதில் என்ன சிக்கல்? அந்த செம்பரான் கல் உண்மையில் தும்பியின் சுமையே இல்லையே?

மீண்டும் அதே கேள்விக்கு வரலாம், படைப்பாளி படைக்கிறானா? அல்லது படைப்பு அவன் வழி நிகழ்கிறதா? இரண்டு நிலைக்கும் இடையிலான ஒரு புள்ளியில் படைப்பு நிகழ்கிறது என எனக்கு தோன்றுகிறது. படைப்பாற்றல் அவன் வழி வரும்போது, அவன் ஏற்கனவே அமைத்திருக்கும் பாதைகளில், அந்த வண்டல்களுடன் சேர்ந்தே வரும் என நம்புகிறேன்.

படைப்பாற்றலை தனக்கு வெளியிலிருந்து வருவதாக உருவகிப்பதிலும், தன்னை ஒரு கருவியாக பாவிப்பதிலும் மேற்சொன்ன வசதிகள் உண்டு. ஆனால் படைப்பாளியின் பொறுப்பு என ஒன்றிருக்கிறதே?. தன் வழியாக வரும் அனைத்தையும் அவன் தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றின் மீது சுமத்த முடியுமா? கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவின்போது எழுத்தாளர் ஹெச். எஸ். ஷிவப்ரகாஷ் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய பசவண்ணா நாடகத்திற்கு வந்த எதிர்ப்பைப் பற்றி கூறினார். மடாதிபதியின் முன் மண்டியிட வைக்க முயன்றார்கள் என்றார். அப்போது ‘எழுத்துச் சுதந்திரம்’ பற்றி எவரோ ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். தீர்க்கமாக “கட்டற்ற எழுத்துச் சுதந்திரத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களின் எதிர்ப்பை நான் புரிந்து கொள்கிறேன், என் எழுத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன், எழுத்தாளன் தனது எழுத்துக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்” என்றார்.

படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும் போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிகாட்டபட்டால் அதை படைபூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது. கட்டற்று எழுத்தாளனுள் வெளிப்படும் ஆற்றலை அவன் மட்டுறுத்தலாமா? அப்படிச் செய்தால் அது போலித்தனமாகாதா? எழுத்தாளனிடமிருந்து வெளிப்படும் அனைத்துமே உண்மையில் கட்டற்ற படைப்பாற்றலின் வெளிப்பாடா? அல்லது அவனது முன்முடிவுகளும், ஊகங்களும், கனவுகளும், கீழ்மைகளும் கலந்தவையா?

எழுத்தாளனாக ஒன்றேயோன்றைச் சுட்ட முடியும், எழுதும்போது வெளிவருபவை அவனை மீறிய ஒன்றாகவே இருக்கிறது. எழுத்தாளனின் ஆற்றல் என்பதும் அதிலிருந்தே பிறக்கிறது. மதிப்பீடுகள் மூலம் மட்டுறுத்தலை கட்டுப்படுத்த முயல்வதென்பது எழுத்தைக் கொல்வதற்கு நிகர். படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் பணிவும், படைப்பிற்கு பொறுப்பேற்கும் நிமிர்வும் கலந்திருக்கும் விசித்திர கலவையில்தான் தனக்கு உண்மையாக இருக்கும் படைப்பாளி எழுகிறான்.

திளைத்தல்

ஸ்ரீதர் நாராயணன்

அம்மாவின் தோளில் தொற்றியபடி
நீரில் துழாவிச் செல்கிறான்
குளத்தின் ஆழப்பகுதி நெருங்க
கிலேசமும் உவகையுமாக
கூக்குரலிடுகிறான்.
தனக்கென ஓர் உலகு கொண்ட
தனித்துவ சிறுவன்..

அவனுக்கு எட்டாத இன்னொரு உலகு
அடுத்த தடங்களில் இயங்குகிறது.

விசிலோசைக்கு ஏற்ப
இராணுவ ஒழுங்கோடு
படபடத்தப்படி போகின்றன
நீரில் தத்தளிக்கும்
பட்டாம்பூச்சிகள்

செந்தோலினி

– ஆகாஷ் சிவா – 

கண்கள் தேடுவது கிடைப்பதில் எப்போதும் சிரமம் இருக்கும், ஆனால் தேடுவதை விட அதிக முக்கியத்துவமான பொருள் கிடைத்தால் அதன் மகிழ்ச்சியே தனி, ஆனால் அனைத்தும் கிடைக்காது சிலவற்றை அதித முயற்சியால் அபகரிக்கவும் வேண்டி வரலாம்.

கலைந்து கிடந்த காகிதங்களில் இருந்த கிறுக்கல்களை மீண்டும் மீண்டும் படித்தேன். எதுவும் நன்றாக இல்லை . கிறுக்கு தாடி எதாச்சும் எழுதுச்சா தெரியலயே, என மனதிற்குள் சொல்லி கொண்டேன். கருமாரி அம்மன் கோயில் விழா பற்றிய மஞ்சள் நோட்டீஸ், ஆண்மை குறைவா?? டாக்டர் சானக்கியனிடம் வாருங்கள் என்ற விளம்பரம், என இவைதான் தாடிக்கு எழுத வசதியானவை. நல்ல காகிதம் வாங்க வசதியில்லை எனவும் சொல்லலாம்.

படிக்க முடிதா, அச்சு அப்படியே பின்னால தெரியுது, இதுல காலரா பேதி வந்த கணக்கு வாத்தி மாறி கையெழுத்து வேற.

‘கத்தி சின்னத்தில் வாக்களிப்பீர்,’ என படத்தோடு இருந்த விளம்பரத்தில் பணத்தாசை பற்றி கவிதை எழுதியிருந்தது, முடிவு பெறாமல். ;அத முடிச்சிருந்தா தேவல. கத்தி படத்தில் நீல மையால் ரத்தம் சொட்டுவது போல் சித்திரம். கிறுக்கு, எழுதறத விட்டுட்டு படம் வரைஞ்சா, இப்போ நாலு நாளுல கதைக்கு எங்க போறது.

மீண்டும் வாசலிற்கு வந்து கடிதத்தை படித்தேன். காற்று பலமாக வீச கடிதத்தை கவனமாக பிடித்து கொண்டேன். மூன்றாம் மாடி என்பதால் சற்று பலமாகவே காற்று வீசும்.

“வரும் தீபாவளி சிறப்பிதழிற்கு உங்கள் கதை ஒன்றை எழுதி தரும்படியும், அதற்கு சன்மானமாக ரூபாய் 55ஐ பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பிதழ் அச்சடிக்க அவகாசம் வேண்டி கதை இம்மாத இறுதிக்குள் வந்து சேர வேண்டும்.

“இப்படிக்கு செந்தோலினி ஆசிரியர்”.

பத்திரிக்கை ஆபிஸில் குமாஸ்தா தாடிக்கு வேண்டியவர், கடிதத்தை கொடுத்து எப்படியாச்சும் கதையை தேத்துமாறு கூறிச்சென்றார்.

55 ரூபா, இந்தாளு எழுதுர கதைக்கு அது ரொம்ப அதிகம் தா, ஆனாலும் இப்ப அது கூட கிடைக்காது போல.

55 ரூபாய் கிடைத்தால் கல்லூரி கட்டணத்தை கட்டி விடுவேன். வயித்துக்கும் வாய்க்கும் ஆகும். மாடியில் இருக்கும் சிறிய குடிசைதான் என்பதால் பிரபலமான எழுத்தாளர் என நம்பி வீட்டுக்காரர் வீட்டை வாடகை இல்லாமல் விட்டு விட்டார். இவரோட நான் சேர்ந்து இருக்கரதால அந்த செலவு மிச்சம். இந்த நேரம் பார்த்து ஊர் சுத்த போய் விட்டான். வழக்கமா போவதுதான். போனா எப்ப திரும்ப வருவார் என தெரியாது, சாதாரணமாக ஒரு வாரம் ஆகும். இப்ப போய் மூன்று நாள் ஆகிவிட்டது.

ஒருவழியாக யோசித்து கதையை நாமே எழுதி கொடுத்திடலாம், தாடிதா எழுதுச்சு என பத்திரிக்கை ஆசிரியர் நம்பி விட்டால் போதும், வழக்கமாக நான்தான எடுத்துட்டு போவேன் கதைகளை, அதனால் அதிகம் சந்தேகம் வராது என்று முடிவு செய்து உள்ளே போய் அமர்ந்தேன். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தரித்திரம் புடிச்ச மேச, தாடி எங்கருந்தோ தூக்கி வந்தது, ஒரு யோசனயும் வர மாட்டுது. வெளிய போய் எதாச்சும் கதை கிடைக்குதா பார்ப்போம் என வீதிக்கு இறங்கி வந்தேன். வீட்டுக்காரர் எதிரில் வந்தார்.

“வீரன் எங்க தம்பி பாத்து நாளாச்சு, பயணம் போயிருக்காறா” என்றார்.

வீர ராஜ விக்ரமன், தாடியோட புனைப்பெயர். கீரையக்கூட வலுவா கிள்ளத் தெரியாது பேரு மட்டும் வீரன்.

“ஆமா, அண்ணே மூணு நாளாச்சு” என்றேன்.

“அவரோட ப்ரெண்ட் ரவிதாசன் இறந்துட்டாரு, வீரன் வந்தா சொல்லிடுப்பா” என்றபடி வீட்டுக்குள் சென்று விட்டார்.

ரவிதாசனா, ஆகா கதை கிடைச்சிடுச்சு. இப்போதுதான் ரிடையர் ஆனார், வயசான கட்ட, பாக்க நிறைய பேர் வருவாங்க எதாச்சும் கதை நிச்சயம் கிடைக்கும்.

ஓட்டமும் நடையுமாக ரவிதாசன் வீட்டிற்கு சென்றேன், வீட்டில் யாருமில்லை, பக்கத்திலிருந்த வீட்டில் கதவை தட்டினேன்.

“ரவிதாசன்” என்று அவர் வீட்டை நோக்கி கை காட்டினேன்.

” எடுத்துட்டு போய்ட்டாங்கபா, இப்போதா, சூரியன் மறைய போதுல்ல” . அதுக்குள்ளயா, என்னங்கடா அவசரம் உங்களுக்கு.

“எப்போ தவறுனாறு” என்றேன்.

“நேத்து ராவுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சுப்பா, காலம்புறதா தெரிஞ்சுது”.

“நெஞ்சு வலியோ?” என்றேன், எப்படி செத்தார் என எப்படி தெரிந்து கொள்வது.

“வலுக்கி விழுந்து அடி பட்டிருக்கும் போல, நமக்கென்ன தெரிது, வந்தவனுங்க பூரா கடங்கொடுத்தவனுங்க, பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு பணமிருக்கானு தேடிருக்கானுங்க வீட்ல, இல்லனதும் தூக்கிட்டு போய்ட்டானுங்க கொழுத்த, ஒரு தகவலும் இல்ல”.

அடடே, பிணத்தை நடுவுல போட்டுட்டு, பணத்த தேடுனாங்களா, காட்சி நல்லா இருக்கே, நேர்ல பாத்திருந்தா வளர்த்து கதை எழுதிருக்கலாம். அதிர்ச்சிகரமான முடிவு அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டே. “சரி, நா அப்போ கிளம்புறேன் ” என்றபடி திரும்பினேன்.

இருட்டத் துவங்கியிருந்தது. மெல்ல மெல்ல வெள்ளை நிறத்தில் காய்ச்சி ஊற்றிய வெள்ளிக் குழம்பாக நிலவு பிரகாசிக்க துவங்கியிருந்தது. முழுதாக சிரிப்பை, மலர்ச்சியை மட்டுமே உடைய முகம். பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டே எல்லையில்லாமல் செல்கிறது அதன் குதூகலம் நிறைந்த புன்னகை.

அதன் பின்பக்கம் எப்படியிருக்கும். துக்கத்தின் எல்லை உடைத்து பாய்ந்து வரும் துன்பக் கடல் போல் பரந்து சோர்வின் உச்சத்தில் உறைந்திருக்குமோ, இல்லை வஞ்சத்தின், அகங்காரத்தின், சிம்மசொப்பனமாக உயர்ந்து வீற்றிருக்கும் நயவஞ்ச முகமாக இருக்குமோ? எதுவானாலும் நாம் காண்பதற்கு முற்றிலும் நேரெதிரான ஒன்று முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

தாடிக்கு இப்படி எதாச்சும் மறைக்கப்பட்ட நேரெதிர் முகம் இருக்குமா. இந்த முகமே பாதிதான் வெளியில் தெரியும். நல்ல மனிதர், சாது, மனதில் உள்ள வலிமையில் கால்பங்குகூட உடலில் தேராது. பத்திரிக்கைகளுக்கு நல்ல கையெழுத்தில் கதைகளை அனுப்பவென்றே என்னை அவருடன் தங்க வைத்து கொண்டார். எனக்குத் தெரிந்தவரை சொந்தமென எதுவும் இல்லை, பணப்பற்று இல்லை, சற்றே அளவுக்கு மீறிய கிறுக்குத்தனம், அனைத்திலும் வித்தியாசமான பார்வை, பொதுவான எழுத்தாள பிம்பம்தான். மொத்தமாக சொல்வதானால் இந்த உலகத்தில் வாழ வழியில்லாமல் அலையும் உயிரி பட்டியலில் நிச்சயம் இடம் உண்டு.

தூரத்தில் யாரோ படுத்திருந்தது தெரிந்தது, நல்ல குடிகாரராக இருக்க வேண்டும், ஒய்யாரமாக படுத்து ஐம்பூதஙகளையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். இவரிடம் எதாச்சும் கேட்டால் கதைக் கரு கிடைக்கலாமென அவரிடம் சென்றேன்.

“யாருய்யா அது, நடுவீதில உருளுரது”.

“கொண்டு போய் உன் வீட்டுல விடுடா, அங்க உருளுர “.

வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது, போதை தலைக்கேறவில்லை, அப்புறம் ஏன் விழுந்திருக்கிறார்.

காலில் பலமான காயங்கள் இருந்தது, தரையில் தேய்த்தெடுத்தது போலிருந்தது, வீங்கி ஈ மொய்த்தபடி, அதை அவ்வப்போது விரட்டி கொண்டிருந்தார்.

“எப்படியா, அடிப்பட்டது” என்றேன்

வானத்தைப் பார்த்து, “டோய் உன்ன விட மாட்டன்டா “.

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன், மூன்று விண்மீன்கள் நானில்லை நானில்லை என தலையசைத்தன.

“யோவ் கேக்குறல சொல்லுயா”.

“யென்ன என்னடா நெனச்ச, நா யாரு தெரியுமா”.

பார்த்தாலே தெரியுது, எதாச்சும் தேரும் பார்த்தா ம்க்கும் .

“யோவ் எழுந்து வீட்டுக்காச்சும் போய் தொல “.

“வூடா, அவள போய் எவன் பாப்பான்”.

சரிதான், குடும்பஸ்தன் வீட்டுல அவன் மனைவியாவது நிம்மதியா இருக்கட்டும், என்று நினைத்தவாறே நகர்ந்தேன்.

தெருமுனையை தாண்டியபோது குடியானவன் புலம்பல் கேட்டது.

“வேணுனே இடிச்சுப் போனா விடுவனா, டோய் தாடிக்காரா”

தாடிக்காரனா, பாதி ஊரு அக்ரகாரம் தா, கிறுக்கு ஊருக்குள்ள வந்திருக்குமோ. தப்பித்து ஓடும் போது இவனைத் தெரியாமல் இடித்து தள்ளியிருப்பாரோ.

வீட்டிற்கு வந்து மேசையில் அமர்ந்து எழுதத் துவங்கினேன், புரியாத மாறி எதாச்சும் எழுதுவோம், செந்தோலினிலா யாரு படிக்குறா.

எப்போது தூங்கினேன் என தெரியவில்லை, பாயில் படுத்திருந்தேன், மேசையில் தாடி அமர்ந்திருந்தான், எழுதிக் கொண்டு, அறை எங்கும் மாமிச வீச்சம் அடித்தது, மூக்கை ஊடுருவி தொண்டையில் சிக்கியது, எழுந்து மேசையிடம் சென்றால் என்ன என தோன்றியது, நரம்புகளை அசைத்து அசைத்து உடலை லேசாக்கி எழுந்தேன், காலில் ஏதோ பிசுப்பிசுப்பாக ஒட்டியது, இருளில் எதுவும் தெரியவில்லை, காலை மடக்கி பார்த்தேன், மேசை மீதிருந்த லாண்டர் விளக்கின் ஒளி பரவிய லேசான காற்றின் குளிரில் காலின் மீது பரவியிருந்த திரவம் இறுக ஆரம்பித்திருந்தது, ஆழ்ந்த கருஞ்சிவப்பு, ரத்தம். மூச்சின் வெம்மை ஏறியது. மேசை அருகே சென்றேன், கத்தியின் முனையிலிருந்து ரத்தம் வழிந்து மேசையில் இருந்து கீழே சொட்டி கொண்டிருந்தது,

நீலப்பேனாவால் வரையப்பட்டிருந்த அந்த கத்தி, தாடி அதையே பார்த்து கொண்டிருந்தார். அதன் அருகே

” நீ துடிக்கும் கடைசி நொடிகளை காண்பேனா
என் கண்கள் உலரும் வரை சிமிட்டாமல்
ஒற்றை கையசைவில், ஒங்கிய ஒரு தள்ளலில்
தீர்ந்து விடலாம் உன் வாழ்வும் என் தாழ்வும்”

பணத்தாசை பற்றிய கவிதை, ரத்தத்தால் தேய்த்து கடைசி வரி எழுதப்பட்டிருந்தது.

லேசான நடுக்கத்தோடு எழுந்தேன், உடல் முழுதும் வியர்த்திருந்தது, லாண்டர் விளக்கின் ஒளியில் கண்கள் கூசியது, மேசையில் நான்தான் அமர்ந்திருக்கிறேன், கதையை முடித்து விட்டு அப்படியே தூங்கி விட்டிருக்கிறேன், முகம் துடைத்துக் கொண்டு பாயை விரித்து படுத்து உறங்கிவிட்டேன்.
தாடி ஆறு நாள் கழித்து வந்தார். புதிய வெள்ளைச் சட்டை, தாடியை மழித்திருந்தார், கையில் பெரிய தூணிப்பை வைத்திருந்தார்.

“என்ன தம்பி கதைய நீயே குடுத்துட்டியா, எங்க காட்டு நா பாக்குர”

“மேஜல இருக்கு, பைல என்ன”

“தூணிடா, உனக்கும் இருக்கு ஒரு சட்ட, வெள்ள போடுவல” என்றபடி உள்ளே சென்றார்.

‘சுற்றல் கணம்’ கதையின் பெயர்.

‘பெரியவரைத் தள்ளி விட்டவன் தாடியை நீவிய படி வெளியேறினான்’, கடைசி வரியைப் படித்தபின் தாடி வெளியே வந்தார் .

நான் ரத்தம் படிந்த கத்தியை பார்த்து கொண்டிருந்தேன்.

‘உன் வாழ்வும் என் தாழ்வும்’. மனதில் சொல்லிக்கொண்டேன், எழுதப்படாத வரி ஆனால் இதைவிட பொருத்தமாக யாரும் எழுதிவிட முடியாது. ரத்தம் வீச்சம் நிறைந்த என் கனவின் படைப்பு.
“நல்லா ஜரூரா இருக்குடா, நல்ல எழுதுர, நான் போய் நம்ம ரவிதாசன் வீட எட்டிப் பாத்திட்டு வந்திடுர, நல்ல மனுசன், தவறிட்டானு கேள்வி பட்ட”, படிகளில் தாடி இறங்கி சென்றார்.

வீட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தி கொண்டேன், மேசை மீது இருந்த துணிப்பையை எடுத்து கீழே வைத்தேன், நான் மட்டும் பயன்படுத்தும் வலது டிராயரை சாவியைக் கொண்டு திறந்தேன், என் சட்டைகளை எடுத்து வெளியே வைத்தேன், கருப்பு முடிக்கற்றைகளான ஒட்டு தாடியை எடுத்து வெளியே வைத்தேன், நான் கண் சிமிட்டாமல் பார்க்க பார்க்க பணக்கட்டுகள் அசையாமல் விறைந்துக் கிடந்தன. ரத்தம் உறிஞ்சிக் குடித்த செந்தோல் பணக்கட்டுகள்.