Author: பதாகை

ஆழ்நிலைப் படிமங்கள்

                               ஐ கிருத்திகா

 

                    ” என்னத்  தெரியிதா……?”

அவள்  குனிந்து  நெஞ்சில்  கைவைத்துக்  கேட்டாள். சிவப்பு கலரில்  பெரிது, பெரிதாய்  பூப்போட்ட  புடவை  கட்டியிருந்தாள். ரத்த  சிவப்பில்  முகத்திலறைகிறமாதிரி  இருந்தது  அவள்  உடுத்தியிருந்த  புடவை.  தெரியும்  என்று  தலையாட்ட  சின்னப்பொண்ணுக்கு  தயக்கமாயிருந்தது. அந்த  முகம்  எப்போதோ  கனவில்  ஒருநொடி  தோன்றி  மறைந்த  முகம்  போல்  அவளுக்குப்பட்டது. மூளையின்  ஞாபக  அடுக்குகளில்  ஒரு  தீர்க்கமான  உருவமாக  அது  பதிந்திருக்காமல்  அலசலாக  இருந்ததில்   சின்னப்பொண்ணு  லேசாக  இதழ்  பிரியாமல்  புன்னகைத்து  வைத்தாள்.

அடுக்கடுக்கான  படிமங்கள்…….ஒன்றன்மேல்  ஒன்றாய்  அடுக்கி  வைக்கப்பட்ட  படிமங்கள். கோப்புகள்  போல்  மூளையில்  ஏராளமான  ஞாபகப்படிமங்கள். அடியிலிருந்து  உருவமுடிந்ததேயொழிய  மேலுள்ளதை  அசைக்கக்கூட  முடியவில்லை.  ரொம்ப  யோசித்தால்  அடுக்குகள்  குலைந்தன. கருப்பு  வெள்ளையில்  சிலதும், வர்ண  சிதறல்களாய்  சிலதும்  கலந்து  கட்டி  நவீன  ஓவியம்  போல  புரியாமல்  குழப்பின.  சின்னப்பொண்ணு  மெதுவாக  கால்களை  நீட்டி  கைகள்  ஊன்றி  இடுப்பை  நகர்த்தி  படுத்துக்கொண்டாள்.

” இது  எப்புடி  சின்னம்மாவுக்கு  வந்துச்சு….?”

சிவப்புப்  புடவை  கேட்க,  அந்த  வீட்டிலியே  இருப்பவள்  முகத்தை  ஒருமாதிரி  வைத்துக்கொண்டு  தலையாட்டினாள்.

“அதான்  அத்தாச்சி  எங்களுக்கும்  புரியல. டாக்டர்ட்ட  அதப்  பத்தி  கேட்டா, இப்பெல்லாம்  இது  ரொம்ப  பேருக்கு  வருதுங்குறாரு.”

அவள்   சொல்லிவிட்டு  எழுந்து  கொல்லைப்பக்கம்  செல்ல, சிவப்புப்  புடவைக்காரி  சின்னப்பொண்ணைப்  பார்த்தாள். சின்னப்பொண்ணு  பார்வையை  தழைத்துக்கொண்டாள். இருவரும்  தன்னைப்பற்றித்தான்  பேசினார்கள்  என்பது  அவளுக்கு  புரியாமலில்லை.

‘ அதென்னவோ  வந்துவிட்டதாக  இவள்  என்னைக்காட்டி  கேட்க, அவளும்  ஆமாம்  சாமி  போட்டாளே. அப்படியென்ன  எனக்கு  தெரியாமல்  நாசூக்காய்  எனக்குள்  வந்து  உட்கார்ந்துகொண்டது….’

யோசித்தவளுக்கு  ஒன்றும்   புரியவில்லை. பேசாமல்   கண்களை  மூடிக்கொண்டாள்.

என்னத்  தெரியிதா  என்று  கேட்டதை  வைத்து  அவள்  ஏற்கனவே  அறிமுகமானவள்தான்  என்கிற  ஐயமில்லா  தீர்மானத்துக்கு  சின்னப்பொண்ணு  வந்திருந்தாள். ஆனால்   யாரென்று  தெளிவாகவில்லை. நிறைய  யார்- கள்  அவளெதிரே  வந்து,  என்னைய  ஞாபகமிருக்கா  என்கிறார்கள். ஒங்க  பேரென்ன  என்று  கூட  கேட்கிறார்கள். அப்போதெல்லாம்  அவளுக்கு  சுருக்கென்று  கோபம்  வருகிறது.

” சி….சின்னப்பொண்ணு…..”   என்கிறாள்  மெலிதாக.

” புருசன்  பேரென்னா…?”

அன்று  வந்த  உயரமான  ஆசாமி  புருவம் உயர்த்தி கேட்க, சட்டென்று  மனதில்  ஒரு  வெளிச்சப்புள்ளி  விழுந்து  அது  அப்படியே  பற்றிப்படர்ந்து  சுடர்  விட்டது.

முகத்தில்  ஆயிரம்  விளக்குகளின்  ஒளி,  கண்களில்  நட்சத்திர  ஜொலிப்பு.

” புருசன்  பேரச்  சொல்லு…”

” பேரு….சொல்லக்கூடாது….”

சின்னப்பொண்ணு  முனகினாள்.

” ஏனாம்…?”

” அது…..அது  அப்புடித்தான்….”

” என்னவோ  போ…ஒந்தலையெழுத்து  இந்தமாரி  ஆவும்னு  நான்  நெனக்கவேயில்ல.”

அவர்  முணுமுணுத்துவிட்டு  துண்டை  உதறி  தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார்.

சின்னப்பொண்ணு  மெல்ல  எழுந்து  வாசல்  பக்கம்  வந்து  நின்றாள். தெரு  வெறிச்சோடிக் கிடந்தது. மாலைவரை  கொளுத்திய  வெயில்  அடங்கி  நிலவு  மெல்ல  எட்டிப்பார்த்த  இரவில்  காற்று  லேசாக        வீசியது . வெக்கை  காற்று. காலடித்தடங்களின்  மிச்சங்களை  சுமந்து  கிடந்த  தெருப்புழுதியில்  அவளின்  பார்வை நிலைத்து  மீண்டது.

” எப்பப்  பாத்தாலும்  கலகலன்னு  பேசிக்கிட்டிருக்கும். எல்லாம்  பழங்கததான். தீவாளிக்கு  அப்பா  வாங்கிக்குடுத்த  சீட்டி  பாவாடைய  கட்டிக்கிட்டு  மத்தாப்பூ  கொளுத்துனது, பதினாலு  வயசுல  வயசுக்கு  வந்தது, புட்டு  சுத்துனது, பள்ளிக்கூடத்துல  வாத்தியார்ட்ட  அடிவாங்குனது, தாமர க்கொளத்துல  நீச்சலடிச்சது, வேப்பம்பழம்  பொறுக்குனது, டென்ட்டு  கொட்டாயில  மணல்  குமிச்சி  ஒக்காந்து  சினிமா  பாத்ததுன்னு  மாத்தி, மாத்தி  எதையாவது  சொல்லிக்கிட்டேயிருக்கும்.”

சற்று  தடிமனான  அவன்  சொல்ல, அந்த  வீட்டிலேயே  இருப்பவள்  தொடர்ந்தாள்.

” ஒரு  குறிப்பிட்ட  காலம் வரைக்கிம்  அத  சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம்   என்  மாமனாரு  பொண்ணுப்  பாக்க  வந்தது, இவுங்கள  கட்டிக்கிட்டது, புள்ளைங்க  பொறந்ததுன்னு  அம்புட்டையும்  வாய்  ஓயாம  சொல்ல  ஆரமிச்சாங்க. அதுவும்  மெல்ல, மெல்ல  கொறஞ்சி  இப்ப  பேச்சே  கெடையாது. ஏதாவது  கேட்டா  யோசனையா  பாப்பாங்க. நாலஞ்சி  தடவ  அழுத்திக்கேட்டா, வாயத்  தொறப்பாங்க. பேருமட்டும்  ஞாவகம்  இருக்கு. கேட்டா  சொல்லிடுவாங்க. மத்ததுக்கு  இஸ்டமிருந்தா  சொல்றது, இல்லாட்டி  வாயடைச்சி  ஒக்காந்துருக்கறது….இப்புடித்தான்  போவுது.”

அவள்  சொல்லிவிட்டு  அமைதியானாள்.

ஒரு  கனத்த  மௌனம்  அடர்த்தியாய்  அங்கு  பரவிக்கொண்டது. அவர்கள்  பேசியதை, தெருவை  வெறித்துக்கொண்டிருந்த  சின்னப்பொண்ணு  கேட்டுக்  கொண்டுதானிருந்தாள். சிலசமயம்  பேச்சை  உள்வாங்கும்  மனம்  அநேக  நேரங்களில்  வெட்டவெளியாய்  வெறிச்சோடிக்கிடக்கும். சுற்றுப்புற  சலனங்களால்  ஒரு  துரும்பளவும்  பாதிப்பு  ஏற்படாதமாதிரி  அவள்  கல்  போல்  அமர்ந்திருப்பாள்.

எல்லோரும்  ஏன்  தன்னைப்பற்றியே  பேசுகிறார்கள்  என்பது  மாதிரியான  ஐயம்  வெகு  அபூர்வமாய்  ஏற்படும். அரவமற்ற  குளத்தில்  ஒரு   சிறு  கல்லை  விட்டெறிந்து  வட்ட  நீர்ப்பரப்புகளை  உருவாக்குவது  போல  உள்  விழும்  ஐயம்  சுழன்று, சுழன்று  மெல்ல  அமிழ்ந்து  போகும். அவள் முன்னே  கேள்விகள்  குவிந்து  கிடக்கின்றன. எளிதான  கேள்விகளும், அதற்கு  எதிர்பார்க்கப்படுகின்ற  தெரிந்த  பதில்களும். எல்லாமே  கடினமான  கேள்விகளாக  அவளுக்குப்  பட்டன. விடை  தெரியாத  மாணவன்  போல்  அவள்  மலங்க, மலங்க  விழித்தாள்.

” ஆரம்பத்துல  சம்பவங்களை  மறப்பாங்க. அப்புறம்  ஆளுங்களை……போகப்போக  பேச, சாப்பிட, குளிக்க…..”

டாக்டர்  சொன்னபோது  சின்னப்பொண்ணு  வெறுமனே  அருகில்  அமர்ந்திருந்தாள். சம்பவங்களின்  நடுவே, உரையாடல்களின்  இடையே, ஒவ்வொரு  காட்சியிலும்  அவள் மூன்றாம்  நபராகவே  இருந்தாள். காட்சிக்கு  சம்மந்தமில்லாத, தொடர்பற்ற  ஒரு  அனாவசிய  ஆளாகவே  அவள்  அங்கு  ஒரு  இடத்தை  ஆக்கிரமித்திருந்தாள்.

அனைத்து  விரல்களும், பார்வைகளும்  தன்னைச்சுட்டுவது  அவளுக்கு  விசித்திரமாயிருந்தது. அதுபற்றி  நிறைய யோசிக்கமுடியவில்லை . மூளையில்  முன்பதிவுகள்  ஏறக்குறைய  அழிந்து  போயிருந்தன. ஒரு  புது  அழிப்பானை  வைத்து  எழுத்துக்களை  அழித்து  காகிதத்தை  வெள்ளையாக்கியது  போல  மேலடுக்குகள்  பளீரென்று  புத்தம்புதியதாய்  பளிச்சிட்டன. அடியிலிருந்தவைகளில் ஒருசில    மங்கலாக, கொஞ்சம்  மக்கிப்போய்  பலவீன  தோற்றம்  காட்டுகின்றன. எதையும்  கூர்ந்து  கவனிக்கமுடியவில்லை. காட்சிகள்  கண்களில்  படிந்த  அளவுக்கு  மனத்திரையில்  பதியவில்லை. சுற்றிலும்  அறிமுகமில்லாத  மனிதர்களாய்  நடமாடிக் கொண்டிருப்பது போல  சின்னப்பொண்ணு  உணரத்தலைப்பட்டதிலிருந்தே  அவளின்  அசைவுகள்  குறைந்தன.

” ஆத்தா  பொழுதுக்கும்  மோட்டுவளைய  வெறிச்சிக்கிட்டே  படுத்துருக்கும். எப்பனாச்சும்  எந்திரிச்சி  வெளில  போயி  தெருவ  உத்துப்பாக்கும். மனசுல  என்னா  நெனக்கிமோ, திரும்ப  வந்து  படுத்துக்கும்.”

அந்த  சிறுபெண்  கவலையோடு  தன்  வயதையொத்த  பெண்ணிடம்  சொன்னாள்.

” எங்காத்தாவுக்கும்  இதே  வயசுதான். ஆனா  அதுக்கு  எல்லாம்  ஞாவகமிருக்கு. இப்பக்கூட  புல்லறுக்க  மத்தப்  பொம்பளைங்களோட  வயக்காட்டுப்பக்கம்  போயிருக்கு.”

” இதுவும்  அப்புடி  இருந்ததுதான….இப்பத்தான்  ஆறேழு  மாசமா  பச்சப்புள்ளையாட்டம்  பேசாம, கொள்ளாம  கெடக்கு.”

இரண்டுபேரும்  சின்னப்பொண்ணை  கைக்காட்டி  பேசிக்கொண்டார்கள்.

” யம்மா….எந்திரிச்சி  ஒக்காந்து  சாப்புடு…”

அந்த  தடிமனான  ஆசாமி  அவளை  மெல்ல  எழுப்பி  அமரவைத்தான். தட்டில்  சுடச்சுட  சோறும், ரசமும் போட்டு  அந்த  வீட்டுக்காரி  அருகில்  வைத்தாள். சோற்றிலிருந்து  ஆவி  மேல்கிளம்பி  நாசியை  வருடிற்று. புழுங்கலரிசிச்சோறுக்கே  உரிய  வாசம்  பசியை  கிளர்ந்தெழச்செய்தது  அனைவருக்கும், சின்னப்பொண்ணைத்  தவிர.

” பாவக்காய  வெங்காயம், தக்காளி  சேத்து  காரப்பொடி  போட்டு  தளதளன்னு  வதக்கியிருக்கேன். ஒங்களுக்கு  ரொம்ப  புடிக்குமில்ல. தொட்டுக்கிட்டு  சாப்புடுங்க.”

அவள்  ஒரு  கரண்டி  காயை  தட்டின்  ஓரத்தில்  வைத்தாள். மஞ்சளும், சிவப்புமாய்  எண்ணெய்  மினுமினுப்போடு  தட்டில்  கிடந்த  பாகற்காயை  பார்த்தவள்  அதை  மெல்ல  ஒதுக்கிவிட்டு  சோற்றை  விரல்களால்  அளைந்தாள்.

” ஒங்களுக்கு  புடி……..”

அவள்  சொல்லவந்ததை  அவன்  சைகை  செய்து  தடுத்தான்.

” வுடு…வேணுங்குறத  சாப்புடட்டும். வெறும்  சோறு  தின்னு  வயிறு  நெறஞ்சாலும்  சரிதான். வரவர  ஒடம்பு  பலகீனமாயிட்டே  வருது. ”

அவன்  குரல்  கரகரத்தது. சட்டென்று  துளிர்த்த  கண்ணீரை  மறைக்க  பார்வையை  தழைத்துக்கொண்டான். சின்னப்பொண்ணு  சோற்றை  கையிலெடுத்தாள். விரலிடுக்கின்  வழியே  பருக்கைகள்  தட்டில்  உதிர்ந்தன. மனவிரிசலுக்கிடையிலிருந்து  சம்பவங்கள்  உதிர்வது  போல  பருக்கைகள்  உதிர்ந்து  கொண்டேயிருந்தன. வாய்க்குப்போனது  ஒரு  சில  பருக்கைகள்  மட்டுமே.

” நான்  வூட்டி  வுடட்டுமா…?”

அவன்  கேட்டான். சின்னப்பொண்ணு  அதிர்ச்சியாய்  பார்த்தாள். அந்நிய  ஆண்  ஊட்டி  விடுவதை  எப்படி  ஏற்றுக்கொள்ள  முடியும்  என்பது  போலிருந்தது  அவளது  பார்வை.

” நான்  வூட்டி  வுடுறம்மா…அப்பதான்  நீ  கொஞ்சமாச்சும்  சாப்புடுவ….”

அவன்  தட்டை  கையிலெடுக்க, சின்னப்பொண்ணு  கையை  நீட்டினாள்.

” வேணாங்க……நானே  சாப்புடுறேன்.”

மெலிதாக  முனகினாள். அவன்  திடுக்கிட்டு  அந்த  வீட்டுக்காரியைப் பார்த்தான்.

” அம்மா  என்னைய  மறந்துருச்சா….?”

” அ….அப்புடித்தான்  நெனக்கிறேன். அதுக்காவ  நீங்க  மனச  வுட்ராதீங்க. இப்புடியெல்லாம்  நடக்கும்னு  டாக்டர்  அப்பவே  சொன்னாரில்ல.”

அவள், அவனைத்  தேற்றினாள். சின்னப்பொண்ணு  உதிர, உதிர  சோற்றை  அள்ளி  வாயில்  போட்டுக்கொண்டாள். செய்யும்  வேலையில்  பற்றில்லாது,  கலைந்த  சிந்தனையுடன்  உண்டதில்  செரித்தது  கொஞ்சம், சிதறியது  அநேகம். சின்னப்பொண்ணை  பார்க்க  வந்தவர்கள்  சொல்லி, சொல்லி  மாய்ந்தார்கள்.

” எடுத்துகட்டி  வேல  செய்யிற  பொம்பள. கலியாணம், காச்சின்னா  ஒடனே  ஓடியாந்துருவா. சமயக்காரனுக்கு  சாமான்  எடுத்து  குடுத்து, பந்தி  கவனிச்சி  ஒரு  கொறை  இல்லாம  பாத்துக்குவா. செஞ்ச  வேல  தொலங்கும். நல்ல  கைராசிக்காரி. இன்னிக்கி  அம்புட்டையும்  மறந்துட்டு  கல்லு  கணக்கா  ஒக்காந்துருக்காளே. இது  அந்த  சாமிக்கே  அடுக்காது.”

ஒரு  பெண்மணி  முந்தானையில்  மூக்கை  சிந்திக்கொண்டாள். எத்தனை  பேர்  வந்து   என்ன  சொல்லி  என்ன….ஒரு  மண்ணும்  சின்னப்பொண்ணுக்கு  விளங்கவில்லை.

உரிக்க, உரிக்க  வெங்காயத்தில்  ஒன்றுமில்லாமல்  போகும். அதுபோல  வரவர நினைவுகள்  உரிந்து, உரிந்து  விழுந்து  கொண்டேயிருந்ததில்  மூளையின்  ஞாபக  அடுக்குகள்  வெற்றிடமாகிக்  கொண்டிருந்தன.

ஒரு  நிலைப்பாடற்ற  தன்மையில், பொருந்தி  போகமுடியாத  சூழலில்  சின்னப்பொண்ணு  அவ்வபோது  அசையும்  ஜடமாக  உட்கார்ந்திருப்பதும், படுப்பதும், எப்போதாவது  எழுந்து  வாசல்  நோக்கி  செல்வதுமாக  இருந்தாள்.

அன்று  அந்த  சிறுபெண்  சின்னப்பொண்ணை  கைப்பிடித்து  வெளியே  அழைத்து  வந்து  அமரவைத்தாள். சித்திரை  வெயிலின்  உக்கிரம்  தணிந்த  இரவுப்பொழுது. வேப்பமரத்தின்  இலைகள்  லேசாக  சலசலத்ததில்  புழுக்கம்  அப்பிக்கிடந்த  சூழ்நிலை  கொஞ்சம் மாறிற்று. நிலவை  மறைப்பதும், விடுவிப்பதுமாக  விளையாட்டுக்காட்டின  மேகக்கூட்டங்கள். சின்னப்பொண்ணு  நிலவை  வெறித்தாள். வரைந்து  வைத்ததுபோல்  வட்டமாக, தேங்காய்  பத்தை  போல்  அவ்வளவு  வெண்மையாக  இருந்தது  நிலவு.

” அது  என்னா  சொல்லு  பாப்போம்.”

அவன்  கைக்காட்டி கேட்டான். அடிக்கடி  பேச்சு  கொடுக்க  சொல்லி  டாக்டர்  சொல்லியிருந்தார். அவ்வளவு  நாட்கள்  அசிரத்தையாக  இருந்தவன்  திடீரென  வேகம்  வந்ததுபோல்  கேள்விகள்  கேட்க  ஆரம்பித்திருந்தான்.

” சொல்லு  ஆத்தா, அது  என்னா….?”

சிறுபெண்  அழுத்தமாக  கேட்டது.

” நெ……லா…..”

குரல்  பிசிறுதட்டி  வந்தது. அவன்   முகத்தில்  ஒற்றைச்சுடர்  ஒளிர்விட்டது.

” அம்மாவுக்கு  நெலா  தெரியிதுடி….”

மகிழ்ச்சியோடு, வேலைமுடித்து  வந்தமர்ந்தவளிடம்  சொன்னான்.

“ மேல  கேளுங்க….”

அவள்  சைகை  காட்ட, சிறுபெண்  கெஞ்சியது.

” நான்  கேக்குறேம்ப்பா…”

” சரி, கேளு…”

” யாத்தா,,,, இது  என்னா……?”

கையில்  அணிந்திருந்த  வளையலைக்  காட்டிக்  கேட்டாள். சின்னப்பொண்ணு  சிலநொடிகள்  அமைதியாயிருந்துவிட்டு,

” வ….ளவி…..”  என்க,

” சூப்பரு…..ஆத்தாவுக்கு  ஞாவகம்  வருது” என்று

சிறுபெண்  துள்ளிக்குதித்து  ஆர்ப்பரித்தது.

” அம்மாவுக்கு  ஞாவக  சக்தி  திரும்புதுடி…”

சந்தோஷித்தவன் கேள்விகள்  கேட்டே  அவளை  பழைய  நிலைக்கு  திருப்பிவிடுவது   என்கின்ற   முனைப்போடு  அடுத்த  கேள்விக்கணையை  அவளை  நோக்கி  வீசினான்.

” நான்  யாரு….?”

சின்னப்பொண்ணு  சுண்டுவிரலைக்  கடித்துக்கொண்டிருந்த  எறும்பை  தூக்கி  தூர  எறிந்தாள்.

” அத்த….சொல்லுங்க, இவுரு  யாரு….?”

அவள், அவனை  தொட்டுக்காட்டி  கேட்டாள்.

” நான்  யாரு….நான்  யாரு……?”

அவன்  பரபரத்தான்.

” நீ………..நீங்க……….”

காற்று  நிரம்பிய   பலூனில் ஒற்றை  ஊசி  ஏற்படுத்திய  வெடிச்சத்தம்  போல  அவனுள்ளே  ஏதோ  சத்தம்  கேட்டது.

அவன்  முகம்  கறுத்து  சிறுத்தது. அதன்பின்  கேள்விகள்  கேட்பதை  அவன்  அறவே  விட்டுவிட்டான். தேய்கின்ற  நிலவு  பவுர்ணமியில்  பிரகாசிப்பதைப்  போல  மாற்றம்  நிகழும்  என்றெண்ணியவனுடைய  நம்பிக்கை  பொய்த்துப்போனது.

கூடத்தில்  கிடந்த  நாற்காலியும், ஒற்றை  மரப்பலகையும்  சின்னப்பொண்ணின்  நேரங்களை  பகிர்ந்துகொண்டன. வெயிலேறிய  மதியப்பொழுதுகளில்  அவள்  வியர்வை  கசகசப்போடு  பலகையில்  படுப்பதும், பின்  மெல்ல  எழுந்து  வந்து  நாற்காலியில்  அமர்வதுமாக  இருப்பு  கொள்ளாமல்  தனித்தியங்கிக் கொண்டிருந்தாள்.

யோசனைகளற்ற  மனவெளியில்  மெலிதான  ஒருபயம்  சன்ன   இழையாக  ஓடிக்கொண்டிருந்தது.

யாரையோ  தேடுவதும், காணும்  முகங்களின்  அந்நியத்தன்மையில்  மருள்வதும்  அவளுடைய  முகக்குறிப்பில்  தெரிந்தது. புடவையிலிருந்து  நைட்டிக்கு  மாறியபோதும், தலை  மழிக்கப்பட்டபோதும்  அவள்  உணர்வுகளில்  சிறுதுளி  மாற்றமுமில்லை.

”   பொடவ  கட்டிக்க  தெரியல. நான்  கட்டி  வுட்டாலும்  காமிக்கிறதில்ல. தல  பூரா  பேனு  எழைய  ஆரமிச்சிடுச்சி. அதான்  மொட்டையடிச்சி  நைட்டிய  போட்டுவுட்டாச்சி…….”

அந்த வீட்டுக்காரி  போனில்  யாரிடமோ  சொல்லிக்கொண்டிருந்தாள். மறுமுனையில்  ஏதோ  கேட்டிருக்கவேண்டும்.

” அதெல்லாம்  எதுவுமே  ஞாவகமில்ல. நேத்திக்கி  நின்னவாக்குல  ஒண்ணுக்கு  போயிட்டாங்க. ரொம்ப  செரமமாத்தான்  இருக்கு. அந்தசாமிதான்  நல்ல  வழி  காட்டணும்.”

அவள்  சொல்லிவிட்டு  பெருமூச்சு  விட்டபடி  போனை  வைத்தாள். சின்னப்பொண்ணு  அவளையே  பார்த்துக்கொண்டிருந்தாள். வரவர  பார்வையின்  நிலைத்த  தன்மையில்  ஒட்டமுடியாமல்   காட்சிகள்  விலகி  நழுவின. நழுவிய  காட்சிகள்  பாதரச  குண்டுமணிகள்  போல  உதிர்ந்து  ஓடின. உள்ளே  எதுவுமற்ற  அந்தகாரம். அமைதியாய்  இருந்தது  மனசு.

 

திடீரென  மூளைக்குள்  மின்மினிப்பூச்சிகள்  பறப்பது  போன்ற  உணர்வு சின்னப்பொண்ணுக்கு. மின்மினிப்பூச்சிகள் அங்கிருந்து      மினுக்கியபடியே  பறந்து  கண்கள்  வழியே வெளியேற, காணும்  வெளியெங்கும்  மின்மினிப்பூச்சிகள்.

“அது  ஒடம்புல  என்னாம்மா  இருக்கு…..பறக்குறப்ப  பளிச்சி, பளிச்சின்னு  வெளிச்சம்  தெரியிது.”

சின்னப்பொண்ணு  கண்களில்  ஆர்வம்  தேக்கி  கேட்க, அவள்  கையை  பற்றியிருந்த  அம்மா  சொன்னாள்.

” அது  ஒடம்புல  வெளக்கு  வச்சிக்கிட்டு  பறக்குதுடி. அதான்  இப்புடி  வெளிச்சமா  தெரியிது….”

” எனக்கு  அத  புடிச்சி  தர்றியாம்மா….?”

” எங்கைகிட்ட  வர்றப்ப  புடிச்சி  தர்றேன்டி.”

அம்மா  அவள்  கன்னம்  திருகி  முத்தமிட்டாள். இளஞ்சூடான  முத்தம். புறங்கையில்  மொதுமொதுவென்று  வெயில்   காய்ந்த நீர்  படுவது  போலிருந்தது

வாசமடிக்காத  வியர்வை  அம்மாவினுடையது. சின்னப்பொண்ணு  ஐந்து  வயதுவரை  தாய்ப்பால்  குடித்தாள். விளையாடிக்  களைத்து  ஓடி வருபவள்  அம்மாவின்  மடியில்  பொத்தென்று  விழுந்து  சட்டை  விலக்கி  பொங்கி  வழியும்  மார்புகளில்  ஒன்றைப்  பற்றிக்கொண்டு  இன்னொன்றில்  இதழ்   பொருத்திக்கொள்வாள். பீரிடும்  அமுது  இரண்டு  நிமிடங்களில்  மணி  வயிற்றை   நிறைத்து  விடும். இன்னொருபுறம்  குடிக்க  தள்ளாடுவாள். அம்மா  விடமாட்டாள்.

” கொஞ்சம்  குடிச்சிட்டுப்  போடி  தங்கம். ”

இழுத்து  வற்புறுத்துவாள்.

” வேணாம்….”

சின்னப்பொண்ணு  தலையாட்டி   ஓடுவாள்.

” அரவயிறு  நொம்புனதும்   எந்திரிச்சிட  வேண்டியது. அப்புறம்  ரெண்டே  நிமிசத்துல  ஓடிவரவேண்டியது. ”

செல்லமாய்  திட்டு  கிடைக்கும். பெரும்  திறப்புக்காக  காத்திருக்கும்  சுரப்பு  விறுவிறுக்கத்  தொடங்கும். அம்மா  தவித்துப்போவாள். பால்  வாசமடிக்கும்  அம்மா. அது  அம்மாவின்  பிரத்தியேக  வாசமாய்  சின்னபொண்ணின்  மனதில்  பதிந்து  விட்டிருந்தது. அம்மா  வேலியோரம்  நின்று  கிளேரியா  மரத்தடியில்  பால்  பீய்ச்சி  விடுவாள். ஒருமுறை  சின்னப்பொண்ணு  பார்த்துவிட்டாள்.

” எனக்கு  வேணும்…..அதுக்கு  ஏன்  குடுத்த…?”

புடவையைப்  பற்றியிழுத்து  தையதக்கா  என்று  குதித்து, குதித்து  அழுதாள். அம்மா  அவளை  வளைத்து  அணைத்துக்கொண்டாள். நார்ப்பட்டின்  மொரமொரத்த  ஸ்பரிசத்தோடு  கூடிய  பால்  வாசம்  வீசிற்று.

” பொழுதுக்கும்  மாராப்ப  நனைச்சிக்கிட்டு…..பாக்க  நல்லாவா  இருக்கு.”

அப்பாவுக்கு  ஏக  கோபம்.

” தானா  வருது. இந்தக்  குட்டியும்  வரவர  சரியா  குடிக்க  மாட்டேங்குது. கொடம்  தண்ணிய  சரிச்சி  வுட்டாப்ல  கொட்டுறத  பாக்குறப்ப  மனசு  பதறுது. அதான்  இப்பெல்லாம்  ஆட்டுக்குட்டிய  தூக்கி  மடியில  போட்டுக்குறேன். அப்படியும்  செலசமயம்  ரவுக்க  நனைஞ்சிடுது.”

குரல்  சன்னஞ்சன்னமாக  ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மாவின்  வாசம் கல்லிடுக்கின்  தேரைப்போல  உயிர்  தப்பி  வளர்ந்து  எட்டிப்  பார்த்து, மனவெளியில்  செஞ்சுடராய்  பற்றிப்  பரவி  கனன்று  தகித்தது.

இரவு  விடிவிளக்கின்  நீல  வெளிச்சம்  பரவிக்கிடந்த  கூடத்தில்  அனைவரும்  ஆழ்ந்த  உறக்கத்திலிருக்க   சின்னப்பொண்ணு  மெல்ல  எழுந்து  உட்கார்ந்தாள்.

” எங்கம்மாட்ட  போவணும்…..எங்கம்மாட்ட  போவணும்….?”

விசும்பத்  தொடங்கினாள்.

 

    

 

 

 

 

                     

 

 

 

 

 

வழிகாட்டி

உஷாதீபன் 

சார் சார் என்று சத்தமிட்டுக் கொண்டே பிளாட்பார நடைவாசிகள் கூட்டத்தில் முன்னேறினான் நல்லதம்பி. என்றுமில்லாமல் அன்று நிறையப் பேர் நடந்து போவதாகத் தோன்றியது. இடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டியிருந்தது. தன்னைத்தானோ என்று சிலர் திரும்பிப் பார்த்தார்கள். உங்களையும் தாண்டி  என்பதாய் சைகை செய்து கொண்டே சார் என்று மீண்டும் அழைத்துக் கொண்டு முன்னால் போனான்.

அடடே நல்லதம்பியா  பார்த்து ரொம்ப நாளாச்சு நல்லாயிருக்கியா? என்றார் வைத்தீஸ்வரன்.

நல்லாயிருக்கேன் சார் காந்தி சிலைலர்ந்து கூப்பிட்டிட்டு வர்றேன். உங்களுக்குக் காதிலே விழலை

அப்டியா  நா ஏதோ சிந்தனைல போய்ட்டிருக்கேன் இந்த டிராஃபிக் இரைச்சல்ல எப்டிப்பா? அது கிடக்கட்டும்  இந்த கூட்டத்துல தள்ளிப் போயிட்டிருக்கிற என்னை எப்டி அடையாளம் கண்டு பிடிச்சே? – சிரித்துக் கொண்டே கேட்டார் வைத்தீஸ்வரன்.

உங்க உயரமும், நடையும் உங்களைக் காட்டிக் கொடுத்திடுமே சார் உங்க தலை பின் பக்கம் இன்னொரு அடையாளம்  சரிதானா?

தலைமுடி அழகாயிருந்து என்ன செய்ய? -தலைக்குள்ளேதான் விஷயம் வேணும்

சார் சார் நீங்கள்லாம் இப்டி சொன்னா எப்டி? உங்ககிட்டதான சார் நாங்கள்லாம் வேலை கத்துக்கிட்டோம் எதுவுமே தெரியாத மண்ணா இருந்தமே சார் உங்கள மாதிரி எல்லாரையும் அரவணைச்சு, பொறுமையா சொல்லிக் கொடுக்கிறதுக்கு இன்னிக்கு யார் சார் இருக்காங்க?

அப்போ இப்பயும் வேலைகளைக் கத்துக்கிற நிலைமைலதான் இருக்கீங்களா? இன்னும் அப்டேட் ஆகலையா? – மீண்டும் சிரித்தார் வைத்தீஸ்வரன்.

கேலி பண்ணாதீங்க சார் ஏதோ ஓட்டிட்டிருக்கோம் அவ்வளவுதான் மாமி எப்டியிருக்காங்க சார் அவங்களும் எம்ப்ளாய்ட் ஆச்சே  டெலிஃபோன்னு சொன்னதா ஞாபகம்

இருக்கா அவளுக்கென்ன? மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மாத்திரைகளை முழுங்கிட்டு சௌகரியமா இருக்கா? ஆனா ஒண்ணு அதைப்பத்தி அவ எப்பயும் குறைப்பட்டுட்டதே கிடையாது  அதுபாட்டுக்கு அது ..வீடு, ஆபீஸ், வேலைன்னு அதெல்லாம் தனி. சுறுசுறுப்பா இயங்கிட்டிருக்கா அதெல்லாம் ஒரு ஸ்பெஷாலிட்டிப்பா சில பேருக்குத்தான் அந்த மாதிரி மனசு அமையும் மனக்குறை இல்லாதவங்கள கடவுள் ஆரோக்யமா வச்சிருப்பான் மனசு பாதிச்சாத்தானே வியாதி, வெக்கை எல்லாம்

அருமை சார் நான் ஒரு வாட்டி உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ மாமி பாயசம் கொடுத்தாங்க ஜவ்வரிசிப் பாயசம் சூப்பரா இருந்திச்சு நீங்க கூட ஜாவா அரிசிதான் ஜவ்வரிசி  ஆயிடுச்சின்னு விளக்கம் சொன்னீங்க  புக்ஸ் நிறையப் படிப்பீங்களே சார் இப்பயும் அதெல்லாம் உண்டா?

இதென்னப்பா இப்டிக் கேட்குற? அது சின்ன வயசுலர்ந்து இருக்கிற பழக்கமாச்சே?

அதுக்கில்ல சார்  புத்தகங்களா அடுக்கியிருப்பீங்க மாசம் ரெண்டுவாட்டி உங்க வீட்டு மொட்டை மாடில, வொயர் இழுத்து லைட் போட்டு  மீட்டிங்கெல்லாம் போடுவீங்க நாங்கூட ஒருதரம் வந்திருந்து கடவுள்  வாழ்த்துப் பாடினேன். எனக்கு ஒரு புக் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சார்?

அடேங்கப்பா ..இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே அது பரிசளிப்பு விழாக் கூட்டமாச்சே  எதையாச்சும் செய்திட்டேயிருக்கணும்பா இல்லன்னா இந்த வாழ்க்கை போரடிச்சிடும் சோம்பேறி ஆயிடுவோம் எல்லாம் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கத்தான்

அதான் சார் உங்க கைக்காசைப் போட்டு செய்திட்டிருப்பீங்களே அது இன்னும் தொடருதான்னு

டிரான்ஸ்பர்ல வெளியூர் போயிட்டேனேப்பா எங்கேருந்து நடத்துறது? இப்போ ரிடையர்ட் ஆயிட்டேன். திரும்பவும் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன் சொல்லி அனுப்பறேன் வருவேல்ல?

கண்டிப்பா சார் . நீங்க இருக்கைல நம்ம ஆபீஸ்ல இருந்தாரே செல்வம்னு அவர் இறந்துட்டார் சார்? உங்களுக்குத் தெரியுமா?

யாரு நம்ப  அஸிஸ்டென்ட் செல்வமா? அய்யனார் டிராவல்ஸ்ன்னு அவர் மாமனார் கூட டிரான்ஸ்போர்ட் வச்சிருந்தாரே அந்தப் பையன்தானே? கான்சர்னு தெரியும்  இறந்துட்டானா? அடப் பாவமே  பெரிய கொடுமைப்பா  ரொம்பச் சின்ன வயசு எல்லா வசதியும் இருக்கு ஆனா பாரு வாழறதுக்குக் கொடுத்து வைக்கல?

இறக்கறதுக்கு ரெண்டு நாள் வரைக்கும் வேலைக்கு வந்திட்டிருந்தார் சார் டிரஷரிக்குக் கூடப் போய் பில் பாஸ் பண்ணிட்டு வந்தாரு சுறுசுறுப்பா இயங்கிட்டிருந்தாரு மறுநா ஆபீஸ் வந்தா இப்டி நியூஸ் ஒரே சோகமாப்  போச்சு சார் உங்களைத்தான் அடிக்கடி சொல்வாரு

அருமையான பையன்ப்பா வேலை கத்துக்கிறதுல எவ்வளவு ஆர்வம் அவனுக்கு? ஒபீடியென்டான பையன் .டிஸிப்பிளினரி கேஸ் டீல் பண்ண எங்கிட்டதான்ய்யா ஓடி ஓடி வருவான் தரவ் ஆயிட்டானே ஸ்டேட்லயே அவன அடிச்சிக்க ஆளில்லேன்னில்ல இருந்தான் தான் சீக்கிரம் செத்துடுவோம்னு தெரிஞ்ச ஒருத்தனோட வேகமா அது? இம்பாஸிபிள் யாருக்கும் அமையாது .மனசு நிறைஞ்ச பையன் அவன்  சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பான் நிச்சயம்

நாங்கள்லாம் உங்க மாணவர்கள்தானே சார் நீங்க க்ளாஸ் எடுக்கலைன்னா எங்க சார் ப்ரமோஷன் எக்ஸாம்லாம் பாஸ் பண்ணப்போறோம்? என்னமாச் சொல்லித் தருவீங்க? உங்களப் போல அக்கௌன்ட் டெஸ்ட் க்ளாஸ் எடுக்கிறதுக்கு இப்ப ஆள் கிடையாது சார் ஒருத்தர் சொல்லித் தறாரு சத்திரம் ஸ்கூல்ல ஊழியர்கள் அட்டெம்ட்தான் போடுறாங்க யாரும் ஒரே சிட்டிங்க்ல பாஸ் பண்றதுல்ல .அந்தக் காலம்லாம் போச்சு சார் இப்ப பணம்தான் முன்னாடி நிக்குது .ஃபீஸ்ஸை ஒவ்வொரு டேர்முக்கும் ஞாபகமா உயர்த்திடுவாங்க அது மட்டும் கரெக்டா நடந்திடும் ஆனா சொல்லித்தர்றது? அதக் கேட்கவே கூடாது

படிக்கணும் பாஸ் பண்ணனும் ப்ரமோஷன்ல போயாகணும்ங்கிறவன் எப்படியும் படிச்சிடுவாம்ப்பா இப்போ நீங்கள்லாம் இல்லே? அக்கறைதான் வேணும் என்னை வேணும்னே வெளியூருக்குத் தூக்கினாங்க  வகுப்பு எடுக்கிறதெல்லாம் நின்னு போச்சு சோர்ந்தா போயிட்டேன்? போடா சொக்கான்னு நாம்பாட்டுக்குக் கிளம்பிப் போகலே? ஒரே மாதிரியாவா இந்த வாழ்க்கை நகரும்? திருப்பங்களும் வரத்தானே செய்யும்? எம்பொண்டாட்டி தனியாத்தான் இருந்தா ..கழியாமயா போச்சு? அதெல்லாம் அவனவன் மனசைப் பொறுத்தது எங்க போனாலும் நம்ப கடமையை நாம சரியாச் செய்யணும்னுங்கிற ஒரே நினைப்புல  இயங்கிறவனுக்கு என்னைக்கும் குறைவு வராதுப்பா  மனசு நிறைஞ்சு வேலை செய்யணும்  வாழ்க்கைங்கிறது பலதும்தானே எல்லாம் கடந்து போகும்

உங்களத்தான் சார் நாங்கள்லாம் வழிகாட்டியா நினைச்சிக்கிறது. நல்லா வேலை பார்க்கணும்ங்கிறதே நீங்க கத்துக் கொடுத்ததுதான் சார் தெரியாததைக் கண்டு பயப்படக் கூடாது, ஓடி ஒளியக் கூடாது, பொறுப்பைக் கை கழுவக் கூடாது  கஷ்டப்பட்டுக்  கத்துக்கணும்னு அடிக்கடி நீங்க சொல்வீங்க..அப்டி வளர்ந்தவங்க சார் நாங்க உங்க  கெய்டென்ஸ் இல்லன்னா நாங்கள்லாம் இந்த சிட்டில நிற்க முடியாது சார் அவ்வளவு போட்டா போட்டி யாரை எப்போ எங்கே தூக்குவாங்களோங்கிற பயம்  ஒரே அரசியல் உள்ளே  அதையும் மீறி நிலைச்சு நிற்கிறோம்னா,   அதுக்குக் காரணம் எங்க வேலைல நாங்க காண்பிக்கிற அக்கறைதான் சார் அந்தத் திறமையை எங்களுக்குள்ளர்ந்து வெளில கொண்டு வந்தது நீங்க எங்களை வடிவமைச்சது நீங்க உங்களை எங்க யாராலயும் மறக்கவே முடியாது சார் எங்க குருன்னா அது  நீங்கதான்

அடேயப்பா புகழ்ச்சி ரொம்ப பலமா இருக்கே? அப்டியெல்லாம் சொல்லிக்க வேண்டாம் நான் என் கடமையைத்தானே செய்தேன். இப்போ நீங்க  இதைச் சொல்ற போது மனசுக்கு எவ்வளவு திருப்தியா இருக்கு. அது போதும்.  இதுக்குத்தான் உழைக்கிறது ஆத்ம திருப்தி .ஒரு மனுஷனுக்கு இதெல்லாம்தான் சாதனை, சமாதானம்  சந்தோஷம் அவனவன் மனசளவுல திருப்தியா இயங்கினா, ஆரோக்கியமா இருக்கலாம் ஆல் தி பெஸ்ட் பார்த்தியா பேசிட்டே இங்க போஸ்டாபீஸ் வரைக்கும் வந்திட்டோம் அதுவும் நல்லதுக்குத்தான் மினி பஸ் வரும் நான் ஏறிப் போயிடறேன் ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்க ஞாபகம் இருக்கில்லியா? வள்ளுவர் காலனி – ஸ்ருதி இல்லம்

நல்லா ஞாபகம் இருக்கு சார் பெண் குழந்தை இல்லைன்னு வீட்டுக்கு இந்தப் பேரு வச்சதாச் சொல்லியிருக்கீங்களே

பஸ்ஸில் ஏறி அமர்ந்து, நல்லதம்பியை நோக்கிக் கையசைத்தார் வைத்தீஸ்வரன். கண்களில் நீர் பளிச்சிட்டது. இன்னும் நிறையப் பேசணும் இன்னொரு நாள் சந்திப்போம்..- அவர் கத்துவது இவன் காதில் விழுந்தது.

பஸ் கிளம்பி மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்தது  பாசமான மனுஷன்  ஆள் சோர்ந்துட்டாரே? நினைத்தவனுக்கு, சுரீரென்று மூளையில் ஏதோ உரைத்தது. எதைக் கேட்க வந்தோமோ அது விட்டுப் போச்சே? தலையில் பலமாய்க் குட்டிக் கொண்டான் நல்லதம்பி. வண்டி மறைந்து விட்டது. அவராகச் சொல்வார் என்ற நினைப்பில் எதிர்பார்ப்பில் எப்படிக் கேட்காமல் விட்டேன்?

மனைவி காலமாகி ஒரு மாதம்போல்  கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளவில்லையே? துக்கம் அடங்கிக் கிடக்கிறதோ? மகன் குடும்பத்தோடு வெளி நாட்டில். சாவுக்கு  வரவில்லை என்று கேள்வி.  ஆள் இப்போ தனிக்கட்டை? அடக் கடவுளே

தனக்குப் பையன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர மறந்து போனதை எண்ணியவாறே குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தான் நல்லதம்பி. அவரைக் கண்ட,  பேசிய திருப்தியே இந்த இரண்டையும் மறக்கடித்து விட்டதோ?  துளியும் ஞாபகம் வரவில்லையே?

 

————————————

 

 

 

 

 

தாயம்

 

                வேல்விழி மோகன்                                  

                அந்த தாய விளையாட்டுக்கு பிறகு அவர் சோர்ந்து போனார்.  அவர் அங்கிருந்த நான்கைந்து நபர்களும் கிளம்பி போன பிறகு அந்த கோவில் திண்ணையில் அந்த தாய கோடுகளுக்கு பக்கத்தில் தூசியாகி இருந்த இடத்தில் தனது துண்டை நாலு தட்டு தட்டி ஒரு பக்கமாக படுத்துக்கொண்ட போது அந்த சின்ன தடுப்பை தாண்டி அடுப்பை நோண்டிக்கொண்டிருந்த பெரியம்மா “உக்கும்” என்றாள். அவளுக்கு கோவிலில் படுப்பது தாயம் விளையாடுவது எல்லாம் பிடிக்காது.  ஆனால் அந்த கூட்டத்தில் அவளுடைய வீட்டுக்காரனும் ஒருத்தன். கிழவனுக்கு வேற என்ன வேலை என்று உள்ளுக்குள் முனகிக்கொள்வாள். அவர் இவள் இங்கு அடுப்பு வைக்க வரும்போது கூட்டத்திலிருந்து கிளம்பிவிடுவார். இப்போது கிளம்பிப் போனவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் நேராக அந்த குழந்தைகள் பள்ளிக்கு அருகில் மரத்தடியில் இன்னொரு கூட்டத்துடன் சேர்ந்திருப்பார் என்பது அவளுக்கு தெரியும். சாம்பலும் தூசியுமாக இருந்த அடுப்பை சரி செய்து ஒரு ஓரமாக தள்ளிவிட்டு அதை வாரி சற்று தூரத்தில் இருந்த குப்பையில் கொட்டிவிட்டு அக்கம் பக்கம் அந்த வீடுகளை பார்த்தவாறு மீண்டும் அடுப்பு பக்கமாக வந்து உட்கார்ந்து விறகுகளை வைக்க ஆரம்பித்தாள். திரும்பி பார்த்தபோது அந்த கோவிலின் மூடிய கதவுக்கு வெளியே வழக்கமாக அந்த கருப்பு நாய் படுத்திருப்பதும் சற்று ஓரத்தில்  அந்த பக்கம் தடுப்புக்கான நிழலில் அது கண்களை மூடியபடி இருப்பது தெரிந்ததும் இவள் முதல் இரண்டு புட்டை அதற்கு தருவதற்கான காத்திருப்பு இன்றைக்கு இருக்காது என்கிற நிம்மதியில் ஒரு காகிதத்தை பற்ற வைத்து விறகுகளுக்கு நடுவில் வைத்து ஒன்றிரண்டு ஓலைகளை உடைத்து போட்டபோது அது நிதானமாக பற்றிக்கொண்டது.

அப்போது அவரிடமிருந்து குறட்டை சத்தம் வருவது போல தெரிந்ததும் “உருப்புட்ட மாதிரிதான்” என்று முனகியபடி அடுப்பின் புட்டு கல்லை வைத்து இரண்டு வீடுகள் தள்ளி ஏதோ ஒரு பாட்டு கேட்பதை கேட்டு முனகிக்கொண்டாள். “நாமளும் இனிமே பாட்டு கேக்கனும்”

“என்னாம்மா?” என்றார் பெரியவர். இவள் முகத்தை சுருக்கிக்கொண்டு “நீ தூங்கலையா இன்னும்?”

“தூக்கம் வரலை”

“அந்த நாய் தூங்கிருச்சு பாரு”

“புருயுது. அந்த நாயும் நானும் ஒன்னுதான். இன்னைக்கா சொல்லற. ஆனா அது வயித்தை கவனிச்சியா?” என்றபோது ஒருத்தன் சைக்கிளில் வந்து நின்று “ஆகலையாக்கா புட்டு இன்னமும்?”

“கொஞ்சம் லேட்டாயிருச்சுப்பா”

“பத்து நிமிசம் இருப்பா. ஆயிடும்” என்று குறுக்கிட்டு பெரியவர் சொன்னபோது பெரியம்மா வெடுக்கென்று “நீ சும்மா கெட” என்றவள் திரும்பி “ஆமாப்பா.. ஒரு பத்து நிமிசம்”

“அப்படின்னா அப்பறமா வர்றேன்” என்று அந்த சைக்கிள்காரன் போய்விட.. நேராக இருந்த அரச மரத்தடியில் அந்த பெண் நின்றிருப்பதை பார்த்து பெரியவர் “டௌனுக்காம்மா?” என்று கண்களை விழித்து தலையை தூக்கி படுத்தபடியே ஒரு கையால் தலையை தாங்கியபடி கேட்டபோது அவள் சிரித்தபடியே “ஆமா தாத்தா”

“பஸ்ஸூ இப்பதானே போச்சு”

“தம்பி வருவான். கூட்டிக்கிட்டு போக”

“புட்டு வாங்கிட்டு போம்மா”

“இப்பதானே அடுப்பு பத்த வைக்கறாங்க”

“ஆயிடும் பத்து நிமிசத்துல. புட்டு நல்லாருக்கும். தக்காளி சட்னி. கூட வெங்காயம்.. பச்ச மொளகா.. பருப்பு போட்டு எண்ணய ஊத்தி சுட்டு தருவா. சாப்புட்டதில்லையா நீ?”

“இல்லையே”

“சாப்புட்டு பாரு. தினமும் வாங்கி சாப்புடனமுன்னு தோணும்” என்றபோது பெரியம்மா அவரை திரும்பி பார்த்து முறைக்கவும் அந்த பெண் புரியாமல் இவளிடம் “நல்லதுதானே சொல்றாரு”

“இந்தாளு பேசி பேசி வியாபாரமே குறைஞ்சிருச்சும்மா” என்றபோது பெரியவர் சிரித்து “குறையலை. அதிகமாயிடுச்சு” என்றபோது அந்த பெண் ஒரு பத்து ரூபாயை எடுத்து பக்கத்தில் வந்து பெரியம்மாவிடம் நீட்டி “இந்தாங்க”

“இருந்து வாங்கிட்டு போறியாம்மா?”

“இல்ல. நாய்க்கு” என்று அந்த நாயை காட்டி “பாவம். புள்ளதாச்சி”

“பாவமுன்னு சொல்லாதம்மா”

“சொன்னது அது பசியா இருக்கலாமுன்னு. வயிறு காலியா தெரியுது பாருங்க”

“சர்தான்” என்றபோது பெரியவர் நாயை திரும்பி பார்த்து. “உனக்கு வந்த அதிஷ்டத்தை பாத்தியா?” என்றவர் “ஏய். சூ. சூ” என்று கையை வீசியதும் அது திடுக்கிட்டு பதறியபடி எழுந்து அந்த தடுப்புக்கு அப்பால் தாண்டி ஒரு பக்கமாக ஓடிப்போனது. அந்த பெண் “அடடா” என்று பரிதாபமாக பெரியம்மாவை பார்க்க.. அவள் கையை அவரை நோக்கி நீட்டி “நீயெல்லாம் ஒரு மனுசன்.  தூ.. எப்ப பாத்தாலும் இங்க படுத்துக்கிட்டு தாயம் உருட்டிக்கிட்டு எவனாவது எதையாவது எடுத்துக்கிட்டு வந்தா அதை புடுங்கி தின்னுக்கிட்டு” என்றபோது அந்த பெண் அந்த நாய் மறுபடியும் வராதா என்பது போல பார்ப்பதை கவனித்து பெரியவர். “பக்கத்துலதாம்மா இருக்கும். வந்துடும். அதுக்கு இங்கதான் குடியிருப்பு. புள்ளைங்கள போட்டுச்சுன்னா இங்கன பூராவும் சுத்தும். ஒவ்வொரு முறையும் எடுத்து வெளிய விட்டிரனும். இல்லைன்னா போன முறை மாதிரி பிரிச்சு விட்டிரனும்” சற்று தள்ளி அந்த குப்பையை காட்டி “அதுக்கு பக்கத்துலதான் குட்டிகளை போடும். இல்லைன்னா கோவிலுக்கு பின்னாடி பள்ளம் ஒண்ணு போட்டு வச்சுருக்குது. அதுல போடும். குட்டி வேணுமுன்னா ரண்டு மூணு மாசம் கழிச்சு வாம்மா. பால் குடி மறக்கும்போது தூக்கிட்டு போயிடலாம்”

அந்த பெண் முகத்தை சுருக்கிக்கொண்டு தன்னுடைய பார்வையை பெரியம்மாவின் மீது திருப்பியபோது அந்தம்மா அதே பார்வையை பெரியவரின் மீது திருப்பி “அது அப்படிதான்” என்பது போல கையை அவரை நோக்கி முறித்ததை கவனித்து இவர் சிரித்து “அது எனக்கு பழக்கப்பட்ட நாய்ம்மா. கோயிந்தான்னா வந்திடும். இப்ப பாருங்க. கோயிந்தா.. கோயிந்தா..” என்றார் வேறு பக்கமாக பார்த்தபடி.

“ம்.. வருது இரு” என்று பெரியம்மா மறுபடி முகத்தை சுழித்துக்கொள்ள. அந்த பெண் வரும் என்பது போல ஆவலாக பார்க்கும்போது அவர் மறுபடி “கோயிந்தா.. கோயிந்தா..” என்றார் சத்தமாகவே.

அந்தப்பக்கமாக போன ஒரு பெருசு ஒரு நொடி நின்று சிரித்தபடி போனது. அந்த பெண் ஏனோ அங்கிருந்து அந்த தம்பிக்காக காத்திருப்பதை தொடரலாமா என்பது போல யோசித்து ரொம்ப தள்ளி போய் நின்றுக்கொண்டபோது இவர் அந்த நாய் வராமல் போன எரிச்சலில் ஆனால் சிரித்தபடியே “வந்திடும்.. வந்திடும்..” என்றார் சத்தமாக அவளுக்கு கேட்பதுபோல.

பெரியம்மா குறுக்கிட்டு “நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு. தினமும் பெருக்கறது நானு. இடத்தை அசிங்கம் பண்ணிட்டு”

“சும்மா பெருக்கறியா..? கோயிலுக்கு பக்கம் வியாபாரம் பண்ணறே. அதனால பெருக்கற. சும்மா செய்யற மாதிரி”

“அப்படியே இருந்துட்டு போகட்டும். மொதல்ல இடத்தை காலி பண்ணு”

“அதெல்லாம் முடியாது. இன்னிக்கு புட்டு கொடு. பத்து ரூபாய்க்கு” என்றபோது அவள் கோவமாக “ஏற்கனவே அம்பது ரூபாய் வரணும். நாயை வேற தொறத்திட்ட. எப்படிதான் தூங்க முடியுதோ உன்னால..? அதென்னா புதுசா கோயிந்தான்னு பேரு அதுக்கு..?”

“இப்பதான் கண்டுபுடுச்சேன்”

“அதானே பாத்தேன்” என்றபோது புட்டு தட்டில் மாவை ஊற்ற ஆரம்பித்தாள். வெங்காயமும் பருப்பும் கலந்த வாசனை வந்தபோது அவருக்கு பசி உடனே தெரிய ஆரம்பித்தது.

0000

அந்த அரசமரத்தை தாண்டி அகலமான இடத்தில் பேருந்து நின்று அடுத்த ஊருக்கு கிளம்பும்.  நிற்கும்போது அந்த டிரைவர் அங்கிருந்து “அம்மா” என்பான். அல்லது சைகை செய்வான். இவள் அந்த மந்தாரை இலையில் பத்து புட்டை கட்டிக்கொண்டு நடுவில் தக்காளி சட்னி வைத்து எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவாள்.  சில சமயம் அவனே நிறுத்திவிட்டு வருவான்.  நேரமிருந்தால் இருந்து சாப்பிட்டுவிட்டு போவான்.  இரண்டு நிமிடங்களில் பத்து புட்டையும் தக்காளி சட்னியில் தோய்த்து சாப்பிடும்போது முழுசாக அவன் சாப்பிடுவது அழகாகவும் இருக்கும்.  தக்காளிதான் அதிகமாக தேவைப்படும்.  நான்கு முறையாவது வாங்கிவிடுவான்.  பிறகுதான் தெரிந்தது.  அவனுக்கு சாப்பாடே இதுதான் என்று. இன்றும் வண்டியை நிறுத்தியபோது வழக்கத்துக்கு மாறாக கண்டக்டர் இறங்கி வந்து “எனக்கும் பத்து ரூபாய்க்கு பார்சல் பண்ணு”

“நீ எப்பவும் சாப்புட மாட்டியே?”

“எனக்கு வீட்டு சாப்பாடு வந்துடும்”

“சும்மா கூட சாப்புட மாட்டியே?”

“கொரானா பாரு. அங்கங்க சாப்புடக்கூடாதுன்னு வீட்ல உத்தரவு”

“இப்ப?”

“எனக்கில்லை இது. பஸ்ல ஒரு குழந்தை பசிக்கு அழுகுது. அந்தம்மா பிஸ்கட்டு வாங்கறதுக்கு கீழ இறங்கறதா சொன்னாங்க. நான்தான் புட்டு வாங்கிட்டு வர்றதா வந்தேன். அப்படியே டிரைவருக்கும் கொடுத்துரு”

“ஒரு ரண்டு சாப்புடு நீயும்”

“வேணாம்மா. வீட்டுக்காரி வார்த்தையை மீறக்கூடாது. தப்பு” என்றபடி ஏதோ அசைவு தெரிந்ததை கவனித்து பெரியவரை பார்த்தபோது அவர் இவனை பார்த்து கையாட்டி ஏதோ முனகி சிரித்தபோது “என்னாப்பா?” என்றான் புரியாமல்.

பெரியம்மா உடனே. “பேசாதப்பா அந்தாளுக்கிட்ட. காசு கேக்கும்”

“அப்படி தெரியலை. பசிக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்குது”

“அப்படின்னா புட்டு கேக்கும்”

“அந்தாளுக்கு ஒரு அஞ்சு கொடுத்துடு”

“குடுக்காதப்பா. அந்தாளுக்கு இதே வேலை. இங்க வர்றவங்களையும் சாப்பட விடாம. நீ எடுத்துக்கிட்டு போ. அது கெடக்குது” என்றவள் பணத்தை வாங்கியபடி பார்சலை கொடுத்துவிட்டு “சட்னி இன்னிக்கு நல்லா இருக்குமுன்னு சொல்லுப்பா டிரைவருக்கிட்ட. நல்லா காரமா சுள்ளுன்னு”

“இது வேறையா?” என்று அவன் நகர்ந்தபோது இங்கிருந்தே பழக்க தோழத்தில் விசில் அடித்து சிரித்தபடியே போனபோது டிரைவரும் கீழே குனிந்து பெரியம்மாவை பார்த்து சிரித்து கியரை மாற்றி கிளம்புவதற்கு தயாராக இருப்பது போல தயாரானபோது பெரியம்மா திரும்பி பார்த்தாள்.  அந்த நாயை காணோம். இவள் அடுத்த தட்டில் புட்டு மாவை ஊற்றியபோது கவனமாக சட்னி பாத்திரத்தை சரியாக மூடி புட்டு பாத்திரத்தையும் நான்கைந்து புட்டுகள் இருப்பதை கவனித்து மூடி வைத்தாள். வெங்காயம் தாளித்து தனியாக வைத்திருந்ததை இன்னும் கொஞ்சம் எடுத்து மாவில் கலந்து கலக்கிவைத்து பிறகு எண்ணையை இன்னும் தனியாக கொஞ்சம் ஊற்றிவைத்து சரியாக மூடிவைத்து இப்போது சின்ன கரண்டியால் புட்டு மாவின் மீது எண்ணையை ஊற்றியபோது பெரியவர் இருமியபடி “எனக்கு வரவேண்டிய புட்டை கெடுத்துட்ட இல்ல?”

இவள் திரும்பாமல் “வீட்ல போயிட்டு முழுங்கு.  உம்பொண்டாட்டி செஞ்சு போடறாளா இல்லையா உனக்கு?”

“அதைய பத்தி நீ பேசாத”

“பின்ன யாரு பேசுவா?” என்றபோது அந்த சைக்கிள்காரன் வந்து இறங்காமல் நின்று “பத்து ரூபாய்க்கு கொடு“ என்றவன் இவர் சைகையை கவனித்து கண்டுக்கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்தபடி “அப்படியே சட்னி நிறைய வச்சு கொடு”

“வேலைக்கு போகலையா இன்னைக்கு?”

“இல்லை. நாளைக்குதான்”

“வழில கடைக்கு பக்கம் காய்கறி விக்கறா பாரு. அவ இருக்காளா?”

“ஆமா. இருக்கற மாதிரிதான் தெரியுது”

“அவளுக்கு ஒரு பொட்டலம் தர்றேன். கொடுத்திடு”

“ம். சரி” என்றபடி அவன் ஓரக்கண்ணால் கவனித்தபோது பெரியவர் மறுபடி சைகை செய்வதை கவனித்து ஆனால் பேச்சு வாக்கில் “சட்னியை மறந்துடாதம்மா”

“உம் முன்னாடிதானே கட்டறேன்”

“அந்தம்மாவோட பணம்?”

“அது கொடுத்துடும்.  யார்கிட்டேயாவது கொடுத்தனுப்பும்.  பாவம் அது. வீட்ல இருந்து சாப்பாடு வர்றதலை. மருமக தொல்லை அதுக்கு. இந்த மாதிரிதான் சாப்புடுது தினமும்.  புட்டு.. கிழங்கு.. போண்டான்னு இப்படியே சாப்புட்டு காலத்தை போக்குது.  சில சமயம் பிஸ்கட்டு சாப்புடும்.  பாத்தா கஸ்டமா இருக்கும்”

“காய் விக்கற காசை கேக்கும் போல மருமக”

“பையனும்தான். வீட்டை புடுங்கிட்டாங்க. பெரியவரு இறந்த பிறகு அந்தம்மாவுக்கு வீட்லேயே ஒரு ஓரமா ரூமை கொடுத்துட்டு ஒதுக்கிட்டாங்க. பேரப்பசங்க கூட உள்ளாற வர்றதில்லையாம். சத்தம் மட்டும்தான் வருதாம். பசங்க உள்ளாற வந்தா மருமக வந்து இழுத்துக்கிட்டு போய்டறாளாம்.  நான் என்னா தப்ப செஞ்சேன்னு அந்தம்மா எங்கிட்ட ஒரு நாளு புலம்பிடுச்சு.  ஆனா அதுக்கப்பறம் அதை பத்தி பேசறதை நிறுத்திடுச்சு”

“ஓ”

“பழகிடுச்சுன்னு சொல்லிடுச்சு.  பேரப்பசங்க மேல காட்டற பாசத்தை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கறது ரொம்ப கஸ்டம். ஆனா அது கூட பழகிருச்சுன்னு சொன்னப்ப அந்தம்மாவுக்கு கஸ்டமா ஏதும் தெரியலைன்னு தோணுது. இப்படியெல்லாம் இருக்காங்க. இந்தாளை பாரு” என்று கையை பின்னாடி காட்டியபோது கூட இவன் திரும்பாமல் பார்சலை வாங்கிக்கொண்டு கிளம்பினான் சைக்கிளை வேகமாக மிதித்தபடி.

பெரியவர் சிரித்து “அவன் ஏன் சைக்கிளை வேகமா மிதிக்கிறான் தெரியுமா?”

“அது கெடக்குது. எப்படிய்யா தலைல ஒரு கையை வச்சுக்கிட்டு ஒரு பக்கமா படுத்துக்கிட்டு அப்படியே கிடக்க முடியுது?”

“பழகிருச்சு”

“நாசமா போற பழக்கம். உண்மைய சொல்லு. கோயிந்தா பேரு யாரோடது?”

“நாயோட பேருதான்”

“இல்லை. புளுகறே. உம் பொண்டாட்டி பேருதானே?”

“அவ பேரு கோயிந்தம்மா”

“அதேதான். உம் பொண்டாட்டியை எப்புடி கூப்புடுவே?”

“கோயிந்தின்னு”

“அதையேதான் மாத்தி கோயிந்தான்னு கூப்புடறே” என்றபோது இவர் சிரித்தபடி “அப்படியெல்லாம் இல்லை”

“அப்படிதான். வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்லை. இங்க வந்தா நாய் தொல்லைன்னு உனக்காக நினைச்சுக்கறேன் நான். அந்த நாயை கண்டா உனக்கு புடிக்கறதில்லை. நீ இல்லைன்னா உன்னோட இடத்துல அது வந்து உக்காந்துக்குதுன்னு எரிச்சல் உனக்கு. நான் ஒரு விசயம் சொல்லட்டா?”

“சொல்லு”

“உன்னால என் வியாபாரம் கெடுது”

“நான் எதுவும் செய்யறதில்லையே?”

“வர்றவங்க நீ இருக்கறியான்னு பாத்துட்டுதான் புட்ட வாங்கறாங்க. உன்னோட தாயம் விளையாடறவங்கதான் இங்க வந்தா உனக்கு ஒண்ணை தூக்கி போட்டுட்டு சாப்புடறாங்க. அவங்க கூட மரத்தடி பக்கமா போயிடறாங்க. வீட்ல சாப்புடறியா இல்லையாய்யா நீ?”

“வீட்டுக்கு போனாதானே” என்றபடி அவர் சிரித்தபோது இவளுக்கு வந்த எரிச்சலை மறைத்து அடுத்து வந்த ஆள் நேராக பெரியவர் பக்கமாக வந்து அந்த சின்ன தடுப்பின் மீது உட்கார்ந்து “என்னா பெருசு. புட்டு சாப்புடறது?” என்றவனை பார்த்து லேசாக சிரித்தாள்.

“வேணாம்பா”

இவளிடம் திரும்பி “எனக்கு ஒரு பத்து ரூபாய்க்கு கொடும்மா”

“சாப்புடறியாப்பா?”

“ஆமா. அப்படியே பெருசுக்கும் தனியா”

இவர் அவசரமாக “வேணாம்பா. சொன்னா கேளு. நான் இப்பதான் சாப்புட்டேன்” என்றபோது பெரியம்மா திரும்பி அவரை பார்த்து மறுபடியும் திரும்பிக்கொண்டாள்.  அவன் கால் மீது கால் போட்டுக்கொண்டு பிறகு மறுபடி நேராக மடக்கி அதன் பிறகு ஒரு காலை அந்த தடுப்பின் மீது மடித்துப்போட்டு “சாப்புடு பெருசு”

“இல்லையப்பா. வேணாம்”

“அப்பறம் உன்னிஷ்டம். ஏம்மா. எனக்கு மட்டும் கொடு” என்றபோது பெரியம்மா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு “சட்னி வைக்கனுமா?”

“ஆமாம்மா. அது இல்லைன்னா எப்புடி?”

“முட்டை புட்டு கூட போடறேன். வேணுமா?”

“இல்லைம்மா. வேணாம். கொஞ்சம் எண்ணைய விடு. வரவரன்னு இருந்தா எனக்கு புடிக்காது”

“சரிப்பா”

“ஒரு சிலருக்கு செவப்பா உப்பிட்டு வருதே. எப்புடிம்மா அது?”

“எல்லாம் சோடா மாவு பிரச்சனை. அரிசி மாத்தினா அப்படி வரும்.  நமக்கு டேஸ்டு வந்தா சரி”

“அந்தம்மாவை அடிச்சுக்கறதுக்கு இந்த ஏரியாவுல யாரு இருக்கா?” என்று பெரியவர் இப்போது நிமிர்ந்து படுத்துக்கொண்டபோது தன்னுடைய கைகளை முறுக்கிக்கொள்வதை அவன் ஆச்சரியமாக பார்த்து “நல்லா ஜில்லுன்னு இருக்கா?”“

“ஆமாப்பா.  தூக்கமா வந்திடும் இங்க.  ஆனா தூங்க மாட்டேன். காரணம் நைட்டுக்கு தூங்க முடியாது பாரு” என்றபோது அந்த நாய் மெதுவாக வந்து அங்கு நிற்பதை பார்த்து “இதா. கோயிந்தா வந்துட்டான்”

பெரியம்மா திரும்பி பார்த்து “தொறத்திடாதய்யா. அதுக்கு புட்டு வைக்கனும்”

“நானே வைக்கறேன்” என்ற பெரியவர் அந்தாளிடம் “தம்பி. சொல்லு புட்டை எனக்கு”

“வேணாமுன்னு சொல்லிட்டீங்களே?”

“நாய்க்கு அது. தொறத்திட்டேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. அந்தம்மா கோவிச்சுக்கிட்டு போயிடுச்சு”

“எந்தம்மா?” என்றபோது பெரியம்மா குறுக்கிட்டு “அது ஒரு கதை. இதாப்பா” என்று அவனிடம் புட்டு இலையை நீட்டியவள் “நீ சாப்புடு. நான் வைக்கறேன் நாய்க்கு” என்றபோது அது நிதானமாக அந்த இரண்டு படிகளை தாண்டி வழக்கமான இடத்தில் பெரியவரை விட்டு தள்ளி அமர்ந்தபோது இவரை பார்த்தபடியே அமர்ந்தது. இவர் அமைதியாக அதை பார்த்து சிரித்தபடி “உக்காரு. உக்காரு” என்றார்.  அவன் “அந்த நாய்க்கு அஞ்சு புட்டு கொடுத்துரும்மா. குட்டிங்க இருக்குது வயித்துக்குள்ள”

உடனே பெரியவர் “நான்தானேப்பா சொன்னேன்”

“யாரு கொடுத்தா என்னா? நாய்க்குதானே?”

“ஆமாப்பா”

“அதுக்குதான் சொல்லறேன்” என்றபோது பெரியவர் பெரியம்மாவை பார்த்து அவள் உள்ளுக்குள் சிரிப்பதை முதுகு வழியாக கவனித்து கோபம் வருவது போல உணர்ந்தபோது அந்த ஆள் தன்னை கவனிப்பதை உணர்ந்து உடனே சிரித்தபடி “அட ஆமாப்பா. யாரு கொடுத்தா என்ன?”

அவன் “இந்த நாய் இங்க படுக்கப்படாது”

“ஏம்பா?”

“நாய பிடிக்காதவங்க தொறத்திட்டே இருப்பாங்க. பின்னாடி அல்லது ஓரமா இருந்துட்டா பிரச்சனை இல்ல. குட்டி போட்டுக்கிட்டு இங்க அடிக்கடி வந்து உக்காந்துட்டு இருந்தா ஒரு மாதிரி வாசனை வரும். பழக்கப்படுத்தி அது ஒரு இடத்துல இருக்கற மாதிரி செய்யனும்” என்றபோது பெரியம்மா குறுக்கிட்டு “அது எப்பவாவதுதாம்பா இங்க வந்து உக்காரும். அதுக்கு கோயிலுக்கு பின்னாடி ஒரு பள்ளம் மாதிரி இருக்குது. அங்கதான் படுத்துக்கும். போன முறை அங்கதான் குட்டி போட்டுச்சு. அப்பறம் அதுவா அந்த குப்பை கொட்ற இடத்துக்கு குட்டிங்களை தூக்கிட்டு போயிடுச்சு. படுக்கறதுக்கு விளையாடறதுக்கு குட்டிகளுக்கு நல்லாயிருக்குதுன்னு“

“அது கூட தெரியுமா உனக்கு?”

“தெரியாம இருக்குமா? அந்த பக்கமா ஆளுங்க போகமாட்டாங்க. பாதுகாப்புதானே?”

“ஆமா” என்றபோது பெரியம்மா ஒரு இலையில் ஆறியிருந்த நான்கைந்து புட்டுகளை வைத்து அந்த நாயின் அருகில் சென்றபோது அது வாலை ஆட்டியபடி அவள் கீழே வைத்ததை முகர்ந்து பார்த்து இவளை மறுபடி நிமிர்ந்து பார்த்து வாலை தொடர்ந்து ஆட்ட.. பெரியவர் “சட்னி வைக்கலைன்னு சொல்லுது”

“அட. ஆமா. மறந்துட்டேன். சட்னில பொரட்டி தந்தா…” என்று முடிப்பதற்குள் பெரியவர் “அப்படியே லபக்குன்னு விழுங்கிகும்” என்றார். அவள் மறுபடி அவரை பார்த்து “அது சாப்புடறதை கூட வேடிக்கை பாப்பியா நீ?” என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பிப்போய் சட்னி எடுத்து வந்து இலையில் வைத்து புட்டுகளோடு புரட்டி வைத்து திரும்ப தன்னிடத்திற்கு வந்து உட்காருவதற்கு முன்பு கையை நன்றாக கழுவிக்கொண்டு உட்கார்ந்தபோது திருப்தியாக இருந்தது அவளுக்கு. அந்த ஆள் “ஏம்மா. என் கணக்கா அது?” என்றான் சாப்பிட்டபடியே.

“என் கணக்கு” என்ற பெரியவரை பார்த்து  பெரியம்மா. “இல்லைப்பா. அது ஒரு  பொம்பளையோட கணக்கு. இன்னும் வைக்கனும். போகும்போது வைக்கலாம்”

அவன் “நானும் சொல்லிட்டேன் நாய்க்கு தரச்சொல்லி. எனதையும் சேத்திக்கோங்க” என்றபோது பெரியம்மா மறுபடி திரும்பி பார்த்து பெரியவரை கவனித்தது அவருக்கு பிடிக்காமல் “இல்லைப்பா. பணம் நான் கொடுத்திடறேன்”

“பரவாயில்லைங்க” என்று அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சட்டை பையில் பணத்தை நோண்டி இருபது ரூபாயை கொடுத்துவிட்டு “அஞ்சு நாய்க்கு. அஞ்சு பெரியவருக்கு. பத்து எனக்கு” என்றபோது பெரியவர்  “இல்லை. வேண்டாம்பா” என்றார் மறுபடியும்.

“இருக்கட்டுமுங்க”

“இல்லைப்பா. நாய்க்கு நீ கொடுத்துக்க”

“அப்படின்னா சரி. நாய்க்கு பத்துரூபா. நாளைக்கு வச்சுரும்மா புட்டை என் சார்பா” என்றபோது பெரியம்மா தலையாட்டினாள். பெரியவர் மறுபுறம் திரும்பி படுத்து அந்த நாய் சாப்பிடுவதை கவனித்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டபோது தக்காளி சட்னி வாசனைக்கு மீண்டும் பசியெடுப்பதை உணர்ந்தார்.

0000

அந்த அரச மரத்தடியில் இப்போது யாரும் கூடுவதில்லை. கடையும் யாரும் வைப்பதில்லை. பெரியம்மா சற்று தள்ளி கோவில் அருகில் வைத்திருப்பதுதான் அந்த ஒற்றைக்கடையான புட்டுக்கடை. சுற்றிலும் வீடுகள். நான்கைந்து சந்துகள் அங்கிருந்து பிரிகிறது. பெரும்பாலும் மாடி வீடுகள். புதுசாக அல்லது சமீபத்தில் கட்டியதாக. வீடுகளுக்கு முன்புறம் திண்ணைகள் அடையாளம் இல்லை. கேட் போட்டு ஒரு சில வீடுகளில் நாய்களை வளர்க்கிறார்கள். எழுத்துகளில் வீட்டின் உட்புற ஜீவன்களின் பெயர்கள் தெரிகிறது. ஏறக்குறைய பத்து மணிக்கு மேல் அந்த வீடுகளின் கதவுகள் மட்டும் திறந்து கேட்டுகள் வழியே உட்புறம் பார்த்தால் மனித நடமாட்டம் இல்லாமல் அனாமத்து வீடுகள் மாதிரி தெரியும். சந்தடியும் பேச்சுக்குரல்களும் உறிஞ்சப்பட்டது போல அரச மரத்தின் காற்றும் இலைகளின் சலசலப்பும் காதுகளில் வழியும்போது பெரியம்மாவுக்கு சில சமயம் தான் மட்டும் இருக்கிறோமோ என தோன்றும். அந்த தாயத்து உருட்டலும். கூடியிருக்கும் கூட்டத்தின் தாய விளையாட்டின் கூச்சலும் இல்லாவிட்டால் அங்கு நாய்களின் குரல்களை தவிர வேறு எதையும் கேட்கமுடியாது. ஒரு சில ஆண்கள் மட்டும் அவ்வபோது நடந்து வந்தோ.. அல்லது சைக்கிளிலோ.. அல்லது போகிறவர்களோ வருகிறவர்களோ.. சந்துகளுக்கு திரும்புகிறவர்களோ கடைக்கு வந்தால்தான் உண்டு. எறக்குறைய எப்போதாவது பத்து மணிக்கு அல்லது பதினொரு மணிக்கு மேல் ஆரம்பமாகும் தாயம் பெரும்பாலும் இரண்டு மணிக்கு மேலேதான் முடியும். :அதனால் அந்த பகுதியின் மௌனத்தை விரட்டும் சந்தைக்கடை கூட்டமாக அந்த தாயத்து கூட்டம் மாறி அதற்கு இந்த பெரியவர் மையப்புள்ளியாக மாறி இவரை தாயத்து ஆட்டத்தின் நாயகனாக மாற்றி வார்த்தைகளிலும். பார்வையிலுமாக காட்டும்போது அவருக்கு அந்த இடத்தின் அத்தனை உயிரில்லாத பொருள்கள் மீதும் ஆசாபாசம் வந்துவிட்டது. பெரியம்மாவோடு சேர்த்து.

அந்த நாயை தவிர.

முதலில் அது இவருடைய இடத்தை அவ்வபோது பிடித்துக்கொள்வது பிடிக்கவில்லை. பிறகு அது போன பிறகு அங்கு இருக்கும் அந்த வாசனை. பிறகு பெரியம்மா தன்னை விட அதற்கு காட்டும் பிரியம். ஆனால் இன்னொரு பக்கம் அந்த நாயின் மீது ஒரு கவனம் திரும்புவது அவருக்கு பிரச்சனையாக இருந்தது.  தன்னை கூடுமான வரையிலும் நாயோடு ஒப்பிடுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாலும் ஒரு சில சமயம் இவரையும் மீறி அது நடப்பது அந்த தாயத்து கதாநாயகன் என்கிற உள்ளார்ந்த விழயத்தையும் மீறி அவருக்கு அவர் மீதே எரிச்சலை வரவழைத்தது. இப்போதுதான் இந்த நொடிதான் அவர் ஒரு தீர்மானம் செய்தார். இனி அதை கண்டுக்கொள்ளக்கூடாது. அதன் வருகை.. அதன் வாசனை.. அதன் இனி வரப்போகும் குட்டிகளை.. அதன் விளையாட்டுத்தனத்தை.. அவைகளின் அழகை.. எதையும்..

இப்போது அவர் கண்களை மூடியபடி சீக்கிரம் தாயத்தை முடித்துவிட்டு கும்பல் கலைந்து போனதுக்கு வருத்தப்பட்டு ஏன் அவ்வாறு நடந்தது என்று யோசித்து அந்த பாதியிலேயே ஆட்டத்தை கலைத்ததோடு இல்லாமல் எல்லோரையும் அங்கிருந்து போக வைத்தவன் மீது கழுத்து வரைக்கும் கோவமாக வந்தது.  ஏதாவது பச்சை மிளகாய் இருந்தால் நறுக்கென்று கடித்து மென்று முழுங்கவேண்டும் போலிருந்தது. ஆனால் நாளைக்கு எல்லோரும் அந்த அடையாளம் இல்லாமல் இங்கு ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று அவருக்கு தெரியும். அவரும் அதில் ஒருவராக இருப்பார். கழுத்து வரைக்கும் இருந்ததை வசதியாக மறந்துவிட்டு அந்த கலைத்தவனிடம் “ஹி. ஹி. ஆடு மச்சான்” என்பார்.

இப்போது நான்கைந்து பேர் அங்கு வந்து உட்கார்ந்தபோது முதுகு காட்டியபடி படுத்திருந்தவர் கண்களை திறக்காமல் ஆனால் தூங்குவதற்கு முயற்சித்தார். அவருக்கு பசியை தூக்கம் கெடுத்தால் சரி என்று தோன்றியது. வீட்டுக்கு போவதை எப்போதும் தவிர்க்க விரும்பும் அவர் இப்போதும் அதை தவிர்க்க விரும்பி தன்னுடைய வயிறின் ஒரு பகுதியை நீவியவாறு கவனத்தை தூக்கத்தின் மீது திருப்பினார்.

அந்த குரல்களில் ஒரு குரல் தாயத்து கூட்டத்து குரல் என்று தெரிந்தது. “அண்ணாச்சிக்கு வீட்டுக்கு போக தோணுமா?” என்று சொன்ன அந்த குரல் “அண்ணாச்சி. அண்ணாச்சி”

பெரியம்மா. “இப்பதானே பேசிட்டிருந்தாரு?”

“தூங்கிட்டாரு போல”

“அப்படி தெரியலை. தொட்டுப்பாருங்க”

“வேணாம். தூக்கத்தை எதுக்கு கெடுக்கறது?” என்ற அந்த குரல் “எல்லாருக்கும் புட்டு குடும்மா”

“சட்னி?”

“சட்னியோடதான்”

“முட்டை?”

“அதெல்லாம் வேணாம். அண்ணாச்சி சாப்புட்டாறா?”

“வாங்கி கொடுத்தா சாப்புடுவாரு”

“யாரு?”

“நீங்கதான்”

“அதுல ஒரு சந்தோழம்மா. உனக்கு தெரியாது. நம்ம வீட்லேயே சாப்பிடனமுன்னு ஏதாவது இருக்கா என்ன? அதுவும் பக்கத்துல புட்டுக்கடை இருக்கும்போது. நீங்க சாப்பாட்டு டைம்ல என்னா பண்ணுவீங்க?”

“சாப்புடுவேன்”

“வீட்டு சாப்பாடா?”

“இல்லை. புட்டுதான்”

“பாத்திருக்கோம். பசிச்சா நாங்க என்னா பண்ணறோம்?”

“தாயம் விளையாடும்போதா?”

“ஆமா”

“யாரையாவது வாங்கி தரச்சொல்லுவீங்க”

“அப்படி இல்லைன்னா?”

“யாராவது வாங்குவாங்க”

“அப்போ என்ன நடக்கும்?”

“ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குவாங்க”

“அந்த மாதிரிதான் இதுவும். எவனாவது அவனுக்காக வாங்கறானா? வாங்கினா அவனால சாப்புட முடியுமா? அடுத்தவங்க சாப்பிட்டு போகட்டுமுன்னுதான். அண்ணாச்சி எழுந்தா ஒரு பங்கு கொடுத்திடு”

“எவ்வளவுக்கு?”

“அவரு சாப்புடற வரைக்கும்” என்றவன் “ஆனா அவருக்கிட்ட காசு கேட்டுப்புடாத?” என்றபோது அவள் சிரித்ததை  கவனித்து “ஏம்மா?”

“காசு வருமா. வராதான்னு எனக்கு தெரியாதா?”

“அதெப்படி? அஞ்சுக்கும். பத்துக்கும் ஏமாத்தறவரு தாயத்துல ஏமாத்தமாட்டாரா? அவரு விளையாடறது அப்படியா இருக்குது? அப்படி வெட்டறாரு. அப்படி உருட்டறாரு. புட்டு சாப்புட்டு கொடுக்காம இருந்தா கொடுத்திடுவாரு. புட்டு சாப்புடறவன் இவரை கண்டுக்கலைன்னா அது அவனோட புத்தி. அதுக்கு இவரு என்ன செய்ய முடியும்? இங்கேயே இருந்துட்டு.. படுத்துட்டு.. தூங்கிட்டு.. பேசிட்டு.. கவனிச்சுட்டு இருக்கறது உங்களால முடியுமா என்னால முடியுமா?” என்ற குரல் புட்டை வாயில் வைத்து குதப்புவது கேட்டது. பிறகு வேறு விழயத்துக்கு மாறி அப்படியே அமெரிக்கா போய் இலங்கை வழியாக வந்தபோது அவருக்கு தூக்கம் இனிமேல் வராது என்று தெரிந்து ஆனால் கண்களை மூடியபடியே அசையாமல் கிடந்தார். அவருக்கு இபுபோது பசி தெரியவில்லை. ஆனால் அவருக்குள் அந்த நாயை கண்டுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாகவே இருப்பதை நினைத்துக்கொண்டார்.

ஒரு சில நொடிகள்தான். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு தூக்கம் வந்து கண்கள் சொருகி வந்தபோது சட்டென்று விழித்துக்கொண்டு திரும்பி கண்களை விழித்து எழுநது உட்கார்ந்துக்கொண்டபோது அங்கு யாருமில்லை. அந்த பெரியம்மாவின் அடுப்பு எரிந்துக்கொண்டேதான் இருந்தது. வெயிலுக்கு வழக்கமாக மேலே கோவிலின் சின்ன தூணோடு முன்புறம் குச்சி நட்டு ஒரு பிளாஸ்டிக் பையை விரித்திருந்தாள். வழக்கமான தக்காளி சட்னி.. வெங்காயம்.. பருப்பு. வாசனை.. சட்டென்று பக்கத்தில் பார்த்தபோது அந்த நாய் இல்லாததை பார்த்து திருப்தியடையும்போது அவர் அந்த உறுதிமொழியை நினைத்துக்கொண்டு வெட்கப்பட்டு மீண்டும் படுத்துக்கொள்ள முயன்றபோது அந்த பெரியம்மா திரும்பி “உனக்கு புட்டு கொடுக்க சொல்லிட்டு போனாங்க”

“யாரு?”

“கூட விளையாடறவங்க. சாப்புட்ற வரைக்கும் சாப்புட சொல்லி”

“வேணாம்”

“காசு அவங்களே கொடுத்திடுவாங்களாம்”

“வேணாம்” என்றபோது அந்த பக்கமாக நடந்து போன ஆளை பார்த்து “ரத்தனம். ரத்தனம்” என்றார். அந்தாள் நின்று இவரை பார்த்ததும் “இரு வர்றேன்” என்பது போல சைகை செய்துவிட்டு அவசரமாக நடந்து போனார். இவர் இப்போது பழைய மாதிரி ஒரு கையால் தலையை தாங்கிக்கொண்டு பெரியம்மா பக்கமாக திரும்பி அவள் முதுகில் வியர்வையை பார்த்து “வெயில் அதிகமா?” என்றார்.

அவள் திரும்பாமல் அந்த அவசரமாக போன மனிதரை பார்த்து “என்னா. இந்த ஓட்டம் ஓடறாரு?”

“தாயம் ஆடும்போது ஒருமுறை அசிங்கப்பட்டு போனாரு. அப்பலிருந்து வர்றதிலை”

“நான் உனக்கு பயந்துட்டுதான் ஓடுறாருன்னு நினைச்சுட்டேன்”

“காலைல சைக்கிள்ள வந்தவன் கூட அப்படிதான். தாயத்துல காயை தள்ளும்போது தப்பு தப்பா தள்ளுவான். தமாஸ் பண்ணிட்டேன். அப்பலிருந்து என்னைய பாத்தாவே திரும்பிக்குவான். வர்றதில்லை அவனும் இப்ப”

“ஓ.. நான் வேற ஏதோ நினைச்சுட்டேனே”

“சைகை செஞ்சதை சொல்லறியா? வர்றியா தாயத்துக்குன்னு சொன்னேன். ஓடிட்டான்”

“கண்டக்டருக்கிட்ட சைகை பண்ணது?”

“என்னைய கவனிக்கறதுதான் உன் வேலையா? அவன்கிட்ட சைகை செஞ்சது உண்மைதான்”

“உண்மையா?”

“ஆமா”

“எதுக்கு?”

“புட்டுக்குதான். வேற எதுக்கு?”

“வெக்கமாயில்லையா உனக்கு?”

“என்னா வெக்கம். கோயிந்தா பக்கத்துலதான் இருந்தான் அப்ப. அவனை வேடிக்கை பாத்துட்டு. அதுக்குதான் சொன்னேன். புட்டு வாங்கி குடுய்யா அந்த புள்ளதாச்சிக்குன்னு. அவன் கவனிக்கலை. நீயும் கவனிக்கலை. நான் என்னா பண்ண?” என்றபோது அவள் திரும்பிபார்த்து ஆச்சரியமாக “நான் வேற எதையோ நினைச்சுக்குட்டேன்”

“கவனிச்சேன்”

“தினமும் இப்படிதானே சொல்லுவேன். “

“தினமும்தான் கவனிக்கறேன்”

“ஆனா இன்னிக்கு வித்தியாசம் தெரியுது”

“என்னா வித்தியாசமுன்னு தெரியலை. நான் நானாதான இருக்கேன். பசிச்சா கடன் வாங்கி சாப்பிட்டு போறேன். இதுல போயிட்டு என்னா இருக்குது” என்றவர் வயிற்று பசி தெரியாமலிருப்பதை கவனித்து “அப்பாடா” என்று திரும்பி படுத்தபோது அவள் அவர் முதுகை பார்த்தவாறு “நான் ஒண்ணு கேக்கவா?”

“ம்”

“அந்த கண்டக்டருக்கிட்ட.. அப்பறம் இன்னொரு ஆளுக்கிட்ட நாய்க்குதான் புட்டுன்னு சொன்னது உண்மைதானா?”

அவர் ஒரு காலை லேசாக ஆட்டியபடி தலையை வழக்கமாக இன்னொரு கையால் தாங்கியபடி ஏதும் சொல்லாமல் அப்படியே நேராக பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய பார்வை அந்த தாயக்கோடுகள் மீது விழுந்தது தெரிந்தது. ஆட்டிக்கொண்டிருந்த அந்த காலின் பாதத்தில் லேசாக அழுக்கு தெரிந்தது. பின்புறம் சட்டையில் தூசியும் மடிப்புகளும் நிறைய இருந்தது. அவருடைய தலையை தாங்கிய அந்த வலது கையின் முட்டி தரையை தாங்கி. தாங்கி வெளிறி நிறம் மாறியிருந்தது… இவள் தொடர்ந்தாள். “அந்த கண்டக்டரு பேசிட்டிருந்தப்போ நாய் பக்கத்துல வந்து நின்ன மாதிரி எனக்கு தெரியலை”

அவர் தொடர்ந்து அப்படியே இருந்தார். பெரியம்மா சட்டென்று எழுந்து இலையில் இன்னொரு இலையை சேர்த்து கைக்கு வந்து புட்டுகளை அள்ளி வைத்து தக்காளி சட்னியை வைத்து தடுப்புக்கு பின்புறமாக அவரை நெருங்கி அவருடைய முதுகுக்கு பின்புறமாக கொஞ்சம் தள்ளி இலையை வைத்து அவருடைய முதுகை பார்த்தவாறு சொன்னாள்.

“சாப்புடு”

0000

 

அந்தர்வாஹினி

மாலதி சிவா

 

அவன் நிழல் நீண்டு அவர் காலைத் தொட்டது.

ரேழியில் நின்று கொண்டு கையில் இருந்த துண்டு கடுதாசியைப் படிக்க முயன்று கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

“கதவு திறந்துதான் இருக்கு வாங்கோ” என்றார்.

கம்பி அழிக்கதவைத் திறந்துகொண்டு வந்தவன் திண்ணைகளுக்கு இடைப்பட்ட ஆளோடியில் தயக்கமாக நின்றபடி

“ஈஸ்வர அய்யர் வீடு….?.” என்று கேள்வி மாதிரி கேட்டான்.

“ஆமா! ஈஸ்வர அய்யர் , எங்க அப்பாதான், ஆனா அவர் காலம் ஆகி ஆறேழு வருஷம் ஆறதே” என்றார்.

“ஆமா! மாமா! எங்க அப்பா சொல்லியிருக்கார்”

வந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.வேஷ்டியும் சட்டையும் பழையதாயிருந்தாலும் துவைத்து மொரிச்சென்று இருந்தது. சட்டை காலரின் மடித்த பகுதியில் நைந்து பிசிர் தெரிந்தது. தொண்டையின் முழை ஒரு சிறிய கோலிக்குண்டு. கையில் ஒரு பழைய காக்கிப் பை சுருட்டின வாக்கில் இருந்தது.

“உள்ளே வாங்கோ”  என்றபடி ரேழியைக் கடந்து கூடத்துக்குப் போனார்.

திரும்பிப் பார்த்து மறுபடி” வாங்கோ”’ என்றார்.

“உக்காருங்கோ” என்றார்.

அவருக்கு அருகில் இருந்த மர நாற்காலியைத் தவிர ஒரு மர முக்காலியும் , வர்ணமிழந்த தகர நாற்காலியும் இருந்தன. அவன் முக்காலியில் அமரப் போனான்.

“இல்ல! அது வேண்டாம். ரண்டு மரப் பலகையைச் சேத்து வச்சு பண்ணியிருக்கான். அதுல இடை வெளி விட்டுப் போயிடுத்து. உக்காந்தா கடிக்கறது. சேர்லயே உக்காந்துக்கோங்கோ!”என்றார்.

அவன் உட்கார்ந்த பின் கேட்டார்,

“நீங்க?”

“என்பேர் நீலகண்டன். அப்பா பேரு சதாசிவம்”

“சரி…..”

உள்ளேயிருந்து ஒரு சின்னக் குட்டி சமையல் ரூமுக்கும் கூடத்துக்கும் இடையிலான நிலைப்படியில் வந்து நின்றது. நாலைந்து வயதிருக்கும், தலையை இழைய வாரி  நுனியில்   சிவப்பு பட்டு நூலில் முடிந்திருந்தது.

இவனுடைய தொண்டடையின் கோலிக்குண்டையே உறுத்துப் பார்த்தது. கோலிக்குண்டு இன்னும் வேகமாக அசைந்தது.

அவர் குழந்தைகளிடம் பேசும் பொழுது வருகிற  ஒருமென்மையான குரலில் இடை வெளி விட்டு விட்டு  நிதானமாக

“தர்மு! மாமா வெய்யில்ல வந்திருக்கா பாரு! கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?” என்றார்.

அது தலையை அசைத்து விட்டு உள்ளே போனது. பின்பக்கத்திலிருந்து யாரோ பேசுகிற சத்தமும், மாடியிலிருந்து குழந்தைகள்  சச்சரவிடுகிற சத்தமும்  கேட்டுக் கொண்டிருந்தன.

“இவ திருவையாறு போஸ்டிங்க்ல இருக்கும் போது பொறந்தா, அதான் தர்மசம்வர்தனின்னு பேரு. எந்த ஊர் போஸ்டிங்க்ல குழந்தை பொறக்கறதோ அந்த ஊர் அம்பாள் பேரை வச்சுடறது. இப்போ வீடு நிறைய அம்பாள்தான்“ அவர் சிரித்தார்.

“சரி! நீங்க சொல்லுங்கோ? எங்கேயிருந்து வரேள்? என்ன சமாசாரம்?” என்றார்.

“ நா ஜீயபுரம் , அம்மங்குடியிலேந்து வரேன்!”

குழந்தை அதற்குள் ஒரு சொம்பு ஜலத்தைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு வந்தது.

“ அடடே! நீயே தூக்கிண்டு வந்தயா? அம்மாகிட்டயோ , அத்தை கிட்டயோ சொல்ல மாட்டயோ” என்றார்.

அவனிடம் தண்ணீரைக் கொடுத்துவிட்டு,

“ஜீயபுரம் ஜாஸ்தி பழக்கமில்லை!  முந்தி எப்பவோ ஒரு தரம் வந்திருக்கேன்!”

அதற்குள் உள்ளேயிருந்து ஒரு மடிசார் மாமி ஒல்லியாய் வெடுவெடுவென்று உயரமாய் “ சாமினாதா” என்று  சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.

வேற்று மனிதனை  அங்கு எதிர்பாராததால்  சட்டென்று தயங்கி நின்று  மெதுவான குரலில் “வாங்கோ” என்றாள்.

“யாரு?” என்று இழுத்தாற்போல் கேட்டாள்.

சாமினாதன் “ அக்கா! இவருக்கு ஜீயபுரமாம்!” என்றார்.

அவனிடம் “ இது எங்க அக்கா!” என்றார்.

“அப்பிடியா? ஜீயபுரத்தில யாரு? எங்க ஜாகை?” மாமி கேட்டாள்.

“ஸ்டேஷன் மாஸ்டர் ஜம்புனாதையர்  இருக்காரில்லையா? அவாத்துக்கு மேலண்டைப் பக்கம் ரண்டு ஆம் தள்ளி” என்றான் வந்தவன்.

“ அடடே!  அப்பிடியா சமாசாரம்? ஜம்பு நாதய்யர் எங்க புக்காத்து வழியில தூரத்து சொந்தம்.

அவாத்துல ஒரு சீமந்தத்துக்கு ஜீயபுரம் வந்திருக்கேன், ரொம்ப வருஷத்துக்கு முன்னால!” என்றாள்.

“அப்பா என்ன பண்றார்?” அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்பா இப்ப இல்லை! அவர் மூணாம் வருஷம் போயிட்டார்!”

சாமினாதன் “அடடா!” என்றார்

மாமி “த்ஸோ! த்ஸொ! பாவமே!” என்றாள்.

“இங்க தெப்பக்குளம் பக்கத்துல மெடிகல் ஸ்டோர்ல வேலை பாத்துண்டிருந்தார்.”

“ரங்கனாதா மெடிகல் ஸ்டோரா?”என்றாள்.

“இல்லை மாமி , அதைத் தாண்டி மூணு நாலு கடைக்கப்பறம் வினாயகா மெடிகல்ஸ்னு”

“ ஒல்லியா கண்ணாடி போட்டுண்டு , மருந்து எடுத்துக் குடுக்கறது, பில்லு போடறது எல்லாம் பண்ணுவாரே அந்த மாமாவா உங்க அப்பா?”

அவன் “ஆமா மாமி!! முதலாளிக்கு வலது கை மாதிரி  இருந்தார். முதலாளியும் அப்பா பேர்ல ரொம்ப மதிப்பும் , மரியாதையுமாதான் இருந்தார்” என்றான்.

“என்ன பண்றது, நல்ல மனுஷாளுக்கெல்லாம் இப்படி சட்னு முடிவு வந்துடறது கஷ்டமாத்தான் இருக்கு”

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது.

தர்முவைப் பார்த்து

“ நீ என்னடி இங்க வாயைப் பாத்துண்டு நிக்கறே? அவாளோட விளையாடப் போகலையா?  என்றாள்.

அது தலையை அசைத்து “நீ போ அத்தை!” என்றது.

“அது சரி ! நா போய் விளையாடறேன்! நீ பெரிய மனுஷி! பேச்சைக் கவனி!” என்று சிரித்துவிட்டு.

“நீங்க பேசிண்டிருங்கோ!  நான் காபி எடுத்துண்டு வரேன்” என்றபடி மாமி உள்ளே போனாள்.

“அதெல்லாம் வேண்டாம் மாமி!”

அவர் “இருக்கட்டும் , இருக்கட்டும் , காபிக்கென்ன? குடிக்கலாம்” என்றார்.

கூடத்து மாடப் பிறை பக்கத்தில் இந்திய வரைபடம் மாதிரி காரை உதிர்ந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் ஏரியா மாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்கிற இந்திய வரைபடம்.

தொண்டையை லேசாக கனைத்துக்கொண்டே ஆரம்பித்தான்.

“எங்க அப்பாவோட இந்தாத்துக்கு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால  வந்திருக்கேன். உங்களை அப்ப பாக்கல. அதான் உங்க பேர் தெரியல. மன்னிச்சுக்கோங்கோ!”

“அதனால என்ன பரவாயில்லை. நான் இப்பத்தான் நாலு வருஷமா இங்க இருக்கேன். அதுக்கு முன்னாடி ஊர் ஊரா  போஸ்டிங்க்! இங்க இருக்கும் படி நேரலை! படிக்கற காலத்தில இங்க இருந்ததோட சரி , அப்புறம் இப்பதான் நாலைந்து வருஷம் முன்னாடிதான் இங்க வந்தேன். அப்பாக்குத் தள்ளாமை வந்தப்புறம், ஆத்துக்காரி  குழந்தைகள் எல்லாரும் இங்க முன்னாடியே வந்துட்டா.  நா மாத்திரம் ஊர் ஊரா போயிண்டிருந்தேன்” என்றார்.

“ எட்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ரண்டாம் அக்கா கல்யாணத்துக்கு மாமா கிட்ட , அதான் உங்க அப்பாகிட்ட ஆறாயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தா. அடுத்த வருஷமே திருப்பித் தரதா பேச்சு! ஆனா அடுத்த வருஷம் பெரிய அக்கா பிரசவத்துக்கு வந்துட்டா.

உங்களுக்குத் தெரியுமே சம்சாரிகள் ஆத்துல பிரச்னைகளுக்குப் பஞ்சமேது? அதுக்கடுத்த வருஷம் அறுவடை சமயத்துல வெள்ளம் வந்து சாகுபடியெல்லாம் வீணாப் போச்சு!”

தர்மு பெரிய கண்களை விரித்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அப்பாவுக்குத்தான் ரொம்ப தாபமா இருந்தது.  திருப்பி தரதா சொன்ன டயத்திலே பணத்தைக் கொடுக்க முடியலயேன்னு சொல்லிச் சொல்லி ஆத்துப் போயிட்டார்.

சாகற அன்னிக்குக் காத்தால கூட என் கையைப் பிடிச்சுண்டு அழுதார், நான் கடனாளியா சாகறேனேன்னு. எப்பிடியாவது சீக்கிரம் வட்டியும் முதலுமா குடுத்துடுடா குழந்தைன்னார்”

அவன் குரல் கரகரத்து ரகசியம் போலவும் அழுவது போலவும் ஒலித்தது.

தர்மு மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றது.

“ ஆறாயிரத்தோட வட்டியா ஒரு மூவாயிரம் சேத்துக் கொண்டு வந்திருக்கேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சேக்க முடிந்தது. பாக்கி வட்டியை மொள்ள மொள்ள கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடறேன்.”

கலங்கிய கண்களொடு அவரைப் பார்த்தான்.

அவர் “ இருங்கோ! இருங்கோ! அவசரப் படாதீங்கோ! எங்க அப்பா கொஞ்ச நாள் படுத்துண்டு இருந்துட்டுதான் போனார். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும், எங்களுக்கு எங்கேர்ந்து எவ்வளவு வரணும் எல்லாம் சொல்லிட்டுத் தான் போனார்.  உங்க அப்பா பேரு என்ன சொன்னேள்? சதாசிவமா?  அப்படி யாரும் எதுவும் கொடுக்கணும்னு சொல்லலையே?” என்றார்.

அவன் தொண்டையின் கோலிக்குண்டு வேக வேகமாக அசைந்தது.

“இல்ல மாமா! எங்க அப்பா சொல்லியிருக்காளே மாமா! அப்படி இருக்காது. எங்கயாவது எழுதி வச்சுருப்பா! கொஞ்சம் பாருங்கோளேன் ப்ளீஸ்!” என்றான்.

“ நீங்க சொல்றது கரக்ட்! அப்பா எல்லாத்தையும் சப்ஜாடா எழுதி வைப்பார். நான்  பல தடவை அந்த நோட்டைப் பாத்திருக்கேனே! உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

தர்மு அவர்களை மாறி மாறிப் பார்த்தது.

“இன்னும் ஒரு தடவை எனக்காகப் பாருங்களேன் “ அவனுக்குத் தொண்டை அடைத்தது.

அவர் மேஜை டிராயரை சாவி போட்டுத் திறந்து, கொஞ்ச நாழி தேடினார்.

கூடத்தின் பக்கவாட்டில் இருந்த கதவுக்கு அப்பால் கொல்லை பசுமையாய் தளதளத்துத் தெரிந்தது. கொய்யாவும் , மாதுளையும் செடி கொள்ளாமல் காய்த்துத் தொங்கின.

கொல்லைக் குழாயில் தண்ணீரும் , காற்றும் கலந்து கொர் புர்ரென்று சத்தம் கேட்டது.

“தண்ணி விட்டுருக்கான் போலிருக்கே! ஒரு நா விட்டு ஒரு நா ஒரு மணி நேரம்தான் வரும். அவாளுக்குக் கேக்கலை போலிருக்கு! இருங்கோ ஒரு நிமிஷம் ! அவாட்ட சொல்லிட்டு வறேன்!”

அவன் கொல்லையையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பல்லாம் காவிரி வருஷத்தில்  பெரும்பாலும்  மணலாய் இருந்தாலும் ஆயிரம் வருஷமா ஓடிண்டிருந்த காவேரியின் கருணையும் தாய்மையும் அங்கே காயாய் , கனியாய்  திரண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது.

திரும்பி  காபி டம்ளர் டபராவோடு வந்தவர் இவனிடம் கொடுத்து விட்டு “ குடியுங்கோ!  அதுக்குள்ள நோட்டைக் கண்டு பிடிக்கறேன்” என்றார்.

“ இதோ கிடைச்சுடுத்தே”

பக்கங்களைத் திருப்பி “ இதோ! குத்தகைக் கணக்கு, தான் வாங்கிய கடன், திருப்பித்தந்த விவரம், தனக்கு  வர வேண்டிய கடன் எல்லாம் தனித் தனியா எழுதியிருக்கார் பாருங்கோ! என்ன பேரு? சதாசிவம் இல்லையா? “ என்று கையை நோட்டில் ஓட்டியபடி தேடினார்.

அவர் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“ஊ ..ஹூம்! கடன் குடுக்கப் பட்டவா பக்கத்துல உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

“மாமா! நா இப்ப என்ன பண்றது? கொடுக்க வேண்டிய கடனை இல்லேங்கறேளே! அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தப் பட்டுண்டே போனார் மாமா!”

கிட்டத்தட்ட அழுவது போல் சொன்னான்.

“நான் என்ன பண்றது சொல்லுங்கோ? எனக்கு உரிமையில்லாததை  நான் எப்படி எடுத்துக்க முடியும் ? அது நியாயமில்லையே! நீங்க வருத்தப் படாதீங்கோ” என்றார் சாமினாதன்.

“மாமா உங்க நியாயத்துல என் தர்மம் அடிபட்டுப் போறதே ! அது சரியா? “   அவரைக் கெஞ்சுவது போலப் பார்த்தான்.

தர்மு அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் கைகளைத் தொட்டு

“அயாதீங்கோ மாமா! நீங்களே வச்சுக்கோங்கோ! பவ்வால்லை!” என்றது.

 

********************************************

 

விசித்திரம்- கன்னடமொழி சிறுகதை மூலம் : யு.ஆர்.அனந்தமூர்த்தி ஆங்கிலம்: தீபா கணேஷ் தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா

ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்த முயன்றபோது அவள் பார்த்த காட்சிகள் : வைக்கோல் மூடிய குடிசை, அதன் முன்னாலி்ருக்கும் தற்காலிகக் கடை, கடையில் உள்ள குண்டு பெண்மணி, அவள் மடியில் ஒரு குழந்தை, இரண்டு குலை வாழைப்பழங்கள், பீடி பற்ற வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர். ஏரியில் படர்ந்திருக்கும் பச்சை இலைச் செடி.

அங்கிருக்கும் சிறுகுன்றின் வலது புறத்திலிருந்த சாலை தெளிவாகத் தெரிய, விளக்கு வெளிச்சத்தோடு வந்த ஒரு கார் கணத்தில் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. பௌர்ணமியின் போது கூவுமே, கீச்சென்று ஒலிக்குமே! அது என்ன பட்சி? ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இப்படியே நான் உட்கார்ந்திருந்தால், என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும். விரைவில் விடியல் வர என்னைப் பார்த்து சூரியன் எழுந்து விடுவான். நான் இறந்து விட்டால், இவை எதுவுமில்லை.

இதற்கு பின்னாலுள்ள புதரில் கார நெடியுடைய இலைகள் இருக்கின்றன. அதற்குப் பின்னால் யாரோ உட்கார்ந்திருக்க வேண்டும். அவர் சீக்கிரமாக வர மாட்டார். ஓர் ஆணாக இருக்க வேண்டும். அல்லது என்னைப் போல நவீனமான பெண்ணாக இருக்கலாம். நான் முடித்ததற்குப் பின்னால் அந்த ஆள் வந்திருந்தால், எனக்கு காலடிச் சத்தம் கேட்டிருக்கும். இப்போது அந்தப் பக்கத்திலிருந்து சிகரெட் புகை நெடி.

தலைமுடி முதுகில் விரிந்திருக்கும்படியாக அவள் தளர்வாகக் கட்டியிருந்தாள். தண்ணீரில் மூழ்கி இறக்கும்போது பிணத்தின் முகம் வீங்கி விடும். அவள் சிறுமியாக இருந்தபோது எல்லோரையும் கவர்ந்த இடது கன்ன மச்சம் முகவீக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். உடல் மேலிருந்து கீழாக மிதக்கும்; அவளுடைய கருமையான தலைமுடி தண்ணீரின் மேல் படரும். அனாதை கால்நடையின் அசை போடும் தொலை பார்வையைப் போல அவள் கண்கள் ஒன்றுமில்லாததை வெறித்திருக்கும். நிர்வாணம்–ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அதைச் சொல்வது எளிதல்ல.

அந்த உறுதியான கணத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை; அப்படி ஒன்று இருந்ததாக நினைவு; அது நித்திய நிலையாகவும் தெரிந்தது. மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவது பெரிய விஷயமில்லை; காதலிக்கும் ஒருவரை அடித்து கூட விடலாம். செத்துப் போ, செத்துப் போ செத்துப் போ—அவன் அந்நியமான தொனியில் சொன்னான். அந்தச் சத்தம் அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்ததைப் போலிருந்தது. அவன் கண்கள் கொலை வெறியோடு உற்றுப் பார்த்தன.அந்தக் கத்தலுக்குப் பிறகு அவன் தளர்ந்து சரிந்தான். அவன் முகம் பிணம் போல வெளிறிக் கிடந்தது. காதுகளைச் சம்மட்டியால் அடித்தது போலானான். அவன் மீசை, வில் புருவங்கள், இன்னமும் பெண்களைக் கவரும் அழகான முடி ஆகியவை உல்லாசமானவனாகக் காட்டின. அவனிடமிருந்து சிரிப்பு எழுந்து மறைந்தது. மகன்? ஊட்டியில் படிக்கிறான். முன்னாள் டென்னிஸ் சாம்பியனான தந்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் எப்படியோ வளர்ந்து விடுவான். மெதுவாக எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

இவற்றிற்கெல்லாம் காரணம்? கண்டுபிடிக்க முடியவில்லை.

யாருடைய தவறு? அவன்தானே என்னைக் காதலித்தான்? தன் தந்தையோடு சண்டை போட்டு என்னைத் திருமணம் செய்து கொண்டான். தனது சொத்தில் பாதியை விற்று என்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் நாடகக் கல்லூரியில் படிக்க வைத்தான். யார் முதலில் தவறு செய்தது? அது குறித்து நாங்கள் நூறு தடவை சண்டை போட்டுக் கொண்டாகிவிட்டது.

அந்தத் தவறுகள் எங்களை பதினைந்து வருடம் பின்னிப் பிணைய வைத்திருந்தது. இப்போதும் கூட நான் இல்லாதபோது அவன் எப்படி மனம் விட்டுச் சிரிக்கிறான். அவனுடைய ஆரோக்கியமான பற்கள் கருப்பு மீசையின் பின்புலத்தில் ஒளிரும். பெண்கள், எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் என்னை மட்டுமே பொறுப்பாக்கினர்கள். வெறுப்பும் கூட காதலைப் போல களங்கமற்ற உணர்ச்சிதான் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தருவதாக இருந்தது.

அவள் தன் முடியைத் தொங்கவிட்டாள். அவள் கண்கள் நிலவொளியில் மிளிர்ந்தன; அவைகளைச் சுற்றிக் கோடுகளிருந்தன. அவளுக்கு முப்பத்தி ஐந்து வயது. இன்னும் இளமையாகத்தானிருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்களிடையே எதுவுமில்லை. இந்த வெறுப்பின் கொடூரத்தில் அவள் உடல் வேறுவிதமான பொலிவு பெற்றது. அவள் மற்றவர்களால் பார்க்கப்பட்டாள். அதை அவள் அழுத்தமாகவும் சொன்னாள். அது ஒருவிதமான கர்வத்தையும் அவளுக்குத் தந்தது. அதனால் அவனுக்கு அவளைக் கொல்லவேண்டும் போலிருந்தது என்பது கூட ஞாபகத்தில் வந்தது.

புதரின் பின்னாலிருந்த மனிதன் அணைக்காமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டான். அத்துண்டு நிலவொளியில் இன்னமும் ஒளிர்ந்தது.

அவள் தன் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஆனால் அவளிடம் நெருப்புப் பெட்டியில்லை.

தூங்கும் பறவைகளைப் போல அவள் கைகள் மடியின் மீது இன்னமும் இருந்தன. அந்த மனிதனிடம் நெருப்புப் பெட்டி கேட்கலாமா? செத்துப் போவது அர்த்தமற்றது என்று திடீரென அவள் நினைத்தாள். இது புதிய உணர்வில்லை, ஆனால் அவள் எப்போதும் உணர்வதுதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். இன்னொரு கார் மேலே போகிறது. பறவை கூவுகிறது. ஏரியின் தண்ணீர் நிலவொளியில் லேசாக நடுங்குகிறது. அந்த முதியவர் பீடி பற்ற வைத்ததை நினைக்கிறாள். சிறுமியாக இருந்த போது படர்ந்திருந்த செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தது படமாக நினைவில் ஓடுகிறது. பிறப்பு, இறப்பு இரண்டும் அர்த்தமற்றது. நான் இருக்கிறேன் என்று நினைத்தால்தான் இருக்கிறேன், இல்லையா? யாரிடமாவது நெருப்புப் பெட்டி வாங்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அதில் அவ்வளவு வேகம் இல்லை என்பதால் தன் கைகளை மடியில் வைத்தபடி தலை குனிந்து அமைதியாக நிலவொளியில் உட்கார்ந்திருந்தாள். அவளது கருங்கூந்தல் முதுகில் பரவியிருந்தது. இடது கால் பெருவிரல் மண்ணில் அரையாகப் புதைந்திருந்த மெல்லிய கல்லைத் துழாவிக் கொண்டிருந்தது. அதன் வடிவத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அது தவறும் போது
வலது பெருவிரல் அதன் கசட்டைத் துருவி எடுத்தது.

பத்துவயதுச் சிறுமி. இரட்டைச் சடை. சிவப்பு கவுன்,சிவப்பு ஷு கறுப்பு ரிப்பன்கள் இதுதான் அவள். எல்லோரையும் கவர்ந்தாள். அவளுடைய சதைப்பற்றான மச்சமிருக்கிற கன்னத்தைக் கிள்ளுவார்கள். அது இன்னமும் நினைவிலிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்போதும் கூச்சமுடையவளாக இருந்தாள்; பயமும், அவமானங்களும் இருந்தாலும் யாருடனும் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் நடக்கிறதே நான் உண்மையானவளா, இதுதான் என்னுடைய பெயரா—அப்போதும் நிகழ்வுகள் அவளைக் குழப்பின.

நான் அப்பாவுடன் ராட்சஸ ராட்டினத்திலிருந்தேன். அவர் பட்டுக் குர்தாவும், வேட்டியும்–தன்னுடைய பண்டிகை ஆடையை அணிந்திருந்தார். சந்தனம் வைத்திருந்த பெட்டியில் இருந்ததால் குர்தா நல்ல வாசனை உடையதாக இருந்தது. முதல்முறையாக பயத்தோடும்,ஆர்வத்தோடும் நான் ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தேன்.அதன் சக்கரம் சுற்றத் தொடங்கியவுடன் என் பயம் மும்மடங்கானது. அது மேலே போகப்போக வேகம் அதிகமாக தான் இறப்பது போன்ற உணர்வில், அவள் அப்பாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் இறக்கி விடுங்கள் .. இறக்கி விடுங்கள்.. என்று கத்தினாள். அப்பா அதை நிறுத்தவில்லை. எதையும் செய்துவிட முடியும் என்று நான் நினைத்திருந்த அப்பாவால் அந்தச் சக்கரத்தை நிறுத்த முடியவில்லை. அப்பா சிரித்திருக்க வேண்டும். அவர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். குளிர்க்காற்று பட, நான் சில்லிப்பாக உணர்ந்தேன்.

கவுனை நான் ஈரப்படுத்தி விட்டால் அம்மா கத்துவாள். அப்பாவையும்தான். வயிறு வெடித்துவிடும் போல உணர்ந்தாள். கவுனை ஈரப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பயம் அவளை விட்டுப் போயிருந்தது. ஏன் இப்போது அவளுக்கு கடந்த காலம் நினைவில் வரவேண்டும்? அதுவும் இந்த வகையிலான ஒரு மனநிலையில்? அவள் உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. கடந்த சில மாதங்களாகவே அவள் தன்னை விட்டேற்றியான ஒரு மனநிலைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பா இப்போது மிக வயதான மனிதர். தளர்ந்து போன அவரிடம் தன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியைக் கேட்பது கூட அர்த்தமற்றது. வாரா வாரம் அவள் அவருக்கு எழுதும் கடிதம் வராத போது அவள் பிரிவை அவர் உணரலாம் .மும்பையிலிருக்கும் என் தங்கையின் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நான் வாங்கிய கொலுசு மேஜையில் இருக்கிறது. பல கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும் ; திட்டக் கமிஷனிலிருந்து வந்த அழைப்பிதழ், மரம் நடும் அமைப்பு, குதிரைப் பயண அமைப்பு –ஆனால் எல்லாம் அர்த்தமற்றவை.

***

அவன் என் சங்கடமான நிலையை உணர்ந்திருக்க வேண்டும்; என் சிகரெட்டைப் பற்ற வைத்தான். “நீங்கள் தினமும் காலையில் குதிரை சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன் ஆங்கில நாடகங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறேன்..” நகரத்திற்கு வெகு தொலைவில், தனியான மூலைப் பகுதியில் ஏரியருகே ஒரு பெண் இருப்பது மிகச் சாதாரணம் என்பது போல அவன் நடந்து கொண்டான். அவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். அவள் வசதியாக உட்காரும் வகையில் அவன் சிறிது நகர்ந்து உட்கார்ந்தான். அந்த உரையாடலைத் தொடர்வதில் அவன் எந்த வேகமும் காட்டவில்லை. எந்த விவரத்தையும் எதிர்பார்க்காத, நட்பின் அமைதியான தன்மையைக் காட்டுவது போலிருந்தான். அவனுக்குத் தன்னைத் தெரிந்திருப்பது சிறிது அமைதியைத் தந்தது என்றாலும் தனது அடையாளம் தெரியப்படாத நிலை மறைந்து விட்டது வருத்தம் தந்தது.

அவன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாதது பெரியதாகப் படவில்லை. அவள் தன்பழைய மனநிலைக்குத் திரும்ப விரும்பி, தோற்று தன்அமைதியைத் தானே உடைத்தாள்.

“ இது மிகச் சின்ன உலகம். ”

அவன் இயல்பான சிரிப்போடு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுக்கு அமைதி தேவை என்பதை புரிந்து கொண்டவன் போல இருந்தான். தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அங்கு வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் இயல்பாகத் தன்னால் சொல்ல முடியுமென்று அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவனிடம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எந்த மாறுதலும் வரப்போவதில்லை என்றும் தோன்றியது . அவள் சிகரெட்டைப் புகைத்தாள். பறவையொன்று கெஞ்சுவது போல அவர்களைப் பார்த்து ஒலித்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“திருமதி…”

அவளைப் பார்த்த அவன் , அவள் பேச விரும்பாததைப் புரிந்து கொண்டவன் போல பாதியில் பேச்சை நிறுத்திவிட்டான். அவன் ஆழமான அமைதியில் ஆழ்ந்து விடுவான் என்றும் அவன் பேசவேண்டும் என்றும் நினைத்து அவள் “ஷைலி என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னாள்.

அவள் காத்திருந்தாள். தன் அடர்த்தியான கூந்தலை முதுகில் பரவவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பி இயல்பாகச் சிரித்தாள்.ஓ.. தன் கணவனுடன் சேர்ந்து, இப்படி நிம்மதியாகச் சிரித்து பல ஆண்டுகளாகி விட்டன! அவனுடைய அமைதியான முகம் ,நிலவொளியில் ஒரு மென்மையான உணர்வை வெளிப்படுத்தியது. அவன் கண்கள் மின்னின

“ஷைலி, என் மனைவி இறந்திருக்கலாம்’ அவன் அவளிடமிருந்து பதிலை ,எந்தவித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் குரல் வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்தாள்.

“விசாரணைக்காக வரும் போலீசிடம் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம். தொடக்கத்தில் எங்களிடையே இருந்த காதல் மெல்ல, மெல்ல மறைந்து விட்டது. அது யாருடைய தவறு என்று கண்டுபிடித்துச் சொல்வது அசாதாரணமானது. நாம் சொல்லக் கூட முடியாது. காதல் மறைகிறது.—அது பரஸ்பரம் காணமுடிகிற ஒன்றல்ல. அது மந்திரமான மயக்கம், சிறிது நேரத்திற்குப் பிறகு அப்படி உணர்வது நின்று விடும். பிறகு இந்த ஏரி, குன்று, இந்த வானம்.. எல்லாம் மரணித்துவிடும்.

“நீங்கள் இதை வேடிக்கையாக உணரலாம் ஷைலி —ஆனால் இந்தப் பறவை ஒலித்தபோது நான் ஆச்சர்யப் பட்டேன். நீங்களும்தான். அது மிகவும் அற்புதம் .இல்லையா? நீங்கள் உங்கள் கூந்தலைப் பிரித்து முதுகில் பரவ விட்டுச் சிரித்த போது நான் வியப்படைந்தேன்., ஏன் என் மனைவியால் இது போல் இனிமையாகச் சிரிக்க முடியாது என்று நினைத்தேன். இந்த நாட்களில், நான் ஆச்சர்யப்படுவதும் கூட நின்று விட்டது. இல்லாவிட்டால் நான் ஒரு கலைஞனாக வாழும் தைரியம் பெற்றிருப்பேன்.எனக்கு அந்த தைரியம் இருந்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டாள். எங்களுக்குத் திருமணமான புதிதில் கல் போன்றிருந்த படுக்கையில்தான் படுப்போம். வறுமை.. எனக்கு ஏராளமான கனவுகளிருந்தன. ஆனால் இப்போது எதுவுமில்லை. அது போய் விட்டது. ஏன் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானகரமான அந்த நாட்கள் போய்விட்டன. இவை எல்லாவற்றோடும், என்னுடைய , காரணமின்றிச் சந்தோஷப்படும் இயல்பும் கூடப் போய்விட்டது அதிகத் தேவை நமக்கிருக்கிறது என்று எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் எல்லைக்கு அவள் போய்விட்டாள்.. எதுவும் வேண்டாமென்று சொல்பவனில்லை நான்.

“நான் என் மனைவியை இன்று கொன்றிருப்பேன். எதற்குச் சண்டை போடத் தொடங்கினோம் என்பது கூட எனக்கு நினைவில்லை. பயங்கரம்.. இல்லையா? தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள். செய்து கொள் என்று சொல்லி அவளைத் தள்ளினேன். செத்துப் போ..செத்துப் போ.. நான் கத்தினேன். அவள் தன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள். அப்போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படாதது குறித்து அதிர்ந்தேன். அவள் ஒரு நாற்காலியின் மீதேறி மேலே கயிற்றைப் போட்டு சுருக்குவதை கதவின் ஓட்டை வழியாக நான் பார்ப்பதை அவள் பார்த்தாள். அல்லது அவள் பார்க்காமலும் இருந்திருக்கலாம்.! ஆனால் அவள் கதவு இருந்த திசையைப் பார்த்தாள். எங்களுக்கு இரு குழந்தைகள் –ஓர் ஆண்,ஒரு பெண்—அவர்கள் விளையாடிவிட்டுத் திரும்பும் போது என்ன விதமான வேதனைக்கு ஆளாவார்கள் என்று நினைத்து வெந்து போனேன்.

“அவளுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது ஆச்சர்யம் தந்தது. அவள் சாவு பற்றிய சிந்தனையை நான் உணர்ந்த போது என் முழு உலகமே மாறிப் போனது .நான் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி, நடந்து இங்கு வந்து உட்கார்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறேன். நடந்து வரும் போது நான் நானாக இல்லை, வேறு யாரோ என்பதாவும் உணர்ந்தேன்.

“இப்போது அவள் உடல் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள். போலீஸ் வந்திருக்கலாம். வீட்டிற்கு முன்னால் அக்கம் பக்கத்தவர்கள் கூடியிருப்பார்கள். எதுவெனினும், வேறு யாருக்கோ இது நடந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்”.

“என் திருமணத்திற்கு முன்பான கதையைக் கேளுங்கள். அவளுக்கு பதினெட்டு வயது. அவர்கள் கிராமத்தில் நான் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களது ஒரே வீடுதான் அந்தக் காட்டில். ரப்பர் செடியால் வீடு சூழப்பட்டிருந்தது. இரண்டு புறத்திலும் வரிசையாகக் குன்றுகள். நாங்கள் சுள்ளிபொறுக்கச் சேர்ந்து போவோம். கிணற்றில் தண்ணீர் இறைப்பது, காய்கறிகள் நறுக்குவது, துணிகள் துவைப்பது வரிசையாகக் காய வைப்பது என்று அவள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நடனப் பாங்கிருக்கும். காரணமின்றி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம். அவள் தன் தாய்க்கு உதவியாகச் சமையலறையில் இருககும்போது நான் பேச விரும்ப மாட்டேன். அவள் எனக்காக சுடுதண்ணீர் வைத்துத் தருவாள். தாய் அறியாமல் முதுகு தேய்த்து விடுவாள். இரவில் நான் எழுந்திருக்கும் போது தான் விழித்திருப்பதைக் காட்டுவாள். இரவு
நேரத்தில் சாணக் கிடங்கிற்குப் போகும்போது துணைக்கு அழைப்பாள். சிறிது நேரம் தனியாக நெருக்கமாக நின்றிருப்போம்.அவள்தான் இது எல்லாவற்றையும் செய்தாள் என்று சில சமயம் எனக்குத் தோனறும்.

“அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். ரப்பர் தோட்டம் போட அவர் காட்டைச் சமப்படுத்தினார். நாங்கள் சந்திப்பதற்கு ஐந்து வருடங்கள் முன்னதாகவே அவர் இறந்து விட்டாலும் எல்லோரும் அவரைப் பற்றி தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர் சிறிது குறும்புக்காரர். காதல் கடிதங்கள் எழுதுவதில் திறமைசாலி. அந்தப் பழக்கம் சிறுவயது தொடங்கி அவர் சாகும்வரை இருந்தது. கடிதங்கள் எழுதுவது மட்டுமின்றி, தனது ஆதாரத்திற்காக அதன் பிரதிகளையும் வைத்திருந்தார். அந்தக் கடிதங்கள் தன் காதலியைச் சந்தித்ததையும், கவனமற்ற வார்த்தைகளால் வர்ணித்ததையும் விவரிக்கும்.. காதலியின் போக்கு வித்தியாசமாக இருந்தால் கடிதத்தின் தொனியும் மாறுபடும். சில கடிதங்கள் எளிமையாக – நெஞ்சு, பூக்கள் , பட்டாம்பூச்சிகள், அழகான வெள்ளை உடையுடனான இளம்பெண் என்ற வர்ணனைகளோடு. அவள் மாடிக்கு வந்து அந்தக் கடிதங்களை படித்துக் காட்டி சிரிப்பாள். அந்தத் தாத்தாவின் மனைவிக்கு எப்போதும் எங்கள் மீது ஒரு கண். ஒரு தடவை கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது வந்துவிட்டாள் புண்ணாக இருந்த தன் முதுகை பெருமையாகக் காட்டி அது தாத்தாவின் வேலை என்றாள். நாங்களிருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். தன் கணவனின் சாகசங்கள், பில்லி சூனியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு, அவருடைய பிடிவாத குணம், அதை அவள் பொறுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவற்றையும் சொன்னாள். ஷைலி, உங்கள் முகத்தைப் பார்த்ததும், எனக்கு இவை எல்லாம் ஏன் ஞாபகம் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவள் உங்களைப் போன்றில்லை. வீடே அவள்
உலகம். நன்றாகப் பாடுவாள். இப்போது அதையும் நிறுத்தி விட்டாள். அவர்கள் வீட்டில் ஓர் ஆடு இருந்தது. கண்ணில் பட்டவை எல்லாவற்றையும்மேய்ந்துவிடும். கட்டியிருக்கும் கயிறையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடும். ஒரு தடவை அது என் நிக்கரையும் கூடச் சாப்பிட்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவள் சிரித்தாள். என் இறுகிய முகத்தைப் பார்த்து விட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தாள். நானும்தான். அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் சிரித்தேன். அது அல்ப விஷயம்தான். ஆனால் அதுபற்றி நினைத்து நாங்கள் இரண்டு மூன்று வருடங்கள் சிரித்திருக்கிறோம். நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது— நான் இப்படிப் பேசுவேன், நினைப்பேன் என்று எல்லாம் அவளுக்குத் தெரியாது. என் வெறி அதிகமாகி இருந்திருக்கிறது, உங்களைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை.” அவன் இடைவெளியில்லாமல் பேசிவிட்டு அமைதியானான்

அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் தன் கைகளை அவள் கை மேல் வைத்தான்.மீண்டும் அவள் ஆச்சர்யமடைந்தாள். ஈரப்பதமான மேகங்கள் நிலாவின் மேல் மிதப்பதைப் பார்த்தாள். காற்று வீசியது.

“வாருங்கள், நாம் போகலாம்…” சொல்லிவிட்டு எழுந்தாள். காரில் ஏறி உட்கார்ந்த பிறகு அவன் வீடு இருக்குமிடத்தைக் கேட்டாள். காரின் பின் இருக்கையிலிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து “உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள். அவன் சிறிது உறிஞ்சி விட்டு, “நன்றி” என்றான். அவள் பாட்டிலை மூடினாள். “ வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரை கிளப்பினாள்.

“உங்கள் மனைவி இறந்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்” என்று கார் ஓட்டும் போது சொன்னாள்.

“ஆனால் எதுவும் மாறியிருக்கப் போவதில்லை” என்று சொன்னான் அமைதியாக.

”ஆமாம். மாறப் போவதில்லை” என்று அவள் தனக்காகவும் சேர்த்துச் சொன்னாள். அவனுடைய அமைதியான, மென்மையான முகம், மெலிந்த உதடுகளைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினாள். தன் மகன் அமைதியாக பாடம் எழுதுவதை அவனால் பார்க்க முடிந்தது. அவள் கைகளை அவன் அழுத்தினான். அவள் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “குட்பை “என்றாள்.’

*****
நன்றி:
Apoorva [ Uncanny ] first appeared in the collection Akasha Mattu Bekku Akshara Prakashana, Sagar, 1981