Author: பதாகை

கலவி, வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு

காலத்துகள்

‘இவரும் செங்கல்பட்டு தான்’ என்றாள் இவனுடைய மனைவி. வார ஆரம்பத்தின் சலிப்பு இப்போதே கவிய ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மாலையில் வீட்டிற்கு வந்தவர்களிடம் அசிரத்தையாக உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன், தலையசைத்து வைத்தான்.

‘எங்க இருந்தீங்க’ என்று எதிரில் அமர்ந்திருந்தவன் கேட்டான். ரவி என்று தானே பெயரை சொன்னான்? வெள்ளி தான் அடுத்த ப்ளாட்டில் குடிவந்திருந்தான்.

மெயின்டனன்ஸ் செலவு, கரண்ட் பில் குறித்து குறித்து தெரிந்து கொள்ள நேற்று வந்திருக்கலாம். விடுமுறையின் உற்சாகம் வடிந்து விட்ட நேரத்தில் தம்பதியராய் வந்து எரிச்சலேற்றுகிறார்கள். இவளும் ‘எப் ஒன்ல மெயின்டனன்ஸ் கரெக்ட்டா தரவே மாட்டாங்க, எங்க வீட்ல ரெண்டு பேரு தான், என்னோட வாட்டர் பில் பங்கு ஏன் இவ்ளோ இருக்குன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க’, ‘எஸ் போர்ல பதினஞ்சாம் தேதிக்கு மேல தான் தருவாங்க’ என்று அபார்ட்மெண்ட் குறித்த பெருங்கதையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

‘கோகுலபுரம்’

‘நாங்க அண்ணா நகர். எந்த ஸ்கூல்’, ரவி தான்.

‘ஜோசப்’

‘நானும் அங்க தான், நைன்டி ஸிக்ஸ் பேட்ச்’..

‘நான் நைன்டி பைவ்’. போய்த் தொலையேண்டா.

பள்ளியின் அப்போதிருந்த வாத்தியார்கள், இப்போதைய நிலை குறித்து பேசிய பின் ரவி கிளம்பினான்.

 

‘கொயின்சிடன்ஸ்ல’

‘மாடிக்கு போறேன் வரியா, தலைவலி. டீசன்ஸி வேண்டாம், இப்படியா வந்து டார்ச்சர் பண்ணுவாங்க’

‘உங்களுக்கு யாராவது வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது’

‘வரட்டும், அதுக்காக சண்டே ஈவ்னிங்கா’

‘நீங்க போங்க, குக்கர் ஏத்திட்டு வரேன்’.

 

எதிர் ப்ளாட் முதியவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, நெஞ்சையும் வயிற்றையும் புடைத்து நிமிர்த்தி , முதுகை வளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தார், ஏதாவது யோகாசனமாக இருக்கும். தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேர நடை, யோகா. எண்பது வயதிற்கு வலுவான உடற்கட்டு. அந்த வயதில் என்னால் மாடிக்கு ஏறி வந்து பத்து நிமிடம் நடக்க முடியுமா?

‘என்ன லேட்டா’ என்று கேட்ட பெரியவர் புட்டத்தை தூக்கி சத்தமாக காற்று பிரிக்க, ‘புதுசா வந்திருக்காங்கல்ல, அவங்க பேசிட்டிருந்தாங்க’ என்றபடி விரைவாக நகர்ந்தான். இது கண்டிப்பாக யோகப் பயிற்சியாக இருக்க முடியாது.

தானும் செங்கல்பட்டு தான் என்று அந்த ரவி சொல்வதற்கு முன் எதுவும் தோன்றவில்லை. இப்போது பரிச்சயமானவனாக தெரிகிறான். ஒரே ஊர், பள்ளி என்பதால் வரும் உளமயக்கம். மாடிச் சுவற்றினருகே நின்று தெருவை கவனித்துக் கொண்டிருந்தான். ட்யுஷன் முடித்து சைக்கிளில் மூன்று சிறுவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், பள்ளி திறக்கவிட்டாலும், ட்யுஷன் நடந்து கொண்டுதானிருக்கிறது. காலை நடைக்கு பதிலாக சைக்கிள் வாங்க வேண்டும் என்று சில மாதங்களாக இவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் என்கிறார்கள். வாங்கி சில நாட்கள் மட்டுமே ஒட்டி, மீண்டும் நடக்க ஆரம்பித்தால் வீணாகிவிடும்.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. சண்டையை யாரோ தடுக்கிறார்கள். அந்தப் பையன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, இவனும் கிளம்புகிறான்.

இதுவரை வாழ்வில் இவனுடைய ஒரே கைகலப்பு, அதனாலேயே அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்வு. முகம் மறந்திருந்த அந்தப் பையன் ரவியா, அதனால் தான் முன்பே பார்த்தது போல் தோன்றுகிறதோ? இல்லை, ரவியை பார்த்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும், காலை இறை வணக்கத்திற்கு செல்லும் போதும், அது முடிந்து திரும்பு போதும் அல்லது உணவு இடைவேளையில் எங்கேனும் பார்த்திருப்பான். பள்ளியில் இல்லாவிட்டாலும், பஜாரில் அல்லது தசரா சந்தையில். இல்லை, அப்படி மட்டுமே எதிர்பட்டிருந்தால் இப்போது நினைவுக்கு வராது, இந்த நிகழ்வோடு அவனை பொருத்திப் பார்க்கத் தோன்றாது. மாடியின் இன்னொரு முனைக்குச் சென்று அடுத்து கட்டிக் கொண்டிருந்த வீட்டை கவனிக்க ஆரம்பித்தான்.

ஸ்டாண்டில் வகுப்புவாரியாகத் தான் சைக்கிள்களை நிறுத்த வேண்டும். அந்தப் பையனுடைய சைக்கிள் இவனுடைய வண்டிக்கு சற்று முன்னால் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் எட்டாம் வகுப்பு மாணவனாகத் தான் இருந்திருக்க வேண்டும், எனவே அவன் ரவியாக இருக்கலாம்.

அருகில் வந்து நின்ற இவன் மனைவி

‘ரவி வைப் சொன்னதை கவனிச்சீங்களா, பார்ட்டி டூ லாக்ஸுக்கு வாங்கிருக்காங்களாம், உள் வேலைக்கு டூ லாக்ஸ் எக்ஸ்ட்ரா’

‘நம்ம வாங்கினப்ப இருந்ததை விட கொஞ்சம் தான் இன்க்ரீஸ் ஆயிருக்கு’

‘நீங்க அவரை பார்த்திருக்க சான்ஸ் இருக்குல’

‘இப்ப எதுவும் ஞாபகம் இல்லை, .. மேபி’

மாடியை சுற்ற ஆரம்பித்தாள். மாலை பதினைந்து, இருபது நிமிடங்கள் நடந்தால் தான் இரவுணவு எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறாள். முதியவர் வேட்டியை அவிழ்த்து, உதறி கட்ட, அவர் அணிந்திருக்கும் நீல நிற உள்ளாடை சில நொடிகளுக்கு கண்ணில் படுகிறது. கிழத்திற்கு விவஸ்தையே கிடையாது, நிதானமாக சரி செய்து கொள்கிறார். நல்லவேளையாக இவள் அப்போது தான் அவரைக் கடந்து சென்றிருந்தாள்.

 

ஞாயிறு இரவின் கலவி. அட்டவணை போடவில்லையென்றாலும் வார இறுதியில் மட்டும் முயங்குதல் என்பது எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. மதியம், முன்மாலை என்று உடலெங்கும் இச்சை பரவியிருந்த காலம் முடிந்து விட்டது. சலிப்புடன், அசுவாரஸ்யமாக ஈடுபடாமல் அல்லது தலைவலி என்று அவள் தவிர்க்காமல் இருப்பதை எண்ணி தேற்றிக் கொள்ள வேண்டியது தான். சில வார இறுதிகளில் இவன் தான் தவிர்க்க காரணங்கள் தேடி, பின் அப்படிச் செய்தால் பொய்யென்று கண்டுபிடித்து விடுவாள் என்பதால் சமாளிக்க வேண்டியுள்ளது. உடலுறவில் ஈடுபட விருப்பமில்லை என்று ஆண் கூறுவது இழிவில்லையா? ‘ஆண்ட்ரோபாஸாக’ இருக்கலாம், இதற்கு யோகாவில் ஏதாவது உள்ளதா என்று பெரியவரிடம் கேட்கலாமா? இன்று ரவி பிரச்சனை வேறு, அவள் மீது கவிழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது, ரவியுடன் மனதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். உதட்டருகே இருந்த அவள் கழுத்தை கடிக்க, அவள் முகத்தில் குத்த தோன்றிய உணர்வை கட்டுப்படுத்த செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. மங்கலாகிவிட்டிருந்த அந்தப் பையனின் முகம் ரவியின் ஜாடையில் இருப்பதாகத் தான் இப்போது தெளிவுறுகிறது.

 

ஆனால் எதுவும் ஞாபகம் இருப்பது போல் ரவி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குச் சென்றப் பின் அவனுக்கும் நினைவிற்கு வந்திருக்கக் கூடும். ‘என் சீனியர் தான். ஒரு நாள் சண்டை, அடி பின்னிட்டேன்’ என்று மனைவியிடம் கூறியிருப்பான். அவள் இனி ஏளனமாக தான் என்னைப் பார்ப்பாளோ? அபார்ட்மெண்டில் வசிப்பவர்களிடையே சிறு சிறு தற்காலிக மனஸ்தாபங்கள் எழுவதுண்டு, அப்போது ‘என் ஹஸ்பன்ட் கிட்ட ஓத வாங்கினவன் தான் ஒன் புருஷன்’ என்று அவள் கூறி விடலாம். அபத்தம். பேச்சு வாக்கில் சொல்லிவிடவே அதிக வாய்ப்புண்டு. ‘நம்ம ரெண்டு பேர் வீட்டுக்காரங்களும் ஸ்கூல் டேஸ்ல சண்ட போட்டாங்களாம், உங்க ஹஸ்பண்டுக்கு நல்லா அடி பட்டுருச்சாம்’. அதன் பின் இவளிடம் எப்படி முகம் கொடுத்து பேச முடியும், தன்னைக் காக்கக்கூடிய பலமுடையவனையே கற்காலத்திலிருந்து பெண்கள் தேர்வு செய்ய விரும்புவார்கள் என்று கூறுகிறார்கள். நாற்பது வயதுக்கு மேல் அந்த உயிரியல் இச்சை இருக்காதா என்ன? தன்னை விட வயது குறைந்தவனிடம் அடி வாங்கியவன் என்று அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி பரவக் கூடும். ஆனால் ரவிக்கு என் வயதிருக்கலாம், நவம்பர், டிசம்பருக்கு பின் பிறந்திருந்தால் ஒரு வருடம் தாமதமாக பள்ளியில் சேர்ந்திருப்பான். பெயிலாயிருந்தால் என்னைவிட பெரியவனாகக் கூட இருக்கக் கூடும். அன்று தாக்கிக் கொள்ளுமளவிற்கு என்ன நடந்தது?

காலை நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தவன் மெயின் ரோட்டிலுள்ள பேப்பர் கடையின் வாசலில் ரவி நின்றுகொண்டிருப்பதை கவனித்து வேறு பக்கம் பார்த்தபடி கடந்தான். ‘என்ன ஸார், வாக்கிங்கா’, என்றழைத்தான் ரவி.

‘டெய்லி ஒன் அவர்’

‘உங்களுக்கு யார் பேப்பர் போடறாங்க, நேத்து அதை கேக்க மறந்துட்டேன் ’

‘நம்பர் தரேன்’ நேற்று வெட்டி அரட்டை அடித்து, மாலையை பாழாக்கியதற்கு இதையும் கேட்டுத் தொலைத்திருக்கலாம்.

‘வர்க் ப்ரம் ஹோமா இல்லை ஆபிஸா ஸார்’

‘வீக்லி ஒன்ஸ் போகணும்’

‘நான் மூணு நாள் போகணும்.’

‘கம்பெனி வண்டியா’

‘அதெல்லாம் கிடையாது, பைக் தான்’

‘…’

‘அண்ணா நகர் ஸ்கூல்லேந்து தூரமாச்சே, எப்படி வருவீங்க, சைக்கிளா’ என்று கேட்டானிவன்.

‘ஆமா ஸார், பிப்த் வரைக்கும் வாலாஜாபாத் போற பஸ்ல வருவேன். அப்பறம் சைக்கிள்’

‘ஈவ்னிங் ஸ்டாண்ட்லேந்து வண்டிய எடுக்கறது ரொம்ப கஷ்டம்ல’

‘ஆமா ஸார், மத்த வேண்டிமேல இடிக்காம எடுத்துட்டு வரது ரொம்ப கஷ்டம்’

அபார்ட்மென்ட்டை அடைந்திருந்தார்கள்.

‘மூணு ப்ளோர் ஏற கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு, மார்னிங்கே பவர் கட்டு ஆகுமா ஸார்’

‘இல்ல, லைன் மாத்தறாங்க போல, அஞ்சு பத்து நிமிசத்துல வந்துடும்.’

 

‘சொல்லு நாயே’ என்றான் சசி.

‘டேய், நான் ஸ்கூல் டேஸ்ல சைக்கிள் ஸ்டான்ட்ல சண்டை போட்டது உனக்கு ஞாபகம் இருக்கா’

‘சண்டையா, என்னது’

‘ஒரு ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு கிளம்பும் போது , நாம நயனத்ல இருக்கும் போதுன்னு நெனக்கறேன்.’

‘என்னடா சொல்ற, நாம எங்கடா சண்டைலாம் போட்டோம்’

‘நீ இல்லடா, நான் மட்டும் தான். எய்த் ஸ்டான்டார்ட் பையனோட. ஜான், இல்ல பெப்ரவரில இருக்கும்’

‘நோ, அப்படி எதுவும் ஞாபகம் இல்ல’

‘நல்லா யோசிச்சு பாரு நாயே’

‘‘நானே மண்டே மார்னிங் வெறுப்புல இருக்கேன், சண்ட போட்டேனா , குண்ட போட்டேனான்னு சாவடிக்காத’

‘ஸ்டாண்ட்டுக்கு அந்தப் பக்கம் கர்ல்ஸ் ஸ்கூல் க்ரவுண்ட், பாத்ரூம் இருக்குமே, அது ஞாபகம் இருக்குமே’

‘நீ ரொம்ப ஒழுங்கு, நீயும் தானடா எட்டிப் பார்த்த’

‘அத கரெக்ட்டா சொல்லு. ஈவ்னிங் கால் பண்றேன், அதுக்குள்ள ஏதாவது தோணுதா பாரு’

‘இன்னிக்கு சில பல ஆபிஸ் பஞ்சாயத்துக்கள் இருக்கு, கொசுவத்தி கொளுத்தறதுக்குலாம் வாய்ப்பில்ல ராஜா’

‘ரவின்னு நமக்கு அடுத்த பேட்ச்சுல யாரையாவது உனக்குத் தெரியுமா’

‘ஒத்தா, போன வைடா வெண்ண’

 

சசியும் இவனும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு சென்று வருவார்கள், பின் எப்படி நினைவில்லை என்கிறான். அப்படியொரு சண்டை நடக்கவே இல்லையோ? இல்லை, சசி அன்று பள்ளிக்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது இப்படியிருக்கக் கூடும், சண்டை நடந்தது உண்மை, ஆனால் ரவியும் வேறொருவனும் அடித்துக் கொண்டது இவன் மனதில் இப்படி பதிந்திருக்கலாம். இல்லை, இதுவும் சாத்தியமில்லை. அன்று மாலை முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த வலி உண்மை.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கில் அடிபட்டு நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது சாய்ந்து விழுகின்றவனை, ரவி எட்டி உதைக்கிறான்.

எட்டி உதைத்ததெல்லாம் நடக்கவில்லை. முகம் சற்று வீங்கியிருந்ததைத் தவிர அந்த சண்டையில் வேறெந்த அடியும் படவில்லை. மூக்கிலும் எந்த காயமும் இல்லை. முக வீக்கமும் கூட விரைவில் குறைந்து விட்டது. அதனால் தான் வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை. தவிர, இலக்கில்லாத ஆறேழு கை வீசல்களைத் தவிர வேறெதுவும் ஸ்டாண்டின் மாலை நேர நெரிசலில் நடந்திருக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நிமிட சண்டை, அதற்குக் குறைவாகக் கூட இருக்கலாம். அதற்குள் தடுத்திருப்பார்கள்.

ரவிக்கு இப்போதே பெரிய தொப்பை, மூன்று மாடி ஏற சிரமப்படுகிறான், இன்னும் சில வருடங்களில் இன்னும் பருத்து விடுவான். அந்தப் பையன் அப்போதே கொஞ்சம் பூசினாற் போல் தான் இருந்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படியிருந்திருந்தால் அந்த உடம்புடன் எப்படி சண்டை போட்டிருக்க முடியும். அந்தப் பையன் ரவி தானா?

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றது நினைவில் உள்ளது. அன்று ரவியை பார்க்கவில்லை, அதன் பின்பும் ஸ்டாண்டில் அவன் எதிர்பட்டது போல் தெரியவில்லை. பள்ளியில் எங்காவது ஒரு சில கணங்களுக்காவது எதிரெதிரே வந்திருக்க வேண்டும். அடி வாங்கிய பயத்தில் ரவி என் முன் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரு கைகளையும் குத்துவது போல் இவன் வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கு உடைபட்டு சைக்கிளின் மீது சாய்ந்து விழும் ரவியை எட்டி உதைக்கிறான்.

‘ஜன்னலை இப்பவே சாத்திட்டீங்க, ஆபிஸ்ல வீடியோ காலா’ என்று படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி கேட்க இல்லையென்று தலையசைத்தவன்,

‘அருண் வர ஒன்னாயிடும்ல’ என்றான்.

‘ஆமாம்… இப்பவே ஏஸி வேற போட்டிருக்கீங்க’

அவள் மேல் கவிழ்ந்திருந்தவன் விலகி படுத்தான்.

‘நேத்து நைட்டே உன்ட்ட சொல்லனும்னு நினைச்சேன், மறந்துட்டேன். ரவி வந்திருக்கான்ல அவன் கூட ஒரு வாட்டி சண்ட போட்டேன்’

வலது காலை மடித்தவள் இவனை நோக்கி திரும்பி ‘நீங்களா’ என்றாள்.

‘லைப்ல என்னோட பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பைட். ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல வண்டி எடுக்கறதுல ஏதோ ஆர்க்யுமென்ட். செம அடி அடிச்சுட்டேன். பாவம் கீழ விழுந்தவனை எட்டி வேற ஓதச்சேன். அவன் அப்பவே கொஞ்சம் குண்டாத் தான் இருந்தான். சசி தான் வந்து தடுத்து விட்டான்.’

‘நெஜமாவா’

‘எஸ்’

‘என்னால நீங்க சண்ட போட்டதை இமாஜினே பண்ண முடியலை’

‘ஒரு நிமிஷம் கூட இருக்காது , சினிமா பைட்டான்ன. ரெண்டு அடி அடிச்சவுடன விழுந்துட்டான். மூக்கொடைஞ்சு ரத்தம்’

‘அடிச்சீங்கன்னு சொல்லுங்க, கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கு. அதுக்காக மூக்கலாம் ஓடச்சேன்னு..’

‘நெஜமாத்தான்டி. சில்லுமூக்குன்னு சொல்வாங்கல’

‘சின்ன விஷயத்தால கூட சில்மூக்குல வரும். காலேஜ் டேஸ்ல என் கூட படிச்சவ, மதியம் மூஞ்சி கழுவும் போது, அழுத்தி தேய்ச்சு ரத்தம் வந்துடுச்சு, செம அழுகை, அப்பறம்…’

‘இவனுக்கு நான் அடிச்சு தான் ரத்தம்’

‘ஒகே..’

‘நான் ஏண்டி பொய் சொல்லப்போறேன்’

‘..’

‘எனக்கு நேத்து வரை அவன் ஞாபகமே இல்ல, அவனைப் பத்தி எதுக்கு நான் பொய் சொல்லணும்’

‘சண்ட போட்டீங்க சரி, மூக்க ஓடச்சீங்கன்னே வெச்சுப்போம். ஆனா அந்தப் பையன் ரவி தானா. நிச்சயமா தெரியுமா?’ இடது காலை மடித்துக் கொண்டபடி கேட்டாள். உள் தொடையின் மென் மயிர்கள், ரவி மனைவியின் முழங்கையில் படர்ந்திருந்ததைப் போல.

‘ரவிக்கே கூட ஞாபகம் வந்திருக்கும் போல , அதான் இன்னிக்கு காத்தால வாக்கிங் போயிட்டு வரும்போது அவன பார்த்தப்ப சரியா பேசல. அந்தப் சண்டைக்கப்பறம் கூட அவன் அந்த இடத்துல சைக்கிளை வெக்கவே இல்ல’

‘..’

‘அவனால ஸ்டெப்சே ஏறே முடியல, மூச்சு வாங்குது.’

‘நீங்களும் கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க’ என்றபடி எழுந்தவள் ‘சண்ட போட்டீங்களோ இல்லையோ, அது ரவியாவே இருந்தாக் கூட, இந்த வயசுல அதெல்லாம் வேண்டாம்’ என்று கூறிவிட்டு கழிவறைக்குச் செல்ல, வயிற்றைத் தடவிப் பார்த்தான். ரவி அளவுக்கு தொப்பை இல்லை, சொஞ்சம் சரித்துள்ளது அவ்வளவு தான், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்தால் தட்டையாகிவிடும். இப்போது சண்டையிட்டால் ரவியால் ஒரு அடி கூட அடிக்க முடியாது.

ரவியை வயிற்றிலும், முகத்திலும் குத்தி அவனை வீழ்த்துகிறான். ‘விட்ருங்க’ என்று உரக்க கத்தியபடி இருவருக்கும் இடையில் ரவியின் மனைவி வருகிறாள். வியர்வை படிந்த அவள் முழங்கையில் மயிர்கள் இன்னும் கருமையாக படர்ந்துள்ளன. விலகிச் நிற்கிறான்.

வயிற்றை தடவிக்கொண்டிருந்த கை கீழிறங்கியது.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி.

உள்ளங்கைக்குள் இறுகும் குறி.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி, மீண்டும் இவன் மீது பாய முயற்சிக்க ‘விடுங்க, திருப்பி அவர்கிட்ட அடி வாங்கதீங்க’ என்று அவன் மனைவி தடுக்கிறாள்.

உள்ளங்கையில் பரவும் குறியின் ரத்த ஓட்ட சூடு. கழிவறையிலிருந்து வெளிய வந்து தொடைகளுக்கிடையில் துண்டால் துடைத்துக் கொண்ட பின் படுக்கையிலிருந்த உள்ளாடையை எடுக்க குனிந்தவளின் கைகளைப் பற்றி இழுத்தான்.

கோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்

தி இரா மீனா

கன்னட மொழி கவிதை உலகில் ’ நவ்யா ’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா. ஆங்கில மொழி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் கன்னட இலக்கிய உலகை படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா, பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

ஞானபீட விருது பெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், சிறந்த நாவலாசிரியரும், விமர்சகருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே. எந்த மொழி கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார்வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யு. ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப்பாடுள்ளது. ஏன் அப்படி? கவிதை எழுத உங்களைத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?

அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை. ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். ஒரு குழந்தையின் ஆசையான பார்வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சியானதாகவுமிருக்கும். குழந்தையின் மனம் மெழுகு பந்து போன்றது. பார்த்த அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் அதில் பதிவாகிவிடும். அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும். இது எல்லா மனித உயிர்களுக்கும் பொருந்தும். இளம்பருவத்தின் அனுபவ தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கற்பனைகளோடு உருவாக்கும். இந்த அனுபவங்களும், கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள். இளம்பருவ அனுபவங்களைக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான். இப்போது அந்த நாட்களை நான் நினைக்கும்பொழுது உடனடியாக கேட்க முடிவது- காக்கையின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல்தான். அந்த தவளையைக் காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததை கேட்க முடிகிறது. மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும், கேட்டும் கழிந்த, வளர்ந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எதுவும் முக்கியமானதோ, முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்திருக்கிறது.

யு.ஆர் : உங்களின் தொடக்க கால கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்கால கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போல தெரிகிறதே! இதற்கு காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?

அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள்] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான். நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். அன்று மேற்கத்திய நாகரிகம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென்பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக்கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி, மாறுபட்ட ,உயர்வான அகம்சார்ந்த அனுபவங்களின் தேடலுமாகிறது.

யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பதுதான் . எந்த கலையும் எவருக்கும் எளிமையானதி்ல்லை. பொது ஜனங்களை விட்டுவிடுவோம். படித்தவர்கள், அறிவாளிகள் என்று நாம் சொல்பவர்களில் பலர் கலையின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வு அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில்லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன்மையை காட்சிப்படுத்துவது முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை வெளிப்படுத்தும்போது, அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலையில் அமைவதும் முக்கியமானதே. அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே புரிந்து கொள்ளக் கடினமாக இருப்பது கவிதை என்று சொல்வதும்- இரண்டும் தவறுதான். ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது இலக்கியத்திற்கு மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவருக்கு அது சாத்தியமாகிறது. தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை ’ உருவாக்கும் தன்மையல்ல. புதிய வடிவில் நம்மைத் தயார் செய்து கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான். இன்றைய சூழலில் நாம்- கவிஞர்கள் மக்கள் விரும்பும் படைப்புகளைத் தரும் வகையிலான பொறுப்பிலிருக்கிறோம்.

நன்றி :உதயவாணி – கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா [1918—1992] ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் தமிழில் : தி.இரா.மீனா


விமர்சகர்

நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி.
நான் பறக்கும் தொடுவானத்தில் நீயும் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளைத் தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே, கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி.

தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்,

காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்,
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்,
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்,
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்,
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்,
பதினான்கு வருடங்கள் போராடினேன், கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிறகுகள் மீண்டும் கிடைத்தது,
காணும் சிறகாக ஒன்றும், காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு,
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…

நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து, எடைபோட்டு, சரிபார்த்து—
இவையெல்லாம் உன் பணிகள்.
நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா? அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.

நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ , ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி,
இருப்பினும் ஒரு சினேகிதன் ,என் ஆசான்.

உன் கண்கள்

உன் கண்கள் . அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக் கிடக்கிறது.
அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.
பனியின் வெண்மைக்கிடையில்
ஒளிரும் நீலக்கற்களா அவை ?
அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து
எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?
உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?
ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்
எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவற்றின் நினைவுகளில் மூழ்கி
என் இதயம் தனிப் பயணியாகிறது

என் செந்தாமரை

வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை
இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !
காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை
விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?

பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு
தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது
எத்தனை வழிகளில் நான் இவற்றைக் காதலிக்க முடியும்?
தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….
தாமரை நாணுகிறது:
இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.
கவனி ! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்
கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..
அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்
சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.
அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.
தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;
அது எப்படியோ வெளிறிப் போனது

தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்
என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,
நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?
———————–

நோய்க்கு மருந்து கொண்கண் தேரே

வளவ துரையன்

அம்மூவனார் பாடியுள்ள ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதி ”தாய்க்குரைத்த பத்து” எனும் பெயரைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே “அன்னை வாழி!” என்றுதான் தொடங்குகின்றன. மேலும் எல்லாப் பாடல்களும் தோழி கூற்றாக அமைந்துள்ளன. அவை செவிலித் தாய்க்குத் தோழி உரைப்பவனாக அமைந்துள்ளன.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் கலந்து பழகுகின்றனர். பின்னர் அவன் அவளை மணம்புரிய வேண்டிப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறான். சங்க காலத்தில் ஆடவர் பொருள் கொடுத்துத்தான் மகளிரை மணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலை இருந்ததை அறிய முடிகிறது. பொருள் ஈட்டிய அத்தலைவன் தேடிச் சேர்த்த பொருளுடன் தேரில் வருகிறான்.

தலைவன் சென்றபின் அவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவள் கண்களில் பசலை நோய் படர்கிறது. அவளின் நிலை கண்டு செவிலித் தாய் மனம் வருந்துகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி செவிலியிடம் கூறுகிறாள். “அன்னையே வாழ்வாயாக! உன் மகளின் கண்கள் நெய்தல் மலருக்கு நிகரானவை. தலைவன் பிரிவால் அக்கண்களில் இப்பொழுது பசலை நோய் படர்ந்துள்ளது. அந்நோய்க்கு மருந்து தலைவனின் வருகைதான். அதோ பார்! பசலை நோய்க்கு மருந்தாக நெய்தல் நிலத் தலைவனாகிய கொண்கணின் தேர் நீண்டு வளரும் அடும்பங்கொடியை அறுத்துக் கொண்டு வருகிறது.” கொண்கண் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். கொடியை அறுத்துக் கொண்டு வருவது தேரின் விரைவைக் காட்டுவதாகும். தாய்க்குரைத்த பத்தின் முதல் பாடல் இது:

    ”அன்னை, வாழி! வேண்டு அன்னை! உதுக்காண்
      ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
    நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
    பூப்போல் உண்கண் மரீஇய 
    நோய்க்கு மருந்துஆகிய கொண்கண் தேரே”

தலைவன் பொருள் தேடிக் கொண்டுவந்து விட்டான். திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் மிகவும் பொருத்தமாக இருப்பதைப் பார்த்து செவிலித் தாய்க்குக் காட்டி உரைப்பதாக இப்பத்தின் மூன்றாம் பாடல் இருக்கிறது.

"அன்னை வாழி! வேண்டுஅன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்குஅமைந்த தனனால் தானே;
தனக்குஅமைந் தன்றுஇவள் மாமைக் கவினே”"


”அன்னையே! புன்னையும், ஞாழலும் மலர்கின்ற குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறைகளை உடைய நெய்தல் நிலத்தலைவன் அவன். அவன் இவளுக்காகவே அமைந்துள்ளான். அதேபோல இவளது அழகும் மாந்தளிர் மேனியும் அவனுக்காகவே அமைந்துள்ளது” என்பது பாடலின் பொருளாகும். புன்னை, ஞாழல் போன்ற நெய்தல் நிலத்தாவரங்கள் இப்பாடலில் காணப்படுகின்றன.

இப்பொழுது தலைவன் வந்துவிட்டான். தலைவி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். அவள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழகு கூடுகிறது. தலைவியின் நெற்றி பொன்னை விட மிளிர்கிறது அதைக் காட்டிச் செவிலித்தாய் தோழியிடம் கேட்டதற்கு அவள் விடை கூறுவது போல ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! முழங்குகடல்
    திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
    தண்ணம் துறைவன் வந்தெனப்
    பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே”

இப்பத்தின் ஏழாம் பாடலும் தலைவனின் பிரிவால் தலைவி வாடுவதைக் காட்டுகிறது. அவள் மெலிந்து விட்டாள். நெற்றி பசந்து விட்டது. அதனால் அழகு குறைந்து விட்டது. அவள் நெய்தலில் இருப்பதால் குளிர்ச்சி பொருந்தியக் கடலலையின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த ஓசை காதில் விழும் போதெல்லாம் அது தன் தலைவன் வரும் தேரின் ஒலியோ என்றெண்ணி அவள் தூங்காதிருக்கிறாள். இதைச் சொல்லும் தோழி, “நோகோ யானே” என்கிறாள். அதாவது நானும் வருந்துகிறேன் என்றுரைக்கிறாள்.

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! என்தோழி
    சுடர்நுதல் பசப்பச் சாஅய், படர்மெலிந்து,
    தண்கடல் படுதிரை கேட்டொறும்,
    துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே’

ஒன்பதாம் பாடல் ஒரு புதுவகையானக் காட்சியைக் காட்டுகிறது. தலைவியை மணம் புரிய வேண்டி பொருள் தேடி வரச்செல்கிறான் தலைவன். சென்றவன் இன்னும் திரும்பவில்லை. நெடுநாள்களாகின்றன. வருவானா, மாட்டானா எனச் செவிலித்தாய் ஐயுறுகிறாள். அவன் பிரிந்து செல்லும் காலத்து என்ன சொல்லிச் சென்றான் என செவிலித் தோழியிடம் கேட்கிறாள். அதற்குத் தோழி தலைவியின் நிலையில் நின்றே விடை கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்:

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! நெய்தல்
    நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
    எம்தோள் துறந்த காலை எவன்கொல்
    பல்நாள் வரும் அவன்அளித்த பொழுதே?”

”அன்னையே, நான் சொல்வதைக் கேட்பாயாக; நீரில் வாழும் உள் துளைகள் உடைய நெய்தல் மலர்கள் நெருங்கி வளர்ந்துள்ள நீர்த்துறைகளைக் கொண்டவன் எம் தலைவன்; அவனுடன் நாங்கள் மகிழ்ந்திருந்தபொழுது, அவன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான். அந்த வாக்குறுதிகள் இப்பொழுதும் எம் நினைவில் வந்துவந்து நிற்கின்றன” என்பது பாடலின் பொருளாகும்.

நெய்தல் நெருங்கி மலர்ந்துள்ளது அவன் தலைவிபால் கொண்டுள்ள அன்பின் நெருக்கத்தைக் காட்டுவதாகும். நீரிலேயே அவை தங்கி வளர்வதால் அவனும் இவள் நினைவிலேயே இருப்பான்; எனவே விரைவில் வந்துவிடுவான் எனக் கூறுவது போல அமைந்திருப்பதாகும்.

தோழன், தோழி போன்றோர் அகத்துறைப் பாடல்களில் முக்கியமான பங்கை வகிக்கின்றனர். தலைவனையும் தலைவியையும் சேர்த்து வைப்பதிலும் அவர்கள் ஊடல்கள் கொண்ட காலத்து அந்த ஊடலைத் தீர்ப்பதிலும் அவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தப் பத்துப் பாடல்களிலும் தலைவியின் திருமணத்தின் பொருட்டுத் தோழி ஆற்றும் செயல்பாட்டை அவள் கூற்றின் வழி ஐங்குறுநூறு தெரியப்படுத்துகிறது எனலாம்.

சொல் ஒளிர் வெளி

பானுமதி ந

திருமதி. ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை அமெசான்- கிண்டில் பதிப்பில் படித்தேன். கவிதைகளும், கதைகளுமான இதில் அவரது ஓவியத் திறமையும் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கம் தன் முன்னுரையில், இப்படைப்பின் சிருஷ்டி கர்த்தாவின் கடித வாக்கியங்களே கவிதை போல இருப்பதாகச் சொல்கிறார். நுண்ணிய கவனிப்புகள், புரிதல்கள் கொண்ட எழுத்தில் உண்மை ஒளி வீசுகிறது என்பது அவரது அவதானிப்பு.

மாதத்தில் ஒரு நாள் தான் முழு நிலவு என்று தன் செல்ல வருத்தத்தைப் பதிவு செய்யும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் திரு. மைத்ரேயன், இந்தத் தொகுப்பின் பரிமாணங்களை தன் அணிந்துரையில் காட்டுகிறார். கண்ணதாசனின் ஒரு பாடல் ‘அனுபவம்’ என்பதைப் பற்றி பேசுகிறது. கடவுள்- மனிதன் இடையே நடைபெறும் உரையாடலில், அனுபவமே தான்தான் என்று கடவுள் சொல்கிறார். தன் கூர்மையான பார்வை வழியே அனுக்ரஹா, இந்த உலகை, அறிவிலும் உணர்விலும் பதித்து, அந்த அனுபவத்தை கவிதைகளாகவும் கதைகளாகவும் தந்துள்ளார். நிதானித்து, கவனம் செலுத்தி, ஆழ்ந்து படைத்து, அதை நுட்பமாகச் செதுக்கியுள்ளார். இவரது பார்வைக் கோணங்கள், சொல் உணர்த்தும் பொருளாக, இரண்டும் இடைவெளியேயற்றுத் தரும் உணர்வாக பரிமளிக்கிறது.

இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதியில் (வீடும் வெளியும்) 11 கவிதைகள், 2 சிறுகதைகள், இரண்டாம் பகுதியில் (நகரமும் நானும்) 9 கவிதைகள், ஒரு சிறுகதை, மூன்றாம் பகுதியில் (அவர்களும் நானும்) 9 கவிதைகள், இரு சிறுகதைகள், நான்காம் பகுதியில் (மழையும் மற்றவையும்) 12 கவிதைகள், ஒரு சிறுகதை என இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பில் காலம், வளர்ச்சி, யதார்த்தம், போன்றவைகள் சீராக நடைபயில்கின்றன. தன்னிலை, பிறருடன் தானும் என்னும் நிலை, தரையில் பதியும் பாதங்களெனும் உணர்வு நிலை, காலம், மழை, மலை, இயற்கை இவை தரும் ஆழ் நிலை எனக் கவிதைகளும், கதைகளும் ஒத்திசைந்த ஸ்வரக் கோர்வையாக இசைக்கின்றன.

வெளியில் வீட்டைச் சுமந்து அலைகிறோம்; வீட்டிலோ, தனிமையில் நம் மனம் வெளியில் சென்று விடுகிறது. ஆனால், நமக்கெனக் காத்திருக்கும் வீடு. தேவதேவன் மரத்தின் வீடு என்ற கவிதையில் கேட்பார்: ‘யார் சொன்னது மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று? தனது இலைகளாலும், கிளைகளாலும், கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும், தனக்குள்ளே மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொண்டுள்ளது.’ எழுத நினைக்கும் போதெல்லாம், அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி ஒழுங்குபடுத்துகையில் தானுமே நகர்ந்து கொண்டிருப்பதை வியக்கிறார் கவிஞர். இன்று மெல்ல மெல்ல நேற்றாவது அனுபவச் சேகரிப்பு; அது பரணில், தூசி படிந்து உள்ள நேற்றோடு இன்றும் போய் சேரும் கால விளையாட்டு.

நிற்கத் தரைகளற்ற வானம், மற்றொரு கவிதையில் விளக்கணைத்து காத்திருக்கிறது. மேலும், அந்தத் தரைகளற்ற அனைத்து வானங்களிலும் இவரது மொட்டை மாடி காணக்கிடைக்கிறது. வளர்வதின் மிகப் பெரிய அறிதல் என்பதே மாற்று உலகம் இல்லையென்பது தானோ? நகரத்தின் ரேகைகளின் ஒரு சந்திப்பில் மூன்றாம் மாடி அறையைப் பூட்டி மீள் வந்து திறக்கையில் கதவில் சிக்கிய மிதியடியாய் வாசல் வரை வரும் உலகம்.

இவரது கவிதையில் காலையில் ஓடும் காலத்தை கிலுகிலுப்பையில் சலங்கையாக கவி மனம் இருந்தால் கேட்கலாம். தேவதச்சன் சொல்வார் ‘காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை’ என்று. அவளிருந்த போது அவளுடன் செல்லும் சரிந்து நீளும் அந்தச் சாலையில் திடீரென உணரும் இட மாற்றம் வலியைக் கடத்துகிறது. சிலந்திக்கு மட்டுமே தெரியும் யாரும் தங்கள் வீட்டை மொத்தமாய்க் காலி செய்ய முடியாதென்று என்று பேசும் இந்திரனின் கவிதை நினைவிற்கு வந்தது. சொல் உதிர்ந்து பொருள் கனியும் கணங்களில் பேசும் கவிதைகள் கவிஞன் யாருடன் பேசுவான் எனக் கேட்டு பதில் சொல்கிறது. கடந்து விட்ட இடங்கள் மீண்டும் வந்து இணைகின்றன. காட்சி மறைவும் நடக்கிறது. பூமியின் எல்லையில் தூங்கும் மலை முகடுகள் மூன்று ஜன்னல்களாகப் பிரிந்து, ப்ளாஸ்டிக் தொட்டியிலுள்ள ஆலமரத்தில் நிலைப் படுகிறது.

சுவர்களெல்லாம் வேர் விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் போதி மழையை இவர் காட்டும்போது சிலிர்க்கிறது. முடியாக்காரியங்களுக்கென ஒதுக்கப்பட்ட கனவுகளில் துவைக்க நினைத்து நனைத்து பின்னர் கனவுள்ளே உலரப் போடுகையில் பெய்கின்றது மழை. ஆமாம், மழை சுத்தப்படுத்துகிறதா, சுற்றி இறுக்குகிறதா?

இதைப் போன்றதொரு சிந்தனையைக் கொண்டு வருகிறது இவர் சொல்லும் ஒரு வாக்கியம் : ‘இன்பத்தை அறியும் உலகத்தின் தொலைவு ஒவ்வொருவரின் வாழ் நாள் தூரம்.’ மரணம் தரும் தற்காலிக விடுதலை என நான் எண்ணுகிறேன். மரணம் முற்றுப்புள்ளி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், தூக்கிச் சுமந்த வாழ்வை அந்தச் சுமைதாங்கியில் இறக்கி வைக்கலாமல்லவா? தின மணியான அந்த ஆதவனின் நிலையிருப்பு இவரை இப்படிப் பாட வைத்திருக்கிறது-‘மண்ணிலிருந்து வராத கிழட்டுத் தக்காளி எத்தனை காலைகளாக, செஞ்சிவப்பாக..’

மொத்தம் ஆறு சிறுகதைகள் அடங்கியுள்ள இந்தத் தொகுப்பில் கவித்துவம் நிரம்பிய வரிகள் மின்னல் கீற்றுகளென பளீரிடுகின்றன. தன்னைத்தானே அணைத்துக் கொண்டு மின் விளக்குக் கம்பத்தின் கீழ் படுத்திருக்கும் நாய் ஒரு காட்சியாக விடுதியில் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. தொழில் நுட்பப் பூங்காவின் வாயிலில் ஒரு சிமென்ட் மரம்- அந்தத் தொழில் நுட்பப் பூங்காவோ இரவையே வெட்டிச் செகுத்துவது போலத் தென்படுகிறது. சாயும் காலத்தின் பூடக வரிகள் இவை: ‘சட்டென ஏதோ ஒன்று நினைவிற்கு வந்து மறைந்தது போல.’ அத்தனை கதைகளிலும் சிறப்பான ஒன்றாக நான் நினைப்பது ‘ராஜேஷ் கன்னா’ தான். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி, தான் வகுப்புத் தலைவி எனப் பெருமிதம் கொள்வது, தன்னை சட்டை செய்யாத சந்திராவுடன் சண்டைக்குப் போவது, அதற்கான சாக்குகள் தேடுவது, அது மெல்ல மெல்ல ராஜேஷ் கன்னா என்ற பையனிடம் கற்பனைக் குரோதமாக வளர்வது, யாருடனும் பேசாத மக்குப் பையனான அவன், யார் பழித்தாலும், அடித்தாலும் புன்சிரிப்புடன் இருக்கும் அவன், இந்தச் சிறுமியுடன் இணக்கமாக விழைவது, இவள் அவனை அடிக்கையில் முதல் முறையாக அவன் வலியை வெளிப்படுத்துவது, அதன் காரணமாக தன் மனக் கோணலை இவள் உணர்வது, அவன் படித்து தன்னை அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்துவிடுவானென்றும், அந்தக் காரணம்பற்றியே தன் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருக்க வேண்டுமென நினைப்பது அனைத்துமே மனித குணங்களின் சிறந்த எடுத்துக்காட்டு.

நிலம் மீது நிலம் மீது நிலம்
கடல் மீது கடல் மீது கடல்

சமீபத்தில் இவர் எழுதிய ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன். விரைவில் அவையும் தொகுப்பாக வர வேண்டுமென விழைகிறேன்.

அப்பாவின் கடவுள்  

 
பாட்டியின் கடவுள்  
தாத்தாவின் வடிவில்  
பொன்னழகு சாமிக்கு  
பூசை முடித்து   
பாட்டிக்கு  
பொட்டு வைக்கிறது.  
 
தாத்தாவின் கடவுள்  
ஏரிக்கரையோரம்  
மீசை முறுக்கி  
குதிரையில் வாளேந்தி 
ராத்திரி பகலாய்  
காவலுக்கு நிற்கிறது  
 
பரசுராமர் உருவில் இருந்து  
பெரியாருக்கு  
கூடு விட்டு   
கூடு பாய்ந்த  
பெரியப்பாவின் கடவுள்  
இப்போது  
பஸ்டாண்டுக்கு நடுவில் 
சிமிண்டு சுவரில்  
மாலையுடன் சிரிக்கிறது  
 
அப்பாவின் கடவுள் 
அப்போது ஹிப்பி வளர்த்த  
கமலஹாசன்.  
இப்போது யார்  
என்பதை  
அவர் சொல்வதில்லை  
நாங்கள்  
கேட்பதுமில்லை.  
  
கால் மடக்கி அமர்ந்த  
பளிங்குச் சிலையின் படமாகி 
சாய்பாபாவின் வடிவில் 
உள்ளங்கை காட்டி  
ஆசிர்வதிக்கும்   
என் மனைவியின்  
கடவுள் 
 
கரடி பொம்மையை  
தன் குட்டிக் கைகளால்  
இறுக அணைத்தபடி  
மனைவிக்கு பக்கத்தில்  
ஒருக்களித்து உறங்கும் 
என் கடவுள்  
 
எல்லாவற்றையும் 
மேலிருந்து 
பார்த்துக்கொண்டிருக்கும் 
அந்த  
பெரிய  
கடவுளுக்கு 
யாராம்  
கடவுள்?