Author: பதாகை

சூடிக் கொடுத்த பாவை- தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எம்பாவாய்…”

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

ஒருமித்த பலரின் குரல்கள் சேர்ந்து ஒலித்து நின்றது தொடர்ந்து தீபாராதனை மணிச்சத்தம். பிறகு சட்டென்று நிசப்தம். பெருமாள் கோயில் காலை மார்கழி பஐனை முடிந்து தீபாராதனையும் முடிந்து விட்டது மனதில் வெறுமை. பிள்ளைகள் பள்ளிக்குப் கிளம்பிச் சென்று விட்டார்கள்  காலை நாலரை மணிக்கு எழுந்து தெருக்கூட்டி கோலம் போட்டு காலைக்கு இட்டிலியும் சட்டினியும் மதியத்திற்கு சாப்பாடும் செய்து அனுப்பியாயிற்று ‘நல்ல சோத்துக்கு ஆளாய்ப் பறக்கும் இந்த மனுசன் வீட்டுக்கு வந்து போயி மூணு மாசமாவது. நம்ம நினைப்புதான் கிடந்து அல்லாடுது, எங்க சாப்டூதோ எங்க நிக்குதோ’ என்று தன் கணவன் நினைப்பு வந்து அவள் மனம் அல்லாடியது.

“எம்மா? எம்மோவ்…” என்று சத்தம் வந்த திசையை நோக்கி அடுக்களையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

இடுப்பில் ஒரு குழந்தையோடு தலையில் சிறு கூடை வைத்துக்கொண்டு அந்தக் கிழவி காலை இளம் வெயிலில் ஓவியம் போல் நிற்பதை திறந்திருந்த ஒற்றை நிலைக்கதவின் வழியாகப் பார்க்க முடிந்தது. அவள் இடுப்பில் இருந்த குழந்தை சிணுங்கி, “ஆயா… ஆயா…” என்றது.

“கூட, மொரம் இருந்தா குடும்மா. கட்டி மொழுவி தரேன்”

“இல்லைம்மா”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட, குடியான வூட்டுல கூடை மொரம் இல்லைன்னு!”

“இல்லம்மா இப்ப கூட, மொரம் எங்க வருது? அதுக்குதான் இப்ப வேலையும் இல்லையே”

கைக்குழந்தை மேலும் சிணுங்கி அழுது, “ஆயா… ஆயா…” என்று கிழக்கு நோக்கி கை காட்டியது.

“ஏம்மா அழுவூது?”

“இட்டிலி கேக்கறா. கடையில தீர்ந்துடுச்சு. ரெண்டு வயசாகப் போவுது பேச்சு வரல அதான் கையை ஆட்டிக்கிட்டு இருக்கா”

“இரு… நான் தரேன்”

இரண்டு இட்டிலியும் சட்டினியும் வைத்துத் தந்ததை குழந்தை ஆவலுடன் தின்றது.

“எந்த ஊரு?”

“தாழம்பேட்டைம்மா”

“அங்கே இருந்தா வர?”

“இல்லை தாயி, புதுப்பேட்டை தாண்டி பெரிய மதுவு இல்லை அங்கதான் பொண்ண கட்டிக் குடுத்துருக்கேன், பேரப் பிள்ளைய பாக்க வந்தேன், எல்லாம் வேலைக்கு போயிடுச்சுங்க நான் சரி பாக்கத் தெரிஞ்ச வேலையை பார்ப்போம்னு வந்தா காலையிலேருந்து பச்சத் தண்ணி பள்ளுல படாம சுத்துறேன் ஒரு மானுடம் கூப்டலம்மா”

மேலும் மூன்று இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து, “சாப்பிட்டுட்டு பேசு,” என்றதும் மவுனம்.

“சரி, நீ சாப்பிட்டுட்டு கூப்பிடு ஆயா, நான் கைவேலையை முடிச்சுட்டு வரேன்”

அவதி அவதி என்று அள்ளிப் போட்டு கொண்டபின் போய் பார்க்கும்போது சாப்பிட்ட இரண்டு தட்டும் கழுவி இருந்தது. கூடையில் இருந்த சின்ன கொட்டுக்கூடையை எடுத்து, “எம்மா இதை கொண்டு உள்ள வை,” என்று கொடுத்தாள்.

“இது ஏதாயா?”

“கத்தி புடிச்ச கை சும்மா இருக்குமாம்மா நான்தான் செஞ்சேன். இந்தக் கையால எவ்வளவு கூட மொரம் பின்னியிருப்பேன் தெரியுமா?”

“அப்பிடியா ஆயா?”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட?  இந்த ஊரு வியாழக்கிழமை சந்தைக்கு வருவேன், வெள்ளிக்கிழமை சேத்தியாதோப்பு சந்தைக்கு போயிட்டு சனிக்கிழமை வடலூர் சந்தை ஞாயிறு குள்ளஞ்சாவடி ரெண்டு நாள் வூட்டுள இருந்து கூட மொரம் பின்னி எடுத்துக்கிட்டு செவ்வாய்க்கிழமை குள்ளஞ்சாவடி புதன்கிழமை புதுச்சத்திரம் சந்தை அப்படியே ஓட்டமா ஒடுச்சு தாயி 30 வருசம் ஒரே வட்டமா குடிச்சு குடிச்சு குறவன் செத்துப் போனான், கூட மொரமும் செத்து போச்சு. நான் கிடந்து அல்லாடுடறன் இதை எடுத்து உள்ள வை, பிறகு வரும்போது கூட மொடஞ்சு கொண்டு வாரேன். பிளாஸ்டிக் வந்துதான் எங்க வாயில மண்ண போட்டுது. நான் வரேன் தாயீ, திரும்ப வந்தா நீ ஒரு வா சோறு போடு, என்ன?”

“ஆயா, இந்தா… இந்தா…”

“ஏம்மா, காசா? அட வாணாம்மா!”

“அட, வைச்சுக்க ஆயா…எதாவது செலவுக்கு ஆவும்”

30 வருட வாழ்க்கையை ஒரு சொல்லில் சொன்ன ஆயா தனக்குள் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். “இந்த புள்ள பொன்னாயா மாதிரி இருக்கே, கேட்டு இருக்கலாம் இந்தக் காலத்திலும் திருந்தாம கிடக்கிறேன் பாரு,” என்று அவளது எண்ணங்கள் திரண்டு வந்தன.

எப்பேர்ப்பட்ட குடும்பம். இந்தப் புள்ள இங்கேதான் கட்டிட்டுருக்கா நம்மள தெரியுமோ? தெரியல போலிருக்கு. பொன்னாயா பேத்தியா இருக்குமோ? அப்படிதான் இருக்கனும்.

கட்டிக்கிட்ட புதுசுல மப்பும் மந்தாரமா இருந்த ஒரு நாள் காலையில, ‘கலியா கலியா’ என்று பொன்னாயா  அப்பன் கூப்பிட்டாங்க ரோட்டுல வில்வண்டி நின்னுருந்துச்சு.

“கலியன் இல்லையா?”

“இல்லிங்க?”

“நீ யாரும்மா?”

“அவரு பொஞ்சாதிங்க”

அவரு அப்படியே போயிட்டாங்க. ஆளு தோரணைய பார்த்ததும் யாருன்னு கேட்க முடியல பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி மறைஞ்சு போச்சு. வூட்டூகாரர் வந்ததும் சொன்னாள். அப்ப போன மனுசன் மறுநாள்தான் வந்தாரு, தலையில கள நெல்லோடு. என்ன, என்று கேட்டாள்.

“முதலாளி வூட்டு கோழி பிராந்துட்ட குஞ்சைப் பறி கொடுத்துட்டு நாள் முச்சுடும் கோ கோன்னு கத்திருக்கு, அதான் கூண்டு செய்யச் சொன்னாங்க”

“அதுக்கு இம்மாம் நேரமா?”

ஏ”க்கழுதை நம்ம கல்யாணத்துக்கு காசு பணம் கொடுத்து உதவுனது அவுங்கதான். மூங்கி கழி வெட்டி போட்டு வந்துருக்கேன் வேலை கொடுத்து இருக்காங்க நாளைக்கு போவும்”னாங்க

போய்ப் பார்த்தால், இன்னைக்கெல்லாம் பார்க்கலாம் போலிருந்தது.. தலை வாசல! அரிக்கால! மாலை சூடிய பூர்ண கும்பத்தை ஆனைவோ இரண்டு பக்கமும் மாலையை உயர்த்தி போட அப்படியே நெருங்குது. அவள் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள். இம்மாம் பெரிய வாசலும் இரண்டு பக்கமும் தின்னைவோ முன்ன பின்ன பார்த்து இல்ல, அப்படியே கன்னத்துல கை வச்சிகிட்டு நிற்கிறாள்.

அவளைப் பார்த்து, “இங்க எங்கடி வந்த?” என்று ஒரு குரல் கேட்கிறது.

யாருன்னு பார்த்தா பொன்னாயா வெளியே வருது, “ஏ ஆண்டாளு நீ எங்க இங்க?” என்கிறது.

“இங்கேதான் தாழம்பேட்டைல இவரத்தான் கட்டிக்கிட்டேன் ஆயா!”

“ஏலேய் கலியா இவ அப்பன் வீரன் சின்னப்புள்ளைலேருந்து தெரியும் ஒழுங்கா பார்த்துக்கோ”

“சரிங்க”

“முதல்ல வயிறார சாப்பிடுங்க காதடைச்சு வந்திருப்பிங்க”

இரண்டு பித்தளைத் தூக்கு வாளிகளில் சோறும் பூவரசு இலையில் துவரரிசி துவையலும் இப்ப பார்த்த அந்தப் புள்ளதான் கொடுக்குது, அப்படியே பொன்னாயா சாடை. கட்டசம்பா அரிசி இன்னும் போட்டாலும் சாப்பிடுலாம் அம்மாம் ருசி!. அது எல்லாம் ஒரு காலம், என்று நினைத்துக் கொண்டே கிழவி மகள் வீடு வந்து விட்டது

வாசலில் நிற்க்கும் மகளிட,ம் “ஏய் இங்க எங்கடி ஈச்சம் மட்டை கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்ட உள்ளே போனாள்.

“ஏன் உனக்கு சும்மா இருக்க முடியாதா, உன் தொழிலத் தூக்கிட்டியா?

“ஆமான்டி அதான் உங்களுக்கு கஞ்சி ஊத்துச்சி. பிள்ளையக் குடுத்துட்டு பக்கத்துல போயி கேளு. எனக்கு தெரியும்டி யாரும் சொல்ல வாணாம், நான் பார்த்துக்கறன்,” என்றாள்.

எப்ப விடியும்னு பார்த்த கிழவி விடிந்ததும் முதல் வேலையாக மகளிடம், “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆரம்பித்தாள். “நீ என்னை எதிர்பார்க்காத, புள்ளைய பார்த்துக்க. நான் பொறைக்கு வந்துடறேன்”

கிழவி விறுவிறுவென்று, வெள்ளாத்து ஓரம் நடைய எட்டி போட்டால் கிரேடர் போயிடலாம், எப்படியும் ரயில் ரோட்டு ஓரம் கிடக்கும் தேறினதா முத்தலும் இல்லாமல் இளசும் இல்லாம ஒரு அம்பது ஈச்சம் மட்டை, கொஞ்சம் கட்டுக்கொடி பதமானதா வெட்டிக் கொண்டு போவணும், என்று நினைத்துக் கொண்டே நடந்தாள். செத்த வெயில்ல போட்டு எடுத்தா மனசுபோல வணங்கும். பேசிக்கிட்டே செய்ய ஆரம்பிச்சா ஒரு இரண்டு மணி நேரம் அதுக்கு மேல பார்ப்போம், என்று சொல்லிக்கொண்டே வந்தவள், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் போல, இது என்ன இப்படி காடா கிடக்கு, கடவுளே!, என்று திகைத்து நின்றாள்.

“யம்மா… யம்மோவ்!”

“யாரு?”

“நான்தாம்மா”

“ஆயாவா? வா ஆயா! உனக்கு ஏன் இந்த வேலை?”

“இரு, தாயி. குச்சிய வெய்யல்ல போட்டு வரேன்”

“நேத்திலிருந்து நினைப்பு கிடந்து அடிக்குது ஆயா உன்னை எங்கியோ பார்த்து இருக்கேன் எங்கேன்னுதான் தெரியல”

“நீ பொன்னாயா பேத்தியா?”

“ஆமாம் ஆயா”

“அப்படி சொல்லு ஏன் ராசாத்தி, நேத்தி உன் கையால சாப்பிட்டதுமே நாக்கு சொல்லிடுச்சு அதே பொன்னாயா கை பக்குவம் புத்திக்கு தான் உரைக்கல. தாவத்துக்கு எதாவது குடு பிறகு சொல்றேன்”

“இந்தா ஆயா, கூச்சப்படாம சாப்பிடு”

“ஏம்மா இவ்வளளோ குடுக்குற, வயிறு சுருங்கிப் போச்சு, ருசிதான் கேக்குது நாக்கு”

“சரி ஆயா, சாப்பிடு! நான் மதிய வேலைய நெருக்கிட்டு வரேன்”

“ஆகட்டும் தாயி!” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.

“அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணி குடு”

“தே வந்துட்டன் ஆயா, சாப்டியா”

“சாப்ட்டேன் ஆயி”

“பொன்னாயா கைப்பக்குவம் அப்படியே இருக்கு. என்னதான் மாயம் பண்ணுமோ தெரியாது, அம்மாம் ருசி”

“ஆயா பாடம்தான் எல்லாம்”

“சொல்லாயி குடும்பம் ஏன் அப்படி ஆச்சு?”

“தெரில ஆயா! அது பெரிய கதை”

“சொல்லாயி பெராக்க கேட்டுகிட்டே செய்யறேன்”

“ஒரு ராத்திரி தீடிர் தடார்ன்னு இடி மின்னலோட பெரிய மழை. ஒரு பக்க கூரை ஓட்டோடு உள்ள விழுந்துச்சு. அந்த பெரிய மழையில சுவரு விழுந்துடுச்சு. சுவருல பதிச்சிருந்த துயிலம் தூணும் அதோடு நாங்க ஆடும் ஊஞ்சல் அறுந்து பலகை  மேலே கிடந்தது ஆயா…

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு பொன்னாயா உடம்பு நடுங்குது எங்கள கைல அணைச்சுகிட்டு சுவத்துல சரிஞ்சு, கடவுளேன்னே உக்காந்தது. பிறகு எதுவும் கைகூடல பங்காளி பகைச்சல். போற எடம்ல்லாம் சன்டை சச்சரவுன்னு ஆயிப் போனதுல ஆயா ஊட்ட சரி பன்ன சொன்னத அப்பா கேட்கல

“ஒரு ராத்திரி வயித்துப் போக்குல ஆயா போயிடுச்சு பிறகு அப்பா, ஆயாவ நான்தான் கொன்னுட்டேன் பாவி பாவின்னு குடிக்க ஆரம்பிச்சு குடிப்பழக்கம் ஆகி குடியில் விழுந்துச்சு பிறகு வீடு எழுந்திருக்கவே இல்லை. மிச்சம் மீதி இருந்தத வச்சு என்னை கட்டிக்கொடுத்த கையோடு எனக்கு புள்ள பொறந்த மறுவருசம் அப்பாவும் போயி சேந்துச்சு”

உணர்ச்சி மேலிட்டால் அவள் அழுவதைப் பார்த்து, “அழுவாத ஆயி முப்பது வருசம் கெட்டவங்களும் இல்ல முப்பது வருசம் வாழ்ந்தவங்களும் இல்லை. உன் புள்ள தலை எடுத்து பேரப்பிள்ளைவோ காலத்தில நல்லா வந்துடும் ஆயி. அழுவாத, அழுவாத, சொன்னா கேளு,” என்று ஆறுதல் சொன்னாள் கிழவி.

“சரி ஆயா, உனக்கு பொன்னாயாவ எப்படி தெரியும்?’

“நல்லா கேட்ட போ. நான் பொறந்து வளர்ந்தது ஆயா பொறந்த ஊருதான். எம்மாம் பெரிய ஊடு அவுங்க ஊடு நாளுகை தாழ்வாரம் வச்ச இரண்டு கட்டு வீடு இரண்டு பக்கமும் முழுசும் நெல் மூட்டைவளும் அடுத்த பக்கம் வரிசையாக  மரப்பத்தாயமும் இருக்கும். ஊருக்கு வந்துச்சுனா சொல்லி அனுப்பும். அப்பா கூட நான் பார்க்கப் போனா சாப்பிடச் சொல்லி எதாவது கையில கொடுக்கும் முருக்கோ, அதிரசமோ, சோறோ எதா இருந்தாலும் அம்மாம் ருசி.

“என் அப்பன வீரா வீரான்னு சொந்த தம்பி மாதிரிதான் பேசும். எங்கள்ட்ட கூடை மோரம் வாங்குனா கூடதான் காசி கொடுக்கும் தாயில்லா பொன்னு நான்னு எம் மேல தனி பாசம்மா அதுக்கு”, என்று முடித்தாள்.

சரி ஆயா நீ என்ன எங்க பார்த்த?”

“உன் கையால சாப்ட்டே இருக்கேன் உனக்கு பத்து வயசு இருக்கும். உங்க அப்பா எங்க ஊட்டுக்காரரத் தேடி தாழம்பேட்டை வந்துட்டாங்க இரண்டு நாள் சென்னு  கோழிக்கூண்டு செய்ய வந்தோம்”

“ஆமாம் ஆயா. என் கண் எதிரே கோழி கூண்டு செஞ்சிங்க. மூங்கிப் பட்டை ஈச்சம் பட்டை, பூலாக்குச்சி கட்டுக்கொடிலாம் காய வச்சிங்க அதான் நியாபகம் இருக்கு”

“இரண்டு கூண்டு செஞ்சோம் ஆயி. நீயும் ஒந்தங்கச்சியும் அதுல பதுங்கி விளாண்டிங்க பொன்னாயாக்கூட ஏசுச்சு”

“எனக்கு நியாபகம் இல்ல ஆயா”

“அப்ப நீலாம் வெளாட்டு பிள்ளைவோ என்னமோ போ ஆயி… போன வாரம் நடந்தது எதும் ஞாபகம் இல்ல பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ளது எல்லாம் அப்படியே ஞாபகம் வருது சரியா போச்சு போ!. சரி ஆயா, கட்டிகிட்டது என்னா ஊரு? உம் வீட்டுகாரர் என்ன ஆனாரு?”

“கட்டிக்கிட்டது தாழம்பேட்டை பொறந்தது மூங்கிலடி. ஊட்டுக்காரர் கத வேண்டாம்மா, நான் டீ போட்டு எடுத்தாரன்”

ஆயா சரிந்து அமர்ந்தாள் கூடை பாதி வரை ஆகி இருந்தது.

“இந்தா ஆயா, டீ குடி. சீனி போட்டுப்பல்ல?”

“அதெல்லாம் குடிப்பம்மா”

“யான் ஆயா முகமெல்லாம் மாறிடுச்சு?”

ஹூம் என்று ஆயா அழ ஆரம்பித்தார். “நான் வேற உன்ன கேட்டிருக்கக்கூடாது”

“இங்க பாரு ஆயா அழுவாத உடம்பு ஏதாவது ஆயிட போவுது”

ஆயா, “ஏன் சாமி இருக்கும்போது அருமை தெரியல…” என்று தேம்பினாள்.

“சரி ஆயா அழுவாத டீயக் குடி ஆறிட போவுது. கொஞ்சம் தெம்பா இருக்கும்,” என்றாள்.

ஆனால, “ம்க்கும்” என்று கனைத்து கொண்டு, “என் கதைய சொல்றன், கேளும்மா,” என்று ஆரம்பித்தாள். “யார்ட்டையாவது சொன்னாதான் மனசு ஆறும் நான் வாழ்ந்துட்டன்மா எனக்கு போதும். வூட்டுக்காரர் பேரு கலியன். நான் அவங்கள இந்த ஊரு பரங்கிப்பேட்டை சந்தைல வச்சிதான் பார்த்தன். நான் பார்த்தப்போ ஒரு தோளில் துப்பாக்கி, பையி மறுதோள்ல காட்டுப்பூனை தொங்குது. ஆறு அடிக்கு மேல உயரம் கைல அதே உயரத்துக்கு மூங்கிக் கழி அப்படியே வீமன் மேறி நடந்து போறாரு, நான் திகைச்சு பார்க்கிறேன்”

“அப்பிடியே உழுந்துட்டன்னு சொல்லு”

“ம்க்கும் கிண்டல் பண்ணாதம்மா”

“இல்லை, இல்லை. சொல்லு ஆயா”

“சனம் கூட்டமா அப்படியே அவரு பின்னாடி போவுது. இவரு காட்டுப்பூனைய தொளில் இருந்து எடுத்து கருவைல மாட்ராரு. அப்படியே சட்டையும் கழட்டி வச்சிட்டு பைல இருந்து பேனாக்கத்தி எடுத்து வால்ல தொடங்கி பின் வரக்கும் ஒரு கோடு. அப்படியே கத்தியால நெம்பி ஒரு காலு அடுத்த காலு பின்னாடி வால்ல இருந்து தோல பனியன் கயிட்டர மாதிரி தலை வரைக்கும் கொண்டு வந்து கழுத்த அறத்து தலையும் தொலயும் பையில்ல வைக்கிறாங்க. அதுக்குள்ள ஆளாளுக்கு எட்டு கிலோ இருக்கும் இல்லை இல்லை ஆறு கிலோதான் இருக்கும். ‘ஏக்கொறவா, வில சொல்லப்பா’ன்னு சத்தம். இவங்க ஒன்னும் சொல்லல சுவத்துல இருந்து ஒரு பழைய போஸ்டர பிச்சி கீழே போட்டாங்க. பூனைவயித்துல கத்திய வச்சாங்க கூட்டத்துல இருந்த ஒரு ஆளு ‘ஏய் கொறவா, கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு இருக்க? உதை வேனும உனக்கு’ன்னு சத்தம் போடவும், ‘என்ன அடிக்கறவன் இந்த கழிய தொடுங்குடா முதல்ல’ன்னு ஒரு சலாம் வரிசை சுத்தி முங்கிய தரையில ஊனறாரு பாராயி ஒரு பய கிட்ட போவல.

“சந்தைல ஒரே பரபரப்பு மொத்த கறியும் அறிஞ்சு பத்து கூறு வச்சாறு நான் பார்க்கறத கவனிச்சு என்ன குறுகுறுன்னு பார்க்கறாரு “ஒரு கூறு இரண்டு ரூபாய் யாருக்கு வேனுமோ காச வச்சிட்டு எடுத்துக்கங்க”ன்னு பத்து நிமிஷத்தில் எல்லாம் வித்துப் போச்சு. அப்பன் என்னத் தேடி வந்துட்டுது ‘இங்கே என்ன பன்ற யாவரம் முடிச்சு போற எண்ணம் இல்லியா?’ன்னு கேக்குது. நான் திரும்பிப் பாக்கறேன். இவரு என்னைய பார்க்கறாரு. நான் என் அப்பன்கூட மொரம் விக்க வந்துட்டன்

“கொஞ்ச நேரத்தில் இவரு கைகால் எல்லாம் கழுவிட்டு துணிய போட்டுகிட்டு வந்துட்டாரு வந்து எதுத்தால சாடை மாடையா பார்த்துட்டு அப்பன் எட்டப் போனப்ப கிட்ட வந்து, “என்ன ஊரு புள்ள?”ன்னு கேட்டாரு. மூங்கிலடின்னு சொன்னேன்

“”அப்பன் பேரு?”

“”வீரன்ங்க”

“”ஊம் பேரு?”

“”ஆண்டாளு”

“அடுத்த கேள்வி கேட்டாரு பாரும்மா நேத்து கேட்ட மாதிரி இருக்கும்மா… இரு வாரேன் இன்னைக்கு கதையாதாம் போகும் போலருக்கு”

“ஆயா எங்க கிளம்பிட்ட, சொல்லு?”

“ஆயி வெத்தலை போட்டுட்டு சொல்றேன்”

“ஏன் வேலைல்லாம் கெட்டு போச்சு ஆயா இன்னைக்கு”

“கிடக்கு போ”

“சரி, சொல்லேன்”

“ம் நேரா மூஞ்சிய பார்த்து, ‘ஏ புள்ள ஆண்டாளு என்ன கட்டிக்கிரியா எனக்கு யாரும் இல்லை சொல்லு,’ ங்கிறாரு”

“நீதான் மொதல்லிய கழி சுத்துனப்பய உழுந்துட்டிய”

“இல்ல ஆயி, அவரு யாரும் இல்லன்னு சொன்னார் பாரு அப்பத்தான். எனக்கு ஆத்தா இல்லியா, நான் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டேன். அப்பன் வரத பார்த்துட்டு அப்படியே போயிட்டாரு. அப்புறம் நாங்க போற சந்தைக்கு எல்லாம் அவரும் சைக்கிள்ள வராரு. இரண்டே நாள்ல அப்பனுக்கு தெரிஞ்சு போச்சு என்ன மொத தடவையா அடிச்சுட்டாரு. நான் சொல்லிப்புட்டேன் உன் மகள நீ பாக்கனுமுன்னா நான் அவரதான் கட்டிப்பேன்னு சொன்னதும் பச்சைப்புள்ள மாதிரி தேம்பி அழுவுறாரு. அப்புறம், நின்னுட்ட இருந்தவர கைகாட்டி கூப்டாரு அப்பதாம்மா பார்த்தேன் இவரு பயந்தத!

“அம்மாம் பெரிய ஆளு இந்த ஊரு சந்தை சனம் பூரா வேடிக்கை பார்க்குது அப்படியே அப்பா கால்ல உழுந்துட்டாறு. அப்பனுக்கு ஒன்னும் புரியல. நான் ஓன்னு சத்தம் போட்டு அழுதத பார்த்ததும் அப்பன் வர முகூர்த்தத்திலே கல்யாணத்த வச்சிடுவம் பெரியவங்கள கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லிடுச்சு. வர போற சனம் எல்லாம், ‘எப்பா வீரா பொண்ணு கல்யாணத்துக்கு என்னியும் கூப்டு’ன்னாங்க அப்புறம் இவரு சார்பா உங்கப்பா தாழம்பேட்டை நாட்டாமைகிட்ட சொல்லி புதன்கிழமை புவனகிரி சந்தைல வச்சி பேசி முடிச்சாங்க. சேத்தியாதோப்பு தீ பாஞ்சாலி கோயில்ல தாலி கட்டிக்கிட்டோம்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு கேட்டேன் “ஏன்யா இவ்வளவு சனம் எதுத்தாப்பல சந்தைல போய் கால்ல உழுந்தியே, ஏன்யா?” அப்படின்னு. அதுக்கு அவரு சொல்றார், “இல்ல கழுதை ஒப்பன அடிச்சுப் போட்டுட்டு தூக்கிட்டு போவனும்னு நினைச்சு இருந்தேன் ஆனா உங்கப்பன் அழுதத பார்த்ததும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,’ அப்படின்னு. “சரியாதான்யா  செஞ்ச”ன்னு சொன்னேன். அப்புறம் இரண்டு மூணு மாசத்துக்கு பிறகு தான் ஒங்க வூட்டுக்கு வந்தது”

“ஞாபகம் வருது ஆயா நீ சாப்புடு, கூடதான் முடிஞ்சுடும் போல இருக்கு”

“ஆமாம் ஆயி கை செத்து போச்சுன்னு நினைச்சேன்  30 வருச பழக்கம் இல்ல எனக்கு அதான் பூக்கூடையா பிடி வச்சி செய்யறேன் அழவா பாந்தமா இருக்கு”

“ஆயா சாப்பிட்டு பேசு”

“மகராசி கொண்டா நான் இருந்து சாப்புட்டு பூரா கதையும் சொல்லிட்டு போறேன்”

“கத்திரிக்காய் போட்ட நெத்திலி கொழம்பு வச்சிருக்கேன், சாப்பிடு”

“கொண்டா ஆயி பொன்னாயா ருசிய பார்க்கனும் அதுக்கு தான் வந்ததே”

“நானும் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ஆயா”

“… ம் சொல்லு ஆயா”

“நீ பார்த்தன்னு சொன்னிய அப்பத்தான் பின்னாடி உங்க ஊட்டு குளத்தில இவரு விராலு மீனு ரெண்டு குத்துனாரு நான் தான் ஆஞ்சு கொடுத்தேன். பொன்னாயா வச்சிருந்தது பாரும்மா கொழம்பு அப்படி ஒரு ருசி அது உன்கிட்டேயும் இருக்கு ஆயி”

“அது வேற ஒன்னும் இல்ல ஆயா திட்டமா உப்பு உறப்பு போடரதுதான் சில பேர் திரும்ப திரும்ப பார்த்து போடுங்க அதான் வித்தியாசம். ஆயா நல்லா கூச்சப்படாம சாப்பிடு உன் ஊடு இது எப்ப வேணும்னாலும் வா போ.

“இந்தா இந்த புடவையை நீ கட்ட மாட்ட உன் மகளுக்கு கொடு”

“ஏன் ஆயி, புதுசாருக்கு…”

“‘ஆமாம் ஆயா உம் பொண்ணுக்கு எங்கூட்டு சீதனம்தான்”

“அப்படியே பொன்னாயா கொணம் ஆயி உனக்கு”

“சரி சொச்ச கதையும் சொல்லு”

“எந்த கதைய கேட்கற?”

“விராலு மீனு கொழம்பு சாப்ட்டிய..”.

“ஆமாம் தாயி ஒரு வாரம் தொடர்ந்து வந்து தங்கி வேலை செஞ்சோம். பொன்னாயா எங்கள கூலி நெல் அள்ள அளக்க என்று மூன்று மரக்கால் ஆறு மரக்கால் என்று  பல அளவுகளில் கூடைவ செய்ய சொல்லுச்சு. வாசல்ல மாமரம் இலுப்பை மரம் இருந்தது”

“ஆமாம் ஆயா திண்ணைல பொன்னாயா மடில படுத்துகிட்டு கதை கேப்போம். மரத்து மேல மினுக்கெட்டாம் பூச்சிவ மினுக்கி பறக்கும்”

“ஆயி அதுல பழந்தின்னி வவ்வால் வந்துச்சுவல்லா இவரு சும்மா இல்லாம அத சுட்டுப்பிட்டாரு. காலையிலே பொன்னாயா எங்கள கூப்ட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து போய் கூட மொரம் யாவாரம் பண்ணி ஒப்பனாட்டம் கெளரமா பொழைச்சுக்க சாப்ட்டு இரண்டு பேரும் கிளம்புங்க,” அப்படின்னு சொல்லுச்சு. அப்ப படி அரிசி 2 ரூபாய் வித்த காலம். இவரு பணத்தை அப்படியே சாமி படத்துக்கு பின்னாடி வை பிறகு பாப்பும்னு\ட்டாரு”

“சாப்பாட்டுக்கு என்ன செஞ்சிங்க ஆயா?”

“அட நீ வேற ஆயி இரண்டு வயிறு சோத்துக்கா பஞ்சம்? கொன்னா பாவம் தின்னா தீரும் கிளம்புடிம்பாரு. ராத்திரி ஆகாரத்த முடிச்சுட்டு துப்பாக்கி எடுத்து தோளில் மாட்டுவாரு நான் பைய மாட்டிப்பேன் வேட்டைக்கு”

“ம்ஹும் நீயுமா ஆயா?”

“ஆமாம் ஆயி. கைல ஆளுக்கொரு கழி. மறுநாள் எங்க சந்தைன்னு பார்ப்போம். சைக்கிள எடுத்து கிளம்புவோம். நான் பின்னாடி உக்காந்துடுவேன். புவனகிரி சந்தையா இருந்தால் சாத்தப்பாடி ஏரி பக்கம் போவோம். சேத்தியாதோப்பா இருந்தா வீராணம் ஏரி. பரங்கிப்பேட்டைய இருந்தா பிச்சாவரம் காடு பக்கம் விளைச்சல் நாள்ல வயகாட்டுல  காட்டுப்பூனை வேட்டைக்கு போவோம். ஏதாவது மாட்டும் சம்பு கோழி,உடும்பு, கௌதாரி காட்டு முசலு, நீர்க்கோழி, நாரை காட்டுப்பூனை வித்து காசாக்கி வீட்டுக்கு வருவோம். நான் சோறாக்குவேன். ஒரு கலயம் கள்ள வாங்கிட்டு வந்து வச்சிட்டு கறிய அவருதான் வைப்பாரு. ரெண்டு பேரும் குடிச்சு சாப்ட்டு படுத்தோம்னோ பொணம் மாதிரி கிடப்போம்”

“குடிக்க வேற செய்வியா நீ?’

“இல்ல ஆயி கள்ளு உடம்புக்கு நல்லதுல்ல, அத சின்னப் புள்ளயில குடிப்போம் அதான்”

“சரி சரி மேல சொல்லு”

“இப்படியே காட்ல மோட்லன்னு இரண்டு வருசம் போச்சு. ஒரு நாள் கன்னி வச்சு கௌதாரி புடிச்சுருந்தொம் 4 ஜோடிவோ காலக்கட்டி கூண்டுல போட்டு வயலூருக்கு நேர் வாய்க்கால் உள்ளேருந்து ரோடு ஏர்றோம், கூண்டு வண்டி வந்து நிக்கிது. ரெண்டு பேரும் கையும் களவுமா பொன்னாயா கிட்ட மாட்டிகிட்டோம்”

“நினைச்சன் ஆயாகிட்ட மாட்னிங்களா!”

“சொச்சத்தையும் கேளு ஆயி”

“ம்ம் சொல்லு, சொல்லு”

“பொன்னாயா ஏய் கலியான்னுச்சு. இந்த குருவி எவ்வள காசுடான்னாச்சு அவரு வாய தொரக்கல என்ன எவ்வளவு காசிடின்னிச்சு நானும் வாய தொரக்கல மஞ்சப் பையிலேருந்து 100 ரூபாய் எடுத்தது “முதல்ல அத பூரா அவுத்து வுடு”

“ஆளுக்கொன்னா அவத்து வுடறோம். சடசடன்னு பறந்தத வர சனம் எல்லாம் பார்க்குது.  “புள்ளைவோ இருக்கா?”

“இரண்டு பேரும் திருடி மாட்டின சின்னப்பிள்ளைவோ மாதிரி தல ஆட்ரோம், இல்லைன்னு.

“”எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தாயில்லா பிள்ளைங்க அதான் இப்படி பண்றீங்க. அதுவோ குஞ்சுவோ என்னாவும்? உங்களவிட தாண்டி கஷ்டப்படாது? இந்த காச எடுத்துட்டு போயி உங்களுக்கு தெரிஞ்ச கூடை மொரம் பின்னி பொழைங்க” ன்னுச்சு.

“”திரும்பச் சொல்றேன் கேளுங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான். ஓட்டுப்பா வண்டிய”ன்னு போயே சேர்ந்துடுச்சு. ஊரு சனமே தெவச்சு பார்க்குது”

“அப்புறம் ஆயா?”

“அப்புறம் என்ன, குறவன் சாவற வரைக்கும் வேட்டைக்கே போவல. கூட மொரம் பின்னி வித்துதான் சாப்பிட்டோம் அப்புறம் நாலு வருசம் சென்னுதான் இங்கே கட்டிக்கிட்ட பொட்டப்புள்ள பிறந்துச்சு”

“வேற புள்ள இல்லியா? வூட்டூகாரர் எப்படி செத்து போனாரு?”

“வேற புள்ளைவோ இல்லை. இரண்டு வருசமாவது அவரு செத்து. குள்ளஞ்சாவடி சந்தைக்கு யாவரத்துக்கு போயிட்டு திரும்புறோம். பெருமாத்துர் இறங்கி ஆத்த குறுக்கால தாண்டுனா ஒரு மைலு துலுக்கம்பாளையம் அடுத்தது தாழம்பேட்டை ஆத்தங்கரையில தான் ஊடு. “நீ முன்ன போயி உள்ள வையி புள்ள, நான் குவார்ட்டர் வாங்கிட்டு வரேன்”னாரு சூரியன் கரகரன்னு கீழே இறங்குது சரி நேரத்த போயி விளக்கு வைப்போம்,னு நடையை எட்டிப்போட்டு போயிட்டேன். விளக்கு வச்சிட்டு அடுப்புல உளைய வச்சிட்டு சுடுதண்ணி போடுமுன்னு ஈயப் பானைல பைப் தண்ணி அடிக்கிறன், “ஆண்டாளு ஆண்டாளு போனு வந்துருக்கு, ஓடியா ஒடியா”ங்கறாங்க.

“”என்னன்னு சொல்றது எல்லாம் விதி மனச தேத்திக்க”ங்கறாங்க. “சொல்லுங்க சொல்லுங்க,”ங்கறேன், “கலியன் ஏமாத்திட்டு போயிட்டான்”ங்கறாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்

“எப்படி ஆச்சுன்னு கேக்கறேன். போதைல தடுமாறி ஆத்துல முட்டி தண்ணியில்ல விழுந்ததுதான் தலை தூக்க முடியல அப்படியே கிடந்து அடங்கியிருக்கு. மையிருட்டு நேரம் யாரும் பார்க்கல. பிறகு வந்தவங்க பாத்துப்புட்டு வூட்டுக்கு போன் பண்ணிசொல்லிட்டு தூக்கி வந்தது.

“நீ யான் அழுவுற ஆயி, நானே அழுவுல பாரு… கிடக்கு வுடு தாயி, எல்லாம் பிளாஷ்டிக் கூட மொரத்தால வந்ததுதான். நாலு அஞ்சு வருஷமாவே நல்ல யாவாரம் இல்ல ஆயி. அதான் அதிகமா குடிச்சு போயி சேர்ந்துட்டாரு. சாவமோது 62 வயசு. என்ன விட பத்து வயசு மூத்தவரு. ஏன் கதைதான் என்னாவுமுன்னு தெரியல. மகளும் மருமகனும் மெட்ராஸ் போவுதுவோ. வேலைக்கு என்னையும் கூப்டுதுவோ. எனக்கு வேற போக்கிடம் இல்ல ஆயி…

“இந்தா ஆயி இந்தக் கூடையப் புடி உன் கையில புள்ள குட்டியோடு என் பொன்னாயா மாதிரி நீயும் உன் குலமும் வாழனும்”

ஆயா கூந்தலைக் கொண்டையாக முடிந்து காதோரம் விழுந்த முடிகளை அள்ளிக் கொண்டையில் மறைத்துச் சொருகி தெருவில் இறங்கி நடந்தாள்

இவள் திகைத்து கிழவியை பொன்னாயாவாகவே பார்த்தாள் ….

அசோகமித்திரனின் ‘கதர்’ – பீட்டர் பொங்கல்

அசோகமித்திரனின் ‘கதர்’ சிறுகதை – ஆங்கில மொழியாக்கத்தையொட்டிச் சில குறிப்புகள் (மொழிபெயர்ப்பாளர் சிவசக்தி சரவணன் உதவியுடன்)

அசோகமித்திரனின் ‘கதர்’ என்ற சிறுகதை ஆயிரத்துச் சொச்சம் சொற்கள்தான் வரும் என்று நினைக்கிறேன், அதை ஒரு குறுங்கதை என்றும்கூட சொல்லலாம். முதல் வாசிப்பில் அது அவ்வளவு பிரமாதமாக எழுதப்பட்ட கதையாகவும் தெரியவில்லை, கடைசி பத்தி மட்டுமே மோசமான கதையாவதில் இருந்து அதை மீட்கிறது; அப்போதும்கூட, கதையின் பிற பகுதிகளோடு இணைத்து வாசிக்கும்போது தனியாகத் தெரிவதால் அதில் ஒரு கலையின்மையும் தென்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அலட்சியமாக எழுதப்பட்ட கதை போல்தான் தெரிகிறது.

கதையின் துவக்கம் துல்லியமாகவே இருக்கிறது- ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வாங்கிய மளிகை சாமான்களின் பட்டியல், சில்லறை பாக்கி எவ்வளவு கிடைத்தது, அதைத் தூக்கிச் செல்ல கடைக்காரர் கொடுத்த துணிப்பையில் என்ன எழுதியிருந்தது என்ற விபரங்கள் போதாதென்று காய்கறிக் கடையில் புடலங்காய் வாங்கியதையும் அது அத்தனையையும் அந்தச் சிறுவன் சுமந்து வந்ததையும் எழுதுகிறார் அமி. வீட்டுக்கு வந்ததும் சிறுவன், துணிப்பையில் எழுதப்பட்ட “நஞ்சன்கூடு பல்பொடி” என்ன என்று யோசிக்கிறான், நஞ்சன்கூடு ஒரு இடமாக இருக்கலாம் என்று அட்லாஸில் தேடுகிறான் (எல்லா கண்டங்களிலும்!). அம்மா, நஞ்சன்கூடு என்பது தேன்கூடு மாதிரி ஏதாவது கூடாக இருக்கும் என்று சொன்னதும், பையனுக்கு உடனே நஞ்சன்கூடு பல்பொடியால் பல் தேய்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது- அவர்கள் வீட்டிலும் பல்பொடி வாங்குவதில்லை, நாட்டு மருந்து எதையோ இடித்துப் பொடி செய்து பயன்படுத்துகிறார்கள் (“வாய் ஒரு மணி நேரத்துக்கு ஜிவ்வென்று இருக்கும்”).

கதைக்குத் தேவையே இல்லாத விருந்தாளி ஜோசியர் ஒரு வாரம் இருந்துவிட்டுக் கிளம்பிப் போனதும்தான் அப்பாவிடம் இது பற்றி பேசும் துணிச்சலே பையனுக்கு வருகிறது (“அப்பா சுமுகமாக இருந்த முதல் சந்தர்ப்பத்தில்”). அப்பா நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துக் கொடுக்கிறார், அது மட்டுமல்ல, அந்தப் பை ஒரு கதர்ப்பை என்றும் சொல்கிறார். அதைக் கேட்டதும் பையனுக்கு நஞ்சன்கூடு என்ன, எங்கிருக்கிறது என்ற ஆர்வம் குறைந்து போய் விடுகிறது. காரணம், கதர் குறித்து அவனுக்கு இருக்கும் உயர்வு நவிற்சி உணர்வுகள் (“அவனுக்குக் கதர் தேவலோகத்து மலர் மாதிரி, கேள்விப்படலாம் பார்க்க முடியாது”- ‘more often heard than seen,’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வசதியாய் எழுதித் தந்திருக்கிறார் அமி). கதர் அத்தனை அபூர்வமானதா என்று கேட்டால், அதெல்லாம் இல்லை- “கதர் அணிந்து கொண்டால் அவன் ஊரில் உடனே ஜெயிலில் போடுவார்கள் என்று சொல்வார்கள்”. எல்லாம் பயம்தான்.

ஆனால் இந்தக் கதாநாயகன்தான் உயர்வு நவிற்சி, வேண்டாம், ரொமாண்டிக் ஆயிற்றே, கதையின் இந்தக் கட்டத்தில், அவன் தன் வீட்டிலிருந்து ரெண்டு மைல் தொலைவில் இருக்கும் முஷிராபாத் ஜெயில் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அங்கே, உச்சியில் கண்ணாடித் துண்டங்கள் நெருக்கமாய்ப் பதிக்கப்பட்ட உயரமான சுவர்கள் கொண்ட சிறைச்சாலைக்கு, பல முறை தனியாகப் போய் பார்த்துவிட்டுக்கூட வந்திருக்கிறான் (“அவன் அந்தச் சுவர்கள் பின்னால் இருப்பவர்களைக் கற்பனை செய்துதான் ‘பார்க்க’ முடியும்”). இங்கே அமியின் நாயகன் கவனம் சிறைக்கைதிகள் அணிந்து கொள்ளும் கட்டம் போட்ட ஆடைகளுக்குத் திரும்புகிறது. பத்திரிக்கைகளுக்கு படம் வரைபவர்கள், சினிமா நாயகர்கள் எவ்வளவு அலட்சியமாக அந்த ஆடையை ஒவ்வொருத்தர் கற்பனைக்கு ஏற்ற மாதிரி சித்தரிக்கிறார்கள் என்று செல்லமாய் கேலி செய்துவிட்டு, “ஜெயிலுக்குப் போகவாவது கதர்ச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்,” என்று கதைக்குத் திரும்புகிறார் அமி. அதற்கு வசதியாக, கதையின் இந்தக் கட்டத்தில், “அவனுக்கு ஜெயிலுக்குப் போக வேண்டுமென்று ஆசை வந்தது”, என்றும் முந்தைய வரியில் எழுதி விடுகிறார் அவர்.

சரி, கதர்ச்சட்டைக்கு எங்கே போவது என்று கேள்வி கேட்டு, அவர்களே முழு பீசாக வாங்கி ஆளுக்கு ஒரு பகுதி என்று கத்தரித்துத் தைத்துக் கொள்ளும் ராம்கோபால் மில் துணி பற்றி ஒரு ரசமான பத்தி. அதற்கும் ஜெயில் துணிக்கும் பெரிய வித்தியாசமில்லை- ஒரு முறை அவர்கள் வாங்கிய துணியில், “கருப்பு நிறத்தில் பெரிய பெரிய கட்டங்கள். போலீஸ்காரன் துரத்தாத கைதியாக அவன் பள்ளிக்கூடம் போய் வந்தான்”. இந்த இடத்தில் கதை நடக்கும் காலம், இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த காலகட்டம் என்ற தகவல் பதிவாகிறது. அதனுடன், அப்போதெல்லாம் கல்கியும் ஆனந்த விகடனும்தான் கிடைக்கும், கதர்த்துணி வேண்டுமென்றால் நூல் நூற்றுக் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும் என்ற அரிய தகவல்கள்.

இப்போது நம் நாயகன், அவன்தான் குணப்படுத்தவியலாத ரொமாண்டிக் ஆயிற்றே, “அவனுக்கு துணி கிடைக்காது போனாலும் நூல் நூற்றால் போதும் என்று தோன்றியது”. உடனே ஒயிலாக காலை மடித்துப் போட்டு இராட்டை சுற்றும் நாயகியரின் புகைப்படங்களை நினைத்துப் பார்க்கிறான். தற்போது இராட்டை இல்லா குறைக்கு, தன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, அதன் சக்கரத்தை வேகமாகச் சுற்றுகிறான்- “நூல் மலையாகக் குவிந்தது. உலகமெல்லாம் கதரால் நிறைந்து விடும். கைதிகள், காவல்காரர்கள் எல்லாரும் கதர் அணிந்துதான் ஆக வேண்டும்”. ஆனால் நிஜத்தில் கை இருப்போ ஒரு கதர்ப்பை. எனவே, எத்தனையோ அசௌகரியங்கள் இருந்தாலும் அதை பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லப் பயன்படுத்திக் கொள்கிறான் சிறுவன். அந்த சந்தோஷத்தையும் கெடுக்க வந்து சேர்கிறான் வஹாப்.

வஹாப் ஏற்கனவே ஏழாம் வகுப்பு பெயில் ஆனவன் (“தைரியமாக தூங்குவான்”), நண்பன்தான், இவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறான். ஒரு முறை வஹாபால் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு கொஞ்சம் திமிர் தொனிக்கும் குரலில் இவன் பதில் சொல்லி விடுகிறான் (“தான் அவ்வளவு அகம்பாவம் பிடித்தவனாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றிற்று”, என்று பிற்சேர்க்கை). அன்று பகை பாராட்டத் துவங்கும் வஹாப் இந்தச் சிறுவனுக்கு தொடர்ந்து வகுப்பில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அந்த வகையில் ஒரு முறை இவனது பையை கீழே தள்ளி உதைத்து விடுகிறான். “அதுவும் கதர்ப்பை. மகாத்மா காந்தி நூற்ற நூலிலிருந்து செய்யப்பட்ட கதர்ப்பை” என்று கொந்தளித்து வகுப்பு முடிந்ததும் நேரம் பார்த்து வஹாபை கீழே தள்ளி விடுகிறான், இருவருக்கும் சண்டை நடக்கிறது. குஸ்தி முறை சண்டையில் வஹாபை வீழ்த்தி சண்டை இவனது வெற்றியில் முடிந்ததுஎன்று  பிடி தளர்த்தும்போது வஹாப் பலமாக தாக்குகிறான். இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அப்பா வஹாப் வீட்டுக்குப் போய் பேசுகிறார். அது போதாதென்று பள்ளிக்கும் சென்று வஹாப் மீது குற்றம் சாட்டுகிறார்

வஹாப் அன்று முழுவதும் பெஞ்ச் மேல் நிற்கிறான். திமிராக பதில் சொன்னதற்கே அத்தனை படுத்தியவன் தண்டனை வாங்கித் தந்ததற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஆனால், ஆனால் மிக ஆச்சரியமாக அதற்கு அப்புறம் அவன் விரோதம் பாராட்டுவதில்லை, சண்டையில் இவனது பங்கு என்ன என்பதையும்கூடச் சொல்வதில்லை. இதற்கு அப்புறம் கதை மறக்க முடியாத கடைசி பத்திக்கு வருகிறது. கதர்த்துணி அழுக்காகிறது, தோய்க்கத் தோய்க்க கிழிகிறது. அப்புறம் சைக்கிள் துடைக்கும் துணியாகிறது – “சைக்கிளின் அழுக்கை அந்தத் துணி மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போயிற்று”. அதைச சிறுவன் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்பது அமியின் புதிர்த்தன்மை பொருந்திய சொற்களில், “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”.

இதுவரை நாம் படித்த கதைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ், தியாகம், ஆட்சி, அதிகாரம், அதன் அவலங்கள், இறுதி மாயமழிதல் என்று எது எதற்கோ குறியீடாக இருக்குமோ இந்தக் கதர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, பல ஆண்டுகளுக்கு அப்புறம் அவனுக்கு கதர் அணிய வாய்ப்பு கிடைத்தது, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை” என்று கதை முடியும்போது இது என்ன அபத்தமான நாஸ்டால்ஜிக் நெகிழ்ச்சி, இப்படிச் சொன்னவர், அவன் ஜெயிலுக்கும் போகவில்லை என்றும் எழுதியிருக்கலாமே, கதை என்ன மோசமா போயிருக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம். இதை எதற்கு வேறு வேலை இல்லாமல் நண்பர் “மதுர மல்லி” சிவசக்தி சரவணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நம் அரைகுறை அறிவைச் சோதிக்கிறார் – என்று நான் மட்டுமல்ல, நீங்களும் குழம்பினால் தப்பில்லை.

oOo

மொழிபெயர்ப்பில் இறங்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று, மொழிபெயர்ப்பில் அறிவது போல் வேறெந்த வகையிலும் ஒரு படைப்பை அறிய முடியாது. உதிரி உதிரியாக பாகம் பிரித்து ஒன்று சேர்ப்பது போன்ற ஒரு முயற்சி அது

மொழிபெயர்ப்பைச் சரி பார்க்கும்போது, இந்தக் கதையில் நாம் தவற விட்ட விஷயம் இருக்குமோ என்ற சந்தேகம் முதலில் வந்தது, “வஹாப் மிகவும் பயந்து விட்டான். ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று  அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,” என்பதை மொழிபெயர்த்தது சரியா, என்ற இடத்தில். வஹாபை வீட்டுக்குப் போய் பார்க்கும் அப்பா அடுத்தது பள்ளிக்கும் போய் குற்றம் சொல்வதால், அடிதடிக்கு வஹாப் இவன் மீதும் பழி போடுவதால் கோபம் அடங்காமல் பள்ளிக்குச் செல்கிறார் அவர் என்று புரிந்து கொண்டேன். ஆனால் சரவணன், “அப்படி பார்க்கக் கூடாது. அடிதடிக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை அப்பாவுக்கு வஹாப் புரிய வைக்கத் தவறிவிட்டான்,” என்று அர்த்தம் செய்து கொள்ளலாம் என்றார். அந்த இடத்தில் கதைசொல்லியின் குரலில் ஒரு வருத்தம் முதன் முதலில் தென்பட்டது.

அதற்கு அடுத்த ‘திறப்பு’, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்ற இடத்தில் கிடைத்தது. பல வாக்கியங்களைப் பரிசீலித்ததில், “but Nanjankoodu toothpowder was not to be had”, என்பது கொஞ்சம் பொருத்தமாகத் தோன்றிற்று. ஆனால் not to be had என்று சொல்லும் அளவுக்கு பல்பொடி ஒரு பெரிய விஷயமா என்ற கேள்வியுடன், அதற்கு கதையில் என்ன வேலை, என்ற கேள்வியும் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் அது கதைக்கு முக்கியமாக இருக்கிறது. கதர் ஒரு குறியீடு என்றால் கதரால் வாக்களிக்கப்படுவது நஞ்சன்கூடு பல்பொடி- கதரும் காணாமல் போயிற்று, அதன் வாக்குறுதியும் பொய்த்தது என்று வாசிப்பது ஓரளவு திருப்தியாக இருந்தாலும் கதையின் பிற பகுதிகளோடு ஒட்டாமல் – குறிப்பாக வஹாப் சண்டை, கதையில் அதன் முக்கியத்துவம் என்ன?-, இந்த முடிவின் செயற்கைத்தன்மை கதையின் நம்பகத்தன்மையை முழுமையாய் குலைப்பதாக இருந்தது. கடைசி பத்தியை எழுதுவதற்காக் இட்டுக் கட்டிய கதை, அல்லது, கடைசி பத்தியின் மெலோடிராமாவில் முட்டி நின்ற கதை. எதுவும் திருப்தியாக இல்லை.

நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வமாக இருந்தவன்- அப்பா இணக்கமான மனநிலைக்கு வர ஒரு வாரம் காத்திருக்கிறான்-, அந்தப் பை கதர்ப்பை என்று தெரிந்ததும் அந்த ஊர் மீதுள்ள அக்கறை அத்தனையையும் உடனே இழக்கிறான், இவன் என்ன பையன், இவனது ‘தேடல்’ எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்ற எண்ணம் திறப்பின் இறுதி திருகல். அங்கிருந்து அவன் எத்தனை எத்தனை விஷயங்களில் ஆசைப்படுகிறான் என்று பட்டியலிட ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை- முதலில் நஞ்சன்கூடு என்ற இடத்தைக் கண்டுபிடிக்க ஆசை, அப்புறம் அது தேன்கூடு மாதிரி இருக்குமோ என்று அம்மா சொன்னதும் நஞ்சன்கூடு பல்பொடியில் பல் தேய்க்க ஆசை, அப்புறம் கதர்த்துணி என்று தெரிந்ததும் கதர் அணிந்து கொண்டு ஜெயிலுக்குப் போக ஆசை, கதர்த்துணி கிடைக்காது என்பதால் நூல் நூற்க ஆசை. இவனது பதின்ம பிராய ஆசைகள் உள்ளீடற்றவை, புற உலகில் நிகழும் பெரும் போராட்டத்தின் தீவிரத்தை உணராதவை.

கதர் அணிந்தாலே சிறைத்தண்டனை என்று அச்சப்படும் ஊரில் ஒருவர் கதர்த்துணியால் செய்யப்பட்ட பையை இலவசமாகக் கொடுக்கிறார் என்பதன் அர்த்தம் கடைசி வரை அவனுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் “”ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்று கதையை முடிக்கிறார் அமி. அது எப்படி கிடைக்கும்? கதரில் துணி செய்து அதில் தன் பெயரையும் அச்சிட்ட நிறுவனம் எத்தனை நாள் செயல்பட்டிருக்க முடியும்? கதைசொல்லியின் அறியாமை வஹாப் சம்பவத்துக்கு கதையில் உள்ள இடத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

oOo

அசோகமித்திரன் இந்தக் கதையை எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால், கதர் மீதும் காந்தி மீதும் பக்தி கொண்ட ஒருவன், அது முதிரா உணர்வாகவே இருக்கட்டுமே, கதர்த்துணி அவமானப்படுத்தப்பட்டதும் கொதிக்கிறான், சண்டை போடுகிறான். அவனது கோபத்துக்குக் காரணமானவன் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை, நாள் முழுதும் பெஞ்ச்சின் மீது ஏறி நின்று தண்டனை அனுபவிக்கிறான், அதற்குப் பின் அவனைத் துன்புறுத்துவதில்லை. கதர் கதையின் நாயகனுக்கு மிஞ்சுவதெல்லாம் “ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று  அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,”” என்ற வருத்தம் மட்டும்தான்.

இங்கு, அசோகமித்திரன் ஒரு காந்தியக் கதை எழுதியிருக்கிறார்.

Moral high ground என்பதற்கு தமிழில் என்ன, தெரியவில்லை. அதைக் கைப்பற்றுவது எளிது, காப்பாற்றிக் கொள்வதுதான் கடினம். சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் கணப்பொழுதில் அது சித்தியாகும். ஆனால், வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டாட அது ஒரு மேன்மையல்ல- சத்தியாகிரகத்திற்கான தகுதி ஆன்மசுத்தியால் மட்டுமே ஏற்படுவதால், காந்தியத்தில் பற்றுள்ள சாதாரணர்களுக்கு மிஞ்சுவது தம் போதாமைகள் குறித்த வருத்தங்களும் தம் சறுக்கல்கள் குறித்த துயரும்தான். எந்த லாபமும் இல்லை என்றாலும், நியாயப்படுத்தலாகவோ முன்னிருந்த சமநிலையை நிறுவுவதாகவோ அமையாது என்றாலும் தம் பிழைகளை ஏற்றுக் கொண்டு வெளிப்படையாய் வாழ்வதில்தான் காந்தியத்தின் மாரல் ஹை கிரவுண்ட் தொடப்படுகிறது..

இதுவோ புனைகதை, இங்கு அமி வஹாபை ஏன் காட்டிக் கொடுக்காதவனாகப் படைத்திருக்க வேண்டும், அவன் ஏன் நாள் முழுதும் பெஞ்சில் நிற்க வேண்டும், அவன் ஏன் தான் தண்டிக்கப்பட்டபின் எந்த தொல்லையும் செய்யாதவனாக இருக்க வேண்டும்? வஹாப் கெட்டவனாகவே இருந்தால்தான் என்ன? இத்தனைக்கும் கதர் கதையின் சிறுவன் வஹாபால் தொடர்ந்து சீண்டப்பட்டு, ஒரு உடைகணத்தில்தான் அடிக்கப் போகிறான்- அவனது காந்தியம் போலியானதாக, புரிதலற்ற சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அதை அடிக்கோடிட்டுக் காட்ட வஹாபை இவ்வளவு குற்றமற்றவனாக்க இத்தனை பிரயாசைப்பட்டாக வேண்டுமா? ஏன் இப்படிப்பட்ட ஒரு காந்தியச் சாடலைக் கதையாய் எழுதிப் பார்த்திருக்கிறார் அமி? அதில் ஒரு ஆச்சரியமுமில்லை.

வாழ்க்கையின் அழுக்கை மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போகும் கதர்த்துணி போன்றதுதான் காந்தியம். “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”- என்று சொல்லும்படியான வருத்தமும் ஏமாற்றமும்தான் காந்தியத்தின் சுத்திகரிப்பு. காந்திய Moral high ground ஆக விளங்குவது triumphalismக்கோ gloryக்கோ பிறரைக் குற்றம் சாட்டித் தப்பிக்கவோ இடம் கொடுக்கும் சிகரமல்ல, அது மேலும் மேலும் எளிமையை நோக்கி, ஏன் தன் காலத்தோடு தானும் செல்லும் தாழ்தளம்.

காந்தியும் கதரும் பிரதிநிதிப்படுத்தும் அறம், அத்தனை குற்றங்குறைகளுக்கும் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களையே பொறுப்பாக்குகிறது என்பதால் இந்தக் கதை இப்படிதான் இருக்க முடியும், அது ஒரு பெரிய ஆச்சரியமில்லை. இத்தனை யோசிக்க இடம் கொடுக்கும் கதை, இதை வெறும் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளில், கொஞ்சம்கூட சத்தம் போடாமல், வடிவ நேர்த்திக்கு முயற்சிக்காமல் அதன் அத்தனை குறைகளோடும் எழுதியிருக்கிறாரே அமி, அது ஆச்சரியம்.

அசோகமித்திரனுடன் ஒரு சந்திப்பு – நம்பி கிருஷ்ணன்

நண்பன் பேப்பர் வெயிட்டின் தயவால்தான் அசோகமித்திரனை முதல்முறையாக தி நகரில் அவரது வீட்டிலேயே சந்திக்கக் கிடைத்தது. நெருங்கிய சொந்தமென்பதால் என்னை அசோகமித்திரனுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவன் உரிமையுடன் உள்ளே சென்றுவிட்டான். நானும் அவரும் முற்றத்திலேயே உட்கார்ந்து பேசத் தொடங்கினோம்.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரைப் பழைய வேட்டி பனியனுடன் பார்ப்பது வருத்தமாக இருந்தாலும் ஒருவிதத்தில் அவர் எப்போதுமே எழுதிவந்த லௌகீக யதார்த்தத்துடன் அது பொருந்தியதாகவும் எனக்குப்பட்டது. நடையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் ஃபிரெட்ரிக் ஃபோர்ஸைத் முதல் பக்கத்திலேயே வாசகனின் முழு கவனத்தையும் பெற்றுவிடும் நேர்த்தியை பற்றி பேச ஆரம்பித்தார். எனக்கோ, இவர் “சீரியசான” இலக்கியவாதிகளைப் பற்றி பேசாமல் இப்படியே காலத்தை வீணடித்து விடுவாரோ என்று உள்ளூர ஒரே கவலை. பின்னர் சுவாரஸியம், பிளாட் என்று அலெக்ஸாண்டர் டூமாவின் மூன்று மஸ்கட்டியர்களை (Three Musketeers) புகழ்ந்தார்.

வாட்சில் நிமிடங்கள் கழிவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மாய யதார்த்தம் மற்றும் இருத்தலியல், நவீனத்துவமே மேலை நாட்டு இலக்கியத்தில் சிறந்தவை என்று நம்பி வந்த காலம். அட்வெஞ்சர், மற்றும் திகில் நாவல்களைச் சீண்டுவதுகூட இலக்கியத்திற்கு இழைக்கும் துரோகம் என்றிருக்கும் “சீரியஸான” வாசகன் என்ற மமதை வேறு!

ஒருவழியாக பேச்சை எப்படியோ நான் விரும்பிய திசைக்குத் திருப்பி விட்டேன். ஐசக் பஷெவிஸ் ஸிங்கரைப் பற்றி பேசினார். அவரது குறுகிய பக்க அளவுள்ள படைப்புகள் சிறந்தவை என்று நான் உளறியதைக் கேட்டு மெலிதாகச் சிரித்தார். பின்னர், “அவரோட நெடுங்கதைகளும், நாவல்களும்கூட நல்லாவே இருக்கும், படிச்சுப் பாருங்க. மனுஷன் ஊர் பேர் தெரியாத பேப்பர், பத்திரிகைல பேர், புகழ், பணம் இதெல்லாம் பத்தி கொஞ்சங்கூடக் கவலப்படாம தன் வேலய ஆர்ப்பாட்டமே இல்லாம செய்தார். எனக்கெல்லாம் அவர் ஒரு பெரிய ஆதர்சம்…” என்றார்.

“ப்ரிமோ லெவின்னு ஒரு எழுத்தாளரக் கேள்விப்பட்டிருக்கீங்களா? படிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை , ஆனா அவரோட புத்தகம்தான் கிடைக்கவே மாட்டேங்கறது”

லெவியின் ‘இப்போதில்லை என்றால், எப்போது’ (If not now, when) என்ற புத்தகம் வீட்டில் இருந்ததால், அதை அடுத்த முறை வரும்போது கொண்டு வருகிறேன் என்று கூறி மீண்டும் அவரைச்
சந்திக்கும் வாய்ப்பை சாம்ர்த்தியமாக ஏற்படுத்திக் கொண்டேன்.

பேப்பர் வெயிட் வெளியே வந்து, கிளம்பலாமா என்றான். அசோகமித்திரன் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். சின்னப்ப பாரதியின் தாகம்.

“படிச்சிருக்கீங்களா?”

இல்லை, என்று தலையாட்டினேன்.

ரொம்ப நல்ல படைப்புன்னு நிறைய பேர் சொல்றா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”.

நாங்கள் விடை பெற்றுக்கொண்டோம். வெய்யில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. சம்பந்தமே இல்லாமல் தி.ஜானகிராமனைப் பற்றிய அவரது கட்டுரையின் கடைசி வரி நினைவிற்கு வந்தது.

சிரத்தையுடன் தாகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்துவிட்டு, லெவியின் புத்தகத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றேன்.

“அதுக்குள்ள படிச்சிட்டீங்களா, எப்படி இருந்தது ?”

“முதல் அறுபதெழுபது பக்கங்கள் ரொம்ப ஜோரா இருந்தது, அப்புறம் ஒரு மார்க்சிஸ்ட் காட்டெகிஸம் (Marxist Catechism) போல இருந்த்த்தால, அவ்வளவா பிடிக்கல”

லேசாகச் சிரித்துவிட்டு , உண்மைதான், ஆனா இத ஒரு முக்கியமான படைப்புன்னுதான் இலக்கிய வட்டாரங்களில் பேச்சு. மீண்டும் படிச்சுப் பார்த்தா அபிப்ராயம் மாறலாம். பார்க்கலாம்”, என்று இரண்டு புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

ஓரு மாதம் கழித்து லெவியின் புத்தகத்தை திரும்பப் பெறுவதற்காக சென்றேன்.

“அற்புதமான புஸ்தகம். இப்படிப்பட்ட ஒரு பெரும்படைப்பு படிக்கக் கிடைச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும், ரொம்ப தாங்க்ஸ்”.

அதன் பிறகு, வேலை மற்றும் சோம்பலால் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை.

சில வருடம் கழித்து என் திருமண அழைப்பில், “உங்களுக்கு, ப்ரிமோ லெவியைப் படிக்க உதவிய, நம்பி” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன்.

அவர் என் திருமணத்திற்கு வராதது குறித்து எனக்கு பல நாட்கள் வருத்தமாகவே இருந்தது. தபாலில் அழைப்பு தொலைந்திருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நேரில்  சென்று அழைத்திருக்க வேண்டும்.

நடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும் – அஜய் ஆர்

அஜய் ஆர்

svejk_01

எங்கு, எப்போது போர் நடந்தாலும், யுத்தம் சில வருடங்கள் நீடிக்கும் நிலையில், ஒரு  கட்டத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர்களோடு கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.  யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்பபடுவதில்லை, குறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வதில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் எந்தத் தரப்பாக இருந்தாலும், தங்கள் தரப்பில்  போர் உயர்ந்த விழுமியங்களுக்காக நடத்தப்படுகிறது, அதற்காக பலியாவது பெரும் பேறு என்ற எளிய மனநிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் போரை எதிர்கொள்கிறார்கள்.  அங்கு அவர்கள் மயக்கங்கள் கலைகின்றன.

இப்படி  தேசியம், அறம் போன்ற விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து/ சேர்க்கப்பட்டு, போரின் உண்மை முகத்தை, மனிதத்தின் மரணத்தைப்  பார்த்து சிறிது சிறிதாக உள்ளம் சிதையும்,   ‘All Quiet on the Western Front’  நாவலின்   மைய பாத்திரமான பால் (Paul Bäumer) முதல் போருக்குப் பின்னான வாழ்க்கையைப் பேசும் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘Redeployment’ வரை இத்தகைய பல பாத்திரங்கள் (பெரும்பாலும் 20களில், 30களின் ஆரம்பத்தில் உள்ள இளைஞர்கள்)   உள்ளன.  இவற்றின் இறுக்கமான தொனிக்கு நேர்மாறாக, தங்களை பிறழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளும் நிகழ்வுகளை அவல நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் பாத்திரங்கள் (யோஸாரியன்/ Yossarian), மூலம் ர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்   Catch-22 போன்ற நாவல்களும் உள்ளன.

நாவலின் கட்டமைப்பிலும், பாத்திரங்கள் போருக்கு எதிர்வினை புரியும் விதத்திலும்  பெரும் வேறுபாடு இருந்தாலும், பாலும் சரி, யோஸாரியனும் சரி தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் நடைபிணமாக மாறி  தங்கள் நாட்களை கடத்தும் இடத்தில் ஒன்றிணைகிறார்கள்.  Czech மொழியின் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று போற்றப்படும், முதல் உலகப் போரின் பின்னணியில், போர் விமர்சன புனைவுகளின் மிக ஆரம்ப கட்டத்தில் ஹசேகால்  (Jaroslav Hašek)  எழுதப்பட்டதுமான  ,-  நான்கு தொகுதிகள் கொண்ட, முற்று பெறாத – ‘The Good Soldier Švejk’ நாவலின் மைய பாத்திரம்   சிப்பாய்  ஷ்வேக் (Švejk) இவர்களிடமிருந்து மாறுபடுகிறான்.

போர் குறித்த அறம் சார்ந்த கற்பிதங்கள்  எதுவும் அவனுக்கு கிடையாது. அதே போல், தன்னிலை குறித்து வருந்தி சித்தம் குலைபவனும் இல்லை அவன்.  போரில் ஈடுபடுவதை/ஈடுபடுத்தப்படுவதைத்    தவிர்க்க வேண்டும் அவன்  லட்சியம். 700 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவல் முழுதும் அவன் செய்வதும் அதையே.  ஆனால் அதற்காக, நடைபிணமாக மாறாமல், தன் மேல் திணிக்கப்பட்ட போரில் உயிரையும்/ சித்தத்தையும் இழக்காமல் இருக்க, போர்க்களத்தையே  நாடக அரங்காக மாற்றி அதில் நாகரீகக் கோமாளியைப் போல் தன் கூத்தை நிகழ்த்துகிறான். ஆனால்  அவன்  மகிழ்விக்க நினைப்பது தன் மேலதிகாரிகளை அல்ல என்பதை  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நாவலின் ஒரு  சம்பவம் மூலம் உணரலாம்.  ஷ்வேக்  ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது மேலதிகாரியைப் சந்திக்கிறான். மேலதிகாரி அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து விழிகளை மூடி,  செயலற்றுப் போகிறார். முன்பு ஷ்வேக் போர்க்களத்தில் அவர் உயிரைக் காப்பாற்றியதை எண்ணுகிறாரா, இருவருக்குமிடையில் நெருங்கிய நட்புள்ளதா என்றெல்லாம் யோசிக்க  ஒன்றுமில்லை. காசிக்கு சென்றும் பாவம் தொலையாத கதையாக, ஒரு வழியாகத் தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் பணியாளன் மீண்டும் வந்ததைக் கண்டு ஏற்பட்ட  பீதியும், அதிர்ச்சியும்  மட்டுமே அவருடைய அத்தகைய எதிர்வினைக்கான காரணம்.

அப்பாவியாகத் தோற்றமளிக்கும் முகத்தில், கனிவு ததும்பும் விழிகளுடன் இருப்பது  அவன் அணிந்திருக்கும் முகமூடியா அல்லது அவனது குணாதிசயமே முட்டாள்தனமாக நடந்து கொள்வதா என உறுதியாக சொல்லமுடியாத அவன் மேலதிகாரிகள் அவனை பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதென்று தாண்டிச் செல்லவும் முடியாமல், இறுதியில் அவனிடமிருந்து அவர்களே தப்பிச் செல்ல முயல்கிறார்கள்.  கீழே உள்ள இரு சித்திரங்கள் அதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

svejk

svejk

சிப்பாய் என்றில்லை, எந்தவொரு  பணியாளனும் தன் மேலதிகாரி இப்படித்தான் தன்னிடம்  எதிர்வினை புரிய வேண்டும் என விரும்பக் கூடியதை நிகழ்த்திக் காட்டும் பாத்திரமாக  ஷ்வேக் இருப்பது மற்ற ‘போர் விமர்சன’ நாவல்களின்  முக்கியப் பாத்திரங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.  இன்னொரு வேறுபாடும் முக்கியமானது.   பாலும் சரி, யோஸாரியனும் சரி போரினால் தான் இத்தகைய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், அமைதி நிலவும் ஒரு குடிமைச் சமூகத்தில் அவர்கள், தங்கள் சூழலுடன் பொருந்தியுள்ள பொறுப்பான  குடிமகன்களாக இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும், அது நிகழவில்லையே என்ற ஏக்கமும் வாசகனுக்குள் தோன்றுகிறது. ஆனால்  ஷ்வேக் குறித்து அப்படி எந்த கற்பிதங்களும் நமக்கு ஏற்படுவதில்லை. எந்த சூழலிலும் அவன் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாத, அச்சூழலின் சமநிலையைக் குலைக்கும்  அராஜகவாதியாகவே (anarchist)  இருந்திருப்பான் என்றே நாவலின் போக்கிலிருந்து உணர முடிகிறது. கட்டற்ற வாழ்கை வாழ்ந்த நாவலின் ஆசிரியர்  ஹசேகின் ஆளுமை இப்பாத்திரத்தில் தெரிகிறது.

1921ல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1923ல் ஹசேகின் மரணத்தால் முற்று பெறாத இந்நாவலின் தாக்கத்தை Catch-22ல் காண முடிகிறது. ஹெல்லரும் இந்நாவலே தன்னை Catch-22 எழுத தூண்டியதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.   போர்க்கால இராணுவ  தந்திரங்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்காமல், தன் கீழ் பணியாற்றும் வீரர்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வீரர்களை களப்பலியாக கொடுக்கும் தளபதிகள்/ மேலதிகாரிகள், இராணுவ முகாம்களில் உள்ள  உணவகத்தில்/ உணவுப் பொருட்கள் காப்பகத்தில் நடக்கும் ஊழல்கள், அதீத ஆர்வத்தில் உள்ள சில இளம் சிப்பாய்கள், எங்கும் பரவியுள்ள அபத்தச் சூழல் என இரண்டு நாவல்களுக்கும் பொது அம்சங்கள் நிறைய உண்டென்றாலும் அவை வேறுபடும் இடங்களிலேயே முக்கியத்துவமும், தனித்துவமும் பெறுகின்றன.

 ‘All Quiet on the Western Front’ம், ‘Catch-22’ம் அதன் முக்கியப் பாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல்களை முன்வைத்தே போர் குறித்த எதிர்மறை  கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. போரின் புவி அரசியல் (geopolitics) சூழல் போன்றவை சுட்டப்படுவதில்லை.

எந்த இருத்தலியல் சிக்கல்களும் இல்லாத  ஷ்வேக்கின் விமர்சனத்தில் இருந்து  யாரும் தப்புவதில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய  எந்தத் தகுதியும் இல்லாத, வாய் ஜாலத்தை மட்டுமே நம்பும் இராணுவ உயரதிகாரிகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பே நாவல் முழுதும் உள்ளது. போதையின் பிடியில் உள்ள அதிகாரி ஒருவரின் சித்திரத்தில் சீருடையில் குத்தப்பட்டுள்ள பல பதக்கங்களுக்குக்ம் , முறுக்கிய மீசைக்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ள அவரது நிலை, இராணுவத்தின் ஆடை/உடல் பாராமரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளை பகடி செய்வதாகவும் உள்ளது.

svejk

ஜெர்மானியர்கள், செர்பியர்கள், ஆஸ்திரியர்கள், ஹங்கேரியர்கள், இவர்களோடு  தன் சொந்த நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சச்சரவுகளை, ஒரு இனத்தவர் மேட்டிமைத்தன்மையோடு மற்ற நாட்டினர்  குறித்து கொண்டுள்ள (தவறான) இழிவான அபிப்ராயங்களை   நுட்பமான பகடிகளாக நாவலில் சுட்டிச் செல்கிறார் . பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து, புதிய அரசுகள் உருவான முதல் உலகப்  போரின் பின்னணியில் பார்க்கும் போது,  இப்பகடிகள் முக்கியத்துவம் – ஒரு நாடு ஏன் ஒரு குறிப்பிட்ட தரப்பை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள – பெறுகின்றன.  போரை தீரச்செயலாக பார்க்கும், வீரர்களுக்கு உணவு முதலிய உதவிகளை வழங்கும் முதிய சீமாட்டிகளும் – முதிய சீமாட்டி ஒருவரை விலை மகள் என்று எண்ணி சிப்பாய் ஒருவன் அதிருப்தி கொள்கிறான் -, ஆஸ்திரிய அரசரும் கூட    பகடி செய்யப்படுகிறார்கள்.  20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட, அரசர் கடவுளின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டு, அவரது அதிகாரம் தெய்வத்தின் மூலம் அளிக்கப்பட்டதாக (Divine Right) கருதப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்பட்ட  -மக்களாட்சி என்ற கருத்தாக்கம்  இன்னும் பலமாக வேரூன்றாத – காலத்தில், இது ஒரு முக்கியமான கலகக் குரல்.

கிருத்துவ மதமும் இவரிடம் சிக்குகிறது. வீரர்களின் மரணம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை (மரணத்திற்காக) வாழ்த்தி,வழியனுப்பும் போதகர்கள், சொகுசான வாழ்வை  அனுபவிக்கும்,  நடைமுறை யதார்த்தம் குறித்து கொஞ்சமும் அறிந்திராதவர்களாக, சூதாடிகளாக, குடிகாரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

கட்டற்ற பித்து நிலையில் இயங்கும் நாவலென்றாலும்,  அப்பித்து நிலையின் உருவாக்கத்தின் பின்னால்  ஒரு முறைமை Catch-22ல் உள்ளது. சித்தம் பேதலித்த நிலை என்ற ஒரே விஷயத்தை நாவல் முழுதும் நுட்பமான வேறுபாடுகளுடன் முன்வைக்கும் ஹெல்லர்

நாவலின் விரவியுள்ள அபத்தத்தின் கீழுள்ள துயரத்தை/ கூர்மையான விமர்சனத்தை வாசகன் உணரச்செய்கிறார் .  “Frankly, I’d like to see the government get out of war altogether and leave the whole field to private industry.” என்று  அந்நாவலின்  மிலோ (Milo Minderbinder)   கூறுவது அபத்தமாக தோன்றினாலும், போர் வர்த்தகமாக மாறுவதை சுட்டுகிறது. இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்த்தொழிலில் இறங்கிவிட்டன . “You’re inches away from death every time you go on a mission. How much older can you be at your age?” என்று கூறப்படும் தர்க்கத்தில் உண்மையும், அபத்தமும், துயரும்  ஒரு சேர தெரிகின்றன அல்லவா.

‘The Good Soldier Švejk’ நாவலில் மிகப் பெரிய பலமான, ‘ஷ்வேக்கின்’ யாரையும்/ எதையும் துச்சமென கருதும் போக்கே  (irreverent anarchy),  அதே அலட்சியம் நாவலின் கட்டமைப்பிலும் தெரியும் போது அதன் பலவீனமாகவும் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.     தன் மேலதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் ஷ்வேக், அதிலிருந்து தப்பிக்க கடந்த காலத்தில் நடந்ததாக சொல்லி ஒரு நிகழ்வை/ கதையை விவரிக்கிறான். அக்கதையில் குழம்பி மேலதிகாரிகள், விட்டால் போதும் என்று  ஷ்வேக்கை தண்டிப்பதில்லை. ஷ்வேக்கின் தந்திரத்தை உணர்த்தும் இவ்வுத்தி ஓரிருமுறை  சுவாரஸ்யமாக இருந்தாலும், தொடர்ந்து பல முறை எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாணியில் விவரிக்கப்படுவது, சலிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எல்லாவற்றையும் கலைத்துப்  போடும் ஹசேக், அவற்றினுள் பொதிந்திருக்கும் இன்னொரு அடுக்கை வாசகனுக்கு சுட்டுவதில் கவனம் கொள்வதில்லை. ஒன்றைக் கலைத்துப் போட்டபின், அடுத்த கலகத்திற்கு தயாராகி விடுகிறார். யுத்த களத்திற்கு ரயிலில் செல்லும் ஒரு சிப்பாய் தவறி, ரயில் நிலையத்தில் உள்ள  கூர்முனைகள் கொண்ட கம்பிகளில் விழுந்து இறக்கிறான். கோர மரணம்.  அவன் சடலத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்க, ஒரு சிப்பாய் மிகுந்த கடமை உணர்ச்சியோடு அதைக் காவல் காக்கிறான்.  நாவலின் போக்கில், இச்சம்பவத்தில் உள்ள அபத்தத்தை உணரும் வாசகன், அதில் பொதிந்துள்ள    துயரை – இத்தகைய பல நிகழ்வுகள்  நாவலில் உள்ளன –  உள்வாங்குவதற்குள், அடுத்த அபத்த நிகழ்வு அவனுக்காக காத்திருக்கிறது.

Catch-22வைப் போலவே இந்நாவலிலும்  கேலிச் சித்திரமாக  (caricature) தோற்றமளிக்கும் -எப்போதும் தீராப் பசியில் இருக்கும், மேலதிகாரிகளின் உணவைக் கூட உண்டு விடும்  சிப்பாய், அமானுஷ்யத்தில்  ஈடுபாடுள்ள சமையல்காரர்  (occultist), அவரின் தத்துவங்கள்  (Form is non-being and non-being is form) – பாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள், அந்நாவலின் பாத்திரங்கள் போல் உயிர் கொள்வதில்லை.

நாவலின் விரவி இருக்கும் அலட்சிய பாவம் மற்றும் இத்தகைய பாத்திர வார்ப்புக்கள் நாவலுக்கு சித்திரக்கதையின் (comics) தோற்றத்தைத்   தருவதால்,  ஒரு கட்டத்தில் ‘Catch-22’ஐ விட   ‘Sad Sack’ சித்திரத் தொடர், இந்நாவலுக்கு  நெருக்கமாக உள்ளதோ என  வாசகன் எண்ண  ஆரம்பிக்கிறான்.

இது இரு நாவல்களுக்குமிடையே தரம் குறித்த ஒப்பீடு அல்ல, அதை இப்படி எளிமைப்படுத்தவும் இயலாது.  ஒரு பிரதியின் தாக்கத்தால் எழுதப்பட்ட மற்றொன்று தன் தனித்தன்மையை  எப்படி தகவமைத்துக் கொண்டு , சில இடங்களின் தன் மூல உந்துதலையே தாண்டிச் செல்கிறது, அதே நேரம் மூலப் பிரதி எப்படி/ எதனால் தன் முக்கியத்துவத்தை/ தனித்தன்மையை இழக்காமல் உள்ளது  என்பதற்கான உதாரணமாக ‘The Good Soldier Švejk’/ ‘Catch-22’ நாவல்களைப் பார்க்கலாம்.

‘All Quiet on the Western Front’  நாவலின் இறுதியில் பால் இறக்கிறான். ‘Catch-22’ நாவலின் இறுதியில் யோஸாரியன் தப்பிச் சென்றாலும், அவனுடைய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் வாசகனுக்கு ஏற்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்நாவலின் தொடர்ச்சியான ‘Closing Time’லும் அவன் போர்க்கால பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். ‘The Good Soldier Švejk’ நாவல் முற்று பெறாவிட்டாலும்,  போரின் இறுதியில்  ஷ்வேக் எந்த பாதிப்பும் இல்லாமல் மீள்வான் என்பது குறித்து வாசகனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்ல, அவன் வயது காரணமாக இரண்டாம் உலகப் போரில் அவன் ஈடுபட இயலாது என்று தெரிந்தாலும், ஒரு சூழலில் அதிலும் அவன் ஈடுபட நேர்ந்தால், மீண்டும் அப்போர்க்களத்தை நாடக மேடையாக்கி அதில் தன் கூத்தை அவன் அரங்கேற்றி வெற்றி பெறுவான் என்றே வாசகன் நம்புவான். ஒரு சாதாரணன், அரசு எந்திரத்திற்கு எதிராக – வளைவது போல் நடித்து –  வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும்  ஷ்வேக் Czech இலக்கியத்தின் மிகப் பிரபலமான, அம்மக்களுக்கு நெருக்கமான பாத்திரமாக, அவர்களை பிரதிபலிக்கும் ஒருவனாக இன்றும் கருதப்படுவதில்  எந்த வியப்புமில்லை. இப்புனைவுப் பாத்திரங்கள் ஒரு புறமிருக்க, இன்றும் உலகின் பலப்  போர்க்களங்களின் இப்படி நடைபிணங்களாகவோ , நாகரீகக் கோமாளிகளாகவோ எதிர்வினை புரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நம்  பரிவுக்குரியவர்களே.     

பின்குறிப்பு:

‘The Good Soldier Švejk’ நாவலுக்கு, பல மொழிபெயர்ப்புக்கள் உள்ள நிலையில் ‘Cecil Parrot’ன் மொழிபெயர்ப்பு, எந்த சுருக்குதலும் இல்லாத  மூலப் பிரதிக்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்நாவலை மொழிபெயர்ப்பதில் அவர் சந்தித்த சவால்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம், தவிர்க்க இயலாத சமரசங்கள், இவற்றைக்  குறித்து அவர் தன் அறிமுகத்தில் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நான்கு தொகுதிகளுக்கும் ‘Jospeh Lada’ வரைந்துள்ள சித்திரங்கள், நாவலின் அடிநாதத்தோடு இயைந்து அதற்கு வலுசேர்க்கின்றன.

ஒரு பயணமும் சில கதைகளும் – மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. மகாபலிபுரம் நுழைந்ததும் சாலையோர விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். சாலையை பார்க்கும்படியான மேஜையொன்றில் அமர்ந்துகொண்டேன். சாலைக்கு எதிரிலிருந்து ஒருவன், ஒரு பார்வையற்ற பெரியவரை கைப்பிடித்து அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டுச் சென்றான்.

பெரியவர் பார்ப்பதற்கு, நல்ல உயரமாகப் பழைய கருப்புவெள்ளை திரைப்படங்களில் வரும் கவுபாய்க்கிழவர் போலிருந்தார். தொப்பி மட்டும்தான் இல்லை. அடர் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சாலையில் சென்ற வாகனங்கள் பிரதிபலித்தன. என் தேநீரை அருந்தியபடியே அவரைக் கவனித்தேன். அவர் தனது தேநீரை ஒரு குழந்தையைப்போல ரசித்துக்குடித்துக்கொண்டிருந்தார். டீ மாஸ்டர் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“எங்க சார் மெட்ராசா போவனும்”?

அவர் குரல் வந்த திக்கில் குத்துமதிப்பாகத் திரும்பி பதிலளித்தார்.

” ஆமாப்பா. என்னைக்கொஞ்சம் பஸ்டாப்பில கொண்டுபோய் விட்ரமுடியுமா”? என்றார் தனது காலித்தம்ளரை அருகில் வைத்துவிட்டுச் சில்லறையை எடுத்தபடி.

நான் எழுந்து தேநீருக்கான காசைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். பெரியவரிடம் கேட்டேன்.

“நானும் சென்னைதான் போறேன் சார். வரீங்களா இறக்கிவிட்டிடறேன்”

இதில் சம்மதமென்பதை அவர் முகத்தின் மகிழ்ச்சியின்வழி உணர்ந்துகொண்டேன். என் முழங்கையைப் பிடித்துக்கொண்ட அவர் உள்ளங்கை உஷ்ணமாக இருந்தது. உள்ளே அமர்ந்தபின் நான் காரைக்கிளப்பியபடியே அவரிடம் கேட்டேன்.

“யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே சார். தனியா போக்குவரத்தெல்லாம் கஷ்டமில்லங்களா”

அவர் நேராக முன்புறத்துச் சாலையின் திசையில் முகத்தை வைத்தபடி மெலிதாகச் சிரித்தார்.

“சுத்தியும் மனுஷங்க இருக்கும்போது எனக்கென்ன தம்பி கவலை. உதவற மனுஷங்க இன்னும் இருக்காங்க உலகத்தில”

நான் சற்று அமைதியாக இருந்தேன். கார் சவுக்குத்தோப்புகள் அடர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தது.

“தம்பியும் சென்னைதானா”?

” ஆமா சார். அஷோக் நகர். நீங்க”?

“திருவான்மியூர் தம்பி.

“இங்க சும்மா சுத்திப்பாக்க வந்தீங்களோ”?

” இல்ல சார். ஒரு கம்பெனில ஆர் எம்மா இருக்கேன். சைட் விஸிட்டிங்காக கடலூர் போயிட்டு வந்திட்டிருக்கேன்”

“அப்ப பொறந்து வளந்ததெல்லாமே சென்னைதான்னு சொல்லுங்க”

“ஆமா சார். நீங்க”?

” இப்பத்தான் தம்பி கொஞ்சநாளா சென்னைல இருக்கேன்”

“ஓ ! அப்ப அதுக்கும் முன்ன”?

” அதெல்லாம் பெரிய கதை தம்பி. எதுக்கு உங்களை போரடிக்கனும்”

நான் சிரித்துக்கொண்டேன்.

“அப்டியெல்லாம் இல்ல சார். நீங்க வயசுல பெரியவங்க. எத்தனையோ அனுபவங்க இருக்கும். எப்டியும் முக்கால் மணிநேரம் ஆவுமே”

அவர் தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டார்.

“சரி அப்ப ஒண்ணு செய்வோம். நா உங்களுக்கு சில கதைங்களைச் சொல்லுறேன். அதுல எந்தக் கேரக்டர் நான்னு நீங்க சொல்லுங்க”

எனக்கும் பெரியவரின் இந்தப் பீடிகை பிடித்திருந்தது. நான் சம்மதம் என்றதும் அவர் துவங்கினார்.

கதைக்குள் கதை
————————
கண்விழித்தபோது அவன் உடலெங்கும் வலித்தது. குறிப்பாக இடதுகால் ஆடுதசைப்பகுதியில் அதிகம் வலித்தது. அவன் கூரையின் துளைகள் வழி சூரியவெளிச்சம் வழிந்தது. பக்கத்தில் தகர டிரம் ஒன்றின்மீது அவன் சீருடை கசங்கலாகக் கிடந்தது. அவன் சுற்றிலும் நோட்டமிட்டான். நிறைய தட்டுமுட்டுச்சாமான்களுடன் ஒரு பழைய அம்பாஸிடர் காரும் நின்றிருந்தது. கார்ஷெட்டாக இருக்கலாமென்று யூகித்தான்.

ஒரு மூலையில் மர அடுக்குகளில் விதவிதமான பறவைகள் கத்திக்கொண்டிருந்தன. இருந்தன. ஷெட்டின் தகர கேட்டின் மெலிதான கிரீச்சிடலுடன் உள்ளே நுழைந்த அந்தப்பெண் முக்காடு அணிந்திருந்தாள். தொலைவில் எங்கோ ராணுவவிமானம் பறந்த ஒலியைத்தொடர்ந்து பெரும் வெடியோசை கேட்டதில் அவன் படுத்திருந்த கட்டில் அதிர்ந்தது. அவள் நெருங்குவந்து அவன் கால் காயத்தைப் பரிசோதித்தாள். அவன் வலியில் முனகினான்.

“இது என்ன எடம் ? நா எப்டி இங்கவந்தேன்”?

அவள் பதில்கூறாமல் கட்டை அவிழ்த்துவிட்டுப் புதிதாக கட்டிட்டாள். அவனுக்குத் துளிகூட வலித்துவிடக்கூடாது என்பதுபோல் அவள் செயல்பட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் தன் குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டான்.

” கேக்கிறேனில்ல ? இது என்ன இடம்”?

“உங்க கால்ல இருந்த புல்லட்டை எடுத்தாச்சி. ஆனா காயம் ஆறக்கொஞ்சம் நாளாவும். அதுவரை நீங்க ஓய்வுலதான் இருந்தாவனும்”

அவனுக்கு அப்போதுதான் கடைசியாக நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தது. அவன் சுடப்பட்டான். எந்த திசையிலிருந்து என்று கவனிக்கக்கூட வாய்பின்றி மயங்கிவிட்டான்.

“இல்ல நா ஒடனே போயாகனும். இது என்ன இடம்னு சொல்லு. பக்கத்தில போன் எங்க கெடைக்கும்”?

அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ந்துபோய்விட்டான். ஏனெனில் அவள் கூறிய ஊரிருந்தது எதிரி தேசத்தில். அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரதேசத்தின் அருகில். யார் கண்டது. இவளே கூட அந்த தேசத்தின் பெண்ணாயிருக்கலாம். அவன் அவளிடம் என்னவோ கேட்க வாயைத்திறக்க அவள் அவசரமாக கைகளால் பொத்தினாள்.

வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது. வாயில் விரல்வைத்து அமைதியாயிருக்கும்படி சைகை செய்து விட்டு அவள் வெளியேறினாள். வெளியில் சிலவிநாடிகள் பேச்சுக்குரல்கள் கேட்டன. பறவைகள் கீச்சுக்கீச்சென கத்திக்கொண்டிருந்தன. மறுபடி அவள் உள்ளே வந்தபோது சற்று வருத்தத்துடனிருந்ததை கவனித்துக்கொண்டான்.

” இங்க பக்கத்துல போன் எதுவும் கெடையாது. உங்காளுங்க ஒண்ணுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிட்டாங்க”

“புரியல. சண்டைல யார் ஜெயிச்சது”?

” யாரும் ஜெயிக்கல. உங்காளுங்க பார்டர்லதான் கேம்ப் போட்டு தங்கிருக்காங்களாம். இங்க உள்ளவங்க திட்டம் போட்டுட்ருக்காங்க”

“நீ என்னை ஏன் கொல்லாம காப்பாத்தின”?

” நா ஒரு டாக்டர். நீ குண்டடிபட்டுக் கெடந்தப்ப அப்டியே விட்டுட்டு வரமுடில. அதான். நீ இங்க இருக்கிறதுகூட யாருக்கும் தெரியாது”

அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான். இருந்தால் அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த அவள் உடலில் சில இடங்களில் வெண்மைபுள்ளிகள் தென்பட்டன. செம்பட்டைநிறத்து அவள் கூந்தல் குட்டையாக கத்திரிக்கப்பட்டிருந்தது.

“உன் வீட்ல உள்ளவங்க ஒண்ணும் சொல்லலியா”?

அவள் வசீகரமாக புன்னகைத்துவிட்டுக் கூறினாள்.

“ யாரு இருக்காங்க கேட்க. என் வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். அவரும் உங்களை மாதிரி சிப்பாய்தான். அது இருக்கும் ரெண்டு வருஷம்”

“கொழந்தைங்க”?

அவள் மவுனமாக வெளியேறினாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தினமும் அவள் அவனுக்கு உணவு கொண்டுவருவாள். புண்ணுக்கு மருந்திடுவாள். அங்கிருக்கும் பறவைகளுக்கு தானியங்கள் தூவுவாள். . மெல்ல மெல்ல அவன் கால் குணமானது. துணிவுபெற்ற ஒருநாளில் அவன் நடக்கமுயற்சித்தான். வலியிருந்தது. ஆனாலும் நடக்கமுடிந்ததில் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவள் கேட்டாள்

“ஒரு சிப்பாயா இருக்கிறதுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கியா ? எதிர்ல நிக்கிற மனுஷங்களை கொல்றதுக்காக சங்கடப்பட்டிருக்கியா”?

” இது ரொம்ப கஷ்டமான கேள்வி. நீ ஒரு பொண்ணுங்கிறதால இப்டி யோசிக்கிறன்னு நெனைக்கிறேன்”

அவள் மவுனமாக புன்னகைத்தாள்.

“சரி நா இங்கிருக்கிறது தெரிஞ்சா உன்பக்கத்து ஆளுங்க உன்னை உயிரோட விடுவாங்களா”?

அதற்கும் அவள் பதில்கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் வந்தவள் அவசரமாக அவனைக் கிளம்பச்சொன்னாள். அவள் தேசத்து பட்டாளம் அதிகளவில் வந்துகொண்டிருப்பதாகவும், அங்கிருந்தால் அவன் பிடிபடுவான் என்றும் எச்சரித்தாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் பயணித்து ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டாள்.

” இதுக்குமேல என்னால உனக்கு உதவமுடியல மன்னிச்சிடு” என்றபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு சிறிய ட்ராவல் பேகில் உணவுப்பொருட்களும், டார்ச் லைட் மருந்து போன்ற சில பொருட்களும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் நகர்ந்தபின்புதான் சட்டென்று சொல்லிவிட்டு நினைவிற்கு வந்தவனாக, காரைப்பின் தொடர்ந்தபடியே ஓடி கத்தினான்.

“உன் பேரென்ன”?

கார் ஒரு சிறிய கிறீச்சிடலுடன் நின்றது. அவள் தலையை வெளியில் நீட்டி, தன்னுடைய வழக்கமான புன்னகையை வழியவிட்டபடி காரை வேகமெடுத்து மறைந்துபோனாள். அவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான்

“அப்புறம்”? என்றேன் நான்

” இப்போது அடுத்தகதை” என்றார் பெரியவர்

“அய்யோ அதுவே இன்னும் முடியலியே”

அவர் சிலவிநாடிகள் அமைதியாக இருந்தார். காரினுள் ஏஸியின் குளிர்கடந்தும் முன்புறத்து வெயில் உஷ்ணம் கூட்டியது.

கதைக்குள் கதை 2
——————————-
காலடியோசை கேட்டு அந்தச்சிறுவன் திடுக்கிட்டான்.

“வந்துட்டியா அக்கா”? என்றான்.. பதில் வராதுபோகவே மறுபடி சந்தேகமாக கேட்டான்

” யாரது”?

அதற்கும் பதில் வரவில்லை. அறையின் நிசப்தமும் காற்றின் ஓசையும், தொலைவில் பறவையொன்று கூவும் ஓசையும் மட்டும் கேட்டன. சிறுவன் தனது இருக்கையிலிருந்து மெல்ல சுவரைப்பிடித்தபடியே நடந்து வாசலுக்கு வந்தான். வாசற்படியருகே காலில் ஏதோ இடற, குனிந்து கைகளால் தடவிப்பார்த்தான். யாரோ ஒருவர் விழுந்துகிடப்பது தெரிந்து அதிர்ந்தான். கீழே கிடந்த உருவத்தின் முகத்தில் கைகளால் தட்டி உலுப்பினான்.

“யாரு ? யாருங்க ? என்னாச்சு

உருவம் மெல்ல அசைந்தது கைகளில் தெரிந்தது.

“தண்ணீ… தண்ணீ” என ஈனஸ்வரத்தில் முனகியது கேட்டது. சிறுவன் மறுபடி சுவரைப்பிடித்தபடியே சமையலறை சென்று, பழக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான். வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் சற்றே அஞ்சினாலும், வந்தவரின் தாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

சற்றைக்கெல்லாம் அந்த உருவம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு படுக்கையறை வரை வந்தது.

“யார் நீங்க ? சாப்பிட எதாச்சும் வேணுமா ? அங்க ஒரு பெரிய பானையிருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ரொட்டி இருக்கு. எடுத்துக்கோங்க” என்று ஒரு மூலையைக் காட்டினான். அந்தமூலைவரை சென்ற காலடியோசையில் அந்த உருவம் ரொட்டியை எடுத்திருப்பதை உணர்ந்துகொண்டான். பிறகு அவன் நாசியருகே சிகரெட்டின் நெடி படர்ந்தது.

காலருகே எதுவோ உரச, அவன் குனிந்து தடவினான். அவனது வளர்ப்புப்பூனை. மெல்ல அதைக்கைகளில் எடுத்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தபடியே கேட்டான்.

“அக்கா வெளிய போயிருக்காங்க. அவங்க இருந்தா டீயாவது வச்சித்தந்திருப்பாங்க. எனக்கு தெரியாது மன்னிச்சுக்கங்க”

இப்போது அந்த உருவம் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டது மெத்தையின் அழுந்தலில் தெரிந்தது. சிலவிநாடிகளில் சிறுவனுக்கு மருந்து நெடியடித்தது. சமயங்களில் அவன் தடுமாறி விழுந்து சிராய்த்துக்கொண்டால் அக்கா போட்டுவிடும் மருந்தின் வாசனை அது.

“உங்களுக்கு அடி பட்டிருக்கா ? மருந்து வாசனை வருதே”?

அவன் தலைமுடியை கோதிய விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

” உங்களுக்கு பேச வராதா ? எனக்கு பார்க்கமுடியாத மாதிரி “?

வாசலில் மாடுகளின் கனைப்பொலியும் கழுத்து மணியோசையும் கேட்டு சிறுவன் உற்சாகமானான்.

“அக்கா வந்துட்டியா ? ஏன்கா இவ்ளோ நேரம் ? நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க பாரு”

அறையில் தடாரென்று எதுவோ விழும் ஓசையும், அகக்அவின் முனகல் ஒலியும் கேட்டது. கட்டிலின் கிரீச்சிடலிலிருந்து பக்கத்திலிருந்த உருவம் எழுந்துகொண்டுவிட்டதென்று உணர்ந்துகொண்டான்.

“அக்கா…. அக்கா… என்னாச்சுக்கா”? என்றபடியே தரைகளில் ஒரு குழந்தைபோல தவழ்ந்துசென்றான். கைகளில் தட்டுப்பட்ட அக்காவின் கால்கள் உதறிக்கொண்டிருந்தன. அவள் முனகல் முன்னிலும் அதிகமாக வெளிவந்தது. சிறுவன் மெல்ல நகர்ந்த அவள் முகத்தைத் தடவினான். அவள் வாயோரம் ஈரமாக வழிந்துகொண்டிருந்தது.

அவன் பயத்தில் அழத்தொடங்கினான். வாசலில் மாடுகள் கத்தத்துவங்கின. மெல்லிய குளிர்காற்று அறைக்குக் நுழைந்ததைத்தொடர்ந்து மழையோசை கேட்டது.

தடார் தடாரென்று குச்சியுடையும் சப்தம் கேட்டது.

” அக்கா என்னாச்சுக்கா உனக்கு ? அக்கா என்னை பயமுறுத்தாதக்கா. ஏங்க யாரு இங்க இருக்கிறது ? அக்காவுக்கு என்னாச்சு”?

இப்போது அவன் முதுகில் ஆதரவாகத் தடவிய ஒரு கை, அவனை அங்கிருந்து நகர்த்திச்சென்று அமரவைத்தது. பின் அவன் கைகளைத் தரையில் நகர்த்தியது. ஓரிடத்தில் சிறுவனின் கைகளில் அகப்பட்ட பொருள் நீளமாக வழுவழுவென இருந்தது. அதன்பேரிலும் ஈரமாக இருந்தது.

சமையலறையில் அடுப்பு பற்றவைக்கும் ஒலியைத்தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் சப்தம் வந்தது. சற்றைக்கெல்லாம் அவன் அக்காவின் விரல்கள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அவன் முடிகளை கோதிவிட்டன. மழை வலுவாகப் பெய்யத்தொடங்கியது. யாரோ வாசற்படியிறங்கி வெளியேறும் ஓசைகேட்டது.

*

இந்த இடத்தில் பெரியவர் நிறுத்திவிட்டார். கார் வீஜிபியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நான் கேட்டேன்.

“ஆக்சுவலா அந்தப்பொண்ணுக்கு என்னாச்சு சார்”?

” இப்ப அடுத்தது” என்றார்.

“ஏன் இப்டி பாதில பாதில விடுறீங்க”?

அவர் எனக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அடுத்ததைத் தொடங்கினார்.

கதைக்குள் கதை 3
——————————
அவன் உடல் அசதியில் சோர்ந்துவிழுந்தபோது அவர்கள் நான்குபேர்களும் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள். அவனால் அவர்களை முழுமையாகப் பார்க்கக்கூட இயலாதபடி கண்கள் இருளடைந்துகிடந்தது. இடதுகாலைக் கழற்றியெறிந்துவிடவேண்டும்போல் வலித்தது. அவர்கள் விழுந்துகிடந்த இவனைப்பற்றி பரிகாசமாக பேசிச்சிரித்தனர்.

ஒருவன் அவன் தோள்பையினை ஆராய்ந்தான். ஒரு டார்ச் லைட்டும், கத்தியும் சில துணிகளும் ஒரு மருந்துப்புட்டியும் பஞ்சு உருண்டையும், மதுப்புட்டியும் கிடைத்தன.

ஒருவன் கேட்டான்,

“யார் நீ ? இந்தக்காட்டுக்குள்ள என்ன செய்யிற”?

இவன் சிலகணங்கள் தயங்கினான். கண்களை நான்குமுறை மூடிமூடித்திறந்துகொண்டான்.

” நா ஒரு பிரயாணி. இந்த மாதிரி காடுகள்ல அலைஞ்சு திரிஞ்சு ஆய்வு பண்ணிட்ருக்கேன்”

“கால்ல எப்டி அடிபட்டிருக்கு”?

” வழில ஒரு பாம்பு கடிச்சிடுச்சி”

அவன் கையிலிருந்த ரேடியோப்பெட்டி அலறியது. அதில்யாரோ கரகரப்பாக பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள் உடனே கிளம்பவேண்டுமென பேசிக்கொண்டே இவனைப்பார்த்தார்கள். பிறகு இவன் உடைகளை அகற்றி நிர்வாணமாக்கி சோதனையிட்டார்கள். இப்போது அங்கே இன்னும் சிலர் வந்தார்கள்.

இவனுக்கான சான்று அட்டைகளோ இன்னபிறவோ இல்லாததில் சந்தேகித்தார்கள். வழியில் அனைத்தும் ஒரு நதி அடித்துச்சென்றுவிட்டதாக இவன் கூறியதை அவர்கள் நம்பத்தயாரில்லை. அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் கிளைதாவிக்கொண்டிருந்த மந்திகளைப் பார்த்தபடியிருந்தான் இவன். சிகரெட் பற்றவைத்துக்கொண்ட ஒருவனிடம் கைநீட்டினான் இவன். கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாக்கெட்டை இவன் பக்கம் எறிந்தான்.

தொலைவில் எங்கோ தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்க, அவர்கள் அவசரமாக இவனது மதுப்புட்டியை பறித்துக்கொண்டு தன் வழியே சென்றார்கள். இவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான். அருகில் எங்கோ மாடுகளின் கழுத்துமணியொலி கேட்டது.

*

கார் நீலாங்கரையைக் கடந்து திருவான்மியூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

“திருவான்மியூர்ல டெர்மினஸ்கிட்ட விட்ருங்க தம்பி. அதுக்குப்புறம் நான் போயிப்பேன்”

“ஆனா நீங்க அந்தக்கதைகளை முழுசாச் சொல்லிருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன்.

“நாந்தான் எல்லாத்தையுமே சொல்லிட்டனே தம்பி” என்றார்.

அவர் கூறியதின் பொருள் எனக்குப்புரியவில்லை. டெர்மினஸில் இறங்கிக்கொண்டு எனக்குக்கையை நீட்டினார். நான் அவர் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அவர் மெல்ல அருகிலிருந்த யாரிடமோ என்னவோ கேட்டார். பின்புறத்திலிருந்து பேருந்து ஒன்று விடாமல் ஹாரனிக்க நான் காரை நகர்த்தியபடியே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். யாரோ ஒருவரின் கையைப்பிடித்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தார் பெரியவர்.