Author: பதாகை

வலி

வேல்விழி மோகன் 

காலையில் எழுந்து கோலம் போட முயன்றபோது அவளுடைய மாமனார் அந்த நான்கு மணி வாக்கில் எங்கேயோ கிளம்பியவர் “சுத்தமாயிட்டு போடு” என்றார். அவர் அந்த சந்தில் போகும்போது சில அடிகள் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து போனார். கீர்த்தி அந்த இடத்தை விட்டு எழுந்து சற்று நேரம் நின்றிருந்தாள். வீடுகளின் முகப்பில் இன்னும் தெரியும் இருட்டு. ஒரு மின்கம்பம் வெளிச்சத்தை  இழந்து மங்கியபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. ஒரு காகம் கத்தியபடி அந்த தென்னை மரத்தில் படபடத்தது. தெரு முனையில் அந்த பெட்டிக்கடைக்கு முன்பு தண்ணீர் தெளிக்கும் பாட்டி தெரிந்தாள்.

மாமனார் மறுபடியும் திரும்பி பார்த்தார். இவள் அந்த இடத்தை விட்டு அகன்று வெளியில் அந்த பொந்தில் கோலமாவு டப்பாவை வைத்துவிட்டு குறுகலான அந்த வீட்டின் இடதுபுறம் வளைந்து கொஞ்சம் நடந்து கதவை திறந்து உள்ளே நுழைந்து உள்ளறையில் கட்டிலை நெருங்கி படுத்துக்கொண்டபோது அவன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.

கதகதப்பாக இருந்த அந்த இடத்தில் கட்டிலுக்கு சற்று மேற்புரத்தில் மூடியிருந்த சன்னலிலிருந்து தப்பித்து உள்ளே வந்த காற்று சில்லென்று இருந்தது. அவளுடைய பார்வை அந்த சன்னலை கூர்ந்து கவனித்தது. நடுவில் ஒரு ஓட்டை.  சின்னதாக. வெளியில் இருட்டாக இருந்ததால் அவளுக்கு அது சரியாக தெரியவில்லை. ஆனால் ஓட்டை இருக்கிறது. அவன் மீது சாய்ந்தபடி அதை தடவிப் பார்த்தபோது “ஆமா” என்று முனகிக்கொண்டாள்.

அவன் அவளுடைய கனத்துக்கு சட்டென்று குறட்டையை நிறுத்தி, “ஏன் இன்னும் கோயில் பாட்டு போடாம இருக்காங்க.?” என்று சற்று வளைந்து கொடுத்ததில் அவளுடைய உடல் பாரம் முழுமையாக அவன் மீது சாய்ந்தது.

“தூங்குங்க” என்றவள் அவன் செய்யும் பின்புற சேஷ்டை பிடிக்காமல் ”நானும் தூங்கனும். தூக்கமா வருது. கோலம் போட்டுடலாமுன்னு போனா உங்கப்பா முறைச்சுட்டு போறாரு. எங்க வீட்ல நான்தான் போடுவேன். விடிகாலைல. குளிச்சுட்டு போடுன்னு எங்கப்பா சொன்னதில்லை,” என்றவளை அந்த கிச்சான் என்கிற கிருஷ்ணன் கண்டுக்கொள்ளாமல் “சுகமா இருக்குது,” என்றான்.

“எதுக்கு?”

“இந்த பாரம். மெத்துன்னு”

“சன்னல்ல ஓட்ட இருக்குது. அடைக்கனும். முதலிரவு முடுஞ்சதுன்னு அலட்சியமா இருக்காதீங்க. இது நம்மளோட அந்தரங்கம். அந்த ஓட்டைய பாக்கும்போது பகீருன்னு ஆயிடுச்சு. உங்களுக்கு தெரியாதா.?”

“நானு கவனிக்கலை,” திரும்பிப் பார்த்து, ”துணி வச்சுடலாம்,” என்றவனின் கைகளில் தூக்கம் போய் ஒரு ஆரம்பம் தெரிந்தது. அவள் சட்டென்று விடுபட்டு கட்டிலை விட்டிறங்க, ”இரு, இரு,” என்பதற்குள் வெளியே வந்து மூலையில் இருந்த குளியலறைக்கு போனாள்.  உள்ளே விளக்கு வெளிச்சம். இவளுடைய காலடி மணியோசை கேட்டு உள்ளிருந்து மாமியாரின் குரல் வந்தது.

“இதா வந்துடறேன்”

கொஞ்ச நேரம் கதவருகே வந்து நின்றாள். உள்ளிருந்து அவன், ”வந்திடு கீத்து. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும்”

உள்ளே வேகமாக நுழைந்து ஆனால் கிட்டே போகாமல் “ஸ்ஸ். உங்கம்மா இருக்காங்க அங்க. மெதுவா”

“நீ வா. தூக்கம் போயிடுச்சு”

“எனக்கு வலி. அங்க பாருங்க ரத்தம் இன்னும் காயலை. நைட்டு பயந்துப் போயிட்டேன். எனக்கென்னவோ உடம்பை வருத்திக்கிட்டோமுன்னுதான் தோணுச்சு. ஆரம்பிக்கறப்ப சுகமா இருந்தது. முடியும்போது இது தேவையான்னு ஆயிடுச்சு. நீங்க புசுபுசுன்னு மூச்சு விடறீங்க. கீத்து கீத்துன்னு உளர்றீங்க. அப்பறம் அப்படியே மேல படுத்து அமுத்தறீங்க யானை அழுத்தற மாதிரி. எனக்கு என்னன்னு புரியலை. தொடையெல்லாம் மரத்துப்போச்சு. ம். ஏதோ சடங்கு முடிஞ்ச மாதிரிதான் இருந்தது.” பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டு, ”உங்கம்மா வெளியே வர்றாங்க. நான் போயிட்டு வந்திடறேன்”

அவன் ஏமாற்றமுடன் ”பகல்ல தனியா ஒதுங்க முடியாது,” என்று கெஞ்சுவது போல கேட்கும்போது இவள் வெளியே வந்துவிட்டிருந்தாள். மாமியார் அங்கிருந்து அகலாமல் சிரித்தபடி, ”தண்ணி கொஞ்சமா இருக்கும். அஞ்சு மணிக்கு மேலதான் வரும். பாத்துக்க,” என்று நகர இவள் உள்ளே போனதும் மல நாற்றம் வந்தது. மறுபடியும் வெளியே வந்து நின்றாள். இப்போதைக்கு மூத்தா போகவேண்டும். அப்பறம் டூ பாத்ரூம். குளியல்? அது பிறகு. முதலில் அதை முடித்து ”கீத்து” என்றோரு குரல். அவள் திரும்பிப் பார்த்தாள். கிச்சான்தான். ”வா. ப்ளீஸ்” ஏறக்குறைய அழுவது போலத்தான் கேட்டான். அவளுக்கு ஏனோ பரிதாபமாக இருந்தது. தன்னுடைய உடல் அதற்கு தயாராக இல்லை என்பதை உணர்ந்ததும் அவளுக்கு குழப்பமாக தோன்றி, ”இருங்க பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்,” என்று உள்ளே நுழைந்து கொண்டாள்.

அந்த தொட்டியில் பாதிக்கு கீழே தண்ணீர் இருந்தது. ஒரு மூலையில் விழுந்திருந்த புடவைகள். கொடியில் பழைய லுங்கி. ஒரு பிரா. ஒரு வேட்டி. ஒரு ஜட்டி. ஒரு குட்டி சட்டை. அந்த கைக்குழந்தையின் ஞாபகம் வந்தது. கீழே விழுந்து கிடந்த பிளாஸ்டிக் ஜக்கு. இடது ஓரம் ஆய் போகும் இடம். அதன் மீது கைப்பிடி இல்லாத பிளாஸ்டிக் வாளி. மீண்டும் லேசாக மல நாற்றம். டெட்டால் மாதிரி ஏதாவது இருக்கின்றதா என பார்த்தாள். இந்தப் பக்கம் ஒரு சின்ன இடைவெளியில் ரின் சோப்பு. பாதி கரைந்த ஹமாம். பேஸ்ட். நான்கைந்து மஞ்சள் துண்டுகள். இரண்டு பிரஷ். அந்த குளியல் சோப்பை எடுத்து ஜக்கில் தண்ணீரில் கொஞ்சம் கசக்கி அந்த இடத்தில் ஊற்றி விட்டாள். ஏதோ ஒரு பூவின் வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாகி அவள் தயாராகும்போது கதவு லேசாக தட்டி கிச்சான் “முடுச்சுட்டியா? சீக்கரம்,” என்றான்.

0000

எல்லாமே நாற்றமடிப்பதாக தோன்றியது கீர்த்திக்கு. அந்த மல நாற்றம். கிச்சானின் எச்சில் வாசனை. அந்த ரத்த வாசனை. குளியலறையில் அந்த பழைய லுங்கி வாசனை. கோலம் போடுமிடத்தில் மாமனார் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்த பீடீ வாசனை. ‘என்ன யோசனை.?” என்றான் கிச்சான்.

ஏதுமில்லை என்பது போல தலையாட்டினாள். பேசுவது இப்போதைக்கு வேண்டாம் என்பது போல வெறுமனே புன்னகைத்தாள். அவன் குளித்து தயாராகி நெற்றியில் சந்தன பொட்டு வைத்து அண்ணனிடம், “எங்க பாப்பா?” என்றான்.

“இன்னும் தூங்குது”

இவளிடம், ”பாப்பாவுக்கு நான்னா இஷ்டம். நான் வீட்ல இருந்தா என்னோடதான் எப்பவும் இருக்கும்”

“சொல்லியிருக்கீங்க,” என்றபோது அவன் அவளுடைய கைகளை அழுத்தினான். எதற்கு என்று தெரியவில்லை. அந்த அறையில் அவர்களை தவிர அவனுடைய அண்ணன். பாட்டி. பக்கத்து வீட்டு பெரியவர் இருந்தார்கள். அந்த பெரியவர் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்து அவ்வபோது சிரித்து தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அது என் மாமா,” என்று பெரியவரை பார்த்து சொன்னவன் சட்டென்று அவளுடைய கன்னத்தை தடவி, ”ஏதோ தூசி” என்றான். ”காபி மட்டும் சாப்பிட்டு அக்கா வீட்டுக்கு கெளம்பிடலாம்”

பாட்டி எதையோ மென்று கொண்டிருந்தவள் வாயை துடைத்துக் கொண்டு, “பாத்துப் போப்பா வண்டியில. போம்போது கோயிலுக்கு போயிட்டு போயிடு”

“சரி பாட்டி”

“உங்கப்பன் பொண்ணு குளிக்காம வந்து கோலம் போட்றதுக்கு வாசல்ல நிக்குதுன்னு உங்கம்மாக்கிட்ட சொல்றான்,” அவளிடம் கண்களை திருப்பி, ”தண்ணி பிரச்சனைதான். குளிக்காம அந்த ரூம விட்டு வராத. உங்கண்ணி பாத்துக்குவா கோலம் போட்றதை,” என்றபோது கீர்த்தி காதில் விழாத மாதிரி “எவ்வளவு நேரத்துக்கு கெளம்பறது”“ என்றாள் கிச்சானிடம்.

“இதோ. இப்ப”

“ஒரு டெட்டால் வாங்கனும். எனக்கு குறிஞ்சு சோப்பு காதில கெடைக்கும். வாங்கனும். அப்படியே மரக்கடைல ஜன்னல் ஓட்டைய அடைக்கறதுக்கு ஏதாவது பசை கேட்டுக்கலாம். நான் காலைல சாப்பிட மாட்டேன். உங்கக்கா நிறைய வெரைட்டியா செஞ்சுரப் போறாங்க. சொல்லிடுங்க அவங்களுக்கு போன் பண்ணி”

“அக்கா கோச்சுக்கும். சும்மா இலைய நனைச்சுட்டு வந்திடலாம். இதெல்லாம் ஒரு வழக்கம். எங்கக்கா வீட்டுக்காரு எங்கண்ணன் மாதிரியே.” அவனுடைய அண்ணனை பார்த்து, ”எங்கண்ணனும் அப்படிதான். நான் சாப்பிட்டேனான்னு அண்ணிக்கிட்ட கேட்டுத்தான் சாப்பிடுவாரு. இல்லைன்னா என்னைய திட்டுவாரு. அவரு திட்டும்போது நீ பாக்கனுமே।” கசகசவென்று சிரித்து, ”திட்டும்போது மட்டும் தெலுங்குல திட்டுவாரு. தெலுங்கு கொஞ்சம் தெரியும். ஒசூர்லதானே வேல செய்யறாரு. எனக்கு ஒன்னும் புரியாது. தலையாட்டி கேட்டுக்குவேன். இல்லண்ணா,” என்றபோது அண்ணன் இவளைப் பார்த்து சிரித்து, ”நான் இனிமே திட்ட மாட்டேன். குடும்பம் ஆயிடுச்சு”

“திட்டுங்கண்ணே. பழைய மாதிரியே இருங்க”

“உங்கண்ணி கோவிச்சுக்கும்”

“ஏன்?”

“நைட்டே சொல்லிருச்சு. அதிகமா உரிமை எடுத்துக்காதீங்கன்னு”

“ஏன் அப்படி.?”

“குடும்பம் ஆச்சுன்னா அப்படித்தான். முழு உரிமையும் மனைவிக்கே”

“யாருண்ணா சொன்னது.?”

“இந்த சமூகம்”

“அதை விடுங்க. நீங்க எப்பவும் எனக்கு பழைய அண்ணன்தான்,” என்றபோது அண்ணனின் மனைவி காபி தட்டுடன் உள்ளே நுழைய,  “அண்ணியும்தான்,” என்றான். அப்போதெல்லாம் ஒரு கையால் கீர்த்தியின் விரல்களை தொட்டு தொட்டு எடுத்தான். அந்த பெரியவர் அதைப் பார்த்து சிரித்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.

காபி நன்றாக இருந்தது.  அண்ணி போகும்போது அண்ணன் ஏதோ சைகை செய்வதை கவனித்து கிச்சான் சிரித்தான். அவளுக்கு மேலே மின்விசிறி வேகமாக சுற்றுவதாக தோன்றியது. நிமிர்ந்து பார்த்தவுடன் கிச்சான், ”பத்தலையா வேகம்?” என்றபோது அவளுடைய அண்ணன் எழுந்து இன்னும் வேகம் வைத்தான்.

“இல்ல. கொஞ்சம் குறைக்கனும்”

“ஒ. அப்படியா. எங்க வீட்ல இதுலேதான் இருக்கும் எப்பவும். நீங்க வரும்போது குறைச்சுக்கோங்க,” என்று குறைத்தான். உள் அறையிலிருந்து அவளுடைய மாமனார் கவனிப்பதை இப்போதுதான் கவனித்தாள். காபி குடிப்பதில் கவனமாக இருந்தாலும் அவ்வபோது ஓரக்கண்ணால் மாமனாரை பார்த்தவாறு இருந்தாள். அந்த பாட்டி அங்கிருந்து எழுந்து போனபோது “அப்பாடா” என்றிருந்தது.  மாமனார் உள்ளே வந்து ஒரு ஓரத்தில் நிற்க அண்ணன் எழுந்து சமையலறை பக்கம் போனான். கிச்சான் எழுந்து நின்று கொண்டான். அவள் காபி டம்ளரை சரியாக பிடித்து நிதானமாக எழும்போது.  “உக்காரும்மா. உக்காரும்மா” என்று மாமனார் வேகமாக சொன்ன மாதிரியிருந்தது.

கிச்சான் உட்காரவில்லை. ஆனால் அவள் உட்கார்ந்தாள். அவன் அவளை கீறினான் நின்றபடியே கன்னத்தில். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கீழே குனிந்து அசட்டு சிரிப்புடன், ”அப்பா. அப்பா” என்றான். அப்பா ஏதும் கவனிக்காதது போல அண்ணன் இருந்த சேரில் உட்கார்ந்து, “என்னா பெருசு. பொண்ண பாக்கறதுக்கு வந்தியா?”

“ஆமா. கல்யாணத்துக்கு வரலை இல்ல?”

“எங்க போயிட்டே?”

“மக வீட்டுக்கு. ராயக்கோட்டைக்கு. அங்க போனாக்க அங்க இன்னொரு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. இப்பதான் வந்தேன். நேரா இப்படியே வந்துட்டேன்”

“சந்தோசம்”

“ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா”

“நல்லாயிருந்தா சரி,” என்று இவளை பார்க்க அப்போதுதான் தயங்கி உட்கார்ந்த கிச்சான், “வாழ்த்து சொல்றாரு அப்பா,” என்று இளித்தான்.

அவள் அவன் காதருகில், ”பாத்ரூம் போயிட்டு வந்திடறேன். உடனே கெளம்பலாம்”

“ஏன் அவசரம்?” கிசுகிசுப்பாக.

“தூக்கமா வருது”

0000

அவனுடைய அக்கா வீடு உள்ளூரிலேயே காமராசர் நகர் தாண்டி இருந்தது. அந்த காலை நேரத்தில் அந்த பாதையில் தள்ளு வண்டிகள் மட்டும் வருவதும் போவதுமாக இருந்தன. பெரும்பாலும் பழ வண்டிகள். முக்கியமாக வாழைப்பழம். ”இங்க வாழப்பழ மண்டிங்க அதிகம்,” என்றான் அவன். அவள் காற்றில் தன்னுடைய முடியை அவ்வப்போது சரி செய்துகொண்டு படபடக்கும் அந்த பச்சை நிற சேலையை அணைத்துப் பிடித்திருந்தாள். தர்பூசணி கடைகள் வரிசையாக. புளிய மரங்கள். தண்ணீர் எடுக்கும் பெண்கள். ஒரு மீன் கடையில் சுறுசுறுப்பாக இருந்த வியாபாரம். ஒரு மேடு வந்தபோது அவளுக்கு தொடையில் வலியெடுத்தது. ”அது நடந்திருக்கக் கூடாது,” என்று முனகிக் கொண்டாள்.

அவன் பைக்கின் நான்காவது கியரை முறுக்கி, ”என்னா சொன்னே?” என்றான். அவள் பதில் சொல்லாமல் திடீரென்று தெரிந்த செம்மண் பூமியை ரசித்தாள். மண்ணை ஒட்டி தண்ணீர் கட்டி ஈரமாக இருந்தது. நான்கைந்து காகங்கள் உட்கார்ந்து. உட்கார்ந்து எழுந்து பூச்சிகளை பிடித்துக் கொண்டிருந்தன. பிறகு ஒரு பள்ளிக்கூடம். அந்த இடத்தில் வேகமாக திருப்ப “மெல்லமா போங்க “ என்றாள்.

“பயமா?”

“வலிக்குது”

“புரியல”

“ஒன்னுமில்லை. பாருங்க. அங்க ஒரு புங்க மரம் தெரியுது பாருங்க. அங்க நிறுத்துங்க,” என்றாள். அவன் அங்கு நிறுத்தி, “எதுக்கு?” என்றான். அவள் இறங்கிக்கொண்டு மரத்தடியில் ஒதுங்கி எதிரில் அந்த தாபா உணவகத்தை வேடிக்கை பார்த்தாள். அவன் வண்டியை அவளிடம் இறங்காமல் தள்ளி “ஏன்?” என்றான்.

“கொஞ்ச நேரம் இருப்போம்”

அவனும் அந்த தாபா உணவகத்தை கவனித்தான். பஞ்சாபி தாபா என்று இந்தியிலும் எழுதி உள்ளே பச்சை வலைக்குள் செடிகள் நட்டு பலகையில் பீங்கான் தட்டில் சிக்கன் கிரேவியோடு சுக்கா ரொட்டி நான்கை நிறுத்தி வைத்திருந்தார்கள். வெறுமனே திறந்திருந்த பெரிய வாசல் வழியே ஒருத்தன் மிதிவண்டியில் தக்காளி கூடையை உள்ளே தள்ளிக்கொண்டு போக உட்புறம் நீளமான ஓலைப்பந்தலுக்கு கீழே கட்டில்களும் சேர்களும் சும்மா இருந்தது. ”பதினோரு மணிக்கு மேலதான் ரொட்டி தட்ட ஆரம்பிப்பாங்க,” என்றவன் கிளம்பலாம் என்பது போல நியூட்ரலில் முறுக்க அவள் புன்னகைத்து, “ஒரு நிமிசம்,” என்று அந்த மரத்தோரம் ஒரு கல்லின் மீது உட்கார்ந்தாள்.

“உடம்புக்கு ஏதாவது?”

“ரோட்ல போற வர்றவங்களை வேடிக்கை பாக்கனும். இந்த ரோடு அமைதியா இருக்குது. அங்க பாருங்க ஒரு குடிசை. தனியா. ஒரு சின்ன பொண்ணு தண்ணி பைப்ல விளையாடிட்டு. இந்தப்பக்கம் ரண்டு பக்கமும் வறண்டுப்போயி. ஏன்னு தெரியல. தண்ணி இல்லாத ஏரியா போல. ஆனா அங்கங்க சோளம் போட்டிருக்காங்க. சில எடத்துல கடலைக்காய். பாக்கறதுக்கு வறட்சியா இருந்தாலும் ஏதோ ஒரு அழகு”

“கூட்டிக்கிட்டு வர்றேன் அடிக்கடி”

“உங்கக்கா வீட்டுக்கு வேணாம். சும்மா வந்துட்டு போவோம். கிருஷ்ணகிரிய பத்தி அதிகமா தெரியாது. கேள்விப்பட்டிருக்கேன். இப்ப கொஞ்சம் புரியுது. சுத்திலும் கிராமங்க. அப்படி இருந்தா புடிக்கும்”

“எனக்கும்தான். போவோமா?”

“எவ்வளவு நேரம் இருக்கனும் அங்க?”

“நேரமெல்லாம் இல்ல. இன்னிக்கு அனுப்ப மாட்டாங்க. நாளைக்கு கெளம்பி வந்துடலாம்”

“ஓ. அப்படியா?”

“ஆமா. உங்க வீட்டுக்கு போனாலும் அப்படித்தான். சொந்தக்காரங்க விடமாட்டாங்க. போலாமா?” அவன் வண்டியை முறுக்குவதை  கவனித்து முகத்தில் சலிப்பு காட்டினாள்.  அவன், “என்னா செல்லம்?” என்று வார்த்தையை வழியவிட்டான். பக்கத்தில் வந்து அவன் காதருகில், “உடம்புக்கு முடியல. சொன்னேன் இல்லையா தூக்கம் வருதுன்னு. காலைல வேற நீங்க எம்மேல…” நிறுத்தி, “உங்கக்கா வீட்ல தனியா ரூமு இருக்குமா?”

“எதுக்கு? அதை விடு. எம்மேலன்னு எதுவோ சொன்னியே?”

அவள் அமைதியாக பின்னாடி உக்கார முயல அவன் வண்டியை அணைத்து இறங்காமல், “மொதல்ல அதுக்கு பதில் சொல்லு”

“ஒன்னுமில்லை”

“சரி இறங்கு,” அவன் அவளை இறக்க வைப்பது போல வண்டியை சாய்த்து அவனும் இறங்கினான். இரண்டு பேர் வண்டியில் ஏதோ சிரித்தபடி இவர்களை பார்த்துக்கொண்டே போனார்கள்.

“என்னவோ சொல்ல வந்தியே?”

“மேல படுத்து அமுத்திட்டீங்க. யானை மாதிரி” என்றதும் அவன் “அப்படியா?” என்று யோசித்து,   “காலைல இருந்து என்னைய ரண்டு முறை சொல்லிட்டே. யானை மாதிரின்னு”

“அவ்வளவு கனம். நான்தான் வேணாமுன்னு சொன்னேனில்ல. நீங்க கேட்டீங்களா?”

“இப்ப நான் என்ன பண்ணனும்?”

“என்னைய தூங்க வையுங்க. இன்னிக்கு எதுவும் வேணாம். அடிச்சுப் போட்ட மாதிரி இருக்குது. போம்போது டெட்டால்… அப்பறம் குறிஞ்சு சோப்பு. ம்.ம். அப்பறம் இன்னொன்னு. ஆங். அந்த ஓட்டைக்கு பசை”

“சரி. உக்காரு.” அவன் முகம் இறுக்கமாக இருந்தது. கிளம்பும்போது திடீரென சாதுவாக சிரித்துக் கொண்டான். பிறகு கியரை முடுக்கி வேகம் காட்டி பிறகு நிதானமாக குறைத்து மெதுவாக போனான். ஒரு டிராக்டர் கடந்தபோது பின்னாடியிருந்த பெண்கள் சிரித்தார்கள். அவர்களிடமிருந்து ஏதோ ரட்டை அர்த்த வார்த்தை வந்தது.

“என்ன சொல்லறாங்க.?”

“தெரியல”

“உங்களுக்கு தெரியும். நீங்க மறைக்கறீங்க”

“தெரியல. நான் அதையெல்லாம் கவனிக்கலை. பொம்பளைங்க ஒன்னா சேர்ந்தா இப்படி ஏதாவது பேசுவாங்க. அவங்களுக்குதான் கெட்ட வார்த்தைங்க அதிகமா தெரியும். ஆம்பளைங்களை விட”

“எனக்கு ஏதும் தெரியாது”

“நான் உன்னைய சொல்லலை” கரும்புத் தோட்டம் தாண்டி இடதுபுறம் பிரிந்து கருவேல மரங்களை கடந்து ஒரு மண் ரோடில் பிரிந்து அந்த ஒற்றையாக இருந்த வீட்டருகே நிறுத்தினான்.

உள்ளிருந்து கலகலப்பாக வந்த அக்கா, “வாங்க. வாங்க,” என்றாள். அவளுடைய வீட்டுக்காரன் அவளிடம் புன்னகைத்து விட்டு, “ஏன்யா இவ்வளவு நேரம்?” என்று அவனிடம் கடுகடுக்க, அவன், “அங்க லேட் பண்ணிட்டாங்க”

“சூடா இருக்குது பாரு சாப்பாடு. உனக்கு புடுச்ச இட்லி. சிக்கன் கொழம்பு. அப்பறம் சேமியா பாயாசம்”

“நல்ல சாப்பாடு. உனக்கும் புடிக்குமில்ல” என்றவன் அவளிடம் கேட்டிருக்க கூடாது என்பது போல முகத்தை திருப்பிக்கொண்டு “இட்லி யாருக்குதான் மாமா புடிக்காது?”

“சரி. இப்படி வாங்க” மாமா மாடிக்கு கூட்டிக்கொண்டு போனார். கூடவே அந்த பையன். இவளைப் பார்த்து புன்னகைத்து ““ஆண்டி. நல்லா இருக்கீங்களா?”

“ஓ. பொண்ணு பாக்கறப்போ கூட வந்திருந்த இல்ல”

“ஆமா ஆண்டி” என்றவன் “மாமா. கிரிக்கெட்டு பேட்டு வாங்கி தர்றேன்னு சொன்னிங்களே”

“நாளைக்கு வாங்கிடலாம். எங்க அக்கா?”

“கீழ இருக்குது. வரும்”

“நீங்க ரெடியாயிட்டு கீழ வாங்க. நட்றா போலாம்” என்று பையனை தள்ளிக்கொண்டு அவர் கிளம்ப இவன் பக்கத்து அறைக்கு போய் பார்த்துவிட்டு வந்து, ”அது பெட்ரூம். ஆனா பாய்தான் இருக்குது. சாப்பிட்டு வந்து படுத்து தூங்கலாம். நான் கொஞ்சம் வெளியில  போயிட்டு வர்றேன்”

“சீக்கரம் வந்துடுவீங்களா?”

“தெரியல,” கிட்டே வந்து, ”என்னைய பத்தி யோசனை பண்ணாதே. நீ நல்லா தூங்கு,” கீழே போக இருந்தவன் திரும்பிப் பார்த்து, “நீ சொன்ன மாதிரி இன்னைக்கு ஏதும் கிடையாது”

0000

அக்கா அவனைப் பார்த்து “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலை,,” என்றாள். மாமா பெரிய பெண்ணை அறிமுகப்படுத்தி, “இது கல்யாணத்துக்கு முன்னாடி உங்க போட்டோவை பாத்ததோட சரி. ரொம்ப புடுச்சுப் போச்சு உங்கள”

கீர்த்தி அந்த பெண்ணை பார்த்து சிரித்து “பிளஸ் டூவா?”

“இல்லை. பிளஸ் ஒன். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல”

அந்த பையன், ”எங்கக்காவுக்குக்கூட கிரிக்கெட்டுன்னா ரொம்ப புடிக்கும். மாமா பேட்டு வாங்கி கொடுத்தா நாங்க ரண்டு பேருதான் விளையாடுவோம்”

கிச்சான், “ஒரு பேட்டுதானேடா சொன்ன.?”

பையன் சிணுங்கிக்கொண்டு, ”மாமா. ம்ம். அவளுக்கும் ஒன்னு,” என்று இழுக்க, கீர்த்தி, ”வாங்கிக் கொடுத்துடலாம் இன்னொன்னு” என்றாள்.

அக்கா, “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலடா,” என்றாள் மறுபடியும்.  கிச்சான் நிமிர்ந்து பார்த்து, ”நீயே சொல்லுக்கா”

“ஏம்மா?” என்றாள் கீர்த்தியை பார்த்து.

“ரண்டு இட்லிதான் சாப்பிட்டேன்”

“அதுக்குதான் சொல்றேன். சிக்கனும் ரண்டே பீஸு. நாட்டு கோழிதான். தாராளமா சாப்புடலாம்”

“முடியலை“ என்று நெளிந்தபோது அக்கா புருசனை பார்த்தாள். இரண்டு பேரும் ஏதோ கண்ணால் பேசிக் கொண்டார்கள். அவர் இவனிடம், ”மதியமும் இப்படி சாப்புட்டா மீதியாகறத அக்கம் பக்கத்தலதான் கூப்பிட்டு சாப்பிட வைக்கனும்”

“நான் சாப்படறேனே மாமா. ஏழு இட்லி. சிக்கன் அரை கிலோ சாப்பிட்டிருப்பேன். இன்னமும் சாப்பிடுவேன். யானை மாதிரி,” என்றபோது அந்த பையன் “மாமான்னா பீமா,” என்றான்.

“அப்படி போடு. பலசாலின்னு சொல்லறான். உனக்கு பேட்டு நாளைக்கே வாங்கி தர்றேன்டா”

“நாளைக்குதான்னு ஏற்கனவே சொன்னீங்க.” மீண்டும் ஒரு சிரிப்பு எழுந்து அடங்கும்போது கிச்சான், “அக்கா. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்திடறேன். ஒரு மணி நேரத்துல வந்திடுவேன்,” மனைவியைக் காட்டி, ”இவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் மேல”

“மதியமாவது நல்லா சாப்புட சொல்லிட்டு போ”

கீர்த்தி நிமிராமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். இரண்டு பேரும் கையை கழுவிக்கொண்டு இரண்டு நிமிடங்கள் கீழே இருந்துவிட்டு மாடியேறும்போது, “நான் அக்காக்கிட்ட பேசிட்டு வர்றேன். நீ போ,” என்று கீழே இறங்கியவனை திரும்பி பார்த்துவிட்டு அறையை திறந்து அந்த பெட்ரூமுக்கு போய் அங்கிருந்த பாயை விரித்து போட்டு, “அப்பாடா,” என்று படுத்தபோது கண்கள் தானாக மூடிக்கொண்டது. ஓரிரு நிமிடங்கள் கழித்து அவனுடைய பைக் .கீழே புறப்படும்போது அவள் தூங்கிவிட்டிருந்தாள.

0000

அவர்கள் வீட்டுக்கு வருவதற்கு இரவு பத்து மணியாகிவிட்டது. கிச்சான் ஏழு மணிக்குதான் அக்கா வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் நேராக அக்காவிடம் சென்று கண்களால் மன்னிப்பு கேட்டான். அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, “உம் மாமா உம்மேல ரொம்ப கோவமா இருக்காரு”

“அக்கா. போன எடத்துல கொஞ்சம் லேட்டாயிருச்சு”

“அதுக்கு எங்க வீட்டுக்கு எதுக்கு வந்த? எத்தனை முன்ற போன் பண்ணறது. கடைசில அவங்களை மட்டும் சாப்பிட வையுங்க. நான் லேட்டாகும் வர்றதுக்குன்னு சொல்ற“

“மன்னிச்சுருக்கா”

“அந்தப் பொண்ணு பாவம். .தனியா எம்பொண்ணோடதான் உக்காந்து மதியம் சாப்பிட்டது. ரண்டு வாய் கூட சாப்பிடலை. முகமெல்லாம் வாடிப்போய் பளிச்சுன்னு சாப்பிட்டு கையை கழுவாம கோழி கொத்தற மாதிரி கொத்திட்டு எழுந்திருச்சு”

“அதுக்கும் நான்தான் காரணம். அவங்களையும் மன்னிக்கனும்”

அக்கா அவனை அருகில் அழைத்து, “ஒரு வித்தியாசம் கவனிச்சேன்”

“என்னக்கா?”

“நீ அவ. இவன்னு சொல்லறதில்லை. அவங்க. இவங்கன்னு பொண்டாட்டியை சொல்லும்போது சந்தோஷமா இருக்குது”

“அப்படியா?” அவன் விழித்தான். அக்கா “சரி. சரி. போய் கூட்டியா கீர்த்தியை. சாப்பிட்டு கெளம்புவீங்க”

“கெளம்பறதா?”

“ஆமா. அப்பா உங்களை அனுப்ப சொல்றாரு”

“ஏனாம்?”

“காலையிலையே அஞ்சு மணிக்கு கோயிலுக்கு போகனுமாம். பூசைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காறாம். இங்க இருந்தா லேட்டாயிடுமுன்னு சொன்னாரு”

“ஆமா. ஆமா. பாட்டி கூட சொன்னது போம்போது கோயிலுக்கு போங்கன்னு. நாங்கதான் மறந்துட்டோம்”

அவர்கள் சாப்பிட்டு கிளம்பி இருட்டில் மரங்களுக்கு இடையில் பயணப்படுவது சுகமாக இருந்தது. கீர்த்தியிடமிருந்து மரிக்கொழுந்து வாசனை. குண்டும் குழியுமாக இருந்த பாதையிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்துபோது எதிரில் கடந்துபோன வண்டிகள். மௌனமாக நிற்கும் மரங்கள். ஒரு கத்தரி செடி தோட்டத்தை கடக்கும்போது நிறுத்தப்பட்டிருந்த பொம்மை. மூடத் தயாராகும் வழியோர கடைகள். ஆங்காங்கே திண்ணைகளில் தெரியும் சிறுசு. பெருசு கூட்டம். செங்கல் நிரப்பி கடந்துபோன ஒரு லாரி. எங்கேயோ ஜேசுதாஸ் குரல், ”நீ பாதி. நான் பாதி”

அவள் “சொல்லாம கொள்ளாம மதியம் திடீருன்னு கெளம்பிட்டீங்க?”

“சொன்னேனே”

“அது சும்மான்னு நெனைச்சேன். என்கூட விளையாடறீங்கன்னு”

“இல்லை. நெசமாத்தான்”

“இல்லை. உங்களுக்கு வெளியில ஒரு வேலையும் இல்லை. அது சும்மா. இன்னைக்கு ஏதும் இல்லைன்னு சொன்னதுக்கு இதுதான் அர்த்தமா? அதைத்தவிர வேற வேல இல்லையா நமக்கு? பேசலாம். தூங்கலாம். டிவி பாக்கலாம். ஏதாவது பக்கத்துல மரத்தடிக்கு போயி உக்காரலாம். எனக்கு மட்டும்தான் அசதியா? உங்களுக்கு இல்லையா? எங்கேயோ பிரண்டு  வீட்டுக்கோ சினிமாவுக்கோ போயிட்டு அப்பறம் வேற எங்கேயோ சுத்திட்டு வர்றீங்க. எனக்கு தந்த பதில் இதுதான் நீங்க”

“எல்லாம் யூகம், ” லேசாக சிரித்தான். அவள் பட்டென்று, ”சிரிக்காதீங்க. உங்க சிரிப்பு பயமா இருக்குது. காலைல தமாசுக்குதான் யானைன்னு திருப்பி சொன்னேன். உங்களுக்கு வலிச்சுருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன். அதுக்கு அப்புறம்தானே அவங்க இவங்கன்னு வார்த்தை வந்தது. அதுக்குதான் உங்க சிரிப்பு பயமா இருக்குதுன்னு சொன்னேன்”

“பொண்டாட்டிய வாங்க, போங்கன்னு ஏன் சொல்லக்கூடாது?”

“சொல்லலாம். அது ஆம்பளைக்கு மட்டும் சொந்தமா என்ன?”

“அதானே”

“ஆனா அது புதுசா இருக்கு எனக்கு. கிண்டல் அடிக்கற மாதிரி. தொடர்ந்து சொல்லுவீங்களா?”

அமைதியாக இருந்தான். ஒரு ஆள் குடித்துவிட்டு லுங்கியில்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அந்த பேருந்து நிலையத்தில் ஒரு நகர பேருந்து காத்திருப்பில் இருந்தது. சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தான் ஒருத்தன். நான்கு பெண்கள் வேகமாக குறுக்கே நடந்து போனார்கள். வரிசையாக மின்விளக்குகள் மஞ்சள் நிறத்தில் கடந்தது.

இப்போது சிரித்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் சிரித்து முடித்தவுடன், “பரவாயில்லை. உங்க இயல்பு அது. வச்சுக்கோங்க. உங்க அக்கா மதியம் சாப்பிடும்போது எதையெல்லாமோ பேசிட்டு கோலம் போட தெரியுமான்னு திடீருன்னு கேட்டாங்க. தெரியும்னு சொன்னேன். அப்ப எனக்கு புரியல. ஆனா நிதானமா யோசிச்சப்போ அவங்க என்னவோ சொல்ல வர்றாங்கன்னு தோணுது”

“என்னா?”

“உங்க பாட்டி சொன்னாங்க இல்ல. முகத்துக்கு நேரா. கோலத்தை பத்தி. உங்கப்பா கோலம் விஷயத்தை மக வீட்டு வரைக்கும் கொண்டு போயிருக்காரு. உங்க பாட்டி சொன்னது காதுல விழுந்ததா இல்லையா உங்களுக்கு?”

“ஏதும் சொல்லலையே அவங்க”

“அப்ப நீங்க கவனிக்கலை”

“இல்லை”

“இதுக்கு வழக்கம் போல சிரிச்சிருக்கலாம். என்னைய பத்திதானே பேசறாங்க. உங்களுக்கு உறைக்கலையா?”

“ஏன் உறைக்கனும்? அவங்க சொன்னதுல நியாயம் இருக்கலாம்”

“அப்ப உங்களுக்கு அவங்க சொன்னது தெரியும்”

தயங்கி, “தெரியும். அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பெரியவங்க அப்படித்தான்”

“அப்ப ஏன் கவனிக்கலைன்னு சொன்னீங்க?”

“அது சின்ன விஷயம். எதுக்கு பெருசு பண்ணனுமுன்னுதான்” அவன் இந்த முறை சிரிக்கவில்லை. அவள் கண்களை இருட்டில் துடைத்துக் கொண்டாள். ஒரு மௌனம் உறைத்தபடி வண்டி மட்டும் சத்தம் போட்டபடி நகர்ந்தது. டெட்டால். சோப்பு. அந்த பசை ஞாபகம் வந்தது. ஒரு துணி வைத்துதான் அடைக்க வேண்டும். ஏனோ அம்மா அப்பா நினைவு வந்தது. அப்பாதான் சொல்லுவார், ”பொண்ணோட உடம்பை தீட்டு அது இதுன்னு குறி வச்சுதான் பேசுவாங்க. அதுக்கு பின்னாடி அதிகார புத்தியும் சேடிஸ்ட் புத்தியும் இருக்குது. ஆம்பளைங்க உடம்ப அப்படி பாக்க மாட்டானுங்க. இல்லன்னா எல்லா கெட்ட பழக்கமும் இருக்கற ஒருத்தனை சாமிக்கு மாலை போட்டுட்டான்னு முட்டாள்தனமா கும்புட முடியுமா?” ன்னு சொல்லுவார்.

அவன் படுக்கும்போது “காலைல நாலு மணிக்கு ரெடியாகனும்”

“கோலம் போடறதுக்கா?”

“சொன்னேனே. கோயிலுக்கும் சேத்து”

“கோலம் போடனமுன்னா நான் குளிக்கனும். குளிச்சா நீங்க விடமாட்டீங்க. மறுபடியும் குளிக்க முடியுமா? உங்க பாட்டி சொன்ன மாதிரி தண்ணி பிரச்சனை இருக்குது. என்ன செய்யட்டும்?”

அவன் யோசித்தான். ”அண்ணி செய்யறாங்களே?”

“அவங்க வேற. நான் வேற”

“அப்படின்னா நீதான் சொல்லனும்”

“கோலம் போடற வேலைய நான் செய்ய மாட்டேன். நானாதான் காலைல ஆரம்பிச்சேன். நானா அதை முடிச்சுக்கறேன். சுத்தமா இருக்கனுமுன்னா மொதல்ல உங்கப்பன பீடி நாத்தத்தோட பேச வேணாமுன்னு சொல்லிடுங்க. நீங்க சொல்லலைன்னா நேரம் வரும்போது நானே சொல்லிடுவேன். காலைல ஆறு மணிக்குதான் எழுந்திருப்பேன். சாமி எங்கேயும் போயிடாது. எப்படி வசதி?” என்று கேட்டவள் அவன் பதில் சொல்ல யோசித்து ஏதோ வாயை திறக்கும்போது, ”காலைல உங்க வண்டி கெளம்பறப்போ கண்ணை மூடிட்டேன். அப்பறம் என்னடா நம்ம வண்டி சத்தம் மாதிரி இருக்குதேன்னு திடீருன்னு முழிப்பு வந்திருச்சு. பாத்தா நீங்க இல்ல. அப்பறம் தூக்கம் வரலை. இனிமேதான் தூங்கனும்,” என்றாள் அர்த்தம் பொதிந்த கண்களுடன்.

“புரிஞ்சது,” என்று அவன் சொன்னபோது அவள் அந்த சன்னல் ஓட்டையை அடைப்பது பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.

 

 

 

அழைப்பு

இவான் கார்த்திக்

ஏழு கழுதைகளின் வயதை அம்மா அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ள மனம் ஒப்பவில்லை. காரணங்கள் பல இருந்தாலும் அதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. இருக்கட்டும் இருக்கட்டும் என்று அம்மாவும் சொல்லி சொல்லி பிறகு மறந்து போனாள். நடக்காமல் இருந்தது என்னமோ நல்ல விசயம் என்றே இன்று வரை படுகிறது. அப்படி யோசிக்கும்போது என்னை மற்றவர் கல்யாணத்திற்கு அழைப்பது அநியாயம் என்பதை என் அம்மா கொஞ்சமாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

முன்பு நடந்த நினைவுகள் கண் முன் திரை கட்டி ஆடுகின்றன. இரவு முடிய இன்னும் நேரம் குறைவாகவே உள்ளது. காரணம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் தவிர்த்து விட வேண்டும். என் உடம்புக்கு எதுவும் வராதென்று அம்மாவுக்கு தெரியும். காரணம் வேண்டும். சித்திமார்களும் அத்தைமார்களும் வரிசை கட்டி வந்து விசாரிப்பார்கள் பதில் சொல்வது பேரும்பாடு இதில் நான் திரும்ப கேள்விகள் வேறு கேட்க வேண்டும். பேப்பரில் எழுதி வைத்து மனப்பாடம் செய்தும் கைவராத கலை.  ஆண்கள் கைகொடுத்து சிரிக்கும்போது ஏன் என் முகம் இறுகி கண்கள் திறந்து முறைப்பதைப்போல மாறிவிடுகிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கோர்த்து விட்டிருக்கலாம். அவர் செத்துப்போய் மாதா மாதம் நம்மை கொல்கிறார்.

தினமும் ஒர் அழைப்பாவது என் வீட்டிற்கு வந்து கழுத்தை பிடிக்கிறது. இதில் பண்டிகை ஆப்பர் போல சில நாட்கள் இரண்டும் அழைப்புகள். இன்னும் உச்சம் ஒரே நேரத்தில் இரு அழைப்புகள் வந்து மொய் எழுத வற்புறுத்தி “கண்டிப்பாக வந்துரணும்” என்பதை அழுத்தி சொல்லி பிரச்சனையை கிளப்பிவிட்டு செல்கின்றனர்.

முன்பெல்லாம் அம்மா அப்பா சேர்ந்து சென்றனர். அப்பா பரலோகம் போய் சேர்ந்த பின் என்னை தனியாக அனுப்புகிறாள். தனியாக மண்டபத்திற்கு சென்று அங்கிருக்கும் ஏதோவொரு பிளாஸ்டிக் சேரை கண்டுபிடித்து முற்றிலும் தெரியாத முகம் இரு பக்கமும் அமர நடுவில் இடம் பார்த்து அமர்வதற்குள் உடல் வியர்த்து கொதித்துவிடும். ஒரே நிம்மதி சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் சுழலும் மின்விசிறி மட்டுமே. வியர்வையை குளிர்வாக்கி கொஞ்சம் நிதானமடையச் செய்யும்.

நிற்பதை நடப்பதை ஓடுவதை தின்பதை தூக்கி எறிவதையெல்லாம் துரத்திப் பிடிக்க முயலும் புகைப்படக்கார்கள் கண்கள் என்மேல் விழாமல் இடுக்கினுள் சுவர் ஓட்டையினுள் பதுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல ஒளிந்து கொண்டிருக்க தலைமேல் தூக்கிய லைட் மூலம் வெளிச்சம் காட்டி குறைந்த பட்சம் என் சொட்டைத் தலையையாவது படம் பிடித்து சாதனை புரியும் அவர்களை என்னதான் செய்வது. சோற்றை என் வாய்க்குள் புகுந்து படம் பிடிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை.

குடும்பம் குடும்பமாய் வந்து நிற்பவர்கள் மெல்ல என்னருகில் அமர்ந்து வணக்கம் வைப்பர். வாய் திறந்து பேச ஆரம்பிக்கும் இவர்கள் என் அந்தரங்கத்தை குதறாமல் எழுந்து செல்வதில்லை. கஷ்டகாலத்திற்கு என்னாலும் எதும் செய்ய முடியாது குழைந்து சிரித்து பதில் சொல்லி முடிக்கும் முன் என் கண்கள் மடை திறந்துவிடும். பாவிகள் அதைக் கண்டும் குதறலை நிப்பாட்டுவதில்லை. குடும்பம் அமைத்து ஓர் நிலைக்கு வருவதென்பது அவர்களுக்கு அமைந்தால் ஊருக்கும் அமைந்தே தீர வேண்டும் கட்டயமில்லையே.

நிதானமாக பந்தி நேரத்திற்கு வரும் ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட இருவத்தினாலுவிட்ட அக்காக்கள் அண்ணன்கள் தம்பிகள் தங்களை அறிமுகப்படுத்தி “நான் யாருன்னு தெரியுதா?” எனும் போது குடல் பிதுங்கி வெளிவரும் அளவுக்கு யோசிக்க வேண்டியள்ளது. மற்றவர்கள் “ஆமா…அப்ப சொகமா இருக்கியா?” என்று தொடரும் கணம் நான் பேந்த பேந்த முழித்திருப்பேன். அவர்களும் “வாறேன் அண்ணெ, தம்பி” என்று சொல்லி ஓடிவிட்டால் பாக்கியம். இல்லையெனில் சர்வம் நாசந்தான். இதில் “அப்பா சொகமா,” என்று என்னிடம் கேட்பவரின் வாயில் நாலு குத்து விடாமல் வாய் பிளந்து பார்த்து அப்படியே விட்டுவிடுதலும் நல்லதே.

தூரத்தில் கைகழுவுமிடத்தில் இருக்கும் பெரிய மைனி வாயில் குதப்பிய வெற்றிலையை அங்கே எங்கோவோர் மூலையில் துப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக என்னிடம் வரும்போதே சுதாரித்து ஓடிவிட்டால் நல்லது.  இல்லையேல் கை வசம் இருக்கும் ஓடாத சரக்கை என் தலையில் கட்டிவிடும் திட்டத்தில் என் அருகில் “பிள்ளெ சொகமா…” என்று ஆரம்பித்து தோவாள, வள்ளியூர், ஒழுகினசேரி, தாழாக்குடி, வீரணமங்கலம் என்று ஊர்சுற்றி பெண்கள் பெயர் விலாசம் அவள் அப்பன் தாதன் முப்பாட்டன் நாஞ்சிலுக்கே வந்த கதை வரை அளந்து வைத்து கிளம்பும் முன் நாலாவது பந்தி முடிந்துவிடும்.

பந்திக்கு முந்த வேண்டுந்தான் ஆனால் அதற்காக உட்கார்ந்திருப்பவரின் இலைக்கு பின்னால் காத்திருப்பவர் பருப்பு பாயாசமும் மோரும் கேட்பது உச்சபட்சம். சிலர் நம் இலையில் கைவைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கன்னியாரி கடலில் சுனாமி வந்து ஊரை விழுங்கும் போது நம்மவர் ஒருத்தர் “அது செரி பிள்ளே, புரிசேரி வரல்லையே… வச்சிருக்கானா… இல்ல விளம்புத அணஞ்ச பெருமாளே மடக்கு மடக்குன்னு எடுத்து குடிச்சிட்டானா?”

என்று பினாத்தும் போதேகவளங்கள் தொண்டையை அடைத்து சுனாமிக்குள் முங்கியது போல மூச்சு முட்டியதும் அதை சரிசெய்ய தண்ணீர் தேடி அலைந்ததும் சுனாமியை விட சுவாரஸ்யமானது.

துவட்டலும், அவியலும், கிச்சடி,  எரிசேரி, பச்சடி, மாங்காய் என முன்பே விளம்பி வைக்கப்பட்ட பந்திக்கு, கதவு திறக்காமல் அடைத்து கிடக்கும்போது வரும் வாசனையை மனத்தில் ஏத்திக்கொண்டே கையில் ஜெம்பர் துணியுடன் பழிகிடையாய் வரிசையில் நிற்க வேண்டும். ஜிங்கு சாங் ஜிங்கு சாங் என்று வண்ணம் படமெடுக்கும் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும். முண்டித் தள்ளி நெரித்து மேடைக்கேறி மாப்பிள்ளையின் மூக்கில் உறுமா துணி கட்டி இறங்கி திறுநீரையும் அவன் கண்களில் போட்டு வாழ்த்திவிட்டு முதலில் இறங்கும் பெரிசுகள் “பஸ்ட் நம்மதான , நம்க்கில்லாத மரியாதையா?” என்று தற்பெருமை அடிக்கும்போது மேடையில் நான் மட்டும் கருப்பு துணியை கட்ட என்னை அடிக்கவே வந்து விட்டனர். “விடப்பா கிறுக்கன் தெரியாம செஞ்சுட்டான்” என்று பின் பாட்டுக்கள் வேறு. அப்போது  மயங்கி விழுந்த என்னைத் தூக்கி நிறுத்த முடியாமல் மேடையில் பின்னாலிருந்த மணமக்களின் சோபாவிலேயே படுக்க வைத்தனர். பெண்கள் சிரிப்பதும் தட்டி எழுப்ப முயன்றதும்  தண்ணீருக்குள் கத்துவது போல கேட்டும் எழும்ப முடியாமல் கிடந்தேன். வெட்கக்கேடு.

இந்த ஆபாசங்கள் நிறைந்து கிடந்தாலும் கல்யாணங்களுக்கு  நான் செல்வதிலும் ஓர் அந்தரஙக காரணமுண்டு. மணப்பெண்கள், மாப்பிள்ளைகள் அந்த சடங்கு நாடகங்கள் அனைத்தையும் நானும் அந்த கணங்களில் நடித்துவிடுகிறேன். நான் உடுத்தியிருக்கும் சட்டை வேட்டியை கழற்றி பட்டணிந்து, பொடி செய்ன் முதல் உருட்டு செய்ன் வரை கால் கொலுசு முதல் காது ஜிமிக்கி வரை வளைய வரும் ஒட்டியாணமென அனைத்தும் பொன்னாக ஜொலிக்க கழுத்தில் தாலி தொங்க நிற்க வேண்டும். பயப்பட்ட இத்தனை காரணங்கள் நிறைந்திருந்தாலும் போய்ப் பார்க்க இந்த ஒரு காரணம் இருக்கத்தான் செய்கறது.

விடிந்து விட்டது நாளை மறைந்து இன்றாகிவிட்டது. இன்று இரண்டு அழைப்புகள் காலை ஒன்றிற்கும் சாயங்காலம் ஒன்றிற்கும் செல்ல வேண்டும். சட்டை வேட்டியை நேற்றே தேய்த்து வைத்தாயிற்று.

விசிட் விசா

கார்த்திக் கிருபாகரன்

துபாய் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இரண்டாவது தளத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்த ஜோதிலிங்கத்துக்கு தன் நண்பனும்,எதிரியுமான சூசைய பார்த்தவுடனே இனம்புரியாத மகிழ்ச்சி. ஆனா எதையும் வெளிக்காட்டிக்காமல் வேலையை பார்த்தான். சூசைக்கும் லிங்குவ பார்த்தவுடனே, ரொம்ப சந்தோஷம். அவன்கிட்ட பேசுறதுக்கு பக்கத்துல வந்து, “டேய் லிங்கு, எப்படி இருக்கடா ? நல்லா இருக்கியா? துபாய் வந்தா உன்னைய பார்ப்பேன்னு நெனச்சேன். பார்த்துட்டேன்டா. நீ இங்கதான் வேலை பாக்குறியா?” அப்புடின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டான். ஆனால் பதிலேதும் சொல்லாமல் லிங்கு வேலைய பார்த்துகிட்டே  பேசாம இருந்தான்.

ஊர்ல தெருக் கூத்து நாடகத்துல நடந்த கைகலப்புனாலதான் லிங்கு இப்ப பாத்தும் பேசாம இருக்குறதா சூசை நினைச்சான்.  ஆனா காரணம் அந்த சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசரோட கெடுபுடிதான். வேலை பார்க்கிறப்ப  பேசிக்கொண்டு இருந்தாலும், வேலை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துட்டு  இருந்தாலும், தண்டனை கடுமையா இருக்கும், ஒருநாள் சம்பளத்தை நிறுத்திடுவாங்க. அதான் லிங்கு பேசாம இருந்தான்.

தலை குனிந்தபடியே சூசைய பார்த்து, “டேய் பேசாம போடா,” அப்படின்னு சொல்லிட்டு வாலியை தூக்கிகிட்டு, துடைப்பத்த எடுத்துக்கிட்டு முதல் தளத்தை சுத்தம் பண்ண போனான்.

“அட கடவுளே! பேச கூட மாட்டானா, இவ்வளவு ரோசமா இருக்கான். வெளிநாட்டுல ஊர்க்காரன்தான் ஒத்தாசை ஆனா, இவன் இப்புடி இருக்கானே, எப்புடி வேல செய்ய போறேன்”னு நினைச்சு, லிங்கம் வேலை செய்றதையே வேடிக்கை பாத்துட்டு நின்னான் சூசை.

*

மாலுக்கு பின்னாடி நடை பயணமா 10 நிமிடம் போனவுடனே, கண்டைனரை ரூம் மாதிரி தயார் பண்ணிருந்தாங்க. அதில் ஒரு ரூம்ல ஆறு பேரு. ஏசி ரூம். அதில் ஒரு கட்டில் மூணு தளமா இருந்துச்சு. அதில் இரண்டாவது தளத்தில் சூசைக்கு தங்க இடம் கிடைச்சது. ரூமுக்கு ஒரே ஒரு பாத்ரூம். சாப்பாடு நம்மளே தான் சமைச்சு சாப்பிடனும். அதுக்கு தனியா இந்திய மதிப்பு 1000 ரூபாய் கொடுத்துடுவாங்க. சமைத்து சாப்பிடுவதற்கு ஒரு அடுப்படி இருந்துச்சு. இப்படி நெருக்கமான, இறுக்கமான இடம்தான். ஆனால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டுதான் வாழணும்னு கட்டாயம்.லிங்கத்துக்கு பக்கத்து ரூம்தான் சூசை இருந்தான்.

வேலை நேரம் கணக்கே கிடையாது. காலையில ஏழு மணிக்கு போய் வேலை ஆரம்பித்தால் நைட் பதினொரு மணி வரைக்கும் வேலை இருக்கும். மதியம் உணவு இடைவேளை. ஓய்வு என்பது கொஞ்ச நேரம்தான். ஆச்சரியம் கலந்த இந்த வெளிநாட்டு வாழ்க்கை. அரபு நாடுகளில் ரம்ஜான், நோம்பு நாள்கள் வந்தால் சந்தோஷம் தான். ஏன்னா! அப்போது வேலை நேரம் ரொம்ப குறைவு. “இரவு 11 மணிக்கு தான் ஜோதிலிங்கம் வேலைய முடிச்சுட்டு வருவான். அவன்கிட்ட பேசனும்”னு சூசை காத்திருந்தான்.

மேடை நாடகங்களில் சூசையும், ஜோதிலிங்கம் சேர்ந்து நடிப்பார்கள். இவர்கள் நடிக்கும் தெருக்கூத்துகள் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தது. தன் விவசாய நிலங்களையும் கவனித்துக்கொண்டு பல ஊர்களில் கூத்து கட்டிக்கொண்டும் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஜோதிலிங்கம் ராஜபாட்டை ஆக இருப்பான். சூசைக்கு முதலில் ஒண்டிபுலி என்றுதான் பெயர். எல்லா தெருக்கூத்திலும் லிங்கம் ராஜபாட்டையாக நடிப்பது அவனுக்கு பிடிக்காமலே இருந்தது.

அன்று பக்கத்து கிராமத்தில் ‘பாஸ்கா திருவிழிப்பு’ இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி நாடகம். அந்த நாட்களை கத்தோலிக்க திருச்சபையும், பிற கிறித்தவ சபைகளும் எல்லா ஆண்டும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம். அதில் இயேசுநாதர் கதாபாத்திரத்தில் சூசை நடிக்க ஆசைப்பட்டான். ஆனா லிங்கம்தானே ராஜபாட்டை. அந்த பாத்திரத்தை அவனே ஏற்று நடிச்சான். ஏன்! ஆண்டுதோறும் கத்தோலிக்க திருச்சபை இந்த உயிர்த்தெழும் நாடகத்தை லிங்கத்தோட குழுவைதான் அந்த ஊர்க்காரர்கள் செய்ய சொல்லுவார்கள். அதுலேயும் “இயேசுநாதர் கதாபாத்திரத்திற்கு ஜோதிலிங்கம் அவ்வளவு பொருத்தமாக இருப்பான்”னு அவனையே நடிக்க சொல்லுவார்கள். அந்த விஷயத்துல லிங்கம் மேல சூசைக்கு பொறமை அதிகமாவே இருந்தது.

அந்த நாடகத்துல ஏசு நாதர் சிலுவையைச் சுமந்து கொண்டு போற போது சாட்டையால் அடிக்கும்  காட்சி. சாட்டையை சுழற்றி, இயேசுவை அடிக்க வேண்டும். அது பார்ப்பவர்களுக்கு இயேசு மேல் படுவதாக தெரிந்தாலும்,சாட்டையடி சிலுவையில் தான் பட வேண்டும். சாட்டை சுழற்றி அடிக்கும் காவலாளி வேடத்தை சூசை ஏற்றிருந்தான். அப்போது சாட்டையால் அடித்தான். சிலுவையில் படவேண்டிய சாட்டையடி லிங்கத்தின் மேல் “பளீர்ர்…” என பட்டது. கனமான சிலுவையை சுமந்து கொண்டும், நிஜ சாட்டையடி வாங்கியும் லிங்கத்துக்கு கண் கலங்கி, தத்ரூபமாக நடித்தான். அந்த காட்சியை பார்த்த மக்களுக்கே கண்ணீர் வந்தது. அந்த காட்சியில் மூன்று முறை ஏசுநாதரை காவலாளி அடிக்கனும். இரண்டாவது முறையும் சாட்டையடி சிலுவையில் படாமல் லிங்கத்தின் மேல் பட்டது. லிங்கத்துக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. “இவன் நம்மல வேணும்னே அடிக்கிறானோ!” என்று நினைத்தாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தான். மூன்றாம் முறையும் சாட்டையடி லிங்கத்தின் மேல் பட்டது. வலி பொறுக்க முடியாமல் கீழே விழுந்தான். அந்த காட்சி மேலும் தத்ரூபமாக இருந்ததால், கிராம மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.

நாடகம் முடிந்தது, லிங்கத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. பின் லிங்கம் சூசையை தனியாக சந்தித்து பேசியபோது, சூசையின் தவறான எண்ணத்தை  புரிந்து கொண்டான். பேச்சு வார்த்தை ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் கைகலப்பானது. அந்த சண்டைக்கு பின் லிங்கமும், சூசையும் சேரவே இல்லை. நாடகக் குழுவும் இரண்டாகி போனது. அந்த நிகழ்ச்சிக்கு பின் சில கலைஞர்கள் வேற தெருக்கூத்தில் இணைய ஆரம்பித்தார்கள். சிலர் வேற வேலைக்கு போக ஆரம்பித்தார்கள். லிங்கம் பிழைப்புகாக ஏஜெண்ட் மூலம் துபாய் வேலையில் சேர்ந்தான். சூசை அந்த தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணை காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். பின் இரண்டு வருடத்துக்கு பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்த திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயர் மாற்றி ‘சூசைன்னு’ ஞானஸ்தானம் வாங்கினான்.

சூசையோட படிப்பு தகுதிக்கு வேலை ஏதும் இல்லை. திருச்சபை மூலமா இரண்டு லட்ச ரூபா கடனுதவி ஏஜென்ட்கிட்ட கொடுத்து, துபாய்க்கு விசிட் விசா மூலமா போக வச்சாங்க. விசிட் விசா மூலமாக துபாய் வந்து, துபாயில இருக்கிற பல கம்பெனிகளுக்கு, ஏஜென்ட் கூட்டிட்டு போவான்.

அந்த கம்பெனிகள் ஏஜென்ட் கூட்டிட்டு வர ஆட்களை இண்டெர்வியூ மூலமா தேர்வு செய்வாங்க. எப்படியும் 10 க்கு மேல கம்பெனி ஏறி இறங்குற மாதிரி இருக்கும். சிலர் வெளிநாட்டு வாழ்க்கை ஆசையில் வந்தவர்கள், இந்த விஷயம் ஒத்துவராமல் திரும்ப டிக்கெட் போட சொல்லி இந்தியாவுக்கு கிளம்பி போயிடுவாங்க. ஆனால் சிலர் காத்திருந்து பல கம்பெனி ஏறி இறங்க தயாரா இருப்பாங்க. இதுல எத்தனை நாள் ஆனாலும் துபாய்ல தங்குற செலவு, நம்ம செலவு தான் இருக்கும். ஏஜென்ட் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டான். இப்ப வந்திருக்க 50 பேரும் அப்படிதான் சேர்ந்து கூட்டிட்டு வந்திருந்தான். எல்லாம் வேற வேற ஊரை சேர்ந்த ஆட்கள். அதுல 20 பேருக்கு மேல பயந்துகிட்டு, ஊருக்கே திரும்பி கிளம்பி போய்ட்டாங்க. அவர்களுக்கு கட்டுன பணம் திருப்பி கிடைக்குறதும் சந்தேகம்தான். மீதி இருக்கிற ஆட்கள் எல்லாம் கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சினை, குடும்பத்தை காப்பாத்தணும் என்கிற எண்ணத்தில் வந்தவங்க. அதனால வேற வழி இல்லாம, “ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதும்”ன ஏஜென்ட் சொல்லுற சம்பளத்துக்கும், கம்பெனிக்கும் வேலைக்கு சேர ஆரம்பிச்சாங்க. சிலர் துபாயில் குப்ப அள்ளும் வேலை, ரோடு போடுற வேலை, செக்யூரிட்டி வேலை அப்படின்னு ஏஜெண்ட் மூலமா சேர்ந்தாங்க.அது சம்பளம் குறைவான வேலை. மீதம் இருக்குற ஆளுங்க சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு சேர வந்தாங்க.

அப்படி சூசை சேர்ந்ததுதான் இந்த சூப்பர் மார்க்கெட் வேலை. இதிலேயும் ஏஜென்டு சொன்ன சம்பளம் எதுவுமே இல்லை. வேலை நேரமும் அதிகம். “ஊர்ல ஏஜெண்ட் சொன்னது எல்லாமே பொய்”ன்னு இங்க வந்து தான் சூசை தெரிஞ்சுகிட்டான்.

*

ரூம்ல கட்டில்ல அழுது கொண்டிருந்தான் சூசை. அப்போ லிங்கம் வந்தான்.

“டேய் எப்படிடா இருக்க. உன் மனைவி, குழந்தையெல்லாம் சவுக்கியமா?” என அன்பா கேட்டான் லிங்கம்.

“நல்லா இருக்கேன் ஜோதி,” என கண்ணீர் விட்டான்.

“ஏன்டா அழுகுற”

“நான் தான் வந்து உனக்கிட்ட பேசுனேன். நீ ஒன்னுமே பேசல. ஏன்டா, நம்ம ஊர்ல நாடகம் போட்டப்ப உன்னைய அடிச்ச கோபம்தான் இன்னும் என் கூட பேச மாட்டியா?” என்றான் சூசை.

“டேய் கிறுக்கா, பேசினா திட்டுவாங்க. கெடுபிடியான வேலை. அதனாலதான் பேசல. சரி ஊர்ல இருந்து என்ன சாப்பிட கொண்டு வந்த”ன்னு ஜாலியா கேட்டான் லிங்கம்.

“நம்ம ஊரு முறுக்கு இருக்குடா. நெய் முறுக்கு இருக்கு. கார முறுக்கு இருக்கு,” அப்படின்னு முறுக்கை எடுத்து காமிச்சான். ஏதோ காணாததை கண்ட மாதிரி எடுத்து சாப்பிட ஆரம்பிச்சான் லிங்கம்.

அவன் சாப்பிடுவதை பார்த்தவுடனே சூசைக்கு புரிஞ்சது, எவ்வளவு பஞ்சமா இருக்கணும். நல்ல சாப்பாடு கிடைக்காது போலன்னு தோணுச்சு.

சாப்பிட்டுகிட்டே, “இந்த வேலைக்கு எப்புடி வந்த”ன்னு கேட்டான் லிங்கம்.

ஏஜெண்ட் மூலமா தான் வந்த கதைய வருத்தமா சூசை சொன்னான். “நீ எப்படி”ன்னு கேட்டான்.

“அடப்பாவிகளா! சண்ட போட்டதுக்கு அப்பறம், வேற குழுவுலயும் சேர முடியல. சேர்ந்தாலும் பின் பாட்டுதான் பாடுனேன். மழ இல்ல, விவசாயமும் பண்ண முடியல. ஏதோ காசு பொரட்டி, வெளியூர் கரீம் ஏஜெண்ட்க்கு குடுத்து வேலக்கி கேட்டேன். ஏஜென்ட், “துபாய் வேலை, 40,000 ரூபாய் சம்பளம்”ன்னு சொல்லிதான் என்னையும் கூட்டிட்டு வந்தான். இங்க வந்தா, எந்த ஒரு கம்பெனியும் 25,000 ரூபா சம்பளத்துக்கு மேல தர சம்மதிக்கல. பத்து நாளுக்கு மேல ஆகவும், பயம் வர ஆரம்பிச்சது. வீட்டுக்கு பேச முடியல. கையில காசும் இல்லை. அதனால வேற வழி இல்லாம சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஒத்துகிட்டேன். இங்கேயும் கௌரவமா பொருள் எடுத்துக் கொடுக்கிற வேலை, அதுவும் 40 ஆயிரம் சம்பளம்ன்னு நினைச்சேன்.ஆனா, வெறும் 20 ஆயிரம் சம்பளத்துக்கு தான் ஏஜெண்ட் வேலைக்கு சேர்ந்து விட்டுருக்கான். சாப்பாட்டுக்கு  ஆயிரம் ரூபாய் தனியா கொடுத்துடுறாங்க. நானும் வேற வழி இல்லாம இருக்கேன்.இரண்டு வருடம் ஆக போகுது,” தன் கஷ்டத்தை சொன்னான் லிங்கம்.

“இப்புடி வரவச்சு வேல தராங்க. இதுல கம்பெனிக்கு என்ன லாபம்”

“நம்ம நாட்டுல வந்து வேலைக்கு எடுத்தா உன்னைய துபாய் கூட்டிட்டு வர்ற செலவு எல்லாம் கம்பெனி தான் பார்க்கணும். விசிட் விசாவுல வர வெச்சு கம்மி சம்பளத்துல வேலைக்கு எடுப்பாங்க. அந்த வகையில, ஒரு லட்சம் வரைக்கும் கம்பெனிக்கு லாபம். நீ சரியா வேலை செய்யல, இல்ல கம்பெனிக்காரனுக்கு புடிக்கலன்னா, ஒரு மாசத்துல உன்னைய  அனுப்புவாங்க. அதனாலதான் இப்படி ஏஜென்ட் மூலமா செய்றாங்க”

“சரி… பாக்குற வேலை ரொம்ப கஷ்டமாடா”

“போகப் போக நீயே புரிஞ்சுக்குவ,”அப்படின்னு சொல்லிட்டு, “சரிடா எனக்கு ரொம்ப தூக்கமா வருது. நீ சாப்பிட்டியா?”

“இல்லடா இன்னும் சாப்பிடல”

“சரி, வா என் ரூம்ல குப்புஸ் ரொட்டி இருக்கு தரேன்”

“அப்புடின்னா?”

“நம்மள மாதிரி காசு இல்லாதவங்களுக்கு காசு கம்மியா கிடைக்கிற ரொட்டி.  அத வாங்கி சாப்புட்டு தான் நிறைய நாள் நான் பசிய தீர்த்துருக்கேன்”

“சரி”ன்னு தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை பண்ணிக்கொண்டு இருந்தான் சூசை.

“ஏன்டா, வேலைய நெனச்சு யோசிக்கீறியா?” அப்படின்னு ஜோதிலிங்கம் கேட்டான்.

நிமிர்ந்து பார்த்து, “ஆமா ஊர் நாடக ராஜபாட்டை உனக்கே துடக்கிற வேலன்னா எனக்கு என்ன வேலை கிடைக்கும்ன்னு யோசிச்சேன்,” அப்படின்னு பெருமூச்சு விட்டான் சூசை.

பி. பத்மராஜுவின் “படகின் மேல்” சிறுகதை பற்றி

ஸிந்துஜா

ம்பத்தி நான்கு வருஷங்களுக்குப் பின் பத்மராஜூவை மறுபடியும் சந்திப்பேன் என்று நான் ஒரு பொழுதும் நினைக்கவில்லை. 1967ல் வாசகர் வட்டம் வெளியிட்ட “பாரத நாட்டுப் புதுக்கதைகள்”புத்தகத்தில் பத்மராஜுவின் “பனி மூட்டம்”என்ற கதையைப் படித்துப் பிரமித்தது ஏதோ சமீபத்தில் நடந்தது போல நினைவில் தெளிவாக நிற்கிறது. சமூகம் நிறுவிய மதிப்புகள் கட்டுக்களாக எழுந்து நின்று மனித மனங்களை உணர்வுகளைச்  சீண்டியதைக் காணப் பொறாது எழுந்த எழுத்துக்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க முறையில் தம்மை ஸ்தாபிக்க முயன்ற காலகட்டம் அது என்று நினைக்கிறேன். பத்மராஜுவின்  “பனி மூட்டம்” அந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்து. Jump Cut பாணியை வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் மனதை எவரும் அவ்வளவு லகுவில் படித்து விட முடியாது என்பதைப் பனிமூட்டம் உணர்த்த விரும்பியது என்று அன்று தோன்றியது இப்போது மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் தோன்றுகிறது என்பது படைப்பாளியின் வெற்றியன்றி வேறென்ன? அன்பு காதல் வெறுப்பு கோபம் எல்லாம் வெவ்வேறு வடிவங்களில் ஒருவனை அல்லது ஒருத்தியை மரபுடன் இயைந்து உலகுக்குக் காட்டவே வந்தவை என்னும் பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நிலைப்பாட்டை மறுப்பதில் எழுத்தாளன் இன்பம் காண்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்பும் கதையாக எனக்குப் “பனிமூட்டம்” காட்சியளித்தது.

சமீபத்திய பதாகை இதழில் தி. இரா. மீனாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் பத்மராஜுவின் “படகின் மேல்” மறுபடியும் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை என்று நான் நினைக்கிறேன். கதைசொல்லி படகில் பிரயாணம் செய்கிறவர். அந்தப் படகில் வழியில் ஒரு ஜோடி ஏறிக் கொள்கிறது. அவன் பெயர் பட்டாலு. ரங்கி என்பது அவள் பெயர். ரங்கி எப்படிப்பட்டவள்  என்கிற சித்திரம் இவ்வாறு கதையில் வருகிறது:

பட்டாலு உன் கணவனா?”  நான் கேட்டேன்.

அவன் என்னுடையவன்!பதிலளித்தாள்.

இவள் சிறுமியாக இருக்கும்போதே அவன் மயக்கிவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வேறு ஒரு பெண் இருக்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் ரங்கி?” தொழிலாளி கேட்டார்.

கொவ்வூரில். அவளுக்குச் சின்ன வயது. என்னைப் போல கஷ்டப்பட்டாள், அவள் என்னைவிட மோசமாக இருப்பாள்.”

பின் ஏன் நீ அவனுடன் இருக்கவேண்டும்?” கேட்டேன்.

அவன் என்னுடையவன்எல்லாவற்றையும் விளக்கிவிட்டதைப் போல பதில் சொன்னாள்.

ஆனால் அவனுக்கு இன்னொருத்தி இருக்கிறாளே.”

நான் இல்லாமல் அவனால் என்ன செய்யமுடியும். ஒருவனுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவன் ராஜா. யாரும் அவனைப் போல இருக்க முடியாது. நான் சொல்கிறேன்

இப்படி ஒரு மனநிலை எப்படி ஒரு பெண்ணுக்கு வாய்த்திருக்கிறது என்று ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்  ஏற்படுகிறது. தி.ஜா.வின் அம்மணியின்  மீது அவ்வப்போது என் மேல் இடறி விழும் நம்பகத்தன்மையில்லாமை இங்கு விலகி நிற்கிறது.

ரங்கியை இழுத்துக் கொண்டு பட்டாலு ஓடிப் போன போது அவள்  இளமையும், துடிப்புமாக இருந்தாள். ஒரு நாளிரவு குடிசைக்குள் இவளைப் பூட்டி வைத்துவிட்டு குடிசைக்குத் தீ வைத்து விட்டான். இவள் எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்துவிட்டாள். எதற்காக தீ? ரங்கி சொல்கிறாள்:

இப்போது அவனுடனிருப்பவள். என் படுக்கையிலே அவளைப் படுக்க வைத்து, தானும் படுத்துக் கொண்டான். என் கண் முன்னாலேயே! இருவரும் குடித்திருந்தனர். நான் அவள் மேல் விழுந்து பிராண்டினேன். அவன் குறுக்கே புகுந்து என்னை அடித்துக் காயப்படுத்தினான். நள்ளிரவில் அவளை அழைத்துக் கொண்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் வந்தான். அவனை வீட்டுக்குள் விடாமல் திட்டித் தீர்த்தேன். கதவருகே விழுந்து குழந்தையைப் போல அழுதான். எனக்கு மனமிளகி விட்டது. அருகில் உட்கார்ந்தேன்.என்னைக் கட்டிக் கொண்டு நெக்லஸைத் தரும்படி கேட்டான். எதற்கென்றேன். அவளுக்காகஎன்றான். அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழ முடியாதென்றழுதான். என் கோபத்திற்கு அளவில்லாமல் போனது. அவனை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன். தட்டிப் பார்த்துவிட்டுப் போய்விட்டான். தூங்க முடியாமல் வெகுநேரம் தவித்தேன் ஒரு வழியாக நான் தூங்கிய பிறகு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் குடிசையை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து விட்டான். கதவைத் திறக்க முயற்சித்தேன். இரவு நேரமென்பதால் என் கூச்சல் அக்கம்பக்கத்தவர்களுக்குக் கேட்கவில்லை. மயக்கமானேன். அந்த நிலையில் அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். மறுநாள் போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் இதைச் செய்திருக்க மாட்டானென்று நான் உறுதியாகச் சொன்னேன். அன்று மாலை வந்து மணிக்கணக்கில் அழுதான். சில சமயங்களில், குடித்திருக்கும்போது அப்படித்தான் அழுவான். ஆனால் குடிக்காத போது அவன் மிக வேடிக்கையானவன். நான் நெக்லஸை அவனிடம் கொடுத்து விட்டேன்.”

பத்மராஜுவின் ரங்கியைப் பார்த்து ஏமாளி என்று எரிச்சல் வருவதில்லை. ஏளனமாகப் பார்க்கத் தோன்றுவதில்லை. வெறுப்போ, பரிதாபமோ இல்லை கசப்போ ஏற்படுவதில்லை. அவளது காதல், அவள் காண்பிக்கும் பரிவு, புரிந்து கொள்ளல் எல்லாமும் அவளது பின்னணிக்கு முன்னால் விஸ்வரூபம் எடுக்கின்றன. புத்திசாலித்தனத்தைப் படிப்பாலல்ல மனதால் கூட ஒருவர் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று இந்தப் பெண் நிரூபிக்கிறாள். அவள் தன் இழுபறியான வாழ்க்கையைப் பற்றிய புகார் எதுவுமில்லாமல் நிச்சிந்தையாக நடமாடுவது அவள் மீது மிகுந்த மரியாதையை எழுப்புகிறது.

மூல ஆசிரியரின் கட்டுக்கோப்பான நுட்பமான கதையின் உள்ளடக்கம்  சரளமான தமிழில் வந்திருக்கிறது.

(பின் குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் இதை எழுதுபவரின் உறவினர். பத்மராஜுவின் சிறந்த எழுத்து பற்றி எழுத வேண்டிய உந்துதல் இதைப் பின்னுக்குத் தள்ளி விட்டது)

 

இழப்பின் வரைபடம்- லாரா ஃபெர்கஸ்

பானுமதி ந 

MY SISTER CHAOS-LARA FERGUS (தமிழில் அனிருத்தன் வாசுதேவன், காலச்சுவடு உலக கிளாசிக் நாவல்)

போர், வன்முறை, அழிவு, நாசம், வன்புணர்ச்சி, அகதிகள், புலம் பெயர்தல், காலம் முழுதும் அடையாளம் வெளிப்பட்டுவிடாமல் வாழ்தல் என்பதை இரு கதாபாத்திரங்கள் மூலமாக, உணர்ச்சிகளின் தீவிரத்தைக் குறிப்பால் உணர்த்தி, இசையும், கணிதமுமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது.

எல்லைகளைத் தகர்க்கும் போரில், எல்லைகள் மீளெழுதப்படும் நிலையில் வரைபடங்கள் என்ன சொல்கின்றன? உயர்ந்து வரும் கடல் மட்டங்கள், புவியியல் ரீதியாக நெருக்கவும், பிரிக்கவுமான கண்டங்கள், இயற்கைச் சீற்றமான நில நடுக்கம், இவற்றின் பின்புலத்தில் நாடுகள், எல்லைக்கோடுகள் இவற்றின் பொருளும் தானென்ன? இந்தக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவல் தன் வரைபடத்தைக் காட்டுகிறது. போரில் பொது மக்களை, குறிப்பாகப் பெண்களை அச்சுறுவது யார்- சொந்த நாட்டில் பாதுகாப்புத் தர ஆர்வமுள்ள சர்வ தேசப் படையினரா அல்லது சொந்த நாட்டின் பாதுகாப்பில் ஆர்வமுள்ள தேசியப் படையினரா? துரோகம் என்பதைப் பொறுத்தவரை எப்போது என்பதே கேள்வி. எனவே, அரசியல் சதுரங்கத்தில் நிலைத்த இடம் துரோகத்திற்கு உள்ளது. ஆப்கான் நினைவிற்கு வருகிறதா? இதைப் போன்ற பல்வேறு நாடுகளைச் சுட்ட முடியும்.

இந்த நாவலில் மூன்று பாகங்கள் உள்ளன -1-நிலப்பரப்பு, 2- இசையின் படி நிலைகள், 3- பெருங்குழப்பம்.

இதில் இரு பெண்கதாபாத்திரங்கள், அவர்கள் இரட்டையர், அவர்களின் பெயரோ, அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெயரோ, இப்போது வாழும் நாட்டின் பெயரோ சொல்லப்படவில்லை. கதை முடிவிலி என்ற அம்சத்தைக் கணக்கில் கொண்டு ‘சீனோ முரண்பாடு’ என்ற கோட்பாட்டுச் சிந்தனைகளை தூவிச் செல்கிறது. ‘சீனோ’ என்ன சொல்கிறது? கடக்கும் தொலைவில் சரி பாதி எப்போழுதும் மிஞ்சும். அப்படியென்றால் முடிவிலி தடையாகக் கூடுமா, இல்லையா? கணிதவியலாளர் (இவரும் ஒரு கதாபாத்திரம். கிட்டத்தட்ட நாவலின் இறுதியில் வருகிறார்) சொல்கிறார்: நடுவில் இருக்கும் புள்ளிகளில் சிக்கிக் கொள்ளாமல் நேரடியாக இறுதிப் புள்ளியை அடைய உதவுவதே நடைமுறை.

கதை சொல்லும் இந்தச் சகோதரி, வரைப்படவியலில் தேர்ச்சி பெற்றவர். தான் தற்சமயம் வாழும் நாட்டிற்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொண்டவர். அவர் எவரையுமே ஆழமாக அறிந்து கொள்ள விழையாதவர். அதிலிருந்தே அவர் தனிமையைத் துணையாகப் பற்றியிருப்பது வெளிப்படுகிறது. அவருக்கு, வரைபடத்தில் அடங்க வேண்டுவது விவரங்களா, பரப்பளவா என்ற கேள்வியுடன் எல்லா வரைபடங்களும் பொய்யே இதுவரை என்ற எண்ணமும் இருக்கிறது. வரைபடவியல் ‘காலம்’ என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. அளவெடுக்கும்போது இருக்கும் விஷயங்கள் மட்டுமே அதற்குப் பொருந்தும். அனைத்து வரைபடங்களும் உடனுக்குடனே காலாவதி ஆகி விடும். அலுவலகத்தில், வரைபடப் பணியில் கணினிக்கான சரியான வழிமுறையை எழுதும் துறையில் அவர் இருக்கிறார். தன் வசிப்பிடத்தை ஒரு வரைபடமாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் முக்கிய ஒன்றாக நாவலில் பின்னிப் பிணைந்து வருகிறது. அந்த இருப்பிட வரைபடத்தைத் துல்லியமாக அமைக்கும் ஏக்கமும், அதில் தான் தோல்வியடைந்து கொண்டிருப்பதுவுமான ஒரு உள்ளுணர்வும் இருக்கிறது. அளவுகளை வெறும் அனுமானங்களாகத் தன் சகோதரியின் திடீர் வரவு மாற்றியிருப்பதாக அவர் உணர்கிறார். நாட்டை, வீட்டைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் ஆழ் மன ஏக்கமான உடமை கொள்ளுதலின் பிரதிபலிப்பு தான் இந்த விழைவு. ஆனாலும் அவர் நினைக்கிறார்: “நாம் சொந்தமாக்கிக் கொள்ளும் விஷயங்களில் மிகவும் மோசமானது நிலம்தான். அது நம்மை ஓரிடத்தில் கட்டிப் போட்டு, நாம் இருக்கும் இடத்தை மற்றவர் அறியும்படி செய்து விடுகிறது.” அவர் செய் நேர்த்தியுடன், ஒழுங்கையும் விரும்புபவர். அவர் பார்வையில், தன்னுடன் பிறந்தவளை இவ்வசிப்பிடத்தில் அனுமதிப்பது வீட்டின் அமைதியை, ஒழுங்கை, நறுவிசை குலைப்பது. வந்திருக்கும் சகோதரி அவர் கூடத் தங்க விழைவது அவரைப் பாதிக்கிறது; கால ரீதியாகவோ, இட ரீதியாகவோ அவளது இருப்பை ஒரு வரையறைக்குள் அடக்க இயலாது என்பது தான் சிக்கல். வந்திருப்பவரைப் பற்றி அவர் நினைக்கிறார்: “இவளுக்கு வீடு என்ற ஒன்றுதான் வேண்டியிருக்கிறது; அது அவள் பிறந்து வளர்ந்த குறிப்பிட்ட ஒரு இடத்திற்கான ஏக்கமல்ல; இனி இல்லாது போன இடத்திற்கான ஏக்கம்.”

தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக அவர்கள் தஞ்சம் அடையும் போது அந்த அதிகாரிகள் இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யென்றே நினைக்கிறார்கள்; இவ்விடத்தில் கதை சொல்லி சொல்வதாக ஒரு குளிரும் உண்மை வெளிப்படுகிறது: ‘உண்மை எங்களுக்கு வலுவிழந்ததாகத் தோன்ற ஆரம்பித்தது.’ இறந்தவர்களின் பட்டியலில் இருக்கும் ஒரு முடிவான தகவல், அது தரும் விரக்தி கலந்த ஆஸ்வாஸம், காணாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பதில்லை அல்லவா? நாம் தப்பித்து ஓடக்கூடிய ஒரே இடம் நமக்கு உள்ளேதான் இருக்கிறது. வந்திருக்கும் சகோதரி, தன் காதலியையும், அவளது மகனையும் தேடிக்கொண்டேயிருக்கிறார். ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார். பெற்றுக் கொண்டதற்கேற்ப திரும்பித் தர வேண்டும் என்ற இயற்கை விதியை கேன்வாஸ் அறிந்திருக்கவில்லை. பதிவேட்டைக் களவாடிக் கொண்டு வந்து அந்தப் பெயர்களை ஆராய்கிறார். அவர்களது பெரியம்மா மற்றும் அவரது மகள் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். மற்ற மகள்களின் நிலை தெரியவில்லை. அந்தக் காதலியும், அவரது மகனும் என்னவானார்கள் என்றும். அந்தப் பட்டியலில் எண்கள், உருவக் கோடுகள், எழுத்துக்கள் என ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் சங்கேதக் குறிப்புகள் இருக்கின்றன. ‘உலகளாவிய வரைபடம்’ ஒன்றைச் செய்யும் பணியில் தன் நாட்டில், முன்பு முக்கிய பங்கு ஆற்றிய கதை சொல்லியான வரைபட இயலாளரான பெண், அந்த வரைபடம் அவர்களின் நாட்டிற்கு எதிராகவே, குறிப்பாகக், கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் அடைத்துத் துன்புறுத்தி, கொலைகளும் செய்துவிடும் அமைப்பிற்கு, உதவிகரமாக இருந்திருப்பது தெரிய வருவது எத்தகையதொரு திருப்பம்! பத்து பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த விவரங்கள், அவருடைய விலா எலும்புகளைத் தொட்டுக் கொண்டு ஒரு யூ எஸ் பி எனத் தொங்குகிறது.

வரைபடக் கலையும், இசையுமாக இரண்டாம் பகுதி தொடங்குகிறது. இதிலும், மூன்றாம் பாகத்திலும் அத்தியாய எண்கள் முழு எண்களாகவும் பின்னங்களாகவும் வருகின்றன. உதாரணம் 12.5, 13-15 முழு எண்கள் பின்னர் 15.5, 21.75 போன்றவைகளின் தொடர்ச்சி. அந்த ‘சீனோ’ வின் தத்துவத்தைத் தழுவிக்கொண்டு செல்கிறது இத்தகைய எண்ணிடல். கட்டிடக் கலை இசையாய் எழும்பிப் பறப்பதற்கு முன் முணுமுணுக்கப்படும் ஆரம்ப ஸ்வரங்கள் சுண்ணாம்புப் பூச்சு போன்றவை; புத்தக அலமாரிகளே கீழிறங்கும் சுரத் தொகுதிகள். இசை வேகம் பெறும் இடங்களே சுவர்கள். ஒரு கட்டத்தில் அவர் நினைக்கிறார் “எனக்கிருக்கும் வரைபடப் பிரச்சினை செய்முறை சார்ந்தது அல்ல; உண்மையில் கருவியைச் சார்ந்தது. என் வசம் இருக்கும் மிக மழுங்கிய கருவி நானேதான்.” “செய்முறையில் காட்டும் அதீதத் தீவிரமே பணியைத் தோற்கடிக்கும் என்று முன்னமே அறிந்திருந்தேனா?”

முற்றுப் பெறாத, கச்சிதமற்ற முயற்சிதான் அந்த வரைபடம்; ஆனால் அதில் அழகு இருக்கிறது. ஒரு வேளை சமரசம் என்பது தோல்வியில்லையோ… அது சமாதானமோ?

வந்திருக்கும் சகோதரி வீட்டின் நிலவறையைக் கண்டு பிடிக்கிறார். விதானமும், தரையும், நீள, அகல, உயரங்களும், சாய் கதிர் கோணங்களும், மூலை மடிப்புகளும், தாழ்வாரம் என்று தன் வீட்டின் அத்தனையும் தெரிந்து வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வரைபடவியலாளருக்கு இது பேரிடியாக இருக்கிறது. வீட்டின் வரைபடம் எள்ளி நகையாடுவதைப் போல் இருக்கிறது. தான் காட்ட விரும்பும் பரப்பு பற்றிய முழு பிரக்ஞையற்ற அறியாமையில் வந்துள்ள வரைபடம். அந்த வரைபடத்தையும், தங்க வந்துள்ள அந்த மற்றச் சகோதரி கடத்தி நிலவறைக்குக் கொண்டு சென்று விடுகிறாள். காற்று சற்றும் அசையாமல் நிற்கிறது. இசையின் இரு அளவுகளுக்கு நடுவே வீடு நிற்கிறது. கடந்த காலத்தை எந்த வகை எதார்த்தமாக ஏற்றுக் கொள்வது? அவைகளுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது நம்மிடம்? அப்படியே நாம் ஏற்றுக் கொண்டாலும், அதற்கு கடந்த காலம் இணங்க வேண்டுமே? இரண்டே சாத்தியங்கள் தானே- சரணடை அல்லது தப்பி ஓடு.

சில சிந்தனைகள் நம்மை புரட்டிப் போட்டு விடுகின்றன இந்த நாவலில். ‘அறிவியல் நிபுணர்களாக இருப்பவர்கள் பகுத்தறிவுக்கு முரணாக, பாரபட்சமாக செயல்படுவார்கள் என்று நான் ஒரு நாளும் சந்தேகித்ததில்லை. அவர்கள் வெறுப்பின் தரப்பில் இருப்பார்கள் என்றும் நான் நினைத்ததில்லை.’

கதை சொல்லும் சகோதரிக்கு தன் வரைபடம் வேண்டும்; அவளது சகோதரி அதை மறைத்து வைத்துவிட்டாள் அல்லவா? ஆனால், முன்னவரை வரைபடம் தன்னை நோக்கி உறிஞ்சி இழுக்கும் அந்த அதீதப் பற்று கலந்த துயரம் நம்மையும் பீடிக்கிறது. அவர் ஒரு சமாதானத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.

கணிதவியலாளரின் கணினியைப் பயன் படுத்தி அந்த யூஎஸ்பியிலுள்ள விவரங்களை அவர் வெளிக் கொணர்கிறார். யாருமில்லாத அந்த அறையின் தனிமையில் துணிகரமாக அவற்றைப் பிரதியும் எடுக்கிறார். பிடிபடுகிறார். நிறுவனத்தின் இயக்குனர், உலகளாவிய வரைபடத் திட்டத்தின் செயலாளர், அந்த விசாரணையைப் பார்க்க அழைக்கப்பட்டிருந்த மனித உறவுகள் துறையைச் சார்ந்தவர்களை அவர் நான்கு வியூகங்களில் எதிர் கொள்கிறார். 1. மையத்திற்குக் கொண்டு வா. 2. கட்டமைப்பு {——} வரைதல் 3. வலுவிழக்கவில்லை; வலுவடைந்திருக்கிறது 4. தேவைக்கேற்ப கட்டவிழ். சட்டப்படி வழக்கு தொடர முடியும் என்றும் அதை அவர்கள் தற்போது நினைக்கவில்லை என்றும் விசாரணைக் குழு சொல்லும் போது ‘இதென்ன வெறும் வரைபடம் தானே, அவ்வளவு பெரிய விஷயமா என்ன’ என்று அவர் நினைக்கும் இடத்தில் அவரது மொத்த குணாதிசயங்களும் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.

அவர் தன் வீட்டை உடைக்கிறார். அதன் உட்தன்மை காணப்படாததால் அதைக் கண்டுபிடிக்கும் வேகம் கொள்கிறார். உத்திரங்களை அறுக்கிறார். காரைகளை உதிர்க்கிறார். உள் செங்கற்களைத் தடவி மகிழ்ச்சி அடைகிறார்.

அந்தக் கணிதவியலாளர் இவர்கள் வீட்டு வாசலில் நின்று பலமுறை அழைக்கிறார். முடிவில் ஒரு புதிய யூஎஸ்பி கருவியைத் தருகிறார். அதில் தற்போது இருக்கும் வரைபடம், அதற்கான தரவுகள் இருக்கின்றன. சில உணர்வுகள் என்றுமே மங்குவதில்லை.

‘மல்டிபிள் பர்சனாலிடி டிஸார்டர்’ உள்ள கதா பாத்திரமுமாகவும், ஒருவரே இரட்டையராகப் பிரிந்து கருத்து ரீதியில் வேறுபடுவதாகவும், இருத்தலியல் சிக்கல்கள் அவரவர் வழிகளில் மாறுபட்டுள்ளன என்பதாகவும் கூட இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாவலில் பாத்திரங்களாக, வெய்யில், மழை, ஓசை, இசை, வரைபடக் கருவிகள், ஆக்கும் அழிக்கும் கருவிகள், ஓவியங்கள் என எல்லாமே பயன்படுத்தப்பட்டு கதையின் கனத்தை, செவ்வியல் நோக்கத்தை முன்னேற்றுகின்றன.

‘உன் நினைவுகள்’ என்ற ஆத்மாநாமின் கவிதை நினைவில் வருகிறது.

‘எனினும் நான் உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக்கற்களை சிதறும் ஒளிக்
கற்றைகளை வீசும் விளக்கை
அப்பொழுதேனும் துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள
முடியாது இவ்விதம்
தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின் பரிமாணங்களைச்
செதுக்கிய ஓவியத்திற்குச் செல்வேன்.
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்
உதிர முடியாத காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும் மெல்லிய ஒலியுடன்…..’

ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸின் புகழ் பெற்ற ஒரு பத்திக் கதை “டெல் ரிகோர் என் லெ சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) உறுதிப்படுத்தப்படாத காலத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்பட்ட இது 1: 1 என்ற விகிதத்தில் அதன் பிரதேசத்துடன் ஒத்த ஒரு வரைபடத்தை கற்பனை செய்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால், ஒரு பரந்த காட்சியின் பிரதி, அது பிரதிநிதித்துவப்படுத்தும் நிலத்தின் துல்லியமாக மேலெழுகிறது. இந்தக் காட்டுத்தனமான வரைபடத்தின் வாரிசுகள், “தங்கள் முன்னோடிகளைப் போலவே நிலப்படக்கலை ஆய்வை மிகவும் விரும்பாதவர்கள்”, அதை அவர்கள் நிராகரித்தனர், பயனற்றதாகத் தீர்ப்பளித்தனர், அது அவர்களின் அலட்சியத்தால் பாழடைந்து போனாலும் முழுதுமாகக் காணாமல் போகவில்லை. அந்தப் பைத்தியக்கார சாம்ராஜ்யத்தின் புதர்ச்செடிகளில், “விலங்குகள் மற்றும் பிச்சைக்காரர்கள் வசித்து வந்த” இடங்களில் தன் சிதறுண்ட சிதைவுகளை விட்டுச் சென்றது. புவியியல் என ஒரு காலத்தில் அறியப்பட்ட அறிவின் கிளையின் நினைவூட்டல்களாக இந்தச் சிதைவுத் துகள்கள் நிற்கின்றன: ஒரு நிலத்தைப் போலவே பெரிதானது அந்த வரைபடத்தின் பிற்கால வாழ்க்கை.

ழான் பாட்ரிலார்த் இந்தக் கதையை “உருவகப்படுத்துதலின் மிக அழகான உருவகம்” என்று அழைக்கிறார். அவர் சொல்கிறார், “முன்னேறியுள்ள முதலாளித்துவத்தில் வரைபடம் பிரதேசத்திற்கு முந்தியுள்ளது; உருவகப்படுத்துதல்கள், உண்மையானவற்றை உருவாக்குகின்றன; அல்லது, மாற்றாக, இரண்டிற்கும் இடையிலான ஊக வேறுபாடு மறைந்துவிடுகிறது.” (அவரது கண்ணோட்டத்தில், போர்ஜஸின் வரைபடம் இன்று முதலில் வரும், அதன் பின்னர் உருவாக்கப்பட்ட பொருள் உலகம், அல்லது வரைபடமும் உலகமும் ஒரே இடமாகக் காணப் பெறும் )

அர்ஜென்டினா நாவலாசிரியர் போலா ஒலிக்சராக்கைப் பற்றி N + 1 இதழ் தன் தலையங்கத்தில் சொல்கிறது “சாவேஜ் கோட்பாடுகள் மற்றும் டார்க் கான்ஸ்டலேஷன்ஸ் இரண்டும், இன்றைய வரைபடங்கள் தாங்கள் சித்தரிக்கும் பிரதேசங்களில் தங்களைத் தாங்களே திணிக்க எவ்வளவு வேலை செய்கின்றன என்பதை இவர் காட்டுகிறார்.” வரைபடங்கள் பல எழுத்தாளர்களை ஈர்த்திருப்பது தெரிகிறது.

நாவலாசிரியர் லாரா ஃபெர்கஸ் ஆஸ்திரேலியர். பெண்கள் வாழ்வைப் பற்றிய மேற்படிப்பும், சர்வதேச சட்டங்கள் துறையில் பட்டப்படிப்பும் பெற்றுள்ள இவர் அறிவியல் படிப்பை பாதியில் நிறுத்தி நடனக்கலையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கணுக்கால் பிரச்சினையினால் வேறு துறைகளில் நாட்டம் செலுத்தினார். புலம் பெயரும் பெண்கள், அகதிகளாகும் பெண்கள் ஆகியோருக்கெனச் செயல்படும் அமைப்புகளில் இணைந்து பணியாற்றினார். இது இவருடைய முதல் நாவல். அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.