Author: பதாகை

இருத்தல்- அப்பாடா

மு ராஜாராம்

டீவி-யில் சினிமா காமெடி-
கல்யாண வீடு: ” சாப்பிட்டுவிட்டுப் போங்கள்!
வயிறு சரி இல்லையா? சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டுப் போங்கள்!”

சிரிக்க வேண்டும் போலிருக்கிறது-
ஆனால் சுற்றிலும் நண்பர்கள்-
இன்டலக்சுவலான அவர்களின் நடுவில்
அத்தனை இன்டலக்சுவலாய் இல்லாத இந்தக் காமெடிக்கு
சிரிப்பது உசிதமாய் இருக்குமா?
(அந்தச் சிந்தனையில் அத்தனை அடுக்குகள் இல்லை, இல்லையா?)
சிரித்தால் மதிப்பு குறையுமா- அவர்கள் என்ன நினைப்பார்கள்?
இப்படியெல்லாம் எண்ணங்கள்- சிரிக்க வேண்டிய கணமோ
மெல்ல நழுவி விடுகிறது (மைண்ட் வாய்ஸ்: “த moment இஸ் gone!”)

சட்டென மின்னலாய் வெட்டும்
இருத்தலியல் (ஆஹா, வெற்றி, வெற்றி!) கருத்து

(நகுலனும் கூட நடந்து வருகிறார் ஒரு கட்டு வெற்றிலையும், புகையிலையும்,
சிகரெட்டும், வாய் கழுவ ஒரு செம்பில் தண்ணீரும் எடுத்துக்கொண்டு
தன் நண்பருடன் பேசிக்கொண்டே- இந்தச் சாவிலும்
ஒரு சுகம் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு- இருப்பதற்கென்று தான்
வருகிறோமோ?)

அடுத்த சில கணங்களை- காம்யூவும்
உச்சரிப்புக்கு சரியாய் எழுத முடியாத பெயர் கொண்டதால் ‘ழ’வுடன்
எழுதப்படும் ழான் பால் சார்த்ருவும் சிமோன் து பூவோவும்
(ஃப்ரெஞ்சுப் பெயர்களை இன்டலக்சுவல் வட்டங்களில்
சரியாய் உச்சரிப்பது ரொம்ப முக்கியம் அமைச்சரே!)
புரிந்தும் புரியாமலும் உருப்போட்ட செகண்ட்-ஹேண்ட் கருத்துக்களும்
புரிந்து கொண்ட பாவனைகளுடன் இருத்தலியக் கொட்டேஷன்களும்
நிரப்புகின்றன- அடடா! எவ்வளவு இன்டலக்சுவல் களையெடுப்பும்
ஆணி புடுங்கலும் கழிவு வெளியேற்றமும்!
எல்லோருக்கும் நிறைவாய் இருக்கிறது!

அதே சினிமா காமெடி
“எல்லோரும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்கள்!
மனமோ வயிறோ சரியில்லையா?
இருத்தலியலை நினைவில் கொள்ளுங்கள்-
சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டுப் போங்கள்!”

இப்போது இது இருத்தலியலுடன் இணைந்து (அட, இகர மோனை!
இந்த இகர முதல் வார்த்தைகள் நகுலனுக்கு உவகை ஊட்டுமா?)
வேறுவிதமாக, பொருள்-கனம் மிகுந்ததாய் தோன்றுகிறது

இன்டலக்சுவல் வட்டத்தில் இப்போது சிரிப்பு.

அப்பாடா!

பறவையோடு ஓரிரவு

ம. இராமச்சந்திரன்

மெளனத்தின் பேரொலியில் நனைந்து
மெளனித்து உறங்கும் இரவு

வாசல் கதவின் கயிற்று முடிச்சில்
கூடொன்று கட்டிய பறவை

அழையாத விருந்தாளியென மகிழ்வின்
உச்சத்தில் அனைவரும்

உச்சபட்ச பிரக்ஞையோடு அனைவரும்
ஓசை எழுப்ப உள்ளம் அஞ்சி
பறவையோடு பொழுதுகள் சில

மாலை மறைந்து இரவின் வருகையில்
முட்டையோடு கூட்டில் பறவை
ஓசையின் பேரொலியில் தடுமாறி
வீட்டின் உள்ளறையில் வந்தமர்ந்தது.

பயத்தின் பரபரப்பும் இரவின் தவிப்பும்
அதனை அலைக்கழித்தன.

சுற்றிய திசைகளில் தடுமாறிய
நெஞ்சங்களாக நாங்கள்

மின் விசிறி அணைத்துக் கதவுகள் திறந்து
பறவையோடு பேசிப் பழகினோம்.

சமாதானம் இருந்தாலும் கவனிப்பின் விசை குறையவில்லை

இயல்பானோம் நாங்கள் எங்களோடு அதுவும் இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது நிறுத்திய மின் விசிறியில்

பறவையோடு இரவுத் தூக்கம்
உள்ளுக்குள் ஆதி கனவு எங்களோடு
உறங்கப்போனது அதுவும்.

கண்மூட மனமில்லை இந்த இரவின்
அதிசய தருணங்களை இழந்துவிட
இப்படியொரு சூழல் மீண்டும்
ஒருமுறை வாய்க்காமல் போகலாம்.

பறவையோடு கதை பேச அழைக்கிறது மனம்
என்னோடு பேச அதற்கும் ஏதாவது
இருக்கத்தான் செய்யும்

இதோ
வாசல் திறந்து சூரியனை
வரவேற்க தூங்காமல் காத்திருக்கிறேன்
இதனை இணையோடு சேர்த்து வைக்க.

எங்கோ அருகில் விடியலுக்காய்
காத்திருக்கும் இணையின் தவிப்பும்
விடியலின் வரவுக்காய் மௌனித்திருக்கும் உனது தவிப்பும்

என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது
வாழ்தலின் இருப்பும் அன்பின் அதிர்வும்

உன்னோடு கழித்த இவ்விரவு
என்றும் உன்மத்தமாகி என்னை
உறைய வைக்கும் உன்னதத்தில்!

 

அறை எண் 103

ப மதியழகன் 

லிஃப்ட் 24ஆவது தளத்துக்கு
என்னை அழைத்துச்
சென்று கொண்டிருந்தது
நான் பதட்டப்படுவதற்கு
காரணமிருக்கிறது
நான் தேடி அலைந்து
கொண்டிருந்த கடவுள்
அறை எண் 103ல் இருப்பதாக
இன்று காலை எனக்கு
தகவல் கிடைத்தது
முதல் முறையாக கடவுளைச்
சந்திக்கப் போகிறேன்
எப்படி முகமன் கூறுவது
யாரைப் பற்றி விசாரிப்பது
எந்த கேள்வியை
முதலில் கேட்பது என
தடுமாறிக் கொண்டிருந்தேன்
பதட்டத்தில் ஏ.சி இருந்தும்
வியர்த்துக் கொட்டியது
லிஃப்ட் 10ஆவது தளத்தைக்
கடந்து கொண்டிருந்தது
பல பிறவிகளாக தேடியவரை
இப்போது கண்டுகொள்ளப்
போகிறேன்
லிஃப்ட் 24ஆவது தளத்தை
அடைந்தது
கதவு திறந்து கொண்டது
வெளியே வந்தேன்
அறை எண் கண்டுபிடித்து
அழைப்பு மணியை
அழுத்த கையை தூக்கினேன்
திடீரென ஒரு பொறி தட்டியது
கடவுளைக் கண்டவுடன்
வாழ்வு உப்புசப்பில்லாமல்
போய்விட்டால் என்ன செய்வது
தினமும் நான் சந்திக்கும்
நபர்களில் பத்தோடு பதினொன்றாக
ஞாபக அடுக்குகளிலிருந்து
அவரும் மறக்கப்பட்டு
போவாரானால்
நான் ஏற்கனவே உருவாக்கி
வைத்திருக்கும் கடவுளின் பிம்பம்
அவரைப் பார்த்தவுடன்
உடைந்து சுக்குநூறானால்
அழைப்பு மணியை அழுத்தாமல்
பின்வாங்கினேன்
என்னை நானே
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
படிகள் வழியாக
கீழே இறங்கினேன்
இனி கிளைகள் வழியாக
துழாவுவதும்
வேர்கள் வழியாக தேடுவதும்
என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்

வலி

ஸிந்துஜா

காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே முதுகு வலி தன் கைவரிசையைக் காட்டத் துவங்கி விட்டது. அன்றையக் காப்பி, சமையல் கடையைக் கவனிக்க வேண்டுமே என்று குஞ்சாலி எழுந்து விட்டாள். கொதிக்கும் நீரை முதுகில் விட்டுக் கொண்டு குளித்தது இதமாக இருந்தது. இன்று டாக்டரிடம் போக வேண்டும். மூன்று மாதமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏதோ மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குப் போவது போல டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமைதான் சந்திரசேகரனுக்கு வார விடுமுறையாதலால் அவரே குஞ்சாலியைக் கூட்டிக் கொண்டு போய் வருவது சிரமமில்லாதிருந்தது. ஆனால் இந்த வெள்ளிக்கிழமையன்று டாக்டருடைய மாப்பிள்ளை திருச்சியில் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்ததால் அவர் ஊரில் இருக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லியிருந்தார்.

சந்திரசேகரன் அவள் முகத்தைப் பார்த்து விட்டு டாக்டரிடம் அவள் போவதை ஒத்திப் போட்டு விடலாம் என்றார். “இன்னிக்கி ஷாக் ட்ரீட்மெண்ட் வேறே கொடுத்துப் பாக்கலாம்னு சொன்னாரே. நானும் கூட இருந்தாத்தானே சரியா இருக்கும்” என்றார் குஞ்சாலியிடம்.

“அதெல்லாம் வேண்டாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன். ஒவ்வொரு நாளும் இந்த முதுகே இல்லாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்னு வெறுப்பா இருக்கு” என்றாள் குஞ்சாலி. “நீங்க ஆபீசுக்குப் போங்கோ. நான் சீமாவை அழைச்சசிண்டு போயிட்டு வரேன்.”

“சே, குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றார் சந்திரசேகரன்.

பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சீமா “ஏன் தெரியாது? பத்தொம் போதாம் நம்பர் பஸ்ஸிலே ஏறி சின்னக்கடைத் தெருவிலே இறங்கி டாக்டரோட கிளினிக்குக்கு கூட்டிண்டு போறது என்ன பிரமாதம். அப்பா! நான் இப்ப ஏழாவது படிக்கிறேன்” என்றான்.

குஞ்சாலி “ஆமாண்டா என் ஆம்பிளை சிங்கம்” என்று சீமாவைப் பார்த்துச் சிரித்தாள்.பிறகு சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள். குனிந்து வேலை செய்யும் போது வலி ஜாஸ்தியாகத்தான் இருந்தது. குனிந்து நிமிராமல் சமையக்கட்டில் வேலை செய்யும் நிபுணத்துவத்தை ஏன் யாரும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை?

அவர்கள் இருவருக்கும் தோசை வார்த்தாள். சந்திரசேகரனுக்கு டிபன் செட்டில் சாப்பாடு வைத்துக் கொடுத்ததும் அவர் கிளம்பிச் சென்றார். குஞ்சாலி சீமாவிடம் “நான் சித்தே ஊஞ்சல்லே படுத்துக்கறேன். பதினோரு மணிக்குத்தானே வரச் சொல்லியிருக்கார். நாம் பத்து பத்தேகாலுக்குக் கிளம்பினா சரியா இருக்கும்” என்று சொல்லி விட்டுக் கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலை நோக்கிச் சென்றாள். சீமா ஊஞ்சல் மேலிருந்த தினமணியையும் அம்புலிமாமாவையும் எடுத்துக் கொண்டு திண்ணைக்குப் போனான்.

பத்து மணிக்கு “அம்மா!” என்று கத்திக் கொண்டே சீமா வாசலிலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தான். குஞ்சாலி தரையில் உட்கார்ந்து கூடத்துச் சுவரில் சாய்ந்திருந்தாள். அவள் முகம் வேதனையில் சுருண்டிருந்தது. சிறு முனகல்கள் அவளிடமிருந்து வெளிப்பட்டன.

“ரொம்ப வலிக்கிறதாம்மா?” என்று சீமா அவள் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.அவன் கண்கள் கூடத்துச் சுவரின் மேலே தொங்கிக் கொண்டிருந்த அனுமார் படத்தை இறைஞ்சலுடன் பார்த்தன.

“ஆமா. என்னமோ தெரியலே. இன்னிக்கிக் கொஞ்சம் வலி ஜாஸ்தியாத்தான் இருக்கு. நீ எதுக்குக் கத்திண்டே உள்ளே வந்தே?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“பத்தொம்போது பைக்காராவுக்குப் போயிண்டிருக்கு. அவன் போயிட்டு அஞ்சு நிமிஷத்திலே வந்துடுவான். அதான் நீ கிளம்பறையா?” என்றான் சீமா.

“அது வரதுக்குப் பத்து நிமிஷம் ஆகும் போ” என்றாள் குஞ்சாலி. “நான் புடவை மாத்திண்டு வரேன்” என்று உள்ளேயிருந்த அறைக்குச் சென்றாள்.

‘சோமசுந்தரம் செட்டியார் நகை மாளிகை’ என்று அச்சாகியிருந்தஅம்மாவின் மஞ்சள் பையை சீமா கையில் எடுத்துக் கொண்டான். போன தீபாவளிக்கு அப்பாவின் தடிமனான கழுத்துச் சங்கிலியை அழித்து மூக்குத்தியும் தோடுகளும் செட்டியார் கடைக்குப் போய்ப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அப்போது கடையில் கொடுத்த பை அது. மூன்று மாசத்துக்கு முன்னால் வரை அது புதுக்கருக்கு அழியாமல்தான் இருந்தது. அம்மா அதைக் காட்ரெஜ் பீரோவுக்குள் வைத்திருந்தாள். எந்தப் புதுசு வந்தாலும் அதை அவள் அங்கே ஜாக்கிரதை பண்ணி வைத்திருப்பாள். தங்கம், வெள்ளிக்குக் கிடைக்கும் மரியாதை துணிப்பைக்கும் புதுக் கர்சீப்புக்கும் வளையல்களுக்கும் கிடைக்கும், ஆனால் வாரா வாரம் டாக்டரிடம் போக ஆரம்பித்த பின்னால் நோயைப் போல மஞ்சள் பையும் கூட ஒட்டிக் கொண்டு வந்தது. பணம் வைத்துக் கொள்ளும் சுருக்குப்பை, டாக்டர் சீட்டுக்களும் மருந்து பைல்களும் அடங்கிய சின்ன ஃபைல், டாக்டரிடமிருந்து திரும்பி பஸ்ஸில் வரும் போது வயிற்றைப் புரட்டினால் வாயில் போட்டுக் கொள்ளவென்று இரண்டு அசோகா பாக்குப் பொட்டலம், அப்பா ஆபிசிலிருந்து ஒரு தடவை கொண்டு வந்த ரைட்டர் பேனா என்று உள்ளடக்கிய பையின் மீது ஊரழுக்கும், கை வேர்வையும் படர்ந்து திட்டுத்திட்டாகக் கறுப்பு பரவியிருந்தது.

அவர்கள் இருவரும் வாசலுக்கு வந்த போது பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காவேரி மாமி “இந்த வெய்யில்லே எங்கே கிளம்பிட்டேள்? கறிகாய் மார்க்கெட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.

“ஆமா. எனக்கு டாக்டர் வீடுதான் கறிகாய் மார்க்கெட்டு” என்று சிரித்தாள். வெய்யில் உக்கிரமாகத்தான் இருந்தது. தலையைத் தூக்கி மேலே வானத்தைப் பார்த்தாள். சூடான தோசைக்கல் வானில் பளபளத்துக் கொண்டிருந்ததின் எதிரொலியில் ஊர் புழுங்கித் தவித்தது.

“இன்னிக்கி ஞாயத்திக்கிழமைன்னா?” என்றாள் காவேரி.

“ஆமா. வெள்ளிக்கிழமை போகலே. அதனாலே இன்னிக்கிவரச் சொன்னார்னு இப்ப போயிண்டிருக்கேன்.”

“சமையல்லாம்? நான் வேணா குழம்பு கறி ஏதாவது பண்ணி வைக்கட்டா?”

“அதெல்லாம் காலம்பறவே சீக்கிரம் எழுந்து பண்ணிட்டேன். அதான் முதுகைப் பிடிச்சு இழுக்கறது” என்றாள் குஞ்சாலி.

“அம்மா, பஸ் வரது” என்றான் சீமா.

அவர்கள் இருவரும் வீட்டு வாசலின் முன் இருந்த ஸ்டாப்பில் வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டார்கள். அம்மா கடைசி வரிசையில் இருந்த பெண்களுக்கான இருக்கையில் காலியாக இருந்த ஒற்றை சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். உள்ளே உட்கார இடமில்லாமல் ஆண்கள் வாரைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். சீமா தனக்கு முன்னால் நின்ற ஒல்லியான ஆளின் பின் பக்கம் நின்றான். கண்டக்டர் சீமாவை நெருங்கிய போது “சின்னக்கடை ரெண்டு” என்று சொல்லி டிக்கட் வாங்கிக் கொண்டான்.

சீமாவுக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் “வேலு! எதுக்கு இன்னிக்கு ஞாயத்துக் கெளமை இப்பிடி ஒரு கூட்டம் வண்டியிலே?” என்று ஒல்லி ஆளிடம் கேட்டார்.

“இன்னிக்கி எம்சியாரு வாராரில்லே. அதுக்குத்தான். எந்த முக்கு திரும்பினாலும் சனக் கூட்டம்தான்” என்று சிரித்தான் வேலு

“அடக் கெரகமே! அவுரு சினிமாலே வரவருதானே? அவருக்கா இம்புட்டுக் கூட்டம்?”

“ஆமா. லச்சம் பேரு வருவாங்கன்னு தினத்தந்திலே போட்டுருக்காங்கே. தமுக்கத்திலே இல்லே கூட்டம்? அதுக்கு மேலேயும் கூட எக்கும் பெரியப்பா” என்றான் வேலு.

“ஓரு லட்சமா? அளகரு ஆத்துலே எறங்கறே அன்னிக்கிக் கூட இம்மாஞ் சனம் வராதேடா?” என்றார் பெரியவர்.

அவருக்குப் பக்கத்தில் இருந்த நாமக்காரர் “இப்பல்லாம் அழகரை விட அரிதாரத்துக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி!” என்றார் சிரித்துக் கொண்டே,

பெரியவர் மறுபடியும் “வேலு!எதுக்குடா இப்ப இதெல்லாம்?” என்று கேட்டார்.

“நாடோடி மன்னன் சினிமா ஓடிக்கிட்டு இருக்கில்லே? அதுக்கு விளா எடுக்கறாங்களாம். இந்த வண்டியிலே முக்காவாசிப் பேரு அங்க போறவங்கதான்.”

பஸ்ஸிலிருந்து யாரும் இறங்காததாலும் பயணிகள் நின்று செல்ல வேண்டிய நிலைமைக்கு வண்டி வந்து விட்டதாலும் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், நந்தவனம், சுப்பிரமணியபுரம் என்று ஒரு நிறுத்தத்திலும் நிற்காமல் பஸ் ஓடிற்று. வழக்கமான நேரத்துக்குச் சற்று முன்பே சின்னக்கடை ஸ்டாப் வந்ததும் சீமாவும் குஞ்சாலியும் இறங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் சற்று முன் சென்று இடது பக்கம் சென்ற திண்டுக்கல் ரோடில்
திரும்பி நடந்தார்கள்.

“இன்னிக்கி பஸ்ஸிலே கூட்டம் இருக்காதுன்னு நினைச்சிண்டு வந்தா அப்பிடி ஒரு கூட்டம். சினிமாக்காரான்னா எம்கேடி காலத்திலேர்ந்தே ஜனங்களுக்கு அப்படி ஒரு ஆகர்ஷணம் . நீதான் பாவம், வழி பூரா பஸ்ஸிலே நின்னுண்டே வந்தே” என்றாள் குஞ்சாலி.

“நல்ல வேளையா உனக்கு உக்கார இடம் கிடைச்சதே” என்று சீமா சிரித்தான்.

ராஜா பார்லியிலிருந்து பிஸ்கட் வாசனை காற்றில் மிதந்து வந்தது. அந்தக் கடைக்குச் சற்றுத் தள்ளியிருந்த இடது பக்கத்துத் தெருவில் நுழைந்து சென்றார்கள். டாக்டரின் கிளினிக் முன்பு அவரது ஆஸ்டின் கார் நின்றிருந்தது. வாசலில் டாக்டர் சாமிநாதன் எம்பிபிஎஸ் என்று போர்டு தொங்கிற்று. பெயரிலும் பட்டத்திலும் இருந்த புள்ளிகள் காலத்தின் இரையாக உயிரை விட்டிருந்தன. சீமாவின் அப்பாவுக்கு டாக்டரை வெகு காலமாகத் தெரியும்.

அவர்கள் உள்ளே போன போது வேறு யாரும் இல்லை. டாக்டரின் அறை வாசல் திறந்திருந்தது. குஞ்சாலியைப் பார்த்ததும் “வாங்கோ” என்றார். இருவரும் அவருக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“இன்னிக்கி சந்துருவுக்கு ஆபீஸோ? அதான் இந்தப் பெரிய மனுஷன் உங்களை அழைச்சுண்டு வந்திருக்கானா? என்று சீமாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைச் சிந்தினார்.

“வலி எப்படி இருக்கு முன்னைக்கு?” என்று கேட்டார்.

“அப்படியே தண்டு வடத்தைப் பிச்சு எடுத்து வீசியெறிஞ்சிட மாட்டமான்னு இருக்கு டாக்டர். ராத்திரியிலேதான் வலி பொறுத்துக்க முடியாம போறது.”

“சந்துரு வந்திருந்தா நன்னாயிருந்திருக்கும்” என்றார் டாக்டர்.

“ஏன் டாக்டர்?” என்று குஞ்சாலி கேட்டாள்.

“மூணு மாசமா இங்கே நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்கேள். முதுகு வலி அப்படி ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியலையே. மருந்தும் மாத்திரையும் சொல்றதை இந்த வலி கேக்க மாட்டேங்கறதேன்னுதான் சந்துரு கிட்டே சொன்னேன் எலெக்ட்ரிக் ஷாக் வேணா கொடுத்துப் பார்க்கலாம்னு” என்றார் டாக்டர் யோசனையுடன்.

“அதுக்கென்ன, கொடுக்க வேண்டியதுதானே?”

டாக்டர் அவளை வியப்புடன் பார்த்தார்.

“என்கிட்டேயும் அவர் சொன்னார். இன்னிக்கி மனசில்லாமதான் ஆபீசுக்குப் போனார். நான்தான் சொன்னேன். இது என்ன பிரமாதம், குணமாகணும்னா டாக்டர் சொல்றதை செஞ்சுதானே ஆகணும்; வழவழன்னு இதமா வெண்ணையைத் தடவி ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த வலி அடங்கும்னா டாக்டர் அதை நமக்கு மொதல்லேயே பண்ணிடுவாரேன்னேன்.”

டாக்டர் இன்னும் வியப்புத் தாளாமல் கண்ணகல அவளைச் சில வினாடிகள் பார்த்தார்.

“உங்கம்மாவுக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி” என்றார் சீமாவிடம் . “அப்ப
இன்னிக்கி ட்ரீட்மெண்ட் ஆரமிச்சிடலாமா?” என்று குஞ்சாலியிடம் கேட்டார். அவள் சரியென்று தலையசைத்தாள்.

“நான் இப்ப மயக்க மருந்து கொடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கறேன். ஷாக் கொடுத்து முடிஞ்சதும் ரொம்பவே வலிக்கும். அதனாலே இங்கேயே ஒரு மணி நேரம் படுத்துண்டு ரெஸ்ட்லே இருங்கோ. ஆத்துக்குப் போய் சாப்பிட்டதுக்கு அப்புறம் இப்ப நான் தர்ற மாத்திரையை சாப்பிடுங்கோ. ஒரு சார்ட் தரேன். பகல்லே ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை வலி எப்படி இருக்கு? குறைஞ்சிண்டு வரதா, இல்லே அப்படியே இருக்கா, இல்லே முன்னை விட ஜாஸ்தியா ஆயிண்டு வரதான்னு நோட் பண்ணி வச்சுண்டு அடுத்த தடவை வரப்போ கொண்டு வந்து காமியுங்கோ. ஒரு வாரத்துக்கு மாத்திரை தரேன். ஒண்ணையும் வெளியே போய் வாங்க வேண்டாம். முடிஞ்ச வரை ஆத்து வேலைகளைக் குறைச்சுக்கப் பாக்கணும். இது உங்களுக்குக் கஷ்டமான காரியந்தான். வேறே வழியில்லே. வாரத்திலே ரெண்டு நாள்னு அடுத்த மூணு வாரத்துக்கு வரணும். செவ்வாயும் வெள்ளியுமா வச்சுக்கோங்கோ” என்று சொல்லி விட்டு சீமாவைப் பார்த்தார். பிறகு தன் மேஜை டிராயரைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து “படிச்சிண்டிரு. இன்டரெஸ்டிங்கா இருக்கும்” என்று அவன் கையில் கொடுத்தார். மெதுவாகக் குஞ்சாலியை அவர் அடுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

சீமாவுக்கு இனம் தெரியாத பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு கெடுதலும் நேரக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். அம்மா எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதை நினைத்துக் கொண்டான். டாக்டரை ‘எமகாதகன்’ என்று அவனுடைய அப்பா செல்லமாகத் திட்டுவதை அவன் பலமுறை வீட்டில் கேட்டிருக்கிறான். நிதானமும் திறமையும் உடைய டாக்டர் என மதுரையில் பெயர் எடுத்தவர் என்றும் அப்பா சொல்லியிருக்கிறார். சீமா உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். சிகப்பும், நீலமும் வெள்ளையுமாய் மூளை, முதுகுத் தண்டுவடம், இருதயம், கால்கள் கைகள் என்று கோட்டுப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

டாக்டர் கொடுத்த துப்பறியும் நாவலை எடுத்துப் பார்த்தான். அதை எழுதியவருடைய மற்ற துப்பறியும் நாவல்களையும் அவன் விரும்பிப் படித்திருக்கிறான். அதில் துப்பறிவாளரின் உதவியாளனாக வரும் கத்தரிக்காயை சீமாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் பேசுவது செய்வது நடந்து கொள்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கும். அந்தத் துப்பறிவாளரைப் போலவே தானும் ஒரு நாளைக்குப் ஏழெட்டுத் தடவை டீ குடிக்க வேண்டும் என்று சீமா ஒரு நாள் சொன்ன போது குஞ்சாலி “ஏண்டா, கீழ்ப்பாக்கத்துலேதான் அவாம் இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு போய் விட்டுட்டா தினம் ஏழெட்டு டீ உனக்கும் கிடைக்கும்” என்று சிரித்தாள்.

கையிலிருந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததும் அதன் சுவாரஸ்யத்தில் சீமா தன்னை இழந்து விட்டான். “அவ்வளவு நன்னாவா இருக்கு புஸ்தகம்?” என்று குரல் கேட்டு சீமா தலை நிமிர்ந்தான். டாக்டர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அவன் வெட்கத்துடன் புத்தகத்தை மூடினான். “வேணும்னா நீ இதை ஆத்துக்கு எடுத்துண்டு போய்ப் படி” என்றார்.

சீமா உள்ளே இருந்த அறையைப் பார்த்தான்.

“பத்து நிமிஷம் கழிச்சு அவ முழிச்சுப்பா. அப்ப நீ போய்ப் பாரு. அப்புறம் அரை மணி கழிச்சு நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குக் கிளம்பினாப் போறும்” என்றார். சீமா சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பதினொன்றே முக்கால்.

பத்து நிமிஷம் கழிந்த பின் சீமா உள்ளே சென்றான். கண்களை மூடிப் படுத்திருந்த குஞ்சாலி அவன் வரும் சத்தம் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். முகத்தில் அயர்ச்சி படிந்திருந்தது. அவனைப் பார்த்ததும் புன்னகை செய்ய முயன்றாள். சீமா அவளருகே சென்று “எப்படி இருக்கும்மா?”என்று நடுங்கும் குரலில் கேட்டான். அவள் அவன் கையைப் பிடித்து ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.

“ரொம்ப வலிக்கறதுடா” என்றாள் ஈனஸ்வரத்தில். உடம்பு புரண்டு நெளிந்தது. “அம்மா, அம்மா” என்று வாய்விட்டு அழுதாள். சீமாவுக்கு என்னசெய்வதென்று
தெரியவில்லை. “நான் போய் டாக்டரை அழைச்சுண்டு வரேன்” என்று திரும்பினான்.

“அவர்தான் நன்னா வலிக்கும்னு சொல்லியிருக்காரே. நான்தான் பொறுத்துக்கணும். ஆனா, அம்மா, முடியலையே” என்று இரு கால்களையும் ஒட்டி முறுக்கிக் கொண்டாள்.

“நா முதுகைப் பிடிச்சி விடட்டுமாம்மா?” என்று கேட்டான் சீமா.

அவள் “நீ பாவம்டா” என்று ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவன் கையைத் தன் முதுகின் அருகில் எடுத்துச் சென்றாள்.

“இரும்மா. நான் அந்தப் பக்கம் வந்துக்கறேன்” என்று சொல்லி விட்டு அவன் கட்டிலைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் சென்றான். இப்போது அவன் குஞ்சாலியின் முதுகைப் பார்த்தபடி நிற்க முடிந்தது. போர்வையை நீக்கி விட்டு இரண்டு கைகளாலும் அவள் முதுகை அமுக்கி விட்டான்.

“மெள்ள, மெள்ள, ரொம்ப அமுக்கினா அதுவே வலிக்கறது” என்றாள் குஞ்சாலி.

ஐந்து நிமிஷம் போயிருக்கும்.

“போறும்டா கண்ணா” என்றாள் குஞ்சாலி. சீமா கேட்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரைக்கும் தன் கைகளால் மெதுவாக அமுக்கி விட்டான்.

“அப்பாடா, எவ்வளவு இதமா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. சற்றுக் கழித்து “சரி, போறும். நிறுத்திக்கோ. அப்புறம் உனக்குக் கை வலிக்கும்” என்றாள்.

அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் மேலும் அவளது முதுகுப்புறத்தை அமுக்கி விட்டான்.

அவன் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று குஞ்சாலி முதுகைத் திருப்பி நேராக விட்டத்தைப் பார்த்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு “மணி என்ன?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு. பன்னெண்டேகால் இருக்கும்.”

“இப்ப கிளம்பினாலே ஆத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி ஆயிடுமே”என்றாள்.

“இன்னும் அரை மணி கழிச்சு டாக்டர் போகச் சொன்னார்” என்றான் சீமா.

“உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்டாள் குஞ்சாலி.

“இல்லே. இப்போ வயத்திலே பயம்தான் இருக்கு” என்றான் சீமா.

“சீ அசடே, இதுக்கென்ன பயம் வேண்டிக் கிடக்கு? உங்கப்பா சொன்னதும் சரிதான். சின்னப் பசங்களைக் கூட்டிண்டு வரக் கூடாதுதான். டாக்டர் எதோ புஸ்தகம் கொடுத்தாரே. என்ன புஸ்தகம்?”

அவன் சொன்னான். “ஓ, உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே. சரி அதை வச்சுண்டு வெளியே போய் உக்காரு. அரை மணி கழிச்சு நாம கிளம்பலாம்” என்றாள் குஞ்சாலி.

சீமா மறுபடியும் வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு கத்தரிக்காயை ருசிக்க ஆரம்பித்தான்.

குஞ்சாலியும் சீமாவும் கிளினிக்கை விட்டுக் கிளம்பும் போது பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது.

“அம்மா. நாம ரிக் ஷாலேயே போயிடலாம். நீ ரொம்ப டயர்டா இருக்கியே!” என்றான் சீமா.

“மனுஷனை மனுஷன் இழுத்துண்டு போறதுலையா? வேண்டாம். வேண்டாம். நாம பஸ்லேயே போலாம். உடம்பு அப்படி ஒண்ணும் உருகிப் போயிடாது.”

ராஜா பார்லியைக் கடக்கும் போது குஞ்சாலி அவனிடம் “ஒரு கேக் வாங்கிக்கோடா. கார்த்தாலே எட்டு மணிக்கு மூணு தோசை சாப்பிட்டது” என்று கடை வாசலில் நின்றாள். அவனுக்கு ஒரு சாக்லேட் கேக் வாங்கிக் கொடுத்தாள். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான். பஸ் ஸ்டாப்பை நெருங்கும் சமயம் அப்போது வந்த பத்தொன்பதாம் நம்பர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் அவர்களைக் கடந்து சென்றது. சீமா குஞ்சாலியிடம் “ஒரே கூட்டமா இருக்கேம்மா பஸ்ஸிலே இப்பக் கூட” என்றான்.

“அடுத்த பஸ் வர இன்னும் காமண்னேரம் ஆகும்” என்றாள் குஞ்சாலி
சலிப்புடன். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“இங்கே கொஞ்சம் உக்காந்துக்கறேன்” என்று பஸ் ஸ்டாப் அருகே இருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.

“நீயும் வரியா?” என்று சீமாவிடம் கேட்டாள்.

“நீ உக்கார்றதுக்கே அங்கே இடமில்லே” என்றான் சீமா

“அப்பாடா! என்ன வெய்யில், என்ன வெய்யில்!உஸ் !” என்று முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் குஞ்சாலி..

ஆங்காங்கு இருந்த மரங்களுமே வெய்யிலில் வதங்கிக் கொண்டிருந்தன. இயற்கை மூச்சு விட மறந்து விட்டதை இலைகளின் அசைவு அற்று நின்ற மரங்கள் சுட்டின.

அப்போது அந்த வீட்டின் உள்ளிருந்து வந்தவர் குஞ்சாலியைப் பார்த்தார். “இந்தப் பாழாப் போன வெய்யில்லே எடமும் பத்தாம உக்காந்துண்டு இருக்கேளே. ஆத்துக்குளே வேணும்னா போயி சேர்லே சித்த நாழி உக்காந்துக்குங்கோ. பாத்தா ரொம்ப டயர்டா இருக்கேளே” என்றார்.

“இல்லே, இப்ப பஸ் வந்துடும்” என்றாள் குஞ்சாலி.

“கொஞ்சம் தேர்த்தம் தரட்டுமா?” என்று கேட்டவர் அவள் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு தம்பளரும் கொண்டு வந்து கொடுத்தார். குஞ்சாலி வாங்கிக் குடித்த பின் சீமாவுக்கும் கொடுத்தாள். பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கையில் “தவிச்ச வாய்க்குத் தூத்தம் கொடுத்தேள்” என்று நன்றியுடன் சொன்னாள்.

அடுத்த பஸ்ஸும் கூட்டத்தை அப்பிக் கொண்டு வந்து நின்றது. இரண்டு பேர் இறங்கினார்கள். குஞ்சாலிக்கும் சீமாவுக்கும் முன்னால் பஸ்ஸின் ஏறும் படியருகே மூன்று பேர் நின்றார்கள். பஸ்ஸை விட்டு இறங்கி வந்த கண்டக்டர் “ரெண்டு பேர்தான் ஏறலாம்” என்றான். அதைக் கேட்டு அந்த மூவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். குஞ்சாலியும் சீமாவும் ஏறிக் கொள்ள பஸ் புறப்பட்டது. பஸ் உள்ளே பெண்கள் பக்கம் காலியாக இருந்த ஒரே சீட்டில் குஞ்சாலி உட்கார்ந்து கொண்டாள்.

அவர்கள் வீட்டை அடையும் போது ஒன்றரை மணியாகி விட்டது. குஞ்சாலி சீமாவிடம் “வரப்பவும் கூட்டம் ஏன் தெரியுமோ? பசுமலை சர்ச்சிலே கல்யாணம்னு முக்காவாசி பஸ்ஸை ரொப்பிண்டு ஏழெட்டு குடும்பம் தல்லாகுளத்திலேர்ந்து வராளாம். என்ன மிச்சம்னா நீ திரும்பி வரச்சேயும் கால் கடுக்க நின்னுண்டு வந்ததுதான்” என்றாள். வீட்டை அடைந்ததும் அவர்கள் சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும் சீமா “அம்மா, நான் கோபாலாத்துக்குப் போறேன். இன்னிக்கி அங்கே கேரம் மேட்ச். ஆறு மணிக்கு வந்துடறேன்” என்றபடி கிளம்பினான்.

“ஏண்டா, கொஞ்சம் ஆத்திலே இருந்து ரெஸ்ட் எடேன். எனக்கும் ஒத்தாசையா இருக்கும்” என்றாள் குஞ்சாலி.

அவன் பதில் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து விட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான். குஞ்சாலியும் டாக்டர் கொடுத்த மாத்திரையைப் போட்டுக் கொண்டு ஊஞ்சலில் படுத்தாள். ஆனால் அவள் தூங்க முடியாமல் முதுகைத் திருப்பியும் நெளிந்தும் புரள்வதை சீமா பார்த்தான்.

“அம்மா, இப்ப கொஞ்சம் முதுகைப் பிடிச்சு விடட்டுமா?” என்று சீமா கேட்டான்.

“வேண்டாம். வேணும்னா நானே கூப்பிடறேன்” என்றாள் குஞ்சாலி. ஆனால் அவள் முன்பைப் போலவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப் பார்க்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். டாக்டர் கொடுத்த நாவலில் மனதைச் செலுத்த முயன்றான். அரை மணி கழித்து குஞ்சாலி அவனைக் கூப்பிட்டாள். இப்போது தரையில் ஒரு விரிப்பைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் “வலி விடமாட்டேங்கிறதேடா கண்ணா” என்றாள்.

பிறகு அவனிடம் “நான் குப்புறப் படுத்துக்கறேன். நீ உன் காலாலே கொஞ்சம் மெள்ள முதுகை மிதிச்சு விடறயா?” என்று கேட்டபடி குப்புறப் படுத்துக் கொண்டாள்.

சீமா வலது காலை குஞ்சாலியின் முதுகில் வைத்து மெல்ல அழுத்தினான். “ஆங், அப்படித்தான். அம்மாடா எவ்வளவு நன்னா இருக்கு!” என்றாள் குஞ்சாலி. “அப்படியே கொஞ்சம் மேலாகக் கழுத்து வரைக்கும் மிதிச்சிண்டு போயிட்டு வரியா?”

சீமா அவள் சொல்படி காலை வைத்து அமுக்கி விட்டான். சற்றுக் கழித்து இடது காலுக்கு மாற்றிக் கொண்டான்.

“வலிக்கிறதாம்மா உனக்கு? சரி போறும்” என்றாள்.

அவன் அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான். சற்றுப் பெரிதாக ஆரம்பத்தில் அவளிடமிருந்து வந்த குரல் இப்போது தேய்ந்து சிறு முனகலாக வெளிப்பட்டது. அந்த முனகலும் நின்ற போது சீமா மிதிப்பதை நிறுத்தினான்.

ஐந்து மணிக்கு சந்திரசேகரன் ஆபிசிலிருந்து வந்து விட்டார். அப்போது குஞ்சாலி தனக்குக் காப்பியும் சீமாவுக்கு ஓவல்டினும் போட்டுக் கொண்டிருந்தாள். கணவரைப் பார்த்ததும் அவருக்கும் காப்பி கலந்தாள்.

“நீ படுத்திண்டிருப்பேன்னு நினைச்சிண்டு வந்தேன்”என்றார் அவர் காப்பியை வாங்கிக் கொண்டு.

“நான் என்ன உங்க சித்தி பொண்ணு பத்மாவா? ஒரு தும்மல் போட்டா நாலு நாளைக்கிப் போர்வையைப் போத்திண்டு கட்டில்லே படுத்து ராயசம் பண்ணறதுக்கு?” என்று சிரித்தாள் குஞ்சாலி.

“எங்காத்துக்காராளைப் பத்தி ஒசத்தியா சொல்லாட்டா உனக்குத் தூக்கம் வராதே” என்றார் சந்திரசேகரன். “எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததுக்கு என்ன எஃபெக்ட்? ரொம்ப வலிக்கும்னாரே சாமிநாதன்?”

“ஆமா. வலிக்கும்தான்? யார் கிட்டயாச்சும் கொடுத்து முடியுமா? அழுதாலும் பிள்ளை நான்தானே பெறணும்? ஆனா பாவம் கொழந்தை. ரொம்பக் கஷ்டப்பட்டுடுத்து இன்னிக்கி” என்று வாஞ்சையுடன் சீமாவைப் பார்த்தாள் குஞ்சாலி.

“ஏன், என்ன ஆச்சு?”

“போகறச்சேயும் எம்ஜியார் வரார்னு அப்படி ஒரு கூட்டம் பஸ்ஸிலே. கொழந்தை நின்னுண்டுதான் வந்தான். திரும்பி வரச்சேயும் ஏதோ கல்யாணக் கூட்டம் பஸ்ஸை அடைச்சிண்டு வந்ததிலே கொழந்தை நின்னுண்டுதான் வரவேண்டியதாப் போச்சு. அதுக்குக் கால் இத்துப் போயிருக்கும். ஆனா ஒரு வார்த்தை சொல்லலியே?” என்றாள் குஞ்சாலி.

“இன்னிக்கி எம்ஜியார் வரார்னு கார்த்தாலேர்ந்து ஊரே திமிலோகப்படறது. இப்ப நான் வரச்சே ஆபீஸ் கார்லேதான் கொண்டு வந்து விட்டுப் போனா ” என்றார். பிறகு சீமாவைப் பார்த்தபடி. “ராஜா பார்லிலே ஒரு மொக்கு மொக்கியிருப்பானே!”

“ஆமா. கடவாய்க்குக் கூடப் பத்தாம ஒரு கோலிக்குண்டு சைசிலே கேக்குன்னு கொடுத்தான். ஆத்துக்கு வரச்சே ரெண்டு மணி ஆயிடுத்து. பாவம் நன்னா பசிச்சிருக்கும். அப்புறம்தான் கொழந்தை சாப்பிட்டான்.”

“அம்மா ட்ரீட்மெண்ட் எடுத்துண்டு இருக்குறப்போ என்னடா பண்ணினே பொழுது போறதுக்கு?”

“ஒரு நாளைக்கு ஏழெட்டு டீ குடிக்கறவர் புஸ்தகத்தை டாக்டர் அவன்கிட்டே கொடுத்தார்” என்று குஞ்சாலி சீமாவைப் பார்த்துச் சிரித்தாள். “ஆனா கொழந்தை நான் அங்கே படுத்துண்டு இருக்கறதைப் பாத்துப் பயந்து நடுங்கிடுத்து. சின்னவன்தானே? மணியாச்சே, பசிக்கிறதாடான்னு கேட்டா, இல்லே வயறு பூரா பயம் ரொம்பிக் கிடக்குன்னது. பாவம்” என்றாள் குஞ்சாலி.

“வேறென்ன சொன்னார் டாக்டர்? வலி ஜாஸ்தியாகாம இருக்க மருந்து கொடுத்திருக்காரா?” என்று கேட்டார் சந்திரசேகரன்.

“ம். கொடுத்தார். ஆனா வலியைக் கொறைக்கிற தன்வந்த்ரி இதோ நம்மாத்துலேயே இருக்காரே” என்று சீமாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். “ஒத்தடம் கொடுத்தாப்பிலே அதோட காலையும் கையையும் வச்சு என் முதுகிலே அமுக்கி அமுக்கி அப்படி ஒரு சிஷ்ருக்ஷை பண்ணித்து கொழந்தை. எப்படி வலிச்சிருக்கும் அதுக்கு காலிலேயும் கையிலேயும்?” என்றாள் குஞ்சாலி.

நிலம்

ராதாகிருஷ்ணன்

வீடு முன்பு யாரையும் காணவில்லை, உள்ளே பேசும் குரல்கள் கேட்டன, தன்னை இன்னும் யாரும் பார்க்காதது தருமனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, மெதுவாக வீடு இருக்கும் பாதையில் நகர்ந்து வீடு பின்புறம் இருக்கும் தென்னந்தோப்பை நோக்கி சென்றான்.தூரத்திலேயே வாய்க்காலில் தண்ணி போகாமல் இருப்பதால் உருவான வெடிப்புகள் தெரிந்தன, மரங்களிலும் பசுமை குறைந்து காய தொடங்கி இருந்தது. தருமன் தன்னையே நொந்து கொண்டான், வேகமாக போய் மோட்டாரை ஆன் செய்தான், தொட்டியில் நீர் விழ ஆரம்பித்ததது, தொட்டியின் உட்சுவர்களில் இருந்த பாசனம் வெயிலில் கருகியிருந்தன, அவையெல்லாம் நீருக்குள் மூழ்க, தொட்டி நிறைந்து தண்ணீர் வெளியேறி வாய்க்காலுக்குள் விழுந்து ஓடியது, வாய்க்கால்களில் சென்று ஒவ்வொரு தென்னையின் அடியில் வெட்டிவைத்த வட்டங்களில் சுற்றி நிறைத்து நீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான். விடியற்காலை முதற்கொண்டு மனதினுள் உருண்டு கொண்டிருந்த அவஸ்தை போன நிம்மதியை உணர்ந்தான். தொட்டியில் இருந்து நீர் எடுத்து முகம் கழுவினான், சட்னென மறந்து போன ஞாபகம் மீண்டும் நுழைந்து பயம் கொண்டு வீட்டை நோக்கினான், யாரையும் காண வில்லை, யாரும் இன்னும் வெளியே வராதது அவனுக்கு சற்று ஆச்சிரியம் அளித்தது, எதிர்பார்ததது இன்னும் நடக்காததை அவன் உணர்ந்து கொண்ட போது, அவனுக்குள் தானாக பதட்டம் உருவானது, சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோட்டாரை ஆப் செய்ய சென்றான், பட்டனை அழுத்தும் போது சிலர் ஓடிவருவது போன்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான், முருகனும் சில ஆட்களும் கட்டைகளுடன் தன்னை அடிப்பதற்காக வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

மூன்று நாள் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சுருண்டு படுத்து கிடந்தான், கற்பகம் அவன் விழித்திருந்த எந்நேரமும் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள், ஆனால் அவன் மனம் அந்த ஐந்து நிமிடங்களுக்குள் உழன்று கொண்டிருந்தது. முருகன்தான் முதலில் அடித்தான், “பேசிக்கலாம், அடிக்காதிங்க” என்று சொல்ல சொல்ல நான்கு பேரும் மாறிமாறி அடித்ததை அந்த ஒவ்வொரு அடிகளையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தான், அடித்தாளாமல் கீழே விழுந்த போது மீண்டும் அடித்ததை, முதுகில், பின்பக்கத்தில் எல்லாம் அவர்கள் குரூரமாக மிதித்ததை நினைவு கூர்ந்தான், கடைசியில் அவர்கள் போகும்போது முருகன் ” இனி உள்ள வந்த பிணமாதான் போவ ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்னொருவன் வந்து முகத்தில் மிதித்தான், முருகன் அப்போது அவனைத்தடுத்து “விடுறா, செத்தற போறான் ” என்றான், தருமனின் கை அனிச்சையாக முகத்தை தடவி பார்த்தது, வலது பக்கம் கண்களை சுற்றி இருந்த இடங்கள் வீங்கி இருந்தன, அதை கைகளில் அழுத்தி தொட்டபோது வலி தெறிப்பதை உணர்ந்தான், பிறகு கண்களை மூடி கொண்டான், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான், கற்பகம் முன்பு அழ கூடாது என்று எண்ணினான்,பின் முடியாமல் திரும்பி படுத்து கொண்டான்.

காவல் நிலையம் முன்பு யாரையும் காணவில்லை, தர்மன் இதை எதிர்பார்த்ததுதான், எதற்கும் வாசலில் நின்று எட்டி உள்ளே எட்டி பார்த்தான், ஒரு போலீஸ்காரர் மட்டும் இருக்கையில் அமர்ந்து ஏதோ தாள்களை புரட்டி கொண்டிருந்தார், இவன் வந்ததை காணாமல் அவர் தாளிலேயே மூழ்கி இருந்தார், தர்மன் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பைக் நோக்கி சென்று, அதில் சாய்ந்து நின்றுகொண்டான். உடலில் இன்னும் அடியின வலிகள் இருந்தன, செல்பேசியை எடுத்து நேரம் பார்த்தான். சரியாக 10 மணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள், மணி பத்து ஆகி இருந்தது. தனக்குள் சலித்து கொண்டான் “எப்ப வருவானோ ” என்று புலம்பி கொண்டான். தருமன் இப்படி இங்கு வருவது ஏழாவது முறை, முதலில் கேஸ் கொடுத்தது இவன்தான், ஆனால் இப்போது சப் இன்ஸ்பெக்டர் இவனை குற்றவாளி போல நடத்துகிறார். தன் பெரியப்பாவை திட்டி கொண்டான், அவர் பேச்சை கேட்டதுதான் இவனின் இப்போதைய எல்லா நிலைக்கும் காரணம்.

திருப்பூரில் தினமும் 15 மணிநேரத்திற்கு மேல் உழைத்து 10 ஆண்டுகளாக சேர்த்தி வைத்த பணம், சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்வதுதான் இவன் வாழ்நாள் ஆசை, அம்மாவும் அப்பாவும் விவசாய கூலிகள், இவன் பத்தாவது படிக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்து இருவரும் அடுத்தடுத்த நாளில் இறந்து போனார்கள், இவன் ஒருவன் மட்டுமே பையன், தருமனை பெரியப்பாதான் வீட்டில் வைத்து பார்த்து கொண்டார், +2 பிறகு படிக்க பிடிக்காமல் ஊரில் இருப்பவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு போவதை பார்த்து அவர்களோடு சேர்ந்து கொண்டான், திருப்பூரில் வேலை தந்த கம்பனியே இருக்க இடமும் கொடுத்தது, அருகில் மெஸ்ஸில் கணக்கு வைத்து சாப்பிட்டுக்கொண்டான், பிறகு வேலை சூழலில் கிடைத்த நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி கொண்டான், பிறகு ஊருக்கு வருவது குறைந்தது, விசேஷ நாட்களில் மட்டும் வந்து சென்றான். பிறகு ஒரு பைக் முழு தொகை கொடுத்து கடனில்லாமல் வாங்கினான், அதிலேயே ஊருக்கு வந்தான், ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றினான். அதெல்லாம் இப்போது தர்மனுக்கு கவலைகள், பயங்கள் அற்ற பொற்காலம் என்று தோன்றியது, அந்த நாட்களை எண்ணி ஏங்கினான். ஐந்து வருடம் முன்பு பெரியப்பா அழைத்து பொண்ணு பார்த்திருக்கேன் என்று சொன்னபோது தருமனுக்கு தரையில் கால்கள் இல்லை, அறை நண்பர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டாடினான், அன்றிலிருந்து சரியாக 50 நாட்களுக்குள் திருமணம் முடிந்து விட்டது, கற்பகத்தை முதலில் அவன் பார்த்த போது விளையாட்டு பிள்ளை போல இருக்கிறாள் என்றெண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான், இந்த நிலப்பிரச்சனை வந்து தருமன் இப்படி ஆனபிறகு, அவன் சித்தமெல்லாம் செத்து போய் நடைப்பிணமான பிறகு அவள் சொல்வதை மட்டுமே வேத வாக்கு போல செய்தான், அவள் மட்டுமே அவனுக்கு இவ்வுலகில் இருக்கும் ஒரே துணை. அவள் இல்லையென்றால் எப்போதோ தற்கொலை செத்திருப்பான் .

திருமணம் நிகழ்ந்து நன்றாக போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வு திசை மாறியது இந்த நிலம் வாங்கிய பிறகுதான், பெரியப்பா “மோட்டார் இருக்கற நல்ல தண்ணியுள்ள இடம்டா, பூரா தென்னை நின்னு கிடக்கு, முன்னாடி ஒரு ஓட்டு வீடும் இருக்கு, வீடு நல்ல அம்சமா இருக்கு, 8 லட்சம் னு சொல்றாங்க, நான் கொஞ்சம் பணம் தரேன், உன் பணமும் இருக்கு, மிச்சம் கடன் வாங்கலாம், பத்தலனா என் நில பத்திரத்தை கூட தாரேன், வாங்கிடலாம்டா ” என்றான். “உன் விருப்பம் பெரியப்பா, நீ எப்ப சொல்றயோ அப்ப அங்க வரேன் “என்றான். கிரயம் செய்யும் நாள் அன்றுதான் காலையில் போய் நிலத்தை பார்த்தான், கற்பகம் மகிழ்ச்சியில் புரண்டாள், கல்யாண சேலை உடுத்தி இருந்தாள், காலையிலேயே lகோவிலுக்கு என்னையும் கூட்டி கொண்டு போய் வந்தாள்.

நிலத்திற்கு உள்ளே நடந்து போய் பார்த்தான், தென்னைகள் எல்லாமே குழை தள்ளி இருந்தன, பெரிய தண்ணி தொட்டி, வாய்க்காலில் போன நீரை சற்று கையில் எடுத்து கண்களில் ஒற்றி கொண்டான், அம்மாவையும் அப்பாவையும் நினைத்து கொண்டான், கண்களில் நீர் திரண்டது, ” அம்மா ” என்று சொல்லி கொண்டான். கிரயம் முடிந்து அன்று இரவு பெரியப்பா வீட்டிலேயே தங்கினான், இவன் மீது பெரியம்மாவுக்கு மிகுந்த பிரியம் உண்டு, இரவு விருந்துணவு உண்டு கட்டியில் சாய்ந்து படுத்து கொண்டான், அம்மா நினைவு மட்டுமே அவன் மனதில் இருந்தது ” அம்மா நான் நிலம் வாங்கிட்டேன் மா, அப்பா ” என்று மனதிற்குள் அரற்றி கொண்டிருந்தான். பெரியப்பாவின் ஓசை கேட்டு திரும்பி பார்த்து எழுந்து அமர்ந்தான். பெரியப்பா அருகில் அமர்ந்து கொண்டார், ” நிலத்தை பாத்துக்கணும், என்ன பண்ணலாம் ” என்றான். இவனும் அது பற்றி யோசித்திருந்தான், இன்றைய அலைச்சலில் மறந்து விட்டான். ” ஆம பெரியப்பா, நானும் மறந்துட்டேன் என்ன பண்ணலாம் ” என்றான், ” மகனே, ஆள்வச்சு பார்த்தா, நாம கண்காணிக்கணும், காய் போடற சமயத்தில் இங்க இருக்கணும், உன் பொழப்பு கெட்டு போயிடும், ஒரு இரண்டு வருஷம் குத்தகைக்கு விடுவோம், கடனை அடைப்போம், பிறகு திருப்பூர் வேலை விட்டு இங்க வந்துடு, இதுல வர காசே நமக்கு போதும் ” என்றார், தருமனுக்கு இது நல்ல யோசனையாக பட்டது. பிறகு திருப்பூர் போய் விட்டான். ஒரு வாரத்திற்குள்ளாக பெரியப்பா போனில் அழைத்து ” குத்தகைக்கு ஆள் கிடைச்சுட்டாங்க, மாடசாமி மகன் முருகன் தான் எடுக்க இருக்கான், கிளம்பி வா “என்றார் தருமன் முருகனின் முகத்தை ஞாபக படுத்தி பார்த்தான், மங்கலாகத்தான் ஞாபகம் வந்தது, இவன் 5 படிக்கும் போது அவன் அதே பள்ளியில் 10 வகுப்பு படித்தவன், பிறகு படிக்காமல் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு விவசாயத்திலேயே இறங்கியவன், அதிகமாக பேச மாட்டான், பல வருடம் முன்பு அவனை தருமன் அவனை பார்த்தது, பிறகு தருமன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவனை பார்த்ததே இல்லை. அன்றிரவே ஊருக்கு கிளம்பி விட்டான்.

காலையில் பெரியப்பா வீட்டிற்கு முருகன் தன் அப்பாவுடன் வந்திருந்தான், கூட இன்னொரு ஊர்காரரும் வந்திருந்தார், பெரியப்பா இரண்டு ஊர் காரரை கூட்டி வந்திருந்தார், அதில் ஒருத்தர் ஊர்நாட்டாமை. அவரை பார்த்தவுடன் தருமன் வணங்கினான் , ” நல்லா இரு தம்பி ” என்றான். பிறகு அவர்தான் பேச தொடங்கினார் ” இரண்டு வருஷ குத்தகை, முடிச்சு கொடுக்கும் போது இப்ப எப்படி இருக்கோ அது போலவே இருக்கனும் ” என்றான், முருகன் சரி சென்று ஆமோதித்து கொண்டு பெரியப்பாவிடம் குத்தகைப் பணத்தை கொடுத்தான், அவர் தருமனை வாங்க சொன்னார், தருமன் வாங்கி பெரியப்பாவிடமே கொடுத்தான்.

இந்த இரண்டு வருடங்களிலும் மாதம் ஒருமுறை வந்து நிலத்தை பார்த்து போவான், முருகன் அந்த ஓட்டு வீட்டில் வந்து தங்கி கொண்டான், இவன் வந்தால் அருகில் பார்க்க நேர்ந்தால் ஓரிரு வார்த்தை பேசுவான். அவன் மனைவி லேசாக புன்னகைப்பாள், அவ்வளவுதான். தருமன் வந்தால் தண்ணித்தொட்டி பக்கம் போய் அந்த திண்டில் மேல் அமர்ந்து கொள்வான், பிறகு ஒவ்வொரு மரமாக போய் நின்று பார்த்து கொண்டிருப்பான், அப்படி பார்த்து கொண்டிருப்பது அவனுக்கு சலிக்கவே சலிக்காது, பிறகு இருட்டாக துவங்கும் போது மனமில்லாமல் கிளம்புவான்

இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட கடன்களை அடைத்து விட்டான், சொந்த ஊருக்கே வரும் ஆயத்தங்களில் இருந்தான். குத்தகை முடிந்த நாள் அன்று பெரியப்பா ஊருக்கு வந்து பெரியப்பா வீட்டில் இருந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான், இருட்ட தொடங்கியும் அவன் வரவில்லை, தருமன் மனம் எதிர்பார்த்து சோர்ந்திருந்தது, பெரிப்பா ” விடு, காலைல நாமளே போயிடுவோம் ” என்றான். அன்று இரவு தருமனுக்கு உறக்கமே வரவில்லை, இரண்டு மணிக்கு தூக்கம் வந்து 5 மணிக்குள் எழுந்து கொண்டான், காத்திருந்து 9 மணிக்கு பெரியப்பாவையும் அழைத்து நிலத்திற்கு போய் சேர்ந்தான், முருகன் வாய்க்காலை சீர் படுத்தி கொண்டிருந்தான், பார்க்கவும் மண்வெட்டியை கீழே போட்டு அருகில் வந்தான். “சொல்லுங்க என்ன விஷயம்” என்றான், தருமனுக்கு அதை கேட்க மனம் தூக்கிவாரி போட்டது. பெரியப்பா ” என்ன தம்பி, குத்தகை காலம் முடிஞ்சது தெரியாதா ” என்றார். அவன் அவரை பார்க்காமல் தருமனை நோக்கி ” இது என் நிலம், வேணும்னா கொஞ்சம் பணம் தாரேன், எனக்கு எழுதி கொடுத்துடு, மத்தபடி நீ எழுதி தராட்டியும் இது என் நிலம்தான், எவனை வேணும்னாலும் கூட்டி வா பாத்துக்கலாம் ” என்றான். தருமனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ” இது நான் கஷ்டப்பட்டு வாங்கினதுங்க” என்றான், முருகன் அவனை பார்க்காமல் “வேலை கிடக்கு, கிளம்புங்க “என்றான், பிறகு போகும் போது ” இங்க வர வேலை வச்சுக்காதீங்க ” என்றான். பெரியப்பா தருமனை நோக்கி ” இவன்கிட்ட எதுக்கு பேசிட்டு, வா நாட்டாமைட்ட போவோம், இவன் தன்னால வழிக்கு வருவான் ” என்றார்.

பஞ்சாயத்தில் எல்லோரும் வந்தும் முருகன் மட்டும் நேரம் கழித்து அப்பா மாடசாமியை கூட்டி கொண்டு வந்தான், அவன் எதுவுமே பேச வில்லை, நாட்டாமை ” நாளைக்கு அவன் நிலத்துல இருக்க கூடாது ” என்றார், முருகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான், நாட்டாமை ” மாடசாமி உனக்கும் சேர்த்திதான் சொல்றேன், புரிஞ்சுதா ” என்றார், மாடசாமி ” சரிங்க ” என்றார். அன்று சற்று நிம்மதியாக தூங்கினான் தருமன். காலையில் போய் பார்த்தபோது முருகன் போகாமல் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தான், தருமன் நேராக நாட்டாமையை போய் பார்த்தான் ” தம்பி, இப்பல்லாம் எவனுமே பஞ்சாயத்தை மதிக்கறதில்லை, நீ போலீஸ் ஸ்டேசன் போ, அப்பத்தான் இதுக்கு முடிவு கிடைக்கும் “என்றார், தருமன் நடுங்கினான், போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் அவன் போனதே இல்லை, “அய்யா உங்களை எல்லாம் நம்பித்தானே கொடுத்தேன் ” என்றான். நாட்டாமை ஏதும் சொல்லாமல் வருத்தம் வெளிப்படுத்தும் முகம் கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போதே பெரியப்பாவையும் இன்னொரு ஊர் பெரியவரையும் அழைத்து கொண்டு ஸ்டேஷன் போனான், சப் இன்ஸ்பெக்டர் இருந்தார், தன் பிரச்சனைகளை சொன்னான், கேட்டு கொண்டவர் முருகனின் அலைபேசி எண் வாங்கி அழைத்து அவனை வர வைத்தார். அவன் மட்டும் வந்தான், தருமனை பார்த்து முறைத்தான்.

சப் இன்ஸ்பெக்டர் முருகனை ” நிலம் யார் பேருலடா இருக்கு ” என்கிறார், அவன் ” அவன் பேருலதாங்க இருக்கு, ஆனா எனக்கு விக்கறேன் னு சொல்லித்தான் கொடுத்தாங்க, பணம் நிறைய கொடுத்திருக்கேன், இப்ப எழுதி கொடுக்க சொன்னா காலி பண்ணுனு சொல்றாங்க ” என்றான், தருமன் அதை கேட்டு திடுக்கிட்டு தடுமாறினான், சப் இன்ஸ்பெக்டரை நோக்கி ” பொய் சொல்றாருங்க, எங்க ஊர்ல எல்லோருக்குமே தெரியும் என் நிலம் அதுனு, நான் குத்தகைக்குத்தான் கொடுத்திருக்கேன்னு, பஞ்சாயத்துல கூட இவரை வெளிய போக சொன்னாங்க, போக மாட்டேங்கிறாரு ” என்றான், சொல்ல சொல்ல அவனுக்கு அழுகை வந்தது. பிறகு பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் ஓடி கடைசியில் சப் இன்ஸ்பெக்டர் முருகனை நோக்கி ” தோப்புல நீ இனி போக கூடாது, வீட்டை ஒரு வாரத்தில் காலி பண்ணி கொடுத்தடனும் ” என்றார். பேச்சுவார்த்தை முடிந்து ஸ்டேஷன் விட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள், பிரச்னை தீர்ந்தது என்று தருமன் நினைத்தான்.

முருகன் ஒரு மாதமாகியும் காலி செய்ய வில்லை, தோப்பையும் பராமரிப்பதை விட்டிருந்தான், நிலத்திற்கு போனால் சண்டை நிகழும் என்று நினைத்து தருமனும் போகாமல் இருந்தான். ஸ்டேஷன் மட்டும் போய் ” இன்னும் காலி செய்யவில்லை ” என்பதை புகார் சொல்லி கொண்டிருந்தான், ஆரம்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் இவனுக்கு கொடுத்த மரியாதை நாளாக நாளாக குறைந்திருந்தது, தருமனை காரணம் இல்லாமல் திட்டவெல்லாம் ஆரம்பித்திருந்தார், பெரியப்பா ” முருகன் காசு ஏதாவது கொடுத்து சரி கட்டியிருப்பாண்டா ” என்று தருமனிடம் சொன்னபோது தருமன் நொறுங்கி போனான்.

இரவு தூக்கம் என்பதே இல்லாமல் ஆகி விட்டிருந்தது, திருப்பூர் வேலைக்கு போய் இரு மாதங்களாகி இருந்தது, கற்பகத்திடம் இதையெல்லாம் அவன் முழுதும் சொல்லவில்லை, காலி செய்ய அவகாசம் கேட்கிறார்கள் ” என்று மட்டும் சொன்னான், பெரியப்பாவிடமும் சொல்லி பெரியம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான் , ஆனால் சில நாட்களிலேயே கற்பகத்திற்கு அருகிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து விட்டது, “நான் போய் கேட்கிறேன்” என்று அழுது தருமனிடம் சண்டை செய்தாள்,தருமன் “நான் பார்த்து கொள்கிறேன், நீ உள்ள வராதே ” என்று தீர்மானமாக சொல்லி விட்டான். பிறகு தினமும் அவன் வீட்டிற்கு வரும் போது அவள் விசாரித்து புலம்புவதும் அவன் சாக்குபோக்கு சொல்லி கடந்துவதுமாக நொந்து கொண்டிருந்தான்

ஒருநாள் நிலத்தை கடந்து செல்லும்போது நீர் பாய்ச்சல் இன்றி தென்னைகள் காய்ந்து கிடப்பதை பார்த்து சென்றான், அன்றிரவு உண்ணவே அவனால் முடியவில்லை. துளி கூட தூக்கம் வரவில்லை, வெளியே திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான், விடிவதை பார்த்து கொண்டிருந்தான், ஆட்கள் நடமாடும் வரை பார்த்து கொண்டிருந்தான், பிறகு நிலம் நோக்கி நடந்தான், முன்பிருந்த வீடு கடந்து மோட்டரை இயக்கி நீர் பாய்ச்சினான், மருத்துவமனையில் கிடந்தான்.
……

சப் இன்ஸ்பெக்டர் புல்லட்டில் வந்து ஸ்டேசனின் வாசலில் இருந்த தகர கூரையின் கீழ் வண்டியை நிறுத்தினார். அனிச்சையாக திரும்புவதை போல திரும்பி தருமனை பார்த்தார். பிறகு படியேறி உள்ளே தன் இருக்கை நோக்கி சென்றார். சொல்லிவைத்தாற் போல சற்று நேரத்திலேயே ஒரு வாடகை டாட்டா இண்டிகா கார் வந்து ஸ்டேஷன் வாசலில் நின்றது, முருகன் இறங்கினான், அவனோடு 7-8 பேர் இறங்கினர், எல்லோரும் கட்டுமஸ்தாக கட்சி கரைவேஸ்டி கட்டி கடாமாடுகள் போல இருந்தார்கள், எல்லோரும் திரும்பி தருமனை விறைப்பாக பார்த்து பின் திரும்பி கொண்டார்கள், பிறகு உள்ளே சென்றார்கள். சற்று நேரம் கழித்து தருமன் உள்ளே போனான், எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரிடம் வேடிக்கை சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரும் சிரித்து கொண்டிருந்தார், நான் உள்ளே சென்றதும் அந்த சிரிப்புகள் நின்றன. தருமன் அமர அங்கு இருக்கை ஏதும் இருக்க வில்லை. சப் இன்ஸ்பெக்டர் முன்பு வந்து நின்றான். அவர் நிதானமாக ” தம்பி, நீ நிலத்தை இவருக்கு எழுதி கொடுத்துட்டு, பணம் வாங்கிக்க, நான் கொடுக்க சொல்லி இருக்கேன், இப்படித்தான் இந்த பிரச்னை தீரும், இல்லாம கோர்ட்டுக்கேசு னு போனா கூட ஒன்னும் தீராது ” என்றார். தருமன் மனதிற்குள் என்ன ஆனாலும் அழ கூடாது, கெஞ்ச கூடாது என்று எண்ணி கொண்டான், பிறகு ” அது என் நிலம்ங்க, அத நான் யாருக்கும் தர முடியாது ” என்றான் தெளிவாக. இருக்கையில் இருந்த சிலர் தருமனை அடிக்க பாய்வதை போல எழுந்தார்கள், சப் இன்ஸ்பெக்டர் அவர்களை ” உட்காருங்க ” என்று சொல்லி அமர வைத்தார். தருமன் நிதானமும் தெளிவும் கொண்டு மேலும் பேசினான் ” என் நிலத்துக்கு போனா என்னை அடிக்கறாங்க, நீங்க ஒரு தீர்வு சொல்லலைனா நான் கலெக்டர் ஆபிஸ் போவேன், எனக்கு என் வேணும், அத யாருக்கும் விற்க மாட்டேன் ” என்றான். சொல்லி முடிப்பதற்குள்ளாக சப் இன்ஸ்பெக்டர் தருமனை அறைந்தார். தருமன் தன் சொல்லில் பின் வாங்க மாட்டேன் என்பது போல அடியை பொருட்படுத்தாமல் சப் இன்ஸ்பெக்டரை பார்த்தான். சப் இன்ஸ்பெக்டர் ” இது ஆவறதில்ல, நீ கிளம்பு ” என்றார், தருமன் ஏதும் சொல்லாமல் வெளியேறினான்.

வீடு வந்தான், கற்பகம் அவனை கண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து ” நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்ங்க “என்றாள், ” நாம திருப்பூர் போகலாம், நிலம் நம்ம பேர்லதான இருக்கு , யாரும் ஒன்னும் பண்ணிட முடியாது, போயிடுவோம், பிறகு பொறுத்து பார்த்து வந்து இங்க வருவோம் ” என்றாள், தருமனுக்கும் அது சரியாக பட்டது, இந்த பிரச்சனைகளால் மனம் நொந்து படுத்த படுக்கையான பெரியப்பாவை அவர் அறையில் போய் பார்த்தான், ” நான் திருப்பூர் போறேன், நிலம் எங்கயும் போகாது, பிறகு பார்த்துக்கலாம் ” என்றான், பெரிப்பா அருகில் வர சொல்லி அவன் தலை மீது கைவைத்து கண்ணீருடன் ” என்னை மன்னிச்சுருடா ” என்றான், ” விடுப்பா, நீ என்ன பண்ணுவ, என் தலைவிதி இப்படி இருக்கணும்னு ” என்றான், l, பிறகு அழுகை வரவும் எழுந்து வெளியே வந்து விட்டான்.

கிளம்பும் போது வாசலில் வந்து பெரியம்மா வழியனுப்பினாள் ” புள்ளைய பார்த்து கூட்டிப்போ, உண்டான பிறகு ரொம்ப கவனமா இருக்கனும் “என்றாள், அவன் கற்பகத்தை திரும்பி பார்த்தான், அவள் நாணி தலை கவிழ்ந்தாள், “ஏன் சொல்லல” என்றான், ” போம்போது சொல்லலாம்னு நினைச்சேன் ” என்றாள்.

இரண்டு மாதங்கள் போயிருக்கும், பெரியம்மா தருமனுக்கு அழைத்து அவசர குரலில் படபடப்புடன் ” முருகன் செத்துட்டாண்டா, யாரோ அவனை குத்திட்டாங்களாமா ” என்றாள். அன்று தருமன்  எப்போதும் அருந்துவதை விட இருமடங்கு குடித்தான். எப்போது வீட்டிற்கு வந்தான், தூங்கினான் என்பதே ஞாபகம் இல்லை, விடியற்காலை எழுந்த போதுதான் ஓரளவு போதை தெளிந்து அமர்ந்தான், மனம் நிம்மதி கொண்டிருப்பதை, சாந்தமாக இருப்பதை புன்னகை கொண்டிருப்பதை உணர்ந்தான், சட்டெனெ ஒரு எண்ணம் அவனுக்கு வந்தது, ஊருக்கு சென்று அவன் உடலை பார்க்க வேண்டும் என்று, கற்பகத்திடம் கூட சொல்லாமல் பைக்கிலேயே ஊருக்கு சென்றான். பெரியம்மா அவனை ஆச்சிர்யத்துடன் பார்த்தாள், அவன் பெரியம்மாவிடன் எதுவும் பேசாமல் நேராக துக்க வீடு சென்றான். போஸ்ட் மார்ட்டம் என்பதால் வீட்டிற்கு கொண்டுவராமல் நேராக எரிக்க கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னதை கேட்டு அங்கு சென்றான், எல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொருவராக இவனை கடந்து சென்று கொண்டிருந்தனர், யாரும் இவனுடன் பேச வில்லை. முருகனின் அப்பா வந்து கொண்டிருந்தார், இவனை சற்று தொலைவிலேயே பார்த்து விட்டார். நேராக அவனை நோக்கி தளர்ந்த நடையுடன் வந்தார், ” தம்பி உன் நிலத்தை நீயே எடுத்துக்க, ” என்றார், தருமன் ஒன்றும் சொல்லாமல்நின்று கொண்டிருந்தான், மாடசாமி மீண்டும் ” நான் முன்னாடியே அவன்கிட்ட சொன்னேன், அவ என் பேச்சை கேட்கல, அது உன் நிலம், அத எடுத்துக்க ” என்றார்.