Author: பதாகை

தமிழ் கவிதை வடிவம்

றியாஸ் குரானா

பதாகை – தமிழில் நீண்ட கவிதைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கதை சொல்லும் கவிதைகளைப் பார்க்க முடிவதில்லை. ஒரு காலத்தில் எல்லா கதைகளும் செய்யுள் வடிவில்தான் வந்திருக்கின்றன, இப்போது அப்படி ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட விக்ரம் சேத் மரபார்ந்த sonnet வடிவ கவிதைகளைக் கொண்டு கதை சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்பு. இனி கதைகள் கவிதை வடிவில் சொல்லப்படும் சாத்தியமிருக்கிறதா? தற்போதைய தமிழ் அழகியலில் இதற்கும் இடமுண்டா?

றியாஸ் குரானா –ஒற்றைக் கேள்விபோல தோற்றமளிக்கும் பல கேள்விகளின் கூட்டிணைவான கேள்வியே இது. ஆயினும் இந்தக் கேள்வி கடந்து வந்த தமிழின் குறித்த ஒரு இலக்கிய மனநிலையை கவனப்படுத்துகிறது. வரலாற்றின் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் தன்னை இயக்கத்தில் வைத்திருந்த கவிதை மனம் என்ற ஒரு முறைமையை பற்றி, அதைக் கடந்து வெகுதாரம் கடந்துவந்த நிலையில் சிந்தித்துப்பார்க்க தூண்டுகிறது. இப்படியான தூண்டுதல்களைத் தரும் கேள்விகளை உருவாக்கி அதற்கு பதில் சொல்ல முயற்சிக்காது போனால், நமது கவிதையை எப்படி வழிநடாத்திச் செல்லுவது என்ற சிக்கலில் விழுந்துவிட வாய்ப்புண்டு. கவிதை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட ஒருவரின் தற்செயலான ஒரு கேள்வி என்று எடுத்துக்கொள்ளும் நிலையைக் கடந்திருக்கிறது. அனேகமாக இன்றுள்ள அனைவரும் பெருகியிருக்கும் நமது கவிதைகளிடத்திலிருந்து தப்பிக்கவே விருமபுகின்றனர். அவ்வளவு சலிப்பை நமது இன்றைய நவீன கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. (more…)

பொழுது சாயும் போது

காற்றை அளைகின்றன, சூரிய விரல்கள்
கைத்தடி மேல் மண்புழு போன்ற நரம்புகள்
கைகளை ஊன்றி, சுருக்கங்கள் நிறைந்த முகத்துக்குள்
எங்கோ பதுங்கிவிட்ட சிறு கண்களால்
பந்து விளையாடும் குழந்தைகளை உற்றுப் பார்க்கிறார்

கொதிக்கும் மணலின் தீவிரத்தை குறைக்க
அலைகள் பக்கம் சென்ற இளைஞன்
யாரோ வீசிய பந்தைப் பிடிக்க உயரே பறக்கிறான்
புவியீர்ப்பு விதிகளை மீறி, உயரே உயரே பறக்கிறான்
முதுகு பின்பக்கம் வளைய, கண்ணில் ஆகாயம் தெரிய,
பறந்து வரும் சிவப்பு பந்தை
வலது கை நீட்டி பிடிக்கிறான்

பிடித்தவன் செங்குத்தாகக் கீழே விழுகிறான்
விழுந்தவன் ஒளி துண்டங்களாகச் சிதறுகிறான்

முகத்தை வேறு திசையில் திருப்ப,
பந்து கீழ்வானில் நிலவாய் மாறி
மெல்ல மேலெழுந்துக் கொண்டிருக்கிறது

கரங்கள் உள்ளிழுத்துக்கொண்டு மறையும்
சூரியனுடன் அவரும் மறைகிறார்.​

கல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே!

ரா கிரிதரன்

கடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வையைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.

`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்?

`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்? ` (more…)

தொடரும் பன்னிரண்டாண்டுகள் – Twelve Years a Slave, திரைக்கு அப்பால்

பாஸ்டன் பாலா

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும். (more…)

தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்

றியாஸ் குரானா

 

தனது படுக்கையறையில்
ஒரு பெரிய வெற்றுத் திரையை விரிக்கிறாள்
அதன் ஓரங்களைச் சுற்றி மேக மூட்டம்
பாதி திறந்த கதவினாடாக கண்டேன்
அவள் கதவை மூடுகிறாள்
உள்ளே என்ன நடக்கலாம்
வெளிச்சம் அணைக்கப்பட்டுவிட்டது
அருகில் ஒரு நெருக்கமான மனிதன்
அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்
அருவருக்கத்தக்க வார்த்தைகளை
சோதித்துக் கொண்டிருக்கின்றனர்
அடுத்து நாம் கூச்சப்படும்படி
எதோ நடந்து கொண்டிருக்கிறது
திடீரென அடுத்து
தன்னை வர்ணிக்கும்படி அவள் கேட்பதாக
எனக்கொரு பொய் தோன்றுகிறது
இப்போது குளியலறையில்
நான் தண்ணீரின் சப்தத்தை விரும்பவில்லை
கடைசியில்,
இருவரும் உறங்கிக் கொணடிருக்கின்றனர்
உள்ளே ரகசியமாக நுழைந்து பார்க்கிறேன்
ஓ.. அது என்னுடைய படுக்கையறைதான்
ஒரு நான் அறையிலிருந்து
வெளியேறிப்போகையில்,
மற்ற நான் உள்ளே நுழைந்திருக்கிறேன்
காலையில் விழித்ததும்,
தூங்கியதாக நினைத்துக் கொண்டேன்
சற்று நேரத்தில்
எனது இரண்டு ”நான்”களையும் கூட்டிக்கொண்டு
புல்வெளிக்கு புறப்பட்டாள்
இரவு முழுதும் வெற்றுத் திரையில்
அவள் வரைந்த ஓவியம் இதுதான்
விசேசம் என்னவெனில்
அடிக்கடி தோன்றி மறையும் வர்ணங்களை
அவள் பயன்படுத்தியிருந்தாள்.