Author: பதாகை

கவியின்கண் – 1 “எத்திசை செலினும் அத்திசைச் சோறே”

– எஸ். சுரேஷ்-

​மன்னன் நெடுமான் அஞ்சியின் அரண்மனை வாயிற்காவலனை நோக்கி ஔவை பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே. (more…)

மீட்சி – எஸ். சுரேஷ்

“அவள் போன வருடம் இறந்துவிட்டாள்”
 
என்னுள் நீ என்றோ இறந்துவிட்டாய்
என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,
உன்னுள் நான் முழுவதும் இறந்து விட்டிருந்தேனா?
இனி அறிய முடியாது.
 
—- கல்லூரி செல்லும் வழியில் காத்திருந்து
 பைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்ததும்
 வெட்கத்துடன் நீ அதை வாங்கியதும்
 உன் சிறு புன்னகையும் —-
 
துவக்கங்கள் நினைவில் விரிய எனக்குப் புரிகிறது
மனதைத் தொட்ட எவரும் இறப்பதில்லை.

கவிதையாக்கம் – விக்ரமாதித்யன்

(1987ஆம் ஆண்டு குற்றாலம் கவிதைப்பட்டறையில் வாசிக்கப்பட்டு நட்புறவுப்பாலம் இதழில் திருத்தி எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி)
வாழ்க்கைப் பார்வையில் மனவேகம் ஆத்மவிசாரமாக மாற்றம் பெறும்போது, உணர்வுகளும் தத்துவக்கோலம் கொண்டு விடுகின்றன என்பது என் அனுபவம்.
 
ஒரு கவிஞன் தன்னியல்பாகவே சிந்தனையாளனாகவும் இருக்கிறான்; தனக்கு வாய்க்கப்பெற்ற உள்ளுணர்வினால் விஷயங்களை ஊகித்து அறிந்து கொள்கிறான்; தர்க்கரீதியாகவோ காரண காரியங்கள் வழியாகவோ அல்லாமல், புலன்கூர்மை காரணமாகவே சூட்சுமமாக உணர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, யதார்த்தங்கள் வெறும் விழுதுகள்தாம் என்று கண்டுகொள்கிறான்; அடிப்படையான உண்மைகள் என்கிற வேர்கள் அவனுக்கு மலைப்பைத் தருகின்றன. அப்போது உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, தத்துவப்பார்வை ஏற்பட்டு விடுகிறது; சமவெளியில் இறங்கிய நதி போல் ஆகிறது அவன் கவிதை. என் சமீபத்திய கவிதைகள் பலவும் அதுபோலத்தான். இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகள்:

(more…)

குழல் புராணம்

– ஆதவன் கிருஷ்ணா

பரண் மேல் கிடைத்த முப்பாட்டனின் கதை:

என் கைகள் அவள் கழுத்தை வளைத்துக் கொண்டிருந்தன. உஷ்ணமான மூச்சுப்பரப்பு அவளின் காதருகே விடப்படும்போது தலை என்ற ஒன்று தனியாக கட்டவிழ்ந்த விலங்கைப் போல தேகப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன். இந்த நிமிடம் முன்புவரை இவ்வளவு அடர்த்தியான கூந்தலைத் தொட்டுப் பார்த்திருக்கவில்லை. தொட்டுப் பார்க்காமல் இருந்திருக்கலாம்.  கேசத்தின் நெடி நாசிப்புழை எங்கும் பரவியது.

நெடி பரவியதும் சடுதியில் அவளை விட்டு எழுந்தேன்.  அவள் பானையிலிருந்த பண்டம் பொங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த நினைப்பின் இடைவெளியில் சமையல்கூடம் சென்று தடித்த அருவாமனை ஒன்றைத் தேடி எடுத்து வந்து அவளுடைய கூந்தலை இழுத்துக் கத்தரித்தேன்.   வெளியில் வந்து சீமெண்ணெய் ஊற்றி அந்த கூந்தலை எரித்தபிறகுதான் என் தனிமையின் அறையெங்கும் நிம்மதி பரவியது.  விடிவதற்கு முன்பாகவே யார் கண்ணிலும் படாமல் அவள் அழுதுகொண்டே தனது தாய் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன். போகட்டும் என்றே எனக்குத் தோன்றியதால்,  அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. (more…)

ஆறாம் கயல் – 1

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

(more…)