Author: பதாகை
ஆணழகன் சாம்ராஜ்
சாம்ராஜ் மரணித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. டைலர் குணா, அர்னால்ட் சேகர், கரீம் பாரூன் முதலியவர்கள் கொண்ட நண்பர் வட்டம் – ஒரு குளம் என்றால் அதில் பெரிய பாறைக்கல்லொன்று விழுந்தால் ஏற்படும் அதிர்வலைகளைப் போல் அவனது தாக்கத்தால் அணைத்துக் கொள்ளப்பட்டவர்களாய் அவனது நட்பு வட்டம் விரியும்.
பல்வேறுபட்ட தொழில்களில் இருப்பவர்களுக்கும் சாம்ராஜே காட்சிப்பொருள். ஏனென்றால் அவனது உடற்கட்டு அதிசயிக்கக்கூடியது. அவனது அசைவுகளைக் கண்டு பொறாமைப்பட்டவர்களை எண்ண முடியாது. அந்த ஜிம்மினுடைய தலைவரே வயிறெரியுமளவுக்கு அவன் உடல் பாகங்கள் இறுகி ஒரு உறுதியான ஆண்மகனின் தோற்றம் பெற்றிருக்கும். (more…)
இரு கவிதைகள் – எஸ். சுரேஷ்
திருஷ்டி
பிறரைக் காட்டிலும் தொலைதூரம்
தன்னால் பார்க்க முடிகிறது என்று
இளமையில் இறுமாப்பு கொண்டிருந்தான்
திரண்டு வரும் மேகங்களும்,
உருமும் இடியும்,
பார்வை பறிக்கக்கூடிய மின்னலும்
சுழன்று வரும் புயல் காற்றும்
பிறருக்கு முன்பே
காண்கிறான்
இவை தன் புகல்கள் அனைத்தும்
அழிக்கப்போவதை
உணர்கிறான்
பொங்கி வரும் அலையைத் தடுக்க
முடியாதவனாக
நிற்கும் பொழுதுதான்
அறிகிறான்
தூரதிருஷ்டி ஒரு வரமல்ல
oOo
சுயம்
கண்ணன் விரைந்தோடி வந்தான்,
வரவேற்றான்,
பிள்ளைகுட்டி எப்படி ஏதென்று
குசலம் விசாரித்தான்.
விளையாட்டு நாட்களை
நினைவு கூர்ந்தான்.
போதும் போதுமென்ன நில்லாது
உணவளித்தான்.
சுதாமா முடிந்து வைத்திருந்த
பிடி அவலும் அவிழ்த்து உண்டான்
கால் வலிக்க தன் வீட்டை
நெருங்கும்பொழுது கண்டான் சுதாமா:
அதே இடிந்த வீடு
ஒட்டுப்போட்ட புடவை போர்த்திய
மனைவி
கூச்சலிட்டுக்கொண்டு கிழிந்த ஆடைகளுடன்
ஓடும் குழந்தைகள்
நாளைக்கு சந்திக்கவேண்டிய
போராட்டங்கள் நினைத்துக்கொண்டு
மெளனமாய் கண்ணனுக்கு
நன்றி கூறினான் சுதாமா.
காமம் – இரு தமிழாக்கக் கவிதைகள்
நம்பி கிருஷ்ணன்
புல்லட்டுமா என்றான்
புல்லட்டுமா என்றான்
(கத்துவேன் என்றாள்
ஒரே ஒரு முறை என்றான்)
ஜாலி தான் என்றாள்
(தொடட்டுமா என்றான்
எவ்வளவு என்றாள்
நிறையவே என்றான் )
குடியா முழுகிவிடும் என்றாள்.
(போதருக என்றான்
தொலை தூரம் வேண்டாம் என்றாள்
எது தொலைவென்றான்
நீ இருக்குமிடம் என்றாள் )
தங்கி விடவா என்றான்
( எவ்வழி என்றாள்
இதோ இப்படி என்றான்
நீ முத்தமிட்டால் என்றாள்
முன்னேறவா என்றான்
இது தான் காதலா என்றாள் )
நீ சம்மதித்தால் என்றான்
(கொல்லாதே என்றாள்
ஆனால் இது தான் வாழ்க்கை என்றான்
ஆனாலும் உன் மனைவி என்றாள்
இதோ இப்போதே என்றான்)
ஆ அம்மா என்றாள்
(அமர்க்களம் என்றான்
நிறுத்தாதே என்றாள்
மாட்டவே மாட்டேன் என்றான்)
மெதுவாக என்றாள்
(வந்ந்து… விடவா? என்றான்
உம்…ம்ம் என்றாள்)
இன்பத்தின் உச்சமடி நீ என்றான்
(எனக்கு சொந்தமடா நீ என்றாள் )
(may i feel said he, e e cummings)
oOo
புணர்ச்சி
கழட்டினாள்!
வெறும் ஆடைகளை மட்டும் அவள் களையவில்லை.
முலை, புட்டம்,
பொன்னாய் மினுக்கும் தொடைகளை
அல்ல
மெல்லிய நுரையீரல், குடலின் ஊதாக்கூடு,
எலும்பின் ஒளிரும் தந்தம்,
வாஞ்சையுடன் துடிக்கும் இதயத்தையே
காட்டும்படியாக
உள்ளிருப்பதை வெளியே கொணரும்
சிக்கலானச் செயலை அவள் நிகழ்த்த
நான் அவளைக்
கைகளில் அள்ளினேன்
என்னையே திடீரென்று அவள் குடிகொண்டதைப் போலொரு
மெல்லதிர்ச்சி!
மௌனம்.
வெளியே ஜன்னலில்
மழையின் தாழ்ந்த வியப்பொலிகள்.
கவலையுடன் வரைபடமின்றி பயணித்தேன்
சதையின் நகரத்தில்:
அவளது நடைபாதைகளின் நீல நிழல்களில்
தொலைந்து இடறினேன்.
கனவின் அமைதி
ஊசலாட்டம்
நீரில், துடுப்பின் சிதறடிப்பு!
திடீரென, சற்றும் எதிர்பாராமலே
வெய்யில் நிரம்பிய சதுக்கத்தில்
நான் வந்தடைகையில்,
என் கரங்களில்,
மெல்லிய கரைதல்களுடன்,
பறவைத் திரளாக
அவள் சிதறினாள்.
நிர்பந்தங்களே இல்லாமல்
ஓருடல் அளிக்கப்படுகையில்:
கனிவான இரக்கம்,
ஆனாலும் பொறுமையின்மையும்கூட.
கொஞ்சம் அலட்சியத்துடன் கலந்து.
இதையெல்லாம்விட,
பெயரிடவே முடியாத ஏதோவொன்று:
ஒருவிதமான சோகம்.
பின்கழுத்தில் விரல்களால்
விரைவாக மும்முறை தட்டிவிட்டு
அவள் எழுந்து உட்காரும் வரையில்
நாங்கள் கிடந்தோம்:
நசுநசுத்து, குளிருடன்,
கரையில் தனித்த மீன்களைப் போல்.
(After John Banville, The Newton Letter)
அறம் சிறுகதைகள் – இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை
நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே புத்தக வாசிப்பு பழக்கம் கொண்டவன். இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே முத்து காமிக்ஸ், அம்புலிமாமா ஆகியவற்றைப் படித்த நினைவிருக்கிறது. பலே பாலுவும் இரும்புக்கை மாயாவியும் என் மிக இளமை நினைவுகள். இது அப்படியே வளர்ந்து ஒரு 18 வயதிலிருந்து தீவிர இலக்கியம் என்ற பிரிவிலிருந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. ஆனால் ஒருபோதும் படித்ததைக் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ அதைப் பற்றி எழுத வேண்டும் என்றோ தோன்றியதே இல்லை.
பிறகு சென்னையில் பணியாற்றும்போது அமைந்த ரூம் மேட்ஸின் சகவாச தோஷத்தால் எக்ஸ்பிரசுக்கு இரண்டொரு வாசகர் கடிதங்கள் எழுதி பிரசுரமாயிற்று, அதிலேயே பரம திருப்தி அடைந்து அதோடு எழுதுவதை விட்டாயிற்று, எழுதும் நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்றே தோன்றும். எத்தனையோ நண்பர்கள் நீண்ட உரையாடல்களுக்குப் பின், ‘என்னிடம் இப்போ பேசியதை எல்லாம் எழுதினால் என்ன?” என்றும், ‘அவசியம் எழுத வேண்டும்,’ என்றும் சொன்னதுண்டு. இருந்தாலும் சோம்பலும் எழுதும் நேரத்தில் படிக்கலாம் என்ற ஆசையும் என்னை எழுத விடவில்லை எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவது குறித்தும் ஒரு தயக்கம் இருந்தே வந்தது. சுஜாதா வேறு ஒரு நல்ல வாசகன் என்பவன் வாசகர் கடிதம் எழுதவோ எழுத்தாளனை நேரில் சந்திக்கவோ மாட்டான் என்று எங்கோ எழுதிவிட்டார். (more…)