Author: பதாகை

சிலுவையில் அறையப்பட்ட இயேசு

தேடன் 


வீட்டில் இயேசு ஒரு குட்டி சிலுவை கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பா சில நேரங்களில் ஓய்வெடுக்க தூங்குவிட்டாரோ என்று தோன்றும். அதற்குள் எங்கிருந்தோ ஒரு சிலந்தி வந்தமர பல்லி பின்தொடர கலைந்துவிடும் தூக்கம். விடுமுறைக்கு வீடு வந்த அக்காள் மகன் இயேசுவின் ரத்தத்தை பச்சை தீட்டிவிட்டான். காலுக்கு அடியில் ஒரு ஆணி அறைந்து நிற்பதற்கு சௌகரியம் வேறு செய்தான். அவன் போன பிறகு சிலுவையில் ஓர் ஆணி வெளியே வந்து தொங்கியது. உடனே இயேசுவை நான் சிலுவையில் அறையத் தொடங்கினேன்; இயேசு சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

 

பகவதியம்மை

“அண்ணே, இரவிபுதூர் போற பஸ் எது?” இக்கேள்வியை கடந்து சென்ற பலரிடம் கேட்டும் “ம்ம்ம்க்க்கும்” எனும் பதில்தான் கிடைத்தது. சொந்த ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு ஊருக்கு செல்லும் வழித்தடம் அறியாமல் நின்றேன். இறையூர் என கூகுலில் தேடினால் பதில் இல்லை. இரவிபுதூர் என்பதே பெயர் எனப் பதிலாய் வந்தது. இப்பேருந்து நிறுத்தமே பள்ளத்தில் இருந்தது, எதிரே எழும்பி கம்பீரமாய் நின்ற தேவாலயத்தில் ஆறு முறை மணியடித்து விவிலிய வசனம் பேசியது ‘கர்த்தராலே கூடாத காரியம் எதுவுமில்லை’. மாடனை வேண்டிக்கொண்ட மனதில் நல்மேய்ப்பரையும் வேண்டிக்கொண்டேன்.

நெற்றியில் திருநீரால் முக்கோடு போட்டு, காதில் சிவப்புக்கல் கடுக்கனோடு, வெற்றிலை குதப்பியவாறே, முன்மண்டை வெற்றிடமான, குலுங்கும் தொப்பையோடு, மங்கிய வெள்ளைச் சட்டையும், மடித்து கட்டிய வேஷ்டியும், லூனார் செருப்புமாய் அருகில் வந்தவர், மாடனாகவோ, மேய்ப்பவராகவோ இருப்பார் எனத் தோணவே அவரிடம் வழி கேட்டேன். ‘இரவிபுதூர் போற பஸ் எதுனே”, கூடவே இவ்வூரிலே வழக்கமான மரியாதை குறிச்சொல் ‘அண்ணாச்சி’யையும் இணைத்துக் கொண்டேன்.

வெற்றிலை சாறு உதட்டில் வடிய மேலும் கீழுமாய் பார்த்தவர் “ஆளு வெளியூரோ, இங்கன இறையூர்னு சொன்னாதான் நம்ம ஆளுக்காருக்கு பிடிப்படும். நானும் அங்கதான் போறேன். ராஜாவூர் பஸ் வரும், மருங்கூர் இப்போதான் போயிருக்கும். யாருக்கு தெரியும், இன்னும் வராம கூட இருக்கும். அவனுக இஷ்ட மயிருக்கு தானே வரான். நிப்போம். தம்பி சாப்டிலா. இல்ல வாங்க காப்பி குடிப்போம்”

வலுக்கட்டாயமாய் கூட்டிக் கொண்டு போனார். “பஸ் வந்தாலும் அவனுக டீ, காப்பி குடிச்சுட்டு தான் எடுப்பான். இறையூருல எங்க. இன்னிக்கு முகூர்த்தம் ஒன்னும் இல்லையே, என்ன சோலி” என்றார்.

சென்னையில் இருந்தாலும் தாத்தா நாகர்கோயில் பழப்பம் மலையாளக் கடையில் இருந்து மாதமிருமுறை வாங்கித் தருவார். கண்முன்னே செந்நிறமாய் குவிந்து கிடந்த பலகாரங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். “தம்பிக்கி பசிக்கோ, மக்கா இதுல ஒன்னு எடு” கடைக்காரரிடம் கேட்டு வாங்கித் தந்தார். அசௌகாரியமாய் உணர்ந்தேன், வாங்கத் தயங்கவே, “பழப்பம் என்ன கோடி ரூவாய்யா, தின்னுப்போ. எம்பயனுக்கா வயசுதான உனக்கு. தின்னு”. முதல் கடியிலே வெல்லமும், ஏலக்காயும், அவலையும் நாக்கு ருசித்தது. “சக்கர பாகு, அவலு உள்ள இருக்கும். வயித்துக்கு நல்லது. இனி மத்தியானம் தான் பசிக்கும்” என்றார் சிரித்தவாறு.

நாங்கள் கடையில் காப்பிக்கும் பழப்பத்திற்கும் காசு கொடுத்து திரும்ப பேருந்தும் சரியாய் வந்தது. ஏறி அவர் அருகிலே அமர்ந்தேன். “இறையூருல யார பாக்கணும், வெளியூரு ஆளு. சொல்லுங்க தெரிஞ்சா நா கூட வாரேன்.”

“தெரிஞ்சவங்க ஒருத்தர பாக்கணும். இறையூர் சுடலமாடன் கோயில் பக்கம் வீடு”

“சரியா போச்சு. நானும் அவன பாக்கத்தான் போறேன். குடும்ப சாமி. பாத்து நாளாச்சு. போய் கும்பிடனும். ரெண்டு மாசமா வீட்டுல ஒருத்தருக்கா கழியாம போகு. போய் மஞ்சன சாத்தி, ஆரம் போட்டு, சாமிக்கு பண்ணனும். யாரும் கண்டுக்காம இருந்திருப்பான். அதான் நம்மள படுத்துகு. எங்க அய்யா வழி சுடல. நல்லா குடுப்பான், சமயத்துல பாடா படுத்துவான். நான்தான் மதியில்லாம ரொம்ப நாள் வராம இருந்திட்டுட்டேன்” கவலையோடு சொன்னார். “சரி, நம்ம கதைய சினிமா எடுக்கலாம், ஒரு பய பாக்க மாட்டான்” சொல்லிவிட்டு அவரே சிரித்தார். வெகுளியாய் தெரிந்தார், நானும் சகஜமாய் பேச ஆரம்பித்தேன்.

“அங்க ஒரு ஆச்சி இருக்கு, சுடலை கோயில் பக்கம் வீடு. அவங்க வீட்டுக்கு போறேன், பேரு பகவதியம்மை”.

கொஞ்சம் அமைதியானவர், “கூனிக் கிழவி வீட்டுக்கா. உங்க சொந்தமா அவ?”

“தெரிஞ்சவங்க, எங்க தாத்தா இங்கையிருந்து மெட்ராஸ் போய் செட்டில் ஆனவரு. அவருக்கு தெரிஞ்சவங்க”

“ஓ அப்டியா. உங்க தாத்தா பேரு:?”

“கிருஷ்ணப் பிள்ளை” என்றதும். முதுகை குலுக்கி கொஞ்சம் இன்னும் இணக்கமாய் “பிள்ளைமாறா, முக சாடை தெரிஞ்சுது. இப்போ உள்ள பிள்ளைகளுக்கு தான் இன்னாருன்னு சொன்னா கொஞ்சம் சங்கடம், அதான் கேக்கல. சுத்தி முத்தி சொந்தமாதான் இருப்போம். பின்ன கடுக்கரை, ஆரம்பலி, காக்கமூரு எல்லாம் அங்கதானே கட்டிக் கொடுப்போம்” என்றார்.

இவ்வூர் சுசீந்தரமாக இருக்க வேண்டும். சாலையின் இணையாக ஆறு ஓடியது. வலப்பக்கம் பெரிய கோபுரம் தெரிந்தது. தாத்தா சொல்லிய கதைகளில் பலமுறை தாணுமாலயன் வருவதுண்டு. படித்துறையில் துணி அலசும் ஒலி கேட்டது. பழைய பாலம் இன்னும் கம்பீரமாக நிற்க, புதிதாய் வழி தவறி சாய்ந்து சாலையில் இணைந்த புதிய பாலம் தெரிந்தது. வண்டி பழைய பாலம் வழியே அக்கரை எனும் ஊருக்குள் நுழைந்தது. வழியெங்கும் இருக்கரையிலும் தெங்கு, அடுத்து பசுமையான போர்வை போலவிருந்த வயலில் நெல் நாற்று காற்றில் மேலும் கீழுமாய் தலையசைத்து வரவேற்பது போலவிருந்தது. அருகே பேச்சு சத்தம் குறையவே அவரைக் கண்டால் உறங்கிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் எழுந்து, “ஊரு வந்துட்டு வாங்க இறங்குவோம்” என்றார். வயல்வெளி நடுவே சாலை உணவைத் தேடி ஊரும் கருநாகம் போல நீண்டு போனது.

பழைய ஓட்டு வீடுகள், ஓடு வேய்ந்த பள்ளிக்கூடம், இடையிடையே கான்கிரீட் வீடுகள். சட்டை அணியாத சாரம் அணிந்த திடமான நெஞ்சைக் கொண்ட தாத்தாக்கள்- தாத்தா சாரம் என்று சொல்லியே நானும் கைலியை சாரம் என்றே அழைக்கிறேன்.

“என்ன எங்கோடியா அத்தான் கண்டு நாளாச்சு” பெண்குரல், கேட்டு திரும்பினேன். பசுமாட்டை இழுத்தபடி ஐம்பது வயது பெண்ணொருத்தி.

“மைனி சுகமா, சுப்பிரமணிக்கு ஒரு சம்பந்தம் இருக்கு. ஊருக்கு போகும் முன்னாடி வீட்டுக்கு வாரேன்.”

“சம்பந்தம் வருகு, வழிச் சுத்தம் வேணுலா. தேரூர்ல ஒன்னு வருகு”

“அதான் நானும் சொல்ல வந்தேன். நம்ம சகலப்பாடி முருகன் இருக்கான்லா, அவனுக்க பெரியக்கா பொண்ணு. யோசிக்காத வாரேன் பேசுவோம்.”

“கூட யாரு, ஆளு பிடிப்படலையே”

“மெட்ராஸ்ல இருந்து வராரு, நம்ம ஆளுதான். கூனிக் கிழவிய பாக்கணுமா”

“அது ரெண்டு நாளா இழுத்துட்டுலா கிடக்கு. சீக்கிரம் போவும். அதுக்கு நாளாயிட்டு, சலம்பிட்டு, ஏசிட்டு திரியும். என்ன ஆளோ, நம்ம ஆளு இல்ல. ஊருக்காரன் பேசிட்டு இருக்கான். என்னதான் இருந்தாலும் சுடலை கோயில தூத்து வாறிட்டு கிடந்தா. அதுக்கு சொந்தம் கிந்தம் உண்டான்னு தெரில. முதவாட்டி ஒரு ஆளு அத தேடி வருகு. ஊரு செலவுல பாடை எடுக்கணும்” நடந்துக் கொண்டே வார்த்தைகளை உதிர்த்தபடி சென்றாள்.

“தப்பா நினைக்காதப்போ. பொம்பள அப்படியாப்பட்ட ஆளுதான். வாயில சனி. என்கூட கொஞ்சம் பிடித்தம் உண்டு. நானும் அது சாவ முன்னாடி பாக்கணும். முண்டு கட்டிட்டு இருப்பா. மலையாளத்துக்காரியா இருப்பா போல. எங்க அய்யாக்கு அவள தெரியும். அவருதான் இங்க தங்க இடம் கொடுத்தாரு. சுடல கோயிலு சுத்தி நம்ம இடம்தான். பாவம் ஆளுத் துணையில்லை. தனிக்கட்டை. நம்ம நாளு வந்தா போயிதானே ஆகணும். அது பொறக்கப்பயே முடிவாயிடும். என்ன நா சொல்லது” என்றார் விரக்தியாய்.

மௌனம் மாத்திரமே என்னுள் நிறைந்திருந்தது. நடந்து கொண்டே தாத்தாவின் நினைவுகளை அசைப் போட்டேன். ஆச்சி எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும் போதே இறந்துவிட்டாள். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் அவர் இறக்கும் வரை மனக்குறையில்லை. அவராய் படுக்கையில் இருக்கும் போது “என் தங்கம், கண்ணு, சாமி தாத்தா செத்தா. தகவலை இறையூர்ல பகவதியம்மை ஆச்சிட்டு சொல்லணும். தாத்தாக்க ஆச மக்ளே. அப்பனுக்கு தெரியாண்டாம்.” பேசிக்கொண்டே கைகளில் முத்தமிட்டார். யார் பகவதியம்மை, தாத்தாக்கு என்ன பழக்கமோ என்றெல்லாம் யோசிக்க நேரமின்றி அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட்டார். அப்பா ஊருக்கு தகவல் எல்லாம் சொல்லாமல் கண்ணம்மாபேட்டையில் காரியம் செய்தார். ஆச்சி இறந்ததுக்கும் இதேதான் நடந்தது. தாத்தாவும் ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் செய்ய ஆசைப்படவில்லை. தாத்தாவின் கதைகள் வீட்டின் எல்லா அறையிலும் நிறைந்து இருந்தன. இரண்டு மூன்று வாரங்களில் வீடு சகஜமாக, எனக்கோ தாத்தா கடைசியாய் முத்தமிட்ட கைகள் அரிக்க ஆரம்பித்தது. கனவிலும் தாத்தா பகவதியம்மை பேரை சொல்லிக்கொண்டே வந்து நின்றார். பெங்களூர் செல்வதாய் சொல்லி நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்.

“சரி, உங்க தாத்தாக்க ஊரு எது?” நடந்தபடி கேட்டார்.

“அழகியபாண்டியபுரம்”

“அலையான்றமா, பேசி பேசி பக்கத்துல வந்திட்டியே. அங்க எங்க?”

“அதுலாம் தெரியாது”

“அப்பா பேரு என்ன?”

“மணியன்”.

நின்று வித்தியாசமாய் பார்த்தார். “உங்க தாத்தாவ கிட்டுனு கூப்பிடுவாங்களா?”

“ஆமா, ஊருல கிருஷ்ணப் பிள்ளைனா யாருக்கும் தெரியாது, கிட்டுனு சொன்னாதான் தெரியும். சக்கோட்டை கிட்டுனு சொல்வாரு சிலநேரம் சிரிச்சிட்டே”

“லேய், நா உனக்கு மாமா முறைலா. உங்க தாத்தாவும், எங்க அய்யாவும் நல்ல கூட்டுக்காரன்லா. அய்யா சொல்லிருக்காரு கதைலாம். இப்போ புரியுது. நீ சின்னப்பையன். தாத்தா எப்புடி இருக்காரு, அப்பா சுகமா. உங்கூட பொறந்தவங்க எத்தனை பேரு?”

“தாத்தா தவறிட்டாரு, அத அந்த ஆச்சிட்ட சொல்லணும்னு தாத்தா சாவ முன்னாடி ஆசைப்பட்டுச்சு, அதான் வந்தேன்”

“செய், சங்கடம். காலத்தை பாத்தியா மக்கா. எல்லாம் அந்தந்த சமயத்துல நடக்கணும். நீ வரணும்னு தான் அது இழுத்துட்டு கிடக்கு.”

ஆறடியில் நெடுநெடுவென மண்பீடம், சுற்றிலும் பீடம் பின் நின்ற வேம்பின் சருகுகள். முன்னே என்றோ வைத்த வாழையிலை மட்டும் இருந்தது. கொஞ்சம் தொலைவில் வயதான ஓலை வீடு, முன்னே தாழ்ந்திருந்த கூரை பிய்ந்து கிடந்தது. அவரும் கூடவே வந்தார். வீட்டில் உள்ளே எந்த சத்தமும் இல்லை.

“அம்மை வீட்டுல உண்டா, நா எங்கோடியா வந்திருக்கேன்”

“உள்ள வாடே, பிள்ளையை கண்டு நாளாச்சு” எனும் உடைந்த பெண் குரல் உள்ளிருந்து வந்தது.

உள்ளே வா, என்பது போல் என்னைப் பார்த்தபடி அவரும் நுழைந்தார். ஒரே அரை, மண் அடுப்பில் சப்பிய பாத்திரம் ஒன்றில் அரிசி கொதித்தது. அருகே ஆங்கில சி போல வளைந்து, உடலெங்கும் தோல் தளர்ந்து தொங்கியபடி, இருந்த கொஞ்ச நார்ப் போலவிருந்த முடியை முடிந்து வைத்த தலையும், இடுப்பில் சாரமும், மேலே வெள்ளை துவர்த்தும் மட்டுமே கட்டிய ஆச்சி இருந்தாள். இவளா ஊரில் எல்லோரும் ஏசும் ஆச்சி, அப்படியா இருக்கிறாள். இந்நிலையிலும் முகம் மலர்ச்சியாய் இருந்தது. தெரிந்த எங்கோடியா வந்ததில் மலர்ந்திருக்கலாம்.

“பிள்ளைக்கு ஒன்னும் இல்லையெடே. கஞ்சிதான் வைக்கேன். ரெண்டு நாளா மேலு வலி, கையும், காலும் பிடிச்சு நிக்கி. வயசாயிட்டா. வயித்துக்கு பாக்கியம் சமயத்துல கஞ்சி கொண்டாருவ. இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. அதான் எந்திச்சிட்டேன். நீ இரு, நா போய் கலரு வாங்கிட்டு வரேன். கூட யாரு, நா கவனிக்கல. கண்ணு தெரிலியா. யாரு ஒம்பிள்ளையா பிள்ளே?”

“இல்ல ஆச்சி, கோயிலுக்கு வந்தோம். என் பெரிய மைனிக்க மவன். நீ இரு, நா வாங்கிட்டு வாரேன்”

“போல ஆகாதவன் மவனே, இன்னைக்குதான் திடமா இருக்கேன். நா போறேன். நீ இரு,” குனிந்து நடந்தபடியே பொசுக்கென்று நடந்தாள், ஆட்டின் மடிபோல துண்டு விலகி மார்பு அங்குமிங்கும் ஆடியது அவளுக்கு. நான் புரியாமல் விழித்தேன்.

“இரு இப்போமே எல்லாம் சொல்லணுமா, கழியாத பொம்பள. வரட்டும்”

“எவென் வீட்டு மாடுல, பிச்சைக்கார பய இங்க அவத்து விட்ருக்கான். மேய இடம் இல்லையால, இழுத்துக்கட்டுல புலையாடி மவனே” ஆச்சி யாரையோ ஏசியபடி செல்வது காதில் கேட்டது.

“மணியன் ஏதாச்சும் சொல்லுவானா இவள பத்தி, வளத்தவ பாசம், பெத்தவளு மேல இல்ல. அவன ஒன்னும் சொல்லதுக்கு இல்ல மக்கா. எல்லாம் இப்புடித்தா நடக்கணும்னு மேல ஒருத்தன் எழுதிருக்கான்”, எதுவுமே புரியவில்லை. அவளும் வருவது போலில்லை.

“உங்க தாத்தாவ நா கண்டுருக்கேன் சின்னதுல. எம் ஜி ஆர் கலரு, சுருண்ட முடியுமா ஆளு சினிமா நடிகர் கணக்கா இருப்பாரு. இந்த அம்மா எப்புடி பழக்கமோ. உங்க தாத்தாவுக்கு தான் தெரியும். அவங்க அய்யா பழைய ஆளு, நிலமும் தோப்புமா ஜம்முன்னு இருப்பாரு. எங்க அய்யா சொல்லுவாரு” கொஞ்சம் உரிமை எப்படியோ பேச்சில் வந்தது.

“இந்த ஆச்சி யாரு. எங்க தாத்தாவுக்கு என்ன பழக்கம்?”

“இவ ஊரு, குடும்பம்லா தெரியாது. உங்க தாத்தா மேக்க போவாரு அடிக்கடி. இவளுக்கு அங்க பூவாரு பக்கம்னு மட்டும் தெரியும். இவரு அங்க கள்ளு குடிக்கப் போவாருன்னு அய்யா சொல்லுவாரு. அங்க என்ன பழக்கமோ. உங்க ஆச்சிய கட்டுனதுக்கு, அப்புறமா இல்லையானு தெரியல. நிறைய மறந்துட்டு” நிறுத்தி பாக்கெட்டில் இருந்த திருநீரை நெற்றியில் பட்டையிட்டார்.

வெளியே ஆச்சி வருவது போலத் தெரியவில்லை. நான் விடாமல் “அப்புறம்” என்றேன்,

“உங்க ஆச்சிக்கு பிள்ளையில்லை, போகாத கோயில் இல்லையாம். மடில கனம் இல்லை போல. ஒருநாள் நல்லா செவந்த குட்டியை தூக்கிட்டு வந்தாராம். அவன்தான் உங்க அப்பன். வீட்டுல கொண்டாந்த அவரு அப்பா உள்ள விடல. பெரிய சண்டை. கொஞ்ச நாளுல இவ வந்தா, எம்பிள்ளைனு சொல்லி ஒரு நாள் அலையான்றம் முழுக்க ஒரே பெகலம்தான். உங்க தாத்தாக்க அப்பா அவர தலை முழுகி வீட்ட விட்டு விரட்டிட்டார். நல்ல மனுஷன், கேவலத்துல அப்புறம் இங்க வரவேயில்ல. எங்க அய்யா நாரோயில்ல வீடு பாத்து வச்சாரு. உங்க அப்பன் வந்த வீட்டுல ஒட்டிக்கிட்டான். உங்க ஆச்சியும் பிள்ளையில்லையா, செவத்த பய, பாக்க அவ்வளவு லச்சணமா இருப்பான். விட மனசில்லை. கூடவே வச்சுக்கிட்டா. எவன் பாத்தனோ, வத்தி வச்சுட்டான். அதுலாம் பண்டு.” நிறுத்திவிட்டு, ஆச்சி வருகிறாளா என்று நோட்டமிட்டு தொடர்ந்தார் “அங்கேயும் உங்க தாத்தாவ அசிங்கப்படுத்தி, இவளயும் பூவாருல இருந்து கூட்டிட்டு வந்து, ரோட்டுல போட்டு அடிச்சி, சங்கடம். மணியனயும் சம்சாரத்தையும் கூட்டிட்டு ஊர விட்டே போய்ட்டாரு. போறப்ப எங்க அய்யாட்ட இவளுக்கு ஒரு இடம் கொடுத்து பாருன்னு கேட்டாரு. அந்தக்கால பழக்கம்லா. இந்தா இங்க இடம் கொடுத்து அய்யா பாத்துக்கிட்டாரு. அய்யா இருக்க வர உங்க தாத்தாட்ட இருந்து லெட்டர் வரும். அய்யா இங்க வந்து பேசுவாரு. எல்லாம் நாளாச்சு”.

அமைதி மட்டுமே எங்குமே, அவள் வீட்டுக்கு வந்து இரண்டு கலரையும் கையில் கொடுத்தாள்.

“அம்மே, ஆளு பிடிப்படுகா” என்றார் எங்கோடியா,

சிறிது நேரம் பார்த்தவள், “இல்லடே, கண்ணு மங்கி நாளாச்சு. குரல வச்சுதான் இப்போ ஆள பிடிக்கது. புகையா உருவம் தெரியும்”

“உம்பேரன் தான்.”

எதையோ மறந்துவிட்டவள் போல நின்றாள். என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ, கண்கள் காட்டிக் கொடுத்தது கண்ணீரின் வழியே. எதுவும் பேசவில்லை.

“பிள்ளைக்கு பேரு என்னது?”

குரல் வரவில்லை. “கிருஷ்ணா” என்றேன்.

என் கைகளை பிடித்து முத்தமிட்டாள். எதுவுமே பேசவில்லை,

பின் நான், “தாத்தா தவறிட்டாரு. உங்கள்ட்ட சொல்லணும்னு என்கிட்டே கேட்டாரு முன்னாடியே”.
“நல்ல மனுஷன், என்னா ஐஸ்வர்யம் நிரஞ்ச ஆளு. நன்னி எப்போவும் உண்டு. நீயும் நல்லா வருவா. மணியன் நல்லாருக்கானா,” பேசியபபடியே ஓரமாய் இருந்த தகரப் பெட்டியில் சேலை ஒன்று மூடி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தாள். பின் மூடி விட்டு வந்தாள். “சாப்பிட்டுட்டு போ, இங்க எங்க தங்க சொல்ல. சாப்பிடாம போகக்கூடாது.” என்றாள்.

என்னால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை “நா போறேன். வேற வேலையிருக்கு. மன்னிச்சிருங்க” என்றபடி எழுந்தேன். எதையோ எண்ணியபடி வந்தவள் மீண்டும் கைகளை பிடித்து முத்தமிட்டாள். மனம் இருண்டு, உணர்வுகள் கூடியது, என்னையறியாமல் குனிந்து அவள் கால்களை தொட்டேன். அவள் கண்ணீர் என் முதுகில் குளிர்ச்சியாய் பட்டது. ஆச்சி வீட்டின் வெளியே வந்து நான் தெரு திரும்பும் வரை நின்று கொண்டிருந்தாள் அவளின் கலங்கிய கண்கள் அதுவரை எனக்கு தெரிந்தது.

எங்கோடியா மாமா பேருந்து ஏற்றிவிடும் வரை கூடவே வந்தார், கைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். நாகர்கோயில் வந்ததும் சென்னை உடனே திரும்ப மனமில்லை, கன்னியாகுமரி சென்று அறையெடுத்து தங்கினேன். இரவு கடற்கரைக்கு சென்றேன். அலையெல்லாம் ஏதோ சோகத்தை தாங்கி வருவதும் போவதுமாய் தெரிந்தது. சுற்றிலும் சூன்யமாய் உணர்ந்தேன். இரவு தூங்கியதும் நினைவில்லை.

காலை எழுந்து சூரிய உதயம் காண முடிவு செய்தேன். என் அறையில் இருந்தே கடல் தெளிவாய் தெரிந்தது. கைபேசி ஒலிக்கவே எழுந்தேன், எங்கோடியா மாமாதான். ஊருக்கு போய் விட்டேனா என அழைப்பதாய் தோன்றியது. ஜன்னல்களை திறந்தவாறே அழைப்பை எடுத்தேன்.

“மக்கா ஊருக்கு போய்ட்டியா. பயணம்லா வசதியா இருந்துச்சா. அப்புறம் ஆச்சி இறந்துட்டா. எனக்கு இப்போதான் தகவல் வந்திச்சு. உன்ன பாத்த சந்தோசமா இருக்கும். நல்ல சாவு. சொல்லத்தான் கூப்பிட்டேன்” மறுபதில் எதுவுமே எதிர்பார்க்கவில்லை, அழைப்பை துண்டித்துவிட்டார். சூரியன் மெதுவாய் கடலில் இருந்து எட்டிப் பார்ப்பது போலவிருந்தது, மஞ்சள் பந்து, கடல் தங்கம் போல மின்னியது.

அறையில் இருந்து கிளம்பி இறையூர் சென்றேன். ஊர் இயல்பாக இயங்கியது. கொஞ்சம் ஆண்கள் கூரையில் வெளியே நின்றார், கூடவே எங்கோடியாவும் இருந்தார். “மக்கா போலையா, நீ போய்ட்டேன்னு நினச்சேன்”

கூடவே வீட்டுக்குள் வந்தார். எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார் போல, என்னை அனைத்து கண்களும் வினோதமாய் பார்ப்பது போல தெரிந்தது. உள்ளே சென்றோம் ஆச்சியைப் படுக்க வைத்திருந்தனர். யார் போட்ட மாலையோ பூவின்றி நார் அதிகமாய் தெரிந்தது. வரும் அவசரத்தில் எதையும் நான் யோசிக்கவில்லை. வெளியே பாடை தயாராய் இருந்தது. தனிக்கட்டையாய் இருந்திருக்கிறாள்

எல்லாம் வேகமாய் நடந்தது. காரியங்களில் நானும் இருந்தேன், வாய்க்கரிசி போட்டேன், எரிக் கங்கு எங்கோடியா மாமா இட்டார். அருகில் இருந்த ஆற்றில் குளித்து மீண்டும் அவள் வீட்டுக்கே வந்தேன். தகரப்பெட்டியை திறந்து புடவையை எடுத்தேன் உள்ளே மங்கிய புகைப்படம் ஒன்று தெரிந்தது. அதில் சுருள் முடியும் எம் ஜி ஆர் போல தாத்தாவும், அருகே செம்மீன் ஷீலா போல ஆச்சியும் இருந்தாள். புகைப்படம் சுற்றிய அதே பழைய புடவையை ஆச்சி அதில் கட்டிக்கொண்டு இருந்தாள். அதை நானே எடுத்துக்கொண்டேன். வெளியே எங்கோடியா மாமா நின்றார்.

“வச்சுக்கோ. உங்க ஆச்சி தாத்தா தானே. பிள்ளைக்கு கல்யாண வயசு ஆச்சே. வரன் ஏதாச்சும் வருகா. நம்ம ஊருல பாப்போம், மெட்ராஸ் போய் அப்பாட்ட சொல்லு. மாமாவ பாத்தேன்னு.” பேசிக்கொண்டே இருவரும் நடந்தோம்.

சாயல்

ஐ கிருத்திகா

லாரி நான்கு வழிச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. உக்கிர வெயிலின் பிடிக்குள் சிக்கியிருந்த முற்பகலில் அந்த லாரி சென்னையிலிருந்து அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தது.

நவீன் டிரைவரைப் பார்த்தான். மாட்டுவண்டி ஓட்டும் தொனியில் முகத்தை வைத்திருந்தவர் ஸ்டியரிங்கை வளைக்க வேண்டிய அவசியமின்றி வெறுமனே பிடித்தபடியிருந்தார். நவீன் நோக்குவதை உணர்ந்து திரும்பியவர்,

” ஒண்ணுக்குப் போவணுமா…?” என்றார்.

” இ… இல்ல….” என்ற நவீனுக்குப் போனால் தேவலாமென்றிருந்தது. காலை ஐந்து மணிக்குப் போனது. ஒன்பது மணிவரை வயிறு எந்த அறிகுறியும் காட்டாதிருந்தது பயமாக இருந்தது. ஏறியதிலிருந்து தண்ணீர் குடிக்காதது ஞாபகத்துக்கு வர, சற்று ஆசுவாசமாகிப் போனது.

” டீக்கடையில நிறுத்துங்க. டீ குடிச்சிட்டுப் போகலாம். ”

நவீன் சொல்ல, அவர் தலையை மட்டும் ஆட்டினார். சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல பேருந்தோ, ரயிலோ கிடையாது. ஊரடங்கு வேறு அறிவிக்கப் போகிறார்கள். கொரோனா ரொம்பத்தான் ஆட்டம் போடுகிறது என்று நினைத்துக் கொண்டான்.

இரண்டு மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தவனை வேலைக்கு வரவழைத்தது நிர்வாகம். அப்போது இரண்டு ஊரடங்குகள் கடந்திருந்தன. மார்ச் மாதத்தின் மத்தியில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு ரயிலில் அடித்துப் பிடித்து ஊருக்கு வந்தவனைப் பார்த்து அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இரண்டு மாதங்கள் அலுப்பும், சலிப்புமாக கழிந்தாலும் வேலைப்பளு இல்லாமல் செல்போனே கதியென்று கிடந்தவன் மெதுவாக சென்னைப் போய் சேர்ந்தான். பத்து தினங்கள் ஆகவில்லை. சக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் வர அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. அதோடு கொரோனாவின் தீவிரமான பிடியில் சென்னை திக்குமுக்காடியது.

” தம்பி எப்படியாவது ஊர் வந்து சேர்ந்துடுப்பா. அங்க இருந்தா உனக்கும் கொரோனா வந்துடும்,” என்று அம்மா கண்ணீர் வடித்தாள்.

நவீன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் தொழிற்சாலை அரியலூரிலிருந்தது. அங்கிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை வந்த லாரி திரும்பியபோது மேலதிகாரியின் சிபாரிசோடு நவீன் அதில் தொற்றிக்கொண்டான்.

டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்.

” ஏண்ணே…?”

அவர் எதுவும் பேசாமல் இடுப்பில் சொருகி வைத்திருந்த உள்ளங்கையளவு பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டார். நவீனுக்குத் திகிலேறியது.

” டிரைவிங்ல குடிக்கிறீங்களேண்ணே. தப்பில்ல….?”

ஏற்கனவே லாரிக்குள் உட்கார முடியவில்லை. இன்ஜின் அருகாமையிலிருந்ததில் சீட் கொதித்தது. ஏசி பேருந்திலோ, ரயிலிலோ சென்று பழக்கப்பட்டவனுக்கு அக்கொதிப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் அவர் குடித்த சரக்கின் நாற்றம் வேறு குடலைப் புரட்டியது.

” நேத்திக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கி வண்டியெடுத்தேன். சென்னைக்குப் பன்னண்டு மணிக்கி வந்தேன். லோடை எறக்கி வுட்டுட்டு படுத்தா பொட்டுத் தூக்கம் வரல. மறுபடி விடியக்காலையில கெளம்ப வேண்டியதாப் போச்சி. ஒடம்பெல்லாம் அசதியா இருக்கு. கொஞ்சம் உள்ளத் தள்ளலைன்னா ஒளுங்கா ஊர்போயி சேரமுடியாதுப்பா.”

டிரைவர் பீதியைக் கிளப்பினார். பின்னால் வந்த கார்கள் விர், விர்ரென்று முந்திக்கொண்டு விரைந்தன. எதிர்த்திசையில் வாகனப்போக்குவரத்து பெரிய அளவிலில்லை.

அன்றிலிருந்து சென்னை உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவித்திருந்தார்கள். பாஸ் வாங்கிக்கொண்டு சொந்த வாகனத்தில் சென்னையை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. வலுவான காரணங்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலைமை மாறி பணத்துக்காக பாஸ் வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கிளம்பிய அநேகருடன் கொரோனாவும் கிளம்பிற்று. இதனால் தாக்கம் குறைவாயிருந்த பகுதிகளில் எண்ணிக்கை கூடத் துவங்கிற்று.

” அவந்தான் ஏவிவுட்டான்னு சொல்றாங்களே தம்பி… உண்மையா…?”
டிரைவர் அப்பாவியாக கேட்டார்.

” ஏவிவிடறதுக்கு அதென்ன பில்லி, சூனியமா…’ என்று நினைத்துக்கொண்டவன்,

” தெரியலையே…” என்றான் மெதுவாக. அரியலூர் எப்போது வருமென்றிருந்தது.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊரையும் கடக்கும்பொழுது நாகர்கோயிலுக்கான தூரம் நீண்டுகொண்டே போவது போலிருந்தது. ரெக்சினால் ஆன சீட் கட்டை போலிருந்ததில் உட்காருமிடத்தில் வலி உண்டானது. நவீன் சில நிமிடங்களுக்கொரு முறை அப்படியும், இப்படியுமாக உடலை அசைத்து நெளிந்தான். டிரைவர் சிரித்தார்.

“சொகுசு பஸ்ஸுல போயி பளக்கமாயிருக்கும் ஒங்களுக்கு. இந்த கட்டவண்டி நாலுநாளு ஒங்க கட்டைய சாய்ச்சிப்புடும் பாருங்க. படுத்தா எந்திரிக்க மாட்டீங்க…..” என்ற டிரைவர் கரையேறிய பற்கள் தெரிய சிரித்தார்.

பக்கவாட்டிலிருந்து வெப்பக்காற்று வீசிற்று. காற்றில் அனல் கங்குகள் தெறித்தன. முழுக்கை சட்டை போட்டு வந்தது தவறென்று நவீனுக்கு அப்போதுதான் உறைத்தது. இரு பொத்தான்களை விடுவித்தான். போட்டிருந்த மாஸ்க் பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. ஆரம்பத்தில் மூச்சுத் திணறுவது போன்ற உணர்வு. அதற்கே மனம் பீதியடைந்துவிட்டது.

” மாஸ்க்கைப் போட்டா மூச்சுவிட முடியாம பெரிய அவஸ்தையா இருக்குடா……” என்று நண்பன் சொன்னபோதுதான் அது பொதுவான பிரச்சனை என்று புரிந்தது.

டிரைவர் மாஸ்க்கை தாடைக்குப் போட்டிருந்தார். சோதனைச்சாவடி கண்களில் தென்பட்டால் வெடுக்கென்று இழுத்துவிட்டுக் கொண்டார். அவர் அணிந்திருந்த நிறமிழந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. இன்ஜின் சூட்டைக் கக்கி அவரை வியர்வையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

” வண்டி உங்களுதா…?”

நவீன் நேரத்தைக் கடத்த கேட்டான்.

” என்னைப் பாத்தா லாரி ஓனர் மாதிரியா தெரியிது. நான் வெறும் டிரைவர்தான் தம்பி. எங்க ஓனருக்கு ஆயிரம் லாரிகள் இருக்கு. பெரிய ஆளு அவரு. எப்பவும் வெள்ளையுஞ் சொள்ளையுமா பாக்க சினிமா நடிகராட்டம் இருப்பாரு. இந்த ஆறு வருசத்துல நானே அவர பத்து தடவதான் பாத்துருப்பேன். அவருக்கு கீள ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தனுக்கு கீளதான் நாங்க வேலப் பாக்குறோம். ”

” இதுக்கு முன்னாடி எங்க வேலைப் பார்த்தீங்க…?”

” காய்கறி லாரி ஓட்டிக்கிட்டிருந்தேன். அப்ப வடநாட்டுக்கெல்லாம் போயிருக்கேன். வெங்காயம் ஏத்துமதி பண்ண மகாராஸ்ட்ரா போவோம். இருவது வருசமா அந்த வேலப் பாத்துட்டு முடியாம வந்துட்டேன். என் சகலை இந்த வேலைய வாங்கிக் குடுத்தான். அவனும் இங்கதான் வேலப் பாக்குறான்.”

அவர் பேசியபடியே டீக்கடையருகில் லாரியை நிறுத்தினார். நவீன் அவரைக் கூப்பிட்டபோது மறுத்துவிட்டார்.

” ஏற்கனவே வயறு கலக்கியடிக்கிது தம்பி. ராத்திரி புரோட்டா சாப்புட்டேன். அது செரிக்கலையா என்னான்னு தெர்ல. வயறு கடமுடங்குது. நீங்க குடிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் மிஸஸ் கிட்ட பேசிடுறேன்”

அவர் கைக்கு அடக்கமாயிருந்த அந்த நோக்கியா செல்போனில் எண்களைத் தட்டத் தொடங்கினார். நவீன் கீழே குதித்தான். இடுப்பில் கைவைத்து உடலை வளைத்து ஆசுவாசித்துக் கொண்டான்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே டீக்கடையும் கொதித்துக் கிடந்தது. பாய்லருக்கருகில் நின்றிருந்த மனிதர் நவீனைக் கண்டதும் கழுத்தில் கிடந்த மாஸ்க்கை மூக்கில் மாட்டிக்கொண்டார்.

மாஸ்க் டீ வடிகட்டும் துணி நிறத்திலிருந்தது. நிறமே அதுதானா அல்லது துவைக்கப்படாமல் அப்படி ஆகிப்போய்விட்டதா என்று புரியவில்லை. நவீன் தயக்கத்தோடு காலடி எடுத்து வைத்தான்.

” வாங்க சார்… மசாலா டீ . ஏலக்கா டீ, இஞ்சி டீ இதுல எது குடிக்கிறீங்க…?”

அவர் சுறுசுறுப்பாய் கிளாசைக் கழுவினார். டிரேயில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கூட்டம் திடீரென்று மேலே பட்ட தண்ணீரில் அதிர்ந்து விலகின. நவீன்,

” இஞ்சி டீ…” என்றான்.

” எங்கேயிருந்து வர்றீங்க சார்…?”

” விழுப்புரத்துலேருந்து ” என்றான் சட்டென்று. சென்னை என்ற பேரைக் கேட்டாலே எல்லோருக்கும் அலர்ஜியாகிவிட்டது. சென்னை கனவுகளை வசமாக்கும் நகரமாக இருந்தது ஒரு காலம். சென்னைக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. இப்போது, சென்னையிலிருந்தால் பிழைக்க முடியாது என்று வார்த்தைகள் மாறிவிட்டன.

தப்பித்தால் போதுமென்று சனம் சொந்த ஊரைப் பார்க்க ஓடுகிறது. கடைக்காரர் டீ கிளாசை மேசை மீது வைத்தார். நவீன் பட்டும்படாமல் பெஞ்சில் அமர்ந்தான். எங்கே கிருமி அதில் ஒட்டியிருந்து தன்மீது தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்.

மடக், மடக்கென்று டீயைக் குடித்தவன் ரூபாய் நோட்டை நுனிவிரலால் தந்துவிட்டு லாரியருகில் வந்து பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தம் செய்து கொண்டான். சுத்தம் செய்வதற்கு முன் பாட்டிலை தொட்டுவிட்டது ஞாபகத்துக்கு வர மீண்டும் திரவத்தை உள்ளங்கையில் நிரப்பி பாட்டிலை மெழுகினான்.

” தம்பி, கெளம்பலாமா…?”

டிரைவர் குரல் கொடுக்க பாய்ந்து ஏறிக்கொண்டான். ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது போல கியரை ஒரு சுற்று சுற்றி வண்டியைக் கிளப்பியவர்,

” இன்னும் ஒருமணி நேரத்துல அரியலூர் போயிடலாம்,” என்றார். லாரியின் நெற்றியில் ‘ஒண்டி கருப்பண்ணசாமி துணை’ என்று எழுதப்பட்டிருந்தது. நவீன் அதைப் படிப்பதைக் கவனித்தவர்,

” ஓனரோட கொலதெய்வம். ஆயிரம் லாரியிலயும் இதான் எளுதியிருக்கும்,” என்றார்.

” ரெண்டாவது ஊரடங்கு அமல்ல இருந்தப்ப அரசாங்கம் தளர்வுகளை அறிவிச்சுதே. அப்ப வண்டி ஓட்டினீங்களாண்ணே..?”

” ஓட்டாம… மொத ஊரடங்க சமாளிச்சிட்டேன். ரெண்டாவது அறிவிச்சப்ப பகீர்ன்னுச்சி. ஏன்னா கையில் காக்காசு கெடையாது. இருந்ததக் கொண்டுதான் மொத ஊரடங்க கொண்டாடுனோம். நல்லவேளையா கட்டட வேல நடக்கலாமுன்னு அரசாங்கம் அறிவிச்சிது. லாரி ஏறிட்டேன். ஒண்ணு பசியால சாவணும், அல்லது கொரோனாவால சாவணும். வூட்டுல எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. ரெண்டு புள்ளைங்க எனக்கு. அதுங்க பசியோட கெடந்தா என்னால தாங்கிக்க முடியிமா சொல்லுங்க…”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு டெம்போ வேன் மிக வேகமாக கடந்து போனது.

” தூ…”

மிகவும் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தார். ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவரது இடது கை V வடிவில் வளைந்திருந்தது. முழங்கையின் மேற்பரப்பில் பூரான் வடிவ தையல் ஓடியிருந்தது. அவர் அனிச்சையாக அந்தத் தையலை அடிக்கடி தடவி விட்டுக்கொண்டார்.

” ஒருதடவ உள் கிராமம் ஒண்ணுக்கு லோடு அடிக்க வேண்டியிருந்தது. அது சிங்கிள் ரோடு. நான் நிதானமாத்தான் போயிக்கிட்டிருந்தேன். எதுத்தாப்ல வந்த பிரைவேட் பஸ் வேகமா வந்து மோதுனதுல லாரி கவுந்து போச்சி. எனக்கு பெருசா அடிபடல. சோத்தாங்கால் பிராக்சர் ஆயிப்போச்சி. கை சதை கிளிஞ்சிடுச்சி. அப்ப போட்ட தையல்தான் இது.”

நவீன் கேட்காமல் அவரே சொன்னார். நவீன் அவரைக் கண்களால் அளந்தான்.

அவர் உதடுகள் உலர்ந்து போயிருந்தன. கண்களுக்கு கீழே இரு பைகள் கனத்து தொங்கின. அடர்த்தியில்லாத செம்பழுப்பு நிற மயிர் காற்றுக்கு மடிந்து நிமிர்ந்தது.

பிளாஸ்டிக் ஒயர் பின்னிய நாற்காலியில் ஒரு அழுக்கான தலையணை போட்டு அவர் அதில் அமர்ந்திருந்தார். ஒயர் முடிச்சுகள் சில இடங்களில் அறுந்திருந்தன. உட்காருமிடத்தில் ஒயர் பின்னல்கள் சுமை அழுத்தத்தில் கீழ் நோக்கி தொய்ந்திருந்தன. நாற்காலிக்குப் பொருத்தமாக செய்து வைத்தது போல அவர் அதில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் வெகு நிச்சயமாக காய்த்துப் போயிருக்கக்கூடும் என்று நவீனுக்குத் தோன்றியது.

அவர் இன்ஜினுக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தார். அதன் சூட்டுக் கொதிப்பு அவரை உருக்கிவிட்டதா அல்லது மெலிந்த தோற்றம் அவரது இயல்பான உடல்வாகா என்று அவனுக்குத் தெரியவில்லை.

” இருவத்தாறு வருசமா லாரி ஓட்டுறேன். ” அவரே திடுமென கூறினார்.

‘ பயணங்கள் மனதுக்குப் பிடித்தமானவை. ஆனால் இவரது பயணம் இவருக்கு எப்படிப்பட்டதாயிருக்கும்…’

நவீன் யோசித்தபடியே வெளியே பார்வையை பதித்தான். லாரி அரியலூர் எல்லைக்குள் நுழைந்திருந்தது. அதற்குள் முழுதாய் ஏழு மணி நேரங்கள் கரைந்திருந்தன. நவீனுக்கு இடுப்பும், முதுகும் கழன்று விடும் போலிருந்தது.

அவ்வபோது தன்னையுமறியாமல் உறங்கி கழுத்து மளுக், மளுக்கென்று சாய்ந்ததில் திரும்ப முடியாமல் வலி பின்னியெடுத்தது. இன்னொரு ஏழு மணி நேரத்தைக் கடந்தாக வேண்டுமே என்றெண்ணி அவன் மலைத்துப் போனான். டிரைவர் லாரியை தொழிற்சாலை கேட் அருகில் நிறுத்தினார்.

” தம்பி எறங்கிக்கிறீங்களா…?”நவீன் நூறு ரூபாய்த் தாளை இன்ஜின் மேல் வைத்தான்.

” வச்சிக்குங்கண்ணே…”

” இதெல்லாம் எதுக்கு தம்பி…”

அவர் நெளிந்தார். கண்கள் விரிந்தன. வெள்ளைப் பரப்பில் சிவப்பு நிறமிகள் சாயப்பூச்சு போல படர்ந்திருந்தன.

” பரவாயில்லண்ணே. பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…”

நவீன் பையை மாட்டிக்கொண்டு பக்கவாட்டுக் கைப்பிடியை பற்றி திரும்பி டயரில் கால் வைத்து பொத்தென்று குதித்தான்.

” தம்பி ஞாபகம் வச்சிக்குங்க… வரட்டுமா…?”

டிரைவர் குனிந்து சல்யூட் அடித்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

அடுத்த அரைமணி நேரத்தில் நாகர்கோயில் செல்லும் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் கிளம்பிற்று. இந்த டிரைவர் முன்னவர் போலில்லை. கிட்டத்தட்ட நவீனுக்கு சமவயதுக்காரன் போலத் தெரிந்தான்.

முகம் கடுகடுப்பாயிருந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. நகர எல்லையைத் தாண்டியதுமே வண்டி வேகமெடுத்தது. ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே மறுகையால் அவன் சிடி பிளேயரை ஓடவிட்டான்.

டார்லிங்கு டம்பக்கு பாட்டு அதிர்ந்தது. விழுப்புரத்தில் சாப்பிட்ட வயிறு பகபகவென்றிருந்தது.

” ஹோட்டல் எதுனா வந்தா நிறுத்துங்க…”

” சரி…”

அவன் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான். அந்த லாரி புதிதாயிருந்தது. மஞ்சள் பெயிண்டின் மினுமினுப்பு வெயிலில் பளபளக்க வேகமாய் பறந்தது. முகப்பில் ‘ செல்லாண்டியம்மன் துணை ‘ என்று எழுதப்பட்டிருந்தது.

‘ அந்த செல்லாண்டியம்மன்தான் நம்மளை பத்திரமா கொண்டுபோய் சேர்க்கணும் ‘ என்று நவீன் நினைத்துக்கொண்டான்.

டிரைவர் ஒரு கையால் செல்போனைப் பிடித்தபடி அடிக்கடி யாரிடமோ பேசிக்கொண்டே வந்தான். பாட்டு சத்தத்தில் எதிராளியின் குரல் கேட்காமல்,

” சத்தமா பேசித் தொலையேன்…” என்று கத்தினான்.

ஏறியதுமே சட்டையைக் கழற்றி சேரில் மாட்டி விட்டவனது கழுத்தில் சுண்டுவிரல் நீளத் தாயத்து தொங்கியது. கருப்புக் கரையிட்ட சிவப்பு பனியன் அணிந்திருந்தான். முகக் கவசத்தைக் காணவில்லை. வண்டி திருச்சி பைபாஸிலிருந்த அந்த சுமாரான ஹோட்டல் முன் நின்றது. கடைக்காரர் முகக்கவசம், கையுறை சகிதம் காட்சி தந்தார். நவீன் இரு பார்சல்கள் வாங்கி ஒன்றை டிரைவரிடம் தந்தான்.

” எனக்கு வேணாம் சார்…”

அவன் மறுத்ததை பொருட்படுத்தாமல் பார்சலை அவனருகில் வைத்துவிட்டு வந்து மரநிழலில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினான். பசித்த வயிற்றை நிரப்பி லாரியில் ஏறியபோது உச்சிவானில் சூரியன் மிதந்தது. அதற்குள் அம்மா இருமுறை போன் செய்து ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.

” கொஞ்சநேரம் பாட்டு வேண்டாமே. எனக்குத் தூக்கம் வருது,” என்ற நவீனை அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான். பின்,

” பாட்டுப் பாடலைன்னா எனக்குத் தூக்கம் வந்துடும் ” என்றான் நிதானமாக.

நவீனுக்குத் திக்கென்றானது. இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைப்பாக அமர்ந்து பக்கவாட்டில் நகரும் மரங்களைப் பார்க்கத்துவங்கினான்.

” சிங்கம், சிங்கம் ஈஸ்வர சிங்கம்…”

பாட்டு அலறத் துவங்கியது. சிங்கம் படத்தை கோயமுத்தூர் சித்தப்பா வீட்டுக்குப் போனபோது அங்கிருந்த மால் ஒன்றில் நவீன் பார்த்தான். மாலில் இளஞ்சிட்டுகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நடமாடிக் கொண்டிருந்தன.

சினிமாவின் மீதான ஈர்ப்பு பறிபோய் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனை சித்தப்பா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். அது ஞாபகத்துக்கு வர தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“சார் சூர்யா ரசிகரா…?”

டிரைவர் திடீரென்று கேட்டான். அவனது கடுகடுத்த முகத்தின் இறுகினத்தன்மையில் லேசான இளக்கம். எதையோ சொல்லத் துடிக்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிய,

“ரசிகர்கலாம் இல்ல. ஆனாப் பிடிக்கும் ” என்றான் நவீன். அவன் பாட்டு சத்தத்தைக் குறைத்தான்.

“நமக்கு தலதான் எல்லாம். நான் அவரோட தீவிர பேன். அவர் படம் ரிலீசான அன்னிக்கி மொத ஷோ மொத வரிசையில ஒக்காந்து பாத்துடுவன். அவரு பேரை நெஞ்சில பச்சக்குத்தி வச்சிருக்கன் பாருங்க.”

அவன் பெருமையாகக் காட்டினான். அவனுக்குத் தன்னை திறந்து காட்டிவிட்ட திருப்தி. அதற்காகத்தான் தூண்டில் போட்டதே. நவீனுக்குப் புரிய மேலும் நாலைந்து கேள்விகளைக் கேட்டான். எல்லாமே தல பற்றிய கேள்விகள்.

பேசுவதை நிறுத்திவிட்டால் பாட்டு சத்தத்தைத் கூட்டிவிடுவானே என்கிற பயம். அவன் உற்சாகமாகப் பேசினான். சாலையில் லாரியின் வேகம் குறைந்திருந்தது. சில வாகனங்கள் கடந்து போயின.

“தலய ஒருதடவ நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசை. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கன். வூட்ல அதுக்கு இதெல்லாம் புரியாது. ஒளுங்கா சம்பாதிய்யா, அத வுட்டுட்டு தல, கிலன்னு அலையிறியேன்னு கோச்சிக்கும். ”

“கல்யாணமாயிடுச்சா…?”

“இப்பதான் ஆறு மாசத்துக்கு முந்தி ஆச்சி. தல படத்த வச்சி அதுக்கு முன்னாடி தாலி கட்டுனன். என்னப் பொறுத்தவரைக்கிம் அவருதான் கொலதெய்வம். ”

” எத்தனை வருஷமா லாரி ஓட்டுறீங்க…?”

கேள்வி மூலம் நவீன் அவனை மடைமாற்றிவிட்டான். அவன் முகத்தில் முன்பிருந்த பளீர்த்தன்மை மறைந்திருந்தது.

” அஞ்சு வருசமா ஓட்டுறன்” என்றான் அசிரத்தையாக.

” முகக்கவசம் அணியறது பாதுகாப்பு. நீங்க ஏன் அணியல…?”

” அதப் போட்டுக்கிட்டா மூச்சடைக்கிற மாதிரி இருக்கு. எரிச்சலா வருது. லாரி ஒட்டுறதுல கவனமில்லாம போயிடுது. அதான் பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கன்” என்று அவன் சட்டைப் பையைத் தொட்டுக்காட்டினான். பின்,

” சிமெண்டு கம்பெனியில வேலப் பாக்குறீங்களா சார்…?’ என்றான்.

” ஆமா… சென்னையில இருக்க ஆபீஸுல வேலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. எவ்ளோ நாள்தான் சும்மாவே அங்க உட்கார்ந்திருக்கறது. அதான் கிளம்பிட்டேன்.”

” உங்கள மாதிரி உத்தியோகம் பாக்குறவங்களுக்கு பிரச்சினையில்ல.”

அவன் அதற்குப் பிறகு பேசவில்லை. மதுரை கடந்து கோவில்பட்டியும் விசுக்கென்று மறைந்து போயிருந்தது. சூரியன் மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருக்க, வானில் சோகையான நீலம் படிந்திருந்தது. வெள்ளை மேகங்கள் சில ஊர்ந்து போயின.

” ஒரு அஞ்சு நிமிசம் எறங்கிட்டு வந்துடறன் சார்…”

அவன் வண்டியை அந்த அரசமரத்தினருகில் ஓரங்கட்டிவிட்டு இறங்கினான். மரத்தையொட்டிய சந்திலிருந்து நைட்டி மேல் துப்பட்டா அணிந்த பெண்ணொருத்தி ஓடிவந்தாள். கீரைத்தண்டு போல் மெல்லிசாய் இருந்தாள். முகமும், தாலிக்கயிறும் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்தது. அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் அவள் நெருங்கி வந்திருந்தாள்.

” நைட்டு வந்துருவீல்ல…”

அவசரமாக கேட்டாள். கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் திரள் போல் நின்றிருந்தவளுடைய கண்களில் ஒருவித தவிப்பு.

” லாரிய பேக்டரியில வுட்டுட்டு பத்து மணிக்கெல்லாம் வந்துருவன்.”அவன் காது குடைந்தபடியே சொன்னான்.

” காசு வச்சிருக்கியா….நைட்டு சோறாக்கணும்…”

மடித்து கட்டியிருந்த கைலியைத் தூக்கி வலது பக்கமிருந்த டிரவுசர் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் நிமிர்ந்து உள்ளே அமர்ந்திருந்த நவீனைப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

கன்னங்களில் தேமல் படர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்து வெடித்திருந்தன. விலா எலும்புகள் புடைத்திருந்தன. துப்பட்டா வேலிமுள்ளில் மாட்டிய துணிபோல் படபடத்தது.

நவீன் எங்கோ பார்ப்பதுபோல் அவர்களிருவரையும் பார்த்தான். முதலில் ஏறிவந்த லாரியின் டிரைவர் ஞாபகத்துக்கு வந்தார். மூவர் முகத்திலும் ஒத்த சாயலிருந்தது.

நவீன் லாரியை விட்டு இறங்கியபோது அந்த மாத சம்பளம் அவனுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.

செய்வலர்: செமிகோலன்

எகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்

எகிப்திய எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமரிசகர், 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தாரிக் இமாம் . ‘தி செகண்ட் லைப் ஆப் கான்ஸ்டன்டைன் கவபி’ மற்றும் ‘தி சிட்டி ஆப் எண்ட்லஸ் வால்ஸ்’ உட்பட பத்து நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். எகிப்தின் மதிப்பு மிக்க சவிரிஸ் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கலாச்சார பேரதிகார அமைப்பின் ‘ஸ்டேட் இன்சென்டிவ் அவார்ட்,’ எகிப்திய கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய விருதான “சு’அத் சபாஹ் பரிசு,” மற்றும் ஸ்பானிஷ் மியூஸியோ டி லா பாலாப்ராவின் சிறந்த குறுங்கதை பரிசு பெற்றவர். மாய யதார்த்தம், மிகுகற்பனை உட்பட பரிசோதனைத் தன்மை இமாமின் எழுத்தைத் தனித்து நிற்கச் செய்வன.

மொழியாக்கம் செய்யப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா? ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? உங்கள் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டபின் உங்கள் எழுத்து முறையில் எந்த தாக்கமும் ஏற்பட்டிருக்கிறதா?

ஒவ்வொரு எழுத்தாளனும் தனது இலக்கியப் பிரதியை ஒட்டுமொத்த மானுடத்துக்கும் அளிப்பதாக நினைத்துக் கொள்கிறான், அது உண்மையும்கூட. ஆனால் நிஜத்தில், அவனது பிரதி அந்த “மானுடத்தை” சென்றடைய வேண்டுமென்றால் அது மொழிபெயர்ப்பால்தான் சாத்தியப்படுகிறது. உள்ளபடியே சொல்வதானால், எனக்கு மொழியாக்கம் குறித்து அக்கறை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, எனக்கு அதில் இடமில்லை. ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்கள், அவர்கள் அளிக்கும் வாய்ப்பை வரவேற்கும் பதிப்பாளர்கள் சார்ந்த விஷயம் இது. இரண்டாவதாக, இது இன்னும் முக்கியமானதும்கூட, நான் அரபியில், எனக்கு ஆளுமை வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மொழியின் அழகியலுக்கு ஏற்ப, எழுதுபவன். ஆக, நான் எழுதும் நடை எனக்கு திருப்தி கொடுப்பதாக இருக்கிறது. இதில் எனக்கு இழப்பு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. என் எழுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்வதும் அல்ல. அப்படி இருப்பது மிக அதீத அடிமைத்தனம் போன்றது என்பதுதான் என் பார்வை. என்னைப் பொறுத்தவரை, இதை நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, ஒவ்வொரு வாசகனும் அத்தனை வாசகர்களையும் பிரதிநிதிப்படுத்துபவன். என்னைப் பொறுத்தவரை, அரபி மொழி அத்தனை மொழிகளையும் பிரதிநிதிப்படுத்துகிறது.

எழுதும்போதோ அதற்கு பின்னோ, நான் மொழியாக்கம் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை. அப்படியானால் மொழியாக்கம் முக்கியமில்லை என்று அர்த்தமாகுமா? இல்லை. அது நிச்சயம் முக்கியமானது. பதிப்புத் துறையாகவும் பிற மொழிகளைச் சென்றடைய உதவுவதிலும், ஆங்கிலமே உலகின் முதன்மை மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் முதலில் சொன்னது போல், நான் இந்த ஆட்டத்தில் இல்லை. வெளிப்படையாய்ப் பேசினால், எனக்கு இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் இல்லை. புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது கெய்ரோ வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும் விருப்பம் உண்டா என்றோ, அவர்கள் வரும் இடத்தில் “இருக்க” வேண்டும் என்றோ என்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவது உண்டு. எனக்கு இதில் எல்லாம் நிச்சயம் எந்த ஆர்வமும் இல்லை.

வெளிப்படையாய்ச் சொல்கிறேன். என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் என்னை கடந்த காலத்தில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் நிறைவு பெறவில்லை. காரணம், அவர்கள் அளித்த எடிட்டோரியல் பரிந்துரைகள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கவில்லை. பிரதியின் குறிப்பிட்ட ஒரு கூறு விரித்துரைக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது, நான் முக்கியத்துவம் அளிக்காத ஒரு கூறு அழுத்திச் சொல்லப்பட வேண்டும் என்று சொல்வார்கள். முழு உண்மையைச் சொன்னால், இதில் என் சோம்பேறித்தனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலையாய் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் அது அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. அவற்றைத் தள்ளிப் போடவே எப்போதும் முயற்சி செய்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் அவை தாமதமாகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன என்றால், மதிப்புமிக்க ஒரு வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என்ற வருத்தத்துக்கு மாறாய் உண்மையாகவே அப்பாடா என்றுதான் இருக்கிறது.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, அதிலும் குறிப்பாக உணர்வளவிலும்கூட ஒப்பீட்டளவில் நெருக்கமாய் உள்ள மெடிட்டரேனிய ஐரோப்பிய வாசகர்களை விட தொலைவில் உள்ள பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க வாசர்களுக்காக, எப்படிப்பட்ட பிரதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி, சிக்கலான ஒன்று. சில மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அராபிய உலகம் என்பது மாலைச் செய்தியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளின் கோர்வை. அவை நேரடியாய் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்க சில சமயம் முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர்களும்கூட சுதந்திரமாய் முடிவெடுப்பதில்லை. என்ன இருந்தாலும் பதிப்புத் துறை ஒரு வர்த்தகம், அதில் விற்பனைத் துறை மிக முக்கியமான ஒன்று. எனவே தேவைப்பட்ட விஷயம் ஒரு பிரதியில் இல்லை என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் சொல்வதை, இலக்கியம் வேறு அது உருவான காலக் கணம் வேறு என்று நான் பிரித்துப் பேசுவதாய்க் கொள்ளக் கூடாது. மாறாய், அது இக்கட்டான காலகட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அழகியல் பார்வையில், ஒரு செய்தித்தாள் படிப்பது போன்ற ஒரு எளிய வடிவமல்ல இலக்கியம்.

நான் சொல்வது மொழியாக்கம் செய்பவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக் கூடாது, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் அரபு மொழி இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் எப்படி அத்தனையையும் அறிந்து கொண்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்? ஒரு அராபிய விமரிசகரோ வாசகரோ கூட இதைச் செய்ய முடியாது. எனவே, இத்தனை பெரிய உருவாக்கத்திலிருந்து சிறிய எண்ணிக்கை கொண்ட தலைப்புகளுக்கு வடிகட்டித் தரும் “மடைகளை” மொழிபெயர்ப்பாளர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது: மதிப்புமிக்க பரிசுகள் வென்ற நாவல்கள், தம் தாயகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவை, விற்பனைச் சாதனை படைத்தவை, இது போல். மொழிபெயர்ப்பாளர்கள் சிக்குண்ட முக்கோணத்தின் மூன்று சுவர்கள் இவை. ஆனால் எந்த இலக்கியப் படைப்புகள் சிறந்தவை என்றோ, எவை மதிப்புக்குரியவை என்றோ, எவை மிக உயர்ந்த தரத்தில் அமைந்தவை என்றோ தீர்மானிக்கத்தக்க ஆதர்ச அளவைகள் இவை என்று சொல்வதற்கில்லை.

என் நாவல்களில் இரண்டு மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டும் இதாலிய மொழியில், ஒரே மொழிபெயர்ப்பாளரால்- பார்பரா பெனினி. பெனினி தன் பார்வைக்கு ஏற்ற வகையில் இயங்குபவர். இதாலிய பதிப்பாளர்களின் மரபார்ந்த நெறிமுறைகளையும்கூட சாராதவர். அதைவிட முக்கியமாக, புதிய விஷயங்களை, அவான் கார்டை ஆதரிப்பவர். அவர் எகிப்தில் வாழ்ந்திருக்கும் காரணத்தால், அதன் இலக்கியச் சூழலை, இடையில் இருப்பவர்கள் மூலமல்ல, உள்ளிருந்தே அறிந்திருக்கிறார். நான் அவரை இதுவரைச் சந்தித்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களால், தன் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுயமாக தேர்ந்தெடுக்கிறார். அவற்றின், “இலக்கியத்தன்மை.’ மட்டுமே அவரது அளவுகோல். தனக்கு பிடித்தவற்றை மொழிபெயர்த்து, அதன் பின்னரே அவற்றைப் பதிப்புக்கும் சாத்தியங்களைத் தேடுகிறார். அவற்றை பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. என் பார்வையில்,அவர் ஒரு தீரமிக்க மொழிபெயர்ப்பாளர். ஒரு படைப்பாளியைப் போல் சாகசத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார், அதற்கான விலையையும் ஏற்றுக் கொள்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளருக்கு பொது வெளியில் நான் இப்படி நன்றி சொல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேர்முகத்தின் பின்புலத்தில் இதைச் சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நீங்கள் பரிசோதனை முயற்சிகளை அஞ்சும் எழுத்தாளரல்ல. பிற எழுத்தாளர்கள், இலக்கிய மரபுகள், பாணிகளின் தாக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். தா’ம் அல்-நாம் இதற்கு ஒரு பிரத்யேக உதாரணம்- யாசுநாரி கவாபாட்டாவின் ‘ஹவுஸ் ஆப் தி ஸ்லீப்பிங் பியூட்டிஸ்’ மற்றும் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘மெமரீஸ் ஆப் மை மெலான்கலி வோர்ஸ்’ ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நாவல் அது. ஆனால் அதே சமயம் அது ஆயிரத்து ஒரு இரவுகளின் வடிவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அரபி அல்லது அரபியல்லாத இலக்கியம், எது உங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது? இப்போது நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்?

எனக்கு எழுத்தும் பரிசோதனை முயற்சியும் வேறல்ல. மொழியிலும் யதார்த்தத்தை விவரிப்பதிலும் உவமைத்தன்மை கொண்ட இலக்கியத்தை விரும்புகிறேன். எனது எழுத்து கவித்துவம் கொண்டதாய் இருக்கிறது என்று சிலர் விவரித்ததுண்டு. நான் சொல்வதை அது உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்: என்னைப் பொறுத்தவரை, என் எழுத்தில் உள்ள கவித்துவ கூறுகள் உரைநடையைக் காட்டிலும் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்வது அதில் மறைந்துள்ள கவித்துவத்தை வெளிப்படுத்தவே, வெறும் தகவல்களைத் தெரிவிப்பதற்கு அல்ல.

பிரதிகள் ஒன்றையொன்று எழுதிக் கொள்கின்றன என்று நம்புகிறேன். ஒரு இலக்கியப் படைப்பின் சுனைகள் பல்வகைப்பட்டவை, அதில் இலக்கியமும் அடக்கம். இலக்கியமும் இலக்கியத்தை எழுதிக் கொள்கிறது, இலக்கியம் குறித்து மரபார்ந்த ஆசிரியர்கள் சொல்வது போல் நேரடி யதார்த்தமல்ல, கலையே கலையின் கருப்பொருளாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் உதாரணமாக, pastiche குறித்து நான் அச்சம் கொள்வதில்லை, என் புதிய நாவல், ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ இதையே மையமாய்க் கொள்கிறது. ஒரு புதிய கோட்பாடு இருக்கிறது, அதன்படி “பிரதி நினைவு,” என்று நான் அழைப்பதை ஒரு புதுப்பிரதி கவனப்படுத்துவதில் இது அடிப்படை பங்காற்றுகிறது. அதே நேரம், கலாச்சாரம் முதல் அரசியல் வரை தன் காலத்தை ஒரு நாவல் பிரதி அத்தனை தளங்களிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நான் நம்புவதால். தன் காலத்துக்கே பிரத்யேகமான தருணத்தில் வேர் கொள்ளவும் இதன் இயங்குதன்மை உதவுகிறது. நாவல் கலையில் கிசுகிசுப்பான குரல் மற்றும் உரத்து ஒலிக்கும் குரல் இரண்டுக்கும் இடமுண்டு. எகிப்தின் சரித்திரம் மற்றும் யதார்த்தம் பற்றி இன்னும் ஆழப் பேசும் நோக்கத்தில் நான் ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ நாவலில் ஒரு ஜப்பானிய நாவல், கொலம்பிய நாவல் மற்றும் அராபிய சரித்திர கதையாடலுடனும் போராடுகிறேன்.

இலக்கியத்தை இப்படி பார்க்கிறேன்: பிரதிகள், சரித்திரம், யதார்த்தம் மற்றும் கற்பனை குறித்து, ஒன்று பிறவற்றை நீக்கவோ பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதியாமல், முடிபற்று நிகழ்த்தும் விசாரணை. ஏற்கனவே நிறுவப்பட்ட, அல்லது முன் அடையாளம் செய்யப்பட்ட வரையறையின் சார்பின்றி தன்னைத் தானே எவ்வாறு விசாரணை செய்து கொள்கிறது என்பதுதான் ஒரு இலக்கிய பிரதிக்கு அடையாளம் அளிக்கிறது என்று நம்புகிறேன். இந்த பாணி பல எகிப்திய நாவல்களிலும் வெளிப்படத் துவங்கி விட்டது என்று. ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ வெளிவந்த அதே காலத்தில் குவைத்திய நாவலாசிரியர் புதைனா அல்-இஸ்ஸா ஒரு துணிச்சலான நாவல் எழுதினார். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட ஐந்து இலக்கியப் பிரதிகள், ‘ஜோர்பா தி கிரீக்,’ ‘ ஆலிஸ் இன் தி வண்டர்லண்ட்’, ‘பினோச்சியோ’, ‘1984’ மற்றும் ‘பாரன்ஹீட் 451’ ஆகியவற்றை உந்துவிசையாய்க் கொண்டது ‘ஹாரிஸ் சாத் அல்-அலாம்’. அந்த நாவலின் முடிவில் சென்சார் என்ற கருத்துவாக்கத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் அராபிய ஒடுக்குமுறையின் இயங்கு கருவிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கலாச்சாரக் கேள்வியினை அவர் எழுப்பினார்.

எனவே இலக்கியம் என்பது நம் யதார்த்தத்தை அதன் அத்தனை நுண்விபரங்களுடனும் புரிந்து கொள்வதற்கான ஆதார சாதனம். காலம், சுதந்திரம், மரணம் ஆகியவற்றுடன் பிணைப்பு கொண்ட இருப்பு குறித்த பெரும் கருத்துக்களில் உள்ள கருத்துருவாக்கமாகிய நான் என்ற ஆளுமை அதே நேரம் ஒரு தனி மனிதன், அராபிய, எகிப்திய எழுத்தாளன் என்ற வகையில் என் காலத்தின் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அதன் அத்தனை வரலாற்று, கலாச்சார, சமூக சிக்கல்களுடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தூய அடையாளம், அல்லது ஒருமைப்பட்ட அதிகாரம், ஏகத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது இறுதியில் சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறது.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால், பல்வேறு இலக்கிய வரிசைகள், காலகட்டங்கள், இடங்களுக்கு உரிய நாவலாசிரியர்களைச் சொல்ல வேண்டும்: நகீப் மாபூஸ், ஆல்பர் காம்யூ, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் பியூண்டஸ், முகமது ஹபீஸ் ரகாப், யூஜீன் இயனஸ்கோ, மைக்கேல் ஒன்டாட்ஜே, டோனி மாரிசன், சல்மான் ருஷ்டி, யுவான் யோசே மில்லாஸ், ஜாவியர் மாராஸ், மைக்கேல் கன்னிங்கம், பால் ஆஸ்டர்.

அராப்லிட் தளத்தில் வந்த நீண்ட நேர்முகத்தின் சிறு பகுதி. முழு பேட்டியும் இங்கு ஆங்கிலத்தில்  வாசிக்கலாம்: 

Tareq Imam: ‘The Writer Has Become Everyone’s Target’

சாலை- இரண்டு குறிப்புகள்

செல்வசங்கரன்

 

குறிப்பு ஒன்று – சாலையென்றால் ஓடும்

எனக்கு காரோட்டத் தெரியாதுதான்
ஏறிக்கொள்ளுங்கள் சாலையை ஓடச் சொல்கிறேன் என்றால்
ஒருவரும் நம்பவில்லை
ஓடுகிறேன் என்பதை சாலையையே சொல்ல வைத்தேன் அது தனிக்கதை
எல்லாரும் காருக்குள் ஏறினோம்
நான் ஸ்டீரிங்கைப் பிடித்து போஸ் கொடுத்தேன்
கீழே பார்த்தால் தலை தெறிக்கிற மாதிரி சாலை ஓட ஆரம்பித்தது
நடந்து சென்ற ஒருவர் காரை முந்தினார்
எங்கள் மூளையின் பிசுபிசுப்பை இளையராஜா தொட்டுப் பார்த்த போது
ஒரு நிமிடம் இளையராஜா என அவரிடம் கேட்டு
சாலை சோர்வடைந்தால் இறங்கி யாராவது சாலையை
தள்ளவேண்டியது வரும் என்றேன்
இதை முதலிலேயே சொல்லவில்லை என்று சண்டை செய்தார்கள்
நானே ஓடிக்கொள்கிறேனென்று
வழியில் நெல்மணியை கொத்திக் கொண்டிருந்த மைனாவை
சூவென பத்திவிட்டது சாலை
சாவகாசமாக தலையை திருப்பி மைனா சாலையை தூர விரட்டியது
யாருடைய ஸ்டாப்பும் வரவில்லை
தூங்கி எழுந்த போது சாலை ஒரே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது
ஏறிய இடம் வந்துவிட்டது இறங்குங்கள் இறங்குங்களென
அவசரப்படுத்தியதும்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையில் கவனமாக காலை வைத்து
கீழே ஒவ்வொருவராக இறங்கினோம்

 

குறிப்பு இரண்டு – தன்னு மொட்டை

சொகுசு வேனிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தன்யாவை
எல்லாரும் கொஞ்சினர்
வண்டி போகயில் ஓட்டுநர் எழுந்து வந்து குழந்தையைத் தூக்கி
மடியில் வைத்துக் கொண்டார்
இன்னொருவர் ஓட்டுநர் அருகே வந்து ஸ்டீரிங் இடிக்காதவாறு
ஓட்டுநரைத் தூக்கி மடியில் வைத்தார்
இன்னொருவர் அவர்களைத் தூக்கி மடியில் வைக்க
இப்படித் தூக்கி வைத்துக் கொண்டே அடுக்கியவாறு சென்றனர்
வண்டி எப்போதும் வென்றானைக் கடந்ததும்
ஓட்டுநர் சும்மா இராமல் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி தன்னுமா
என்று தனது வாயில் ஒன்று வைக்க அவ்வளவு தான்
ஓட்டுநரை மடியில் வைத்திருந்தவர் ஓட்டுநர் வாயிலிருந்து எடுத்து
ஒன்று இட்டுக் கொண்டார்
மாற்றி மாற்றி வாயில் இட்டுக் கொண்டே போயினர்
ஒரே நேரத்தில் அந்தக் குழந்தை
இருபத்து மூன்று பேர்கள் மடியில் இருந்தது
அவர்கள் கிடக்கிறார்கள் நான் கிச்சு கிச்சு மூட்டுகிறேனென
தூத்துக்குடி சாலையில்
தன்னைத் தானே ஓட்டிச் சாகசம் காட்டியது அந்த வண்டி
தனக்காக எல்லாரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்களென்று
மயிர்கள் குத்திட்டு நின்ற தன்னு
சுனைக்கோயில் வந்ததும் இறங்கி முதல் வேலையாக
சவரக்காரரிடமிருந்த கத்தியை தானே வாங்கி
அதன் பளபளப்பின் முன்னால் தன் மண்டையைக் காட்டி
உடலையே நன்றாக நாலாப் பக்கமும் சுழற்றி வர
மொட்டை நிகழ்வு அன்றைக்குச் சிறப்பாக நடந்தேறியது
மொட்டையின் போது உங்கள் எல்லாருக்குமாகத் தான்
ஒரு சொட்டு கூட கண்ணீர் சிந்தவில்லையென்று தன்னு சொல்ல
அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்