பேட்டி

மறதியைக் கிறுக்கலாக்கும் வார்த்தை- டி. வினய்சந்திரனோடு சாஜை கே.வி. பேட்டி

ஆங்கிலம் : சாஜை கே.வி தமிழில் : தி.இரா.மீனா

கேள்வி : “வெகுநேரம் மௌனமாக இருந்தால் உயர்ந்த தெய்வீக நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்று பயந்து காதலர்கள், அலைகளோடு சரசமாட வேகமாக கடற்கரைக்குத் திரும்புகின்றனர்.”

பேரானந்தமான கணங்களை வெளிப்படுத்தும் உங்களுடைய இந்த வார்த்தைப் பிரயோகங்களால் உங்களின் சமகாலத்தவர்களிடையே ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ‘அனகம்’ (பாவமற்றது) போன்ற கவிதைகளில் காமக் கிளர்ச்சியை மிக மெல்லிய ஊடுருவலாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். டி.எச் .லாரன்சின் Chatterley’s Lover என்ற புத்தகத்தில் மேலே சொன்ன அதே மாதிரியான சான்று – புணர்ச்சிக்குப் பின்னேயான காதலியின் அமைதியான முகம், புத்தனின் முகம் போலச் சாந்தமாக இருக்கிறது என்று இருக்கிறது — காதல் மற்றும் காமத்தின் இணவுநிலை பற்றி உங்கள் எண்ணம்?

பதில்: அடிப்படையாக மனிதன் இந்திரியம் சார்ந்தவன். காமம் என்பது வாழ்க்கையின் விழா. என்றாலும் அது கவிதை என்ற ஆத்மவுணர்ச்சிக்கு ஒரு படி கீழானதுதான். ஒன்று நிர்வாணம் அல்லது முக்தியை நோக்கிப் போகும் போது மற்றொன்று சிருஷ்டியின் உச்சத்திற்குப் போகிறது. கலைதேவதையான சரஸ்வதி தன் மடியிலிருக்க, பிரம்மா தன்னை வேதத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். எதுவானாலும் வார்த்தை வெளிப்பாடென்பது அனுபவத்திலிருந்து மிகுந்த இடைவெளி உடையதுதான்.

கே :பெரும்பாலான உங்கள் கவிதைகள் அப்ரோடைட் , சாப்போ மற்றும் கடல் ஆகியவற்றை குறிப்பாகக் காட்டுவதாக உள்ளன. அப்ரோடைட் உங்கள் கவிதையிலிருந்து ஒரு போதும் விலகாது என்று சொல்லலாமா?

பதில்: கலை தெய்வத்தின் மனித வடிவம் சாப்போ. அடக்க முடியாத அன்புடையவள். அவளை பழக்க வழக்கங்கள் தடுக்க முடியாது. குந்தியையோ அல்லது சீதையையோ நம்மால் தழுவிக் கொள்ளமுடியாது–பூமி பிளந்து, காட்டுத் தீ பரவி, முழுமையாக எல்லாம் அழிந்து விடும். அவர்கள் வியப்பின் உச்ச கட்டம். சக்தி, முடிவற்ற உள் உருமாற்றம் ஆகியவை என் கவிதைக்கான சுயம்—என்னை அது
மெய்யறிவை நோக்கிச் செலுத்துகிறது.

கே: இயற்கையிடமிருந்து நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சி , பரவசம், தெய்வீக இன்பம் ஆகியவை குறித்த கணங்கள்?

பதில்: ஓ! அது ஒரு கருநாகத்தைப் பார்த்த தருணமாக இருக்கலாம். அல்லது மிக நெருக்கமானவரை இழந்தபோது ஏற்படும் வெறுமையாக இருக்கலாம். அது மழையில் முற்றிலும் நனைந்து, நிர்வாணமாக இருப்பதைப் போன்றது. பரிகாரமென்னும் எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு செல்லும் புழுவின் யாத்திரை. வல்லூறுகளின் வானம். வெளிறிய நிலவைக் காட்டும் கடல். இமாலயத்தின் ஆழ் அமைதி. பனங்கள்ளின் இனிமை. அசோக மரத்தின் மென்மையான இலைகள். காட்டுத்தீயின் ஒன்றிய ஒலி நயமான கணங்கள். பால்வீதியின் ஆனந்தமான எல்லா ஆறுகளும், அமைதியான தண்ணீரும் மிகச் சிறிய பூவும், மிகப்பெரிய அருவியும். பனி மறைத்த நிலப்பிரதேசம். பாலைவனம். கிழக்கும்,மேற்கும் ஒலியெழுப்பிப் பறக்கும் கிளியாகச் சூரியன். துவைப்பதற்குப் போடப்படும் வெள்ளை ஆடையாக முழுநிலா. புதுநிலவின் மேல் தணியாத தாகம். முன்னோர்களின் மந்திரம் சொல்லும் உதடுகளாக புற்களின் அலகுகள்.

கே: உங்கள் கவிதைகளில் வெளிப்படுகிற சோகமான நகைச்சுவையின் மூலம்?

பதில்: பறைச்சி பெற்ற பன்னிரு குலம் எங்களுடையது (Twelve castes born of Parayi). பாக்கனார், சாட்டனார், நரநது என்ற வகை மக்கள் தேவி—காளிதேவி தன் தோற்றத்தைப் பார்த்துத் தானே நகைப்பாள்– எரிச்சல்- வெறுப்பு -நாத்திகவாதம்– –சிசிபஸ்- நம்மிடம் வியாசர் ,பாஸன், சாலிங்கர், குந்தேரா என்று… இவர்களை ஆதரிக்கும் வகையில் Borges கதைகள் எல்லாம்.

கே: பயணத்தின் போது ஏற்பட்ட மறக்க முடியாத கணங்கள் ?

பதில்: ஒரு முறை ரயில் பயணத்தின்போது அந்தக் கம்பார்ட்மென்டில் என்னையும், ஒரு சிறு குழந்தையையும், நட்சத்திர வானமும் தவிர எல்லோரும் தூங்கி விட்டனர். இன்னொரு சமயம் பனாரசில் ஒரு படகோட்டியைச் சந்தித்தேன். அவர் பெயர் தசரதன்– அயோத்தி மன்னனின் பெயராக இருந்தது. ஒரு சமயம் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சூழ்ந்திருக்க, மெக்சிகோவின் பிரமீடு உச்சியில் ’காடு’ என்ற கவிதையைப் படித்தேன். சேக்ஷ்ஸ்பியரின் வீட்டிற்கு முன்னால் ஈரேழ் வரிப்பா [Sonnet] படித்தேன். காப்பாளர் மீண்டும் அதை சொல்லச் சொன்னார். ஹெமிங்வேயின் வீட்டிற்கு முன்னால் போனபோது மழை தூறத் தொடங்கியது ; அன்று அவர் பிறந்த நாள் விழா என்பது நான் அறியாதது.

கே : உணர்ச்சி நிறைந்த கவிஞனுக்கும் ,வார்த்தைக்குமான நெருங்கிய உறவு?

பதில் : ஒவ்வொரு புதிய வார்த்தையும் கிசுகிசுப்பூட்டுகிறது. அதன் மணம் காரணமின்றி என்னைப் படபடக்க வைக்கிறது. அதுதான் பூட்டும் சாவியும். வாழ்க்கையின் நான்கு லட்சியமும் (புருஷார்த்தம்) அதுதான். அது நம் பூர்வ வாழ்க்கையையும் தொடுகிறது. மூஞ்சுரு, மயில், அன்னம், கருடன், காளை என்று தெய்வங்களுக்கு வாகனங்கள் போல கவிதை வார்த்தைகள் எனக்கு வாகனம் . சொற்களுக்கு என்று ஒருவன் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவன் உலகம் அமைதியில் பயணிப்பதாகிறது. வார்த்தை என்பது விதை, இடி, ஒருவருடைய ஆழ் மனதின் அடுக்கடுக்கான தளங்கள். அழிவில் இருந்து தொடங்கி மணவாழ்வின் உச்சம் வரை அது என்னை அழைத்துச் செல்கிறது. நானும் வார்த்தையும் ஒருசேர ஓய்வெடுக்கும் போது, கண்ணுக்குப் புலப்படாத ’பாவத்தின்’ முத்திரை தங்குகிறது. கிறுக்கலாக இருந்த மறந்து போன வார்த்தை மிக உயர்ந்த சொல்லாகிறது.

கே: Larca மற்றும் Paz டன் உங்கள் நெருக்கம்?

பதில்: லார்காவுக்கு என்னைப் போல வாழ்வும் சாவும் Gipsy-Ballad தான். ஹோமரிலிருந்து ரில்கே வரை இணைக்கிற ஒரு நூல். ஒவ்வொரு அங்கம் எழுதுவதும் காளைச் சண்டைதான். Paz நம்முடைய சகபயணி. விரிவான நம் வரலாற்று மார்க்கத்தை பகுப்பாய்வு செய்தவர். ஸ்பெயின் மற்றும் அஸ்டெக் (Aztecs) இரண்டின் பாரம்பரியமும், நவீனத்துவமும் கலந்த கலவை. தென் அமெரிக்காவைச் சேர்ந்த Cezer Vallejo என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்.

கே: மலையாளத்தில் உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்?

பதில்: நிரனது ராமதாசன், எழுத்தச்சன், சி.வி. ஆசான், உன்னி வாரியர் இவர்கள் ஒரு வகை. எனது முன்னோடிகளில் எடப்பள்ளி என்னை மிகவும் கவர்ந்தவர். ராம்ராஜபஹதூர் நவீன செவ்வியலில் (Modern Classic) அடங்குபவர். இது சாத்தியமற்ற சாத்தியம். கோடையின் வானம்பாடியாக இருந்தவர் எடப்பள்ளி.

கே: முதுமையின் கொடுமையும், தவிர்க்க முடியாத மரணமும் குறித்து?

பதில்: சிறுவயதில் ’மரணம்’ என்ற கரு பிடித்ததாக இருந்ததால் என் கவிதைகள் அது சார்ந்திருந்தன. தீர்க்கதரிசிகள், தத்துவவாதிகள்,கவிஞர்கள் போல நானும் அதை அடைகாத்துக் கொண்டிருந்தேன். அதுபற்றி சில காலம் ஆராய்ச்சி செய்தேன். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. நரை முடியும், மங்கும் பார்வையும் என்னைச் சிரிக்க வைக்கும். எனினும் சுற்றியுள்ள புறக்கணிக்கப்பட்ட முதியவர்களைப் பார்க்கும் போது, நடுக்கம் வருகிறது. ஆனால் கவிதை என்று வரும் போது நான் ’மார்க்கண்டேயன்’ போலத்தான். இறந்த கணவன் சத்யவானை மீட்டுக் கொண்டு வந்த சாவித்ரி நான். அது ஒரு வகையில் யுலிஸசின் இரண்டாவது ஒடிசி போலத்தான்.

கே: கவிஞனாக எப்படி உங்களை எப்படி மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்? ஒரு நவீனத்துவவாதியாகவா ?

பதில்: ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு என்னைப் படியுங்கள். நான் எதிர்காலத்தின் கவிஞன் என்பதை உணர்வீர்கள். பாஸ்ட் ஃபுட் போன்றதான இன்றைய இலக்கியப் போக்கை யார் விரும்புகிறார்கள்? மலையாள மொழி இருக்கும் வரை, என் வாசகன் அவன் / அவள் மண்ணையும், மரபையும் மீண்டும் என் கவிதைகளிலிருந்து கண்டறிவார்கள்.

நன்றி : Indian Literature –Sahitya Academy Feb 2013
——————————–
“காட்டிற்கு நான் என்ன பெயரிடுவேன்?
காட்டிற்கு நான் என் பெயரிடுவேன்.”

என்று ’காடு”என்ற கவிதையில் இடம்பெறும் வரிகள் தலைமுறைகளைக் கடந்த படைப்பாளராக மதிக்கப்படும் மலையாள மொழிக் கவிஞரான டி.வினய்சந்திரனின் (1946 – 2013) கவிதைகளை , அவற்றின் பரந்த உலகப் பார்வையைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.

எகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்

எகிப்திய எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமரிசகர், 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தாரிக் இமாம் . ‘தி செகண்ட் லைப் ஆப் கான்ஸ்டன்டைன் கவபி’ மற்றும் ‘தி சிட்டி ஆப் எண்ட்லஸ் வால்ஸ்’ உட்பட பத்து நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். எகிப்தின் மதிப்பு மிக்க சவிரிஸ் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கலாச்சார பேரதிகார அமைப்பின் ‘ஸ்டேட் இன்சென்டிவ் அவார்ட்,’ எகிப்திய கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய விருதான “சு’அத் சபாஹ் பரிசு,” மற்றும் ஸ்பானிஷ் மியூஸியோ டி லா பாலாப்ராவின் சிறந்த குறுங்கதை பரிசு பெற்றவர். மாய யதார்த்தம், மிகுகற்பனை உட்பட பரிசோதனைத் தன்மை இமாமின் எழுத்தைத் தனித்து நிற்கச் செய்வன.

மொழியாக்கம் செய்யப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா? ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? உங்கள் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டபின் உங்கள் எழுத்து முறையில் எந்த தாக்கமும் ஏற்பட்டிருக்கிறதா?

ஒவ்வொரு எழுத்தாளனும் தனது இலக்கியப் பிரதியை ஒட்டுமொத்த மானுடத்துக்கும் அளிப்பதாக நினைத்துக் கொள்கிறான், அது உண்மையும்கூட. ஆனால் நிஜத்தில், அவனது பிரதி அந்த “மானுடத்தை” சென்றடைய வேண்டுமென்றால் அது மொழிபெயர்ப்பால்தான் சாத்தியப்படுகிறது. உள்ளபடியே சொல்வதானால், எனக்கு மொழியாக்கம் குறித்து அக்கறை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, எனக்கு அதில் இடமில்லை. ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்கள், அவர்கள் அளிக்கும் வாய்ப்பை வரவேற்கும் பதிப்பாளர்கள் சார்ந்த விஷயம் இது. இரண்டாவதாக, இது இன்னும் முக்கியமானதும்கூட, நான் அரபியில், எனக்கு ஆளுமை வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மொழியின் அழகியலுக்கு ஏற்ப, எழுதுபவன். ஆக, நான் எழுதும் நடை எனக்கு திருப்தி கொடுப்பதாக இருக்கிறது. இதில் எனக்கு இழப்பு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. என் எழுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்வதும் அல்ல. அப்படி இருப்பது மிக அதீத அடிமைத்தனம் போன்றது என்பதுதான் என் பார்வை. என்னைப் பொறுத்தவரை, இதை நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, ஒவ்வொரு வாசகனும் அத்தனை வாசகர்களையும் பிரதிநிதிப்படுத்துபவன். என்னைப் பொறுத்தவரை, அரபி மொழி அத்தனை மொழிகளையும் பிரதிநிதிப்படுத்துகிறது.

எழுதும்போதோ அதற்கு பின்னோ, நான் மொழியாக்கம் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை. அப்படியானால் மொழியாக்கம் முக்கியமில்லை என்று அர்த்தமாகுமா? இல்லை. அது நிச்சயம் முக்கியமானது. பதிப்புத் துறையாகவும் பிற மொழிகளைச் சென்றடைய உதவுவதிலும், ஆங்கிலமே உலகின் முதன்மை மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் முதலில் சொன்னது போல், நான் இந்த ஆட்டத்தில் இல்லை. வெளிப்படையாய்ப் பேசினால், எனக்கு இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் இல்லை. புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது கெய்ரோ வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும் விருப்பம் உண்டா என்றோ, அவர்கள் வரும் இடத்தில் “இருக்க” வேண்டும் என்றோ என்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவது உண்டு. எனக்கு இதில் எல்லாம் நிச்சயம் எந்த ஆர்வமும் இல்லை.

வெளிப்படையாய்ச் சொல்கிறேன். என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் என்னை கடந்த காலத்தில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் நிறைவு பெறவில்லை. காரணம், அவர்கள் அளித்த எடிட்டோரியல் பரிந்துரைகள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கவில்லை. பிரதியின் குறிப்பிட்ட ஒரு கூறு விரித்துரைக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது, நான் முக்கியத்துவம் அளிக்காத ஒரு கூறு அழுத்திச் சொல்லப்பட வேண்டும் என்று சொல்வார்கள். முழு உண்மையைச் சொன்னால், இதில் என் சோம்பேறித்தனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலையாய் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் அது அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. அவற்றைத் தள்ளிப் போடவே எப்போதும் முயற்சி செய்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் அவை தாமதமாகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன என்றால், மதிப்புமிக்க ஒரு வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என்ற வருத்தத்துக்கு மாறாய் உண்மையாகவே அப்பாடா என்றுதான் இருக்கிறது.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, அதிலும் குறிப்பாக உணர்வளவிலும்கூட ஒப்பீட்டளவில் நெருக்கமாய் உள்ள மெடிட்டரேனிய ஐரோப்பிய வாசகர்களை விட தொலைவில் உள்ள பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க வாசர்களுக்காக, எப்படிப்பட்ட பிரதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி, சிக்கலான ஒன்று. சில மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அராபிய உலகம் என்பது மாலைச் செய்தியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளின் கோர்வை. அவை நேரடியாய் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்க சில சமயம் முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர்களும்கூட சுதந்திரமாய் முடிவெடுப்பதில்லை. என்ன இருந்தாலும் பதிப்புத் துறை ஒரு வர்த்தகம், அதில் விற்பனைத் துறை மிக முக்கியமான ஒன்று. எனவே தேவைப்பட்ட விஷயம் ஒரு பிரதியில் இல்லை என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் சொல்வதை, இலக்கியம் வேறு அது உருவான காலக் கணம் வேறு என்று நான் பிரித்துப் பேசுவதாய்க் கொள்ளக் கூடாது. மாறாய், அது இக்கட்டான காலகட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அழகியல் பார்வையில், ஒரு செய்தித்தாள் படிப்பது போன்ற ஒரு எளிய வடிவமல்ல இலக்கியம்.

நான் சொல்வது மொழியாக்கம் செய்பவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக் கூடாது, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் அரபு மொழி இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் எப்படி அத்தனையையும் அறிந்து கொண்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்? ஒரு அராபிய விமரிசகரோ வாசகரோ கூட இதைச் செய்ய முடியாது. எனவே, இத்தனை பெரிய உருவாக்கத்திலிருந்து சிறிய எண்ணிக்கை கொண்ட தலைப்புகளுக்கு வடிகட்டித் தரும் “மடைகளை” மொழிபெயர்ப்பாளர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது: மதிப்புமிக்க பரிசுகள் வென்ற நாவல்கள், தம் தாயகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவை, விற்பனைச் சாதனை படைத்தவை, இது போல். மொழிபெயர்ப்பாளர்கள் சிக்குண்ட முக்கோணத்தின் மூன்று சுவர்கள் இவை. ஆனால் எந்த இலக்கியப் படைப்புகள் சிறந்தவை என்றோ, எவை மதிப்புக்குரியவை என்றோ, எவை மிக உயர்ந்த தரத்தில் அமைந்தவை என்றோ தீர்மானிக்கத்தக்க ஆதர்ச அளவைகள் இவை என்று சொல்வதற்கில்லை.

என் நாவல்களில் இரண்டு மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டும் இதாலிய மொழியில், ஒரே மொழிபெயர்ப்பாளரால்- பார்பரா பெனினி. பெனினி தன் பார்வைக்கு ஏற்ற வகையில் இயங்குபவர். இதாலிய பதிப்பாளர்களின் மரபார்ந்த நெறிமுறைகளையும்கூட சாராதவர். அதைவிட முக்கியமாக, புதிய விஷயங்களை, அவான் கார்டை ஆதரிப்பவர். அவர் எகிப்தில் வாழ்ந்திருக்கும் காரணத்தால், அதன் இலக்கியச் சூழலை, இடையில் இருப்பவர்கள் மூலமல்ல, உள்ளிருந்தே அறிந்திருக்கிறார். நான் அவரை இதுவரைச் சந்தித்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களால், தன் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுயமாக தேர்ந்தெடுக்கிறார். அவற்றின், “இலக்கியத்தன்மை.’ மட்டுமே அவரது அளவுகோல். தனக்கு பிடித்தவற்றை மொழிபெயர்த்து, அதன் பின்னரே அவற்றைப் பதிப்புக்கும் சாத்தியங்களைத் தேடுகிறார். அவற்றை பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. என் பார்வையில்,அவர் ஒரு தீரமிக்க மொழிபெயர்ப்பாளர். ஒரு படைப்பாளியைப் போல் சாகசத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார், அதற்கான விலையையும் ஏற்றுக் கொள்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளருக்கு பொது வெளியில் நான் இப்படி நன்றி சொல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேர்முகத்தின் பின்புலத்தில் இதைச் சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நீங்கள் பரிசோதனை முயற்சிகளை அஞ்சும் எழுத்தாளரல்ல. பிற எழுத்தாளர்கள், இலக்கிய மரபுகள், பாணிகளின் தாக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். தா’ம் அல்-நாம் இதற்கு ஒரு பிரத்யேக உதாரணம்- யாசுநாரி கவாபாட்டாவின் ‘ஹவுஸ் ஆப் தி ஸ்லீப்பிங் பியூட்டிஸ்’ மற்றும் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘மெமரீஸ் ஆப் மை மெலான்கலி வோர்ஸ்’ ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நாவல் அது. ஆனால் அதே சமயம் அது ஆயிரத்து ஒரு இரவுகளின் வடிவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அரபி அல்லது அரபியல்லாத இலக்கியம், எது உங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது? இப்போது நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்?

எனக்கு எழுத்தும் பரிசோதனை முயற்சியும் வேறல்ல. மொழியிலும் யதார்த்தத்தை விவரிப்பதிலும் உவமைத்தன்மை கொண்ட இலக்கியத்தை விரும்புகிறேன். எனது எழுத்து கவித்துவம் கொண்டதாய் இருக்கிறது என்று சிலர் விவரித்ததுண்டு. நான் சொல்வதை அது உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்: என்னைப் பொறுத்தவரை, என் எழுத்தில் உள்ள கவித்துவ கூறுகள் உரைநடையைக் காட்டிலும் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்வது அதில் மறைந்துள்ள கவித்துவத்தை வெளிப்படுத்தவே, வெறும் தகவல்களைத் தெரிவிப்பதற்கு அல்ல.

பிரதிகள் ஒன்றையொன்று எழுதிக் கொள்கின்றன என்று நம்புகிறேன். ஒரு இலக்கியப் படைப்பின் சுனைகள் பல்வகைப்பட்டவை, அதில் இலக்கியமும் அடக்கம். இலக்கியமும் இலக்கியத்தை எழுதிக் கொள்கிறது, இலக்கியம் குறித்து மரபார்ந்த ஆசிரியர்கள் சொல்வது போல் நேரடி யதார்த்தமல்ல, கலையே கலையின் கருப்பொருளாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் உதாரணமாக, pastiche குறித்து நான் அச்சம் கொள்வதில்லை, என் புதிய நாவல், ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ இதையே மையமாய்க் கொள்கிறது. ஒரு புதிய கோட்பாடு இருக்கிறது, அதன்படி “பிரதி நினைவு,” என்று நான் அழைப்பதை ஒரு புதுப்பிரதி கவனப்படுத்துவதில் இது அடிப்படை பங்காற்றுகிறது. அதே நேரம், கலாச்சாரம் முதல் அரசியல் வரை தன் காலத்தை ஒரு நாவல் பிரதி அத்தனை தளங்களிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நான் நம்புவதால். தன் காலத்துக்கே பிரத்யேகமான தருணத்தில் வேர் கொள்ளவும் இதன் இயங்குதன்மை உதவுகிறது. நாவல் கலையில் கிசுகிசுப்பான குரல் மற்றும் உரத்து ஒலிக்கும் குரல் இரண்டுக்கும் இடமுண்டு. எகிப்தின் சரித்திரம் மற்றும் யதார்த்தம் பற்றி இன்னும் ஆழப் பேசும் நோக்கத்தில் நான் ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ நாவலில் ஒரு ஜப்பானிய நாவல், கொலம்பிய நாவல் மற்றும் அராபிய சரித்திர கதையாடலுடனும் போராடுகிறேன்.

இலக்கியத்தை இப்படி பார்க்கிறேன்: பிரதிகள், சரித்திரம், யதார்த்தம் மற்றும் கற்பனை குறித்து, ஒன்று பிறவற்றை நீக்கவோ பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதியாமல், முடிபற்று நிகழ்த்தும் விசாரணை. ஏற்கனவே நிறுவப்பட்ட, அல்லது முன் அடையாளம் செய்யப்பட்ட வரையறையின் சார்பின்றி தன்னைத் தானே எவ்வாறு விசாரணை செய்து கொள்கிறது என்பதுதான் ஒரு இலக்கிய பிரதிக்கு அடையாளம் அளிக்கிறது என்று நம்புகிறேன். இந்த பாணி பல எகிப்திய நாவல்களிலும் வெளிப்படத் துவங்கி விட்டது என்று. ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ வெளிவந்த அதே காலத்தில் குவைத்திய நாவலாசிரியர் புதைனா அல்-இஸ்ஸா ஒரு துணிச்சலான நாவல் எழுதினார். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட ஐந்து இலக்கியப் பிரதிகள், ‘ஜோர்பா தி கிரீக்,’ ‘ ஆலிஸ் இன் தி வண்டர்லண்ட்’, ‘பினோச்சியோ’, ‘1984’ மற்றும் ‘பாரன்ஹீட் 451’ ஆகியவற்றை உந்துவிசையாய்க் கொண்டது ‘ஹாரிஸ் சாத் அல்-அலாம்’. அந்த நாவலின் முடிவில் சென்சார் என்ற கருத்துவாக்கத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் அராபிய ஒடுக்குமுறையின் இயங்கு கருவிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கலாச்சாரக் கேள்வியினை அவர் எழுப்பினார்.

எனவே இலக்கியம் என்பது நம் யதார்த்தத்தை அதன் அத்தனை நுண்விபரங்களுடனும் புரிந்து கொள்வதற்கான ஆதார சாதனம். காலம், சுதந்திரம், மரணம் ஆகியவற்றுடன் பிணைப்பு கொண்ட இருப்பு குறித்த பெரும் கருத்துக்களில் உள்ள கருத்துருவாக்கமாகிய நான் என்ற ஆளுமை அதே நேரம் ஒரு தனி மனிதன், அராபிய, எகிப்திய எழுத்தாளன் என்ற வகையில் என் காலத்தின் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அதன் அத்தனை வரலாற்று, கலாச்சார, சமூக சிக்கல்களுடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தூய அடையாளம், அல்லது ஒருமைப்பட்ட அதிகாரம், ஏகத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது இறுதியில் சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறது.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால், பல்வேறு இலக்கிய வரிசைகள், காலகட்டங்கள், இடங்களுக்கு உரிய நாவலாசிரியர்களைச் சொல்ல வேண்டும்: நகீப் மாபூஸ், ஆல்பர் காம்யூ, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் பியூண்டஸ், முகமது ஹபீஸ் ரகாப், யூஜீன் இயனஸ்கோ, மைக்கேல் ஒன்டாட்ஜே, டோனி மாரிசன், சல்மான் ருஷ்டி, யுவான் யோசே மில்லாஸ், ஜாவியர் மாராஸ், மைக்கேல் கன்னிங்கம், பால் ஆஸ்டர்.

அராப்லிட் தளத்தில் வந்த நீண்ட நேர்முகத்தின் சிறு பகுதி. முழு பேட்டியும் இங்கு ஆங்கிலத்தில்  வாசிக்கலாம்: 

Tareq Imam: ‘The Writer Has Become Everyone’s Target’

ஜான் லான்செஸ்டர்: “டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது”

அலெக்ஸ் பிரஸ்டன்: இந்தக் கதைகளை ஏன் நீங்கள் இப்போது பதிப்பிக்க முடிவு செய்தீர்கள்? இவற்றில் பல வேறு இடங்களில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

லான்செஸ்டர்: “ஏன்?” என்பதற்கு உண்மையான பதில் இதுதான். இவற்றில் முதல் கதையை புத்தாண்டு அன்று எழுதி நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன். அப்போது ஒருவர், இதை நீ ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். நான் நியூ யார்க்கருக்கு அனுப்பினேன். அவர்கள் ஏப்ரல் 2017 ல் அதைப் பதிப்பித்தார்கள். அதுதான் நான் எழுதிய முதல் கதை. நீ ஐம்பது வயதுகளின் மத்தியில் இருக்கும்போது உன்னை கிறுகிறுக்கச் செய்து மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் இது அப்படித்தான் இருந்தது. இன்னொரு கதை எழுது என்று என்னை நோக்கி இந்த உலகம் சொல்வது போலிருந்தது.

லாம்பத் கார்டன் அருகில் இருக்கிறது இல்லையா, கார்டன் மியூசியம் என்ற அற்புதமான அருங்காட்சியகம், அதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு இரண்டாம் கதையை எழுதுவதற்கான தூண்டுதல் கிடைத்தது. அங்குள்ள நிலவறையில் பொருட்களை காட்சிப்படுத்தும்போது சவப்பட்டிகளை நகர்த்துவதுதான் சங்கடமான விஷயம் என்று அதன் கியூரேட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். நகர்த்தும்போது அவை அடிக்கடி உடைந்து விடுகின்றன, பிணங்கள் திரவமாய் வடிந்து பிணப்பெட்டிச் சாராயம் என்று சொல்லப்படும் வஸ்து உருவாகிறது. அப்போது, டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது.

பிரஸ்டன்: சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதிலிருந்து வேறுபட்ட விஷயமா?

லான்செஸ்டர்: நாவலாசியர்கள் பலருக்கும் பதின்பருவத்தில் கவிதை எழுதிய காலகட்டம் இருந்தது என்பது வினோதமான ஒரு குற்றவுணர்வுடன் கூடிய ரகசியம். நிச்சயம் எனக்கு இருந்தது. என் இருபதுகளின் துவக்க ஆண்டுகள் வரை கவிதை எழுதினேன். திகைக்கச் செய்யுமளவு மோசமான கவிதை, எல்லாமே காணாமல் போய் விட்டன. கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். கவிதை எழுதுவதில் ஒரு விந்தையான செயலின்மை இருக்கிறது: நாம் அது வரக் காத்திருக்க வேண்டும். சிறுகதைகள் தாமாய் வந்து சேர்ந்தன.

பிரஸ்டன்: விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்களை இந்தக் கதைகள் தொழில்நுட்பத்தில் அடையாளம் காண்கின்றன. நம் இணைய வாழ்வில் குறிப்பாக எதுவும் அது போல் புரிந்து கொள்ள முடியாத அச்சுறுத்தல் தன்மை கொண்டிருக்கிறதா?

லான்செஸ்டர்: இதில் பாதி வேலை முடிந்தபோதுதான் நிலைக்குலையச் செய்யும் தன்மை, இந்தப் பொருட்களின் அமானுடம் (போனை எடுத்துக் காட்டுகிறார்) பொதுக் கருவாய் இருப்பதை உணர்ந்தேன். பழைய காலத்தின் மிகச் சிறந்த பேய்க்கதைகளில்கூட நாம் நினைப்பதை விட அதிகம் புதுமை இருப்பதை நானும்கூட போகிற போக்கில் சொல்லியிருக்கிறேன். பேய்க்கதைகளில் சிறந்தது என்றால் டிக்கன்ஸின் ‘தி சிக்னல்-மேன்’ கதையைச் சொல்லலாம். அதை ஒரு விசித்திரமான கதையாய் நாம் படிக்கிறோம், ஆனால் அது எழுதப்பட்ட காலத்தில் சிக்னல்காரர்கள் புதியவர்கள். இன்னொரு கதை, “ஓ, விசில்,” மற்றொன்று, எம் ஆர் ஜேம்ஸ் எழுதிய “ஐ வில் கம் டு யூ, மை லாட்’. மத்திய காலகட்டத்துக்குரிய அடையாளங்கள் இருந்தாலும் அதில் வருபவன் கோல்ஃப் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் காம்பரிட்ஜ் கல்லூரி ஆசிரியன். இது எல்லாம் மிக நவீன விஷயங்கள். புதிய விஷயங்களில் ஏதோ ஒரு வகை நிலை குலையச் செய்யும் தன்மை இருக்கிறது. அமெரிக்க சோஷியோபயாலஜிஸ்ட் எட்வர்ட் வில்சன் ஒரு சுவாரசியமான விஷயம் சொல்கிறார். நமக்கு பாலியோலித்திக் காலகட்ட மூளை இருப்பதாகச் சொல்கிறார் அவர், ஆனால் நம் நிறுவன அமைப்புகள் மத்திய காலகட்டத்துக்கு உரியவை, தொழில்நுட்பம் இறைத்தன்மை கொண்டது. இவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில்தான் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்கள் இருக்கின்றன.

மேலும் வாசிக்க – தி கார்டியன்

கா சிவா நேர்முகம் – நரோபா

1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.

2. இலக்கிய பரிச்சயம் எப்படி?

சென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.

 

3. இலக்கிய ஆதர்சங்கள்

ஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.

என் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.

தேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.

4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

எழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.

5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

என் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

 

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.