கலைச்செல்வி

மீள்கை

கலைச்செல்வி

“போர் மேகங்கள் சூழ்ந்துடுச்சு..” சிரித்தான். அதெல்லாம் பொதுமக்களுக்கு. உண்மையில் போர் ஆரம்பித்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. அதைதான் கிண்டலடிக்கிறான் இந்த நிலையிலும்.

”அப்றம்.. நீங்க அடிச்சா நாங்க திருப்பி அடிக்க மாட்டோமா..? கோபமாக திருப்பிக் கேட்டான். சாகக்கிடக்கிறவனுக்கு நக்கல் ஒரு கேடு.. இவனை.. ஒரேயடியாக முடிக்கக் கூடாது. அணுஅணுவாக இரத்தம் சிந்தி சித்ரவதையோடு சாகணும்.

”உண்மையா சொல்லு.. என்ன பாத்தா உனக்கு அடிக்கணும்.. கொல்லணும்னு தோணுதா..” எங்கோ அடிப்பட்டு தெறித்து விழுந்திருக்கலாம். அதுவும் எல்லையை தாண்டி. பிழைத்தே எழுந்தாலும் இனி ஒருபோதும் அவன் தன் தாய் நாட்டை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டான்.

இவனும் வழி மாறியிருந்தான். அதிர்ஷ்டவசமாக தாய் நாட்டுக்குள்தான் வழி தடுமாறியிருக்கிறான். தகவல் தெரிவித்தால் மீட்டுக் கொள்வார்கள். இங்கு சிக்னல் இல்லை. சிக்னல் கிடைக்க சற்று துாரம் செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் இவனுக்கும் பேசும் சுவாரஸ்யம் எழுந்தது. நல்லவேளை மொழி பிரச்சனை இல்லை.

”நாம எதிரெதிர் நாட்டுக்காரங்க.. நாங்க உங்களை அடிச்சு கொல்லதானே வேணும்..”

எங்கோ துப்பாக்கி ஒசைக் கேட்டது.

”அய்யோ.. கடவுளே.. என் அசைன்மெண்ட் இன்னும் முடியில.. உங்கிட்ட பேசிக்கிட்டுருக்க சொல்லி யாரும் எனக்கு அசைன்மெண்ட் தர்ல..” கடுப்பாக சொன்னான். முழு ராணுவ உடுப்பிலிருந்தான்.

”நீ சொல்றது சரிதான்.. ஆனா என் நெலமைய பாரு.. கை பிஞ்சு போய் கிடக்கு.. கால் என்னாச்சுன்னே தெரியில.. தாகம் நெஞ்ச அடைக்குது.. இந்த நிலயில ஒரு விலங்கு கிடந்தாலும் எடுத்து முதலுதவி செய்வோமில்ல.. மனுசனுக்கு காருண்யம் முக்கியமில்லையா..?”

”தப்பா புரிஞ்சுக்கிட்டே.. காருண்யம்னாலும் அதுக்கு இடம்.. பொருள்.. ஏவலெல்லாம் இருக்கு..”

”ஒருத்தருக்கொருத்தர் காட்டற அன்பில.. கருணையில இடம்.. பொருளுக்கெல்லாம் ஏது இடம்..?” மனதில் உறுதி இருந்தாலும் அவன் குரல் முனகலாகதான் ஒலித்தது.  ”ஆட்டை கசாப்பு பண்றோம்.. அதே ஆடு வண்டில அடிப்பட்டு போச்சுன்னா வைத்தியமும் பாக்றோமில்ல.. அதுமாதிரி..” என்றான் தொடர்ந்து.

”அது ஆடு..” இழுத்தான்.

”ஆடுதான்.. கசாப்பு ஆட்டை கூட கருணையோட ஒரே போடா போட்டு தள்ளிடுறோம்.. இப்டி குத்துயிரும் கொல உயிருமா தவிக்க வுடுறதில்ல..”

அது உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக் கொள்ள மனமில்லை இவனுக்கு. படுத்துக் கிடந்த அவனை கண்ணெடுக்காமல் பார்த்தான். தன் வயதுதான் இருக்கும் அவனுக்கும். அணிந்திருந்த இராணுவ உடுப்பு கிழிந்து தொடை வரை ஏறியிருந்தது. வலது கால் சிதைந்து ரத்தம் தரையை நனைத்திருந்தது. சதை துணுக்குகள் பரவலாக கொத்து கறி போல சிதறிக் கிடந்தன. இவன் விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் வீட்டில் விதவிதமான உணவிருக்கும். கறிக்கோலாவுக்காக கொத்தி  வைத்த கறியை நீரில் அலசி வடித்து, அதோடு மசாலா சாமான்களை சேர்ப்பாள் மனைவி. எலும்பில்லாத சதையை நுணுக்கமாக சிதைத்திருப்பதால் வெந்த கறி உருண்டை மெத்தென்று வாயில் கரையும். இரண்டரை வயது பேத்திக்கு உருண்டையை நசுக்கி ஊட்டி விடுவாள் அம்மா. ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருடங்களிருக்கிறது. அம்மாவும் மனைவியும் அதை நோக்கி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். அப்பாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான்.

அனிச்சையாக மண்டியிட்டு அமர்ந்தான். ”என்ன வேணும்..?” என்றான் கடுமையாக.

”தண்ணீ.. தண்ணீ..”

வேண்டாவெறுப்பாக பாட்டிலை திருகி திறந்தான் இவன்.

அவனது பார்வை ஆவலாக நீர் பாட்டிலின் மீது குவிந்தது. தலையை துாக்க முயன்று,  முடியாமல் தத்தளித்தான்.

”தலைய நிமிர்த்து..” துாக்க முடியாமல் சிரமப்படுவது தெரிந்தும் சொன்னான்.. ”துாக்கி பாரு.. எல்லாம் முடியும்..” கடுமையை குறைக்கவில்லை.

முடியவில்லை என்பது போல தலையை அசைத்தபோதுதான் அதை கவனித்தான் அவன் புடனியில் கல் குத்தி இரத்தம் கசிந்திருந்தது. சற்று நகர்த்தி போட்டால் தானாக தலையை துாக்கி விட முடியும் என்று தோன்றியது. தோளை பிடித்துக் கொண்டு நகர்த்த முடியாது. அங்கிருந்தே கை கழன்றிருந்தது. நல்ல கட்டுமஸ்தான கை. இராணுவ உடல். நிறைய பயிற்சியளித்திருக்கலாம்.. இரவு பகல் தெரியாமல் பண்ணையில் பிறந்து வளர்ந்து நாற்பத்தைந்தே நாளில் கொழுகொழுவென்றாகி விடும் பிராய்லர் கோழிகள் போல. சதையும் எலும்பும் பஞ்சு பஞ்சாக.. கடித்து உண்ண தோதாக.

”தண்ணீ வேணும்..” என்றான்.. மிக சிரமப்பட்டான். கையிருந்தால் கட்டை விரலை வாய்க்கருகே வளைத்து ஜாடை காட்டியிருக்கலாம். இருந்தவாக்கில் எப்படியோ தலையை துாக்கி விட்டான். மடியை தேடுவது போல அவன் தலை தடுமாறியது. கையை அகல விரித்து எதிரியின் தலையை தாங்கிக் கொண்டான் இவன். வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டினான். விழுங்க நிறைய சிரமப்பட்டாலும் உடலின் தேவை நாவை நீட்டி சுவைக்க வைத்தது.  கண்களை மூடிக் கொண்டான். நீரை உண்ட களிப்பில் முகம் அமைதியடைந்திருந்தது. பொருளாதார வசதியற்றவன் போன்ற முகத்தோற்றம் அவனுக்கு. வயதான பெற்றோர்களும்.. இரண்டு பிள்ளைகளை பெற்ற மனைவியும் இவனுக்கு இருக்கலாம். தம்பி.. தங்கைகள் என்ற பெருத்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு திருமணமாகாதவனாவும் இருக்கலாம். ஏதோ ஒண்ணு.. நமக்கென்ன..? கொன்னு போட வேண்டியவனை மடியில எடுத்து கொஞ்சவா முடியும்..?

உலகின் எங்கோ ஒரு மூலையில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இவனை சந்தித்திருந்தால் மனம் இத்தனை கருணையற்று போயிருக்குமா..? இவன் எதிரியாக இல்லாவிட்டால் இவன் மீது இரக்கம் ஏற்பட்டிருக்குமோ..? எப்படி இவன் எதிரி.? இன்றுதான் இவனை பார்க்கிறேன்.. ஆனால் எதிரி. என் பெண்டாட்டியுடன் இவன் படுத்திருக்கவில்லை.. சொத்துக்காக கொலை செய்ய ஆட்களை ஏவவில்லை.. இவன் மனைவியின் மீது எனக்கு எந்த ஆசையுமில்லை.. இவன் என் தங்கையையோ.. நான் இவன் தங்கையையோ மானபங்கபடுத்தவில்லை. பிறகெப்படி எதிரி..? பிறக்கும்போதே சாதியோடு பிறக்கும் இந்திய குழந்தையைப் போல பார்க்கும் முதல் பார்வைக்கே எதிரியாக இருந்தான். கருணையை  தீர்மானிக்கும் சக்தி சாதிக்குண்டு.. இனத்துக்குண்டு.. மதத்துக்குண்டு.. அந்த வகையில் இவன் எதிரி.

”நீ போயீடு.. அரைநாளோ.. ஒருநாளோ நான் அப்டியே செத்துருவேன்..” என்றான் தண்ணீர் குடித்த தெம்பில்.

அது கூட சரிதான். நெடுநேரம் தன்னிடமிருந்து தகவல் வரவில்லை என்றால் தேடி கண்டுபிடித்து ரெஸ்க்யூவுக்கு ஆளனுப்புவார்கள். இவனிடம் குலாவிக் கொண்டிருக்க இதுவா நேரம்..? அதுவும் கண்டவுடன் கொல்ல வேண்டிய எதிரி.. அல்ல.. தேடி தேடி கருவருக்கப்பட வேண்டிய எதிரி.

”எனக்கு போக தெரியும்.. நீ எனக்கு கட்டளை போடாத..” கோபமாக பேசி விட்டு சரசரவென இறங்கினான். கரடுமுரடாக வழித்தடம். வயிற்றை இறுக்கியது பசி. நேற்று மதியம் உண்டதுதான் கடைசியாக எடுத்துக் கொண்ட உணவு. அதுவும் அவசரஅவசரமாக உண்ணுமளவுதான் நேரமிருந்தது. கிடைத்த இடத்தில் அமர்ந்து ரொட்டி பாக்கெட்டை அவசரமாக பிரித்து உள்ளிறக்கினான். சுற்றிலும் மனித சதை துண்டுகள் சிதறிக் கிடந்தன. மனித விழி ஒன்று தொலைவில் முழித்துக் கிடந்தது. இப்போதும் வயிறு நிறைய பசி. பாறைக்கல் ஒன்றில் அமர்ந்து மற்றொரு கல்லில் கால்களை நீட்டிக் கொண்டான். மடியிலிருந்த உணவு மளமளவென்று வயிற்றுக்குள் நிறைந்தது. ரெஸ்க்யூ வரும் வரை இங்கேயே இருந்து கொள்ளலாம். தகவல் அனுப்பியாகி விட்டது.

எங்கோ தொலைவில் ஓநாய் ஒன்றின் ஊளை சத்தம் கேட்டது. போர் சூழலுக்குள் மாட்டிக் கொண்டு விட்ட வேதனையாக இருக்குமோ..? அல்லது அதற்கான உணவு கிடைத்ததற்கான சங்கேதமாக இருக்குமோ.. ஒருவேளை அந்த எதிரியே உணவாகி இருப்பானோ.. அறிந்துக் கொள்ளும் ஆவல் எழுந்தது. வந்த வழியே மேலேறி மெல்ல நடந்தான். சிந்தையை துாண்டும் ஏகாந்தமான தனிமை.

எல்லைகளை யார் வகுத்தது..? மனிதனால் நிர்ணயிக்கப்பட்ட கோடுகள் தொடர் நிலப்பரப்பை தனிதனியாக பிரித்து விடுகிறது. பிரிக்கப்பட்ட நிலங்கள்  ஒவ்வொன்றுக்கும் தனி ராஜாக்கள்.. மந்திரிகள்.. அவர்கள் ஆள்வதற்கு மக்கள்.. அதற்கான கலாச்சாரம்.. என எல்லாமே தனிதனியாகி விடுகிறது. கிடைத்த அதிகாரத்தை பாதுகாக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள ராணுவம்.. அதற்கான செலவை மக்களின் உழைப்பிலிருந்து தனதாக்கி கொள்ளும் அரசதிகாரம்.. யாரை யார் பாதுகாப்பது..? எதிலிருந்து யாருக்கு பாதுகாப்பு..? மனிதனிடமிருந்து மனிதனுக்கு பாதுகாப்பு. போரில் மனித வலிகள் கணக்கில் கொள்ளப்படவே மாட்டாது. மக்கள் தேசபக்தியில் நெகிழ்ந்து உருக, அந்த உணர்வு நிலைக்குள் அதிகார மமதையை ஒளித்துக் கொண்டு அலையும் தனி மனித ஆசை.

எல்லா மனிதர்களுக்குள்ளும் மற்றெல்லா ஜீவன்களையும் அடக்கியாள ஆசையுண்டு. சிலருக்கு அது அதீதமாக இருக்கலாம். அதீத ஆசை ஏதேதோ பெயரிட்டுக் கொண்டு உள்ளிருக்கும் கனாவை சாதித்துக் கொள்ள துாண்டிக் கொண்டேயிருக்கிறது. அதை  மதம் எனலாம்.. கடவுள் எனலாம்.. நாடு எனலாம்.. தேசபக்தி என்றும் சொல்லலாம்.. சாதி என்று கூட சொல்லலாம். ஆனால் அத்தனைக்கும் பின்னிருப்பது அதிகாரத்தின் மீதான ஆவேசப்பற்று.. அடக்கியாளும் வெறி.

எண்ணவோட்டம் நடையை மந்தப்படுத்தினாலும் அவன் விழுந்து கிடக்குமிடத்தை அடைய வழி ஒரு பிரச்சனையில்லை.

ஆடாமல் அசையாமல் அப்படியே கிடந்தவனின் மீது இருள் மெல்ல கவிய தொடங்கியிருந்தது. தண்ணீர் பாட்டில் கீழே கவிழ்ந்து கிடந்தது. குடிக்க எத்தனித்திருக்கலாம். அவன் கண்கள் எங்கோ நிலைக்குத்தியிருந்தது. இறந்திருப்பான் போல.

சத்தம் வந்த பக்கம் விழிகளை உருட்டி பார்த்தான் அவன். இன்னும் சாகவில்லை. ஆனால் மரணத்தின் விளிம்பிலிருந்தான். உணர்வுகள் துளியும் மங்காத நிலையில் எத்தனை சித்ரவதை இது. எதன் பொருட்டு இவையெல்லாம்..? இவனுக்கு இனிமேல் வாழ்வில் என்ன கிடைத்து விடும்.. அல்லது எது கிடைத்தால் மகிழ்வான்.?. இழந்த கையையோ காலையோ ஒட்ட வைக்க முடியாது. உடலில் ஆங்காங்கே பெருங்காயங்கள் உள்ளன. இங்கிருந்து துாக்கி செல்வதே அத்தனை சிரமம். இதில் மருத்துவ உதவி எங்ஙனம் சாத்தியம்..? எல்லாவற்றிற்கும் மேலாக இவன் எதிரி. அப்படியே பிழைத்தாலும் வேறொரு நாட்டில் கால நேரம் அறியாமல் ஆயுள் முழுவதும் அடைப்பட்டே சாக வேண்டும்.. அதிகபட்சமாக சொந்த நாட்டில் காணாமற்போனவர் பட்டியலில் சேர்க்கப்படுவான்.. அல்லது விருது பட்டியலில் சேர்க்கப்பட்டு எப்படியும் கொஞ்ச நாளில் மறக்கப்படுவான்.

அதிகார மையம் நிச்சயம் இந்த தியாகத்தை உணர போவதில்லை. உணர்ந்தாலும் அது பெரிய விஷயமுமல்ல. அவர்களுக்கு தேவை மூளை மழுங்கிய கூட்டம். அள்ள அள்ள குறையாத அக்கூட்டத்திலிருந்து இவனை விடவும் மோசமான காவுகளை கொடுத்த பிறகே அதிகாரம் சாத்தியப்பட்டிருக்கும். ஆசை பேராசையாக மாறி சுழன்று சுழன்று தனக்கு சாதகமான எதன் மீதோ மையங்கொண்டு ஆட்களை ஒன்றிணைத்து பெருங்குழுவாக்கி விடுகிறது.. மீண்டும் மீண்டும் வீழ்த்துகிறது. எழ எழ தாக்குகிறது. நாற்காலிகள் பிரித்து கொள்ளப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்து போகிறது.  ஆனாலும் அதிகார பிடியை நழுவ விடுவதேயில்லை மீண்டும் மீண்டும் புதுபுது உத்திகளால் உணர்வுகளை சிலிர்த்தெழுப்பி மனித பெருந்திரளை திரட்டிக் கொண்டு அதன் வழியே நாற்காலிகளை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது..

”வலிக்குதா..?” என்றான் கீழே குனிந்து.

”தெரியில.. ஒடம்பெல்லாம் மரத்துப் போச்சு.. மனசு மட்டும் தெளிவா.. தெளிவா..” முனகினான். முழு உணர்வோடிருக்கிறான். பாவம் இருட்டி விட்டால் நாயோ நரியோ இழுத்துக் கொண்டு போய் குதறி விடும். மீட்பு குழுவினரிடமிருந்து சமிக்ஞைகள் வர தொடங்கி விட்டன. மிஞ்சி போனால் கால் மணி நேரத்தில் கிளம்பி விடலாம்.

”ஏன்.. ஏன் திரும்பி வந்தே..?” என்றான்.

”கொஞ்ச நேரத்தில கௌம்பிடுவேன்.. அதான்..”

”சரி..”

சமிக்ஞை ஒலி இவனின் மீட்புக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்றது.

உபயோகப்படுத்திய துப்பாக்கியை துடைத்து உள்ளே வைத்தான். தன்னை விட விரைவாக அவன் மீட்கப்பட்டு விட்டான் என்றமட்டிலும் நிம்மதியாக இருந்தது இவனுக்கு. பாறைக்கல்லின் மீதமர்ந்து மீட்சிக்காக காத்திருக்க தொடங்கினான்.

 

பெண் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

மணி பத்தாகி பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தது. அதற்குள் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தது. கணவனிடம் சொல்லிக் கொள்ள கூட அவகாசமின்றி காரிலிருந்து இறங்கி கொண்டாள். முதல் தளத்திலிருந்து அவளது இருக்கை. அவசரமாக படிகளில் தாவி ஏறினாள். பச்சை மையில் கையெழுத்து போடும் தகுதி பெற்றவள். ஒரே மகன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தான்.

”மேடம்.. சிஇ உங்களை வர சொல்றார்..” என்றார் அலுவலக உதவியாளர் அவளுக்காக காத்திருந்தவர் போல.

”கடவுளே.. அதுக்குள்ள வந்துட்டாரா.. இருங்க பேக்க வச்சிட்டு வந்துடுறேன்..”

”பேக்க நான் வச்சிடுறன்.. சார் உங்களை ரெண்டு தடவை கூப்டுட்டாரு..”

அதுவும் உண்மைதான். பேச்சின் நுனியிலேயே கோபத்தை வைத்திருப்பார். முகாம் அலுவலர் என்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் அலுவலகப் பணியிலிருப்பார். அதுவும் இத்தனை சீக்கிரம் வருவதில்லை. ஏதேனும் அவசர வேலையாக இருக்கும்.

“வீரபாண்டியன் சார் வந்துட்டாரா..?” பேக்கை அவனிடம் நீட்டினாள்.

”வந்துட்டாரு மேடம்.. அவரும் சிஇ ரூம்லதான் இருக்காரு..” பதட்டமான நடந்தாள். இவளும் வீரபாண்டியனும் இரண்டாம் மட்ட அதிகாரிகள். கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தாள். தலைமைப் பொறியாளர் அலைபேசியில் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார். தலைமை அலுவலகம் அது. துறை செயலரிமிருந்து போன் வந்திருக்க வேண்டும்.

”வணக்கம் சார்..” தயக்கமாக கூறினாள். கண்கள் அவளை கவனித்தாலும் யோசனை அதிலில்லாதது போல வெற்றுப் பார்வை பார்த்தார். மீண்டும் “வணக்கம் சார்..“ என்றாள். படபடப்பாக இருந்தது. வீரபாண்டியன் இவளை பார்த்து வணக்கம் சொல்வது போல நெஞ்சு வரை வலது கையை உயர்த்தினான். தனது பக்கத்து இருக்கையை சைகையால் காட்ட, அவள் தலைமை பொறியாளரின் உத்தரவுக்காக காத்திருந்தாள். அலைபேசியை வைத்து விட்டு, விட்டதிலிருந்து தொடர்ந்தார். அவளை அப்போதுதான் கவனித்தது போல நாற்காலியை காட்டினார். கைப்பையிலிருந்து எடுத்து வைத்திருந்த குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்.

”அனொவ்ன்ஸ்மெண்ட்ல அறிவிச்ச வொர்க் பத்தின டீடெயில்ஸ் டிவிஷன்வைஸா ரெடி பண்ணனும்..” என்றார்.

”சரிங்க சார்..” என்றான் வீரபாண்டியன். அவளுக்கு விஷயம் பிடிப்பட்டது. சட்டசபை கூட போவதால் இந்த கெடுபிடி.

”எக்ஸ்பெட்டட் கொஸ்டின்ஸ் சர்க்கிள்ல கேட்டு வாங்கி.. ரிப்ளைய ரெடி பண்ணனும்..” சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய வேண்டும். சட்டமன்றம் தொடங்கிய பிறகு கவனஈர்ப்பு.. கட்மோஷன்.. ஸ்டார்ட்.. அன்ஸ்டார்ட் என பல்வேறு ரூபத்தில் மூச்சு விட அவகாசமின்றி கேள்விகள் வந்து விழும். இவைகளெல்லாம் வீரபாண்டியனுக்கான பணிகள். அவனுக்கு கீழே மூன்று உதவிப்பொறியாளர்கள். அதில் இரண்டு காலியிடம். அவளுக்கும் அப்படிதான்.

”மேடம்.. இம்மீடியட்டா ப்ராகரஸ் ரிப்போர்ட் வேணும்.. போத் ஃபிஸிக்கல் அண்ட் ஃபைனான்சியல்.. பிபிடி தயார் பண்ணீடுங்க..” என்றார் இவளிடம் திரும்பி. மூன்று வட்டங்களும் ஒன்பது கோட்டங்களும் உள்ளடக்கியது தலைமை அலுவலகம். பணிகளின் விபரமும் அதன் தற்போதைய நிலையையும் புத்தகமாகவும் பவர்பாயிண்ட்டாகவும் தயார் செய்ய வேண்டும்.

”சரிங்க சார்..”

”டிலே பண்ணீடாதீங்க மேடம்..” என்றார் சற்றே கண்டிப்புடன்.

”ஒகே சார்..”

கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.  “கவர்மெண்ட் ஆபிசுன்னா வேலையே கெடையாதுன்னு வெளில பேசுவாங்க.. இங்க வந்து பாக்க சொல்லுணும் அவங்களெல்லாம்..” என்றாள் கீதா.

”ஆமா மேடம்.. சிஇ சொல்ற டீடெயில்ஸ கேட்டு வாங்கறதுக்குள்ள ஒரு வழியாயிடும்..” என்றான்.

”இன்னைக்குள்ள வொர்க் ஸ்டேஜ் வாங்கினாதான் நாளைக்கு பிபிடி ரெடி பண்ண முடியும்..” என்றாள்.

”சார்.. இந்த தபாலை கொடுக்க சொன்னாரு சிஇ..“ வீரபாண்டியனின் கையில் திணித்தார் அலுவலக உதவியாளர். சென்ற முறை கேட்கப்பட்ட சட்டமன்ற கேள்விகளின் தற்போதைய நிலை வேண்டி அனுப்பப்பட்ட அவசர நிகரி தபால். “சரி.. வர்றேன்.. மேடம்..” தபாலோடு தனது இருக்கைக்கு விரைந்தான். குளிரூட்டி பொருத்தப்பட்ட அடுத்தடுத்த கேபின்கள். கண்ணாடி தடுப்பு.. முதல் தடுப்பு அவனுடையது. அதற்கடுத்த கேபினிலிருந்தது கீதாவின் இருக்கை. மேசை மேலிருந்த தோள்பையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு அமர்ந்தாள். டிராவை திறந்து சிறு நோட்டை எடுத்து ஸ்ரீராமஜெயம் போல எதையோ இரண்டு நிமிடம் எழுதினாள். செல்போன் ஒலித்தது. கணவரின் பெயர் ஒளிர “ஒங்க ஆபிசே பரபரப்பா இருந்துச்சு.. எதும் அவசரமா..?” என்றான் அக்கறையாக. “அசெம்ளி கூட போவுதுல்ல.. அதான்..“ என்றவள்  ”சரி.. மணிகண்டன் ஸ்கூலுக்கு மூணறைக்கு போவுணும்.. மறந்துடாதீங்க..” என்றாள்.

”மேடம்.. இதுல நாலு கொஸ்டின் நீங்க டீல் பண்ற சப்ஜெக்ட்..” என்றான் அங்கிருந்தே வீரபாண்டியன்.

”ஒரு ஜெராக்ஸ் எடுத்து குடுங்க சார்..” என்றாள் இவளும் இங்கிருந்தபடியே.

கொஸ்டினை சமாளிப்பது கொஞ்சம் சுலபம். “பரிசீலனையில் உள்ளது.. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க ஆவண செய்யப்படும்.. இது எங்கள் துறை சார்ந்ததல்ல..“ என்ற மூன்று பதில்களுக்குள் முன்னுாறு கேள்விகள் என்றாலும் அடங்கி விடும். உதவி பொறியாளரை அழைத்தாள்.

”மேம்..”

”இன்னைக்குள்ள பிராகிரஸ் ரிப்போர்ட் முடிச்சாவணும். நீங்க மளமளன்னு எல்லா இஇக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுங்க.. சி.இ உடனே தர சொன்னாருன்னு சொல்லுங்க..”

”முடிஞ்சளவு வாங்கீடுறேன் மேடம்..”

”நீங்க எங்கிட்ட சொல்றமாதிரி நான் சிஇட்ட சொல்ல முடியுமா சார்.. நீங்க ஃபோன் ரூம்க்கு போங்க.. நா வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றாள்.

வீரபாண்டியன் அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

”மேடம்.. இந்த கொஸ்டினை பாருங்களேன்…” என்றான். சட்டசபை தொடங்கினாலே வரும் தலைவலி இது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எதாவது எசகுபிசகான கேள்விகளை முதலமைச்சர் தனிப்பிரிவு.. துறை செயலர்.. உட்பட உயர்நிலை அலுவலங்களுக்கு அனுப்பி விட்டு இங்கும் ஒரு பிரதி அனுப்பி விடுவார். ”யாரு சார்.. அந்த ராஜ மன்னாருதானே..” என்றாள்.

”ஆமா மேடம்..” என்றான் அலுப்பாக. பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்து விட முடியாது. இமயத்திலிருந்து வங்காள விரிகுடா வரையிலான நீர்த்தடங்களை இணைத்து அதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீர் வழங்கும் திட்டம் என்ற தலைப்பில் நுணுக்கி நுணுக்கி வெகு அபத்தமான யோசனைகளோடு பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தார். இடையிடையே சிவப்பு மையில் படங்கள் வேறு வரைந்திருந்தார்.

”இதுக்கெல்லாம் என்னன்னு சார் பதிலெழுதறது.. பேசாம ஒருநாள் ஆபிசுக்கு வர சொல்லி கவுன்சிலிங் பண்ணி அனுப்பலாம்..” சிரித்தாள்.

”கரெக்ட்தான்.. நாமளும் ஒருநாள் இதுக்காக ஒதுக்கி சிரிச்சிக்கலாம்..” என்றான் சின்ன சிரிப்படன்.

”காபி சாப்றீங்களா சார்..” என்றாள். வீட்டிலிருந்தே ப்ளாஸ்கில் எடுத்து வந்து விடுவாள். காபி போட்டு இவளுக்கும் கணவருக்கும் ஆளுக்கொரு ப்ளாஸ்கில் ஊற்றி வைப்பது அம்மாவின் வேலை. ”தாரளமா..” என்றான்.

மதியம் வரை கால்வாசி தகவல்களை கூட பெற முடியவில்லை. தினசரி பார்வையிட வேண்டிய தபால்கள் வேறு குவிந்திருந்தன. அதற்குள் தலைமைப் பொறியாளரிடமிருந்து அழைப்பு. ”மேடம்.. என்னாச்சு..?” என்றார்.

”பண்ணீடுறேன் சார்..” என்றாள்.

”எப்ப முடியும்னு சொல்லுங்க..” என்றார் கூடுதல் வேகமாக.

”சார்.. முடிச்சிடுறேன் சார்..”

”இஇட்ட நீங்களே நேரடியா பேசுங்க.. ஏஇ பேசறதுக்கும் எஸ்டிஓ பேசறதுக்கும் வித்யாசமில்லையா..?” என்றார்.

செயற்பொறியாளர்கள் விபரங்களை உடன் அளித்து விடுவதாகதான் சொன்னார்கள். ஆனாலும் நான்கு மணியாகியும் வேலை சுணக்கமாகவே இருந்தது. வீரபாண்டியனுக்கும் அதே நிலைதான். ”ஒரு கேள்விக்கு பதில் தர்றதுக்கே இவ்ளோ நேரமா சார்..? அத்தனையும் வாங்கி கம்பைல் பண்ணி நாங்க எப்போ செகரட்ரிக்கு அனுப்பறது..” தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் போய் ”எந்த டிவிஷன் சார்..” என்றாள். சொன்னான்.

”வைக்காதீங்க.. நான் பேசறேன்..” என்றபடியே ரீசிவரை வாங்கிக் கொண்டாள்.

“சார்.. எல்லா டிவிஷனும் ஃபிகர் குடுத்துட்டாங்க.. உங்கள்ட்டேர்ந்து வந்தவொடனே கம்பைல் பண்ணி செகரட்டரிக்கு அனுப்பணும்.. அங்கேர்ந்து ஃபோன் வந்துட்டே இருக்கு சார்..”

”எல்லாமே ஒடனே.. ஒடனேன்னா எப்டீங்க மேடம்..?” என்றார் அந்த செயற்பொறியாளர்.

”உங்க கஷ்டம் புரியுது சார்.. நாங்க என்ன செய்ட்டும்.. ப்ரீதிங் டைம் கூட குடுக்காம அவசரப்படறாங்களே சார்..” செயற்பொறியாளர் பதவி இவள் பதவியை விட ஒரு படி மேலானது. அவளின் பணிவில் மனம் இளகியவற்போல ”உங்க ஆபிஸ் மெயில் ஐடி குடுங்க மேடம்.. அனுப்ப சொல்றேன்..“ என்றார்.

”சார்.. பிபிடிக்கு ஃபோட்டோஸ் வேணும் சார்..” என்றாள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விட்டு.

”தெரியும்மா.. சொன்னீங்களே..” அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.

”பாருங்க சார்.. டெய்லி பத்து மெயில் கரஸ்பாண்ட் பண்றோம்.. மெயில் ஐடி வேணுமாம்..” என்றாள் வீரபாண்டியனிடம் கோபமாக..

”அப்றம் அவங்க கெத்தை காட்றது எப்டீ..?” சிரித்து விட்டு தொடர்ந்தான். ”எல்லா டிவிஷன்லேர்ந்தும் பர்டிகுலர்ஸ் வந்துடுச்சா மேடம்..”

“அட.. நீங்க வேற சார்.. இன்னும் வர்ல..”

”மேடம்.. சிஇ கூப்டுறாங்க..” என்றார் அலுவலக உதவியாளர் குறுக்கிட்டு.

தலைமைப் பொறியாளர் கடுப்பாக வைத்திருந்தார் முகத்தை. ”மேடம்.. ஒம்பதே ஒம்பது டிவிஷன்.. அதை கேட்டு வாங்க இவ்ளோ நேரமாங்க..? மத்த ரீஜின்லேர்ந்தெல்லாம் வந்துருச்சாம்.. நம்பதான் இன்னும் அனுப்பலயாம்.. செகரடேரியட்லேர்ந்து அர்ஜ் பண்றாங்க.. சீக்ரம்..” பேசிக் கொண்டே வந்தவர் குரலை உயர்த்தி கத்த தொடங்கினார். ”எல்லாம் அவசர நேரத்திலதான் செய்வீங்களா..?  அசெம்ளி கூட்டம் கூட போவுதுன்னு தெரியும்ல்ல.. இதெல்லாம் தயாரா வச்சிக்க வேணாமா..? அவசர கோலத்தில அள்ளுப்புளிக்கணக்க கொடுத்துடுவீங்க.. அங்க மினிஸ்டர் முன்னாடி பதில் சொல்றது நாந்தானே..? போய் விறுவிறுன்னு வேலைய பாருங்க மேடம்..”

எரிச்சலாக வந்தது அவளுக்கு. செயற்பொறியாளர்களின் அலைபேசியை தவிர்த்து அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கத்தினாள். ”தோ.. வாங்கீ்ட்டே இருக்கோம் மேடம்..” என்றார்கள்.

”எவ்ளோ நேரம் இதயே சொல்லுவீங்க.. ஒரு டிவிஷன் ஒர்க்கை கூட கம்பைல் பண்ணி தர முடியலேன்னா என்ன சார் அர்த்தம்.. நீங்க எப்போ அனுப்பி.. நாங்க எப்போ செகரடேரியட்டுக்கு அனுப்பறது..?” என்றாள் கோபமாக.

கணவரிடமிருந்து அழைப்பு. ”சொல்லுங்க..” என்றாள்..

”மணிகண்டனோட மிஸ் ரொம்ப பிரைஸ் பண்ணினாங்க.. எல்லாம் அவங்கம்மா கோச்சிங்ன்னு சொன்னேன்.. அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு.. நைசா நீ வேலைக்கு போறீயான்னு விசாரிச்சாங்க.. எங்கம்மா எஸ்டீஓவா இருக்காங்கன்னு ஒன் பையன் பெருமையா சொன்னான்..” என்றான்.

”இங்க ஆபிஸ்ல ஒரே புடுங்கு.. எல்லாம் ஓரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சுக் குடுன்னு உசிர வாங்றாங்க..” என்றாள்.

”சரி.. பொறுமை.. பொறுமை.. கௌம்பும்போது மிஸ்ட்கால் குடு.. உன்னை பிக்கப் பண்ணீக்கிறேன்.. வீட்ல ஃப்ரஷ்அப் பண்ணீட்டு வெளில சாப்டுக்கலாம்..”

”நேரமாயிடும்னு நெனக்கிறேன்..”

”அப்டீன்னா உங்கம்மாவையும் மணியையும் கூட்டீட்டு வந்துடுறன்.. சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்..” என்றான். அவனும் அதிகாரி என்பதால் மனைவியை புரிந்துக் கொள்ள முடிந்தது.

”சரிங்க.. வைக்றன்..” என்றாள். வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது. ”கடவுளே.. ஆறாயிடுச்சா.. நேரம் போறதே தெரில..”

மெயிலில் புகைப்படங்கள் வந்துக் கொண்டேயிருந்தன. ”எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி டிவிஷன்வைஸ் ஃபோல்டர் போட்டு ஏத்தி வச்சுடுங்க மேடம்.. பிபிடி பண்றதுக்கு கம்ஃபர்டபளா இருக்கும்…” என்றாள் தனது உதவியாளரிடம். அதற்குள் தலைமைப் பொறியாளர் கனிணி அறைக்கே வந்து விட்டார்.

”எவ்ளோ நேரம் எடுத்துக்குவீங்க..?” அனைவரும் எழுந்துக் கொண்டனர்.

”இதோ ஆச்சு சார்.. முடிச்சுட்டோம்..” பதற்றமாக பேசினாள்.

”இன்னும் எத்தனை பெட்டிஷன் பெண்டிங்..?” என்றார் வீரப்பாண்டியனிடம்.

”டோட்டலா இருவத்தொண்ணு சார்.. பதினாறு குளோஸ் பண்ணீட்டேன்.. இன்னும் அஞ்சு இருக்கு சார்..”

சிஎம் செல் பெட்டிஷன் பைலை பார்வையிட்டவர் ”ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த பேப்பர்.. .ஃபைல்ல கட்டி வச்சிட்டு இப்ப வேலை செய்றீங்க.. அப்டிதானே..? உதவிப் பொறியாளரை கத்தி விட்டு ”இதெல்லாம் மானிட்டர் பண்ணாம நீங்க என்ன சார் பண்றீங்க..? என்றார் கோபமாக வீரபாண்டியனிடம்.

பிறகு இவளிடம் திரும்பி ”நீங்கம்மா..?” என்றார்.

”இதோ முடிச்சிட்டேன் சார்..” என்றாள் பவ்யமாக.

”காலைலேர்ந்து ஒரே பதில்தானே சொல்றீங்க.. புக்லெட் போட்டாச்சா..?“

”இன்னும் இல்ல சார்.. இப்பதான் எல்லா ப்ராகிரசும் வந்துச்சு.. இதோ போட்டுடுறன் சார்..” என்றாள்.

நிமிர்ந்து பார்த்து விட்டு கோபமாக நகர்ந்தார். மணி ஏழரையை தாண்டியிருந்தது.

”கடவுளே.. இவருக்கென்னா..? சொல்லீட்டு போயிடுவாரு.. அவசரம்னு கேட்டாலே ஆடி அசஞ்சு குடுக்குறாங்க.. இதுல டெய்லி வேற ரிப்போர்ட் கேக்குணுமா.. ச்சே.. வெறுத்துப் போச்சு.. பொம்பளன்னு கூட அந்தாளுக்கு அறிவில்ல.. இவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு.. மினிஸ்டர்.. செகரட்டரின்னு அலைஞ்சு வருமானம் வர்ற பக்கமா போஸ்டிங் வாங்கீட்டு வந்து உக்கார தெரியுதுல்ல.. கேள்விக் கேட்டா வலிக்குதாம்மா..? இவரு பொண்டாட்டீ பொம்பளபுள்ளயெல்லாம் இத்தனை நேரத்துக்கு வெளிய இருந்தா தாக்கிக்குவாராம்மா… ஆம்பளபொம்பள வித்யாசம் கூட தெரியாம ஒரேடீயா எகிற்றாரு.. சே..” என்றாள் படபடப்பாக நாளை மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு.

***

பிரசவ வெளி

கலைச்செல்வி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் தெளிவற்று தெரிந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

அன்று குடும்பமே ஆரவாரத்தில் மூழ்கி விட எனக்குள் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக வந்து உட்கார்ந்தது. இத்தனைக்கும் சினிமா.. சீரியல்களில் வருவது போல் எனக்கு மயக்கம் வரவில்லை. வாந்தி போன்ற தொந்தரவுகளும் இல்லை. மயக்கம் தெளிந்த கதாநாயகிகள் கட்டிலில் போர்வைக்குள் படுத்தப்படி வருங்கால குழந்தையை பற்றி வெட்கமும் ஆசையுமாக கணவருடன் பகிர்ந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படியேதும் தோன்றாமல் பயம் வந்ததுக் குறித்து பயமாகதான் இருந்தது. ஓருவேளை அடிக்கள்ளி.. என்ற தேய்ந்த வசனத்தை என் கணவர் பேசாததுதான் காரணமோ என்ற எண்ணவோட்டம் உதட்டில் புன்சிரிப்பை வரவழைத்தது.

கர்ப்பவதி.. புள்ளத்தாச்சி என்ற வார்த்தைகளின் புனிதம் ஜீன்களின் வழியாகவும் சமுதாய கற்பிதங்களாலும் என்னுள் கடத்தப்பட்டிருந்தாலும் எதிர்ப்படும் கர்ப்பவதிகளின் மனநிலை குறித்த ஆராய்ச்சி என் மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டேயிருந்தது. என் நாத்தனாரின் பிரசவம் குறித்து பேசும்போதெல்லாம் என் மாமியார் “எம்பொண்ணு செத்து தான் பொழச்சா..” என்றது வேறு பயத்தை அதிகப்படுத்தியது. “பொண்ணுக்கு பிரசவங்கறது மறுஜனனம்தான் என்றாலும் இந்த நவீன மருத்துவ யுகத்தில்..’ என்று டி.வியில் பேசிக் கொண்டே போகும் மகப்பேறு மருத்துரின் முதல் வரிகளோடு மனம் நின்று போனது. பெரிய வயிறுடைய பெண்கள் அடுத்து வரும் மாதங்களில் பூந்துவாலைக்குள் குழந்தையை இறுக்கியப்படி நடப்பதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. இப்போது எனது பழக்கவழக்கங்கள் கூட மாறியிருந்தது. முன்பெல்லாம் கோபம் வரும்போது சாப்பாட்டில்தான் அது வெளிப்படும். ஆனால் இப்போது கோபம் கிளம்பும் போதே சமாதானப்படுத்தப்பட்டதில் சலிப்புதான் வந்தது. ‘சாப்பாட்டுல கோவத்த காட்டாதே.. இப்ப நீ ரெண்டு உயிர்..’ எல்லோரும் சொல்லும் போது பயம் இன்னும் கூடிப் போனது.

வாரிசு ஏக்கத்தை கண்களில் சுமந்திருந்த கணவரிடம் வயிற்றுச்சுமையை தள்ளிப் போட எண்ணும் என் எண்ணம் அரங்கேறாமலேயே அஸ்தமித்துப் போனதில் வயிறு மேடிட துவங்கியிருந்தது. வெளிப்படுத்தியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்..? சமாதானத்தின் இறுதியிலோ அல்லது சண்டையின் இறுதியோ வயிற்றுச் சுமைக் கட்டாயமாக்கப்பட்டிருக்கும். என் சம வயது பெண்களில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போட்டவர்கள்.. குழந்தை தரிப்பதற்காக மருத்துவ ஆலோசனையிலிருப்பவர்கள்.. இன்னும் திருமணமாகாதவர்கள்.. இவர்களோடு என்னை ஒப்பிடுவதில் என்னுடைய தாய்மைப்பேறுக் குறித்து என் அம்மாவுக்கும் பெருமைதான். தனது மகள் பெண்ணாக பிறப்பெடுத்ததை பூர்த்தி செய்து விட்டாள் என்ற நிறைவுடனேயே இந்த பத்து மாதங்களும் வளைய வந்திருந்தாள் அவள். என் மனதை வெளிப்படுத்தியிருந்தால் முதலில் ஆச்சர்யம்தான் வந்திருக்கும் அம்மாவுக்கு. ‘இப்டி கூட யாராவது நினைப்பாங்களா..?’ என்பாள். பிறகு நிச்சயமாக மருமகனின் கட்சிக்கு தாவி விடுவாள்.

மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வருவது.. ஐந்தாம் மாதம் மருந்துக் கொடுப்பது.. என நேரங்கள் நெரிசலாகக் கடந்துக் கொண்டிருந்தது. துறுத்தலான வயிற்றை ஆசையாக வருடி புளங்காகிதம் அடையும் கணவருக்கு இப்போதெல்லாம் வயிற்றுக் குழந்தையை தவிர்த்து என்னிடம் பேச விஷயங்களற்றுப் போனது. தடுப்பூசிகள், ஸ்கேன் ரிப்போர்ட் இவைகளோடு மாதாந்திர செக்கப் முடிந்து மருத்துவர் அறையிலிருந்து வெளியே வரும் போது எனது திகில் நிறைந்த கண்களை பார்த்து பதறும் கணவரிடம் ‘பேபி நல்லாயிருக்காம்..’ என்ற வார்த்தைகள் அவரை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் மருத்துவ செக்கப் செய்யும் முறை என்னை விரக்தியடைய வைத்திருந்தது.

இரவுகள் கூட கலக்கத்திலேயே கழிந்துக் கொண்டிருந்தது. புதிதாக குழந்தைப் பெற்ற உறவுக்காரப் பெண்கள் குழந்தையே உலகமாக மாறி போவதை மனக்கண்ணுக்குள் இருத்தி பார்க்கும் போது வரும் இன்பம், பிரசவம் குறித்த பயத்தில் கரைந்துப் போகும்.  வரப்போகும் குழந்தையை பற்றிய கனவுகளில் மூழ்கியப்படியே மெல்லிய குறட்டையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுத்திருப்பார் கணவர். பத்து பனிரெண்டு குழந்தைகளை உடல் உழைப்பு மிகுந்த அந்த காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாக பெற்றெடுத்த பாட்டிமார்கள் எனக்கு சாதனையாளர்களாக தெரிந்தனர். மருத்துவச்சி பார்க்கும் பிரசவம்.. வளராத விஞ்ஞானம்.. சமுதாய அழுத்தம்.. புனித வேள்விக்குள் அடைப்படும் தாய்மை இவைகளுக்கு மத்தியில் கயிற்றில் நடக்கும் சாகஸகாரர்களாகவே ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்திருப்பதாக எனக்கு தோன்றியது. விஞ்ஞானம் போர்த்திய இன்றைய சமுதாயத்தில் கூட மலடி.. போன்ற ஆண்பாலற்ற சொற்கள் வெகு விமரிசையாகவே வலம் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தாங்கள் பெறும் குழந்தைகள் குறித்த உரிமையை  பெண்கள் இன்னும் பெறவில்லை என்று ஏதேதோ எண்ணங்கள் மூழ்கடிக்க மீதி இரவும் துாக்கம் தொலைந்தே கடக்கிறது. துாக்கமின்மை பகல்களை அரைமயக்க நிலையிலேயே வைத்திருப்பது போலிருக்கும். “நாள் நெருங்க நெருங்க துாக்கம் வராதுடீ.. இதெல்லாம் வயித்துப்புள்ளக்காக நாம செய்ற தவம்டீ.. குடுத்து வச்சிருக்கணும்..” என்பாள் அம்மா உருக்கமாக.

வயிறு பெரிதானதில் கைகளின் துணையின்றி உட்காரவோ எழுந்துக் கொள்ளவோ.. புரண்டு படுக்கவோ முடியாத களைப்பு நிரந்தரமாக முகத்தில் படர்ந்துப் போனது. “உள்ள இருக்கறது பொம்பளப்புள்ளதான்.. பொண்ணுங்கதான் தாயோட அழகை களவாடிக்கும்பாங்க..” என்ற ஜோதிடம் சொல்லும் அம்மாவுக்கு “இல்லீங்க.. ஆம்பளப்புள்ளதான் அசதிய கொடுக்கும்..” என்பார் மாமியார் விட்டுக் கொடுக்காதவராக. டபக்.. டபக்.. என உள்ளிருந்து வரும் அசைவுகள் சற்று நேரம் வராது போனாலும் பயமேற்பட்டது. ‘குழந்தை மூவ்மெண்ட்டே இல்லையாம்..’ வீடே அல்லோலகல்லோலப்பட்டது. ஸ்கேன் எடுத்ததில் குழந்தை ‘நார்மல்’ என்றது ரிப்போர்ட். நான் தான் நார்மலாக இல்லாமல் நடுக்கத்துடன் பிரசவ தேதியை எதிர்ப்பார்த்திருந்தேன். வளைகாப்பு வளையல்கள் உடைந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்ததில் யாருடைய உடலுக்குள்ளோ புகுந்துக் கொண்டது போலிருந்தது. என் அலைபேசியிலிருந்து போகும் அழைப்புகளோ அலைபேசிக்கு வரும் அழைப்புகளோ பிரசவத்தைப் பற்றிய பேச்சிலேயே சுற்றி வந்து முடங்கிப் போவது ஒரு வித சலிப்பை தந்தது.

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே மருத்துவமனைக்கென பெரிய பேக் ஒன்று எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அம்மாவும்தான். ஃபிளாஸ்க் டம்ளர்கள்.. பெரிய பெரிய டவல்கள் சலவை செய்து புதிதாக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் ஸ்பூன் சாத்துக்குடி பிழியும் கருவி குளுக்கோஸ் பாக்கெட்டுகள் நைட்டி நாப்கின் பாக்கெட் என நிரம்பியிருந்த அந்த பேக் கண்ணில் படும் போதெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டேயிருக்கும். “மாப்ளை நம்ம பொண்ண நல்லா கவனிச்சுக்குறாரு.. குழந்தை மூவ்மெண்ட்ட வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. வலி வர்றாப்பல இருந்தா ஒடனே ஆஸ்பிடலுக்கு கௌம்பிடு.. நேரத்துக்கு சாப்புடுன்னு ஒரே அட்வைஸ்தான் பொண்டாட்டிக்கு..” அம்மாவுக்கு பெருமைப்பட விஷயமிருந்தது. எனக்கோ என் கணவர் என்னிடமிருந்து விலகி விட்டது போலிருந்தது.

தயாராக இருந்த அந்த பெரிய பேக்கிற்கு நேற்று மாலை உபயோகம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதலில் கர்ப்பபையில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு அனஸ்தீஷியா அலர்ஜி என்பதால் நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றார்கள். பெல்விஸ் எலும்பு விரிவடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார்கள். இரு வீட்டார் குலதெய்வங்கள் சிறு தெய்வங்கள் என பிரசாதங்களால் எனது நெற்றி நிறைந்திருந்தது. ‘எம்பொண்ணு நல்லப்படியா பெத்து பொழைக்கணும்..’ அம்மாவின் சத்தமான வேண்டுதல் வலியை அதிகரித்தது. பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த  என்னை இனிமா கொடுக்க அழைத்துச் சென்றனர்.

பொங்கி வழிந்த வயிற்றோடு ஒருக்களித்து கால்களை முன்னும் பின்னுமாக்கி படுக்க சூடான சோப்புத் திரவம் எனக்குள் இறங்கியது. பிறகு கழிவறைக்கும் படுக்கைக்குமாக அலைந்தேன். ‘தண்ணி வழுக்கும்டீ.. பாத்து நட..’ முதுகில் ஒலித்த அம்மாவின் குரல் பலித்தால் தேவலாம் என்றிருந்தது. வலியோடு அவஸ்தைப்படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம். கழிவறை கதவை மூடுவதற்குள் கால்களின் வழியே சிறுநீர் வழிந்தோடியது. வழக்கமாக இருப்பது போலின்றி சற்று பிசுபிசுப்பாக இருந்தது அது. நான் அம்மாவிடம் சொல்ல.. அம்மா நர்ஸிடம் அலற.. உடனே பச்சை அங்கிக்குள் நுழைக்கப்பட்டு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டேன். ஸ்ரெச்சரோடு பயணித்த என் கணவரின் பதற்றம் நிறைந்த விழிகள் என்னை கோபப்படுத்தியது. ‘இந்த பதட்டமெல்லாம் வயித்துக் கொழந்த நல்லப்படியா வெளிய வருணும்னுதான்..’ பொறுமலோடு கண்களை மூடிக் கொண்டேன். ஸ்டெச்சர் நகர்ந்தது. மனம் வெறிச்சோடியிருந்தது.

இதுதான் உள்நோயாளியாக எனது முதல் மருத்துவமனை அனுபவம். அறையின் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தது. பலியாடுகளாக கிடந்த மூவரோடு நானும் சேர்ந்ததில் நால்வராகிப் போனோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என்னை சோதித்து விட்டு ‘லேபர் பெயின் வர்ட்டும்.. வெயிட் பண்ணலாம்..” என்றபடியே எனது பச்சை உடுப்பை கீழே இழுத்து விடாமலேயே நகர்ந்தார். படுத்தவாறே குனிய முயன்றேன்.  “எழுந்திரிக்காதம்மா.. டிரிப்ஸ் போய்ட்டுருக்கல்ல..” என்றார் ஒரு நர்ஸ். பிறகு நான் கேட்டுக் கொண்டதன் போல் பட்டும்படாமலும் என் உடையை சரிப்படுத்தி விட்டு நகர்ந்தார். உடைப் பற்றிய பதற்றம் நீங்கியதில் மெல்ல கண்களைச் சுழற்றினேன். பக்கத்து படுக்கையிலிருந்த பெண் ஹீனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பெண்ணின் சத்தம் கூடிக் கொண்டேயிருந்தது. மரணத்தின் உச்சமே ஜனனம். மரணம் என்றால் அது மனதின் அந்தரங்க வலியாக இருக்கலாம். அல்லது உடல் வலியின் உச்சமாக இருக்கலாம். அல்லது நேரடி மரணமாகக் கூட இருக்கலாம். தத்துவார்த்தமான சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அந்நேரத்திலும். இம்மாதிரியான சிந்தனைகள் எனக்கு புதிததல்ல. எனது பள்ளிநாட்களில் அவ்வவ்போது நான் அள்ளி விடும் வசனங்கள் நீதிபோதனை வகுப்பில் என்னை முன்னிலைப்படுத்தும். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை நீதிபோதனை டீச்சர் ‘உன் வயசு ஸிக்ஸ்டீனா.. ஸ்க்ஸ்டீயா..’ என்று கிண்டலடித்தார்.

பக்கத்து படுக்கைப் பெண் வலியில் எனக்கு சீனியர். அவள் அனுபவிப்பதையெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் நானும் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையின் உச்சக்கட்டம். வலியின் உச்சக்கட்டம். பொறுக்கவியலாத வலியை பொறுக்க வேண்டிய கட்டாயம். பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாக அவசரமாக உள்ளே நுழைந்த இரு தாதிகள் பச்சைத்திரைக்குள் ஐக்கியமானார்கள். அந்தப் பெண்ணின் கால்களை இருவர் மடக்கி பிடித்திருப்பது தெரிந்தது. அவள் ஏதோ செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பொல்லாத வலி என்னை திசைத் திருப்பியது. வாய் விட்டு முனகினேன். நர்ஸ் என்னருகே வந்தார். ‘அடிவயித்துல வலி இறுக்கி புடிக்குதா..” என்றார். அப்படிதான் இருந்தது எனக்கும். “வலி வுட்டு வுட்டு வரணும்.. ரெண்டு நிமிஷத்துக்கொரு தடவை வந்து வந்து நின்னுச்சுன்னா பேபி வெளிய வர போவுதுன்னு அர்த்தம்..” வலியின் இறைச்சலுக்குள் மழலையின் குரல் மெலிந்து கேட்டது. அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆவலில் தலையை திருப்பிப் பார்த்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் குறையவில்லை. இடுப்புக்கு மேல் தான் தெரிந்தாள். பச்சைத்திரையை சற்றே நகர்த்தியிருந்தார்கள். நல்ல உணர்வுடன்தான் இருந்தாள். உடல் தொய்ந்து கிழிந்த நாராகி போனதை முகம் உள்வாங்கி களைப்பை வெளித்தள்ளியிருந்தது. குழந்தை இடைவிடாது அழுதது. அந்த ஒலி அவளை சலனப்படுத்தியிருக்குமோ.. தாங்க முடியாமல் அழுவாளோ.. முகத்தை உற்றுப் பார்த்தேன். சலனங்களற்றிருந்தது அந்த முகம்.

இரண்டு நிமிடத்திற்கு முன் விட்டு போயிருந்த அடி வயிற்றுவலி இப்போது மீண்டும் கவ்வி இழுத்தது. ‘அதே தான்.. அதே தான்..’ மனசு பயத்தில் சில்லிட்டது. “சிஸ்டர்.. சிஸ்டர்..” என்று கத்தினேன். நர்ஸ் வேகமாக வந்தார் என்னிடம். பழக்கப்பட்டுப் போன நிகழ்வாக நான் கால்களை விரித்துக் கொடுக்க “நாலு ஃபிங்கர் கேப் விட்டுருக்கு டாக்டர்..” என்றார் அவசரமாக.

இப்போது அவளிடமிருந்த பச்சைத்திரையை முழுவதும் நீக்கி என்னை நோக்கி நகர்த்தினர். நான் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது எனக்கு..? மறுத்து போயிருந்தது மனம். உடை மாற்றும் அறையிலோ குளிக்கும் அறையிலோ கூட இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை நான். கையறு நிலை என்பது இதுதானோ..? “முக்கு.. நல்லா ஸ்டெயிரன் பண்ணி முக்கு.. ம்.. அப்டி தான்.. ம்ஹும்.. பத்தாது.. இன்னும்.. இன்னும்.. இன்னும் பெட்டரா டிரை பண்ணு.. ம்ம்.. அப்டி தான்.. இன்னும் கொஞ்சம்.. இங்க பாரும்மா.. நீ கோவப்ரேட் பண்ணலேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.. கால நல்லா விரிச்சு வக்கலேன்னா பேபி வெளிய வர முடியாது.. முக்கும்மா.. ஏற்கனவே பனிக்கொடம் ஒடஞ்சுடுச்சு.. லேட் பண்ணுனீன்னா பேபிக்கு ஸஃபகேட் ஆயிடும்..” மிதமாகவும் கோபமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி போல தொடர்ச்சியாக வந்த பெண் மருத்துவரின் குரல்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. சொன்னவைகளையெல்லாம் செய்தாலும் குழந்தை ஏன் வெளியே வரவில்லை..?  விரித்து பிடிக்கப்பட்ட என் கால்கள் வலியில் சோர்ந்திருந்தன. உடலின் கீழ்பாகம் முழுவதும் வலியால் சூழ்ந்திருந்தது. இந்த பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்றுக் கூட மிகையானதல்ல. ‘பிரசவம் ரொம்ப கஷ்டமானதுன்னா இத்தனைக் கோடி ஜனக்கூட்டம் எப்படி பெருகியிருக்கும்’ என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகளெல்லாம் பொலபொலத்து உதிர்ந்துக் கொண்டிருந்தன.

சினிமாவில் கதாநாயகி கால்களை வலியில் அடித்துக் கொள்வாள். வேதனையில் துடிக்கும் அவள் முகத்தில் காமிரா படரும் நேரம் வீறிட்ட மழலை ஒலி எல்லா பின்னணி இசைகளையும் நிறுத்தி விட்டு தியேட்டர் முழுதும் எதிலொலிக்கும். வலிகளை மறந்து கதாநாயகி குழந்தையை வாரி அணைத்துக் கொள்வது என் மனக் கண்ணில் ஓடியது. என் பெரியப்பாவின் மகள் குழந்தையை பிரசவித்திருந்த போது அவளை பார்க்க போயிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவளது ஒருநாள் வயதுடைய குழந்தையை என் பெரியம்மா கைகளில் ஏந்தியிருக்க அக்கா அவஸ்தையாக என்னை பார்த்து சிரித்தாள். இப்போதுதான் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது. வலிகளின் உச்சத்தை வென்று வந்த வேதனை சிரிப்பு அது. ‘நான் உங்கம்மாவ பெத்தெடுத்தது உங்க தாத்தனுக்கு கூட ரெண்டு நாளைக்கு பொறவுதான் தெரியும்..’ கூட்டுக் குடும்பத்திலிருந்த என் அம்மாச்சி எட்டாவதாக பெற்றிருந்த என் அம்மாவை பற்றி பேசியது இந்த நேரத்திலும் நினைவிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தியது.

“அப்டிதான்.. இன்னும் ஒரு தடவ.. அவ்ளோ தான்.. குட்..” பேசிக் கொண்டே இருந்த மருத்துவர் திடீரென வெகு உன்னிப்பானார். உடல் முழுவதும் வலி ஆக்கிரமித்த நேரம். என்னுள்ளிருந்து ஏதோ உருவப்பட்டது போன்ற உணர்வு. உடலை அசைக்கவியலாத நிலையில் பார்வையை மட்டும் திருப்பினேன். மருத்துவரின் கைகளுக்குள் உடலெங்கும் வெள்ளையும் சிவப்புமாக படிந்திருந்த அந்த சின்னஞ்சிறு உருவம் குறித்து மூளையில் உறைக்க எனக்கு சில நொடிகள் பிடித்தது.  ‘விடுதலை.. விடுதலை.. விடுதலை..’ மௌனமாக பாடியது மனம். வீறிட்டு அழுத குழந்தையை ஏந்திக் கொண்டு நகர்ந்தார் ஒரு நர்ஸ். குளிப்பாட்ட சென்றிருப்பாராக இருக்கும். எனது பெட்டில் தொங்கிக் கொண்டிருந்த எனது கேஸ் ஷீட்டில் குழந்தை பிறந்த நேரத்தை பதிவு செய்தார் ஒரு நர்ஸ். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியாத நிலை. நேரடி வலியின் வீச்சு நின்றிருந்தாலும் உடல் முழுக்க வலியும் உதிரமுமாக அவஸ்தை கூடியிருந்தது. தாதி ஒருத்தி அடிவயிற்றை மசாஜ் செய்வது போல அமுக்கியதில் அடிவயிறு வலித்தது. என் வலியையோ அவஸ்தையோ சட்டைச் செய்யாதவளாக கடமையே கண்ணாக இருந்தார் அந்த தாதி. இறுதியாக கட்டி கட்டியாக உதிரம் நிறைந்த வாளி என் படுக்கைக்கு கீழிருந்து அகற்றப்பட்டது. உதிரப்போக்குக்கு நாப்கின் வைக்கப்பட்டது. இரத்தக்கறை படிந்த எனது நீள அங்கிப் போன்ற உடை நீக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த எனது நைட்டி அணிவிக்கப்பட்டது. என்னிடமிருந்த சகலமும் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு முற்றிலும் மற்றவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த எனக்கு கையில் என்னவோ கட்டப்பட்டது. திருப்பிப் பார்த்தேன். சின்ன டோக்கன். எனக்கும் பேபிக்கும் மூன்றாம் எண் டோக்கன். குழந்தை மாறிவிடாதிருக்க. பூஞ்சையாய் கிடந்த தேகத்தை இரண்டு பேராக சேர்ந்து  மெதுமெதுவாக ஸ்டெரச்சருக்கு மாற்றினார்கள். ஊண்சத்தற்ற உடல் போல சக்கையாக உணர்ந்தேன்.

ஸ்ரெச்சர் லேபர் வார்டை விட்டு வெளியே நகர்ந்தது. யாரையும் பார்க்க ஆவலின்றி கண்களை மூடிக் கொண்டேன். ஆதரவாக அம்மா தலையை கோதுவது தெரிந்தது. சின்ன விசும்பல் சத்தம். அம்மா அழுகிறாள் போல. ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டா எம்பொண்ணு..’ அவளின் வாய் முணுமுணுத்தது. கணவனின் விழிகள் குழந்தையை தேடியிருக்கும். ஸ்ரெச்சரின் வீல்கள் வளைந்தன. அறைக்குள் நுழைகிறேன் போலும்.

சுடுநீரில் துடைக்கப்பட்ட உடலும் இதுவரை அனுபவித்த வலியும் துாங்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது எனக்கு. அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தாள். பிரயத்தனப்பட்டு லேசாக விழித்துப் பார்த்ததில் சூழ்ந்திருந்த அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளாய் தெரிந்தனர். அல்லது நான்தான் இறந்து வேற்றுக்கிரகத்திற்கு வந்து விட்டேனா..? எதுவும் விளங்கவில்லை. ‘சமுதாயமானது தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை வாய் மூடி மௌனிகளாக்கி மிக சரியாக காய்களை நகர்த்தி மாறாத வெற்றியை தக்க வைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருக்கிறது. அதன் மிகச்சமீபமான பலி நான்..’ என்று கறுப்பு அங்கியோடு கோர்ட்டில் வாதிடும் போது நான் எழுப்பப்பட்டேன். சிறு அசைவு கூட எனக்கு சாத்தியப்படவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

“ஏன் இவ்ளோ கும்பல்.. எல்லாரும் கௌம்புங்க..” அதட்டியப்படியே உள்ளே நுழைந்த நர்ஸ் அதே அதட்டலோடு “எழுந்திரிம்மா.. பேபிக்கு பால் குடுக்கணும்..” என்றார். தலையணையில் சாய்ந்து அமர வைக்கப்பட்டேன். குழந்தையை மார்போடு ஏந்துகையில் வலுவின்றி கை நடுங்கியது. அம்மா உதவினாள். “நீங்க நவுருங்கம்மா.. அவளுக்கு பழக்கப்படுத்தணும்..” நர்ஸ் வெகு இயல்பாக குழந்தையை துாக்கி என் கைகளில் வைத்தாள். அவள் சர்விஸில் என்னை போல ஆயிரம் பேரை பார்த்திருந்த அனுபவம் அதில் தெரிந்தது.

“இங்க பாரும்மா.. இத்தன மாசம் சுமந்தது பெருசில்ல.. பெத்ததும் பெருசில்ல.. வளக்கறதுதான் பெரும்பாடு.. குழந்தைக்கு சரியான நேரத்துக்கு பால் குடுக்குணும்.. பசின்னாலும் அதுங்க அழுவும்.. எறும்பு கடிச்சாலும் அழுவும்.. வயித்த வலிச்சாலும் அழுகைதான்.. பேபி எதுக்காக அழுவுதுன்னு நமக்குதான் தெரியணும்.. அழுவாம துாங்கிட்டே இருந்தாலும் அப்டியே விட்டுடக் கூடாது.. எழுப்பி விட்டு பால் கொடுக்கணும்.. பால் குடிக்கும் போதே கூட அதுங்களுக்கு துாக்கம் வந்துடும்.. வாய் வைக்க தெரியாம அல்லாடுங்க.. பால் மூக்குல ஏறிக்காம கவனமாக இருக்கணும்..” ஒப்பிப்பது போல சொல்லியப்படியே நைட்டியை விலக்கினாள். இப்போது உடலின் மேல்பகுதி என் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்தது. சிறிய சதைக்குவியலில் ஒரு கோடு போலிருந்தது அதன் வாய். குழந்தைக்கும் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. எனக்கும் என்ன செய்ய வேண்டும் என விளங்கவில்லை. நர்ஸின் அனுபவம் வென்றதில் குழந்தை வீறிட்டு பின் எதையோ சப்பி விட்டு துாங்கி போனது. நர்ஸ் கிளம்பிய பிறகு  “அப்டியே மருமகன்மாதிரியே இருக்குதுடீ புள்ள..” என்றாள் அம்மா. அதுவரைதான் நினைவிருந்தது. பிறகு நானும் துாங்கிப் போனேன்.

யாரோ எழுப்பியது யுகங்களை கடந்து மீண்டது போலிருந்தது.  “புள்ளக்கு பசி வந்துருக்கும்.. பால் குடும்மா..” என்றாள் அம்மா. கண்களை திறக்க முடியாத அசதி. குழந்தையை என்னருகே படுக்க வைத்தாள். “கண்ண தொறந்து பாத்து பால் குடுடீ.. மூக்குல ஏறிக்கும்..” திறக்க முடியாதிருந்த கண்களை யாருடைய வருகையோ திறக்க கட்டாயப்படுத்தியது.

இரு வீட்டு ஆட்கள்.. தோழர்கள்.. அக்கம்பக்கத்தோர் என யாரோரோ வந்தபடியே இருந்தனர். ‘பால் குடுக்குறா.. குடுத்தவொடன கூப்டுறன்..” அம்மா சமாதானப்படுத்தும் போது ‘அவங்கள அப்டியே போக சொல்லும்மா.. நான் துாங்கணும்..” என்று சொல்லத் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். ஆண் உறவினர் மருத்துவமனை செலவுக் கணக்கு கேட்பதும் பெண்கள் அறையை நோட்டமிடுவதும் பிறகு குரலை தழைத்துக் கொண்டு ‘பால் இருக்குல்ல..’ என்று கேட்பதும் எரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் வெளிய போய் தொலைங்க.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா கைத்தாங்கலாக பிடிக்க செருப்பணிந்த கால்களுடன் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தேன். அதற்குள் யாரோ வந்திருந்தார்கள். அப்படியே செருப்பைக் கழற்றி அடித்து விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு உள்வாங்கிக் கொண்டேன். அத்துமீறிய அலுப்பில் சற்று கண்ணயறும் அம்மாவை அங்கிருந்த டி.வி ரிமோட்டால் துhக்கி அடிக்க வேண்டும் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வெறுமை. யாருமற்ற தனிமை என மனசு ரணக்களமாகியிருந்தது. “ஏன்டீ.. பசிக்குதாடீன்னு தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்டி சள்ளுபுள்ளு வுளுவுற..?” அம்மாவுக்கு சமயங்களில் கோபம் வந்து விடும். துாங்கும் தனது வாரிசைப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் பார்க்க வருபவர்களை கவனித்துக் கொள்வதுமாக என் கணவரின் நேரங்கள் பிஸியாகவே கழிந்ததில் மூன்று நாட்கள் கடந்தது.

வீடு ஆரத்தி எடுத்து வரவேற்றது. தொட்டில், புதிதாக வாங்கிய டேபிள்ஃபேன், மாற்றம் செய்யப்பட்ட கட்டில்,  என் படுக்கைக்கு அருகே உருவாக்கப்பட்ட புதிய சிறிய படுக்கை என வீடே மாறியிருந்தது. விதவிதமான ருசியற்ற உணவுகள் அதிகமான கட்டுப்பாடுகள் புதிதாக பிறந்திருக்கும் பொறுப்பு இவைகள் எனது தனிமையின் அளவை கூட்டிக் கொண்டே போயின. படுத்தே கிடந்ததில் சற்றே ஊதிப் போயிருந்த என் முகம் மற்றவர்களின் பார்வையில் தாய்மையின் பூரிப்பாக தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த கணவர் பொறுப்பை மாற்றி விட்ட திருப்தியில் குழந்தைக்கான விளையாட்டு சாமான்களை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அம்மா குழந்தைக்கான சவரட்டணையில் முழ்கிப் போனாள். குழந்தையை எடுத்துக் கொடுக்க.. பால் குடித்தப்பிறகு துாளியில் போட.. பத்திய சாப்பாடு சமைக்க.. குழந்தையை குளிப்பாட்ட.. உறை மருந்து ஊற்ற.. என அம்மா பிஸியாகி விட சூழ்ந்து நின்ற தனிமை எரிச்சலைக் கூட்டியதில் தொட்டதெற்கெல்லம் எழுந்து விழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. குழந்தையை குளிக்க வைத்து என்னருகே படுக்க வைத்தாள் அம்மா. “நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ.. புள்ளப் பெத்த மாரு.. ஒருத்தரு கண்ணுப் போல இருக்காது.. திருஷ்டிப்பட்டுப் போச்சுன்னா பால் கட்டிக்கும்..” இயல்பாக சொல்லி விட்டு அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள். கூச்ச சுவாபியான எனக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.

‘புள்ள துாங்குதுன்னு பேசாம இருந்துடாதடீ.. கால சுண்டி விட்டு பால் குடு.. புள்ளக்கு பசி வந்துடும்..” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அம்மா. குழந்தையைப் பார்த்தேன். உடல் முழுவதும் பவுடர் வாசத்துடன் நெற்றியிலும் கன்னத்திலும் வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுமாக துாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் துாக்கத்திலேயே சிரித்தது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தையின் வலது உள்ளங்காலை மெதுவாக நிமிண்டினேன். எழுந்துக் கொள்ளவில்லை. திரும்ப திரும்ப சீண்டியதில் நான் படுத்திருந்த பக்கம் திரும்பியது. அதன் பிஞ்சுக் கை எதையோ தேடி அலைந்து பிறகு எனது நைட்டியை பற்றிக் கொண்டது.

குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.

“தல நிக்காத புள்ளடீ.. பாத்து..” என்றாள் அறைக்குள் நுழைந்த அம்மா.

***

கோபித்துக் கொண்டவர்கள்

கலைச்செல்வி

உணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார் அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.

சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.

“முசுடு ப்ளாட்டுல ஹோட்டல் வரப்போவுதாமே..“ கிட்டங்கியின் கட்டுமானத்திற்குள் உணவகத்தை பொருத்த முடியாமல் தெரு ஆச்சர்யம் கொண்டது. இதற்கு முன் இங்கு தனியார் அரிசி கிட்டங்கி இருந்தது. தடுப்புகளற்ற பெரிய அறையும் சிறியதொரு அலுவலக அறையுமாக தானே கட்டமைத்துக் கொண்டிருந்தார் அந்த கிட்டங்கி உரிமையாளர். முசுடுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் காலி செய்யும் நாளன்று “புல்டோசர் கொண்டாந்து கட்டடத்த இடிக்காம வுட மாட்டேன்.. பாத்துக்க..” சத்தமாக அவர் கறுவியதை தெருவே பார்த்தது.

இரண்டே நாட்கள் இடைவெளியில் அட்வான்ஸ் கை மாறி விட்டதாக கேள்விப்பட்டதில் தெருவே ஆற்றாமைக் கொண்டது. “அவவன் எழைச்சு எழைச்சு வீட்ட கட்டிட்டு ஆள் வராம திண்டாடுறான்.. முசுடுக்கு நல்ல யோகம்தான்..“ முசுடு அதே ஏரியாவிலேயே ஸ்கூட்டிசகிதம் சுற்றிக் கொண்டிருக்கும். முதல் தேதியன்றே வாடகை வசூலிக்க கடைக்குள் புகுந்து விடும். அலுவலக அறையோ கிட்டங்கி அறையோ வாடகைக்காரர் எங்கேயிருந்தால் சொந்த வீடு போல கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நுழைந்து விடும் தயக்கமேயின்றி.

”ஹோட்டல் வருதுன்னு கேள்விப்பட்டேன் தம்பி..” வலிய பேசினார் எதிர் வீட்டுக்காரர். அந்த இளைஞன்தான் அங்கு வருவதும் போவதுமாக இருந்தான். கோதுமை வண்ணமும் களையான முகமுமாக இயல்பானப் பொருத்தம். பெர்முடாசும் கையில்லா பனியனும் அவனை நவீனமாக்கியது. தனது பைக்கில் சாய்ந்தவாறே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவரின் குரல் கேட்டதும் அலைபேசியை துண்டித்து விட்டு விரைசலாக வந்தான். ”ஆமாங்க சார்.. கார்டன் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமின்னு இருக்கோம்..” என்றான் பவ்யமும் பணிவுமாக.

மேலும் ஆச்சர்யமாக போனது எதிர் வீட்டுக்காரருக்கு. தெருவே கையகலம்தான். வீதிதான் வீட்டு வாசல். கோலங்கள் கூட வீதியைதான் நிறைத்திருக்கும். கார்டனுக்கு எங்கேப் போவது…?

”கார்டன்னா.. செடிக்கொடி மரமெல்லாம் வேணுமே தம்பி..” என்றார் அவர்.

”பின்னால எடம் இருக்கு சார்..” என்றான் அதே பணிவுடன். அவன் சொல்லிதான் பெரியச் செடிகளைக் கூட அப்படியே ரெடிமேடாக விலைக்கு வாங்கி வைக்கலாம் என்று தெரிய வந்தது அவருக்கு. ஆச்சர்யமான அவரின் கண்களைப் பார்த்தான் ”பெரிய மரமெல்லாம் கூட ரெடிமேடா வைக்கலாம் சார்..” பவ்யம் குறையவில்லை. கட்டுமானத்தை இரண்டாக தடுத்து முன்பகுதியை நாற்பது பேர் சாப்பிடத் தகுந்தளவில் மாற்றப் போவதாகச் சொன்னான். அலுவலக அறையை குழந்தைகளுக்கான விளையாட்டு அறைக்கு ஓதுக்கப் போவதாகவும் சொன்னான். பின்பக்கம் கிச்சனும் கார்டனும் கொண்ட மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்ட் என்ற அவனின் திட்டம் தெரு முழுக்கப் பரவியது.

முசுடு இந்த மனையை நாலைந்து வருடங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தது. வாங்கிய சுருக்கில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு தடுத்தது. முதல் மனைக்காரர் பிரதானச் சாலையை நோக்கி தனது கட்டுமானத்தை திருப்பி விட்டதில் பல கடைகளுக்கு உரிமையாளரானது முசுடை உசுப்பி விட, கட்டுமானத்தில் காசைக் கொட்டாமல் சம்பாதிக்கும் ஆசை வந்தது அதற்கு. முதலில் வாடகைக்கு வந்தது குப்பை ஏஜெண்ட் ஒருவர். குப்பைகள் மூட்டையாய் வந்து இறங்குவதும் இரண்டொரு நாளில் டாடா ஏசில் காணாமல் போவதுமாக துரிதகதி வியாபாரம். இது முசுடின் கண்களில் உறுத்தலாய் விழ ஒரேயடியாய் வாடகையை உயர்த்திக் கேட்டதில் முசுடை அடிக்காதக் குறையாக காலி செய்து விட்டுப் போனார் அவர். அவருக்கு பிறகு வந்த மரக்கடைக்காரரும் “சாமர்த்தியம் இருக்கறவன் சம்பாதிக்கிறான்னா இவனுக்கு ஏன் வேவுது..?” என்ற கத்தலோடு நகர்ந்து விட அதற்கு பிறகுதான் அரிசி கிட்டங்கி வந்தது.

உணவகம் குறித்தப் பேச்சுகள் மலைபாம்பாய் மொத்தத் தெருவுக்கும் நீண்டுக் கிடந்தன. தொடர்பில்லாத ஏதேதோ கடைகள் வருவதை விட டீசண்டான ஹோட்டல் ஒன்று தெருவிற்குள் வருவதும் தெரு வளர்ச்சிப் பெறுவது குறித்தும் எல்லோருக்குமே நிறைவுதான். அதை விட மிக அருகில் ஒரு உணவகத்தை காண்பது எல்லோருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.

”நான்வெஜ் ஹோட்டலாம்.. தெருவுக்குள்ள கொண்டாந்து போடுறாங்க.. தெருவே நாறப்போவுது..” சைவர்களிடம் செல்ல எதிர்ப்பு இருந்தது.

”அட்ரஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு ஒரு நல்ல லேண்ட் மார்க்குதான்..” வயசாளிகளுக்கு பெருமையாக இருந்தது.

உணவக வேலைகள் தெருவாசிகளின் கவனத்தை ஒன்றுக் கூட்டியிருந்தன. அகன்று நீண்டிருந்த பெரிய அறை குறுக்கே சுவர் எழுப்பப்பட்டு சமையலறையாக பிரிக்கப்பட்டது. உயர்ந்திருந்த மேற்கூரைகள் குளிரூட்டுவதற்கு வசதியாக பொய்கூரைகளாக இறக்கப்பட்டன. அலுவலக அறை சிறுவர்களுக்கான விளையாட்டு அறையாக மாற்றப்பட்டது. முன்பக்க சுவர்.. இரும்பாலான கேட் என பழையவைகள் தகர்க்கப்பட ரோலிங் ஷட்டர்.. கண்ணாடிக் கதவு..என புதியவைகள் உருவாயின. பெர்முடாஸ்.. டீ ஷர்ட் சசிதம் காலையிலேயே வந்து விடுவான் அந்த இளைஞன். அங்குமிங்குமான நடமாட்டத்திலிருக்கும் தெருவாசிகளை அவன் ஏறெடுப்பதுமில்லை. பேச்சுக் கொடுப்பவர் யாராகயிருந்தாலும் யார்.. எவர்.. என்ற விசாரிப்புகளின்றி பணிவோடு பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். “நாகரீகம் தெரிஞ்சப் பையன்..“ என்றார் எதிர்வீட்டுக்காரர். மீதமுள்ளோருக்கும் ஆமோதிப்பாகதான் இருந்தது.

மூன்றாவது மனையும் ஆறாவது மனையும் தவிர்த்து தெரு நெடுக வீடுகள் கட்டப்பட்டு விட்டன. ஆறாவது மனை சற்றே உள்ளடக்கமாக இருந்தது. போகிறபோக்கில் குப்பைகளை துாக்கி வீச மூன்றாவது மனையே வசதியாக இருந்ததில் அது தெருவாசிகளின் குப்பைத் தொட்டியாகியிருந்தது. வாடகைக்காரருக்கு இடைஞ்சலாகி விடக் கூடாது என்பதால் முசுடுக்கு இதில் பிடித்தமிருப்பதில்லை சிறுவர்கள் என்றால் குப்பையோடு திருப்பியனுப்பி விடும். ஆண்களெனில் தனது எதிர்ப்பை கத்தி வெளிப்படுத்தும். பெண்கள் என்றால் செய்வதறியாது விழித்து விட்டு கைகள் நடுங்க நியாயம் கேட்க அங்குமிங்கும் ஓடும். “நீ யாருய்யா கேக்கறது..,? ஒன் எடமாய்யா இது..?” கூச்சல்கள் முசுடைக் கட்டுப்படுத்துவதில்லை. குப்பையோடு வரும் தெருவாசிகளுக்கு முசுடின் நடமாட்டம் தார்மீகமான தயக்கத்தை உண்டாக்குவதில் முசுடின் மீதான அவர்களின் கோபம் தீவிரப்பட்டுப் போனது.

உணவக வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின.

“மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரெண்டாம்.. சென்ரலைஸ்டு ஏசியாம்..” தகவல்கள் எதிர் வீட்டுக்காரர் மூலமாக கசிந்தது.

மார்போனைட் தரை ஒட்டப்பட்டது. துாண்கள் அலங்காரப்படுத்தப்பட்டன. ஷட்டர்களுக்கான பெயிண்ட்டுகள் தெருவின் வாசத்தை மாற்றிக் கொண்டிருந்தன. தானும் தனது அக்காவும் கூட்டு உரிமையாளர்கள் என்று அந்த இளைஞன் கூறியிருந்தான். இப்போது அக்காவும் அவளது கணவரும் காரில் வரத் தொடங்கியிருந்தனர். பணியாட்களின் எண்ணிக்கைக் கூடிப் போயிருந்தது. அலங்கார விளக்குகள், வித விதமான ஓவியங்கள்.. நீரூற்று புத்தர்.. நீண்ட நெடிய சுழற்நாற்காலிகள்.. உயிர் பூங்கொத்துக்களுக்கான இட ஏற்பாடுகள் என உள்ளலங்காரத்தினை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்த கண்ணாடிக் கதவை பார்த்துக் கொண்டே கடந்தனர் தெருவாசிகள். கார்பெண்டிங்.. பெயிண்டிங்.. எலக்டிரிகல் என வேகப்படுத்தப்பட்ட வேலைகள் குப்பைகளாக காலி மனையை நிரப்பத் தொடங்கியதில் முசுடின் மீது அவர்களுக்கு கோபம் கூடிப் போனது. தருணம் பார்த்து காத்திருந்தனர்.

”என்ன சார்.. எதிர்ல ஜரூரா வேல ஆயிட்டுருக்கு போலருக்கு..” குடிக்கும் தண்ணீருக்கு கூட அவர்கள் அக்கம்பக்கத்தாரை அணுகாமலிருப்பது பேசுவதற்கு தயக்கத்தை உண்டாக்க எதிர் வீட்டுக்காரரே தகவல் கடத்தியானார். “பொம்பளைக்கு பொம்பளை பேசினாதான் என்ன..? ஆம்பளைங்களுக்குதான் புத்தியில்ல.. ஊர அனுசரிக்கணும்னு பொம்பள எடுத்துச் சொல்லுமா.. அத வுட்டுட்டு இதும் பிர்ர்ன்னு திரியுது..“  வீட்டுப் பெண்கள் அந்த இளைஞனின் அக்காவை குறி்த்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். துடைப்பத்திற்கு கூட யாரையும் எதிர்பார்க்காதது  குறையாகத் தோன்றியது தெருவாசிகளுக்கு “வௌக்குமாத்த கூட ஒரு மனுசி வீட்லேர்ந்து மூட்ட கட்டி கொண்டாருது பாரேன்..“ பொருமலாக விழுந்தது வார்த்தைகள்.

இரவு நேரத்தில் பிரைமர் அடித்து தெருவோரங்களில் காய வைக்கப்பட்டிருந்த மரங்களை நடைப்பயிற்சிக்கு கிளம்பிய தெருவாசியொருவர் பூட்ஸ் காலால் எத்தினார். ”என்னாத்த லேண்ட் மார்க்கு..  தெருவ நாஸ்தி பண்றானுங்க..”

எல்லோருக்குமே இந்த எண்ணம் வந்தது..

தெருவோரம் கிடந்த ஒயர் ஒன்றில் தெருவாசியொருவரின் வெற்றுக்கால் பட்டதில் சுறுசுறுவென மின்சாரம் ஏறியதாக சொல்லி காலை உதறி விட்டு கத்தி தள்ளி விட்டார் அவர். ”பணங்காசு இருந்தா அவுனுங்களோட.. உசுரு போச்சுன்னா தருவானுங்களாமா..?”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..?” எகத்தாளமாகக் கேட்டது தெரு.

”அந்த தம்பி இப்பதான் சாப்ட போயிருக்குது.. அதான் நடந்தது தப்புன்னுட்டாங்களே.. வுடுங்க சார்..” என்றார் கதவை இழைத்துக் கொண்டிருந்த ஒருவர்.

”அவர் போன் நம்பர வாங்குங்க சார்.. நான் பேசறன்..” தெருவாசிகள் கூடினர்.

எதிர் வீட்டுக்காரர் அந்த இளைஞனின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினார். தெருவே அவர் முகத்தை ஏறிட்டது. “விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பையன் அய்யய்யோன்னு பதறீடுச்சு… இப்ப வந்துடும்..” என்றார் பொது தகவலாக. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு நகரத் தொடங்கியது கூட்டம். மறுநாள் அந்த இளைஞன் வழக்கம்போல ஆறு மணிக்கு ஆஜராகியிருந்தான். தானே அணுகுவான் என காத்திருந்து விட்டு பிறகு நேராக அவனிடம் சென்றார் எதிர் வீட்டுக்காரர். “அய்யய்யோ..“ என்றான் மறுபடியும் புதிதாக கேட்பதுப் போல.

“சப்போஸ் ஷாக் அடிச்சு எதாவது பெருசா ஆயிருந்துச்சான்னா என்னாவறது தம்பி..?”

”ஆமா சார்.. ஆமா சார்..” என்றான்.

“ரெசிடென்ஷியல் ஏரியாவுல ஹோட்டல் நடத்துறீங்க.. கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா.. எல்லாரும் சொந்த வீட்டு ஆளுங்க.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. கார்டியாலிட்டுக்கு கார்டியாலிட்டி..” .

“ஆமா சார்..” என்றான் ஆமோதிப்பாக. பிறகு “அட்வைஸ்க்கு தேங்க்ஸ் சார்..” என்றான். சட்டென்று அவன் மீதான நெருடல் மறைந்து நெகிழ்வாக இருந்தது எதிர் வீட்டுக்காரருக்கு. “என் தம்பிக்கின்னா சொல்ல மாட்டனா.. இதுக்குப் போயீ என்னாத்துக்குப்பா தேங்க்ஸ் அதுஇதுங்கிற..” என்றார். உரையாடல் தொடர்ந்ததில் வரும் ஞாயிறன்று உணவகம் திறக்க இருப்பதாக சொன்னான்.

வியாழனன்று அதிகாலையிலேயே ஹோமம் நடந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தெரு கவனிக்கத் தவறவில்லை. எதிர்வீட்டுக்காரர் ஹோமத்துக்கு தமக்கும் அழைப்பில்லை என சத்தியம் பண்ண வேண்டியிருந்தது.

“திமுரு புடிச்சவங்க போலருக்கு..” மெதுவாக மூட்டம் தெரு முழுக்கப் பரவியது..

”ஏயப்பா.. ஏசி மிஷினே ஏழெட்டு வந்து எறங்கியிருக்கு..”

”கிச்சன் சாமான் மட்டும் மூணு குட்டியானைல்ல வந்துச்சு..”

”ஆட்டமெல்லாம் பிரமாதந்தான்.. பிசினஸ் பிக்கப் ஆவுணுமில்ல..”

”பிளாக்க வொயிட் ஆக்கறதுக்கு பண்றாங்களோ..?”

”பின்ன.. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ மொதலீடு பண்றதுக்கு முட்டாப்பசங்களாக்கும்..” வேடிக்கை பார்ப்பதற்கென்றே நடமாடிய தெருவாசிகளும் உண்டு. சன்னலை ஏற்றி காருக்குள்ளிருந்து கள்ளப்பார்வை பார்ப்போரும் உண்டு.

”பெரிய சுத்த சீலன் மாதிரி நம்ப குப்பக் கொட்டும்போது சண்டைக்கு நிக்குமில்ல அந்த முசுடு.. இப்ப என்ன பண்ணும்னு பாக்கலாம்.. சாப்பாடு..போக்குவரத்துன்னு இவனுங்க காலி ப்ளாட்டுல கொட்டுட்டும்.. பேசிக்கலாம்..” கருவினார்கள். முசுடு எங்கோ மகன் வீட்டுக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டதில் கத்தவியலாத வன்மம் கூடிப் போனது எல்லோருக்கும்.

கிட்டத்தட்ட ஹோட்டல் முழுமையடைந்திருந்ததில் உறவோ.. நட்போ பார்க்க வரத் தொடங்கினர். அவர்களின் கார்கள் பெரியதாக இருந்தது. தெருவாசிகள் நீண்ட நெடிய ஹாரன்களை வேண்டுமென்றே மிக அதிகமாக அடித்தனர். மறுப்பேச்சின்றி அவர்கள் கார்களை நகர்த்திக் கொண்டாலும் ஆக்சிலேட்டரை உசுப்பிக் கொண்டு சீறினர். கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த பெண்கள் இருவர் தெருவாசியொருவரின் வீட்டு வாசலில் அமரப் போக அவர் கத்தித் தீர்த்து விட்டார். வேண்டுமென்றே அதிக டெசிபலில் ஒலித்த அவரின் கத்தல் உணவகத்தின் வாசலில் நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் அவன் தமக்கையையும் அணுகவில்லை.

உணவகமும் அதன் வேலைகளும் தெருவோரின் கூர்ந்த அவதானிப்புக்குள் வந்ததில் எதிர் வீட்டுக்காரர் பிரதிநிதியானார். ”இன்னிய நியூஸ் பேப்பர்ல உங்க ஹோட்டல் விளம்பர நோட்டிஸ் வச்சு அனுப்பியிருந்தீங்க போல.. தென்றல்நகர்ல என் .ஃபிரண்ட் ஒத்தன் இருக்கான்.. என்னடா.. உங்க ஏரியாவுல புதுசா ஹோட்டல் வரப்போவுதாமேன்னு போன் பண்ணுனான் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்.. உங்களுக்கும் வந்துச்சில்ல சார்..” என்றான் அந்த இளைஞன்.

”ம்ம்.. அதோடதா நம்ம தெரு ஆளுங்களுக்கு ஒரு வாய் வார்த்த தகவல் சொல்லீட்டீங்கன்னா திருப்தியா போயிடும் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்..” அதற்குள் யாரோ வந்து விட ”மிரர் ஃபிக்ஸ் பண்ண ஆள் வந்துருக்காரு சார்..” விடைப்பெற்றுக் கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்த நாள் கூட அவன் யார் வீட்டுக்கும் செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் செம்மண் லோடு வந்திறங்கியது. இறக்கி வைக்கப்பட்ட ஆளுயுரச் செடிகள் தெருவை அடைத்திருந்தன.  ”தெருன்னு நெனச்சீங்களா.. ஒங்க வீடுன்னு நெனச்சீங்களா..? செரி.. போனா போவுதுன்னு பெரும்போக்கா இருந்தோம்னா ரொம்பதான் பண்றீங்க..” ஒருவர் ஆரம்பித்ததில் கதவுகள் மளமளவென திறந்து மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.

”நாலு பேர நம்பி செய்ற தொழிலா.. இல்ல நாலு செவத்துக்குள்ள கமுக்கமா நடக்கற வியாபாரமா.. வாடகைக்கு வாரவங்களுக்கே இவ்ளோ இருந்தா சொந்த வீட்டு ஆளுங்களுக்கு எவ்ளோ இருக்கும்…?”

இரவு வேலைக்கு வந்திருப்பவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து பிறகு மளமளவென்று செடிகளையும் மண்ணையும் பின்புறத்திற்கு கடத்தினர்.

“அழுத்தக்கார ஆளுங்க.. ஹோட்டலுக்கு வர்றவங்க வண்டி.வாசின்னு தெருவுல கொண்டாந்து நிறுத்தட்டும்.. அப்றமில்ல இருக்கு அவனுங்களுக்கு..”

”குப்பைய கொட்டி நாறடிக்கிறான்னு பெட்டிசன் தட்டிட மாட்டேன்..?” என்றார் ஒருவர்.

”வீம்பு பண்ணுன ஆட்டோக்காரன் ஒருத்தன் துண்டக்காணாம்.. துணியக் காணாம்னு ஓடுல..?” வீரமாகப் பேசினார் ஒருவர்.

மளமளத்த வேலைகள் சனிக்கிழமைக்கு கொண்டு வந்து நிறுத்தின. அலங்கார பலுான்கள் வாயிலில் வரவேற்பு வளையமாக கட்டப்பட்டன. குலைத் தள்ளிய வாழை மரங்கள் வந்திறங்கின. தோரணங்கள் கட்டப்பட்டன. ஷார்ட்லீ ஓபன்ஸ் என்ற வாக்கியம் கவனமாக நீக்கப்பட்டு “ஓபன்“ என்ற வார்த்தை நேர்த்தியாக தொங்க விடப்பட்டது. அன்றிரவே காலிமனை வாகனங்களால் நிரம்பியிருந்தது.  “நடக்கட்டும்.. நடக்கட்டும்..“ கவனித்தப்படியே இருந்தனர் தெருவாசிகள்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடியும்போதே எல்லோரும் மங்கல இசைக் கேட்டனர். அல்லது மங்கல இசைக் கேட்டதால் விடிவதற்குள் விழித்துக் கொண்டனர். எதிர்பார்த்தப்படி ஆட்களுக்கு குறைவில்லை. காலிமனையில் நிரம்பியிருந்த கார்களில் ஆறேழு காவல் துறைக்கு சொந்தமானவையாக இருந்தன. வண்டிவாசிகளின் நடமாட்டத்தால் தெருவாசிகள் ஓரமாக நடந்துச் சென்று ஆறாவது மனையில் குப்பைகளை வீசினர். உண்டு முடித்த காலி இலைகள் மூன்றாவது மனையில் விழுவதும் நாய்கள் அதை குறி வைத்து ஓடுவதுமாக தெரு அந்த ஞாயிறை உள் வாங்கியிருந்தது. காய்கறி.. மட்டன் கறி என பையும் கையுமாக சென்ற தெருவாசிகள் வண்டியை நெளித்தும் ஒடித்துமாக ஓட்டிச் சென்று அமைதியாக வீடு திரும்பினர்.

 

 

வியாழக்கிழமை

கலைச்செல்வி

சாக்குப்படுதா திரையை விலக்கி நடைபாதை மேடையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் அவன். தெரு மேலதிக நடமாட்டமின்றி இருந்தது. தொளதொளத்த உடைகள் வியர்வையில் உடம்போடு ஒட்டியிருக்க, காதுகளில் மாட்டிக் கொண்ட இயர்ஃபோனுடன் சிலர் காலைக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ரயிலடியை ஒட்டிய நடைபாதை என்றாலும் சற்று உள்ளொடுங்கியிருந்தது. ஆட்டோ ஒன்று அதிகபட்ச சத்தத்தோடு நகர்ந்து போனது. அதன் வேகத்தைவிட சத்தம் அதிகமாக இருந்தது. அதுவும் தரையில் அமர்ந்திருக்கும்போது ஒலியின் வீரியம் அதிர்வுகளாகத் தெரியும். குழந்தை விழித்துக் கொண்டானா என திரும்பிப் பார்த்தான் அவன். மனைவி ஜாக்கெட்டின் கொக்கிகளை சரிவர போடவில்லை. அவள் கையிலிருந்து விலகி மல்லாந்து உறங்கிக் கொண்டிருந்தான் மகன். அவன் படுத்திருந்த இடம் வெற்றாக கிடக்க சுற்றிலும் கொசுக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தன. வட்டமாக உதிர்ந்து கிடந்த கொசுவர்த்தியின் சாம்பலுக்கிடையே பளபளப்பாக வீற்றிருந்த வத்தி ஸ்டாண்டின் மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உணவு வேட்டையை வீரியமாக தொடங்கின. தோளில் கிடந்த துண்டால் கொசுவை விரட்டிவிட்டு பின் அதை மனைவியின் விலகி கிடந்த சேலையின் மேல் போர்த்தினான் அவன். பதின்பருவத்திலிருந்த மனைவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

வண்டி ஓனர் வீட்டில் இருந்தது. ஓனர் பெரிய ஆளெல்லாம் இல்லை. இதே மாதிரி இன்னொரு வண்டி வைத்திருக்கிறார். இவனாகதான் போய் அணுகினான். தான் ஒரு ஏரியாவை பார்த்துக் கொள்வதாக சொன்னான். ஓனருக்கு நம்பிக்கை வரவில்லை. நாஷ்டா கடைக்காரன்தான் “நான் ஜவாப்பு..” என்று சிபாரிசு செய்தான். அவன் மனைவி நாஷ்டா கடையில் பாத்திரம் கழுவுவாள். ஒன்றரை வயது மகனுக்கு இன்னும் தாய்;ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். புடவை விலகியும் விலகாமலுமான அவள் நடமாட்டத்துக்கே இன்னும் கூட சம்பளம் கொடுக்கலாம். ஆனால் இரண்டு வேளை சாப்பாடே போதும் என்பது போல அவள் எதையும் கேட்பதில்லை. அந்த வண்டி வந்ததிலிருந்து வியாழக்கிழமைகளில் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்வாள்.

வெளியே எழுந்து வந்தான். வாயில் திரண்ட எச்சிலை துப்பி விட்டு தெருவோர டீக்கடையில் டீ சொல்லிக் கொண்டான். ”கணக்குக்கு நாலு ஆவுது..” என்றான் கடைக்காரன்.

”நாலு டீயாண்ணே..” தெரியும். ஆனாலும் கேட்டான்.

”ம்ம்.. நாலு டீ.. பேசுவியே.. நாலு நாளு கணக்கு..” அவனும் மனைவியுமாக நாள் ஒன்றுக்கு ஆளுக்கு மூன்று டீயாவது குடித்து விடுவார்கள். டீ தொண்டையில் சூடாக இறங்கி, இரண்டே மடக்கில் முடிந்து போனது. கப்பை துாக்கி எறிந்தான். அது குப்பைக் கூடையில் தட்டி இவன் காலுக்கருகேயே வந்து விழுந்தது. அதை எத்தி தள்ளி விட்டு ஓனர் வீட்டுக்கு நடந்தான்.

ஓனரும் காலையிலேயே எழுந்து விட்டிருந்தான். இவனை மாதிரி நடைபாதை மேடையில் குடியிருக்காமல் தகரம் தார்பாலின் என்றெல்லாம் சேர்ந்து வீடு போல ஏதோ ஒன்றில் குடியிருந்தான். வசவசவென்று துாங்கிக் கொண்டிருந்தனர் ஆட்கள். பேசாமல் போய் நின்றான். வாரா வாரம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போலவே அணுக வேண்டும். பத்து நிமிட காத்திருப்புக்கு பிறகு ”கரீட்டா எட்டு மணித்தாவல வூட்டாண்ட கொண்டாந்துடுணும்..” எடுத்துட்டு போ என்பதற்கு இதுதான் சமிக்ஞை. ஏறி மிதிக்கக் கூடாது என்பான். தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். ”கலீசனு பக்கா பண்ணுனும் இந்த தபா..” என்றான். வரும் கலெக்ஷனில் இவனுக்கு பாதி கொடுத்துவிட வேண்டும். அல்லது ஓனர் நிர்ணயிக்கும் தொகையை கொடுத்து விட்டு மேற்கொண்டு மிஞ்சுவதை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

”செரி..” ஒற்றை சொல்லை சற்று பணிவு கலந்து சொல்லி விட்டு கூளம் போல கிடந்த இடத்திலிருந்து வண்டியை உருட்டி நகர்த்தினான். கலகலத்து காயலான் கடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சா அது. டயர் மட்டும் ஒழுங்கிலிருந்தது. துறுப்பிடித்த மட் கார்டை சொந்த செலவில் காவி பெயிண்ட் அடித்துக் கொண்டான். ஓனர் அதை கண்டும் பாராட்டாக ஏதும் சொல்லவில்லை.

இன்னமும் சாக்குபடுதாவுக்குள் மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதற்குள் மாநகராட்சி குளியலறைக்கு சென்று குளித்து விட எண்ணினான். ஒவ்வொரு முறையும் தனித்தனியே காசு தர தேவையில்லை. மனைவி வேலை செய்யும் கடையிலிருந்து அவ்வப்போது டிபன் கட்டி எடுத்து வருமாறு அதிகாரமாக சொல்லுவான் அந்த காவலாளி. இதை தவிர்த்து மாதம் ஐம்பது ரூபாய் அளித்தால் முனகிக் கொண்டே வாங்கிக் கொள்வான். ஆனாலும் குளிக்க, மற்ற விஷயங்களுக்கு, கூட்டமில்லாத நேரங்களில் உபயோகித்துக் கொள்ள அனுமதிப்பான். தெருவில் நடமாட்டம் பெருகியிருந்தது. குளியலறையை யாரோ உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் காத்து நின்றனர். வழக்கமாக இது ரயில் வரும் நேரமல்ல. ஏதோ ஒரு ரயில் தாமதமாக வந்திருக்கலாம். இந்நேரம்  நிச்சயம் அனுமதிக்க மாட்டான்.

கையேந்தி பவன் ஒன்றின் பின்புறம் குவியலாக பாத்திரத்தை போட்டு தேய்த்துக் கொண்டிருந்தாள் வயதான பெண் ஒருத்தி. அவளிடம் ஒரு கப் நீர் வாங்கி முகம் கைகால்களை கழுவிக் கொண்டான். வெறுங்கையால் பற்களை தீட்டி கொப்பளித்தான். ”இந்த.. கப்ப கொண்டா இப்டீ.. வுட்டா எல்லா சோலியயும் இதுலயே முடிச்சுக்குவ..” என்றாள் அந்த பெண். ”இந்தா.. நீயாச்சு.. ஒன் தண்ணியாச்சு..” கப்பை அன்னக்கூடைக்குள் தொப்பென்று போட, அதிலிருந்த தண்ணீர் அவள் முகத்தில் அடித்தது. “அடுத்த தபா வாரவன் தானே..” என்று கோபப்பட்டாள் அந்த பெண்மணி.

சாக்குப்படுதாவை விலக்கி உள்ளே நுழைந்தான். காலில் மனைவியின் கால் தட்டுப்பட “இந்தா.. எந்திரி..” லேசாக எத்தினான். நேற்றே வாங்கி வைத்திருந்த காவி வண்ண காகித தோரணங்களை எடுத்துக் கொண்டான். எழுந்து உட்கார்ந்து சிறுமியை போல அலங்க மலங்க விழித்து பிறகு நிதானத்துக்கு வந்தவளாக குழந்தையை துாக்கி வசதியாக படுக்க வைத்தாள் அவள். ”டீ வாங்கியாரவா..” என்றான். ”வேணாம்.. பய முளிக்கிட்டும்..” என்றாள்.

வண்டியில் தொங்கிக் கொண்டிருந்த பழைய ஜிகினா பேப்பர்.. காய்ந்த மாலை.. காகித துண்டு.. கலர் தோரணம் என எல்லாவற்றையும் பொறுக்கி துடைத்து சுத்தம் செய்தான். துறுவேறிய பழைய வண்டி என்றாலும் இப்போது சுத்தமாக இருந்தது. சத்தம் வரும் இடங்களில் எண்ணெயிட்டான். காவிக் கலர் பேப்பரை குறுக்கும் நெடுக்குமாக ஒட்டினான். ஜிகினா ஒட்டும்போது மகனின் அழுக்குரல் கேட்டது. மார்புக்காம்பை மகனின் வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. மகன் பசி தாங்க மாட்டான். டீ வாங்கி வைத்து விட்டால் நிம்மதியாக வேலை பார்க்கலாம். உள்ளிருந்து சில்வர் டம்ளரை எடுத்துச் சென்று, அது நிறைய டீ வாங்கிக் கொண்டான். கடைக்காரன் “துட்ட எண்ணி வச்சுட்டு டம்ளரை தொடு..” என்றான். இன்று வியாழக்கிழமை. கண்டிப்புக் காட்டினால் சாயங்காலம் காசு கைக்கு வரும். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் காக்க வேண்டியிருக்கும் என்பது கடைக்காரனுக்கு தெரியும். அசட்டு சிரிப்போடு டம்ளரை ஏந்திக் கொண்டான். ”சீக்ரம்..“ என்றான் மனைவியிடம். அரை டம்ளர் அவளுக்கு. மீதம் அரை டம்ளர் டீயை ஆறிய பிறகு மகன் உறிஞ்சி விடுவான்.

மஞ்சள் வண்ண ஜிகினா பேப்பரை இடையிடையே ஒட்டினான். காவி தோரணமும் மஞ்சள் ஜிகினாத்தாளுமாக ஒரு மாதிரியாக புனிதம் திரண்டிருந்தது. ஹேண்டில் பாரில் மீதமிருந்த காவி பேப்பரை சுற்றினான். முகப்பில் சீரடி சாய்பாபாவின் சிறிய அட்டையாலான புகைப்படத்தை வைத்து கட்டினான். கருப்பு வெள்ளை புகைப்படம். மஞ்சள் சாமந்தியால் படத்தை அலங்கரித்தான். உள்ளேயிருந்து பெரிய பாபா போட்டோவை எடுத்து வந்து உட்காரும் இருக்கையில் படுக்க வைத்தாள் மனைவி. நடைப்பாதை மேடையில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு மகன் டீயை உறிஞ்சினான். நகரில் காலை நேர பரபரப்பு தொற்றிக் கொண்டது. வண்டிவாசிகள் விர்விர்ரென பறக்கத் தொடங்கின. பால்.. காய்கறி வண்டிகள் குடியிருப்பை நோக்கி வேகமெடுத்தது.

”மணியாச்சு.. சீக்ரம்..” என்றான் தனக்கும் மனைவிக்குமாக.

ஓம் சாயி.. ஸ்ரீ சாயி.. என்று ஹிந்தியில் அச்சிட்ட மஞ்சள் துண்டை விரித்து அதில் சாய்பாபா படத்தை நடுநாயகமாக்கி மனைவி பிடித்துக் கொள்ள.. படத்தை இருபுறமுமிருந்த கம்பிகளில் அசையாமல் இழுத்துக் கட்டினான். ஆட்டி பார்த்தான். சாயாமல் இருந்தது சாய்பாபா படம். சாமந்தி மாலையை கொண்டு வர சொன்னான். மாலையை படத்தோடு இறுக்கி அசையாமல் கட்டினான்.

முகத்தை அலம்பி கண்களிலிருந்து பூளையை அகற்றிக் கொண்டிருந்தாள் மனைவி. துணியில்லாமல் டம்ளரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த மகனை “எலேய்..“ என்று கொஞ்சிக் கொண்டே தடுப்புக்குள் நுழைந்தான். அடுக்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் ஏற்கனவே இருந்த விபூதியோடு பாக்கெட்டிலிருந்த விபூதியை பிரித்துக் கொட்டினான். உடுத்தியிருந்த புடவையை கழற்றி விட்டு காவி நிற புடவையை கட்டிக் கொண்டாள் அவள். மனைவியின் இடுப்பை வலியில்லாமல் கிள்ளினான். பிறகு குங்குமம்.. நறநறவென்றிருந்த சாம்பல் என தனி தனி பிளாஸ்டிக் தட்டுகளில் எடுத்து வைத்துக் கொண்டான். மனைவி புடவைக்கு கொசுவம் வைத்துக் கொண்டிருந்தாள். மகனின் கையிலிருந்த டம்ளரை வாங்கி ஓரமாக வைத்து விட்டு அவனுக்கு டவுசரை அணிவித்தான். பளபளவென்று காவி நிறத்திலிருந்தது அந்த டிரவுசர்.

ரிக்சா வண்டியை முன்னும் பின்னுமாக சுற்றி வந்து பார்த்தான். மினி சாய்பாபா கோவில் போலிருந்தது அந்த வண்டி. ஸ்பீக்கரை கட்டினான். சில்வர் தோண்டியை எடுத்தாள் அவன் மனைவி. அதன் வாயில் சுற்றப்பட்டிருந்த காவி நிற துணி நைந்திருந்தது. அதை பிரித்து ஓரமாக வீசி விட்டு புது காவி துணியை இறுக்கமாக சுற்றி வேடு கட்டினாள். நடுவே காசு போடுமளவுக்கு சிறிய ஓட்டையை ஏற்படுத்தினான் அவன்.

தலையை அவிழ்த்தி பின்னிக் கொண்டாள். கிச்சுகிச்சு மூட்டினான் மனைவியை. சிரித்துக் கொண்டே சீப்பிலிருந்த முடியை உருவி படுதாவுக்கு வெளியே எறிந்தாள். செம்பட்டையாக இருந்தது முடி. சாமந்தி பூவை நீட்டினான் அவன். வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். தட்டிலிருந்த விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக் கொண்டான். நடுவில் குங்குமம் வைத்து அதன் மீது கீற்றாய் சாம்பலை நீரில் குழைத்து பூசிக் கொண்டான். விபூதிக்கும் சாம்பலுக்கும் வண்ணத்தில் நிறையவே வித்தியாசம் இருந்தது. மனைவியும் விபூதி பூசிக் கொண்டாள். குங்குமத்தை பெரிதாக இட்டுக் கொண்டாள். இப்போது அவளுக்கு வயது இரண்டு மூன்று கூடி இருபது.. இருபத்தொன்று மதிக்கலாம் என்றிருந்தது. காலி டம்ளருக்காக அடம் பிடித்து சிணுங்கிய மகனிடம் ஒயர் கூடையில் வைத்திருந்த  முறுக்கை எடுத்து நீட்டினாள். ஒழுகும் சளியை நக்கிக் கொண்டே முறுக்கை கடித்தான் மகன். “நேரமாச்சு..” என்றான் மீண்டும் மனைவியிடம்.

ஒயர் கூடையை எடுத்துக் கொண்டாள் மனைவி. துாக்கியெறிந்த உண்டியல் துணியால் மகனின் மூக்கில் ஒழுகிய சளியை துடைத்தெடுத்தாள். பிறகு மகனின் நெற்றியில் விபூதி பட்டையிட்டாள். சாம்பல் தட்டை நீட்டினான் அவன். தனக்கும் மகனுக்கும் கீற்றாக இட்டுக் கொண்டாள். குங்குமம் வைக்க விடாமல் தடுத்த மகனின் கையை பிடித்துக் கொண்டு குங்குமத்தை வைத்தாள்.

”போலாமா..” என்றான்.

”ம்ம்..” என்றாள்.

வண்டி தயாராக இருந்தது. சாமந்தி மாலையில் சாய்பாபாவும் தயாராக வீற்றிருந்தார்.

மகனை துாக்கிக் கொண்டாள் அவள். ஒயர் கூடையை ஹேண்ட்பாரில் மாட்டினான் அவன். சிவப்பு நிற சிறிய பிளாஸ்டிக் உண்டியல் ஒன்றினை மகன் கையில் கொடுத்தாள். அவன் உடனடியாக அதை வாயில் வைத்து விளையாடினான். டேப்ரிகார்டரை ஆன் செய்தான்.

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்.

சாயி காயத்ரி ராகமாக ஒலிக்கத் தொடங்கியது.

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”.

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி“

காலையிலேயே கிளம்பி விட்டதால் இன்று உண்டியல் அரைவாசியாவது நிரம்பி விடும் என்ற எதிர்பார்ப்பு இருவருக்குமே இருந்தது. உற்சாகமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நடக்க துவங்கினர்.

 

***