காலத்துகள்

அமிழ்தல்

காலத்துகள்

இருப்பதிலேயே தனக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு பேண்ட்டின் ப்ளீட்டை நீவி விட்டான். தலை வாரிக்கொள்ளும்போது ‘பங்க்’ கட் தனக்கு சரி வராதது குறித்த விசனமும், நேர்க்கோடு, பக்கவகிடில் எது தனக்கு எடுப்பாக உள்ளது என்ற வழக்கமான சந்தேகமும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து சந்துருவுக்காகக் காத்திருந்தான். இன்று தசரா சந்தையில் அவள் எதிர்பட நிறைய வாய்ப்புள்ளது என்ற எண்ணமே உற்சாகம் தந்தது. ‘என்னடா மூணு நாளா தினோம் தினோம் வேற வேற டிரஸ்ஸு’ என்றபடி சந்துரு சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தினான். இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் பேங்க் ஆபிசரின் மூன்று பெண்கள் கிளம்பத் தயாராகி அடுத்தடுத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘பார் சார்ட் மாதிரி நிக்கறாங்கடா,” என்றான். சேலை அணிந்திருந்த மூத்த பெண் ஜாக்கெட்டின் கைப்பிடிப்பையும் கொசுவத்தையும் நீவியபடி இருந்தாள், முகத்தில் வெட்கப் பூரிப்பு, கண்கள் தெருவைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

தெரு முனையை அடையும்போது இறுதி வீட்டின் வாசலில் ‘தலைவர்’ வந்து நின்றார். செங்கல்பட்டிற்கு குடிவந்த இந்த பத்து வருடங்களாக அவரைப் பார்த்து வருபவனுக்கு அந்த மிகப் புகழ்பெற்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி மற்றும் வேட்டி சட்டை எப்போதும் அணிந்திருக்கும் ஆசாமியை முதன்முதலில் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது இல்லாது போனாலும் அவரைக் காணும் முதல் கணம் ஏற்படும் துணுக்குறுதல் மட்டும் நீங்கவே இல்லை. தலைவர் காலமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இந்த ஆசாமி தலைவராக செங்கல்பட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வீட்டின் கதவில் நிஜத் தலைவர் கையில் பேனாவுடன் சிந்தித்தபடி இருக்கும் பிரபலமான வண்ணப் புகைப்படம் இருந்தது. அதில் மிக வசீகரமாகத் தோற்றமளிப்பார். இந்த ஆசாமி உடைகளை மாற்றியெல்லாம்கூட தலைவரின் வசீகரத்தைப் பெறா முடியாவிட்டாலும், அவர் நடப்பது, சைக்கிளில் செல்வது எல்லாம் மிதப்பது போலவே இருக்கும். இத்தனை நாசூக்குடன் எந்த வேலைக்குச் செல்ல முடியும்? அவரின் உடைக்கு விழுந்தடித்து ஓடுவதெல்லாம் சாத்தியமும் இல்லை. வீட்டில் இருந்தபடி புறா வளர்த்தல், விற்றல் தவிர என்ன வருமானம் உள்ளது, எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பதெல்லாம் புதிர்தான்.

அவரைத் தாண்டிச் சென்றபின், ‘என்னடா இன்னும் இந்த ஆள் இப்படியே ட்ரெஸ் பண்ணிக்கறார், நைட்டாவது டிரெஸ்ஸ மாத்துவாரோ என்னமோ’ என்று இவன் சிரித்தபடிச் சொல்ல, ‘அப்பகூட கெடயாதுடா, முக்கியமா அப்பத்தான்’ என்று சொல்லி நிறுத்தினான் சந்துரு. இவன் சந்துருவைப் பார்க்க, ‘அவர் மட்டும்ல, அவர் வைப்பும் ரொம்ப பெரிய பேன்டா’ என்று சொல்லி கண்ணடித்தான். ‘அதுக்கு?’ என்று கேட்டவனைப் பார்த்து சந்துரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவுடன் இவனுக்கு விளங்கியது.

‘சும்மா ஒளராதடா’

‘சத்தியமாடா’

‘ஆமா நீ பாத்த’

‘இல்லடா முரளிண்ணண் சொன்னார்டா’

‘அவர் மட்டும் பாத்தாறாக்கும்’

பேசியபடி சின்ன மேட்டின் மீதேறி ராமர் கோவில் குளத்தினருகே வந்தார்கள். மறுமுனையில் இருந்த மேட்டுத் தெருவில் தசரா சந்தை களைகட்டத் தொடங்கி இருந்தது அங்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தற்காலிக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் தெரிந்தது. பொதுவாக மாலை நேரங்களில் அமானுஷ்ய உணர்வைத் தரும் குளமருகே இருந்த பெரிய ஆலமரமும் கூட அவ்வெளிச்சத்தில் அச்சுறுத்துவதாக இல்லை. மரமருகே அருகில் இருந்த மாவு அரைப்பு கிடங்கு மூடப்பட்டிருக்க அதன் திண்ணையில் சேட் அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்துரு
‘இவனப் பாத்தா சேட் மாதிரியே இல்லையேடா’ என்று சொல்ல, ‘டேய் சேட்னா சேட் மட்டும்தானாடா, முஸ்லிம் கூட வெச்சுப்பாங்க’ என்றான் இவன்.

‘என்னடா சொல்ற, நெஜமாவா’

‘ஆமாண்டா இவன் முஸ்லிம்டா பெரிய பணக்கார குடும்பம் போல, சின்ன வயசுல அப்பா, அம்மா செத்துட்டாங்க, அப்பறம் சொந்தக்காரங்க இவன வெரட்டிட்டாங்க’

‘யார்ரா சொன்னா?’

‘தெருல அப்படித்தான் பேசிக்கறாங்க’

சேட்டையும் கிட்டத்தட்ட தலைவரைப் போல் இவன் இங்கு குடி வந்ததிலிருந்தே பார்க்கிறான். உடலமைப்பிலோ, முகத்திலோ இத்தனை வருடங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று தோன்றியது. அதே கனிவான, முதிரா இளமை கொண்ட – எப்போது பார்த்தாலும் இருபதுகளைத் தாண்டாதது போல் தோற்றமளிக்கும் – முகம்,இவனை ஏமாற்றுவது ஒன்றும் கடினமல்ல என்று நினைக்கத் தோன்றும். சேட் பேசியோ, யாசகம் கேட்டோ இவன் பார்த்ததில்லை, ஆனாலும் எப்படியோ உணவு கிடைத்து விடுகிறது. மிக மெதுவாக இலையிலிருந்து கவளம் கவளமாக எடுத்து சேட் உண்வதை இவன் பார்த்திருக்கிறான். தொய்ந்து போன சட்டை லுங்கிதான் ஆடை,எப்போதும் மொட்டைத் தலைதான். யார் ஆடைகளை அளிக்கிறார்கள், முடி வெட்டுகிறார்கள் என்பதும் தெரியாது. அழுகையோ, சிரிப்போ, தனக்குத் தானே பேசிக்கொள்வதோ எதுவும் இல்லாமல் மிதமான நடையில் தெருக்களில் வலம் வருபவன், எங்கு வேண்டுமானாலும் உறங்கி விடுவான்.

மேட்டுத் தெருவை அடைந்தவுடன் ‘இந்த சைட்ல கம்மியாத்தான் கடங்க இருக்கும்டா’, என்று சொன்னவனை, ‘பரவால்ல, மொதல்ல இப்படி ஆரம்பிக்கலாம் வா, எல்லாம் தெரியும்’, என்று இடது புறம் திருப்பினான் சந்துரு. இவன் வீட்டிலிருந்து ஏழெட்டு நிமிடத்திற்குள் வரக்கூடிய மேட்டுத் தெருவின் இந்தப் பகுதிக்கு இவன் பெரும்பாலும் வருவதில்லை.. சிறிது தூரம் நடந்தவுடன் அம்பாஸிடர் கார் நிறுத்தப்பட்டிருக்க, அருகே நந்தியாவட்டை மலர்கள் பூத்திருந்த இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த வீட்டைக் கடக்கும்போது எப்போதும் போல் அசௌகர்ய உணர்வு. வகுப்பறை சூழலில் அவனுள் இருக்கும் தன்மதிப்பு இத்தகைய நேரங்களில் அனிச்சையாக ஆட்டம் கண்டு விடுகிறது. சில மாதங்களுக்கு முன் பொதுக் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் நிரப்பி தோளில் சுமந்து வந்துகொண்டிருந்தபோது அவள் எதிரே வந்தது நினைவுக்கு வந்தது.

‘போறும்டா அந்தப் பக்கம் போலாம்’, என்று திரும்ப, ‘அப்பறம் என்னத்துக்கு மூணு நாளா வர’ என்றான் சந்துரு. பிளாஸ்டிக் வளையத்தை வீசி அதனுள் சிக்கும் பொருட்களை பெறக்கூடிய கடையின் அருகே நின்றார்கள். வளையங்களை வீசுபவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்றில் ஒன்றுகூட சிக்கவில்லை. இவர்களைவிட ரெண்டு மூன்று வயது சிறிய பெண்கள் வந்து நின்று அவ்விளையாட்டில் பங்கேற்க தேவையான ஐந்து ரூபாயை செலவு செய்வதின் தேவை குறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். ‘எதுக்குடா வீண் செலவு’ என்று சந்துரு சொன்னதைக் கேட்காமல், ஐந்து ரூபாய் செலுத்தி மூன்று வளையங்களை பெற்றுக்கொண்டான். க்ளிப் ஒன்றும், சீப்பு ஒன்றும் சிக்க, அந்தப் பெண்கள் இவன் அவற்றைப் பெற்றுக்கொள்வதை கவனிப்பதைக் கண்டு மீண்டும் உற்சாகமாக உணர்ந்தான். ‘எல்லாம் கர்ல்ஸ் ஐட்டம்ல, நீ வெச்சு என்ன பண்ணப் போற?’ என்று கேட்ட சந்துரு, இவன் பார்வையையின் திசையை கவனித்து, ‘டேய் த்ரோகம் பண்ணாதடா’ என்று சிரித்தபடி சொன்னான்.

பெண்களுக்கான கடைகளில் விசேஷ கவனம் செலுத்தியபடி வந்து கொண்டிருந்தவன் சற்று தள்ளி இருந்த மாயஜால அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தவர்களை பார்த்து சந்துருவை இழுத்துக்கொண்டு அங்கே விரைந்தான். அரங்குக்கு வெளியே இருந்த நாக, கடல் கன்னிகளின் ஓவியங்கள் இப்போதெல்லாம் வியப்பையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை. இரண்டு ருபாய் கட்டணம் செலுத்தி நுழைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட, அது வேறு யாரோ. தடிமனான துணியால் நெய்யப்பட்ட கூடாரம் கதகதப்பாக இருக்க, துணியின் மணமும், மணலின் மணமும் கலந்த ஈரம் தோய்ந்த வாடை அடித்தது. ட்யூப்லைட்டை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சீட்டுக்கட்டை வைத்தும் காகித மலர்களைக் கொண்டும் சில வழக்கமான தந்திரங்களை மாயாஜால நிபுணர் நிகழ்த்திக் காட்டியப் பின் சிறுவனொருவனை மேடைக்கு அழைத்து தண்ணீர் குடிக்கச் செய்து, பின் அவன் கால்களுக்கிடையில் டம்ளரை வைக்க அது நிரம்பியதைக் கண்டு அரங்கில் ஆரவாரம்.இவர்களின் வயதே இருக்கக்கூடிய உதவியாள பெண்ணை தற்காலிக மேடையின் ஒரு செயற்கை தூணின் மீது கட்டி வைத்து திரையை மூடி சில நொடிகள் கழித்து திறக்க அவள் இப்போது வேறொரு தூணில் கட்டப்பட்டிருந்தாள். இதே போல் நான்கு முறை நடக்க, இப்போது மீண்டும் ஆரம்பித்த தூணில் கட்டப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் திரை விலக்கப்படும்போது அப்பெண்ணின் முகம் எந்த அயர்ச்சியும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

இவன் தவறாக அடையாளம் கண்டிருந்த பெண் மெல்லிய கழுத்துச் சங்கிலியை கவ்வியபடி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் உதட்டிற்கு மேல் ஈர மினுமினுப்பையும், கன்னத்தில் உருவாகியிருந்த ஒற்றைக்கோட்டு வியர்வை பாதையையும் பார்த்தவன் நாவால் உதட்டை வருடினான். கண்களை மூடினால் அவள் மணத்தை நுகர முடியும் என்று நினைத்தவனுக்கு, சில நிமிடங்கள் கால் மேல் கால் போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. பின் தன்னை மீட்டு கவனத்தை மீண்டும் நிகழ்ச்சியில் செலுத்தினான்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வர, வெளியே அடுத்த ஷோவிற்கு மனைவி, குழந்தையுடன் காத்திருந்த நாடார், ‘என்ன மேன், ஷோ எப்டி’ என்றார். ‘பரவால்ல நாடார்,பாக்கலாம்’. ‘சனிக் கெழம மத்தியானம் மட்டும்தாண்டா மனுஷன் கொஞ்சம் ப்ரீயா இருக்கார்’ என்றான் சந்துரு. ஞாயிறு முதற்கொண்டு தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்து இரவு பத்து மணிக்கு முன்பாக மூடாதவரை, சனிக்கிழமை மாலை மட்டும் செங்கல்பட்டின் ஏதேனும் திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க முடியும். சனி அன்று ஐந்தரை மணி அளவில் அவர் தனியாளாக சைக்கிளில் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதில் இருந்து, திருமணமாகி மனைவியுடன் டி.வி.எஸ் பிப்டியில் செல்ல ஆரம்பித்து, பின் இப்போது மகனுடன் ‘ட்ரிபிள்ஸ்’ அடித்தபடி செல்வதை இவன் பார்த்து வருகிறான். இன்று ஒரு மாற்றாக தசரா.

‘நாடார் வீட்ல டிவி இருக்குமாடா, வெச்சிருந்தாலும் வேஸ்ட்ல ‘

அதிகரித்தபடி இருந்த கூட்டத்தினூடே நடந்து கொண்டிருந்தவர்கள் ராமையா டிபன் கடையிலிருந்து வந்த எண்ணை வாடையினால் ஈர்க்கபப்ட்டு அங்கே சென்றார்கள்.முட்டிக்கு மேல் மடித்து கட்டப்பட்ட லுங்கி, வியர்வையில் உடலுடன் ஒட்டியிருந்த வெள்ளை பனியனுக்கு ஈடுகொடுக்கும் வெள்ளை மீசை தலைமுடியுடன் ராமையா அலுமினிய பாத்திரத்தில் இருந்த மாவில் கையை விட்டு எடுத்து எண்ணைச் சட்டியில் போட்டு பொரித்துக் கொண்டிருந்தார். மலம் கழித்தபின் கோவில் குளத்தில் கால் கழுவி விட்டு அவர் நேராக கடைக்குச் செல்வதை பார்த்த நினைவுகளை அகற்ற முயன்றான். ஆளுக்கு சில வடைகள் வாங்கி வெளியே பெஞ்ச்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாம்பல் நிற பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஒருவர் கடைக்கு வருவதை பார்த்தவன், ‘டேய் இவர நான் பாத்ருக்கேண்டா ‘ என்று ஆச்சரிய குரலெழுப்பினான்.

தலைமுடி அங்கங்கே கொத்து கொத்தாக தலையெங்கும் சின்னஞ் சிறு கொம்புகள் முளைத்தது போல் விறைத்திருந்தது. சட்டையும், பேண்ட்டும் கசங்கி அழுக்கு படிந்திருந்தன. வெண் புள்ளிகள் போல் முகத்தில் தாடியின் ஆரம்பம். உள்ளே சென்று கடைக்காரரிடம் ஏதோ கேட்டவர் பின்பு அவரிடம் கெஞ்சுவது தெரிந்தது.

‘இவர நான் நெறய மொற சின்ன மணியக்கார தெருல பாத்ருக்கேன். இதே கலர் பாண்ட் சட்டதான் போட்ருப்பார், ஆனா பக்கா க்ளீனா இருக்கும்டா. நான் சைக்கிள்ள அவர க்ராஸ் பண்ணும்போதே டக்குனு தெரியும். தலைமுடி அழுத்தி படிஞ்சு வாரி இருக்கும். ‘

ராமையா என்ன நினைத்தாரோ, அவர் கேட்டதற்கு ஒப்புக்கொண்டு பொட்டலம் கட்ட ஆரம்பித்தார். சட்டைப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே கொடுத்து பொட்டலத்தை வாங்கியவர் நாலைந்து அடி தள்ளிச் சென்று சாக்கடையருகே இருந்த காலி இடத்தில் வடைகளை அள்ளி வைத்தார். அங்கு நின்றிருந்த நாய்கள் அவருடன் வந்தவை என புரிந்தது.

‘என்னமா சாப்டுது பாரு’.

அந்த ஆசாமி செய்வதைப் பார்த்தபடி கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, சிலர் அங்கே நிற்க ஆரம்பித்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமையா எழுந்து வந்து, ‘ஸார், நீங்க பாட்டுக்கு கொடுத்துட்டு போய்டுவீங்க, அப்பறம் இதுங்க இங்கயே சுத்திகிட்டு இருக்கும், கொஞ்சம் அசந்தா புடிங்கிட்டு பூடும், எனக்குதான் ப்ரச்சன. தள்ளிப் போய் எதுவானாலும் குடுங்க, இதுக்கு தான் காச கொறக்க கேட்டீங்களா, ஒங்களுக்கு கேக்கரீங்கன்னுல நெனச்சேன்’ என்றார். அம்மனிதர் எதுவும் பேசாமல் பொட்டலத்துடன் நகர நாய்கள் அவர் பின்னே சென்றன. அவர் பின்னால் போகப் போனவனை பிடித்த சந்துரு ‘எங்கடா போற’, என்றான்.

‘இல்ல அவர் எங்க போறார்னு’ என்று ஆரம்பித்தவனை இடைமறித்து ‘ஒனக்கு அவர தெரியாதுல்ல’ என்றான் சந்துரு.

‘இல்லடா ரோட்ல போம்போது பாத்திருக்கேன் அவ்ளோதான்’

‘அப்பறம் என்ன’

‘அப்டி இல்லடா அவர பாக்கறப்ப காலேஜ் ப்ரொபசர் லுக் இருக்கும். எப்பவுமே புல் ஹேண்ட் சட்டதான், அத கரெக்டா எல்போ வரிக்கும் மடிச்சு விட்றுப்பார். இப்போ பாரு ஒரு சைட்ல சட்ட நீட்டிக்கிட்டு, தலைமுடி கலஞ்சு பாக்கவே பிசாசு புடிச்சவன் மாதிரி இருக்கார்’

‘இந்த மாதிரிலாம் திடீர்னு ஆச்சுனா பேமிலில எதாவது பெரிய ப்ரச்சனையா இருக்கும், நீ ரொம்ப திங்க் பண்ணாத, இவர் பின்னாடி போனா மிஸ் பண்ணிடுவ.’ என்று சொல்லியபடி சந்துரு இவனை இழுத்துச் சென்றான்.

தலைவரின் மனைவி வளையல் செட்டொன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க தலைவர் ‘என்னய்யா அஞ்சு ரூபா சொல்ற, மூணு ரூபா தரேன்’ என்று அதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கடையில் நின்றிருந்தவர்கள் அவரை தாங்கள் கவனிப்பது தெரியாமல் இருக்க முயன்று கொண்டிருந்தார்கள். பேரம் பேசும்போது இருக்கும் எச்சரிக்கை உணர்வு, கறார்த்தன்மை எதுவும் கடைக்கரரிடமும் இல்லை, அவர் முகத்தில் வியர்வையை மீறிய மலர்ச்சி தெரிந்தது. தலைவர் கேட்ட விலைக்கு கொடுத்தும் விட்டார்.

அவர் மனைவியுடன் செல்வதை பார்த்தவாறே ‘பாத்தியாடா, ட்ரெஸ்தான் தலைவர் மாதிரி, பிசினாறிப் பய’ என்று ஆரம்பித்த சந்துரு, ‘நாலஞ்சு மாசம் முன்ன சித்தப்பா புறா வாங்க இவர் ஊட்டுக்குப் போனாரு, பத்து ரூபா கொறஞ்சு போச்சு, கோவில் பக்கத்துல தான் வீடு, புறாவ தாங்க, வீட்ல வுட்டுட்டு எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு,ஆளு கேக்கலையே, என்னடா நம்ம தெருலேந்து அஞ்சு நிமிஷம்கூட ஆகாது திரும்பி வர, சித்தப்பாவ வேற அங்கிங்க பாத்திருக்காரு அவரு, தெரிஞ்ச மொகம்தான்,அப்படியும் தரலையே’ என்று பொருமி முடித்தான்.

‘அதனாலத்தான் சாயங்காலம் அப்படி சொன்னியாடா’

‘டேய் அது வேறடா, சத்தியமா உண்மைடா அது, நீ வேணா நைட் வந்து செக் பண்ணு, வளையல்லாம் வாங்கி தந்துருக்கார், நைட் ஷோ கண்டிப்பா உண்டு இன்னிக்கி’

‘ஏண்டா, அதை ஏண்டா நான் போய் பாக்கணும், வேணா நீ போ’

‘முரளியண்ணன் சொன்னது கரெக்டான்னு செக் பண்ணலாம்ல ‘

‘எதுவும் இன்ட்ரஸ்ட் இல்லாம தான் சாங்கலத்துலேந்து அலஞ்சுட்டிருக்கியாக்கும்”

அவர் அந்தக் கூட்டத்திலும் நாசூக்குடன் நடந்து செல்வதையும், அவரைப் பார்ப்பவர்களுக்கு தன்னிச்சையாக ஒரு கணமேனும் குழப்பமும், அவர்களை மீறிய பவ்யமும் ஏற்படுவதையும், பின் ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரைக் கடந்து செல்வதையும் கவனித்தார்கள்.. அவர் மக்களைப் பார்த்து கும்பிடு போடாததுதான் பாக்கி, மற்றபடி அரசனொருவன் நகர்வலம் செல்லும் பாவனைதான் அவர் நடையில் தெரிந்தது. ‘இதுக்குத்தான் இந்த மாதிரி ட்ரெஸ் போடறார்டா’ என்றான் சந்துரு. ‘அப்போ அவரு வைப் மேட்டர்’ என்று இவன் கேட்க ‘ஒருவேளை அவர் பொண்டாட்டி சொல்லித்தான் இப்படி பண்றாரோ’ என சந்துரு சொன்னான். அவர் மனைவியும் கணவனின் கைகளைப் பற்றியபடி ஏதோ பேசியபடியே செல்வதைப் பார்த்தால் அவரும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பது தெரிந்தது. ‘இன்னிக்கு நாலஞ்சு நைட் ஷோ இருக்கும்டா’ என்றான் இவன். ‘ஐயோ செத்தார்டா’ என சந்துரு சொல்ல மீண்டும் சிரிப்பு.

இரண்டாம் முறை சுற்றி வரும்போது ராமையா கடையின் முன் இரண்டு நாய்கள். ‘நீ சொன்ன ஆள உட்ருச்சு’ என்றான் சந்துரு. நாடார் பேசிச் சிரித்தபடி குடும்பத்துடன் முன்னே சென்று கொண்டிருந்தார். வழியில் அரசமரத்தின் கீழ் வெண் களிமண்ணில் செய்யப்பட்ட அம்மனின் தலை மற்றும் வேறு சில கடவுள் ஓவியங்களைக் கொண்ட, பூசாரி யாரும் இல்லாத, தகரக் கூரை மட்டுமே உடைய வழிபாட்டு இடம். பக்தர்கள் தங்கள் குறைகளை நேரடியாக அம்மனிடம் சொல்லிக் கொள்ளலாம். கடை விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மன் தலை அருகே வயதான பெண் உட்கார்ந்து கொண்டிருக்க, அவர் வாய் அசைந்து கொண்டிருப்பதும், தன் கைகளை அம்மனின் முகத்தின் முன் நீட்டியபடி அசைத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மரத்தைக் கடக்கும்போது அவர் முகத்தில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கவனித்தான். வீட்டிற்குத் திரும்பலாம் என்று இவன் சொல்ல, மீண்டும் அவள் வீட்டிற்கு சற்று முன் நின்றிருந்த ராட்டினத்திற்கு அருகே அழைத்துச் சென்ற சந்துரு, ‘இன்னும் கொஞ்சம் தள்ளி இத நிறுத்திருக்கலாம்’ என்றான். கேட் மூடி இருந்த வீட்டில் இருந்து பார்வையை அகற்றி ராட்டினத்தை சுற்றி இருந்தவர்களை கவனித்தான்.

சிறுவனொருவன் ராட்டினம் சுழற்றுபவரிடம், ‘ண்ணா, எட்டணாதான் இருக்குண்ணா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறான் போலிருந்தது. எரிச்சலான தொனியில் ‘எட்ணாக்கு பாதி சூத்தைதான் வெக்க முடியும்’ என்று மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லி விட்டார். சுற்றி நின்றவர்கள் சிரிக்க, யார் பார்வையையும் சந்திக்காமல் அங்கிருந்து விரைந்து சென்ற அந்தப் பையனைக் கூப்பிட்டு காசு கொடுக்கலாமா என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கூட்டத்தினுள் மறைந்துவிட்டான்.

திடீரென மூக்கையடைக்கும் துர்நாற்றம். அருகில் சேட். சந்துருவுடன் கொஞ்சம் விலகி நின்றான். சேட் ராட்டினம் சுற்றுவதையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அதன் உரிமையாளர் ‘என்னப்பா ஒனக்கும் இந்த வயசுல ஏறணுமா’ என்றார். சேட் எதுவும் சொல்லாமல் நிற்க, அவனைக் கூர்ந்து பார்த்தபடி சுழற்றிக் கொண்டிருந்தார்.அந்தச் சுற்று முடிந்து ராட்டினம் நிற்க, குழந்தைகள் இறங்கினார்கள். சேட்டின் மேலுடம்பு மட்டும் தன்னிச்சையாக செயல்படுவதைப் போல, கால் நகராமல், கொஞ்சமே கொஞ்சம் முன்சென்று மீண்டும் நிமிர்வதை பார்த்தான்.

‘சேட் வாங்கி கட்டிக்கப் போறான்டா’ என்றான் சந்துரு. புதிதாக குழந்தைகள் ஏற ஆரம்பிக்க, சுழற்றுபவர் ‘நீயும் ஏறிக்க’ என்றார் சேட்டிடம். ஒன்றும் சொல்லாமல் இருந்த சேட்டிடம் மீண்டும் அதையே சொல்லியபின் அவன் பெரும் எடையை சுமப்பவன் போல் தயங்கித் தயங்கி ராட்டினத்தின் அருகில் சென்றான். ஏறாமல் நின்றுகொண்டிருண்டவனின் தோளைப் பற்றி முன்னெத்தி அவர் ஏற்றிவிட, அவன் அந்த சிறிய இடத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டான். ராட்டினம் சுழன்று மேலே செல்லும்போது சேட்டின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி கீழே வரும்போது இல்லை.

சற்று நேரம் முன்பு அவமானப்பட்டுச் சென்ற சிறுவன் திரும்பி வந்து கொண்டிருந்தான், முகம் மலர்ந்திருந்தது. ராட்டினத்தின் பக்கம் திரும்பக்கூடச் செய்யாமல் கடந்து சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் அவள் வீடும் இருந்தது. நுரை குமிழிகளை உமிழும் வஸ்துவினுள் ஊதி குமிழிகளை உற்பத்தி செய்து, பின் அவற்றை அவன் விரலால் தொட அவை உடைந்து சிதறிக் கொண்டிருந்தன. நுரைக்குமிழிகள் உருவாதல், உடனேயே சிதைதல், மீண்டும் உருவாதல் என அதே சுழற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. உடல் எடை அனைத்தையும் இழந்தது போல் மிகவும் தளர்ச்சியாக உணர்ந்தான். வெறுமையாக இருந்தது.

‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா, இவ்ளோ நேரம் இருந்துட்டு கடசில வேஸ்ட் பண்ணி ஓடாத’, என்று சந்துரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் நடந்தவன், குளத்தைத்தாண்டும்போது க்ளிப்பையும், சீப்பையும் அதனுள் தூக்கி எறிந்து, நீரில் வட்ட சிற்றலைகள் தோன்றி அமிழ்வதை பார்த்தபடி நின்றிருந்தான்.

மிட்டு மியா

காலத்துகள்

நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக இருக்கும்போது அவர்கள் வீட்டில் வளர்த்த ‘ஐவன்’ என்ற அல்சேஷனின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டதும், அந்தப் பெயரை கேட்பவர்கள் ஒரு கணம் துணுக்குறுவதும்,  எனக்கு பெருமிதத்தை அளித்தது.

பெயருக்கு  ஏற்றாற்போல்  ஆஜானுபாகுவாக,  சிங்கம் போல் பிடரியுடன் கம்பீரமாக இருந்ததாக  அம்மா குறிப்பிட்ட ஐவன் போல் இதுவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டாலும், அது என்னவோ சராசரி நாய் போல்தான் வளர்ந்தது. வீட்டிற்கு அருகில் சின்ன சலனம் இருந்தாலும்  குறைப்பது ஆரம்பத்தில் பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும் என் வீட்டிற்கு பலமுறை வருபவர்கள், அடுத்த போர்ஷனுக்கு வரும் விருந்தாளிகள் என யாரை, எத்தனை முறை பார்த்த பின்பும்  குரைத்துத் தள்ளுவது அதன் மனநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் பின்புறத்தில் இருந்த எங்கள் போர்ஷன்களுக்கு வர இருள் நிறைந்த சந்துதான் வழி. எங்களுக்கு நேர் பின்வரிசையில் சிதிலமடைந்த கல்யாண மண்டபம், யாரும் குடியிருக்காத பேய் நடமாட்ட புரளிகள் உலவும்  பங்களா பாணி வீடு, காலி மனை. எனவே இப்படி ஒரு காவல் தேவைதான் என பக்கத்து குடித்தனக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். ஐவனின் குரைப்பு குறித்து   பிரச்சனை எழவில்லை, அதுவும் இஷ்டம் போல் குரைத்துத் தீர்த்தது. அதன் சத்தம் முன்  சந்தையும் தாண்டி தெருவரை கேட்பதால், ‘அந்த கத்து கத்துனு கத்தற நாய் வீடு இருக்கற தெரு’ என்பது பெரிய மணியக்காரத் தெருவிற்கு அடையாளமாகிவிட்டது.

ஒரு நாள் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நூலகம் செல்லக் கிளம்பியவன் தூங்கிக் கொண்டிருந்த ஐவனுக்கு  மூக்கில் முத்தமிட முயன்றேன். பயமோ, தூக்கம் கலைந்த கோபமோ, உறுமியபடி என் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழ, ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனை அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காதான் முகத்தில் ரத்தம் என்று தடுத்து நிறுத்தினார். ஐவனின் நகமோ பல்லோ பட்டு கண்ணிற்கு  மிக அருகில் கன்ன எலும்பில் காயம். எதனால் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றார் டாக்டர்.

தொப்புளைச் சுற்றி  பத்து பன்னிரண்டு ஊசி போடப்படுமே என்ற பீதியில் இருந்தவனுக்கு, நாய்க்கடிக்கு புதிதாக சந்தைக்கு வந்திருந்த, ஒரு முறை மட்டுமே போட வேண்டிய முன்னூற்றி ஐம்பது ருபாய் தடுப்பூசி கொஞ்சம் நிம்மதி அளித்தாலும் வேறொரு  சந்தேகம் உண்டானது. சமீபத்தில்தான் ‘கெனி பிக்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருந்தேன்.  இரண்டொரு நாட்களில்  கன்னவெலும்பு கருநீல நிறமாகி , கொருக்குத் தட்டியிருந்தது.  இரண்டு வாரங்கள்  கழித்து அது உதிர்ந்து தோல் இயல்பான நிறத்திற்கு மாறும் வரை எங்கு சென்றாலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு.

வீட்டில் ஐவனைக் கொடுத்து விடும் முடிவுக்கு  வந்து விட்டார்கள். அது தெரியாமல் செய்து விட்டது என்று நான் சொன்னதை யாரும் கேட்பதாயில்லை, கண் தப்பித்தது என் அதிர்ஷ்டம்தான் என்றும் அடுத்த முறை அது மீண்டும் கை கொடுக்காமல் போனால் என்ன ஆகும் என்றும் கேட்டார்கள். அழைத்துச் செல்பவர் வந்த அன்று ஓலமிட்டபடி இருந்த ஐவனை அவர் இழுத்துச் செல்வதை தெருமுனை வரை அழுதபடி சென்று பார்த்தேன். அன்று ஐவன் செய்த ரகளையைப் பற்றி பெரிய மணியக்காரத் தெரு சில நாட்கள் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது.  வீட்டிற்கு வந்தால் என் அப்பாவின் கண்ணும் கலங்கி இருந்ததுதான் ஆச்சரியம். அம்மா அழுவது எனக்கு புதிதல்ல, அதற்கான சூழ்நிலை அடிக்கடி என் வீட்டில் உருவாகும். என் வயது பையன்கள் அழுதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியவர்களில் ஆண்கள்கூட அழுவார்கள் என்று அன்றுதான் தெரிந்தது.

அதன்பின் திருமணம் முடிந்து மகனும் பிறந்து பின், எந்த யோசனையோ, காரணமோ இன்றி   கிளி ஒன்றை வாங்குவது வரை  வளர்ப்பு  பிராணிகள் பற்றிய எண்ணம் தோன்றியதில்லை. என் பால்யத்தில் நடந்த, எப்போதோ மறந்திருக்க வேண்டிய மிக எளிய, ஆனால் மனதின்  ஆழத்தில் இருந்து அவ்வப்போது மேலெழுந்து வரும் நிகழ்வு ஒன்றுதான் கிளிக்கும் எனக்குமான ஒரே நேரடி சம்பந்தம்.

எங்களை ஆரியர்கள்  என்று  சொல்ல முடியாது, எங்கோ எப்போதோ என் குடும்பத்தின் குடிமரபில் எங்கும் நேர்வது போல் இயல்பான கலப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு என் மூக்கையும் ஒரு  சான்றாக  நான் முன்வைப்பதுண்டு.  தாயைப் போல் தீர்க்கமான  நாசி இல்லாமல் என் மகனும்    ‘சப்ப மூக்கு சப்பான் பொம்மையாகிப்’ போனது குறித்து இரு குடும்பத்திலும் கொஞ்சம் வருத்தம்.      லவ் பர்ட்ஸ், பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகைப் பறவைகளை விற்றுக்கொண்டிருந்தவனிடம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நான் கிளி வாங்க இவைகூட  தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும்.  இத்தனைக்கும் லவ் பர்ட்ஸ் பார்ப்பதற்கு  அத்தனை  அழகு, குரலும் இனிமை.  ஒரு கிளியின் விலைக்கு இரு லவ் பர்ட்ஸ் வேறு.

வீட்டிற்கு வந்தவுடன், கிளியை கொஞ்ச நேரம் ரசித்து விட்டு கூண்டை எங்கு மாட்டுவது, என்ன உணவு, யார் கொடுப்பது போன்ற, நான் அதுவரை யோசித்திராத நடைமுறை விஷயங்கள் குறித்து என் மனைவி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தாள். நானே உணவளிக்கும் பொறுப்பையும், கூண்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக சொன்னேன். பள்ளி முடிந்து வந்த  மகனுக்கும் கிளியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம். ‘அம்மா மூக்கு மாதிரி இருக்குலப்பா’ என்று அவன் சொல்ல என் மனைவிக்கு கோபமாக வெளிப்படும் சந்தோஷம். ‘இதுக்கு என்ன பேருப்பா’ என்று கேட்டவுடன் தான் அதை பற்றிய நினைவு வந்தது. என் பாட்டி, சிறுவயதில் தன் வீட்டில் கிளி வளர்த்தார்கள் என்றும் அதன் பெயர் ‘மிட்டு’ என்றும் சொன்னார்.

நான் குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி தன் பால்ய கால அனுபவங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறார். பத்து பன்னிரண்டு வயது வாக்கில்  அவர்  மிகப் பெரிய கதைசொல்லி என்பது புரிந்தது. ஆனால் அதற்குப் பின் இத்தனை வருடங்கள் கழித்தும், அவர் சொல்வதில் எது உண்மை, பொய் என்பது எனக்கு பிடிபடுவதே இல்லை என்பதால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்ற இடத்திலிருந்தே ஆரம்பிப்பது என் வழக்கம்.  கிளி விஷயம் எப்படியோ,  இப்போது  பெயர்தான் முக்கியம் என்பதாலும், அவர் சொன்ன பெயர் எல்லோருக்கும் பிடித்துப் போனதாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ‘மிட்டு’வை  இன்னும் வாஞ்சையாக ‘மிட்டு மியா’ என்று    அழைக்கலாம், வட மாநிலங்களில் இந்த உருது பின்னொட்டு சேர்க்கும் வழக்கம் உண்டு என்ற கூடுதல் தகவலையும் பாட்டி அளித்தார்.  வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்தவர்தான் என்றாலும் வழக்கம் போல் இது குறித்தும் சந்தேகம் எழத்தான் செய்தது.

எழுந்தவுடன் ‘குட்மார்னிங்’, படுக்கும் முன் ‘குட்நைட்’ என மிட்டுவுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட என் மகன் பெரிதாக முடியாவிட்டாலும் கூண்டைச் சுத்தப்படுத்துவதில் எனக்கு உதவினான். கூண்டின் சிறு கதவைத் திறந்து உள்ளே ‘துவரம் பருப்பு’, தண்ணீர் கிண்ணங்களை வைப்பது அவனுக்கு ஒரு சாகசம். மிட்டு உண்டு முடித்து மூக்கை கூண்டின் கம்பிகளில் தேய்க்கும்போது, ஒற்றைக் காலை மட்டும்  கொண்டு கம்பியை பற்றிக் கொண்டு நிற்கும்போது கிளர்ந்து சத்தம் போடுவான்.

அனைவருக்கும் மிட்டுவை பிடித்துப் போனாலும், அது என்னவோ விலகியே இருந்தது. முதலில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் வருத்தம் என்று நினைத்தாலும் அப்படியல்ல  என்று விரைவில்  புரிந்தது, அது உண்பதில் எல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. மிட்டுவிடம் எப்போதும் ஒரு அலட்சிய தோரணை, உள்ளே வைக்கப்படும் உணவையும் திறை  ஏற்றுக்கொள்ளும் அரசனின் பாவனையுடன்தான் உண்ணும். என் அறையின் ஜன்னலோரத்தில் பறவைகளுக்கு வைக்கப்படும் தானியங்களை உண்ண அவை வரும்போதுகூட எந்த உணர்ச்சியையும் காட்டாது. இரவு நேரத்தில்  என் மகன் தன் பாடங்களை அதற்கு படித்துக் காட்டும்போது மட்டும், கூண்டின் அருகில் வந்து  ஒரு கண்ணை மூடியபடி கவனிப்பது போல் நின்றிருக்கும்.

ஒரு மாதம் கழிந்து கிளி எப்போது பேசும் என்ற கேள்வியை மகன் எழுப்பினான். அதற்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும், மிளகாயை அதன் நாவில் தேய்த்தால் விரைவில் பேசும் என்றும், தாங்கள் வளர்த்த கிளி அவ்வாறுதான் பேசியது என்றும் என் பாட்டி கூறினார். பயல் அதைச் செய்ய வேண்டும் என்றான், அவனுக்கு பத்து வயதாக இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. யார், எப்படி  மிளகாயை  அதற்கு தருவது? பாட்டி நடுங்கும் கையுடன் அப்படியே மிளகாயை நீட்ட அன்று மிட்டு என்ன மனநிலையில் இருந்ததோ பாட்டி கொஞ்சம் அசந்திருந்தால் விரலைப் பிடுங்கி விட்டிருக்கும்.’கோணக்கேடு பிடிச்சது, வயத்தாலி  சனியன்’ என்று  திட்டித் தீர்த்த பாட்டி அரைத்து விழுதாகக் கொடுக்கலாம் என்று அடுத்த யோசனையை  சொன்னார்.  மிளகாய் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளாமல் கழிய ஆரம்பித்து இறந்து விடப்போகிறது, என்று என் மனைவி கூற அந்த யோசனையை கைவிட்டோம்.

ஆங்கிலமா, தமிழா என்று யோசித்து, பேச்சு வழக்கில் இருப்பது போல் இரண்டிலும்  கற்றுத்  தருவது, பின் மிட்டுவின் சமர்த்து என்று முடிவு செய்து, ‘குட்மார்னிங்’, ‘வணக்கம்’, ‘வெல்கம்’ என்று கலந்து கட்டிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.  நானொருவன் அங்கு கத்திக் கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் அங்கில்லாதது போலவே மிட்டு நடந்து கொண்டது.  இரவு நேரங்களில் அதற்கு தானறிந்த சில மாயாஜாலக்  கதைகளை என் மகன் சொன்னதில்  மந்திரவாதியின் உயிர் கிளியில் இருந்து குருவிக்கு குடிபெயர்ந்து, குருவி செத்தது. மிட்டு எப்போதும் போல் தலை சாய்த்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய பேச மட்டும் செய்யவில்லை.

என் பாட்டி வேறு, தங்கள் ஊரில் கிளிகள் இந்த நேரத்தில் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், ஒன்று இங்குள்ள கிளிகள் சாமர்த்தியசாலிகள் அல்ல, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள்  திறமையானவர்கள் இல்லை என்று பொருள்படுமாறு சொல்ல ஆரம்பித்தார். பாட்டியின் சொல்வன்மையை நான் நேரடியாக உணர்ந்தவன். மகனுக்கு என் திறமை மீது சந்தேகம் வந்து விடப் போகிறது என்று கிளியைப் பேச வைத்தல் பற்றி இணையத்தில் தேடி படித்து அவற்றில் சொல்லி இருந்தது போல் சில முயற்சிகள் செய்தேன்.  மகன் பேச ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்குக்கூட நான் இத்தனை சிரத்தையாக வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க்கவில்லை என்பது என் மனைவியின் அவதானிப்பு. எதுவும் பலன் அளிக்கவில்லை, மிட்டு கல்லுளிமங்கனாகத்தான் இருந்தது.

அடுத்த முயற்சியாக அறையில் யாரும் இல்லாபோது நான் அதற்கு வசைச் சொற்களையும், ஆபாச வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதை கவனித்த என் மனைவி கடுப்பாகி விட்டாள். நல்லவற்றைவிட தீயவைதான் எளிதில் பதியும் என்பதால் அப்படி செய்தேன் என்று நான் சொன்னதற்கெல்லாம் அவள் சமாதானம் ஆகவில்லை.  நான் சொல்வதை  மகனும் கேட்டு அப்படியே பேச ஆரம்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொன்னது நியாயம் என்பதால் அந்த முயற்சியை  நிறுத்தினேன்.

மிட்டு மகா கர்வியாக அல்லது படு முட்டாளாக இருக்க வேண்டும். அது அந்த வசை, ஆபாசச் சொற்களில் இருந்துகூட ஒரு வார்த்தையையும்   கற்றுக்கொள்ளவில்லை.  ஏன் மிட்டு  நல்ல, பண்புள்ள கிளியாக இருக்ககூடாதா என்று என் மனைவி சொன்னதை நான் ஏற்கவில்லை, அதற்கும் பண்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பது என் வாதம். கிளி மீதுள்ள என் ஆர்வம் குறைய ஆரம்பிக்க, அதை பராமரிக்கும் பொறுப்பு  என் மனைவியிடம் சென்றது.  மகனுக்கு நீதானே பொறுமையாக சொல்லிக் கொடுத்தாய், என்று அதையும் அவள் தலையில்  கட்டி விட்டேன்.  யாருக்கும், எதற்கும் மிட்டு மசிந்து கொடுக்கவில்லை, அதற்கு  சிறிதளவேனும் ஒட்டுதல் இருந்ததாக நாங்கள் நினைத்திருந்த மகனுக்கும்கூட. ஒவ்வொரு இரவும், விடுமுறை நாளிலும் அவன் அதன் முன்  பொறுமையாக ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை.

இந்த நேரத்தில் மிட்டுவை விடுதலை செய்து விடலாமா  என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன். மனைவியிடம் பேசிப் பார்த்தேன், முதலில் ஒப்புக்கொள்ளாதவளை, கிளிக்கு ஆயுசு குறைவு, அது இறந்தால் மகன் மிகவும் வருந்துவான், குழந்தையின் மனதை  பாதிக்கக்கூடும்,  எனவே இப்போதே அதை வெளியே விட்டு விடலாம் என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி  என் வழிக்கு வர வைத்தேன். மகனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தபோது அவனும் ஒப்புக்கொள்ளவில்லை. கிளியை கூண்டில் அடைப்பது பாவம் என்று நான் இறுதியாக  சொன்ன காரணத்தில் இருந்த அப்பட்டமான பொய்யை  அவன்  உணர்ந்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக சொல்லும் வயதில்லை அவனுக்கு. ஆனால் ‘மிட்டுக்கு  ப்ளை  பண்ண தெரியும்லபா’ என்று மட்டும் கேட்டான்.

அந்த ஞாயிறு அன்று காலையிலேயே மாடிக்குச் சென்றேன். கலங்கிய கண்களுடன் இருந்த மனைவி, வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள், மிளகாய் கொடுக்க முயன்ற சம்பவத்திற்கு பின் மிட்டு மேல் கோபமாக இருந்த பாட்டிகூட கொஞ்சம் கனிந்திருந்தார். முகத்தில் சுரத்தே இல்லையென்றாலும் மகன் மட்டும் வந்தான். இறுதி நேர ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தி கூண்டை திறந்தேன். முதலில் புரியாமல் வழக்கம் போல்  உள்ளேயே அமர்ந்திருந்த மிட்டு பின் வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்து  திரும்பிப் பார்க்காமல் பறந்தது.  அது கண்ணில் இருந்து மறைந்த பின்னும் தொடுவானத்தை பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருக்க ‘மிட்டு  வீட்டுக்கு போய் சேந்துடும்லபா’ என்று கேட்டான். எனக்கோ, ஐவன்  வீட்டை விட்டுச் சென்று  சில நாட்கள் கழித்து புதிய இடத்தில் சந்தோஷமாக இருப்பதாக கேள்விப்பட்டபோது ஏற்பட்ட அதே  ஏமாற்ற  உணர்வு.

பாதர் என்ன பண்றார்?

காலத்துகள்

முழிப்பு தட்டியவுடன் தலையணையில் இருந்த கோழை குமட்ட,   புரண்டு திரும்பும்போது தோள் வலித்தது, கையில் வரி வரியாக பாயின் அச்சு.  அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், மணி பார்த்தான்,  ஏழரை. பாயைச் சுருட்டும்போது முனகச் செய்த முதுகுப் பிடிப்பு சரியாக இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களாகும்.

சமையலறைக்குள் சென்றவனிடம் பல் விளக்கும்படி சைகை செய்தார் அம்மா. வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்தபடி நாவில் எஞ்சியிருந்த க்ளோஸ்ஸப் சுவையுடன் டிக்காஷனின் கசப்பு கலப்பதை அப்போதே கூச ஆரம்பித்திருந்த கோடை வெய்யிலில் ருசித்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய  குரலெழுப்பியபடி அருகில் வந்து உரசி நின்றது அலமேலு. கொஞ்சம் காப்பியைச் சுவற்றில் ஊற்ற, அதைக் குடித்துவிட்டு மீசை இழைகளைச் சுத்தம் செய்தபின் வெண்ணிற உடலை வளைத்து சிறிய பிங்க் நிற நாவால் உடலெங்கும் சுத்தம் செய்துவிட்டு நீட்டிப் படுத்து ஒற்றைக் கண்ணால் பார்த்தது. வீட்டில் காலை நேர ரேடியோச் சத்தம், பேச்சுச் சத்தம் எதுவும் இல்லை. வேலைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா  பாத்திரம் தேய்ப்பதையும் சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து வைப்பதையும் வழக்கத்தைவிட மெதுவாக, அதிக ஒலி எழுப்பாமல் செய்து கொண்டிருந்தாள். இவன் அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

எட்டு மணி அளவில் அம்மா கிளம்பும்போது, ‘சாப்பாடு எடுத்து வெச்சுருக்கேன், அப்பாட்ட சொல்லு,’ என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றாள். இவன் குளித்து முடித்தபோது எட்டரை ஆகியிருந்தது. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், சாப்பிடத் தோன்றவில்லை. பெரியமணியக்காரத் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும், வெய்யிலை சமாளித்து விடலாம்.

வருகை பதிவேட்டில் முன்னரே  பத்து பதினைந்து பேர் கையொப்பங்கள். நேற்று எடுத்து வந்திருந்த புத்தகங்களை திருப்பியாயிற்று. புத்தக அறையில் இந்த நேரத்தில்  யாரும் இல்லை, பதினொரு மணிக்கு மேல்தான் வர ஆரம்பிப்பார்கள். எந்தப் புத்தகம் எந்த ஷெல்பின் எந்த வரிசையில் இருக்கும் என இந்த ரெண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போன அறையில் இந்த முறை எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகங்களை தேட அதிக நேரமாகவில்லை. அனைத்து அடுக்குக்களையும் ஒரு சுற்று சுற்றி வந்ததில், நேற்று புத்தகம் எடுத்துச் சென்ற பின் பிற உறுப்பினர்களால் கொண்டு  செல்லப்பட்ட நூல்கள் எவையென்று காண முடிந்தது.

பத்திரிக்கைகள் படிக்கும் இடம் நிறைந்திருந்தது. எந்த இதழும், தினசரியும்  மொத்தமாக படிக்கக் கிடைக்காது, கையில் அகப்படும் தாள்களை வாசிக்க வேண்டியதுதான். படித்துக் கொண்டிருந்த ஒருவர் எழ அவரிடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் சென்ற ஞானபூமியின் சில தாள்களை படித்தான். அடுத்து அமர்ந்திருந்த இளைஞர் வேலைவாய்ப்பு தாள்களில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பின் இவனும்  அவற்றை புரட்டியதில் மருத்துவர், பொறியாளர் வேலைகளைவிட மற்ற, கேள்விப்படாத துறைகளில் இருந்து அழைப்புக்கள் அதிகமாக தென்பட்டன.  வீட்டிற்கு கிளம்பும்போது மணி பன்னிரெண்டு, அப்பா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.

அப்பா இன்னும் எழுந்திருக்கவில்லை. சாப்பிடப் பிடிக்காமல், எடுத்து வந்திருந்த புத்தகங்களை வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ‘எங்கடா போய்ட்ட நேத்து விளையாடலாம்னு சொன்னியே, வந்து பாத்தேன். அப்பா தூங்கிட்டிருந்தாரு, ஒடம்பு சரில்லயா?’ என்று கேட்டுக்கொண்டு முரளி வந்தான்.

‘ஆமாண்டா, மருந்து வாங்கத்தான் போயிருந்தேன்’

‘இப்ப வரியா, கோபால், மணிலாம் பின்னாடிதான் இருக்காங்க’

உள்ளே திரும்பிப் பார்த்தவன் முரளியுடன் சென்றான். இவன் போர்ஷனுக்கு பின்னால் உள்ள காலி மனை கிரிக்கெட் மைதானமாக செயல்படும். அங்கிருந்த தென்னை, பஞ்சு மரங்களின் நிழல் கோடையின் உக்கிரத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் பாதுகாப்பு தந்தது. ஒரு மணி வாக்கில் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பா எழுந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘சாப்பாடு வெச்சுருக்குன்னு அம்மா சொன்னா’ என்று சொல்லிவிட்டு மீண்டும்  புத்தகம் படிக்கத் துவங்கினான். அப்பா சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.

மெல்ல எழுந்து ரேடியோவை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று எலுமிச்சை மரத்தின் அடியில் அமர்ந்தான். ‘ஆப் கி ப்ஹர்மாயிஷ்’ஷில், ‘காதல் பைத்தியக்காரத்தனமானது, போதையூட்டுவது’ என்று கிஷோர் குமார் குரலில் ராஜேஷ் கன்னா உருகிக்கொண்டிருக்கும்போது- நிஜத்தில் நேரில் பார்த்தே இராத பியானோவை, நடிகருக்கு பதிலாக இவன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க –  ‘என்னடா இந்த வெய்யில்ல வெளில இருக்க’ என்று குரல் கேட்டது. சுந்தரி அக்கா வந்து விட்டார்.

‘இல்லக்கா உள்ள புழுக்கமா இருக்கு அதான்’

‘எப்போ ஸ்கூல் தொரக்கறாங்க’

‘வர  மண்டேக்கா’

அடுத்த பாடலில் ‘நான் எழுதிய கடிதம் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் கொண்ட அழகிய காட்சியாக’ மாறிக்கொண்டிருக்கும்போதே அந்த வகுப்பறைக் காட்சி இடைவெட்டி, அனைத்தையும் நிறமிழக்கச் செய்தது. எல்லா வருடமும் அது கண்டிப்பாக  நிகழும் என்று சொல்வதற்கில்லை, போன வருடம்கூட அதற்கு தேவையேற்படவில்லைதான். ஆனால் இழந்த வண்ணங்களை மீட்க முடியவில்லை. ‘நீ அழை, உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஹேமந்த் குமார் அதற்கடுத்த பாடலை முடித்துக் கொள்ளும்போதுதான் ஒலிபரப்பில் மீண்டும்      கவனம் செலுத்த முடிந்தது.  இதை இனி மீண்டும் எப்போது ஒலிபரப்பி எப்போது   பாடியபடியே மாடியில் உலவ என்று கவலைப்பட முடியாமல் இந்த புதுப் பிரச்சனை பயமுறுத்தியது.

நான்கு மணி அளவில் அப்பா எழுந்து நாளிதழ் படித்து, பின் மீண்டும் தூங்கி விட்டார். வேலை முடிந்து வந்த அம்மாவின் முகத்தில் அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆயாசம். சமையலறையிலிருந்து சைகை செய்து இவனை அழைத்தவள், ‘எழுந்தாளா, எப்ப எழுந்தா?’ என்று கேட்டாள். ‘ஒண்ணாயிருக்கும், அப்பறம் நாலு மணிக்கு எழுந்தா அப்பறம் திரும்பி தூங்கியாச்சு’. ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவள் இரவுணவை தயார் செய்து விட்டு அப்பாவை எழுப்பினாள். பத்து முறைக்கு மேல் கூப்பிட்ட பின் எழுந்தவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கணைத்தாகி விட்டது.  பின்புறம் சென்று காலி மனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், கொசுக்கடி அதிகமாகவும் உள்ளே வந்தான். அம்மாவும் படுத்திருந்தாலும் தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. பாயை விரித்து வைத்தவன், சுவற்றில் சாய்ந்தபடி இருளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் ‘ஒடம்பு செரியில்லையா’ என்று கேட்டபடி அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் அம்மா. இந்த நேரங்களில் அது அத்தனை எளிதல்ல. பத்து நிமிடத்திற்கு மேல் மன்றாடியப் பின் புரண்டு படுத்த அப்பா, ‘என்ன வேணும், மனுஷன் தூங்கக்கூட கூடாதா’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கடித்துப் துப்பினார். ‘அதுல்லமா, ஒடம்பு சரியில்லையானுதான் கேட்டேன்’ என்று சமாதானமான குரலில் சொல்லிவிட்டு அம்மா, ‘ஆபிஸுக்கு  லீவ் லெட்டர் அனுப்பணுமா’ என்று மீண்டும் மெதுவாக கேட்டதும் ‘மனுஷன நிம்மதியா இருக்க வுடாத, எப்பப்பாரு வேல வேல, ஒடம்புக்கு முடியலனா என்ன பண்ண முடியும்’ என்று கத்திவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்.

பின் அம்மா எவ்வளவு சொல்லியும் எதுவும் பேசவில்லை, கண்ணைக்கூட திறக்கவில்லை. அம்மா அழுகையை அடக்கிக் கொள்வதைப் பார்த்தான். காலை உணவை சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் நூலகம் சென்றவன் மதியம் வரை அங்கேயே இருந்தான். இரவுணவை சாப்பிட மட்டும் எழுப்பியதைத் தவிர அன்று மாலை அம்மா எதுவும் பேசவில்லை. மீண்டும் எட்டு மணிக்கு விளக்கணைப்பு, மீண்டும் இருளின் அமைதியினுள் மூழ்கியபடி இவன். அன்று அத்தனை தூரம் நடந்தும் தூக்கம் எளிதில் வரவில்லை. அம்மாவும் அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள், வெள்ளி. நூலகத்திற்கு விடுதலை. இருந்தும் ஒன்பது மணிக்கே  கிளம்பினான். ‘என்னடா நேத்தும் ஆள காணும், அப்பாக்கு இன்னும் முடியலையா?’ என்று கேட்ட முரளிக்கு ‘ஆமாம்டா, இன்னும் நாலஞ்சு நாளாகும் போல’ என்றான்.

‘இப்போ எங்க போற?’,

‘சந்துரு வீட்டுக்குடா,’

‘சண்டேதானே ஊர்லேந்து வர்றதா சொன்னான்?’

‘இல்லயே… சும்மா போய் பாக்கறேன்’.

‘வந்துட்டான்னா வர்றப்ப அவனயும் கூட்டிட்டு வா, ஒங்கப்பாக்கு இன்னும் முடியலல?’

‘வைரல் பீவரா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார்’

பள்ளி முகப்பில் இருந்த வாட்ச்மேனிடம்  டை வாங்கவேண்டும் என்று சொல்லி உள்ளே நுழைந்தான். மிகக் குறைவான ஆள் நடமாட்டத்துடன் பள்ளி இன்னும் பிரமாண்டமாக, தன்னுள் நிறைந்திருக்கும் மௌனத்தோடு புதிதாக இருக்கிறது.  இலக்கில்லாத சுற்றுதல். பள்ளியில் வளர்க்கப்படும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘லவ் பேர்ட்ஸ்களின்’ கீச்சுக்கள், பல வண்ணங்கள். தலைமையாசிரியர் அலுவலக அறையருகே சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த, பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த, மாணவர்களின் பட்டியல் மதிப்பெண்களுடன்.  இரண்டு வருடங்களில் இதில் இடம் பெற முதல் வாய்ப்பு வரும்.   கேள்விப்பட்டிருந்த கிசுகிசுக்கள் தந்த  குறுகுறுப்பில்  தலைமையாசிரியர் அறை உள்ள தளத்திற்கு செல்லும்போது யாரோ பேசியபடி இறங்கும் ஒலி கேட்டதால் அவற்றை உறுதிப்படுத்த முடியாமல்  திரும்பி இறங்க வேண்டியிருந்தது.

இத்தனை வருடங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகளில்  ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேரம் கழித்தான். இரண்டு மாதமாக யாரும் புழங்காமல் இருந்ததால் அறைகளில் கார நெடி, இறுதி வகுப்பு நாளன்று குறிக்கப்பட்ட பட்ஸ்/ ப்ளாசம்ஸ் இன்னும் அழிக்கப்படாமல். பரீட்சைக்கு முன் சுவர்களில் இருந்து சார்ட்கள் அகற்றப்படும்போது கீழே உதிர்ந்த பசை திரிகளில் இன்னும் கோந்தின் கிறுகிறுப்பான வாசம். பல ஆசிரியர்கள், சம்பவங்கள், ஆண்டு விழா பரிசுகள் என ஆற்றுப்படுத்தும் அதே நேரத்தில் பள்ளியாண்டின் முதல் நாளில் உள்ளூர குறுகி நின்ற சில  தருணங்களை நினைவூட்டும் அறைகள். செவன்-எப்பில் இந்த ஒரு வருடமாக   பகற்கனவுகளில் மட்டும் அமர்ந்திருந்த பெஞ்சில் உட்காரும்போது ஏதோ சாதித்த அற்ப திருப்தி.  அங்கேயே கண்ணயர்ந்து படுத்து  எழும்போது கழுத்தில் வலி. வரும்  வருட வகுப்பறைக்குச் சென்றான். பொதுவாக  எப்போதும் நண்பர்களோடு அமரும் இறுதி பெஞ்சிற்கு முந்தைய டெஸ்கில் யாரோ எப்போதோ செதுக்கிய பெயர்.

வீட்டில் நுழையும்போது ‘ரெண்டு மூணு நாளா வெளிலயே சுத்திட்டிருக்கியே ஸ்கூல் தொறக்கற நேரத்துல படுத்துக்கப் போற’ என்று கேட்டார் சுந்தரி அக்கா.

‘சும்மதான்க்கா’

‘சாப்டியா, உங்கம்மா கெளம்பும்போது சொன்னங்க, ரெண்ட் நாளா காத்தால  வெச்சுட்டு போன  சாப்பாடு அப்டியே இருந்துதாமே. இன்னிக்கு இங்க சாப்டு, உருளக்கெழங்கு காரக்கொழம்பு பண்ணிருக்கேன்’

‘இலக்கா வீட்லயே சாப்டறேன்’ என்றவனை வற்புறுத்தி தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். தலைகுனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், ‘எப்பம் போல படிக்கணும்டா, கவலைப்படாத, எல்லா வீட்லயும் நடக்கறதுதான்’ என்று அக்கா சொன்னார். சோற்றை அளைந்தபடி இருப்பதை பார்த்து ‘நான் வாசல்ல ருக்கேன்’ என்று வெளியே சென்றார்.  சாப்பிட்டுப்பின் வெளியே வர, ‘ஓன் பிரெண்ட்ஸ் பின்னாலதான் இருக்காங்க’ என்றார். ‘நா இங்க கொஞ்ச நேரம்  படுத்துக்கறேன் கா’ என்று சொல்லி அங்கேயே தூங்கி  எழும்போது மணி ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது.

அம்மா  அன்று மாலை விடாப்பிடியாக அப்பாவை எழுப்பி, உடம்புக்கு என்ன, வேலைக்கு மீண்டும் எப்போது போகப் போகிறார் என்று கேட்டார். கடுகடுப்பாக அப்பா சொல்லும் பதில்களை முன்வைத்து மேலும் கேள்விகள் கேட்டு ஒரு கட்டத்தில் அம்மா அழ ஆரம்பித்தார். இனி எப்படியும் நாளைக்குள் எல்லாம் முடிந்து விடும்.

அடுத்த நாள் சண்டை இன்னும் தீவிரம் அடைந்தது. தனக்கு மரியாதை தரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கப் போவதில்லை என்ற எப்போதும் சொல்லும் காரணத்தை அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா செய்திருந்த டிபனை தட்டோடு வீசினார். அறையில் தாளித்த கடுகின் மணம், தேங்காய் பிசிறல்கள். ‘நா வேணா போய் பேசறேன், திருப்பி சேத்துப்பாங்க’ என்று சொன்ன அம்மாவை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அம்மா சுவற்றோரம் ஒண்டி அமர, டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி கையில் சுற்றிக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கி நீட்டியபடி அப்பா மிரட்டுவதை சுந்தரி அக்கா எட்டிப் பார்த்து விட்டு போனார்.  ஒரு  மணி வாக்கில் சண்டையின் அந்த அலை ஓய்ந்தபின் நாளிதழை அப்பா படிக்க ஆரம்பிக்க, இவனிடம் வந்த அம்மா ‘ராமசாமி ஸார கூட்டிட்டு வா’ என்றார்.

சின்ன மணியக்காரத் தெருவில் இருந்த மாவட்ட கல்வி அலுவலகம்,  ஒரு காலத்தில் பங்களாவாக இருந்திருக்கக்கூடும்.  கூடப்படிப்பவர்கள்  கண்ணில் பட்டுவிடக் கூடாது.  இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது உள்ளே செல்லாமல், அதிகாரிகள் உபயோகத்திற்கான வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வழியாகச் சென்று அவர் அறை ஜன்னலின் அருகே நிற்பதுதான் வழக்கம். எதிரே ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ‘மாவட்ட கல்வி அலுவலர்’ ராமசாமி, கோப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தார். உருண்டையான உடலுக்கு பொருத்தமான வட்ட முகத்தில், இரண்டுடனும் ஒத்துப்போகாத தீவிரத்தன்மை, கொஞ்சம் எல்லை மீறினாலும் விழுந்து பிடுங்கி விடுவார் என்பது போல். அம்மாவுடன் வேலை பார்க்கும் அவரைவிட பதினைந்து இருவது வயது மூத்த தோழி எல்.எல்லின் கணவர். பெரியவர்கள் சொன்னால் கணவன் கேட்பான் என்ற நம்பிக்கை இன்னும் அம்மாவிற்கு உள்ளது.

பின்னந்தலை வியர்வையில் நனைந்திருக்க, உதட்டில் விழுந்த வியர்வைத் துளியை நா வருடியது. உள்ளே இருந்தவர் சென்றபின் அடுத்து வந்தவர் இவனை கவனித்து, ராமசாமியிடம் சொல்ல, திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே சென்று அவர் முன்னே பேசாமல் நின்று ‘என்னடா’ என்று அவர் கேட்ட பின்பும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்பா திரும்ப வேலக்கு போலயா’ என்று அவர் தலை தூக்காமல் கேட்டபோது அவர் எதிரே அமர்ந்திருந்தவர் திரும்பிப் பார்த்தார். ராமசாமி சொன்னது அறைக்கு வெளியே நின்றிருப்பவர்களுக்கு கேட்டிருக்கக்கூடும். உடலில் வியர்வைச் சுரப்பு இன்னும் அதிகரித்து, அக்குளில் ஈரம் அதிகமாகியபடியே இருந்தது. காதின் பின்புறத்தில் உஷ்ணம். ‘நா வரேன்னு சொல்லு’ என்றார். வெளியே வரும்போது அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை கூசச்செய்தது.

ஆள் நடமாட்டமில்லாத தெரு வெயிலையும் மீறி கொஞ்சம் அமைதியளித்தது.  தொடை இடுக்குகளில் வியர்வை வழிந்து கால்கள் உரசும்போது உணரும் ஈரப் பிசுபிசுப்பு அசூயையாக இருந்ததால் கால்களைச் சற்று அகட்டி  நடக்க வேண்டியிருந்தது. வீட்டில் கேள்விகள், மன்றாடல், கோபம் என அதே சுழற்சியில் சண்டை. சொன்னபடி கொஞ்ச நேரம் கழித்து ராமசாமி வந்தார். அப்பா முகம் கொடுத்துப் பேசாதது வழக்கம்தான் என்பதால் நாற்காலியில் அமர்ந்தபடி எப்போதும் போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்பா ‘நீங்க இதுல்லாம் இன்டெர்பியர் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டார். ராமசாமியின்  உடலசைவுகளில் இன்னும் இறுக்கம். ‘இனி என்ன வரச் சொல்லாதம்மா’ என்று அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ‘நீ நல்லா படிக்கறத விட்றாத’ என்று போகும்போது, சொன்னபோது கண்கள் தன்னிச்சையாக விரிந்து இமைத்தன. வீட்டினுள் கவிந்திருந்த அமைதியின் பாரத்தை தாங்க முடியவில்லை. பின்புறம் சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் வியர்வையோடு  கண்ணீரும் சேர்ந்து கொண்டது. சத்தமிடாமல் அழுவது பழக்கம்தான். உள்ளே இறுதிகட்டச் சண்டை நடந்து கொண்டிருக்கும்.

நான்கு  மணி அளவில் இவனருகே  வந்த அம்மா ‘வந்து காப்பி குடிடா, மத்தியானமே சாப்டல’ என்றார். முகம் காலையில் இருந்ததை விட திடமாக இருந்தது.  உள்ளே அப்பாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார்.  மாலை உண்ணும்போது அம்மாவும் அப்பாவும் சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள். வேலைக்குச் செல்வதைப் பற்றிய பேச்சு எழவில்லை. அன்றிரவு வீட்டில் டிவியும், ரேடியோவும் ஒலித்தது. அடுத்த நாள் காலை, அன்று சமைக்க வேண்டிய உணவைப் பற்றி பேசிக் கொண்டார்கள். வீடு மெல்ல இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி தொடரில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் என அம்மாவிற்கு மொழிபெயர்த்தார் அப்பா. ‘நாளக்கு ரெடியா’ என அப்பா கேட்க, தலையாட்டினான். ‘புக்ஸ்க்கு கவர் போட்டு கொடுத்துடுங்களேன், நீங்கதான் க்ளீனா பண்ணுவீங்க’ என்று அம்மா சொன்னதில் தெரிந்த செயற்கையான உற்சாகம் இவனுக்கு புதிதல்ல.

திங்கள் காலை வழக்கம் போல் எழுந்த அப்பா காய்கறி நறுக்குவது, இவனுக்கு மதிய உணவை எடுத்து வைப்பது போன்ற சின்ன உதவிகளை அம்மாவிற்குச் செய்தார். ‘சாப்டாம இருந்துராதீங்க’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டு அம்மா கிளம்பியபின்  தினசரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பதினொன்று ஆகிவிடும். இன்றிலிருந்து பள்ளிக்கு ‘பேண்ட்’. தையல் அளவைக் கொடுக்கும்போதும் தைத்த உடையை வாங்கும்போதும் இருந்த மகிழ்ச்சி இப்போது  இல்லை. மூட்டையை தூக்கிக் கொண்டு நடை.

பள்ளி மீண்டும் உயிர்பெற்றிருந்தது. துள்ளும் வெள்ளை, சிவப்பு இரட்டைச் சடைகள், பல விதங்களில் கட்டப்பட்ட டைகள். புதிய சீருடைகளைவிட அதிகமாக   சற்றே சாயம் போன சென்ற வருடத்திய உடைகள். முட்டிவரை நீளும், ஆடுசதை வரை  மூடும், நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே வரும், எனப் பலவித காலுறைகள், அவற்றுக்கு இணையான தரத்தில் ஷூக்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நண்பர்களின் உற்சாக வரவேற்பு. பசங்களிடம் புதிதாக பேண்ட் போட்ட சந்தோஷம். கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்கள். இந்த ஆண்டு பாடமெடுக்கப் போகும் ஆசிரியர்கள் யாரென்று ட்யூஷன் செல்லும் ஓரிரு மாணவர்களை கேட்டான். விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும்  மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில்  அச்சத்தை தள்ளி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு இவர்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துள்ள ஆசிரியர்கள். இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் புதியவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின்  ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர இவன் முறை. எழுந்து தன் பெயரைச் சொன்னான்.

‘பாதர் என்ன பண்றார்?”

பற்றுகை

காலத்துகள்

அந்த வருட சுதந்திர தின  விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில்  பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ்  தேர்வு செய்து கொண்டிருந்தார்.  எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம் ஆடும் உமா, நாடகத்தில் நடிப்பவர்கள் என எப்போதும் போல் சிலர் இந்த வருடமும் பெயர் கொடுக்க, விருப்பமில்லாத  வேறு சிலர் வழக்கம் போல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான நேரங்களில் பங்கு பெறுபவர்களின் இறுதி பட்டியல் தயாராகும்வரை  மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தோடு தன் மீது கவனம் விழாதவாறு அமர்ந்திருந்தவன் வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்க, இம்முறையும் பிழைத்து விட்டோம் என்று தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போது  ”இன்ட்ரவெல்ல ஸ்டாப்  ரூமுக்கு வாடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராவ்.

ஆசிரியர் அறைக்குள்  நுழைந்தவனிடம் ‘கண்ணன் ஒங்க தாத்தா பத்தி சொன்னான்டா’ என்று ஆரம்பித்தார். இவன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ‘ஆர்மில இருந்தார்ல?’ என்று கேட்டார். ‘எஸ் ஸார்’, என்றவனிடம், ‘ப்ரீடம் ஸ்ட்ரகுள்லகூட பார்டிசிபேட் பண்ணிருக்கார்ல’, என்று மீண்டும் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். ‘என்னடா, கண்ணன் அப்படித்தானே சொன்னான்’, என்றார் ராவ்.  .’இல்ல ஸார்…’ என்று முனகியவனிடம்  ‘என்னடா இல்ல ஸார், அப்போ  அவர் ப்ரீடம் பைட்டர் இல்லையா, கண்ணன் சும்மா சொன்னான்னா?’என்று கருணாகரன் ஸார் கேட்க, ‘அப்டி இல்ல ஸார்’ என்று இழுத்தான். ‘இந்த வருஷம் இன்டிபென்டென்ஸ் டே பங்க்ஷல யாராவது ப்ரீடம் பைட்டர சீப் கெஸ்ட்டா போடலாம்னு ஐடியா இருக்கு’ என்ற ராவிடம்,  ‘தாத்தா பேசுவாரான்னு தெரியாது ஸார்,’ என்று முனகினான். ‘என்னடா அலட்ற?’ என்று கருணாகரன் ஸார் அடிப்பதுபோல் போலியாக கையோங்கியபடி வந்தார்.  ‘ஸார், அப்டிலாம் இல்ல ஸார்…” என்று அவன் மீண்டும் முனகவும், ‘சரி போடா’, என்று சலித்த குரலில்  ராவ் சொன்னார்.

சென்ற மாதம் நடந்த  சாதாரண நிகழ்வுதான்.  தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த அந்த பதினைந்து பதினாறு வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் சேர்க்கப்படாதது குறித்தும், அடுத்த வரவிருந்த பாகிஸ்தானுடனான தொடரிலாவது சேர்க்கப்படுவானா என்பது குறித்தும் மாலை வீட்டிற்கு வெளியே சந்துருவுடனும் கண்ணனுடனும் பேசிக்கொண்டிருந்தான். இரானி ட்ரோபியில் அவன் அடித்திருந்த சதத்தை முன்வைத்து  இவனும் சந்துருவும் அவன் சேர்க்கப்பட வேண்டுமென்ற கட்சியில் இருந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை அந்தச் சிறுவனால் எதிர்கொள்ள முடியாதென்பது கண்ணனின் வாதம். ‘அவன் இண்டர்வ்யு வந்துதே, சண்டே  அமர்நாத் கிரிக்கெட் டிவி ப்ரோக்ராம் பாத்திருக்கியா, வெஸ்ட் இண்டீஸ் பௌலர்ஸ பேஸ் பண்ண ரெடின்னு தைரியமா சொன்னான், பௌனஸ்னால பால் ஈஸியா பாட்க்கு வரும்னான்’.

‘பாக்கலாம்டா, பர்ஸ்ட் செலக்ட் ஆகட்டும்,  அவன பத்தி எழுதிருக்கறத படிச்சுட்டு எங்கப்பா ஒன்னோட மூணு நாலு வயசுதான் பெரியவன், எவ்வளவு அச்சீவ் பண்றான் பாருங்கறார்’, என்றான் கண்ணன். அவனுடைய தந்தை மூவருடைய க்ளாஸ் டீச்சராகவும் இருப்பதால், அவன் முன்  அவர் குறித்த விமர்சனங்கள் குறித்து  ஜாக்கிரதையாக, அவருடைய பட்டப் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்துதான், இருப்பார்கள். எனவே பொத்தாம்பொதுவாக கண்ணனுக்கு ஆசுவாசம் அளிக்குமாறு பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த இவன்  தாத்தா,  ‘கோந்தே உள்ள போய் பேசு, பனியாருக்கு பாரு, இல்லன்னா மப்ளர் கட்டிக்கோ,’ என்று  சொல்லியபடி  இவன் தோளைத் தொட்டு அணைக்கவும், அவன்  விலகி உள்ளூர நெளிந்தான். இவனுடைய அசௌகர்யத்தை கவனித்த கண்ணன், ‘என்னடா கோந்தேங்கராறு, நைட் சாப்பாடு தாத்தாதான் வூட்டி உடுவராடா ‘ என்று கிண்டலாகக்  கேட்கவும், ‘இவங்க பாட்டி இவன கூப்டறது உனக்கு தெரியாதுல்ல, அது இத விட சூப்பராருக்கும், என்னடா சொல்லட்டுமாடா,’ என்று ராகத்துடன் ‘கிக்.. கி… கி ..’ என்று  அப்பெயரைச் சொல்ல ஆரம்பித்த  சந்துருவை, ‘சும்மாருங்கடா, உள்ள போலாம்’ என்று இடைமறித்து  அழைத்துச் சென்றான்.

‘இந்த தாத்தாதான ஆர்மில இருந்தார்னு சொன்ன?’ என்று கண்ணன்  இவனிடம் கேட்டான். முழங்கை வரை நீளும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, இன்னும் ஆக்கிரமிக்க மிகக் குறைவான இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்த வழுக்கை, மழிக்கப்பட்ட மீசை, அகன்ற நெற்றியில் விபூதிப் பட்டை, முகத்தை நிறைத்திருக்கும் மென்மை எல்லாமே இவனுக்கேகூட அவ்வப்போது அந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆமாண்டா தோ வரேன் இரு,’ என்றவன், உள்ளறைக்குச் சென்று தாத்தா ஊரில் தன் வீட்டில் வைத்திருக்காமல் இவர்கள் வீட்டில் ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்த பதக்கங்களை எடுத்து வந்தான். அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், ‘என்னடா இந்த மெடல் வித்தியாசமா இருக்கு,’ என்று சிவப்பு வெள்ளை நீல நிறக் கலவையில்  சிலுவை வடிவில் நெய்யப்பட்ட  துணி பதிக்கப்பட்டிருந்த பதக்கத்தைப் பற்றி கேட்க, இவன்  அவசரமாக, ‘தாத்தா ஆர்மில சேர்றதுக்கு முன்னாடி ப்ரீடம் ஸ்ட்ரகிள்ல பார்டிசிபேட் பண்ணிருக்கார்டா’ என்று பொய் சொல்லி விட்டான்.

இவன்  தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு  இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்  சிப்பாயாக சேர்ந்ததும்,  உலகப் போரின்போது  அவர் மத்திய கிழக்கின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டதும், பின் சுதந்திர இந்திய ராணுவத்தில் பணியாற்றி கேப்டனாக ஓய்வு பெற்றதும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் பற்றிய சிறு குறிப்புடன் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்திய பூந்தளிர் இதழில் பார்த்ததிலிருந்து அது குறித்த ஒரு சிறிய ஏக்கம் மட்டும் உருவாகி இருந்தது.  அதனால்தான் இவன் அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் கண்ணன் தொடர்ந்து கேட்ட கேள்விகளை சமாளிப்பது பெரும் பாடாகி விட்டது. அவன்தான் தன் தந்தையிடம்  உளறி வைத்திருக்க வேண்டும்.

தப்பித்த  உணர்வோடு வெளியே வந்து  தண்ணீர் குடிக்கும்போது இடைவேளை முடிவிற்கான  மணி அடித்தது.  இந்த வகுப்பு  அடிக்க அஞ்சாத  மார்கரெட் மிஸ்ஸுடையது என்பதால் வேகமாக நடக்க ஆரம்பித்தவன்,  வழியில் பெண் ஆசிரியர்களின் அறையில் இருந்து திருத்தப்பட்ட ரெகார்ட் நோட்டுக்களுடன் வந்து கொண்டிருந்த உமாவை  எப்போதும் போல்  கள்ளப் பார்வை பார்த்தவன் அவள் பார்த்ததும் தலையை திருப்பி கடந்து செல்ல முயன்றான்.

‘ஒங்க தாத்தா ப்ரீடம் பைட்டரா?’ இவனுடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை மற்றவர்கள் மூலமாக பெற்று பார்வையிடும், ஆனால்  இதுவரை நேரில் ஒரு வார்த்தைகூட இவனிடம் பேசியிராத உமா இப்போது இவனிடம் வலிய வந்து பேசுகிறாள். மையமாக தலையை ஆட்டி வைத்தான்.

 ‘அவர் பங்க்ஷனுக்கு வருவாரா’

‘தெரியல, சாருக்கு இப்போ வேற ஐடியா இருக்குன்னு நெனக்கறேன்’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏதாவது பேசலாம் என்று திரும்பியவன் கண்ணில் பள்ளி மேடையின் முன் இருந்த கொடிக்கம்பம் கண்ணில்பட, எதுவும் சொல்லாமல்  மௌனமாக நடந்த வகுப்பை  நெருங்கவும் சற்று பின்தங்கினான். உமா வகுப்பறைக்குள் போனபின் கொஞ்சம் பிந்திச் சென்று, “ஸார் பாக்கச் சொல்லிருந்தார்”, என்று சொல்லியதை  சற்று சந்தேகத்தோடுதான் மிஸ் ஏற்றுக்கொண்டார். தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான்.  ‘என்ன தம்பி  பின்னாடியே  வர’, ‘ப்ராடு ஒண்ணாத்தான் வந்த்ருப்பான், ஓட்டுவோம்னு தனியா வந்தமாறி வரான்,’ போன்ற சீண்டல்களை  எப்போதும் போல்  உள்ளூர  ரசிக்க முடியவில்லை.

ராவ் இவன்  தெருவுக்கு அடுத்த தெருவில் வசிப்பதையும் அவருக்கு இவன்  வீடு தெரியுமென்பதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பி விட்டதாக எண்ணியது  தவறு. அடுத்த நாளான சனிக்கிழமை காலை பத்து மணி அளவில், ‘கோந்தே, உன் க்ளாஸ்  ஸார் வந்திருக்கார்டா,’ என தாத்தாவின் குரல் கேட்டவுடனேயே எந்த ஸார் என்று அவர் சொல்லாமலேயே புரிந்தது. தயங்கியபடி வெளியே வந்து எதுவும் சொல்லாமல் நின்றான். அதற்குள் உள்ளே வந்தமர்ந்திருந்த ராவ் ‘உங்களத்தான் பாக்க வந்தேன் ஸார்,’ என்று  தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ‘இவன் எதாவது சொன்னானா’ என்று இவனைச் சுட்டி கேட்டார். தாத்தா எதுவும் புரியாமல் இவனைப் பார்க்க, ‘ பிரச்சனைலாம் ஒண்ணுல ஸார், நெக்ஸ்ட்  சாடர்டே ஈவனிங் இண்டிபென்டென்ஸ் டே ப்ரோக்ராம்ஸ் வச்சிருக்கோம், அதுக்கு உங்கள மாதிரி  ஒருத்தர் சீப் கெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படறோம்,  இவன் பிரெண்ட் கண்ணன்தான் உங்களைப் பத்தி சொன்னான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘என்ன கோந்தே’ என்று இவனிடம் கேட்டவருக்கு, ‘அதான், ஆர்மில இருந்திருக்கீங்க, நம்ம ப்ரீடம் ஸ்ட்ரக்குள்ல வேற கலந்துட்ட்ரிக்கீங்க, இதபத்திலாம் கண்ணன்ட்ட சொல்லிருக்கான்’ என்று ராவே பதிலளித்தார். இவன் இருவரிடமிருந்தும்  இருந்து பார்வையை விலக்கி தலையை குனிந்து கொண்டான்.

‘இவன்ட்ட சொல்லி வுடுங்க ஸார், இன்னிக்குள்ள சொன்னீங்கன்னா நாங்க ப்ளான் பண்ண வசதியா இருக்கும்’ என்று ராவ் கிளம்பியதும் இவனும் வெளியே ஓடி மதிய உணவிற்குதான் வந்தான். வீட்டுப்பாடம் செய்வதாக மாலை வரை யாருடனும் பேசாமல் ஓட்டினான். மாலை நடைக்கு இவனும் வருகிறானா என்று கேட்ட தாத்தா, வீட்டுப்பாடம் இன்னும் பாக்கி உள்ளது என்று கூறியவனிடம், ‘ஸார்ட்ட நான் வரேன்னு சொல்லிட்றையா கோந்தே’ சென்று சொல்லிச் சென்றார். இரவுணவின்போது ‘என்னடா  தாத்தா பத்தி ஸ்கூல்ல பெரிசா சொல்லி வெச்சுருக்க’ என்ற அம்மாவிடம்,  ‘தாத்தாதானே அவனுக்கு ரொம்ப  இஷ்டம்,’ என்றார் தாத்தி. ‘தாத்தா ஆர்மில இருந்தத பத்திதாம்மா பேசிட்டிருந்தேன், கண்ணன் அவங்கப்பாட்ட ஏதோ  சொல்லிட்டான் போலிருக்கு,’ என்று சொல்லிவிட்டு தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவர்   இவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். ‘இட்ஸ் ஆக்ட்சுயலி எ குட் ஐடியா, பசங்களுக்கு ஆர்மி பத்தி தெரியணும். நீ பிரிட்டிஷ்  ஆர்மி எக்ஸ்பீரியென்ஸ் பத்திகூட சொல்லலாம்லபா’ என்று தாத்தாவிடம் அப்பா சொல்ல, இருவரும் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்.

ஊருக்குச் செல்லும்போது கோவிலுக்கு அழைத்துச் சென்று இவன் அடம் பிடித்ததால் கோவில் யானைக்கு ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொடுத்த, கணபதி ஹோட்டலில் இட்லியும் வடையும் வாங்கிக் கொடுத்த, இவனுக்குப் மிகவும்  பிடித்தமான ‘ஆக்‌ஷன்’  நடிகர் மூன்று வேடங்களில் -அதிலும் காவல்துறை அதிகாரியாக மிக ஆக்ரோஷமாக- நடித்து வெளிவந்த  அதிரடி   திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இவனுடைய பிடிவாதத்தால் அந்த வயதிலும் அவ்வளவு கூட்டத்தில் சென்று சிக்கி, போலீஸ்காரரின் தடியடியையும் தாண்டி , ‘ டிக்கெட் கெடச்சாச்சு கோந்தே’ என்று சிரித்தபடி வெளியில் வந்த தாத்தா இவன் சொல்லிய பொய்யை வெளிப்படுத்தாதது இவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றாலும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத மாலை வேளையொன்றில் ‘என்ன பேசப் போற தாத்தா,’ என்று கேட்டவனிடம் ‘பாத்துக்கலாம் கோந்தே ‘என்றவர் பின்,  ‘கோந்தே… உங்க ஸார் நல்லா பீடா போடுவாரா’ என்று கேட்டார். ‘ஆமா தாத்தா, வெத்தல பாக் பான் பராக்க்னு அவர பசங்க கூப்டுவாங்க,’ என்று இவன் சொல்லவும் சிரித்தவர், மற்ற ஆசிரியர்களுக்கு இவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர்கள் குறித்து கேட்டுக்கொண்டார்.

விழா நாள் வரை இடைப்பட்ட பத்து பதினைந்து நாட்களை தாத்தா ஸ்கூலுக்கு வருவது பற்றி எதுவும் பேசாமலே ஒருவாறு கழித்தான்.   இப்போதெல்லாம் மாலை நடைக்கு இவனும் வருகிறானா என தாத்தா கேட்பதில்லை. இவனுக்கு  ‘புக் கிரிக்கெட்டில்’, ‘முதுகு பங்க்சரில்’ ஆர்வம் குறைந்தது. வகுப்பில் உமாவைக் கள்ளத்தனமாக பார்க்கத் தோன்றவில்லை.  தமிழ் ஐயாவிடம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் அடி வாங்காமல் இருந்தவனை ‘என்னடா திருந்திட்டியா’என்று சந்துரு கிண்டல் செய்தான்.

பதின்மூன்றாம் தேதி காலை உணவை முழுதும் சாப்பிடாமலேயே எழுந்தவனைப் பார்த்து ‘என்னமோ இவன் சீப் கெஸ்ட்டா போற மாதிரி டென்ஷனா இருக்கான்,’ என்று சொன்னார் அம்மா.  இந்த மாதிரியான விழா நாட்களில் ஒன்றிரண்டு வகுப்புக்கள் நடக்காது என்பதால்  மதியத்திலிருந்து வகுப்பில் பரவசமான சூழல்.  ‘டேய் கொஞ்சதான் சந்தோஷமா இரேன், என்னமோ நீ ஸ்டேஜ்ல பேசப்போற மாதரி இருக்க, என்னாச்சு ஒனக்கு’ என்று கேட்டான் சந்துரு.  மதியம் இரண்டாவது  பீரியட்  நடந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களை அமர வைப்பதற்கான அழைப்பு வர, எங்கும் ஒரே கூச்சல்.  மாணவர்கள் மேடையரங்கின் முன்னே இருந்த மைதானத்தில் குழுமி அமர  வைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தடியில் வெளியேறி விடலாம் என்றால் கேட் பூட்டப்பட்டிருந்தது. தாத்தா வந்திருப்பாரா என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனை  ராவ் தேடுகிறார் என்று இவன் வகுப்பு மாணவனொருவன் சொல்ல, மேடையின் பின்புறத்திற்கு சென்றான் . ‘தாத்தாவா பாத்துக்காம என்னடா அங்க ஒக்காந்திருக்க’ என்றார் ராவ்.

மேடையின்  பின்புறம்தான் தலைமையாசிரியர் அறை. தாத்தா வந்தவுடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு ப்ரதருடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த வகுப்பறைகளில் வழக்கம் போல் நேருவும், பாரதியும் காணக் கிடைத்தார்கள். சாதாரண பள்ளிச் சீருடையில் மிக அழகாக தெரியும் உமா,  மலையாள பாணி சிவப்பு வெள்ளை  உடை மற்றும் கொண்டையுடன்  -பல மாநில உடைகளை அணிந்த பெண்கள் நடனத்தின் அங்கமாக-  பார்ப்பதற்குச் சகிக்காமல் வெளியே  நின்றிருந்தாள்.  இவனைக் கண்டதும், ‘தாத்தா வந்துட்டாரா?’ என்று அருகில் வந்து கேட்டாள்.

‘வெள்ளாவி ரூம்ல,’ என்றதும் எழுந்த சிரிப்பை மறைத்தபடி  அறையினுள்ளே எட்டி  பார்த்தவள், ‘ஒன்ன மாதிரியே இருக்கார்’. என்றாள்

‘இல்ல நான்ல அவர மாதரி இருக்கேன்’ என்ற இவன் சொன்னதற்கு ‘அப்போ உனக்கும்  அவ்ளோ வயசாயிடுச்சுங்கறியா’ என்று  மீண்டும் சிரித்தபடி பதிலளித்தவள்,  ‘பங்க்ஷன் முடிஞ்சதும்  தாத்தாட்ட  பேசப்போறேன்’  என்று கேட்டு இவனுடைய சந்தோஷத்தை வடியச் செய்தாள். உரையாடலை நீட்டிக்கும்  மனநிலை போனது.  அவள் மீண்டும் உள்ளே செல்வதை ஆற்றாமையுடன் பார்த்தவன்  தலைமையாசிரியர் அறை அருகே கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.  தாத்தாவும் வெள்ளாவியும்  சிரித்தபடி  பேசிக்கொண்டிருப்பதை அதற்கு மேல்  பார்க்க முடியாது  திரும்பி வந்து  நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.

 விழா நிகழ்வுகளின்போது அவை குறித்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் வழக்கமான  விமர்சனங்களில் இவனுடைய பங்களிப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்தது.  நிகழ்ச்சிகள் முடிந்து,  பரிசுகள் வழங்கியபின் தன்னுடைய அனுபவங்கள் என்பதாக இல்லாமல் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற  வழமையான, ஆனால்  சுருக்கமான உரையை நிகழ்த்தினார் தாத்தா.

எல்லாம் முடிந்து  அனைவரும் கலைய ஆரம்பிக்க, இவன் காருக்காக தாத்தாவுடன் காத்திருந்தான். ‘ஒங்கள மாதரி ஒர்த்தர் வந்தது பசங்களுக்கு ப்ளெஸ்ஸிங் மாதிரி’ என்று உபசாரமாய் ராவ் சொன்னது அசூயையாக இருந்தது. வேறெங்கோ பார்வையை திருப்பியவன்  தாத்தா எதுவும் பதில்  சொல்லாததால் அவரை நோக்கினான். அவர் கொடிக்கம்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவன் வகுப்பு மாணவர்கள்  சிலர் அவருடன்  பேசும் ஆவலில் அருகில் வந்தார்கள்.  உமா இல்லை, உடை மாற்றிக் கொண்டிருப்பாளாக இருக்கும், அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான்.  வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, பொதுப்படையான சில பேச்சுக்கள். சுதந்திர போராட்டம் பற்றிய கேள்விகளை லாகவமாக தவிர்த்த  தாத்தா பசங்களின் மத்தியில் சற்றே உற்சாகமாகிவிட்டது போலிருந்தது. ‘தாத்தா, உங்க சொந்த ஊர் எது?’ என்று யாரோ கேட்க, ‘பழுவூர்’ என்றவரிடம்  ‘ஒங்க வீட்ல நீங்க சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலையா’ என்று இன்னொரு கேள்வி. சில நொடிகள் எதுவும் பேசாமல்  இருந்த தாத்தா ஏதோ சொல்ல ஆரம்பிக்க கார் தயாராக இருப்பதாக ராவ் வந்து சொன்னதும் தப்பித்தால் போதும் என்று தாத்தாவுடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை. விழா பற்றி தாத்திக்கு தாத்தா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். பின்  தன் வழக்கமான  மாலை நேர நடைக்கு தாத்தா கிளம்பினார். அன்றைய நிகழ்வுகளை  மனதினுள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே சென்று  தாத்தியிடம், ‘தாத்தாவும் பழுவூர், ஓன் ஊர்தானா தாத்தி’ என்று கேட்க, ‘ஆமா, அடுத்த தெருதான் ‘ என்று மட்டும்  சொல்லிவிட்டு நிறுத்தி விட்டார்.  வேலை முடிந்து முதலில் வந்த அம்மாவிற்கும்  பின் அப்பாவிற்கும்  மீண்டும் விழா பற்றி  விவரிக்கச் செய்து, ‘அத வுட்டுட்டியே’ என  இவன் பேச்சுவாக்கில் தவற விடும் விஷயங்களை  நினைவூட்டியபடி தாத்தியும்  இவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து  போர்ஷனின் பின்புற சுவற்றின்  மீது அமர்ந்து  காலிமனையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருள் சூழ ஆரம்பிப்பதை கவனித்தபடி இருந்தவன் வெளியே செல்ல எழுந்தான். வீட்டின் இறுதியில் உள்ள அவர்களின் போர்ஷனில் இருந்து வெளியே வர  இருள் நிறைந்த சந்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதை இப்போது பொருட்படுத்தாமல் ஓடிக் கடந்து தெருவிற்கு வந்தான்.

முதலில் நாடார் கடைக்குச் சென்று, ‘தாத்தா வந்தாரா நாடார்?’ என்று  கேட்க, ‘பழம் வாங்கிட்டு  இப்பதான் மேன் கெளம்பினாரு, என்ன மேன் தாத்தாவோட இப்பெல்லாம் வர்ரதுல்ல, ரொம்ப பிஸியோ?’ என்று சொன்ன நாடாரிடம், ‘அதெல்லாம்ல, வரேன் நாடார்,’ என்று கிளம்பினான். தாத்தா கோவில் வழியாக சுற்றுப் பாதையில் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்து  ராமர் கோவில் மேட்டின் மீது ஏறி வலதுபுறம் திரும்பி கோவில் குளத்தெரு முனையில் நின்று கவனித்தான். விளக்குகள் இல்லாத, மரங்கள் அடர்ந்திருந்த இடம். இவன் நின்றிருந்த தெருமுனையில் இருந்த வெளிச்சத்தில் குளக்கரை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மங்கலாகத் தெரிந்தார்கள். சற்றே கூன் போட்டிருந்த, கையில் சிறு பை வைத்திருந்தது போலிருந்த உருவத்தை கண்டு கொண்டவன், இருளினுள் நுழைந்து அதன் அருகே சென்றான்.

சிதிலமடைந்திருந்த அந்த வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சேட்டின் அருகில் வழக்கம் போல் வாழைப்பழங்களை  வைத்துக் கொண்டிருந்தவர்  யாரோ அருகில் வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.  எதுவும் சொல்லவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருளுக்கு இவன் கண்கள் பழக, தாத்தாவை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பின் ‘தாங்க்ஸ், ஸாரி தாத்தா,’ என்று இவன் சொல்லவும் தோளில் கைவைத்து அழுத்தினார்.  ஒரு பக்கம் சலனமில்லாத குளம், மறு புறம் நீண்ட விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆலமரம் என  வழக்கமாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் இடத்தை இயல்பாக கடந்தான். சின்ன மேடு ஏறி இறங்கி தெருவுக்குள் நுழைந்தார்கள். விளக்குகளின் ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டும் குறுகியும் ஒன்றியும் பிரிந்தும் பின்தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தாத்தாவின் கையை தன்னிச்சையாக  பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

முகிழ்தல்

– காலத்துகள்-

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை சுந்தரி அக்காவிடம் கொடுக்கும்போது அவனுக்குச்  சற்று கூச்சமாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல சைக்கிளை எடுத்தான். கோகுலபுரத்திற்கு குடி வந்து ஒரு வருடமாகியும் அந்த இடம் அவனுக்கு அன்னியமாகவே இருந்தது. அந்த ஏரியாவில் இருந்த வீடுகளும் மனிதர்களும்  இன்னும் அவன்  மனதில் பதியவில்லை.   புதிய இடத்தில் உண்டாகும் அசௌகர்ய உணர்வுடன் எப்போதும் போல் சற்று வேகமாகவே  மிதித்தான்.

கோகுலபுரத்தைத் தாண்டி -அவன் பத்தாண்டுகளுக்கு மேலாக, செங்கல்பட்டுக்கு வந்ததிலிருந்து வசித்திருந்த-, மணியக்காரத்  தெருவிற்குள் நுழைந்தவுடன் சைக்கிளின் வேகம் குறைந்தது.  ஒரு முறைகூட பேசியதில்லை என்றாலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்ததால் பழகியவை போல் உணரச்செய்யும் முகங்கள், வீடுகள், பரிச்சயமான கடைகள். மதிய நேரமென்பதால் கூட்டம் இல்லாத கடையில் நாடார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். படித்தபின் எடைக்கு போடப்பட்ட  ஏதேனும் காமிக் புத்தகமாக இருக்கும். இவனும் நாடார் கடையில் அப்படி பல புத்தங்கங்கள் படித்தவன்தான் (பழைய கல்கி பத்திரிக்கைகளில் இருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட்டு, அட்டை பிய்ந்து போயிருந்த சிவகாமியின் சபதத்தின் அனைத்து பாகங்களையும் ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் அங்கு வாங்கி இருக்கிறான்).

கோகுலபுரத்திற்கு குடி வந்த புதிதில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால், மணியக்காரத் தெருவுக்குத்தான் வருவான், ஆனால் நடைமுறைக்கு அது சரி வராது என்பது விரைவில் தெரிய அங்கிருந்த நாடார் கடைக்கே செல்ல ஆரம்பித்தான். ஆனால் இவனுக்கு நாடார் என்றால்  மணியக்காரர் தெருவில் கடை வைத்திருப்பவர்தான் என்றாகி விட்டது, கோகுலபுர நாடாரிடம்   ‘இத தாங்க, அது இருக்கா’ என்று பொதுவாகத்தான்  கேட்பான்.

இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட ‘சைக்கிள் ராஜ்’  கடையும்  அதற்கடுத்து மீராவின் வீடும் தூரத்தில் தெரிந்தன. காற்றடிக்கும் சாக்கில் அங்கு வண்டியை நிறுத்தலாமா என்று யோசித்தவன், மனதினுள் சிரித்தவாறே அந்த எண்ணத்தையும், மீராவின் வீட்டையும் கடந்து சென்றான். விடுமுறை நாளொன்றின் விடிகாலையில் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்க, வீட்டின் வெளியே இன்னும் தூக்கம் மிச்சமிருக்கிற கண்களுடன் வாடிய மலர்ச்சரத்தை  தலையிலிருந்து எடுத்தவாறு மீராவின் அம்மா கோலம் போடுவதைப் பார்த்தபடி இருந்ததும், அன்று அவள் அணிந்திருந்த மேலாடையின் கைப்பக்கம் சிறியதாக இருந்ததால், வெளிச்சம் படாத கையின் பகுதி அவளின் மாநிறத்திற்கு நேர்மாறாக வெண்மையாக இருந்ததும் நினைவிற்கு வர சைக்கிளுக்கு அழுத்தம் கொடுத்தான்.

உமாவின் வீடு மணியக்காரர் தெருவிற்கு மறுபுறம் இரண்டொரு தெருக்கள் தள்ளி இருந்ததாக கேள்வி. அந்த வீட்டையும் தாண்டி அவன் சென்றிருந்தாலும் அவளை அங்கு பார்த்ததில்லை. சுஜாதா வீடு எங்கு என்று இதுவரை அவன் யோசித்ததில்லை, யாரிடமாவது சந்தேகம் எழாதவாறு  கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே செட்டித் தெருவினுள் நுழைந்தான். மதிய நேர புழுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகளின்கீழ் கடைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். சில கடைகளில் அப்போதும் கூட்டமிருந்தது. அரிசிக் கடையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த மூட்டைகளில் இருந்து தூசும், முடை நாற்றமும் முகத்தில் அறைந்தன. ஓடியே பார்த்திராத மணிக்கூண்டை கடந்தான். அந்த இடத்தில்  முன்பிருந்த  குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டி வாடகைக்கு பிடித்து  அதில்  வைக்கோல் மணத்துடன்   பயணம் செய்திருக்கிறான்.

பரீட்சை இன்னும் முடியாததால் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே பெரிய கூட்டம் நின்றிருந்தது. தன் வகுப்பு பசங்களுடன் சேர்ந்து, முழு கவனமும் இல்லாமல் வழக்கமான அரட்டையில் கலந்து கொண்டான். சைக்கிளில் வந்த பெண்கள் பள்ளியை நெருங்கியதும் பெடல் மிதிப்பதை நிறுத்தி,   வண்டியின் வேகத்தைக் குறைய விட்டு சட்டென இறங்கி, லாகவமாக காலை எடுத்துக் கொள்வதில்  உள்ள நளினத்தை எப்போதும் போல் ஓரக்கண்ணால் ரசித்தான்.   பரீட்சை எழுதியவர்கள்  வெளியேறியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட,  வண்டி நிறுத்தும் இடத்தில்  எப்போதும் போல் நெருக்கடி. அதையொட்டி  இருந்த வகுப்புக்களில் மாணவர்கள் உள்ளே சென்று அமர  ஆரம்பித்திருந்தனர். அவன் படித்த ஒன்பதாம் வகுப்பறையை தாண்டும்போது  ஜன்னல் வழியே  வகுப்பினுள் சில நொடிகள்  பார்த்துக் கொண்டிருந்தவன், கூட்டத்தால் முன்னே உந்தப்பட்டான்.

பள்ளியாண்டு இறுதியில் மதிய நேரத்தில் வெளியே வர அனுமதி தருவதில்லை என்பதால் பிரதான வாயிலினுள் நுழைந்தவுடன் பள்ளி வெறிச்சோடி இருப்பது போல் முதற் கணம் தோன்றினாலும், அனைத்து வகுப்புகளிலிருந்தும் பேச்சொலி ஒன்றிணைந்து ஆண், பெண், மெல்லிய, கனத்த  குரல்  போன்ற தனித்தன்மைகளை இழந்து அடர்த்தியான ஒற்றை ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது பள்ளி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதி செய்தது. வகுப்பு அடைந்தவுடன் அவ்வொலி இழைகளாக பிரிந்ததைப் போல அக்குரல்களில் சிலவற்றை அடையாளம் காண முடிந்தது. சுஜாதா  வந்து விட்டாள், ஓரக்கண்ணால் மீராவும் வந்திருப்பதை கவனித்தான். புத்தகப்பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றவன், பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்தை நோக்கியபடி நின்றான்.  யாருமில்லாத வெட்டவெளியாக இருந்த மைதானம்  வெளிச்சம் நிறைந்திருந்தது. மைதானத்தின் ஓரத்தில்    சைக்கிளை நிறுத்திவிட்டுச் ஒளியை ஊடுருவி வருவது போல் பெண்கள் சிலர் நடந்து வருவதைக் கண்கள் கூச இடுக்கிக் கொண்டு பார்த்தான். முதல் வகுப்புக்கான மணி அடிக்க இவன் வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சில மாணவிகளையும் அவர்கள் சூடிக்கொண்டிருந்த மல்லியின் மணத்தையும் கடந்தான்.

பாடத்தில் எந்த கவனமும் இல்லை.  மின்விசிறி இல்லாத வகுப்பறையில் மதிய நேர புழுக்கத்தில் வியர்வை மணத்தையும், அதனுள் கலந்துள்ள மலர்களின் மணத்தையும் உணர்ந்தான். உடல் மணத்தில் மூச்சடைக்க மூழ்க வேண்டுமென்று தோன்றிய கையோடு பெண்களின் மணத்தை தனியாக உணரமுடிவது தன் கற்பனையோ என்ற சந்தேகமும் எழுந்தது. பெண்களின் மணத்தினூடே காலையில் முதல் முறையாக  முகர்ந்தற்கு நகர்ந்து அங்கிருந்து  தான் இன்னும் மாற்றிக்கொள்ளாத உள்ளாடைக்குச் சென்றான். அதை அருகில் உள்ளவர்கள்  உணர்வார்களோ என்று ஒரு கணம் யோசித்து அந்த அபத்த எண்ணத்தை  விலக்கினான். உடலும் மனமும் மீண்டும் தன்னை மீறிச் செல்வதை உணர்ந்தவனுக்கு  வகுப்பில் அம்மூவர் மட்டும் –மீரா, சுஜாதா, உமா- ஆடையில்லாமல் இருப்பதாக ஒரு நினைப்பெழுந்ததும் இன்று ஏன் என்றுமில்லாத அளவிற்கு  தறிகெட்டு அலைகிறோம் என்று  பயமேற்பட்டது. தவறு செய்கிறாய் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே மனக்கண்ணை மூடாமல் அதில் விழும் பிம்பங்களை துளித்துளியாக நினைவுக் கிடங்கில் சேகரித்தபடி இருந்தான். மூவரும் மாநிறம், அதிக பருமன் இல்லாத, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல்வாகு. நிர்வாணமான உடலில் தலையில் மட்டும் ஏன் ரெட்டை ஜடையும் ரிப்பன்களும்? அவற்றையும் அவிழ்க்க நினைத்தவனுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. எங்கோ  வகுப்பறையில் மாணவர்கள் கூட்டாக  ஒப்பிப்பதன் ஒலி அவனை  கலைக்க தலையை அழுத்திக்கொண்டான்.  ‘என்னடா கடி தாங்கலையா’ என்ற சுந்தரின் கேள்விக்கு தலையசைத்து வைத்தான்.

அடுத்து வந்த தமிழ் ஐயா பாடத்தை  இயந்திரம் போல் ஒப்பிக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் கொடுக்கப்படும் மொழிப்பாடங்கள், அதன்பின் மாணவர்களாலும் (வெளிப்படையாக), நிர்வாகத்தாலும் (சூசமாக), இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இவன் பள்ளியில் இயல்பான ஒன்று.  மொழிபாட  ஆசிரியர்களும் அதை உணர்ந்திருந்ததால் அவர்களும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மற்ற வகுப்புக்களை ஒப்பிடும்போது சற்றே இறுக்கம் குறைந்தவை அவை. தமிழர்களின் வீரம் பற்றி ஐயா சொல்லிக்கொண்டிருக்க, காளையை எல்லாம் என்னால் அடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  வேறேதேனும்  இக்கட்டில் இருந்து வேண்டுமானால் காப்பாற்றலாம். சைக்கிளில் இருந்து  சுஜாதா தடுமாறி தெருவில் கீழே விழ , மிக  வேகமாக பேருந்தொன்று அருகில் வந்துகொண்டிருக்க இவன்  சைக்கிளை மிதிக்கும் மிதியில் அது அந்தரத்தில் பறந்து அவளருகில் சென்று  அவளை கைதூக்கி காப்பாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தசரா சந்தையின்போது  உமாவை இரண்டு மூன்று மாணவர்கள் கிண்டல் செய்ய அவர்களை அடித்து விரட்டுகிறான். இவன்  பரிட்சையில் முதல் மதிப்பெண் பெற, மீரா கண்களில் ஆர்வம் மின்ன இவனைப் பார்க்கிறாள். மூவரில் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பத்துடன்  அவர்களுக்கு  என்ன வயது என்ற சந்தேகமும், ஓரிரு மாதங்கள் கூட அவர்கள் பெரியவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றின.

உண்மையில் இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இவன் மீது கொஞ்சமேனும் ஆர்வமிருக்கிறது என்பதற்கு ஏதேனும் சிறு குறிப்பையேனும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது, பாடப் புத்தகம் எடுத்து வர மறந்த ஒரு நாளில், தன் புத்தகத்தை மீரா அளித்தது ஞாபகம் வந்தது ( ‘அன்று நாலைந்து மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வராத நிலையில் தனக்கு அவள் இரவல் தந்ததில் ஏதேனும் சூட்சுமம் இருக்குமோ?’). தன் கற்பனைகளின் அபத்தம் குறித்து யோசித்தபடி பின் பெஞ்சின் மீது சாய, ‘தூங்காத நாயே’ என்ற குரல்  தலையை தட்டியது.

வீரத்தை விதைத்துவிட்டு தமிழ் ஐயா செல்ல, ஆங்கில ஆசிரியர் வந்தார்.   தமிழுக்காவது தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க,  மேல்நிலை வகுப்புக்களுக்கு ஆங்கிலத்திற்கென்று தனி ஆசிரியர் கூட இல்லாத நிலையில்  இயற்பியல் எடுப்பவரே அதையும்  -‘Kennelனா   அது ஒரு விதமான கரடிக் குகை’ என்ற அளவில்- கற்றுக் கொடுத்தார்.

ஏதோ வகுப்பிலிருந்து  பி.டி.க்காக சென்று கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்தவர்களில் மாணவிகள் டையை மட்டும் கழற்றி இருக்க, மாணவர்கள் சட்டையையும் கழற்றி இருந்தார்கள். சில வருடங்கள் முன் இத்தகைய ஒரு வகுப்பில் சட்டையின்றி பெண்கள் அருகில் நிற்க சில மாணவர்கள் தயங்கியதையும், விளையாட்டு ஆசிரியர் அதை கிண்டல் செய்ய, அதைப் பார்த்து பெண்கள் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. தயங்கிய கும்பலில் தான் இருக்கவில்லை என்றாலும், உள்ளுக்குள் இவனுக்கும் உதறல் தான். குறிப்பிடத்தக்க வகையில்  உறுதியான உடற்கட்டோ அதே நேரம்  மிகு  பருமனோ   இல்லாத உடல் இவனுடையது. அதுவே கூட அவனுக்கு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருந்தது,  குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை பார்க்கும் போது.  கொஞ்சமே கொஞ்சம்  கனிவு கொள்ள ஆரம்பித்திருந்த சூரியன் அகன்று விரிந்திருந்த ஜன்னல்களின் வழியே வகுப்பறைக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பொன்னிற வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தவன், பாடப்புத்தகத்தை புரட்டி, அவன் தேடிய பாடத்தை எடுத்தான்.

“Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date: “

என்று தொடங்கும் ஷேக்ஸ்பியரின் சானட். இது கற்பிக்கப்பட்டபோது (ஆசிரியரால்  ஒப்பிக்கப்பட்ட என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்) மற்ற பாடங்களைப் போல இதையும் கடந்து சென்றவனுக்கு இப்போது இந்த வரிகள் -இப்போது  மார்ச் மாதம் தான் என்றாலும்- அணுக்கமாகத் தோன்றின.   ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின்  முகம் முன் மாலை நேர ஒளியில் இன்னும் பொலிவு பெற்றிருந்தது போல் தோன்றியது. அவள்  கழுத்தோர வியர்வைத் துளிகள் இவன்  கற்பனைதான் என்று தெரிந்தாலும்  அவற்றை நாவால் வருடத் தோன்றியது.   பள்ளிக்கு வரும் போது துலக்கப்பட்டது போலிருந்த அவர்களிருவரின்  முகங்கள் சற்று  களை இழந்திருந்தாலும் முகத்திலிருந்த அந்தச் சோர்வும்கூட அழகாகத்தான் இருந்தது. மீராவின் கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்ததை அப்போததான் கவனித்தான். ஜன்னலருகில் அமர்ந்திருந்தால் அவர்களும் ஜொலித்திருப்பார்கள் தான். ஆசிரியர் கைகடிகாரத்தை  அவ்வப்போது  கவனிக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த வகுப்பில் உடல்கள் அசையும் ஒலிகளும்  பரபரப்பும் எழுந்தன. ‘மீதி நாளைக்கு’ என்று சொல்லி ஆசிரியர் புத்தகத்தை மூடி வாசலை பார்த்தபடி நின்றிருக்க, புத்தகப் பைகளை ஒழுங்குப் படுத்தியவாறு, மெல்லிய குரலில் பேசும் சிறு சப்தங்கள் வகுப்பை நிறைத்தன.

சாவியைத் தரும்போது  ‘என்னடா ஒடம்புக்கு முடியலையா’ என்ற சுந்தரி அக்காவின் கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லக்கா, வெயில் ஜாஸ்தி’ என்று சொல்லி தன் போர்ஷனுக்குச் சென்றான். இனி  ஏழெட்டு மணி அளவில்  பெற்றோர் திரும்பும்வரை தனிமைதான். ‘எதாவது சாப்டறியாடா, மூஞ்சியே சரியில்லையே,’ என்று அக்கா வந்து கேட்க, ‘வேணாம்க்கா, ப்ரெட் ஸ்லைஸ் சாப்டுப்பேன்’, என்றவனுக்கு அவர்  சென்றவுடன், காலை முதல் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டிருக்கிறோம்  என்ற குற்றவுணர்வு மீண்டும் ஏற்பட்டது.  அந்த சஞ்சலத்துடனேயே ஒரு வழியாக   வீட்டுப் பாடங்களை முடிக்கும்போது  மணி ஆறு தாண்டி இருந்தது.

கண்களை ஓரிரு நிமிடங்கள்  மூடித் திறக்க ட்யூப்லைட்டின் ஒளி இன்னும் பிரகாசமாக கண்களை நிறைக்க மனமும் சற்று அமைதியாவது  போல் இருந்தது.  திரும்ப ஓரிரு நிமிடங்கள்  கண்களை மூடித் திறந்தான். சிறிது  நேர ஆசுவாசத்துக்குப் பின் மனம் மீண்டும் காலையிலிருந்தே பயணித்துக்கொண்டிருந்த பாதையில் நடைபோட  ஆரம்பிக்க,  இவன்   வெளியே  படிக்கட்டின் அருகே சென்றான். நாட்கள் நீளத்  தொடங்கியிருந்த,  இன்னும் சிறிது வெளிச்சம் மிச்சமிருக்கும் முன்னந்தி நேரம். பின்புற வீட்டில் புழக்கடை கதவு சாத்தப்பட்டிருக்க, அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்ப் அந்த இடத்திற்கு சற்றும் போதாத  மெல்லிய ஒளியை பரப்பிக்கொண்டிருந்தது. மல்லி, அரளிச் செடிகள் மற்றும் தென்னை வாழை மரங்களின் நிழல்கள் நீண்டிருந்தன. அவற்றையே பார்த்தபடி இவன் நின்றிருக்க, அவை  நெளிந்து பெண்ணுருக்கள்  கொண்டன.  பாடப் புத்தகமொன்றுடன் வந்த உமாவிடமிருந்து   சுஜாதா அதை பறித்து எறிய, மீரா  ஏதோ சொல்லிச் சிரித்தாள்.  இவன் காலையில் பார்த்தவளும் இப்போது அம்மூவருடன் சேர்ந்து கொண்டாள் (“இவளுக்கு எப்படி இவளுங்கள தெரியும்”). மல்லிச் செடியருகே அவர்களை அவள் அழைத்துச் செல்ல, அனைவரும் அதிலிருந்து பறித்த  பூக்கள் தாமாகவே   சரமாக, அவற்றை   தலையில் சூடிக் கொண்டார்கள். தான் சூடிய சரத்தை தோளின் முன்னே உமா போட்டுக்கொண்டாள். மெல்லிய காற்று வீசியதில்  பவழ மல்லியின் வாசனை எங்கும் பரவ , அதனூடே அவர்களின்  மணங்களையும் சேர்த்தே நுகர்ந்தான். மலர்களின், வியர்வையின், நகப்பூச்சின், மருதாணியின்,  கண் மையின், அணிந்திருக்கும் ஆடைகளின் மணமாக அவர்கள் தன்னை சூழ்த்து நிற்பதை உணர்ந்தவன்  அதன்  அழைப்பை ஏற்று சுவற்றைத் தாண்டி அந்த வீட்டினுள் குதித்தான்.

oOo

கரைதல்