காஸ்மிக் தூசி

ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

மேலூர்சாலை குறுக்கே கடந்து
மேற்குச்சித்திரை வீதியில்
ரங்கநாயகித்தாயார் சன்னதி
தாண்டி நிமிர்ந்தால்

கோயில் வாசல் முன்
செங்குத்தாய்
ஒரு தனிக்கோயில்

அதற்குள் படிப்படியாய்
இன்னும் பலநூறு
சிறு கோயில்

இரு நூற்று
முப்பத்தொன்பது அடி
உயரத்தில்

புறா குருவி வவ்வால்கள்
சீரியல் விளக்குகள் இடையில்
தனக்கென தனிமாடம்
கிடைத்துவிட்ட பெருமையில்

வழக்கத்தைவிட
சற்று அதிகமாய்
வளைந்து நின்றாலும்
அளவாய் புன்னகைக்கும்
கடவுள்கள்

தண்டனைகள்
பிரார்த்தனைகள் போர்க்காட்சிகள்
மத்தியிலும்
தியானத்தை கைவிடாத
தேவர்கள்

நின்ற அமர்ந்த படுத்த
நிலைகளில்
நிமிர்ந்த பெரும் கொங்கை கொண்ட
தேவதைகள்

இன்னும் அதிகமாய்
ஆயுதம் ஏந்த வேண்டி
கூடுதலாய் கைகள் கொண்ட
கிங்கரர்கள்

முட்டைக்கண்
முறுக்கிய மீசையில்
அணிவகுத்து பயமுறுத்தும்
பச்சை நிறத்தசை திரண்ட
பூத கணங்கள்

சிங்கத்தலை கொண்ட
பூத முகங்கள்

கடவுளரின் சேவகர்கள்
சேவகரின் காவலர்கள்
காவலரின் ஏவலர்கள்

மற்றும் அவர்தம்
வளர்ப்பு பிராணிகள்
விருப்ப பல்லக்குகள்

ஆபரணங்கள்
ஆயுதங்கள்
குண்டலங்கள்
இசைக்கருவிகள்
விளக்குச் சரங்கள்

மாலை ஏந்தி
வரவேற்கும் யானைகள்
பல் மருத்துவர் முன்
பரிசோதிக்க
நிற்பது போல்
விரிவாய் வாய் திறந்த யாழிகள்
ஆடை நெகிழ்ந்த அழகிகள்
நெழிவுகள் சுழிவுகள்

நெஞ்சம் புடைத்த வீரர்கள்
வரிசையாய் வாத்துக்கள்
வளைவுகள் சரிவுகள்
மாலைகள் மனிதர்கள்
மாடங்கள் மேடைகள் திண்டுகள்
பூக்கள் கொடிகள் குடைகள்
பறவைகள் தேர்கள்,
இத்யாதிகள்.

அடுக்கடுக்காய்
நெருக்கமாய்
வரிசையாய்
நடுவிலும்
சுற்றிலும்
மேலும்
கீழும்.

இத்தனைக்கும் மேல்
சேட்டுக்கடை இனிப்பின்
சதுரங்கள் போர்த்தி
திரண்டெழுந்த மேடை

அதன்மேல்
வட்டக் கிரீடம் வைத்து
கூரிய முனைகொண்ட
கூம்பின் கீழ்

தலைகீழாய் மூடிக் கவிழ்த்து
ஆண்டுகள் பலநூறு
ஆன பின்பும்

பளபளப்பு மங்காத
பித்தளை கும்பாக்கள்
சுமார் பதிமூன்று

மற்றும்
அவற்றுள்
பயன்பாட்டில் இல்லாத
பழைய தானியம்,
கொஞ்சம் போல.

இதென்ன பிரமாதம் என
தொலை நோக்கியில்
அலட்சியமாய் பார்க்கையில்

ஏதோ ஒரு
வரிசையின் இடுக்கில்
மேளம் கொட்டும் சிற்பமாய்
முறைத்து நிற்கும்
ஒரு மீசை மனிதர்

அவர் மார்பில்
மாலைகள்,
நகைகள்
பூக்கள்
ஆ..ஆ…

!

தக்காளிக் காதல்

காஸ்மிக் தூசி

இன்றைய மாலையின்
என் காதல் முழுக்கவும்
குளிர்சாதன பெட்டியிலிருந்து
இல்லாமல் போன
ஒரு மிகப்பெரிய
தக்காளிப் பழத்தின் மீது.

என்ன இருந்தாலும்
ஒரு எளிய பழத்தை குறிக்க
காதல் என்ற சொற்பிரயோகம்
மிகைதான் என்பீர்,
தெரியும்.

மென்மையான சதைக்குள்
பிரியத்தால்
வீங்கி புடைத்து வரியோடிய
பெரிய பாட்டியின்
முகத்தையும்

பிறந்த குழந்தையின்
பாதத்தையும்

புன்னகைக்கும் புத்தரின்
கன்னத்தையும்
நினைவுறுத்தி

தன்னுள்
அத்தனையையும் பதுக்கிக் கொண்டு
அமைதியாய் இருந்தது.

துவரம் பருப்பின்
சொரணையின்மையை
மூடி மறைத்து

வறுத்த வெங்காயத்தை
மேலும் இனிப்பாக்கி

முள்ளங்கி கத்தரி
முருங்கையையும்
தன் மென்புளிப்பால் ஊடுருவி,
வாழ்நாள் முழுக்கவும்
தன் இருப்பில் கசந்து,
வெட்டும் பலகையிலிருந்து
தவறுதலாக வந்து சேர்ந்து விட்ட
சில துண்டு பாகலையும்
தன் பிரியத்தால் நிறைத்து விட்டது.

ஒரு தட்டின் சாதம்
ஒரு கோப்பையின் சாம்பார்
ஒரு கரண்டி –
விருப்பமான ஒரு நாக்கு –

என்னவொரு தியானம்!
என்னவொரு கொண்டாட்டம்!

அந்த சம்பவத்துக்குப் பிறகு – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

பாட்டு பயிற்சியை
அன்றே நிறுத்தி விட்டது
வடையை பறிகொடுத்த காகம்.
கால் செண்டரில் வேலை முடித்து
வீட்டுக்கு வந்து உடைமாற்றி
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு
யோகா வகுப்புக்கு செல்கிறது.
ராயப்பேட்டையிலிருந்து
காரில் வரும் ஒல்லியான பையனுடன்
காதலாம்.

வடையை தின்றாலும்
இன்னொரு கதையில் வந்து
திராட்சையை எட்ட முடியாத நரி
சாலை விபத்தில்
கால் முறிந்து
புத்தூருக்குப் போய்
வைத்தியம்
பார்த்துக்கொண்டதாய் கேள்வி.
அதற்குப்பின்
எங்கே போனதென
அறிந்திலர் எவரும்.

திருவாரூர்
பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில்
மருந்துக்கடை வாசலில் பார்த்தாக ஒருவர்
விழுப்புரம்
அபிராமி திரையரங்கின் எதிரில்
தள்ளுவண்டியின் முன் நின்று
வாழைப்பழம் வாங்கி கொண்டிருந்ததாக
மற்றொருவர்
மும்பை ரயிலின்
முதல் வகுப்பு இருக்கையில்
இருமிக்கொண்டு சென்றதை
கண்டதாக இன்னொருவர்.
தவிர
ஊரை விட்டுச்சென்ற நரி
திரும்பி வந்தாக
தகவல் ஏதும் இல்லை.

கண்பார்வை மங்கி விட்டதால்
வடைக் கடையை மூடிவிட்டு
அறந்தாங்கியில்
பெரிய மகள் வீட்டுக்கு சென்ற பாட்டி
கேட்டராக்ட் செய்தபின்
கீரை ஆய்ந்து, காய்கறி நறுக்கி
வாணிராணியும் பிரியமானவளும் பார்த்து
தான் வடை சுட்டு விற்றதும்
இன்ன பிற
குட்டிக் கதைகளும் சொல்லி
பேரப்பிள்ளைகளுடன்
பொழுதைக் கழிக்கிறாள்.

திருடுபோன வடையும்
புளிக்கும் திராட்சையும் தவிர
சில கதைகள் மட்டும்
ஏன் இவ்வளவு நீளமானவையாக இருக்க வேண்டும்
என்பது மட்டும்
அவளுக்கு விளங்கவே இல்லை.

மறையும் கதிரவன்

காஸ்மிக் தூசி

image

தீர்க்க தரிசனத்தைப்போல
நீளும் தண்டவாளங்கள்
சந்திப்பதுபோல தோன்றும்
அடிவானத்தின் இடத்தை
தொட்டுவிட்டான்
மறையும் கதிரவன்.

சக்கரத்தைப் போன்ற
பெரிய கதிரவன்.

00

அருண் கொலாட்கர் எழுதிய The Setting Sun என்ற கவிதையின் தமிழாக்கம்

ஒளிப்பட உதவி- bbc.co.uk

வேண்டுதல்கள்

காஸ்மிக் தூசி

image

கடிகாரத்தின் முன்
ஒரு கிடா வெட்டலாம்
தண்டவாளதின் மேல்
தேங்காய் உடைக்கலாம்
கைகாட்டிக்கு
சேவலின் இரத்தம் பூசலாம்.

ஸ்டேஷன் மாஸ்டருக்கு
பாலாபிஷேகமும்
முன்பதிவு செய்யும்
குமாஸ்தாவுக்கு
தங்கத்தில் ஒரு ரயில்பொம்மையும்
தர சத்தியம் செய்யலாம்.

அடுத்த ரயில்
எப்ப வரும் என்பதை
யாராவது சொல்வதானால்.

000

அருண் கொலாட்கரின் Vows என்ற கவிதை தமிழாக்கம்

ஒளிப்பட உதவி- https://thesolitarywritersblog.files.wordpress.com