சிகந்தர்வாசி

நாளை வருமா?​​

 

​இன்று ஒரே பெஞ்சில் அவர்களால் அமர முடிந்தது
தினமும் அவர்களுடன் வரும் ஒருவர் இன்று இல்லை
நடை பழகாமல் மெளனமாக உட்கார்ந்திருக்கிறார்கள்
தினமும் உரக்க சிரிப்பவரின் பார்வை வானத்தில்
எங்கோ பதிந்திருக்கிறந்து
கைத்தடியில் கைகள் ஊன்றி இன்னொருவர்
தரையை பார்க்கிறார்
மறையும் சூரியனின் ஒளி பட்டு மாமரத்தின் நிழல்
அவர்கள் மேல் மட்டும் படர்கிறது

நடப்பவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்
அரை நிஜார் மனிதர் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்
எதிர் பெஞ்சில் சிரித்து பேசும் காதல் ஜோடி
பக்கத்து பெஞ்சில் குடும்ப விஷயம் பேசும் மாமிகள்
மெயின் ரோட்டில் வேகமாக பறக்கும் வாகனங்கள்
கேட்டுக்கு வெளியே ஆப்பிள் விற்கும் வண்டிக்காரன்

சிலைகள் போல் அவர்கள் ​

மெல்லிய ஒளி

ஜன்னலைத் திறந்தவுடன் சூரிய ஒளி
அவர் மேல் படர்கிறது
அவர் மெதுவாக முனகுகிறார்
ஒளியின் பாரத்தை தாங்கமுடியாத அளவு
புற்றுநோய் அவர் உடலைத் தின்றிருக்கிறது

முதலில் அவர் வலியில் முகம் சுளிக்கும்பொழுது
எங்களுக்கும் வலித்தது, அவர் முனகியபொழுது
எங்கள் கண்ணோரத்தில் ஈரம் கோர்த்தது

வலி தொடரத் தொடர எங்கள் காதுகளையும் கண்களையும்
எங்களை அறியாமல் எங்கள் அறிவு பொத்திவிட்டது
இப்பொழுது சிறு முனகல்கள் எங்களுக்கு கேட்பதில்லை
முக கோணல்களை எங்கள் கண்கள் பார்ப்பதில்லை
படுக்கையில் ஒருவர் இல்லை என்று நினைத்துக்கொண்டே
அறை முழுவதும் சுற்றுகிறோம்

மறுத்தும் மறந்தும் தினம் வாழ்கையை ஓட்டுகிறோம்
ஆனால் அந்தக் கட்டிலை சுற்றிதான் எங்கள் உலகம்
மீறிச் செல்ல நினைத்தாலும் கட்டில் எங்களை விடுவதில்லை
வேறெங்கோ பார்த்தபடி கட்டில் அருகில் நிற்கிறோம்

காலை வெளிச்சத்தில் வற்றிவிட்ட தேகத்தின் வலியை
தெளிவாக உணர்கிறேன்
மரணம்தான் ஒரே தீர்வு என்று நான் நினைக்கையில்,
வலி தோய்ந்த குரலில், “ஏன் காபி இன்னும் குடுக்கல?”
என்று அவர் கேட்கிறார்

ஒளிப்பட உதவி – Susana Weber

அப்பாவின் புகைப்படம்


பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துகொண்டு
ஹிந்து நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்
பக்கவாட்டு ஜன்னல் வழியே வெளிச்சம்
ஆபிச்சுவரி பக்கத்தில் உள்ள புகைப்படங்களை
ஒளிரச்செய்கிறதோ என்னவோ, ஆனால்-
அப்பாவின் மனதை அவர் போட்டிருக்கும்
தடிமனான கண்ணாடி மறைக்கிறது
காலை எழுந்ததும் ஏன் மரணத்தை எதிர்கொள்கிறார்?
ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவா?
தான் இன்னும் மறையவில்லை என்பதை மறக்காமல் இருக்கவா?
ஒளி ஒழுகும் இருட்டுச் சமையலறையிலிருந்து
அம்மா காபி டம்ப்ளருடன் அப்பாவை நோக்கி வருகிறாள்.
காபி சுவை நாவினில் இறங்க, மரண பயம் மெல்ல விலக,
நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நிற்கிறார்

க்ளிக் க்ளிக்

 

ஒளிப்பட உதவி – artofday.com

அந்திப் பொழுது

 

கீழ்வானம் சிவக்க,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் விளக்குகள் எரிய
வாகனங்களின் சப்தமும் கீச்சு கீச்சு என்ற பறவை ஒலியும்
சேர்ந்து கொள்ளும் சந்தி வேளையில்
நாங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம்
எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் அவர்
அடுத்துச் சொல்லப்போவது எனக்கு தெரியும்-

“நாகராஜன் ஹார்ட் அட்டாக்ல நேத்து போயிட்டார்”

மெளனமாய் நடக்கிறோம்

“அடுத்தது நான்தானோ?
என் வயசுக்காரா ஒவ்வொருத்தரா போயிண்டு இருக்கா,
அடுத்தது என் முறை.
பேஸ்மேக்கர் எவ்வளவு நாள்தான் என்னைக் காப்பாத்தும்?”

பெட்டிக் கடைக்காரன் எங்களை பார்த்து புன்னகைக்கிறான்
இரண்டு வருடங்களாக இதே சந்திப் பொழுதில்
இதே தெருவில் தினமும் நடக்கிறோம்.

“பட் ஐ ஹாவ் நோ ரிக்ரெட்ஸ்
எனக்கு எந்த வருத்தமும் இல்லை
வாழ்கையை நல்லா அனுபவிச்சாச்சு. வேற என்ன வேணும்?”

சூரியன் சோர்வடைய, சிவப்பு கரைய
மேற்கு திசையை இருள் கவ்வ
வீதி விளக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
வீடு திரும்பும் வாகனங்களின் ஹார்ன் காதைத் துளைக்க
பறவைகளின் கூக்குரல்கள் அடங்க
இன்னொரு நாளும் கழிந்தது.

ஒளிப்பட உதவி – Finnsticks blog

மானுடம் குடியமர்ந்த கோள் – புறப்பாடு

சிகந்தர்வாசி

அந்தச் சீனர் உறங்கிக் கொண்டிருப்பதை லிண்டா லூவும் நானும் பார்த்தபடி நின்றிருந்தோம். அவர் விழித்துக் கொள்வார் என்று காத்திருந்தோம், ஆனால் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழுக்கதையும் தெரிந்து கொள்ளும் ஆரவம் எங்களுக்கு இருந்தது, ஆனால் அவர் எப்போது விழித்துக் கொள்வார் என்று தெரியவில்லை. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அவர் தூக்கத்தைக் கலைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே காத்திருந்தோம்.

கால் மணி நேரத்துக்குப் பின்னர், சி லிங்கின் மகன் வீட்டிலிருந்த எங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டோம். அவன் இளம் பருவத்து சி லிங்க் போலிருந்தான். அவனை எல்லாரும் ‘சீனக்குட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். அவன் வேறொரு வீட்டில் இருந்தான், தினமும் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வருவான். இப்போது இங்கே நாங்கள் இருப்போம் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறோம் என்று கேட்டான். எங்களுக்கு வரலாற்றில் உள்ள ஆர்வத்தைக் கூறிவிட்டு, பாதி கதையில் பெரியவர் உறங்கி விட்டார் என்று சொன்னோம். அவன் சிரித்துக்கொண்டே, “இந்தக் கதையை அவர் பலமுறை எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவரே அதில் பாதியை உங்களிடம் சொல்லிவிட்டதால், மீதியை நான் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, சீனக்குட்டி கதையைத் தொடர்ந்தான். (more…)