பானுமதி ந

எதிர்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முப்பத்தி மூன்று நீண்ட வருடங்கள்; உள்ளே புதைந்த குண்டென வெளிவர இயலாத காலங்கள்; ஆனால், இப்போது அது இரத்த ஓட்டத்தை குறுக்குகிறது. ஆம், கீறி அதை வெளியே எடுக்கும் வேளை நெருங்கி விட்டது. குண்டின் பெரும் பகுதியை சிவநேசன் எடுத்துவிட்டார்; மிகுதியை மங்களாதான் எடுக்க வேண்டும்.

.மனிதனை உயரச் சொல்லும் மலைகளும், தேர்களும், கோயில்களும், ஏன் நம் முன்னே நின்று நீ சாதாரணமானவன் என்று சொல்லாமல் சுட்டிக் காட்டுகின்றன? சாந்தவனேஸ்வரரும், சாந்த நாயகியும் ஒன்றாக அமர்ந்து வர கம்பீரமாக அசைந்தசைந்து வரும் தேரின் முன்னால் வெண்குடையின் கீழே வெள்ளைத் தாமரை வடிவ பீடத்தில் வெண் பட்டுடுத்தி கலைமகள் வருவது புதுப்பட்டியின் சிறப்பு. ஊரை சற்றே பிளந்து ஓடும் வெட்டாறு. செவிவழிச் செய்தியாக அறிந்தது கச்சபேஸ்வரர் கனவில் சிவன் தோன்றி சரஸ்வதி தேவியை     நிறுவி அவளுக்கும் தன்னைப் போல் சிறப்புகள் செய்ய ஆணையிட்டார் என்பது. சிறுவனாக அம்மாவின்  ஒரு கையை நானும், மறு கையை மங்களாவும் பற்றிக் கொண்டு, ‘ஏம்மா, சரஸ்வதியும் இந்த ஊர்வலத்ல வரா?’ என்று கேட்டதும் அம்மா சொன்ன பதிலும் கல்வெட்டு போல் பதிவாகி இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தவில்லையே என்ற வாட்டம் இப்போதும் நீடிக்கிறது. ஆனால், அது இனி இருக்காது.

அம்மா சொன்னாள், ’சுபத்ராவோட கண்ணனும் பலராமனும் இருக்ற படத்தை நம்ம கூடத்ல பாத்திருக்கல்ல; அதே மாரி சிவனுக்கு, தங்க சரஸ்வதி. ஆதி சங்கரர் சரஸ்வதி அஷ்டோத்ரத்ல ‘சிவானுஜாய’ன்னு அதாவது ‘சிவனுக்கு இளையவளே’ன்னு சொல்றார். ’பூரி ஜகன்னாத யாத்ர’ மாரி நம்ம ஊர்ல தங்கையும், அண்ணனும், மன்னியுமா நம்மளயெல்லாம் பாக்க வரா; உங்க ரண்டு பேருக்கும் தான் சொல்றேன்-உடம்பொறப்புக்காக முடிஞ்சதெல்லாம் செய்யணும்- தன் பங்க, கூடப் பொறப்புக்காக விட்டுக் கொடுக்கணும் .நீங்க சாதாரண உடம்பொறப்பில்ல; ரெட்டையா பொறந்தவா; ரொம்ப பாசமா, அனுசரிச்சுண்டு இருக்கணும்; ஆனா, எங்க நம்ம ராஜ நந்தினி மாரித்தான் இருக்கேள்.’

இன்று தெளிவாகப் புரிகிறது- அம்மா தங்கள் இயல்பை எவ்வளவு சரியாகக் கணித்திருக்கிறாள் என்று. தாத்தாவுடன் அவர்கள் பூர்வீக வீட்டில் இருந்தபோது காமாக்ஷி என்ற பசு இரு கன்றுகளை ஒரு சேர ஈன்ற நேரம் கௌசிகன் எனவும், மங்களா எனவும் நாங்கள் பிறந்தது அன்று அந்த ஊரில் மிகப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டதாம்; அம்மாவிற்கு மங்கள கௌசிகா இராகம் மிகவும் பிடிக்கும்; எங்கள் ஒற்றுமையைப் பேரிலாவது இணைத்துவிட ஆசைப்பட்டிருக்கிறாள், பாவம். அதிலும் ’ஸ்ரீ பார்க்கவி’யை அம்மா பாடக் கேட்கணும்; அதையெல்லாம் எங்கே தொலைத்தோம்? நாளை தெப்பத்தின்போது நம்ம நாகஸ்வர வித்வானை வாசிக்கச் சொல்லி கேட்கணும்; அதுகூட நான் இறுதி முறை கேட்பதாக இருக்கக்கூடும்.

இப்பொழுதே அந்த தெப்பக்குளத்தைப் பார்க்க வேண்டும்.தேரின் சந்தடியிலிருந்து விலகி அந்த நீரைக் காண வேண்டும்;வெந்தெரியும் மனதிற்கு அந்த ஈரம் ஓர் ஆறுதல்; மங்களாவை நான் சந்திக்கையில் அவள் கண்களில் பளபளக்கும் நீரை எதிர் கொள்ளும் வலிமையை பரந்து நிற்கும் குளம் எனக்குத் தரலாம். மேலும் என் பிறந்த ஊரில் நான் பார்க்கும் கடைசி தெப்பமாகத்தான் இது இருக்கும்.

‘என்ன கௌசிகா, குளத்துக்கு இப்பவே வந்துட்டே. இன்னும் நேரமிருக்கே?’ என்றான் ராமு

“எனக்குக் காத்ருக்கப் பொறுமயில்லடா”

‘என்னதுடா, உன் தோதுக்கு தொப்பம் நடக்கணுமா, திருப்பியும் கண்டத சாப்ட ஆரம்பிச்சுட்டியா? அப்படியும்தான் என்ன அடுத்த விச பாக்கலாமோன்னோ?’

‘ஏன்டா உளற, சித்த காத்தாட இருந்துட்டு, தேர் பவனி முடிஞ்சு நெலக்கு வரும், சாமியெல்லாம் குடும்பமா வரும்; அப்றம் தெப்பம். நன்னா, பாக்கலாம்ணு வந்துட்டு உங்கிட்ட மாட்டினுட்டேன். நா இங்க இருக்கறதுல உனக்கென்னடா கஷ்டம்?’

“நல்ல கூத்துடா இது, உடம்பொறந்தாள ஃபுல்லா விட்டாச்சு, குடும்பத்தோட சாமி பாக்கறாணாம், யாரப் பாக்க வந்தியோ, என்னவோ, நான் போய்ட்டு அப்றம் வரேன், குளத்ல இறங்கிடாதே”

‘போடா, போடா உன்ன எனக்கும் என்ன உனக்கும் இன்னி நேத்திக்கா தெரியும்?’

இவனிடமும் சொல்லாமல்தான் போகப்போகிறேன்.வானத்தில் கூட்டமாய் பல பறவைகள் பறக்கும், தனியாகப் பறக்கும் பறவையும் உண்டே!

தெப்பத்திற்காக குளத்தில் நீர் நிறைந்திருந்தது. மேலைச்சூரிய ஒளியில் செம்பொன் கண்ணாடித் தகடென மின்னியது.காற்று ஏற்படுத்தும் சலனத்திற்கேற்ப இயற்கையின் ஒளி நடனம். மனிதனுக்கு சபலம்தான் சலனத்தின் காரணம் போலும். பேரெழிலும், பெருமிதமுமாக நீராழி மண்டபம் நின்றிருந்தது. மாலை தெப்பம் முடிந்த பிறகு மதகைத் திறந்து விடுவார்கள்; அப்படிக் குறைந்த நீரிலும் இம்மண்டபம் பெருமிதமாகத்தான் இருக்கும். என் வீட்டை வாங்கிய சிவநேசன் அப்படித்தான் பெரிய மனிதராக நிற்கிறார்.

இந்தக் குளத்தைப் போலத்தான் காவியும், வெள்ளையும் அடித்து சின்னஞ்சிறு படிகள் அமைத்து என் வீட்டிலும் தரையில் பதிக்கப்பட்ட தெப்பக்குளம் இருந்தது. அழகான கோலங்கள் வரையப்பட்ட செந்நிற கற்கள், அதை மூடி,பால் வெண் பூச்சால் இணைக்கப்பட்டிருக்கும். நவராத்திரி சமயத்தில் சிறு உளியால் பூச்சினை அகற்றி, கற்களை எடுத்துவிட்டு நான் ஒதுங்கி விடுவேன்; எனக்கு முடியவில்லை என்பதல்ல, அவளும் செய்யட்டுமே என்ற வீம்புதான். உதட்டைப் பிதுக்கிப் பழித்தவாறே மங்களா அதில் நிரப்பப்பட்டுள்ள மணலை அள்ளுவாள். குடம் குடமாய்த் தண்ணீர் விட்டு குளத்தில் பொம்மைகள் மிதக்கும்; சுற்றிவர மின் விளக்குகளின் அலங்காரம்.

அது புதைத்து வைத்திருந்த அந்த இரகசியம் எங்கள் வீட்டை விற்கும் நேரத்தில்தான் வெளிப்பட்டது. அதை நான் மட்டுமே சுமந்தலைந்தேன் முப்பத்தி மூன்று வருடங்களாக. இரு நாட்களுக்கு முன்தான் சிவநேசனிடம் சொன்னேன். என் மனப் பாரம் குறையக் குறைய அவர் மகத்தான மனிதராக வளர்ந்துகொண்டே வந்தார். ”அழாதீங்க, கௌசி சார், இப்ப என்ன நடந்து போச்சு; சரி, உங்க வீட்ட விக்க எங்கிட்ட ஒப்பந்தம் பண்ணீங்க, நான் அட்வான்ஸ் மட்டும்தான் கொடுத்திருந்தேன் அப்ப. உங்களயே சிதிலமான வீட்ட முழுசா இடிச்சு சமப்படுத்தி தரச் சொன்னது நாந்தான். அப்படி இடிக்கையில  ஒரு வெள்ளிச் சொம்புல வெள்ளிக் காசுகள், தங்கக்காசுகள் கிடச்சிருக்கு. அதை அப்ப சொல்லல நெஜத்த மறச்சுட்டோம்னு மனசு பதறிகிட்டேயிருந்திருக்கு உங்களுக்கு. ஏதோ பெரிய குத்தம் பண்ணாப்ல வந்து எங்கிட்ட சொல்லிக் கரையறீங்க. அது உங்க சொத்து சார், என்னுதா எப்படி ஆவும்?எங்கிட்டேந்து வழிப்பறி செஞ்சீங்களா, திருடினீங்களா எந்தத் தப்பும் செய்யலியே; அந்த வீடு உங்க பரம்பர சொத்துன்னும், ஒருகாலத்ல நல்லா வாழ்ந்தவங்கன்னும் எங்க தாத்தா சொல்லியிருக்காங்க.

மனைக்கித்தானே பணம் கொடுத்தேன், மனய கரெக்டா கொடுத்திட்டீங்க, புதயலுக்கு நான் ஆசைப்படவுமில்ல, அத எதிர்பாக்கவுமில்ல. உங்க வீட்ல இருந்த கிணத்த தூத்தா கொடுத்தீங்க, இல்ல வெட்டி எடுத்துட்டுப் போய்டீங்களா? நெலத்ல வெட்டி அமைச்சது கிணறு,நெலத்தை வெட்டிப் புதச்சது பணம். ரெண்டும் வேறவேறங்க. அட, அழுவாதீங்க, உங்க பணம் உங்ககிட்ட கரெக்டாத்தான் சேந்திருக்கு; இத நீங்க புதயல் கிடைச்ச ஒன்னே சொல்லியிருந்திங்கன்னா நா அப்பவும் அது என்னுதில்லன்னுதான் சொல்லியிருப்பன். என்ன ஒன்னு, நீங்க குத்த உணர்ச்சியோட இப்படி அலைஞ்சிருக்க வேணாம். கௌசிக் சார், உண்மைல உங்களப் பாத்தா பரவசமா இருக்கு; எனக்கு இந்த விவரம் இன்னயமுட்டும் தெரியாது, நீங்க சொல்லலேன்னா யாரும் சொல்லவும் போறதில்ல ஆனா, என்ன மனுஷன்யா நீரு, உம்ம சொத்துக்கு கூனிக் குறுகிறீங்க. இனி குழம்பாதீங்க, சந்தோஷமா இருங்க, நண்பரா வந்து போய்க்கிட்டிருங்க. காசு, பண விவகாரமெல்லாம் வேணாம்’

என் சிந்தனைகளை ஆர்ப்பரித்து முழங்கிய மேளம் தடுத்தது. ஓ, தேர் நிலைக்கு வந்துவிட்டது.            நாகஸ்வரமும், மேளமும் உச்ச கட்ட பிளிறலில் ஒலித்தன. குளஓரத்து மேடையில் அம்மையும், அப்பனும் தேரிலிருந்து இறக்கப்பட்டனர். எத்தனையோ வருடங்கள் பார்த்திருந்தும் காண அலுக்காத காட்சி இது. சிவன் மட்டும் மேடையிலிருந்து சந்தனம், மஞ்சள், குங்குமம், பட்டுச் சேலை, பூப்பந்து, பழங்கள் வெண்தந்தத்தால் ஆன சிறு வீணை, சுவடிகளை எடுத்துக் கொண்டு கலைமகளின் பல்லக்கு அருகே சென்று சீர் அளித்து அழைக்க, அவள்  தன் பல்லக்கில் அவரையும் ஏற்றிக்கொண்டு மேடைக்கு வந்தாள். சாந்தநாயகி இருவரையும் எதிர்கொண்டு வரவேற்க கொம்பூதப்பட்டது. மலர் பொழிய மூவரும் கோயிலின் உள்ளே  போனார்கள். எனக்கு நீல வானில் தெரிந்த கறுமையும் விலகியது.

ஆம்,மங்களாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் மறைத்ததற்கு ஈடாக மொத்தத்தையும் அவளிடம் கொடுத்து விட வேண்டும். அவள் அப்படித்தான் என்ன செய்துவிட்டாள் ஒரேயடியாக அவளை விட்டு விலகும்படியாக.

எங்கள் வீடே அம்மாவின் சீதனம். வீட்டோடு மாப்பிள்ளையாய் இருந்த அப்பா காணாமற்போன மன அழுத்தம் தாத்தாவிற்கும்,  அம்மாவிற்கும் இருந்திருக்கலாம். ஊரைக் கூட்டி தடபுடலாக எனுக்கு பூணூல் கல்யாணம். அப்போது தாத்தா உயிருடன் இருந்தார். காலியான பெருங்காய டப்பாதான் அவர் அப்போது. ’எந்த கௌரவத்தைக் காப்பாத்த இந்த வேஷமோ? உங்க “வண்டி”எங்கெங்கே நிக்கறதுன்னு ஊருக்கே தெரியும்.’ என்று அம்மா சொன்னது ஏன் எனக்கு இன்றுவரை நினைவில் நிற்கவேண்டும்? சுயநலம் அப்படி ஒன்றும் தவறில்லை என்று எனக்கு அன்று வித்து விழுந்து விட்டது. அவளும் என்னைப் போலத்தானே ராஜ, நந்தினியின் சண்டையைப் பார்த்து வளர்ந்தாள். தன் தீவனத்தை வாயில் அதக்கிக்கொண்டு மற்றொருவரின்  பானையை கொம்பால் முட்டிக் கவிழ்க்கும் இரண்டும். இடையன் குளிக்க ஓட்டிச் செல்கையில் முரண்பட்டு ஓடும். புல்லுக்கட்டையோ, வைக்கோலையோ முதலில் ஒன்றுக்குப் போட்டுவிட்டால் பாய்ந்து சீறிக்  கவ்வும்; கட்டைத் தெறித்துக்கொண்டு பாயப் பார்க்கும். தாத்தாவும் என்னைச் செல்லம் கொண்டாடினார்; எல்லாமாக அவளுக்கு என்னைப் பிடிக்காமல் செய்திருக்கலாம். அவள் என்னை அவமானப்படுத்தியதை முப்பத்து மூன்று வருடங்களாக என்னால் மறக்க முடியவில்லை; ஆனால்,சிவநேசனைப் பார்த்த பிறகு மரத்தில் புதைந்த கோடாரி தானே வெளிப்பட்டுவிட்டது- சீழ், ரணம், வலி, சுவடு எதுவுமில்லை

ஆம், அவள் என் மேல் வழக்கு பதிவு செய்தாள், வீட்டை விற்ற தொகையில் பாதி பங்கு கேட்டு. இவளுக்கு கல்யாணம் செய்து, நகை நட்டு போட்டு, முதல் பிள்ளைப்பேறு பார்த்து எல்லாம் செய்தாகிவிட்டது; எதற்காக பாதிப்பங்கு தரவேண்டும் என வீம்பு எனக்கு இருந்தது. அம்மாவும் அவளுக்கு கால் பங்குதான் தரச் சொல்லியிருந்தாள்; இதெல்லாம் புதையல் எடுப்பதற்கு முன்னே. அவள் கேஸ் போட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது; எத்தனை சுய நலம் என்றும் தோன்றியது. கேசில் நான் ஜெயித்தபிறகு மொத்தமாக அவளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். அவளிடம் புதையலைப் பற்றி மூச்சு விடவில்லை. எதை எதிர்கொள்ளப் பயந்து அப்படி நடந்து கொண்டேன்? அவள் என்னைக் கேள்வி கேட்டிருந்தால்தான் என்ன, நம்பாமலே போயிருந்தாலும்தான் என்ன, நான் அவளிடம் மறைத்திருக்கக் கூடாது. ஆம், தெப்பம் முடிந்தவுடன் கிளம்பி அவளை அவள் வீட்டில் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டு, செக்கையும் கொடுத்துவிட்டு நிம்மதியாக, நிச்சலனமாகப் போய்விட வேண்டும் வெள்ளரியை விட்டு கொடி விலகுவதைப் போல் விலகிவிட வேண்டும். ’மானச சஞ்சரரே’ . யாரிடமும் கோபமில்லை, எந்தப் பொருளுக்கும் ஆசையில்லை, எந்தப் பற்றும் இனி தேவையுமில்லை. இந்த எண்ணத்தைத் தவிர என் மனதில் ஒன்றுமே இல்லை. மங்களாவிடம் என்ன பேசப் போகிறோம், எப்படி அவளைச் சமாதானம் செய்யப் போகிறோம் என்றுகூட மனம் நினைத்து நினைத்து ‘ரிகர்சல்’ பார்த்துக்கொண்டு இல்லை. அவள் சண்டை போடட்டும், அழட்டும், மன்னிக்கட்டும், மன்னிக்காமல் போகட்டும், செக்கை என் முகத்தில் வீசி அடிக்கட்டும் நான் அமைதியாக நடந்து கொள்வேன்- இது மட்டும் ‘ரிகர்சல்’ இல்லையா என்று ஒரு குரல் மனதினுள் கேட்டது.

சிரித்துக்கொண்டே ரயிலேறக் கிளம்பினேன்; எத்தனை புழுக்கமாக இருக்கிறது; இந்த இறுக்கம் மழை பெய்தால் போய்விடும். வழியெல்லாம் சிறு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. மின் விளக்குகளின் ஒளிச் சிதறலில் தன்னைக் காட்டி மறையும்  சிறுமழை. காற்றின் அலைகள் ஏந்தி வரும் சாரலில் அம்மா என்னைத் தடவிக் கொடுப்பதைப் போலிருந்தது. அவள் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கையில் என் இதய ஒலி காதுகளில் கேட்டது. கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்து திகைத்தேன்; இருபது வயது மங்களா? இவளுக்கு மட்டும் வயதே ஏறவில்லையா? ’யாருடி, கௌசல்யா?’ என்ற குரலுடன் வந்தவள், ”கௌசீ’ எனக் கதறி அணைத்துக் கொண்டாள்.

 

 

மீட்சி – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

கபில ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது. வண்ணமயமான படகுகள் இக்கரையிலிருந்து மறுகரையை அடைய போட்டி போடுகின்றன. வானில் சூரியன் ஏரிக்குள் தானும் இறங்கப் போவதாக உற்சாகத்துடன் எச்சரிக்கிறான்.

காந்திமதியும், கல்யாண சுந்தரமும் துடுப்பு வலித்து அந்த மரப்படகை செலுத்தினர். அவர்கள் இருவர் மட்டுமே அதில். மோட்டார் படகுகளிலும், பெடல் படகுகளிலும் பெரும்பாலும் விடுமுறையைக் களித்துக் கொண்டாட வந்த கூட்டம். மதிக்கு மரப்படகை துடுப்பினால் செலுத்தும் ஆசையினால் அவர்கள் அதில் கூச்சலிட்டுக் கொண்டும், நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்துக் கொண்டும் விளையாடுகிறார்கள்.

காந்திமதி அப்பொழுதுதான் அதைப் பார்த்தாள்தங்க உடலுடன் வெள்ளிச் செதில்களுடன் ஒரு பெரிய மீன். அதன் கவர்ச்சி தாள முடியாததாக இருக்கிறது. படகிற்கு இணையாக நீந்தியும், மூழ்கியும் வருகிறது. தன் கண்களால் அவளைப் பார்த்து ஏதோ செய்தி சொல்ல முயல்கிறது. அவள் சுந்தரத்தைக்கூட மறந்துவிட்டாள். இந்த மீன் தன்னிடம் வந்தால் எப்படியிருக்கும்? படகு சற்று சாய்ந்தபோது மீன் படகினுள் துள்ளிக் குதித்தது. சுந்தரம் வியப்பில் ‘’வென்கிறார்;.இப்போதுதான் பார்க்கிறார்; அது வட்டமிட்டுச் சுழன்று துள்ளி மீண்டும் ஏரிக்குள் போய்விடுகிறது. ஆனால், என்ன இதுவெள்ளிச் செதில்கள் படகினுள் பாதி உதிர்ந்திருக்க தங்க உடலுடன் அது ஏன் ஏரிக்குப் போனது?

காந்திமதி கனவிலிருந்து விழித்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. செதில்கள் இல்லாமல் மீன் என்ன செய்யும்? இப்படி ஒரு கனவு வருவானேன்? அவள் தற்செயலாக வயிற்றைத் தடவிப் பார்த்தாள். பிள்ளை முண்டுகிறான். வயிற்றில் உதைக்கிறான். அவளுக்கு கனவு மறந்து போயிற்று.

அருகில் சுந்தரம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். நீல நிற இரவு விளக்கு, உயர்ந்த ஜன்னலின் வழியே தெரியும் விடியலுக்கு முந்தைய நிலா, தயங்கித் தயங்கி பவழமல்லி மரத்தின் கிளைகளையும், செம்பருத்தியின் இலைகளையும் அசைக்கும் காற்று, கட்டிலை ஒட்டி அதன் சலன சித்திரங்கள்…அவள் மகன், உறங்கும் அவள்  கணவனைப் போல் இருப்பானா?அவளுக்குப் பொங்கிப் பொங்கி வந்தது, அவன் மார்பில் ஒரு சிறுபறவையெனத் துயில ஆசை வந்தது.

குருவாயூர் கோயிலில்தான் மதி அவரைப் பார்த்தாள். அவர்கள் வெளிப் பிரகாரத்தில் சற்று ஒதுங்கி நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது இங்கேயும் இது போல் வந்துவிட்டதா?’ என்று கோபம்தான் வந்தது முதலில். திரண்ட தோளும், அகன்ற மார்பும்,முகத்தில் இயல்பான சிரிப்பும், தூய வெள்ளை வேஷ்டியும், இடுப்பில் சுற்றியிருந்த சந்தனக் கலர் மேல் துண்டுமாக ஒரு இளைஞனும் அவரது அண்ணன் போல் தோன்றும் மற்றொருவரும் உள்ளே வருகையில் அவள் அவர்களை அறிந்து கொண்டுவிட்டாள். ‘எவ்வளவு சிம்பிள்என்று இப்போது தோன்றியது. சன்னதியை விட்டு அவர்கள் வருகையில் அவன் கையிலிருந்து மேல் துண்டு நழுவ அவள் எடுத்துக் கொடுத்த கணம்.. ஆம்.. திருமணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன.

இன்றுகூட சிரிப்பாக வருகிறது. அவர் தேன் நிலவிற்கு முதலில் அழைத்துச் சென்ற இடம்-‘சாமி காட்டவா நானு’.

அவளுக்குக் கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது. ஒருக்கால் கோயில் பித்தோ?’

அவர் கூட்டி வந்த இடம் க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியம்.

மூணு புள்ளக சுமப்பியா? அவனுகள விஞ்ச ரொனால்டோவாலக்கூட முடியல்லன்னு ஊரு பேசிக்கிடணும்.’

அதென்ன மூணு?’

ஃபார்வேடு, மிட்ஃபீல்டு. கோல் கீப்பர்

அல்லாமும் நம்ம மக்க, மூணோட நிறுத்திக்க எஞ்சாமி, என அவள் சிரித்தாள்.

நா டைடானியம் க்ளப் மெம்பருல்ல; எத்தன கோல் அடிச்சவன் நானு. எங்காலு படாத எடமில்ல இங்க

மதிக்கு ஓரளவிற்கு கால்பந்து விளயாட்டைப் பற்றித் தெரியும். இப்பொழுது அவள் சுந்தரத்தையும் மிஞ்சிவிட்டாள்.

“ஏன் கனவு அப்படி வந்தது?” அவளுக்கு கலக்கமும் இருந்தது,கனவெல்லாம் அப்படியா பலிக்கும் என்ற எண்ணமும் வந்தது.

 

ந்த கால்பந்து  மைதானத்தில் குவிந்திருந்த பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் அறுபது வினாடிகள் இதயம் துடிப்பதை நிறுத்தியது. திறமையாக பந்தை பாதத்தால் சுழட்டிஇதோ கொண்டுவந்துவிட்டான். கோல் விழுந்துவிட்டது’. ஒரே ஆரவாரம். உற்சாக மிகுதியில் கால்களை விர்ரென்று உதைத்த அவன் கீழே விழுந்தான்.தான் வாலிபனாக அல்லவோ விளையாடினோம், இங்கே சிறுவனாக அல்லவா படுத்திருக்கிறோம்என்று அவன் மனம் நினைத்தது.மருத்துவமனையின் செவிலியர் ஓடி வந்து அவனை மீண்டும் படுக்கையில் கிடத்தியபோது அவன் காலின் மேல்தோல் வழண்டு உட்சதை தெரிந்தது.

மதிக்குப் புரிந்துவிட்டது; டாக்டரை அழைக்க ஓடினாள்.

அவனுக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது.சீருடை அணிந்த செவிலியர்கள், உதவியாளர்கள், நடை வண்டிகள், மௌனப் படம் போல் தென்படுகிறார்கள். ஏனோ விரைந்து கொண்டிருக்கிறார்கள், விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் நெற்றிச் சுருக்கங்களுடன் அம்மாவுடன் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்.

“இளைய நண்பனே,காலை வணக்கம்” என்றார் சிரித்துக்கொண்டே.

அவன் படுக்கையில் இருந்து எழுந்து நெற்றியில் கை பதித்து வணங்கினான். அவ்வளவுதான், மேல் தோலின் கொப்புளம் கழன்று தோல் அழண்டு விட்டது. ’கடவுளே’  என மதி விசும்பினாள்.

மருத்துவர் அவனை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்தினார்.

சுந்தரத்தோடு அவள் போன அகத்தியமலை மழைக் காடுகள் நினைவில் நிழலாடின. காடுகள் பசுமை மட்டுமல்லஅவை மர்மத்தின் மௌனக் குரல்கள். பெயர் தெரியாத அடர்ந்த மரங்கள், உடல் தெரியாது அதில் ஆடும் பறவைகள், அவைகள் உதிர்த்த சிறகுகளை எந்த தேவனிடம் சேர்க்க இந்தக் காற்று அணைத்து எடுக்கிறது? இத்தனை பசிய மணம் நிலத்தில் இல்லை, குறுக்கிடும் நீரோடைகள் எங்கிருந்துதான் வருகின்றன? காட்டின் அந்தரங்கத்தை அறிந்த பெருமையில் குட்டி நீர்வீழ்ச்சி பாலெனப் பொங்குகிறது. நீர்வீழ்ச்சி என்ற சொல்லே பிடிக்கவில்லை, அருவி என்று சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கிறது! அவள் இறங்கி இறங்கி நிலம் செழிக்கத்தானே ஓடி வருகிறாள்? தன் நினைவில் ஆழ்ந்த அவள் அந்தக் காட்டெருமையைக் கவனிக்கவில்லை; அது முட்ட வந்துவிட்டு பின்னர் காட்டுக்குள் போய்விட்டாலும் இன்றுகூட நடுக்கமிருக்கிறது அதை எண்ணும்போதெல்லாம்.

சுந்தரம் எத்தனை முறை அதற்காக அவளை பகடி செய்தார்? ஆனால், அவளை விட்டுவிட்ட காட்டெருமை ஏன் செந்திலைத் தாக்க வரவேண்டும் தோல் அழற்சி  நோயாக?

 

ப்பாவும், மகனுமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

“டிவி பாரேன், நம்ம சூபர் லீக் அணி, கேரளா ப்ரிமீயர் லீக்குக்கு தண்ணி காட்டுது பாரு. செந்திலு, நீஆடுவடா, நாஞ் சொன்னா நடக்கும்”

அவன் தலையசைத்தான். ஆனாலும் நினைத்தான்

‘விளையாட்டில் எத்தனை உற்சாகம், ஒருவருடன் ஒருவர் எத்தனை வேகமாக மோதுகிறார்கள்? பந்து உதைக்கும் கால்களின் தோல் எவ்வளவு அழுத்தத்தை தாங்குகிறது? கீழே விழுகிறார்கள், எழுகிறார்கள், எழும்ப முடியாதவர்களை மருத்துவக் குழு உள்ளே வந்து ஏதோ செய்கிறது. அவர்கள் உடனே ஓடத் தொடங்குகிறார்கள். அந்த டாக்டர்கள் என்னை சரி செய்துவிடுவார்களே, ஏன் என்னை இந்த டாக்டரிடம் அழைத்து வந்தார்கள்? நான் கண்டிப்பாக சொல்லப் போகிறேன்- எனக்கு அந்த மருத்துவர்கள்தான் வேண்டுமென்று.’

அப்பாவிடம் சொன்ன போது சிரித்துக்கொண்டே “போலாம், செந்தில். இப்போஅவங்க சாக்கர் க்ரவுண்ட்ல இருக்காங்க இல்ல? இன்னும் ஒரு வாரம் மேட்ச் இருக்கு. அதுக்குள்ள நீயே அங்க போய் அவங்களைப் பாக்கப் போற, நீ எஞ்சாமிய்யா, தகப்பன் சாமி நீ, நல்லாயிடுவையா” என்றார். அவன் பார்க்காதபோது கண்களைத் துடைத்துக்கொண்டார்.

‘நானும் அந்த க்ரவுண்ட்ல விளையாடுவேன்’

மதி அருகே வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

அவனுக்கு வந்திருப்பது Junctional Epidermolysis Bullosa (JEB). அதாவது மேல் தோல் கொப்புளங்கள் தோன்றி தோல் அழிவு ஏற்படும் ஒரு நோய். மேல் தோல் அடுக்கின் அழிவினால் அவன் உடலில் மூன்றில் இரண்டு பங்கு மேல் தோல் அழன்று வெளிவந்துவிடுகிறது. அவன் உடல் சிறு உரசலைக்கூட தாங்க இயலாததாக இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த குழைந்தைகள் மருத்துவ மனை இது. மிகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் இங்கிருக்கிறார்கள். எங்கும் பசுமை கொஞ்சும் சூழல். இங்கு காலனுக்கு என்ன வேலை?

பிஞ்சுதிர, பூஉதிர கனியுதிர, காயுதிரஎன சித்திரகுப்தனின் முரசு ஏன் மாற்றி மாற்றி முழங்கியது? கருவறையில் பூக்கும் உயிர், கனவுலகில் மிதக்கும் பெற்றோர், தன்னுடைய ஜீன்ஸ்ஸிலதைக் கொண்டு உலகாள விழையும் சிற்றுயிர், இத்தனை பெரிய உலகில் அது வாழ வழியில்லையா? பிள்ளைக் கலி தீர்த்துவிட்டு இவன் போய்விடுவானோ? நாங்கள் விட்டுவிடுவோமா என்ன?

 

ம்மையும், ஐயனும் அவனுக்குப் பிடிச்ச திருநவேலி அல்வாவும் உளுந்து வடையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு இதுவா வேண்டும்? பந்து, கால் பந்து.. இந்த ஆஸ்பத்திரிதான் பெரிதாக இருக்கிறதே. நான் விளையாடலாமே. இந்த டாக்டர் சிரித்துக் கொண்டே அவனை என்னவோ செய்கிறார். ஒரே தூக்கம் தூக்கமாக வருகிறது. பீலே வந்து,எழுந்திரு, வா, விளையாடலாம், என்கிறார். அது யார் சத்தமில்லாமல் ரொனால்ட்டா? இந்த டாக்டருக்கு இவர்களெல்லாம் யார் என்றே தெரியாது. அவருக்கு விளையாட்டே பிடிக்காது.

அதிக கவனம் எடுத்துக்கொண்டு செந்திலைக் கவனித்தாலும், இன்றைய நவீன சிகிச்சைகளை அளித்தாலும், அவன் நிலை மோசமாகிக் கொண்டே வருவது மருத்துவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

“சுந்தரம் சார், உங்க தோலையோ உங்க வொய்ஃப் தோலையோ எடுத்து உங்க மகனுக்கு ஒட்ட வைக்கலாம்னு நெனைக்கிறோம். பொருந்தர ஸ்கின் டைப்பத்தான் எடுப்போம். இந்த க்ராஃப்டிங்க் மற்றும் ஒட்ட வைத்தல் உங்களுக்கு சம்மதம்னா செஞ்சு பாக்கலாம். உங்க தோல் ஈசியா வளந்துடும். ஆனா, அவங்கிட்ட இதில் முழு வெற்றியை இப்பவே சொல்ல முடியாது. என்ன சொல்றீங்க?”

‘நாங்க ரெடி, நீங்க இப்பகூடச் செய்யலாம்’

அவர்களின் தோட்டத்தில் ஒட்டு மாமரங்களை நட்டு வளர்த்த நினைவு வந்தது மதிக்கு. கடவுள் எங்கிருந்தோ தனித்தனியாக இருப்பதை ஒட்டி இணைத்துவிடுகிறார். மர்ம முடிச்சுக்களோடு காணப்பட்ட அந்தப் பெயர் தெரியாத மரம், அகத்தியமலை மழைக்காடுகளில் பார்த்த மரம், பட்டைகள் மாறிய நிறமாய் அன்று என்னவொரு வசீகர கவர்ச்சியாக இருந்தது! அவளை நெல்லையப்பர் கைவிடவில்லை. செந்திலுக்கு குருத்துத் தோல் வளரும், ஆம்.. அது அழன்றுவிடாது, கொப்புளங்கள் தோன்றாது, வெடித்து உள்ளெலும்பு வெளிவராது. அவன் கால்பந்தின் நாயகன். அப்பனின் கனவை அவன் சாதிப்பான்.

சுந்தரத்தின் தோல்தான் ஒத்து வந்தது.

செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அப்பா அவன் உடலோடு இருக்கப் போகிறார் என்பது மட்டும் எப்படியோ புரிந்தது.

‘ஐயா, நான் உன்ன மாரி பெரிசாயிடுவேனில்ல, அப்ப நான் டைடானிக் டீமுக்காக ஆடுவேனே. ஆனா, டாடி நீ என்ன மாரி சின்னவனா ஆயிடுவியா?’

சுந்தரம் மிகக் கவனமாக அவனைத் தொட்டார். ”நாம ரெண்டு பேருமே பெரியவங்களா இருப்போம்.’

அவன் உடல் முதலில் ஏற்றுக் கொண்டுவிட்டு பிறகு அந்த தோல் திசுக்களை முழுதுமாக உதறிவிட்டது. டாக்டர் குழு திகைத்துப் போயிற்று. இனி இவனை எப்படி காப்பாற்றுவது?

அவன் பெனால்ட்டி கார்னர் கோல் அடித்து அணியை வெற்றிப் பெறச் செய்கிறான், மெஸ்ஸி அவனைக் கட்டி அணைக்கிறார். திருவனந்தபுரம் எஃப்சியின் ராஜேஷ் தோளில் அவனைத் தூக்கி கூத்தாடுகிறார். பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. அவன் எல்லா டிவியிலும் தான் தெரிவதை ஆசையோடு பார்க்கிறான். செந்தில்,அந்த பைசைக்கிள் கிக்கிற்காக எனக்கு உன்ன கண்ணாலம் கட்டிக்கிடணும் போல இருக்குடாஎன்கிறாள் கோமதி. அவ தான் எம்புட்டு அழகா இருக்கா?அவ தானே தெனம் வந்து அவனோட உக்காந்திருக்கா, திருட்டுத்தனமா கொடுக்காபுளி கொடுக்குறா? ஆனா ஏன் நல்ல தமிழே பேச வல்ல அவளுக்கு. அவன் ஹாஸ்பிடலேந்து போனதுமே அவளுக்கு சொல்லித் தருவான்.

“சாரி, சுந்தரம், நீங்க செந்தில வீட்டுக்கு கூட்டிப் போயிடுங்க இனி நாங்க செய்ய ஏதுமில்ல” என்றார் மருத்துவர்.

எதற்கும் கலங்காத சுந்தரம் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பினார். காந்திமதி காரிடோரில் நின்று அழுதாள். வெள்ளிச் செதில்களை உதிர்த்த மீன். தங்க உடலுடன் அது ஏரியில் போயிற்றேஅது என்னவாயிற்று?அதற்கு என்னதான் ஆகப் போகிறது?

இல்லை, அதற்கு ஒன்றுமாகவில்லை. அது நீந்திக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறது. அதன் அம்மா அதை சாக விடமாட்டாள். அவள் கடவுளுடன் போராடுவாள். ஒட்டு மாமரங்களை வேலியிட்டு காத்தவள் அவள், வெயிலில் கருகாது நீரூற்றி வளர்த்தவள் அவள், துளிர் விட்டு வளர்கையில் அந்த மரக் கன்றுகளிடம் பேசியவள் அவள். சூரியன் அவைகளைத் தொடுகிறான் எனவும், அந்த மாயப் பச்சை இலைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கவிதை சொன்னவள் அவள்.

செந்தில் அப்பா, கொஞ்சம் வாங்க நான் டாக்டரிட்ட பேசணும்’ என்றாள்.

“இனி அவங்க செய்ய ஒன்னுமில்ல, மதி.”

‘இருக்குதுங்க ‘

“என்ன இருக்கு? அவங்களவிட நமக்குத் தெரியுமாக்கும்?”

‘நமக்கு வைத்தியம் பத்தி தெரியாதுதான். ஆனா, மாத்து வழி இருக்கான்னு கேக்கலாமில்ல?’

“என்ன வழி? இறுதி வரை….. சாரி.. இங்கனையே இருக்கச் சொல்லுதியா?”

‘நா மன சாந்திக்குத் தானே கேட்கணுங்கேன்: மாத்து இல்லைன்னு அவங்க சொன்னா எல்லாரும் வீடு போயிடலாம்’ என்றாள் பிடிவாதமாக.

டாக்டர் அவர்களை ஏறிட்டார். அவரது மேஜையில் ‘ஜீன் தெரபி அன்ட் ரெசரக்ஷன்’ என்ற புதிய புத்தகம் இருந்தது.

 

 

உமையாள்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

தரையைத் தொட்டுச் செல்லும் ஓசைகளுடன் விமானங்கள் தாழப் பறந்து செல்வதை இங்கே வரும்போதே கண்டாள் உமையாள். மனிதர்கள், அவர்களது அவசரங்கள், அவஸ்தைகள், ஏமாற்றங்கள். தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக நினைத்தாள். இல்லை இந்த வெற்று வேகங்களுக்கான அவசியங்கள் அவள் வாழ்வில் ஏற்படவேயில்லையே. பின் அவள் எப்படி தோற்றவளாவாள்? தோற்றவளில்லை, ஆனால் பறிகொடுத்தவளோ? அதில் அவளது பிழைதான் என்ன?

பதினேழு வயதில் அவள் பி.ஏ முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் படிப்பை நிறுத்தி அவளுக்குத் திருமணம். இளமையை உணரும் பொழுதுகளுக்கு முன்னாலே கர்ப்பம். முத்துமீனாள் பிறந்த இரு வருடங்களுக்குள்ளாகவே அவள் மங்கலப் பெண்ணிலிருந்து விதவை எனப்பட்டாள். கனன்று கொண்டிருந்த தீ மேலே சாம்பல் பூத்தது. ”உனக்கென்று ஏதும் ஆசைகள் இருக்கிறதா, மேலே படிக்கிறாயா, கைத் தொழில் ஏதாவது கற்றுக் கொள்கிறாயா?” எனக் கேட்டவர் இல்லை. மாமியாரும் இல்லாத பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக, இப்பொழுது கணவனையும் இழந்தவளாக அவள் நிலை புகுந்த வீட்டாருக்கு வசதியாகத்தான் போனது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டும், அவள் உழைத்தாலும் எல்லோரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முத்துமீனாளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தே ஆறு வருடங்களாகிவிட்டன. அவளின் நாத்தியின் மகன்தான் மருமகன்.

உமையாள் இன்று ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்று புரியாமல் யோசித்தாள். இந்த இடத்தை ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியுமா? முத்துமீனாளும்,குமரப்பனும் நான்கு வருடங்களாகவே சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள். தன்னை இங்கே அழைத்து வந்திருப்பது அவளுக்குக் குடும்ப வேலைகளிலிருந்து சற்று ஓய்வு எனக்கூடச் சொல்லலாம்.

எத்தனை அழகான இடங்கள், வகைவகையான மனிதர்கள், அவர்களின் விரைவோட்டங்கள், எறும்புச்சாரியென வரிசையில் கார்கள், அமைதி ததும்பும் ஆலயங்கள், சிரித்துக் களியாடும் பூங்காக்கள், உலகின் அத்தனை விதமான உணவுகளும் கிடைக்கும் விடுதிகள், உழைப்பிற்கும், நேரத்திற்கும், சுத்தத்திற்கும், பணத்திற்கும் முதன்மை கொண்டாடும் மக்கள். இது வேறு ஒரு உலகம்.

ஆனால், எதற்காக மருத்துவமனை வந்திருக்கிறோம் என அவளுக்குப் புரியவில்லை. மீனாளும்,குமரனும் அவளை அங்கே அமர்த்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அவள் அமர்ந்திருந்த வரவேற்பறையில் இனிதான லாவண்டர் மணம் கமழ்ந்தது. உறுத்தாத இசை மெலிதாகக் கசிந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனிலிருந்த நான்கு யுவதிகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தனர். மீனாள் போடுகிற லிப்கலர் நன்றாக இல்லையென்றும், முடிந்தால் இவர்களிடம்  அந்த வகையைக் கேட்க வேண்டும் என்றும் உமையாள் நினைத்துக் கொண்டாள்.

கூடை கவிழ்த்தது போல் முடியுடன் ஒரு சிறு பெண் குழந்தை அவளைக் கடந்து ஓடியது. கால்களில் கொலுசுடன், கைகளில் வளையல்களுடன் ஓடிய அக்குழந்தை நிச்சயமாக தென் இந்தியாவைச் சேர்ந்ததுதான். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பெண் வேறு இனத்தவளாகத் தோன்றினாள். மீனாளுக்கும் காலாகாலத்தில் ஒரு குழந்தை பிறக்கவேண்டும். குணத்தில் அவளைக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

உமையாள் சிரித்துக் கொண்டாள். பிறந்தபோது வந்த குணம் பொங்கலிட்டாலும் போகுமா? தேவகோட்டையிலிருந்து  இளம்பாளையம் செல்வதற்கு குடும்பத்துடன் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பேருந்தில் ஒரே ஒரு ஜன்னல் சீட்டுத்தான் காலியாக இருந்தது. குமரன் தாவி ஏறி அதில் அமர்ந்துவிட்டான். பின்னர் ஏறிய மீனாள் இறங்கிவிட்டாள். ”ஆச்சி,நாம வீட்டுக்குத் திரும்பலாம்.”

எத்தனை கேட்டும், அவள் காரணத்தைச் சொல்லவில்லை. உமையாள் வேறு வழி இல்லாமல் பயணத்தைத் தொடராது இவளுடன் வீடு திரும்பும்படி ஆகிவிட்டது

”எனக்கு ஜன்னல் ஓரந்தான் புடிக்கும்”  என்றாள் தானாகவே மீனாள்.

“ஏட்டி, அதுக்கா பயணத்தை நிறுத்திப் போட்டே. நம்ம குமருதானே, சொன்னா வுட்டுக் கொடுப்பான் இல்ல?”

“அது அவனுக்கே தெரியணுமில்ல. பின்னையும் நா ஏன் கேக்கணும்?”

“அப்படின்னா?”

“அப்படின்னா அப்படித்தான்”

“மொத்தத்தில் என்ன போகமாட்டாம செஞ்சுட்ட”என வாய் வரை வந்த வார்த்தைகளை உமையாள் முழுங்கினாள். அன்று இரவு இவளை நினைத்து கவலைப்பட்டாள்.

தன் சுகத்தை அவள் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தாத்தா, சித்தப்பன்மார், அத்தை எல்லோரிடமும் சலுகை.

“அப்பன் முகம் அறியா புள்ளையை ஒன்னும் சலியாதே”என்று அவர்கள் மீனாளின் பக்கமே நின்றார்கள்.

கல்லூரியில் படிப்பு முடியும் வருடம்.“ஆச்சி, நான் குமரப்பனை கட்டிக்கிடலாமென நெனைக்கேன். நீ பேசுதியா, நாஞ் சொல்லட்டா?”

“என்னடி, நம்மை வைச்சு மானமா காப்பாத்தி இருக்காஹ. படிப்பு, பவிசு எல்லாமே அவங்களால. இன்னும் அரியணை கேக்குதா உனக்கு? நம்மால அவுகளுக்கு ஈடு நிக்க முடியுமா? நீ வேலைக்குப் போய் நம்ம கால்ல நிக்கலாம்னு நா கனா கண்டுட்டிருக்கேன்”

“எனக்கு வளப்பமா இருக்கணும். நீ இத்தனை காலம் உழச்சிருக்கல்ல, அதுக்கு கூலின்னு நெனைச்சுக்கோ”

தன்னை எந்த ஒரு சொந்தமும் இவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என அன்று முழுதும் பிறர் அறியாமல் உமையாள் அழுதாள். வென்றதென்னவோ முத்துமீனாள்தான். நாத்திக்கும் நல்ல மனம். பிள்ளையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை.

சிந்தனைத் தொடர் அறுந்து நிகழ் உலகிற்கு வந்தாள் அவள். எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? எத்தனை நேரம்? சலித்து எழுந்து நடந்து வெளியேறும் மையப் பகுதியில் வந்து நின்றாள். அங்கிருந்த ஒரு அழகான சிற்பம் அவளைக் கவர்ந்தது. வழவழப்பான ஒற்றைக் கரும்பாறையில் ஒரு வட்ட முகம், அதன் கழுத்துப் பகுதியிலிருந்து கிளைத்த இரு உடல்கள், அந்த உடல்களின் மார்புப் பகுதியில் ஒரு சிறு குழந்தை. பார்க்கப் பார்க்கப் பரவசமானாள் அவள். ஒருகால் இந்த மருத்துவமனை மகப்பேற்றுக்கானதோ? அப்படியென்றால், மீனாள் அதற்காகத்தான் வந்திருக்கிறாளோ? என்னிடம் சொல்லக்கூடாதா?

“உன்னை எங்கெல்லாம் தேட்றது, ஒரு இடத்துல இருக்கமாட்டியளோ இங்கிலீஷும் தெரியாது, காணாமப் போனா எங்கிட்டுன்னு பாக்க. சரி, சரி டாக்டர் விளிக்கிறாங்க, வா “

மொழி புரியாவிட்டாலும், உணர்வுகள் வெளிப்படும் குரல் காட்டிக் கொடுத்துவிடாதா, என நினைத்துக் கொண்டு உமையாளும் உடன் சென்றாள்.

டாக்டர் இள வயதினளாக இருந்தாள். சிரித்துக் கொண்டே கைகுலுக்கி பரிசோதிக்கும் படுக்கையில் படுக்கச் சொன்னாள்.உமையாள் தயங்க, “சொன்னதைச் செய்”என்று பல்லைக் கடித்தாள் மகள். ”ஒண்ணுமில்ல, மதனி, ஒரு ஜெனரல் செக்கப், பயப்படாதீய” என்றான் குமரப்பன். என்னென்னவோ பரிசோதனைகள், உமையாளிற்கு ஒன்றும் விளங்கவில்லை. வீடு திரும்புகையில் அவர்கள்  ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”தம்பி, குமரு, என்னதுக்கப்பா இம்புட்டு செலவு செய்யறிஹ. நான் நல்லாத்தான இருக்கேன்,” என்றாள்.

“மதனி, மீனாளுக்கு யூட்ரஸ் பழுது. அவ கர்ப்பம் தரிக்க ஏலாதாம். அதான் உங்களுக்குப் பார்த்தம்”

“என்ன சொல்லுதீய?அவளுக்கு என்ன கொறை? ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லலை? நம்மூர் டாக்டரிட்ட போவோம். அதெல்லாம் சரி பண்ணிடுவாக நம்மூர்ல.”

“சிங்கப்பூர்ல்யே முடியாதுன்னுசொன்ன பொறவு நம்ம பட்டிக்காட்டுல என்ன செஞ்சுடுவாக? ஏதும் விவரமா பேசுதியா நீ?” என்றாள் மீனாள்.

“சரி, உன் கொறையை சரி செய்யமுடியாது. ஆனா, எனக்கு எதுக்கு டெஸ்ட் எல்லாம் செஞ்ச?”

“உனக்கு எல்லாம் நல்லா இருக்குதாம். நீ எங்களுக்கு மகவு சுமந்து தரணும்”

உமையாள் பேச்சிழந்தாள்.

“மதினி,பயப்படாதிக. ராணி போல பாத்துகிடுதோம்.”

“தம்பி,மெய்யாலுமே எனக்கு விளங்கல. என்னைய என்ன செய்யச் சொல்லுதீய?”

“நீ வாடகைத் தாயா இருக்கணும் எங்களுக்கு. எங்க மகவுதான் எங்களுக்கு வோணும்…”

“மேலே சொல்லாதே. நான் இதுக்கெல்லாம் ஒப்புவேன்னு எப்படி நெனைச்சீக”

“ஐய, எல்லாம் லேப்லதான் நடக்கும். உருவான கருதான் உன் கருப்பைக்கு வரும். என்ன சுமந்த மாரி நினைச்சுக்க. எனக்காக இதை செய்ய மாட்டியா என்ன?”

உமையாள் பேச்சற்று அமர்ந்தாள். ஊரிலே அவளுடைய கொழுந்தன் அவங்க வங்கியில ‘அவுட்சோர்ஸ்’ செய்யறதைப் பற்றி சொல்லி விளக்கியது இப்பொழுது நினைவிற்கு வந்தது. தந்திரமாக சிங்கப்பூர் அழைத்து வந்து, ஊரைச் சுற்றிக் காட்டி, விஷயமே சொல்லாமல் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று, தங்கள் செயல்பாடுகள் நியாயமென வாதாடும் இவர்கள் இத்தனை மட்டமானவர்களா?

“மதனி பயப்பட்டுச்சுன்னா வேணாம் மீனா. பின்னர் பாத்துக்கிடலாம்”அவன் சொல்வது கேட்டது.

“”அம்ம வளப்பமா இருக்கையில நடத்திப்புடணும். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவுகளுக்கு. நாம சொல்றதைத்தான் கேக்கணும். என்னாலெல்லாம் மகவு சுமந்து சங்கடப்படமுடியாது. ஆண்டவன் சரியாய்த்தான் கொடுத்திருக்கான் எனக்கு.”

உமையாளுக்கு தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது.

கல்பனாவின் கடிதம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்திவிட்டு மெதுவே இறங்கி வரும்போதே அவள் அதிசயித்தாள், தனக்கு யார் கடிதம் போட்டிருக்கக் கூடுமென. நேற்று பெய்த மழை வாசலில் தேங்கியிருக்கிறது. அதில் அந்தக் கடிதம் விழுந்திருக்கக் கூடாது. நல்ல வேளை, ஈரம் படவில்லை. காய்ந்த இடம் பார்த்து போட்டுவிட்டுப் போயிருப்பது யார், ஜோசஃப்போ? ஜோசஃபாக இருந்தால் மோரோ, தண்ணீரோ கேட்டுக் குடித்துவிட்டு சில கதைகள் பேசிவிட்டுத்தான் போவார். ”பாப்பா, முக்கத்து வீட்டு வேணு, அதாம்ப்பா, முல்லைக் கொடி வெளிய படந்திருக்குமில்ல, அவருதான், மொத்தம் ஆறு புக் எஸ் எஸ் எல் சி, அதாம்மா, உங்க பதினோராவது, வாங்கினாரு. அந்த எக்ஸாமினரே அவரு வீட்டிக்குப் போயி இனி எழுதாதையா, நானே உனக்கு வேல பண்ணி வைக்குறேன்னு கால்ல விழுந்துட்டாரு” என்று சிரிப்பார்.  ஆனால் ஜோசஃப்  எப்பொழுதோ ரிடயர் ஆகிவிட்டாரே. கடிதமே வராத ஒரு வீட்டிற்கு அதிசயமாக ஒன்று வந்திருக்கிறதே, அந்த ஆள் யாரெனப் பார்ப்போம் என்றுகூடத் தோணவில்லையே, இந்த தபால்காரருக்கு என எண்ணியதற்காக தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.

சிறு வயதில் ஜோசஃப் கொண்டு வரும் கோலி மிட்டாய்க்காக (கோலி மிட்டாயா, கோழி மிட்டாயா?) அவள் காத்திருப்பதுண்டு. அவரை ‘சான்டா க்ளாஸ்’ தாத்தா எனதான் நினைத்திருந்தாள் பலகாலம். அவளுடைய அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை அவர் கொடுத்தபோது இதே போல் பிரித்துக்கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்ததும் அவர் பதறியதும் நிழலாடின.

எங்கிருந்து வந்திருக்கிறது இந்தக் கடிதம்? யார் எழுதியிருப்பார்கள்? தபால் முத்திரை தெளிவாக இல்லை, அனுப்பியவரின் முகவரியும் இல்லை. தன்னுடையதைப் போல் சாய்ந்த எழுத்தில் தனக்குத் தெரிந்து எழுதுபவர் யார்?

ஒருகால் அப்பாவாக இருக்குமோ? கண்ணம்மா என்று முகவரியில் எழுதியிருந்தால் அது நிச்சயமாக அப்பா. அவள் அவசரமாக முகவரியை மீண்டும் பார்த்தாள். இல்லை, கல்பனா என்றுதான் இருந்தது. ஏன்  ஏமாற்றமும், ஆசுவாசமும் ஒருங்கே வருகிறது என அவளுக்குப் புரியவில்லை. அம்மா சிரிப்பது போல் கேட்டது, சிரிப்பைப் பழிப்பாக, பழிப்பைச் சிரிப்பாக மடைமாற்றம் செய்பவள் அம்மா. ”ஏன்டி, ஸ்வீட்டை இன்னமும் சாப்ட்ல, தயிர்ஞ்ஜாம் வேண்டாமா?”

‘கடேசில சாப்ட்றேம்மா’

“என்ன கடசியோ? டிரெஸ், பேனா  எல்லாத்தையுமே கடசி, கடசின்னுட்டு”

‘இப்போகூட இந்த லெட்டர பிரிக்கறதவிட அதக் கடேசியா செய்யத்தான் தோணுதம்மா’ அம்மா நிச்சயமாக பழித்துக் கொண்டிருப்பாள். ஆனாலும், அம்மா கடிதம் எழுத மாட்டாளா, என்ன? அவள் மீண்டும் ஒருமுறை முகவரியைப் பார்த்தாள். அம்மாவின் எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.

அவள் யதேச்சையாக கையிலிருந்த காகிதத்தில் காற்றில் படபடக்கும் அந்த நீலப் பறவைகளைப் பார்த்தாள். உயிரற்ற பறவைகள். அவை உயிரும் கொண்டு வருமோ என்னமோ?

எல் ஜி ராய் எழுதியிருப்பானோ? கல்பனாவிற்கு சிரிப்பு வந்தது. எல் ஜி ராய் எழுதியிருப்பாரோ என்று நினைக்க வேண்டுமோ? அன்றுகூட எதிர்பாராத மழை. முழுதுமாக நனைந்த அவன் சீட் முன் நின்று தன் ஆர்டரைக் காண்பித்த நேரம்- அவனுக்கு வெல்கம் சொல்வதா, மேஜையிலிருந்து கைகளை எடுக்கிறீர்களா என்று சொல்வதா,  எனத் திகைத்தாள். அவன் ‘சாரி’ என்றபின்தான் அவள் இயல்பிற்கு வந்தாள்.

“நீங்கள் ப்ரேஞ்ச் மாறி வந்திருக்கிறீர்கள். சாரி”

‘இல்லையே, விசாரித்துவிட்டுத்தானே வந்தேன்’

“சாரி, போய் போர்டைப் பாருங்கள்.”

அவன் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் குழப்பத்துடன் வந்தான்.

“சரியாகத்தானே வந்திருக்கிறேன்” என்றான் அழாத குறையாக.

‘என்ன சார், ப்ரமோஷனில் வருகிறீர்கள், நேரத்திற்கு வர வேண்டாமா? லேட்டு முத நாளே. உங்க கன்ஃபர்மேஷன் ஒரு நாள் தள்ளிப் போகும் தெரியுதா?’ என்றாள் அவள்.

அவனுக்கு உயிர் வந்தது. ”சாரி, சாரி,” என்றான்.

அவனுடன் நிறைய ப்ரேங்க்ஸ். எப்போதும் எதற்காவது அவளிடம் மாட்டிக் கொள்வான். ஸ்டாக் இன்ஸுரன்ஸ் தேதியை அவன் ஒருமுறை கவனிக்கவில்லை. அது வங்கியில் அடமானத்தில் இருந்த கேஷ் க்ரெடிட் ஸ்டாக்ஸ். சோதனையாக அந்த ஸ்டாக்ஸ் திருடும் போய்விட்டது. மதிப்பு பத்து லட்சம். என்ன செய்வான் அவன்? நெக்லிஜென்ஸ், கேர்லெஸ்னஸ், கூட்டுச் சதி- காப்பு நிச்சயம். எப்படியெல்லாம் பயமுறுத்தினாள் அவனை அவள். அக்கவுண்டைப் பார்த்து அவளே அந்த காப்பீட்டைச் செய்துவிட்டாள் என்று அறிந்ததும் அவன் விட்ட பெருமூச்சு, அவள் கைகளை விடாது பற்றிக் கொண்டே இருந்தது, ‘பிசாசு’ என்று செல்லமாகத் திட்டியது, ‘முத்துடைத்தாம நிறை தாழ்ந்த பந்தற்கீழ்’ என மனம் விம்மியதோ?  ராய் வெட்ஸ் சர்மிஷ்டா என அழைப்பிதழ் வந்தபோது  பூத்த பவளமல்லி சற்று வாடியே வாசம் வீசியது.’ராய் வெட்ஸ் சர்மிஷ்டா, கல்பனா வெட்ஸ் ஹர் ஐய்ஸ்’ என கவித்வ சோகம் கவ்வியது. பச்சை ஓடு தெறித்து விரிந்து பருத்திக்காடு கிளியைப் பார்த்துச் சிரித்தது.

அவன் எழுதியிருப்பானோ, இந்தக் கடிதத்தை?அவனுக்கு தமிழ் எழுத வராதே? வடக்கே போன பிறகு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே அவர்களுக்குள் கடிதங்கள். முதல் குழந்தை ஆண் என்று ஒரு கடிதம். அந்தப் பயலுக்கே இப்போது இருபது வயதிருக்குமில்ல? அவளை ’சேட்டர் பாக்ஸ்’ என்றே கூப்பிடுவான் ராய்.

ஒருகால் சாதனா வீட்டிலிருந்தோ? அவளுக்குத் தமிழ் தெரியும், ஆனால், பிடிவாதமாக ஆங்கிலத்தில்தானே எழுதுவாள்? அன்று அவ்வளவு கோபத்திலும் சரமாரியாக ஆங்கிலத்தில்தானே திட்டினாள். ஒருவேளை, அதற்காக மன்னிப்பு கேட்டு எழுதியிருப்பாளோ?

நசநசவென்று மழை அன்றைக்கு பெய்து கொண்டிருந்தது. அதற்கே மின்சாரம் நின்றுவிட்டது. சாதனா ஏற்றிய மெழுகுவத்தியில் தங்கள் மூவரின் உருவமும் கரும் பூதங்களெனச் சுவற்றில் அலைபாய்ந்ததை கல்பனா பார்த்துக் கொண்டேயிருந்தாள். தன் நிழலை சாதனாவின் நிழலில் சேர்த்தாள்; அவள் தலையிலடித்துக் கொண்டு சிரித்தது நிழலில் மிகக் கோரமாக இருந்தது. பின் சங்கரின் நிழலில் அழுத்தமாக இணைக்கப் பார்த்தாள். விளையாட்டாகத்தானா என்று அவளுக்கும் தோன்றாமலில்லை. மிக அடிக்குரலில் சாதனா திட்டியது வியப்பென்றால் முதலில் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு எதுவுமே பேசாமல் அங்கிருந்தும் நகராமல் இருந்தானே அந்த சங்கர், அவனுடைய நிழலிலா என் நிழலை ஒட்டப் பார்த்தேன் என்று அவளுக்கு கசந்து வந்தது. இந்த வயதில் அப்படி ஒரு கசப்பு சாத்தியமா தனக்கு? அந்தக் கசப்பில் ஓர் இனிமையை அவள் உணர்ந்த மாதிரி சங்கருக்கும் ஏதாவது தோன்றியிருக்குமோ? அவன் இருளில் ஆடும் சலனங்களை அறிந்திருப்பான் என்றால் அவளிடம் எப்போதோ பேசியிருப்பானே? சரி, பின்னர் யார்? அந்த ஹோட்டலில் சந்தித்த பேராசிரியரா?

எல்லோரும் போகிறார்களேயென்று அவளும் அன்று ஐயப்ப பூஜைக்குப் போனாள். கருப்பும், காவியுமாக சரண கோஷங்கள், பூக்கள், சந்தனம், வியர்வை என கதம்ப வாசனை. மேளமும், நாகஸ்வரமும், குழந்தைகளின் அழுகையும், சலசலவென கலவையான பேச்சுச் சத்தமும் இழுத்துப் பார்த்தாலும், வழுக்கியோடும் எண்ணங்களும், யாரை ஏமாற்ற இங்கே இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்ற சாட்டையடியும் அவளுக்கு. மெதுவே நழுவி வருகையில் பயங்கரமாகப் பசித்தது. அருகில் இருந்த அந்த உணவு விடுதியிலும் மக்கள் திரள். அதில் நீந்தி ஒரு காலியான இருக்கையை ஒருவாறு அடைந்தாள். எதிரெதிரே ஒருவர் ஒருவராக அமரும் இருக்கைகள் ஒன்றில் நடுத்தர வயதுள்ள கண்ணிய தோற்றமுடைய ஒருவர் உட்கார்ந்திருந்தார். ’யாரும் வருகிறார்களா?’ எனக் கேட்டுவிட்டு ‘இல்லை, நீங்கள் உட்காருங்கள்’ என்ற பதிலால் பாதி பசி போய்விட்டது போல் உணர்ந்தாள். இவள் விரைவாக சாப்பிட்டு முடித்தும்கூட அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ’பில் வந்தால் பரவாயில்லை’ என இவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு ‘பில்’ முதலில் வந்தது. அவர் பணத்தை அட்டைக்குள் வைத்துவிட்டு எழுந்து போனார். அதை எடுக்க வந்த பணியாளரிடம் அவள் தன் பில்லைக் கொண்டுவருமாறு சொல்கையில், ‘இப்போ எழுந்து போகிறாரே, அவர் உங்களுடன் வந்தவரில்லியா, அவர் கொடுத்துவிட்டாரே’ என்றவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பணியாளரை ஓடிப் போய் அவரை கூப்பிட்டு வரச் சொன்னாள்.

அவர் திகைத்து உடனே சமாளித்துக் கொண்டுவிட்டார், ”ஸாரி, மேம். நான் சாப்பிட்டதற்கான தொகை என்றே நினைத்தேன். அதனாலென்ன, பரவாயில்லை, நான் ‘ட்ரீட்’ கொடுத்ததாக இருக்கட்டுமே,” என்றார். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. தன் செலவு தன்னுடையது என்று பிடிவாதம் பிடித்தாள். அப்படி ஆரம்பித்த சந்திப்பு பாரதியும், ஓஷோவும், ரமணரும், அரவிந்தரும், திருமழிசை ஆழ்வாரும், ராஜா இசையமைத்த திருவாசகமுமென இரு வருடங்கள் கரை புரண்டு ஓடிற்று. காட்டாறு எங்கு தொடங்கும், எத்திசையில் பாயும், எப்போது திசை மாறும், எப்போது மறைந்து போகும், யார் சொல்லக்கூடும்? தொடர் நட்பிற்கான, தொடர் உறவிற்கான, எது தன்னிடம் இல்லை என அவள் சிந்தித்து அலுத்துவிட்டாள். அவள் முதன்முதலாகப் பரிசெனப் பெற்றது ஒரு தங்கச் சங்கிலி. அதன் கண்ணிகள் ஒவ்வொரு இடமாக விட்டு விட்டுப் போகையில் அவள் பற்ற வைத்துக் கொண்டேயிருந்தாள், பத்தர் மறுக்கும் வரை.

அதெல்லாம் இருக்கட்டும், இந்த எழுத்து அவருடையதில்லை. மருத்துவர்களைவிட கிறுக்கலான எழுத்து அவருடையது. மேலும், விலாசத்தை ‘டைப் ‘ செய்யும் வழக்கம் உள்ளவர். எழுதுவதைவிட பேசுவதிலல்லவா அவருக்கு விருப்பம் அதிகம்? அவரும் இல்லையென்றால் வேறு யார்?

எதற்கு இந்த சிந்தனை? பிரித்துப் பார்த்தால் தெரிந்து போகிறது. அவள் கூடத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு, பிரிக்கலாம் என நினைத்தாள். சுவரின் ஈரம் முதுகில் ஜில்லென்றிருந்தது. தமிழ் டீச்சர் லஷ்மிகாந்தம் நினைவிற்கு வந்தார். ‘நனை சுவர் கூரை கனைகுரல் பல்லி’ – என்ன ஒரு சொற்றொடர்! அவள்கூட நனை சுவரில் நின்று அந்தக் கடிதத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வாசலில் தேங்கியுள்ள மழை நீரில் தன் முகத்தைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.

 முப்பது பணம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

கல் பதித்து சிமெண்ட் பூச்சால் இணைக்கப்பட்ட தரை அங்கங்கே வெடித்திருந்தது. அது குளக்கரை மேடை. பனியின் குளிர்ச்சி பிளவுகளின் இடையே பரந்திருந்த மண்ணிலும், பல்லிளித்த கற்களிலும் இன்னமும் இருந்தது. ஆனாலும் மேலே சூரியன் ஒளிப்பிரகாசனாய் இருந்தான். அடர்த்தியான அரச மர நிழலில் நானும் பிள்ளையாருமாக உட்கார்ந்திருந்தோம். இளம் பிள்ளையார். அனுபவங்களின் கசடுகள், கசப்புக்கள் இல்லாமல் தொந்தியின் மேலெழும் தும்பிக்கையுடன் அசையாமல் அமர்ந்திருந்தார். இலைகளின் ஊடே தண்ணீர்த் தகட்டில் நிழலாடும் ஆடியென வானம் கண்ணாமூச்சி காட்டியது. நான் கணேசனைப் பார்த்து நட்புடன் சிரித்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. சிரிப்பு… நட்பு.. இந்த உணர்வுகள் மரத்துவிட்டதென்றே நினைத்திருந்தேனே, இன்னமும் வாழும் முனைப்பு என்னிடம் இருக்கிறதோ?என் குறுஞ்சிரிப்பு இப்பொழுது முரண் நகையாகி ஏளனச் சிரிப்பாக வழிந்தது. ’என்னை ஏன் கலவரப்படுத்துகிறாய்?’ என்று அசையாப் பிள்ளையார் கேட்பது போல் தோன்றவும் வாய் விட்டுச் சிரித்தேன். என்னைப் பார்த்து எத்தனை பேர் சிரித்திருக்கிறார்கள்- இப்பொழுது என் முறை, பிள்ளையே!

அரசிலைகள் சலசலத்து நீரின் மேல் நில்லாக் கோலங்களை வரைந்தன. தெளிவில்லா உருவங்கள். பிம்பங்கள் கலைந்து கலைந்து ஒன்று மற்றொன்றாய் உருவெடுத்து அழிந்தன. சாரையும் சர்ப்பமுமாய் ஆட்டம் காட்டின. வளைந்து வழுக்கி ஓடும் அது சாரையா அல்லது காமினியா, கவிதாவா,  புவனாவா?ஆவலுடன் நீந்திச் செல்லும் அந்த சர்ப்பம் நானோ? அவை ஒரு மாலையைப் போல் ஏன் காட்சி தருகின்றன? இல்லை, மாலையில்லை ஒரு வட்டம், நீள் வட்டம், அடியும் நுனியும் காணாத வட்டம். தொடக்கப் புள்ளியையும் முடிக்கும் புள்ளியையும் விழுங்கிவிட்ட முழு வட்டம்.

வட்டம் எப்போது அரசிலை ஆனது?அல்லது அரசிலைதான் வட்டமாகக் காட்டியதா? பிள்ளையாரைக் கேட்கலாம் என்றால் அவ்வளவு பெரிய செவிகள் இருந்தும் காதுகளை அவர் மூடிக் கொண்டுவிட்டார். துண்டை உதறி என் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அவரின் பின்புறம் சென்று படுத்துக் கொண்டேன். நினைவுகளை இப்படி உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

என்னுடைய பதினாறாம் வயதிலே நாங்கள் அந்த ஊருக்கு வந்தோம். பேரையும், ஊரையும் சொல்லி நான் யாரையும் சங்கடப்படுத்தப் போவதில்லை. மொத்தமே பதினாறு வீதிகள் தான். ஒவ்வொரு வீதியிலும் இருவது, முப்பது குடும்பங்கள். இரு நாட்களில் ஊரின் முகங்கள் முழுதும் பரிச்சயமாயிற்று.

சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்தாள். ’பொன்னுத்தாயி ஊருக்குப் போயிடிச்சு. நாந்தான் வருவேன் இனி. என்னா, முழிக்கிறே? பால் சொம்பு கொண்டா’ என்றாள்.’அம்மா, பால்’ என்று குரல் கொடுத்துவிட்டு நான் வாசலில் அவள் சைக்கிளைப் பார்க்க விரைந்தேன். ரொம்பப் பழைய மாடல் ‘ஹெர்குலஸ்’. ஆண்களுக்கே உயரம் அதிகம். பால் கேனை மாட்டிவிட்டு அதில் அவள் ஏறிய லாகவம். பிரமிப்பதற்குள் விரைந்து விட்டாள்.

இலேசான மினுமினுப்போடும் உறுதியோடும் தெரிந்த அந்த கணுக்கால்களையும், ஆடுசதையினையும் நான் அடிக்கடி பார்க்க நேரிட்டது. குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டேயிருப்பாள். புல்லுக்கட்டு, புண்ணாக்கு, தவிடு என அவள் கேரியரில் ஏதாவது பயணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் அசந்தே போய்விட்டேன், நோயுற்ற  பெரிய கன்றுக்குட்டியை சைக்கிளில் கட்டி ஓட்டிப் போனாள். அசாத்யமான பெண். அவளைப் பற்றி என் மதிப்பு உயர்ந்து கொண்டே போயிற்று. என் அக்காவும் இருக்கிறாளே.. தேங்காயை உரித்துத் தந்தால் மட்டும் போதாது, உடைத்தும் தர வேண்டும். அவளிடத்தில் எனக்கு என்ன ஈர்ப்பு என்றே புரியவில்லை. அவளைப் பற்றி யாரோடாவது பேசி கிண்டலுக்குள்ளாவேன்.

தன்னை மறந்து செயலில் முனைப்போடு இருக்கும் அவளை முடிந்தபோதெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

“டேய், மோகினி உன்ன புடிச்சிருக்கு.விட்டுடு, இல்ல தவிப்ப” என்று சீனி சொன்னபொழுது ‘போடா, டேய்’ என்றுதான் சொன்னேன்.

அவள் என்னைவிட ஆறேழு வயது பெரியவள். ’இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கா அவ அத்தை வீட்ல. பாவம், அம்மா, அப்பா இல்லயாம்.  ஓடா உழச்சி மாடாத் தேயறது, என்னிக்கு விடியுமோ?’ அம்மா பேச்சுவாக்கில் சொன்ன செய்தியில் நான் அவளுக்கு காமினி எனப் பெயரிட்டேன்.’நா இருக்கேன் உனக்கு’ என மனதில் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.

கோடை விடுமுறை வந்தது. அவள் சைக்கிளில் ராஜா குளத்திற்குப் போவதைப் பார்த்தேன். கானல் அலை அடிக்கும் அக்னி நக்‌ஷத்ரம். தெருவில் ஈ காக்கை இல்லை. ஒரு மரத்தின் இலை கூட அசையவில்லை. வீடுகள் ஆழ்ந்த மதிய உறக்கத்தில் இருந்தன. பனியனுடனும், அரைக்காற்சட்டையுடனும் நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.

‘என்ன தம்பி, என்ன வேணும்?’ அவள் என்னை எப்பொழுது பார்த்தாள் எனத் தெரியவில்லை, இத்தனைக்கும் நான் மரத்தின் பின்னிருந்துதான் அவள் குளத்திலிருந்து மேடேறி கரைக்கு வருவதைப் பார்த்து க்கொண்டிருந்தேன்.தண்ணீர் குடிக்க வந்த ஆடுகள் கவனமாக அடி வைத்து இறங்கிக் கொண்டிருந்தன.

‘இந்தா, பேச்சி, பாத்து இறங்கு, சீமான பாத்து பயந்துடாதே,’ என்று குட்டியாட்டைப் பார்த்து சிரித்தாள். ஈரத்தில் உதடுகள் நனைந்து ஒளியுடன் மின்னின. நெற்றியில் படிந்த கூந்தல் இழைகள் தனி அழகைக் கொடுத்தன.தோள்பட்டை எலும்புகளும், சரிந்து இறங்கும் கழுத்தும் கொள்ளை கொண்டன. உயர்த்திய கைகள் காட்டிய மறைந்த அழகுகள் இம்சித்தன. உரமேறிய உடலும், இளமையும் என்னைப் பித்தாக்கின.

‘அம்மா சொன்னாங்க’ என்றேன்

“விருந்தாளி வந்திருக்கா? பால் கூட வோணுமா?’’

‘அதில்ல, நான் வந்து..’

‘‘நீ வந்து..? ’’

‘நாம..’

‘’நாம?’’

‘இல்ல.உனக்கு கல்யாணம் ஆவலயாமே?’

‘‘ப்பூ.. இதானா? அதைக் கேக்கவா இங்க வந்த?’’

‘அதில்ல, எனக்கு உன்ன புடிச்சிருக்கு’

‘’சரி’’

‘என்ன சரிங்கற’

‘’வேற என்ன சொல்லணும்?’’

‘நாம… நாம’

‘‘கண்ணாலம் கட்டிக்கலாம்க்றியா?’’

பொட்டில் அடித்தாற் போல் அவள் அப்படிக் கேட்பாள் என நினைக்கவில்லை. தடுமாறினேன்.

’’கண்ணாலமெல்லாம் வேணாம். எனக்கு ஒரு முத்தம் மட்டும் கொடு அது போதும்’’

அவள் விளையாடுகிறாள் என நினைத்தேன்.அவள் மூச்சுக்காற்று பட என்னை நெருங்கி அணைக்கையில் வெலவெலத்துப் போய்விட்டேன்.

‘‘ராசா, என் கண்ணில்ல, முத்தம் மட்டும்தான்யா நீ கொடுக்க முடியும், எனக்கு கிடைக்காதது அதான்யா.’’

எனக்குப் புரியாமல் ஓடி வீட்டிற்கு வந்து விட்டேன். பிச்சியைப் போல் அவள் சிரித்தது என்னை ஓயாமல் துரத்தியது. அன்று கனவில் வெள்ளை ரோஜாக்களாக வந்தன. அதன் நடுவில் அவள் கரும் முள்ளென ஓங்கி நின்றாள். செடிகளிலிருந்து பறித்துப் போட்ட பூக்கள் முட்கள் நெருட குருதி வாசம் வீசியது. தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால் தள்ளாடியது.

ஒரு சமயம் மாமா வீட்டிற்குப் போயிருக்கையில் அந்த ஊரில் ஒரு கடற்கரையை நான் பார்த்தேன். பெரிதாக எழும்பி வரும் அலை என்னை மூழ்கடிக்கப் போவதாக எண்ணி அதற்கு பாய்ச்சல் காட்ட நான் தயாராக நின்றிருந்தேன். இதோ…இதோ ஓடப் போகிறேன். அது என் காலைக் கூட நனைக்காமல் ஏமாற்றி விட்டது. ஏனென்று புரியாமல் அழுதேன்.

‘முப்பது பணம் கொடுத்து மூணு குளம் வெட்டினேன் < em>ரண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியேயில்ல’

வழிப்போக்கன் பாடிக்கொண்டு செல்வதை படுத்துக்கொண்டே கேட்டேன்.

தண்ணியில்லா குளத்துக்கு காவல்மார் மூணு பேர்
ரண்டு பேர் முடம் ஒண்ணு காலேயில்ல’

 ‘ஓய், புள்ளையாரே, ஏதோ உம்ம இடத்ல படுத்திருக்கேன்னு எதிர்ப்பாட்டெல்லாம் வேணாம். நல்லாருக்காது, சொல்லிப்புட்டேன் ஆமா’

‘‘இது நீ பாடும் பாட்டு அப்பா. சொல்லப்போனா கவிதா பாட வச்ச பாட்டு’’

ஆம், உண்மைதான். ஓரளவு படித்து, ஒரு சுமார் வேலையில் இருந்தேன். வயது இருபத்தியாறு.வேறு ஊர், வேறு மனிதர்கள். பஞ்சுப் பொதிக்குள் விழுந்த குண்டென காமினி எங்கோ வலிக்காமல் ஆழ்ந்து போனாள். கவிதா, அழகான பெயர். சுமாரான அழகு. எல்லாவற்றையும்விட ஜாதகங்கள் பொருந்தியது முக்கியமாகப் போய்விட்டது. ’ரஜ்ஜு தட்டல. அமோகமா இருப்பா’ அந்த ஜோதிடரைப் பார்த்தால் … அடித்துக் கொன்றுவிட்டால் என்ன என்று செய்ய இயலாத ஆத்திரம் இன்று வரை இருக்கிறது. கவிதாவிடம் தோற்றேன். காதல் இருந்தது அவளிடம். ஆனால் கனன்று எரியவில்லை. ஏனெனக் கேட்க முடியவில்லை, யாரிடமும் பகிரவும் முடியவில்லை; எங்கள் தனிமையில் அவள் மிரளும் கண்களும், நடுங்கும் உடலும், திரளும் கண்ணீரும்… என்னால் புரிய வைக்க முடியவில்லை.

“உனக்கெல்லாம் ஆரு வேலை கொடுத்தான்? இஷ்டமில்லேன்னா கால் கடிதாசி கொடுய்யா? கம்பெனி பொழைக்கும்.’’

முப்பத்தைந்து வயதில் நாலு பேர் கேட்க  என்னை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் சூட்டுக்கோல்கள். ஆனால், நான் தாங்கிக்கொண்டேன். அதிக சேமிப்புமில்லை, வயதான பெற்றோர்,வேறு வேலை கிடைக்கும் வாய்ப்பு என் படிப்பிற்கு கிடைப்பது கடினம்.

காலில்லா காவல் மாருக்கு மூணு பணம் மாதப் பணம்
ரண்டு பணம்செல்லாக்காசு ஒண்ணு காசே இல்ல’

கவிதா என் வறட்சியை வேறு விதத்தில் சமாளிக்கப் பார்த்தாள். நாங்கள் பொருத்தமான ஜோடி என்றே அறியப்பட்டோம். நான் நினைப்பதை அதற்கும் முன்பாகவே செய்தாள், வேலைக்கும் போய் சம்பாதித்தாள், அம்மா,அப்பாவுடன் பாசமாக இருந்தாள். ஆனால், என்னைக் கனவினிலேயே இருக்க வைத்தாள்.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு சம்பவம். இடக்கரத்தால் பிரமன் என் தலையில் எழுதிய எழுத்து .. என்ன பிள்ளையே.. நீ கேளு இல்ல கேக்காம இரு.. நா மாட்டுக்கும் சொல்லுவேன். எங்கள் அலுவலக நண்பர் புவனாவின் குழந்தைக்கு காது குத்தியற்கான பார்ட்டி அவர்கள் வீட்டில். என் மனது  தடுத்தும் நான் போனேன். ’’அவசரமா? கொஞ்சம் இரேன், பேசணும்’’ என்றாள்.

என்ன பேசப் போகிறாள்? என்ன இருக்கிறது பேசுவதற்கு?நான்அவ்வளவு பொருட்டா என்ன? எங்கள் குடும்பத்தைப் பற்றி ஊகித்துவிட்டாளோ? தாள் கைக்குட்டையில் முகத்தை ஒற்றி ஒற்றி நான் அவசரமாகக் கசக்கி குப்பைக்கூடையில் போட்ட தாள்கூட அரசிலை போலத்தான் இருந்தது.

காசில்லா காசைக்கொண்டு கடப்பொருள் வாங்கப் போனேன்
ரண்டு பொருள் ஊசிப்போச்சு ஒண்ணுபொருளேயில்ல

‘சபாஷ், உன் விதிய யாரோ முன்னமே பாடி வச்சிருக்கான் போலிருக்கு’ என்றார் பிள்ளையார்.

நான் சிரித்தேன், நெருப்புப் பொறி பரக்கச் சிரித்தேன், பின்னர் சிரிப்பாய்ச் சிரித்தேன். சுடுசொல் தொலைக்காத வேலையை அவச்சொல் போக்கிவிட்ட விந்தையை நினைத்து இன்றும் சிரிக்கிறேன்.

பொருளில்லா சாமான் கொண்டு மூவிருந்து செஞ்சு பாத்தேன்
மொத்த சட்டி காலி இந்த வயிறும் காலி’

அம்மாவின் தவிப்பு, அப்பாவின் பாராமுகம், கவிதா கொண்டு வரும் வருமானம். நாற்பது வயதிற்குள் அலுத்துவிட்டேன்.

‘நான், புள்ளையாரே, நல்லவன்யா. நீ எப்படி?’

‘‘எப்படின்னா?’’’

‘உனக்கு ஒரு கஷ்டமுமில்ல. நீ நல்லவனாத்தான் இருக்கமுடியும். அல்லல் பட்டவன்தாய்யா அனுபவசாலி.’‘

‘‘சரி’’

‘என்ன சரி?’

‘‘நீ எது சொன்னாலும் சரி’’

‘அப்படின்னா?’

‘‘உங்கிட்ட துணிவில்ல, நேர்மையுமில்ல, நம்பிக்கையுமில்ல. வெத்து அனுபவம் சொல்ற. கடமையையாவது செஞ்சியான்னா அதுவுமில்ல’’

‘என்னக் குத்தம் சொல்றதுக்கா சரி,சரின்ன புள்ளையே’

‘‘அதில்லடா, மனிதா. நடந்ததிலேயே இருக்கியே.’’

‘அடுத்தவ தேவைக்கு பசியேலில்லாம ஒப்புக் கொடுத்தேன் பாரு, அங்கதான்யா என்னையே வெறுத்தேன்.’

அகாலத்தில் குயில் ஒன்று புலனாகாத இடத்திலிருந்து கூவியது.