ரா. கிரிதரன்

வ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’

வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்).

காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர் நமக்குத் தெரிந்தமட்டில் விவரிக்காமல் விட்டு விட்ட சில அம்சங்களை மேனாட்டு இலக்கண ஆசிரியர் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்கள். நம் நாட்டு இலக்கண ஆசிரியர் பொருள் யாப்பு அணிகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அலங்கார சாஸ்திரத்தை நம் நூலாசிரியர் ஆழமாக ஆய்ந்திருக்கிறார்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், காவிய சமக்ரத்தைப் பற்றின ஆராய்ச்சிகள் இதுவரை வந்திருக்கும் நூல்களில் விஸ்தாரமாகக் காணப்படவில்லை. பெருங்காப்பியத்தில் என்ன என்ன விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று இலக்கணங்களில் ஓர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆனால் காவியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதவை, பெருங்காப்பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக்கும் என்ன வித்தியாசம், என்ற விஷயங்கள் நம் இலக்கணங்களில் விசாரிக்கப்படவில்லை. மேலை நாடுகளில் அரிஸ்தோத்தலன் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங்களைத் தனியே கவனித்துக்கொண்டு வந்து அரணியத்தை மறந்து விட்டார்கள்; மேனாட்டவர் மரங்களை கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷமாக ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்.

காவிய சமக்ர இலக்கணத்தை தாண்டி கவி தனது அலங்கார இலக்கணத்தில் பாவிக அணியை வர்ணிக்கும் போது சில வார்த்தைகளில் சொல்லி முடித்து விடுகிறான். அரிஸ்தோத்தலன், ஓராஸியன், புவாலோ, வீதா, பெயின் முதலிய மேனாட்டு இலக்கண ஆசிரியர்கள் விரிவாகச் செய்துள்ள ஆராய்ச்சியைப் பற்றி இங்கு ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருந்தும். அவ்விலக்கணக்காரர்களுடைய பிரதான அபிப்ராயம் என்னவென்றால்,

ஓர் பெருங்காப்பியம், அனேக அவயங்கள் சேர்ந்ததாயினும் ஒரு ஜீவப் பிராணியைப் போல ஓர் தனிப்பிண்டமாயிருத்தல் வேண்டும். தலை, இடை, கடை என்ற பாகுபாடும், அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்கிற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயமும் தன் தனக்கு முன்னே உள்ள அவயத்தோடும், பின்னேயுள்ள அவயத்தோடும் பிணைக்கப் பெற்று ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை, விக்ரமாதித்தன் கதை, மதன காமராஜன் கதை, அராபியக் கதை முதலிய கதைகளை ஒரு பக்கமும், அரிச்சந்திர புராணம், கந்த புராணம், ராமாயணம் முதலிய காவியங்களை ஓர் பக்கமும் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் மேற்காட்டிய இலக்கணத்தின் கருத்து விளங்கும். பின் சொல்லிய மூன்றிலும் ஒரே ஒரு வஸ்து தான் காவியமாக எழுதப்படுகிறது. இவற்றுள் அனேக உப கதைகள், வர்ணனைகள் உபாக்கியானங்கள் வருகின்றன என்பது வாஸ்தவம். ஆனால் இவை அனைத்தும் கதையின் மத்திய சம்பவத்துக்குத் துணையாக நிற்கின்றன. மத்திய சம்பவத்துக்கு வித்தாகவோ, மத்திய சம்பவத்தினின்று இயற்கையாக விளைந்த விளைவாகவோ விளங்குகின்றன.

முன் சொல்லப்பட்ட நூல்களோ அவை செய்யுள் நூல்கள் அல்ல என்பது ஓர் பக்கமிருக்க,, தனிக் கதைகளின் கேவலம் சேர்க்கையே ஆகும். அவைகளில் மத்திய சம்பவத்திற்கும் கதைகளுக்கும் உள்ள சம்பந்தம் மிக மிக லேசானது – அதைச் சம்பந்தம் என்று கூட சொல்லத் தகாது. மகா காவியத்தின் பகுதிகளுக்கோ இத்தகைய ஒட்டின்மை இராது. அவற்றின் சம்பந்தம் ஜீவ சம்பந்தம். உபக்கியானங்கள் முதலிய புற அணிகள் பெருங்காப்பியத்தினுள் அளவுக்கு மீறி இரா, மற்ற உறுப்புகளெல்லாம் காவியத்துக்கு அகத்துறுப்புக்களாகவே விளங்கும்.

அவ்வுறுப்புகளில் எதை எடுத்து விட்டாலும் கதை ஊனமாகிவிடும்.

பாவிக அணி என்று நாம் கூறுவதை மேனாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். இப்பதத்துக்கு ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாம். இது மனைச் சிற்ப நூலினின்று எடுக்கப்பட்ட பெயராகும். ஓர் அரண்மனையையோ கட்டடத்தையோ கட்டுவதற்கு அனந்த கோடி ரீதிகள் உண்டு. ஆனால் சில ரீதிகள்  தாம் கட்டடத்துக்கு அழகு தரும். பெரும்பாலானவை வானத்தையும் சூரிய ஒளியையும் மூடுமே ஒழிய செளந்தரிய உணர்ச்சியை திருப்தி செய்யா. அப்படியே ஓர் காவியத்தைப் பல மாதிரி எழுதலாம். நள சரித்திரம், ராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் முதலிய காவியங்களெல்லாம் அவ் அவ் ஆசிரியர்களின் மனோதர்மத்துக்கு ஏற்றபடி எழுதப்பட்டுள்ளன. சில சம்பவங்களைச் சிலர் விரிக்கிறார்கள். மற்றவற்றைச் சுருக்கி விடுகிறார்கள். வேறு சிலர் முற்சொல்லியவர்க்கு மாறாகச் செய்கிறார்கள். சிலர் சில சம்பவங்களை எடுத்து விட்டு புது சம்பவங்களைப் புகுத்துகிறார்கள். ரசிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்த கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும். சொல்லப்போனால் பெருங்காப்பியங்களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங்காப்பியங்கள் பெருமையுள்ளனவாகா.

காவிய ரசனையை மகா வித்துவான் ஒருவருடைய விஸ்தாரத்துக்கு ஒப்பிடுவோம். எல்லா வித்துவான்களும் ஏழு ஸ்வரங்களைத்தான் – அல்லது அர்த்த ஸ்வரங்களையும் சேர்த்துக்கொண்டால் இருபத்திரண்டு ஸ்வரங்களைத்தான் – கையாள்கிறார்கள். இந்த ஸ்வரங்கள் துவாரா நவரஸங்களைத்தான் ஊட்டுகிறார்கள். ஆனால் ஒரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும், இன்னொரு வித்துவானுடைய ஆலாபனத்துக்கும் ஒரு பாடகன் ஒரு கீர்த்தனை பாடுவதற்கும் இன்னொருவன் அதே கீர்த்தனையைப் பாடுவதற்கும் எத்தனை பேதம்! ஒருவன் ராகத்தின் ஸ்வரங்களில் யாதொரு அபஸ்வரத்தையும் கொண்டு வந்து கலக்காமல் பாடி விடுகின்றான். ராகம் பிழையின்றி சாஸ்திரரோக்தமாகப் பாடப்பட்டிருக்கும். லயத்தில் யாதொரு பிசகும் இருக்காது. கேட்போர் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டும் சிரக்கம்பம் செய்து கொண்டும் கேட்பார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்தில் யாதொரு சலனமும் ஏற்பட்டிராது. அலை வந்து மோதியும் அசையாத பாறை போல் அவர்களுடைய இருதயமும் அப்படியே இருந்துவிடும். இன்னொருவன் வருகிறான். அதே ராகத்தைப் பாடுகிறான். ஆனால், எல்லாரும் அமுத மழையில் சிக்கி அகப்பட்டவர்கள் போல் ஆகி விடுகிறார்கள். அவரவர்களுடைய சமஸ்காரத்திற்கேற்றபடி அவரவர்களுடைய இருதயம், மந்த மாருதத்தில் ஊசலாடும் பூங்கொம்பர் போலவும், சிற்றலைகளால் அசைந்தாடும் தாமரை போலவும், கருப்பஞ் சாற்றில் கரையும் கற்கண்டைப் போலவும், அக்னியின் நெகிழ்ந்து உருகும் மெழுகைப் போலவும் , தங்கத்தைப் போலவும் ஆகிவிடுகிறது.

அவர்களுடைய மனது புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுகிறது. மனோ லோகத்தில் சித்திரத்துக்கு மேல் சித்திரம் தோன்றிக்கொண்டே வருகிறது. அவர்கள் லயப்பட்டு, வயப்பட்டுப் போய் விடுகிறார்கள். இந்தக் கலைஞனுக்கும் முன் சொல்லப்பட்ட கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம் இவனிடம் கனிவு இருந்தது, அவனிடம் அது இல்லை. ஆனால் அது மாத்திரமில்லை இவனுடைய பாட்டின் அமைப்பு மனோஹரமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆவிருத்தமும் அதற்கு முன்னே பாடப்பட்ட ஆவிருத்தத்தனின்று இயற்கையாக வளர்ந்த வளர்ச்சியாகும்; அதே மாதிரி தனக்குப் பின்னே வரப் போகும் ஆவிருத்தற்குத் தோற்றுவாயும் ஆகும். ஒவ்வொரு ‘சங்கதி’யும் அந்தந்தப் பதங்களை அலங்கரிக்க விழுந்த அலங்காரமாகுமேயன்றி, பதங்களையே முழுக்கி மூடிவிடும் வெறும் சப்த சாலங்களாகா. ஒவ்வோர் ரசமும் போதிய அளவு விஸ்தரிக்கப்பட்டு இயற்கையான சோபானங்கள் வழியாக அதனோடு பொருந்தக்கூடிய வேறொரு சுவைக்கு வழிகாட்டிக் கொண்டு போகும். கடைசியாக எல்லா ஆவிருத்தங்களும் எல்லாச் சுவைகளும் இன்னலன் தெரிய வல்லாருடைய இருதயம் லயித்துப் போகும். ஓர் சமஷ்டி உணர்ச்சியை உண்டாக்கும்.

அதே மாதிரித்தான் ஒரு காவிய ரசனையும். காவியத்தின் தனித்தனிப் பாகங்களிலுள்ள இன்சுவை ஒரு பக்கமிருக்க, பாகத்தும் பாகத்துக்கும் உள்ள பொருத்தம் அழகாக இருப்பதோடு காவியமானது நம்ம சமஷ்டீகரணத்தைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு இந்த சஷ்டீகாரம் அழகாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காவியமானது ரசிகருடைய இருதயத்தைக் கவர்ந்து எல்லாரும் விரும்பத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிறார்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் செய்யுளின் அழகைத்தான் எடுத்துக்காட்டுகிறார்கள். ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண்மையாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அவயத்துக்கும் மற்ற அவயங்களுக்கும் உள்ள பொருத்தத்தையும், அவயங்களுக்கும் அரண்மையின் சமக்ர அமைப்புக்கும் உள்ள பொருத்தத்தையும் வியக்தீகரித்து எடுத்துக்காட்டும் விமர்சனங்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

 

மண்ணில் படரும் மலர்கள் – பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று

ரா கிரிதரன் 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

மேல்நோக்கிப் பொழிந்தவை

கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து உயிரோட்டத்தோடு இயங்கி ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைப் படைத்து வருவதில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு நிகரானவர்களது எண்ணிக்கை கைக்குள் அடங்கிவிடும். கவிதை தொடங்கி சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம், சிறார் இலக்கியம் என எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து ஒளி குன்றாது எழுதி வருபவர். வெங்கட் சாமிநாதன் முதற்கொண்டு பல விமர்சகர்களும் பாவண்ணன் எழுத்துகளை அடையாளம் கண்டுள்ளனர். கன்னட இலக்கியத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர். தனது வேலைக்காக மொழி தெரியாத கர்நாடக மாநிலத்துக்குச் சென்றவர் முறையாக கன்னடத்தைப் படித்ததோடு மட்டுமல்லாது அன்றாடப் பேச்சு வழக்கிலும் கையாண்டு தமிழுக்கு இணை மொழியாக அதனை தரித்துக்கொண்டவர். எண்பதுகளில் கன்னட தலித் இயக்க எழுச்சியோடு எழுந்த கன்னட இலக்கியத்தை உடனுக்குடன் அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாது கர்னாடக மாநிலத்தின் மூத்த மற்றும் சமகால கலைஞர்களோடு தொடர்பு வெளியை ஏற்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஆனாலும் பாவண்ணனின் இந்த பங்களிப்பு விமர்சகர்களிடையே இன்றுவரை பெரிய கவனத்தைக் கவரவில்லை. 2005இல் பைரப்பாவின் மகாபாரத மறு ஆக்கமான ‘பருவம்‘ நாவலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகாதெமி பரிசு வெல்லும் போது ஏற்பட்ட சலனத்தோடு அவரது பிற மொழியாக்கங்களும் உடனடியாகக் கவனத்தில் வந்திருக்கவேண்டும். தொன்னூறுகளின் மத்தியிலும் இறுதியிலும் தலித் இலக்கியம் தமிழில் உச்சகட்டத்தை அடைந்த சமயத்திலேனும் அவரது கன்னட மொழியாக்கங்கள் கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் கன்னடத்தில் வெளியான தலித் முன்னோடி எழுத்துகளை அவர் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார். அப்பிரக்ஞை வளர்ந்திருந்தால் கன்னட மொழியின் வளமையும் புது கருத்துக் களமும் தமிழுக்கு வந்து சேர்த்திருக்கும்.

பாவண்ணன் உருவாக்கிய ஏராளமான ஆக்கங்கள் இன்றும் விமர்சகர்களின் முழுமையான ஆய்வுக்காகக் காத்திருக்கின்றன. நீண்ட காலம் எழுதுபவர்கள் ஓரிரு படைப்புகளின் வெற்றி உருவாக்கும் கூண்டுக்குள் அவர்களாகவே சிக்கிக் கொள்பவர்களாக ஆகிறார்கள். வாசகர்களும் விமர்சகர்களும் சட்டெனத் தொகுத்துக் கூறும்படியாக அவர்கள் படைப்புத் தொகுதிகள் இருப்பதில்லை. அதனால் மேலேழுந்தவாரியான ஒற்றை வரி விமர்சனங்கள் இவ்வகை எழுத்தாளர்களின் படைப்புகளை சரியாக வகுத்துக் கூறுவதில்லை. கூர்ந்த இலக்கிய அளவுகோளும் அவதானிப்பும் கொண்ட விமர்சகர் அவரது பெரும் படைப்புத் தொகுப்பிலிருந்து கவனம் கொள்ளவேண்டிய ஆக்கங்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது. தி.ஜானகிராமன், வண்ணதாசன், பூமணி போன்ற படைப்பாளிகளைப் போல அழகியலும் இயல்புவாதமும் முயங்கி நிற்கும் பல படைப்புகளைத் தந்தவர் என அறியப்பட்ட இடத்திலிருந்து எழும்பி இந்திய தொன்மங்களின் மறு ஆக்கம், வரலாற்றுக்கதைகள் (“நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” – பொம்மைக்காரி, சிறுகதைத் தொகுப்பு),  நாட்டாரியக் கதைகள் போன்றவற்றை எழுதியவர் எனும் இடத்துக்கு சென்று அவரது புனைவுலகை அலச வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் கீழத்தியத் தத்துவத்தேடல் அவரை மரபுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, தொன்மங்களை மீளச்சொல்லச் செய்திருக்கிறது. இருள் பிரிந்ததும் அரும்பிய சுடரொளியும் அதன் வெளிச்சத்தை சக மனிதர் மீது போட்டுப்பார்க்கும் பார்வையும் கொண்ட கதைகள் எனும் நோக்கில் மட்டுமே பார்க்காமல் புனைவின் சாத்தியங்களை பலதிசைகளிலும் நெருங்கிப்பார்த்த கலைஞராக பாவண்ணனை அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

பாவண்ணனின் படைப்புப் பார்வை

பாவண்ணன் எழுதத்தொடங்கிய எண்பதுகளின் காலகட்டத்தை தமிழ் நவீனத்துவத்தின் அந்திமக்காலம் எனப் பொதுவாக வகுக்க முடியும். நவீனத்துவ விமரிசனத்தின் நேரடியானத் தாக்கத்தை அவரது ஆரம்பகாலக் கதைகளில் காண முடிகிறது. சொல்லப்போனால் 1987 இல் வெளியான அவரது முதல் நாவலான  வாழ்க்கை ஒரு விசாரணை” கூறுமுறை அளவில் மிகக் கறாரான யதார்த்தத் தளத்தை மீறாத கதையாகவே தெரியும். தம்முன் தெரிந்த அனுபவ தர்க்கத்தை எள்ளளவும் மீறாத போக்குடைய நிகழ்வுகளின் தொகுப்பு. நம் கையை மீறிய விசையினால் மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் அலையும் சித்திரம் அதில் கிடைக்கும். மிகத் துல்லியமான நவீனத்துவப் படைப்பு. “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” எனும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் கதைகளும் பெயரைப்போலவே திசையறியா விதியின் கைகளால் கைவிடப்பட்டோரின் கதைகளாகவே தெரியும். அங்கிருந்து 2003இல் அவர் எழுதி விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட “கடலோர வீடு” சிறுகதையின் பயணம் அவரது படைப்பு மனதின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

bommaikari

அனுபவ தர்க்க உண்மையை மட்டுமே பதிவு செய்வதும் மனித வாழ்வே அவலத்தின் அல்லது இயலாமையின் உறைவிடமாகத் தொனிக்கும் பார்வையிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த அழகியல் நேர்த்தி கொண்ட பார்வைக்கு சிறுகதைப்பயணம் அவரை செலுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தின் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவமும், ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களின் கதைகள், பாலினங்களைப் பற்றிய அடையாள இலக்கிய காலகட்டமும் வந்து படர்ந்தன.

“கடலின் முன்னிலையில் நிற்கும் போதெல்லாம் என் மனம் தயக்கமும் தடுமாற்றமும் கொள்ளும். பார்வையால் அளக்கமுடியாத அகலமும் நீளமும் கொண்ட கடலை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. கண்கள் தத்தளிக்கத் தொடங்கிவிடும். பார்வை வழியே அக்கடல் உடலுக்குள் இறங்கி படீரென ஒரு அலையாக மோதும். ரத்தம் துள்ளியடங்கும். கடலுக்குள் இறங்கி அலையோடு அலையாக மாறிவிடத் துடிக்கும். ஆழ்மனத்திலிருந்து ஒரு கட்டளை பிறந்து எக்கணமும் என்னைத் தூண்டிவிடக்கூடும் என்று தோன்றும். அந்தத் தடுமாற்றம் மிகவும் பழகிய ஒன்று.” (கடலோர வீடு)

பாவண்ணனின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அவரது படைப்புகள் நிகழும் களம் நம் முன்னே கிடக்கும் யதார்த்த உலகம் என்பதை உணர முடியும். சொல்லப் போனால் மிகவும் அடிப்படையான யதார்த்த ஒழுங்குகளை அடைய விரும்பும் பாத்திரங்களை அவர் அதிகம் படைத்துள்ளார். புற உலகின் சமநிலையின்மையால் யதார்த்த வாழ்வோடு பொருந்தி வாழ முடியாதவர்கள். ஆழ்மனதில் தீவிரமான கனவைக் கட்டிச் சுமப்பவர்கள். அந்தக் கனவுக்குள் சுழன்று தங்களைத் தொலைத்தவர்கள். அவர்களுடனேயே வாழும் பிற மனிதர்களை விட வேறொரு உலகில் வாழ்பவர்களாகவே அறியப்படுபவர்கள். இந்த கனவு நிலையில் வெளிப்படும் ஆழ்மனக் குழப்பங்களையும், தங்கள் முரணை விட்டும் வெளியேற முடியாது தவிப்பவர்கள்.

“வெளிச்சம் மண்ணைத் தொடும் நேரத்தில் மரக்கிளைகளில் வந்து அமர்ந்த காகங்கள், தரைநெடுக அம்மா பிய்த்துப்போடும் இட்லித் துண்டுகளைக் காணாமல் குழந்தைகள் கதறுவதுபோல இடைவிடாமல் அலறின. பிறகு கோழிகள் வந்தன. நாய்கள் வந்து வளைய வளைய சுற்றிவிட்டு சென்றன. வாடிக்கையாளர்கள் வந்து வெறும் வாசலை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணியடித்ததும் சிறுவர்கள் கூட்டமாக வந்து முற்றத்தில் நின்று பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றார்கள். வழிப்போக்கர்களும் பிச்சைக்காரர்களும் “இட்லிக்காரம்மா இட்லிக்காரம்மா” என்று அழைத்துப்பார்த்துவிட்டு ஏமாந்து போனார்கள்” – [“அம்மா” சிறுகதை]

மனிதர்கள் மீது அளவிடமுடியாத பிரியமும் அவர்களது வாழ்க்கை மீதூறும் கரிசனமும் பாவண்ணனின் படைப்புலகில் இயங்கின்றன. அவரது நட்பு வட்டத்தை கவனிக்கும்போது ஒரு படைப்பாளியாக அவரை இயக்குவதும் இந்த காதல் தான் எனத் தோன்றுகிறது. எதையும் உடனடியாக அடையாளப்படுத்தி அரவணைக்கும் அன்பு அல்ல. மாறாக ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அதனதன் இயல்பில் படைப்பு அழகியல் சந்திக்கும் புள்ளிகள் சுட்டிக்காட்டும் இடமாக அவரது புனைவு இயங்குகிறது. “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் காளியும், ப்ளாஸ்டிக் ஃபேக்டரி எரிந்ததில் தன் சுயநிலை இழக்கும் அத்தையும் (“பொம்மை“) , “ஒற்றை மரம்” பெண்ணின் சாவில் மனித மனதின் கீழ்மையையும் உன்னதத்தையும் கண்டுகொள்ளும் தாயும் காட்டும் தரிசனம் மெய்ஞான உலகின் இயல்பைத் தக்கவைத்திருக்கும். இந்த இயல்பே கூட அவரது படைப்புகளை ஒளிரும் சுடரின் வழிகாட்டலை ஏந்தி நிற்கும் தருணங்களாக அமைத்திருக்கின்றன. வாழ்வின் கரிய பக்கத்தையும், அவலத்தையும் சுட்டும் இடத்திலும் அவரது மனம் ஏதோ ஒரு மேன்மையைத் தொட்டுக்காட்டுகிறது. “கரைக்கக் கரைக்க நிரம்பிக்கொண்டே இருக்கிற நெஞ்சின் பாரத்தைத் தொடர்ந்து கரைப்பதற்காக பாடுவது மட்டுமே அவன் வாழ்வாகிவிட்டது. மிச்சமிருக்கும் உயிரின் சுடர் அணையும்வரை அவன் பாடிக்கொண்டே இருப்பான்” (தளும்பும் மனம் முன்னுரை).

உச்சகட்டமான வெறுப்புணர்வை சொல்லிச்செல்லும் கதைகளில் கூட அவரது பிற பாத்திரங்களின் இயல்பால் ஒரு சமநிலை கூடிவிடுகிறது. ஒரு வாசகராக கதையின் முழுமையை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் விமர்சகரின் அளவுகோலின்படி குறிப்பிட்ட சுவைக்கு ஒரு மாற்று குறைவோ என எண்ண வைப்பதும் இதனால் தான். வாழ்வின் கரிப்புச் சுவையும் அங்கதமும் வெளிப்படும் அவரது சில கதைகள் முழுமையாக அமையாததும் இந்த ஒரு அம்சத்தினால் தானோ என்றும் நினைக்க வைக்கிறது.

என்னை மிகவும் பாதித்த “வைராக்கியம்” சிறுகதையில் இந்த முரண் நிகழ்வதை வாசகர்கள் உணர் முடியும்.

“மழ நிக்கவே இல்ல. வெறி தணிஞ்சதும் அவன் வேற பக்கமா போய் படுத்துகிட்டான். அந்த மழ சத்தத்தையே வெகுநேரம் கேட்டுகினு படுத்துருந்தேன். கொஞ்ச நேரம் இந்த உலகத்துலயே நான் இல்ல. சட்டுனு பித்து புடிச்சாப்புல ஒரு வேகம் நரம்புங்கள ஒரு முறுக்கு முறுக்கிச்சி. எழுந்து உக்காந்து குடிசைக்குள்ள பாத்தன். கோழிக் குஞ்சுங்களாட்டம் புள்ளங்க ஒரு பக்கம். கெடாவாட்டம் இவன் இன்னொரு பக்கம். திடீர்னு ஒரு யோசன. அப்படியே துள்ளி எழுந்து பொடவய சரியா கட்டனேன். தலமுடியா கொண்டயா சுருட்டி கட்டிகினு பக்கத்துல இருந்த கல்ல பார்த்தேன் கூட வேலிருந்து உழுந்த கல்லு. அத தூக்கி ஓங்கி ஒரே போடா அவன் தலயில போட்டன். ஆன்னு ஒரு சத்தம். மழயில அது பெரிசா கேக்கல. ஏதோ சொல்ல வந்து அப்படியே அடங்கிட்டான். கண்ணுங்க அப்படியே நட்டுகிச்சி. பஸ்ல அடிப்பட்டு உழுந்து நாய் மாதிரி..”

வைராக்கியம் கதை முழுவதும் மிகத் தீவிரமான வெறுப்புணர்வு நம்மைத் தூண்டிவிட்டபடி இருக்கும். கொலை செய்பவளின் மாமனாரின் மேன்மை உணர்வால் அந்த வெறுப்பு சமன்பட்டுவிடும். அதுவே அக்கதையின் உச்சமுடிச்சாகவும் அமைந்திருக்கும்.

பாவண்ணனின் சிறுகதை உலகம்

பாவண்ணன் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும்தோறும் செடிகளின் பற்றிப்படரும் இயல்பு ஒரு காட்சியாக என் கண்முன்னே நிற்கும். என் தோட்டத்தில் வைத்திருந்த மல்லிகைச் செடி தொட்டியிலிருந்து தழைத்து கனம் தாங்காது கிளைகளை தரையில் சாய்த்திருந்தது. கவனிக்காது விட்ட நாட்களில் கிளையின் அடிப்பாகம் பூமிக்குள் புதைந்திருந்தது. சில நாட்களில் தொட்டியிலிருந்து ரெண்டடி தள்ளியிருக்கும் மண்ணிலிருந்து மல்லிகை செடி துளிர் விடக்கண்டேன். மண்ணுக்கடியில் புதைந்த கிளை படர்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பாயிருந்தது. பற்றிப்படர்வதிலும் தனதென நினைத்து அழுக்கும் சருகும் குவிந்த இடத்திலிருந்து முளைப்பதுமாய் செடிகளுக்கு இருக்கும் ஜீவத்துடிப்பு பரவசம் கொடுக்கும் அனுபவம். பாவண்ணன் உலகில் தெரியும் கதாபாத்திரங்களுக்கும் இந்த குணாதிசயம் உண்டு. நிராயுதபாணியாக சகல கொடுமைகளையும் அனுபவிப்பவர்கள் கூட மனித மனதின் ஈரத்தை ஒரு நொடி அனுபவித்ததுமே புத்துயிர் ஊட்டப்பட்டது போல துளிர்க்கிறார்கள்.

பாவண்ணனின் சிறுகதைகளைப் படித்தவர்கள் மனதில் முதலில் படிவது அவரது அப்பட்டமான எழுத்து முறை தான். வாழ்க்கை பற்றிய நேர்ப்பதிவுகளாக அவை நமக்குக் காட்சியளிக்கும். அவரது பெரும்பாலானக் கதைகள் யதார்த்தத் தளத்தில் எழுதப்பட்டவை. கதை சொல்லி வழியாக அல்லாமல் கதை நம்முன் நிகழும். உடனடியாக நமக்குத் தோன்றுவது கு.அழகிரிசாமியின் புனைவுலகு. கு.அழகிரிசாமி எழுதிய கதைகளின் நேரடியானத்தன்மை ஒரு யதார்த்தத் தளத்தை உருவாக்கினாலும் இடர் மிகுந்த மனித வாழ்வின் மீது நேரடியாகப் பற்று வைத்தவர். ராஜா வந்திருக்கிறார் கதை போல பல கதைகளில் துயர் மிகு சித்திரத்திலிருந்து ஒரு ஒளி பொருந்திய வாழ்க்கைக்கான கனவை அவரால் விதைக்க முடிந்தது. பல கதைகள் தனிமனித அனுபவங்களிலிருந்து விடுபட்டு மானுட மொத்தத்துக்குமான தரிசனமாக மாறியிருந்ததை பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழகியல் ரீதியைப் பொருத்தவரை கு.அழகிரிசாமியின் நேரடியான பாதிப்பு பாவண்ணன் புனைவில் தென்படுகிறது.

pavannan

வர்ணனைகளிலும் விவரிப்புகளிலும் புத்திசாலித்தமான காய் நகர்த்தல்கள் இல்லாததால் சில சமயம் நேரடியாக கதையை விவரிக்கும் போக்கு காணப்படும். இதனாலேயே சில வரிகளில் முழுமை நோக்கிய தாவல்களோ, தத்துவ தரிசனங்களோ உடனடியாகத் தென்படுவதில்லை. பாவண்ணன் காட்டும் உலகம் ஒரு தனிமனிதனின் அன்றாடப் பிரச்சனை வழியாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் சிறுவன் ஒவ்வொரு அறையாகச் சென்று தனது அக்காவைத் தேடுவது போல கதாசிரியரும் சிக்கிக்கொண்ட நூல்கண்டு வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார். இங்கு அறிமுகப்படுத்துகிறார் எனும் வார்த்தை முக்கியமானது. அவர் எந்நிலையிலும் வாழ்க்கையை ஆராய்வதில்லை. தத்துவம், வரலாறு, சமூகவியல், கடவுள் என எந்த சிந்தனைக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டு அவர் கதாபாத்திரங்களின் வாழ்வை அலசுவதில்லை. அதில் பெரும்பாலும் பாவண்ணன் விருப்பமில்லாதவராகவே தென்படுகிறார் (மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகளைத் தவிர்த்து). இப்படி வாழ்வின் அர்த்தத்தை ஆவேசமாகத் திணிக்க முற்படாததால் கதாபாத்திரங்களின் போக்குப்படி கதையின் தரிசனம் யதார்த்தமாக விரிகிறது. இது பாவண்ணன் புனைவின் மிகப்பெரிய பலம். இதுவே நாடகீய தருணங்களைக் குறைத்து அவரது கதைகளை பலவீனமாக ஆகும் தருணங்களும் உண்டு.

சொல்லப்படும் கதைகளின் வழியாக ஒரு வாழ்க்கை தருணம் வெளிப்படுவதால், பாவண்ணன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகையாக எதையும் சொல்வதில்லை. கதாபாத்திரங்களின் அகச் சிக்கல்கள் எவ்விதமான முடிவையும் எட்டாது சுவரில் முட்டி நிற்கும் தருணங்களையும் அவர் சிறுகதைகளாக ஆக்குகிறார். வாழ்க்கையின் ஆட்டத்துக்குத் தகுந்தபடி ஆடும் பாவைகளாக மனிதர்களை சித்தரிக்கும் தருணங்களில் மானுட விழுமியங்கள் கதாபாத்திரங்களுக்கு மீட்சி அளிக்கின்றன.

உதாரணத்துக்கு , மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட மகளுக்காக ரத்தம் சேகரிக்க வந்திருந்த கிராமத்துத் தாயின் கதையைச் சொல்லலாம் (‘ஒற்றை மரம்‘ – பொம்மைக்காரி தொகுப்பு). பாவண்ணன் எழுதிய மிகச் சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று. சொன்னதையே அரற்றும் தாய்க்கு சீர்குலைந்த பெண்ணைக் காப்பாற்றும் வழி தெரியவில்லை. கற்பழித்ததில் ரத்தப்போக்குக் கூடிப்போனது மட்டுமல்லாது நினைவும் இழந்துவிட்டாள் மகள். நகர்ப்புற மருத்துவமனை ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவில் ரத்தம் கொண்டு வராமல் சிகிச்சை தொடங்க மாட்டோம் எனச்சொல்லும்போது கிராமத்துக் கிழவிக்கு மனம் அவர்கள் சொல்வதில் லயிக்கவில்லை. ரத்தம் வேணும் என்பது மட்டுமே அவளது புலம்பல். அங்கு உதவிக்கு வரும் சிவாவுக்கு இது குற்ற உணர்வைத் தூண்ட அவர் ரத்தம் வாங்குவதற்குக் கிளம்புகிறார். காலை வருவதற்குள் பெண் இறந்துவிடுகிறாள். அம்மா கடைசியில் கும்பிடும் காட்சியில் எழுப்பப்படும் மானுட அவலம் கதையை மிகச் சிறந்ததாக ஆக்குகிறது. ஓரிரவு நம்பிக்கை கொடுத்து கூடவே நின்றிருந்த முன்பின் அறிமுகமில்லாதவரை பார்வையிலிருந்து மறையும்வரை அவளால் கும்பிட்டபடியே இருக்க மட்டுமே முடிகிறது. நெகிழ்வின் உச்சகட்டத்தை பாவண்ணன் இக்கதையில் அடைகிறார்.

கையறுநிலையின் பல படிநிலைகளை தனது கதைகளில் காட்டியுள்ளார் பாவண்ணன். ஒற்றை மரம் போல ‘பொம்மைக்காரி‘ கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் வெளியான மிகச் சிறப்பான சிறுகதை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் இயல்புவாதக் கதையில் பல ரகங்களை எழுதிப்பார்த்ததோடு மட்டுமல்லாது மரபுக்கதைகளின் மறு ஆக்கங்களிலும், பல செவ்வியல் பாணிக்கதைகளும் எழுதியதில் தனக்கென ஒரு அழகியலை பாவண்ணன் கைகொண்டிருக்கிறார். அதற்கு மிகச் சிறப்பான உதாரணம் ‘பொம்மைக்காரி‘. சிறுகதையின் உச்சத்தை மிகக்கச்சிதமாக சென்றடைந்த ஒரு ஆக்கம். வள்ளியும் மாரியும் பொம்மை செய்து ஊர் சந்தைகளில் விற்பவர்கள். கணவன் எது கேட்டாலும் வாய் திறவாதிருக்கும் வள்ளி மீது மாரிக்கு மிகுந்த எரிச்சல் உண்டு. வாய் திறந்து பதில் சொன்னாலும் “வாய வளக்காதபடி தேவடியா முண்ட” என கைநீட்டவும் செய்வான். அவனுடன் தொழிலுக்குப் போகும்தோறும் அவள் பயத்துடனேயே இருப்பாள். தன் மீதிருக்கும் கோபத்தை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவும் அவன் கள் குடித்திருந்தால் வசவுடன் அடியும் விழும். சிங்கத்துடன் வாழும் மான் போல அவள் பயத்துடனேயே வாழ்கிறாள். அவனது நிலையும் ஒன்றும் மதிக்கத்தக்கதாக இல்லை எனும்போது வெளியே கீழ்த்தரமாக அவமதிக்கப்படும் அவனது கோபத்தின் மீது ஒரு இயலாமை கூடுகிறது. பக்கத்து ஊருக்கு தொழில் நிமித்தம் செல்பவர்கள் அங்கிருக்கும் ஊர்க்கார இளைஞர்களால் வம்பிழுக்கப்படுகிறார்கள். காட்டைத் தாண்டி ஓடிவரும் அவர்களைத் துரத்தி மாரியை அடித்துப்போடுகிறார்கள். ஒருவன் மட்டும் வள்ளியைத் தேடி கண்டுபிடித்து உடலுறவு கொள்கிறான். போகும்போது முகத்தில் ஒரு முத்தமிட்டுச் செல்கிறான்.மாரியைத் தூக்கி வந்தபின்னும் அவனிடம் இதைப் பற்றிச் சொல்லாது இருக்கிறாள். குற்ற உணர்வு தாங்காது தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஆற்றில் கழுத்தளவு நீர் இருக்கும்போது ஒரு நொடி சிலிர்ப்பில் அந்த முத்தம் அவளது நினைவுக்கு வருகிறது. தனது எல்லா கஷ்டத்தையும் அந்த முத்தம் துடைத்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறாள். இந்த இடத்தில் வாசகனுக்கு மிக இயல்பான பரிவு கூடுகிறது. பிற பாணி எழுத்தாளரின் கையில் இந்த இடம் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மிகக் கொச்சையாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், இந்த முடிவைக் கடக்கும் வாசகன் வள்ளி மற்றும் மாரி இருவரின் மீதும் அளவுகடந்த பரிவு ஏற்பட்டுவிடும் என்பதே கதாசிரியனின் வெற்றி.

முன்னர் சொன்னதுபோல ஒரு கதையினூடாக மனம் கொள்ளும் சமாதானங்களின் பல படிநிலைகளை பாவண்ணனால் மிக இயல்பாகக் காட்டமுடிகிறது. இது ஒருவித அக விடுதலைக்கானப் போராட்டம். மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகப்படிநிலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என மனிதர்களை இணைப்பதற்காக ஏற்படுத்திய ஒவ்வொரு அமைப்பும் முதலியத்தின் பிடியில் சிக்கி அவனைக் கீழ்மையில் தள்ளுவதற்காகப் பயன்படுகிறது என்பதைக் காட்டும் பல கதைகளை உருவாக்கியுள்ளார். எவ்விதமான முயற்சிகளும் அல்லாது கதையின் போக்கில் மிக இயல்பான படிமங்கள் உருவாவதால் அவை மேலதிக விளக்கத்தை கோரி நிற்பதில்லை. உதாரணமாக, பொம்மைக்காரி கதையில் வரும் மாரியின் புற வாழ்வில் எப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்து வீடு திரும்புகிறான் எனும் சித்திரம் நமக்குக் காட்டப்படுதில்லை (ஒரு முறை அவர்கள் இருவருமாகத் தொழிலுக்குச் செல்கிறார்கள் – அவள் கற்பழிக்கப்படுகிறாள்). ஆனால் அவனது ஆழ்மனம் வெறுப்பால் ஆனதை நம்மால் உணர முடிகிறது. அந்த வெறுப்பே அவள் மீதான அதிகாரமும் வன்முறையுமாக மாறுகிறது. அவனால் முடிந்தது அது மட்டும் தான். கோபமாகத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரிவதில்லை. அடிபட்டு வீழ்கிறான்; கற்பழிக்கப்பட்ட வள்ளி அவனைத் தூக்கி வீட்டுக்கு வருகிறாள். வாழ்க்கை மீதான வெறுப்பு மட்டுமே அவனிடம் தெரிகிறது. அவன் ஆட்டுவிப்பதுக்கு ஏற்றார்போல வள்ளியும் ஆடும் ஒரு பொம்மைக்காரி தான். அந்த பொம்மைக்கென ஒரு தனி உணர்வும் உள்ளது என்றோ பரிவும் காட்டவேண்டிய தேவை இருக்கிறது என்றோ மாரி உணர்வதில்லை. கள்ளு குடித்தபின் மிருகத்தனமாக உடலுறவு கொண்டுவிட்டு பீடி பிடிக்கச் செல்கிறான் (கள்ளும் பீடியும் அவன் விரும்பிப் பெற்ற பழக்கங்கள் அல்ல, வெளியூரில் தொழில் நிமித்தம் செல்லும் நேரத்தில் பிற வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டது என்கிறார் ஆசிரியர் – இதிலும் ஒரு சமூகத் திணிப்பு உள்ளது. சமூக எதிர்ப்புக்கான ஒரு செயல்). இதே போன்ற இயலாமை கூடியதில் உணர்வு பீறிடும் ‘பூனைக்குட்டி‘ கதையில் இது சரியாக எடுபடவில்லை என்பதையும் வாசகர்கள் உணரலாம்.

சிறுகதைகளில் செவ்வியல் பாணியிலும், மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் அறியாமலேயே இருக்கக்கூடும். புது வாசகர்களுக்கு சமூக யதார்த்தக் கதைகள் வழியாகவே பாவண்ணன் படைப்புகளுக்கு அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதற்கு ஏற்றார்போல இணையத்தில் தமிழ் படிப்போர் பலருக்குக் கிடைக்கும் அவரது கதைகள் யதார்த்த பாணிக் கதைகளே. இதில் பாவண்ணன் தனி முத்திரை பதித்துள்ளார் என்றாலும் செவ்வியல் பாணியிலும், வரலாற்றை மறு ஆக்கம் செய்யும் கதைகளிலும் தனித்தடம் பதித்துள்ளார் என்றே சொல்லமுடியும்.

சமீபத்தில் வந்த கதைகளில் ‘வெள்ளம்‘, ‘தங்கமாலை‘, ‘பிரயாணம்‘, ‘கனவு‘, ‘இன்னும் ஒரு கணம்‘ போன்றவை மரபை மறு ஆக்கம் செய்யும் கதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பின்னோக்கிச் சென்று மனிதனின் அடிப்படை விழுமியங்களை அலசிப்பார்ப்பவை எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். மரபு பற்றிய செவ்வியல் பாணிக்கதைகள் எனும்போது அவை ஒரு காலகட்டத்தின் தத்துவங்களை மானுட தரிசனமாக அடையாளம் காட்டிப் பழக்கப்பட்டவை எனலாம். பாவண்ணன் செய்வது நாட்டார் காவியங்களில் செய்வது போன்று கதாபாத்திரங்களின் அக புற அலைச்சல்களை பதிவிடும் வாழ்க்கை குறிப்புகளாகும். செழுமையான கதாபாத்திரங்களின் அக ஊசலாட்டத்தைப் பற்றிப் பேசும்போது (‘சூரபுத்திரன்’ – வெள்ளம் கதையில், ‘முசே’ – பிரயாணம்) அவை மிக இயல்பாகவே மானுட அடிப்படை விழுமியங்களை நோக்கிச் செல்கிறது. இன்னொரு வழியில் சொல்வதானால், கதாபாத்திரங்களின் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் எவ்விதமான சிந்தனை மரபையும் ஒட்டி இருப்பதில்லை. அவை மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரசல்களையும், இணைப்புகளையும் சார்ந்த சித்தரிப்புகளாக அமைந்திருக்கின்றன. கருத்துகளை விட கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு துல்லியமாகக் காட்ட இது வழிவகுத்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டமும் அதில் புழங்கும் கருத்து சார்ந்த விழுமியங்களின் பதாகை எனும் சாத்தியத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறது. இதனால் சில வரலாற்றுக் கதைகள் உயிரோட்டமானப் பார்வையைத் தராமல் விலகிவிடுகின்றன.

உதாரணமாக, ‘வெள்ளம்‘ சிறுகதை, தாரணி எனும் அப்சரஸ் அழகில் மயங்கும் பிக்கு மாணவன் சூரபுத்திரனின் குழப்பத்தைக் காட்டுகிறது. ஜென் கவிதைகளிலும், புத்தமதக் கதைகளிலும் பலவாறு புழங்கிய தத்துவ தரிசனமான ‘ஆசையைத் துறத்தல்’ எனும் நிலைக்கு எதிரானக் கதை. மிக எளிமையானக் கதையும் கூட. வெள்ளத்தில் நீரின் நிலை உயர்வது போல தாரணியின் உடல் அசைவுகளுக்குத் தன் மனதைப் பறிகொடுக்கும் சூரபுத்திரன் வழியாகச் சொல்லப்படும் தரிசனம் எது எனும் குழப்பம் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்காது. சூரபுத்திரன் தன் மனதை முழுவதுமாக இழக்கும் சித்திரம் ஒரு அனுபவம். ஆனால் அங்கிருந்து கதை அந்தளவிலேயே நின்றுவிடுகிறது. ஜென் படிமமாக மாறாமல், கதையை ஒரு வாழ்க்கை சித்தரிப்பாக மாற்றியதால் வரும் எளிமைப்படுத்தலின் சிக்கல். ஆனால், இதே ‘பிரயாணம்‘ கதையின் முடிவில் வீரப்பனுக்குக் கேட்கும் முசேவின் குரல் இறக்கும் மனிதரின் குரல் மட்டுமல்ல, அது ஒருவிதத்தில் மானுட இனத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனை மனிதன் ஏதோ ஒரு காரணத்தால் அடிமைப்படுத்தியிருக்கும் அதிகாரத்தையும் எதிர்த்து உடைக்கும் குரல். முசே-வீரப்பாவைப் பொருத்தவரை அது ஒரு முடிவு. ஆனால் உண்மையில் சாதாரணனான வீரப்பாவின் வாழ்வின் ஒரு பிரெஞ்சு குவர்னர் காட்டிய பரிவு பல தலைமுறைகள் நினைவு வைத்திருக்கும் கதை. காலப்போக்கில் அது கட்டுக்கதையாக மாறும் சாத்தியம் வரலாற்றில் உண்டு என்றாலும் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் மட்டுமே பெயர் போன பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான குரலாக முசேவைப் பார்க்க முடியும்.

பாவண்ணனின் புனைவு நடை

பாவண்ணனின் புனைவு நடை பற்றிப் பேசும்போது நாம் அவரது சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தனித்தனியாகப் பேசவேண்டியுள்ளது. நவீனத் தமிழ் சிறுகதை களங்ளில் மிக நுட்பமான இடங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேலாக வரும் அவரது முன்னூறு சிறுகதைகளில் பல பரவலான வாசக கவனத்தை ஈர்த்திருந்தாலும், ஒரு கலைஞனாக அவரை முன்னிறுத்தும் கதைகள் இன்னும் கண்டடையப்படாமல் இருக்கின்றன என்றே நினைக்கிறேன். முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதை சூழலில் ஈடுபடுபவரது கதைகளை விமர்சகர்கள் இன்னும் விரிவாக ஆராயவில்லையோ எனத் தோன்றும்படியாகப் பலவித பாணிகளில் எழுதிய கதைகள் வாசக கவனத்துக்கு அதிகம் வரவில்லை. இயல்புவாத எழுத்தில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிப்பவராக அறியப்பட்டவர் பல வரலாற்றுப்புனைவுகளும், நாட்டாரிய மறுவாக்கங்களும் எழுதியுள்ளார்.

“திடீர்னு ஒரு நாளு ராத்திரில பேயறஞ்சாப்புல வந்து நின்னா. துணிங்க ஒரு நெலையில இல்ல. கிழிஞ்சி கந்தலா தொங்குது. ஒடம்புல ஒரே புழுதி. ரத்தம். கேவி கேவி அழுவறாளே தவுத்து பேச்சே வரல. என்னாடி பூரணி என்னாடி பூரணின்னு உலுக்கறன். ஒரு வார்த்த அவளால பேச முடியலை. நாம கேக்கறதே அவ நெஞ்சுக்குள்ள போவலை. பூவாட்டம் என் பொண்ண வச்சிருந்தேன். எந்த முண்டச்சி பெத்த தறுதலைங்களோ நான் பெத்த அல்லித்தண்ட ஆழும் பாழும் அவ்வாறும் சிவ்வாறுமா ஆக்கிட்டானுங்க. ஆதரவு இல்லாத சிறுக்கி நானு. யாருகிட்ட போய் நாயம் கேக்கறது சொல்லு. அந்த ஐயனாரப்பந்தான் எல்லாத்துக்கும் கூலி குடுக்கணும்”, எச்சிலைக் கூட்டி விழுங்கும் போது அந்த அம்மாவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது – (ஒற்றை மரம், பொம்மைக்காரி தொகுப்பு)

“ஆசையும் அதிர்ச்சியும் கலந்து மின்னும் அவன் கண்களில் குனிந்து முத்தமிட்டாள் அவள். உதறித் தள்ளிவிட்டு தன்வழியே செல்லப் பரபரபத்த அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்து இழுத்துத் தழுவினாள்.தழுவிய நிலையிலேயே புதர்களின் உட்பகுதியை நோக்கி நடந்தார்கள். கால்கள் அசைய மறுப்பதுபோல கனத்த கணத்தில் தரையில் சாய்ந்தார்கள்.காலகாலமாக அவனை அறிந்தவள்போல இடைவிடாமல் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிப் பேசினாள் அவள். குழைந்தாள். கொஞ்சிகொஞ்சிச் சிரித்தாள். மாறிமாறி முத்தமிட்டாள். இறுதியில் தன் உடலை அறியும்படி செய்தாள். தசைகளும் நரம்புகளும் பின்னிப்பிணைந்த இந்த உடனுக்குள் காணக்கிடைக்காத மாபெரும் புதையலைக் கண்ட ஆனந்தமும் பரவசமும் அவன் கண்களில் அலைமோதின” (வெள்ளம் சிறுகதை)

மேலே உள்ளது அவரது கதைகளின் இருவேறு புனைவு நடை. கூறுமுறையில் கதையின் இயல்பை ஒட்டி நிற்பவை. ஒன்று உச்சகட்ட உணர்ச்சி நிலையில் நாடக தருணத்தைக் காட்டும் சித்தரிப்பு. மற்றொன்று, மிக நிதானமாகத் தன்னை மறந்து கூடும் இரு உயிர்களின் காட்சியமைப்பு. நிகழ்ச்சிகளை மிக விரிவாக விவரித்து பலவிதமான உணர்ச்சிகளை கதையின் போக்கில் காட்டிச் செல்வது பாவண்ணனின் பாணி. ஒரு கடைத்தெருவோ, இயற்கைக்காட்சியோ புற இடத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் அவற்றை இணைப்பதில்லை. மாறாக, கதையின் தீவிரத்தைக் கூட்டவும், கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கத்துடனுமான புற உலக சித்தரிப்பு இயல்பாக அமைந்துவிடுகிறது. இதனாலே இயல்பை மீறிய தத்துவத்திணிப்பு அல்லது ஆன்மிக சித்தரிப்பை அங்கு நாம் காண்பதில்லை. இதனாலேயே பல கதைகளில் உச்சகட்ட முடிச்சு மிகப்பெரிய திருப்பங்களாகவோ வாசகர்கள் தங்கள் மனதில் உருவாக்கிய முடிவை முழுவதுமாகப் பூர்த்தி செய்வதுவாகவோ இருப்பதில்லை. கதாபாத்திரங்களின் இயல்பான வழக்கப்படி நடப்பதே கதையின் முடிவாகவும் இருந்துவிடுகிறது. இது பாவண்ணன் உலகம் உருவாக்கும் இயல்போடு ஒத்துப்போவதால் சிறுகதையின் நடையை பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டாமல் நகர்வது போலத் தோன்றும்.

பாவண்ணன் சிறுகதை நடை அவரது உடனடி முன்னோடிகளான சுஜாதா, ஆதவன் போன்ற நவீன எழுத்தாளர்களின் சாயலை சாராத ஒன்று. நவீன புனைவு நடை எனும்போது நாம் அதில் உடனடித்தன்மையையும், நிகழ்வுகளைத் தாவுவதில் இருக்கும் துரிதத்தையும், சுருங்கச் சொல்லும் மொழியையும் பிரதானமாகக் கூறுகளாகக் கொள்ளலாம்.பாவண்ணனின் உலகில் இப்படிப்பட்ட நவீன புனைவு நடை விரவியிருந்தாலும் அவரை ஒரு ஸ்டைலிஸ்டாக வாசகர்கள் பார்ப்பதில்லை. வேடிக்கைகளை அவர் செயற்கையாகப் புகுத்துவதில்லை. மனித வாழ்விலிருந்து சந்தோஷம், துயரம், நிலையாமை அம்சங்களை இயல்பாகக் காட்டுவதில் கதைக்களனோடு சேர்ந்த நவீன நடை உருவாகிவிடுகிறது. சிறிய வாக்கியங்களில் சுருங்கச் சொல்லாமல் ஒரு முழுமையான சித்திரத்தைக் காட்ட முயல்கிறார். ‘ஒற்றை மரம்‘ கதையில் வரும் தாய் கதை நெடுக புலம்பித் தீர்க்கிறார். திரும்பத் திரும்ப ஒரே போன்றதொரு ஒப்பாரி. ஆனாலும் அதை சுருங்கச் சொல்லி பாவண்ணன் கடப்பதில்லை. இயல்பில் நம்மை சுற்றியிருப்போரது உள்ளார்ந்த உணர்ச்சியை ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் காட்டுகிறார். நவீன பாணியில் வெட்டிச் செல்லும் யுத்திகளில் மனம் தோய்ந்தவர்களுக்கு பாவண்ணனின் இந்த கதை கூறும் பாணி வாசிப்பைத் தடை செய்யலாம். கதை காட்டும் உலகுக்குள் வாசகன் ஓரளவு பயணம் செய்தபின்னரே அவனால் அதோடு ஒன்றமுடிகிறது. இதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். வாசகர்களும் இவ்விதம் கூறப்படும் கதையில் வாசிப்பின்பம் இல்லை எனக்கூறக்கூடும். திட்டவட்டமான முடிச்சுகளையும், காய்நகர்த்தல்களையும் கொண்டிராது வாழ்வை அதன் போக்கில் பதியும் பாணியால் நம் கற்பனையில் இருக்கும் உச்சகட்டத் திருப்பங்கள் கதையில் இருக்காது. இதனால் வேகமாகப் பக்கங்கள் திரும்பும்படியாக இல்லாத கதைகள் சில இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சரிவராமல் போன கதைகள் மிகக் குறைவே.

பாவண்ணன் படைப்பின் அழகியல்

பாவண்ணன் வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுக்கும் கலைஞர். அவரது கதாபாத்திரங்களில் கதைசொல்லிகள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் கதாபாத்திரங்களாக வாழ்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி பெரிய கனவுகளும், அதீத பேராசையும் இல்லாதவர்கள். பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட வாழ்க்கையை அதிக அலட்டல் இல்லாமல் கழிப்பவர்கள். இதனாலேயே இக்கதைகள் காட்டும் தத்துவ தரிசனங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. மிகவும் உணர்ச்சிகரமான மனிதர்களாக வருபவர்கள்கூட தங்கள் விதி இதுதான் என்றோ, அல்லது தங்களுக்கு நிறைவு தரும் வாழ்வை எட்டிப்பிடிக்க எண்ணியபடியோ காலத்தைக் கழிப்பவர்கள். இதனால் கதை படிக்கும்தோறும் கதாபாத்திரங்கள் அனைவரும் தன்னிச்சையாக உருவாகி வருகிறார்கள்.

புராண மறு உருவாக்கங்களிலும், பிரெஞ்சு காலனிய காலக் கதைகளிலும் பாவண்ணன் ஒரு இறுக்கமான கூறுமுறையைக் கைகொள்கிறார். மொழியிலும் அவர் தனது இயல்பான நெகிழ்வுத்தன்மையை கைவிடுகிறார். உண்மையான கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளில் அவர் எல்லை மீறாது புனைவு சாத்தியத்தைக் கையாளவேண்டும் எனும் ஜாக்கிரத்தன்மையோடு செயல்படுவதாக தோன்றுகிறது. பாத்திரங்களின் குணவார்ப்பில் அதீத கவனமும், பண்டைய கால புற சித்தரிப்புகளை வாசகர்களிடம் கடப்பதற்காக மொழியில் கொண்ட நேர்த்தியும் பல நல்ல வகைமாதிரிகளை உருவாக்கிவிடுகிறது. உண்மை கதாபாத்திரங்களைப் பற்றி அச்சுபிசகாமல் எழுதுவது சவாலான காரியம் மட்டுமல்ல. ஆசிரியனின் புனைவு சாத்தியங்களைக் குறுக்கிவிடும் அபாயமும் அதில் உண்டு. பிரபஞ்சனின் வரலாற்று நாவல்கள் ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வராததற்கு இந்த காரணமும் முக்கியமானது. அவரது ஆனந்தரங்கப் பிள்ளை, சுப்பையா போன்றவர்களைப் பற்றிய வரலாற்று நாவல்களை இப்போது வாசிப்பவர்கள் இதைக் கண்டறியலாம். இந்த எல்லைகளை பாவண்ணன் உடைத்திருக்கிறார். அதற்கு அவரது கற்பனையும், புனைவு மொழியும், இலக்கிய அறிவும் அதி உபயோகமாக இருந்திருக்கிறது.

எந்தொரு கருத்தியலையும் சாராது எழுதுவதால் பாவண்ணனின் கதைகளில் ஆழ்மனதைத் தொடும் அம்சங்கள் நிரம்பியுள்ளன. வாழ்க்கையைச் சார்ந்த அடிப்படையான கேள்விகளை எழுப்பிக்கொள்வதை இவரது கதைகளில் அதிகம் பார்க்க முடியாது. வாழ்வோடு போராடும் கதாபாத்திரங்களின் அலைச்சல்கள் இருப்பதால் எவ்வொரு கருத்தியலும் இக்கேள்விகளுக்கு பதிலாக அமையாது என்பது அவரது ஆரம்பகட்ட படைப்புகளிலிருந்து காண்கிறோம். ‘வாழ்க்கை ஒரு விசாரணை‘ நாவலில் வரும் காளியின் அலைக்கழிவுகளுக்கும் அதீத கழிவிரக்கத்துக்குமுண்டான அவனது வாழ்க்கைக்கும் பதில் தேடி எந்தொரு கருத்தியலையும் ஆசிரியர் சென்றடையவில்லை. கடவுள் சார்ந்தும் சாராதுமான எவ்விதமான அமைப்புகளையும் ஆசிரியரோ கதாபாத்திரங்களோ சென்று சேர்வதில்லை. அவை வாழ்க்கை எனும் சர்வவல்லமையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போராட்டங்கள் மட்டுமே. இதனாலேயே படிமங்களும் அக ஓட்டங்களும் மிகக் குறைவாகவே பயன்பட்டிருக்கின்றன. மொழி சார்ந்த நுட்பங்கள் தேடும் வாசகர்களுக்கு பாவண்ணன் சிறுகதை அழகியலில் பெறக்கூடியது அதிகமில்லை.

பாவண்ணனின் செவ்வியல் கதை பாணி

அன்றாட உலகு சார்ந்த விழுமியங்களையும், நவீன மனது அடையும் சிக்கல்களையும் தாண்டிய பெரு வினாக்களையும், மானுட பண்பாடு கடந்த இடர்களையும் சொல்லமுயன்ற கதைகள் எழுதியவராக பாவண்ணன் பொதுவாக அறியப்படுவதில்லை. அவர் எழுதிய “ஏழு லட்சம் வரிகள்” நமது புராணத்தையும் பண்பாட்டையும் மறு ஆக்கம் செய்கிறது. “இன்னும் ஒரு கணம்” , “வெள்ளம்” போன்ற கதைகள் நமது புராண தத்துவ விழுமியங்களின் மீது ஒரு தேடலாக, பாவண்ணன் சொல்வது போல நவீன கேள்விகளுக்கான பதிலை  மரபில் துழாவித் தேடும் கைகளாக செயல்படும் கதைகள். நவீனத்துவக் கதைகள் தனிமனிதனின் தேடல்களை சமூகத்தின் அச்சாணியாகக் கருதும் பண்புடையது என்றால் செவ்வியல் கதைகள் வாழ்வை ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பாகக் காண்கிறது. துரியோதனன் கிருஷ்ணை சுயம்வரத்தில் படும் வேதனையை மாறும் கணத்தை ஒரு ஒட்டுமொத்த இதிகாசத்தின் மீது கவிழும் குடையாகக் காட்டும் புனைவுக்கதை.

“கிருஷ்ணையின் மூச்சுக்காற்றும் வியர்வை மணமும் நுகரக்கூடிய நெருக்கத்தில் இருப்பவைபோலத் தோன்றின. காந்தமாக ஈர்த்த்ன அவண் கண்கள். காதோரத்தில் அலைந்தது குழல்கற்றை..எல்லாமே எதிரிலேயே காண்பதைப்போல தோற்றம் தந்து மறைந்தன.அடுத்த கணமே ஒரு யானை தும்பிக்கையால் வளைத்தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரை மீது விழுந்தான் துரியோதனன்” [ இன்னும் ஒரு கணம்]

நமக்குத் தெரிந்த கதை என்றாலும் படிமங்கள் மூலம் ஒரு இதிகாச தருணத்தை ஆழத்துக்குச் செலுத்துகிறார். இக்கதையைப் படிக்கும் வாசகர்கள், துரியோதனன் கிருஷ்ணையை மணந்திருந்தால் மகாபாரதம் நமக்குக் கிடைத்திருக்காதோ என எண்ணத் தோன்றும். ஆனால் வரலாறும், புராணமும் அத்தனை எளிமையான முடிச்சில் இயங்கும் வலையல்ல என்பதை பாவண்ணன் தனது கதையின் மூலம் புனைவாக்குகிறார். இப்படியான எண்ணற்ற தருணங்களால் நெய்யப்பட்ட சிலந்திவலை போன்றது அது. அதன் பாரம் ஒவ்வொரு புள்ளியிலும் அமைந்திருக்கிறது. மகாபாரதக் கதைகளை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் இணைப்பண்பாட்டு தொகுப்பு என்றால் பாவண்ணன் அவரது செவ்வியல் கதைகள் மூலம் பண்பாட்டு சித்திரிப்பின் பல வகை மாதிரிகளை உருவாக்கியுள்ளார். புத்த பள்ளிகளில் தத்துவம் பயிலும் ஒரு பிக்குவின் அகச்சஞ்சலங்கள் “வெள்ளம்” கதையாகிறது. இப்படியாக ஏழு லட்சம் வரிகள் தொகுப்பு பல தொன்ம தரிசனங்களை மறு ஆக்கமாக்குகியுள்ளது.

இந்த நேரத்தில் சமீபத்தில் எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் வரிசையுடன் ஒரு ஒப்பீடு செய்வது இருவித பாணிகளை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும். பாவண்ணன் தொன்மங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் அவற்றை கலைத்து மீண்டும் அடுக்குவதில்லை. அதிலுள்ள தேடல்களையும், சமூக விழுமியங்களையும் மறு பரிசீலனை செய்வதில்லை. வெண்முரசு போன்ற பண்பாட்டுப் புனைவு நூல்களில் கையாளப்படும் ஒட்டுமொத்த தொகுக்கும் தன்மை பாவண்ணனின் இக்கதைகளில் கிடைப்பதில்லை. அவை நாமறிந்த கதைகளை ஒரு குவிமையத்தை நோக்கி கச்சிதமாக எடுத்துச் செல்லப்படும் கதைகள். உதாரணத்துக்கு, துரியோதனனும் கர்ணனும் கிருஷ்ணை சுயம்வரத்தில் பங்கெடுக்கும் சமயத்தில் இயல்பாக எழும் சில பண்பாட்டுச் சூழல்களுக்குள் கதை செல்வதில்லை. சிறுகதையாகச் சொல்லப்படுவதால் அது ஒரு மையத்தை நோக்கி கச்சிதமாகச் சென்று முடிகிறது. அதாவது புராணமும் தொன்மும் நம்முன் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. அக்கதையின் தேடல் விரிவான சமூகம் மற்றும் பண்பாட்டு சூழலின் பின்புலத்தில் நடப்பதில்லை.

பாவண்ணன் பிரெஞ்சு ஆண்டுவந்த புதுச்சேரி பகுதிகளை மையமாகக் கொண்டு பல வரலாற்றுப் புனைகதைகளை எழுதியுள்ளார். இக்கதைகளும் விரிவான சமூகத்தளத்தில் வைத்துப்பேசப்படாமல் இருந்தாலும் வரலாற்றுப்புனைவுக்காக கச்சிதமான பாணியை உருவாக்கிவைத்திருப்பதாகத் தோன்றுகிறது. மிகச் சிறந்த உதாரணக்கதைகள் – “கண்கள்“, “தங்கமாலை“, “பிரயாணம்“.

வரலாற்று நாயகர்களுக்கு காலம் தாண்டியிருக்கும் புகழுக்கான காரணங்கள் அவர்களது செயல்களின் தன்மை பொருத்து அமைவது. வரலாற்றில் பதியப்படும் அக்கதைகள் நாயகர்களின் செயலுக்கு ஏற்றார்போல பல வடிவங்கள் எடுத்துத் தொன்மங்களாக மாறிவிடும். வரலாற்றை புனைவாக்கும்போது  இத்தொன்மங்களிலிருந்து கதைகளைப் பிரிக்கும் கலை மிகமுக்கியமான அம்சம். அத்தொன்மங்களையும்,கதைகளையும் அப்படியே நிகழ்த்திக்காட்டுவது செய்நேர்த்தியுள்ள கதையாகலாம் ஆனால் அதில் வாசகன் செல்லக்கூடிய ஆழம் குறைவாகவே இருக்கும். ஒரு படைப்பை வாசிக்கும்தோறும் வாசகன் தன்னைத் தொகுத்துக்கொள்கிறான், தனது அற உணர்வை மறுபரிசீலனை செய்கிறான். வரலாற்றுக்கதையில் வாசகன் அவனுக்குத் தெரிந்த புராணத்தோடு அக்கதையை அணுகுகிறான் எனும்போது தொகுத்துக்கொள்ளும் இடைவெளியை அளிக்கும் கதைகள் அவனை ஆழமாக பாதிக்கின்றன.

கண்கள்” கதை கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்று சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால் மிக ஜாக்கிரதையாக தொன்மத்தின் மாயவலைக்குள் வீழாமல் பாவண்ணன் அக்கதையை வாழ்வின் விசாரணையாக மாற்றியுள்ளார். புதுச்சேரி ஆயி மண்டபத்தின் சரித்திரம் அறிந்தவர்களுக்கு அக்கதை ஒரு ராஜாவின் அற உணர்வைப்பற்றிய நாடகீய தருணமாகக் காட்சியளிக்கும். ஆனால் ஆயியின் குளத்தை பாவமன்னிப்புத் தேடி அலையும் நிம்மதியற்ற மனமாக உருவகப்படுத்தியதில் அக்கதை பல பரிமாணங்களை அடைகிறது. கண்டாமணியின் ஓசையைக் கேட்கும்தோறும் மனநிம்மதியை இழக்கும் தி.ஜானகிராமனின் கதையைப் போல இக்கதையில் பலாப்பழ வாசனையையும், குளத்தையும் நாம் காண்கிறோம். காலந்தோறும் மாறிவரும் அற உணர்வுகளைத் தனது கண்களால் சதா அலசுவதாக அக்குளம் ராயருக்குக் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தைக் கண்களாக மாற்றி நாம் புதுச்சேரியின் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும் அலசமுடியும், பெஞ்சமின் முசே [“பிரயாணம்“] மனசாட்சியாக ஐரோப்பாவரை துரத்தும் விசையாகவும் கொள்ள முடியும்.

“சத்திரத்தில் ஏதோ ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களின் மணம் மூக்கைத் துளைத்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ரகுராயரின் மனதில் உடனடியாக பாவங்களையும் பலாவையும் மறைக்கமுடியாது என்ற எண்ணம் எழுந்தது” [கண்கள்]

ஹம்பி நகரிலிருந்து வெளியேறும் கவிராயர் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கான காரணத்தை புதுச்சேரியின் ஆயி மண்டபத்தின் அறப்பிழைவில் கண்டுகொள்கிறார். சாபத்தின் நிழல் நீளும் தூரத்தை யாராலும் கணிக்கமுடியாது. கண்கள் கதையில் தொடங்கும் இந்த நிழல் பிரயாணம் கதையில் பெஞ்சமின் முசேயின் மூச்சில் அடங்குகிறது. பெஞ்சமின் முசே பாரீஸிலிருந்து குவர்னராக எல்லைப்பிள்ளைச்சாவடி வருகிறார். அதிகாரத்தின் வன்முறைக்குப் பழக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கொடுமைகளைச் இந்த சிறுமண்ணில் களைய அவர் எடுத்துக்கொள்ளும் பயணம் இது.

இந்த இரு கதைகளிலும் தொன்மங்களிலிருந்து எடுத்தாளப்படும் புனைவு தருணங்கள் இல்லை. சொல்லப்போனால் அரசு அதிகாரத்தின் கச்சிதமான இழையை இருவித ஆட்சியாளர்களின் வரலாற்றிலிருந்து உருவாக்கியுள்ளார். இப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்கும்போது பிரபஞ்சன் எழுதிய வரலாற்றுப்புனைவுகளிலிருந்து வரலாற்று எழுத்து எந்தளவு மாறியுள்ளது என்பதை வாசகன் அறிந்துகொள்ளமுடிகிறது. கம்யூனிஸ்ட் சுப்பையா, பாரதியார், குவர்னர் தூப்ளே, துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற பல வரலாற்றுப் பாத்திரங்களைக் கொண்டு வரலாற்றுப்புனைவுகளை உருவாக்கிய பிரபஞ்சன் கற்பனையில் செய்யாத பாய்ச்சல்களை இக்கதைகளில் நாம் காண்கிறோம். அதுமட்டுமல்லாது விரிவான சமூக/ வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளதால் வரலாற்றில் இல்லாத சாத்தியங்களை பாவண்ணன் தனது கற்பனையினால் நிரப்பியுள்ளதைப் பார்க்கிறோம். ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் மீது படிந்து போயிருக்கும் தொன்மங்களையும் வீரக்கதைகளையும் தாண்டி மனித வாழ்வின் விழுமியங்களையும், அடிப்படை உணர்வு நிலைகளையும் ஆராய்கிறார் பாவண்ணன். பிரபஞ்சனின் வரலாற்றுப்புதினங்கள் இத்தொன்மங்களை வேண்டிய மட்டும் பிடித்துக் கொள்வதால் கதாபாத்திரங்களின் அக உணர்வுகளுக்குள் செல்வதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளது. “கண்ணீரால் காப்போம்” – பிரபஞ்சனின் வரலாற்று நாவலில் வரும் வ.வே.சு ஐயர், சுத்தானந்தபாரதி,திரு.வி.க போன்றோரின் சித்திரத்தை படிக்கும் வாசகன் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றெழுத்தின் இந்த நகர்வைக் கண்டுகொள்வான்.

பாவண்ணன் உலகில் மண்ணும் மரபும்

பாவண்ணனின் கதைகளை ஒருசேரப் படிப்பவர்களுக்கு அவர் மனிதனின் இயல்பான நன்னடத்தை மீது அளவுக்கதிகமான அபிமானம் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றும். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. பாவண்ணனின் மண்ணான வட ஆற்காட்டுப்பகுதி மக்களின்  ஓரளவு செழிப்பான விவசாய நிலமும், நகர்ப்புறத்தின் அண்டையில் இருப்பதால் விளையும் வர்த்தக கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது வாழ்வோடு பிணைந்திருக்கும் ஒன்று. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செஞ்சி, புதுவை இடங்களின் வளமான நிலப்பகுதி இருந்தாலும் நிலக்கடலை, மிளகாய், சம்பா போன்ற விளைச்சல்களால் வருடம் முழுவதும் தொடர்ந்த மகசூல் உள்ள நிலம். அதிக மழைநீரையும் எதிர்பாராததால் வறட்சி குறைவாகக் காணப்படும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கர்களும், தஞ்சை மராத்தியர்களும், சுல்தான்களும் ஆண்ட நிலம் என்பதால் நில உடைமையாளர்களில் பலர் வேற்றுமொழிக்காரர்களாகவும், அருகிலிருக்கும் புதுவை, சென்னை போன்ற இடங்களோடு வர்த்தகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பாவண்ணன் கதைகளில் வரும் பெரும்பான்மையானவர்கள் சிறு நிலக்காரர்கள் அல்லது நிலச்சுவாந்தார்களுக்கு மாட்டு லாடம் அடிப்பது, தோட்டவேலை செய்வது போன்ற சிறுவேலை செய்பவர்கள். ஓரளவு நகரப்புற ஞானம் உள்ளவர்கள் ஆனால் அச்சுகங்களை எட்டிப்பிடிக்க முடியாதபடி அவர்களது வருமானம் அமைந்திருக்கும். பணச்சேகரிப்பை தலைமுறைகளின் வளர்ச்சிக் குறியீடாகப் பார்ப்பவர்கள்.

வாழ்க்கை ஒரு விசாரணை – நாவலில் வரும் வடிவேலு தாத்தா, வட ஆற்காட்டுப்பகுதி கதைளை சொல்லிச் செல்லும்போது நிலம் கைமாறும் முரணைப் பற்றிப் பேசுகிறார்.முன்னூறு வருடங்களாக தெலுங்கு, மராத்தி பேசும் முதலாளிகளிடமிருந்த நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின்படி மெல்ல கிராமங்களில் வேலை பார்த்தவர்கள் கைக்கு வருகிறது. அங்கிருந்து புது தலைமுறை ஆட்கள் வர்த்தகத்துக்காக புதுவை, சென்னை, கடலூர் செல்கிறார்கள். நில உரிமையாளர்களுக்கு அதிகாரம் குறையும்போது ஏற்படும் சிக்கல்களைப் பேசும் கதைகள் [அடைக்கலம்], ஜாதியை மீறும் காதல் திருமணங்களின் கருணைக்கொலை [ கனவு ] என மொழி, ஜாதி, பணவசதி என கடந்த நூறு வருடங்களில் கிட்டத்தட்ட தலைகீழாக மாறிய அடையாளங்களை உடைய சமூகத்திலிருந்து வரும் கதாபாத்திரங்கள் நிரம்பிய கதைகள்.

“ஒருதரம் மெட்ராசுக்குப் போய் வந்தவன் எண்ண ஆடற மிஷினைப் பார்த்திட்டு அது மாதிரியே இந்த ஊர்லயும் வாய்க்கணும்னு அலைஞ்சான். மணியக்காரு, கணக்குப்புள்ளயார் யாரயோ பார்த்து எல்லார் வாயயும் பணத்தால அடச்சி மேற்கால பெரிய அளவுக்கு பொரம்போக்குல நெலத்த வளச்சான் கேக்கறவங்களுக்கு ஒண்ணும் சொல்லலைகடசில மெட்ராஸிலேர்ந்து மிஷின் வந்திச்சு..அன்னிலேர்ந்து செக்குக்காரங்க வாய்ல மண்ணு. ஒரு செக்கு ரண்டு செக்கு வச்சிருந்தவன்லாம் பெரிய மனுஷங்கற காலம் மலையேறிப்பூடுச்சி. ஈ ஓட்ட ஆரம்பிச்சிட்டானுங்க. சொத்து அப்படியே கைமாறிடுச்சு” [வாழ்க்கை ஒரு விசாரணை]

“நடுராத்திரி வரைக்கும் இருந்த தணல் தணிஞ்சதுக்குப்பறமா எடுத்து வெளியில போட்டாங்க. ஒடம்பே இல்ல. கரிஞ்ச கட்ட. உருட்டிகினே வந்து தோப்புலயே ஒரு பள்ளத்தத் தோண்டி பொதச்சிட்டாங்க. சாதுப்பெரும தெரியாத சனியனே சனியனேன்னு அதும்மேல துப்பி செருப்பாலயே மிதிச்சாரு தாத்தா..” [கனவு]

கண்ணுக்கெதிராக வர்த்தகத்திலும், சமூக அடையாளத்திலும் திடுமென மதிப்பைப் பெற்ற ஜாதியைப் பார்த்து ஏற்படும் பொறாமை, நகரமயமாக்கத்தின் வசதிகளைப் பரவலாகப் பெற முடியாததில் இருக்கும் ஏக்கம், வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் குலக்கதைகள் மூலமாக ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்துவதை தொடர்ந்து புனைவில் எழுதிக்காட்டியிருக்கிறார். வட்டாரக் கதைகள் எனும்போது உலர்ந்துபோன வாழ்வில் சிறு கீற்றைக் காட்டுவதோடு நில்லாமல் ஒரு தன்னெழுச்சி மூலம் கதாபாத்திரங்களுக்கு அகவிடுதலை அளிக்கவும் செய்கிறார் – ‘’மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பதுபோன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனையெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்துவிடுவதைப்போல இருந்தது” – என தன்னைக் கெடுத்தவனையும் புருஷனின் வன்முறையையும் ஒரு தட்டில் நிறுத்தி பொம்மைக்காரியை தற்கொலையிலிருந்து காக்கிறது. மிகத் தீவிரமாகச் சொல்லப்பட்ட பொம்மைக்காரி கதை பாவண்ணனின் புனைவு அழகியலுக்கு ஒரு உச்சத்தைக் கொடுக்கும் கதை. அவரது அழகியலை திட்டவட்டமாக நிறுவும் கதையாகவும் உள்ளது.

Jpeg

பாவண்ணனின் கதைகளில் இயல்பாகவே படிமங்கள் உருவாகி வருவதை முன்னர் பார்த்தோம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் – ஒரு வாசனையில் மனிதரையும் அந்த மனிதரைச் சார்ந்த உறவுகளையும் புனைவுக்குள் கொண்டு வர முடியும், என வண்ணதாசன் புனைவு பற்றி தெரிவித்திருப்பார். பாவண்ணனின் கதைகளில் வரும் மனிதர்களை நல்லவர் கெட்டவர் எனத் தரம் பிரித்துப்பார்க்க நமக்கு அனுமதி இல்லை. கதையில் வரும் மனிதர்களும் அவர்களுடன் ஒட்டும் உறவுமாக இருக்கும் தொடர்புகளும் இந்த வாழ்வை தவமாக, வரமாக, சாபமாகக் கொள்ளும் நிலையிலிருந்து விடுபட எண்ணுபவர்கள். வாழ்க்கை ஒரு விசாரணை நாவலில் வரும் காளி, கனவு கதையில் வரும் விஸ்வநாதன், பிரெஞ்சு துபாஷி வீட்டில் திருடச்செல்லும் பொம்மையார்பாளையும் வீரமுத்து அனைவரும் சந்திக்கும் ஒரு புள்ளியாக இது இருக்கிறது. பாவண்ணனின் வாழ்க்கைப் பார்வையில் அவர்களுக்கான விடுதலை நிலை என்பது கொடுக்கப்பட்ட வாழ்வை போராடாமல் ஏற்றுக்கொள்வதிலேயே அமைந்திருக்கிறது. ”பறவைகள்” கதையில் வரும் முதியோர் இல்லம் போல இம்மனிதர்கள் அடைய நினைக்கும் இடமும் இன்னொரு கூண்டு மட்டுமே என்பதை உணராமல் இருப்பவர்கள். பொம்மைக்காரி போல செல்ல நினைக்கும் இடமும் கூண்டே எனும் தரிசனத்தை அடைந்துவிட்டால் தங்களைச் சுற்றியிருக்கும் அவலத்திலும் ஒளிகீற்றைக் கண்டுகொள்வார்கள்.

பாவண்ணன் பலதரப்பட்ட கதைகளை எழுதிய கலைஞனாக அடையாளம் காணப்படவேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் அவரது தமிழ் புனைவை மட்டுமே பிரதானமாக அலசியுள்ளோம். மொழியாக்கத்தில் அவரது சாதனைகள் இதற்குச் சமானமானவை. கன்னட மொழியாக்கங்களில் அவர் செய்த சாதனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் இன்றும் வரவில்லை. முறையாக கல்விமுறையில் பயிலாமல் தன்னிச்சையாகக் கற்றுக்கொண்டே செவ்வியல் ஆக்கங்கள் தொடங்கி வட்டார மொழிகளைக் கையாளும் தலித் இலக்கியம் வரை அவரால் கன்னடத்திலிருந்து மொழியாக்கம் செய்யமுடிகிறது. மொழியாக்கங்களும் தமிழ் புனைவுகளும் அவரை மொழிவெளியின் சாத்தியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது எனலாம். தொடர்ந்து சிறார் நாவல்கள், கன்னட கவிதை இலக்கியம் எனும் புது திசைகளில் பயணம் செய்யும் பாவண்ணனை நினைக்கும்தோறும் வேலி ஓரங்களில் எதிர்பாராத இடைவெளிகளில் பூக்கும் செடிகள் நினைவுக்கு வருகின்றன. பாவண்ணன் சொல்வது போல, பசவண்ணரின் வசனங்களில் வரும் வரி – எங்கோ மாமரம். எங்கோ குயில். எல்லாவற்றையும் இணைப்பது எதுவோ?

பாவண்ணன் சிறப்பிதழ் – பொறுப்பாசிரியர் குறிப்பு

IMG_35890127086157எங்கோ எப்போதோ கேட்டது இது – எழுதும்தோறும் எழுத்தாளன் கனிந்துவிடுகிறான்; படிக்கும்தோறும் வாசகன் அந்த எழுத்தாளராகவே மாறிவிடுகிறான்.  எழுத்து அப்படியேதான் இருக்கிறது போலும். காற்றில் கலந்திருக்கும் மின்காந்த அலைகள் போல ஏதோ ஒரு விதத்தில் கலைஞனும் அவனது கலையும் இணைந்துவிடும் வித்தை நடந்தபடி தான் உள்ளது. அது ஒரு இறுமாப்பு தருணம். அதே சமயம், தான் ஒரு கருவி மட்டுமே எனும் பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக்கொள்ளும் நேரம். சிறந்த கலைஞர்களை என்றும் துரத்தும் நிழல்கள் இவை. அவர்களது படைப்பு வாசிக்கப்படுகிறது எனும் எண்ணமே இச்சிறு சலனங்களிலிருந்து விடுபட முதல் வழியாகும். ஊக்கத்துக்கு உதவும் ஒவ்வொரு வழியும் கலைச் செயல்பாடுகளின் முதுகெலும்பாகும்.

எழுத்தாளர் பாவண்ணனுக்கு சிறப்பிதழ் செய்யலாம் எனும் யோசனையை தெரிவித்தபோது மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு செயல்புரியத் தூண்டிய பதாகை ஆசிரியர் குழுவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி.  அச்சிதழில் தகுந்த தளம் அடையப்பெறாதவர்கள் இணையத்தில் தமிழ் புழங்கத்தொடங்கியபோது பேருவகை அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சியில் மண் விழுந்ததுபோல தமிழ் இணையம் அடையாளமிலிகளின் கூடாரமாக ஆகிப்போனது. தமிழ் தத்துவ மரபின் ஆதி சூத்திரம் போல இருந்தும் இல்லாத நிலை. அதனால்  இலக்கியத்தில் தொடர்ந்து தன் பங்களிப்பை அளித்துவரும் எழுத்தாளருக்காக ஒரு தரமான இணைய இதழ் பல பக்கங்களை ஒதுக்குவது என்பதும் சிறப்பிதழ் வெளியிட தயாராக இருக்கிறது என்பதும் பாறைப் பிளவில் பூவைப்போல அபூர்வ தருணம். இதை சாத்தியமாக்கிய பதாகை இணைய நண்பர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

எங்கள் கோரிக்கை ஏற்று வெளிவரவிருக்கும் பாவண்ணன் எழுதிய புத்தகத்தின் முன்னுரையை எங்களுக்கு அனுப்பிய காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் வெளியிட அனுமதியளித்த எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சிறப்பிதழுக்குத் தேவையானவற்றை நண்பர் சுனில் கிருஷ்ணன் முன்னரே தெரிவித்திருந்தார். சு.வேணுகோபால் சிறப்பிதழின் முன் குறிப்பில் அவர் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார். சிறப்பிதழ் எழுத்தாளருடனான விரிவான நேர்காணல் (இந்த இதழில் அது மடல்காணல்), எழுத்தாளரின் ஆக்கங்கள் பற்றி விரிவான கட்டுரைகள் ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். முதலில் எழுத்தாளர் பாவண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு இன்று வரை நாங்கள் கேட்ட எல்லாவிதமான தகவல்களையும் தந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்கு பதாகை இணைய இதழ் சார்பில் ஆகப்பெரிய நன்றி.

பதாகை இணைய இதழுக்குத் தொடர்ந்து படைப்புகள் அனுப்பியும் விமர்சனங்கள் சொல்லியும் ஊக்கப்படுத்தும் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பாவண்ணன் சிறப்பிதழ் பற்றி சொன்னபோது பலரும் தங்கள் படைப்புகளை உடனடியாக அனுப்பினர். நண்பர்களின் உதவியால் பெரிய அளவு நாங்கள் கோராமலேயே கட்டுரைகள் உடனடியாகக் கிட்டின. எழுத்தாளர் பாவண்ணனின் எழுத்து மீது பிரியம் கொண்ட வாசகர்கள் தாங்களாகவே முன்வந்து நண்பர்களிடம் வாங்கிய கட்டுரைகள் பலதும் இங்கு உள்ளன. அவர்களுக்கு எங்கள் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள் பல.

மூத்த எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்கள் இந்த சிறப்பிதழ் பற்றி கேள்விப்பட்ட எழுத்தாளர் பாவண்ணன் மீதிருக்கும் அன்பால் உடனடியாகக் கட்டுரை அனுப்பிவிட்டார். அவரது அன்பிற்கும் ஆசிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதே போல திருஞானசம்பந்தம் அவரது தனிச் சேகரிப்பில் இருந்த அற்புதமானப் புகைப்படங்களை நாங்கள் கேட்காமலேயே எங்களோடு பகிர்ந்துகொண்டதும் நெகிழ்ச்சியான தருணம். இத்தனை நண்பர்கள் ஊர்கூடி இந்த சிறப்பிதழை நடத்தியுள்ளதை எண்ணி மனம் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இந்த சிறப்பிதழ் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் மழையிலும், ஏரிகள் உடைந்து வீட்டுக்குள் புகுந்த நீரின் சேதங்களினாலும் திண்டாடிப்போன சென்னை, கடலூர் பகுதிகளின் பாதிப்பிலிருந்து மீட்பதற்காக தங்கள் நலனையும் பாராது உழைத்த இதயங்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளையும் பதாகை இணைய இதழ் சார்பாகத் தெரிவிக்கிறோம்.

முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுத்திலும் வாசிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாது எப்போதும் புது எழுத்தாளர்களின் அறிமுக எழுத்தையும் படித்து ஊக்குவிப்பதில் முதன்மையாகச் செயலாற்றும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு வாசக நன்றியாக இந்த இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செய்நேர்த்தியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஹேமானந்த்

ரா கிரிதரன்

இரவு பத்தரை மணிக்குப் பிறகு வேலாயுதம் பிள்ளை வீதியின் மறுமுனைக்கு செல்வதென்பது மயானத்தைக் கடந்து செல்வது போன்றது. ஆனால், ஹேமானந்தின் வீடு அந்த முனையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் தான். சுற்றுலாவிலிருந்து வந்த உடனே வெளியே போகிறேன் என்றதும் அம்மா எரிந்து விழுந்தாள். அவளுக்குப் புரியாது, என்ன செய்ய? எங்கள் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகப் படத்தில் மட்டுமே பார்த்திருந்த டெலெஸ்கோப் ஹேமானந்திடம் இருக்கிறது.

ஒரு முறை பள்ளிக்கூடம் விட்டதும் பீச் வழியாக நடந்து சென்று ஹேமானந்த் வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு என்று கூட சொல்லமுடியாது. சின்ன அறை. தகரத் தடுப்பு போட்டு ரெண்டாக இருக்கும். முத்தியால்பேட்டை அம்மன் கோயிலைத் தாண்டியதும் கண்ணை மூடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம். கிட்டத்தட்ட இருபத்தைந்து படிகள் ஏறி ரெண்டாம் தளத்தில் இருந்த வீட்டை அடைந்து அதைவிட குறைவான அடிகளில் வீடு முடிந்ததில் எனக்கு சப்பென்று ஆகியது.

ஹேமானந்துக்கு கூர்ந்து கவனிக்கும்படியான தோற்றம் கிடையாது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் போல ஒல்லியான தேகம், நடுத்தர உயரம், மெல்லிய மீசை, எண்ணெய் வழியும் நெற்றி. சொல்லப்போனால் அவன் முதல் நாள் வகுப்புக்கு யூனிபார்ம் பட்டனுக்கு பதிலாக தலை க்ளிப் போட்டிருந்ததால் மட்டுமே அவனை கவனித்தேன். அவன் தனியாக முன்னிருக்கையில் அமர்ந்தான். அடுத்தடுத்த வாரங்களில் விளையாட்டு நேரங்களில் ஏதேனும் சுவர் ஓரங்களில் ஒளிந்துகொள்ளும்போது அவன் தனியாக உட்கார்ந்ததைப் பார்த்தேன். நான் இருப்பதாக சத்தம் போடமாட்டான். அப்படித்தான் என் நண்பனானான்.

அந்த வருடம் ஊரெங்கும் அரசியல் கூட்டங்கள். புதுச்சேரியை தமிழ்நாட்டோடு சேர்க்கப்போவதற்குப் பயந்து கடையடைப்பு, பந்த் நடத்தும்படியான கோஷங்கள். உடனடியாக எனக்கு அப்பாவுக்கு என்ன ஆகுமோ என பயமாக ஆனது. முன்னர் பிரெஞ்சுக்காரன் ஊரைவிட்டு கப்பல் ஏறிப்போன வருஷம் கூட்டத்தில் அப்பா ஏதோ பேசியதால் கைது செய்யப்பட்டிருந்தாராம். இந்த ஊருக்கு உன்னோட வயசு, எனப் பாட்டி சொல்லி அலுத்த கதை. இதனாலேயே அரசியல் கூட்டம் எனச் சொன்னாலே ஒரு பயம். அதுவும் அப்பாவைப் பார்க்க பலரும் வந்துபோனபடி இருந்ததில் அம்மாவும் பயந்திருந்தாள். என்னிடம் சொல்லவில்லை. பாட்டியிடம் கேட்கலாம், ஆனால் அவள் அப்பாவிடமே நேரடியாகக் கேட்டுத் தொலைத்துவிடுவாள்.

திடீரென என் வகுப்பிலிருந்த ராஜேஷுக்கு மரியாதை அதிகமானது. அவனது அப்பா சட்டசபையில் குமாஸ்தாவாக இருந்ததால் பள்ளிகளுக்கும் பந்த் உண்டா, எத்தனை நாட்கள் விடுமுறை போன்ற செய்திகளை கேட்டு முடிவை முன்கூட்டியே சொல்வதாக அறிவிப்பு செய்திருந்தான். அன்றிலிருந்து அவன் மிச்சம் வைத்த பின்னர் தான் மதிய உணவு டப்பாவை அவர்வர் உண்ண முடிந்தது. அதிகம் சிரித்தால் அடுத்த நாள் அழுவோம் என்று பாட்டி சொல்வது போல ஹேமானந்த் வந்த அதே மாதத்தில் உணவு இடைவேளை நேரத்தைப் பாதியாகக் குறைத்து சயின்ஸ் லாப் நடத்த புது வாத்தியார் வந்தார். தனியே சந்தோஷமாக இருந்த புதுவையை பக்கத்து ஊரோடு சேர்க்கப்போகிறார்கள் என அப்பாவும் போராடப் போவது போல், இதற்கும் ஏதேனும் செய்யவேண்டும் என ராஜேஷிடம் உணவு இடைவேளையின்போது பேசினேன். கிடைத்த அவகாசத்தில் சாப்பிட்டு முடிக்கவேண்டிய அவசரத்தில் இருந்த அவன் அத்தனை சுவாரஸ்யம் காட்டவில்லை.

‘இன்றைய லாபில் புல்லி சிஸ்டம் பற்றி பார்க்கப்போறோம். குறைவான சக்தி வழியாக பலமான எடைகளை தூக்குவது எப்படி?’

மெளனமாக உட்கார்ந்திருந்தோம். தினமும் கிணற்றில் பார்க்காத எதையும் அவர் காட்டவில்லை என்றாலும் ரெண்டு சக்கரத்திருப்பான்கள் வழியாக தூக்கமுடியாத எடையை ஒருவிரலால் நகர்த்திக் காட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது. கைக்கடிகார முட்களை நீக்கிக்காட்டி ஆற்றலைப் பற்றி பத்து நிமிடம் பேசினார். ஆழ்ந்த மெளனம். ஒவ்வொருவராக அருகே சென்று அவற்றைத் தொட்டுப் பார்க்கலாம் எனச் சொன்னதும் சலசலப்பு கூட்டம் முண்டியடிக்கத் தொடங்கியது. ரோந்து வந்த ஸ்கூல் தலைமை ஃபாதரிடம் ஆசிரியர் பேசிவிட்டுத் திரும்பிய நேரத்தில் கைக்கடிகாரப் பகுதிகள் பேப்பர்கடை குவியல்கள் போலத் தரையில் கிடந்தன.

கையில் கிடைத்த ஸ்கேலை எடுத்து அடிக்க வந்ததும் ஆளுக்கு ஒரு மூலை சிதறினோம். வழக்கம்போல கூட்டத்தில் பின்னால் நின்றிருந்ததில் எனக்கு சின்ன திருப்தி. ஹேமானந்த் மட்டும் மேஜை அருகே நின்றபடி கடிகாரப்பகுதிகளை கையில் வைத்திருந்தான்.

‘டேய் கத்தறது கேக்கலை. வெச்சிட்டுப் போறியா, ஃபாதர் ரூமுக்கு அனுப்பட்டுமா?’, எனக் சத்தம் போட்டார் புது வாத்தியார். நகராமல் மும்முரமாக கடிகாரப்பகுதிகளை சேர்த்துக்கொண்டிருந்த ஹேமானந்தை நாங்கள் பயத்தோடு பார்த்திருந்தோம்.

‘ராஸ்கல், சீ நகரு’

தள்ளிவிட்டதில் மேலும் சில பகுதிகள் தரையில் விழுந்தன. அவருக்கு வந்ததே கோபம், முட்டிக்குக் கீழே ஸ்கேலில் பழுக்கக் காய்ச்சிவிட்டார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு அடிகொடுக்கும் வாத்தியார்கள் குறைந்துவிட்டதால் இருந்த நிம்மதி அந்த ஒரே நிகழ்ச்சியால் காணாமல் போனது.

மாலை, வீட்டுக்குச் செல்லும்போது ஹேமானந்த் மட்டும் தனியே போவதைப் பார்த்து பேச்சு கொடுத்தேன்.

‘அவரு தான் சொன்னாரில்லை. உனக்கேன் கொழுப்பு? நாங்கெல்லாம் பின்னாடி போகல?’

முதலில் அவன் பேசவில்லை. நான் முன்னாடி நடக்க அவன் என்னைத் தொடர்ந்தான். குறுக்குவழியில் வீடு போக பஜாருக்குள் நுழையும்போது, ‘எனக்கு ஒரு சர்பத் வாங்கித்தரியா?’, எனக்கேட்டான்.

அன்றுமுதல் மாலை வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஒன்றாக சர்பத் குடிக்கத் தொடங்கினோம்.

‘உனக்கு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் பிடிக்குமா? நேரு சிலை பின்னாடி இருக்கு. வாங்கித் தர்றேன்’, ஸ்ட்ராவில் குடித்தபடி மண்டையை ஆட்டினான். அவன் கேள்விப்பட்டதில்லையாம். ஏனோ எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் அவனுக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது.

‘உன்கிட்ட பைசா இல்லியா?’

ஒரு சர்பத்துக்கு மட்டுமே காசிருந்த நாளில் கேட்டபோது, ‘எங்க அப்பா வரும்போது தருவார். பெங்களூரில் வேலை பார்க்கிறார். அப்புறம் தர்றேன்’, எனச் சொன்னான்.

“பரவாயில்ல. நானே வாங்கித் தர்றேன்”, எனச் சொல்லி பகிர்ந்து குடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

ஹேமானந்துடனானப் பழக்கத்தை அம்மாவிடம் சொன்னபோது அப்பாவிடம் சொல்லாதே என்றாள். காரணம் தெரியாது அடுத்த நாள் அவனுடன் ஜூஸ் சாப்பிட்டதைச் சொன்னபோது, “எத்தனை தரம் சொல்றது? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்றாள்.

“ஏன் ஏம்மா?”

“நீயும் சாராயக்கடையில் வேலை பார்க்கப்போறியா?”, என எரிந்து விழுந்தாள்.

“அவனோட அப்பா பெங்களூர்ல இருக்கார்”

“ம்க்கும். அந்த ஏரியாவே சாராயக்கடைக்காரங்கதான். சொல்றத கேக்கல, ஸ்கூல் ஃபாதர்கிட்ட சொல்லிடுவேன்”

அத்தோடு பேச்சு முடிந்தது.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலை வழக்கம் போல ஜூஸ் குடித்து முடித்ததும், ‘என் வீட்டுக்கு வர்றியா?’, என அழைத்தான். பதில் சொல்லாமல் அவனைத் தொடர்ந்தேன். என் வீட்டைத் தாண்டும்போது ஓரக்கண்ணால் மாடியில் யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்துவிட்டு வேகமாகக் கடந்தேன்.

அவனது வீட்டில் நுழைந்ததும் முதலில் வந்தது ஒரு விநோத வாசனை. மருந்து அல்லது காய்ந்த ஊறுகாய் மாதிரியான வாசம். உட்கார இடமில்லை. இருந்த ஒரு மேஜையில் ரேடியோ, பேட்டரி எனப் பலதும் இரைந்து கிடந்தன. சாய்ந்து உட்கார முடியாதபடி ஒரு நாற்காலி. அதில் தலை நரைத்த வயதான ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். சாயம் போன புடவை.

‘இதான் என் அம்மா. அதோ அது தங்கச்சி. நாலாவது படிக்குது’

அப்போதுதான் அறையின் மூலையில் ஒரு பெண் தரையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பதை கவனித்தேன். என்னை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலையைக் குனிந்து எழுத்தைத் தொடர்ந்தாள்.

‘இதெல்லாம் நீயேவா ரிப்பேர் செய்வே?’

‘ம். ஆமாம். டூல்ஸ் இருந்தா இன்னும் நிறைய செய்யலாம்.’

‘அப்பா இல்ல?’

அம்மாவை தர்மசங்கடமாகப் பார்த்தவன், ‘அடுத்த தடவை நீ வர்றத்துக்குள்ள பாரேன், இந்த டேபிளில் செட் செஞ்சு, ரேடியோவை சரி செய்திடுவேன்’, என்றான்.

‘கொஞ்ச உக்காந்து பேசிகிட்டிருங்களேன்பா’, என்ற அவனது அம்மா எங்கள் திசையைப் பார்த்து சிரித்தாள்.

என்னை அறை வாசலுக்கு அழைத்துச் சென்றவன், ‘தப்பா நினைச்சுக்காதே. அம்மாக்கு சமைக்க உதவணும். நாளைக்கு ஸ்கூலில் பார்க்கலாம்’, என்றான்.

இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என நினைத்தாலும் அப்பாவுக்குத் தெரிந்தால் பெல்ட்டால் அடித்துவிடுவார் என்பதால் எதுவும் சொல்லாமல் நானும் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து படிகள் இறங்கும்போது அம்மாவுக்கு சமையலில் ஏன் உதவவேண்டும் எனத் தோன்றியது. பசித்தது. தீனி கூட கொடுக்கலியே என யோசித்தேன். பிஸ்கட் டப்பாவை பார்த்தேனே? சீக்கிரமாக வீட்டுக்குப் போனால் எப்போதும் மாலையில் அம்மா செய்யும் கார வடையும் டீயும் கிடைக்கும் என நினைத்ததும் நடை வேகம் கூடியது. தெரு முனைக்கு வரும்போது ஹேமானந்தின் வீட்டு மாடியைத் திரும்பிப் பார்த்தேன். திரைச்சீலை முழுதாக மூடியிருந்தது. தூரத்திலிருந்து வீடு இருக்கும் மாடி வேறொரு உலகம் போலத் தெரிந்தது. அன்றிரவு தூங்கும்போது அவனது அம்மாவின் சிரிப்பு மட்டுமே வந்தது நினைவில். தினமும் அவனுக்கு ஜூஸ் வாங்கித்தரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

அடுத்த ரெண்டு வாரமும் பள்ளிக்கூட சுற்றுலாவுக்குத் திட்டம் போடும் குஷியில் நேரம் போனதே தெரியவில்லை. ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடங்கிய திட்டம் நிதி நிலைமையினால் ரெண்டு நாட்கள் செஞ்சிக்கோட்டை என முடிவானது. ஹேமானந்தால் வரமுடியாவிட்டாலும் திடலுக்கு அருகே மரைக்காயர் கடலைக் கடை வாசல் பஸ் நிறுத்தம் வரை வந்து நாங்கள் கிளம்பும்வரை நின்றிருந்தான். அவன் வராதது கஷ்டமாக இருந்தது. மெதுவாகக் கிளம்பிய பஸ் அருகே ஓடி வந்தவன், ‘நாளான்னிக்கு அப்பா வர்றார். டெலெஸ்கோப் வாங்கி வர்றாராம்’, எனப் பல் இளிக்கக் கத்தினான்.

சுற்றுலா முடித்து வரும்வரை டெலெஸ்கோப் பற்றி மட்டுமே யோசித்தேன். தூரத்தில் இருப்பவற்றை அருகே காட்டும் எனத் தெரிந்தாலும் அதைக்கொண்டு என்ன செய்ய முடியும் எனப் பலவாறு யோசனை. அருண் கோஷ்டியில் முழுவதாக இணைய முடியாதபடி ஹேமானந்தின் நினைவில் கழிந்தது. நானாக அருண், ராஜேஷுடன் விளையாடப்போனாலும் என்னை விட்டுவிட்டு அவர்கள் எங்காவது நகர்ந்துவிடுவார்கள். அவர்களுடன் இருக்கும்போது ஹேமானந்த் பற்றிச் பேசினால், “எப்பவும் அவனப் பத்தி என்ன இருக்கு பேச”, என்பதாக அவர்களது எண்ணம் இருந்தது. “அவன் என்ன உன்னோட பெஸ்ட் பிரண்டா இல்ல உங்கப்பா வாங்கித்தந்த விளையாட்டு சாமானா, அவன் மேல இத்தனை உரிமையா இருக்கே”, என கூட வந்திருந்த அஸிஸ்டெண்ட் டீச்சர் கூடக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாது வெறுமனே சிரித்து வைத்தேன்.

நான்காம் நாளில் சுற்றூலா முடிந்து திரும்பிய இரவு டெலெஸ்கோப்பைப் பார்க்க ஹேமானந்த் வீட்டுக்கு ஓடினேன். வந்த களைப்பு கூட போகாது என்ன ஓட்டம் என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்தரை மணியானாலும் பரவாயில்லை என அவள் அடித்துச் சொல்லிக்கொடுத்த கந்தர் சஷ்டி கவசத்தை மென்று விழுங்கி அரைகுறையாகச் சொல்லியபடி வேலாயுதம் பிள்ளை வீதி இருட்டைக் கடந்துவிட்டேன். முழுவதுமாகக் கற்றுக்கொண்டிருந்தால் பேய்களிடமிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். மூச்சிரைக்க மாடியேறியதும் கதவில் தொங்கிய சிறிய பூட்டு முகத்தில் அறைந்தது. நானே பூட்டியதுபோல ரெண்டு முறை இழுத்ததும் கதவு வேகமாக அசைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அரை மணி நேரம்போல நான் படிகட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன். கீழ்வீட்டில் கேட்டுப்பார்க்கலாமா? கோபமாக வந்தது. பள்ளிக்கூட லீவு முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதை நினைத்து ஏமாற்றத்தில் அழுகையும் கூடியது.

புது வகுப்பின் முதல் நாள் வந்தது. வழக்கமான வழியில் பாதி வரை வந்து லபோர்த்து வீதிக்குள் திரும்பிவிட்டேன். ஹேமானந்த் வந்தாலும் அவனோட பேசக்கூடாது.

“என்னடா இந்த வழில வர்றே?”, ராஜேஷ் அருகே வந்து சைக்கிள் பிரேக் அடித்தான்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவனது கேரியரில் உட்கார்ந்துகொண்டேன்.

“டெலெஸ்கோப் பார்த்தியா?”

மூன்று நாட்களில் ஒரு நாளேனும் அவனாக என் வீட்டுக்கு வந்து காட்டியிருக்கலாம். “எங்கப்பா வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கார். வீடு வீடா போறேன்னு திட்டறார்”

“எங்களுக்கு காட்டுவியா?”, வண்டி ஓட்டியபடி ராஜேஷ் திரும்பிக் கேட்டான்.

“ஓ. நிச்சயமா. வாங்கினதும் உனக்கும் அருணுக்கும் காட்டறேன்”

லஞ்சு பிரேக் வரை தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. பத்து நிமிட இடைவெளி கிடைத்தபோது பிரேயர் ஹால் மைக் செட் ரூமுக்குச் சென்று மோகன் சார் முன்னால் நின்றேன்.

“ஹேமானந்த் இன்னிக்கு வரலியா சார்?”

“எந்த கிளாஸ் ஹேமந்த்?”

“ஹேமந்த் இல்ல, ஹேமானந்த் சார்..”

“எந்த க்ளாஸு?”

“நைந்த் பி”

“எனக்கு எப்படி தெரியும்? ஏன் அவன் வீட்ல யாரும் லீவு சொல்ல வரலியா?”

யாருன்னு தெரியலை அப்புறம் என்ன கிளாஸாயிருந்தா என்ன எனக் கேட்க நினைத்தேன். எரிச்சலாக இருந்தது. இனி மாலை வீட்டுக்குத் திரும்பும் வரை தெரிய வாய்ப்பில்லை. இல்லை, இனிமே அவனைத் தேடக்கூடாது. பேசக்கூடாது.

உணவு இடைவெளியில் அருணைத் தேடிப்போனேன். அவனது நண்பர்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தூரத்திலிருந்து என்னைப் பார்த்தவன் தொடர்ந்து பிரபுவுடன் பேசுபவன் போலத் திரும்பிக் கொண்டான்.

“அருண்”

“ம்”, இப்ப மட்டும் எங்க வந்த என்பது போல பார்த்தான்.

“ஹேமானந்தைப் பார்த்தியா?”

“அவன் ஊரவிட்டுப்போறதா முருகானந்தம் சார் சொன்னாரே”

அது பொய் எனத் தெரியும்.

“என்கிட்ட சொல்லிக்காம போகமாட்டான்”, என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டேன்.

“டெலஸ்கோப்ப உன்கிட்ட காட்டினானா? இல்லல்ல? ஜுஸ் வாங்கித் தந்தா உனக்குக் காட்டுவானா என்ன?”

“எனக்குக் காட்டினான்”, முகத்தை கடுமையாக வைத்தபடி பிரபு சொன்னான்.

“சரி, லஞ்சுக்கு அப்புறம் உப்பளம் போறோம் வரியா?”, அருண் கேட்டான்.

என்னை சீண்டுகிறார்கள் எனத் தெரிந்தது. அதற்கு மேலும் அங்கிருந்தால் அழுதுவிடுவேன் எனத் தோன்றியது. இவர்களது மூக்கை உடைக்கவேனும் டெலெஸ்கோப்பை முதலில் பார்த்திட வேண்டும் என்று கூடத் தோன்றியது. இவர்கள் பொறாமைப்படும்படியான விஷயம் தான் அது என்றாலும் என்னிடம் கூட காட்டாமல் ஹேமானந்த் எங்கு போயிருப்பான்?

நான் எதுவும் சொல்லாமல் என் லஞ்ச் டப்பாவுடன் க்ளாஸுக்கு நடந்தேன். படியேறி காலியான க்ளாஸுக்குப் போகும்போது என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. க்ளாஸில் யாரும் இருக்கக்கூடாதே என வெட்கப்பட்டு கரும்பலகை பக்கம் பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்.

ரெண்டாம் வரிசை கோடியில் என் புத்தக மூட்டைக்குள் டப்பாவைத் திணித்தபின் பார்த்தேன், வகுப்பில் யாருமில்லை. வாய்விட்டு சத்தமாக அழத் தொடங்கினேன். ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்திருந்த காக்கா கழுத்தை சாய்த்து வகுப்பில் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டது. டெஸ்கில் கிடந்த பென்சில் சீவுத்துண்டுகளை சேகரித்து ஜன்னலை விட்டு வெளியே வீசினேன். சட்டென பருக்கைத் துண்டுகளை சிதறவிட்டு வெளியே பறந்தது. ஒரு வட்டம் அடித்து மீண்டும் ஜன்னலோரம் சிந்தியிருந்த சாதத்தைப் கொத்தத் தொடங்கியது. விளையாட்டு திடலில் சத்தம் குறைந்து விசில் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கன்னத்தைத் துடைத்துக்கொண்டேன்.

வேகமாக ஓடிவந்து க்ளாஸுக்குள் நுழைந்தவர்களுக்குப் பின்னால் ஹேமானந்த் புத்தகப்பையுடன் வருவது தெரிந்தது.

“அப்பா ஊருக்குக் கிளம்பினார்டா. பஸ் ஏத்திவிட்டு நேரா இங்க வர்றேன்”

பேண்டுக்குள் பளபளப்பான சட்டையைத் திணித்திருந்தான்.

“அப்பா இனிமே டிரவுசர் போடக்கூடாதுன்னு சொல்லிட்டார்”.

அவன் முகத்தில் மிகுந்த பெருமிதம்.

“டெலஸ்கோப் செமையா இருக்குடா..இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வர்றே இல்ல? ”

அவனுக்கு பதில் சொல்லாமல் க்ளாஸ் கதவை நோக்கி நடந்தேன்.

ஹேமானந்த் பின்தொடர்ந்து வந்தான்.

“என்னடா? கோவமா?”

“இல்லை. ஆனா இனிமே உனக்கு ஜூஸ் வாங்கித்தர மாட்டேன்”, எனச் சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டேன்.

க்ளாஸ் வாசலில் ஹேமானந்த் ஒண்ணும் புரியாமல் நின்றிருந்ததை வகுப்பு வரிசைகளைத் தாண்டித் திரும்பும்போது பார்த்தேன்.

மனித வாழ்வின் அகவல் – ‘ஆட்டம்’ குறுநாவல்

ரா கிரிதரன்

venu

சு வேணுகோபால்

சு.வேணுகோபால் எழுதிய “ஆட்டம்” குறுநாவல் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரிவைப் பற்றிய கதை என்றாலும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் போது தனி மனித மனம் கொள்ளும் ஊசலாட்டங்களைப் பேசும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது. பிரிவின் துயரை ஏற்க மறுக்கும்போதும், அதை உண்டாக்கியவர்கள் மீது அதீத வெறுப்பும், கோபமும் உண்டாக்கும் மனதின் அனத்தல்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பலதரப்பட்ட படைப்புகளில் கையாளப்பட்ட கருவாக இருந்தாலும் சு.வேணுகோபால் பயணம் செய்யும் வழிகளும், அடையும் முடிவுகளும் அவருக்குரிய முறையில் தனித்துவமாக இருக்கின்றன.

பிரிவின் துயர் பற்றிய பேசுபொருள் தமிழுக்குப் புதிய கதைக்களன் அல்ல. நம் காவியங்களிலும் பிரிவு மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளது. நெய்தன் நிலப்பறவையான அன்றிலின் பிரிவு, தென் அமெரிக்கப் பறவையான Candor அனுபவிக்கும் பிரிவு என மனிதன் உட்பட ஒவ்வோர் விலங்கும் பிரிவின் வேதனையை வெவ்வேறு விதத்தில் ஏற்றுக்கொள்கின்றன. சங்கம் முதல் காப்பியங்கள், சிலம்பு, நவீன ஆக்கங்கள் வரை பிரிவின் துயர் பற்றிப் பல பெருங்கதைகள் உள்ளன. ராமன் தற்கொலைக்கு முயல்கிறான், சாமானியளான கண்ணகி அரசவை நுழைகிறாள் – ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் பிரிவின் துயரை எதிர்கொள்கிறார்கள். பல கதைகளில் பிரிவு என்பது பெருநிகழ்வுக்கான முகாந்திரமாக இருக்கிறது. கொந்தளிப்பான சமூக நிகழ்வாகவும், அறமீறலின் எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியத்தை பிரிவுகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் “ஆட்டம்” குறுநாவல் பிரிவின் விசாரணையை பல தளங்களில் மேற்கொள்கிறது.

“ஆட்டம்” எனும் குறுநாவலின் கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வீரபாண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். முல்லையாற்றின் நிலப்பகுதி. ஊரெங்கும் சோளக்குருத்துகளும் வாகை மற்றும் பூவரச மரங்களும் நிரம்பியிருக்கும் செழிப்பான பூமி. மழைக்குப் பஞ்சமில்லாததால் விளைநிலங்களுக்கும் குறைவில்லை. வீரபாண்டியில் பிரதானமான விளையாட்டு கபடி ஆட்டம். குஞ்சு குளுவான்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ஆட்டம் என்றால் கபடிதான். தேனிப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பல கபடி குழுக்கள் வீரபாண்டியில் சந்தித்து போட்டிபோடும். அவர்களுக்கு அது பெருமை தரும் விஷயம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் கபடி போட்டியில் வீரபாண்டிக்கு இருக்கும் அதிகாரம் தேனி பகுதியில் வேறு ஊருக்கு இல்லை.

அப்பேற்பட்ட வீரபாண்டியில் வடிவேல் கபடி விளையாட்டில் தெய்வமென மதிக்கப்பட்டவன். வடிவேல் ஆடுகிறான் என்றால் ஐந்து வயது குழந்தை முதல் பல் போன கிழவர்கள் வரை கோமாரியம்மன் திடலில் கூடிவிடுவார்கள். பதினெட்டு வயது முதல் கபடி வீரனாகத் திகழ்ந்த வடிவேலுவின் கதையைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த குறுநாவல். பதினெட்டு வயது முதல் இருபத்து நான்கு வயது வரை கபடி மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது. வைரமணி, பிரேம்குமார், காளையன் எனும் நண்பர்களோடு நான்கு கட்டங்களில் நடத்தும் சாகஸங்கள் தேனி மாவட்டம் முழுவதும் மிகப் பிரபலம்.

நான்கு திசைகளில் சென்றுவிட்ட நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வலிகளையும் பேசத்தொடங்கும் கதை நெடுக அவர்களது ஆட்டத்தின் திண்மையும் வெளிப்படுகிறது. வடிவேல் காதலில் விழுகிறான்; ஆனால் தோற்பதில்லை. திருமணத்தில் முடியும் காதல் ஒரு கட்டத்தில் கைநழுவுகிறது. நான்கு கட்டத்துக்குள் தனது சாகஸ ஆட்டத்தை நிகழ்த்தி வெற்றி வீரனாக வந்தவன் வாழ்க்கையின் போராட்டங்களை திருமணம் முடிந்த பின் சந்திக்கிறான். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டு முறைமாமனை தாக்கிவிட்டு இருபத்து நான்கு வயதில் ஜெயிலுக்குச் செல்கிறான். சில வருடங்களில் வெளியே வந்தவன் தன் மனைவியின் காதல் கழன்றுவிட்டதை உணர்கிறான். பிள்ளைகள் ரெண்டான பின்னும் அவனது மனைவி கனகத்துக்கு வேறொருவனுடன் தொடர்பிருப்பதைக் கண்டு பதறுகிறான். அவன் வாழ்க்கையிலிருந்து ஆட்டத்தையும், ஆட்டத்திலிருந்து வாழ்க்கையையும் பற்றிவிடமுடியும் எனும் எண்ணத்தோடு தனது முப்பத்து ஐந்தாவது வயதில் மீண்டும் கபடிப்பயிற்சி செய்யத் தொடங்குகிறான்.

நிகழ்காலமும் பழைய நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்து வளரும் கதையில் வடிவேலுவின் சமூக உறவு தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது. இளவயதில் கபடி ஆடும்போது அவனுடைய நண்பர்களான காளையன், பிரேம்குமார், சுருளி போன்றோர் காதலுக்கும் அவனுடைய விளையாட்டுக்கும் மிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். அவனுடைய ஒவ்வொரு நினைப்பும் விளையாட்டில் தனது உடலின் பெளதிக இருப்பைக் கடந்து சாகஸங்கள் நடத்தும் கனவில் திளைக்கிறது. உடலைக் கட்டுமஸ்தாக மாற்றுவது ஒரு பயிற்சி என்றாலும் மனதின் அமைதியும் ஆட்டத்துக்கு இன்றியமையாத ஒன்றுதான். உடலும் மனமும் ஒருமுகத்தோடு இயங்கும்போது அவனால் பெளதிக இருப்புகளைக் கடக்க முடிகிறது. லயத்துடன் கூடிய சீர்மை அவனுக்குள் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் சமூக உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. நண்பர்களுடனான உறவின் இனிமையிலும், அவர்களது சுகதுக்கங்களில் ஒருங்கிணைய முடியும் இயல்பும் வடிவேலின் ஆதார குணங்களாக வெளிப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் திறமைவாய்ந்த பிரேம்குமார் ரயில் ஓட்டத்தில் சிக்கி இறப்பதும், உடல் உறுதியை சித்தியினுடனான உறவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாழ்க்கையைத் தொலைத்த காளையனின் இழப்பு, தாயைக் காணாது வீட்டிற்கும் ரோட்டிற்கும் திரியும் வடிவேலின் நாயின் அலைக்கழிப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டமும் கதையில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உடலை போகப்பொருளின் உச்சகட்டமாக நினைத்து அதை மட்டுமே போஷித்து சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குள் சீர்மையற்ற மன ஆட்டத்தை வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள். நடக்க முடியாமல் உடல் வீங்கிப் போகும் காளையன், ரெண்டாம் முயற்சியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் வடிவேல், முதல் உறவின் வழியே ஒரு பெண்ணைப் பெற்ற வடிவேலுவின் தாய் போன்றோர் நடுவயதில் வாழ்வின் அலைகழிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடலின் ஆசைகளை நெடுகப்பற்றி வாழ்வு மீதான நம்பிக்கை மீது கவனத்தை கூட்டாது சிதறவிட்ட தருணங்கள் நாவலில் நிறைய உண்டு.

நாவலில் பொருந்தாத சித்திரம் வடிவேலு காமத்தைப் பற்றி அனத்தும் பகுதிகள் எனத் தோன்றியது. சித்தி நாகமணிக்கும் காளையனுக்கும் இருந்த உறவு தகாத காமத்தின் பயனாகத் தொடங்கிய ஒன்று. காளையனின் இளமையை கடைசி சொட்டு வரை உறிந்து ஐம்பது வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பு குலையாது வைத்திருக்கும் நாகமணி கொன்று உண்ணும் யட்சி போன்றவள். காமத்தில் பிறந்து நிராகரிப்பிலும் நம்பிக்கை துரோகத்திலும் முதிர்ந்த இந்த உறவு நாவலில் மிக உயிர்ப்பானப் பகுதி. அதே நேரத்தில், காதலில் பிறந்து காதலைத் தக்கவைக்கப் போராடும் வடிவேலு – கனகம் உறவில் காமத்தின் ஏக்கம் ஆசிரியரை மீறி ஒட்டவைத்த ஒன்றாகவே தோன்றியது. வயதான பின்னர் ஆட்டத்தில் தோற்பதும், கனகுவின் கள்ளக்காதல் தன் மூக்குக்குக் கீழே நடப்பதை கண்டும் தடுக்க முடியாமல் தவிப்பதும் தனது செயலின்மையால் என நினைத்தாலும் உடலுறவில் அவள் மீதான ஆதிக்க நினைப்புக்கு கதையில் எந்த முகாந்திரமும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒரு விதத்தில் நடுத்தர வயதில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் வடிவேலு தனது வாழ்க்கையையும் கனகுவையும் மீட்டு விடலாம் என எண்ணுகிறான். நேரடியாக இல்லாவிட்டாலும் அவனது முயற்சியில் இளமையை மீட்ட நினைக்கும் சாத்தியங்கள் காதலின் தேவையை உணர்வதால் மட்டுமே எனத் தோன்றுகிறது. நாகமணி மீதான காம இச்சை கூட இக்காதல் கைகூடாத இயல்பினால் விளைந்த எரிச்சல் தான்.

கோமாரியம்மன் திருவிழா சமயங்களில் பக்கத்து ஊரில் வசிக்கும் தனது அக்காவின் ஆசிர்வாதத்தை வாங்கும் வடிவேலு இம்முறையும் அதற்காகக் காத்திருக்கிறான். முதல் உறவில் பிறந்தவளை அவனது தாயும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போதுதான் சந்திக்கிறாள். குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக இது இருந்தாலும், அக்காவின் ஆசிர்வாதம் நம்பிக்கையை கூட்டும் என வடிவேலு நினைக்கிறான். கனகம் தனது கள்ளக்காதலனுடன் பெங்களூரில் வாழ்வதாகத் தெரிந்துகொண்டவன் அவளை சந்திக்க ஊருக்குப் போகலாமா என நினைக்கிறான். கோமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அக்காவிடம் இதைப் பற்றி கேட்கத் தயாராகும்போது அவள் வரவேயில்லை. வடிவேலுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகும் நிலையில் மனசஞ்சலத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஒவ்வொரு வருடமும் தீச்சட்டி தூக்கி பிள்ளை வரம் கேட்டு வரும் அக்கா அந்த வருடம் ஏன் வரவில்லை? தாயன்பை எதிர்பார்த்து வருடாவருடம் வரும் அவளை சந்திக்கும்போதெல்லாம் வடிவேலுவின் தாய் பரிமளம் தன்னியல்பை மறந்திருப்பாள். சந்திக்க முடியாமல் போகும்போது அவள் இத்தனை காலமாகத் தேடி வந்ததன் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான்.

நாவலின் ஆழமானப் பகுதிகளில் ஒன்றாக இந்த அக்கா, அம்மா, வடிவேலு உறவு இருக்கிறது.கனகம், அம்மா, அக்கா எனத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிலெல்லாம் எதைத் தேடுகிறான் வடிவேலு? நிச்சயம் காமம் அல்ல. காமத்தின் பல அலகுகளையும் அதன் தாக்கங்களையும் நண்பர்களின் வாழ்விலிருந்து அறிந்துகொண்டுவிட்டிருந்தான் வடிவேலு. கனகம் திரும்ப வந்தாலும் அவளோடு தினமும் கூடியிருந்து தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க நினைக்கிறான். அந்த நினைப்பு கூட அவனது நிறைவேறாத காமத்தினால்லாமல் அவள் மீதிருக்கும் கோபத்தால் விளைந்த ஒன்றுதான்.

திருவிழாவின்போது அக்கினிப்பெண்கள் ஏந்தி வரும் தழல்களைச் சுற்றி ஊர் திரண்டிருக்கும் காட்சி வடிவேலுவுக்கும் பெண்களுக்குமான உறவை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. அப்பெண்களில் சாமி ஏறுவதை ஊரே திரண்டு பயபக்தியோடு பார்க்கிறது. அவர்களது உதடுகள் ஊடறுத்து வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. உறுமியும் கொட்டும் முழங்க அந்த ஏழைப் பெண்கள் நெருப்பேந்திச் செல்கிறார்கள். பொதுவாகவே யாரும் மதிக்காத குழுவினர். கூட்டத்தில் வடிவேலு அவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். அவன் முன்னால் தழலேந்தி வரும் அக்கா சட்டென கண்கள் விரிய நிற்கிறாள். அவன் தடுமாறுகிறான். சாமி நம்பிக்கை இல்லாதவனாகக் காட்டப்பட்டவன் தடுமாறுகிறான். ஆனால் தப்பி ஓடவில்லை, “கண்ணைத் திற” என்றாள் அக்கா. அவன் நிலைகுலைந்து பார்க்கிறான். அங்கு வேறு யாருமில்லை என்பது போல அவர்கள் இருவரும் அத்தனை சத்தத்துக்கு இடையே நிற்கிறார்கள். “இந்த ஆத்தா இருக்காடா உனக்கு”, தன் மார்பில் அறைந்து சொன்னபடி அவள் விலகுகிறாள்.

இங்கிருந்து கதை வேறு திசையில் பரவத் தொடங்குகிறது. கதையின் மிகத் தீவிரமானப் பகுதியும் இதுதான் என்றாலும் இதுகாறும் வளர்த்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாது, ஆசிரியரின் குரலிலும் வடிவேலுவின் சிக்கலுக்கான தீர்வை அளிக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிடுகிறது. குறத்தி ஒருத்தி குழந்தையைச் சுமந்தபடி தூளியை வேடிக்கை பார்க்கிறாள். தீ ஏந்தி வரும் பெண் அவள் முன்னே தடுமாறி விழப்போகும்போது, குறத்தி “எந்திரி சாமி, நட நான் கொண்டு விடறேன்”, என சாமியை வழிநடத்திச் செல்கிறாள். குறத்தி முதுகில் சாய்ந்திருந்த குழந்தை தாயின் பிடி இல்லாது அவளை இறுகப்பற்றிக்கொள்கிறது. அவர்களோடு வடிவேலுவும் நடந்து செல்கிறான். சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறத்தியின் சுமையை தன்னால் சுமக்க இயலும் எனச் சொல்கிறான். அவள் விடாப்பிடியாகக் குழந்தையையும் தீ ஏந்தி வந்த சாமியையும் கைத்தாங்கலாக கோயிலுக்கு வெளியே கொண்டு விடுகிறாள். வெளியே அக்கா தென்படாதிருந்தாலும் உள்ளே செல்லாமல் குறத்தியோடு நின்று விடுகிறான் வடிவேலு.

ஒவ்வொரு சித்தரிப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாக ஆடும் நாவலில் இப்பகுதி மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முல்லை ஆற்றை சுற்றி இருக்கும் கோயிலில் நடக்கும் திருவிழா. கோமாரித் திருவிழா. நோய் நொடி வரும்போது கோமாரியின் காலடியில் மண்டிக்கிடக்கும் ஊர். மதுரைக்குப் போன கண்ணகியும் இந்த நதியைக் கடந்து கோமாரியை வணங்கியிருப்பாள் எனும் வரி நாவலில் பொருந்தாதது போல இருந்தாலும், கற்பிழந்ததாக வரும் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும் நாவலில் இச்சித்திரம் சட்டெனப் பொருந்திப்போகிறது. பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பை சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.

தகாத உறவுகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்திருக்கும் வடிவேலு தன் உடல் சக்தியின் பெளதிகச் சாத்தியங்களைக் கடப்பதன் வழி அவன் காதலித்துத் திருமணம் செய்த கனகத்தை மீண்டும் அடைய நினைக்கிறான். ஆனால் உடலின் சாத்தியங்களுக்கு எல்லை உண்டு எனும் உண்மையை இளைஞர்களோடு விளையாடும் போட்டியில் உணர்ந்துகொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் பயிற்சி மூலம் போட்டியையும், வெற்றியின் வழி கனகத்தையும் அடைந்துவிடலாம் எனும் எண்ணம் கோமாரியம்மன் திருவிழாவில் தவிடுபொடியாகிறது. கருவறைக்கு வந்தாலும், நிறை குறையற்ற கற்பு அமைந்தாலும் எல்லா பெண்களும் தாய் வடிவமே, அவர்கள் அனைவரும் சாமி பிம்பங்களே என உணர்ந்ததும் “சிறிய அளவில் சோள வியாபாரத்தைத் தொடங்கலாம்..தாய்ப்பறவை. குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்”, எனத் தன் குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அளிக்கவேண்டி வேறொரு ஆட்டத்தைத் ஆடத் தயாராகிறான். இந்த ஆட்டத்தில் தவறிழக்காமல் ஆடி ஜெயிப்பான் என்பது நிச்சயமல்ல, ஆனாலும் “தோற்றாலும் ஓட வேண்டும். ஓடாமல் நிற்பதில்தான் தோல்வி”, எனும் அறிதலின் விதை அவனுள் முளைத்துவிட்டபின் ஆடும் ஆட்டம் இது. மனதில் வேட்கைக்கும் உடலின் சாத்தியங்களுக்கும் இடையே முளைத்த போராட்டத்தின் விதியை தீர்மானிக்கும் ஆட்டம்.