குழந்தைகள் தங்கள் கனவுகளைப் பரப்பி வைத்து
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு குழந்தையின் கனவு இன்னொரு
குழந்தையினுடையதைப் போல் இல்லை
தன்னிடம் இல்லாத கனவு இன்னொரு குழந்தையிடம்
இருப்பதைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்
அக்கனவைத் திருடும் எண்ணமில்லை குழந்தைகளிடம்
அக்கனவை பலவேறாக மாற்றி விஸ்தீரித்து
அதன் உரிமையாளரிடமே கொடுத்து விடுகிறார்கள்
தன் கனவு பிரம்மாண்டமாகி பெருகி நிற்பதை
பெரும் பரவசத்துடன் பார்க்கிறது அக்குழந்தை
வளர்ந்தவர்களே அக்கனவுகளைத் திருடுகிறார்கள்
திருடிய கனவுக்கு மாற்றாக எதையுமே வைப்பதில்லை
சில சமயம் குழந்தைகளின் கனவுகளை
எடுத்து நுகர்ந்து பின் அதே இடத்தில்
வைத்து விடுகிறார்கள் வளர்ந்தவர்கள்
நுகரப்பட்ட கனவுகளை புறந்தள்ளி விடுகின்றன குழந்தைகள்
மேஜைக்கு கீழே கிடக்கின்றன அக்கனவுகள்
[மேஜைக்கு கீழே கிடக்கும் அக்கனவுகள்
குழந்தைகள் வளர்வதற்காக காத்திருக்கின்றன]
அவற்றுக்கு இணையாக வேறு கனவுகளை
குழந்தைகளால் தோற்றுவிக்க முடியவில்லை
கனவில்லா வெற்றிடங்களைச் சுற்றி
புதிய கனவுகளைப் பரப்புகிறார்கள்
எழுத்து
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018
பெருங்கனவின் வெளி
நாவல் :கொற்றவை
எழுத்தாளர் :ஜெயமோகன்
கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள், அச்சங்கள், நம்பிக்கைகள், மனநிறைவுகள், அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒரு மனதின் தருணத்தில் காவியங்கள்,காப்பியங்கள் எழுதப்பட்டிருக்கலாம். யாரோ அறிய முற்படக்கூடும் என்ற நினைப்பே அதை சுவையுள்ளதாக மாற்றச்செய்கிறது.
கடல் அனைவருக்கும் அலையாக தெரிகையில் அதை மனதின் புறவடிவாக காணும் மனம் அந்தகணத்தை கடத்த விழைகிறது.அப்படியாக ஒருசமூகப்பண்பாட்டின் சிந்திக்கும் மனம் அல்லது மனங்கள் அல்லது மூளைகள் மேலதிகமாக அழகியல் உணர்வும், காருண்யமும், மொழித்திறனும்,தொடர்ந்த முயற்சியும் மேற்கொள்கையில், அறியும் ஒன்றை கடத்த பெருங்கதையை சொல்கிறது அல்லது எழுதுகிறது.
பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை,முன்னவர்கள் அதுவரைக் கொண்டுவந்து சேர்த்த வெளிப்படுத்தும் தோரணைகள்,முக்கியமாக வெளிப்பாட்டு சாதனங்கள் கதைசொல்லல் முறையை, வடிவத்தை தீர்மானிக் கின்றன.என்றாலும் அதைமீறிய சாதனைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன.எல்லைகளை மீறி,மீறியே இதுவரை வந்திருக் கிறோம்.ஆனால் இலக்கியம் போன்ற காலாதீதமான ஒன்றில் எல்லைமீறல் என்பதை விரிவாக்கம் என்றே கொள்ளப்படுகிறது.அது எப்போதும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்றே நினைக்கிறேன்.இது நாவலின் ஆசிரியரால் நாவல் கோட்பாட்டு என்ற அவரின் நூலில் குறிப்படப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரம் என்ற தமிழ்காப்பியமானது தமிழ்நிலத்தின் முக்கியமானக்கூறுகளை ஒட்டுமொத்தமாக சொல்ல எழுதப்பட்ட காப்பியம். அன்றிருந்த செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும் கூட மிகவிரிவாக எழுதப்பட்டது.பள்ளியில் எழுத்திற்குப்பிறகு அறிவது திருக்குறள்.அதன்பின் ஒருசொல்லாக அறிமுகமாகும் சிலப்பதிகாரம் கண்ணகியை, மாதவியை, கோவலனை நம் வாழ்வில் இணைத்துவிடுகிறது.இம்மூவரையும் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்டவர்களாக இல்லையெனினும் இந்தசாயலில் கண்முன்னே கண்டுக்கொள்கிறோம்.
நம் சிறுவயதிலிருந்து ஒவ்வொரு வகுப்பையும்,வயதையும் கடந்து வருகையில் அவர்கள் நிறம்,திடம் கொள்கிறார்கள்.முதலில் கண்ணகி எளிதில் பதிந்துவிடுகிறாள்.மாதவி வரை வருவதற்கு ஒருநீண்ட காலகட்டம் தேவைப்படுகிறது.நம் அமைப்பு ஒரு காரணம். பெண்குழந்தைகள் கடிவாளம்கட்டியவர்களாக இருப்பதும் ஒருகாரணம். இதுக்கூட பிழையாக இருக்கலாம்.இன்றைய பள்ளிக்குழந்தைகள் நேற்றையப் பள்ளிக்குழந்தைகளை விட தெளிவானவர்கள்.மீண்டும் கோவலன் வரை வருவதற்கு வீட்டில்,உறவுகளில், அக்கம்பக்கத்தில் சிலவாழ்க்கைகள்,சங்கஇலக்கியத்தின் அகம் என்று நிறைய தேவைப்படுகிறது.இவ்வாறு நான் சொல்வது என் புரிதலை சார்ந்து மட்டும் .
வாயிலோயே…., என்று நீளும் மதுரைக்காண்டத்தின் வரிகளோடு கல்லூரித்தேர்வு முடிந்தப்பின் சிலப்பதிகாரம் தன் பயணத்தை நிறுத்திவிடுகிறது.உண்மையில் அந்தவயதிற்கு பிறகுதான் படித்து புரிந்து கொள்ள முடியக்கூடிய நூலாக சிலம்பை நான் கருதுகிறேன்.
அதன்பின் நான் முயற்சி செய்து உரைநூலை வைத்துக்கொண்டும்,தமிழ் அகராதியை வைத்துக் கொண்டும் போதிய வாசிப்பை அளிக்காமல் முடித்த சிலப்பதிகாரம் மனதில் குற்றஉணர்வை தந்து கொண்டேயிருந்தது.செய்யுள் வாசிப்பை பள்ளியில் எளிமையாக்கியிருந்தால் அல்லது கற்கும் ஆர்வம் இருந்திருந்தால் இந்தவாசிப்பு நன்றாக இருந்திருக்கும்.ஏறக்குறைய ஆங்கிலமும்,செய்யுளும் தெரியும் ஆனா தெரியாது நிலைதான்.
கொற்றவையை தபாலில் வாங்கிய அன்று அதைப்பற்றி தெரிந்த ஒன்று நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பது மட்டுமே.நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பதே மிக வசீகரமாக இருந்தது.உடனே வாங்கத்தூண்டியது.இதையாவது ‘வாசித்து’ விட வேண்டும் என்ற ஆற்றாமை.முதல் பக்கத்திலேயே நானும் குறைச்சலில்லை என்று புத்தகம் சவால் விட்டது.அப்படியே மூடி வைத்துவிட்டு காடுநாவலை எடுத்துவிட்டேன்.கண்முன் தலைமாட்டிலேயே உறங்கி சலித்தாள் கொற்றவை.
வேறுவழியில்லை தினமும் முடிந்தவரை என்று பாடப்புத்தகமாய் நினைத்து ஒருகருக்கலில் எடுத்தேன்.சாணித்தெளிக்கும் ஓசை,பட்சிகளின் கிச்கிச்,காகங்களின் அட்டகாசங்ளோடு சேவலின் குரல் அறைகூவலாய் ஒலிக்க கொற்றவை எழுந்தாள்.நீரென, நெருப்பன, நிலமென உருகொண்டாள்.மீண்டும் அந்தப் பழைய பள்ளி செல்லும் பெண்ணானேன்.பொன்னியின் செல்வனை விடுமுறை நாட்களில் எழுந்ததும் துவங்கி வீட்டில் லைட்டை அணைக்கச்சொல்லித் திட்டுவது வரை வாசித்து திளைத்த அவள்.மீண்டும் முழுவதுமாக என்னை புத்தகத்திற்கு அளிக்கமுடிந்தது குறித்து எனக்கு வியப்பு.கல்லூரியின் இறுதிநாட்களில் வாசிப்பில் ஒருசலிப்பு விழுந்திருந்தது.நம்மால் வாசிக்க முடியவில்லையா என்ற கோபமும்,பயமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.புத்தகங்கள் எல்லாம் கண்முன்பு ஆற்றில் அடித்துச்சல்லப்படுவது போன்ற கனவுகள் வரும் அளவிற்கு.
யாரோ ஒரு முகம் பெயர் தெரியாதவர், தோழியின் அண்ணனின் நண்பன் தோழிக்கு கொடுத்த எஸ்.ராவின் புத்தகத்திலிருந்து தொடங்கியது இதுவரையான இந்தப்பயணம்.
கொற்றவையின் மொழி கல்கோணா மாதிரி.கல் தான்…கல்அல்ல இனிப்பானது.ஊறவத்து உண்ண வேண்டியது.ஆனால் சப்பிக்கொண்டிருந்தால் சப்பென்று ஆகிவிடும்.கவிதை கவிதை என்று சொல்லிக் கொண்டிருப்பது வேறு.கவிதையை உணர்வது வேறு.
கொற்றவையின் வரிகள் கவித்துவமானவை.கொற்றவையின் மொழியே என்னை மிகவும் கவர்ந்தது.சும் மாவே எந்தப்பக்கத்தையாவது எடுத்து வாசித்துக் கொண்டிருக்கலாம்.மழையைப் பார்ப்பதைப் போல.புரிய வேண்டும் என்பது அடுத்தநிலை. ‘எல்லாப் பெயர்களும் பெயரற்றவனின் பெயர்களே’ என்ற வரிக்கும் கொற்றவைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை தானே.
மலையுச்சியேறிய முக்கண்ணனும்,கடலுல் இறங்கிய ஆழிவண்ணனும் தமிழ்சூழலில் எழுந்துவருகிறார்கள்.நம் முன்னோன் பிரபஞ்சத்தை,இயற்கையை எதிர்கொள்ளும் ஆதிமனதின் ஆளுள்ளத்து அச்சங்கள் அதைமீறி எழுந்து அச்சமென்னும் இருளின் மத்தகத்தின் எதிரே நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளும், அறிதல் போரில் தன்னை இழந்து அறியும் உண்மை.
மனிதமனத்தின் முதல் தத்துவ விதை.மனிதகாலகட்டத்தின் குழந்தைப்பருவம்.அந்தப் பருவத்திற்குரிய மனிதனின் அச்சம்,வியப்பு,விதையென உறங்கும் தனிமை,இட் எனப்படும் விலங்குமனநிலை அதை எதிர்கொள்ளும் ஒருதனித்த உள்ளத்தை கொற்றவை தன்மொழியால் அந்தஆதி உணர்வுகளை உணரச்செய்கிறது.உடன் வரும் தமிழ் அமுதென தெளிந்து எழுகிறது.தன்உணர்வுகளுக்கு ஒலிக்கொடுக்கிறான் அல்லது தன்னைசுற்றியுள்ள ஒலியிலிருந்து தனக்கான ஒலியை தேர்ந்தெடுக்கிறான்.
தமிழ் எறமுடியாத சிகரங்களைக் கடக்கும் ஒற்றைக்கொம்பு கலைமான் என உடன் வந்துகொண்டிருக்கிறது.அனைத்திலிருந்தும் அறிய முற்பட்ட அறிவன் அவன் மனிதன் என்பதை கொற்றவை பழம்பாடல் சொன்னதாக சொல்கிறது.குலக்கதை சொன்னதாக சிறுகுடிகள் இணைந்து குலங்கள் உருவாகியதை, நீரால், எரிமலையால் அழிந்ததை சொல்கிறது.மெல்ல மெல்ல நீர் குமரிக்கண்டத்தை உட்கொள்வதன் சித்திரம் வளர்வதன் மூலம் தமிழின் இந்நிலத்தின் மக்களின் பழமையை சொல்கிறது.அன்றிலிருந்து இந்நிலம் இன்றுவரை குமரியை வடகோட்டை எல்லையாகக் கொண்டு மாறாதிருப்பதன் மாயத்தை சொல்கிறது.
தமிழின், அதன்மக்களின் புனைவுவரலாறாக நாவல் விரிகிறது.விரிந்த நிலத்தின் பின்ணனியில் மொழியையும் மக்களையும் வைக்கிறது.அந்த நிலப்பரப்பு சிதறி மக்கள் தோணியேறி பலதீவுகளில் நிலங்களில் மீண்டும் எழுவதைக் காட்டுகிறது.ஒரு மாயசுழி போலவா, சுழலும் புதிர்க்கட்டம் போலவோ நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
மீண்டும் கடல்முனையில் அதே நகரம் அதேமக்கள், அதே செழிப்பு ,வாணிகம், ஏழடுக்கு மாளிகையில் கண்ணகி எழுந்துவருகிறாள்.பூம்புகார் எனும் பெரும்வணிகநகர் அதன் அனைத்து வண்ணங்களுடனும்,ஒலிகளுடனும்,அலைகளின் ஓதத்துடனும் நம்முன்னே தன்னைக் காட்டுகிறது.மீண்டும் வெயில் காயும் நிலத்தில் மதுரை.அதுஉருவாகி எழுந்தப்பின் உருவாகும் அரசியல் சிக்கல்களுடன் மீண்டும் வருகிறது.
வறுமுலைகள் முழங்கால் வரை தொங்க வரையாட்டி மீது வழிகாட்டும் அந்நிலத்தின் வழிவந்த பெண், மண்மகள் அறியா பொற்பாதங்களுடன் மணவாழ்வில் நுழைகிறாள்.
அனைவரும் அறிந்த கண்ணகி, மாதவி, கோவலன் கதை நாவலுக்குரிய விரிவில் பலவண்ணங்களில் எழுந்து வரும் சித்திரம் நம்மையும் அந்நிலத்தில் வாழச்செய்கிறது.இதில் மாதவியை கோவலன் பிரியும் தருணம் கோபத்தை ஏற்படுத்துகிறது.சிலப்பதிகாரமாக இருக்கும்போது கோவலன் கண்ணகியிடம் மீளும் தருணம் என்றிருந்தது இந்தவாசிப்பில் கோவலனின் முகம் தெரியும் தருணமாக இருக்கிறது.இது நாவல், காப்பியத்திலிருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று.ஆளற்ற தெருவில், இரவில் தன்இல்லம் நோக்கி நடந்துவரும் கோவலனின் சித்திரம் மனதில் நிற்கிறது.
இந்நாவல் உருவாக்கும் நீலி என்ற வழித்துணை பாத்திரம் குறிப்பிடத்தக்கது.அது கண்ணகியின் பிறிதொரு வடிவம்.புதுவாழ்வு தேடிச் செல்லும் வலுவான தெளிந்தமனதின் புறவடிவம்.அதிகார மோதல்கள் நிகழும் மதுரையின் சித்திரம், புறநகர்பகுதியின் சித்திரம் என நாவலில் பழைய தமிழ்நகரத்தின் பலசித்திரங்கள் நம்மை அழகிய கனவுக்குள் ஆழ்த்துபவை.சங்கமக்களின் நிகழ்த்துக் கலைகள் நாவல் முழுக்க அழகாக எழுகின்றன.
கோவலனின் கொலைக்குப் பின் மனம்தடுமாறிய கண்ணகியின் எழுகை நாவலில் மூலம் போலவே வேறுவகையில் உணர்வு பூர்வமாக எழுந்துவந்து நம்மை ஆட்கொள்கிறது.மீண்டும் மதுரை நெருப்பால் அழிகிறது.மதுரை ஏதோ ஒருவகையில் அழிந்து பின் எழுவதை ஒட்டுமொத்த மேலோட்டமான சித்திரமாக என் மனம் எடுத்துக்கொண்டது.
நாவலில் வாழ்வியல்,மெய்யியல் உண்மைகள் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.ஐவகை நிலங்களில் நாமும் பயணம் செய்கிறோம்.நாவல்முழுவதும் பெண்தெய்வங்கள் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.இதன் மூலம் இன்றைய சமூகமனம் தூண்டப்படுவது நாவல் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தது.
செங்குட்டுவன் அடர்கானகத்தில், நதியில், மலையருவிகளின் பயணம் செய்யும் பகுதி அழகிய ஆர்வமூட்டும் சித்திரம்.இளங்கோவடிகள்,மணிமேகலை கதைகள் நாம் அறிந்தவைகளை மீறி முற்றிலும் வேறுதளத்திற்கு செல்கின்றன.
மீண்டும் கடற்கரையின் கருமையில் அலைகளின் முன்னே,இந்தநூற்றாண்டு மனிதனின் தாயின் நினைவோடு முடிகிறது நாவல்.புத்தகத்தை வாசித்து வைக்கையில நாவல் முழுவதுமே அன்னையைப்பற்றிய பெருங்கனவு தானா? என்று பெருமூச்செழுகிறது.நிலம்,நீர்,காற்று,நெருப்பு என அனைத்திலும் உறைவதும் தாய்மையா என்று மனம் நினைக்கிறது.ஆதன் மலையேறி அறிவது ஆதி என்னும் அன்னையையா? கடலினுள் நுழைந்தவன் ஆழத்தில் அறிந்ததும் அதையேவா? தென்திசையில் ஒற்றைக்காலில் நிற்கும் கன்னி பேரன்னை எனில் பெருந்தாய்மை என்பது கன்னிமையா? என்று மனம் அலைகழிகிறது.எங்கோ ஆழத்தில்,ஏன் என்ற காரணங்களில்லாது,எப்படி என்ற தெளிவில்லாது,வெறும் உணர்தலாக மட்டும் என்னில் தென்முனையில் நிற்பவளை உணர்ந்து கொண்டேன்.வாசிக்கும் பெண்கள் அனைவருக்கும் இப்படித் தோன்றும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.
இந்தநாவலால் தாய்மை என்பது தத்துவமாகும் ரசவாதம் நிகழ்கிறது.இது உணர்த்துகிறது…தாய்மை என்பது நிச்சயம் பெண் சார்ந்தது மட்டுமல்ல.அது ஒரு பிரபஞ்சம் போலொரு பேருண்மை என.கன்னிமனம் என்பது பெருந்தாய்மை.அவள் ஒருமகவுக்கு தாயாகுகையில், தாயாகமட்டுமாகிறாளா என்று நினைக்கையில் கி.ராஜநாராயணின் கன்னிமை என்ற கதை மனதில் எழுகிறது.அதை உணர்ந்த நம் முன்னவர்கள் கன்னியை தென்முனையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.கன்னி நிலம் தன்னில் விழும் விதைகளுக்கும் உடல் தரகாத்திருப்பது. அறுவடைக்குப் பின் முற்றிலும் தன்நிலைக்கு மீள்வது எனில் கன்னிமை உலகு உய்வதன் பெரும்சக்தியா? என்று மனம் கேள்விகளை அடுக்குகிறது.
கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.
நாவலை வைத்தப்பின் அதன் மொழி நம்மை முற்றிலும் சூழ்ந்து கொள்கிறது.அதிலிருந்து விடுபட நாட்களாகும்.எழுத்தாளர் என்னும் தந்தையின் கையைப்படித்துக் கொண்டு இறந்தகாலத்திற்குள் அல்லது காலமென்னும் சுழற்சிக்குள் முன்னோர்களின் வெளிக்கு இந்நாவல் மூலம் செல்கிறோம்.அதற்காக அவருக்கு என்னுடைய ப்ரியங்கள்.
இதை எழுதி முடித்தப்பின் நான் உணர்ந்தது இது தராசு பிடிக்க தகுதியான கையல்ல என்பதைத்தான்.தட்டு நாவல் பக்கம் சாய்ந்திருக்கிறது.இந்நாவல் எழுதியவரை வணங்குவதன் மூலம் தென்திசை முன்னவர்களை வணங்கி இந்தநிலத்தின் ஆதிவாழ்வை உணர்ந்து சிலைக்கிறேன்.கண்சிமிட்டி அன்றாடவாழ்விற்காக எழுகிறேன் என்றாலும் நாவல் வாசிப்புக்கு முன்பு இருந்த நான் அல்ல இந்தநான்.இரண்டாவது வாசிப்பில் இதை எழுதுகிறேன்.அடுத்தவாசிப்பில் புதியவாசல்கள் திறக்கக்கூடும்.மீண்டும் எடுப்பதற்காக வைக்கும் போது பெருஞ்செல்வத்தை கையில் வைத்திருக்கும் தலைமுறை நாம் என்ற பெருமிதத்தோடு அச்சுஊடகத்தை நன்றியோடு நினைக்கிறேன்.
நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு
குருதி… நீரினும் அடர்த்தியானது.
…….நாவலிலிருந்து…..
சில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்து சில வருடங்கள். தூரத்தில் எங்கோ நிலநடுக்கம். கடலூர் முழுக்க வதந்தி. மறுநாள் அதிகாலை சுனாமி வரப்போகிறது. குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அந்த கிராமத்தில் உள்ள ஒருவர், வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் பத்திரமாக மூட்டை கட்டி வண்டியில் ஏற்றினார். முடக்கு வாதம் வந்து, பயனில்லாமல் போன முதிய தகப்பனை மட்டும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை வதந்தி எல்லாம் அடங்கி ஊரார் கிராமம் திரும்பிய பிறகே அது வெளியே தெரிய வந்தது. வதந்தியாக அன்றி சுனாமி வந்திருந்தால்? எந்தச் சுவடுமின்றி ஒரு உயிர் போயிருக்கும். கூடுதலாக அரசின் நிவாரணத் தொகையும் கிடைத்திருக்கும்.
இரவெல்லாம் பூட்டிய அறைக்குள் அந்த முதிய மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும்? இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல்லாம் என்னவாக இருந்திருக்கும்? நினைக்கவே விதிர்க்க வைக்கும் அந்த மின்சார வன்தொடுகை உணர்வையே அளித்தது, ‘காச்சர் கோச்சர்’ எனும் விவேக் ஷான்பாக் எழுதிய கன்னட நாவலின் வாசிப்பனுபவம்.
அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு ஹோட்டலில், இன்னும் அருந்தப்படாத காப்பி நிறைந்த கோப்பை முன் அமர்ந்திருக்கும் கதைசொல்லியின் நினைவுகளாக விரிந்து பரவி நிறையும். அதே போல இந்த ‘காச்சர் கோச்சர்’ கதையும், ஒரு காபி கிளப்பில் காப்பிக்காக அமர்ந்திருக்கும் கதைசொல்லி தான் வந்து நின்றிருக்கும் விடுவிக்க இயலா சிடுக்கு )கதைக்குள் இந்த நிலைக்கே காச்சர் கோச்சர் என அனிதா பெயர் சூட்டுகிறாள்) நிலை குறித்து வாசகருக்கு சொல்லும் கதையாக விரிகிறது.
திமிர் கொண்ட சோம்பேறி வாழாவெட்டி அக்கா, விட்டேத்தி அப்பா, சுயநல அம்மா, சம்பாதிக்கும் புள்ளியான திருமணம் செய்து கொள்ளாத சித்தப்பா, அவர் நிறுவனத்தில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் கதைசொல்லி, அவனை மணம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்துக்குள் நுழையும் அனிதா. பொருளாதார மையம் எனும் ஒரே தூணான சித்தப்பா வெங்கடாஜலத்தை அண்டி வாழும் குடும்பம், அப்படி அண்டி வாழ்வதற்கு செய்யும் செயல்கள் தொட்டு அண்டி வாழும் கீழ்மை உட்பட அனைத்தையும் கேள்வி கேட்கும் அனிதாவை எவ்வாறு எதிர்கொள்கிறது? அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன? நிலை என்ன? அதை கதைசொல்லியே அவனது பார்வைக் கோணத்தில் வாசகருக்கு விவரிக்கும் வண்ணம் வடிவம் கொண்டதே இந்த நாவல்.
கீழ் நடுத்தர வர்க்கமான கதைசொல்லியின் குடும்பம் கைக்கும் வாய்க்கும் வருமானம் சரியாக இருக்கும் மாதச் சம்பள வாழ்க்கைக்குள், அதன் சாதக பாதகங்களை ஒன்றாக இணைந்தே கடக்கிறார்கள். நீரொழுக்கில் சிக்கிய எறுப்புக் கூட்டம் தன்னை பந்தாக திரட்டி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில், நிற்க நிலம் கிடைக்கும் வரை பிழைத்துக் கிடக்குமே, அதே போன்றதொரு வாழ்வு. அவர்கள் வீடே ஒரு பெரிய அளவு எறும்புப் புற்று ஒன்றினுள் இருக்கிறோம் என உணரும் வண்ணம் எறும்புகளால் நிறைந்த வீடு. அத்து மீறி ஒழுங்குகளை குலைக்கும் எறும்புகளைத் தேடித்தேடி விதவிதமாக வேட்டை ஆடுவதே, அம்மாவின் உபரி நேரப் பணி.
வேலை போன பின் இழப்பீட்டு தொகையை கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டுத் தொழில் துவங்குகிறார்கள். வருமானம் பெருகுகிறது. சொந்த வீடு. பொருட்கள் சேர்கின்றன. பழைய வீட்டை ஒழித்து, புதிய வீடு புகும் சித்திரம் கணுக்கணுவாக விவரிக்கப்படுவதன் வழியே அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அகவயமான மாற்றம் துவங்கும் தருணம் புறவயமாக சித்தரிக்கப்படுகிறது. முன்பு பத்தாத சம்பள வாழ்வில் அதன் காரணமாகவே, ஏமாற்றங்கள் அளிக்கும் எதிர்பார்ப்புகள் யாருக்கும் இல்லை. இந்த புதிய வீடு, வணிக செல்வம் அளிக்கும் விடுதலை அவர்களை கண்டதையும் வாங்கி குவிக்க வைக்கிறது.
சித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம். வணிகத்துக்காக நிழல் வேலைகளில் இறங்கும் சித்தப்பாவை கண்டு கொள்ளாத விட்டேத்தி அப்பா. இவர்கள் குடும்பத்தின் முதல் அடுக்கு. இவர்கள் நிறுவனத்தில், வேலை செய்யும் தகுதியே இன்றி சும்மா இருந்து சம்பளம் பெறும் கதைசொல்லி, அவனது அம்மா இந்த குடும்பத்தின் இரண்டாவது அடுக்கு. இந்தச் சூழலில் தனது தேர்வான சித்ராவை உதறிவிட்டு வீடு கைகாட்டும் அனிதாவை மணக்கிறான். தனது கணவனின் சம்பாதிக்கும் திராணி, குடும்ப நிலை அறியாமல் இந்த அடுக்கு நிலைக்குள் நுழைகிறாள் அனிதா. இரண்டாம் அடுக்கில் இருக்கும் தனது நிலைக்கு வரப்போகும் ஆபத்தாக அனிதாவின் வரவை எதிர்கொள்ளும் அம்மா. திருமணம் செய்து வெளியே போன அக்கா மாலதி, தனது திமிரின் காரணமாக புகுந்த வீட்டை உதறி விட்டு மீண்டும் பிறந்த வீடு திரும்புகிறாள். பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து தனது திமிரால் முன்பு தான் விடுத்து செல்லும்போது அந்த குடும்பத்தில் எந்த அடுக்கில் நின்றாளோ, அதே அடுக்கில் சென்று நிற்க மாலதி செய்யும் வேலைகள். அடுக்கு நியதிகளுக்கு கட்டுப்பட்டு தகவமையாமல், தனது இயல்பால் அமைப்பையே குலைக்க முனையும் அனிதா. இவர்களால் காச்சர் கோச்சர் அடையும் கதைசொல்லி.
அசோகமித்திரன் படைப்புலகம் மையம் கொள்ளும் கீழ் நடுத்தர வர்க்க குடும்ப நிலை. அவரது கதைகளில் துலங்கும் அதே மெல்லிய கசந்த நகைச்சுவை நோக்கிலான விவரணை. ஆனால் அசோகமித்திரன் புனைவுலகில் இருந்து இக்கதையில் ஷான்பாக் முன்னகர்ந்து தனித்துவம் கொள்ளும் இடங்கள் மூன்று. ஒன்று, குடும்பம் எனும் அமைப்பு பெண்ணியல்பில் இருந்து வெளிக்கொணரும் தீமையின் சித்தரிப்பு. இரண்டு, குடும்ப உறுப்புகள் பொருளாதாரத் தூணை அண்டி வாழும் வாழ்வில் அதற்குள் அமையும் அடுக்குகள் உருவாக்கும் உளத் திரிபு. மூன்று, வலிமையான நாடகீய முரண்.
”வெங்கா… வெளிய வா. உன்னோட டுவ்வி கூப்புடுறேன் ”-வீட்டுக்குள் தலைமறைவாகி இருக்கும் சித்தப்பாவை தேடி நெடுநேரம் தெரு முனையில் நின்றுவிட்டு வீட்டு வாசலுக்கு வருகிறாள் சுகாசினி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திரிபுகள் உயர்ந்து அம்மா சுகாசினியை அவமதித்து திருப்பி அனுப்புகிறாள். வெங்காவுக்கு பிடித்த டுவ்வி செய்த சமையல் வாசலில் சிதறிக் கிடக்கிறது. அவமானப்பட்டு வெளியே செல்லும் சுகாசினி, வெறுமனே அதை வேடிக்கை பார்த்து நிற்கும் தனது கணவன். மனம் பொறாமல் கேள்வி கேட்கிறாள் அனிதா.
கீழே கொட்டிய சமையலின் வாசனை கதைசொல்லியை சீண்டுகிறது. மிச்சத்தை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என அவனை எண்ண வைக்கிறது. இந்தச் சித்திரம் வருகையில் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் சென்னிகராயர் நினைவு எழுவதை தவிர்க்கவே இயலாது. இந்த ‘கச்சார் கோச்சர்’ நாவலே வேறொரு வகைமையில் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் ”தலைகீழ் ”வடிவம் என்றே சொல்லிவிட முடியும். சென்னிகராயரை நா ருசி எவ்வாறு வழிநடத்துகிறதோ அவ்வாறே இந்தக் கதைசொல்லியையும் வழிநடத்துகிறது. புனைவு நெடுக வெவ்வேறு பண்டங்களின் ருசி, தாளிப்பு வாசனை, இவை பின்னே செல்கிறது கதைசொல்லி மனம். அனிதாவே அவனுக்கு வாசனையாகத்தான் அறிமுகம் ஆகிறாள்.
கீழே கொட்டிய சித்தப்பாவுக்கு பிடித்த அந்த சமையலை இன்று சமைக்கலாமே என அனிதா குத்தலாக சொல்லும்போது முனை கொள்ள துவங்குகிறது குடும்ப உறுப்பினர்களின் உளத்திரிபுகள். சண்டை முற்றி பிறந்த வீடு போன அனிதா, வீட்டிலிருந்து புறப்பட்டவள் ஒரு நாள் கடந்தும் இன்னும் இங்கே வந்து சேரவில்லை- இந்த இடைவெளியில் நிகழும் காத்திருப்பில் கதைசொல்லியின் நினைவுகள் வழியே துலங்கி வருகிறது அந்த குடும்ப உறுப்பினர்களின் உளப்பாங்கு. கணவனை அடியாட்களை வைத்து மிரட்ட எந்த தயக்கமும் இல்லை அக்காவுக்கு, பக்கத்து வீட்டில் நடந்த மரணத்தைப் பேசி சத்தமே இல்லாமல் ஒரு வன்முறைக்கு அடி எடுத்து கொடுக்கிறாள் அம்மா, “எதுவா இருந்தாலும் நம்ப ஆளுக இருக்காங்க செஞ்சுடலாம் சிம்பிள்தான்,” என்று திமிர் காட்டும் சித்தப்பா, மகள் இரவில், ”வெளியே தங்குவது” சார்ந்து கூட எந்த புகாரையும் வெளியே காட்டாத விட்டேத்தி அப்பா. இவர்கள் மத்தியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் சொற்களை சொல்லிவிட்டு போன அனிதா என்ன ஆனாள்?
செய்யும் செயலிலோ, நிகழ்விலோ யாருக்கும் எந்த குற்றபோதமும் இல்லை. ஆத்மீக உள்ளுணர்வு அல்ல, அறம் சார்ந்த எளிய கேள்வி கூட எழாத, அல்லது இல்லாத, குடும்பத்தினர்கள். கடவுளோ குறைந்த பக்ஷம் ஜோசியமோ கூட தேவைப்படாதவர்கள். அனிதா திரும்பி வராமல் போனால், அதற்கான காரணங்கள் இவர்களாகவே இருந்தாலுமேகூட, அது குறித்து எந்த அலட்டலும் இல்லாதவர்கள். கொஞ்சமேனும் குற்றபோதம் கொண்டிருப்பதால்தான் நாயகன் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த சிக்கலை விடுவிக்க அல்லது இதிலிருந்து வெளியேற என்ன வழி என திகைக்கும் கதைசொல்லிக்கு உள்ள தீர்வு என்ன?
பாலியல் ரீதியாக சுகாசினியை அவமதித்து வெளியேற்றும் அம்மா, குடும்பச் சூழலை இயல்புக்கு கொண்டு வர வீட்டுச் செடிகளை பராமரிக்க துவங்குகிறாள். காரணமே இன்றி வாடி நிற்கும் செடி ஒன்றுக்காக வருத்தப்படுகிறாள். இப்படியாக ஒவ்வொரு ஆளுமையையும் உருவாக்கி அவர்களுக்கிடையே உள்ள உரசலை அதன் நிலையில் வைத்தே சித்தரித்துக் காட்டுவது இதன் கலை வெற்றி.
இந்தப் புனைவு கையாளும் அத்தனை சித்தரிப்புகளும் கதைமாந்தர்களின் குறியீடு என மாறிப்போகிறது. குறிப்பாக எறும்புகள் சார்ந்த வர்ணனை. மொசு மொசு என உடலெல்லாம் ஏறி மொய்க்கும் தீதற்ற கருப்பு எறும்புகள், கட்டெறும்புகள், வீட்டு எறும்புகள், குருதிச்சொட்டு வடிவில் வண்ணத்தில் திரிந்து, தசையில் விழும் அமிலச் சொட்டென கடிக்கும் செவ்வெறும்புகள். இந்த எறும்புகள் எவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டி நிற்கின்றன- இறுதி அத்தியாயத்தில் பெண்கள் பேசும் குடும்ப வன்முறை உரையாடல்கள். அனிதாவுக்கும் நாயகனுக்குமான முதல் பிணக்கே, எதுவும் செய்யாமல் போய்க் கொண்டிருக்கும் எறும்பு ஒன்றை தன்னியல்பாக நாயகன் நசுக்குவதில் இருந்தே துவங்குகிறது. பழைய வீட்டில் நாயகன் விளையாட்டுகளில் ஒன்று எறும்புகளை விதவிதமாக கொல்வது. எரியும் கங்கினை எறும்பு வரிசை மேல் உருட்டுவது, வரிசையில் இருந்து ஒற்றை எறும்பை விலக்கி, அதைச் சுற்றி நீர் வட்டம் போட்டு, அதை தவிக்க விட்டு, அந்த வட்டத்தை மெல்ல மெல்லச் சுருக்கி, எறும்பு நிற்கும் மையத்தை இறுதியாக ஒரு சொட்டு விட்டு நிறைத்து, துடித்து துடித்து எறும்பு மடிவதை வேடிக்கை பார்ப்பது. இந்த முறைவரிசையில் இருந்து தப்பிய எறும்பு அனிதா. இந்த எறும்பின் மீது கங்கு உருள போகிறதா, அல்லது நீர் வட்டம் வளைக்கப் போகிறதா?
கதைசொல்லி, இன்னும் வந்து சேராத அனிதாவை முன்னிட்டு, அவன் குடும்பம் சார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெய்ட்டர் வின்சென்ட் சொல்கிறான், குருதி நீரினும் அடர்த்தியானது. எறும்பைச் சுற்றி நீர் வட்டம் அமைக்கும் நாயகனுக்கு, வின்சென்ட் மட்டுறுத்துகிறானா? அல்லது வழிகாட்டுகிறானா?
இந்தப் புனைவின் உள்ளுணர்வு சென்று தைக்கும் புள்ளி மிகுந்த அமானுஷ்யமானது. கல்யாணம் செய்து கொண்டு போகும் மாலதி, நினைத்திருந்தால் புகுந்த வீட்டை அங்கிருந்தே ஆட்டிப் படைத்திருக்கலாம். அவள் விரும்பும் வண்ணம் எதையும் அவளது வன்முறையை கொண்டு ஈடேற்றி கொண்டு இருந்திருக்கலாம். மாறாக அவள் அந்த வீட்டை விட்டு மீண்டும் இங்கு ஏன் வருகிறாள்? நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார்? சுகாசினி போன்ற காதல் துணை கிடைத்தும் அதை வன்முறையாக மறுத்து இந்த குடும்பத்துக்கு ஏன் திரும்புகிறார்?
வேறு வழி இன்றி பிணைந்திருக்கும் குடும்பம். அந்த பிணைப்பின் மறுதலையாக உள்ளே உறங்கும் திரிபு. புழங்க சற்றே ஒரு வெளி கிடைத்ததும் அந்த திரிபு விதை மெல்ல மெல்ல முளை விட்டு மலருகிறது. மோகமும், அது கொண்டு வந்து சேர்க்கும் காமமும், இரண்டும் இணைந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள கிளர்த்தும் க்ரோதமும், என மனிதனின் அடிப்படை இச்சைகள், குறிப்பாக, பெண்களுக்குள் அது எந்த கலாச்சார தளைகளும் அற்று விகசிக்கிறது. அப்படி உள்முகமாக விகசிக்கும் அடிப்படை இச்சைகள் ஒருவருக்குள் போலவே மற்றவருக்குள்ளும் ஸ்பூரிப்பதைக் கண்டு தன்னியல்பாக, ஒருவரை ஒருவர் ஆக ஆழத்தில் இனம் கண்டு அதன் பயனாக ஒன்றி இருக்கிறார்கள். அப்படி ஒன்றி இருக்கும் ஒன்றே குடும்பம் எனும் அமைப்பாக பராமரிக்கப்படுகிறது எனும் நோக்கு அளிக்கும் பீதியே இந்த நாவல் அளிக்கும் தரிசன உணர்வு.
ஏழே அத்தியாயம் கொண்ட நூறு பக்க குறுநாவல். பொருந்திக் கொள்ள இயலாமல் ஒரு இருபது வருடங்கள் ஒரு திரிபு கொண்ட குடும்பத்துக்குள் வாழ்ந்து, அந்த திரிபுகள் கொஞ்சம் கொஞ்சமாக மோகமும் க்ரோதமுமாக முளை விடுவதை பதைக்கப் பதைக்க பார்க்கும் ஒரு சக உறுப்பினனாக (செறிவான சித்தரிப்பின் வழியே, நாடகீய முரண்கள் வழியே) வாசகனை மாற்றி, அந்த குடும்பத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார் விவேக் ஷாஷான்பாக். ஆசைத்தம்பி குறைவற மொழிபெயர்த்திற்கும் இந்த ‘காச்சர் கோச்சர்’ தமிழுக்கான முக்கியமான வரவுகளில் ஒன்று.
கடவு பெற்றோர்- பானுமதி. ந சிறுகதை
லதா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லா மின்னியங்கிகளையும், தானியங்கிகளையும் நிறுத்தியாகிவிட்டது. வருணும் படுத்தாமல் சாப்பிட்டு விட்டான். டாக்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிடும். இன்னும் சமயம் இருக்கிறது. உறை மூடி ஸ்டேண்டில் வைத்துள்ள வீணையை எடுத்து ஒருமுறை வாசித்தால் என்ன? ஆம்,இது இங்கேதான் இருக்கப் போகிறது. அவளில்லாமல், மெட்டுக்களில் சுருதி குறைந்து, வாசிப்பார் இல்லாமல் முறுக்கு தளர்ந்த தந்திகளுடன் கவனிப்பாரற்று மூலையில் இருக்கப் போகிறது. வீணையைத் தடவிக்கொண்டே அவள் உட்கார்ந்திருந்தாள். அதன் நரம்புகளைச் சுண்டி அந்த நாதத்தில் கரைந்து போகப் பார்த்தாள். அது என்ன பாட்டு-‘சரச சாம தான பேத தண்ட சதுரா’ எத்தனைப் பொருத்தம் இன்றைக்கு. அவள் தண்டத்தை கையில் எடுத்துவிட்டாள். இனி பின்வாங்குவதில் பொருளில்லை.
எத்தனை கனவுகளோடு அவள் திருமணம் செய்து கொண்டாள். யு.எஸ் மாப்பிள்ளை என்று ஒரே பெருமை; அவள் தோழிகள் வெளியே சிரித்து உள்ளே வெந்த நாட்கள். ‘ராம நீ சமானமெவரு’ என்று உண்மையாகவே அவன் அவளைப் பெண் பார்க்கையில் வாசித்தது எத்தனை அபத்தம்! இரு வருடங்களுக்கு முன்னர்தானே, எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் மேல் தளத்தில் அவள், அவன், நாலரை வயது வருண் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தபோது,ஒரு சிறுமி ஓடி வந்து ‘டாடி’ என அவனைக் கட்டிக்கொண்டாளே அப்போதுதானே தெரிந்தது.’ஹேய், டியர்’ என்று ஒரு அமெரிக்கப் பெண் அவனை முத்தமிட்ட போது, ’இவள்தானா அவள்’ என அந்தப் பெண் இவளைப் பார்த்தபோது, இவள் கையை இழுத்துப் பற்றி குலுக்கியபோது இதெல்லாம் கனவு என நினைத்தாள். தலை குப்புற கீழே, மிகக் கீழே, முடிவற்ற குழியில் அடிக்கடி விழுந்து கொண்டிருப்பதாக அவள் காணும் கனவின் பொருளிதுதானா?
’உனக்கு டீஸென்சின்னா என்னன்னே தெரியாதா?அவ உன்னோட பேசப் பேசப் பாக்கறா, பக்கியாட்டம் முழிக்கறே, அவதான் முதல்; என் கல்யாணம் தெரிஞ்சப்போ ’நா உன்னப் பிரிய மாட்டேன்.நீ உன் வொய்ஃப்வோட குடும்பம் நடத்து; ஆனா, என்ன சிங்கிள் பேரன்ட்டா மாத்தாதே, மரியாவுக்கு அப்பா வேணும்னு’ பெருந்தன்மையா சொன்னா. எத்தன நல்ல குணம், நீ மாஞ்சு போறியே’
“அப்ப, அவளோடயே இருக்கறதுதானே; என்ன எதுக்கு கல்யாணம் பண்ணின்ட’’
‘அம்மா, அப்பால்லாம் விடலியே’
சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லயே இவனுக்கு என சினந்தாள் அவள். இரு வருடங்கள் நீண்ட போராட்டம். எத்தனை குத்தல்கள், சீண்டல்கள், அவமரியாதைகள்! ஏன் சகித்துக் கொண்டாள் என்று அவளுக்கே கழிவிரக்கமாக இருக்கிறது.
சித்தன்னவாசலில் அவள் ஒரு இளவரசியைப் போல் வளர்ந்தாள்; சாமுவேல் அப்படித்தான் அவளை நினைத்திருந்தான். தாமரை சித்திரக்குளம். இலேசாக அலை அடிக்கும் குளத்தில் அவள் மொட்டுக்களும், பூக்களும் நிறைந்த இடத்தில் நின்றிருக்க, அவன் வரைந்த ஓவியங்கள். ’கால் உளயறதுரா,நீதான் தூக்கிண்டுபோகணும்’ என்று சிணுங்குவாள். ’இப்ப முடிஞ்சுடும்’என்று தன் வேலையே கண்ணாய் இருப்பான். அவள்தான் நூறுமுறை அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள், அவன் ’லதா’ எனக் கூப்பிட்டதேயில்லை. ஏன் அப்படி என்பது இன்றுவரை மர்மம்தான். எங்கிருந்தோ பச்சிலைகளும்,வேர்களும் கொண்டுவருவான். நிலக்கரியும், செங்கல்லும் இருக்கவே இருக்கிறது. வழவழக்கும் பாறைத்திப்பிகளைச் சித்திரத்தில் பதித்துவிடுவான். தாவர வேர்களை நுணுக்கி தூரிகைகள் செய்து கொள்வான். எத்தனை சித்திரங்கள் அவளை மையமாக வைத்து, அவளது எட்டாவது வயதிலிருந்து கல்யாணம் அவளுக்கு ஆகும்வரை, பாலையாக, திரிசடையாக, மணிமேகலையாக, மாதவியாக, விளக்குப் பாவையாக, பைரவியாக, மீராவாக இன்னும் எவ்வளவோ! தியான மண்டபத்தில் நடுநாயகமாக அவளைக் கையில் வீணையுடன் அமர்த்தி, அதுவும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு அவன் வரைந்த ஓவியம் இன்றும் அவர்களின் கிராமத்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.
ஒருமுறை விளையாடிக்கொண்டே சாமுவை அலைக்கழித்தவள் அந்த சமணப் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டாள். அவன் குகை வாசலில் காவல் நின்றான்; தூக்கம் கலைந்து எழுந்த அவளுக்கு உள்ளே ஏதோ பொங்கியது; ’போலாமா?’ என அவன் கேட்டபோது பொங்கிய வெள்ளம் வண்ணமற்ற குமிழிகளாக வெடித்து அழிந்தது. சிறு குன்றுகளின் மீது வழிந்திறங்கும் சாய்கதிர்கள். குகை மண்டபத்தில் எரியும் கண்ணாடி விளக்கு. கரைகளுக்குள்ளேயே அலையடித்துக் கொண்டு விம்மும் குளம். ’அபீட்,அபீட்’ என்று கத்திக்கொண்டே சாட்டையை சுழற்றி வீசினாலும் பூமியில் மௌனமாக உறங்கும் பம்பரம். மலையிடுக்குகளில் உள் நுழைந்து ‘அக்கோவ்’ குருவியின் குரலோடு தனித்த கார்வையில் காற்று. தலையில் விழும் பூக்களின் மகரந்தத்தூள்கள், காலடியில் சரசரக்கும் சருகுகள். அவன் உபாசகன், அனைவருக்குமானவன், அவளுக்கு மட்டுமென அவனில்லை; யாருக்குமாக இல்லாமல் எல்லாருக்குமாக தன்னைக் கண்டு கொண்டவன். அவன் அப்படித்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். இந்தத் தெளிவிற்குப் பிறகு அவள் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள், யாராக இருந்தாலும் சரி, வீட்டில் பார்க்கும் வரனாக இருக்கட்டும் என்றாள்.
அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான மறுநாள். அதிசயமாக சாமு அவள் வீட்டிற்கு வந்தான். ’லதாங்கி’ என்று தலைப்பிட்டு அவளை மணப்பெண் கோலத்தில் வரைந்திருந்தான். மறு தினம் அவன் திருக்குற்றாலத்தின் சித்திர சபைக்குப் போய்விட்டதாக அவள் கேள்விப்பட்டாள். திருமண நாளன்று அவன் வரைந்திருந்த மாதிரியே அவள் சிங்காரித்துக் கொண்டாள். நாகஸ்வரத்தில் ‘கல்யாணி’ வாசிக்கும் போதெல்லாம் ‘லதாங்கியாக’ அது ஒலிப்பதை வலிந்து விலக்கினாள்.
‘அவன நெனச்சிண்டு எங்கிட்ட தாலி வாங்கிண்டயாக்கும்?’ என்று அவள் கணவன் சென்ற வாரம் கேட்டான்.
“ஆமாம், நீ ஏஞ்சல நெனைச்சிண்டு என்னப் ப்ராண்ட்ர மாரி”
‘ப்ராஸ் மாரி பேசற நீ’
“அது வேற இருக்காக்கும்”
‘நா எப்படி வேணாலும் இருப்பேன். நீ ஒழுங்கா இரு’
“இத்தன நா இருந்தாச்சு, இனி ஒழுங்கில்லாம இருக்கணும்னு பாக்கறேன்”
‘யூ,பிட்ச், உனக்கு கொழுப்பு அடங்கல. எந்த இளிச்சவாயன மடக்கிட்ட இப்ப; இல்ல அந்த மாகாதலன் இங்கயே வந்துட்டானா?’
“நா பிட்ச், அப்படின்னா நீ ஸ்கொண்ட்ரல். என்ன கல்யாணம் பண்ணிக்கறச்சேயே உனக்கு புள்ள பொறந்தாச்சு. அஞ்சாறு வருஷம் நாடகமாடி எப்படி மறச்சிருக்க நீ”
‘ஏஞ்சலுக்கு நீ உறைபோட காணமாட்ட., எல்லாத்லயும் அவ எனக்கு ஏத்த மாறி நடந்துப்ப; நீயும் இருக்கயே’
‘’இப்படி கம்பேர் பண்ண கூசல உனக்கு’’
‘சும்மா சொல்லு, ரதி மன்மத ஆட்டமெல்லாம் அவனோடயே முடிஞ்சுடுத்தா.’
அவள் அவனைத் தள்ளிவிட்டு திமிறினாள்; அவன் இழுத்து வைத்து அறைந்தான்.
மறு நாள் காலை உணவின்போது அவன் மீண்டும் ஆரம்பித்தான். ’இந்த மில்லட் தோசைய விட்டா வேற ஒன்னும் தெரியாதா, இல்ல அவனுக்கு இதுதான் புடிக்குமா?’
“டாடி, யார் அது?’’
‘உன்னத்தாண்டா சொல்றா அப்பா, பேசாம சாப்டு’
‘வருண், உங்க அம்மா உன்ன விட்டுட்டு வெளில போறாளா?’
“எப்பயாச்சும் போவாங்க, எனக்கு சாக்கோ நட்ஸ் ஐஸ்க்ரீம் வாங்கிண்டு வருவாங்க”
‘சீக்ரமா வருவாளா, லேட் ஆகுமாடா?’
இப்படி ஒரு வக்ர எண்ணம் எப்படி வருகிறது? ‘வருண்,உன்ன விட்டுட்டு நான் போனதெல்லாம், உன் டாடி வேலைன்னு சொல்லிண்டு போறாரே அந்த ‘ஏஞ்சல்’ ஆஃபீஸுக்குத்தான்’
“ஆமாண்டா, அங்கதான் வருவோ, அவளோட ஒரு அங்கிள் வருவான்.”
அவள் உணவு மேஜையை விட்டு எழுந்துவிட்டாள். வருண் புரியாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மட்டும் மொத்தமாக தோசைகளைத் தின்றான்.
அவன் ஏஞ்சலையும் தொட்டு அவளையும் தொடுவது சகிக்க முடியாததாக இருந்தது. உண்மை தெரிந்த இரு வருடங்களாக வீடு நரகமாகிவிட்டது. அதற்கு முன்னால், அவன் இவளுடைய நண்பனைப் பற்றி தரமற்றுப் பேசியதில்லை, கிண்டலாகப் பேசுவான், அவ்வளவுதான். இவளையும் கேலி செய்வான். ஒருக்கால் அவள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ? ஆனால்,உறவின் புழுக்கம் மூச்சுத் திணறச் செய்கிறதே!
‘உன்னால அவள விடமுடியாதுன்னா, நாம டைவர்ஸ் செஞ்சுக்கலாம்’
“அதெல்லாம் நடக்காது. எங்க அம்மா, அப்பா ஒத்துக்கமாட்டா; ஒத்துண்டாலும் இன்னொரு கல்யாணம்னு நிப்பா; அதவிட நீ அவங்கிட்ட திரும்பறதுக்கு நா விடவே மாட்டேன்.”
மனித மனம் இத்தனை வஞ்சம் கொண்டதா?என்ன எதிர்பார்க்கிறான், தாசி போல, அடிமை போல, அவனைத் தெய்வமாக கொண்டாடச் சொல்றானா?
எண்ணங்களிலிருந்து விடுபட்ட அவள் வீணையை உறையில் இட்டு மூடினாள். வருண் அவனுடைய பைகளைப் பிரித்து எல்லாவற்றையும் பரப்பியிருந்தான். ’என்னடா இது, நேரமாச்சுடா, திருப்பியும் இதெல்லாம் உள்ள அடைச்சு எவ்ளோ வேல? படுத்தறடா’
“நீ மட்டும் வீணையை எடுத்தேல்ல”
‘அது ஊருக்கு கிடையாதுடா’
“நீ என்ன சதீஷ் வீட்ல விட்டுடு. அப்பா வந்தவுடனே அவரோட நா வரேனே”
‘தாத்தாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு வரல்லயா நீ?’
‘‘அப்போ, அப்பா வரமாட்டாரா?’’
‘இந்த அப்பா புராணத்த நிறுத்து; பைக்குள்ள சாமான வை. அந்தக் கார் பெரிசுடா, அதைத் திணிக்காதே’
“எனக்கு அதுதான் வேணும்”
முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். பலவந்தமாக காரைப் பிடுங்கி எறிந்தாள். வாசலில் டாக்ஸி வந்து நின்ற ஓசை கேட்டது. அவனையும் இழுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். இந்தப் பிசாசை நம்ப முடியாது, சைல்ட் ஹெல்ப் போலீசை கூப்பிட்டுவிடும்.
உழவர் சந்தையும், எம்பயர் ஸ்டேட் பில்டிங்கும், க்ரேட் லேக்கும், ஹட்சன் நதியும், அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகின்றன.வருண் அவளுடன் இருப்பானா?
செக்கிங் முறைகள் முடித்து, அதிக பணம் கொடுத்து வருணுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து எமிரேட்ஸ் விமானத்தில் அமரும் வரை அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ’சரிதானா’ என ஒரு குரல் உள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் நடந்து கொண்டது சரியென்றால் இதுவும் சரிதான்.
அவள் படுத்திருந்த அறைக்கு அவன் வந்ததை அவள் முதலில் அறியவில்லை. ‘என்ன விட்டுடு, உன் கொஞ்சலையெல்லாம் அவகிட்ட வச்சுக்க’
“உனக்கு என்ன புடிக்கலைன்னா அவனப் போலன்னு நெனைச்சுக்கோ”
‘அவனுக்கு நீ உற போட காண மாட்ட; அசிங்கமா பேசாம போய்டு’
“அப்ப அவங்கிட்டயும் அனுபவமிருக்கு”
‘மானங்கெட்டுப் பேசாதே. எனக்கும் அவனுக்கும் அந்த மாரி எண்ணமேயில்ல’
‘உன் மாரு, தொடை, கழுத்து, முகம்னு சரமாரியா வரஞ்சிருக்கான். நீயும் மேலாட இல்லாம நின்னுருக்கே’
“பாவி, இப்படியெல்லாம் பேசாத, அப்படிக்கும் உன்ன மாரி தரங்கெட்டவனில்ல அவன். பொறந்த மேனிக்கி நின்னாக்கூட சபலப்படமாட்டான்’’
“அப்படிச் சொல்லு பத்தினியே; அப்ப நின்னுருக்கே”
அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் பேயடி அடித்தான். வருண் இந்தக் கலவரத்தில் முழித்துக்கொண்டு அலறினான்.
பற்றத் துடித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் செல்கையில் வருணுக்கு அவள் என்னவாகத் தெரிவாள் என ஓடிய எண்ணத்தை ஓடுதளத்தை விட்டு மேலெழுந்த விமானம் சத்தமாக எதிரொலித்தது.
அன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து
சி. சரவணகார்த்திகேயன் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி. சமூக ஊடகங்களில் முனைப்புடன் இயங்கி வருபவர். முன்னரே கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் வனைகிறார். ‘மின் தமிழ்’ எனும் மின் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் திகழ்கிறார். அதன் நீண்ட நேர்காணல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ‘ஆப்பிளுக்கு முன்’ சென்ற ஆண்டு வெளியானது. சமூக வலைதளங்களில் அதிகமும் வெளிபடுவது அவருடைய திராவிட இயக்கச் சார்பு முகமே. அந்நிலையில் காந்தியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவை தன்னுடைய முதல் நாவலின் களமாக தேர்ந்தது ஒரு வாசகனாக சன்னமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. குறுகுறுப்புக்கு காந்தியைப் பற்றி சரவணகார்த்திகேயன் என்ன எழுதியிருக்கிறார் என்பதொரு காரணமென்றால் மற்றொரு காரணம் நாவலின் பேசுபொருள். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள்.
தமிழ் புனைவுப் பரப்பில் காந்தி கையாளப்படுவது புதிதல்ல. புதுமைபித்தனின் ‘புதிய நந்தன்’ துவங்கி மணிக்கொடி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் காந்தி ஒரு பாத்திரமாகவோ அல்லது அவருடைய தாக்கத்தில் வாழ்வை விளக்கிக்கொள்ளும் முயற்சிகளோ, அவருடைய இயல்புகளை தமதாக கொண்ட லட்சியவாத சாயல் கொண்ட கதைமாந்தர்களோ பல்வேறு எழுத்தாளர்களின் புனைவு வெளியில் உலவுகிறார்கள். அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் ஹென்றியும்கூட காந்திய சாரத்தை தமதாக்கிக் கொண்ட ஒருவன்தான். சி.சு. செல்லப்பா மற்றுமொரு முக்கியமான காந்தியுக எழுத்தாளர். ‘சுதந்திர தாகம்; ‘சத்தியாகிரகி’ போன்ற கதைகள் காந்தியின் மீது வழிபாட்டுணர்வு கொண்ட படைப்பூக்கமிக்க ஆளுமைகளில் ஒருவராக அவரைக் காட்டுகிறது. சிதம்பர சுப்பிரமணியனின் ‘மண்ணில் தெரியுது வானம்’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ போன்ற நாவல்களில் காந்தியொரு பாத்திரமாக வந்து போகிறார். ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் காந்தியத்தையே தனது தரிசனமாக கொண்டுள்ளது. உன்னத கொள்கைகள் லட்சியவாதத்தின் பொருட்டு ஒருவனை இறுக்கும்போது அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதைப் பற்றிய சித்திரத்தை அந்நாவல் அளிக்கிறது. ஊடாக அய்யன்காளி காந்தி சந்திப்பை மையமாக்கிய ‘மெல்லிய நூல்’ நாவலின் தரிசனமாக மேலெழுகிறது. வெகுமக்கள் இலக்கிய பரப்பில் நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி என பலரும் காந்திய தாக்கம் கொண்ட புனைவுகளை எழுதி இருக்கிறார்கள். காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், தேவிபாரதி, உட்பட பலரும் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு தமிழில் இதுவரை இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே வெளிவந்ததுள்ளன என்று எண்ணுகிறேன். ஒன்று மாலனின் ‘ஜனகணமன’ மற்றொன்று ‘ஆப்பிளுக்கு முன்’.
“காந்தி இந்திய மனவெளியில் அவருடைய மரணத்தின் ஊடாகவே மீள்பிறப்பு எடுத்தார்” என்கிறார் மகரந்த் பரஞ்சபே. தமிழ் காந்திய புனைவுப் பரப்பில் காந்தியின் மரணம் ஆழ்ந்த தாக்கம் செலுத்தியிருப்பதை வாசிப்பின் ஊடாக உணர முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ ஆகியவை காந்தியின் மரணத்தை தம் பிரதிகளில் தீவிரமாக சித்தரிக்கின்றன. காந்தி சென்ற யுகத்தின் லட்சியவாதத்தின் குறியீடாக, பின்னர் அதன் வீழ்ச்சியின் சாட்சியாக புனைவு வெளியில் நடமாடுகிறார். ஞானக்கூத்தன், இசை, சபரி, மனுஷ்யபுத்திரன் என காந்தி தமிழ் நவீன கவிதைகளில் லட்சியவாதத்தின் பகடியாக உருமாறுகிறார். தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, மாலனின் ‘ஜனகணமன’, சரவணகார்த்திகேயனின் ‘நான்காவது தோட்டா’, மற்றும் ‘ஆப்பிளுக்கு முன்’, நரோபாவின் ‘ஆரோகணம்’ என இவை அனைத்துமே காந்தியின் மரணத்தை பேசுபவை. மரணத்திலிருந்து காந்தி இந்திய சமூகத்திற்கு அளித்தவை என்ன என்று ஆராய்பவை. அவருடைய பெறுமதியை மதிப்பிடுபவை. நிதர்சனத்தில், இறந்த காந்தி மீளெழவில்லை- ஆனால் புனைவுகளில் ஒவ்வொரு முறையும் மேலும் ஆற்றலுடன் காந்தி உயிர்த்தெழவே மரிக்கிறார்.
பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத, அதே சமயம் கிளர்ச்சி தரும் கிசுகிசுக்களுக்கே உரிய ஆற்றலுடன் பன்மடங்கு வீரியத்துடன் உலவும் கதைதான் காந்தியின் ‘பிரம்மச்சரிய பரிசோதனைகள்’. காந்தியைப் பற்றிய பொதுவெளி விவாதங்களில் அவர் தரப்பை வீழ்த்தவும் அவரை சிறுமை செய்யவும் இறுதியாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமும் இதுதான். காந்தியை வாசிப்பவர்களிடத்தேகூட இது சார்ந்து ஒரு மவுனமும் உறுத்தலும் ஐயமும் நிலவுவது உண்டு. ஜெயமோகன், பிரேம், மற்றும் லாய்ட் ஐ ருடால்ப் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து சில புரிதல்களை அளித்தனர். இந்தச் சூழலில் இதை பேசுபொருளாக தன் முதல் நாவலுக்கு கைகொள்வதற்கு ஒரு துணிவு வேண்டியதாய் இருக்கிறது. அவ்வகையில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் சவால் மிகுந்த, சற்றே சமநிலை இழந்து அடி பிறழ்ந்தாலும் தலைகுப்புற விழும் கழைக்கூத்தாடிபோல் சமநிலையுடன் பயணிக்க யத்தனித்து, சில உதறல்கள் மற்றும் அதிர்வுகள் இருந்தாலும்கூட விழாமல் மறு எல்லையை அடைந்துவிட்டிருக்கிறார்.
காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் முப்பதுகளின் பிற்பகுதியில் துவங்குகிறது. தரம்பால் 37ல் காந்திக்கு தூக்கத்தில் நேர்ந்த விந்து விரயம் பற்றி வருத்தத்துடன் எழுதிய கடிதத்தைப் பற்றி ‘காந்தியை அறிதல்’ நூலில் எழுதுகிறார். தன் பிரம்மச்சரியம் கறைபடியாமல் இருக்க மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தை காந்தியின் சகாக்கள் எப்படியோ பிரசுரம் ஆகாமல் தடுக்கிறார்கள். சுஷீலா நய்யார், பிரபாவதி துவங்கி மநு வரை பலரும் காந்தியுடன் பிரம்மச்சரிய சோதனையில் வெவ்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். நாவல் மநுவுக்கும் காந்திக்கும் இடையிலான உறவையே பேசுகிறது.
காந்தியின் இந்த சோதனைகள் கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே துவங்கிவிடுகிறது. அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? நாவல் மிகச் சன்னமாக இதை தொட்டு காட்டுகிறது. ஆகாகான் சிறையில் தனக்கு உதவியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து விலக்கி வைக்கவே அவர் முயல்கிறார். கஸ்தூரி பாவின் மரணத்திற்கு பிறகு வரும் ஒரு நிகழ்வு மநுவின் தூய்மையான வெள்ளந்தித் தன்மைக்கு சான்றாக திகழ்கிறது. பாவிடம் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் மநு சொல்வது வழக்கம். இறந்த பிறகும் பாவின் நினைவிடத்தில் சென்று அன்றைய நாளைப் பற்றி சொல்கிறாள் மநு. காந்தி இதைப்பற்றி கேட்கும்போது மநு ஒரு பதில் அளிக்கிறார். “பா இருப்பதும் இல்லாததும் என் தேர்வல்ல, ஆனால் சொல்வது என் தேர்வல்லவா?” மெதுவாக அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பரிணாமம் கொள்கிறது. காந்திக்கு அணுக்கமாக இருந்த பிறர் பின்னுக்குச் செல்கிறார்கள். மகாதேவ் தேசாயும், பாவும் இருந்த இடத்தை ஏறத்தாழ மநு நிரப்புகிறார். காந்தியின் அணுக்கர்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு அந்த உறவு வலுப்படுகிறது. பியாரிலாலுக்கு மநு மீதிருந்த ஈர்ப்பு, அதை பியாரிலாலின் சகோதரி சுஷீலா தனக்கு சாதகமாக பயன்படுத்தி காந்தியை மநுவிடமிருந்து விலக்க முற்படும் ஆசிரம அரசியல்களையும் நாவல் தொட்டுக் காட்டுகிறது. நாவலின் பாத்திர வார்ப்பில் மநுவின் பாத்திரம் காந்தியைக் கடந்து மேலெழுந்து செல்கிறது. துவக்க காலத்தில் இருக்கும் அவளுடைய குறுகுறுப்பு, மெல்ல தன்னை காந்தியிடம் பூரணமாக ஒப்புவித்தல், பிற்பாடு தக்கர் பாபாவுடன் நிகழும் உரையாடல், மன உறுதிக்கும் ஆசிரம சில்லறை அரசியலுக்கும் இடையில் ஊசலாடுதல், நாவலின் இறுதியில் தேவதாஸ் காந்தி மநு சார்ந்து எந்த செய்தியும் பரவுவதை விரும்பவில்லை என்பதால் அவரை அவசர கதியில் வெளியேற்றிய பின்பான வெறுமை, எல்லாவற்றிற்கும் மேலாக மநுவிண் பதின்ம வயதிற்கே உரிய வெள்ளந்தித்தனம் (காந்தி அதை தூய்மை என்றே கருதுகிறார்).
காந்தி பிடிவாதக்காரராக, பிறழ்வு கொண்டவராக, ஏறத்தாழ சர்வாதிகாரியாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை மீறி அவருடைய ஆளுமை பேருரு கொள்ளும் தருணங்களும் நாவலில் உண்டு. நவகாளி யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் காந்தி வரும் வழியில் சில இஸ்லாமிய இளைஞர்கள் மலத்தை இட்டு வைத்தனர். காந்தி தானே சுத்தம் செய்யத் துவங்குகிறார். பிறர் வேண்டாம் எனச் சொல்லியும் மறுக்கிறார். “இது மனித மனதினைவிட நாற்றம் கொண்டதல்ல” என்கிறார். நவகாளி பயணத்தின்போது மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளைப் பற்றி பேசுகிறார். அதை மொழியாக்கம் செய்ய வேண்டிய நிர்மல் குமார் போசுக்கு பெரும் சங்கடம். இதை இப்படி பொதுவெளியில் பேசித்தான் ஆக வேண்டுமா என மறுக்கிறார். உயிருக்கே ஆபத்தாக போய்விடலாம் என எச்சரிக்கிறார். ஆனால் காந்தி தன்னுடன் நவகாளியில் பயணத்தில் இருக்கும் சகாக்களின் நடத்தையால் புண்பட்டிருந்தார். “எதுவும் என்வரையில் அனாவசியம் இல்லை. என்னை எதிரியாய் பாவிப்பவர்களோ, வெறுப்பவர்களோ செய்யும் செயல்களைக் காட்டிலும் என் மீதான அக்கறையில், அன்பில் என்னைச் சுற்றியுள்ளோர் செய்வதே என்னைப் பெரிதும் புண்படுத்துகிறது,” என்கிறார்.
நாவலின் உயிர்த்துடிப்பான பகுதி என்பது காந்தி- தக்கர் பாபா மற்றும் தக்கர் பாபா- மநு ஆகியோருக்கு இடையே நிகழும் உரையாடல் பகுதி. செய்தி ஆவணத்தன்மை கொண்ட பெரும்பகுதிகள் உள்ள புனைவில் இந்த விவாதப் பகுதியே ‘ஆப்பிளுக்கு முன்’னை நாவலாக்குகிறது என்றுகூட துணிந்து சொல்லலாம். தக்கர் பாபாவுடனான உரையாடல் புனைவெழுத்தாளனாக சரவணகார்த்திகேயனை அடையாளம் காட்டக்கூடிய இடம். தக்கர் பாபா சொல்கிறார், “உடல் என்பது நினைவில் காடுள்ள மிருகம். அது எப்போதும் காமத்தை மறவாது.” காந்தி காமத்தை தாய்மையின் மற்றொரு பரிமாணம் என வாதிடுகிறார். காமத்தை, பால்தன்மையை கடந்து தாய்மையை அடைய வேண்டும் என்கிறார் காந்தி. காந்தியின் மனப்பிறழ்வுக்கு அவர் அளிக்கும் பாசாங்கு என்பதாக இது பொருள் படக்கூடும். ஆனால் காந்தி அப்படி எண்ணவில்லை. கீழை ஆன்மீக மரபில் பிரம்மச்சரியம் செயலூக்கத்துடன் தொடர்புறுத்தப்படுகிறது.
லாய்ட் ஐ ருடால்ப் எழுதிய பின் நவீனத்துவ காந்தி பற்றிய அர.சு. ராமாவின் கட்டுரை இப்படிச் சொல்கிறது. “நான் என் வாழ்நாள் எல்லாம் தொடர்ந்த பிரமச்சர்யத்தைக் கடைபிடித்திருந்தால் என் உற்சாகமும் உத்வேகமும் இன்றுள்ளதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். அதை என் தேசத்துக்கும் என் உய்வுக்கும் பயன்படுத்தியிருக்க முடியும்,” என்றார் காந்தி. மேலும், “உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் ஜீவசக்தியை வீணாக்காமல் சரியான வழியில் பயன்படுத்துபவனுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது… முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு எண்ணற்ற ஆற்றல் உண்டு, அது தானாகவே செயல் வடிவம் பெற்று வெற்றி காண்கிறது… தன் சக்தியை விரயம் செய்பவனுக்கு இந்த ஆற்றல் எட்ட முடியாத ஒன்று”.
நாவலில், ஆன்மாவையும் உடலையும் மிகவும் எளிமைபப்டுத்துகிறீர்கள் என்கிறார் தக்கர் பாபா. அதற்கு காந்தி அளிக்கும் பதில் கூர்மையானது. “எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு என்பது உடலின் குற்றங்களிலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் நோக்கம் கொண்டது. அப்படி ஓர் ஓட்டையைப் போட்டு தள்ளுபடி தருவதன் மூலம் உண்மையில் பாவ மன்னிப்புகளே பாவங்களை அதிகரிக்கின்றன.”
மேலும் பின் நவீனத்துவ காந்தி நூலில் காந்தியின் புலனடக்கம் குறித்து உள்ள ஒரு கோணம் எனக்கு முக்கியமானது-
தன்னை வென்றவன் தரணியை வெல்வான் என்பது போன்ற புராதன நம்பிக்கைகள் கொண்டிருந்தார் காந்தி. விஸ்வாமித்திரர் கதையே அவர் காமத்தையும் கோபத்தையும் வெற்றி கொண்டு இந்திரிய ஜெயத்தின் ஆற்றலால் திரிசங்கு சொர்க்கம் போன்ற உலகங்களையும் படைக்கும் தவவலிமை பெற்றதைத்தானே சொல்கிறது? இவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளாமல், தன் புலனடக்கத்தால் தன்னோடு வாழ்ந்த மக்களின் துயர்களைக் களைந்து அவர்கள் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முயன்றார் காந்தி. அவர் தன் புலனடக்கத்தால் படைக்க நினைத்த உலகம் மிக எளிமையானது. திரிசங்கு சொர்க்கத்தைப் போல் தேவலோகத்துக்கு இணையான பிரம்மாண்டம் கொண்டதல்ல அது- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற எளிய இலக்கு கொண்ட சாதாரண கனவு. எளியவர்கள், ஏழைகள் இவர்கள் துன்பமற்று வாழ ஒரு உலகைப் படைக்க விரும்பினார் காந்தி.
காந்தியின் தாய்மைத் தரிசனமும் பெண்ணிய மற்றும் அகிம்சை நோக்கில் முக்கியமான புரிதல் அளிப்பவை. வந்தனா சிவா இக்கோணத்தை வளர்த்தெடுத்ததைப் பற்றி பிரேம் தனது கட்டுரையில் விவரிக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ கூட அதீத ஆண் மைய அரசியலுக்கு எதிராக காந்தி கைக்கொண்டது பெண் மைய அரசியல் எனும் கோணம் துலங்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக்கூட பால் கடந்த நிலையை நோக்கி சென்றவர் எனும் கோணம் உண்டு. காந்தி தனது பரிசோதனைகளை மறைக்கவில்லை. பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகிறார், கடிதங்கள் எழுதுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், இதை எல்லாம்விட ஒரு படி மேலே சென்று, பிரம்மச்சரிய பரிசோதனையின் அனுபவங்களை மநுவை நாட்குறிப்பில் எழுதச் சொல்லி அதை தானே திருத்தியும் கொடுக்கிறார். சார்ந்தோரின் பூரண சம்மதத்துடன், அவர்கள் வீட்டாரின் அனுமதியுடன் சோதனையில் ஈடுபடுத்துகிறார். அவர்களுக்கு விருப்பம் இல்லை எனும்போது விடுவிக்கவும் செய்கிறார். மநு எழுதிய நூலின் பெயர் “பாபு என் தாய்”. காந்தியே சொல்வது போல் அவர் இத்தேசத்திற்கே தந்தை, ஆனால் மநுவுக்கு மட்டும் அவர் அன்னையாக தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறார். பிறரிடம் அப்படியான உணர்ச்சிகளை ஏற்படுத்தத் தவறிய காந்தி மநுவைப் பொருத்தமட்டில் அந்த இலக்கை அடைகிறார். பிரம்மச்சரிய பரிசோதனைகள் தடைபட்டு மீண்டும் துவங்கியபோது முன்பிருந்த வெளிப்படைத்தன்மை இல்லையென சரவணகார்த்திகேயன் நாவலில் எழுதியிருப்பது எனக்குமே ஆச்சரியமாக இருந்தது.
இத்தனை சொன்ன பிறகும், நாவல் காந்திக்கோ அல்லது மநுவிற்கோ சார்பு நிலை எடுக்கிறதா? என்றால் இல்லை. காந்தியை புரிந்துகொள்ள சில கோணங்களை திறந்து வைக்கிறார். அவற்றை ஏற்பதும், நிராகரிப்பதும் வாசகரின் பொறுப்பு. பெரும்பான்மையினருக்கு காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளின் தர்க்கம் உவப்பாக இருக்காது. இந்நாவல் அவர்களை தொந்திரவு செய்யும் என்பதே என் அவதானிப்பும். மநு எனும் தனி மனுஷி மீது எவ்வித தாக்கத்தை காந்திக்கு பின்பான அவருடைய நெடிய வாழ்வில் இவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. மனித நேய நோக்கில் வாசக மனம் அவர் நோக்கி இரங்குவதை தவிர்க்க முடியவில்லை.
ஆகாகான் சிறைச்சாலையில் மநுவின் வருகையுடன் துவங்கும் நாவல் காந்தியின் மரணத்துக்கு பின்பான மநுவின் வெறுமையுடன் நிறைவுறுகிறது. காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்வதோ, தாழ்வதோ, மாறாமல் இருப்பதோ வாசகரின் வாசிப்பைப் பொருத்ததாகும். என் நோக்கில் காந்தி மேலும் அணுக்கமாகவே ஆகிறார்.
நாவல் முழுக்கவே படர்க்கையில் நகர்கிறது. விவரணைகளற்ற, தட்டையான இதழியல் மொழி. இந்நாவலையே இதழியல் நாவல் என்று வகைபடுத்தலாம். புனைவுத் தன்மை குறைவாக கொண்ட நாவல். ஆகவே வழக்கமான நாவல் போன்ற வாசிப்பனுபவத்தை மொழிரீதியாக இது அளிக்காமல் போகலாம். பெரும் முரண்கள், நாடகீய தருணங்கள் ஏதுமற்று பயணித்தாலும்கூட ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. நாவலின் மிகப்பெரிய சிக்கல் அதன் மொழி. வெகுஜன தளத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. தேய்வழக்குகளும் நிறைய இருக்கின்றன. “நண்பகல் ஒரு குறியீடு போல் அனலைக் கக்கிக் கொண்டிருந்தது,” போன்ற பயன்பாடுகள் நாவலின் ஓட்டத்திலிருந்து விலகியிருக்கின்றன. நாவலின் உணர்வு நிலைக்கு தொடர்பில்லாத, வெகுஜன இலக்கியத்திற்கே உரிய கிளர்ச்சி ஏற்படுத்தும் தன்மை சில இடங்களில் வாசிப்பின் கவனத்தை சிதறடிக்கிறது. வெகுஜன – தீவிர இலக்கியம் இரண்டிற்குமான நடுவாந்தர போக்கில் மொழி நிகழ்கிறது. உணர்வுரீதியாக பெரும் பாதிப்பை நிகழ்த்த தவறுகிறது. எனினும் இந்த உணர்வு விலக்கம்கூட இதழியல் நாவல்களின் ஒரு கூறுமுறைதான். சரவணகார்த்திகேயன் இக்கருவை மிகுந்த பொறுப்புடன், விழிப்புடன் கையாள முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆனால் ஒரு விலையோடு- அது நாவலின் கலைத்தன்மையை மட்டுப்படுத்துகிறது. மநு- காந்திக்கு இடையிலான உறவை காமத்திலிருந்து, எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியாக, தத்துவச் சிக்கலாக வளர்த்தெடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எனக்குள் இருக்கும் காந்தியர் அடைந்த நிறைவை புனைவு வாசகன் அடையவில்லை என்பதே உண்மை.
இத்தகைய ஒரு கருவை எழுத்தில் வார்க்கும் திறன் மற்றும் துணிவும், ஒரு களத்திற்காக வாசித்து உழைப்பை அளிக்கும் தீவிரமும் சரவணகார்த்திகேயனிடம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களோடு அவருடைய ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் ஒரு முக்கியமான முயற்சியாக அடையாளம் பெறுகிறது. வருங்காலங்களில் மேலும் பல சுவாரசியமான புனைவுக் களங்களில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.