எழுத்து

இரான் – ஒரே நாவலின் பதினாறு மொழிபெயர்ப்புகள் ஏன், எப்படி? – சயீத் கமாலி டேஹ்கான்

இரானிய புத்தகக்கடை அலமாரிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஜே. டி. சாலிங்கரால் பார்க்க முடியுமென்றால், அவரது கல்லறை அமைதி குலைந்து விடும். 1947ல் அவர் எழுதிய ஒரு குறுநாவல், தி இன்வர்டட் பாரஸ்ட், அமெரிக்காவில் அதை மறுபதிப்பு செய்ய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அனுமதி மறுத்து விட்டார். ஆனால் அது பெரும்பாலான இரானிய புத்தகக்கடைகளில் வெறும் தொண்ணூறாயிரம் ரியால்களுக்கு, அதாவது 2.20 பவுண்டுகளுக்கு, பார்ஸி மொழியில் கிடைக்கிறது. ஏப்புக்ஸ் தளத்தில் இந்தப் புத்தகத்தைத் தேடும் ஆங்கில மொழி வாசிக்கும் சாலிங்கர் வெறியர்கள், அது முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட காஸ்மோபாலிடன் இதழின் பழைய பிரதியை ஐநூறு டாலர்கள் விலை கொடுத்து மட்டுமே வாங்க முடியும்.

இன்வர்டட் பாரஸ்ட் பார்ஸி மொழியில் பதிப்பிக்கப்பட்டிருப்பது இரானின் ஒழுங்குபடுத்தப்படாத, சிக்கலான, ஆனால் வசீகரிக்கும் மொழிபெயர்ப்புச் சூழலின் ஒரு உதாரணம் மட்டுமே. காப்புரிமைச் சட்டத்தை நெறிப்படுத்தும் பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய மறுத்து வருவது நீண்ட காலமாகவே அதன் மொழிபெயர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கு எதிரானதாக இருந்து வருகிறது. இரானின் தேசிய சட்டம் தம் தாயகத்தில் பதிப்பிக்கும் இரானிய எழுத்தாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் இரானுக்கு வெளியே தம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இரான் எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. பாலா ஹாகின்ஸ் இவ்வாண்டு எழுதியுள்ள, இன்டு தி வாட்டர், என்ற நாவலின் பார்ஸி மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கான காப்புரிமையை இரானிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பெற்றுள்ளார் என்ற தகவலை டெஹ்ரான் டைம்ஸ் அளிக்கிறது. ஆனால் அந்த நாவலுடன் போட்டியிடும் வேறு மொழிபெயர்ப்புகளை குறைந்தபட்சம் ஐந்து பேர் அதற்குள் துவங்கிவிட்டனர்.

இரான் இலக்கியத்தை நேசிக்கிறது. எனவே மர்செல் ப்ரூஸ்ட் முதல் ஹருகி முரகாமி வரை பல்வகைப்பட்ட பிற தேச நூல்கள் விற்கப்படுகின்றன என்று டெஹ்ரானின் புத்தகக்கடைகள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். கஸ்டவ் ஃப்ளாபேரின் செண்டிமெண்டல் எஜுகேஷன் போன்ற நூல்கள் இங்கிலாந்தின் புத்தகக்கடைகளில்கூட மிக அபூர்வமாகவே காணக் கிடைக்கின்றன. ஆனால் அவை இரானில் ஏராளமாக விற்பனையாகின்றன- பரவலாக வாசிக்கப்படுகின்றன. இதைச் சொல்லும்போது, தீவிரமான தணிக்கை முறை அங்கு நடைமுறைப் படுத்தப்படுவதையும் கூறியாக வேண்டும்: கலாசாரம் மற்றும் இசுலாமிய நெறிமுறை அமைச்சகம் அனைத்து புத்தகங்களையும் பதிப்பிக்கும் முன் தணிக்கைக்கு உட்படுத்துகின்றது. தற்போதுள்ள மிதவாதிகளின் ஆட்சியில் சுதந்திரம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது என்றாலும் பெரும்பாலான புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.

மேற்கில் மிக அபூர்வமாகவே காணப்படும் பிராபல்யம் இரானிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓரளவு கிட்டுகிறது; ஆசிரியர்களின் பெயர்களுடன் புத்தக முன்னட்டைகளில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களும் இடம் பெருகின்றன. சில மொழிபெயர்ப்பாளர்கள் புகழ் பெற்ற கலாசார ஆளுமைகளாகவும் உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் மொழியாக்கப் பணியை பேரன்பு காரணமாகவே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பெறுவது மிகக் குறைவான சன்மானம், மொழியாக்க அனுமதி பெறவோ பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அந்நிய மொழி புனைவுகளுக்கு உள்ள கணிசமான வரவேற்பும் முறையான அனுமதி பெறுவதில் உள்ள தடைகளும் ஒரே புத்தகத்தின் பல்வேறு மொழியாக்கங்கள் வெளியாக மிகப்பெரும் காரணங்களாக உள்ளன. காப்புரிமை குறித்த வெற்றிடத்தை ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் தாம் வளம் பெற பயன்படுத்திக் கொள்கின்றனர்- குறிப்பாக, விற்பனை சாதனை படைத்த நூல்களை மொழிபெயர்ப்பவர்கள். உதாரணமாக, காலேத் ஹொசேனியின் ‘அண்ட் தி மவுண்டென்ஸ் எக்கோட்’ என்ற நாவல் பாரசீக மொழியில் குறைந்தபட்சம் பதினாறு வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துருக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் எழுத்தை மொழியாக்கம் செய்துள்ள அர்சலன் பாசிஹி, இத்தகைய போக்கு, “பாரசீக இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு” காரணமாகலாம் என்று எச்சரித்துள்ளார்- ஏனெனில், இது மொழியாக்கங்களின் தரத்தை மலினப்படுத்துகிறது.

இரானிய அதிபர் ஹாசன் ரூஹானிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே சமயம், பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய வேண்டும் என்று கோரி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். தெஹ்ரானில் வாழும் எழுத்தாளர் ஹோசென் சானபூர் அவர்களில் ஒருவர். “புரட்சிக்கு முன்னரே எம் மகத்தான இலக்கியவாதிகளில் சிலர் காப்புரிமை சட்டத்துக்கு இரான் அங்கீகாரம் அளிப்பதை எதிர்த்தனர்,” என்கிறார் அவர். “முன்னரே இணையாத காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அண்மைய ஆண்டுகளில்தான் உணரத் துவங்கியிருக்கிறோம்”.

சில பதிப்பாளர்கள் காப்புரிமைச் சட்டத்தை தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளத் துவங்கினர் என்கிறார் சானபூர். “காப்புரிமையை மதிக்கத் துவங்கும் பதிப்பாளர்களின் எண்ணிக்கை அலை அலையாக அதிகரிக்கும் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் அவர்களின் எண்ணிக்கை கூடவில்லை… ஐந்து அல்லது ஆறு பதிப்பகத்தினர் இதைத் துவங்கினர், அதன்பின் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது”.

அனுமதியின்றி பதிப்பிப்பதை அவர், திருட்டு போன்ற ஒன்று என்று மிகக் கடுமையாக விமரிசிக்கிறார். எனினும் அவர் மொழிபெயர்ப்பாளர்களைக் குற்றம் சொல்வதில்லை. “போதுமான சட்டங்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை,” என்கிறார் அவர்.

மாசித் மிர்மோஸி நாற்பதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் மொழி புத்தகங்களை பார்ஸி மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். பதிப்பிக்கும்முன் காப்புரிமை பெறும் நடைமுறையை அவர் பின்பற்றத் துவங்கியுள்ளார். சுவிஸ் எழுத்தாளரான பாஸ்கல் மெர்சியரின் ‘நைட் ட்ரெயின் டு லிஸ்பன்’ உட்பட அவரது அண்மையை புத்தகங்கள் அனைத்தும் முன் அனுமதி பெற்ற பின்னரே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

“காப்புரிமையை மதிப்பவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,” என்கிறார் அவர். “ஆனால் காப்புரிமைப் பிரச்சனை ஈரானின் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையை ஒரு நோய்மை போல் பீடித்துள்ளது. இது வாசகர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகிறது”

எழுத்தாளர்களும்தான். பால் ஆஸ்டர் போன்ற சிலர் இரானிய மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து ஒரு அடையாள சன்மானம் பெறத் துவங்கியுள்ளனர் என்றால் மரியா வர்காஸ் லோசா போன்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜே. எம். கோட்ஸீ 2008ஆம் ஆண்டு, இரானிய செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கும் நோக்கத்தில் என்னிடம் ஒரு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் அவர், காப்புரிமை பாதுகாப்பு என்பது பணம் சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். “அனுமதி இன்றி தம் புத்தகங்கள் பறித்துக் கொள்ளப்பட்டு, அமெச்சூர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமக்குத் தெரியாமல் விற்பனையாவதில் எழுத்தாளர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது என்றால் அது நியாயமான ஒன்றுதான்,” என்று அவர் எழுதினார்.

மிர்மோஸி போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் சிரமப்பட்டு காப்புரிமை பெற்றாலும்கூட, வேறொரு பதிப்பாளர் காப்புரிமை பெறாமல் தேர்ச்சியற்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கொண்டு மொழியாக்கம் செய்து வெளியிட முடியும். இதற்கான முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால் பலரைப் போல் மிர்மோஸியும் இரானியர்களின் இச்சிறு தனித்தன்மையை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார். “இது ஒரு கொடுங்கனவல்ல,” என்கிறார் அவர், “எங்கள் வாழ்வின் நிதர்சன உண்மை”.

(This is an unauthorised translation of the article, “Why Iran has 16 different translations of one Khaled Hosseini novel,” by Saeed Kamali Dehghan, originally published at The Guardian. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

பெருங்கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

பெரியண்ணன்களுக்குத்தான் எத்தனை தலைச்சுமை.
எதையுமே பெரியதாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது.
பெரிய வீடுகள். பெரும் கூட்டங்கள். பெரும் போர்கள்.
பெரியதாக செயல்பட பெரிய வழிவகைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

பெருங்குரலற்ற உதிரிகளை வெட்டி வீழ்த்தி
புதைத்த குழிகளை எருவாக்கி
துரத்தும் ஆவிகளுக்கு பரிகாரம் செய்து
குறுக்கிடும் சாலைகளை நிர்மூலமாக்கி
பெரிய பாதைகளை சமைக்க வேண்டியிருக்கிறது.

பெரியண்ணன்கள் உமிழ்ந்துவிட்டுப் போகும்
விஷங்களை உண்டு வலிகொண்டு எழுபவர்கள்
உண்டாக்குகிறார்கள் இன்னுமொரு பெரும்பாதையை.

இப்புவி முழுவதும் ஒற்றைப்
பெரும்பாதையாக்கி விடத்தான்
ஓயாமல் உழைக்கிறார்கள்.

காலடித்தடம் காணாது போன
ஒற்றையடிப் பாதைகளில்
கொய்யப்படாத மலர்கள்-

பெருஞ்சாலைகளில் நிற்காமல் ஓடும்
சகடங்களின் பேரதிர்வின் ஊடே
சின்னதாக பூத்துவிட்டு சாம்புகிறது.

நோக்கிரி – தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

கணபதி தம்பி புரண்டு படுத்தார்.

‘கா’ என்று சத்தம். முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது அவருக்கு. வீட்டின் பின்புறம் பக்கத்து வீட்டு வேப்பமரம் தழைய இருக்கிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காகங்கள் சில. ‘கா’ ‘கா’ என வந்து விடும்.‘கா கா, கர்’ என்று கரையும் சத்தம் விட்டு விட்டு கேட்கும். எழுந்து மாரி பிஸ்கட்களை சின்ன சின்ன வில்லைகளாக்கி வீட்டின் மதில் மேல் வைப்பார்.

எதிர் வீட்டு மாமா ஓரக்கண்ணால் அவர் செயல்களையும் பார்த்துக் கொண்டு மாடுகளை அவிழ்த்துச் செல்வார். ஊரில் இரண்டு கணபதி உண்டு. இவர் இரண்டாவது கணபதி. அதனால் இவரது பெயர் கணபதி தம்பி. அதுவும் சின்னப் பிள்ளைகள் கூப்பிடும்போது இவரும் சின்னப் பிள்ளைகள் போலவே ஆகி அவர்களோடு அன்பாகப் பேசுவார்.

காக்கைகள் ஒரே சத்தம். அவைகள் மொழியில் கூவி அழைப்பதும் பிறகு தலையைச் சாய்த்து பார்ப்பதுமாக இருந்தது. அதில் ஒரு குஞ்சு தயங்கித் தயங்கி வந்தது. மற்ற காக்கைகளைக் கண்டு அதற்கு பயம். புத்திசாலி அது. டப்பேன்று கவ்விக்கொண்டு பக்கத்தில் இருக்கும் வேப்பங்கிளையில் வைத்து சிறிது சிறிதாக கொத்தித் திங்க ஆரம்பித்தது. அதன் மூக்கையொட்டிய தோல் சிவந்து இருந்தது எல்லாம் கொஞ்சம் நேரம்தான். காகம் கா கா எனப் பறந்து விட்டதும் பிறகு காட்சிகள் குளத்தில் காற்றிலாடும் அலைகள் அடங்கியது போல் அடங்கி விடும் கணபதிக்கு. மனம் பேயாட்டம் ஆட ஆரம்பிக்கும். எல்லாம் இந்த வேலை இல்லாத மூன்று மாதமாகதான்.

மனைவியும் பிள்ளைகளும் அவர் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் அவருக்கு சாதாரணமாக இருக்கத் தெரியவில்லை. எப்போதும் கோவம், ஒரு எரிச்சல். பிள்ளைகள் கோழியின் இறக்கைக்குள் பதுங்கி இருக்கும் குஞ்சுகள் போல் அவள் குரலுக்கு மட்டுமே ஓடி நடக்கின்றன. ஏக்கமாக இருக்கிறது அவருக்கு. வளர்ந்து விட்டார்கள். கணபதி தம்பி கூப்பிடுவதைச் சரியாக காதில் வாங்காமல் மெதுவாக பதில் சொல்வது, எங்காவது வேடிக்கை பார்த்துக் கொண்டு, இல்லை, ஏதாவது படிப்பது போல் பாவ்லா செய்கிறார்கள். இல்லை, அவர்கள் சாதாரணமாக இருப்பதுகூட அவருக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

சொச்ச சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்து இருக்கலாம். இனி யோசித்து ஒன்றும் ஆவப்போவதில்லை. நடுவாந்திர வயதில் வேலையைப் பற்றியே சதா சிந்தனை. அப்படச் செய்து இருக்கலாம் இப்படிச் செய்து இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது அவருக்கு. நேரம் போகாமல் ஜியோ உதவியுடன், படிப்பது, நோக்கிரியில் வேலை தேடுவது என்று இருப்பார். வேலை தேடுவது என்றால் சும்மா இல்லை. அவருக்கு நன்கு தெரிந்த அத்தனை வகையிலும் உள்நாடு வெளிநாடு என்று முயற்சித்து கொண்டு இருப்பார். ஒரே வெறுப்பு.

அன்று அப்படியே இடையில் யாஹூ நோட்டிபிகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு நேர்முக தேர்வு வந்திருந்தது அவருக்கு. ஹைதராபாத் கூப்பிட்டிருந்தனர். அவர்கள் கம்பனிக்கு புரோபைல் மேட்சாகவில்லை பிறகு எதற்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என அவருக்கு குழப்பமாக இருந்தது அதுவும் ஒரு நாள் பொழுதில் ஹைதராபாத் செல்ல வேண்டும். விருப்பமில்லை. பெருமையாக மனைவியிடம், ஒரு நேர்முக தேர்வு ஹைதராபாத்தில், என்றதுதான் தாமதம், ‘எப்போது?’ என்று கேட்டுவிட்டு, ‘உடன் கிளம்புங்கள்’, என்று சொல்லிவிட்டாள்.

இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை. பின் விளைவுகள் மோசமாக ஞாபகம் வந்தது அவருக்கு. போய்த்தான் ஆக வேண்டும். பிறகு அவள் ஏதேனும் சாதாரணமாக சொன்னாலும் புத்தி மரமேறிவிடும், குத்தி காட்டுவதாக எண்ணம் ஏற்படும். மொபைலில் ஹாட் ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப்பில் இணைத்து குரோமில் டிக்கெட் தேட ஆரம்பித்தார். ரயில் டிக்கெட் ஒன்றும் கிடைக்கவில்லை. வெயிட்டிங் லிஸ்ட் நூறைத் தாண்டி காண்பித்தது. விமானம் இருக்கா எனப் பார்த்தார். காலையில் இருந்தது, கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். ஆம்னி பஸ் இருக்கா எனப் பார்த்தார். கட்டுப்படியாகும் செலவில் இருந்தது. ஆம்னியில் கோயம்பேடுவிலிருந்து ஹைதராபாத்திற்கு இரவு 8 மணி வண்டிக்கு புக் செய்து விட்டார். .பரபர என மனம் கணக்கு போட, ஷோல்டர் பேகில் வேண்டியவைகளை எடுத்து வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது மதியம் 1 மணி.

பஸ் நிறுத்ததில் நேரம் கடந்து கொண்டு இருந்தது. சென்னை செல்லும் அரசு பேருந்து வந்ததும் நிறுத்தி பாண்டி டிக்கெட் எடுத்து கொண்டார். பஸ் காலியாகதான் இருந்தது. வழியில் எங்கும் நிற்காமல் பின் மதியம் 2.40 கடலூர் வந்திருக்கிறது, தாராளமாக போதுமான நேரம் இருக்கிறது, என்று நினைத்தார். பாண்டி வரும்போது 3.30. இந்திராகாந்தி நிறுத்தத்தில் இறங்கி வேறு பஸ் மாறலாமா என்று யோசித்தவர், இறங்கவில்லை. பாண்டி பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி வேறு பஸ் முயற்சித்தார். ஏ .சி வண்டி நிரம்பி விட்டது. அடுத்த அடுத்த வண்டிகளும் நிரம்பி நின்றன. இனி நின்றால் சரி வராது என வந்த வண்டியிலேயே ஓடி ஏறிக் கொண்டார்.

கண்டக்டரிடம், ‘சார் எத்தனை மணிக்கு கோயேம்பேடு போவும்?” எனக் கேட்டார்.

7.15 என்றதும் டிக்கெட் வாங்கி அமர்ந்தார். பத்து வருட பழைய பஸ். சீட் எல்லாம் நெட்டுக் குத்தலாக இருந்தது. கண்டக்டர் ஒவ்வொரு நிறுத்தமாக சென்னை, பெருங்களத்தூர், மருவத்தூர், திண்டிவனம் என்று இறங்கி வந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஐன்னலோர காற்று முகத்தில் படவும், அசதி, உறங்கி விட்டார். ஒரு நினைவும் இல்லை அவருக்கு. அப்புறம் கசகசப்பில் விழிப்பு வந்தபோது பஸ் திண்டிவனத்தில் நின்று கொண்டு இருந்தது. இருந்த கொஞ்சம் பேரும் இறங்கி விட்டனர். கண்டக்டர் மருவத்தூர், செங்கல்பட்டு எனக் கூப்பிட ஆரம்பித்தார்.

ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டிய வெள்ளரிப் பிஞ்சுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், வெவித்த நிலக்கடலை 10 ரூபாய், என வாங்கிக் கொள்ள சொன்னார்கள். ஐம்பதை நெருங்க இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. வயதுக்கு உரிய எல்லா வியாதியோடும் அமர்ந்திருந்த அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்டனர். இப்போது யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே, ஏழைகள் இப்படியா கஷ்டப்படணும், மழை வந்தால் வேறு வேலைக்கு போவார்கள், என்று நினைத்தார் கணபதி தம்பி. பாவம் வேர்வையில் வாடி வதங்கிப்போய் போய் ஆண்கள் தலையில் தொப்பியோடும் பெண்கள் வெறும் தலையோடும் கையில் இருப்பதை வரும் பஸ்கள் நிற்கும்போது ஓடி ஓடி வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

வெய்யில் மிகக் கடுமையாக இருந்தது. யாராவது வாங்க மாட்டாங்களா எனத் தோன்றியபோது, பஸ் வழிச் சீட்டுகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

எல்லோருக்கும் அதிக கஷ்டமில்லாமல் நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இப்படியா கஷ்டம் கொடுப்பார். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் வழியில் பார்த்து விட்டால், ஏன் வேலைக்கு போகவில்லையா, என்று கணபதி தம்பியை பார்த்து கத்தியைச் சொருகி எடுக்கிறார்கள். அவர் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார், எங்குமே வேலை இல்லை. சுதாரிப்பதற்குள் அடுத்த கேள்வி, உடம்பு சரியில்லையா, என்று. ஆத்திரம் வந்தது. ஒன்றும் நினைக்க வேண்டாம் என எதிரில் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் மணி பார்ப்பதுமாக இருந்தார். காரணம் இல்லாமல் பஸ்ஸின் வேகம் குறைவதும் பிறகு கூடிச் செல்வதுமாக இருந்தது. கூடுவாஞ்சேரி வரும்போது 6 மணி. அவ்வளவு டிராபிக் ஐாம். டிரைவரிடம் தயங்கிக் கொண்டு அவரது நிலையை, அதாவது ஹைதராபாத் வண்டி 8 மணிக்கு, என்று சொன்னார்.

“சார் முயற்சிக்கிறேன். எனக்கு 7.25 க்கு டிரிப் திரும்பவும். இங்கே பாருங்க ஒரு ஆள் போவதற்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். இவர்களால்தான் இந்த மாதிரி நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனை பஸ் விட்டு என்ன பிரயோசனம்? சார், நீங்க ஒன்னு செய்யுங்க. பதட்டப்படாம ஆம்னிகாரனுக்கு போன் போடுங்க. 10 மணி வரைக்கும் சீட் ஏத்துவானுங்க, ரோகினி தியேட்டர்ட்ட,” என்றார். டிரைவரின் நிதானம் கலந்து ஓட்டும் லாகவம் புன்னகையுடன் அந்த பண்பு அபூர்வமாக தெரிந்தது

ஆம்னி ஆபீஸ்க்கு கணபதி தம்பி போன் செய்தார். ஆம்னிகாரனின் போன் தொடர்ந்து என்கேஜூடுவாகவே இருந்தது. ஒன்றும் செய்வதற்கு இல்லை. சாலை முழுவதும் விதவிதமான கார்கள், மணல் லாரிகள், பஸ்கள் நின்று கொண்டு இருந்தன. வண்டி எடுத்து திரும்ப நிற்கும்போது எல்லாம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு கணபதி தம்பி தவிப்பதைப் பார்த்த டிரைவர் முடிந்த அளவு விரட்டியும் ஹாரன் அடித்துக் கொண்டும் ஓட்டி வந்தார். அங்கிருந்து கோயம்பேடு வருவதற்குள் 8 மணி ஆகி விட்டது. இடையில் எதிர்பார்த்த ஆம்னிகாரனின் போன் வந்தது கணபதி தம்பிக்கு. தனது நிலையைச் சொல்லி ரோகினி தியேட்டரில் இறங்கி கொண்டு டிரைவருக்கு, நன்றி, நன்றி, சார், என தன்னையறியாமல் இரண்டாவது முறையும் சொன்னார்.

ஹைதராபாத் செல்வதற்கான பிக்கப் பஸ் 9 மணிக்குதான் வந்தது. ஏறியதும் சிறிது நிம்மதி அவருக்கு அருகில் இருந்தவரிடம் சினேகமாக புன்னகைத்தார்.

நீங்க ஹைதராபாத் தான, என்று இந்தியில் கேட்டார். ஆமாம், என்றதும் “நான் முதல் முறையாக ஹைதராபாத் செல்கிறேன் எனக்கு தெலுங்கு தெரியாது ஒரு நேர்முக தேர்வு இருக்கிறது நீங்கள் கொஞ்சம் இந்த முகவரியை பாருங்கள்- பாலநகர், இன்டஸ்ரியல் எஸ்டேட், ஹைதராபாத். இந்த இடம் வந்ததும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்,” என்றார். வாங்கிப் பார்த்த அவர், நான் இதற்கு முன்பே இறங்கி விடுவேன், என்றதும், பக்கத்தில் இருந்தவர், நான் அந்த இடத்தைத் தாண்டிதான் போகிறேன். கவலைப்பட வேண்டாம், சொல்கிறேன் என்றார். கணபதி தம்பி அவருக்கும் ஒரு வணக்கம் வைத்தார் நன்றியுடன்.

ரெட்கில்ஸில் வேறு பஸ்ஸில் மாற்றி விட்டார்கள். ஏசி வால்வோ சிலிப்பர் போர்த்திக் கொள்ள பிளான்கேட் என நவீனமாக இருந்தது. ஹைதராபாத் காரருக்கு இருக்கை மிகப் பின்னால் போய் விட்டது. பஸ்ஸில் சவுண்ட் அதிகமாக படத்தைப் போட்டு விட்டனர். ஒரே தொல்லை. தெலுங்கு சினிமா. மனம் ஒன்றி பார்க்க முடியவில்லை அவருக்கு எல்லாம் அடிதடி படம் இரைச்சல் ஏசி குளிருக்கு பிளாங்கேட்டால் காதை மறைத்து போர்த்தி கொண்டார் .இந்த வேலை கிடைத்தால் அடுத்த முறை விமானத்தில்தான் செல்ல வேண்டும் கற்பனையில் ஆழ்ந்தார்
எப்போது உறங்கினார் என தெரியவில்லை

சத்தம் கேட்டு அவருக்கு விழிப்பு வந்த போது காலை 5மணி ஹைதராபாத் சிட்டி 100 கி மி என போர்டில் தெரிந்தது இன்னும் 2 மணி நேரத்தில் வந்து விடும் நல்ல தூக்கம் ஆதலால் புத்துணர்ச்சியாக நேர்முகத்தேர்வு எப்படி இருக்கும் ஒன்றும் அதற்காக தயாராகவில்லையே என்று தனது தற்போதைய ரெஸ்யுமை மனக்கண்ணில் கொண்டு வந்தார். செய்த புராஜக்ட் வேலையெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு கொண்டு வந்து வேலைகளை நினைவுபடுத்திக்கொண்டார். அவற்றில் மிகப்பெரிய வேலைகள், நடுவாந்திர வேலைகள், சிறிய வேலைகள் என வகைப்படுத்தி கொண்டு வந்து கேள்விகள் எப்படி இருக்கும் பதில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்த்தார். கடைசியாக நடந்த நேர்முகம் எல்லாம், 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உங்களுக்கு நீங்களே செய்த வேலைகளை பற்றி சொல்லுங்களேன், என்பார்கள். கணபதி தம்பிக்கு அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு பிடி கிடைக்கும். பிடித்த மாதிரி சொல்வதற்கு ஓரளவு தெரிந்தும் வைத்து இருந்தார். அதையும் தாண்டி நிராகரிக்கப்பட்டும் இருக்கிறார், தானும் நிராகரித்து இருக்கிறார். ஆனால் இப்போது எந்த வீம்பும் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நடிப்புதான், அவர்களுக்கு பிடித்த மாதிரி இன்று நடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

பஸ் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. கதிர் அறுத்த நெல் வயல்கள் கோரைப்பாயை விரித்துப் போட்டது போல் சின்ன சின்ன கட்டமாக தெரிந்தது ஹைதராபாத் இது வரை வந்தது இல்லை, ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சின்ன வயதிலேயே அவருக்கு இருந்தது. காரணம் சிகரெட் அட்டைதான். அப்போது சிகரெட் அட்டை வைத்து கோலி விளையாடுவார். அவரது அப்பா வில்ஸ் பிளைன்தான் பத்த வைப்பார். அந்த அட்டைப் பெட்டியை தந்தால் 4 சார்மினார் அட்டை தருவான் பிச்சுவா. அவன்தான் சொன்னான் அட்டையில் இருந்த படத்தைக் காட்டி,இது அல்லா கோயில்டா, ஒரு நாளைக்கு பார்க்கணும்டா, என்றது இன்னும் மனது ஓரம் அப்படியே இருக்கிறது அவருக்கு. சார்மினார் எங்கு இருக்கிறது என்பதை சின்ன வயசுலேயே தெரிந்து கொண்டார்.

பஸ் சிட்டியில் நுழைந்து ஒவ்வொருவராக இறக்கி விட ஆரம்பித்ததும் கணபதி தம்பி திடீரென்று ஞாபகம் வந்து நண்பரை பார்கிறார், அவரும பார்க்கிறார். கிட்டே நெருங்கி, எங்கு இறங்க வேண்டும், என்று கேட்டதும் அந்த இடம் தாண்டி வந்து விட்டோம். நீ முதலிலேயே கேட்காமல் இப்ப வந்து கேட்கிறாயே, என்று அவர் கேட்டதும் கணபதி தம்பிக்கு, ச்சை இப்படியா ஏமாறுவோம், பகல் கனவில் இருந்தால் இப்படிதான். நாமாகவே டிரைவரை கேட்டு இருக்கலாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை நமது முட்டாள்தனம்தான் என்று வந்த நிறுத்தத்தில் இறங்கி கொண்டார்.

நேரமோ பசியோ அவருக்குத் தெரியவில்லை, முதலில் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை தவிர. சுற்றிப் பார்த்தார் எல்லோரும் அவசரமாக வரும் பஸ்ஸில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பக்கத்தில் இருந்த கடைகளில் வியாபாரம் அதிகம், டிபன் டீ என பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர். யாரிடம் கேட்கலாம் என ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே வந்தபோது தூரத்தில் தனியாக அமர்ந்து ஷூவுக்கு பளபள என பாலிஷ் போடுபவரைப் பார்த்தார் . கை மித வேகத்தில்ஷூ வை நேர்த்தியாக பளபளப்பாக ஆக்குகிறது. எல்லா கால்களையும் பார்க்கிறார் அவர், நிமிரவே இல்லை.

கணபதி தம்பி நேராக அவரிடம் சென்று இந்தியில் முகவரியைச் சொல்லி எப்படி செல்வது என வழி கேட்டார். சிறிது நேரம் ஒன்றும் பதிலில்லை. பிறகு, சென்னையிலிருந்து வருகிறேன் எனக்கு தெலுங்கு பேச தெரியாது இந்தி பேச வரும் படிக்க வராது, என்றதும் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போ, வர வண்டிய கேளு, என்றார் பாலிஷ் போட்டுக் கொண்டே, மிக எரிச்சலாக இந்தியில்.

சிக்னல் இல்லாத ஹைவேயை தாண்டுவது கஷ்டமாக இருந்தது. அவ்வளவு வாகனங்கள் நிற்காமல் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாக சாலை தாண்டி பாலநகர், பாலநகர் என கேட்க ஆரம்பித்தார். வரும் வண்டிகள் எல்லாம் உதட்டை பிதுக்கி காண்பிக்கின்றனர். எங்க போகவேண்டும், என தெலுங்குலேயே கேட்கின்றனர். பத்து மணி. அவர் சோர்ந்து போக ஆரம்பித்து விட்டார். ஒரு வெள்ளை டாட்டா வேன் வந்தது. காலியாக இருந்ததைப் பார்த்து டிரைவரிடம், சென்னையிலிருந்து வருகிறேன், எனக்கு பாலநகர் போகவேண்டும் ஒரு இன்டர்வியூ இருக்கு, கொஞ்சம் உதவ முடியுமா, என்றார் இந்தியில்.

டிரைவர் கணபதியின் முகத்தையும் தோரணையையும் ஒரு முறை பார்த்தார். முன்னாள் வந்து உட்கார், என்று சொல்லி விட்டு டிக்கெட் ஏற்ற ஆரம்பித்து இரண்டு மூன்று பேர் ஏறியவுடன் வண்டியை எடுத்தார். முகவரியை திரும்பக் கேட்டு சரியாக அதே இடத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.

அவர் எதிரே அந்த அடுக்கு மாடி கட்டிடம் நின்றது, கம்பெனியின் பெயர் தாங்கி. செக்யூரிட்டி செக்கப் முடித்து உள்ளே விட்டனர். முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் அவர்கள் ஐம்பது பேர் ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரு அப்ளிகேஷன் பார்ம் தந்து, தகுதி, அனுபவம், சம்பளம், விபரங்களை நிரப்பி வாங்கிக் கொண்டனர். யாரை முதலில் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் எச் ஆர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் எல்லோரும். எச் ஆர் கம்பெனியை பற்றி ஒரு சின்ன அறிமுகம் என்று கையை காட்டினார். அவரது ஐூனியர் அந்த ஹாலில் இருந்த அத்தனை லைட்டையும் ஆப் பண்ணி விட்டு புரோஐக்டரை ஆன் பண்ணினார்.

ஒரு துளி வெளிச்சம் பொட்டாக திரையில். பிறகு குளோசப்பாக காட்சி திரையில் விரிந்த போது ஒரு சிறுவன் விளக்கு ஒளியில் பாடபுத்தகம் வாசிப்பது தெரிந்தது. ஒரே ஒரு மின்மினி பூச்சி அந்த விளக்கு ஒளியை நோக்கி வந்தது. சிறுவன் படிப்பை விட்டு விட்டு மின்மினி பூச்சியை பார்த்தான். அதைப் பிடிக்க துரத்தினான். அப்போது எண்ணற்ற பூச்சிகள் சேர்ந்து கொண்டன. சிறுவன் துரத்திச் செல்கிறான். பாதை முடிந்து மிகப்பெரிய பள்ளம், எதிரே. சிறுவன் தயங்கிப் பார்க்கிறான். பள்ளத்தில் எல்லாம் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம், இப்போது வீட்டில் எரியும் விளக்காக தெரிகிறது. இருட்டு முழுவதும் அகன்று வெளிச்சம் மொத்தமும் வீடாகவும், ரோடாக, பாலமாக, டேமாக, மெட்ரோவாக, இன்டஸ்ரியல் கன்ஸ்ட்ரக்ஷனாக, பவர் மற்றும் சோலார் பிளாண்டாக மாறும்போது சிறுவன் வளர்ந்து கம்பெனி லோகோ முன் நிற்கிறான், முதலாளியாக.

ஐந்து நிமிட காட்சியில் கட்டிப் போட்டு என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டனர். ஆழ்ந்த பெருமூச்சு சத்தங்கள் கேட்டது. மனம் தனக்குத் தெரிந்த ப்ளஸ் மைனஸ்களை கணக்கு போட ஆரம்பித்தது தானாகவே, கணபதி தம்பிக்கு. அருகே இருந்தவர்களும் குழப்பமாக ஆலோசிக்க ஆரம்பித்தனர். பேஞ்சூத் என்று, சத்தம் திரும்பி பார்த்தார்

இரண்டு பேர் தங்களுக்குள் இந்தியில் திட்டிக் கொண்டே, எங்கேயேயுமே வேலை இல்லை, நீ எங்கேயிருந்து வருகிறாய், என்றனர். சென்னை, என்றார் கணபதி தம்பி. பச் என்று சத்தத்தோடு சரி, மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பத்து பத்து பேராக குழுவாக அழைத்துச் சென்றனர். தனது முறைக்காகக் காத்திருந்தார்.

நேர்முகம் முடியும்போது மணி 12.30. வெளியில் வந்தால் இரும்பையே உருக்கும் வெய்யில். காற்றே இல்லை. கண்கள் சிவந்து எரிய ஆரம்பித்து விட்டன. செம்மஞ்சள் நிறத்தில் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் பெரிய கூடைகளில் அடுக்கி இருந்தனர். புள்ளியாக வைத்த தரை சக்கரம் போல் தெரிந்தது. கடும் வெய்யிலுக்காக சாலையோரம் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தனர்.

ரிட்டன் பஸ் 8 மணிக்குதான். சார்மினாரை பார்த்து விடுவோம், என காத்திருந்து பஸ் ஏறி அங்கு சென்றார். வழி யெங்கும் நவாப் காலத்து பழமையான கட்டிடங்களும் நவீன கட்டிடங்களும் மால்களும் மெட்ரோ பாலமும் வந்து கொண்டே இருந்தது. கராச்சி சுவிட் ஸ்டால்கள் இருந்தன. மக்கள் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலையைப் பார்க்க அலைந்து கொண்டு இருந்தனர்.

மறுநாள் பின்மதியம் வீடு திரும்பினார் கணபதி தம்பி. இரண்டு நாள் தொடர்ந்து பயணத்தினால் உடம்பு வேதனை. நாற்காலியில் அமர முடியவில்லை அவருக்கு. ஷோல்டர் பேக்கை வைத்துவிட்டு சட்டையோடு குப்புற படுத்தார். சின்ன மகனைக் கூப்பிட்டு மிதித்து விடச் சொன்னார், நடு முதுகிலிருந்து பிருஷ்டம் வரை. மனைவி குடிக்க தண்ணீரும் ‘ டீ” யூம் கொடுத்தார். குடித்து விட்டு குளித்து வரும் வரை முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் வீட்டினர்.

உடம்பு வலி போக்கும் சூப் ஆவி பறக்க எதிரே வைத்துவிட்டு, ஆறுவதற்கு முன் குடியுங்கள், என்றதும் மிளகின் நெடி நாசிக்கு இன்பமாக இருந்த தருணத்தில் மனைவியின் ஆர்வம் தெரிந்தது அவருக்கு.

இரண்டு பேர் இண்டர்வியு செய்தார்கள், என்று ஆரம்பித்தார்.

ம், சொல்லுங்க, என்றார் கணபதி தம்பியின் மனைவி.

அதில் ஒருவர் பெண் நடிகை சரிதா போல் இருந்தார். முதலில் உங்களை பற்றி கூறுங்கள், என்றார் அவர்.

சூப்பை ஒரு முறை உறிந்து கொண்டார். காரத்தில் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு, அடுத்து வேலையை பற்றி கேட்டார்கள், என்றார். எங்கல்லாம் வேலை பார்த்திருக்கிறீர்கள், என்றும் என்ன மாதிரி வேலை செய்திருக்கிறீர்கள் என்றும், ஆண் மட்டுமே தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார் என்று சொன்னார் கணபதி தம்பி.

இதுவரை பார்த்த வேலைகளில் அவர்கள் கம்பெனிக்கு உகந்தவைகளை விரிவாக .நம்பக் கூடிய வகையில் சொல்லிவிட்டு,எங்கு பிரச்சினைகள் வரும், அதை எப்படி சரி செய்யலாம், என கூட சொன்னேன், என்றார் கணபதி தம்பி. எல்லா மிகப் பெரிய வேலைக்கும் ஸ்பெக்க்கும் திட்டமிடலும் பாதுகாப்பு பற்றிய டாக்குமெண்ட்ஸ் பார்த்தால் செய்துவிட முடியும் என்றும் பிறகு அவர்கள் கம்பெனி செய்யாத வேலைகளை அவர் செய்ததாக சொன்னபோது, சில சமயம் சரிதா அலட்சியமாகவும் தன் அகன்ற கண்களால் வியப்பாகவும் பார்த்தார். .அதைப் பார்த்து, கணபதி தம்பி சரிதாவைப் பார்த்து ஆவலாக, நீங்க ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க, என்றார்.

அது வரை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்த சரிதா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார், என்று சொன்னார் கணபதி தம்பி.

என்ன, என்று ஆவல் தாங்காமல் கேட்டாள் கணபதி தம்பி மனைவி.

“மிஸ்டர் கணபதி, நீரு தமிளா? தெலுங்கு தெலுசா?“

இன்று

நரோபா

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது
சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள்
தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள்
புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது
எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு குடமுழுக்கு
விராட் கோலி சதமடித்தார்
ஒன்றுவிட்ட பெரியப்பா இறைவனடி சேர்ந்தார்
குட்டிப் பயலுக்கு வயிற்றுப்போக்கு
ஒரு கதையையும் எழுதினேன்
அதுபாட்டுக்கும் எதன் மேலும் விழாமல்
நடந்து சென்று அடுப்பு சாம்பலில் சுருண்டு படுத்து கொண்டது.

இலக்கியம் இனியும் என்ன செய்ய முடியும்? – கியோர்கி கொஸ்போதினோவ்

(This speech is translated with the kind permission of Georgi Gospodinov and the Jan Michalski Foundation for Writing and Literature for non-commercial publication specifically at Padhaakai.com. No other use may be made of this material without prior permission of the author and the publisher)

ஆம், நான் மனவெழுச்சி மிக்க நிலையில் இருக்கிறேன். அதற்கு முன் நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பரிசை நிறுவிய துணிச்சலுக்காக வெரா மிசால்ஸ்கிக்கு நன்றிகள், உலகில் நானிருக்கும் பகுதியில் வெளிவந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மரியாதைக்குரிய தேர்வுக் குழுவினருக்கு நன்றிகள். இந்தப் புத்தகம் வாசிக்கப்பட காரணமாக இருந்த என் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றிகள் – பிரெஞ்சு மொழியாக்கம் செய்த மேரி வ்ரினா-நிகொலோவுக்கு நன்றிகள் (அவர் இங்கு இருக்கிறார்), ஜெர்மன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் சிட்ஸ்மானுக்கும் ஆங்கில மொழியாக்கம் செய்த ஏஞ்சலா ரோடலுக்கும் நன்றிகள். என் பதிப்பாளர்களுக்கும் நன்றிகள்- இன்டர்வால்ஸ், ட்ரோஷ் வெர்லக், ஓப்பன் லெட்டர் புக்ஸ். என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த இறுதிப் பட்டியலில் ஜூலியன் பார்ன்ஸ், ஜெவாட் க்ரஹாசன், ஆதிஷ் தசீர், நவீத் கெர்மானி ஆகியவர்களுடன் நானும் இடம் பெற்றிருப்பது என்னை பெருமைப்படுத்துவதாக உணர்கிறேன். இங்கு கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றிகள். என் மனைவி, பில்யானாவுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும், என் மகள் ரயாவுக்கும் நன்றிகள். இந்த நாவலை நான் முடிக்கும்போது அவளுக்கு ஐந்து வயது ஆகியிருந்தது. கதை ஓடாதபோது, அவள் பூனை அல்லது டினோசர் கதை சொல்லி எனக்கு உதவ எப்போதும் தயாராகவே இருந்தாள். ஒரு நாள் மாலை, ஏன் என் புத்தகங்களின் பெயர்கள் எப்போதும் சோகமாக இருக்கின்றன என்றே கேள்வியை ரயா கேட்டாள்- அடுத்த நாவலின் பெயர் உற்சாகமானதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் – “ஆனந்தத்தின் இயற்பியல்,” அல்லது அது போல் ஏதாவது. இதுவரை அந்த வாக்குறுதியை நான் நிறைவு செய்யவில்லை.

இந்தப் புத்தகம், இதுவே உங்கள் முன் நான் பேசும் பெருமையை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இந்தப் புத்தகத்தின் பெயர் “துக்கத்தின் இயற்பியல்”. இதன் பெயரை மாற்றும்படி ஒரு பதிப்பாசிரியர் நட்பார்ந்த முறையில் அறிவுரை அளித்தார். இப்படி ஒரு பெயர் கொண்ட நாவலை யாரும் படிக்க விரும்ப மாட்டார்கள் என்பதுதான் காரணம். துக்கம் விற்பனையாகாது. எப்போதாவது சோகம் மிகுந்த மெர்சிடஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? நான் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. “Тъга”- இப்படித்தான் துக்கத்துக்கான சொல் என் தாய் மொழியில் ஒலிக்கிறது. இந்தச் சொல் சிறியது. ஆனால் இது விவரிக்கும் நிலை நீண்டது, அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்கப்பட முடியாதது. (இப்போது நீங்கள் மெல்ல ‘Тъ-га” என்று சொல்ல முயற்சி செய்தால் உங்கள் குரல்வளையில் எலும்பு அசைவதை உணர முடியும். உங்கள் தொண்டைக்குள் எதுவோ செல்கிறது, முழுங்குவது போன்ற ஒரு முயற்சி, அடக்கிக் கொள்வது போன்ற ஒரு முயற்சி இது).

இந்த நாவலை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஒரு காட்சி வைத்திருந்தேன். அது என் குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒன்று. 1970களில் ஒரு சிறுவன், முடிவற்ற மதியப் பொழுதுகளில் அந்தி போல் இருண்ட நிலவறையில் தங்கியிருக்கிறான்- அவன் இருளை விட்டுத் திரும்பி நிற்கிறான், அவனது முகம் சன்னலை நோக்கியிருக்கிறது. அந்த அறையின் சன்னல், நடைபாதை உயரத்தில் இருக்கிறது. அவனைக் கடந்து செல்லும் கால்களையும் பூனைகளையும் அந்தச் சிறுவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும், தனிமையில், இனம்புரியாத ஒரு கைவிடப்பட்ட உணர்வோடு. அப்போது மினோடர் தோன்றியது- தொன்மங்களில் நாமறிந்த ராட்சதன் ஆவதற்கு முன் தரைக்கடியில் உள்ள சிடுக்குகள் நிறைந்த பாதையில், எருது முகம் பூட்டப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தை. 1970களின் சிறுவனும் குழந்தை-மினோடரும் ஒரே, பொதுத் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள். கைவிடப்படவர்களின் துயரம். நமக்குள் பூட்டப்பட்டிருக்கும் மினோடர் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத விரும்பினேன், நாம் வாழும் நூற்றாண்டைப் பற்றி அதன் மதியங்கள் அந்திப்பொழுதுகள் அனைத்தினும் கண்ட வகையில், பிறர் கதைகளுள் நுழையக்கூடிய இயல்பு கொண்ட, பிரம்மாண்டமான புரிந்துணர்வு கொண்ட ஒரு சிறுவனின் அச்சங்களைக் கொண்டு.

துக்கத்தில் உலக சாம்பியனாய் விளங்கும் தேசத்திலிருந்து வருகிறேன். உலகின் மிகச் சோகமான இடம் – வெவ்வேறு தேசங்களில் நிலவும் மகிழ்ச்சியுணர்வை ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கும் ஆய்வின் அடிப்படையில் தி எகானமிஸ்ட் இதழ் இவ்வாறுதான் பல்கேரியாவை அழைத்தது. இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, இத்தனை சோகமும் எங்கே வடிந்து செல்கிறது என்று நினைத்துப் பார்த்தேன்- அது ஐரோப்பாவெங்கும் வெள்ளமாய் பாய்கிறது, ஒரு வகையில் உலகமெங்கும் கூடத்தான். நீண்ட காலமாய் தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கும் துக்கம், மறைக்கப்பட்டிருக்கும் துக்கம் வெடிக்கத் தயாராய் இருக்கும் ஆபத்தான விஷயம் என்பதை ஒரு எழுத்தாளனாக, நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் இது விடுவிக்கப்பட்டாக வேண்டும், கதைக்கப்பட வேண்டும், புனைவுகளைக் கொண்டு அடக்கப்பட வேண்டும். வேண்டுமானால், அதை நாம் கொண்டாடி வழியனுப்பலாம் என்று வைத்துக் கொள்வோம். இது இலக்கியத்தின் திறன்களில் ஒன்று.

இன்றுள்ள நம் உலகம் போன்ற ஒரு இடத்தில் இப்போதும் இலக்கியத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

அதனால் எளிய விஷயங்கள் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றுவது போன்றவை. நீங்கள் கதை சொல்கிறீர்கள், அந்த வகையில் முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள். இதை நாம் ஷெஹராஜேட் மூலம் நன்றாக அறிகிறோம்- உயிருக்கு பதில் கதைகள் (எளிய ஒப்பந்தம்). பலியாக வேண்டியவள் கதை சொல்கையில் அவள் வேறொரு, பாதுகாப்பான மண்டலத்தில் இருக்கிறாள். கதை முடியாதவரை அவள் வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு. இதுதான் இலக்கியத்தின் சிறப்பு உத்திரவாதம். இதுதான் கதை சொல்லும் மெலியவர்களின் ஆற்றல். குழந்தையாக இருந்தபோதே எனக்கு இதை உள்ளுணர்வு உணர்த்தியிருக்க வேண்டும். ஏனென்றால் தன்னிலை முன்னிலையில் சொல்லப்பட்ட புத்தகங்களையே நான் வாசிக்கத் தேர்ந்தெடுத்தேன். அவனோ அவளோ, கதை சொல்லிக் கொண்டிருக்கும்வரை சாகப்போவதில்லை என்ற எளிய விதியை நான் அறிந்திருந்தேன். கதை சொல்கிறேன், எனவே இருக்கிறேன். Narro, ergo sum.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? தோற்பவர்களின் பக்கம் நிற்க முடியும். நம் காலம் போல், அப்படி இருப்பது குறிப்பாக அவசியப்படும் காலங்கள் இருக்கின்றன- வலிமையற்றவர்கள், காயப்பட்டவர்கள், பிரச்சினையில் இருப்பவர்கள், ஹோமோ ஆங்க்சியஸ், இவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நல்ல இலக்கியத்தின் அடிப்படை இயல்பாக இதைக் காண்கிறேன். வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோற்றுப் போனவர்கள் கதை சொல்கிறார்கள். அவை கூடுதல் சுவாரசியம் கொண்டவை, உண்மைக்கு இன்னும் நெருக்கமானவை.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? நம் ரசனையை மேம்படுத்தலாம். இதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல. ரசனையுள்ள மக்கள் அற்ப பிரசாரத்துக்கு அவ்வளவு சீக்கிரம் வசியப்பட மாட்டார்கள். அரசியல் கிட்ஷை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இந்த இடத்தில் போலிஷ் கவிஞரான ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்டின் “ரசனையின் ஆற்றல்’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் சிலவற்றை நினைவுறுத்துகிறேன்:

அதற்கொன்றும் அவ்வளவு ஒழுக்கம் தேவைப்படவில்லை
நம் மறுப்புக்கும் மாற்று கருத்துக்கும் எதிர்ப்புக்கும்
தேவைப்பட்ட துணிவு ஒரு துளி இருந்ததுதான்
ஆனால் அடிப்படையில் அது ரசனை சார்ந்த விஷயம்
ஆம், ரசனை…

செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், அரசியல் அறிக்கைகள், சந்தைகள் அல்லது வங்கிகளை மட்டும் கொண்டு உலகை விளக்க முடியாது என்பதை மெல்ல மெல்ல நாம் அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் பொருளாதாரத்தாலும் அரசியலாலும் ஆனவர்கள் அல்ல. நாம் துக்கத்தாலும் தயக்கத்தாலும், அவற்றைப் போன்ற மெல்லிய, விளக்க முடியாத, சில சமயம் தர்க்கத்துக்குப் பொருந்தாத விஷயங்களாலும் ஆனவர்கள். இங்குதான் இலக்கியம்- இப்படிச் சொல்லலாமென்றால்- அதன் நிபுணத்துவத்தின் இடம் வருகிறது. அரசியல்வாதிகள் இன்னும் அதிக அளவில் செகாவையும் போர்ஹெசையும் வாசித்தால் நம் பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

பரிவுணர்வை எழுப்பும் கதைசொல்லல் நமக்குத் தேவைப்படுகிறது. தனி வாழ்விலும் அரசியலிலும் இன்று பரிவுணர்வு முக்கியமாக இருக்கிறது. அதுதான் கடவுள் துகள் என்று சொல்லலாம். மானுட உலகின் பசை, ஹிக்ஸ் போஸான் (அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் நாம் இருப்பதால்). ‘துக்கத்தின் இயற்பியல்’ இலக்கணப் பிழை கொண்ட ஒரு சொற்றொடருடன் துவங்குகிறது, ஆனால் அதன் பொருள் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பரிவுணர்வை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன்: நாம் உள்ளேன், அல்லது நான் உள்ளோம்.

நீஸ் நகரில் கூட்டத்தில் புகுந்து ஓடிய ட்ரக்கை இலக்கியமும் பரிவுணர்வும் நிறுத்த முடியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த ட்ரக்கினுள் ஏறிய மனிதனை பல ஆண்டுகளுக்கு முன் அவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அவன் வாழ்வுக்கு அவை வேறொரு பொருள் தந்திருக்கலாம், இது சாதாரண விஷயமல்ல, இதுதான் எல்லாம்.

உலகம் எங்கும் வெறுப்பும் பாதுகாப்பின்மையும் திரண்டெழுந்து ஆபத்தான அளவில் மையம் கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் அதை ஒரு பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கலாம். இது புதிதாய் தோன்றியுள்ள விரைவு ஊடகத்தால் எளிதில் பெரிதாகி வலுவடைகிறது. நம் கருத்துகளும் சொற்களும் கடும் தீவிரத்தன்மை கொள்கின்றன. நம்முள் மறைந்திருக்கும் இந்த உள்ளார்ந்த ஜிகாத்திசம் இன்று மிகவும் ஆபத்தான நிலைகளில் ஒன்றாகும். இன்று, பூகோள பரப்புகளை வெற்றி கொள்ள மட்டுமல்ல, மானுட பரப்புகளை வெற்றி கொள்ளவும் போர்கள் தொடர்கின்றன. மானுட இயல்புக்கு என்று மீறப்படக்கூடாத சில எல்லைகள் இருக்கின்றன. ஏனெனில், வரலாற்று நோக்கில், கோட்பாடுகளுக்கும் தேசங்களுக்கும் முன் மானுடம் இருந்தது. இன்றுள்ள புலம் பெயர்ந்தோர், துக்கங்களின் மகத்தான புலம் பெயர்தலின் ஒரு பகுதியினர். துக்கத்தின் புலம் பெயர்தலைக் குறித்து நாம் சிந்தித்து அதன் கதையாடல்களை விவரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு முறை என் மகள் தன் அறையில் ஆசிரியை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன் மிருக பொம்மைகளிடம், “பிள்ளைகளா, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதன்பின் அவற்றின் பின்னால் போய் நின்றுக் கொண்டு, “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்” என்று பதிலளித்தாள். அவள் இதை அறிந்து சொல்லியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். “நேற்றை விட நன்றாய் இருக்கிறோம்” என்றுதான் நாம் வழக்கமாய்ச் சொல்வோம். “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்,” என்று சொல்வது அதைவிட அதிக விழிப்புணர்வு கொண்ட ஒரு நிலையை உணர்த்துகிறது. நம் கடந்த காலத்தைவிட நம் எதிர்காலம் உறுத்தலாய் இருக்கக்கூடிய ஒரு புள்ளியில் நாம் உறைந்திருக்கிறோம். நம் நிகழ்காலத்தில் உள்ளதைவிட நம் கடந்தகாலத்தில் அதிக எதிர்காலம் இருந்தது.

நிதி நிலை, அரசியல், எண்ணை வளங்கள் வற்றிப் போதல் என்பது போன்ற புலப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அப்பால் கண்ணுக்குத் தெரியாத, அவற்றைவிட அச்சுறுத்தும் வேறொரு பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். அர்த்த சேகரங்களின் முற்றிழப்பு என்று அதை அழைக்கப் போகிறேன். கடும் எதிர்காலப் பற்றாக்குறை. எனவேதான் அர்த்தங்களை உருவாக்கும் கருவிகள் என்ற வகையில் இலக்கியத்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்று ஆற்றல் வளங்கள் போல். அல்லது யாரோ ஒருவருக்காவது ஆறுதல் அளிக்கக்கூடிய வளம். அல்லது ஒரு சிறு சூட்கேஸ், ஒவ்வொரு சமயத்துக்கும் தக்க கதைகள் கொண்ட அவசர உதவிப் பெட்டி. இது சாதாரண விஷயமல்ல. உலகின் கால அட்டவணை, “எதிர்காலம் ரத்து செய்யப்பட்டது,” என்று அறிவிக்கும் கணத்தை நம்மால் தள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

இலக்கியத்தைப் புகழும் இந்தச் சிற்றுரையின் முடிவில், இப்போதோ பின்னரோ, எல்லாமே இலக்கியத்துக்கு உரிய விஷயமாக மாறிவிடுகிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் துக்கங்களும் பிரச்சினைகளும்கூடத்தான். போர்ஹெஸ் மிகவும் நேசித்த மேற்கோள், மல்லார்மே எழுதியது, “உலகில் உள்ள எல்லாம் ஒரு புத்தகம் ஆகவே இருக்கின்றன”, என்று சொல்வது போல்தான்.

நன்றி நண்பர்களே, இவ்வுலகின் வாக்கியங்களில் ஒன்றில் சில நிமிடங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அவ்வுணர்வுக்கு நன்றிகள்.

© 2016 Fondation Jan Michalski

நன்றி – Fondation Jan Michalski 

h/t Specimen

(This is an unauthorised translation of the speech, “What can Literature still do ?” by Georgi Gospodinov”, originally published at Fondation Jan Michalski. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்