எழுத்து

வேரும் கனியும் – 2 : லோசாவை முன்வைத்து – நரோபா

நரோபா

படைப்புத்திறன் அளிக்கும் அழுத்தம், அதை விட்டு வெளிவர உள்ள வழிமுறைகள், எழுத்தாளனின் பொறுப்பு இவை எப்போதும் பேசச் சுவையானவை. மரியோ வர்கோஸ் லோசா எழுதிய ‘Letter to a Young Novelist’ எனும் நூலை வாசித்து கொண்டிருக்கிறேன். இளம் எழுத்தாளருக்கு லோசா எழுதும் கடிதங்களே இத்தொகுப்பு. ‘நாவல்’ எனும் வடிவம், அதன் சவால்கள் மற்றும் கூறுகளை லோசாவின் கடிதங்கள் விவாதிக்கின்றன. அத்துடன் பொதுவாக எழுத்தைப் பற்றியும் படைப்பாற்றல் பற்றியும் பேசுகின்றன. எழுத்து, எழுத்தாளன் பற்றி பேசும் லோசாவின் புத்தகத்தில் உள்ள முதல் கடிதத்தை மட்டும் கொஞ்சம் விரிவாக எழுதலாம். பிற கடிதங்கள் நாவல் எழுதும் முறைமை பற்றி விவாதிக்கின்றன.

எழுத்தின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்விக்கு லோசா, எழுத்து அளிக்கக்கூடிய இன்பமே அதன் பயன்மதிப்பு என்கிறார். எழுத்தே தனக்கு வாய்த்த ஆகச்சிறந்த நிகழ்வு என எழுத்தாளன் தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறான். எழுத்தையே தனது வாழ்க்கை முறையாக ஏற்கிறான். பிற அங்கீகாரங்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒருவன் எழுத்தாளன் ஆவதற்கு விதியோ கடவுளின் அருளோ அல்லது மரபணு அமைப்போ காரணம் என அவன் நம்புவதில்லை, எனினும் சார்த்தர் முன்வைப்பது போல் அது முழு சுய தேர்வு மட்டுமே என்பதிலும் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் லோசா. சுய தேர்வு முக்கியம்தான், ஆனால் அடிப்படையில் எழுத்தாளன் ஆவதற்கான சில அகச்சாய்வுகள் பால்ய பருவத்திலோ வளரிளம் பருவத்திலோ தென்படும் என்கிறார் அவர். விதவிதமான மனிதர்களை, சூழல்களை, நிகழ்வுகளை, வெவ்வேறு உலகங்களை அவர்கள் கற்பனை செய்வார்கள். இப்படியான கனவுள்ளவர்கள் பெரும்பான்மையினர் நிகழ் வாழ்வை துறந்து கற்பனையுலகில் வாழ்ந்து கதை படைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இங்குதான் சார்த்தர் முன் வைப்பது போல், சுய தேர்வு செயல்படுகிறது. கனவுள்ளம் கொண்டவர்களில் வெகுச் சிலரே தங்களை எழுத்தாளர்களாக ஆக்கி கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் லோசா.

ஏன் ஒருவன் கதை புனைய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ‘எழுத்து என்பதே வாழ்வுக்கு எதிரான கலகச் செயல்பாடு’ எனும் கருத்தை முன்வைக்கிறார். நிகழ் வாழ்க்கையின் போதாமைகளுக்கு எதிராக நிகர் வாழ்வை படைக்கிறான் எழுத்தாளன். பல எழுத்தாளருக்கு இது கலகம் என்றொரு பிரக்ஞைகூட இருக்காது. அப்படிச் சொன்னால் அந்த எழுத்தாளரேகூட மறுக்கலாம். இதைப் படிக்கும்போது எனக்கு சட்டென அசோகமித்திரன் நினைவுக்கு வந்தார். அவரிடம் போய் ‘நீங்கள் ஒரு கலகக்காரர்’ எனக் கூறினால், அதை அவர் ஏற்க மாட்டார்.

மேலும் லோசா, எழுத்து அதை பயின்றவனுக்கு சுகமும் நிறைவும் அளிப்பதில்லை என்கிறார். நிகழ் வாழ்வின் மீதான தீவிர அதிருப்தியின் விளைவாக புனைவுகள் விளைவதால் புனைவுகளும்கூட அசவுகரியங்களுக்கும் அதிருப்திகளுக்கும் காரணமாய் இருக்கின்றன. இந்நிலை எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்பதில்லை, நவீனத்துவத்தின் வழியாக நாமடைந்த சிந்தனை போக்குதான் இது எனும் பார்வையை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ‘அழகு’ குறித்து நிலவிய கருத்தியல் உருவாகக் காரணமாக இருந்த ஐரோப்பிய பெண்கள் சுய தேர்வாக நாடாபுழுக்களை (tapeworm) உண்டு உடல் மெலிந்து பலியானார்கள், எழுத்தாளனும் அப்படித்தான் என்கிறார் லோசா. எழுத்தை தனது ஊடகமாக தேர்ந்தவர்கள் படைப்பாற்றல் எனும் எஜமானனின் ஏவலாட்கள் மட்டுமே என்கிறார். உடலுக்கு உள்ளிருந்து எல்லாவற்றையும் உண்டு கொழுக்கும் நாடாப்புழுக்களை போல் எழுத்தாள அகத்தின் உள்ளிருக்கும் படைப்பாற்றல் அவனது அனுபவங்கள் எல்லாவற்றையும் உண்டு செரித்து அவனை அழித்து வளர்கிறது என்று எழுதுகிறார் அவர். பிரம்மராஜன் , மிரோஸ்லோவ் ஹோலுப் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு மேற்கோள் சுட்டுகிறார் “Poetry is so important, but I don’t know what for”. படைப்பூக்கம் தன்னை மீறிய ஒன்று என்பது ஏறத்தாழ அனைத்து எழுத்தாளர்களும் ஒப்புகொள்வதாகவே இருக்கிறது.

சதத் ஹசன் மண்டோ, ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்றொரு சிறிய கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் எப்படி தான் குடிக்கு அடிமையோ அதே போல் எழுத்துக்கும் தானொரு அடிமை என்கிறார். ‘எழுதாதபோது நிர்வாணமாக இருப்பது போல், குளிக்காமல் இருப்பது போல், குடிக்காமல் இருப்பது போல் இருக்கிறது’ என்கிறார் அவர்- “பெரிய கல்வித் தகுதி இல்லாத நான் இக்கதைகளை எப்படி எழுதி இருக்க முடியும்? இந்த கதைகளின் ஆபாசங்களுக்கு சிறை செல்ல வேண்டியிருக்கும். இக்கதைகள் தங்களை தாங்களே எழுதி கொள்கின்றன… நான் எழுதும் கதைகள் என் மனதிலோ சிந்தையிலோ இருப்பதில்லை. அவை எப்போதும் எனது பாக்கெட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும்…. அந்த வகையில் நான் என்னை எந்த அளவுக்கு எழுத்தாளன் என நம்புகிறேனோ அதேயளவு பிக்பாக்கெட்காரன் என்றும் கருதுகிறேன். சொந்த ஜெப்பியிலேயே களவாடி அதன் உள்ளடக்கப் பொருட்களை உங்களுக்கு அளிப்பவன்… என்னைப்போல் ஒரு முட்டாளை நீங்கள் பார்த்ததுண்டா?

லோசா படைப்பாற்றலை நோய்மையுடன் இணை வைப்பதன் வழியாக இரண்டு கருத்துக்களை முன்னிறுத்துகிறார். எழுத்துக்குத் தன்னை முழுமையாக அளிப்பது மற்றும் எழுத்தின் வெம்மையில் உருகி அழிவது. சென்ற கட்டுரையில் பேசியதுதான், எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது கீழை நாடுகளின் ஆன்மீக மரபுடனும் எழுத்தாற்றலுக்கு பலியாவது நவீன தனிமனித வாதத்துடன் பொருந்துவதாகவும் தோன்றுகிறது. எழுத்தை எஜமானனாக ஏற்க வேண்டும் என்பது சரி, ஆனால் அதன் வெம்மையில் உருகி அழிய வேண்டும் என்பது எழுத்தாள பிம்பத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நவீன கால ‘கற்பனாவாத’ பிம்பம் என்றே எனக்குப் படுகிறது.

சரி, எழுத்தாளனின் பொறுப்புதான் என்ன? “படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும்போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிக் காட்டப்பட்டால் அதை படைப்பூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது,” என்று எழுதியிருந்தேன்.

லோசா படைப்பை ஒரு வசதிக்காக இரண்டாய் வகுத்துக் கொள்கிறார்- ‘கருப்பொருள்’ (theme) ‘வெளிப்பாடு ’(presentation- style). பல்வேறு எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை எழுதி இருக்கிறார்கள். ஒரே கருப்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அதில் பிழை ஏதுமில்லை, ஏனெனில் அதுவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையால் அளிக்கப்பட்டது. ஆனால் அது வெளிப்படும் முறைக்கு எழுத்தாளனே முழுப் பொறுப்பு என்கிறார். புனைவு என்பதே அடிப்படையில் ‘பொய்’ தான் எனும்போது எழுத்தாளனின் நம்பகத்தன்மை என்பது தனக்கு உதித்த கருப்பொருளுக்கு அவன் நியாயம் செய்தானா என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்ற முடிவை அடைகிறார் லோசா. எழுத்தாளன் எங்கோ அடைந்த அனுபவத்தின் சாரத்தை கதைக்குள் ஒளித்து வைக்கிறான் என்பதை மனதில் கொண்டு லோசா எழுத்தாளனின் படைப்பூக்கச் செயல்பாட்டுக்கு சுவாரசியமான பதத்தைச் சூட்டுகிறார்- “backward stripping”.

ஆம், புனைவு என்பது ஆழ்ந்த உண்மையை மூடியிருக்கும் பொய். வரலாற்றின் மறுபக்கம். எவையெல்லாம் நிகழவில்லையோ அவற்றின் வலைப்பின்னல்.

oOo

ஒளிப்பட உதவி – Doyletics

வேரும் கனியும் – 1

செரவி

தி. வேல்முருகன்

20161227_115952

கந்தனுக்கு இப்ப இருக்கிற ஒரே பிரச்சினை 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும். சஞ்சீவிராயர் கோயில் பக்கத்தில் இருந்த ஐமாலியா மளிகையை பார்த்ததும் யோசிக்காமல் நேரே அங்கு நடந்து நிறைய பொருட்கள் வாங்குவது போல் தோரணை காட்டி சீனி, உடைச்ச உளுந்து என்று கொஞ்சம் பலசரக்கு வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

“234 ரூபாய் வருது 2000 ரூபாய் தர்ரிங்க”

“சில்லறை இல்ல”

“அரே அல்லா, யாவரமே சுத்தமா இல்ல பேங்க்ல காசு எடுத்ததும் நேரா இங்கதான் வராங்க. நீங்க எங்கயாவது பக்கத்துல மாத்த முடியுமா பாருங்க சார்”

எங்க மாத்திறது? கொஞ்சம் தள்ளி இருந்த மியான் பாய் கடைதான் தெரிந்தது கந்தனுக்கு.. அந்தக் கடைகூட கைமாறி வேற பேருல இப்ப இருக்கு. அதுக்கு எந்த பேரு மாறுனாலும் அந்த கடை பேரு ஊர்க்காரங்களுக்கு மியான் கடைதான். அதுலகூட இப்ப ஒன்னும் யாவாரம் தெரியல.

முன்பு எல்லாம் இந்த நாள்ல ரொட்டி கோழிக்கறியோடு கொக்கு, நொல்லமடையான் கறியெல்லாம் கிடைக்கும். மதிய நேரத்தில் சாப்பிட இடம் கிடைக்காது. வரிவரியா நெய் ரொட்டிய கம்பியால எடுத்து உருவி இரண்டு கையால ஒரு தட்டு உச்சில ஒரு தட்டு. பொலபொலவென உதிர்ந்து இலகுவா பல்லுக்கும் நாவுக்கும் பதமா தெரியற மாதிரி வைப்பாங்க. எங்கிருந்தொ கொக்கு நொள்ளமடையான் எல்லாம் உயிரோட பிடிச்சு சைக்கிள் ஹாண்டில் பாருல மாட்டி எடுத்து வருவாங்க. அந்த கடையில விக்க.

கொஞ்சம் தள்ளி ஆட்டா கடை. அங்கேயும் இதே மாதிரி கறி எல்லாம் கிடைக்கும் பக்கத்திலதான் ஆண்கள் மேநிலை பள்ளி. அங்கு படிச்ச ஞாபகமும் சாயந்திரம் ஆனா ஆட்டா கடை கொத்துப் பரோட்டா கொத்துற டன் டன் சத்தம் கேட்குற மாதிரியும் கொக்கு கறி தேங்காய் சால்னாவோட அது ஒரு ருசி நாக்குக்கு தெரிந்து ஞாபகம் முட்டியது கந்தனுக்கு.

எல்லாம் போச்சு இப்படி மழையே பெய்யாம போனா அவ்வளவுதான்.

கந்தனுக்கு கொக்கு நினைப்பு வந்ததும் முதல் நாள் பார்த்த பறவை பிடிப்பவனின் வெற்றுடம்பும் தளந்து சுருங்கி வரிவரியா தெரிந்த ஒட்டிய வயிரோட கையில தூக்கிக் காட்டிய காட்டுவாத்தும் சேர்ந்து ஞாபகம் வந்துடுச்சி. யாரும் வாங்குல. அந்த பெரியவர் கேட்டுட்டு இருந்தாரு. கந்தனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.

அவன் அப்பத்தான் ஒரு மீன வாங்கி வெட்டி சுத்தம் பண்ணி வெளியே வரும்போது வழியில ஒக்காந்து இருந்த ஆயா, யப்பாடி இந்த இலந்தபழம் வாங்கிக்கப்பா மணலு மாதிரி இருக்கும்பா, ன்னு கேட்டதும், எவ்வளவு ஆயா,ன்னு கந்தன் கேட்டதுக்கு, பத்து ரூபாய்ப்பா” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் தோலெல்லாம் சுருங்கிப் போன கையால நிறப்படி கூம்பாகவும் கையாலேயும் அதே அளவு அள்ளிப் போடுது. பழம் எல்லாம் பிரஷ்ஷா நத்தை நத்தையாட்டும் இருக்கு. வாணாம்முன்னு சொல்ல முடியாத வாங்கிட்டு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்ததும், நல்ல புள்ளப்பா நீ! ஏன் கிட்ட ஏது இவ்வளவு காசு, உள்ள செத்த மீன்காரிவோட்ட இருக்கும் கேளேன்?

சில்லரையா மீன் செதிலு ஒட்டியிருந்த நோட்ட வாங்கி ஆயாகிட்ட கொடுத்து, என்ன ஊரு ஆயா, என்றார் கந்தன்.

“நான் அரிகிஷ்ட்டிதாம்பா, தோட்டத்துல தரையில கொட்டி வீணாப் போவுதா, அதான் இப்படி அள்ளிக் குடுத்துட்டு அப்படியே ரயிலடி போயி ரவிக்கடையில ஒரு டீய போடச் சொல்லி குடிச்சுட்டு வூட்டுக்கு போவேன், சாப்பாடு ஒன்னும் செல்ல மாட்டேங்குது. டீ தான் புடிக்கும். ஒரு வா தொண்டையை நனைச்சா போதும் பையன் சவுதியில இருக்கான், வரவரைக்கும் உயிர வச்சுக்கனும் பாரு”

“வேற யாரும் இல்லியா ஆயா?”

“இருக்கா, மருமவ இருக்கா அத ஒன்னும் கேட்காத, நீ போ”

அப்பத்தான் திரும்பி வரும்போது அந்த பெரியவர் அந்த காட்டு வாத்த வச்சிகிட்டு மரைக்கார்கிட்ட, வாங்கிகிக்க சாமி,ன்னு கேட்டுக்கிட்டு இருந்தார்.

“செத்துப்போச்சு கனி, உயிரா இருந்தா வாங்கலாம்,” அப்படின்னு சொல்லி போயிட்டாரு மரைக்கார்.

வாங்கக்கூடிய யாரையும் காணும். பெரியவர் முகத்தைப் பார்க்க முடியல. அவரும் மட்டும் தானா, இங்க  முருகன் மெடிக்கல் கீழே பெரியாஸ்பத்திரி பக்கத்தில பழம் விக்கறவங்க, அதச் சுத்தி நடந்து போறவங்க யாராவது வாங்க மாட்டாங்களான்னு அவங்க பார்க்கிறது… ஏன் இந்த ஜமாலியா கடையில நிக்கரவங்க வாங்கரவங்க யார் முகத்திலையும் ஒரு வெறுமைதான தெரியுது.

ச்சே அந்த காட்டு வாத்த நாமாவது வாங்கி இருக்கலாம், என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.

என்னங்கனி யோசனை ரொம்ப நாழியா நிக்கராகள, அவுகளுக்கு பைசாவா குடுத்து அனுப்பு என்றார் பில் போட்டுக்கிட்டு இருந்த பாய்.

கல்லாவில் இருந்தவர், சரி நானா, என்று எண்ணிக் கொடுத்தார்.

“இனிமே 2000 ரூபாய மொதல்லிய சொல்லிடுங்க, இங்கே பாரு வாப்பா பைசாவெல்லாம் நீங்க கொண்டு போவுது”

“இல்லை பாய் இனிமேல் வரமாட்டேன்,” என்ற கந்தன் பேங்க் வாசல்ல நிறுத்தி இருந்த டூ விலர எடுத்துட்டு நேரா கீரைக்காரத்தெரு, பஸ்டாண்ட், பெரிய மதுவு வழியா வண்டிய வெரட்டி தெருவுக்கு திரும்ப இருந்தார். அப்போது, ரோட்டு முனையில் இருந்த ஆலமரத்தடியிலேருந்து, சாமியோவ், நேத்துகூட பார்த்திய செரவி, செரவி வாங்கிக்க சாமி வூட்டுல ஆச்சிக்கு புடிக்கும், என்று பெரியவரும் அவர் மனைவியும் ஒரு சேர சொன்னதும் கந்தனுக்கு மீறமுடியல. வண்டிய நிறுத்துனார். எவ்வளவு காசு என்று கேட்டு கொடுத்து விட்டு உறிக்கச் சொன்னார்.

“பெரியவர இது செரவி கிடையாது காட்டு வாத்து, ஆனா நாங்க செரவின்னுதான் சொல்லுவோம் சாமி”

“சரி சரி உறிச்சுக் கொடுங்க”

ரெக்க, காலு கழுத்த அறிஞ்சுட்டு பனியனைக் கழட்டற மாதிரி முடியோட தோல உருவிட்டு வயித்துல சின்னதா ஒரு கீறல், அப்படியே குடலு சரியிது. ஈரல கிள்ளிப்புட்டு மனைவி கையில கொடுக்குறாரு பெரியவரு. அவுங்க அதுல ஒட்டியிருந்த ஒன்னு ரெண்டு முடிய எடுத்துட்டு சவுக்கத்தால் பையில போட்டுச்சு. எல்லாம் நிமிசத்துல மூணையும் உறிச்சுட்டாங்க

ஒரே ஈரல் நிறமாகவும் ரத்த நெறமாகவும் தெரிஞ்சதும், ஆகா பிரசு, கறி நல்லா இருக்கும் என்று மகிழ்ந்து போய் வீட்டுக்கு வந்து மனைவிகிட்ட காட்டி, வள்ளி, வள்ளி என்னன்னு பாரு,ன்னு சொல்றார் கந்தன். எட்டிப் பார்த்தவள், அய்யோ இது என்ன கருமாந்திரம் ஒரே கவுளு, என்ன கொண்டு ஆவாது,ன்னு சொல்லி விட்டாள். கந்தனுக்கு குருவிய தானே புடிச்ச மாதிரி இருந்த சந்தோஷம் போன இடம் தெரியல. கறிய எடுத்து மோந்து பார்க்காரு, கவுளுதான் அடிக்குது.

“வள்ளி வள்ளி நாம வாங்கற மீன் கருவாட விடவாபெரிய கவுளு…”

“அப்ப நீ சுத்தம் பண்ணி குடு செய்யறேன், ஆனால் நான் திங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டாள் வள்ளி.

வாங்கியாந்துட்டமே என்னடா செய்யறதுன்னு சட்டைய கழட்டிட்டு துண்ட கட்டிகிட்டு இறங்கிட்டாரு கந்தன்.

நல்லா ஓடியும் நீந்தியும் மேய்ஞ்ச குருவிவோ இல்லியா கறிய பாரு எப்படி இருவி ரத்தமாட்டம் கிடக்கு பாரு, என்றார் மனைவி வள்ளிய பார்த்து

சரி சரி நாக்க ரொம்ப நீட்டாம நல்லா சின்னதா சன்னமா வெட்டிடுங்க, வேவாமா போயிட போவுது, என்று திட்ட ஆரம்பித்ததும், ஏய் உனக்கு குருவி அவளவு எலுப்பமா போச்சா, புடிக்கறத நான் பாத்துருக்கேன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்ப எனக்கு 20 வயசு இருக்கும், அப்படின்னு கந்தன் சொல்ல ஆரம்பித்ததும்-

“ஆமாம் ஆமாம் நீ ஆடுன ஆட்டத்ததான் சொன்னாங்களா?”

“இதான் ஓங்கிட்ட புடிக்காது”

“சரி சரி சொல்லு”

“ஒரு நாளு சாயந்திரம் ஒரு 3 மணி இருக்கும் ஆத்து ஓரமா தெற்கு வாய்க்கால் மேல வயலுக்கு போறேன். இப்ப அந்த இடம் வாய்க்கால் எல்லாம் இறால் குட்டவலா போயிடுச்சு. அப்ப திடீர்னு வாய்க்கால் மேல நின்ன ஒருத்தரு கைய காட்ராறு, வராத வராதன்னு. நான் பயந்து போயி என்னமோ தெரியலன்னு கமுக்கமா வாய்க்கா வரப்புல்ல உக்காந்து அவரையே பார்க்குறேன். அவரு வடக்க மானத்தை பாக்கறாரு, நானும் பார்க்கிறேன். இரண்டு கொக்கு பறந்து வரது தெரிஞ்சுது. இவர பாக்கறேன், கையில இருந்த கயிற ஒரு கையால இழுக்குறாரு. அப்ப பார்த்தா வயல்ல இருந்த ஒரு கொக்கும் நொள்ளமடையானும் ரெக்கைய தூக்கி அடிக்குது, பறக்காம.இதை மேல பறந்த இரண்டு கொக்கும் பார்த்துச்சா, அப்படியே இறக்கைய அடிக்காம காத்துல மிதந்து ஒரு வட்டம் போட்டு கால நீட்டிக்கிட்டு வந்து அந்த கீழே இருந்த கொக்கு பக்கத்தில ஒக்காந்துச்சு”

“அய்யோ அப்புறம்?”

“க்ராச்ன்னு சத்தம் கொடுத்து பறக்க நினைச்சுது பாரு, அவரு இன்னோரு கையிலிருந்த கவுற இழுத்துட்டாரு, அப்படியே இரண்டு பக்கமும் மறைச்சு வச்சிருந்த வல கொக்கு மேல உழுந்து மூடிப்போச்சு”

“அய்யோயோ “

“அப்புறம் பார்த்தா அந்த குருவி புடிக்கரவரு ஓடிப் போயி ரெண்டு கொக்கையும் பிடிச்சு அது இறக்கைய பிச்சி கட்டி போடறாரு. பாவமா இருந்துச்சு, அப்படியே பார்த்துட்டு போயிட்டேன்”

“அப்புறம் ஏன் இத வாங்கிட்டு வந்த?”

“அதெல்லாம் கேக்காத. தோ முடிஞ்சுடிச்சு. நீ ஆக்கிடு நான் குளிச்சிட்டு வந்துடறன்”

வந்ததும் வள்ளி, நீ மேசைய நாசம் பண்ணாத, என்று சொல்லி, ஒரு வாழையிலை கிள்ளிட்டு வந்து, கீழ உக்காரு, என்றாள். தரையில ஒக்காந்ததும் சாமி படையல் மாதிரி வறுத்த கறி, சோறு, ரசம், கீரை எல்லாம் வச்சி சுட்ட கருவாடு சுருட்டும் சாராயம் மட்டும் தான் இல்ல, நீங்க சாப்புடுங்கன்னுட்டு போய் விட்டாள்..

உடையாரப்பான்னு குலதெய்வத்தை நினைச்சுட்டு ஒரு கறிய எடுத்து வாயில வைக்கிறாரு கந்தன், குப்புன்னு அவரு மொகத்துல வந்து அடிக்குது ரத்த கவுளு. அப்படியே ஒரு மாதிரி ஆயிடுச்சு கைல அடிக்குதா கறில அடிக்குதான்னு அவருக்கு தெரியல. மேற்கொண்டு ஒரு வாய் சாப்பிட முடியல.

இலையில இருந்த சோத்த கீரையில பெசைஞ்சு சாப்பிட்டுட்டு, இலைய சுருட்டி நாய்கிட்ட வச்சிட்டார். வள்ளி கேட்டதுக்கு, தெகட்டுது போதும் பசங்க வந்தா திங்கட்டுமுன்னாரு. ஆனால் அவருக்கு தொண்டையில மாட்டுன முள்ளுமாரி அருவிகிட்டே இருந்துச்சு என்னடா இப்படி ஆயி போச்சேன்னு. பசங்க வந்து ஒன்னும் சொல்லாம நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க

மறுநாள், இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்புடும் என்று நினைத்த கந்தன், பெரிய மதுவு ஓரம் தனது டூ விலர நிறுத்திட்டு போன வருட மழையில் பிளவுபட்டு இன்னும் சரி செய்யாத அபட்மண்டை பார்த்துக் கொண்டு சிதறி கிடந்த கருங்கல்லில் இடித்துக் கொள்ளாமல் மெதுவாக இறங்கி திரும்புறாரு.

‘சாமி செரவி வாங்கிக்க ஆச்சிக்கு புடிக்கும்னு’ சத்தம். முகத்தை திருப்பிக்கிட்டு விருட்டுன்னு மீன் கடை உள்ள போயிட்டாரு கந்தன்.

இரவின் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன
நினைவுகள் பிளந்து கொண்டு
தன்போக்கில் அலைந்தன
தூங்கும் இரவுகளிடம்
முறையிடல்களை முன்வைத்த
மனிதர்களை நான் கண்டேன்
பாஷைகளற்ற மௌனம்
சூழ்வதையும் பின் கலைவதையும்
ஒவ்வொரு முறையிடலுக்குப் பின்னும்
கேட்கிறேன்
ஓய்விலிருக்கும் ஒவ்வொன்றும்
தனக்கென்றொரு தவத்தை
தனக்கென்றொரு வரத்தை
தானே கண்டடைகின்றன
கையளிக்க எதுவுமற்ற
வரண்ட இரவுகள் இவை
அதனிடம் எதையும் எதிர்பார்த்திருப்பதன்
அர்த்தமின்மையை உணரும் தருணம்
ஒரு பேருறக்கத்தினுள்
நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
பாஷைகளற்ற மௌனம்
என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது

ஒரு குருட்டு நட்சத்திரத்தை தானும்
விட்டு வைக்காத வரண்ட இரவுகள்
மௌனமாய் உறைந்திருந்தன
எனது ஆன்மாவின் அங்கலாய்ப்பை
எனது தனிமைத் தவத்தை
பேயுரு கொண்டு கலைக்கிறேன்
இரவுகள் துயில் கலைந்து
வனத்தின் ஆழத்துள் சென்று மறைகின்றன
இந்த நூற்றாண்டின் இரவுகள் இயங்குவதற்காகவும்
பகல்கள் உறங்குவதற்காகவும் என காலத்தை
மாற்றியமைக்கும் வெறியுடன்
தூங்கும் இரவுகளை பேயுரு கொண்டு
கலைக்கிறேன்

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1

– ஆர். அஜய்-

lyons1

“... They embraced each other and she took him and lay back, undoing her drawers. The tool that his father had bequeathed him moved and he called out: ‘Help me, Shaikh Zacharias, father of veins’. He put his hands on her hips and, setting the vein of sweetness to the Gate of the Cleft, he pushed it until it reached the Lattice Gate and passed through the gate of Victories. After that, he entered the Monday market, the Tuesday market, the Wednesday market and the Thursday market. He found that the carpet filled the room and he moved the tuber round against its covering until the two met“.

லிட்டிரரி ரெவ்யு‘ பல ஆண்டுகளாக அளித்து வரும் ‘மோசமான கலவி எழுத்து’ (‘Bad sex in fiction’) விருதுக்கு போட்டியிடும் தகுதி கொண்ட இந்தப் பத்தி – இந்த விருதுக்கான இறுதிப் பட்டியல் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள பிலிப் ராத், முரகாமி போன்ற- நம் சமகால இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்படவில்லை. குழந்தைகள் படிக்கும்படியாக, பல அம்சங்களை நீக்கி எளிமையான முறையில் பலரால் பல பதிப்புக்களில் -சில புதிய சேர்க்கைகளோடு- மொழிபெயர்க்கப்பட்டு, மாயாஜால, சாகச கதைகளின் தொகுப்பாக மட்டுமே அறியப்படும் ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் கதைகளி’ல் (The Arabian Nights Tales of 1001 nights) உள்ள ஒரு கதையின் பகுதி இது என்பது வியப்பளிக்கக்கூடும்.

அரேபிய இரவுகளின் கதைகள் மட்டுமல்ல, க்ரீம் சகோதரர்களின் (Grimm Brothers) தேவதைக் கதைகள் முதற்கொண்டு மற்ற புகழ் பெற்ற நட்டார் கதைகளும் இத்தகைய சுத்திகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக அரேபிய இரவுகளின் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ‘அலிபாபாவின்’ கதை தொகுதியின் பிறசேர்க்கை என்பதும் நூல்களிலும்/ திரைப்படங்களிலும் அலிபாபாவின் காதலியாக வரும் மற்யானா (Marjana/ Morgiana), உண்மையில் அவன் அடிமை என்பதும், அவளே கொள்ளையர்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், இறுதியில் அலிபாபா அவளை தன் மகனுக்கு மணம் முடித்து வைப்பதும் பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கும்.

வழமையான ஆண்- பெண் உறவு மட்டுமில்லாமல், தற்பால் விழைவு, ரத்த உறவுகளுக்குள் ஏற்படும் விபரீத சம்பந்தம் என பாலியல் விழைவுகளின் பல சாத்தியங்களை தன்னுள் கொண்டுள்ள ‘அரேபிய இரவுக்’ கதைகளை ‘பாலியல்’ என்ற கோணத்தில் தொகுத்து நோக்குவது சுவாரஸ்யமான சில புரிதல்களை தரக்கூடும். ‘ரோஜா போன்ற கன்னங்கள்’, ‘பதினான்கு முழு நிலவுகளை ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிமிக்க அழகிய முகம்’, ‘உறுதியான உடற்கட்டு’, இந்த வர்ணனைகள் பெண்ணை விவரிப்பவை அல்ல, ஆண்களை. ‘அரேபிய இரவுக் கதைகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களின் அழகும் மிக விரிவாக வர்ணிக்கப்படுவது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இத்தகைய வெளிப்படையான விவரிப்புக்கள் ஒரு புறம் இருக்க, கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் தற்பால் விழைவுள்ளவர்களாக இருப்பின் அவர்கள் தீயவர்களாக வார்க்கப்பட்டிருப்பதின் பின்னால் உள்ள உளவியல் சிக்கல் யோசிக்கப்பட வேண்டியது. தன்னை குறித்து எந்த நேரடி பொருளையும் தராத விவரிப்பில் வெளிப்படையாக இருக்கும் கதைசொல்லி(கள்), தங்கள் விழைவு குறித்து குற்றவுணர்வை தீய தற்பால் பாத்திரங்களின் மூலம் கடந்து செல்கிறார்களா? தற்பால் விழைவுள்ள பெண்களும் இவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட்டி விக்கிரமாதித்தியன் கதைகளில் வரும் ஒரு தொடர் அம்சம், பெண்களின் சலன புத்தி மற்றும் அதனால் அவர்கள் எளிதில் சோரம் போவது குறித்த குற்றச்சாட்டுக்கள். நீராடச் செல்லும் முனிவர் ஒருவர் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு பெண்ணை விடுவித்து செல்ல, அவளோ தன் ஆடையின் முடிச்சில் இருந்து தன் சோர நாயகனை விடுவித்து அவனுடன் களித்திருப்பதாக வரும் பட்டி- விக்கிரமாத்தியன் கதை நிகழ்வை வேறு வேறு வடிவங்களில் பிற நாட்டார் கதை தொகுதிகளிலும் காணலாம். (‘கதா சரித சாகரம்’ போன்ற சம்ஸ்கிருத இலக்கியங்களுக்கும் அரேபிய இரவுகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகள், கொடுக்கல்/ வாங்கல்கள், இரண்டும் அவற்றுக்கும் முந்தைய வேறு பல மூல ஆக்கங்களில் இருந்து பெற்றுக் கொண்டவை பற்றியும், பஞ்சதந்திர கதைகளுக்கும், மிருகங்களை பற்றிய அரேபிய இரவுகளில் உள்ள கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள், இவை வேறொரு கட்டுரையில் பார்க்கப்படவேண்டியவை). அரேபிய இரவு கதைகளிலும் பெண்கள் இரண்டாம் தரத்தில்தான் வைக்கப்படுகிறார்கள். பேரழகியை கண்டதும் அண்டமே பொசுங்கிப் போகும் அளவிற்கும் பெருமூச்சு விடும், அவளைப் பிரிந்தால் உடல் நலம் குன்றி துயரத்தில் உழலும் ஆண்கள் இருந்தாலும், ‘ஆடமின் விலா எலும்பில் இருந்து வந்தவர்கள்’ என்று வசையாக பயன்படுத்தப்படும் சொற்றொடரின் மூலம் பல இடங்களில் இகழ்ச்சியாக பெண்கள் சுட்டப்படுகிறார்கள்.

பாலியல் விழைவுகள் இட்டுச் செல்லும் முடிவுகளிலும் ஆண்- பெண் வேறுபாடுகள் உள்ளன. மாற்றந்தாய் மூலம் பிறந்த பெண்ணுடன் (step-sister) உறவு கொண்டு குழந்தை பெற்று கொள்ளும் சகோதரன், தன் மகனின் காதலி/ மனைவிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து அவளுடன் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் தந்தை பெரிய தண்டனைக்கு உள்ளவதில்லை. சகோதரனாவது பழிக்கு அஞ்சி சகோதரியை இன்னொருவனுக்கு மணம் முடிக்கிறான், அரசனான தந்தையோ தன் இச்சை தீர்ந்தவுடன் அவளை மறந்து விடுகிறான். அதே நேரம், கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம் (step-son) இச்சை கொள்ளும் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் சுதந்திரமாக தங்கள் விழைவுகளை அனுபவிக்கும் நிகழ்வுகளும் இந்தக் கதைகளில் உள்ளன. தன் ஏழு சகோதரர்கள் குறித்து நாவிதன் சொல்லும் கதைகளில் இரண்டாவது சகோதரன் சந்திக்கும் பெண்ணும் அவள் சேடிகளும் அவனை மயக்கம் வரும் அளவிற்கு அடிக்கிறார்கள், மீசையையும், தாடியையும் பிடுங்குகிறார்கள், புருவத்திற்கு சாயம் அடிக்கிறார்கள். இவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தால், அதன் பின் அப்பெண் குடி மிகுதியில் உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒவ்வொரு அறையாக அவனிடமிருந்து தப்பிப்பது போல் ஓட, இவனும் உடைகளை களைந்து அவளை துரத்தியபடி ஓடி அவன் குறி விறைப்படைந்த பின்னரே அவனை தன்னுடன் இணைய விடுவாள் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது விதமான விசித்திர பாலியல் விழைவுகளுக்கு (fetish) முன்னோடியாக இப்பெண் இருக்கக்கூடும்.

‘கூலி சுமப்பவன் மற்றும் மூன்று பெண்கள்’ கதையில் அவர்கள் அவனுடன் உடல் பற்றிய உணர்வின்றி, தங்கள் நிர்வாணத்தை குறித்து சுவாதீனமாக இருப்பதும், அவனுடன் குடித்து மகிழ்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் காதல் வயப்படும் கன்னிப் பெண்களும் மீறல்களை ஓரளவு வரை அனுமதித்து, கலவி அல்லாத மற்ற களியாட்டங்களில் காதலனுடன் ஈடுபடுகிறார்கள். ‘..played with him..‘, ‘..played with each other..‘ என்றே இத்தகைய களியாட்டங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்த்துவிடும் பெண், அதற்கு பழி வாங்கும் விதமாக நகரத்திலேயே மிகவும் அழுக்கான மனிதனை தேர்ந்தெடுத்து அவனுடன் உறவு கொள்கிறாள். பின் கணவன் மன்னிப்பு கேட்டதும் அதை ஏற்றுக் கொள்பவள், தன் கணவன் மீண்டும் தவறு செய்தால் அவனை அழைப்பதாக அந்த அழுக்கான ஆசாமியிடம் கூறுகிறாள்.

இவற்றை பெண்ணியப் பிரதிகளாக பார்க்கத் தேவையில்லை, அடுக்குமுறை கொண்ட ஒரு -அரசர்கள்/ பிரபுக்களால் கவரப்பட்டு அல்லது அடிமைகளாக வாங்கப்பட்டு அந்தப்புரத்தில் உள்ள பலப் பெண்களில் ஒருவராக வாழ்வை கழிக்க வேண்டிய- சூழலின் ஆழத்தில் பதுங்கி இருக்கும் சுதந்திரத்திற்கான விழைவாக அணுகலாம்.

சிறு குற்றங்களுக்கும் கசையடிகள், கை, கால் வெட்டப்படுதல் போன்ற கடும் தண்டனைகள் கொண்ட சட்ட திட்டங்களின் – இத்தகைய பல நிகழ்வுகளை இக்கதைகளில் காண முடிகிறது – காலத்திய பாக்தாத்திலோ, கெய்ரோவிலோ இரவு நேரம். ஜன சந்தடி மிகுந்த வணிக/ குடியிருப்பு வீதிகள். எங்கும் காவலர்களின் கண்காணிப்பு, தண்டனை குறித்த பயம். பொதுவெளியில் மாதிரி குடிமகன்களாக தங்கள் வேலையை மட்டும் கவனித்தபடி அவசரமாக சென்று கொண்டிருப்பவர்கள். குற்றங்கள் எதுவும் நடக்காதது போல் வெளித்தோற்றம் அளிக்கும் சமூகம், எங்கும் ஒழுங்கின் அரசாங்கம். அதே நகரங்களில் அதே இரவு நேரத்தில், தாழிடப்பட்ட, எண்ணெய் விளக்குகளால் மஞ்சள் நிற ஒளிரூட்டப்பட்ட, வாசனை திரவியங்களின் மணத்தால் நிரம்பிய வீடுகளுக்குள்ளும், வணிக நிறுவனங்களின் உள்ளறைகளிலும் அரங்கேற்றப்படும் அனைத்து விதமான மனித ஆசைகளின் ஆடல்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் இருப்பின், இச்சைகளின் கூர்மையான ஒளியால் நிரம்பித் ததும்பும் இக்கதைகளின் 1001*1000 கண்களும் அவற்றைக் கொண்டு இரவின் இருளை துளைத்து ஊடுருவிச் செல்கின்றன. அவற்றில் சில நம்முடைய கண்களே, அவை பருகும் இருளும் நம் ஆழ்மன விழைவுகளே.

burton

பின்குறிப்பு:

மால்கம் லாயன்ஸ் (Malcom Lyons), அர்சுலா லாயன்ஸ் (Ursula Lyons) தம்பதியர் இணைந்து மொழிபெயர்த்து, பெங்குயின் பதிப்பாக வந்துள்ள மூன்று தொகுதிகள் கொண்ட நூல்களில் (The Arabian Nights Tales of 1001 Nights Volumes 1, 2 & 3) இருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ரிச்சர்ட் பர்டனின் மொழிபெயர்ப்புக்குப் பின் செய்யப்பட்ட முழு மொழிபெயர்ப்பு என்று அறியப்படும் இவை முன்னதோடு ஒப்பிடுகையில் இன்றைய ஆங்கிலத்திற்கு அணுக்கமாக உள்ள நடையை உடையவை (பர்டனின் மொழிபெயர்ப்பில் அலிபாபாவின் மருமகன் மற்யானாவை மணந்து கொள்வது என்பது போன்ற பல பாடபேதங்கள் இரண்டிற்கும் இடையே உள்ளன). மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இரண்டுமே படிக்கப்பட வேண்டியவை.

காமத்துப்பூ

ஆகி

மேற்கின்
வெண்கற்பிதம்
கப்பலேறி வந்து
கிழக்கின் கருங்கற்பிதத்தின்
மேல் படர்ந்து, முன்னும் பின்னும்
நிகழ்ந்த ஊடுருவலின் அரைகுறை ஊடுருவலில்
ரத்தங்கசிந்து, இனிமை கசந்து
மென்மொட்டுகள் மலர்ந்து
மெட்டிற்கிணங்காது
சாம்பற்பூக்கள்
அசைந்தன