எழுத்து

நிறப்பிரிகை: மூன்று – மரகதம்

சரவணன் அபி

நீர்தேடி
வேர் நீளும்
ஒளி யாசித்து
மரமேறும்
சந்ததி நீள
விழுதிறங்கும்

நீரின்றி கருகினாலும்
ஒரு துளி விழலை
நினைவிற் பொதித்து
பெருகிக் கொள்ளும்

போர்த்திப் புரந்து
புரண்டு கொடுத்து
கலைந்து தாங்கி
கிளைத்து எழுந்து
உழைப்பொன்றே கருதி
உயிரீயும்
மகிழ்வொன்றே கருதும்
மரகதம்

நெருப்புப் பூச்சி

பானுமதி. ந

மினுக்கட்டாம் பூச்சிகள் இப்பொழுது பறந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தெருவில் இப்படியொரு காலியிடமும், மரங்களும், கொடிகளும், முட்புதர்களும் யாரும் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால் இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது அப்படித்தான் இருக்கிறது. மருதாணி மரமும், கொன்றையும், கொடுக்காபுளியும், போகன் வில்லா மரங்களும்  பசலைக் கொடியும், சங்குக் கொடியும் இன்னமும் புதர்களிடையே இருக்கின்றன.

இவனும், செந்திலும், தேவியும் விளையாடிய இடங்கள். அப்பொழுது சிறிதாக முள்மரங்கள் இருந்தன. இன்று  பெரிதாக நிற்பதைப் போல் தோன்றுகிறது. தான் கொடுத்த கசப்பு , தன்னைத்தானே வெறுக்கச் செய்கிறது.

மாலை மயங்கும் சமயம் வரை அவனும், தேவியும், செந்திலும் அங்கே சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். வீட்டை ஏமாற்றிவிட்டு இந்தப் புதர்களில் மினுக்கும் மின்மினிகளைத் துரத்துவார்கள். முள் கிழித்தாலும் கவலையில்லை. மயக்கும் மின்மினிகள். அந்திக் கருக்கலில் அந்த வெளிச்சம், மின்னி மின்னி மறையும். அவைகள் ஒரு திசை நோக்கி பறக்கையில் என்ன ஒரு அழகு.! ஆனால் கையில் சிக்காமல் ஓடி விடும் பூச்சிகள். இப்பொழுது செந்திலும், தேவியும் எதிரே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மூவரும் கைகள் பற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்றினால், கசப்பு  உதிராதா? “காலம் கனிந்தது என்று ஆடுவோமே, கசப்பு போனதென்று ஆடுவோமே” அவனையும் அறியாமல் கண்களில் ஈரம் படர்ந்தது.

“சூடு வைக்கிறேன் பாரு,ஆம்பளைப் பிள்ளையோடு உனக்கென்னடி விளையாட்டு” என்பதையெல்லாம் அவள் கண்டு கொள்ள மாட்டாள். அடி வாங்கிக் கொண்டே ஓடி வருவாள். அம்மாவை ஏமாற்றிவிட்டு வருவது இவனுக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால் செந்தில்தான் பாவம். தம்பிகள், தங்கை அப்பா அனைவரும் கவனியாமல் வரவேண்டும். எப்பொழுதுமே லேட்டாக வருவதை இவனும், தேவியும் “செங்கோட்டை பாசஞ்செர்” என்று கிண்டல் செய்வார்கள். அவன் சிறிது ரோஷப்படுவான்.அப்புறம் விளையாட்டில் எல்லாம் மறந்து விடும்.

இத்தனைக்கும் நடுவில் தேவி இருவருக்கும் ஸ்பெஷல். அவள் என்ன நினைத்தாள் என்று இவனுக்கு இன்று வரை புதிர்தான். அவள் சமமாக நினைத்திருக்க வேண்டும். சில நாட்களில் அவள் வராவிட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றியதுண்டு. இந்த விசித்திர மன நிலை இன்றும் புரியவில்லை. எதிர்பார்க்கும் நிலை,  அடைவதை விட உயர்ந்ததோ, என்னவோ? ஆனால் ஏக்கமும் தலை தூக்கும். பட்டாம்பூச்சியைப் போல், பாவாடை சுழல அவள் ஓடி வருவதைப் பார்க்கையில் இவளையா வர வேண்டாம் என நினைத்தோம் என்று குற்ற உணர்வு தோன்றும்.

அன்று நல்ல கோடை நாள். திடீரென்று மேகம் திரண்டு ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. அம்மா எண்ணை சட்டி வைத்து பஜ்ஜி போடத் தொடங்கினாள். அவள் அறியாது கை நிறைய பஜ்ஜியை அள்ளிக் கொண்டு இவன் ஓடினான்.  கையோ சுடுகிறது, அவசரத்தில் ஒரு காகிதம் கூட எடுக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்னும் சற்று தொலைவுதானே, அவளை இன்று அசத்தவேண்டும், எப்படியும் செந்தில் தாமதமாகத்தான் வருவான்.  இந்த நினைப்பில் சென்றவனுக்கு ,அவர்கள் இருவருமாக ஆலங்கட்டி பொறுக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

“இந்தாரு, என்ன கொணந்திருக்கேன் பாரு”

தேவியை முந்திக் கொண்டு செந்தில் கூவினான் “பஜ்ஜியாடா, கொட்றா, கொட்றா”.

“அஸ்கு,புஸ்கு, இது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்.போடா, உன் அம்மாவை சுடச் சொல்லி தின்னு”

செந்தில் அடிபட்டவன் போல் பார்த்தான்.திரும்பிப் பார்க்காது ஓடினான்.

“ச் சீ.. உன் பஜ்ஜி ஆருக்கு வேணும்? நீயே தின்னு. அவனை விரட்டிப்புட்டேல. இனி என்னோட பேசாதே, ஆமா ஆணை” சொல்லிக் கொண்டே அவள் ஓடிப்போனாள்.

இவன் விக்கித்துப் போனான். கையிலிருந்து பஜ்ஜிகள் மண்ணில் விழுந்தன.முதுகில் சொடெர் சொடெரென்று மழை அடித்தது. மின்னுக்கட்டாம் பூச்சிகள் இல்லை. தந்திக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினான்.

 

நான் ஏன் எழுத விரும்புகிறேன்? – நித்ய சைதன்யா

நித்ய சைதன்யா 

இரண்டு அடிப்படைக் காரணங்களை சொல்லத் துணிவேன். ஒன்று நன்றிக்கடன். என்னை திறம்பட வளர்த்தது பெற்றோரோ சொந்த பந்தங்களோ நண்பர்களோ இல்லை. தேடித்தேடி நான் வாசித்த புத்தகங்கள்தான். இன்றும் என் பலம் மற்றும் பலவீனமாக இருப்பது நான் வாசிப்பு மூலம் பெற்றுக்கொண்டவையே. பல மனத்திரிபுகளில் இருந்து பாதுகாத்த தாய்மை நான் விரும்பி வாசித்த படைப்பாளிகளுக்கு உண்டு. உடம்பின் தேவைகளை நிறைவு செய்யவே வக்கற்ற பிறப்பமைந்த எனக்கு இலக்கியம் என்பது உயர்குடிக்கானது என்ற எண்ணம் சிறுவயது முதல் இருந்தது. அதனால் உயர்குடிப்பண்புகளில் ஒன்றான இலக்கிய வாசிப்பு மீது பெரும் விருப்பம் இயல்பாகத் தோன்றியது. யாருடனும் ஒட்டுறவற்ற பால்யத்தின் ஒரே ஆறுதல் அன்று வாசிக்கக்கிடைத்த புத்தகங்கள்.

பத்து வயது முதல் தனிமை என்பதை விரும்பத் தொடங்கினேன். ஏன் என்று யோசிக்கும்போது உறுதியாய் சொல்ல முடியவில்லை. சிறுவயதில் தந்தையை இழந்தது அதன்பிறகான தொடர் வறுமை மற்றும் உறவினர்களின் புறக்கணிப்பு இப்படி எதாவது காரணமாக இருக்கலாம். எல்லாருக்குமான நதிதான் என்றாலும் என் நதி இதுவல்ல என்ற மனவிலக்கம் இயல்பான பால்யத்தை எனக்கு வழங்கவில்லை. விழாக்களும் விருந்தினர்களும் விரும்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றான பின்பு எப்படி இவ்வுலகத்தோடு ஒட்ட முடியும்?

புத்தகங்கள் என் வறுமையை ஏளனம் செய்ததில்லை.. என் வருகையை அஞ்சி தின்று கொண்டிருந்த உணவை ஒளிக்க முயன்றதில்லை. காணும்தோறும் தந்தையற்ற கையறு நிலையில் என்னை நாணச் செய்ததில்லை. ஆனால் கரம் பிடித்து தோழமையோடு உலகின் பல வீதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளன. நான் அறிந்திருக்க வாய்ப்பற்ற பல வாழ்க்கைத் தருணங்களை எனக்கு புகட்டுகின்றன. விதவிதமான வாழ்க்கைச் சாத்தியங்களை என் அனுபவமாக்குகின்றன.. நான் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகிறேன். இருபதாண்டுகளாக என் போதிமரத்தின் கனிகள் தீர்ந்ததே இல்லை.  தினமும் புதிதுபுதிதாய் ருசிகள் கனிந்துக்கொண்டே இருக்கின்றன. ஒருநாளாவது ஒருகணமாவது இலக்கிய வாசிப்பு வீண் என்று எண்ணியதில்லை. ஆயுள் போதாதே என்ற வருத்தம்தான். அதனால் சிறுவயதிலிருந்து எழுதும் கரங்களை நோக்கி ஏங்கி வந்துள்ளேன். . அதில் ஒன்றாக என் கரமும் இருக்க வேண்டும் என்றாசை இயல்பாகத் தோன்றும்தானே..  வாழ்ந்த அறிந்த வாழ்க்கையை பதிவு செய்வது நான் இங்கிருந்தேன் என்பதன் அர்த்தம்  என்பதால் எழுத விரும்புகிறேன்.

இரண்டாவதாக காலத்தை வெற்றி கொள்ளும் பேராசை. அப்பனும் முப்பாட்டனும் என்னவாக வாழ்ந்தார்கள் என்பதற்கான எவ்வித சுவடுகளும் இம்மண்ணில் இல்லை. அவர்கள் என்ன நினைத்தார்கள் காலத்தோடு என்ன பேசினார்கள் எனபதை இன்று அறிந்துகொள்ள வழியில்லை. வாழ்ந்து பெற்ற திறப்புகளை மடிந்து உடன்கொண்டு சென்றுவிட்டனர்.

படைப்பாளிக்கு காலத்தை வெல்லும் வரத்தை இயற்கை அளித்துள்ளது. சராசரி மனிதனுக்கு எண்பதாண்டு அதிகபட்ச வாழ்க்கை என்றால் ஒரு படைப்பாளிக்கு அதை இருமடங்காக அவன் படைப்புகள் வழங்குகின்றன. ஒரு படைப்பாளி எழுதுவதன் மூலம்  ஒரு பண்பாட்டுவெளியை, மானுட சிந்தனையை, மண்ணின் வேர்களை நிலைப்படுத்திச் செல்கிறான். தொடர் கண்ணியாக இணைந்து மனிதகுலத்தை உந்தித் தள்ளுகிறான். இன்றும் நினைத்த நேரத்தில் கம்பனும் வள்ளுவனும் பாரதியும் என்னோடு உறவாடுகிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் அவர்கள் அவர்களைத்தேடி செல்கிறவர்களோடு உறவாடும் நல்வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். அப்பேற்றினை நினைக்கும்போது நான் இங்கு இறப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற ஆணவத்தை அளிக்கிறது. என் மொழி உள்ள காலம்வரை நான் இருப்பேன். இதைவிட வேறென்ன வேண்டும்?

oOo

சுமார் இருபதாண்டுகளாக இலக்கியம் சார்ந்த எதாவதொரு நினைப்பு இல்லாமல் வாழ நேரிட்டதே இல்லை.சுபா மாதிரி  பாலகுமாரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி ஜெயமோகன் மாதிரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதர்ச எழுத்தாளர்களைப்போல எழுதி வாழவேண்டும் என்கிற ஆசைதான் வாழ ஊக்கப்படுத்துகிறது. இயற்பெயர் பா.சங்கர நாராயணன் , வயது 35, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். சொந்த மண் புளியங்குடி. பள்ளி மேல்படிப்பு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நாவல்களும் கவிதைகளும் எழுதிப்பார்த்தது உண்டு. நண்பர் ஒருவர் முதலில் தமிழில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கற்றுக்கொள். அதன்பின் எழுத ஆரம்பி என்றார்.  முக்கியமான அனைத்து நவீன தமிழ் படைப்பாளிகளையும் தீிவிரமாக வாசித்தேன். சுந்தர ராமசாமி ஒரு கடிதத்தில் இலக்கியம் சோறுபோடாது  வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள் அதுவும் அரசு வேலை என்றால் சிறப்பு என்கிற தொனியில் அறிவுறுத்தினார். அதுவரை ஜவுளிக்கடை வேலை போர்வை தயாரிப்பு நிறுவன வேலை என்று போனது. காதல் திருமணத்தை தொடர்ந்து அரசு வேலைக்கு முயன்றேன். முயன்று பெற்ற வேலை இன்று ஆளைக்கொல்லுகிறது. ஒரு வீம்பிற்காகத்தான் சட்டென்று எழுத வேண்டும் என்கிற ஆசை கொந்தளிப்பாக வெளிப்பட்டது. நேரமின்மையின் காரணமாகவும் சிறுகதைகள் குறித்த பெரிய மரியாதை காரணமாகவும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதையை பதாகையும் முதல் சிறுகதையை மலைகள்.காம்  வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தின. கவிதைகளை விட மிகப்பொிய நாவல்கள் எனக்கு விருப்பமாக உள்ளன. வெற்றியோ தோல்வியோ அவற்றை எழுதியே தீருவேன். நித்ய சைதன்ய யதியின் மீதான பிரமிப்பால் அவர் பெயரைப் புனைப்பெயராக எடுத்துக்கொண்டேன். மீண்டும் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறேன்.

 

 

 

 ஏன் எழுதுகிறேன்? பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

எழுதுதல் எனும் மொழியின் துணையால் நிகழ்த்தப்படும் சாகசத்தின் மீது இன்னும் ஆர்வம் குறையாதிருப்பதால் ஒவ்வொரு சாகசக்காரனும் உச்சபட்ச சாகசத்திற்காக மேஜையின் எதிரேயிருந்து காகிதத்தின் அல்லது கணிணித் திரையில் தோன்றும் வெண்பரப்பில் (இதன் பிறகு வெண்பரப்பு என்றே சுட்டப்படும்) குதிக்கிறான்.  அதன் வசீகரமோ ஒரு துப்பாக்கியின் இருப்பை, ரேஸ்கோர்ஸ் லாயக் குதிரைகள் இடைவெளியில் தலைநீட்டிப் பார்க்கும் அழகை, ரோலர்கோஸ்டர் பயணத்தின் படபடப்பை, கட்டிட விளம்பிலிருந்து அதலபாதாளத்தைப் பார்க்கும் நிலையை ஒத்திருக்கிறது.

புனைவு எழுதுவதின் ஈர்ப்பே இறுதி வாக்கியமாக எதை எழுதப்போகிறோமென்று தெரியாமலே எழுதுவது.  அது ஒரு பயணம் அல்லது அதுவாகவே மொட்டவிழும் ஒரு ரகசியம்.  இவ்விதத்தில் அது வாழ்வைப் போலவே எதிர்பாராமையின் குதிரைகள் ஒவ்வொரு திசைக்கு ஓடும் நிகழ்வாக இருக்கிறது.  எழுதுதல் சிந்தனையையும், மொழியையும் இணைக்கிறது.  மொழியின் மலர் எழுதும் பொழுது எதிர்பாராமல் மலர்கிறது.  அதன் அழகும், சிந்தித்தல் எனும் எல்லையற்ற மகிழ்ச்சியும் எழுத்தில் இணைகிறது.  சிந்திப்பதை விடவும் மனிதர்களுக்கு விலையேயில்லாத மகிழ்ச்சி வேறு எதுவுமேயில்லை. ஒரு சிந்திக்கும் உயிரியாக, அதன் சுழலில் சிக்குண்டு சேர்ந்து சுழல்வதில் உண்டாகும் ஒரு மயக்கநிலை, தன்னுணர்வற்ற நிலையில் அல்லது உயர் விழிப்பில் பிரக்ஞையின் பேய் பீடித்த கைகளால் எழுதப்படும் எழுத்தில் வெளிப்படும் ஓர் உலகு அளவற்ற மகிழ்ச்சியை அல்லது வெறுப்பைத் தருகிறது.

ஹெராக்லிடஸின் நதி நில்லாமல் ஓடுகிறது. அதனைக் கரையிலிருந்து பார்த்து, நீர் மீது மிதந்த வண்ணங்களை, துள்ளிய மீன்களை, அடர்த்தியான அமைதியை வெண் பரப்பில் எழுத்தாக மாற்றும் உலகோடு ஒட்டா இயல்பு, தற்கொலைகளின் மீதான அல்லது கத்திகளின் கூர்மையின் மீது கொள்ளும் தற்காலிகப் பற்றிற்கு ஒப்பானது.  படைப்பொன்று அதன் குளிர் முகத்தில் ஒளிரும் கதிர்களோடு நம் மனம் விரும்பும் வண்ணத்தோடு மிளிர்ந்தால் அதை எழுதிய செயலுக்காக சொற்களின் மகுடம் நம் தலையில் அமர்கிறது.  எழுத்து வெறுப்பளிக்கும் சமயங்களில் உலகில் எழுதுவதைத் தவிர வேறெல்லா செயல்களும் உபயோகமானதாகத் தெரிகிறது.

எழுதுதல் அனைத்தினின்றும் விலகி, அனைத்தையும் பற்றி சிந்திக்கும் ஒரு செயல் என்ற முறையில் உலகைப் பிரதி செய்வதற்கும், அதனோடு வினையாற்றுவதற்கும், புதிய உயிரிகளைப் படைப்பதற்கும், நம்பிக்கை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.  படைப்புகளின் வழியே ஓர் ஆளுமை உருவாக்கமும், ஆளுமை உருவாக்கத்தின் வழியே படைப்புச் செழுமையும் நிகழ்வதால் படைப்பு, சராசரி வாழ்க்கை வாழும் என்னைப் போன்றவர்களை வேற்று உலகத்தின் மின்னல் புரவிகளில் பயணிக்கும் வேலேந்திய வீரனாக கருதிக் கொள்ளச் செய்கிறது.  எழுதுவதால் உண்டாகும் மூளைக் காய்ச்சலின் பக்க விளைவு இது.

சமூக உற்பத்தியில் எழுத்தும் ஓர் அலகு என்றாலும், படைப்பு உற்பத்தியினின்று வெளியே நடக்கும் ஒரு செயலென்றாலும் எழுதுதல் முழுக்க தனிப்பட்ட செயலாக இருக்க முடியாது.  இந்த சமூகத்தோடு ஒரு தொடர்பை அது ஏற்படுத்திக் கொள்கிறது.  ஒவ்வொரு வாசகரும் சமூகத்தின் எண்ணற்ற கண்களில் ஒன்றாக இருக்கும் அதே வேளையில் தனிநபராகவும் இயங்குவதால் எழுதுதல் சமூகம், தனிநபருக்குமான பங்களிப்பும் கூட.

உலகு, புலன் அனுபவம், மனதிலுண்டாகும் சிந்தனை, செயல் – இந்த வரிசையை மொழியால் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது அல்லது நிகழ்ந்தவற்றை அழித்து எழுதுவது, மாற்றி எழுதுவது, நகலெடுப்பது என எழுதும் முறைகள் எல்லாவற்றிலும் நிகழ்வது ஓர் இணை நடவடிக்கை.  வெண்பரப்பு உடலில் தொட்டுணர முடியாத உலகை தொட்டுணரக் கூடிய உலகிற்கு இணையான ஒன்றாக சுழல விடுவது.  இதுவரையிலும் கதை கேட்டவர்களும் சொல்லியவர்களும் அப்படி ஓர் உலகை வாழ அனுமதித்திருக்கிறார்கள்.  அந்த உலகின் வேர்களுக்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  நானும் அந்த உலகிலோர் அங்கம்.

ஒரு நல்ல தையற்காரனுக்கு துணியை எங்கே வெட்டினால் கச்சிதமான ஆடையைத் தயாரிக்க முடியுமென்று தெரியும்.  எழுதுதல் உலகின் நீள் துணிகளை தேவைப்படும் இடங்களில் வெட்டி ஓர் ஆடையாகத் தயாரிப்பதே.

பொருளாதார விடுதலை, சமூக விடுதலை, ஆத்மீக விடுதலை ஆகிய மூன்று அடிப்படை விடுதலைகள் மனித சமூகத்தின் இயக்கத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன.  மனிதர்களற்ற ஏனைய உயிர்களோ உயிர்த்திருத்தலும், இனப்பெருக்கமுமே வாழ்க்கையாக, அவற்றையும் கடந்து பல்லுயிர் சூழலின் செழுமைக்கு பங்களிப்பவையாகவும் இருக்கின்றன.  வாழ்வதற்கும், உயிர்த்திருத்தலுக்குமான போராட்டமே வன்முறைக்கும், அரசியலுக்கும், தத்துவத்திற்கும் அடிப்படைகளை உருவாக்குகிறது.  அன்பென்றொரு நம்பிக்கையும் இணைகிறது.

எழுதுதல் ஆழ்ந்து சிந்திப்பதற்கான வழி” – டான் டெலிலோ.  எழுதுதல் குறித்து டெலிலோ சொன்னது அவருடைய பணிகளின் அளவிற்கு முக்கியமானதும் கூட.  ஒரு படைப்பை எழுதி முடித்து வாசிக்கையில், திருத்தி முடித்து மறுவாசிப்பதில் இதுவரையிலும் சிந்தனைப் புலன் நுழைந்திராத நுண் தூவரங்களில் முளைக்கத் தயாராகவிருக்கும் விதைகள் கண் திறக்கத் தயாராவதை கண்டு அவற்றை மகிழ்ச்சியோடு முளைப்பதற்கான சூழலை சொற்களால் உருவாக்கி விட்ட திளைப்பு, வாசிப்பவர்களால் நிராகரிக்கப்படுவதற்கோ, ஏற்கப்படுவதற்கோ முன்பெழும் அனுபவம்.  ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்பு எழுதுபவரின் பயணத்திற்கான கடவுச்சீட்டாக இருக்கிறது.  நிராகரிக்கப்பட்டவையோ பழைய கத்தியாக கூரின்றி பெட்டியில் உறங்குகின்றன.  வாசகர்கள் நிகழ்த்தும் வினையோடு முற்றிலும் தொடர்பற்றதாக எழுதும் செயல் இருக்க, படைப்பின் ஆயுளோ வாசிப்பவர்களின் கண்களையும், மனதையும் சார்ந்திருக்கிறது.  வாசிப்பே புத்தகத்தை உருவாக்குகிறது என்று சொன்ன போர்ஹேசின் கருத்தை ஒத்திருக்கிறது.

வாழ்க்கையை, உயிர்ச்சூழலை, பிரபஞ்சத்தின் அர்த்தமில்லா விரிவை ஒரு மையத்தில் நின்று அவதானித்து படைப்பாக்க முயல்வது, இங்கே ஒரு வாழ்வை வாழ்வதற்கு தனக்குத் தானே அளித்துக் கொள்ளும் வெகுமதி.  அந்த வெகுமதி நம்மை பல கோடி உயிர்கள் மத்தியில் தனிச்சிறப்பு மிக்கவனாய் ஆக்குகிறது.  இங்கே சொல்லப்பட்ட தனிச்சிறப்பே ஒவ்வொரு மனித மனமும் எண்ணிலடங்காத முறை வேண்டி நிற்கிறது.  ஆயினும் அதற்கான வாழ்வை அமைத்துக் கொள்ள தயங்குகிறது.

எழுத்து முதலில் இந்த தயக்கத்தை உடைக்கும் செயல்.  பின்பு சொற்களின் மீது ஏற்படும் பிடிமானம். அதன் பிறகு இலாவகம்.  உழைப்பின்றி இவற்றில் எதையும் பெற முடியாது.  பொருள், கருத்து, கவனம், கேளிக்கை, உல்லாசம், இழிவரல், மகிழ்ச்சி, வரலாறு, திளைப்பு ஆகியவையும் இங்கே இச்சமயம் சொல்லாமல் விடப்படுபவையும் படைப்பு, சமூகத்திற்கும், தனி மனிதனின் வாழ்விற்கும் அளிக்கும் ஆபரணங்கள்.  எழுத்து, எழுதுபவருக்கு மட்டுமல்ல வாசிப்பவருக்கும் தங்கள் வாழ்வை அலங்கரித்துக் கொள்ளத் தேவையான ஆடம்பரம்.  அறிவின் முலாம் பூசப்பட்டதால் எழுத்து வெய்யிலாய் ஜொலிக்கிறது.

ஒவ்வொரு முறையும் எழுதுவதற்கான காரணங்களாக எனது தனிமையோ, தொடர்ந்து கொப்பளிக்கும் ஒரு சிந்தனையோ, கவனமோ, தோல்வியோ இருக்கின்றன.  ஆடைகளற்ற உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னுடைய எழுத்து aggressionஆல் உருவாகிறது எனலாம்.  ஒரு சாதாரண வாழ்வை, ஆங்கில வார்த்தைகளில் சொன்னால், mediocrity, status quo, சிந்திப்பதின் சராசரித்தனம் ஆகியவற்றிற்கு எதிரான aggression என்னுடைய எழுத்தாக இருக்கிறது (ஆரம்ப கட்டங்கள் வேறு).  இது என்னுடைய ஒரு நாளின் பெரும்பாலான மணிநேரங்கள் நான் வாழும் வாழ்க்கைக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்கிறது.  ஒரே சமயத்தில் 700 கோடி மனிதர்களில் ஒருவனாகவும், அப்படி இருப்பதற்கு எதிராக நானே எனக்கு எதிராக செய்து கொள்ளும் கலகமுமாக எழுத்து இருக்கிறது.  எழுத்தே எனது அடையாளங்களில் நானே உருவாக்கிக் கொண்டவற்றில் தலையாய ஒன்று.  என் முகம் போன்றது.

மண்ணைக் குடைந்தும், மண்ணிலிருந்து வெளியேறியும், ஆகாயத்தை துளைத்தும் உயிர்கள் வாழ்கின்றன.  பொருட்கள் மதிப்பை உருவாக்குகின்றன.  நாமோ இவை அனைத்தையும் மொழியின் வழியாக ஒரு படைப்பாக மாற்றும் வாய்ப்பை பெற்றவர்கள்.  நானோ அவற்றை படைப்பாக மாற்றும் உழைப்பைச் செலுத்துபவன்.

நுண்ணிய அறிவே மிகச் சிறந்தது.  எளிமையும் அதனோடு சேர்ந்தால் அதுவே ஞானமாகவும் இருக்கிறது.  அறிவும், ஞானமும் கூடவே விலகியிருத்தலும், அன்பும் வாழ்க்கையை பீடித்த அர்த்தமற்ற தனிமையை பேயோட்டுகின்றன.  எழுத்து எனது வாழ்வின் அர்த்தமின்மையை, தனிமைச் சுமையை, ஏற்றுக் கொண்ட வாழ்வின் சராசரித்தனத்தை உடைப்பதற்காக தேர்ந்தெடுத்த சாகசமிக்க ஒரு வழி.  அதுவே என்னை நானாக இருக்கவும் அனுமதிப்பதாக இப்போதெல்லாம் வேறெப்போதையும் விட அதிகமாக நம்புகிறேன்.  எழுத்தே எனது நம்பிக்கை.  ஆகவே எழுத்தே எனது தஞ்சமாகவும் இருக்கிறது.

(கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் பிறந்து வளர்ந் பால பொன்ராஜ், நிதி மற்றும் வங்கித் துறைகளில் பணியாற்றுகிறார்.  “அடிக்கடி இடப்பெயர்வும், அதனால் உண்டாகும் அலைச்சலும் நிரம்பிய வாழ்க்கை” என்று கூறும் பால பொன்ராஜ்,   சிறுகதை, கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனங்கள் எழுதியுள்ளார். ‘புத்தகங்கள்   கனவும் மிருகம்‘  – சிறுகதைத் தொகுப்பு (2013), அச்சில் வந்துள்ளது. ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை‘ –  ஜூன் 2016ல் அச்சு வடிவம் பெறவிருக்கிறது)

 

கோடுகளுக்குள் மறையும் வாழ்வு

ஜிஃப்ரி ஹாசன்

புலன்கள் கைவிட்டுச் சென்ற
உடலின் தோலில் குறுக்கும் நெடுக்குமான
கோடுகளால்
வரையப்பட்டிருக்கிறது
உயிரின் கேலிச்சித்திரம்
எந்தக் கணத்திலும் இந்த
கேலிச்சித்திரம்
உடலின் மூப்போடு சேர்ந்து
அழிந்து போகலாம்
அல்லது
வாழ்வு மங்கிப் போகும்
கணங்களில் எல்லோரது
பார்வையிலிருந்தும்
நுட்பமாய் மறைந்து போகலாம்
தெருவோரக் காட்சிப்பொருளாகக் கூட
கண்டுகொள்ளப்படாதவர்களின்
அந்திம மூச்சுக் காற்றின்
உஷ்ணம் காற்றை
மேலும் வெம்மையூட்டிக் கொண்டே
இருக்கிறது
சர்வதேகமும் சாறாகப் பிழியப்பட்ட பின்
வெறும் சக்கையாய் உடல்
எஞ்சும் கணத்தில்தான்
வாழ்வென்பதே நாம் கட்டமைத்த
மிகப் பெரும் பொய்
என்பது நினைவின்
தாழ்வாரங்களில் படிகிறது
உடலில் வரையப்பட்டிருக்கும்
உயிரின் கேலிச்சித்திரங்களை
வரைந்த கடவுளின் தூரிகையில்தான்
நம் எல்லோருக்குமான கேலிச் சித்திரம் இருக்கிறது
வாழ்வை ஒரு கேலிச்சித்திரமாய்
வரையும் கடவுளின்
நித்திய தூரிகை அது!