எழுத்து

சலனம்

பெருந்தேவி

படுக்கைவிரிப்பைத் தட்டிப்போட்டேன்
ஜன்னல் பக்கம் சின்ன அசைவு
உற்றுப் பார்த்தேன்
நிழலைப் போலெழும்பி கண்முன்
நின்றது மண்டையோடு
(எல்லா மண்டையோடுகளைப் போல)
இதற்கும் சிரித்த களையான முகம்
என்றாலும் எனக்கேயானது அந்தச் சிரிப்பு
என்று கண்டுகொண்டபோது மகிழ்ச்சி
நிலைகொள்ளவில்லை
சுப்ரமணியபுர நாயகனின்
ஸ்டைல் (அதுவேயான) தலையசைப்பில்
அதைச் சுற்றி அடர்ந்த
இருள் ஒரு டோப்பா கலை
‘உடலும் இல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்’
கள்ளக்குரல்களில்
(வாசல் நேர்வழி அது வராததால்)
கலந்து பாடினோம்
கனவில் கையற்ற அது
(இருந்தாலும்)
இரு கைகளையும் அகல விரித்து
ஆகாவென சைக்கிள் ஓட்டுகிறது
நானும் ஒவ்வொரு தெருமுக்குக்கும்
45˚ பறவைப் பார்வை
கிளுகிளுப்பில் நடக்கிறேன்
கடைசியில் துரோகம்
என்னையும் உந்தும்போது
எப்படி சாகடிப்பது மண்டையோட்டை

 

எதற்காக எழுதுகிறேன் – டி. கே. அகிலன்

டி. கே. அகிலன்

எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல. எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக, எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!

எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன்.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து 2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில் சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும் அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது மனக்கிலேசம் அடைந்தால், ”ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம் நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது. மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்” என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின் மீண்டும் உறைந்திருத்தல்.

இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக் குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ”குழுமத்தில் நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக, என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்” என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச் சென்று விட்டது.

ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது. எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொரு புறத்திலிருந்தும் நுண்மையாக மாற்றத் தொடங்கியது.

இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என் சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான பொறுப்புணர்வையும் ஆர்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம் (Blog) ஒன்றைத் தொடங்கி எழுதியவற்றை அவ்வப்போது அதில் பதித்து வந்தேன். எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது. அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக அனுப்பி வைத்தேன். ‘சிறகு‘ இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர் வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் ‘சொல்வனம்‘ சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர்த்தப்பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான் எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.

 

oOo

(டி. கே. அகிலன் எழுதத் தொடங்கியது 2008 இறுதியில். அவ்வப்போது எழுதியவற்றை, அது மிக அதிகம் இல்லையென்றாலும், wwww.change-within.blogspot.com என்னும் வலை முகவரியில், ”அகமாற்றம்” எனப் பெயரிடப்பட்ட பக்கத்தில் எழுதி வருகிறார். 2014-ம் வருடத்திலிருந்து ”சிறகு”, ‘சொல்வனம்” ஆகிய இணையப் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன)

எதற்காக எழுதுகிறேன்? – பேயோன்

பேயோன்

எழுத ஒரு விஷயம், ஒரு ‘பொறி’, தோன்றும்போது எப்படி எழுதாமல் இருக்க முடியும்? ஆனால் இந்த primal உந்துதலைத் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பது தவிர்க்க இயலாதது.

நான் என்னுடைய அறிவார்த்தத் திருப்திக்காக எழுதுகிறேன், என்னைப் போன்ற ரசனையைக் கொண்ட, நான் கவனிக்கும் அதே வேடிக்கையான விஷயங்களை அதே பார்வையில் பார்க்கும் படிப்பாளர்களுடன் என் ரசனையைப் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். சில (பல) படைப்புகள் அநேகமாக எனக்கு மட்டுமே ஈர்ப்பவை. உதாரணமாக, ‘இன்றைய செய்தித்தாள்’ – ஒரு அர்த்தமும் மேலான நோக்கமும் இல்லாத கதை இது. ஆனால் என் படைப்புகளில் எனக்குப் பிடித்தவை என்று பட்டியலிட்டால் முதலில் இதைத்தான் குறிப்பிடுவேன்.

ஆகவே நான் அடிப்படையில் என் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். அதுதான் இயல்பானது என்று நினைக்கிறேன். மற்றவர்களைக் கவரும் தொழிலில் இல்லாத பட்சத்தில், நமது அறிவுத் திறனால் மற்றவர்களை அசத்த வேண்டியிராத பட்சத்தில், நம்முடைய திருப்திக்காகத்தானே எழுத முடியும்? சுயதிருப்தி, ரசனைப் பகிர்வு ஆகியவை என்னுடைய இலக்குகள்.

நான் எழுதுவது முதலில் எனக்குத் திருப்தியளிக்க வேண்டும். எழுதுவது எனக்கு அந்தரங்கமான ஒரு விஷயம். பலருக்கும் அப்படி இருக்கலாம். என் விஷயத்தில் ஏன் அப்படி என்றால், நான் எப்போதோ படித்த புத்தகங்களைத்தான் என் தூரிகையால் மீட்டுருவாக்க விரும்புகிறேன். ரஷ்ய இலக்கியம், கலை, இரண்டாம் உலகப் போர், 50களில் 60களில் எழுதப்பட்ட அகிலன், கல்கி, நா. பார்த்தசாரதி நாவல்கள், ராஜேஷ்குமார் நாவல்கள், அபத்த இலக்கியம் போன்ற பழைய வாசிப்பில் தங்கிவிட்ட விஷயங்களைத்தான் நான் வேறு வடிவங்களில் எழுதுகிறேன்.

சமீபகாலமாக மார்வெல்-DC காமிக்ஸ், அவற்றின் திரைத் தழுவல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். ‘ஒமேகா செயல்திட்டம்’ நான் விரும்பி எழுதிய கதை. அதில் வரும் குறிப்புகள் யாருக்கும் புரிய வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரிந்தாலும் நான் எழுதியே ஆக வேண்டிய நிலை. அது தொடராகவும் நீளலாம். இது எனக்காக எழுதியது. எனக்கு மட்டுமே புரிந்தால்கூடப் பரவாயில்லை. நான் அங்கீகாரத்திற்காக எழுதுவதில்லை. வந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் என் நோக்கம், எழுத வேண்டியதை எழுதுவது. இன்னொரு எடுத்துக்காட்டு, ‘விஷ ஊசி’. இது இரண்டாம் உலகப் போரின்போது நடக்கும் உளவுக் கதை. இதுவும் தொடரும்.

எழுதுவது எனக்கு ரொம்பப் பர்சனலான விஷயம் என்பதை இதை இன்னும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு விளக்க விரும்புகிறேன். ‘பெரும்பாலும் குறுங்கவிதைகள்’ தொகுப்பில் வரும் ‘குவியல்’, ‘இன்றைக்குக் காலையில்’ ஆகிய கவிதைகள் முறையே ஞானக்கூத்தன், ஆனந்த் ஆகியோர் கவிதைகளின் மறுவாசிப்பு மற்றும் பகடி.

ஞானக்கூத்தன் கவிதை:

சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது.

என் கவிதை:

குவியல்

தனிக்கல் அது சரியும் வரை
சூளைச் செங்கல் குவியலிலே.

ஆனந்தின் கவிதை:

சற்றைக்கு முன்

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.

என் கவிதை:

இன்றைக்குக் காலையில்

இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட
நன்றாக இருந்த மனிதர் எங்கே?
அவர் இன்றைக்குக் காலையில்
நன்றாக இருக்கிறார்.

நான் skits எழுதுபவன். கதை, கவிதை என எதுவாக இருந்தாலும் அது ஓர் elaborate joke-ஆக அல்லது practical joke-ஆக வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஒரு படைப்பு வெற்றியா தோல்வியா அல்லது ‘புரமோட்டட் வித் வார்னிங்’-ஆ என்பதை நான்தான் தீர்மானிக்கிறேன். இந்த ஸ்கிட்களுக்கும் நெடும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் தேவையான சிந்தனைகள் எனக்கு இருக்கின்றன, பார்ப்பதில்/படிப்பதில்/கவனிப்பதில் கிடைக்கின்றன. இவற்றின் சிற்பி என்கிற முறையில் இவற்றை ‘வடிப்பதை’த் தவிர வேறு வழியில்லை என்பதால் எழுதுகிறேன்.

ஆகவே, நான் ‘வெறும்’ நகைச்சுவை எழுத்தாளன் என்பதையும் மீறி எனது அறிவுப்பூர்வமான மனநிறைவுக்காகவும் என் படைப்புகளுக்கு மிகையாக விளக்கமளித்து உயர்த்திப் பிடிக்காமல் சரியாகப் புரிந்துகொள்ளும் அந்த ஆறேழு படிப்பாளர்களுக்காகவும் எழுதுகிறேன். 🙂

oOo

(தமிழில் ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர். எழுத்துத் துறையில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.)

பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம்

அ முத்துலிங்கம்

அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் Gone with the Wind புத்தகம். அதை எழுதியவரின் பெயர் மார்கிரட் மிச்செல். இந்தப் புத்தகத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. இதைப் படமாக்கியபோது பல ஒஸ்கார் விருதுகளையும் அள்ளியது. கேள்வி என்ன வென்றால் அவருடைய கணவர் அன்று வெறுத்துப்போய் சொல்லியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எங்களுக்கு படிக்கக் கிடைத்திருக்குமா? அது அதற்கு ஒரு நேரம் இருக்கிறது.

நான் பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஏன் எழுதினேன் என்று இப்பொழுது நினைத்தால் தெளிவான பதில் கிடையாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்படி ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. கேள்வி இதுதான். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப் புத்தகங்கள். நான் எங்கள் வீட்டில் ஐந்தாவது பிள்ளை. நாலு பேர் படித்து முடித்த பின்னர் என் முறை வரும்போது பாடப்புத்தகம் எனக்கு வந்து சேரும். அநேகமாக முன் அட்டையோ கடைசி பக்கமோ இருக்காது. நான் படித்து முடிந்த பின்னர் அது என் தம்பியிடம் போகும். நான் படித்த பத்திரிகைகள், நாவல்கள் எல்லாமே இரவல் வாங்கியவைதான். 1964ம் ஆண்டு அருமை நண்பர் செ.கணேசலிங்கன் என் சிறுகதைகளை புத்தகமாகப் பதிப்பித்தார். அதன் தலைப்பு ’அக்கா’. அதுதான் நான் முதல் சொந்தம் கொண்டாடிய புத்தகம். மார்கிரெட் மிச்செல் போல நான் சொந்தமாக்குவதற்கு நானே ஒரு புத்தகம் எழுதவேண்டி நேர்ந்தது.

அந்தப் புத்தகத்துக்கு நான் வெளியீட்டு விழா வைக்கவில்லை. அதற்குப் பின்னர் எழுதிய 21 புத்தகங்களுக்கும் கூட ஒருவித விழாவும் நான் ஏற்பாடு செய்தது கிடையாது. சில நண்பர்கள் கேட்பார்கள் ’உன்னுடைய புத்தகம் ஒன்று வெளிவந்துவிட்டதாமே. எனக்கு ஒரு புத்தகமும் நீ தரவில்லையே’ என்று. அந்த நண்பர் நல்ல வசதியானவராகத்தான் இருப்பார். ஆனால் நான் இலவசமாக ஒரு புத்தகம் அவருக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பார்.

தமிழில் எழுதுபவர்களில் முழு நேர எழுத்தாளர்கள் வெகு குறைவு. அநேகமானோர் வசதி இல்லாதவர்கள். அப்படியிருந்தும் வருமானத்துக்காகத் தமிழில் எழுதுபவர்கள் கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. தமிழில் எழுதினால் காசு காணமுடியாது என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். அதுதான் சிறுவயதில் இருந்தே நான் என்ன படிக்கிறேன் என்பதை என் பெற்றோர் கண்காணித்தார்கள். எதிர்காலத்தில் நான் எழுத்தாளனாக வந்து சிரமப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவல் நாவல்களை ஒளித்து வைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரொறொன்ரோவில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை எனக்குத்தெரியும். பெற்றோரின் புத்திமதியை ஏற்காமல் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். அவர் சொல்லுவார் தன்னுடைய வருடாந்த வருமானம் 24,000 டொலர்கள் என்று. அதாவது கடைநிலையில் உள்ள தினக்கூலிக்கு கனடாவில் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இது குறைவுதான்.

எழுத்தாளரின் ஏழ்மை நிலையைச் சொல்ல ரொறொன்ரோவில் ஒரு கதை உண்டு. ஓர் எழுத்தாளரின் மகன் உதவாக்கரை. எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றார். ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார். ’நீ இப்படியே இருந்தால் நான் உனக்கு ஒரு சதமும் விட்டுப் போகமாட்டேன்.’ அப்போது மகன் கேட்டான், ’அப்பா, அந்த ஒரு சதத்தை நீங்கள் யாரிடம் கடன் வாங்குவீர்கள்?’

எழுத்தாளர் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. படைப்பின்பம். ஒரு படைப்பின் எல்லையை அடைந்து அது பூரணமாகும்போது கிடைக்கும் இன்பம் பற்றி படைப்பாளிகளுக்குத் தெரியும். அதற்கு ஈடு இணையில்லை. ஓர் ஓவியர் ஓவியம் வரைந்து முடிந்ததும் இந்த ஓவியம் எனக்குள் இருந்தா வெளியே வந்தது என்று வியப்படைகிறார். ஒரு சிற்பியின் மனநிலையும் அதுதான். சிற்பம் பூர்த்தியடையும்போது அவரடையும் பரவசம் சொல்லிமுடியாது. உலகத்தில் முன்பு இல்லாத ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சி அதியுன்னதமான ஒரு நிலையில் பிறக்கிறது.

ஒன்பதாவது இசைக்கோவையை படைத்தபோது பீதோவனுக்கு செவிப்புலன் போய்விட்டது. அவர் இசைக் குறிப்புகளை எழுதியபோது இசை அவருக்குள் கற்பனையில் உருவானது. இறுதியில் இசைக் கோவையை எழுதி முடித்ததும் வியன்னா இசையரங்கத்தில் வாத்தியக் குழுவினால் இசைக்கப்பட்டது. இசை முடிந்ததும் சபையோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். பீதோவனால் தன்னுடைய இசைய மட்டுமல்ல அதை அனுபவித்த மக்களின் கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் கூடக் கேட்கமுடியவில்லை. பீதோவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் இவர் தோளைத் தொட்டு சபையோரை சுட்டிக்காண்பித்தார். அப்போதுதான் பீதோவனால் மக்களின் வரவேற்பை உணரமுடிந்தது. அந்தக் கணம் அந்த இசையைச் சிருட்டித்த பெருந்தகையின் மனம் எத்தனைக் குதூகலத்தை அனுபவித்திருக்கும்.

400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ தானாகவே இரவு பகலாக தேய்த்துத் தேய்த்து உண்டாக்கிய தூரக் கண்ணாடியை வானை நோக்கித் திருப்பினார். வியாழன் கிரகத்தை முதன்முதலாக தூரக் கண்ணாடியால் நோக்கியபோது ஓர் அதிசயத்தைக் கண்டார். வியாழன் கிரகத்தைச் சுற்றி நாலு சந்திரன்கள் சுழன்றன. அவருக்கு கைகள் நடுங்கின. கண்களில் நீர் கோர்த்தது. இந்தப் பூமியில் இதற்கு முன்னர் ஒருவருமே காணாத காட்சி அது. அவர் முதன்முதலாக அந்த அதிசயத்தைக் காண்கிறார். அவரால் அந்தப் பரவசத்தை தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளர் ஒன்றைப் புதிதாக படைப்பதும், ஒரு விஞ்ஞானி புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பதும் ஒன்றுதான். பரவசம் ஒன்றேதான்.

பாராட்டுகள் எழுத்தாளருக்கு உந்து சக்தி. சேக்ஸ்பியரை விமர்சித்தவர்கள் பலர் ஆனால் அவர் கவலைப்படவே இல்லை. பாராட்டுகள் அவரை முன்னே செலுத்தின. அழியாத கவிதைகளையும் நாடகங்களையும் உலகுக்குத் தந்தார். விமர்சகர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ’எந்த ஊரிலாவது விமர்சகருக்குச் சிலை வைத்திருக்கிறார்களா?’ உலகம் கொண்டாடுவது எழுத்தாளரைத்தான். விமர்சகரை அல்ல.

சமீபத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பாராட்டுகள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதவை. எழுதும்போது ஓர் எழுத்தாளர் சந்திக்கும் இடர்களும் முட்டுக்கட்டைகளும் பாராட்டுக் கிடைக்கும்போது மறைந்துபோய் அடுத்த எழுத்துக்கு உற்சாகம் கூட்டுகிறது.

84 வயதைத் தாண்டிவிட்ட ஒரு முதிய எழுத்தாளரைச் சமீபத்தில் தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். அவருடன் எனக்கு முந்திபிந்தி எழுத்து தொடர்பு இருந்தது கிடையாது. நேரில் சந்தித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார். பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மதிப்புமிக்க விருதுகள் பல பெற்றவர். அவர் நான் என்ன விசயமாக அவரை அழைத்தேன் என்று கேட்கவே இல்லை. மூச்சு விடாமல் பேசினார். ’நீங்கள் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் எல்லாவற்றையும் அவற்றின் படங்களுடன் சேர்த்துக் கத்தரித்து வைத்திருக்கிறேன். பைண்ட் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இப்படி ஒரு பாராட்டா? அது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும்.

அடுத்த சம்பவம் ஓர் அதிகாலையில் நடந்தது. அதுவும் சமீபத்தில்தான். யாழ்ப்பாணத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். யார் என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனக்கு அவரிடம் ஒரு வித பழக்கமும் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டேன். ’ஐயா, நான் உங்கள் வாசகன். இப்பொழுதுதான் பூசா சிறையில் நாலு வருடம் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறேன். பூசா சிறையிலேதான் உங்கள் புத்தகத்தை முதலில் படித்தேன். படித்துவிட்டு என் நண்பனுடன் தினமும் கதைகளைப் பற்றி விவாதிப்பேன் என்றார். புத்தகத்தின் தலைப்பு தெரியுமா என்றபோது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் இருந்த அத்தனை சிறுகதைகளையும் வரிசையாகச் சொன்னார். சில வசனங்களை அப்படியே ஒப்பித்தார். ’சிறையிலே கிடைத்த இந்தப் புத்தகத்தை நான் திருடி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்து யாரோ களவாடிவிட்டார்கள். சிறைக்குள்ளே இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆனால் வெளியே ஒரு புத்தகக் கடையிலும் இல்லை. எங்கே வாங்கலாம்?” இதுதான் கேள்வி. இவர் சொன்னதைக் கேட்டு நான் மகிழ்வதா அல்லது துக்கப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவருடைய பாராட்டு என் மனதுக்குள் இன்றும் பொங்கியபடி இருக்கிறது.

பாராட்டுகள் முக்கியம்தான் ஆனால் அவை மட்டும் ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து எழுத வைக்கிறதா? நீ இனி எழுதத் தேவை இல்லை என்று சொன்னால் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிடுவாரா? அவர் எதற்காக முதலில் எழுதத் தொடங்கினாரோ அந்தக் காரணம் இறுதிவரை அவர் பின்னாலேயே இருக்கும். ஏதோ ஓர் உந்துதல் அவரை முதலில் எழுதத் தூண்டியது. அது இறுதிவரை மறைவதே இல்லை. அதுவே அவரை எழுதவைக்கிறது.

ஐஸாக் அசிமோவ் என்ற அறிவியல் எழுத்தாளர் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி, உலகப் புகழ்பெற்றவர். தன்னுடைய கடைசி கதையைத் தட்டச்சு மெசினில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போதே அதன் மீது தலை கவிழ்ந்து இறந்து போனார். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ’கிழவனும் கடலும்’ நாவலை எழுதியவர், ஒரு வசனத்துக்காகக் காத்திருந்தார். அது வரவே இல்லை. விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்துபோனார். எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸை யாரோ கேட்டார்கள் ’ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் இடக்காகப் பதில் சொன்னார். ‘அடுத்த 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’

நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அவர் பிரதம பேச்சாளர். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அவர் திடீரென்று ‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்தார். சபையோர் திகைத்துவிட்டனர். எதற்காக இந்த அறிவிப்பு. ஓர் எழுத்தாளரால் எழுதாமல் இருக்க முடியுமா? அதைச் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவருடைய புத்தகம் ஒன்று வெளிவந்தது. பின்னர் ஒருநாள் அவருடைய சிறுகதை நியூ யோர்க்கர் பத்திரிகையில் வந்து படித்தேன். இரண்டு வருடங்கள் கழிந்தன. அவருடைய இன்னொரு புத்தகம் வெளிவந்தது. அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது. ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால் , ‘எழுதுவதை நிறுத்த முடியாது, அதுதான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று பதில் சொல்லத் தோன்றுகிறது.

எழுத்தாளர் வேலை எழுதுவதுதான். தச்சு வேலைக்காரருக்குச் சம்பளம் கிடைக்கும். வர்ணம் பூசுகிறவருக்கு கூலி கிடைக்கும். ஆனால் எழுத்தாளர் எழுதுவார். சம்பளம் எதிர்பார்க்கமாட்டார். அவரால் எழுதுவதைச் செய்யாமல் இருக்கவும் முடியாது. எழுதும்பொழுதுதான் அவர் பிறந்ததன் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது.

அவர் தன் புத்தகங்களை வெளியிடத் தேவையில்லை. வீடு வீடாகப் போய் விற்க வேண்டியதில்லை. நாடு நாடாகப் புத்தங்களை அனுப்பத் தேவையில்லை. வண்ணத்துப்பூச்சி தேடித்தேடி பூக்களைக் கண்டு பிடிப்பதுபோல வாசகர் தேடித்தேடி எழுத்தாளரை எப்படியோ அடையாளம் கண்டுவிடுவார். பூக்கள் பறப்பதில்லை.

oOo

(இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.  அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.)

எதற்காக எழுதுகிறேன் ? – சோழகக்கொண்டல்

சோழகக்கொண்டல்

எதற்காக எழுதுகிறேன் ? – காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.

காலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.

அட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது நாமே வலிந்து சுமந்துகொண்ட இலக்குகளுக்கும் பின்னே அலைகையில், தனக்கேயான உலகத்தை மனம் ஒரு கூட்டுப்புழுவென பின்னிக்கொள்கிறது. பணமாகும் பட்டுப்புழு எப்படி ஒருபோதும் தன் கூட்டை உடைப்பதே இல்லையோ அப்படியே சில்லறை வெற்றிகளுக்குப் பின்னால் அலையும் மனங்களுக்கும் சிறகு முளைப்பதேயில்லை.

திசைகளைத் திமிறிச்செல்லும் சிறகுள்ள மனங்கள் மட்டும், அழகும் வலியும் நிரம்பி வழியும் புதிய உலகங்களைக் கண்டுகொள்கின்றன. அந்தக் கனவு உலகங்கள், எப்போதுமே நிச்சயிக்கப்பட்ட மாறிலிகளால் இயங்கும் புழுவின் கூடுபோல இருப்பதில்லை. இந்தத் தரிசனம் தரும் திடுக்கிடல் கிளர்த்திவிடும் நிலைக்கொள்ளாமையையே எழுதி எழுதிப் பார்த்து மொழியில் தன் உலகத்தை வரையறை செய்யமுயல்கிறது மனம். உலகம் பிதுங்கி வழியும் மனித நெரிசலிலும் இந்த உணர்வின் உலகங்கள் மட்டும் எண்ணற்ற பரிமாணங்களில் பிரிந்தே கிடக்கையில், புனைவின்மொழி எனும் ஒற்றைச் சாத்தியமே இவற்றை ஒன்று கோர்க்க எஞ்சியிருக்கிறது.

நுண்மை, பிரம்மாண்டம் எனும் துருவமுடிவிலிகளுக்கு இடையில் நிகழும் முடிவற்ற தாவல்களே என் மனவெளி. அதீத்தால் மட்டுமேயான அந்த பெருவெளிக்குள் நிகழும் பயணங்களின் குறிப்புகளையே கவிதைகளாக எழுதுகிறேன். அவை நான் கண்டடைந்த கனவு உலகங்கள் பற்றிய அனுபவக் குறிப்புகள் மட்டுமல்ல. யாரும் எப்போது விரும்பினாலும் அங்கே திரும்பிச்செல்வதர்க்கான வரைபடமும் கடவுச்சொற்களும் அடங்கிய ரகசியமும் கூட. அந்தக் கனவுகள் சூல் கொள்ளும் காலத்தையும் உணர்வையும் கருவில் கொண்ட விதைகளே நான் எழுதிச்சேர்ப்பவை. நித்தியமும் அகாலத்தில் உறைந்திருக்கும் அந்த உலகங்களை அடையும் ஆயிரம் வழிகளையும் சொல்லிவிடவே முயல்கிறேன். அதை உணர்ந்து நெருங்கும் வாசிப்பு, வாசிப்பவர்க்கு ஒற்றைச் சாளரத்தையேனும் திறக்குமென்பதே என் நம்பிக்கை. அப்படியோர் சிறகு என் அந்தகாரத்தின் தனிமைக்குள் ஒலிக்குமென்றே காத்திருக்கிறேன்.

மேலும், தனிமையைப் பற்றியே நான் அதிகம் எழுதுவதாக சொல்லப்படுவதை அறிகிறேன். தனிமை மட்டுமல்ல இரவும் என் எழுத்தில் எப்போதுமிருக்கும் பாத்திரம்தான். ஏனெனில், இரவும் தனிமையும்போல நான் அணுகியறிந்தவை ஏதுமில்லை. பகலென்பதும் வாழ்வென்பதும் எனக்கென்றும் தெளிவற்ற கனவுகளே. தனிமைக்குள் உறையும் இரவென்பதும் கனவென்பதுமே எனது நித்திய சஞ்சாரம். அந்தக் கருவறையின் வாசனை என் மொழியில், குரலில், ஒலிப்பதை தவிர்ப்பது கடினம். மேலும் இந்தத் தனிமையின் நிறத்தை, மணத்தைப் பாடும் ஆயிரம் பாடல்களே என்னில் கிடந்து அலைக்கழிக்கும் விசைகள். அவற்றைப் பாடித்தீர்ப்பதொன்றே இந்தப் பறக்கத்துடிக்கும் புழுவிற்கு இறக்கை முளைத்து பட்டாம்பூச்சியாகும் வழி. அதுவே என்னை எழுதவும் செய்கிறது.

oOo

(கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கும் கோவிந்தபுத்தூர் சொந்தஊர். இளங்கலை முசிறியிலும் முதுகலை திருச்சி பாரதிதாசன் பல்கலையிலும். அதன்பிறகு சில ஆண்டுகள் இந்திய அறிவியல் கழகத்தில் பணி, தற்போது ஃபின்லான்ட் தாம்பரே தொழில்நுட்ப பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு. சொல்வனம், பதாகை, திண்ணை, இன்மை மற்றும் சில இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி வருகின்றன. புனைவு மற்றும் அபுனைவு எழுத்தில் தீவிர வாசிப்பு அறிவியலுக்கு நிகரான இணை வாழ்க்கையை எனக்கு அளிக்கிறது, என்று கூறும் சோழகக்கொண்டல் காந்திய சிந்தனை, ஆன்மீக, அரசியல் மற்றும் இயற்கை தத்துவங்களில் ஈடுபாடும் தொடர்ந்த பயிற்சியும் கொண்டவர். தற்போது, மக்களாட்சி எனும் தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்).