எழுத்து

எழுத்து வேறு, வாழ்க்கை வேறல்ல…

ஜெயஸ்ரீ ரகுராமன்

P3

நானும், ரகுவும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ரகு தான் வாசிப்பதை ரசனையுடன் பகிர்ந்துகொள்வதில் சமர்த்தர். கணையாழியில் பாவண்ணன் எழுதிய கதை ஒன்றை (சிலம்பம் சொல்லித்தரும் ஆசிரியர் பற்றியது) மிகவும் ரசனையோடு வாசித்துக் காண்பித்தார். “இவர் இந்தப் பக்கம் வளவனூர்க்காரராகத்தான் இருப்பார்போலஎன்று சொல்லி ரசித்து ரசித்து வாசித்தோம். அதன் பிறகு பாவண்ணனின் சிறுகதைத் தொகுதிகளை வாங்க ஆரம்பித்தோம். ‘அடுக்கு மாளிகைஎன்ற கதையைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் நானும், ரகுவும் கண்ணீர் கசிய சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அக்கதையை எங்கள் குழந்தைகளுக்கும் (சிறுவர்களாய் இருந்தார்கள் இருவரும்) வாசித்துக் காண்பித்தோம்; அவர்களுக்கும் அழுகையே வந்துவிட்ட்து. வாசிப்பின் மூலமே நாங்கள் அறிந்த பாவண்ணனை நேரில் சந்திப்போம்; நண்பர்களாவோம் என்று அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததேயில்லை.

கடலூரில்இலக்கியச் சோலைஎன்ற அமைப்பை நடத்திவரும் எழுத்தாளர் வளவ. துரையன், ‘பாவண்ணனின் படைப்புலகம்பற்றி 28/10/2000 அன்று ஒரு முழுநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியின்போதுதான் பாவண்ணனைப் பார்த்தோம். அவர் தன் ஏற்புரையை வழங்கும் நேரத்திற்குத்தான் என்னால் போக முடிந்தது. எழுத்தாளர்கள் என்றால் நெருங்கவே முடியாதவர்களாக இருப்பார்கள்; நாம் பேச முடியுமா?என்றெல்லாம் மனத்தில் அச்சமும், தாழ்வுணர்ச்சியும் தோன்றின. ஆனால், அவர் ஏற்புரையைத் தொடங்கிய விதமே அவருடைய எளிமையான, நெகிழ்ச்சியான மனதைக் காட்டிவிட்ட்து. அப்போதே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியிருந்தன; பல சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் என அவருடைய  புத்தகங்கள் எத்தனையோ வெளிவந்திருந்தன. அதனால்தானே அவர் படைப்புலகத்திற்கான விழாவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது? ஆனால் மனதில் அப்படியெல்லாம் பெரிய பயத்தை ஏற்படுத்தாமல், ‘இப்படியும் ஒரு மனிதரா?என்ற ஆச்சரியமே மனதில் நின்றது. அவருக்கான அந்நிகழ்ச்சியும், ஏற்புரையின்போது அவர் குரல் நெகிழ்ந்து, கண்கள் பனித்த காட்சியுமே மனதில் உறைந்துவிட்டன. அந்த அசைபோடலின் விளைவாக நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். நம்பவே முடியாதபடி, அடுத்த ஐந்தாம் நாள் பதில் கடிதம் வந்துவிட்டது. அதன் பிறகு எத்தனையோ கடிதங்கள், சந்திப்புகள். எல்லாவற்றிலும் இலக்கியம் மட்டுமல்லாது, ஒரு தாயின் பரிவுடனான அன்பு, கரிசனம், வாழ்க்கை பற்றிய வழிகாட்டுதல்கள் (எவ்வித அறிவுரைத் தொனியும் இன்றி) என எல்லாமே இருக்கும்.

எப்போதெல்லாம் கடிதம் எழுதுகிறோமோ, அப்போதெல்லாம் உடனே பதில் வரும்; ஆச்சரியமாக இருக்கும். ஒரு பக்கம் அலுவலகப் பணி; மறுபக்கம் எழுத்து, வாசிப்பு; இன்னொரு பக்கம் சொந்த பந்தங்கள் என்று குடும்ப வாழ்க்கை. இவை எதையுமே அவர் ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடுத்ததே இல்லை. எல்லாவற்றிற்கும் எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது? என ஆச்சரியப்பட வைக்கும் அவரது பணிகள்.

புத்தகங்களைப் படித்தால் விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவரிடமிருந்தே எனக்கு வந்தது எனச் சொல்லலாம். 2003ல் அவருடையஎனக்குப் பிடித்த கதைகள்என்ற தொகுப்பு வெளிவந்தது. தனக்குப் பிடித்த கதைகளாக நல்ல சிறுகதைகளை அடையாளப்படுத்தியவர், கதைகளின் நுட்பமான விஷயங்களை எடுத்துக் கூறியிருப்பது சிறுகதைகளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலைத் தந்தது. 2004ல் வெளிவந்தஆழத்தை அறியும் பயணம்தொகுப்பின் மூலம் என் போன்ற வாசக நண்பர்களுக்குப் பரிச்சயமே இல்லாத பழம்பெரும் தமிழ்ப் படைப்பாளிகளையும், புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், அயல்மொழி எழுத்தாளர்களின் கதைகளையும் அறிமுகப்படுத்தியவர் பாவண்ணனே. இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வளவனூரில் நடைபெற்றபோது, அப்புத்தகம் பற்றிப் பேச வாய்ப்பளித்து, எனக்கும் புத்தகங்கள் குறித்துப் பேச வரும் என்னும் தன்னம்பிக்கையை ஊட்டியவர் இவரே. பல வருடங்கள் கழித்து அந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவைப் பார்க்கும்போது, நான் பேசும்போது எவ்வளவு பதற்றமாக இருந்தேன், என் தொண்டைக்குழி எவ்வளவு உருண்டது என்று தோன்றும். இப்படியிருந்த என்னைத் தன்னம்பிக்கையூட்டி வளர்த்தவர் பாவண்ணன் அல்லவா?எனும் நினைப்பு, கண்ணோரம் நீர் துளிர்க்க வைக்கிறது.

”’ஒரு படைப்பை எவ்வாறு அணுகுவது?என்கிற கேள்விக்கான விடையில் இளம் வாசகர்கள் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இருப்பது நல்லது; இப்பயிற்சி, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே இளம் வாசகர்கள் நம்பி, நாடி வர வேண்டியிருக்கிறது. கேட்டுத் தெரிந்து கொள்வதில் எவ்விதப் பிழையுமில்லை; சொல்லிச் செல்வதில் மூத்தவர்களுக்கு எவ்வித இழப்புமில்லை. உண்மையில் இதை ஒரு கடமையாகவே மூத்த வாசகர்கள் செய்வது நல்லதுஎன்பவை தன்னுடையவழிப்போக்கன் கண்ட வானம்என்ற கட்டுரைத் தொகுதியில் பாவண்ணன் குறிப்பிட்டுள்ள வரிகள். இவ்வரிகளை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

2004ல் வெளிவந்தஎழுத்தெனும் நிழலடியில்என்ற கட்டுரைத் தொகுப்பு, முதுபெரும் எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளின் வழியே இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்று. ‘ஆயிரம் மரங்கள்; ஆயிரம் பாடல்கள்என்ற புத்தகம் (2004) கன்னட இலக்கிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு அமைந்ததே.

நூலகத்திற்கோ, புத்தகக் கண்காட்சிக்கோ செல்லும் முன், வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிக் கேட்டால் எப்போதுமே தயாராக ஒரு முழுநீளப் பட்டியலே தருவார். மடை திறந்த வெள்ளமென தன் ஞாபகத்திலிருந்தே சொல்லும் அவரது திறனைக் கண்டு நான் வியக்காத நாளேயில்லை.

நல்ல கதை, நல்ல கவிதை, நல்ல நாவல், நல்ல சினிமா என எல்லாவற்றிலும் நல்ல கூறுகளை எடுத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரேதான். கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் எழுதுவதைப் போலவே, தான் படிக்கின்ற நல்ல புத்தகங்களுக்கு உடனடியாக விமர்சனம் எழுதி, அடுத்தவர்களும் அப்புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுபவராய் இருக்கிறார். ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தபின் அவரிடம் அது குறித்துப் பேசினால், “உடனே ஒரு கட்டுரையாக்குங்களேன்என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடைய மேடைப் பேச்சுக்கள் கூட எப்போதும் கட்டுரை வடிவிலேயே எழுதப்பட்டிருக்கும். நான் இது பற்றிப் பேசப் போகிறேன்என்று அவரிடம் பொதுவாக எதையேனும் பற்றிக் கூறினால், “அப்படியே ஒரு கட்டுரை ஆக்கிடுங்கஎன்று அவர் சொல்லத் தவறியதேயில்லை; தவறுவதேயில்லை.

சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் என எதைப் பற்றிச் சந்தேகங்கள் கேட்டாலும் அவரிடமிருந்து உடனடியாகப் பதில் வரும். அவருடைய ஞாபக சக்தி கண்டு நான் பலமுறை ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறேன். சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் பற்றிக் கேட்டவுடன் பதில் சொல்ல முடியாவிட்டால்கூட அதைத் தேடிப்பிடித்து, அது சம்பந்தமாக நாமே மறந்திருந்தாலும், “அன்னைக்குக் கேட்டீங்க இல்லையா?என்று ஆரம்பித்துப் பேசும் அவருடைய நேர்மையும், ஈடுபாடும் வியக்க வைத்திருக்கிறது. அவருக்குத் தெரியாத ஒரு விஷயமாயிருந்தால், “எனக்கு அது கவனமில்லம்மாஎன்று சொல்லக்கூடிய நேர்மையும் அவரிடம் மிகவும் பிடித்த குணம்.

பாவண்ணன் கொடுத்து, சிவராம காரந்த்தின் சில நாவல்களைப் படித்தோம். எங்கள் வீட்டில் இருந்த பாட்டிமண்ணும் மனிதரும்எனும் நாவலைப் படித்துவிட்டுப் பாவண்ணனிடம் அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பார். நானும், ரகுவும் கதைகள், நாவல்கள், சினிமா என்று எதையாவது பேசும்போதெல்லாம் எங்களால் எவ்விதத் தயக்கமுமின்றி பாவண்ணனுடன் பேச முடியும். ஏனெனில், ‘நம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவாரோஎன்ற தயக்கம் அவருடன் பேசும்போது இருப்பதே இல்லை. ‘சேஇதுகூட உங்களுக்குச் சரியாப் புரியலைஎன்ற தொனியில் அவர் எப்போதும் பேசவே மாட்டார். தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி, “இது ஒரு கோணம்; அது ஒரு கோணம்என்பார் அழகாக. அவர் சொன்ன பிறகு நமக்குச் சரியான புரிதல் வரும். பாவண்ணனுடன் நட்பான பிறகு, நாங்கள் படைப்புகளை அணுகுவதற்கு நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.

எங்களுக்கு அடுத்தது எங்களுடைய 20 வயது மகன் தன்னுடைய வலைப்பதிவுகளை அவரிடம் பகிர்ந்து கொள்கிறான். அவனுக்கும் தன் விமர்சனங்களையும், உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். சங்க இலக்கியமும் அவரால் பேச முடிகிறது; கிரிக்கெட்டும் பேச முடிகிறது.

எங்கள் நண்பர் ஒருவர், தன் மகன் பாவண்ணனின் கதை ஒன்றைப் படித்து ரசித்தான் என்று அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; உடனே அந்தப் பையனைத் தொடர்பு கொண்டு அவனோடு பேசியிருக்கிறார் பாவண்ணன். இங்கு இதைச் சொல்வதற்கான காரணம், தலைமுறை வித்தியாசமில்லாமல் பாவண்ணனால் அனைவரிடமும் எளிமையாகப் பழகவும், பேசவும் முடியும். அவருடைய குரலிலேயே அன்பு வழிந்தோடும்.

சொல்லப்போனால், இலக்கியத்தில் மனித வாழ்க்கையைத் தேடுபவர் அவர். இலக்கியம் நம்மைப் பண்படுத்தும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவர்; அதையே எல்லோருக்கும் சொல்பவர். அன்பும், அதனைப் பகிர்தலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை என்பதைக் கடைபிடிப்பவர்; அதையே தன் படைப்புகளின் மூலமும், வாழ்க்கையின் வழியாகவும் சொல்லி வருபவர். எழுத்துக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும், அன்பும் எளிமையும் இணைந்தேயிருக்கும் ஒரு ஆளுமையை நண்பராய் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை நினைந்து, நினைந்து பெருமிதம் கொள்கிறோம்.

எளிமையில் மிளிரும் கலைஞன்

ரமேஷ் கல்யாண்

Jpeg

பாவண்ணனின் கதைகள் அனைவருக்குமானது. அனைவரைப் பற்றியுமானது. அவரது கதைமாந்தர்கள் சாதாரணமானவர்கள். எளியவர்கள். அவரது கதைகள் நம் தோளில் கைபோட்டபடி பேசிச் செல்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் கொள்ளும் நிறைவுக்கும், நெருக்கத்துக்கும் முக்கியமான காரணங்களில், அவர் ஒரு மிக நல்ல, தேர்ந்த வாசகர் என்ற காரணத்தைத்தான் முதலாவதாக கருதுகிறேன். நன்றாக ருசித்து சாப்பிடத் தெரிந்த ஒருவரால்தான் நன்றாக சமைக்கவும் முடியும்.

அவருடைய முன்னுரைகள், கட்டுரைகள் போன்றவற்றில் அவர் தன் வாசிப்பு அனுபவத்தை நமக்கானதாக விரித்துப் பகிர்வதைக் காண முடியும். கநாசுவின் பொய்த்தேவு நாவலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை இதன் சாட்சி. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை என்று அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கும் தமிழின் முக்கியமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவர். தன் அனுபவங்களை, தன் பார்வையில் கண்டவற்றை, கண்டடைந்தவற்றை – கலாபூர்வமாக பதிவுசெய்து கொண்டே போகிறார். வடிவங்களை எழுத்துக்கள் தீர்மானித்துக்கொள்கின்றன.

புதையலைத் தேடிஎன்ற நூல் அவர் படித்த புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. புத்தகங்களை வாசிப்பனுபவமான கட்டுரை மூலமாக அறிமுகப்படுத்தும் வகை எழுத்துகளின் முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புத்தகத்தை தேடிப் படிப்பதில் பாவண்ணனின் தீவிர ஆர்வத்துக்கு ஒரு சோறு பதம்,ஒரு புதையலைத் தேடிஎன்கிற அவரது கட்டுரை.

கநாசுவின், தமிழ் வாசகன் படிக்க வேண்டிய புத்தகங்கள், என்ற பட்டியலைப் படித்து, ஒவ்வொன்றாக சென்று தேடித்தேடி இரண்டாண்டுகளில் அனைத்தையும் படித்து விடுகிறார். ஆனால் ராஜன் எழுதியநினைவு அலைகள்என்கிற புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. யாரைக் கேட்டாலும். எந்த நூலகம் போனாலும் கிடைக்காமல் போகிறது. பிறகு அந்த ஏமாற்றத்துடனேயே முப்பது ஆண்டுகள் கழிகிறது. உப்புச் சத்தியாக்கிரகம் பற்றிய குறிப்புக்காக புத்தகங்களை தேடுகையில் ஒரு கட்டுரையில்தியாகிகள் ராஜன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்என்று ஒரு வரி வருகிறது.  ஆனால் இந்த ராஜன் அந்த ராஜன்தானா என்று தெரியாமல் தவிக்கிறார். பிறகு அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் ராஜனைப் பற்றி எழுதியிருப்பதை பார்த்துவிட்டுஅவர் இவர்தான் என்று நிம்மதியடைகிறார். பிறகு முகம்மது யுனுஸ் எழுதிய பர்மா குறிப்புகள் புத்தகத்தில ராஜன் ஒரு மருத்துவர் என்றும் மரியாதைக் குறைவால் மனம் வாடி பர்மாவை விட்டு வெளியிறினார் என்பதையும் படிக்கும்போது பாவண்ணனுக்கு ஆவல் அதிகமாகிறது. மறுபடி தேடுகிறார். ஒரு நாள் பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில பழைய புத்தக குப்பைகளைப் புரட்டுகையில் புழுதிபடிந்த அட்டையுடன்நினைவு அலைகள்கிடைக்கிறது. புதையல் கிடைத்துவிட்டது என்று உடனே நூலகரிடம் சென்றுநான் எடுத்த புத்தகத்துக்கு பதிலாக இதை மாற்றித்த தாருங்கள்என்கிறார். நூலகர் அது முடியாது. அதற்கு இன்னும் பதிவுஎண் போடப்படவில்லை. எண்கள் இட்டு அடுக்கியபின் பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபடி அதை தேடிச் செல்லும்போது புதிய அடுக்குகள் உள்ளன. ஆனால் அதைக் காணவில்லை. பிறகு சில மாதம் கழிந்து நண்பரிடம் முப்பது ஆண்டுகளாக தொடரும் இந்த ஏமாற்றத்தைப் பற்றி சொல்லுகையில் அவர் கவலைப்படாதீர்கள். புது அச்சில் தயாராகிறது என்று சொல்லி வெளிவந்தவுடன் இவரிடம் தருகிறார். இவர் படித்து முடிக்கிறார். எப்படியிருக்கிறது அவருடைய தேடிலின் இந்த ஒரு சோற்றுப் பதம்!

இவர் ஒரு கவிஞர் கூட. அதற்கும் அவரது ரசனையும் வாசக ஈடுபாடுமே காரணம். அவரது மனம் வரைந்த ஓவியம்தொகுப்பில், நவீன கவிதைகள் பலவற்றை அறிமுகம் செய்து பேசும் கட்டுரைகள் மூலமும் நாம் இதை அறிய முடிகிறது.

அவருடைய கதைகளில் அவர் கதைச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டு,  அப்படி இருந்தும் அதற்குள் இருந்தபடியே சற்று விலகி நின்று பார்த்து அதைச் சொல்லும் பார்வை ஒன்று இருப்பதையும் காண முடியும்.  இது ஒரு வித்யாசமான ஆரோக்யமான பார்வையும் உத்தியும் கூட. இதனால், நம் அனுபவத்தின் ஏதோ ஒரு துளியை அவரது கதைகளில் நாம் அடையாளம் காண முடியும் அல்லது நெருக்கமாக உணர முடியும். ஒரு புகைப்படத்தில் காற்றில் யதேச்சையாக தனியாக பிரிந்து அசையும் கூந்தல் பிரி, முகத்தின் மேல் விழும் நிழல் ஒளி கலவை, புகைப்படத்தை ஒரு பிரத்யேக அழகியல் நிலைக்கு கொண்டுபோகும் யதேச்சை போல நாம் காண முடியும் சக மனிதர்களில் இயல்பில் ஏதோ ஒன்று தனியாக கவனப்படுத்த முடியும் படி அமைத்து கதையை அழகியலுக்கு அருகே கொண்டு போய் விடும் எழுத்து லயம் இவரிடம் காணமுடிகிறது.

அனுபவத்தை கட்டுரையாக்கலாம். கதையாக்கலாம். கவிதையாக்கலாம். ஆனால் அதனதன் வடிவங்களை நிர்ணயிப்பதோ, அதற்கான அலைவரிசையில் சொல்வதோ சவாலானதொரு விஷயம். கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்று வேறொன்று போல நழுவிவிடும். ஆனால் அப்படி ஆகாமல் அதை அதாகவே தருவதுதான் எழுத்தாளுமை. அசோகமித்திரனிடம் இந்த மென்நுட்பத்தைக் காணமுடியும். பாவண்ணனிடமும் இதைக் காணமுடியும்.

உதாரணத்திற்கு  வார்த்தைஇதழில் இவர் எழுதிய ஏரியின் அமைதிஎன்ற கட்டுரை. தாம் பார்த்துப் ரசித்த ஏரியைக் கண்டு, அதன் அசைவின்மை ஒரு மரணத்தை நினைவூட்டி அச்சப்பட வைக்கும் நொடியை அதில் காட்டி இருக்கும் நல்ல படைப்பு அது. ஏரி ஒரு நீர் நிலையாக நம்முடனே வாழ்கிறது. அதன் அசைவுகள் அதற்கு ஒரு உயிர்ப்பை ஊட்டியபடியே  இருக்கின்றன. ஆனால் நீரில் மூழ்கி நண்பனின் மரணம் ஒன்றை கண்டபிறகு அதன் குளிர்ச்சி மிகுந்த முகம் அச்சமூட்டுவதாய் நெளியும். முகத்தில் அடிக்க கைகளால் நீரை அள்ளும்போது ஏரியைப்பார்த்தேன். எல்லாம்  தெரிந்தும் எதுவும் தெரியாத பாவனையில் அசைவே இல்லாமலிருந்தது ஏரி. அமைதியான அதன் முகத்தை முதன்முதலாக அச்சத்துடன் பார்த்தேன்என்பது கடைசி பத்தி. “அமைதி“ – “அச்சம்என்ற இருதுருவங்களை ஒரே வாக்கியத்தில் வைத்து அதன் இடைவெளி தரும் அனுபவத்தை நம்மிடம் தந்துவிட்டுப் போய்விடுவதைப் பாருங்கள்.  சமீப சென்னை வெள்ளத்தில் நீரின் பெருக்கை கண்டபோதுகுழந்தைகள் குழாய் தண்ணீர் பெருகுவதை கண்டும் கூட அச்சப்படும் நிலை என்று பதிவுகளைப் படித்தபோது பாவண்ணனின் இந்த ஏரி எனக்கு நினைவுக்கு வந்தது.

அவருடைய நல்ல சிறுகதைகளில் ஒன்று விகடனில் வந்திருந்த  ‘காணிக்கை‘. இசையின் பின்னணி இல்லாமல் வசனங்கள் இல்லாமல் வாழ்வில் அன்பைப் பற்றிய குறும்படம் ஒன்றின் உச்சக் காட்சியை ஒத்திருக்கும் இந்த கதையின் இறுதிப் பகுதி. திரும்ப திரும்ப என்னைப் படிக்கவைத்த கதை இது. அதில் காட்டுப் பகுதியில் நடக்கும்போது அவ்வப்போது கூவிக்கொண்டு கிளைகள் தாவியபடி கூடவே வரும் குயில் கூட ஒரு பாத்திரம். ஆனால் அது வாசகன் கண்களில் படாது. 

இந்த கட்டுரை போனால் போகிறதுஅந்த கதையை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

ஐயனார் கோவில் முடி இறக்கி காணிக்கை செலுத்துவதற்கு கணேசன் தன் மனைவி மற்றும் மகளுடன் இறந்துபோன தன் அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி.கோவிலுக்கு வந்து போகிறான். பழைய நினைவுகளும், சிறுபிராய தருணங்களும், அம்மாவின் மரணமும், தற்போது பெருகியுள்ள குடும்ப நினைவுமாக ஒன்றையொன்று தழுவியபடி செல்லும் சிறுகதை.  பொங்கல் அடுப்பு எரிந்து கொண்டிருக்க பம்பைக்காரனுடன் வந்து மர நிழலில் ஓய்வெடுத்து பிறகு தலைமுடியில் நீர் தெளிக்கும்போதுஐயனாரப்பனை நினைச்சிக்கப்பாஎன்று நாவிதன் சொல்லும்போது அவனுக்கு அம்மாவின் நினைவு வருகிறது. இந்த ஒரு வரியில் அவர் அம்மாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார். மழிக்கப்பட்டு முடிக்கற்றைகள் விழும்போது அம்மாவின் நினைவு. எதற்கெடுத்தாலும்  என் குழந்தையை உடல் நலம் நன்றாக ஆக்கிவிடு அய்யனாரப்பா.. படையல் வைக்கிறேன்  என்று மஞ்சள் துணியில் நாணயத்தை காணிக்கை முடிந்து  வேண்டிக்கொள்ளும் அன்பு நிறைய ததும்பும் அம்மா அவள்.

அம்மாவுடனான் தன் சிறுபிராய நினைவு வருகிறது. எந்த சின்ன குழந்தையை கண்டாலும் கன்னத்தை கிள்ளி முத்தமிடும் அம்மாவிடம்உன் விரலையே நீ முத்தம் கொடுத்துக் கொள்கிறாயே“..என்று கேட்கும்போதுஉங்க அப்பனுக்கும் உனக்கும் நான் என்ன செய்யறேன்னு கவனிக்கறதே வேலையா போச்சுஎன்று செல்லமாய் விரட்டுவாள் அம்மா. “எனக்கும் அப்படி முத்தம் கொடுஎன்று சிறுவனாயிருந்த தான் கேட்கும்போதுவெறகுக் கட்டையால அடிப்பேன். போய் படிக்கற வேலைய பாருஎன்று துரத்துவாள். அடம் பிடிக்கும் மகனிடம்எதுக்குடா இப்பிடி ஒட்டாரம் புடிக்கிறஎன்று கேட்டுவிட்டு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டுப் போவாள். இந்த நினைவு நிழலாடி முடியும்போது முடி மழிப்பும் முடிந்துவிடுகிறது.அய்யே அப்பா. மீசை இல்லாம நல்லவே இல்ல. எப்படி ஆபீஸ் போவேஎன்று கிண்டல் செய்கிறாள் மகள். சேவலையும் பூஜைப் பொருளையும் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கிறார்கள்.  நோயில் விழுந்து உடலெல்லாம் குழாயும் மருந்துமாக அம்மா தீவிர சிகிச்சை பலன் இன்றி இறந்து போனது நினைவுக்கு வருகிறது. அப்போது ஒரு குயில் கூவுகிறது. அது அம்மாவின் குரல் என்று நம்பி அதைத் தேடுகிறான். மகள் விரல் காட்டும் திசையில் பார்க்கிறான். குயில் தெரியவில்லை. குரல் மட்டுமே கேட்கிறது. நடந்து வருகையில் இந்த காணிக்கை செலுத்துவதற்கான காரணத்தை மனைவியுடன் செய்த உரையாடலை மனம் அசைபோடுகிறது. 

அம்மா இறந்த பிறகு ஒரு நாள் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவுக்கு உடல் நலம் மோசமாகும்போது  அவள் தனது கையை பிடித்துக் கொள்ளும்போது இவன் மனம் நெகிழ அய்யனார் கோவிலில் வந்து இவள் பிழைத்துவிட்டால் முடி காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டதை மனைவியிடம் சொல்கிறான். “இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையேஎன்று அவள் ஆச்சரியமாக கேட்கும்போதுஇப்போதும் கூட இல்லைதான். ஆனால் அந்த சமயம் அப்படி தோன்றிவிட்டதுஎன்கிறான். வாழ்வின் மகத்தான ஒரு உண்மையை மிக எளிதான ஒரு உரையாடலில் சொல்லிவிடும் அற்புதம் இங்கு நிகழ்வதை கவனியுங்கள். இதற்கு சிகரம் வைக்கும் வரி அடுத்து வருகிறது. ஆனாலும் அம்மா இறந்து விட்டாள் அல்லவா. ஆகவே எதற்காக காணிக்கை செலுத்தவேண்டும் என்று கேட்கும்போது மனைவி சொல்கிறாள் இது என்ன வியாபாரமா. காணிக்கை என்றால் செலுத்திவிட வேண்டியதுதான் முறை என்கிறாள். அதனால் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்கிறான்.

ஐயனார் கோவிலுக்கு போகும் வழி எங்கும் குயிலின் குரல் கிளைகள் இடையே விட்டு விட்டு கேட்கிறது. அவனால் ஒரு முறையும் அதை கண்ணால் காண இயலுவதில்லை. அது அம்மாவின் குரல் என்பதை அவன் மட்டுமல்ல வாசகனே நம்பத் தொடங்கி விடுகிறான். பூசாரி கூடஅம்மா வரலையா?“ என்று கேட்டு பிறகு வருந்தி மகராசி என்று வாழ்த்தி இதெல்லாம் நம் கையில் இல்லை என்று சமாதானித்து பூஜை செய்கிறான். பிறகு வெளியே வந்துஇதோ பாருப்பா என்று மகள் குயிலை காட்டுகிறாள் அப்போதும் இவன் கண்ணுக்கு தெரியவில்லை. அப்பா தெரியாதது போல் நடிக்கிறார்என்று மகள் கிண்டல் செய்கிறாள். 

அப்போது மனைவி அவரை அப்படி சொல்லாதே. அவர் அப்படியான ஆள் இல்லைஎன்று சொல்லிநான் சொல்றது சரிதானேஎன்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்கிறாள். இவனுக்கு அம்மாவின் நினைவு பொங்கியபடியே இருக்கும்போது, பேசிக்கொண்டிருந்த மனைவி சட்டென ஒரு நொடியில் அவனது கன்னத்தை கிள்ளி விரல் முத்தம் கொடுக்கிறாள். உடல் சிலிர்க்க மனைவியை புதியதாக பார்க்கிறான். அம்மாவின் அன்பு என்பது மனைவியின் கை மூலம் இடம் மாறும் ரசவாதத்தை நிகழ்த்தும் அற்புதமான கணம் இது. காரில் ஏறியபின் அவனது கையைத் தன் கைக்குள் பொத்திக் கொள்கிறாள் என்று கதை முடிகிறது. 

வெறும் அம்மா செண்டிமெண்ட் கதையாக இல்லாமல் அன்பு, நம்பிக்கை, உறவு, நெகிழ்ச்சி என்று பன்முகத்தை சொல்லிப் போகும் எளிமை இவரது பெரும் பலம். அசோகமித்திரனை பற்றி சொல்லும்போது அவரது எளிமை நம்மை ஏமாற்றி விடக்கூடியது என்று ஜெயமோகன் சொல்வார். அதையே பாவண்ணனுக்கும் பொருத்தலாம். 

சமீபமாக விகடனில் வெளிவந்த கதையில் கோழியை விற்கும் சைக்கிள்காரன் பற்றிய சித்திரத்தை அணுக்கமாக சொல்லி இருப்பார்.  இருவாட்சி இலக்கிய இதழில்ஒளிவட்டம்என்ற சிறுகதையில் மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்யும் ஒருவரின் வாழ்க்கையும் அதில் அவர் மரணமும் பற்றி சொல்லி இருப்பார். அதே போல தளம்  இலக்கியச் சிற்றிதழில்கண்காணிப்பு கோபுரம்என்ற சிறுகதையில் ஒரு காட்டின் கண்காணிப்பு கோபுரத்தில் காவல் தனிமையில் வேலைசெய்யும் அஜய் சிங்கா என்ற சிப்பாய் பற்றிய சித்திரத்தை தந்திருப்பார். சிலிகுரியில் வேலை செய்தவன். மேலதிகாரியின் காலணியை துடைக்க மறுத்ததால் கீழ்ப்படிய மறுத்தவன் என்று சொல்லி தண்டனையாக இங்கு அனுப்பிவிட்டதைச் சொல்லியிருப்பார். படிப்பதற்கு செய்தித்தாள் கூட இல்லாமல் இருக்கும் அந்தக் காட்டில் இருக்கும் சிங்காவுக்கு பேழைய பேப்பர் கடைக்கு சென்று பத்துகிலோ இந்தி செய்தித்தாட்களை அனுப்பி வைப்பதாக இருக்கும் இடம் தண்டனைத் தனிமையின் உக்கிரத்தை சொல்லும். நம்முடைய பார்வையில் பட்டு புத்திக்குள் நுழையாத சில விஷயங்களை இவர் கதைக்களன் ஆக்கிவிடுவது இவரிடம் உள்ள விசேஷம்.

இவருடைய நதியின் கரையில் கட்டுரை ஒன்றில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வரும் கர்நாடக மலைப் பகுதியான ஆகும்பே வில் நடந்த ஒன்றை சொல்லி இருப்பார். பலரும் மாலை வேளை நெருங்கி ஆனால் இருள் படரும் முன்பே அந்த மலைப்பகுதிக்கு சென்று சூரியன் மேற்கில் விழும் அழகை காண விரைவார்கள். காட்டுப் பகுதியும் குறைந்த நடமாட்டமும் உள்ள மாலையில் தான் வரும் வண்டியிலேயே ஒரு இளம் ஜோடிகள் உல்லாசமாக சிரித்து வரும் இளமையை ரகசிய நெருக்கத்தை சொல்வார். அஸ்தமனம் பார்க்கும் கூட்டத்தைப் பற்றி சொல்வார். மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுபவர்களை தேடிக் கண்டு பிடிப்பதையே ஒரு தொழிலாக இருக்கும் ஒரு ஆளைப் பற்றி குறிப்பிட்டு, தான் இருபது நிமிடத்துற்கு முன்பு பார்த்த அந்த ஜோடிகளை தேடி அந்த ஆள் புறப்படுவதாக  சொல்லியிருப்பார். “ஒரு மனிதரும் சில வருஷங்களும்குறுநாவலில் ரங்கசாமி நாய்க்கர் பாத்திரத்தைப் படிக்கையில், முதல்மரியாதை சிவாஜி இதிலிருந்து வந்தவரா என்று தோன்றும்.

சங்கத் தமிழ், நவீனம், நாடகம், நவீன கவிதை, ஐரோப்பிய மேற்கத்திய இலக்கியம், கன்னட இலக்கியம் உட்பட பல்வகை இலக்கியங்களை வாசித்து ருசித்தவர். அதை மிக சுவாரசியமாக பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.

நவீன சிறுகதை வடிவங்களில் கதையின் உள்ளடக்கம் எப்படி தன்னை விரித்துக் கொள்கிறது என்பதில் உள்ள நுட்பமும், அது வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் விசையும், மணலில் விழும் நீர் உள்ளூறி அதன் ஈரம் உள்ளுக்குள் இருப்பது போன்ற வாசக மனநிலையை உண்டாக்குவதும் முக்கியமானவை. அவ்வகையில் அத்தகு நிறைவை இவருடைய பல கதைகள் தருகின்றன.

அவரைப் போல அவர் எழுத்தா, அவர் எழுத்தைப்போல அவரா எனும்படிக்கு அவரது உலகம் நட்புடன் இழைந்த எளிமையானது. அவரது படைப்புகளைப் படித்துவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது திகைக்க வைக்கக்கூடிய எளிமையாக அவர் இருந்தார். எவ்வளவு தூரத்தையும் பேசிக்கொண்டே, நடந்தே கடந்துவிடக்கூடியவர். ஆழமாகவும், நிதானமாகவும் யோசித்து அனுபவித்து எழுதவும் பேசவும் கூடியவர். குடியாண்மைப் பணித் தேர்விற்கு முயன்றவர் என்பதிலிருந்தே இவரது அர்ப்பணிப்பு உணர்வு தெரியவரும்.  மட்டுமின்றி, தமிழரான இவர் பெங்களுர் வந்தபிறகு கன்னடத்தை ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டு, இலக்கியங்களைப் படித்து அவற்றின் சாரங்களை தமிழுக்கு மடைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆளுமை.

மூலப்படைப்பாளியாக இருந்துகொண்டும், தாம் படித்தவற்றை கட்டுரைகளாக எழுதுவதில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால், இவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணரலாம். அவர் தனது படைப்புகளை இறுக்கமான நேரத்தேவைகளுக்கு இடையில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல புத்தகத்தை படித்த உடன் அது பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் மதிக்கப்பட வேண்டியது.  உதாரணத்திற்கு உப்புவேலி பற்றி இவர் எழுதிய உடனடிக்கட்டுரைஇப்படி பலவற்றை சொல்லலாம்.

நிகழ் இலக்கிய சமூகத்தில் அவர்மீது படவேண்டிய நியாயமான வெளிச்சம் இன்னும் முழுமையாகப் படவில்லையே  என்ற எனக்கிருக்கும் ஏக்கம் பலருக்கும் இருக்கும் என்றே நம்புகிறேன்.  அதுகுறித்து பற்றற்ற அல்லது வேதாந்த மனநிலை ஒன்று அவருக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் நாம் அவரது எழுத்துகளைக் குறித்து பேசும் வாய்ப்புகளை இவ்வகைப் பதாகைகள் மூலம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். அது ஒரு இலக்கிய வாசக சுகம். 

(இந்த கட்டுரையை எழுதி முடித்த பின் பாவண்ணனுக்கு இலக்கியத் திருவிழா விருது கிடைத்திருப்பதாக செய்தி கிடைத்தது. நன்நிமித்தத் துவக்கமாக கொள்வோம். அவரைப் பாராட்டுவோம். )

திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]

பாவண்ணன்

popsicle-stick-house

ஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின்  விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.

போட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற  கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமிஇங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.

அது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு  வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.

கையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது.  இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது.  சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க  என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணேஎன்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள்என்னடா செய்றிங்க?” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.

காற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களாஎன்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற?” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடாஎன அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம்எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா?” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா?” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போஎன்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.

ஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.

சந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து  ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம்? புள்ளய காட்டி என்ன பிரயோஜனம்? அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சிஎன்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயாஎன்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.

இருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.

திண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது  ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.

பழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில்அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குதுஎன்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடாஎன்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகுஇல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாருஎன்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமேவாடா, வேகமா போயி பாக்கலாம்என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்?” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.

நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.

கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா?”

மாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.

செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன்? கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ? புத்தி இல்லாத மடயனா நீ? ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”

அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்குவிழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.

என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல? திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”

நான் எங்கக்கா போவன்? எனக்கு ஒருத்தரயும் தெரியாதுக்கா…..”

பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க.  முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”

ஐயோ அக்கா

டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”

அத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

அத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று  கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு  இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.

அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடுஎன்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலைஎன்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகுநாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

மறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே  அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவுஎன்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார்ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமிஎன்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.

மாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில்எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே?” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா?” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.

என்னங்ண்ணே இது? ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணேஎன்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடுஇங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணேஎன்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடாஎன்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போதுஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணேஎன்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போஎன்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.

அடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டிஎன்ன தம்பி? யாரு ஓணும்? யார தேடற?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடிகுடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மாஎன்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இருஎன்றாள் அவள்.

ஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா?” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்என்ன சாப்பாடு சாப்புடற நீ? இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு? ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா?” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போஎன்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில்அண்ணே அண்ணேஎன்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.

என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட? ஏதாச்சும் கோயில் பயணமா?” என்று கேட்டான் மாயாண்டி.

கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு? ஊரு எதுக்கு? அதான் கெளம்பிட்டம்ண்ணே

பக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.

இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணேஎன்றான்.

கனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணேஎன்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடுஎன்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாகசரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா?” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.

புறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான்.  பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

வருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா?. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாருஎன்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடாஎன்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.

ஆண்டாள் அன்று இரவு  எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடிநா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன்? வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு?” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.

போட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம்நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா?” என்று கேட்டான்.

பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு

ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.

ஒனக்கு எதுக்குடா தட்டு?”

என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”

முத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ? ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா?” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.

இரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.

வானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது.  முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பாஎன்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி.  அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.

டேய் பசங்களா, ஏந்துருங்கடா

முத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.

முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா

எங்கம்மா?” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.

பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்

திண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.

கண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமிஎன்னடா?” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.

திடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மாஎன்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.

எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில்சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாருஎன்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா?” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருதுஎன்று சொல்லிவிட்டு சிரித்தான்.

நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை

paakkuthotam-1

லண்டனில் பனிமூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் குடும்பத்துடன் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். நாற்பதடி தொலைவுக்கு மேல் இருந்தவை எல்லாமே பனித்திரையால் மறைக்கப்பட்டிருந்தன. ‘பனி மூட்டத்தில் அருகிலிருப்பவை மட்டும் நம் கண்ணுக்குத் தெரிவதும் தொலைவில் உள்ளவை தெரியாததும் ஏன்’ என என் மகன் கேட்டான். வழக்கம் போலவே என் மகளும் அந்தக் கேள்வியை தனதாக்கி ‘ஆமா ஏன்?’ என்றாள். பனிமூட்டத்தை வலைகள் போன்ற திரைச் சீலைகளுக்கு ஒப்பிட்டு விளக்கினேன். ஒன்றோ இரண்டோ மெல்லிய திரைச்சீலைகள் நம் பார்வையை அதிகம் மறைப்பதில்லை. ஆனால் தூரம் செல்லச் செல்ல பல திரைச் சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போடப்பட்டிருக்கும்போது அவை வலைபோல துவாரங்கள் உள்ளவையாய் இருந்தாலும் பல அடுக்குகளாய் இருக்கும்போது பார்வையை மறைக்க ஆரம்பிக்கின்றன.

மனிதக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குறிப்பாக பல்வேறு வகையான மக்களும் கூடும் இடங்ககளுக்குச் செல்லும் போதும் அந்தத்திரளில் எத்தனை மனித வாழ்க்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் எண்ணம் நமக்கு வந்துபோகும். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிரம் அனுபவங்கள் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. நம் அருகே இருக்கும் வாழ்க்கையை நாம் நேரடியாக கவனிக்கிறோம். தொலைவில் உள்ளவற்றை திரைச் சீலைகள் அல்லது பனிமூட்டங்கள் மறைக்கின்றன. நாமே நம்முன் இட்டுக்கொள்ளும் திரைச் சீலைகள். அவரவர் தங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் திரைச்சீலைகள்.  கருத்துக்கள், நம்பிக்கைகள், காலம், தூரம் எனும் பனிமூட்டங்கள் நம் கண்களுக்கு பிறரின் வாழ்கையை மறைத்துக்கொண்டே இருக்கின்றன. தனது “பாக்குத்தோட்டம்” சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகளின் வழியே பனிமூட்டம் மெல்ல விலகும்போது கிடைக்கும் காட்சிகளாக பத்து வாழ்கைகளை, அவற்றின் சில கணங்களை நமக்குக் காணத்தருகிறார் பாவண்ணன்.

சைக்கிளில் கூடைகட்டி கோழி விற்பவரின் மகன், பால் வியாபாரியின் குடும்பம், கல்லைக் குடைந்து தொட்டி செய்பவர், திருக்குறளை திருந்தச் சொல்லும் ஒரு இஸ்திரிக்காரர், அரச இலையில் படம் வரைந்து தெருவில் விற்கும் கலைஞர், மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்பவர் என  பல்வேறு வாழ்கைகளை பாக்குத்தோட்டம் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரின் புகைப்படத் தொகுப்பை திறந்து முகங்களை, நிலக்காட்சிகளை, சூழலை காண்பதைப் போல பாக்குத்தோட்டம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் முதல் கதை ‘சைக்கிள்‘. முதல் வாசிப்பில் எளிதாகத் தோன்றும் கதை. சைக்கிளில் கூடை வைத்து கோழிகளை எடுத்துச் சென்று விற்பவர்களின் சித்திரம் எத்தனை பழமையானதாய் இன்று தோன்றுகிறது? அது ஒரு மறைந்தே போன காலத்தின் சித்திரம். அநேகமாய் இருபது வருடங்களுக்கு முந்தையதாய் இருக்கலாம். கோழி விற்பவரின் மகனுக்கும் சைக்கிளுக்கும் ஒரு உறவு அல்லது பகை உள்ளது. அவனால் சைக்கிள் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் தந்தை வற்புறுத்துகிறார், தெருவில் போட்டு அடிக்கிறார். அவர் தந்தையின் நண்பர் ‘அப்துல்லா மாமா’ அன்பாக சொல்லித் தருகிறார். ஆனாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஒரு பிரத்யோகமான சிரமம் அவனுக்கு இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரன் அவன். அவனது தந்தை நம் கலாச்சாரத்தின் தேய்வழக்கான பொறுப்பற்ற குடிகார ஓடுகாலி. கதையின் இறுதியில் அப்பா ஓடிப்போகிறார். சைக்கிளை விற்று அவன் படிப்புக்கு பணம் கட்ட உதவுகிறார் அப்துல்லா மாமா. அவனுக்கு பிறர் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் ஒரு ஏக்கம் தோன்றுகிறது. கதையின் முடிவில் தெருவில் சைக்கிளில் ஒருவர் மணியடித்துச் செல்லும்போது அவன் முகம் மாறுகிறது. இங்கிருந்து கதையை மீள்வாசிப்புசெய்தால் சைக்கிள் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது. அது அவன் வாழ்க்கையில் இருந்ததும் இல்லாததுமான தந்தையைச் சுட்டும் ஒன்றாகிறது. அவனது கனவுகளுக்கு எதிரான ஒன்றை சுட்டும் ஒன்றாகிறது. ஒருவன் கோழி வியாபாரி ஆவதற்கும் படித்து பட்டம் பெறுவதற்கும் இடையேயான அசாதாரணமான மெல்லிய வித்தியாசத்தை சைக்கிள் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது கதை ‘கல்தொட்டி‘  பால் வியாபாரி ஒருவரின் மகன் சொல்லும் கதை. அவன் வீட்டில் அவனும் அவன் தந்தையும் தவிர அனைவரும் பெண்கள். இரண்டு அத்தைகள், ஆயா மற்றும் அம்மா. மாடுகளை பராமரிப்பதும் பால்கறந்து வைப்பதும் பெண்களின் வேலை. அதை மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்வது அவன் தந்தையின் தொழில். கதைசொல்லும் சிறுவனுக்கு பால் கணக்கெழுதும் வேலை. அவன் தந்தை கண்டிப்பான மனிதர்.  ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் கதையில் நுழைகிறார். அவர் முன்பு வேலைக்கு இருந்த பண்ணையாரின் பிள்ளைகள் பசுவை விற்றுவிட்டு பஸ்ஸை வாங்கி ஓட்டியதால் அவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. கல்லைக் குடைந்து தொட்டி செய்வது அவரது வேலை. கதையின் துவக்கத்திலேயே கன்றுக்குட்டி மண்தொட்டியை உடைத்துவிட்டதால் கல்தொட்டியின் தேவை இன்றியமையாததாகிறது. கதைசொல்லியின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள அந்த மனிதர் அந்த வீட்டின் பின்பக்கத்தில் தங்கி கல்தொட்டி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். இறுகிக் கடுமையாகி பயனற்று கிடக்கும் ஒரு கல் மெல்ல மெல்ல உடைந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக, தொட்டியாக மாறி வருவதை அந்தக் குடும்பமே வேடிக்கையுடன் பார்க்கிறது. மெல்ல மெல்ல கல்தொட்டி உருவாகி வரும்போதே சின்னச் சின்ன உரையாடல்கள் வழியே கதைசொல்லி சிறுவனுக்கும் கல்தொட்டி செய்பவருக்கும் நட்பு வளர்கிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் மேலே சென்று அந்தச் சிறுவன் ‘வெள்ளைக்கார துரைகளைப்போல’ குளிப்பதற்கு ஒரு குளியல் தொட்டியையும் செய்து கொடுக்கிறார். ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ என அழைக்கப்படும் இதமான கதையின் முடிவில் அந்தத் தொழிலாளி திடீரென பைசல் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகையில் அந்த வீடே உறைந்து நிற்கிறது. சட்டென ஒரு சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ‘கல்தொட்டி’  இந்தத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை. அதன் பாத்திரங்களின் எளிமை வியப்புக்குரியது . கதை முடிகையில் ஏற்படும் சோகம் பிரிவின்பாலா அல்லது ஏழ்மையின்பாலா என்பது வாசகரே கண்டடைய வேண்டியது.

பாக்குத்தோட்டம்‘ எனும் தலைப்புடைய கதை கர்நாடக பாரம்பரிய நிகழ்த்து கலையான யட்சகானத்தை ரசிக்கும் மூவரின் கதை. கதை சொல்லி, அவரது சக ஊழியர் மற்றும் கிராமத்துச் சிறுவன். இம்மூவரையும் இணைக்கும் புள்ளி யட்சகானம். அது கதாகாலட்சேபம் போன்றதொரு கலை. யாராவது ஒருவருக்கு மட்டுமே விடுப்பு அனுமதி என மேலாளர் சொல்ல. கதைசொல்லியை தன் கிராமத்துக்குச் சென்று யட்சகானம் காண வாய்ப்பளிக்கிறார் சக ஊழியர். கதைசொல்லி கிராமத்துக்குச் சென்று நண்பரின் வீட்டிலேயே தங்கி யட்சகானம் காண்கிறார். அங்கே கிராமத்துச் சிறுவர்கள் பொழுதுபோக்காய் யட்சகானத்தை பழகுவதைக் காண்கிறார். அதில் மிக தத்ரூபமாக நடித்த தலைமைச் சிறுவனோடு உரையாடுகிறார். அப்போது அவன் ‘பாக்குத்தோட்டத்தின்’ கதையை சுருங்கச் சொல்கிறான். அவன் ஏழைச் சிறுவன். அவன் ஏழ்மைக்குக் காரணம் பாக்குத்தோட்டம். அதையும் பிற சொத்துக்களையும் அவனது மூதாதை ஒருவர் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார். ஒரு குடும்பத்தின் ஏழ்மை இன்னொருவ‌ரின் செல்வம். அந்த இன்னொருவர் தன் சக ஊழியர் என அறியும்போது கதைசொல்லியின் மனம் திடுக்கிடுகிறது. விழாவின் கடைசி நிகழ்வு திரௌபதி வஸ்திராபரணம். அது கதைசொல்லியை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு கதை இன்றும் நம்மிடையே காணக் கிடைக்கிறது. அந்த மாபாரதக் கதையின் மாந்தர்களை தன் கண்முன் நேரடியாகக் காண்கிறார். யட்சகானம் காலத்தின் மேடையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அதில் அவரும் ஒரு பாத்திரம் என உணர்கிறார்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். மைய பாத்திரங்கள் எல்லாமே ஏதோவொரு திக்கற்ற நிலையில் இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு மனமுவந்து உதவி புரியும் நல்லவர்கள் அல்லது அவர்கள் மீது பரிவு காட்டுபவர்கள். அப்துல்லா மாமாவில் துவங்கி இங்கலீஷ் சார் வரைக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் கதைகளே இத்தொகுப்பிலுள்ளன. அவர்கள் பொருட்டே இக்கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன எனலாம். மனித மனங்களின் அவலங்களையும் இருண்ட பக்கங்களையும் யதார்த்த வாழ்வின் கொடூரங்களையும் மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் காட்டும் இந்நாட்களில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவற்றின் நம்பகத்தன்மை குறித்த அவநம்பிக்கை மிக இயல்பாக எழுகிறது. உண்மையிலேயே இன்றும் தன்னலம் பாராமல் பிறருக்காக மெனக்கெடுபவர்கள் இருக்கிறார்களா? ஆம் என்பதுவே பாவண்ணனின் பதிலாக இருக்கும். பத்தில் எட்டு கதைகள் மானுடம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. மிக எளிதாக சாதாரண ‘நல்லொழுக்கக்’ கதைகள் என வகைப்படுத்தப்பட தகுதியான இந்தக் கதைகளை பாத்திரப் படைப்பின் மூலமும், காட்சி விவரிப்பின் மூலமும் பாவண்ணன் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

பாக்குத்தோட்டத்திலேயே நாடகத்தனமாக தோன்றிய கதை ‘பெரியம்மா‘. இதிலும் ஆதரவற்றவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் என்று கதை சென்றாலும் முழுக்க முழுக்க மனிதனின் நன்மைத்தனத்தை மட்டுமே கொண்டு கதைகள் எழுதப்படும்போது அவை சிக்கலற்றவையாக, வாசிக்க சுவாரஸ்யமற்றவையாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது.  மிகுந்த ஒளியும் குருடாக்குவதுதான்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் நான் பெற்றது பல வண்ண வாழ்கைகளின் சித்திரங்கள். அவற்றின் நிதர்சன சிக்கல்கள்.  மனம் சோர்ந்து கைவிடப்படும் சில மனிதர்களின் வாழ்கையில் ஒரு பிடிகிளை கிட்டும் தருணங்களின் விவரிப்புகள். இலக்கியம் என்பது காம குரோத பேதங்களை மட்டுமல்ல அன்பையும், தன்னலமற்ற செயல்களையும்  பேச முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கதைகள். தேடுபவன் கண்டடைவான் எனும் நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.

அமெரிக்க அப்பாச்சே செவ்விந்தியர்களின் குடித்தலைவர்களில் பிரசித்தி பெற்றவராகிய ஜெராணிமோவை வெள்ளையர்கள் ஒரு வினோத கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரும் ஒரு காட்சிப்பொருள் என்பது வேறொரு சுவாரஸ்யம் என்றாலும் அவர் அங்கே இரு துருக்கியர்கள் வாள் சண்டையிடுவதைக் கண்டு வியக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க தீவிர சண்டைகளை இட்டு பல நூறுபேரைக் கொன்ற ஜெராணிமோவிற்கு அந்தச் சண்டைக் காட்சி வியப்பூட்டுவதாக இருப்பதற்குக் காரணம் அந்த வாள் வீரர்கள் ஒருவர் இன்னொருவரை காயப்படுத்துவதில்லை. அவர்களின் இலக்கு மற்றவரின் தலையை தன் வாளால் தொடுவது மட்டுமே. ஜெராணிமோவிற்கு இரத்தமில்லாத வாள் சண்டை மிக வினோதமானதும் ஆச்சர்யமூட்டுவதுமாயுள்ளது. அதே உணர்வே பாக்குத்தோட்டம் தொகுப்பு எனக்களித்தது. பாவண்ணன் இரத்தமின்றி வாழ்சுழற்றத் தெரிந்த வீரர்.

பன்முக ஆளுமை – பாவண்ணன்

விட்டல் ராவ் 

விட்டல்ராவுடன் (1)

வாழ்நாள் படைப்புச் சாதனைக்கென அங்கங்கே அவ்வப்போது சிறப்பு விருதுகளும் கெளரவங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கவனிக்கும்போது, வயதும், படைப்பாக்கத்தில் தேக்க நிலை தொடர்பாயும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எண்பதுகள் என்பது மிகச் சமீபத்திய காலம்அதுவும் கலையிலக்கிய சங்கதிகளுக்கு. எண்பதுகளில் தோன்றி இந்த கணம் வரை இடையறாது சிறுகதை, கவிதை, நாவல், திரைப்பட விமர்சனம், நூல் விமர்சனம், பல்வேறு உலகியல் விஷயங்களைப் பற்றிய விரிவான ஆழ்ந்த கட்டுரைகள் என்று தொய்வோ தளர்ச்சியோ இன்றி எழுதி வரும் பாவண்னனின் படைப்பாக்க இளமையின்பேரில் ஆச்சரியமும் பொறாமையும்கூட ஏற்படக்கூடும்.

ஆரம்பத்தில் எண்பதுகளில் தீபம் இதழின் பக்கங்களில் படிக்க நேரிட்டபோதே என் கவன ஈர்ப்பின் உள்ளடக்கத்தில் அன்பர் பாவண்ணனும் ஒருவராக இருந்தார். தீபம் அலுவலகத்தோடு நெருக்கமாயிருந்த சமயம். அங்கிருந்த கம்பாசிடர் கையெழுத்துப் பிரதியிலிருந்த கதையொன்றைத் தந்துப் படிக்கச் சொன்னார். மிகவும் நன்றாக வந்திருந்தது. அதுவும் பாவண்ணன் கைவண்ணமே. பிறகு விட்டு விட்டு கண்ணில் படும் போதெல்லாம் தவறாமல் அவரது குறுநாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்து விடுவேன். பாவண்ணன் எல்லா பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். எந்தவொரு புதிய இதழ் ஆரம்பிக்கப்படும்போதும் கவனம் விட்டுப் போகாத படைப்பாளிகளில் இவரும் இருப்பார். வெங்கட் சாமிநாதன் பாவண்ணனைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொல்லுவார், “ சமீபமா பத்துப் பத்திரிகைகள பார்த்ததில ஏழிலியாச்சும் இவர் எழுதி வெளிவந்திருக்கய்யா. நல்லா எழுதறது ஒரு பக்கம், ரொம்ப நல்லவனாயுமிருக்கிறது இன்னும் சந்தோசமாயிடறது, இல்லையா”.

எண்பதுகளில்தீபம்காலம் தொட்டு இம்மாததீராநதியில் அவர் தொடங்கியிருக்கும் கட்டுரைத் தொடர் வரை சீரான நீண்ட இலக்கிய தடத்தைப் பார்க்கையில் பிரமிப்பு கூடிய பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒருமுறை, தீபம் அலுவலகத்தில் நானிருந்த சமயம், எஸ். சங்கரநாராயணன் வந்தார். என்னைப் பார்த்து, “ பாவண்ணன் வந்திருக்காரா?” என்று கேட்டார். இல்லையே என்றேன். இந்த நேரத்துக்கு வர்ரேனு சொல்லியிருந்தார், என்று கூறி உட்கார்ந்தார், எனக்கும் பாவண்ணனை நேரில் பார்க்கலாமே என்று. ஆனால், ஒரு மணி நேரம் கடந்தும் ஆசாமி வரவேயில்லை. சங்கரநாராயணன் எழுந்து போய்விட்டார். அதற்குப் பிறகு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில்தான் முதல் அறிமுகம். வண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் அறிமுகம் தொடர்ந்தது, பெங்களூரில் குடிபுகுந்த பின் அது இறுகித் தொடர்கிறது. காலஞ்சென்ற என் மனைவி ஏராளமாய் வாசிப்பவள். பாவண்ணன் தான் மாதமொருமுறை வீட்டுக்கு வந்து ஏராளமான நூல்களை அவளுக்குப் படிக்கத் தருவார், மருத்துவ மனையில் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை அவருடைய புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள்.

தொகுக்கப்பட்டு நூல் வடிவம் கொண்ட சிறுகதைகளை தற்போது மீள்பார்வையிடும்போது அவற்றின் வடிவமைப்பு, உத்தி, கரு, உள்ளடங்கும் சிறு செய்தி என்பவை மிகச் சிறப்பாக வந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாவண்ணன் தன்னைச் சுற்றிலுமுள்ள யதார்த்த நிகழ்வுகளையும் சலனமற்ற காட்சிகளையும் தீர்க்கமாகப் பார்த்து கிரகிக்கும் போக்கிலேயே இணையாக கனவும், கற்பனையும் கவித்துவமும் ஏற்பட்டு பிரவாகமெடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு அறுபடாது சித்தரிப்பது இவருக்கு இயல்பாகவே கைவருகிறது. இதை அவரது கவிதைப் படைப்புகளில் பளிச்சென காணமுடிகிறது. இவர் தம் கவிதைகள் பலவற்றில் இயற்கையின் எழில் தோற்றங்கள் அடுக்கடுக்காகவெற்று வார்த்தைக் குவியலாக இல்லாமல்அதே சமயம் கவிதைக்கு கவிதை மாறுபட்டும், புதியதாயும், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாமலும் காணக் கிடைக்கின்றன. இவரது கவிதை நடையினின்று சிறுகதை நடை வெகுவாக விலகித் தோன்றுகிறது.

பாவண்ணனின் இலக்கியப் பணியின் மற்றொரு முக்கிய அங்கம் மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவரது மொழிபெயர்ப்பில் அணிவகுப்பவை, எஸ்.எல். பைரப்பாவின்பருவம்’, ராகவேந்திர பாட்டீலின்தேர்என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். தேர்மொழிபெயர்ப்பு நாவலைப் படித்துவிட்டு என் மனைவி மிகவும் பாராட்டிய பிறகே, நான் படித்தேன். கன்னட தலித் சிறுகதைகள் என்ற இவரது பொழிபெயர்ப்பில் வெளிவந்த கதைத் தொகுப்பு மிகவும் சிலாகிக்க வல்லது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான (பருவம்) சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாவண்ணன். நாவலுக்கான இலக்கியச் சிந்தனை பரிசும், சிறுகதைக்குகதாவிருதும் பெற்று கெளரவிக்கப் பட்டவர்.

பாவண்ணனின் கட்டுரையாக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமீபத்தில்தான்ஒட்டகம் கேட்ட இசைகட்டுரைத் தொகுப்பு நூலைப் பார்க்க நேரிட்டாலும், இதழ்கள்தான் அவருடைய கட்டுரைகளை நிறையவே படிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவை. சிறுகதைகளில் இவருடைய கவிதை நடை அவ்வளவாக வாய்ப்புப் பெறாவிட்டாலும், கட்டுரைகளில் அவரது கவித்துவம் ஆங்காங்கே தெறிக்கின்றன. அதிகம் இல்லாவிட்டாலும் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் இவர் பங்கிற்கு இருக்கின்றன. நவீன கன்னட திரைப்படங்கள் இரண்டுக்கான விமர்சனக் கட்டுரைகள் இவரது சினிமா ரசனைக்கு எடுத்துக்காட்டு. அவையிரண்டுமே கன்னட சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர் கிரிஷ் காசரவள்ளி தயாரித்தது. அந்த இரு விமர்சனக் கட்டுரைகளிலும்த்வீபாஎனும் படத்துக்கான பாவண்ணனின் விமர்சனம் அதிசிறப்பாய் வந்திருந்தது. ஒவ்வொரு திரைப்பட விமர்சனமும் அது எழுதப்பட்ட அளவிலேயே முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது என்பதும் விசேஷம். அதைப் போலவே அவர் எழுதிவரும் பிற கட்டுரைகளும் விசேஷ கவனம் கொள்ளத் தக்கவை.

புத்தக விமர்சனம் (நான் மதிப்புரை என்பதை தவிர்க்கிறேன்) திரைப்பட விமர்சனம்போல இருந்துவிடலாகாது என்பது போலவே திரைப்பட விமர்சனமும் நூல் விமர்சனம் போன்றிருக்கக் கூடாது என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. இவ்விஷயம் பாவண்ணனுக்கு வெகு இயல்பாக அமைந்து விடுகிறது. இவர் எழுதி வரும் நூல் விமர்சனம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த நோக்கில் கச்சிதமான சமநிலையோடு எழுதப்படுவது. ஒவ்வொரு நூல் விமர்சனமும், ஒரு விமர்சனத்துக்கும் அப்பால் சென்று அந்த நூலுக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்க்கவல்ல முழு கட்டுரையாக அமைந்திருக்கிறது.

ஒரு விசயத்தை மையமாய்க் கொண்டு எழுதும்போது அதைச் சுற்றி பல்வேறு விஷயங்களையும் கலை இலக்கிய நயத்தோடு சொல்லிக்கொண்டு போகும் வெங்கட் சாமிநாதனின் வழியை ஒட்டி அவரைப் பற்றின கட்டுரைத் தொடரை தீராநதியில் தொடங்கியிருக்கிறார் பாவண்ணன். ஆரம்பப் பக்கங்களே ஆர்வமூட்டுகின்றன. பாவண்ணனின் படைப்பாக்கத்துக்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.