“ஹ ஹ ஹ ஹ ஹ ஹ” நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். வெளியில் நின்றுகொண்டு இருப்பவர்கள் மூச்சைச் சட்டென்று உள்ளிழுக்கும் ஓசை கேட்டது. ஓரிருவர் பின்வாங்குவது போல் தெரிந்தது.
“ஏன் சிரிக்கிறாய்?”
“நீ கள்ளம் கபடம் இல்லாதவர் வேண்டும் என்று கேட்கிறாய். அது போல் இந்தப் பூவுலகில் நான் யாரையும் பார்த்ததில்லை. உனக்கு எப்படி கிடைப்பார்கள்?. ஹிமய மலையில்தான் நீ போய் பார்க்க வேண்டும். அங்குதான் ஆசை துறந்த முனிவர்கள் கிடைப்பார்கள். இங்கு அது சாத்தியமில்லை”
“எங்களுக்கு முனிவர்கள் வேண்டாம். சாதாரண மனிதர்கள்தான் வேண்டும்”
“ஆனால் சாதாரண மனிதர்களுக்கு ஆசை அதிகம்”
“ஆசை இருப்பவர்கள்தான் எங்களுக்கு வேண்டும். ஆசை, மகிழ்ச்சி, வீரியம், கோபம், உந்துதல் இவை எல்லாம் எங்களுக்கு ஏற்றவையே. ஆசை இல்லாமல் எதுவும் முன்னகராது. ஏதோ படைக்க வேண்டும் என்ற ஆசை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையை ஒட்டி வரும் உழைப்பு. அந்த உழைப்பினால் வரும் முன்னேற்றம். இவை எல்லாம் முனிவர்களால் வராது. நாம் முன்னேற வேண்டும் என்றால் சாதனை படைக்கும் உள்ளம் தேவை. அதற்குள் ஓர் ஆசை துளிர்விட வேண்டும். அதனால் நாங்கள் ஆசையை வெறுப்பதில்லை. ஆசையில், சாதிக்க வேண்டும் என்ற வெறியினால் உருவாகும் குரோதம், பகை போன்றவற்றை வெறுக்கிறோம். ஆசை இருந்தும் கள்ளம் கபடம் இல்லாதவர்களைத் தேடுகிறோம்” (more…)
