எழுத்து

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

குமரன் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueநீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே! அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும்  அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி!

மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா? இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்டம்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம்  வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.

“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது?

ஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க‌ வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்ப‌ம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.

ஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும்? “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த‌ நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார்.  இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா? மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது? இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும்? வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை  நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே?

அடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன்? பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு  “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும்  சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”,  மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்?] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.

எழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக‌ கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…

இலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே!

ஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே! இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே! புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ?) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு!

பிரிதல்

ஆதவன் கிருஷ்ணா

எளிமையாக
எவ்வொரு முஸ்தீபுகளுமின்றி
இயல்புணர்வோடு
ஜோடிப்புகளற்ற
விரிசலின்
பிரக்ஞைகூடிய
சமிக்ஞையில்லாமல்
மரணம்

நகுமிளகாய்

ராஜசுந்தரராஜன்

nanjil_nadan_spl_issue

“எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?”

இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக “பதாகை” என்னிடம் கட்டுரை கேட்டபோது இது ஞாபகம் வந்தது! மெய்யாலுமே என்னிலும் சிறந்த எழுத்தாள இளைஞர்கள் இருக்கிறார்கள்.

கட்டுரை எழுதுவதற்குத் தகவலறிவு வேண்டும். அனுபவங்களைத் தாண்டி, தகவலறிவின் கருத்துக் கடலுக்குள் விழுந்து துழாவுவதில் எனக்கானால் மூச்சுமுட்டும். அதனால், பொதுவாக, அவ்வகை எழுத்துகளை நான் ஏற்றெடுப்பது இல்லை. ஆனால் நாஞ்சில் நாடன் குறித்தல்லவா எழுதச் சொல்கிறார்ள்?

தலைக்கனம் இல்லாதவர் நாஞ்சில் நாடன்; தன்னிலும் இளைய எழுத்தாளர்களைத் தன் சகோரம் அல்லது பிள்ளைகளைப் போல மதிப்பவர்; தமிழின் சங்க இலக்கியங்கள், பின்னர் வந்த சமய, சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம் என மிக்கவாறும் வாசித்துப் புலமை கண்டவராயினும், ஒன்றுமே வாசித்தறியாது இன்றைக்கு வந்த எழுத்தாளர், வாசகர்களையும் கூட செவிமடுப்பவர்; ஊக்குவிப்பவர்.

நாஞ்சில் நாடன் நமக்கு குரு என்று கொண்டால் அப்படித்தான்; அண்ணாச்சி என்று கொண்டால் அப்படியும்தான். படைப்பாளியாய் வரம்பெற்று வந்த ஒரு மாமனிதர் அவர். அடிப்படையில் நல்ல மனிதர்களாய் இருந்தும் எழுத்து, கலை என்னும் மேல்கட்டுமானங்களால் வேலிகட்டிக் காவல்கோபுரத் துப்பாக்கிச் சிப்பாய்களாய் விரைத்து நிற்பவர்களை எடுத்துக்காட்டி இதைத் தெளிவுபடுத்தலாம்…, ஆனால் என்னத்துக்கு நமக்கு எதிர்மறை அணுகல்?

ராஜமந்திரித் தொடர்வண்டி நிலைய வாசலில் நான் ஏறிய வண்டியில்தான், என்னை ஒட்டி, ஏறி அமர்ந்தார் நாஞ்சில். அவர் இருக்கத் தாராளமாக இடமிருக்குமாறு நான் எதிர்வரிசைக்கு மாறி அங்கே இடித்துக்கொண்டு உட்கார்ந்தேன். படகுத்துறைக்குப் போகிற வழிநெடுக அவர், தமிழ்ச்சொற்களை அர்த்தமில்லாமல் பிரிக்கிற அச்சகத்தார் மீது எரிச்சல் பட்டும், பெண் எழுத்தாளர்களுக்கு முன்னுரை எழுதுகையில் காட்டவேண்டிய கவனம் பற்றியும் விளக்கிக்கொண்டு வந்தார். தமிழ் வார்த்தை ஒன்றின் ஒரு பாதியை மேல்வரியின் முடிவிலும் மறுபாதியைக் கீழ்வரியின் முதலிலும் அவர் இட்டுக் காட்டியபோது எனக்குச் சிரிப்புத் தாளவில்லை. “சரோஜாதேவி புத்தகங்களில் கூட அப்படி வராதே!” என்றேன். “அச்சுக் கோர்த்துகிட்டு இருந்த காலத்துல அப்படி இல்லைங்க; கம்ப்யூட்டர் வந்த பின்னாலதான் இந்தக் கண்ராவி எல்லாம்,” என்றார்.

கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் உள்ளவரை யதார்த்தவாதம் மடியாது என்றார் நாஞ்சில். ஆனால், ‘யதார்த்தவாதம்’ என்பது நம் வசதிக்கு வைத்துக்கொண்ட ஒரு பெயர்தானே? கொண்டுகூட்டி அல்லது முன்பின் கற்பித்துப் பொருள் கொள்வது (interpretation) அல்லவோ யார்க்கும் நடைமுறை?

நீர் தொடர்பான கும்பகர்ண மொழிதல் ஒன்றை நினைவிலிருந்து எடுத்து விளக்கினார், கம்பனை ஓரளவுக்குக் கரைகண்டவர் அல்லவா நாஞ்சில்? “நீர்க்கோல வாழ்வை நச்சி” என்பதே அந்த செஞ்சோற்றுக் கடன்கழித்தான் செப்பிய மொழி. அந்தச் சொற்றொடரின் தாக்கத்தில் சற்று முன்பின் கற்பித்து இட்டதுதான் இந்தக் கட்டுரையின் தலைப்பு.|| (இது நாஞ்சில் நாடனொடுகூட நான் போகியதோர் உலா பற்றியதொரு கட்டுரையின் ஒரு பகுதி. அந்தக் கட்டுரைத் தலைப்பு: “நீர்மேல் உலாவை நச்சி”)

இதை ஏன் இங்கே நினைவிலெடுக்கிறேன் என்றால், அவரளவுக்கு உள்ளபடி எழுதுகிற திறமையில்லாதவன் நான். சுந்தரராமசாமி என்னை ஒரு மாணாக்கனாக ஒரு பயிற்சி பண்ணிப்பார்க்கச் சொல்வார்: ஒரு மரத்தை அல்லது படிக்கட்டைப் பார்த்து அதை வாக்கியங்களில் உருவாக்கி எடுக்க வேண்டுமாம். எனக்கு அது வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து அதைத்தானே செய்துவருகிறேன். என்றால் வாக்கியங்களில் அல்ல, கோடுகளில். அது ஓவியர்களுக்கான ஒரு பயிற்சி. முப்பரிமாணப் பொருள்களை அவதானித்து அதை இருபரிமாணத் தாள் மீது உருவப்படுத்துதல் அத்துணை எளிதில்லை. யதார்த்த எழுத்தும் அப்படித்தான். எடுத்துக்காட்டாக, வட்டார வழக்குப் பேச்சுமொழித் தமிழை எழுத்தில் கொண்டுவருவதென்பது யதார்த்தம் சார்ந்தது. நாஞ்சில் நாடன் அதில் விற்பன்னர்.

நாஞ்சில் நாடனின் “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” கட்டுரைப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறேன். தமிழின் “சிற்றிலக்கியங்கள்” பற்றி அவர் எழுதிய புத்தகத்துக்கும் மதிப்புரை எழுதி இருக்கிறேன். அவரது நாவல்கள், சிறுகதைகள் அன்றி கம்பராமாயணம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தையும் வாசித்து இருக்கிறேன். அடடா, எத்துணைப் பெரிய தமிழறிஞர் இவர் என்று வியக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்கு நாமும் கொஞ்சம் தமிழறிந்திருக்க வேண்டும்.

கொப்பூழ் அருகில் மச்சமிருக்கிற ஒருத்தியைத் தேடி அவளைக் கண்டுபிடிக்கிற அக் கட்டத்தில் நாயகன், தமிழ்த் திரைப்படத்தில்தான், தான் இசையறிந்தவன் என்று அவளிடம் காட்டுவதற்காக, “மரிமரி நின்னே..” என்று யேசுதாஸ் குரலில் இரண்டுவரி எடுத்து விடுவான்; அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். தமிழ்ப்புலமை உண்டென்று காட்டினாலும் அதே கதிதான். ஆகவே, தமிழ்பற்றி இங்கொன்றும் சொல்லப்போவதில்லை.

புதுமைப்பித்தனுக்கு ‘அவலத்துப் பகடி’; மௌனிக்கு ‘தத்துவ மொழியிருண்மை’ என்றால், நாஞ்சிலுக்கு ‘ஒவ்வாச்சுருதி’ (absurdity). இதை, முக்கியமாக, தனது கும்பமுனிக் கதைகள் வழியாக மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார். கும்பமுனி என்னும் கிழட்டு எழுத்தாளர், அவருக்குத் தவசிப்பிள்ளையான (சமையற்காரர்) கண்ணுபிள்ளை ஆகிய இரண்டே இரண்டு குணவார்ப்புகளைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற உரையாடல்களினால் ஆனவை இந்தக் கதைகள். இவற்றை கட்டுரைத்த கதைகள் அல்லது கதைவடிவிலான கட்டுரைகள் எனவும் கொள்ளலாம். விமர்சனத் தொனியுடன் கூடிய எழுத்துகள்.

“’மோகமுள்’ தெரியுமாடே?” என்று கும்பமுனி, தவசிப்பிள்ளையைக் கேட்கிறார். அவர் மீன்முள் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்; மோகமுள் இன்னதென்று அறிந்தாரில்லை.

இராவணன் நெஞ்சில் தைத்தது
உயிர் ஒடுங்கும் நாளில்
சீதையோடு சேர்ந்து எரிவது
ஒருக்கால்
அஸ்தி பொறுக்கப் போனால்
ஆணிபோல் எரியாமல்
கனன்றும் கிடப்பது.

“கவிதை மாரி இருக்கு பாட்டா! அப்பமே புதுக்கவிதை வந்தாச்சா?”

“கவிதை என்னவே? வாக்கியத்தை நாலா மடக்கி எழுதினாப் போச்சு. பல பேருக்க கவிதைப் பொஸ்தகத்தை நீட்டி அடிச்சா பதினாறு பக்கம் தேறாது தெரியுமா?”

இப்படி நக்கலோடு கூடிய விமர்சனங்களே எல்லாக் கதைகளும். சமூகச் சடங்குகள், அரசியல், அரசாங்க நடபடிகள், கலாச்சாரங்கள், முற்போக்குகள், சாவுபற்றிய சிந்தனைகள் என எல்லாவற்றின் மீதும் விமர்சனங்கள். தான் வாழும் சூழ்நிலை அபத்தங்கள் மீது துணிந்து கருத்துச்சொல்ல ஓர் எழுத்தாளர் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே போற்றுதற்குரியது.

மாமன்மகள் மீதுகொண்ட காதலால் எழுத்தாளர் இளகி, சமையற்காரரை குரு நிலைக்கு உயர்த்துவது. அண்ணன் தம்பி பாகப்பிரிவினையில் தெய்வங்கள் இடையிற்புகுந்து வசனம் பேசுவது, எமதர்மனிடம் மாப்புவாங்க புத்தகங்கள் காரணமாவது என நான் வியந்த பல உத்திகள் பற்றியும் பேசலாம். ஆனால் எனக்கு முன்னவரான நாஞ்சில் நாடனை வியப்பதற்கு வேண்டிய தகுதி எனக்குண்டா?

பாகேஸ்ரீ

எஸ்.சுரேஷ்

bhageshre

இப்பொழுது ராக் மல்ஹார் பாடவேண்டிய தருணம் ஆனால் நான் அல்-ஃபதா கேஃபில் உட்கார்ந்துகொண்டு ராக் பாகேஸ்ரீ  பாடிக்கொண்டிருந்தேன். வெளியில் மழை தூறிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் தான். பலர் அதை ரசித்துக்கொண்டு நடந்து சென்றார்கள்.

ராக் பாகேஸ்ரீ. இந்த ராக்ல ஒரு சின்ன சோகம் இருக்கும். அதுல ஒரு சுகமும் இருக்கும். எப்படியோ அது உங்க மனசுக்குள்ள நுழைஞ்சி மனசப் பிழிஞ்சி எடுத்துவிடும். இது ராக் தோடி மாதிரி அழுகை ராகம் இல்ல. இதனுடைய மென்சோகத்துல மூழ்கினா மீள முடியாது.

கானே மேய் டூப் கயே கியா?” சர்வர் கேட்டான்.

நிமிர்ந்து பார்த்தேன், “ஏக் சாய் லா”

நீங்க இங்க பாடறதுக்கு ரவீந்திரா பாரதீல பாடலாம். உங்க குரல் அவ்வளவு நல்லா இருக்கு”

நான் இதைக் பலர் சொல்ல பல முறை பலர் கேட்டிருக்கேன்.

இர்ஷாத் என்னை முறைத்து பார்த்தான். அவனுக்கு என்னைக்கண்டால் பிடிக்காது. நான் எப்பொழுதும் என்னுடைய சுண்ணாம்பு அடிக்கும் வேலையை முடித்துக்கொண்டு இங்கு டீ குடிக்க வருவேன். ஒரு மணி நேரம் வரை ஒரே ஒரு டீ குடித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். என் உடம்பு முழுவதும் சுண்ணாம்பு. நான் வெறும் முழுக்கை பனியனும் அரை நிஜாரும் அணிந்திருப்பேன். பலர் என்னை பார்த்துவிட்டு என் பக்கத்தில் உட்கார தயங்குவார்கள். இதை கண்டு இர்ஷாதுக்கு எரிச்சல் வரும். ஆனால் அவனால் ஒண்ணும் செய்ய முடியாது. என்னுடன் சண்டை போடுவது அவனுக்கு மரியாதைக்குறைவு.

நான் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது காதர் உள்ளே நுழைந்தான். என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். இப்பொழுது அவன் ஒல்லியாக இருந்தான். கிழிந்த சட்டை அணிந்திருந்தான். சரியாக சவரம் செய்யப்படாத தாடி. குடித்து குடித்து சிவப்பேறிய இடுங்கிய கண்கள். பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.

ஆனால் முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை. ஒரு ராஜா போல் இருப்பான். எப்பொழுதும் எல்லோரையும் திட்டிக்கொண்டிருப்பான். சில்க் ஜிப்பாதான் அணிவான். பணத்தை அள்ளி வீசுவான். எப்பொழுதும் வாயில் புகையிலை இருக்கும். அவன் என்னை ஒரு நாள் பளார் என்று அறைந்தான். நான் ரோட்டில் விழுந்தேன். இரண்டு முறை காலால் எட்டி உதைத்தான். “உன்னை இங்க இன்னொரு முறை பார்த்தேன், உனக்கு நடக்க கால் இருக்காது” என்று எச்சரித்தான்.

நான் செய்த தவறு, பெரியப்பாவின் பாட்டை படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டுதான் கேட்டது தான். கான் சாப் என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட கபூர் கான் என்ற மிக பெரிய பாடகர் எனக்கு பெரியப்பா முறை வேண்டும். அவரிடமிருந்து நான் பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் அப்பாவுடைய மிக பெரிய ஆசை. அவருடைய பாட்டு என்னை வெகுவாக ஈர்த்தது. அவர் தினமும் மூணு மணி அளவில் ஷாகிர்த்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுப்பார். அவருடைய வீடு மேல் மாடியில் இருந்தது. நான் பள்ளி முடிந்தவுடம் அவர் வீட்டு படிக்கட்டில் உட்கார்ந்துக்கொண்டு அவர் பாட்டை கேட்டுக்கொண்டிருப்பேன். அதை பார்த்து தான் காதர் என்னை அடித்தான். அவன் கான் சாபுடைய சின்ன தம்பி.

என்னை காதர் அடித்தான் என்பதை அறிந்த அம்மி ஜானுக்கு ஒரே கோபம். அப்பாவிடம் புலம்பி தள்ளினாள். “இவங்க சொத்தையா நம்ப புடுங்கிட்டோம். பைய்யன் பாட்டு தானே கேட்டான். இந்த காதருக்கு பாட்டு வராது. அந்த எரிச்சல் அவனுக்கு. கான் சாஹேப் பாவம் நல்லவரு. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்கும் சேர்த்து அவர் தம்பிங்க குடிக்கறாங்க. அவர் சேத்து வெக்கற சொத்த இவங்க குடில அழிக்கறாங்க” என்பாள் அம்மி ஜான். அப்பாவுக்கு இதை பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டுவிடுவார்களோ என்று பயம், “தும் சுப் பைடோ” என்பார். அதற்கு அம்மி, “அவர் சம்பாதிக்கற காசுக்கு அவர் பெரிய மஹால்ல இருக்கணும். இதைப் போல ஒரு பாழடஞ்ச வீட்லையா இருக்கணும்?” என்று எதிர் கேள்வி கேட்பாள். “ரெண்டு தம்பிங்களும் நாலாயக் பசங்க. ஒருத்தன் தாம்புரா தூக்கறான். இன்னொருத்தன் தபலாவ தூக்கறான். அவங்களுக்கு வாசிக்கவும் வராது, பாடவும் வராது. வேலைக்கும் போகமாட்டாங்க. கான் சாபும் “மேரே பையான் மேறேக்கு கியா இஜ்ஜத் தேதே’ன்னு பூரிச்சு போறாரு. அவருக்கா இஜ்ஜத் குடுக்கறாங்க. அவர் பணத்துக்கு தானே இஜ்ஜத். இவங்க பாதிய புடுங்கறாங்க. ரெண்டு தங்கைகளும் அப்பப்போ வந்து மீதிய புடிங்கிட்டு போறாங்க. கடைசில இவ்வளவு சம்பாதிச்சும் கான் சாப் அந்த மராட்டி குல்கர்னி தயவுல வாழ வேண்டி இருக்கு”.

மழை வலுக்க ஆரம்பித்தது. காதர் மழைக்கு ஒதுங்க வந்தவன் போல் வெளியில் நிற்கிறான். யாரவது தெரிந்தவர்கள் வருவார்களா, தனக்கு ஒரு சாய் வாங்கிக்கொடுப்பார்களா என்ற ஏக்கம் அவன் கண்ணில் தெரிகிறது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது பாவமாக இருக்கும். ஆனால் அவனுக்கு மட்டும் நான் என்றால் இன்னும் இளக்காரம் தான். இருந்தாலும் அவன் வீழ்ச்சியை நான் பார்த்திருந்ததனால் என் பக்கமே பார்க்க மாட்டன்.

காதரிடம் உதை வாங்கிய பின்பும் என்னால் பள்ளி முடிந்தவுடன் அவர் வீட்டிற்க்கு செல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. உட்காராமல் நிருக்கொண்டிருந்தேன். எங்கே காதர் வந்துவிடுவானோ என்ற பயம் என்னுள் இருந்தது.

பக்கத்து வீட்டில் ஒரு கிழவி வரண்டாவில் நாற்காலியில் எப்பொழுதும் உட்கார்ந்துக்கொண்டிருப்பாள். ‘இக்கட ரா’ என்று தெலுங்கில் கூப்பிட்டாள். நான் அவள் வீட்டுக்குள் சென்றேன். ‘லோபல போ’ என்றாள். எனக்கு எதற்காக உள்ளே போக சொல்கிறாள் என்று புரியவில்லை. இருந்தாலும் உள்ளே சென்றான். அங்கு ஒரு முற்றம் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் கான் சாபின் குரல் தெளிவாக கேட்டது. என்னை உட்கார்ந்துக்கொள்ளுமாறு சைகை காட்டினாள். நான் உட்கார்ந்துக்கொண்டு பாட்டை ரசிக்கலானேன். தினமும் அவர்கள் உட்கார்ந்துக்கொண்டு கான் சாபின் பாட்டை கேட்பேன். வீட்டில் உள்ளவர்கள் என்னை சட்டை செய்யமாட்டார்கள். அவர்கள் அவரவர் வேலையில் இருப்பார்கள். நான் கான் சாப் பாட நிறுத்தியவுடன் வீட்டுக்கு புறப்படுவேன். இரண்டு வருடங்களுக்கு மேல் இது தொடர்ந்தது. பிறகு அந்த கிழவி இறந்துவிட்டாள். நான் அவள் பிணத்துக்கு முன் கேவி கேவி அழுவதை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டார்கள்.

இப்பொழுது மழையுடன் காற்றும் சேர்ந்துக்கொண்டது. மழையை மெல்லிய தூறல் வடிவில் காற்று கடை உள்ளே கொண்டுவந்தது. வெளியில் குல்கர்னி காரில் சென்றுக்கொண்டிருந்தார். இப்பொழுது பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு காலத்தில் குல்கர்னி எங்க தெருவில்தான் இருந்தார். அவர் நல்ல இசை ரசிகர். அவர் கான் சாப் மேல் உயிரை வைத்திருந்தார். கடைசி காலங்களில் படே குலாம் அலி கான் ஹைதராபாத்தில் நவாப் வீட்டில்தான் இருந்தார். குல்கர்னியும் பெரியப்பாவும் அவரைப் பார்க்க அடிக்கடி செல்வார்கள். படே குலாம் அலி கான் உலகத்தை விட்டு சென்ற பொழுது இரண்டு நாளைக்கு இருவரும் எதுவும் சாப்பிடவில்லை என்று அப்பா சொல்லுவார். குல்கர்னியின் குடும்பத்தில் எல்லோரும் பாடுவார்கள். அவர் மகன் பெயர் சஞ்சீவ் குல்கர்னி. இப்பொழுது அவன் பெரிய பாடகன். புனேயில் இருக்கிறான். அடிக்கடி பேப்பரில் அவன் பெயர் வரும்.

அன்றொருநாள் மெஹபில்லில் நாங்கள் இருவரும் பாடினோம். முதலில் அவன் ஒரு பஜன் பாடினான். பிறகு நான் ‘மன் தட்பத்து’ என்ற மால்கோன்ஸ் ராகில் அமைந்த ‘பைஜ்ஜூ பாவர’ பட பாடலை பாடினேன். குல்கர்னிக்கு ஒரே சந்தோஷம். அப்பாவிடம், “நாளைக்கே நம்ப இவங்கள கான் சாப் கிட்ட பாட்டு கத்துக்க சேக்கறோம்” என்றார். அப்பாவுக்கும் ஒரே மகிழ்ச்சி. அவர் கனவு நினைவாகும் தருணம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்.

ஏ லோ சாய்” என்றான் சர்வர்.

அபே. அவர் எவ்வளவு நல்லா பாடறாரு. அவர போயி டிஸ்டர்ப் பண்ற. மூசிக் சென்ஸ் லேது ரா நீக்கு” பக்கத்து டேபில் பசங்க சர்வர திட்டினாங்க

ஆப் காஒ. துமரே கானே கே சாமே பீம்சென் ஜோஷி பீ குச் நஹி ஹய்” என்றான் ஒருவன்.

பல முறை பலர் இதை சொல்ல கேட்டிருக்கிறேன் என்றாலும் யார் என்றே தெரியாது ஒருவன் சொல்லும்பொழுது மனதுக்குள் ஒரு குஷி வரத்தான் செய்கிறது.

பஹலே அப்னே பேடே கோ சிகாவ். பாத் மெய்ன் தூஸ்ரோன்க்கோ சிகாயிங்கே” என்றாள் பெரியம்மா. அப்பா குல்கர்னியின் பேச்சை கேட்டு என்னை பெரியப்பாவிடம் அழைத்து சென்றிருந்தார். ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கும் அவரை பார்த்தாலே எனக்கு பயம். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் இன்று அப்பா சொன்னபோது பயம் அதிகமானது. அவர் என்னை பார்த்து “ஏக் கானா காவ்” என்றார். நானும் பயந்துக்கொண்டே ‘போலே ரே பாபிஹரா’ பாடினேன். அன்று வெயில் தகித்துக்கொண்டிருந்தது. பாடி முடித்தவுடன் பெரியப்பா ரொம்ப குஷியா இருந்தார், “பஹுத் அச்சா. பஹுத் அச்சா. அச்சா காரா. நம்ப கரானா பேர காப்பாத்துவான். நீ அடுத்த வாரம் வந்து இவன என் ஷாகிர்தா சேர்த்து விடு” என்றார். இதை கேட்டவுடன் பெரியம்மா சொன்ன வார்த்தைதான் நான் முன்னமே சொன்னேனே.

அவ நம்ப மகன பாட்டு கத்துக்க விடமாட்டா. அவளுக்கு எங்க நம்ப மகன் நல்ல பேரெடுத்து நமக்கு நிறைய பைசா வருமோன்னு பயம். என்ன ரோட்ல பார்த்தா ஏதோ வேலைக்காரிய பாக்கற மாதிரி பார்பா. ஏதோ நமக்கு ரோஜி ரோட்டி கிடைக்கறதே கஷ்டம் போல பேசுவா. அவ எங்க இதுக்கு ஒத்துக்க போறா?” அம்மி ஜான் புலம்பினாள்

அரே சுப். கான் சயாப் சரி சொன்னா யாராலயும் நக்கோன்னு சொல்ல முடியாது” என்றார் அப்பா

தும் சுப் ரஹோ ஜி. உங்களுக்கு தான் ஒண்ணும் தெரியாது. அவ, அவ மகன பெரிய பாடகனாக்கணும்னு எவ்வளவோ தக்லிப் எடுத்துக்கறா. ஆனா அவனுக்கு பாட்டு சுத்தமா வரல. கான் சாஹிப் எவ்வளவோ முயற்சி பண்ணாரு ஆனா அவனுக்கு சுர் நிக்கமாட்டேங்குது. அவனுக்கும் பாட்டு மேல ஒரே மதிப்பே இல்ல. அவனுக்கு வராதது நம்ம மகனுக்கு வந்திருக்குன்னு அவளுக்கு எரிச்சல். அவ நம்ப மகன முன்னுக்கு வர விடமாட்டா”

அம்மா பயந்தது போல்தான் நடந்தது. அடுத்த வாரம் சென்றபோது இப்பொழுது வேண்டாம் இன்னும் சில நாட்கள் போகட்டும் என்று பெரியப்பா சொல்லிவிட்டார். பெரியம்மா அன்று ஒரே குஷியாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. “சாய் பியோ” என்றாள். அவள் எப்பொழுதும் எங்களுக்கு சாய் கொடுத்ததில்லை.

இரண்டு நாட்கள் கழித்து நானும் அப்பாவும் எங்கோ வெளியே செல்லும்பொழுது குல்கர்னியை சந்தித்தோம். அவர் மகனை கான் சாஹிப் ஷாகிர்தாக ஏற்றுக்கொண்டு பாடம் தொடங்கிவிட்டார் என்று குல்கர்னி சொன்னார். அப்பாவின் முகம் சோகமாக மாறியது, “இவன இப்போ வேணாம் அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டார் குல்கர்னி சாப். இவன் கிஸ்மாத்ல என்ன இருக்கோ” என்றார்.

கியா போல்ரே. இவன் எவ்வளவு நல்லா பாடறான். இயற்கையிலேயே இவனுக்கு நல்ல குரலும் சங்கீதமும் இருக்கு. கான் சாஹிப்புக்கு யார் இருக்காங்க சொல்லுங்க. என் மகன் போல நிறைய பேர் கத்துக்கறாங்க ஆனா அவங்கெல்லாம் வேற மனுஷங்க. உங்க மகன்தான் கான் சாஹிப் கான்தான் சேர்ந்தவன். அவர் தம்பி ரெண்டு பேருக்கும் பாட்டு வராது. அவர் ஒரே மகனுக்கு பாட்டும் வராது அவனுக்கு அதுல ஆசையும் இல்லை. ஊர் சுத்தறதும் கிர்கெட் ஆடறதும்தான் அவனோட ஆசையே. இப்படி இருக்க உங்க மகன் பாடற சங்கீதம் வழியாலதானே அந்த கான்தான், அந்த கரானா நிலைச்சு நிக்கும்? எதுவும் சந்தேகப்படாதீங்க. கான் சாஹேப்புக்கு இவன் எவ்வளவு நல்லா பாடறான்னு தெரியும். அவர் நிச்சயமா இவன ஷாகிர்த்தா ஏத்துப்பாரு.”

அன்றைக்கு முழுவது எல்லோரிடமும் நான்தான் கான் சாஹிப்பின் கரானவின் வாரிசு என்று அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

கியா பாய். பஹுத் குஷி மே ஹை” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் ஜோசப் உட்கார்ந்தான். அவன் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பீ.டி. மாஸ்டராக இருந்தவன். எனக்கு நண்பன்.

நீயும் ரொம்ப குஷியா இருக்க போல இருக்கு?”

ஆமாம். என் பெண் ஆஸ்திரேலியா எமிக்ரேட் ஆனது உனக்கு தெரியுமே. இப்போ அவ என்ன ஆஸ்திரேலியாவுக்கு வான்னும் சொல்லி கூப்பிட்டிருக்கா. பேரக் குழந்தைய இன்னும் பாக்கல. இப்போ பெண்ணையும் பேரனையும் பாக்க போறேன்ற குஷிதான்”

அரே வா. கியா அச்சா கபர் சுனாய. போய் ஆஸ்ட்ரேலியவ நல்லா சுத்தி பாத்துட்டு வா”

தூ பீ ஆ சாத் மே”

நான் உரக்க சிரித்தேன், “ஏதோ யார்கிட்டயும் எதுவும் கேட்காம ஜிந்தகிய நடத்திக்கிட்டிருக்கேன். அதுக்கே மூச்சு முட்டுது இதுல ஆஸ்ட்ரேலிய வேறயா”

பணத்துக்கு ஒரு குறைச்சலும் இருக்காது. இவன் கான் சாப் ஷாகிர்த் ஆயிட்டான்னா எல்லோரும் இவன கூப்பிடுவாங்க. ரேடியோல பாடுவான். டீவீல வருவான். பேப்பர்ல இவன் பேர் வரும். நானும் என் வெள்ளை அடிக்கற வேலைய விட்டுவிட்டு இவனுக்கு மேனேஜராயிடுவேன்” அப்பா ஆகாய கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்தார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் கான் சாப்பிடமிருந்து அழைப்பு வரவில்லை. அப்பா அடிக்கடி அவரை சந்திக்கச் செல்வார். ஒரு நாள் கோவத்தில் கான் சாப் “ஜப் ஹோனா மை புலாத்தும்” என்று கத்தினார். பிறகு அப்பா அங்கு அடிகடிப் போவதை நிறுத்தினார்.

ஆனால் தினமும் ரியாஜ் செய்தேன், ஷாகிர்துகளுக்கு சொல்லிக் கொடுக்கும்பொழுதும் கேட்டுக்கொண்டிருப்பேனே, அதை ஹோம் வர்க் முடிந்த பின் பாடிப் பார்ப்பேன். இப்படித்தான் இசை என்னுள் இறங்கியது.

கயா ஸோச் மே கோ கயா?” ஜோசப் கேட்டான்

ஒண்ணுமில்ல. நீ ஆஸ்திரேலியா எப்போ போற?”

பத்து நிமிடம் பேசிவிட்டு எழுந்து சென்றான். மழை இன்னும் விடவில்லை. எனக்கு வீட்டிற்கு போக மனமில்லை. இன்னொரு சாய் சொல்லிவிட்டு “கா கருன் சஜனி ஆயேன பாலம்” என்ற தும்ரி பாட ஆரம்பித்தேன். இந்த தும்ரி ‘ஸ்வாமி’ என்ற படத்தில் ஜேசுதாஸ் பாடி மிக பிரபலமானது. ஆனால் அதற்கு முன் படே குலாம் அலி கான் சாப் இதை பிரபலப்படுத்தியிருந்தார். பெரியப்பா இதை அருமையாக பாடுவார். நான் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு கற்றுக்கொண்ட பாடலில் இதுவும் ஒன்று.

அரே வா. கியா கானா ஹை, வா வா” என்றான் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன்.

ஆனால் இதே பாடலை அப்பா விரும்பிக்கேட்ட பொழுது பாட மறுத்துவிட்டேன். அவர் மரணப்படுக்கையில் இருந்தார். “ஏக் பார் கா” என்று மன்றாடினார். நான் என் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அம்மி ஜான் எவ்வளவோ கெஞ்சினாள். நான் “நஹி” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டேன். திரும்பி வந்த பொழுது அப்பா மரணமடைந்திருந்தார். ஒரு மாதத்துக்குள் அம்மி ஜானும் உயிர் துறந்தார். அந்த ஒரு மாசமும் என்னுடன் பேசவில்லை. நானும் படிப்பை விட்டுவிட்டு சுண்ணாம்பு அடிப்பதை வேலையாக கொண்டேன். நிகாஹ் செய்துக்கொள்ளவில்லை. பத்து வருடங்கள் பாடவே இல்லை. ஒரு நாள் திடீரென்று எதற்காகவோ அப்பாவின் குரல் என் காதில் ஒலிக்க, ‘கா பேட்டா. ஏக் பார் கா’ என்று அது கூற, நான் பாட ஆரம்பித்தேன். இப்பொழுது என்னால் பாடாமல் இருக்கமுடியவில்லை. என் வாழ்கை இப்பொழுது வெறும் பாடலாகிவிட்டது.

மழையின் தீவிரம் சற்று குறைந்தது. யாரோ ஒருவன் டிவிஎஸ் மொபெடில் சென்றுக்கொண்டிருந்தான். இந்த டிவிஎஸ் மொபெட் எனக்கு வாங்கிக்கொடுப்பதாக அப்பா உறுதியளித்திருந்தார். அப்பொழுது எனக்கு நூறு ருபாய் பரிசு கிடைத்திருந்தது. ஒரு போட்டியில் நான் முதல் பரிசை வென்றேன். நூறு ருபாய் கொடுத்தது மட்டுமல்லாமல், என்னை ஒரு கச்சேரிக்கு புக் செய்து நூறு ருபாய் அட்வான்ஸ்ஸாக அந்த நிகழ்ச்சி நடத்துபவர் கொடுத்தார்.  

அடுத்த நாள் நானும் அப்பாவும் குல்கர்னி அவர்களிடம் இந்த செய்தியை கூற சென்றிருந்தோம். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அவர் வீட்டில் உறவுக்கார்கள் வந்து இறங்கியிருந்தார்கள். குல்கர்னி அவர்களிடம் என்னை பற்றி கூறிவிட்டு, “பேடா ஏக் கானா காவ்” என்றார். நான் ‘“கா கருன் சஜனி ஆயேன பாலம்” பாடினேன். பாடி முடித்தவுடன் குல்கர்னியும் அவர் உறவினரும், ‘வா வா பஹுத் கூப்” என்றார்கள். சந்தீப், “தூ கான் சாப் ஜெய்ஸா காரா ரே” என்றான். “நான் இவனுடைய வெற்றி பற்றி கான் சாப் கிட்ட சொல்றேன். அவர் இவனுக்கு அவரோட ஆசிய கொடுக்கட்டும்”

அப்பொழுது பெரியப்பா ஆசியை மட்டும் கொடுக்கும் நிலையில் இருந்தார். திடீரென்று கான்செர் தாக்கி அவரை எலும்பும் தோலுமாக ஆக்கிவிட்டது. அவருக்கு பேசுவதே கஷ்டமாக இருந்தது. அவரைப் பார்த்துவிட்டு வரும்பொழுதெல்லாம் அப்பா கண்ணீர் விடுவார், “கைஸா தா ஆத்மி கைஸா ஹோ கயா” என்று புலம்பிக்கொண்டிருப்பார்.

இரண்டு நாட்கள் கழித்து குல்கர்னி வீட்டிற்கே வந்துவிட்டார். பரபப்பாக அப்பாவிடம் , “வாங்க வாங்க. கான் சாஹேப் வீட்டுக்கு போகலாம். நேத்து அவர்கிட்டையும் அவர் பீபீகிட்டயும் உங்க மகன் முதல் பரிசை வென்றதை பற்றியும், அவனுக்கு கச்சேரி பண்ண சான்ஸ் கிடைத்தது பற்றியும் சொன்னேன். அதுனால அவர் கரானா தழைக்கும்ன்னு சொன்னேன். இன்னைக்கு அவர பார்க்க போயிருந்தேன். உங்க ரெண்டு பேரையும் அழைத்துகொண்டு வர சொன்னார். கிளம்புங்க” அப்பாவுக்கு குஷி தாங்கவில்லை. “பெரியப்பா உன்னை அவர் ஷாகிர்த்தா அறிவிக்க போறாரு” என்றார்.

அவர் வீட்டிக்குள் நுழைந்தவுடன் என் பெரியம்மாவையும் அவர் மகனையும் மற்றும் காதர்ரையும் பார்த்தேன். அவர்கள் முகத்தில் ஏதோ சாதித்துவிட்ட திருப்தி இருந்தது. எனக்கு என்ன நடக்க போகிறது என்று புரிந்துவிட்டது. உடனே எனக்கு வெளியே ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. “மை நஹி ஆத்தும்” என்று சொல்லிவிட்டு வெளியே போக பார்த்தேன். அப்பா என் கையை பிடித்து நிறுத்தினார். “கஹான் ஜாரா. அந்தர் சல்” என்றார். நான் அங்கிருந்து ஓட பார்த்தேன். ஆனால் அப்பா விடவில்லை. வேண்டா வெறுப்பாக மெதுவாக பெரியப்பா படுத்திருந்த அறைக்குள் சென்றேன்.

பெரியப்பா தூங்கிக்கொண்டிருதார் போல இருந்தது. குல்கர்னி பெரியம்மாவிடம், “கான் சாப் தூங்கறார். நாங்க அப்புறம் வருகிறோம் என்றார். பெரியம்மாவோ “நக்கோ நக்கோ. டஹரோ” என்று சொல்லிவிட்டு பெரியப்பாவை உலுக்கினார். “யார் வந்திருக்காங்க பாருங்க” என்றார்.

கஷ்டப்பட்டு கண் திறந்து பார்த்தார் பெரியப்பா. அவருக்கு முதலில் ஒன்றும் புரிபடவில்லை. பிறகு எங்களை பார்த்து, “ஆயா கியா? இதர் ஆ” என்று அவர் பக்கத்தில் வர சொன்னார். அப்பா என்னை முன்னே தள்ளி விட்டார்.

பெரியப்பா பேசுவதற்கு ரொம்ப மேஹனத் செய்ய வேண்டி இருந்தது. சிங்கம் போல் கர்ஜித்த குரல் இப்பொழுது எழ மறுத்தது. ரொம்ப சன்னமான குரலில், “நீ என்னைப் போல் பாடுகிறாய் என்று குல்கர்னி சொன்னார். நீ படிக்கட்டுல உட்கார்ந்து என் பாட்ட கேட்டு கத்துகிட்டன்னு சொன்னார். அப்போ நான்தான் உன் உஸ்தாத் இல்லையா?” என்று கேட்டுவிட்டு கண்களால் கேள்வி எழுப்பினார்.

ஆவ். நீங்க தான் அவனடோ உஸ்தாத்” என்றார் அப்பா.

என்னை பார்த்து புருவத்தை உயர்த்தினார் பெரியப்பா.

ஆம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.

படே குலம் அலி சாப் இங்க வரும்போதெல்லாம் அவர் கிட்ட நான் பாட்டு கத்துப்பேன். அவர் என்ன ஒரு மகன் போல தான் பார்த்தார். ஒரு முறை..”

ஜோ பூச்னா ஹை வோ பூச்சோ. உங்க பழைய கதையெல்லாம் அப்புறம் சொல்லலாம்” பெரியம்மா சீறினாள்.

அச்சா. அச்சா.” என்று சொல்லிவிட்டு, என்னை பார்த்து, “இங்க எல்லாரும் அவங்க உஸ்தாதுக்கு குரு தக்ஷின தருவாங்க. குரு தக்ஷின தெரியுமா உனக்கு?”

நான் மெளனமாக இருந்தேன்.

தெரியுமா?” என்று மறுபடியும் பெரியப்பா கேட்டார்.

எல்லோர் கண்களும் என் மேல் பதிந்திருந்தன. பெரியம்மாவின் கண்ணில் அளவில்லா கோபம் இருந்தது. அவர் மகனும், காதரும்என்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. அப்பா குரலை உயர்த்தி, “மாலும் ஹை போல்னா” என்றார். நான் மெதுவாக எனக்கு தெரியும் என்று தலையாட்டினேன்.

தூக்க முடியாமல் மெதுவாக வலது கரத்தை தூக்கி, “கசம் கா. எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு…”

வெளியில் மழை வலுத்தது. நான் தோடி ராக் பாட ஆரம்பித்தேன். சர்வர் கொண்டு வைத்த சாயை நான் தொடவில்லை.

வரைபடம் அல்லது சதுரங்க கட்டம்

காஸ்மிக் தூசி

* Checkerboard Tombstone *

வரைபடம் (அல்லது) சதுரங்க கட்டம்

சதுரங்க கட்டங்கள் –
எவரோ கிழவர்கள்
வரைந்திருக்க வேண்டும்
நேற்று

சுண்ணக்கட்டியால்
இருபதடி நீளமுள்ள
ஆமையின் முதுகில்

தேய்ந்து அழிந்து
மங்கலாகிக்கொண்டிருக்கும்
ஓடி விளையாடும்
குழந்தைகளின்
வெறுங்கால்களின்
கீழே

 

அருண் கொலாட்கரின் The Pattern என்ற கவிதை தமிழாக்கம்