எழுத்து

நெடும்பயணம்

அவள் முகத்தை உற்றுப்பார்க்கிறேன்
சுருக்கங்கள் ஒவ்வொன்றாக மறைந்து
கன்னங்கள் வழவழப்பாகின்றன
எங்கோ வெறித்து பார்க்கும் கண்களில்
இப்பொழுது தீ

தூரத்தில் மங்கிய ஒளியில் பச்சை மலச்சரிவுகள்
ஒளிரும் வெள்ளை மேகங்கள்
எங்கு பார்க்கினும் பரவசம்

மேகங்கள் கலைந்து கலைந்து கலைந்து கலைந்து
வேறு வேறு உருவங்களாக மாறுகின்றன
ஒளிரும் மேகங்கள் ஒளி மங்கி கறுத்து
மீண்டும் ஒளிர்ந்து மங்கி ஒளிர்ந்து
இப்பொழுது?

தெரிந்த பாதையிலா போனோம்? மலைகள்
மறைந்து வேறு மலைகள் தோன்ற
ஏன் சென்றோம் என்று சில பாதைகள்
வண்ணமயமான பல பாதைகள்
எங்கோ மறைந்து போன பாதைகள்

மெதுவாக எழுந்து தளர்ந்த நடை நடக்கிறாள்
உடன் நானும் மெதுவாய் எழுந்திருக்கிறேன்

சூப்பர் சிங்கர்

  எஸ். சுரேஷ் –

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை
வாயில் வைத்துக் கொண்டிருந்த காக்காவைப் பார்த்து
நரி கூறியது,
“நீ நன்றாய் பாடுவாயாமே. ஒரு பாட்டு பாடு கேட்கலாம்”

வடையைக் காலுக்கடியில் பத்திரமாக வைத்துவிட்டு
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக்கணக்கு”
என்று காக்கா பாடி முடித்தப்பின் நரி,
“குரல் நன்றாக இருக்கிறது,
ஆனால் இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்,
வாய்ஸ்ல கூடுதலா டைனமிக்ஸ் வேணும்,
ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணு”,
என்று கூறிவிட்டு
திராட்ஷை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

றியாஸ் குரானா

மழை மெல்லத் தொடங்குகிறது
துாறி பின் கற்களைப்போன்ற
தண்ணீர்த்துளிகளை வீசத்தொடங்குகிறது
வழமைபோல
மழை நீடித்தால் எப்படி
அதைக் கடந்து செல்வது
மழையின் அருமையையும்
கூதலின் நீண்ட ஆதரவையும்
மரங்களில் இறங்கும் அழகையும்
முணுமுணுக்கும் அதன் குடும்பப் பாடலையும்
நினைவிலேற்றி
மழையை கடந்துவிட முடியாது
அது சலிப்பை தந்துவிடும்
ஓய்ந்துவிடத் தயாராகிறது
அதை நான் விரும்பவில்லை
காத்திருக்கும் ஒருவருக்கும்
காத்திருக்கச் செய்தவருக்கும்
இடையே ஓயாமல் பெய்விக்கிறேன்
காத்திருப்பவரின் பக்கத்தில்
துாறச் செய்தும்,
மற்றப்புறத்தில் பெரும் மழையாகவும்
நீடிக்கச் செய்கிறேன்.
இருவருக்கிடையிலும்
மழை புதிய அர்த்தத்தை
துளிகளாக கொட்டுகிறது
காலங்கள் நீளுகின்றன
மழை என்ன செய்கிறதென
கண்காணிப்பதற்கு
ஜன்னலைத் திறந்து பார்க்கிறேன்
நெடுநாட்களாக மழை வராததால்
எங்கோ இருந்து எழுந்து
மழை தேடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு பூந்தோட்டம்.
திறந்து பார்த்த ஜன்னல்
நிரந்தரமானதல்ல
எப்போதாவது மாத்திரம் தோன்றுவது
இதை நீங்கள் எப்படியும் வாசிக்க முடியாது
ஜன்னல் இருந்தால்
திறந்து பார்க்கலாம் அவ்வளவுதான்.

குண்டூசி

வெ. கணேஷ்

நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் மெத்தை மீது யாரோ சில குண்டூசிகளை தலைகீழாக குத்தி வைத்திருக்கிறார்கள். தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் அந்த இருக்கையைத் தவிர வேறு இருக்கைகள் காலியாக இல்லை. எழுந்து நின்று கொண்டேன்.

வேலையில்லாதவர்கள் யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உட்காரும் இருக்கையில் தலைகீழாக குண்டூசியை குத்தி வைத்தவர்களின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும்? நான் அவஸ்தை பொறுக்காமல் எழுந்து நிற்பதை குத்தியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ!

ரிசப்ஷனையும் உள்ளிருக்கும் ஹாலையும் கண்ணாடிச் சுவர் பிரித்தது ; உள்ளே இருபது முப்பது பேர் தத்தம் இருக்கையில் உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தனர் அல்லது வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. (more…)

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

றியாஸ் குரானா

பதாகை –  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?

றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல. (more…)