கட்டுரை

கம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை

மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்கு மாமுடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான்.

வசிட்ட முனிவன் இராமனை அடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப் பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான்.

வசிட்டன் உரைப்பனவாகக் கம்பன் பதினைந்து பாடல்களை இயற்றி உள்ளான். தெளிந்த நல்லறம், மனத்தில் செப்பம் உடைமை, கருணை ஆகிய மூன்றையும் ஆள்பவர் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறும் வசிட்டன்,”சூது என்பதுதான் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாகும்; அதை அறவே விலக்க வேண்டும்” என்கிறான்.

”சூதானது பொருளை அழிக்கும்; பொய் சொல்லத் தூண்டும்; அருளையும் கெடுக்கும்; அல்லவையும் தரும் “ என்ற பொருளைத் தரும் குறளான,

”பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்[து]

அல்லல் உழப்பிக்கும் சூது”

என்பது நினைவுக்கு வருகிறது. மேலும், “ஆள்வோர் எவரிடத்தும் பகைமை பாராட்டலாகாது. பகைமை இல்லாத அரசனின் நாட்டில் போர் இல்லாமல் போகும்; அவனது படையும் அழியாது; அவன் புகழ் பெருகும்” எனும் கருத்தில் ‘போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது” என்று கூறுகிறான். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய உலக அரசியலுக்கு இது முக்கியமான அறவுரையாகும். சிறந்த அரசாட்சி எதுவென்பதற்கு வசிட்டனின் கூற்றாகக் கம்பன் ஓர் இலக்கணம் வகுக்கிறான்.

”கோளும் ஐம்பொறியும் குறைய பொருள்

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்

ஆளும் அவ்வரசே அரசு அன்னது

வாளின் மேல்வரும் மாதவம் மைந்தனே” என்பது கம்பனின் பாடல்.

அதன்படி, “மெய்,வாய், கண்,மூக்கு எனும் ஐம்பொறிகள் உண்டாக்கும் ஆசைகளை அடக்கி, தனது நாட்டுக்குத் தேவையான பொருளை நாள்தோறும் நல்ல வழியில் சேர்த்து, நடுநிலைமையில் நின்று ஆளுகின்ற அரசாட்சியே உண்மையான சிறந்த அரசாட்சியாகும் என்பது விளக்கமாகிறது. இப்படி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை விளக்க ”அந்த ஆட்சி வாளின் முனையில் நின்று செய்கின்ற பெரிய தவம் போன்றதாகும்” என்ற உவமையும் கம்பனால் கூறப்படுகிறது.

மேலும் அறிவுசால் அமைச்சரின் சொற்படிதான் ஆட்சியாளர் செயல்பட வேண்டும் என்பதை விளக்க மும்மூர்த்திகளின் தோள்வலிமையை ஒருவரே பெற்றிருந்தாலும் “அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே” என்று வசிட்டன் இராமனிடம் கூறுகிறான். அத்துடன் “ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது; மனத்தில் அன்பு கொள்ள வேண்டும்; ஏனெனில் அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?” என்றும் வசிட்டன் கூறுகிறான்.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதுதான் பண்டைய தமிழ் இலக்கிய மரபாகும். இதன்படி இவ்வுலக மக்களெலாம் உடலாகவும், அவர்தமை ஆளும் மன்னன் உயிராகவும் சித்தரிக்கப் படுகிறான். கம்பன் இதை அப்பட்ரியே மாற்றுகிறான்.

”உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

”வையம் மன்உயிர்ஆக அம்மன்உயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னன்”

எனும் அடிகள் மக்களை உயிராகவும், அவ்வுயிரைப் பேணும் உடலாகவும் மன்னனைக் காட்டி மக்களாட்சித் தத்துவத்தைக் காட்டுகின்றன.

அடுத்து, அரசன் கொள்ளவேண்டிய குணங்களைக் கூறும் வசிட்டன் அவற்றைப் பட்டியலிடுகையில், ”இன்சொல், ஈகை, நல்வினையாற்றல், மனத் தூய்மை, வெற்றிபெறல், நீதிநெறி நடத்தல்,” என்ற குணங்களை முன் நிறுத்துகிறான். அரசன் கொள்ள வேண்டிய நடுநிலையைக் கூறும் போது, ”சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்” என்று வள்ளுவர் கூறும் துலாக்கோல் உவமையையே கம்பனும் பின்பற்றி, “செம்பொன் துலைத்தாலம் அன்ன” என்று பொன்னைத் துல்லியமாக நிறுத்து நடுநிலைமையைக் காட்டும் தராசைப் போன்று ஆட்சிபுரிவோர் இருக்க வேண்டும் என்று கூறுகிறான்.

மேலும் ஆட்சியாளர்க்கு அறிவு சார்ந்த சான்றோரிடம் தொடர்பு கொள்வதும், அவர் வாக்கின்படி ஒழுகுவதும் முக்கியமானவையாகும்.

அதனால்தான் கண்ணகி நீதிமுறை தவறிய பாண்டியனின் நாட்டில் “சான்றோரும் உண்டுகொல்” என்று கேட்கிறாள். எனவேதான் ஆன்றோரிடம் செலுத்தும் அன்பு ஓர் அரசனுக்கு ஆற்றல் மிக்க ஆயுதமாக விளங்கும் என்று வசிட்டன் இராமனுக்கு விளக்குகிறான்.

’தூமகேது’ எனும் பெயருடைய வால் நட்சத்திரம் தோன்றினால் உலகிற்குக் கேடு சூழும் என்பது ஒரு நம்பிக்கையாகும். மங்கையர் மீது வரும் தீராக்காமமான பெண்ணாசை அத்தகைய தூமகேது போன்றது. அதை விலக்கினால் அரசர்குக்க் கேடு இல்லை எனும் பொருளில்,

”தூமகேது புவிக்கு எனத்தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங் கேடுஎனும்

நாமம் இல்லை நரகமும் இல்லையே”

எனக் கம்பன் பாடுகிறான்.

வசிட்டன் கூறும் இந்த அறமுறைகளை எல்லாம் இராமன் நன்றாக மனத்துள் வாங்கிக் கொள்கிறான். கிட்கிந்தைக்கு அரசனாக, சுக்ரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடி சூட்டுவித்த பின்னர் இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் அறங்களை எடுத்துக் கூற வசிட்டன் உபதேசம் மிகவும் உதவுகிறது.

“மங்கையர் பொருட்டால் மாந்தர்க்கு மரணமுண்டாகும்; அத்துடன் பழிப்பும் உண்டாகும்; இதற்கு உருமையைக் கவர்ந்த வாலியே சாட்சி” என்று சுக்ரீவனிடம் இராமன் உரைக்கிறான்.

சுக்ரீவனுக்கு இராமன் கூறும் அறவுரைகளாகக் கம்பன் ஒன்பது பாடல்கள் இயற்றி உள்ளான்.

“அமைச்சர்கள் வாய்மைசால் அறிவில் மேம்பட்டவராய் இருக்க வேண்டும். படைத்தலைவர்கள் குற்றமில்லாத நல்லொழுக்கத்துடன் கூடியவராய் இருக்க வேண்டும். ஆள்வோர் இவ்விருவரோடும் மிகவும் நெருங்காமலும், அதே நேரத்தில் விட்டு விலகாமலும் பழகி ஆட்சி செய்ய வேண்டும்.

புகை எழுந்தால் அங்கே எரியும் தீ இருக்கிறது என்று ஊகிக்கும் திறனோடு, நூல் வல்லார் அறிவையும் அரசன் பெற்றிருக்க வேண்டும்; பகைமை கொண்டவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பயன் உண்டாகும் படி நடக்க வேண்டும்.

சுக்ரீவனே! ஆட்சி புரிவோரிடம் சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். செய்ய வேண்டியவற்றைச் செய்தல், மற்றவர் தம்மைப் பற்றி வசைமொழி கூறிய போதும் தாம் அவர் பற்றி இனியவையே கூறல், உண்மை பேசுதல், தம்மால் முடிந்த மட்டும் இரப்பவர்க்கு ஈதல், பிறர் பொருளைக் கவராமல் இருத்தல் என்பனவே அவை.

மேலும் ஆட்சியாள்வோர் தாம் வலிமையுடையவர் என்று எண்ணி எளியவரை அவமதிக்கக் கூடாது. அவ்வாறில்லாமல் நான் கூனிக்குச் சிறு கேடு செய்ததால் துன்பக் கடலுள் வீழ்ந்தேன்.

ஆள்வோர் “இவன் நம் தலைவர் அல்லர்; நம்மைப் பெற்றெடுத்த தாய் போன்றவர் என்று குடிமக்கள் கூறுமாறு அவரைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டிற்கு எவரேனும் தீமை செய்தால் அத் தீயவரை அறத்தின் எல்லை மீறாமல் தண்டிக்க வேண்டும்.

அறத்தினது இறுதி வாழ்நாட்டுக்கு இறுதி; அதாவது அறவழியிலிருந்து தவறுதல் ஆயுளின் முடிவுக்கே காரணமாகி விடும், எனவே செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாகாது.”

இவ்வாறு ஆள்வோர் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், ஆளவேண்டிய முறைகளையும் இராமன் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

இவற்றோடு வசிட்டன் கூறும் அரசியல் அறங்களாகக் கம்பன் மொழிந்திருப்பதையும் சிந்தித்தால் அவை எல்லா நாட்டு ஆட்சியாளர்க்கும் எப்பொழுதும் பொருந்துவனபோல் தோன்றுகிறது. கம்பன் கூறும் இந்த அரசியல் அறங்களப் பின்பற்றும் ஆட்சியாளரால் வழி நடத்தப்படும் நாடு மிகச் சிறந்ததாய்த்தான் விளங்கும் என்று துணிந்து கூறலாம்.

கம்பன் காட்டும் வணிகம்

ஏற்றுமதி வணிகம்

முறைஅறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்

இறைஅறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்

பொறைஅறிந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்

நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்

[அவா=ஆசை; முனிவுழி முனிந்து=சினம்கொள்ளவேண்டிய இடத்தில் சினந்து; இசை=புகழ்; நிறை பரம் சொரிந்து=அருமையான பொருள்கள் இறக்கி]

கோசல நாட்டில் நடந்த வணிகத்தைப் பற்றிக் கம்பன் கூறுகிறான். வங்கம் என்றால் கப்பம் என்று பொருளாகும். ஆண்டாள் தம் திருப்பாவையின் 30-ஆம் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த” என்று கப்பலைச் சொல்வார். கோசல நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைந்தன. அந்நாட்டில் தங்களுக்குத் தேவையானது போக எஞ்சிய பொருள்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏற்றுமதி செய்தார்கள். அப்படிப் பல பொருள்களை ஏற்றிச் சென்று இறக்கிய பிறகு அக்கப்பல்கள் தம் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றி நிற்குமாம்.

சிறந்த நெறிமுறையில் அரசாளும் மன்னன் ஆளுவதால் பாரம் சுமந்த வருத்தம் நீங்கிய பூமிதேவியை அக்கப்பல்களுக்கு உவமையாகக் கூறுவான் கம்பன். கோசல நாட்டில் கடலே கிடையாது. கப்பல்கள் எங்கு வந்தன என்ற கேள்வி எழலாம். சரயு நதியே கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும், ஆழமாகவும் இருந்ததாம்.

அறநெறியை அறிந்து, பொருளாசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் சினம் கொண்டு, மக்களிடம் வரிப்பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என அறிந்து பெற்று, தன் ஆட்சியின் கீழ் வாழும் உயிரினங்களிடத்தில் இரக்கம் கொள்கிற புகழ் பெற்ற அரசன் பூமியைப் பாதுகாத்து வந்தான். அதனால் பூமியைச் சுமக்கின்ற தம் பாரத்தை இறக்கி இளைப்பாறுகின்ற பூதேவியைப் போலக் கப்பல்கள் அருமையான பொருள்களின் நிறைந்த பாரத்தை இறக்கிவிட்டு நெய்தல் நிலத்தில் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றிக் கொள்ளும்

கம்பன் காட்டும் ஐவகைத் தேன்

ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்

சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்

மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி வங்க

வேலைவாய் மடுப்ப உண்டு மீன்எலாம் களிக்கும் மாதோ [41]

[அரிதலை=அரியப்பட்ட நுனி; தொடை இழி இறால்= அம்பு தொடுக்கப்பட்ட தேன்அடை; வரம்பு=எல்லை; வங்கம்=கப்பல்; வேலை=கடல்; மடுத்தல்=கலத்தல்; மாதோ=அசைச்சொல்]

கரும்பாலைகளில் இருந்து கருப்பஞ்சாறாகிய தேன் ஓடி வருகிறது. தென்னை, பனை மரங்களின் நுனி அரியப்பட்டு அதன் பாளைகளிலிருந்து கள்ளாகிய தேன் ஓடுகிறது சோலைகளில் உள்ள மரங்களின் பழங்களிலிருந்து பழச் சாறாகத் தேன் ஓடி வருகிறது. அம்பு தொடுக்கப்பட்ட தேன் அடைகளிலிருந்து தொடர்ந்து தேன் ஓடி வருகிறது. மக்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்து தேன் ஓடி வருகிறது. இந்த ஐவகைத் தேனும் எல்லை கடந்து ஓடிக் கப்பல்கள் உலவும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் எல்லாம் உண்டு களிக்கின்றன.

’தொடை இழி இறால்’ என்பது அருமையான சொல்லாட்சி. இது கம்பன் காட்டும் புதுமையான தேன். இதன் மூலம் கம்பன் அக்காலத்தில் வேடர்கள் தென் எடுத்த விதத்தைச் சொல்கிறான். வேடர்கள் தேனெடுக்க தேனடையை நோக்கி அம்பு எய்வார்கள். அம்பு அந்த அடையில் துளையிடும். அத்துளை வழியே தேன் இடைவிடாது அம்பின் வழியே அம்பின் அடி நுனியில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒழுகும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அடைக்கும் சேதமேற்படாதவாறு, தேனீக்களுக்கும் துன்பம் செய்யாமல் தேனெடுக்கும் வழியைக் கம்பன் அறிந்திருக்கிறான். கடலுக்கு அடைமொழியாக வங்கம் எனும் சொல்லைக் கையாள்கிறான். அது வங்கக்கடல் என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் சொல்வதாகும்.

வலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா

புலம்பெயர் இலக்கியத்தில் முதல் தலைமுறையினரின் எழுத்துக்கள் பலவகையிலும் முக்கியமானவை. அடையாள சிக்கலின் ஆவணங்களும் கூட. பிறந்து வளர்ந்த மண் அவர்களை வடிவமைத்திருக்கும். வாழ்வையும் வளத்தையும் கனவில் சுமந்தபடி புதியநிலத்தில் வேர்விட அத்தனை ஆண்டுகாலம் அவர்களை வடிவமைத்த வார்ப்புகளை உடைத்துக்கொண்டு புதிய வார்ப்புகளுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் புறத்தில் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் அகத்தில் இவை நிகழ்வது அத்தனை எளிதல்ல. பொருந்தா காலனியின் கட்டைவிரல் வலியைப்போல், அல்லது அளவுகுறைந்த சட்டையின் பிதுக்கங்கள் போல் சில தொந்திரவுகள் வெளிப்படவே செய்யும். ஒன்றை கைவிட்டு மற்றொன்றை கைக்கொள்ளும்போது ஏற்படும் உராய்வுகள் வலுவான கதைகளை உருவாக்க உதவும். இந்த பின்புலத்தில்  எட்டு கதைகள் கொண்ட அழகுநிலாவின் சங் கன்ச்சில் ஒரு நல்ல வரவாக கருத முடியும்.

 

புலம்பெயர் எழுத்தை பற்றி பேசும்போது இயல்பாக பெண்களின் வாழ்வியல் எழுத்தும் (இது பெண்கள் எழுதுவதல்ல) சேர்த்தே வாசிக்க முடியும். இந்திய சூழலில் திருமணம் வழியாக பெண் புலம் பெயர்கிறாள். தன் அடையாளங்களை மறுவரையறை செய்துகொள்கிறாள். கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற ஒரு நாவலை அஞ்சலையின் புலம்பெயர்வு மற்றும் அடையாள சிக்கலாக வாசிப்பதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். ஆகவே வெளிநாட்டிற்கு வரும் பெண் குடும்பத்திலிருந்து திருமணத்தின் வழியாக புலம்பெயர்ந்து பின்னர் தேசத்தை விட்டும் புலம் பெயர்கிறாள். புலம்பெயர்வை ஆண்களை விட பெண்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடிகிறது என தோன்றுகிறது. பதின்மம், முதல்தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக அழகுநிலாவின் கதைகளை வாசிக்கலாம்.

 

அழகுநிலாவின் இரண்டாம் தொகுப்பான சங் கன்ச்சில் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் அவருடைய முதல் தொகுப்பான ஆறஞ்சு வாசித்தேன். ஆறஞ்சு வாசித்து முடிக்கும்போது சங் கன்ச்சில் தொகுப்பு அவருடைய முதல் தொகுப்பிலிருந்து ஒரு பெரும் தாவல் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வை அனைத்து தளங்களிலும், அனைத்து கோணங்களிலும் அள்ளிவிட் வேண்டும் எனும் முனைப்பு இருந்த அளவிற்கு மொழியும் சித்தரிப்பும் முதல் தொகுதியில் வசப்படவில்லை.  ‘ஒற்றைக்கண்’ ஒரு நல்ல படிமமாக நிலைபெற்று வளர சாத்தியமுள்ள கரு எனினும் மொழியின் தேய்வழக்குகள், உணர்வுகளின் தேய்வழக்குகள் கதைக்கு தடையாகி விடுகின்றன. இவற்றை மீறி முதல் தொகுப்பில் எழுத்தாளரின் ஆதார கேள்விகள் நிச்சயம் வெளிப்படும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆறஞ்சு தொகுதியில் சில நுட்பமான அவதானிப்புகளை காண முடிகிறது. உதாரணமாக ஒரு கதையில் ஊரில் வியர்வை உழைப்பின் அடையாளமாக கருதப்படும் போது சிங்கப்பூரில் அது நாகரீக குறைவாக பார்க்கப்படுவது பற்றிய ஒரு குறிப்பை எழுதி இருப்பார். தலைப்பிற்குறிய கதையான ‘ஆறஞ்சு’ அழகுநிலாவின் வலுவான கதைபுலத்தின் துவக்க புள்ளியை அடையாளம் காட்டுகிறது என சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி முறை அளிக்கும் அழுத்தத்தின் மீதான சன்னமான விமர்சனத்தையும் பதின்மவயதினரின் சிக்கல்களையும் பேசுகிறது. இந்த தொகுப்பில் சங் கன்ச்சில், முள்முடி, விலக்கு ஆகிய மூன்று கதைகளும் பதின்மவயதினரை சுற்றி நிகழ்கிறது. பொங்கல், வெள்ளெலிகள் கதையிலும் சிறுவர்கள் வருகிறார்கள். பதின்மத்தின் தயக்கங்கள், கொந்தளிப்புகள் வெறும் வயது சார்ந்த அக தத்தளிப்புகள் என்ற அளவில் சுருக்கிவிடாமல் அவை பண்பாட்டு தளத்தில் விரிகிறபோது பதின் பருவத்தை முதல்தலைமுறை புலம்பெயர்வுக்கு இணையாக, அதன் குறியீடாக வாசிக்க இயலும் என தோன்றுகிறது. புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் அழகுநிலா வெற்றிபெறுகிறார்.

சங் கன்ச்சில், தொகுப்பின் தலைப்பிற்குறிய கதை. சிங்கப்பூரில் வளரும் பதின்ம வயதினனின் கதை. விகாசம், பொன் முகத்தில் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ ஆகிய கதைகளுடன் சேர்த்து வாசிக்க முடியும். தொழில்நுட்பம் மனிதர்களை அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்ற பயன்படுத்த முடியும். வாழ்வர்த்தத்தை அழிக்கவும் அவற்றை ஏவ இயலும். ஸ்ரீதர்  நாராயணனின் ஒரு கதையும் பதின்ம வயது பெண் குழந்தை பாலியல் படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்படுவதை களமாக கொண்டது. புலம்பெயர் எழுத்தாளர்களின் முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இது உருவாகி வருவதை காட்டுகிறது. முதலை மீது தாவி கரையை கடக்கும் கன்ச்சிலின் கதையும் பாம்பின் தலைமீது நடனமாடும் கிருஷ்ணனின் கதைக்கும் இடையே சுவாரசியமான ஒரு முரணை உருவாக்க முயன்றுள்ளார். இரண்டு பாட்டிகள், வெவ்வேறு சமூக படிநிலைகளை சார்ந்தவர்களாக வருகிறார்கள். ஆனால் அது அத்தனை துல்லியமாக உருபெறாமல் சற்றே அலைவுரும் கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ரத்னாவின் பாத்திர விவரிப்பு அனாவசிய சுமை என தோன்றியது. சிவாவின் நடத்தை இரண்டு வகையில் எனக்கு முக்கியமாக தோன்றியது. அவனுடைய தந்தை அடித்திருந்தாலும், தாய் திட்டியிருந்தாலும் மனக்காயத்தை மீறி அவர்களுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. அவனுடைய நடத்தையை தொலைபேசியில் வெளியே எவருடனோ பகிர்ந்து கொண்ட, இறந்து போன பாட்டியின் இடத்தில் இருக்கும் லட்சுமியிடம் தான் அவன் கணக்கை நேர் செய்து பழி தீர்க்கிறான். ஒருவகையில் மனிதர்கள் ஆக பலவீனமான புள்ளியில் தங்கள் வெற்றிகளை நிலைநாட்டுவார்கள் என சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மூன்று தலைமுறையினரிடையே உள்ளே உறவு சிக்கல்களை பக்க சார்பற்று சித்தரிக்க முடிந்தது இக்கதையின் வெற்றி.

விலக்கு இந்த தொகுதியில் உள்ள நல்ல கதைகளில் ஒன்று.‌ சென்றாண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது சிறுகதை முகாமிற்காக வந்த கதைகளில் இக்கதையை வாசித்தது நினைவில் இருந்தது. பதின்ம வயது பெண் பூப்படைவதில் உள்ள பண்பாட்டு சிக்கலை சொல்லும் கதை. லாவண்யாவின் அம்மா தமிழ் அடையாளங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டிருப்பவள். லாவண்யா அடையாள கலப்பின் மீது ஈர்ப்புடைய பதின்ம வயது பெண். சீன இந்திய ஜோடியை காணும்போது சூசன் பூக்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு ஏக்கமாக வெளிப்படுகிறது. காதலிக்க சீனனை விழையும் பெண் வகுப்பில் இந்திய நட்புகளையே எதிர்பார்க்கிறாள் என்பது சுவாரசியமான முரண். பள்ளியில் தான் ஏற்கனவே வயதடைந்ததாக காட்டிக்கொள்பவள். அவளுடைய ரகசியத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லை‌. ஆனால் அம்மாவின் ஆசைகள் வேறாக உள்ளன.‌ பருப்பு சோறை நண்பர்கள் கேலி செய்ததை மனதில் கொண்டு அவளும் சுணங்கி சிக்கன் கேட்கிறாள். இந்த கதையில் முக்கியமான இடம் என்பது தமிழ் வாத்தியார் கூற்றாக வரும் ஒரு வரி- தமிழை நாம் விலக்க கூடாது‌. தமிழ் அடையாளத்தை பேண நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் அதை விட்டு விலகி வெளியேற நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் இடையிலான முரணை சொல்லும் கதை. முள் முடி இந்த தொகுதியின் மற்றுமொரு பதின்ம வயதினரின் கதை. தொகுப்பின் பலவீனமான கதையும் கூட‌. கதைக்குள் முரண் போதிய அளவு வலுவாக உருவாகவில்லை என தோன்றியது.

கீலா, இத்தொகுப்பின் முதல் கதை. அல்ஷிமர் நோய் வந்து கணவரை, லிக்வான்யூவை, கவனித்து வந்த மகளை என எல்லோரையும் மறக்கிறாள். ஆனால் மரண தருவாயில் ‘கீலா’ அதாவது மலாயில் பைத்தியம் என பொருள் வரும் ஒரு சொல்லை மட்டும் மகளிடம் விட்டுச்செல்கிறாள். அந்த சொல் ஒரு செய்தியாக மகளை துரத்துகிறது. அம்மாவின் வாழ்விலிருந்து அதற்கான விடையை கண்டடைகிறாள். அம்மாவின் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் கடந்தகால சம்பவம் வலுவான ஒரு முடிச்சை கொண்டிருக்கிறது. யார் கீலா? என்பதே கேள்வி. கீலா என்று முத்திரையிடப்பட்டு அடைக்கப்பட்ட பெண் அல்ல தானே என அம்மா புரிந்து கொள்கிறாள்.‌ இறுதி வரி இதை மகளும் உணர்ந்து கொண்டதை குறிப்புணர்த்துகிறது. அம்மாவின் முன் கதைக்கு இருக்கும் கணம் மகளின் பகுதிக்கு இல்லை என்பதே இக்கதையின் ஒரு எல்லை என கூறலாம். ஆகவே அந்த இணைப்பு உத்தியாக மட்டும் நின்றுவிடுகிறது. அம்மாவின் கதை மகளுக்கு, அவளுடைய வாழ்க்கைக்கு என்ன அளிக்கிறது? என்ன இடையீட்டை நிகழ்த்துகிறது? அம்மாவை அறிந்துகொள்கிறாள் என்பதோடு நின்றுவிடுகிறது.

அக்ரோன், உயரம் அல்லது உச்சி என பொருள். இந்த தொகுப்பில் எனக்குபிடித்த கதைகளில் ஒன்று. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஜொலிக்கும் உயர்ந்த கோபுரத்தின் அடியில் ஓடும் கறுப்பு ரத்தம் எனும் கரு புதிதல்ல. ஆனால் சொல்லப்பட்ட முறை இதை முக்கியமாக்குகிறது. கதைகளின் இயங்கு தளம் மிக குறுகியதாக, சரியாக சொல்லவேண்டும் என்றால் வளரிளம்பருவத்து நினைவுகள் மற்றும் அக தத்தளிப்புகள் சார்ந்ததாக மட்டும் கதைப்புலம் இயங்கும்போது எழுத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. அழகுநிலா பெண் தன்னிலை கதை சொல்லலை முதல் தொகுப்பிலேயே தாண்டுகிறார். ஆண்களின் அகவுலகிற்குள்ளும் பயணித்து, புற உலகத்துடனும் உறவுகொண்டு தனது எல்லைகளை கடக்க முயல்கிறார். நண்பனை இழந்தவனின் ஒருநாளை நுணுக்கமாக சித்தரிக்கிறார். அவனுடைய வெறுமை, மிரட்சி, வாழ்க்கை சிக்கல், நண்பனின் நினைவுகள் என எல்லாமும் இயல்பாக கடத்தப்படுகிறது. போலியான கரிசனம் அல்லது உரத்து வலிந்து  மிகையாக்காமல் வாழ்க்கை பாடை சொல்ல முடிந்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்வு குறித்து  விமர்சன குரல்கள் எழுவது மிக முக்கியம் என எண்ணுகிறேன். வேறு யாரும் சொல்லாத, சொல்ல தயங்கும் விமர்சனங்களை எழுப்ப வேண்டியது எழுத்தாளரின் கடமை. வர்ணங்களில் ஜொலிக்கும் சிங்கப்பூரை சிங்கப்பூர் ப்ளையரில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் அவன் காலடியில் எல்லா வண்ணங்களும் கலந்து கறுப்பாக தெரிவதாக முடித்திருப்பார். ஆறஞ்சு தொகுப்பில் இல்லாத ஒரு கூறு என இப்படி வலுவான படிமத்தை கதையில் கையாளும் திறன் இக்கதைகளில் வெளிப்படுவதை கூறலாம். யோசித்துப் பார்த்தால் நாம் கதைகளை மறக்கக்கூடும் ஆனால் கதையின் ஆன்மாவை கடத்தும் ஒற்றை படிமம் கதையை நினைவில் தூக்கி நிறுத்தும். காலந்தோறும் வாசிப்பில் விரியும். அர்த்த அடர்வுகளும் கூடும். இந்த தன்மை அபாரமாக வெளிப்பட்ட கதை என வெள்ளெலிகள் கதையை சொல்லலாம். இத்தொகுதியின் சிறந்த கதை என இதையே சொல்வேன். மகனின் வளர்ப்பு பிராணி ஆசை மற்றும் சிக்கல்களை பற்றி பேசும் கதையாக தொடங்கி அதன் இறுதியில் ஒரு பெண்ணின் அளவுகடந்த ஆத்திரத்தை பறைசாற்றி முடிகிறது. பிரேமா நான்கறை கொண்ட தன் வீட்டை கணவரின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியருக்கு தற்காலிகமாக உள்வாடகைக்கு விடுகிறாள். ஊரிலிருந்து ஒவ்வொருவருடமும் மூன்றுமாதம் மனைவி மாலதியை அழைத்து பிள்ளை பேறுக்கு இருவருமாக முயற்சிகிறார்கள். பிரேமாவின் மகன் ஆகாஷ் செல்லப்பிராணியாக வெள்ளை எலிகளை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவை குட்டிகள் ஈனுகின்றன. அவற்றை விற்று, இதை தொழிலாகவே கருத தொடங்குகிறான். மாலதிக்கு வெள்ளெலிகளின் இனப்பெருக்கத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. இரவெல்லாம் முழித்துக்கொண்டு அதையே பார்க்கிறாள். மாலதி மூன்றுமாத வாசம் முடித்து ஊர் திரும்புகிறாள். ஆண் எலியை காணவில்லை என தேடுகிறார்கள். கதை இப்படி ஒரு காட்சியுடன் முடிகிறது- ‘துணிகளை தொங்கவிடும் நீண்ட கம்பியில் ஒரு வெள்ளெலி தூக்கிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.’ ஒவ்வொரு வருடமும் பிள்ளை பேறுக்காக மூன்றுமாதம் வந்து வெறுமனே செல்லும் மாலதியின் ஆற்றாமை, ஆத்திரம் என எல்லாவற்றையும் இந்த ஒரு வரி முழு தீவிரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஒரு படிமமாக துணிக்கம்பியில் தொங்கும் வெள்ளெலி ஆழ்ந்த மன தொந்தரவை அளிக்கிறது. அக்ரோன் மற்றும் வெள்ளெலிகள் என இவ்விரு கதைகளுமே உள்ளுறையும் வன்மத்தை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக கடத்துகிறது. சங் கன்ச்சில் கூட வன்மத்தையே உள்ளுறையாக கொண்டிருக்கிறது.

பொங்கல், சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மீதான எள்ளல் கலந்த விமர்சனம் என இந்தக்கதையை வாசிக்க முடியும். பொங்கல் பானையில் happy deepavali என எழுதுவது, மாடு குட்டி என கன்றை சொல்வது, பொங்கல் போட்டியில் எப்போதும் வெல்லும் சீன பெண், மாட்டை பார்த்து குழந்தைகள் ஈயஈயவோ பாடுவது, விவசாயத்தை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் கிழவர் அருகே அமர்ந்திருக்க விவசாயி சேத்துல கால வெச்சாத்தான் நாம சோத்துல கால வைக்க முடியும் என வீர வசனம் மேடையில் பேசுவது என எல்லாமும் அபத்தமாகவும் மிகையாகவும் சித்தரிக்கப்படுகிறது. ‘பொங்கல்’ என பொருத்தமாகவே தலைப்பிட்டிருக்கிறார். உள்ளீடற்ற வெற்று உணர்ச்சி பொங்கல். பண்பாடும் கூட சந்தை பொருளாக மாற்றப்பட்டு விற்கப்படும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. முதல் தொகுப்பில் இருந்த தமிழ் பெருமிதம் எல்லாம் மறைந்து மறுபக்கத்தை அணுகும் பார்வையை இக்கதைகளில் அடைந்திருக்கிறார் அழகுநிலா. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலில் அங்கதம் தெறிக்கும் மதுக்கூட உரையாடலை நாம் மறக்க முடியாது. எதன் மீது நமக்கு மெய்யான அக்கறையும், உள்ளார்ந்த மதிப்பும் உள்ளதோ இயல்பாக அதை பகடிசெய்யும், விமர்சிக்கும் உரிமையையும் நாம் அடைகிறோம். ஒன்றை இயல்பாக தயக்கமின்றி நம்மால் பகடி செய்ய முடிகிறதோ அப்போது அதை நாம் நம்முடையதாக ஏற்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

வெண்ணிற இரைச்சல் ஒரு மகாபாரத கதை. ஆறஞ்சு தொகுப்பிலும் தர்மனை மையமாக கொண்ட ஒரு கதை உண்டு.‌ ஆனால்  இக்கதை மொழிரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் மேலான ஆக்கமாக ஆகிறது. போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை சொல்கிறது. ஒரு பக்கம் உபபாண்டவர்களை இழந்த சோகமும் மறுபக்கம் போரின் அழிவுக்கு தான்தான் காரணம் எனும் குற்ற உணர்வும்  அவளை வதைக்கிறது. சமையல் பாத்திரத்தில் குருதி தெரிவது கடோத்கஜன் தெரிவது என மாயத்தன்மையும் கதைக்கு வலு சேர்க்கிறது‌‌. போரின் இரைச்சல் அவளுக்கு தாலாட்டாகிறது. தன்னிலை மறந்து உறங்குகிறாள். கிருஷ்ணனும் கிருஷ்ணையும் அழிவின் கடவுள்கள். அழிவின் கடவுளே எப்போதும் அறத்தின் கடவுளும் கூட. மகாபாரதம் போன்ற கதைகளை மறுஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு மனித அகத்தினுடையதாக இருக்க வேண்டும். இக்கதையில் அப்படியொன்று நிகழவில்லை என்பது இதன் எல்லை.

‘மண்வாசனை தேடும் வலசை பறவை’ என அழகுநிலா அவருடைய முதல் தொகுப்பின் முன்னுரைக்கு தலைப்பிட்டிருந்தார். தானொரு வலசை பறவை எனும் தன்னுணர்வும் இங்கே தனது வசிப்பிடத்தை கண்டடைய வேண்டும் எனும் பதட்டமும் ஒருங்கே வெளிப்படும் தலைப்பு. இந்த இரண்டாம் தொகுதியில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும் எனும் பதட்டம் தணிந்து அமைதலின் நிதானம் கைகூடி வந்திருக்கிறது. சிங்கப்பூர் பற்றி அவருடைய முதல் தொகுதியில் வெளிப்பட்ட கற்பனாவாத எதிர்பார்ப்புகள், யோசனைகள் இந்த தொகுப்பில் சுத்தமாக இல்லை. சட்டென வெகுளித்தனம் மறைந்து அறிதலின் கசப்பு விமர்சனமாக வெளிப்படுவதை கண்டுகொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த இடத்தில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை நிராகரித்தும் பயணிக்கிறார். இந்த ஏற்பும் நிராகரிப்பும் முழுக்க தர்க்கப்பூர்வமான முடிவாக இருப்பதில்லை. பதின்ம வயது மகனின் முள் முடியை ஏற்கும் அன்னையால் மகளுக்கு பூப்பெய்தல் சடங்கு நடத்த வேண்டும் எனும் அவாவை கைவிட இயலவில்லை. இதை கொண்டாட்டமாக அணுகக்கூடாது என கருதி லாவண்யாவிற்கு விலக முடிந்தது போல் எளிதாக சிவாவிற்கு தான் கேட்டு வளர்ந்த கிருஷ்ணனின் கதைகளை விட்டு வரமுடியவில்லை. இந்த ஏற்பிற்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான ஊசலாட்டமும் திட்டமின்மையுமே அழகுநிலாவின் கதை மாந்தர்களை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். அழகுநிலாவின் சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்.

வாழ்த்துக்கள்..

ரா. கிரிதரனின் காற்றோவியம் நூல் குறித்து பானுமதி

காற்றிசை ஆறு. பொங்குமாங் கடல் போன்ற பிரமிக்கவைக்கும் பிரவாகம்.

அகலமும், ஆழமுமான இசையறிதலெனச் சொல்லலாம். வரலாறும், இசைப் பிரிவுகளும், இசையின் நுணுக்கங்களைப் பற்றிய அறிவுமின்றி இதை எழுத முடியாது. இக்கட்டுரை பல நினைவுகளை எழுப்பியது.

பள்ளி இளம் பருவத்தில் சினிமாப் பாடல்களும், வானொலி கச்சேரிகளும், வீதியில் வரும் கல்யாண ஊர்வலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் பேண்ட் இசையும், சிவன் கோயில் ஓதுவார் பாடும் தேவரங்களுமென இசை ஒரு சிறு வட்டத்தில் இருந்தது. சென்னை வானொலி ‘பி’ ஒலிபரப்பிய ஆங்கில மேற்கத்திய இசை’அல்ஜீப்ரா’ போல பயமுறுத்தியது. ஆனால், கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்துஸ்தானி இசையும், பாப், ராக்,,பீட்டில்ஸ் போன்றவற்றிலும் பிடித்தம் வந்தது. திரையரங்குகளில் காட்சிக்கு முன் இசைக்கப்படும் ஆங்கிலத் திரைப்பட இசை கால்களால் தாளமிட வைத்தது. ஆனால், அது தொடரவில்லை. எப்படியோ விட்டுப் போய்விட்டது. பங்கஜ் உதாஸ், ரவிசங்கர், பனாரஸ் கரானா மற்றும் குவாலியர் கரானா, குமார கந்தர்வா, பீம் சென் ஜோஷி, ஜஸ்ராஜ், கௌசிகா சக்ரவர்த்தி, சுபா முத்கல், மன்னா டே, முகம்மது ரஃபி, சங்கர் மஹாதேவன், பிஸ்மில்லா கான், அல்லாராக்கா,(இடம் கருதி பலப் பெயர்களைக் குறிப்பிடவில்லை) சில நேரங்களில் ரவீந்திர நாத்தின் சங்கீதம் எல்லாமே, ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனத்தில், முடிந்த போது கேட்டவை தான். தமிழகத்தில் பெரும் தலைகளைத் தவிர எம்.பி சீனிவாசன் போன்ற பரிசோதனையாளர்களும் அதிகம் கவர்ந்தார்கள். பால முரளி க்ருஷ்ணா, எம்.எஸ் கோபாலக்ருஷ்ணன், குன்னக்குடி, எம் எல் வி போன்றவர்கள் எப்போதுமே பிடித்தமானவர்களானார்கள். அதிலும் கிரஹ பேதம், ஸ்ருதி பேதம், தாள மாற்றம் செய்வது பாலமுரளிக்குக் கைவந்த கலை. அவர் அதைச் செய்கிறார் எனப் புரிவதற்கே எனக்கு நேரமெடுக்கும். ஆனாலும், தமிழ், ஹிந்தி திரையிசைப் பாடல்களும், கர்னாடகசங்கீதமும் தான் மிகப் பிடித்தமாக இன்று வரை இருக்கின்றன.

இனி ரா. கிரிதரனின் நூலைப் பற்றி.

செல்லோ இசைப் புரட்சி: மிகவிரிவாகவும், தெளிவாகவும்,எழுதப்பட்டுள்ள சிறந்தகட்டுரை இது. பார்சலோனா, பாப்லோ கசல்ஸ் என்ற பேராளுமை உருவெடுக்க உதவுகிறது. பாக்கின் செல்லோவைத் தேடிய கடும் பயணம் மெய் சிலிர்க்க வைத்தது. பாரிஸ் ஒபரா அரங்கத்தின் வெளியே அவர் வாசித்தது எனக்கு தில்லானா மோகனாம்பாளில் மதுரை மணியின் நோட்ஸை ஷண்முக சுந்தரம் வாசித்ததை நினைவு படுத்தியது.

அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சூழல்களிலிருந்து கலைஞன் தப்பிப்பது சற்றுக் கடினம். கசல்ஸ் விதிவிலக்கல்ல. இன்றளவும் காடெலோனியா தனித்தன்மையைக் கோரிக்கொண்டு இருக்கிறது. அவரது ‘Expressive Intonation’ பற்றி ஒரு சிறு சித்திரம் மனதில் எழுந்தது. நான்கு தந்திகளிலும் விரல்களை ஒருங்கே வைத்து வெவ்வேறு ஸ்தாயீயில் வீணை வாசித்த பாலசந்தர் நினைவிற்கு வந்தார். உலகப் போர்களும், தாய் நாட்டுப் பற்றும் கசல்சை அலைக்கழித்ததில் வியப்பில்லை, பெரும் வருத்தம்தான். உலகம் இப்படித்தான்; கலையை அவனது திறனிற்காக மதிக்காது ‘இஸம்’களின் பின்னே ஒட்ட வைக்கும் மனிதப் புரிதல். கானிக்யூ மலையடிவாரம் அவரை ஆற்றுப்படுத்தியிருக்கும். அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் செய்த அருஞ்செயலால் இன்று கசல்ஸ், பாக், அதைப் பற்றி எழுதும் கிரிதரன் ராஜகோபாலனைத் தெரிந்து கொண்டேன்.

மாபெரும் ஆபரா

நம் சேர்ந்திசையில் மேல் கீழ் ஸ்ருதியில் பாடுவது வழக்கம் தான். சரியான ஒத்திசைவு இல்லாவிட்டால் அது ஒலிக்கேடாகிவிடும். நம் இசை நாடகங்கள் தேய் மொழி,தொல் கதையில் சிக்குண்டு கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. பள்ளியில் இசையைப் பயிற்றுவிப்பது சீனாவைப் போல் இங்கே கட்டாயமாக்கப்பட்டால், அரசியல் வெகு வேகமாக அதில் நுழைந்து விடும். கனவுகளுக்குத் தடையில்லை, அவ்வளவுதான். ஒரு கருத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர் – இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்தில் அமரும். ஏ.ஆர். ரெஹ்மானுக்குக் கேட்கிறதா?

லண்டன் கலை நிகழ்ச்சிகள்

முதலில் கட்டுரையாளரின் அலுவலுகத்தை நினைத்து பொறாமை வந்தது. பின்னர் தோன்றியது- நேரமிருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் வேண்டுமே? இசைக்கெனவே கட்டப்பட்டுள்ள தேவாலயப் பகுதிகள், கேட்பதை அனுபவமென மாற்றும் அந்த நோக்கம் மிகச் சிறந்தது. ஆதார ஸ்ருதியும், மற்ற ஸ்வரங்கள் அதிலிருந்து கிளம்பி திசை மாறிப் பயணித்து பின்னர் ஆதாரத்தில் சேர்வதை அழகாக எழுதியுள்ளார்.

மொசார்ட் உலக அளவில் அறியப்பட்டவர்- என்னைப் போன்றவர்களுக்கு பெயர் மட்டும் தெரியும். செயிண்ட் சான்ஸ் பெத்தொவனுக்கு இணையானவர் என்று இதில் அறிந்து கொண்டேன். ‘அடோனல்’ என்ற பெயரே கற்பனைக் கதவுகளைத் தட்டுகிறது. வயலினும், பியானோவும் உரையாடுவதை, குன்னக்குடியும், ராஜேஷ் வைத்யாவும், சஞ்சய் சுப்ரமணியமும் தங்கள் கச்சேரிகளில் செய்து வருகிறார்கள்.

லட்சண இசை, லட்சிய இசை இரண்டைப் பற்றிய விளக்கம் சிறப்பு.

டெபுஸியின் இசையைக் கேட்பதற்கே ஒரு மன நிலை தேவைப்படும் போலிருக்கிறதே! வாக்னர் பின்பற்றிய பாணியல்லவா? எதுவாக இருந்தாலும் அபஸ்வரத்தை மேற்கிசை என்பதால் இரசிக்க முடியுமா என்ன? கால் மாத்திரை ஸ்ருதி விலகினாலே இந்துஸ்தானியில் பொறுக்க மாட்டார்கள். ‘ச’வில் தொடங்குவது ‘ரி’ யில் தொடங்கலாம், ஆனால், ஆதாரத்தை விட்டு விலகக் கூடாதல்லவா? இந்திய சங்கீதத்தின் அடிப்படை சாம வேதம் என்று சொல்வார்கள். இராகங்கள், அதன் ஸ்பரூபங்கள், கமகங்கள், பிர்க்காக்கள், தொனி, லயம் போன்றவை கிருதிகளுடன் இணைந்து நம்முள் கலந்து விடுகின்றன. இந்துஸ்தானி சங்கீதத்தில் விளம்ப காலமும், மூன்று ஸ்தாயிகளும் அடிப்படை. ஆதார ஸட்ஷமம்தான் (ச) தொடக்கம் என்பதில்லை அதில். ஆனால், ஸ்வர ஸ்தானங்கள், அதாவது அந்த இராகத்தின் ஜீவ தாதுக்கள், அனுஸ்வரங்கள் மிக மிக முக்கியம். ஒரு கச்சேரி கேட்ட நினைவு; பாடகரும், ஆர்மோனியமும் பாடவும், வாசிக்கவும் நடுவில் சந்தூர் புகுந்து அதிசயமான கோர்வையைக் கொடுத்தது. சரத்(பாலமுரளியின் சீடர்), சேஷ கோபாலன் இவ்வகையைக் குரலிலேயே கொண்டு வரும் விற்பன்னர்கள். வட இந்திய இசையின் தோடி நமது சுபபந்துவராளி; நம்முடைய தோடி அங்கே பைரவி தட். சில ஸ்வரங்கள் சேரும் இராகங்களை எடுத்துக்கொண்டு இரு இசைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஃப்யூஷன் இசையை முயற்சிக்கிறார்கள். ஜுகல் பந்தியில் இராக ஒற்றுமைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அசாத்தியமாக ஸ்ரீராம் பரசுராம் ‘காந்தம் ஸ்கொயர்’ என்று ஒரு நிகழ்ச்சியில் கர்னாடக, ஹிந்துஸ்தானி பாடல்களை ஜோடியாய் இணைந்த இராகங்களிலும், ஸ்வரங்களிலும் பாடிப் பரவசமூட்டினார்.(முத்ரா நிகழ்ச்சி டிச 2019)

திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசைத் துணுக்குகள் அடிப்படைத் தேவையே! ஹிந்தோள ராகமா, மாமவது ஸ்ரீ ஸரஸ்வதி பாட்டா, இரண்டில் எது சுலபமாக நினைவில் நிற்கிறது? இளையாராஜா, ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனி பற்றிய குறிப்பு அபாரம்.

வாக்னர், மாஹ்லர் போன்றவர்கள் வட துருவமென்றால், மாக்ஸ் ஜேகப், புலென், ராஜா தென் துருவமெனப் புரிந்து கொண்டேன். நவீன டாங்கோ பகுதியில் இடம் பெற்றுள்ள பேட்டி சிறியதாக இருந்தாலும் முக்கியமான கேள்விகளும், பதில்களுமாக நிறைவாக இருந்தது.

லண்டன் கலைமையம் அமைந்துள்ள இடத்தைப் பற்றிய இவரது வர்ணனைகள் உள்ளே இருக்கும் எழுத்தாளரின் கைவண்ணம். டேட் காலரி வாசலில் பிள்ளையார் கோயில்! விரைவில் வந்தாலும் வந்துவிடும். தேங்காய் பழக் கூடையுடன் அடுத்தமுறை தயாராகச் செல்லுங்கள்!! கிளாரினெட் தரும் இறுக்கம் சற்று அதிகம் தான் எப்போதும்.

‘ஹெள டு நேம் இட்?’ வந்த போது என் சகோதரி அந்த வயலினைக் கேட்டு அழுது விட்டாள். அவள் தான் அதை முழுதாக உள் வாங்கியவள் எங்கள் குடும்பத்தில். ஆனால், ஒரு உறவினருடன், வி.எஸ். நரசிம்மனை அவரது சென்னை இல்லத்தில் பல வருடங்களுக்கு முன் நேரில் சந்தித்தது நான் தான். என் உறவினரும் அவரும் இசை நுணுக்கங்களை விரிவாக விவாதித்துக்கொண்டிருக்க நான் கருவறை முன் நிற்கும் பாமரனாக இருந்தேன். கடைசி வரை ஒரு வார்த்தை என்னால் பேச முடியவில்லை. அவருடனான ஆசிரியரின் பேட்டி ஒரு பொக்கிஷம். நரசிம்மனை நான் சந்தித்ததும் ஒரு முறைதான். ஹார்மெனியும், மெலடியுமான கலவை அவர்.

எஸ்.ராஜம் மிக அபூர்வமானவர். முழுமையான கலைப் பார்வை கொண்டவர். இன்றும் கர்னாடக மும்மூர்த்திகளை அவரது ஓவியத்தின் வழிதான் அறிகிறோம். சிலப்பதிகார ஆபரா, சத்யஜித் ரே இயக்கிய பால சரஸ்வதி படம் போல எடுபடவில்லை போலிருக்கிறது. ராஜத்தைப் பற்றிய அரிய செய்திகளை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.

கலைஞன் மண் சார்ந்தவன்; ஆனால், கலை அப்படியல்ல. இதை வாக்னரின் நிலை உணர்த்துகிறது. இசை நாடக உலகின் தந்தை, ஹிட்லர் விரும்பிய இசையாளர், நிகரற்ற பெய்ஹோய்ட் அரங்கத்தை அமைத்தவர், இனச் சார்பு தன்மையால் யூத வெறுப்பாளரென அடையாளப் படுத்தப் படுபவர், ஆனாலும் அவர் கலைஞர்.

தொழில் நுட்பம் சார்ந்த சவால்களால் நிரம்பியிருக்கும் சிம்பொனியில் ஜீவன் இருக்குமா என்பது எனக்குப் புரியாத ஒன்று. வடிவமைக்கப்பட்ட இசையில் கச்சிதம் இருக்கலாம், இனிமை இழையலாம், லயங்கள் பொருந்தலாம், மனோதர்மம் வடிவமைக்கையில் இருந்திருக்கலாம், அதில் ‘ஸ்பான்டேனிடி’ இருக்குமா எனக் கேள்வி எழுகிறது. ஆனால், நான் சிம்பொனி ஒன்றைப் பொருந்திக் கேட்டதில்லை. என் கேள்விகள் தவறாக இருக்கலாம். விரிவாக்கம் என்பது இதற்கு மிக அவசியம் எனப் புரிந்து கொள்கிறேன்.

இளையராஜாவை கர்னாடக சங்கீதக்காரர்கள் பலரும், ஒரு சிலரைத் தவிர நேசித்துக்கொண்டே வெறுத்தார்கள், வெறுத்துக்கொண்டே நேசித்தார்கள். அந்த மாபெரும் கலைஞனின் அபார ஞானம் இவர்களைப் பயமுறுத்தியிருக்கலாம். நாட்டுப்புற இசை, இராக சங்கீதம், மேற்கத்திய இசை என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து திரையிசையின் போக்கினையையே மாற்றியவர். இராக ரூபம் சிதையாமல் சிறு மாற்றம் செய்து அதையே மெலடியெனக் காட்டியவர். ஒரே பாடலில் பலராகங்கள் வரும், ஆனால், ராக மாலிகை அல்ல. அவரது திரைப் பாடல்களைப் போல், தனியான ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. திருவாசகம் கூட அருமையான படைப்பு. சுஜாதா ‘நான் ஏற்கெனவே ஆழ்வாரில் மயங்கியதால், வாசகத்திற்கு உருகவில்லை’ என்று அனியாயமாக எழுதினார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, அல்லவா? கல்யாணி ராகத்தை ராஜா பலவிதமாகக் கையாண்டுள்ளார். தியாகராஜ ஸ்வாமிகளை அவர் வரவேற்ற ‘Chamber welcomes Thyagaraja’ என்ற குறிப்பு நெகிழ்த்தியது.

ராகசாகா எனக்கு மிகவும் பிடித்த பகுதி. பட்டிணப் பிரவேசம் என்ற படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற ஒரு பாடலில் வயலின் தான் பிரதானம். அதை இசைத்தவர் நரசிம்மனா? முதலில் மட்டுமல்ல இன்றும் இனிக்கும் இசை அது.

சிபேலியஸ் கட்டுரையில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ரசனைகள் விமர்சனங்களால் உருவாக்கப்படுகின்றன. இசை ஆர்வலர்களின் தற்சார்பிற்கும் அதிக இடம் இதில் உள்ளது. அவர் வாழ்வு பாம்பு-ஏணி ஆட்டமாக ஆகிவிட்டது. அன்னப் பறவைகளைக் கண்டு அவர் அமைத்த சிம்பொனி பற்றிய செய்தி எனக்கு இயற்கை ஒலிகளைக் கொண்டு இயற்கைச் சூழலில் டி.எம்.க்ருஷ்ணா பாடிய ஒரு இசைத் தொகுப்பை நினைவில் கொண்டு வந்தது.

நிசப்தத்திலிருந்து சப்தத்திற்குச் செல்லும் இசை, மனதின் சத்தத்தைக் குறைத்து அமைதிப்படுத்துவது ஆச்சர்யம். இசை வழி சமாதானம் ஏற்படலாமே? இஸ்ரேல்- பாலஸ்தீன அரசியல் களேபரங்களின் இடையே அவ்விரண்டு இசையையும் இணைக்கும் முயற்சி மகத்தானது. இசை ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு இவ்வகையில் அத்தியாவசியமானது.

கலை வேர்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்பவர்கள் காலத்தை நம்முன் நிகழ்த்திவிடுகிறார்கள். ஜி.என்.பியின் நூற்றாண்டு மலர் பற்றிய கட்டுரை சுவையானது.

நல்ல இசையமைப்பாளராக வந்திருக்க வேண்டியவர், நல்ல இசை ஒருங்கிணைப்பாளராக ஆகிப்போனார் என்ற எண்ணம் சுபின் மேத்தா கட்டுரையில் எனக்கு வந்தது.

சூசன் டோம்ஸ் மென்மையாகப் பியானோவைத் தொட்டதைப் படிக்கையில் வயலின் தந்திகளை அளவிற்கு அதிகமாக அழுத்தி சுகத்தைக் கெடுக்கும் சிலர் நினைவிற்கு வந்தனர்.

மெதுவாகத் தொடங்கி நிதானமாகப் பயணித்து மத்திம காலம் அமைத்து சரணத்தில் சிறு சரணத்தை வேகமாக அமைத்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒவ்வொரு பாடலிலும் இசைப் பகுதிகளை மாறுபட அமைத்துள்ளார். வட இந்திய இராகங்களை, கர்னாடக இசைக்குக் கொண்டு வந்தவர் அவரே. பல்வேறு தாளக்கட்டுகளை தனது நவக்ரஹ கிருதிகளில் அமைத்துள்ளார். இவரது கிருதிகள் மற்றும் அமைப்பு முறைகளை எடுத்துக்கொண்டு சரத், ஸ்ரீராம் பரசுராம், சிக்கில் குருசரண், பாம்பே ஜெயஸ்ரீ, மாண்டலின் ராஜூ மற்றும் அவர் மனைவி நாகமணி, புல்லாங்குழல் ஷசாங், கிடார் பிரசன்னா, ரவிகிரண், கணேஷ் குமரேஷ், ராஜேஷ் வைத்யா, கடம் கார்த்திக், மிருதங்கம் சிவராமன், சௌராசியா, சிவகுமார் பண்டிட், கௌசிகா சக்ரவர்த்தி, ஜாஹீர் ஹூசேன், செல்வ கணேஷ் போன்றவர்கள் இணைந்து செயல்பட்டால் நம்மால் ஒரு ஆபராவைக் கொண்டு வர முடியலாம்.

இசை கேட்டால் மட்டுமல்ல, இசையைப் பற்றி தரமாக எழுதினாலும் கூட, புவி அசைந்தாடுமென அறிந்து கொண்டேன். கட்டுரைத் தொகுப்பில் ஃப்யூஷன், ஜூகல்பந்தி போன்றவற்றைப் பற்றி ஒரு பகுதி வந்திருக்கலாம். இசைப்பவர்கள், இசை விமர்சகர்கள், இசை ஆர்வலர்கள், இசை அமைப்பாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக இதைச் சொல்வேன். அட்டை முகப்புப்படமும், கட்டுரைகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள காணொலி இணைப்புகளும் நூலோடு இணக்கமாக உள்ளன.

காற்றோவியம் என்னைப் புரட்டிப் போட்டது. என் மன அலைவுகளைப் பதியச் சொன்னது.

புத்தகம் வாங்க: அமேசான் கிண்டில்

ராய் மாக்ஸமின் ‘உப்பு வேலி’ நூல் குறித்து அக்களூர் இரவி

காந்தியின் தண்டி யாத்திரை, வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகம் பற்றி முகநூலில் தொடர்ச்சியான பதிவுகளும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் ’உப்பு வேலி’ புத்தகத்தை வாசிக்கத் தூண்டின. நண்பர் எழுத்தாளர் யுவன் அவர்கள் புத்தகம் கொடுத்துதவினார். இந்த மொழிபெயர்ப்பிற்குத் தூண்டுகோலாக எழுத்தாளர் ஜெயமோகன் இருந்திருக்கிறார்.

பழைய புத்தகக்கடை ஒன்றிலிருந்து வாங்கிவந்த புத்தகத்தில் அவர் படித்த அடிக்குறிப்பு ராய் மாக்ஸமின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தக் குறிப்பு இதுதான்: இந்தியாவில் உப்பு வரியை நீண்ட காலமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சர் ஜான் ஸ்ட்ரேச்சி, ‘உப்பு மீதான சுங்கத்தை வசூலிக்க பெரும் பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது…நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது இயலாத ஒன்று… முள் மரங்களால் ஆன பெரும் புதர்கள் அந்த வேலியில் முக்கியப் பங்கு வகித்தன’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப்பின் ராய், ஒரு பெருந்தேடலில் இறங்குகிறார். ’பிரிட்டானிய போலிப் பெருமிதத்தின் விசித்திரமான சாட்சியங்களில்’ ஒன்றைத் தேடி மூன்று முறை அவர் இந்தியாவிற்கு வருகிறார். 1996, 1997, 1998.

ராய் மாக்ஸம் லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் காப்பாளராக பணிபுரிந்தவர். குறிப்பில் காணப்பட்ட புதர்வேலிக்கான ஆதார நூல்களை, ஆவணங்களை, வரைபடங்களைத் தேடியலைகிறார். இந்திய ஆவணங்கள் குறித்த அலுவலகம், பிரிட்டிஷ் நூலகம், தனியார் ஆவணக் காப்பகங்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வேலி இருந்த பாதையை, பகுதியைக் காட்டும் வரைபடத்தைத் தேடுகிறார்.

கிடைத்த ஆவணங்கள், வரைபடங்களுடன், ஒரு ஜி.பி.எஸ் கருவியும் ஏற்பாடு செய்துகொண்டு இந்தியாவில் புதர்வேலியைத் தேடத் தொடங்குகிறார். இந்திய நண்பர்கள் சிலர் அவருக்கு உதவி செய்கின்றனர். அந்த வேலி இருந்ததாக வரைபடம் சொல்லும் பல இடங்களுக்கு, மின்விளக்குகளோ, டாய்லெட் வசதிகளோ இல்லாத அந்தக் குக்கிராமங்களுக்குs சென்று, அங்கு தங்கி வேலியைத் தேடுகிறார். 1996ல் தொடங்கிய தேடலுக்கு இறுதியில் நவம்பர் 1998ல் விடை கிடைக்கிறது. ’பர்மத் லைன்’ என்ற சுங்கவேலியின் மிச்சத்தைக் கண்டுபிடித்தத் திருப்தியுடன் நாடு திரும்புகிறார்.

வங்காளப் பிரதேசத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் கிழக்கிந்திய கம்பெனி, சிறிதுசிறிதாக தன்னைப் பலப்படுத்தி, விரிவாக்கிக் கொள்கிறது. பிளாசி யுத்தத்திற்குப் பின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்கிறது. உப்பு, பாக்கு, நெய், அரிசி, நாணல், மூங்கில், மீன், சணல் ஆகியவற்றை நான்கில் ஒருபங்கு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறது. வங்காளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சர்க்கரைக்கும் வரி விதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியும், கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்ஸ் வரையும் சாதாரண ஆங்கிலேய அலுவலர்களும், அவர்களுக்கு அடிவருடிய முதலாளிகளும் இந்தியர்களைச் சுரண்டிக் கொழுத்தனர்.

. மௌரியப் பேரரசர் சந்திரகுப்தர் காலத்திலிருந்து, பிரிட்டிஷாருக்கு முன் ஆண்ட மொகாலயர்களும் சாதாரண மக்களும் பயன்படுத்தும் உப்பிற்கு வரி விதித்துக் கொண்டுதான் இருந்தனர். அதை ஆங்கிலேயர்களும் விடாமல் தொடர்ந்தனர் ஆனால், அவர்களைப்போல் செலுத்தக் கூடியதாக இல்லாமல், பன்மடங்கு அதிகமாக வரி விதித்தனர். ஆகவே, சாதாரண மக்கள் வேறு வழியின்றி விற்ற விலைக்கு உப்பை வாங்க வேண்டியதாயிற்று. இந்த நிலை தான் நாடு முழுவதும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் சில பகுதிகளில் குறிப்பாக மேற்கிலும், தெற்கிலும்தான் உப்பு உற்பத்தி இயல்பாக நடந்தது. குறிப்பாக ராஜாக்கள் ஆளும் சுதந்திர பிரதேசங்களில் நடந்தது. அவ்விடங்களில் இருந்துதான் வங்காளப்பகுதிக்கு, ஆங்கிலேயர் ஆண்ட பகுதிக்கு இறக்குமதியானது. இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி மிகவும் குறைவு. இந்தப் புவியியல் குறைபாடுதான் இந்தியாவிற்குள் உப்பின் போக்குவரத்தை வேலி போட்டு தடுத்தது. உப்பின் விலை ஏற ஏற, உப்புடன் வேறு சில பொருட்களும் கடத்தப்பட்டு கம்பெனியின் ஆட்சிப்பகுதிக்குள் வர ஆரம்பித்தன. உப்பின்மீது வரி விதித்து வருமானம் பார்த்த ஆங்கிலேய நிர்வாகம், இடைஞ்சலாக இருந்த கடத்தலைத் தடுக்க சுங்கச் சாவடிகளை உருவாக்கியது. கண்காணிப்பையும் தீவிரமாக்கியது. காலப்போக்கில் அது நீண்ட பிரும்மாண்டமான சுங்க வேலியாக மாறியது.

இதன் முக்கிய நோக்கம் உப்புக் கடத்தலை தடுப்பது. அத்துடன் போதைப்பொருட்கள் கடத்தலையும் தடுப்பது.

இமயமலை அடிவாரத்திலிருக்கும் அன்றைய பஞ்சாபின் தர்பேலாவில் அந்த வேலி தொடங்குகிறது. முல்தான், சட்லெஜ் நதி, பசில்கா, பின் தென்கிழக்கில் திரும்பி, டில்லிக்கு மேற்காக சென்று, ஆக்ரா, அங்கிருந்து ஜான்ஸி, சாகர், ஹோசங்காபாத், காந்த்வா, புர்ஹான்பூர், மகாராஷ்ட்ரம்மத்தியப்பிரதேச எல்லையைத் தொட்டு, பின் கிழக்கே திரும்பி, வங்கக் கடல் நோக்கி ஒரிஸ்ஸா வழியாகச் சென்று முடிகிறது. ஏறத்தாழ 2504 மைல்கள் நீளம். சுமார் 4030 கி.மீ. லண்டனுக்கும் இஸ்தான்புல் நகருக்கும் இடையிலான தூரம்.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1869-70ம் ஆண்டு அறிக்கையில் ”ஹெர்குலிஸ் சுமக்கும் சுமையைப்போல் பெரும் உழைப்பு இது… … பெரும் உழைப்பிலும் பாதுகாப்பதிலும் சீனாவின் பெருஞ்சுவருக்குச் சமம்” என்கிறார். அழிந்துபோகாமல், காப்பாற்றப்பட்டு அப்படியே இருந்திருந்தால், சீனப் பெருஞ்சுவர் மாதிரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சரித்திர சின்னமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ராய்.

உயிருள்ள செடிகள், காய்ந்த முட்புதர்கள், வேலி அமைக்கமுடியாத இடத்தில் கற்களால் ஆன சுவர் என்பதாக சுங்க வேலி அமைக்கப்பட்டது அந்தந்தப் பிரதேசங்களில் விரைவாக வளரும் முட்செடிகள், கருங்காலி, இலந்தை மரங்கள், கிலாக்காய், சப்பாத்திக் கள்ளி போன்ற பல்வேறு கள்ளிச் செடிகள். இவற்றை ஒன்றாக இணைக்க கழற்சிக்கொடிகள் வளர்க்கப்பட்டன. குறைந்த பட்சம் பத்தடி அகலமும், அதிகபட்சம் இருபதடி உயரமுமாக இந்த சுங்கவேலி அமைந்திருந்தது.

ஏழை மக்களுக்கு அவசியமான பொருள், சுவைகூட்டி, உப்பு. அதன்மீது கம்பெனி மிக அதிகமாக வரிவிதித்தது; உப்பளத்தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது. அத்துடன் முடியவில்லை என்கிறார் ராய் மாக்ஸம். அதாவது 1870களுக்கு முன்னும் பின்னும், அதாவது சுங்கவேலி கைவிடப்பட்ட கடைசி பதினைந்து ஆண்டுகளில் வடமேற்கு மாகாணங்களில் 37,61,420 பட்டினிச்சாவுகள் நடந்தன என்பது அரசாங்க கணக்கு. உண்மையான கணக்கு 50 லட்சமாக இருக்கலாம் என்கிறார் ராய். வெயிலிலும் பட்டினியாலும் வாடிய ஏழைகள் காய்ச்சலிலும் வயிற்றுப்போக்கிலும் இறந்தபோது அவர்களின் சாவை உப்புச் சத்துக் குறைபாடு துரிதப்படுத்தியது என்கிறார் ராய் மாக்ஸம். எவ்வளவு பெரிய கொடூரம்! மனித உடலுக்கு உப்பின் முக்கியத்துவத்தை விளக்க ஒரு அத்தியாயமே அவர் ஒதுக்கியுள்ளார். ஆசிரியரின் இந்தத் தகவல் வேதனைகொள்ள வைக்கிறது. கதிகலங்க செய்கிறது. ஆட்சியாளர்கள் சாதாரண மக்களைப் பற்றி என்றும் கவலை கொண்டதில்லை.

பிரிட்டிஷாரின் திமிர்த்தனமான போக்காலும் நடவடிக்கைகளாலும் தவிர்க்கமுடியாமல் அரங்கேறிய 1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்குப்பின், கம்பெனி ஆட்சி விலக்கப்பட்டு, மகாராணியின் நேரடி ஆட்சி கொண்டுவரப்பட்டது. . கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1869ல் துண்டு துண்டாக இருந்த சுங்க வேலியை ஒன்றாக இணைக்கும்படி உத்தரவிட்டது. அதிக பட்சம் 14,000 காவலாளிகள் இந்த சுங்க வேலியை காவல் காத்திருக்கிறார்கள். நான்கு கி.மீக்கு ஒன்றாக ’சோக்கி’ எனப்படும் சுங்கச் சாவடி; பிரிட்டிஷ் வாரண்ட் ஆபிஸருக்கு இணையான ஒரு இந்தியர், ஜமேதார் பொறுப்பில். அவருக்கு கீழே பத்து பேர். அரைமைல் தூர ரோந்துக்கு ஒரு ஆள். சுங்கக்காவலாளிகளின் முக்கியப் பணி உப்புக் கடத்தப்படுவதை எக்காரணம் கொண்டு தடுப்பது. ஆனால், 1870ல் சுங்கவேலி கைவிடப்படுகிறது.

புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • ஒரு சாதாரண இந்தியக் கூலியின் குடும்பத்திற்கு அரை ’மாண்ட்’ உப்பு தேவைப்பட்டது. 1788ல் இதன் விலை இரண்டு ரூபாய். அவனது இரண்டு மாத சம்பளம்

  • ஆங்கிலேயர் வரும்வரை உப்பின்மீதான வரி குறைவு.

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உப்பின் விலை அரிசியின் விலைக்குச் சமமாக இருந்தது.

  • வங்காள மாகாணத்தில் 1781-82இல் உப்பு மூலம் வருவாய் ரூ.29,60,130. வரி உயர்த்தியதும், 1784-85ல் வருவாய் ரூ.62,57,470.

  • 1869-70ல் சுங்க எல்லையில் மொத்த வரி வசூல் ரூ.4,35,00,000. பராமரிப்புச் செலவு ரூ.16,20,000.

  • 1876-78 பஞ்சத்தில் பிரிட்டிஷார் ஆண்ட பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 6,50,000 பட்டினி சாவு.

  • ஆக்டேவியன் ஹியூம் கூறுகிறார்: “எங்கள் பணியாளர்கள் 3,50,000 மைல்கள் ரோந்து போயிருக்கிறார்கள். ஞாயிறு ஓய்வே கிடையாது உலகில் இப்போது இதுபோன்று ஆட்சி நடக்கும் எந்த நாட்டிலும் இந்த ஊதியத்திற்கு வேறெந்த நிர்வாகமும் இவ்வளவு கடின உழைப்பை வாங்கியிருக்காது.

  • கடத்தல்காரர்கள் எல்லா சாதிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும்.

  • ஒரு கட்டத்திற்குப் பின், இந்தியாவில் பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

சம்பல் பள்ளத்தாக்கின் சகநகர் என்ற இடத்தில் நாபல் சிங் என்ற பெரியவர் மூலம் சுங்கவேலி (’பர்மத் லைன்’) இருந்ததை உறுதிசெய்யும் ராய் மாக்ஸம், மனது கேளாமல் மறு நாளும் சகநகர் வருகிறார். ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் துணையோடு மிச்சமிருந்த பர்மத் லைனை, இருபது அடி அகலமுள்ள வேலியின் மிச்சங்களைக் கண்டுபிடிக்கிறார். ‘ஒருவர் குரல் கொடுத்தால் கேட்கும் தொலைவில்தான் அடுத்த ஆள் இருப்பான். ஏதாவது செய்தி யாருக்காவது சொல்லவேண்டும் என்றால், இப்படியே குரல் கொடுத்தே சொல்லிவிடலாம். ஆக்ராவுக்குக் கூட, ஏன் டில்லிக்கும் கூட’ என்று மூதாதையர் சொல்லக் கேள்வி என்கிறார் அந்த பேராசிரியர். வேலியைப் பாதுகாக்க பிரிட்டிஷார் செய்திருந்த ஏற்பாடு பிரமிப்பைத் தருகிறது.

ஒரு சாகசத் தேடலைப் போல விறுவிறுப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ராய். சுவாரஸ்யம் குன்றாத, எளிய நடையிலான மொழிபெயர்ப்பு நம்மையும் அந்தத் தேடலில் ஈடுபடுத்துகிறது.

ஒரு பெரும்பணியை ராய் செய்துள்ளார் என்கிறார் முன்னுரையில் திரு.ஜெயமோகன். இந்திய மக்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டு இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு அதன் செல்வ வளம் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்படுவதை ‘drain of wealth theory’ மூலம் 1867ல் திரு.தாதாபாய் நவ்ரோஜி ஆவேசமாக எடுத்துரைத்தார். ராய் மாக்ஸம் இந்த நூலில், உப்பு வரி, சர்க்கரை வரி மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்களாக இருந்த கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்கஸ், ஆக்டேவியன் ஹ்யூம் வரையிலும் கோடிகளைக் கொண்டுசென்றதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை, உணவோ, பழகுவதோ, போக்குவரத்தோ, டிக்கெட் ரிசர்வேஷனோ, ரயில் பயணமோ, குதிரை வண்டியோ, டோங்கா, ஷேர் ஆட்டோ பயணமோ, கோவிலோ, பழங்கால கட்டிடங்களை தங்குமிடங்களாக பயன்படுத்துவதோ, கிராமங்களின் பெருசுகள் அன்போடு நடந்துகொள்ளும் முறையோ, உபசரிப்பதோ இவற்றையெலாம் ஆங்காங்கே சிரிப்போடும், ஆதங்கத்தோடும், வருத்தப்பட்டும், பாராட்டியும் ராய் பேசுவது, ’எப்படியாவது இன்று புதர் வேலியைக் காட்டிவிடு’ என்று கடவுளிடம் அவர் வேண்டுவது உட்பட நூலிற்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

காந்தி உப்பு வரிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியபோது, அவருடன் இயக்கத்திலிருந்தவர்கள் இந்த முன்மொழிவைக் கேட்டு வியப்புற்றதாகப் படித்திருக்கிறோம். காந்திக்கு, ‘காற்றுக்கும் நீருக்கும் அடுத்து உப்புதான் அதிமுக்கியமானது. அது ஏழைகளுக்கான ஒரே சுவையூட்டி…. இது சூழ்ச்சித் திறன் கொண்ட மனிதன் சுமத்தும் உச்சபட்ச மனிதத் தன்மையற்ற வரி.’

1931 காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் போது, இந்தப் போராட்டம் குறித்துப் பேசப்பட்டது. உப்பின் மீதான வரி விலக்கப்படும் என்று காந்தி நம்பினார். 1946 செப்டம்பரில் அமைந்த இடைக்கால அரசிடம் இது பற்றி குறிப்பு ஒன்றையும் காந்தி கொடுத்தார். ஆங்கிலேயர்கள் 1947, பிப்ரவரி 28ல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு ஆறுமாதங்களுக்குமுன் இந்த வரி விலக்கப்பட்டது. சந்திரகுப்தர் காலத்திலிருந்து ஏழைகளைத் துரத்திய உப்புவரி ஒரேயடியாகத் தொலைந்துபோனது.

துணைக்கண்டத்தின் குறுக்காக இப்படி ஒரு வேலி அமைத்தது, பிரிட்டானியரின் பெரும் சாதனையே: ஆனால் பஞ்சத்தால் வாடியவர்கள் உப்புக்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.”

ஒரு ஆங்கிலேய மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன்; உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகமாக அதைக் கண்டடைந்தேன்; அதிர்ச்சியுற்றேன்” –ராய் மாக்ஸம்.

இந்தியா குறித்த ஒரு முக்கிய ஆவணம் இந்தப் புத்தகம்.

நாதோபாசனை எனும் தவம் -ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் இதயநாதம் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் தலையானவரும், தன்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகளினால், ராம பக்தி ஒன்றையே தன் வாழ்வாகக் கொண்டிருந்தவர் தியாகராஜ சுவாமிகள் அவர்கள். நூற்றாண்டுகளாக இன்றளவும் அவர் தெய்வத்திற்கு சமமாகப் போற்றப்படுபவர். வருடந்தோறும், அவர் இறைவனின் திருவடிகளை அடைந்த பகுள பஞ்சமி அவருடைய ஆராதனை விழாவாகக் கொண்டாடப் படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த இசை விழாவில் பங்கேற்க அகில உலகத்திலிருந்தும் கர்நாடக இசைக் கலைஞர்கள், இசை விற்பன்னர்கள், தங்கள் கற்றுக் கொண்ட இசையின் வடிவை, குரல்வழியாகவோ, இசைக் கருவிகள் வழியாகவோ இவர் சன்னதியில் வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் இந்த சமர்ப்பணத்தைத் தங்கள் கடமையாகவே கருதுகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு இரண்டு கீர்த்தனைகளாவது பாடி விட வேண்டும் என நினைக்கிறார்கள். பரத நாட்டியக் கலைஞர்கள், சிதம்பரம் நடராஜர் சன்னதியில் அரங்கேற்றம் செய்து விட வேண்டும் என நினைப்பது போல, நாட்டியாஞ்சாலியில் பங்கேற்று விட வேண்டும் என ஆசைப்படுவது போல கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள், தியாகராஜ ஆராதனை விழாவில் ஒரே ஒரு கீர்த்தனையாவது பாடி விட வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். பகுள பஞ்சமி அன்று பாடப்படும் அவரது பஞ்சரத்ன கீர்த்தனைக் குழுவில் இடம் பெற்றோ, இடம் பெறாமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டோ பாடுவதை அந்த மகானுக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறார்கள். இதன் மூலம், அவர்கள் சங்கீதத்தோடு, அதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட தியாகராஜ சுவாமிகளை வணங்குவதாக நிம்மதியடைகிறார்கள். தியாகராஜர் இப்படி வணங்கப்படுவதற்கான காரணம் அவர் தன் வாணாள் முழுவதும், சங்கீதத்தின் மூலம் தன்னுடைய ராம பக்தியைச் செலுத்தி வந்தார். அவருக்கு அதைத் தவிர வேறொன்றும் நினைவில்லை இந்த வாழ்வில். ராம பக்தியையே தன் மூச்சாகக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்ம விசாரங்கள் முழுவதும் ராமனை நோக்கியே கீர்த்தனைகளாக வெளிப்பட்டன.

பக்தியை, அதன் வெளிப்பாட்டை சங்கீதத்தின் மூலம் ஓர் உபாசனையாகச் செய்தவர். அவருடைய “ சங்கீத ஞானமு பக்தி விநா “ என்ற கீர்த்தனையில், சமர்ப்பணமற்ற வெறும் சங்கீத அறிவால் மட்டும் இறைவன் சரணத்தை அடைய முடியுமா மனமே என்று தன் மனதைக் கேட்டுக் கொள்கிறார். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆறு உட்பகைவர்களை வெல்வதற்கு இந்த சங்கீத சமர்ப்பணத்தைத் தவிர தனக்கு வேறு ஒன்றும் உபாயம் தோன்றவில்லை என ராமனிடம் முறையிடுகிறார். அவரது நாடி நரம்புகள் முழுவதுமே ராம பக்தியும், சமர்ப்பண உணர்வுமே நிறைந்திருந்தது.

இராமாயணத்தில் வரும் சபரி, ராமனுக்காகக் காத்திருப்பதையே தன் தவமாக மேற்கொண்டவள். வெறும் காட்டுவாசிப் பெண்ணாக சரியாகப் பேசவும் அறியாமல் இருந்தவள், மதங்க முனிவருக்கு சிறிய கைங்கர்யங்கள் செய்ததால், அவரிடமிருந்து ராம நாமத்தை உபதேசமாகப் பெற்றவள், பனிரெண்டு ஆண்டுகள் ராம நாமத்தை மட்டுமே உபாசித்தவள். ராமனின் தரிசனம் பெற்ற பிறகு, அவள் முக்தியடைவதற்காக குடிலில் அமர்ந்து கொள்கிறாள். அவள் உடல் உருக்குலைந்து வெறும் எலும்புக்கூடு மட்டும் இருக்கிறது. அந்தக் கூட்டினை எங்கு தொட்டாலும், அது ராம நாமத்தை ஒலித்தது என்று புராணங்கள் சொல்கின்றன. சபரியின் இந்த ராம பக்தியும், தியாகராஜரின் ராம பக்தியும் ஒன்றேதான். சபரியுடையது ராம ஜெபம்; தியாகராஜருடையது ராம கீர்த்தனைகள். இரண்டிலும் இருந்தது உபாசனை.

சங்கீதத்தை ஒரு யோகம் போல, உபாசனையாக ஏற்றுக் கொண்டு, எவ்வித சமரசமும் அற்று தன் வாழ்வையே சங்கீதத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்ட ஒரு வித்வான் பற்றிய நாவலாக, 1952 ல் ந. சிதம்பர சுப்ரமண்யன் அவர்களால் எழுதப்பட்டது “ இதயநாதம் “ . கிட்டுவுக்கு சங்கீதப் பித்து. ஆனால், அவன் தந்தை இதே சங்கீதப்பித்தாக இருந்ததால், வாழ்க்கையையே தொலைத்ததால், தாய்க்கு இவனுடைய சங்கீத ஆர்வம் எரிச்சல்படுத்துகிறது. கணவன் போலவே இவனும் வாழ்க்கை இழந்து விடுவான் என அச்சம் கொள்கிறாள். அவனை வேதம் பயில அனுப்ப முடிவு செய்கிறாள். இதை அறிந்த கொண்ட கிட்டு வீட்டை விட்டு அம்மாவுக்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறான். பதின்வயது தொடக்கத்தில் இருக்கும் அவன், எப்படியோ கணேச சாஸ்திரிகள் கையில் அகப்படுகிறான். அவனுடைய பிறவி சங்கீத ஞானம் அவரைக் கவர்கிறது. அவனை சபேசய்யர் என்கிற மகா வித்வானிடம் கொண்டு போய் விடுகிறார். குருகுல வாசம் போன்று அவன் அவர் விட்டீலேயே தங்கி சங்கீதம் பயில்கிறான். அவருடைய மகன் மாகாதேவனும் அவன் கூடவே சங்கீதம் கற்றுக் கொள்கிறான். ஆனாலும், கிட்டுவின் ஞானத்தை அவனால் எட்ட முடியவில்லை. சபேசய்யரின் மனைவியும் கிட்டுவிடம் தன் மகனிடம் காட்டும் வாஞ்சையைக் காட்டுகிறாள். இருவருக்கும் அவர்களே பூணூல்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சபேசய்யர் தன் இறுதிக் காலத்தில், கிட்டுவையே தன்னுடைய இசை வாரிசாக அறிவிக்கிறார். கிட்டு, குருகுலத்தில், இசையோடு, வாழ்க்கைக் கல்வியையும் பயில்கின்றான். எந்த நிலையிலும், சங்கீதத்தை உபாசனையாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும், வாழ்க்கை ஒழுக்கங்களையும் தன் குருவிடமிருந்தே சுவீகரித்துக் கொள்கிறான்.

கிட்டு வளர்ந்து, நீலாவைக் கரம் பிடித்து, கிருஷ்ண பாகவதராக இசையுலக ஜாம்பவனாகக் கொடி கட்டிப் பறக்கிறார். அப்போது கூட, கச்சேரிக்குப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தன் சங்கீதத்தை ஒரு நாதோபசனையாகக் கடைப்பிடிக்கிறார். தாயைத் தேடித் தன் சொந்த ஊருக்குப் போகிறார். தாய் இறந்த செய்தி கிடைக்கிறது. கரம் பிடித்த மனைவியோ சங்கீத ரசனையற்று, பொருள் வயப் பட்ட வாழ்க்கையை எதிர்பர்க்கிறாள். அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. சங்கீதத்தைத் தன்னை மாதிரியே உபாசிக்கும் பண்பு உள்ளவர்க்கே பயிற்றுவிக்கிறார். அப்படி, அவரிடம்தான் சங்கீதம் பயில வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் அவரை அணுகும் பொதுமகள் குலத்து பாலாம்பாள் அவரிடம் வந்து சேர்கிறாள். அவளுடைய அபார சங்கீதத் திறமை அவரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. மாறி மாறி அவள் இவர் வீட்டுக்கு வருவதும், அவள் இவர் வீட்டுக்கு வருவதுமாக சங்கீதம் வளர்கிறது. ஊரில் பலர் தவறாகப் பேசினாலும், கிருஷ்ண பாகவதர் கலங்கவில்லை. பாலாம்பாள் ஒரு நாள் தன் மனநிலை தடுமாறி, அவர் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அதில் சிக்கிக் கொள்ளாமல் வெளி வருகிறார் கிருஷ்ண பாகவதர். அவரைச் சரியாகப் புரிந்து கொண்டது கந்தசாமி பாகவதர் மட்டும்தான். அவர், கிருஷ்ண பாகவதரை அந்த அதிர்ச்சியான மன நிலையிலிருந்து மீட்டு ஆற்றுப் படுத்துகிறார்.

அந்த ஊரின் பஜனை மடக் கட்டடத்தைச் சரி செய்வதற்காக, நிதி திரட்டுவதற்கு தன் கச்சேரி பயன்படட்டும் என்று கிருஷ்ணனேதான் உபாயம் சொல்கிறார், ஆனால், அந்தக் கச்சேரியைச் செய்ய முடியாமல், அவருக்கு, காய்ச்சல் வந்து தொண்டை கட்டிப் போகிறது. தான் பொருளுக்காக கச்சேரி செய்ய எத்தனித்ததால்தான், தனக்கு இப்படி ஆகி விட்டது என்று மனம் வருந்துகிறார். அப்போது, கந்தசாமி பாகவதர் அவரை சமாதானப்படுத்தி

இசை என்பது வெறும் காதுகளிலும், குரலிலும் மட்டுமில்லை. மௌனத்தின் வழியே இறைவனை நினைந்து இதயத்திலிருந்து எழும் நாதம் கொண்டு உபாசனை செய்யலாம் என்று சொல்கிறார். கிருஷ்ண பாகவதர் தன் இதய நாதத்தில் அமிழ்ந்து லயிக்க ஆரம்பிக்கிறார்.

நாவல் ஒரு சிறிய நீரோடை போல தெளிவாக அமைதியாக ஓடுகிறது. சங்கீதம் என்றில்லை, ஒருவர் வாழ்க்கையில் தன்னுடைய விருப்பம், அல்லது நோக்கம் அல்லது லட்சியம் என்று எதுவோ ஒன்றைப் பயணமாக ஏற்றுக் கொண்டால், அந்தப் பயணத்தின் இலக்கை அடைவதில் உறுதி வேண்டும். தடங்கல்கள் வந்தால் அவற்றை எதிர்கொண்டு, சமாளித்து, வெற்றி கொண்டு முன்னேற வேண்டும். கிருஷ்ண பாகவதர் கிட்டுவாக, தன் தாயையே துறக்கிறான். அடுத்தது, நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதையும் துறக்கிறான்; பண ஆசையும் துறக்கிறான். பெண்ணாசை அவரை உலுக்க பாலாம்பாள் எனும் வடிவெடுத்து வருகிறது. அதையும் வெற்றி கொள்கிறார். இத்தனை தடைகளையும் கடந்ததால்தான், கிருஷ்ண பாகவதரால், மௌனத்தின் மொழி கொண்டும். தன் இதயத்துள்ளே இருக்கும் இசை என்னும் இறைவனை உபாசனை செய்ய முடிகிறது.

இராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில், ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கையில் சென்று சீதாதேவியைப் பார்ப்பதற்கு வரும் தடைகளை அவர் எதிர்கொள்வதை, இதிகாசத்தின் பகுதியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒவ்வொருவர் அவருடைய இலட்சியத்தை அடைய வரும் தடைகளை, இடைஞ்சல்களை வெல்லும் ஒரு செயல் என எடுத்துக் கொண்டால், அதன் தளம், அதையும் தாண்டி விரிவடைகிறது.

இதயநாதம் நாவலையும், ந. சிதம்பர சுப்ரமண்யன் நாம் இப்படி விரித்துப் பார்க்க முடிகிற விதத்தில் படைத்திருக்கிறார். பணம் புகழ் ஆசைகளையும், உணர்வுப் போராட்டங்களையும் வெற்றி கொண்டு நிற்கும்போதுதான் கலைஞன் அதில் முழுமையடைகிறான். முழுமையின் வடிவம் மௌனத்தில் வந்து நிற்கிறது. மௌனம் ஞானத்தின் உச்சம். இந்த உச்சமே உள்ளத்தின் உபாசனையாகிறது. இந்த நிலையை அடைவதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை ஒரு முனிவரின் தவத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை. அத்தகைய வாழ்க்கைக்கு, சபேசய்யர் போல ஒரு குருவும், கந்தசாமிபாகவதர் போல ஒரு ஆத்மார்த்தமான ஒரு நண்பரும் கிடைத்து விட்டால் இலட்சியவாதிகளின் உபாசனைகள், தவங்கள் எல்லாம் நிச்சயம் கைகூடும்.

சங்கீதக் காரர்கள் என்றாலே வெற்றிலை, பாக்கு, ஜவ்வாது, மது, பெண்கள் தொடர்பு என்று இருந்த காலக் கட்டத்தில் இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு இசைக் கலைஞரின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டியிருக்கிறார் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள். அவரே முன்னுரையில், சங்கீதப் பரம்பரையில் வந்தாலும், அவர் சங்கீதம் கற்றவரில்லை; வாசனை மட்டுமே தெரிந்தவர் என்று குறிப்பிடுகிறார். அதனால்தானோ என்னவோ, அவர், வாழ்க்கையை மட்டுமே எழுதியிருக்கிறார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலாக இருந்தாலும், பாடல்கள் பற்றிய விவரணைகள் எதுவும் இல்லை. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது, கிருஷ்ண பாகவதருடைய தம்பூராவின் நாதம் வாசிப்பவர் மனதிலும் ஒலிக்கத் துவங்குகிறது,

ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் நூற்றாண்டு வெளியீடாக 2012 ல் சந்தியா பதிபகத்தார் இந்த நாவலை பதிப்புத்துள்ளனர். கோவை சிறுவாணி வாசகர் மையத்தினர் இதனை வெளியுட்டுள்ளனர், சிறந்த அச்சாக்கம், நாவலை தடையின்றி வாசிக்கத் தூண்டுகிறது.