கவிதை

காற்புள்ளிகள்

இனியவன் காளிதாஸ் 

 

காற்புள்ளிகள் மேல் வைக்கப்பட்ட
முற்றுப் புள்ளிகள்

இறந்தகாலத்தின்
உதரம் கிழித்து
உறைந்து கிடக்கும்
நினைவுத் துணுக்குகளை
நிழலாடச் செய்கிறது

கனவின் அடியாழங்களில்
கால்வைத்து இறுகிக்கிடக்கும்
சந்தோசத்தின்
பூட்டுகளைத் திறவுகிறது

பிசுபிசுத்துக் கிடக்கும்
பெருங்கதறல்களின்
சாம்பல் குழைத்து
உடலெங்கும் பூசிக் கொண்டு

பல்லிடுக்கில் சிக்கிய
உணவுத் துகளாய் ,
நழுவிப்போன
பால்யத்தை முத்தமிட்டு,
நிகழ்காலத்தின் முகவரிக்குள்
அழைத்துவரும்
நிழற்படங்கள் யாவும்

நினைவுகளின்
பிம்பங்கள் மட்டுமல்ல

ஓய்வின்றி
நகரும் காலத்தின்
காற்புள்ளிகளின்
மேல் வைக்கப்பட்ட
சிலவிநாடி முற்றுப்புள்ளிகள் .

சொல் வளர்த் தோட்டம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி 

 

அவர்களிடம் எப்போதும் எந்த முறையீடுகளும் இல்லை.
தினமும் காலை மாலை என
இரு வேளைகளிலும்
அவர்களுடன் என் உரையாடல்கள் நிகழும்.
ஒவ்வொருவருக்குமான நிறங்களின்
மாறுபட்ட தன்மை பற்றிய
சஞ்சலங்கள் இருக்காது.
அவரவரின் பிரத்யேக நிறத்தில்
மலர்ந்து மகிழ்ந்திருப்பர்.
யாரருகில் யாரிருக்க வேண்டுமென்பது
போலான குளறுபடிகள் கிடையாது.
கால நிலை மாற்றத்திற்கு ஏற்றாற் போல
தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.
யாரும் யாரை பற்றியும்
எந்த புகார்களும் சொல்லுவதில்லை.
அவர்களின் தினசரியில் நானொரு
பேசும் தாவரமென என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்றியபடி
அவர்களை செம்மைப்படுத்தி வருகிறேன்.
விதைகள் துளிர்ப்பதை காண்பது,
தொட்டியின் ஈரப்பதம் தக்கவைப்பது,
துளையிட்டு நீர் வழிந்தோடும்
பாதை அமைத்தல்,
மண்ணை சமன் செய்து நீரை தேக்குவது,
முதல் மலர், முதல் கனி என
அவர்களின் தினசரிகள் மிக சாதாரணமாக
எவ்வித அவசர கதியுமின்றி
அதி இயல்பாக இருக்கும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக
அவர்களில் ஒருவனாக
என்னையும் அங்கீகரிக்கிறார்கள்.
என் தினசரிகளை விசாரிக்கின்றனர்.
நாங்கள் உரையாடும் போது
ஒவ்வொரு தினமும் எப்போதும் என்னிடம் ஆயிரம் முறையீடுகள் இருக்கும்
ஆயினும் எனது பிரதி கேள்விகளில்
அவர்களிடம் ஒருமுறைகூட எந்த முறையீடுகளும் இருந்ததேயில்லை.

 

நிராகரிப்புகளைப் பட்டியலிடு…

இனியவன் காளிதாஸ் 

 

நிராகரிப்புகளைப் பட்டியலிடு…

எவ்வளவு முடியுமோ அவ்வளவு
தொலைவாய்
ஞாபகங்களைத் தூரவீசு

என்னை நினைவூட்டும்
எச்சங்களின் மிச்சங்களை
நெருப்பிட்டுக் கொளுத்து

வெறுப்பின் சுவரெழுப்பி
நேச சன்னல்களை இறுக மூடு

எல்லாம் முடிந்த
பின் கதவு திறந்து
வெளியே பார்

உனைக் கண்டதும்
வாலாட்டும் குட்டிநாய்க்கு அருகே
அமர்ந்திருக்கும்
எனை என் செய்யலாம் என இப்போது முடிவெடு.

கதவைப் பற்றி

ஆனந்த் குமார்

கதவைப் பற்றி
புகாரில்லை எனக்கு
அது ஒரு அற்ப ஜந்து.
இந்த ஜன்னலின்
அதிகாரம்தான்
பொறுப்பதற்கில்லை.
வானத்தை சரியான அளவில்
வெட்டி வைக்கிறது
மேலும் குட்டிக் குட்டிச்
சதுரங்களாய் வேறு பிரிக்கிறது.

அது காண்பிக்கிறது
தினம் தினம் ஒன்றேயென
வானத்தின் அளவை
அது சொல்கிறது
மாற்றமேதும் இல்லையென.

சரிதான் இருக்கட்டும் முத்தே
உன் இரு சதுரங்களினிடையில்
ஒரு பூ வேலைப்பாடு
தினம் தினம்
அது
கொஞ்சம் பூக்கிறதே என்ன ?

ஊடலின் 4th கீர்

அர்ஜூன் ராச்

வெய்யில்
சமாதானமாகிக் கொண்டிருந்த வேளை
ஒரு துனிப்பின் பயணத்தில்
என் தோள்வனையாமல்
பின்னிருக்கையில் அமர்ந்தபடி
நம் பிரேமையின் உருகுநிலையில்
உறைந்து கொண்டிருந்தாய்

சட்டென இமைகீறி எதிர்ப்பட்ட வண்ணத்துப்பூச்சியொன்றின் நக உராய்வில்
குடை சாய்வது போன்ற என் திகைப்பில்
குற்றுயிர் சுவாசமுடன்
‘பாத்துங்க…’ என்று
இருக்கியணைந்தாய்
இமைகளோடு என்னை

‘பேசிட்ட பாத்தியா’ என்றதும்

நிலவுக்கு முகமடுத்து
மீண்டும் ஊடினாய்
அந்தியோடு அந்தியாய் வண்ணங் குழைந்த
உன் மந்தகாச ஒளிப்பினை
பிம்பமித்து,
பிரகாசம் கூட்டி எனக்கு
காட்டிக் கொடுத்துவிட்டது
நம் காதல் வாகனத்தின்
ரியர்வியூ கண்ணாடி.

கூடலின் 4th கீரில் வேகமுறுக்க
உனக்கும் எனக்குமிடையில்
அடிக்கடி தலைபட்டு,
வழக்கம் போல
வந்ததும் வராததுமாய் சில்லறுந்து
பின்வாங்கினாள்
தழுதழுத்த அருவமாய்
நம் ஊடல் பெரிய மனுஷி