பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்
பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்
பானுமதி ந
மலைத் தொடராய்
சாம்பலிலும்
கரி கறுப்பிலும்
அலைந்த கூட்டம்
அதனூடாக எட்டிப்
பார்த்து தோற்ற கதிர்கள்
பின்னரும் ஆழியும் சங்குமாய்
வானத்தின் நெசவு.
மு தனஞ்செழியன்
என்ன பானமிது?
ஏப்ரல் சூரியனை பிழிந்து
என் கோப்பையில்
ஊற்றியது போலிருக்கிறதே.
நெருப்பை அருந்துகிறேன்.
மீண்டும் மீண்டும் அருந்துகிறேன்.
என்னவோர் அரிய நஞ்சாக
நரம்புகளில் பரவி
எனது துயரைச் சொக்க வைத்து
மெல்லியதோர் சிரிப்பாக
மனதை நிறைக்கிறது
சூரியன்களின் பொன்னொளி.
மணப்பெண்ணின் நடுக்கத்துடன்
குமிழிட்டு எனது
உதட்டைத் தொடுகிறது குவளை.
நினைவுகள் மங்குவதற்காக
இந்தக் கணத்தை மன்னித்து விடு அன்பே.
ஏப்ரல் சூரியன்களின்
சாற்றைக் கைக் குவளையில்
ஏந்தி மீண்டும், மீண்டும்
பருகித் திளைத்திருத்திருப்பதை
எப்படிச் சொல்வேன் அன்பே.
ஏகாந்தன்
காற்றினிலே
தன்வீட்டு வாசலில்
ஒரு அந்திப்பொழுதில்
தனியாக உட்கார்ந்திருக்கிறான்
அந்த வயதான மனிதன்
கண் மங்கி நாளாகிவிட்டது
காது நன்றாகக் கேட்கிறது
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள்
கேட்க ஆரம்பிக்கின்றன
அவனுக்கு எதிர்த் தெருவில்
அவர்கள் நெருங்க நெருங்க
அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில்
உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை
உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள்
கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ
காதுகளை மென்னொலி அலைகள்
கதகதப்பாய் வருடுகின்றன
சிலிர்த்துக்கொள்கிறான்
மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க
மயக்கும் குரல்கள் மங்கி மறைய
பெருமூச்சு விடுகிறான்
தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள்
தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக
**
ஜீவிதம்
கவிழ்க்கப்பட்ட நிலையில்
விசித்திர மதுக்கோப்பை
இந்த பிரம்மாண்ட ஆகாசம்
அதிகமாக நக்ஷத்திரமும்
மிதமாக சந்திரனும்
கொஞ்சமாக சூரியனுமாய்
கிறங்கவைக்கும் காக்டெய்ல்
களிப்போடு இதழ் பொருத்தி
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன்
கந்தர்வ போதையில்
கரைகிறது காலம்
**
ம கிருஷ்ணகுமார்
வெளியில் வீசப்பட்டு
அந்தரத்தில் வாசம் செய்யும்
சில நொடிக் காதலுக்காய்
யுகம் யுகமாய்
விண்ணோக்கி வளர்கிறது மரம்.