சிறுகதை

ஜென்மக் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

‘நேத்து நம்ம துரையைப் போட்டு சாட்டிப்புட்டாங்களாம்ல. பசங்க சொல்லலயா?’

பெரிய நூல் உருண்டையை பிரித்து நுனியை நீட்டி, கரைத்து வைத்த நீலத்தில் முக்கியெடுத்தபடிக்கு இருந்த தயாளன், குமரப்பெருமாளின் அரவம் கேட்டதும், நூலை அப்படியே தரையில் கிடத்திவிட்டு கைகளை விரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

நீண்டு கிடந்த போர்ட்டிகோ நிழலில் சுவரோரமாக சாய்த்திருந்த 5 X 8 சைஸ் பலகையில் ‘ஜெயரேகா ஹாஸ்பிடல் செல்லும் வழி’ என்று சைன் போர்டு எழுதுகிற வேலை. நீலத்தில் நனைத்த நூலை போர்டுக்கு இருமுனைகளிலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு சுண்டிவிட்டால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் விழும். அந்தக் கட்டங்களில் பென்சிலால் மெலிதாக எழுத்துகளை வரைந்துகொண்டு வண்ணம் தீட்ட வேண்டியதுதான். அரசரடி பேருந்து நிறுத்தத்தில் ஒன்று. அடுத்து காளவாசல் முக்கு. அப்படியே இடதுபுறம் பைபாஸில் திரும்பினால் சொக்கலிங்க நகர் முனை. தாஸ் டீக்கடை ஒட்டி வலதுபக்கம் திரும்பினால் முனியப்பன் கோவில் வாசலில் ஒன்று. (more…)

மூக முனி

– எஸ். சுரேஷ் –

“இவன் ரஷீத் பாய் அழுதத ஒரு தடவை பார்த்தானாம். ரஷீத் பாய் அழுவாரா? அவரு ஒரு சின்ன தாதா. இவன் காஸ் விடறான்” என்று அருணைக் கைகாட்டி பஷீர் பாயிடம் சொன்னேன்.

“எங்க பார்த்த? எப்போ பார்த்த?” என்று அருணிடம் பஷீர் பாய் கேட்டார்.

நான் முஸ்தபா சார்கிட்ட ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தப்போ பார்த்தேன். அன்றைக்கு நீங்களும் ரஷீத் பாயும் அங்க வந்தீங்க. அப்போதான் ரஷீத் பாய் முஸ்தபா சார்கிட்ட ஏதோ சொல்லி அழுதார். நான் பார்த்தேன்”, என்றான் அருண்.

“நிஜம்தான்” என்றார் பஷீர் பாய்.

“நிஜமா? ரஷீத் பாய் எவ்வளவு பலசாலி. அவர் எதுக்கு அழுதாரு?” என்று ஆச்சரியத்துடன் நாங்கள் எல்லோரும் கேட்டோம்.

“அது ஒரு பெரிய கதை. உட்காருங்க. சொல்றேன்”, என்றார் பஷீர் பாய். (more…)

பாராமுகம்

மாயக்கூத்தன்

In Breughel's Icarus, for instance: how everything turns away

சீனிவாசனுக்கு இது வித்தியாசமாக இருந்தது. இந்த மோனநிலை. இதற்கு முன் இதே போல் உணர்ந்திருக்கிறான் என்றாலும், இந்த முறை வித்தியாசமாகத்தான் இருந்தது. அவள் தன் சொந்தங்களைப் பார்க்கப் போயிருக்கிறாள். மகனும் ஊரில் இல்லை.

ஒவ்வொரு முறை தனித்திருக்கும்போதும் தான் சுதந்திரமானவன் என்று தோன்றும். உடனே, இதெல்லாம் ரெண்டு மூன்று நாட்கள்தானே என்று பிரக்ஞை வராது போகாது. இந்த முறை அவனுக்கு, இந்த மன அமைதி என்றென்றும் நிலைத்துவிடும் என்று பட்டது.

இந்த வீடு வாங்கி இருபது வருடம் ஆகப்போகிறது. சீனு முதன்முதலாக ஆசைப்பட்ட சொத்து இதுதான். கடைசியாக ஆசைப்பட்டதும்கூட. அவன் பணச் சிக்கலைத்தான் எதிர்பார்த்தான். மனச்சிக்கலில் மாட்டிக் கொண்டான். (more…)

ஒருநடுவ வட்டங்கள்

சிவேந்திரன் –

மஞ்சள் நிற வெளிச்சத்தை இருபுறங்களிலும் பாய்ச்சியபடி வீதியின் நடுவில் நின்றுகொண்டிருந்த விளக்கு கம்பங்களின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருந்தார் விரிப்பைக் காட்டிவாறு சென்று திருப்பத்தில் மறைந்தது. அதிலிருந்து விலகி சற்று தொலைவில் நடந்து செல்லும் உருவங்களை அதிகமாக இனம் காணமுடியாத அளவிற்கு இருட்டு போர்த்தியிருந்தது. வாகனங்கள் குறைவாகவே சென்றன. அவற்றில் பெரும்பாலானவை டாக்ஸிகள்.

வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். நிலவினை காணவில்லை. ஒரேயொரு நட்சத்திரம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதை நானும் உற்று நோக்கினேன். சுற்றிவர எல்லையற்று விரிந்து செல்லும் வானத்தில் தனித்து நிற்கும் அவ்விண்மீன் அலைகடலின் மத்தியில் இருக்கும் ஊர்காவற்றுறை கடற்கோட்டையை நினைவுபடுத்தியது. இப்போது அந்தக் கடற்கோட்டையும் இந்த உடுவினை நோக்கிக் கொண்டிருக்கக்கூடும். சடுதியில் மனம் மெல்ல அதிர்ந்தது. நட்சத்திரத்தை நோக்கி கை அசைத்தேன். உங்களை வியந்து வியந்து பார்த்த சிறுவன் எங்கோ மணற்காட்டில் எழுந்து நிற்கும் கட்டிடக்காட்டில் இருக்கிறான். இப்போது அவன், இளமைக்காலங்கள் மணற்கடிகாரத்தின் மணலைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவன் என்று அவ்விண்மீன் அந்தக் கடலிடமும் கடற்கோட்டையிடமும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன். (more…)

உல்லு

– சிகந்தர்வாசி – 

“டேபிளில் முட்டிக் மோதிக் கொண்டு ஒருவன் சிட்டி லைட் ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்தான்,” என்று சொல்லிக் கொண்டே அக்பர் ஹோட்டலில் இருந்த சூர்யாவின் முன் உட்கார்ந்தான் வெங்கட். “இரு டம்ப்ளர்கள் உருண்டு விழுந்து நொறுங்கின. தரையெல்லாம் தண்ணீர். அதிர்ச்சியில் ஒரு பெரியவர் தான் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டிவிட்டார். ஓடி வந்தவன் நேராக என் மீது வந்து மோதினான். நாங்கள் இருவரும் கீழே விழுந்து உருண்டோம். என்னை அழுத்திக் கொண்டிருந்தவன் எழுந்திருக்கப் பார்த்தான், நான் விடவில்லை. ஒரு ஆள் வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும்வரை நான் என் பிடியை விடவில்லை. அவன் யார் தெரியமா? யூகிக்க முடிகிறதா பாரேன். இழுத்துக் கொண்டு போனவன் மஃப்டியிலிருந்த போலீஸ்காரன். என்னுடன் மோதியவன் ஒரு தாதா. யார் என்று சொல்ல முடியவில்லையா? ஹஹா! நான் யாரைப் பிடித்துக் கொடுத்தேன் என்று உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது – ஜகாங்கீர்கான்! ஹஹா!” (more…)