சிறுகதை

வலி

வேல்விழி மோகன் 

காலையில் எழுந்து கோலம் போட முயன்றபோது அவளுடைய மாமனார் அந்த நான்கு மணி வாக்கில் எங்கேயோ கிளம்பியவர் “சுத்தமாயிட்டு போடு” என்றார். அவர் அந்த சந்தில் போகும்போது சில அடிகள் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து போனார். கீர்த்தி அந்த இடத்தை விட்டு எழுந்து சற்று நேரம் நின்றிருந்தாள். வீடுகளின் முகப்பில் இன்னும் தெரியும் இருட்டு. ஒரு மின்கம்பம் வெளிச்சத்தை  இழந்து மங்கியபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. ஒரு காகம் கத்தியபடி அந்த தென்னை மரத்தில் படபடத்தது. தெரு முனையில் அந்த பெட்டிக்கடைக்கு முன்பு தண்ணீர் தெளிக்கும் பாட்டி தெரிந்தாள்.

மாமனார் மறுபடியும் திரும்பி பார்த்தார். இவள் அந்த இடத்தை விட்டு அகன்று வெளியில் அந்த பொந்தில் கோலமாவு டப்பாவை வைத்துவிட்டு குறுகலான அந்த வீட்டின் இடதுபுறம் வளைந்து கொஞ்சம் நடந்து கதவை திறந்து உள்ளே நுழைந்து உள்ளறையில் கட்டிலை நெருங்கி படுத்துக்கொண்டபோது அவன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.

கதகதப்பாக இருந்த அந்த இடத்தில் கட்டிலுக்கு சற்று மேற்புரத்தில் மூடியிருந்த சன்னலிலிருந்து தப்பித்து உள்ளே வந்த காற்று சில்லென்று இருந்தது. அவளுடைய பார்வை அந்த சன்னலை கூர்ந்து கவனித்தது. நடுவில் ஒரு ஓட்டை.  சின்னதாக. வெளியில் இருட்டாக இருந்ததால் அவளுக்கு அது சரியாக தெரியவில்லை. ஆனால் ஓட்டை இருக்கிறது. அவன் மீது சாய்ந்தபடி அதை தடவிப் பார்த்தபோது “ஆமா” என்று முனகிக்கொண்டாள்.

அவன் அவளுடைய கனத்துக்கு சட்டென்று குறட்டையை நிறுத்தி, “ஏன் இன்னும் கோயில் பாட்டு போடாம இருக்காங்க.?” என்று சற்று வளைந்து கொடுத்ததில் அவளுடைய உடல் பாரம் முழுமையாக அவன் மீது சாய்ந்தது.

“தூங்குங்க” என்றவள் அவன் செய்யும் பின்புற சேஷ்டை பிடிக்காமல் ”நானும் தூங்கனும். தூக்கமா வருது. கோலம் போட்டுடலாமுன்னு போனா உங்கப்பா முறைச்சுட்டு போறாரு. எங்க வீட்ல நான்தான் போடுவேன். விடிகாலைல. குளிச்சுட்டு போடுன்னு எங்கப்பா சொன்னதில்லை,” என்றவளை அந்த கிச்சான் என்கிற கிருஷ்ணன் கண்டுக்கொள்ளாமல் “சுகமா இருக்குது,” என்றான்.

“எதுக்கு?”

“இந்த பாரம். மெத்துன்னு”

“சன்னல்ல ஓட்ட இருக்குது. அடைக்கனும். முதலிரவு முடுஞ்சதுன்னு அலட்சியமா இருக்காதீங்க. இது நம்மளோட அந்தரங்கம். அந்த ஓட்டைய பாக்கும்போது பகீருன்னு ஆயிடுச்சு. உங்களுக்கு தெரியாதா.?”

“நானு கவனிக்கலை,” திரும்பிப் பார்த்து, ”துணி வச்சுடலாம்,” என்றவனின் கைகளில் தூக்கம் போய் ஒரு ஆரம்பம் தெரிந்தது. அவள் சட்டென்று விடுபட்டு கட்டிலை விட்டிறங்க, ”இரு, இரு,” என்பதற்குள் வெளியே வந்து மூலையில் இருந்த குளியலறைக்கு போனாள்.  உள்ளே விளக்கு வெளிச்சம். இவளுடைய காலடி மணியோசை கேட்டு உள்ளிருந்து மாமியாரின் குரல் வந்தது.

“இதா வந்துடறேன்”

கொஞ்ச நேரம் கதவருகே வந்து நின்றாள். உள்ளிருந்து அவன், ”வந்திடு கீத்து. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும்”

உள்ளே வேகமாக நுழைந்து ஆனால் கிட்டே போகாமல் “ஸ்ஸ். உங்கம்மா இருக்காங்க அங்க. மெதுவா”

“நீ வா. தூக்கம் போயிடுச்சு”

“எனக்கு வலி. அங்க பாருங்க ரத்தம் இன்னும் காயலை. நைட்டு பயந்துப் போயிட்டேன். எனக்கென்னவோ உடம்பை வருத்திக்கிட்டோமுன்னுதான் தோணுச்சு. ஆரம்பிக்கறப்ப சுகமா இருந்தது. முடியும்போது இது தேவையான்னு ஆயிடுச்சு. நீங்க புசுபுசுன்னு மூச்சு விடறீங்க. கீத்து கீத்துன்னு உளர்றீங்க. அப்பறம் அப்படியே மேல படுத்து அமுத்தறீங்க யானை அழுத்தற மாதிரி. எனக்கு என்னன்னு புரியலை. தொடையெல்லாம் மரத்துப்போச்சு. ம். ஏதோ சடங்கு முடிஞ்ச மாதிரிதான் இருந்தது.” பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டு, ”உங்கம்மா வெளியே வர்றாங்க. நான் போயிட்டு வந்திடறேன்”

அவன் ஏமாற்றமுடன் ”பகல்ல தனியா ஒதுங்க முடியாது,” என்று கெஞ்சுவது போல கேட்கும்போது இவள் வெளியே வந்துவிட்டிருந்தாள். மாமியார் அங்கிருந்து அகலாமல் சிரித்தபடி, ”தண்ணி கொஞ்சமா இருக்கும். அஞ்சு மணிக்கு மேலதான் வரும். பாத்துக்க,” என்று நகர இவள் உள்ளே போனதும் மல நாற்றம் வந்தது. மறுபடியும் வெளியே வந்து நின்றாள். இப்போதைக்கு மூத்தா போகவேண்டும். அப்பறம் டூ பாத்ரூம். குளியல்? அது பிறகு. முதலில் அதை முடித்து ”கீத்து” என்றோரு குரல். அவள் திரும்பிப் பார்த்தாள். கிச்சான்தான். ”வா. ப்ளீஸ்” ஏறக்குறைய அழுவது போலத்தான் கேட்டான். அவளுக்கு ஏனோ பரிதாபமாக இருந்தது. தன்னுடைய உடல் அதற்கு தயாராக இல்லை என்பதை உணர்ந்ததும் அவளுக்கு குழப்பமாக தோன்றி, ”இருங்க பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்,” என்று உள்ளே நுழைந்து கொண்டாள்.

அந்த தொட்டியில் பாதிக்கு கீழே தண்ணீர் இருந்தது. ஒரு மூலையில் விழுந்திருந்த புடவைகள். கொடியில் பழைய லுங்கி. ஒரு பிரா. ஒரு வேட்டி. ஒரு ஜட்டி. ஒரு குட்டி சட்டை. அந்த கைக்குழந்தையின் ஞாபகம் வந்தது. கீழே விழுந்து கிடந்த பிளாஸ்டிக் ஜக்கு. இடது ஓரம் ஆய் போகும் இடம். அதன் மீது கைப்பிடி இல்லாத பிளாஸ்டிக் வாளி. மீண்டும் லேசாக மல நாற்றம். டெட்டால் மாதிரி ஏதாவது இருக்கின்றதா என பார்த்தாள். இந்தப் பக்கம் ஒரு சின்ன இடைவெளியில் ரின் சோப்பு. பாதி கரைந்த ஹமாம். பேஸ்ட். நான்கைந்து மஞ்சள் துண்டுகள். இரண்டு பிரஷ். அந்த குளியல் சோப்பை எடுத்து ஜக்கில் தண்ணீரில் கொஞ்சம் கசக்கி அந்த இடத்தில் ஊற்றி விட்டாள். ஏதோ ஒரு பூவின் வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாகி அவள் தயாராகும்போது கதவு லேசாக தட்டி கிச்சான் “முடுச்சுட்டியா? சீக்கரம்,” என்றான்.

0000

எல்லாமே நாற்றமடிப்பதாக தோன்றியது கீர்த்திக்கு. அந்த மல நாற்றம். கிச்சானின் எச்சில் வாசனை. அந்த ரத்த வாசனை. குளியலறையில் அந்த பழைய லுங்கி வாசனை. கோலம் போடுமிடத்தில் மாமனார் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்த பீடீ வாசனை. ‘என்ன யோசனை.?” என்றான் கிச்சான்.

ஏதுமில்லை என்பது போல தலையாட்டினாள். பேசுவது இப்போதைக்கு வேண்டாம் என்பது போல வெறுமனே புன்னகைத்தாள். அவன் குளித்து தயாராகி நெற்றியில் சந்தன பொட்டு வைத்து அண்ணனிடம், “எங்க பாப்பா?” என்றான்.

“இன்னும் தூங்குது”

இவளிடம், ”பாப்பாவுக்கு நான்னா இஷ்டம். நான் வீட்ல இருந்தா என்னோடதான் எப்பவும் இருக்கும்”

“சொல்லியிருக்கீங்க,” என்றபோது அவன் அவளுடைய கைகளை அழுத்தினான். எதற்கு என்று தெரியவில்லை. அந்த அறையில் அவர்களை தவிர அவனுடைய அண்ணன். பாட்டி. பக்கத்து வீட்டு பெரியவர் இருந்தார்கள். அந்த பெரியவர் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்து அவ்வபோது சிரித்து தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அது என் மாமா,” என்று பெரியவரை பார்த்து சொன்னவன் சட்டென்று அவளுடைய கன்னத்தை தடவி, ”ஏதோ தூசி” என்றான். ”காபி மட்டும் சாப்பிட்டு அக்கா வீட்டுக்கு கெளம்பிடலாம்”

பாட்டி எதையோ மென்று கொண்டிருந்தவள் வாயை துடைத்துக் கொண்டு, “பாத்துப் போப்பா வண்டியில. போம்போது கோயிலுக்கு போயிட்டு போயிடு”

“சரி பாட்டி”

“உங்கப்பன் பொண்ணு குளிக்காம வந்து கோலம் போட்றதுக்கு வாசல்ல நிக்குதுன்னு உங்கம்மாக்கிட்ட சொல்றான்,” அவளிடம் கண்களை திருப்பி, ”தண்ணி பிரச்சனைதான். குளிக்காம அந்த ரூம விட்டு வராத. உங்கண்ணி பாத்துக்குவா கோலம் போட்றதை,” என்றபோது கீர்த்தி காதில் விழாத மாதிரி “எவ்வளவு நேரத்துக்கு கெளம்பறது”“ என்றாள் கிச்சானிடம்.

“இதோ. இப்ப”

“ஒரு டெட்டால் வாங்கனும். எனக்கு குறிஞ்சு சோப்பு காதில கெடைக்கும். வாங்கனும். அப்படியே மரக்கடைல ஜன்னல் ஓட்டைய அடைக்கறதுக்கு ஏதாவது பசை கேட்டுக்கலாம். நான் காலைல சாப்பிட மாட்டேன். உங்கக்கா நிறைய வெரைட்டியா செஞ்சுரப் போறாங்க. சொல்லிடுங்க அவங்களுக்கு போன் பண்ணி”

“அக்கா கோச்சுக்கும். சும்மா இலைய நனைச்சுட்டு வந்திடலாம். இதெல்லாம் ஒரு வழக்கம். எங்கக்கா வீட்டுக்காரு எங்கண்ணன் மாதிரியே.” அவனுடைய அண்ணனை பார்த்து, ”எங்கண்ணனும் அப்படிதான். நான் சாப்பிட்டேனான்னு அண்ணிக்கிட்ட கேட்டுத்தான் சாப்பிடுவாரு. இல்லைன்னா என்னைய திட்டுவாரு. அவரு திட்டும்போது நீ பாக்கனுமே।” கசகசவென்று சிரித்து, ”திட்டும்போது மட்டும் தெலுங்குல திட்டுவாரு. தெலுங்கு கொஞ்சம் தெரியும். ஒசூர்லதானே வேல செய்யறாரு. எனக்கு ஒன்னும் புரியாது. தலையாட்டி கேட்டுக்குவேன். இல்லண்ணா,” என்றபோது அண்ணன் இவளைப் பார்த்து சிரித்து, ”நான் இனிமே திட்ட மாட்டேன். குடும்பம் ஆயிடுச்சு”

“திட்டுங்கண்ணே. பழைய மாதிரியே இருங்க”

“உங்கண்ணி கோவிச்சுக்கும்”

“ஏன்?”

“நைட்டே சொல்லிருச்சு. அதிகமா உரிமை எடுத்துக்காதீங்கன்னு”

“ஏன் அப்படி.?”

“குடும்பம் ஆச்சுன்னா அப்படித்தான். முழு உரிமையும் மனைவிக்கே”

“யாருண்ணா சொன்னது.?”

“இந்த சமூகம்”

“அதை விடுங்க. நீங்க எப்பவும் எனக்கு பழைய அண்ணன்தான்,” என்றபோது அண்ணனின் மனைவி காபி தட்டுடன் உள்ளே நுழைய,  “அண்ணியும்தான்,” என்றான். அப்போதெல்லாம் ஒரு கையால் கீர்த்தியின் விரல்களை தொட்டு தொட்டு எடுத்தான். அந்த பெரியவர் அதைப் பார்த்து சிரித்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.

காபி நன்றாக இருந்தது.  அண்ணி போகும்போது அண்ணன் ஏதோ சைகை செய்வதை கவனித்து கிச்சான் சிரித்தான். அவளுக்கு மேலே மின்விசிறி வேகமாக சுற்றுவதாக தோன்றியது. நிமிர்ந்து பார்த்தவுடன் கிச்சான், ”பத்தலையா வேகம்?” என்றபோது அவளுடைய அண்ணன் எழுந்து இன்னும் வேகம் வைத்தான்.

“இல்ல. கொஞ்சம் குறைக்கனும்”

“ஒ. அப்படியா. எங்க வீட்ல இதுலேதான் இருக்கும் எப்பவும். நீங்க வரும்போது குறைச்சுக்கோங்க,” என்று குறைத்தான். உள் அறையிலிருந்து அவளுடைய மாமனார் கவனிப்பதை இப்போதுதான் கவனித்தாள். காபி குடிப்பதில் கவனமாக இருந்தாலும் அவ்வபோது ஓரக்கண்ணால் மாமனாரை பார்த்தவாறு இருந்தாள். அந்த பாட்டி அங்கிருந்து எழுந்து போனபோது “அப்பாடா” என்றிருந்தது.  மாமனார் உள்ளே வந்து ஒரு ஓரத்தில் நிற்க அண்ணன் எழுந்து சமையலறை பக்கம் போனான். கிச்சான் எழுந்து நின்று கொண்டான். அவள் காபி டம்ளரை சரியாக பிடித்து நிதானமாக எழும்போது.  “உக்காரும்மா. உக்காரும்மா” என்று மாமனார் வேகமாக சொன்ன மாதிரியிருந்தது.

கிச்சான் உட்காரவில்லை. ஆனால் அவள் உட்கார்ந்தாள். அவன் அவளை கீறினான் நின்றபடியே கன்னத்தில். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கீழே குனிந்து அசட்டு சிரிப்புடன், ”அப்பா. அப்பா” என்றான். அப்பா ஏதும் கவனிக்காதது போல அண்ணன் இருந்த சேரில் உட்கார்ந்து, “என்னா பெருசு. பொண்ண பாக்கறதுக்கு வந்தியா?”

“ஆமா. கல்யாணத்துக்கு வரலை இல்ல?”

“எங்க போயிட்டே?”

“மக வீட்டுக்கு. ராயக்கோட்டைக்கு. அங்க போனாக்க அங்க இன்னொரு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. இப்பதான் வந்தேன். நேரா இப்படியே வந்துட்டேன்”

“சந்தோசம்”

“ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா”

“நல்லாயிருந்தா சரி,” என்று இவளை பார்க்க அப்போதுதான் தயங்கி உட்கார்ந்த கிச்சான், “வாழ்த்து சொல்றாரு அப்பா,” என்று இளித்தான்.

அவள் அவன் காதருகில், ”பாத்ரூம் போயிட்டு வந்திடறேன். உடனே கெளம்பலாம்”

“ஏன் அவசரம்?” கிசுகிசுப்பாக.

“தூக்கமா வருது”

0000

அவனுடைய அக்கா வீடு உள்ளூரிலேயே காமராசர் நகர் தாண்டி இருந்தது. அந்த காலை நேரத்தில் அந்த பாதையில் தள்ளு வண்டிகள் மட்டும் வருவதும் போவதுமாக இருந்தன. பெரும்பாலும் பழ வண்டிகள். முக்கியமாக வாழைப்பழம். ”இங்க வாழப்பழ மண்டிங்க அதிகம்,” என்றான் அவன். அவள் காற்றில் தன்னுடைய முடியை அவ்வப்போது சரி செய்துகொண்டு படபடக்கும் அந்த பச்சை நிற சேலையை அணைத்துப் பிடித்திருந்தாள். தர்பூசணி கடைகள் வரிசையாக. புளிய மரங்கள். தண்ணீர் எடுக்கும் பெண்கள். ஒரு மீன் கடையில் சுறுசுறுப்பாக இருந்த வியாபாரம். ஒரு மேடு வந்தபோது அவளுக்கு தொடையில் வலியெடுத்தது. ”அது நடந்திருக்கக் கூடாது,” என்று முனகிக் கொண்டாள்.

அவன் பைக்கின் நான்காவது கியரை முறுக்கி, ”என்னா சொன்னே?” என்றான். அவள் பதில் சொல்லாமல் திடீரென்று தெரிந்த செம்மண் பூமியை ரசித்தாள். மண்ணை ஒட்டி தண்ணீர் கட்டி ஈரமாக இருந்தது. நான்கைந்து காகங்கள் உட்கார்ந்து. உட்கார்ந்து எழுந்து பூச்சிகளை பிடித்துக் கொண்டிருந்தன. பிறகு ஒரு பள்ளிக்கூடம். அந்த இடத்தில் வேகமாக திருப்ப “மெல்லமா போங்க “ என்றாள்.

“பயமா?”

“வலிக்குது”

“புரியல”

“ஒன்னுமில்லை. பாருங்க. அங்க ஒரு புங்க மரம் தெரியுது பாருங்க. அங்க நிறுத்துங்க,” என்றாள். அவன் அங்கு நிறுத்தி, “எதுக்கு?” என்றான். அவள் இறங்கிக்கொண்டு மரத்தடியில் ஒதுங்கி எதிரில் அந்த தாபா உணவகத்தை வேடிக்கை பார்த்தாள். அவன் வண்டியை அவளிடம் இறங்காமல் தள்ளி “ஏன்?” என்றான்.

“கொஞ்ச நேரம் இருப்போம்”

அவனும் அந்த தாபா உணவகத்தை கவனித்தான். பஞ்சாபி தாபா என்று இந்தியிலும் எழுதி உள்ளே பச்சை வலைக்குள் செடிகள் நட்டு பலகையில் பீங்கான் தட்டில் சிக்கன் கிரேவியோடு சுக்கா ரொட்டி நான்கை நிறுத்தி வைத்திருந்தார்கள். வெறுமனே திறந்திருந்த பெரிய வாசல் வழியே ஒருத்தன் மிதிவண்டியில் தக்காளி கூடையை உள்ளே தள்ளிக்கொண்டு போக உட்புறம் நீளமான ஓலைப்பந்தலுக்கு கீழே கட்டில்களும் சேர்களும் சும்மா இருந்தது. ”பதினோரு மணிக்கு மேலதான் ரொட்டி தட்ட ஆரம்பிப்பாங்க,” என்றவன் கிளம்பலாம் என்பது போல நியூட்ரலில் முறுக்க அவள் புன்னகைத்து, “ஒரு நிமிசம்,” என்று அந்த மரத்தோரம் ஒரு கல்லின் மீது உட்கார்ந்தாள்.

“உடம்புக்கு ஏதாவது?”

“ரோட்ல போற வர்றவங்களை வேடிக்கை பாக்கனும். இந்த ரோடு அமைதியா இருக்குது. அங்க பாருங்க ஒரு குடிசை. தனியா. ஒரு சின்ன பொண்ணு தண்ணி பைப்ல விளையாடிட்டு. இந்தப்பக்கம் ரண்டு பக்கமும் வறண்டுப்போயி. ஏன்னு தெரியல. தண்ணி இல்லாத ஏரியா போல. ஆனா அங்கங்க சோளம் போட்டிருக்காங்க. சில எடத்துல கடலைக்காய். பாக்கறதுக்கு வறட்சியா இருந்தாலும் ஏதோ ஒரு அழகு”

“கூட்டிக்கிட்டு வர்றேன் அடிக்கடி”

“உங்கக்கா வீட்டுக்கு வேணாம். சும்மா வந்துட்டு போவோம். கிருஷ்ணகிரிய பத்தி அதிகமா தெரியாது. கேள்விப்பட்டிருக்கேன். இப்ப கொஞ்சம் புரியுது. சுத்திலும் கிராமங்க. அப்படி இருந்தா புடிக்கும்”

“எனக்கும்தான். போவோமா?”

“எவ்வளவு நேரம் இருக்கனும் அங்க?”

“நேரமெல்லாம் இல்ல. இன்னிக்கு அனுப்ப மாட்டாங்க. நாளைக்கு கெளம்பி வந்துடலாம்”

“ஓ. அப்படியா?”

“ஆமா. உங்க வீட்டுக்கு போனாலும் அப்படித்தான். சொந்தக்காரங்க விடமாட்டாங்க. போலாமா?” அவன் வண்டியை முறுக்குவதை  கவனித்து முகத்தில் சலிப்பு காட்டினாள்.  அவன், “என்னா செல்லம்?” என்று வார்த்தையை வழியவிட்டான். பக்கத்தில் வந்து அவன் காதருகில், “உடம்புக்கு முடியல. சொன்னேன் இல்லையா தூக்கம் வருதுன்னு. காலைல வேற நீங்க எம்மேல…” நிறுத்தி, “உங்கக்கா வீட்ல தனியா ரூமு இருக்குமா?”

“எதுக்கு? அதை விடு. எம்மேலன்னு எதுவோ சொன்னியே?”

அவள் அமைதியாக பின்னாடி உக்கார முயல அவன் வண்டியை அணைத்து இறங்காமல், “மொதல்ல அதுக்கு பதில் சொல்லு”

“ஒன்னுமில்லை”

“சரி இறங்கு,” அவன் அவளை இறக்க வைப்பது போல வண்டியை சாய்த்து அவனும் இறங்கினான். இரண்டு பேர் வண்டியில் ஏதோ சிரித்தபடி இவர்களை பார்த்துக்கொண்டே போனார்கள்.

“என்னவோ சொல்ல வந்தியே?”

“மேல படுத்து அமுத்திட்டீங்க. யானை மாதிரி” என்றதும் அவன் “அப்படியா?” என்று யோசித்து,   “காலைல இருந்து என்னைய ரண்டு முறை சொல்லிட்டே. யானை மாதிரின்னு”

“அவ்வளவு கனம். நான்தான் வேணாமுன்னு சொன்னேனில்ல. நீங்க கேட்டீங்களா?”

“இப்ப நான் என்ன பண்ணனும்?”

“என்னைய தூங்க வையுங்க. இன்னிக்கு எதுவும் வேணாம். அடிச்சுப் போட்ட மாதிரி இருக்குது. போம்போது டெட்டால்… அப்பறம் குறிஞ்சு சோப்பு. ம்.ம். அப்பறம் இன்னொன்னு. ஆங். அந்த ஓட்டைக்கு பசை”

“சரி. உக்காரு.” அவன் முகம் இறுக்கமாக இருந்தது. கிளம்பும்போது திடீரென சாதுவாக சிரித்துக் கொண்டான். பிறகு கியரை முடுக்கி வேகம் காட்டி பிறகு நிதானமாக குறைத்து மெதுவாக போனான். ஒரு டிராக்டர் கடந்தபோது பின்னாடியிருந்த பெண்கள் சிரித்தார்கள். அவர்களிடமிருந்து ஏதோ ரட்டை அர்த்த வார்த்தை வந்தது.

“என்ன சொல்லறாங்க.?”

“தெரியல”

“உங்களுக்கு தெரியும். நீங்க மறைக்கறீங்க”

“தெரியல. நான் அதையெல்லாம் கவனிக்கலை. பொம்பளைங்க ஒன்னா சேர்ந்தா இப்படி ஏதாவது பேசுவாங்க. அவங்களுக்குதான் கெட்ட வார்த்தைங்க அதிகமா தெரியும். ஆம்பளைங்களை விட”

“எனக்கு ஏதும் தெரியாது”

“நான் உன்னைய சொல்லலை” கரும்புத் தோட்டம் தாண்டி இடதுபுறம் பிரிந்து கருவேல மரங்களை கடந்து ஒரு மண் ரோடில் பிரிந்து அந்த ஒற்றையாக இருந்த வீட்டருகே நிறுத்தினான்.

உள்ளிருந்து கலகலப்பாக வந்த அக்கா, “வாங்க. வாங்க,” என்றாள். அவளுடைய வீட்டுக்காரன் அவளிடம் புன்னகைத்து விட்டு, “ஏன்யா இவ்வளவு நேரம்?” என்று அவனிடம் கடுகடுக்க, அவன், “அங்க லேட் பண்ணிட்டாங்க”

“சூடா இருக்குது பாரு சாப்பாடு. உனக்கு புடுச்ச இட்லி. சிக்கன் கொழம்பு. அப்பறம் சேமியா பாயாசம்”

“நல்ல சாப்பாடு. உனக்கும் புடிக்குமில்ல” என்றவன் அவளிடம் கேட்டிருக்க கூடாது என்பது போல முகத்தை திருப்பிக்கொண்டு “இட்லி யாருக்குதான் மாமா புடிக்காது?”

“சரி. இப்படி வாங்க” மாமா மாடிக்கு கூட்டிக்கொண்டு போனார். கூடவே அந்த பையன். இவளைப் பார்த்து புன்னகைத்து ““ஆண்டி. நல்லா இருக்கீங்களா?”

“ஓ. பொண்ணு பாக்கறப்போ கூட வந்திருந்த இல்ல”

“ஆமா ஆண்டி” என்றவன் “மாமா. கிரிக்கெட்டு பேட்டு வாங்கி தர்றேன்னு சொன்னிங்களே”

“நாளைக்கு வாங்கிடலாம். எங்க அக்கா?”

“கீழ இருக்குது. வரும்”

“நீங்க ரெடியாயிட்டு கீழ வாங்க. நட்றா போலாம்” என்று பையனை தள்ளிக்கொண்டு அவர் கிளம்ப இவன் பக்கத்து அறைக்கு போய் பார்த்துவிட்டு வந்து, ”அது பெட்ரூம். ஆனா பாய்தான் இருக்குது. சாப்பிட்டு வந்து படுத்து தூங்கலாம். நான் கொஞ்சம் வெளியில  போயிட்டு வர்றேன்”

“சீக்கரம் வந்துடுவீங்களா?”

“தெரியல,” கிட்டே வந்து, ”என்னைய பத்தி யோசனை பண்ணாதே. நீ நல்லா தூங்கு,” கீழே போக இருந்தவன் திரும்பிப் பார்த்து, “நீ சொன்ன மாதிரி இன்னைக்கு ஏதும் கிடையாது”

0000

அக்கா அவனைப் பார்த்து “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலை,,” என்றாள். மாமா பெரிய பெண்ணை அறிமுகப்படுத்தி, “இது கல்யாணத்துக்கு முன்னாடி உங்க போட்டோவை பாத்ததோட சரி. ரொம்ப புடுச்சுப் போச்சு உங்கள”

கீர்த்தி அந்த பெண்ணை பார்த்து சிரித்து “பிளஸ் டூவா?”

“இல்லை. பிளஸ் ஒன். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல”

அந்த பையன், ”எங்கக்காவுக்குக்கூட கிரிக்கெட்டுன்னா ரொம்ப புடிக்கும். மாமா பேட்டு வாங்கி கொடுத்தா நாங்க ரண்டு பேருதான் விளையாடுவோம்”

கிச்சான், “ஒரு பேட்டுதானேடா சொன்ன.?”

பையன் சிணுங்கிக்கொண்டு, ”மாமா. ம்ம். அவளுக்கும் ஒன்னு,” என்று இழுக்க, கீர்த்தி, ”வாங்கிக் கொடுத்துடலாம் இன்னொன்னு” என்றாள்.

அக்கா, “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலடா,” என்றாள் மறுபடியும்.  கிச்சான் நிமிர்ந்து பார்த்து, ”நீயே சொல்லுக்கா”

“ஏம்மா?” என்றாள் கீர்த்தியை பார்த்து.

“ரண்டு இட்லிதான் சாப்பிட்டேன்”

“அதுக்குதான் சொல்றேன். சிக்கனும் ரண்டே பீஸு. நாட்டு கோழிதான். தாராளமா சாப்புடலாம்”

“முடியலை“ என்று நெளிந்தபோது அக்கா புருசனை பார்த்தாள். இரண்டு பேரும் ஏதோ கண்ணால் பேசிக் கொண்டார்கள். அவர் இவனிடம், ”மதியமும் இப்படி சாப்புட்டா மீதியாகறத அக்கம் பக்கத்தலதான் கூப்பிட்டு சாப்பிட வைக்கனும்”

“நான் சாப்படறேனே மாமா. ஏழு இட்லி. சிக்கன் அரை கிலோ சாப்பிட்டிருப்பேன். இன்னமும் சாப்பிடுவேன். யானை மாதிரி,” என்றபோது அந்த பையன் “மாமான்னா பீமா,” என்றான்.

“அப்படி போடு. பலசாலின்னு சொல்லறான். உனக்கு பேட்டு நாளைக்கே வாங்கி தர்றேன்டா”

“நாளைக்குதான்னு ஏற்கனவே சொன்னீங்க.” மீண்டும் ஒரு சிரிப்பு எழுந்து அடங்கும்போது கிச்சான், “அக்கா. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்திடறேன். ஒரு மணி நேரத்துல வந்திடுவேன்,” மனைவியைக் காட்டி, ”இவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் மேல”

“மதியமாவது நல்லா சாப்புட சொல்லிட்டு போ”

கீர்த்தி நிமிராமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். இரண்டு பேரும் கையை கழுவிக்கொண்டு இரண்டு நிமிடங்கள் கீழே இருந்துவிட்டு மாடியேறும்போது, “நான் அக்காக்கிட்ட பேசிட்டு வர்றேன். நீ போ,” என்று கீழே இறங்கியவனை திரும்பி பார்த்துவிட்டு அறையை திறந்து அந்த பெட்ரூமுக்கு போய் அங்கிருந்த பாயை விரித்து போட்டு, “அப்பாடா,” என்று படுத்தபோது கண்கள் தானாக மூடிக்கொண்டது. ஓரிரு நிமிடங்கள் கழித்து அவனுடைய பைக் .கீழே புறப்படும்போது அவள் தூங்கிவிட்டிருந்தாள.

0000

அவர்கள் வீட்டுக்கு வருவதற்கு இரவு பத்து மணியாகிவிட்டது. கிச்சான் ஏழு மணிக்குதான் அக்கா வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் நேராக அக்காவிடம் சென்று கண்களால் மன்னிப்பு கேட்டான். அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, “உம் மாமா உம்மேல ரொம்ப கோவமா இருக்காரு”

“அக்கா. போன எடத்துல கொஞ்சம் லேட்டாயிருச்சு”

“அதுக்கு எங்க வீட்டுக்கு எதுக்கு வந்த? எத்தனை முன்ற போன் பண்ணறது. கடைசில அவங்களை மட்டும் சாப்பிட வையுங்க. நான் லேட்டாகும் வர்றதுக்குன்னு சொல்ற“

“மன்னிச்சுருக்கா”

“அந்தப் பொண்ணு பாவம். .தனியா எம்பொண்ணோடதான் உக்காந்து மதியம் சாப்பிட்டது. ரண்டு வாய் கூட சாப்பிடலை. முகமெல்லாம் வாடிப்போய் பளிச்சுன்னு சாப்பிட்டு கையை கழுவாம கோழி கொத்தற மாதிரி கொத்திட்டு எழுந்திருச்சு”

“அதுக்கும் நான்தான் காரணம். அவங்களையும் மன்னிக்கனும்”

அக்கா அவனை அருகில் அழைத்து, “ஒரு வித்தியாசம் கவனிச்சேன்”

“என்னக்கா?”

“நீ அவ. இவன்னு சொல்லறதில்லை. அவங்க. இவங்கன்னு பொண்டாட்டியை சொல்லும்போது சந்தோஷமா இருக்குது”

“அப்படியா?” அவன் விழித்தான். அக்கா “சரி. சரி. போய் கூட்டியா கீர்த்தியை. சாப்பிட்டு கெளம்புவீங்க”

“கெளம்பறதா?”

“ஆமா. அப்பா உங்களை அனுப்ப சொல்றாரு”

“ஏனாம்?”

“காலையிலையே அஞ்சு மணிக்கு கோயிலுக்கு போகனுமாம். பூசைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காறாம். இங்க இருந்தா லேட்டாயிடுமுன்னு சொன்னாரு”

“ஆமா. ஆமா. பாட்டி கூட சொன்னது போம்போது கோயிலுக்கு போங்கன்னு. நாங்கதான் மறந்துட்டோம்”

அவர்கள் சாப்பிட்டு கிளம்பி இருட்டில் மரங்களுக்கு இடையில் பயணப்படுவது சுகமாக இருந்தது. கீர்த்தியிடமிருந்து மரிக்கொழுந்து வாசனை. குண்டும் குழியுமாக இருந்த பாதையிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்துபோது எதிரில் கடந்துபோன வண்டிகள். மௌனமாக நிற்கும் மரங்கள். ஒரு கத்தரி செடி தோட்டத்தை கடக்கும்போது நிறுத்தப்பட்டிருந்த பொம்மை. மூடத் தயாராகும் வழியோர கடைகள். ஆங்காங்கே திண்ணைகளில் தெரியும் சிறுசு. பெருசு கூட்டம். செங்கல் நிரப்பி கடந்துபோன ஒரு லாரி. எங்கேயோ ஜேசுதாஸ் குரல், ”நீ பாதி. நான் பாதி”

அவள் “சொல்லாம கொள்ளாம மதியம் திடீருன்னு கெளம்பிட்டீங்க?”

“சொன்னேனே”

“அது சும்மான்னு நெனைச்சேன். என்கூட விளையாடறீங்கன்னு”

“இல்லை. நெசமாத்தான்”

“இல்லை. உங்களுக்கு வெளியில ஒரு வேலையும் இல்லை. அது சும்மா. இன்னைக்கு ஏதும் இல்லைன்னு சொன்னதுக்கு இதுதான் அர்த்தமா? அதைத்தவிர வேற வேல இல்லையா நமக்கு? பேசலாம். தூங்கலாம். டிவி பாக்கலாம். ஏதாவது பக்கத்துல மரத்தடிக்கு போயி உக்காரலாம். எனக்கு மட்டும்தான் அசதியா? உங்களுக்கு இல்லையா? எங்கேயோ பிரண்டு  வீட்டுக்கோ சினிமாவுக்கோ போயிட்டு அப்பறம் வேற எங்கேயோ சுத்திட்டு வர்றீங்க. எனக்கு தந்த பதில் இதுதான் நீங்க”

“எல்லாம் யூகம், ” லேசாக சிரித்தான். அவள் பட்டென்று, ”சிரிக்காதீங்க. உங்க சிரிப்பு பயமா இருக்குது. காலைல தமாசுக்குதான் யானைன்னு திருப்பி சொன்னேன். உங்களுக்கு வலிச்சுருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன். அதுக்கு அப்புறம்தானே அவங்க இவங்கன்னு வார்த்தை வந்தது. அதுக்குதான் உங்க சிரிப்பு பயமா இருக்குதுன்னு சொன்னேன்”

“பொண்டாட்டிய வாங்க, போங்கன்னு ஏன் சொல்லக்கூடாது?”

“சொல்லலாம். அது ஆம்பளைக்கு மட்டும் சொந்தமா என்ன?”

“அதானே”

“ஆனா அது புதுசா இருக்கு எனக்கு. கிண்டல் அடிக்கற மாதிரி. தொடர்ந்து சொல்லுவீங்களா?”

அமைதியாக இருந்தான். ஒரு ஆள் குடித்துவிட்டு லுங்கியில்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அந்த பேருந்து நிலையத்தில் ஒரு நகர பேருந்து காத்திருப்பில் இருந்தது. சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தான் ஒருத்தன். நான்கு பெண்கள் வேகமாக குறுக்கே நடந்து போனார்கள். வரிசையாக மின்விளக்குகள் மஞ்சள் நிறத்தில் கடந்தது.

இப்போது சிரித்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் சிரித்து முடித்தவுடன், “பரவாயில்லை. உங்க இயல்பு அது. வச்சுக்கோங்க. உங்க அக்கா மதியம் சாப்பிடும்போது எதையெல்லாமோ பேசிட்டு கோலம் போட தெரியுமான்னு திடீருன்னு கேட்டாங்க. தெரியும்னு சொன்னேன். அப்ப எனக்கு புரியல. ஆனா நிதானமா யோசிச்சப்போ அவங்க என்னவோ சொல்ல வர்றாங்கன்னு தோணுது”

“என்னா?”

“உங்க பாட்டி சொன்னாங்க இல்ல. முகத்துக்கு நேரா. கோலத்தை பத்தி. உங்கப்பா கோலம் விஷயத்தை மக வீட்டு வரைக்கும் கொண்டு போயிருக்காரு. உங்க பாட்டி சொன்னது காதுல விழுந்ததா இல்லையா உங்களுக்கு?”

“ஏதும் சொல்லலையே அவங்க”

“அப்ப நீங்க கவனிக்கலை”

“இல்லை”

“இதுக்கு வழக்கம் போல சிரிச்சிருக்கலாம். என்னைய பத்திதானே பேசறாங்க. உங்களுக்கு உறைக்கலையா?”

“ஏன் உறைக்கனும்? அவங்க சொன்னதுல நியாயம் இருக்கலாம்”

“அப்ப உங்களுக்கு அவங்க சொன்னது தெரியும்”

தயங்கி, “தெரியும். அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பெரியவங்க அப்படித்தான்”

“அப்ப ஏன் கவனிக்கலைன்னு சொன்னீங்க?”

“அது சின்ன விஷயம். எதுக்கு பெருசு பண்ணனுமுன்னுதான்” அவன் இந்த முறை சிரிக்கவில்லை. அவள் கண்களை இருட்டில் துடைத்துக் கொண்டாள். ஒரு மௌனம் உறைத்தபடி வண்டி மட்டும் சத்தம் போட்டபடி நகர்ந்தது. டெட்டால். சோப்பு. அந்த பசை ஞாபகம் வந்தது. ஒரு துணி வைத்துதான் அடைக்க வேண்டும். ஏனோ அம்மா அப்பா நினைவு வந்தது. அப்பாதான் சொல்லுவார், ”பொண்ணோட உடம்பை தீட்டு அது இதுன்னு குறி வச்சுதான் பேசுவாங்க. அதுக்கு பின்னாடி அதிகார புத்தியும் சேடிஸ்ட் புத்தியும் இருக்குது. ஆம்பளைங்க உடம்ப அப்படி பாக்க மாட்டானுங்க. இல்லன்னா எல்லா கெட்ட பழக்கமும் இருக்கற ஒருத்தனை சாமிக்கு மாலை போட்டுட்டான்னு முட்டாள்தனமா கும்புட முடியுமா?” ன்னு சொல்லுவார்.

அவன் படுக்கும்போது “காலைல நாலு மணிக்கு ரெடியாகனும்”

“கோலம் போடறதுக்கா?”

“சொன்னேனே. கோயிலுக்கும் சேத்து”

“கோலம் போடனமுன்னா நான் குளிக்கனும். குளிச்சா நீங்க விடமாட்டீங்க. மறுபடியும் குளிக்க முடியுமா? உங்க பாட்டி சொன்ன மாதிரி தண்ணி பிரச்சனை இருக்குது. என்ன செய்யட்டும்?”

அவன் யோசித்தான். ”அண்ணி செய்யறாங்களே?”

“அவங்க வேற. நான் வேற”

“அப்படின்னா நீதான் சொல்லனும்”

“கோலம் போடற வேலைய நான் செய்ய மாட்டேன். நானாதான் காலைல ஆரம்பிச்சேன். நானா அதை முடிச்சுக்கறேன். சுத்தமா இருக்கனுமுன்னா மொதல்ல உங்கப்பன பீடி நாத்தத்தோட பேச வேணாமுன்னு சொல்லிடுங்க. நீங்க சொல்லலைன்னா நேரம் வரும்போது நானே சொல்லிடுவேன். காலைல ஆறு மணிக்குதான் எழுந்திருப்பேன். சாமி எங்கேயும் போயிடாது. எப்படி வசதி?” என்று கேட்டவள் அவன் பதில் சொல்ல யோசித்து ஏதோ வாயை திறக்கும்போது, ”காலைல உங்க வண்டி கெளம்பறப்போ கண்ணை மூடிட்டேன். அப்பறம் என்னடா நம்ம வண்டி சத்தம் மாதிரி இருக்குதேன்னு திடீருன்னு முழிப்பு வந்திருச்சு. பாத்தா நீங்க இல்ல. அப்பறம் தூக்கம் வரலை. இனிமேதான் தூங்கனும்,” என்றாள் அர்த்தம் பொதிந்த கண்களுடன்.

“புரிஞ்சது,” என்று அவன் சொன்னபோது அவள் அந்த சன்னல் ஓட்டையை அடைப்பது பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.

 

 

 

அழைப்பு

இவான் கார்த்திக்

ஏழு கழுதைகளின் வயதை அம்மா அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ள மனம் ஒப்பவில்லை. காரணங்கள் பல இருந்தாலும் அதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. இருக்கட்டும் இருக்கட்டும் என்று அம்மாவும் சொல்லி சொல்லி பிறகு மறந்து போனாள். நடக்காமல் இருந்தது என்னமோ நல்ல விசயம் என்றே இன்று வரை படுகிறது. அப்படி யோசிக்கும்போது என்னை மற்றவர் கல்யாணத்திற்கு அழைப்பது அநியாயம் என்பதை என் அம்மா கொஞ்சமாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

முன்பு நடந்த நினைவுகள் கண் முன் திரை கட்டி ஆடுகின்றன. இரவு முடிய இன்னும் நேரம் குறைவாகவே உள்ளது. காரணம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் தவிர்த்து விட வேண்டும். என் உடம்புக்கு எதுவும் வராதென்று அம்மாவுக்கு தெரியும். காரணம் வேண்டும். சித்திமார்களும் அத்தைமார்களும் வரிசை கட்டி வந்து விசாரிப்பார்கள் பதில் சொல்வது பேரும்பாடு இதில் நான் திரும்ப கேள்விகள் வேறு கேட்க வேண்டும். பேப்பரில் எழுதி வைத்து மனப்பாடம் செய்தும் கைவராத கலை.  ஆண்கள் கைகொடுத்து சிரிக்கும்போது ஏன் என் முகம் இறுகி கண்கள் திறந்து முறைப்பதைப்போல மாறிவிடுகிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கோர்த்து விட்டிருக்கலாம். அவர் செத்துப்போய் மாதா மாதம் நம்மை கொல்கிறார்.

தினமும் ஒர் அழைப்பாவது என் வீட்டிற்கு வந்து கழுத்தை பிடிக்கிறது. இதில் பண்டிகை ஆப்பர் போல சில நாட்கள் இரண்டும் அழைப்புகள். இன்னும் உச்சம் ஒரே நேரத்தில் இரு அழைப்புகள் வந்து மொய் எழுத வற்புறுத்தி “கண்டிப்பாக வந்துரணும்” என்பதை அழுத்தி சொல்லி பிரச்சனையை கிளப்பிவிட்டு செல்கின்றனர்.

முன்பெல்லாம் அம்மா அப்பா சேர்ந்து சென்றனர். அப்பா பரலோகம் போய் சேர்ந்த பின் என்னை தனியாக அனுப்புகிறாள். தனியாக மண்டபத்திற்கு சென்று அங்கிருக்கும் ஏதோவொரு பிளாஸ்டிக் சேரை கண்டுபிடித்து முற்றிலும் தெரியாத முகம் இரு பக்கமும் அமர நடுவில் இடம் பார்த்து அமர்வதற்குள் உடல் வியர்த்து கொதித்துவிடும். ஒரே நிம்மதி சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் சுழலும் மின்விசிறி மட்டுமே. வியர்வையை குளிர்வாக்கி கொஞ்சம் நிதானமடையச் செய்யும்.

நிற்பதை நடப்பதை ஓடுவதை தின்பதை தூக்கி எறிவதையெல்லாம் துரத்திப் பிடிக்க முயலும் புகைப்படக்கார்கள் கண்கள் என்மேல் விழாமல் இடுக்கினுள் சுவர் ஓட்டையினுள் பதுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல ஒளிந்து கொண்டிருக்க தலைமேல் தூக்கிய லைட் மூலம் வெளிச்சம் காட்டி குறைந்த பட்சம் என் சொட்டைத் தலையையாவது படம் பிடித்து சாதனை புரியும் அவர்களை என்னதான் செய்வது. சோற்றை என் வாய்க்குள் புகுந்து படம் பிடிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை.

குடும்பம் குடும்பமாய் வந்து நிற்பவர்கள் மெல்ல என்னருகில் அமர்ந்து வணக்கம் வைப்பர். வாய் திறந்து பேச ஆரம்பிக்கும் இவர்கள் என் அந்தரங்கத்தை குதறாமல் எழுந்து செல்வதில்லை. கஷ்டகாலத்திற்கு என்னாலும் எதும் செய்ய முடியாது குழைந்து சிரித்து பதில் சொல்லி முடிக்கும் முன் என் கண்கள் மடை திறந்துவிடும். பாவிகள் அதைக் கண்டும் குதறலை நிப்பாட்டுவதில்லை. குடும்பம் அமைத்து ஓர் நிலைக்கு வருவதென்பது அவர்களுக்கு அமைந்தால் ஊருக்கும் அமைந்தே தீர வேண்டும் கட்டயமில்லையே.

நிதானமாக பந்தி நேரத்திற்கு வரும் ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட இருவத்தினாலுவிட்ட அக்காக்கள் அண்ணன்கள் தம்பிகள் தங்களை அறிமுகப்படுத்தி “நான் யாருன்னு தெரியுதா?” எனும் போது குடல் பிதுங்கி வெளிவரும் அளவுக்கு யோசிக்க வேண்டியள்ளது. மற்றவர்கள் “ஆமா…அப்ப சொகமா இருக்கியா?” என்று தொடரும் கணம் நான் பேந்த பேந்த முழித்திருப்பேன். அவர்களும் “வாறேன் அண்ணெ, தம்பி” என்று சொல்லி ஓடிவிட்டால் பாக்கியம். இல்லையெனில் சர்வம் நாசந்தான். இதில் “அப்பா சொகமா,” என்று என்னிடம் கேட்பவரின் வாயில் நாலு குத்து விடாமல் வாய் பிளந்து பார்த்து அப்படியே விட்டுவிடுதலும் நல்லதே.

தூரத்தில் கைகழுவுமிடத்தில் இருக்கும் பெரிய மைனி வாயில் குதப்பிய வெற்றிலையை அங்கே எங்கோவோர் மூலையில் துப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக என்னிடம் வரும்போதே சுதாரித்து ஓடிவிட்டால் நல்லது.  இல்லையேல் கை வசம் இருக்கும் ஓடாத சரக்கை என் தலையில் கட்டிவிடும் திட்டத்தில் என் அருகில் “பிள்ளெ சொகமா…” என்று ஆரம்பித்து தோவாள, வள்ளியூர், ஒழுகினசேரி, தாழாக்குடி, வீரணமங்கலம் என்று ஊர்சுற்றி பெண்கள் பெயர் விலாசம் அவள் அப்பன் தாதன் முப்பாட்டன் நாஞ்சிலுக்கே வந்த கதை வரை அளந்து வைத்து கிளம்பும் முன் நாலாவது பந்தி முடிந்துவிடும்.

பந்திக்கு முந்த வேண்டுந்தான் ஆனால் அதற்காக உட்கார்ந்திருப்பவரின் இலைக்கு பின்னால் காத்திருப்பவர் பருப்பு பாயாசமும் மோரும் கேட்பது உச்சபட்சம். சிலர் நம் இலையில் கைவைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கன்னியாரி கடலில் சுனாமி வந்து ஊரை விழுங்கும் போது நம்மவர் ஒருத்தர் “அது செரி பிள்ளே, புரிசேரி வரல்லையே… வச்சிருக்கானா… இல்ல விளம்புத அணஞ்ச பெருமாளே மடக்கு மடக்குன்னு எடுத்து குடிச்சிட்டானா?”

என்று பினாத்தும் போதேகவளங்கள் தொண்டையை அடைத்து சுனாமிக்குள் முங்கியது போல மூச்சு முட்டியதும் அதை சரிசெய்ய தண்ணீர் தேடி அலைந்ததும் சுனாமியை விட சுவாரஸ்யமானது.

துவட்டலும், அவியலும், கிச்சடி,  எரிசேரி, பச்சடி, மாங்காய் என முன்பே விளம்பி வைக்கப்பட்ட பந்திக்கு, கதவு திறக்காமல் அடைத்து கிடக்கும்போது வரும் வாசனையை மனத்தில் ஏத்திக்கொண்டே கையில் ஜெம்பர் துணியுடன் பழிகிடையாய் வரிசையில் நிற்க வேண்டும். ஜிங்கு சாங் ஜிங்கு சாங் என்று வண்ணம் படமெடுக்கும் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும். முண்டித் தள்ளி நெரித்து மேடைக்கேறி மாப்பிள்ளையின் மூக்கில் உறுமா துணி கட்டி இறங்கி திறுநீரையும் அவன் கண்களில் போட்டு வாழ்த்திவிட்டு முதலில் இறங்கும் பெரிசுகள் “பஸ்ட் நம்மதான , நம்க்கில்லாத மரியாதையா?” என்று தற்பெருமை அடிக்கும்போது மேடையில் நான் மட்டும் கருப்பு துணியை கட்ட என்னை அடிக்கவே வந்து விட்டனர். “விடப்பா கிறுக்கன் தெரியாம செஞ்சுட்டான்” என்று பின் பாட்டுக்கள் வேறு. அப்போது  மயங்கி விழுந்த என்னைத் தூக்கி நிறுத்த முடியாமல் மேடையில் பின்னாலிருந்த மணமக்களின் சோபாவிலேயே படுக்க வைத்தனர். பெண்கள் சிரிப்பதும் தட்டி எழுப்ப முயன்றதும்  தண்ணீருக்குள் கத்துவது போல கேட்டும் எழும்ப முடியாமல் கிடந்தேன். வெட்கக்கேடு.

இந்த ஆபாசங்கள் நிறைந்து கிடந்தாலும் கல்யாணங்களுக்கு  நான் செல்வதிலும் ஓர் அந்தரஙக காரணமுண்டு. மணப்பெண்கள், மாப்பிள்ளைகள் அந்த சடங்கு நாடகங்கள் அனைத்தையும் நானும் அந்த கணங்களில் நடித்துவிடுகிறேன். நான் உடுத்தியிருக்கும் சட்டை வேட்டியை கழற்றி பட்டணிந்து, பொடி செய்ன் முதல் உருட்டு செய்ன் வரை கால் கொலுசு முதல் காது ஜிமிக்கி வரை வளைய வரும் ஒட்டியாணமென அனைத்தும் பொன்னாக ஜொலிக்க கழுத்தில் தாலி தொங்க நிற்க வேண்டும். பயப்பட்ட இத்தனை காரணங்கள் நிறைந்திருந்தாலும் போய்ப் பார்க்க இந்த ஒரு காரணம் இருக்கத்தான் செய்கறது.

விடிந்து விட்டது நாளை மறைந்து இன்றாகிவிட்டது. இன்று இரண்டு அழைப்புகள் காலை ஒன்றிற்கும் சாயங்காலம் ஒன்றிற்கும் செல்ல வேண்டும். சட்டை வேட்டியை நேற்றே தேய்த்து வைத்தாயிற்று.

விசிட் விசா

கார்த்திக் கிருபாகரன்

துபாய் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இரண்டாவது தளத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்த ஜோதிலிங்கத்துக்கு தன் நண்பனும்,எதிரியுமான சூசைய பார்த்தவுடனே இனம்புரியாத மகிழ்ச்சி. ஆனா எதையும் வெளிக்காட்டிக்காமல் வேலையை பார்த்தான். சூசைக்கும் லிங்குவ பார்த்தவுடனே, ரொம்ப சந்தோஷம். அவன்கிட்ட பேசுறதுக்கு பக்கத்துல வந்து, “டேய் லிங்கு, எப்படி இருக்கடா ? நல்லா இருக்கியா? துபாய் வந்தா உன்னைய பார்ப்பேன்னு நெனச்சேன். பார்த்துட்டேன்டா. நீ இங்கதான் வேலை பாக்குறியா?” அப்புடின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டான். ஆனால் பதிலேதும் சொல்லாமல் லிங்கு வேலைய பார்த்துகிட்டே  பேசாம இருந்தான்.

ஊர்ல தெருக் கூத்து நாடகத்துல நடந்த கைகலப்புனாலதான் லிங்கு இப்ப பாத்தும் பேசாம இருக்குறதா சூசை நினைச்சான்.  ஆனா காரணம் அந்த சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசரோட கெடுபுடிதான். வேலை பார்க்கிறப்ப  பேசிக்கொண்டு இருந்தாலும், வேலை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துட்டு  இருந்தாலும், தண்டனை கடுமையா இருக்கும், ஒருநாள் சம்பளத்தை நிறுத்திடுவாங்க. அதான் லிங்கு பேசாம இருந்தான்.

தலை குனிந்தபடியே சூசைய பார்த்து, “டேய் பேசாம போடா,” அப்படின்னு சொல்லிட்டு வாலியை தூக்கிகிட்டு, துடைப்பத்த எடுத்துக்கிட்டு முதல் தளத்தை சுத்தம் பண்ண போனான்.

“அட கடவுளே! பேச கூட மாட்டானா, இவ்வளவு ரோசமா இருக்கான். வெளிநாட்டுல ஊர்க்காரன்தான் ஒத்தாசை ஆனா, இவன் இப்புடி இருக்கானே, எப்புடி வேல செய்ய போறேன்”னு நினைச்சு, லிங்கம் வேலை செய்றதையே வேடிக்கை பாத்துட்டு நின்னான் சூசை.

*

மாலுக்கு பின்னாடி நடை பயணமா 10 நிமிடம் போனவுடனே, கண்டைனரை ரூம் மாதிரி தயார் பண்ணிருந்தாங்க. அதில் ஒரு ரூம்ல ஆறு பேரு. ஏசி ரூம். அதில் ஒரு கட்டில் மூணு தளமா இருந்துச்சு. அதில் இரண்டாவது தளத்தில் சூசைக்கு தங்க இடம் கிடைச்சது. ரூமுக்கு ஒரே ஒரு பாத்ரூம். சாப்பாடு நம்மளே தான் சமைச்சு சாப்பிடனும். அதுக்கு தனியா இந்திய மதிப்பு 1000 ரூபாய் கொடுத்துடுவாங்க. சமைத்து சாப்பிடுவதற்கு ஒரு அடுப்படி இருந்துச்சு. இப்படி நெருக்கமான, இறுக்கமான இடம்தான். ஆனால் எல்லாத்தையும் சகித்துக் கொண்டுதான் வாழணும்னு கட்டாயம்.லிங்கத்துக்கு பக்கத்து ரூம்தான் சூசை இருந்தான்.

வேலை நேரம் கணக்கே கிடையாது. காலையில ஏழு மணிக்கு போய் வேலை ஆரம்பித்தால் நைட் பதினொரு மணி வரைக்கும் வேலை இருக்கும். மதியம் உணவு இடைவேளை. ஓய்வு என்பது கொஞ்ச நேரம்தான். ஆச்சரியம் கலந்த இந்த வெளிநாட்டு வாழ்க்கை. அரபு நாடுகளில் ரம்ஜான், நோம்பு நாள்கள் வந்தால் சந்தோஷம் தான். ஏன்னா! அப்போது வேலை நேரம் ரொம்ப குறைவு. “இரவு 11 மணிக்கு தான் ஜோதிலிங்கம் வேலைய முடிச்சுட்டு வருவான். அவன்கிட்ட பேசனும்”னு சூசை காத்திருந்தான்.

மேடை நாடகங்களில் சூசையும், ஜோதிலிங்கம் சேர்ந்து நடிப்பார்கள். இவர்கள் நடிக்கும் தெருக்கூத்துகள் அந்த பகுதியில் பிரபலமாக இருந்தது. தன் விவசாய நிலங்களையும் கவனித்துக்கொண்டு பல ஊர்களில் கூத்து கட்டிக்கொண்டும் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஜோதிலிங்கம் ராஜபாட்டை ஆக இருப்பான். சூசைக்கு முதலில் ஒண்டிபுலி என்றுதான் பெயர். எல்லா தெருக்கூத்திலும் லிங்கம் ராஜபாட்டையாக நடிப்பது அவனுக்கு பிடிக்காமலே இருந்தது.

அன்று பக்கத்து கிராமத்தில் ‘பாஸ்கா திருவிழிப்பு’ இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி நாடகம். அந்த நாட்களை கத்தோலிக்க திருச்சபையும், பிற கிறித்தவ சபைகளும் எல்லா ஆண்டும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம். அதில் இயேசுநாதர் கதாபாத்திரத்தில் சூசை நடிக்க ஆசைப்பட்டான். ஆனா லிங்கம்தானே ராஜபாட்டை. அந்த பாத்திரத்தை அவனே ஏற்று நடிச்சான். ஏன்! ஆண்டுதோறும் கத்தோலிக்க திருச்சபை இந்த உயிர்த்தெழும் நாடகத்தை லிங்கத்தோட குழுவைதான் அந்த ஊர்க்காரர்கள் செய்ய சொல்லுவார்கள். அதுலேயும் “இயேசுநாதர் கதாபாத்திரத்திற்கு ஜோதிலிங்கம் அவ்வளவு பொருத்தமாக இருப்பான்”னு அவனையே நடிக்க சொல்லுவார்கள். அந்த விஷயத்துல லிங்கம் மேல சூசைக்கு பொறமை அதிகமாவே இருந்தது.

அந்த நாடகத்துல ஏசு நாதர் சிலுவையைச் சுமந்து கொண்டு போற போது சாட்டையால் அடிக்கும்  காட்சி. சாட்டையை சுழற்றி, இயேசுவை அடிக்க வேண்டும். அது பார்ப்பவர்களுக்கு இயேசு மேல் படுவதாக தெரிந்தாலும்,சாட்டையடி சிலுவையில் தான் பட வேண்டும். சாட்டை சுழற்றி அடிக்கும் காவலாளி வேடத்தை சூசை ஏற்றிருந்தான். அப்போது சாட்டையால் அடித்தான். சிலுவையில் படவேண்டிய சாட்டையடி லிங்கத்தின் மேல் “பளீர்ர்…” என பட்டது. கனமான சிலுவையை சுமந்து கொண்டும், நிஜ சாட்டையடி வாங்கியும் லிங்கத்துக்கு கண் கலங்கி, தத்ரூபமாக நடித்தான். அந்த காட்சியை பார்த்த மக்களுக்கே கண்ணீர் வந்தது. அந்த காட்சியில் மூன்று முறை ஏசுநாதரை காவலாளி அடிக்கனும். இரண்டாவது முறையும் சாட்டையடி சிலுவையில் படாமல் லிங்கத்தின் மேல் பட்டது. லிங்கத்துக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. “இவன் நம்மல வேணும்னே அடிக்கிறானோ!” என்று நினைத்தாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தான். மூன்றாம் முறையும் சாட்டையடி லிங்கத்தின் மேல் பட்டது. வலி பொறுக்க முடியாமல் கீழே விழுந்தான். அந்த காட்சி மேலும் தத்ரூபமாக இருந்ததால், கிராம மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.

நாடகம் முடிந்தது, லிங்கத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. பின் லிங்கம் சூசையை தனியாக சந்தித்து பேசியபோது, சூசையின் தவறான எண்ணத்தை  புரிந்து கொண்டான். பேச்சு வார்த்தை ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் கைகலப்பானது. அந்த சண்டைக்கு பின் லிங்கமும், சூசையும் சேரவே இல்லை. நாடகக் குழுவும் இரண்டாகி போனது. அந்த நிகழ்ச்சிக்கு பின் சில கலைஞர்கள் வேற தெருக்கூத்தில் இணைய ஆரம்பித்தார்கள். சிலர் வேற வேலைக்கு போக ஆரம்பித்தார்கள். லிங்கம் பிழைப்புகாக ஏஜெண்ட் மூலம் துபாய் வேலையில் சேர்ந்தான். சூசை அந்த தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணை காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். பின் இரண்டு வருடத்துக்கு பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்த திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயர் மாற்றி ‘சூசைன்னு’ ஞானஸ்தானம் வாங்கினான்.

சூசையோட படிப்பு தகுதிக்கு வேலை ஏதும் இல்லை. திருச்சபை மூலமா இரண்டு லட்ச ரூபா கடனுதவி ஏஜென்ட்கிட்ட கொடுத்து, துபாய்க்கு விசிட் விசா மூலமா போக வச்சாங்க. விசிட் விசா மூலமாக துபாய் வந்து, துபாயில இருக்கிற பல கம்பெனிகளுக்கு, ஏஜென்ட் கூட்டிட்டு போவான்.

அந்த கம்பெனிகள் ஏஜென்ட் கூட்டிட்டு வர ஆட்களை இண்டெர்வியூ மூலமா தேர்வு செய்வாங்க. எப்படியும் 10 க்கு மேல கம்பெனி ஏறி இறங்குற மாதிரி இருக்கும். சிலர் வெளிநாட்டு வாழ்க்கை ஆசையில் வந்தவர்கள், இந்த விஷயம் ஒத்துவராமல் திரும்ப டிக்கெட் போட சொல்லி இந்தியாவுக்கு கிளம்பி போயிடுவாங்க. ஆனால் சிலர் காத்திருந்து பல கம்பெனி ஏறி இறங்க தயாரா இருப்பாங்க. இதுல எத்தனை நாள் ஆனாலும் துபாய்ல தங்குற செலவு, நம்ம செலவு தான் இருக்கும். ஏஜென்ட் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டான். இப்ப வந்திருக்க 50 பேரும் அப்படிதான் சேர்ந்து கூட்டிட்டு வந்திருந்தான். எல்லாம் வேற வேற ஊரை சேர்ந்த ஆட்கள். அதுல 20 பேருக்கு மேல பயந்துகிட்டு, ஊருக்கே திரும்பி கிளம்பி போய்ட்டாங்க. அவர்களுக்கு கட்டுன பணம் திருப்பி கிடைக்குறதும் சந்தேகம்தான். மீதி இருக்கிற ஆட்கள் எல்லாம் கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சினை, குடும்பத்தை காப்பாத்தணும் என்கிற எண்ணத்தில் வந்தவங்க. அதனால வேற வழி இல்லாம, “ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதும்”ன ஏஜென்ட் சொல்லுற சம்பளத்துக்கும், கம்பெனிக்கும் வேலைக்கு சேர ஆரம்பிச்சாங்க. சிலர் துபாயில் குப்ப அள்ளும் வேலை, ரோடு போடுற வேலை, செக்யூரிட்டி வேலை அப்படின்னு ஏஜெண்ட் மூலமா சேர்ந்தாங்க.அது சம்பளம் குறைவான வேலை. மீதம் இருக்குற ஆளுங்க சூப்பர் மார்க்கெட்ல வேலைக்கு சேர வந்தாங்க.

அப்படி சூசை சேர்ந்ததுதான் இந்த சூப்பர் மார்க்கெட் வேலை. இதிலேயும் ஏஜென்டு சொன்ன சம்பளம் எதுவுமே இல்லை. வேலை நேரமும் அதிகம். “ஊர்ல ஏஜெண்ட் சொன்னது எல்லாமே பொய்”ன்னு இங்க வந்து தான் சூசை தெரிஞ்சுகிட்டான்.

*

ரூம்ல கட்டில்ல அழுது கொண்டிருந்தான் சூசை. அப்போ லிங்கம் வந்தான்.

“டேய் எப்படிடா இருக்க. உன் மனைவி, குழந்தையெல்லாம் சவுக்கியமா?” என அன்பா கேட்டான் லிங்கம்.

“நல்லா இருக்கேன் ஜோதி,” என கண்ணீர் விட்டான்.

“ஏன்டா அழுகுற”

“நான் தான் வந்து உனக்கிட்ட பேசுனேன். நீ ஒன்னுமே பேசல. ஏன்டா, நம்ம ஊர்ல நாடகம் போட்டப்ப உன்னைய அடிச்ச கோபம்தான் இன்னும் என் கூட பேச மாட்டியா?” என்றான் சூசை.

“டேய் கிறுக்கா, பேசினா திட்டுவாங்க. கெடுபிடியான வேலை. அதனாலதான் பேசல. சரி ஊர்ல இருந்து என்ன சாப்பிட கொண்டு வந்த”ன்னு ஜாலியா கேட்டான் லிங்கம்.

“நம்ம ஊரு முறுக்கு இருக்குடா. நெய் முறுக்கு இருக்கு. கார முறுக்கு இருக்கு,” அப்படின்னு முறுக்கை எடுத்து காமிச்சான். ஏதோ காணாததை கண்ட மாதிரி எடுத்து சாப்பிட ஆரம்பிச்சான் லிங்கம்.

அவன் சாப்பிடுவதை பார்த்தவுடனே சூசைக்கு புரிஞ்சது, எவ்வளவு பஞ்சமா இருக்கணும். நல்ல சாப்பாடு கிடைக்காது போலன்னு தோணுச்சு.

சாப்பிட்டுகிட்டே, “இந்த வேலைக்கு எப்புடி வந்த”ன்னு கேட்டான் லிங்கம்.

ஏஜெண்ட் மூலமா தான் வந்த கதைய வருத்தமா சூசை சொன்னான். “நீ எப்படி”ன்னு கேட்டான்.

“அடப்பாவிகளா! சண்ட போட்டதுக்கு அப்பறம், வேற குழுவுலயும் சேர முடியல. சேர்ந்தாலும் பின் பாட்டுதான் பாடுனேன். மழ இல்ல, விவசாயமும் பண்ண முடியல. ஏதோ காசு பொரட்டி, வெளியூர் கரீம் ஏஜெண்ட்க்கு குடுத்து வேலக்கி கேட்டேன். ஏஜென்ட், “துபாய் வேலை, 40,000 ரூபாய் சம்பளம்”ன்னு சொல்லிதான் என்னையும் கூட்டிட்டு வந்தான். இங்க வந்தா, எந்த ஒரு கம்பெனியும் 25,000 ரூபா சம்பளத்துக்கு மேல தர சம்மதிக்கல. பத்து நாளுக்கு மேல ஆகவும், பயம் வர ஆரம்பிச்சது. வீட்டுக்கு பேச முடியல. கையில காசும் இல்லை. அதனால வேற வழி இல்லாம சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஒத்துகிட்டேன். இங்கேயும் கௌரவமா பொருள் எடுத்துக் கொடுக்கிற வேலை, அதுவும் 40 ஆயிரம் சம்பளம்ன்னு நினைச்சேன்.ஆனா, வெறும் 20 ஆயிரம் சம்பளத்துக்கு தான் ஏஜெண்ட் வேலைக்கு சேர்ந்து விட்டுருக்கான். சாப்பாட்டுக்கு  ஆயிரம் ரூபாய் தனியா கொடுத்துடுறாங்க. நானும் வேற வழி இல்லாம இருக்கேன்.இரண்டு வருடம் ஆக போகுது,” தன் கஷ்டத்தை சொன்னான் லிங்கம்.

“இப்புடி வரவச்சு வேல தராங்க. இதுல கம்பெனிக்கு என்ன லாபம்”

“நம்ம நாட்டுல வந்து வேலைக்கு எடுத்தா உன்னைய துபாய் கூட்டிட்டு வர்ற செலவு எல்லாம் கம்பெனி தான் பார்க்கணும். விசிட் விசாவுல வர வெச்சு கம்மி சம்பளத்துல வேலைக்கு எடுப்பாங்க. அந்த வகையில, ஒரு லட்சம் வரைக்கும் கம்பெனிக்கு லாபம். நீ சரியா வேலை செய்யல, இல்ல கம்பெனிக்காரனுக்கு புடிக்கலன்னா, ஒரு மாசத்துல உன்னைய  அனுப்புவாங்க. அதனாலதான் இப்படி ஏஜென்ட் மூலமா செய்றாங்க”

“சரி… பாக்குற வேலை ரொம்ப கஷ்டமாடா”

“போகப் போக நீயே புரிஞ்சுக்குவ,”அப்படின்னு சொல்லிட்டு, “சரிடா எனக்கு ரொம்ப தூக்கமா வருது. நீ சாப்பிட்டியா?”

“இல்லடா இன்னும் சாப்பிடல”

“சரி, வா என் ரூம்ல குப்புஸ் ரொட்டி இருக்கு தரேன்”

“அப்புடின்னா?”

“நம்மள மாதிரி காசு இல்லாதவங்களுக்கு காசு கம்மியா கிடைக்கிற ரொட்டி.  அத வாங்கி சாப்புட்டு தான் நிறைய நாள் நான் பசிய தீர்த்துருக்கேன்”

“சரி”ன்னு தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை பண்ணிக்கொண்டு இருந்தான் சூசை.

“ஏன்டா, வேலைய நெனச்சு யோசிக்கீறியா?” அப்படின்னு ஜோதிலிங்கம் கேட்டான்.

நிமிர்ந்து பார்த்து, “ஆமா ஊர் நாடக ராஜபாட்டை உனக்கே துடக்கிற வேலன்னா எனக்கு என்ன வேலை கிடைக்கும்ன்னு யோசிச்சேன்,” அப்படின்னு பெருமூச்சு விட்டான் சூசை.

தூரத்து அருகாமை 

ஸிந்துஜா

  ஜானகி பதினெட்டாம் கிராஸ் பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது வழக்கம் போல் கூட்டம் முட்டிக் கொண்டு நின்றது. அத்தனை கூட்டமும் அவள் போகும் வண்டிக்கு அல்ல. அவள் கன்னிங்காம் ரோடு போக வேண்டும். ஆனால் அந்த நிறுத்தத்துக்கு வரும் வண்டிகள் மெஜஸ்டிக், மார்கெட், ஜெயநகர், ஜே.பி. நகர், ஹொசஹள்ளி என்று திசைக்கொரு பக்கம் செல்வனவாக இருந்தன. ஜானகி தான் செல்ல வேண்டிய வண்டியின் எண்ணைக் குறிப்பிட்டு அது வந்து விட்டுப் போய் விட்டதா என்று பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் கேட்டாள். அந்தப் பெண் அவளை ஏற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு இன்னும் இல்லை என்று சொன்னாள். அவள் அம்மாதிரி தன்னைப் பார்த்தது ஜானகிக்கு உறுத்தவில்லை. ‘இப்பிடி இல்லே இருக்கணும்!’ என்று சொல்லத்  தூண்டும் அழகு தன்னிடம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ‘இதென்ன இப்பிடி’ என்று அவளைப் பார்த்த பெரும்பாலான கண்கள் தெரிவித்ததை அவள் பல வருடங்களுக்கு முன்பே அறிந்து விட்டாள்.

அன்று காலை கிளம்புவதற்கு முன்னால் அவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்ட போதும் அது பொய் சொல்லாமல் அவளைக் காட்டியது. அவள் முழு உயரத்தையும் காட்ட முடியாத (ஐந்தடி ஒன்பது அங்குலம்) கண்ணாடியில் முகமும் மார்பும் இடையும் பாதிக் கால்களும் தெரிந்தன. மேட்டு நெற்றியும்,  நீள  நாசியும் சதைப்பிடிப்பு இல்லாத கன்னங்களும் தாடையும் தெரிந்தன. மார்பகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரு புள்ளிகள் காணப்பட்டன. உடலில் சதைப்பற்றுக் காண்பிக்காத இயற்கை அவளுக்குத் தேவைக்கும் மீறிய செழிப்பைத் தலை மயிரில் கொடுத்திருந்தது. திரும்பி பக்கவாட்டில் அவள் தன்னைப் பார்த்துக் கொண்ட போது பின்புறம் பிருஷ்டத்துக்கும் கீழே நீளக் கூந்தல் தொங்கிற்று.

 

இன்று திங்கட் கிழமையாதலால் அவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று ஜானகி நினைத்தாள். நேற்று ஒய்வு தினம். வாரத்தில் மற்ற நாள்களில் காலை ஐந்தரைக்கே ஆரம்பித்து விடும் தினங்களிலிருந்து விடுதலை தரும் நாள் என்று ஞாயிற்றுக் கிழமையை அவள் மிகவும் விரும்புவாள், அன்று எட்டு எட்டரைக்கே முழிப்பு வந்தாலும் ஒன்பதுக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டாள். அப்படி சீக்கிரம் எழுந்து காப்பி போட்டுக் காலை உணவு சமைத்துப் பரிமாற ஒரு குழந்தையோ குட்டியோ கணவனோ அவள் கூட இல்லை. நிதானமாக எழுந்து வாசல் கதவைத் திறந்து வெளியே பையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வருவாள். ஐந்தரை மணியிலிருந்து ஒன்பது மணி வரை அடிக்கும் இளம் வெய்யிலில் அது தன்னுடன் கொண்டு வரும் ஜில்லிப்பை இழந்திருக்கும், அவளுக்குக் காலை உணவு என்பது காப்பியும், அய்யங்கார் பேக்கரியிலிருந்து வாங்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளில் நாலைந்தும்தான். நிதானமாகப் பதினொன்றரை பனிரெண்டு மணிக்கு மத்தியானத்துக்கு வேண்டிய உணவை சமைத்துக் கொள்வாள்.

அவளைத் தேடி ஞாயிறு அன்று யாரும் வரமாட்டார்கள். அவளும் யாரைத் தேடியும் செல்ல மாட்டாள். அவளுடைய அம்மாவைத் தவிர. அம்மா குவீன்ஸ் ரோடில் இருக்கிறாள். அவள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில்  குடியிருப்பும் கொடுத்திருந்தார்கள். பத்து வருஷமாக – அவள் கணவனை விட்டுப் பிரிந்த பிறகு – அவள் அங்கேதான் இருக்கிறாள். அவளுக்கோ ஜானகிக்கோ அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதில் எந்த ஒரு துக்கமும் இல்லை. ஏனென்றால் அதற்கு முன்பு அனுபவிக்க வேண்டிய துக்கம் எல்லாவற்றையும் அவன் மூலம் அவர்கள் அடைந்திருந்தார்கள். அவர்கள் வருத்தப்பட்டதெல்லாம் இன்னொரு பெண் அவர்கள் நிலைக்கு வந்து விட்டாளே என்றுதான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அம்மாவிடம் சென்று விடுவாள். அவளுக்கும் ஞாயிறு அன்றுதான் விடுமுறை நாள். இவள் தன் கல்லூரியில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையும் அம்மா அவளுடையதையும் சொல்லிப் பகிர்ந்து கொள்வார்கள். ஜானகி தன் வகுப்பு மாணவிகளில் சிலரின் கெட்டிக்காரத்தனத்தையும் பெரும்பாலான மற்றவர்களின் பொல்லாத்தனத்தையும் விஷமத்தையும் சொல்லிச் சிரிப்பாள். அம்மாவுக்கு ஆஸ்பத்திரியில் நேரும் அனுபவங்களில் சந்தோஷம் எப்போதாவதுதான் வரும். ‘நோயாளிகளுக்கு ஆறுதலா நீ இருக்கியே’ என்று ஜானகி அம்மாவிடம் ஆறுதலாகச் சொல்லுவாள்.

ஜானகியின் எட்டு ஐம்பது பஸ் வந்து விட்டது. முன் வழியாக ஏறுவதில் வழக்கமாகப் பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. ஆனால் இன்று வழக்கத்துக்கு விரோதமாக வண்டியின் ஸ்டியரிங் வரை பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜானகி ஒருவழியாகப் பஸ் உள்ளே நுழைந்து விட்டாள். பின் பக்க வழியில் படிக்கட்டு வரை ஆண்கள் நிரம்பி வழிந்தார்கள்.அவர்களில் சிலர் வேலைக்காகத் தாங்கள் உயிரை விடத் தயாராக உள்ள ஜனம் என்று உலகத்துக்குத் தெரிவிக்கும் வண்ணம் படிக்கட்டில் ஒரு காலும் அதற்கு வெளியே காற்றில் தொங்கிக் கொண்டிருந்த இன்னொரு காலுமாக நின்றார்கள். தனக்கும் கூட வாழ்க்கையில் முக்கியமானது வேலை என்றுதான் ஜானகி நினைத்தாள். யாருடைய கவனமும் மரியாதையும் கிடைக்காத இந்த வாழ்க்கையில் வேலை ஒன்றுதான் அவள் உயிரைப் பிடித்து நிறுத்தியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

பஸ் போய்க் கொண்டிருக்கும் போது மணி என்ன என்று அவள் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது ஐந்து. இன்னும் நாலைந்து நிமிஷங்களில் அவள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விடும். அது அவளது கல்லூரிக்கு எதிரே இருக்கிறது. அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் அவள் அலுவலகத்துக்குள் நுழைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விடலாம்.  வகுப்புகள் ஒன்பதரை மணிக்குத்தான் ஆரம்பிக்கின்றன. ஆகவே அவள் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆசிரியைகளுக்கான அறைக்குச் சென்று உட்கார வேண்டும். வரவேற்பைச் சற்றும் காட்டாத முகங்களை அவள் பார்க்க விரும்பவில்லை. அழகு, பணம், அறிவு ஆகிய வார்த்தைகளின் உண்மையான ரூபங்களை அறியாத ஒரு கூட்டம் காண்பிக்கும் அன்னியத்தில் துவளும் மனமே பின்னர் அது பொருட்படுத்தப்பட வேண்டிய கூட்டம் அல்ல என்று தீர்மானம் கொண்டு விடுகிறது.

இம்மாதிரி நாள்களில் அவள் தான் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முந்திய ஸ்டாப்பிலேயே இறங்கி விடுவாள். இன்றும்  அதையே செய்தாள். அழகு, அழகின்மை என்று வித்தியாசம் பார்க்காமல் டிசம்பர்க் குளிருடன் வந்த காற்று அவளைத் தொட்டுவிட்டுச் சென்றது. ஜானகி மெதுவாக நடந்தாள். அந்த வேகத்துக்கு அவள் கல்லூரியை அடையும் போது வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நேராக வகுப்புக்குச் செல்ல சரியாக இருக்கும். அவளுக்கு நேர் எதிரேயும் எதிர்ப்புறத்தில் இருந்த பிளாட்ஃபார்மிலும் அவள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் சிலர் அவர்களின் ஜோடியுடன் எதிர்ப்பட்டனர். இன்று அவர்கள் தம் வகுப்புகளுக்குச் செல்வது நடக்காத காரியம்தான். அவளைப்  பார்க்க எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ள விடாமல் கூடவே வந்த இளைஞர்களின் சேஷ்டைகளில் அவர்கள் மகிழ்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண்களின் பெற்றோர்கள் பாவம் என்று நினைப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை தன் இயலாமையும், லேசான பொறாமையும் தன்னைச் சற்று உயர்நிலை மனோபாவத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனவோ என்று அவள் தன்னையே கடிந்து கொண்டாள்.

அவள் பள்ளியில் படிக்கும் போது ஒரேயொரு ஜோடி இம்மாதிரி அலைந்ததைப் பார்த்திருக்கிறாள். சினிமாவில் வரும் கதாநாயக, நாயகி அந்தஸ்து கொஞ்ச காலம் அவர்களுக்குக் கிட்டியிருந்தது என்னவோ வாஸ்தவம்தான். வகுப்பறைகளில் கிடைத்த கிண்டலான வார்த்தைப் பரிமாறல்களில் அவர்களிருவரும் சிரித்துக் கொண்டோ முறைத்துக் கொண்டோ போனார்கள். ஆனால் ஒரு நாள் அந்தப் பெண் பள்ளிக்கு வரவில்லை. அதற்குப் பிறகு அவள் என்றுமே வரவில்லை. அவள் படித்த கல்லூரியில் பெண்கள் மட்டும் படிக்க வந்தார்கள். பஸ் ஸ்டாப்பில் சில  சமயம் நடக்கும் கலாட்டாக்களைப் பற்றிச் சில பெண்கள் பேசுவார்கள். அங்கே எல்லாவற்றையும் ரசித்து விட்டு வரும் அவர்களே வகுப்புக்கு வந்து சிநேகிதிகளிடம் அந்தப் பையன்கள் ‘வழிவது’ பற்றி எகத்தாளத்தையும் அலட்சியத்தையும் கொண்டுள்ள குரலில் எப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஜானகி கல்லூரிக்குள் நுழையும் போது மணி ஒன்பது இருபத்தி ஐந்து ஆகியிருந்தது. அலுவலகத்தை நோக்கி அவள் நடந்து சென்றாள்.

அவளுக்கு முன்னால்  நடந்து சென்ற ஒருத்தி எதற்கோ பின்னே திரும்பிப் பார்த்தாள். வத்சலா கோசாம்பி. சரித்திரப்  பேராசிரியை. அவள் பார்வை ஜானகியைத் தாண்டி நூறு கஜம் சென்று விட்டுப் பிறகு தான் நடந்து போகும் வழிக்குத் திரும்பிற்று. தன் மீது பார்வை விழும் போது மட்டும் அவள் குருடாகி விடும் வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறாள் என்று ஜானகிக்குத் தோன்றியது. அவளைப் போலவே  ஆங்கிலத் துறைத் தலைவி எலிசபெத் சாமுவேல்,  ஹிந்தி ஆசிரியை லீனா ஷிவ்சாகர், ஃபிரென்ச் ஆசிரியை கல்பனா மாணிக்கவாசகம், வணிகவியல் புரஃபஸர் நஞ்சப்பா (ஒரே ஒரு ஆண் ஆசிரியர்) என்று கல்லூரிக்கு ஒன்பது மணிக்கே வந்து வம்படிக்கக் கூடியிருக்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கும் கடவுள் அந்த வரத்தை அளித்து விட்டார். ஜானகியைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் அவர்கள்  பார்த்தும் பாராதது போலிருக்கும் ஓர் உன்னதப் பயிற்சியில் தேர்வடைந்தது போன்று இருப்பார்கள்.  அவர்கள் ஓவ்வொருவரைப் பொறுத்த வரையும் அவளிடம் ஒரு அனுபவம் இருந்தது.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அவள் கல்லூரி முதல்வரைப் பார்க்கச் சென்றாள். அவளுக்கு வணக்கம் செலுத்தி விட்டு அன்றிலிருந்து தான் வேலையில் சேர்ந்து விட்டதைத் தெரிவித்தாள். அப்போது அறைக்குள் வந்த பெண்மணி ஒரு வாசனை திரவிய நிலையத்தையே அணிந்து கொண்டு வந்திருந்தவள்  போலிருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள்  இருக்கலாம். ஆனால் உடை அணிந்த முறை மூலம் அவள் காலத்துக்குச் சவால் விட முயன்று அதில்  தோற்றிருந்தாள்.

முதல்வர் ” ஜானகி! இவங்கதான் புரஃபசர் எலிசபெத் சாமுவேல், இங்கிலிஷ் டிபார்ட்மென்ட், எலிசபெத்! இவங்க  ஜானகி இன்னிக்கி ஜாயின் பண்ணறாங்க. சயன்ஸ் லெக்சரர்” என்று அறிமுகம் செய்வித்தாள். எலிசபெத் ஜானகியை ஏற இறங்கப் பார்த்தாள். குரலிலோ முகத்திலோ சந்தோஷம் எதுவும் காண்பிக்காமல் அவள் ஜானகியிடம் “கிளாட் டு மீட் யூ” என்றாள். ஜானகி நன்றி தெரிவித்துச் சொல்லிய சொல்லைக் காற்று ஏற்றுக் கொள்ளட்டும் என்பது போல முதல்வருடன் பேசத்  தொடங்கி விட்டாள். ஜானகி கிளம்ப முயற்சி செய்த போது முதல்வர் அவளிடம் சற்று இருக்கச் சொல்லி எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினாள். எலிசபெத் பேசி முடித்ததும் வெளியே சென்றாள்

“அவள் சீனியர் ஃ பேகல்ட்டி. ஆனால் அவள் நடந்து கொண்ட முறை எனக்கு வருத்தத்தைத் தருகிறது. நீங்கள் வருத்தப்படக் கூடாது” என்றாள் முதல்வர்.

“மிதிச்ச இடத்துப் புல் சாகாது” என்றாள் ஜானகி. முதல்வர் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.  அன்று அவள் சந்தித்த லீனா, கல்பனா, புவனா ரெட்டி ஆகிய ஆசிரியைகளும் எலிசபெத்தின் சிஷ்யைகள் போலவே இருந்தார்கள்.

அவள் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமிருக்கும். அன்று மாலையில் அவள் வீடு திரும்ப பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது அங்குலீனா கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

அவளும்மல்லேஸ்வரத்தில் தான் குடியிருந்தாள். ஏற்கனவே தான் வருவதைப் பார்த்து விட்டு அவள் புத்தகத்தில் அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும் என்று ஜானகிக்குத் தோன்றியது.

அப்போது அங்கு வந்து நின்ற காரிலிருந்து “லீனா!” என்ற குரல் கேட்டது. லீனா ஏறெடுத்துப் பார்த்து விட்டுக் கையை அசைத்தவாறே புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றாள். ஜானகி பார்த்த போது காருக்குள் எலிசபெத் இருந்தாள். அவளும் லீனாவும் தன்னைப் பார்ப்பதை ஜானகியும் பார்த்தாள். கார் கிளம்பிச் சென்றது.

அவர்கள் அவளை ஒதுக்குவதற்கும், அவள் மீது ஆத்திரப்படுவதற்கும் தேவையான காரணங்கள் இருந்தன என்று ஜானகி நம்பினாள். அவர்களிடம் இருந்த அழகு – பூச்சுக்களால் ஆனது- பணம், கார் வீடு போன்ற வசதிகள் அவர்கள் அவள் மீது செலுத்திய  கீழ்ப்பார்வைகளை நியாயப்படுத்துவனவாக இருந்தன. ஆனால் ஆத்திரம்? அவளிடம் சயன்ஸ் படித்த வெவ்வேறு வகுப்புகளில் இருந்த எல்லா மாணவிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் ஒவ்வொரு சயன்ஸ் தேர்விலும் தேர்ச்சியடைந்து வந்தார்கள். தோல்வியடைந்தவள் என்று ஒரு பெண்ணும் அவள் காலை வாரி விடவில்லை. இதற்கு முன்னால் இருந்த சயன்ஸ் ஆசிரியை சரியாகப் பாடம் சொல்லித் தராமல் கல்லூரிக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தாள் என்று ஜானகியைப் பாராட்டி  ஆசிரியைகள் கூட்டத்தில் முதல்வர் வெளிப்படையாகக் கூறியதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகி விட்டது. போதாதற்கு அந்த ஆசிரியையும் கல்லூரியில் இருந்த வரை அவர்கள் கூட்டத்தின் தலைவியாக வேறு இருந்தாள். பழைய சயன்ஸ் ஆசிரியைக்கு முதல்வரிடம்  கிட்டிய மரியாதை ஜானகியால் தங்களுக்கும் வந்து விடுமோ என்று அதிக அளவில் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கொண்டிருந்தவர்கள் உள்ளூரப் பயந்தார்கள்.

அன்று ஜானகிக்குக் காலையில் இரண்டு வகுப்புகள்தாம் இருந்தன. பனிரெண்டு மணிக்கு மேல் அவளுக்கு வேலை இல்லை. இம்மாதிரி நாள்களில் அவள் லைப்ரரியில் போய் உட்கார்ந்து விடுவாள். ஜேன் ஆஸ்டனிலிருந்து சால் பெல்லோ வரை அங்கு நடமாடிக் கொண்டிருந்தது அவளுக்கு சௌகரியமாக இருந்தது. அவள் தன் இரண்டாவது வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த போது  வலது பக்கமிருந்த ஆர்ட்ஸ் பிளாக் மாடியிலிருந்து கல்பனா இறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஜானகி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் சரிந்து விழுந்தாள். விழுந்தவள் படிகளில் உருண்டு கீழே வருவதைப் பார்த்து ஜானகி வேகமாக அவளை நோக்கி ஓடினாள். நாலைந்து படிகளில் உருண்டு கீழே விழுந்தவள் அப்படியே படியில் படுத்துக் கிடந்தாள். அவளை நெருங்கியதும் ஜானகி அருகில் யாராவது தென்படுகின்றார்களா என்று பதற்றத்துடன் பார்த்தாள். யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை.

அப்போது ஒரு ஆட்டோ அலுவலகக் கட்டிடம் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து சந்தியப்பா இறங்குவதைப் பார்த்தாள். காண்டீனில் வேலை பார்க்கும் உதவியாள். இறங்கி ஆட்டோவிலிருந்து ஒரு மூட்டையை இறக்கிக் கொண்டிருந்தான். ஜானகி அவனைப் பார்த்து “சந்தியப்பா!” என்று கத்தினாள். அவன் அவளையும் படியில் கிடக்கும் உருவத்தையும் பார்த்து ஓடி வந்தான். ஆட்டோ டிரைவரும் இறங்கி அவர்களைப் பார்த்து ஓடி வந்தார் . மூவருமாகக் கல்பனாவைத் தூக்கினார்கள். “ஆட்டோலேயே  ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிடலாம்” என்றாள் ஜானகி. கல்பனாவின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கையிலும் சிராய்ப்பு காணப்பட்டது.

அவள் முதலில் உள்ளே உட்கார்ந்து கொள்ள அவள் மடியில் கல்பனாவின் தலையை மற்ற இருவரும் கிடத்தினார்கள். ஜானகி ஆட்டோக்காரரிடம் “தண்ணி இருக்கா?” என்று கேட்டாள். ஆட்டோ டிரைவர் வண்டியின் உள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜானகியிடம் கொடுத்தார். அவள் தன் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து நெற்றி, முகம் கழுத்து எல்லாவற்றிலும் சிதறியிருந்த ரத்தத்தைத் துடைத்தாள். கல்பனா அரை மயக்கத்தில் வலி பொறுக்க முடியாமல் அழுதாள். ஜானகி அவள் வாயில் சிறிதளவு நீர் ஊற்றியபடி சந்தியப்பாவிடம் “நான் இவங்களை மகாராணி ஆஸ்பிடலுக்குக் கொண்டு போறேன். நீங்க கொஞ்சம் பிரின்சி கிட்டே சொல்லிடறீங்களா? நான் ஆஸ்பிடல்லேர்ந்து அப்புறமா போன்பண்ணி அவங்க கிட்டே  பேசறேன்” என்று சொல்லிவிட்டு  சந்தியப்பாவிடம் “அங்க படிலே கெடக்கற இவங்க ஹேண்ட் பேக்கையும் புஸ்தகத்தையும் எடுத்துக் குடுங்க”  என்றாள். அவற்றை  வாங்கிக் கொண்டு  ஆட்டோக்காரரிடம் ” குவீன்ஸ் ரோடு” என்றாள்.

ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது அவள் தன் அம்மாவை அழைத்தாள். நல்ல வேளை, அவள் அப்போது டூட்டி முடிந்து சாப்பிடப் போய்க் கொண்டிருந்தாள். ஜானகி எமர்ஜென்சி என்றதும் அவள் போர்ட்டிகோவில் ஸ்ட்ரெச்சருடன் நிற்பதாகத் தெரிவித்தாள். ஜானகி  கல்லூரியிலிருந்து ஆஸ்பத்திரியை ஏழெட்டு நிமிடத்தில் அடைந்து விட்டாள். அவள் அம்மாவுடன் இருந்த இரண்டு சிப்பந்திகள் ஸ்ட்ரெச்சரில் கல்பனாவை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள். அவர்களுடன் ஜானகியின் அம்மாவும் சென்றாள் , ஜானகியை ரிசப்ஷனில் உட்கார்ந்திருக்குமாறு சொல்லி விட்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள் ஜானகி. பெரும்பாலும் கவலை ஏறிய முகங்கள். அவர்களின் உள்ளங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும். நோவு பற்றி, உயிரைப் பற்றி, பணத்தைப் பற்றி என்று எல்லாப் பக்கமும் நெளியும் பாம்புகளே அடங்கிய பரமபத விளையாட்டு. இதை அறிந்தும் அறியாத மாதிரி, தெரிந்தும் தெரியாத மாதிரி ஓடுகிறார்கள் – அழகா, அழகில்லையா, பணக்காரியா பிச்சைக்காரியா கெட்டிக்காரியா முட்டாளா என்ற  விவாதத்தின் பின்னால் வெறியுடன். கல்பனாவுக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்திருந்தால் கல்பனாவோ அவளது கூட்டத்தில் இருக்கும் எவரோ தான் நடந்து கொண்ட மாதிரி இயங்கியிருப்பார்களா என்று சட்டென ஓர் எண்ணம் அவளுள் மின்னி மறைந்தது. உடனடியாகவே அவள் மனதில் பதிலும் வந்து ஓடி விட்டது.

கல்பனாவுக்கு எப்படி இருக்கிறதோ என்று அவள் கவலையுடன் நினைத்தாள். மற்றவர்களைப் போலக் கல்பனாவும் ஜானகியிடம் ஒதுங்கி நிற்பவள்தான். அவள் வீடு எங்கே இருக்கிறது? வீட்டில் யார் இருக்கிறார்கள்? இந்த விபத்து பற்றியும் ஆஸ்பத்திரியில் இருப்பது பற்றியும் யாரிடம் தெரிவிப்பது? அவள் கணவன் எங்கே இருக்கிறான்?

இந்த  ஊரில்தானா? அல்லது வெளியூரிலா? வெளிநாட்டிலா?

அவள் கல்பனாவின் கைப்பையைத் திறந்து பார்த்தாள். அதில் ஒரு பர்சும் கைபேசியும் பேனாவும் ஒரு கைக் குட்டையும் இருந்தன. கைபேசியை எடுத்துப் பிரித்த போது அவள் கடைசியாகக் கூப்பிட்டிருந்த பெயர் டார்லிங் என்றிருந்தது.அவளது கணவனின் நம்பராக இருக்க வேண்டும். அம்மாவிடமிருந்து நிலைமை என்னவென்று தெரிந்தபின் கல்பனாவின்கணவனையும் பிரின்சியையும்  கூப்பிட்டுச் சொல்லி விடலாமென்று நினைத்தாள். பத்து நிமிஷம் கழிந்திருக்கும். அப்போது அவள் அம்மா வருவதைப் பார்த்தாள். அவளருகே வந்தவள் “ஜானு, கவலைப்பட ஒண்ணும் இல்லே. படியிலே மோதி உருண்டு விழுந்ததிலே நெத்திலேயும் அதுக்கு மேலே தலை ஆரம்பத்திலேயும் காயம் பட்டு அங்கேர்ந்துதான் ரத்தம் வந்திருக்கு. அதனாலே மைல்டா  அனஸ்தேஷியா கொடுத்து தையல் போட்ருக்கா. அவ எழுந்திருக்கக் கொஞ்சம் டைம் ஆகும். நீயும் என் கூட சாப்பிட வா. எவ்வளவு வருஷமாதான் நான் மாத்திரம் ஒண்டியா எங்க கான்டீன் சாப்பாடை சாப்பிட்டுண்டு இருக்கறது?” என்று சிரித்தாள்.

“அம்மா. ஒரு நிமிஷம். போன் பண்ணி முடிச்சுடறேன்” என்று பிரின்சியை முதலில் கூப்பிட்டாள். அம்மா சொன்னதை அவளிடம் சொல்லி விட்டுக் கவலைப்பட ஒன்றுமில்லை என்றாள்.

“இப்போவே டிஸ்சார்ஜ் பண்ணறாங்களா ஜானகி?” என்று பிரின்சி கேட்டாள் .

“இல்லே மேடம். இன்னும் நேரமாகும். நான் கூட இருந்து கல்பனாவை அவங்க வீட்டுலே விட்டுட்டுப் போறேன்” என்றாள் ஜானகி.

“நான் காலேஜ் வேனை அனுப்புறேன்” என்றாள் பிரின்சி.

“இல்லை மேடம், வேண்டாம். எப்போ இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு தெரியலே. உங்களுக்குத்தான் தெரியுமே இங்கே என் அம்மா வேலையிலே இருக்காங்கன்னு. அதனாலே நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றாள் ஜானகி.

பிரின்சி விடாமல் அவளுக்கு மூன்று நான்கு நிமிஷம் நன்றி தெரிவித்து விட்டுத்தான் போனைக் கீழே வைத்தாள்.

ஜானகி  கல்பனாவின் கணவனுக்குப் போன் செய்தாள் . அவன் எடுத்ததும் எங்கேயாவது “டார்லிங்” என்று கூப்பிட ஆரம்பித்து விட்டால்  என்ற பயத்தில் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டவுடனே ஜானகி “”சார், மிஸ்டர் மாணிக்கவாசகமா?” என்று கேட்டாள்.

மறுமுனையிலிருந்து பதில் வர சில வினாடிகள் பிடித்தன. பிறகு “ஆமா நான் மாணிக்கவாசகம்தான் பேசறேன். இது என் ஒய்ஃப் நம்பர்ல? யார்பேசுறது?” என்று குரல் கேட்டது.

“சார், என் பேர் ஜானகி. நான் கல்பனாவோட வேலை பாக்கறேன். நீங்க கவலைப்பட வேணாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே  கல்பனாவுக்குக் காலேஜிலே ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகி விட்டது.படியிலேந்து இறங்கறப்போ ஸ்லிப்பாயி  நெத்திகிட்டே கொஞ்சம் காயம்  நான் அவங்களை இங்கே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு வந்தேன்.”

” ஐயோ, நான் இப்போ ஊர்லே இல்லையே!  அவளோட  பேசமுடியுமா?”

“சார், நான் வெளியே இருந்து பேசறேன். ஓ பி டி லேந்து என்னைக் கூப்பிடுவாங்க. அப்ப  உங்க கிட்டே போனைக் கொடுக்கிறேன். எனக்கு உங்க வீட்டு அட்ரெஸ்ஸை மெஸேஜ் பண்ணுங்க. டிஸ்சார்ஜ் ஆனதும் நான் நேரே வீட்டிலே கொண்டு போய் விட்டுடறேன். நீங்க இப்போ எங்கே இருக்கிங்க?” என்று கேட்டாள் ஜானகி.

“நான் வேலை விஷயமா டூர்லே வந்தேன். ஹூப்ளிலே இருக்கேன். இப்ப மணி என்ன ஒண்ணா? கார்லேதான் இங்கே வந்தேன். இப்பக் கிளம்பினாக் கூட அங்க வந்து சேர்றதுக்கு ஏழு ஏழரை ஆயிரும்…” என்று அவன் தயங்கிப் பேசுவது அவளுக்குத் தெரிந்தது.

“நீங்க கிளம்பி வாங்க. நீங்க வர்ற வரைக்கும் நான் கல்பனாவோட உங்க வீட்டிலே வெயிட் பண்ணறேன்.”

“ஓ மேடம்! தேங்க்ஸ் எ லாட். ஸ்கூலுக்குப் போயிருக்கற ரெண்டு பசங்களும் நாலு மணிக்கு வந்துடுவாங்க.'”

“டோன்ட் ஒரி சார். நான் அதையெல்லாம் பாத்துக்கறேன்” என்று ஜானகி சிரித்தாள்.

“ஏதோ கடவுள் அனுப்பிச்ச மாதிரி வந்து உதவி செய்யறீங்க. எனக்கு வேறே என்ன சொல்லறதுன்னு தெரியலே.”

“பெரிய வார்த்தையெல்லாம் எதுக்கு? மனுஷாளுக்கு மனுஷா உதவி செய்யறது எல்லா இடத்திலேயும் நடக்கிறதுதானே. நீங்க பதட்டப்படாம நிதானமா வாங்க. நீங்க வந்ததுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குக் கிளம்பிப் போறேன். சரியா?” என்று போனை அணைத்தாள்.

ஜானகியும் அம்மாவும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியதும் ஓ பி டிக்கு ஜானகியும் அவள் அம்மாவுடன் சென்றாள் . கல்பனா விழித்திருந்தபடி படுக்கையில் படுத்திருந்தாள். ஜானகியைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒளி தோன்றியது. ஜானகி அவளருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டு “எப்படி இருக்கீங்க? வலி ஜாஸ்தியிருக்கா?” என்று கேட்டாள். தன் அம்மாவை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“விட்டு விட்டு வலிக்குது” என்றாள் கல்பனா. அடிபட்ட அதிர்ச்சியில் அவள் முகம் வாடியிருந்தது.

“கவலைப்படறதுக்கு ஒண்ணும் இல்லேம்மா!” என்று ஜானகியின் அம்மா பரிவுடன் கல்பனாவைத் தடவிக் கொடுத்தாள். “இன்னிக்கி ராத்திரி வரைக்கும் வலி இருக்கத்தான் செய்யும்.  மருந்து எழுதிக் கொடுக்கிறோம். ஒரு ரெண்டு நாள் வேலை கீலைன்னு அலட்டிக்காம நீ கம்ப்ளீட் ரெஸ்டுலே இருந்தா சரியாயிடும்.”

அவள் அவர்கள் இருவரையும்பார்த்து ” ரொம்ப நன்றிம்மா, ரொம்ப நன்றி ஜானகி” என்றாள்.

“இன்னிக்கு ராத்திரி வரைக்கும் நான் உங்களோட இருப்பேன்கல்பனா. நான் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியத்துக்கும் நீங்க நன்றின்னு சொல்ல ஆரமிச்சா ரொம்ப டயர்டாயிருவீங்க. அதனால நான் கிளம்பிப் போறப்போ ஒரு நன்றியைக் குடுங்க. வாங்கிண்டுபோறேன்” என்று சிரித்தாள் ஜானகி.

ஜானகி அவளிடம் அவள் கணவனோடு பேசியதையும் அவன் உடனே காரில் புறப்பட்டு பெங்களூர் வருவதையும் பற்றிச் சொன்னாள். அடுத்த அரை மணியில் கல்பனாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஜானகியின் அம்மாவுக்குத் தெரிந்த கேஸ் என்பதால் ஆஸ்பத்திரிக்குத் தர வேண்டிய பணத்தை இரண்டு மூன்று நாள்களுக்குள் கொண்டு வந்து கட்டினால் போதும் என்று ஆஸ்பத்திரியில் சொன்னார்கள்.

ஜானகி ஊபருக்குப் போன் செய்து ஒரு காரை வரவழைத்து அவளும் கல்பனாவும் கல்பனாவின் வீட்டை அடையும் போது இரண்டரை ஆகி விட்டது. குமாரா பார்க்கில் இருந்த ஒரு பலமாடிக் கட்டிடத்தில் கல்பனாவின் வீடு இருந்தது. வாசலில் செழித்திருந்த செடிகளும் அவற்றின் மீது மலர்ந்து ஆடிக் கொண்டிருந்த பூக்களும் தேக்கு மர வாசற் கதவுகளின் பளபளப்பும் கண்ணை உறுத்தாத வண்ணத்தில் தீட்டப்பட்டிருந்த சுவர்களும் கட்டிடத்தின் உள்ளே நடமாடிய செல்வத்தைச் சுட்டிக் காட்டுவனவாக இருந்தன. கல்பனாவின் வீடு மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய ஃபிளாட்.  நீள அகல வீச்சும், அலங்காரப்  பொருள்களின் அணிவகுப்புமாக அந்த வீட்டில் பணம் மண்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ஜானகி தரையைப் பார்த்த போது தூசி கூடப் பளபளப்பாக மின்னியது போலிருந்தது.

ஜானகி கல்பனாவை அவளது படுக்கையறையில் கொண்டு போய் விட்டாள்.

“ஜானகி, உங்களுக்கு நான் ரொம்பத் தொந்திரவு கொடுத்துட்டேன்” என்றாள் கல்பனா.

“இப்படி நீங்கள் சொல்றதுதான் தொந்திரவு” என்றாள் ஜானகி. கல்பனா ஜானகியை ஆச்சரியத்துடன் பார்த்தாள்

“நான் என் ஹஸ்பண்டோட பேசிடறேன். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாரு” என்று கல்பனா போனை எடுத்தாள்.

“பேசிட்டு நல்லாப் படுத்துத் தூங்குங்க. உங்க குழந்தைகள் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அவங்களை நான் பாத்துக்கிறேன். அவங்க குடிக்கிறதுக்கு போர்ன்விட்டாவா, டீயா இல்லே வேறே எதானுமா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்?ஒரு நா அவங்க பால் குடிக்காட்டா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது” என்றாள் கல்பனா.

“என் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க” என்று சிரித்தாள் ஜானகி.

“ஜானகி, உங்களைப் பேச்சுலே ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டம்.”

ஜானகி பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியே சென்றாள்.

நாலரை மணிக்குக் குழந்தைகள் வந்து விட்டன. கதவைத் திறந்த புது முகத்தைப் பார்த்து இரண்டும் திகைத்து நின்றன. ஒன்றுக்கு ஐந்து வயது இருக்கலாம் இன்னொன்றுக்கு ஏழு அல்லது எட்டு. ஜானகி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்று கல்பனாவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றியும் இப்போது அவள் படுக்கையறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருப்பது பற்றியும் சொன்னாள் . இரண்டும் சத்தமில்லாமல் நடந்து கல்பனாவின் அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பின.

அவர்கள் இருவருக்கும் தட்டுகளில் சோன்பப்டியும் சமோசாவும் வைத்துக் கொடுத்தாள். கன்னங்களில் குழி விழ  இரண்டும் சிரித்து வாங்கிக் கொண்டன. “ஆன்ட்டி , இது யார் கொண்டு வந்தாங்க?” என்று பெரியவள் கேட்டாள்.

“ஸோமட்டோ!” என்று சிரித்தாள் ஜானகி. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல்லேர்ந்து வரப்போ உங்களுக்கு பசிக்கும்னுதான்.”

“தாங்க்ஸ் ஆன்ட்டி.!” ஜானகி அவர்கள் இருவரும் குடிக்க பால் நிரம்பிய தம்ளர்களை அவர்களிடம் கொடுத்தாள்.

“ராத்திரி நீங்க என்ன சாப்பிடுவீங்க? சாப்பாடா, இல்லே டிபனா?” என்று கேட்டாள் ஜானகி.

“”டிபன்தான். ஆனா அம்மாக்கு உடம்பு சரியில்லையே!”

“அதுக்காக நீங்க பட்டினி கிடப்பீங்களா?” என்று கேட்டாள் ஜானகி.

“இல்லே, அப்பா ஓட்டல்லேர்ந்து வாங்கிட்டு வருவாங்க” என்றாள் பெரியவள்.

“சரி, இன்னிக்கி ஒட்டல்லேர்ந்து வேணாம். உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டிபன் எது ?”

இருவரும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் ஒரே குரலில் “பூரி” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

“சரி, இன்னிக்கிப் பூரி பண்ணித் தரேன். நீங்க ரெண்டு பேரும் வெளுத்துக் கட்டுங்க” என்றாள் ஜானகி.

அப்போது கல்பனாவின் படுக்கையறையிலிருந்து அவள் அழைக்கும் சப்தம் கேட்டது. ஜானகியுடன் குழந்தைகளும் ஓடி வந்தார்கள்.

“எப்படி இருக்கு இப்போ?” என்று கேட்டாள் ஜானகி.

“ரெண்டு மணி நேரம் அடிச்சுப் போட்டாப்பிலே தூங்கினது நல்லதாப் போச்சு. வலியும் இப்ப அவ்வளவா இல்லே.”

“இன்னும் ஒரு நா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும். கனகதாசா ஜெயந்தின்னு நாளைக்குக் காலேஜும் லீவுதானே” என்றாள் ஜானகி

சிறியவள் கல்பனாவிடம் “அம்மா எங்களுக்கு ஆன்ட்டி ஸ்வீட்டும் சமோசாவும் கொடுத்தாங்க!” என்றாள் சந்தோஷம் கொப்புளிக்க.

கல்பனா “எதுக்கு ஜானகி இதெல்லாம்?” என்று கோபித்துக் கொள்கிற மாதிரி சொன்னாள்.

“சாப்பிடறதுக்குத்தான்” என்றாள் ஜானகி. குழந்தைகள் இருவரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள். கல்பனாவின் முகத்திலும் சிரிப்புண்டாயிற்று.

“அம்மா, இன்னிக்கி நைட் டிபன் பூரி” என்றாள் பெரியவள்.

“என்னது?”

“ஆமா, ஆன்ட்டி இன்னிக்கிப் பண்ணித் தரேன்னு சொன்னாங்க” என்று கபடமற்றுச் சொல்லிற்று குழந்தை.

கல்பனா நெகிழ்ச்சியுடன் ஜானகியைப் பார்த்தாள்.

“எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லே கல்பனா. உங்க வீட்டுக்காரர் வர்ற வரைக்கும் நான் இங்க இருந்து உங்களைப் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கேன். அவர் வரதுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் ஆகுமில்லையா? நான் சும்மா உக்காந்திருக்கிறதுக்குப் பதிலா வேலை செய்யறேன். குழந்தைகளும் சாப்பிடறதுக்குக் கஷ்டப்பட வேண்டாம். இல்லையா?” என்றாள் ஜானகி.

“சரி, கிச்சன்லே சாமான்லாம் எங்க இருக்குன்னு நான் காமிக்கிறேன்” என்று எழ முயன்றாள் கல்பனா.

“நீங்க ஒண்ணும் எழுந்திருக்க வேண்டாம். நான் என்ன கல்யாணத்துக்கா சமைக்கப் போறேன்? நானே பாத்து எடுத்துக்கறேன்” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

“ஜானகி, அப்ப நீங்களும் இங்கியே சாப்பிட்டுருங்க” என்று கல்பனாவின் குரல் அவளை விரட்டிக் கொண்டு வந்தது, குழந்தைகள் ஹோம் ஒர்க் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டன.

ஜானகி சமையல் வேலையை முடித்து கால் மணி ஆகியிருக்கும். மாணிக்கவாசகம் வீட்டுக்குள் வந்து குழந்தைகளிடம் விசாரித்து நேராக அவளைப் பார்க்க அவன் வந்து விட்டான்.

“என்ன மேடம் நீங்க கல்பனாவுக்கு இன்னிக்கு முழுக்க செஞ்ச உதவியெல்லாம் போறாதுன்னு இப்பிடி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிட்டு? நாம வெளிலே ஆர்டர் பண்ணியிருக்கலாம்!” என்று பதறினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. பாருங்க, நீங்க வரதுக்குள்ளே சமையல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு. குழந்தைகளுக்கும் பசிக்கும் போது சாப்பிட டிபன் ரெடி ஆயிருச்சு. எனக்கு என்ன இதிலே பெரிய கஷ்டம்? நீங்க போய்க் கல்பனாவைப் பாருங்க. நான் கிளம்பறேன்” என்றாள்.

“அதெல்லாம் இல்லை. நீங்க இங்கே சாப்பிட்டு விட்டுதான் போகணும். நீங்களும் வாங்க. கல்பனாவைப் பார்க்கலாம்” என்று அவன் கல்பனா இருக்கும் அறையை நோக்கி நடந்தான். அவளும் உடன் சென்றாள்.

ஜானகி கல்பனாவிடம் சிறிது நேரம் பேசி விட்டு ” சரி.நான் கிளம்பட்டா? நாளைக்கு சாயந்திரம் வந்து பாக்கறேன். கம்ளீட் ரெஸ்ட்லே இருங்க” என்றாள்.

“ஓகே. மறக்காம வந்துடுங்க. நாளைக்கு டின்னர் உங்களுக்குஇங்கதான்” என்று விடை கொடுத்தாள்.

ஜானகி சிரித்தபடி நகராமல் அங்கேயே நின்றாள். கல்பனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் ஆச்சரியத்துடன் ஜானகியைப் பார்த்தாள்.

“தாங்ஸ்ஸை எடுத்துக் கொடுங்க. மறந்துட்டீங்களா?” என்று சிரிக்காமல் சொன்னாள்.

“அடேயப்பா!” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துத் தன் கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டாள்.

மாணிக்கவாசகத்தின் டிரைவர் ஜானகியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான்.

ஜானகி மறுதினம் மாலையில் கல்பனாவைப் பார்க்கச் சென்றாள். அவள் வலி குறைந்து தெளிவாகக் காணப்பட்டாள். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவள் கணவன் கப்பன் பார்க்குக்குச் சென்றிருப்பதாகக் கூறினாள்.

“காலேல டீச்சர்ஸ்லாம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துகிட்டே இருந்தாங்க. நீங்க நேத்திக்கிப் பண்ணின உதவியெல்லாம் நானும் ஏழெட்டு தடவை சொல்லியிருப்பேன். நீங்க என்னை ஆஸ்பத்திரிக்கு வேகமா எடுத்துகிட்டுப் போனது, அங்கே  உங்கம்மா ஆஸ்பத்திரியில் என்னைப் பாத்துக்கிட்டது, நீங்க என் ஹஸ்பண்ட் கிட்டே பேசி கவலைப்பட வேண்டாம்னு ஆறுதலா சொன்னது, அவரு ஊர்லேந்து வர்ற வரைக்கும் எங்க கூட இருந்தது, குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ், நைட் டின்னர்னு எல்லாத்தையும் இழுத்துப்  போட்டுக்கிட்டு செஞ்சதுன்னு நான் சொல்லச் சொல்ல அவங்களுக்கு அப்பிடி ஒரு ஆச்சரியம். ஏன் கேக்குறீங்க? அவங்க மூஞ்சியை எல்லாம் பாக்கணுமே!” என்று சிரித்தாள் கல்பனா. “கேட்டு எல்லோரும் மாஞ்சு போயிட்டாங்க. உங்களோட பேசி ஜெயிக்க என்னால் முடியலேன்னு நான் சொன்னப்போ எலிசபெத் ‘நம்பவே முடியலையே? நிஜமாவா சொல்றீங்க, நம்ப காத்தா அப்பிடிப்  பேசினா?’ன்னு…” சட்டென்று கல்பனா பேசுவதை நிறுத்தி விட்டாள். அவள் முகத்தில் குழப்பமும் கலவரமும் அசட்டுத்தனமும் பரவியதை ஜானகி பார்த்தாள்

“என்னது காத்தா?”

“ஐ’ம் ஸோ ஸாரி. ஸோ ஸாரி” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“எதுக்கு?”

“என்னமோ உளறிட்டேன்” என்றாள் கல்பனா. அவள் முகத்தில் இன்னும் கலவரம் இருந்தது. “லெட்ஸ் லீவ் இட், ப்ளீஸ்.”

ஜானகி மேலே எதுவும் பேசாமல் கல்பனாவின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“சரி சொல்லிடறேன். நீங்க இவ்வளவு ஸ்லிம்மா இருக்கறதுனால காத்து கொஞ்சம் பலமா வீசினா அது உங்களைத் தூக்கிட்டுப் போயிடும்னு….”

சில வினாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள் ஜானகி.

கல்பனா அவளை உற்றுப் பார்த்தாள்.

“காத்து! நைஸ் ஜோக் !!’ என்று மறுபடியும் சிரித்தாள். கல்பனாவைப் பார்த்து “நான் ஸ்லிம்மா? நோஞ்சான். ஓல்லிப்பிச்சான்! காத்து! கல்பனா, ஐ லவ் யூ ஆல்.”

ஜானகி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருந்ததைப் பார்த்துக் கல்பனாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது.

 

புதன் கிழமையன்று காலையில் அவள் வழக்கம் போல எட்டு ஐம்பது பஸ்ஸைப் பிடித்து கல்லூரி வாசலுக்கு எதிரே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது பத்து. ஐந்து நிமிட நடையில் அவள் கல்லூரி அலுவலகத்தை அடைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டாள். பிறகு நேராக ஆசிரியைகளுக்கான

அறைக்குச் சென்று காலியாய் இருந்த ஆசனமொன்றில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு எதிர்ப்புறத்தில் அறைக்குள் நுழையும் வாசல் இருந்தது. அவள் கழுத்தைத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். ஜன்னல் வழியே சுமார் நூறு கஜ தூரத்துக்கு மரங்களும் செடிகளும் நிரம்பிய கல்லூரியின் தோட்டம் தெரிந்தது.

அப்போது அறைக்குள் யாரோ நுழையும் சத்தம் கேட்டது. வத்சலா கோசாம்பி. உள்ளே நுழைந்த அவள் ஒரு கணம் திடுக்கிட்ட மாதிரி இருந்தது. அவளுடைய சாப்பாட்டுப் பையை ஆசிரியைகளுக்காக ஒதுக்கியிருந்த பீரோவில் வைத்துக் கொண்டே அவள் “குட்  மார்னிங் ஜானகி” என்றாள்.

“குட்மார்னிங் காத்துன்னே சொல்லுங்க. பரவாயில்லே” என்றாள் ஜானகி.

வத்சலா திரும்பி ஜானகியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள். அப்போது ஜானகிக்குத் தனக்குப் பின்னே ஜன்னல் வழியாக நூறு கஜ தூரத்துக்குக் கல்லூரியின் தோட்டம் இருப்பது நினைவுக்கு வந்தது..

 

கையெழுத்து

இரவி 

முதல் மாணவன்,  கதிர்’

மேடையில் தமிழாசிரியர் அறிவித்தார்.  நல்லூர் கடைத்தெருவிலிருந்த இராமலிங்க வள்ளலார் மன்றத்தில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.  பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கும், பேச்சு, கட்டுரை, பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

தரையில் நண்பர்களுடன்   உட்கார்ந்திருந்த கதிரின் காதுகளில் இந்த அழைப்பு விழுந்ததாகத் தெரியவில்லை. அவன் வேறு நினைவுகளில் ஆழ்ந்திருந்தான்.  அப்பாவை அழைத்து வந்திருக்கலாமோ?  ஆனால், அவருக்கு விருப்பம் இல்லை. ’இல்லை நான் வரவில்லை நீ மட்டும் போய்விட்டு வா’ என்று சொல்லிவிட்டார்.

அந்த பழைய கசப்பான நிகழ்வுதான் அவர் வர மாட்டேன் என்று சொன்னதற்கு காரணமாக இருக்குமோ? அவருக்குள் அந்த நிகழ்வு இன்னும் அழியாமல் இருக்கவேண்டும். அந்த நிகழ்வு அவரை அதிகம் பாதித்துவிட்டது. எப்படித்தான் மறக்கமுடியும்?  கண் முன்னால் தன் மகனை அறைவதை, அது ஆசிரியராகத்தான் இருக்கட்டுமே, யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், அந்த நிகழ்வு அவனைப் படிப்பில் மேலும் கவனம் செலுத்த வைத்தது.

அவனையறிமாலேயே அவன் கை கன்னத்தைத் தடவியது.   ‘கதிர்’ என்ற அழைப்புக்குரல்  மீண்டும். உட்கார்ந்திருந்தவர்களை விலக்கியவாறு மேடையை நோக்கி நடந்தான்.

 

ன்று, பிரேயர் மணி அடிப்பதற்கு முன்னாலேயே அவர்கள்  பள்ளிக்கூட வாசலுக்கு வந்துவிட்டனர்.

திங்கள் கிழமை.  விடியறதுக்கு முன்னாலே எழுந்துவிட்ட கதிரின் அப்பா.  மாடுகளைக் கறந்து அலுமினியத் தூக்கு வாளியில்  பாலை ஊற்றிக்கொண்டு டவுனில்  உள்ள டீக்கடையில் கொடுத்துவிட்டு  வந்துவிட்டார். கதிரின் அம்மா கொடுத்த இட்லியைச் சாப்பிட்டுவிட்டு பொடி நடையாய் நடந்து பேய்ச்சாவடியில் டவுன் பஸ் ஒன்றில் ஏறி நல்லூர் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கூட வாசலுக்கு  வந்தபோது  மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது.  பள்ளிக்கூடம் ஒன்பதரைக்குத்  தொடங்கும்.

இன்னும் பிரேயர் மணி அடிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்குத் தென்புறமாக, சுவரையொட்டி  கிழக்கும் மேற்குமாக வாய்க்கால் ஒன்று ஓடியது.  எக்கினால் தாண்டிவிடலாம். சின்ன வாய்க்கால் தான். பள்ளிக்கூடத்திற்கு எதிரில், ரோட்டிற்கு எதிர்ப்புற நாலைந்து வேப்ப மரங்கள்.  அதில் ஒரு நிழலில் கதிரும் அவன் அப்பாவும் நின்றிருந்தனர். அவன் அப்பா, மரத்தில் ஒரு காலைப் பின்பக்கமாக உதைத்து, மற்றொரு காலில் நின்றிருந்தார். அவன் கையில் புத்தகப்பை;  அதனுள் இருந்த டிபன் பாக்சில் அம்மா கொடுத்த இட்லி.

மாணவர்களும் மாணவிகளும் வேக வேகமாக பள்ளியில் நுழைந்து கொண்டிருந்தார்கள். பிரேயர் மணி அடித்துவிட்டால் உள்ளே நுழையமுடியாது. கேட்டை அடைத்துவிடுவார்கள்.  ஆரூரிலிருந்து வரும் பாசஞ்சர் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமை ஊர்களிலிருந்து அந்த வண்டியில் வருபவர்கள் குறுகிய சாலையில்  வேகமாக நடந்து வந்தனர்.  அவர்களுக்கு முன்னால், சுப்புணி சார், வயர் கூடையில் டிபன் கேரியரும் மடித்துக் கட்டிய வேட்டியுமாக வேர்க்க விறுவிறுக்க வேகமாக  வந்து கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடிக்குள், அவரது முட்டைக் கண்கள் தெரித்து விழுந்துவிடுவதுபோல் தெரிந்தன. லேட்டா வந்தா, ஆசிரியர் என்றாலும் ஒன்றுதான் ஹெட்மாஸ்டர் சாருக்கு.

கதிருக்கு  உள்ளே போய்விடலாமா என்று தோன்றியது. வெளியில் நிற்பதை நினைத்து உள்ளுக்குள் பயம். ஆசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால். அதுவும் ஹெட்மாஸ்டர்? ஆனால், பணத்தை வாங்கி அப்பா கையில் கொடுத்துவிட்டால் வேலை முடிந்துவிடும். அவர் பாட்டுக்கு வீட்டிற்குப் போய்விடுவார். அவர்தான் கையெழுத்துப் போட வேண்டுமாம். அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள். எப்போதும்போல்,  சனி ஞாயிறு விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்றிருந்தவன் இதற்காகவே அப்பாவை அழைத்து வந்திருந்தான்.  உதவித் தொகை  முப்பது ரூபாய் என்றாலும், பணம் பணம்தானே.

பிரேயர் முடிந்து, வகுப்புகள் தொடங்கிவிட்டன. அமைதியான சூழல். ஒன்றிரண்டு வகுப்புகளிலிருந்து வருகைப்பதிவு எடுக்கும் சப்தம். இவர்கள் நின்றிருந்த பக்கம்தான் பள்ளிக்கூட அலுவலகமும் ஹெட்மாஸ்டர் ரூமும். ஜன்னலின் வழியாக, ரமணி சாரும் மற்றொரு எழுத்தரும் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது. ஹெட்மாஸ்டரின் உருவம் கண்ணில் படவில்லை. அவர் ரூம் அந்தப் பக்கம்.

முதல் பீரியட் தொடங்கியதும் அலுவலகத்திற்குள் போகலாம் என்று கதிர் நினைத்தான்.  ஆனால், அவன் வெளியில் நிற்பதை ஆசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால்? அல்லது பசங்க யாராவது பார்த்துவிட்டு வகுப்பாசிரியரிடம் சொல்லி விட்டால்?  பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் மூன்றாம் பீரியடுக்கு வகுப்புக்குச் சென்றுவிடலாம். யோசனையும் அடிவயிற்றில் பயமுமாகக் கதிர் மரத்தடியில் நின்று  கொண்டிருந்தான். தோளில் புத்தகப்பை கனத்தது. நடுமுதுகில் வியர்வை வழிந்தோடியது. அவன் அப்பா இப்போது, வேட்டியை மேலிழுத்துக் கொண்டு மரத்தடியில் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தார். அவரும் அவனும் அதிகம் பேசிக் கொண்டதில்லை.

அடுத்த மரத்தடியில், கூடை மீதிருந்த மூங்கில் தட்டில் பரப்பிய செய்தித்தாளில், எலந்தைப் பழம், மிட்டாய், வேர்க்கடலைகளுடன் அந்த வயதான கிழவி எங்கோ பார்த்தவாறு  வாங்குவோருக்காகக் காத்திருந்தாள்.

கதிரின் அப்பா சின்னப்பிள்ளைக்கு இந்தச் சூழல் மிகவும் புதிது. அவர் உண்டு, வயல் உண்டு, பால் கறந்து எடுத்துக்கொண்டு டவுன் கடையில் கொடுப்பது. மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்வது என்று அதுதான் அவர் உலகம். ஆகவே, கதிரின் அம்மா வழி தாத்தா,  தான் அவனைப் படிக்க வைக்கிறேன் என்று கேட்டபோது உடனே சரி என்றார் அவர்.  இந்த நல்லூரிலிருந்து வடகிழக்கே மூன்று மைலில் கதிரின் பாட்டி வீடு. கதிரின்  சித்திகளும்  இந்தப் பள்ளியில்தான் படித்தார்கள்.  ஆகவே அவன் தாத்தா கதிரையும் இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு எல்லாம் கதிரின் அப்பா வரவே இல்லை.   ஆறாம் வகுப்பில் சேர்ந்தபின்,  ஒரு வருடத்திற்கு,  யாராவது வந்து அழைத்துக் கொண்டு போனால்தான் அம்மா வீட்டிற்குப் போவான். இப்போது ஒன்பதாம் வகுப்பு. பள்ளியும் ஊரும்  பழகிவிட்டது.  இரண்டு வாரத்திற்கு ஒருமுறை,  வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு ஊருக்குப் போய் இரண்டு நாள் இருந்துவிட்டு, திங்கள் கிழமை காலை புறப்பட்டு நேரே பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவான்.

வாட்ச்மேன் கதிர்வேலு ஹெட்மாஸ்டரின் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தார். புதுசு போன்று பளபளவென அதனை அவர் துடைக்கும் அழகே அந்த சைக்கிளை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும். அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த   பி.எஸ்.ஏ  சைக்கிள். பஞ்சு போன்ற மஞ்சள் துணி கட்டிய டைனமோ. கண்ணாடி,  அழகான சீட் கவர். அதன்  பின்புறம் சைக்கிள் துடைக்கும் துணி வைக்க, பிரஸ் பட்டன் வைத்து மூடும், கண்ணாடிக் கூடு சைசுக்கு பிளாஸ்டிக் பை.

பள்ளிக்கூடம் இருக்கும் தெருவில்  மிதமான வேகத்தில் அவர் வருவதைப் பார்க்கும் மாணவர்கள் ஒதுங்கி அச்சத்துடன் வழிவிடுவார்கள். கேட்டுக்குள் நுழைந்து சைக்கிளிலிருந்து அவர் இறங்கியதும், கதிர்வேலு அதனை வாங்கி ஓரமாக ஸ்டாண்ட் போடுவார். மணி அடித்து பள்ளிக்கூடம் தொடங்கியதும், வாசல் கேட்டை இழுத்து மூடி விட்டு ஓரமாக உட்கார்ந்து சைக்கிளைத் துடைக்கத் தொடங்கிவிடுவார்.  ஒவ்வொரு வகுப்பிற்குமான வருகைப் பதிவேட்டை  எடுத்துச் செல்வதும்,  முதல் பீரியட் முடிந்ததும் திரும்ப எடுத்துவந்து அலுவலகத்தில் வைப்பதும் பியூன் முத்துக்குமார்  வேலை.

ஹெட்மாஸ்டர் ஆபிஸை விட்டு வெளியில் வருவது தெரிந்தது. கதிர்வேலு சைக்கிளை எடுத்து வந்து அவர் அருகில் நிறுத்தினார். கதிருக்கு பகீர் என்றது.  வெளியில் வந்ததும் முதல் பார்வையில்  அவன்தான் தென்படுவான். என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு. வேறெங்காவது சென்று நிற்கலாமா என்று நினைத்து, அதனைச் செயல்படுத்துவதற்குள்,  ஹெட்மாஸ்டர் கேட்டைத் தாண்டி இடது பக்கம் திரும்பிவிட்டார்.

கதிர், அவன் அப்பாவின் முதுகு பக்கமாகச் சற்றே ஒளிந்து நிற்க முயன்றான். ஏன் இந்த பைத்தியக்காரத்தனமான வேலை? அப்பாவை வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு, வகுப்பாசிரியரிடம் சொல்லிவிட்டு வந்து பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.   இரண்டு பீரியட் பாடமும் போயிருக்காது. வேலையும் சீக்கிரம் முடிந்திருக்கும். அப்பாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு உள்ளே போய்விடலாம் என்று அவன் நினைத்தது இப்படித் தப்பாகிவிட்டது.

ரசின் உதவியுடன் இயங்கும் தனியார்ப் பள்ளி அது. சுற்று வட்டாரத்தில் உயர்நிலைப் பள்ளி கிடையாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் பாடமும் நன்கு சொல்லித் தருவார்கள். அதனால் தூரத்திலிருந்தும் பல மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தார்கள். ஐந்து மைல் ஆறு மைல்கள் தள்ளியிருக்கும் ஊர்களிலிருந்து நடந்தே வருவார்கள். பஸ் வசதி குறைவு என்பதுடன், காசும் பல பேருக்குச் சிரமம்.  மூன்று நான்கு பேராக, ஊர்க்கதை இல்லை வேறு ஏதாவது கதைபேசிக்கொண்டு குழுக் குழுவாக நடந்து வருவார்கள். அலுப்பும் தூரமும் தெரியாது.  மாணவிகள் தனியாகவும் அவர்களைத் தொடர்ந்து  சற்றுத் தள்ளி, மாணவர்களும் வந்து கொண்டிருப்பார்கள். காலை வேளையில், வியர்வை அரும்பும் முகத்துடன், சிரித்துப் பேசிக்கொண்டே, சற்றே குனிந்த பார்வையில் பின்பக்கம் பார்த்து ’பசங்கள்’ வருகிறார்களா என்று உறுதி செய்துகொண்டு பெண் பிள்ளைகள்  நடப்பது தினமும் நடக்கும் காட்சி.

கதிரும் தாத்தா வீட்டிலிருந்து நடந்துதான் வருவான். கிராமத்தைத் தாண்டியதும் இலுப்பைத் தோப்பு, அதற்குள் புகுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து வயல் வரப்பில் நடந்து பத்து வயல் தாண்டியதும் சோழனாறு, கரையேறி நடந்து சாலைக்குள் நுழைந்தால் கடைத் தெரு.  மாயவரத்திலிருந்து ஆரூர்  செல்லும் சாலை அது.  ஆற்றின் தென்கரை.   திரும்பி மேற்கு நோக்கி மேலநல்லூர் சாலையில் கொஞ்ச தூரம் நடந்தால் இரயில் பாதை. இருப்புப்பாதையைத்  தாண்டாமல், இடது புறம் திரும்பினால் நூறு மீட்டரில் பள்ளிக்கூடம்.

உள்ளே நுழைந்தவுடன்  வலது புறம் ஒரு சின்ன பிள்ளையார் கோவில். நிறுவனர் கட்டியது. இரண்டு புறமும் கல் சுவரால் கட்டிய இரயில் ஓடு போட்ட விசாலமான வகுப்பறைகள். வாசலுக்கு நேர் எதிரில், மண் தரையில் பூக்களைக் கொட்டி வைத்திருக்கும் பெரிய மரமல்லி மரம். அதற்கு நேர் பின்புறம், குடை விரித்தாற்போல் ஒரு வாதா மரம். அதைத் தாண்டி இடது புறத்தில் ’ட’ வடிவில் வகுப்பறைகள்.  பின்புறம் சின்ன விளையாட்டு மைதானம். அதைத் தாண்டி வயல்வெளி, மைதானத்தை வலதுபுறம்  அணைத்தவாறு அமைந்திருக்கும்.

மைதானத்திற்கு வடபுறம், ஒரு வாய்க்கால் மைதானத்தைச் சுற்றிச் செல்லும். கோடைக்காலத்தில் தண்ணீர் வற்றிவிடும். குறுக்கே நடந்து ஒரு சின்ன சந்தில் நுழைந்தால், கடைத்தெருவிற்குள் சென்றுவிடலாம். பெரும்பாலும் அந்தப் பக்கமிருந்து வரும் மாணவர்கள் வாய்க்காலில் இறங்கித்தான் வருவார்கள். நேரமும் நடையும் மிச்சம். ஆனால், கண்ணப்பன் அப்படி வருவதில்லை. சாலை வழியாகத்தான். அவனோடு நடப்பது சிரமம். அவ்வளவு வேகமாக நடப்பான்.  குறுக்கு வழியில் வராமல், மெயின் ரோடில்  நடந்து பள்ளிக்கு வரும் நாட்களில்  அவனையும், அவன் மிகவும் உயரமும்கூட, குள்ளமாக இருக்கும் சேகரனுடன் நடக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். சேர்ந்து பேசிக்கொண்டே வருவார்கள். வேக நடைதான். கூடவும் குறையவும் செய்யாத ஒரே சீரான வேகம்.

வகுப்புகள் தொடங்கியதும்,  சற்று நேரங்கழித்து நிர்வாகம் குறித்தோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மரியாதை நிமித்தமாகவோ  உடையாரைப் பார்க்க ஹெட்மாஸ்டர் செல்வார்.  உடையார்  அந்தப் பகுதியில் செல்வந்தர். சிவானந்த பக்தர். பார்த்தாலே மரியாதை கொடுக்கத் தோன்றும் முகம்.  அவர் வசிப்பிடம் உயரமான மதில் சுவர் சுற்றியிருக்கும் வளாகத்திற்குள் அமைந்திருக்கும். அவர் நெல் அரவை ஆலை வைத்து நடத்தி வந்தார். அதனால் மதில் சுவருக்குள் இருக்கும் சிமெண்ட் மைதானத்தில் எப்போதும் நெல் காய்ந்து கொண்டிருக்கும்.  வயலுக்குப் பூச்சி மருந்து அடிக்க வந்த ஹெலிக்காப்டர் ஒன்றை அந்த மைதானத்தில் இறக்கி, மாணவர்களை அழைத்து அந்த விசித்திரமான எந்திரத் தட்டான் பூச்சியைக் காட்டினார்கள்.

ய்! ஏன் இங்கே நிக்கறே?”.

தலைமையாசிரியரின் கேள்வி  நாக்கை கட்டிப்போட்டது. கதிரின் அப்பா மகனைப் பார்த்தார். யார் இவர்?

“சார்..”

“எந்தக் கிளாஸ்டா நீ? ஏன் இங்கே நிக்கறே..”

“சார்.. வந்து..”

வெள்ளை சட்டை, கால் சட்டை அணிந்திருந்தவர் சைக்கிளை விட்டு இறங்காமல் ஒரு காலை ஊன்றியவாறே விசாரித்தார். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. உள்ளங்கை நனைந்தது. கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்.

என்ன சொல்வது, என்று விழித்தபோது, அடுத்த கேள்வி.

“ஏண்டா..  நீ  எந்தக் கிளாஸ்… இது யாரு?”

“ஒன்பதாம் க்ளாஸ் சார், இது அப்பா.. .

”க்ளாஸுக்குப் போகாம ஏண்டா இங்க நிக்கற படவா…?”

“ஸ்காலர்ஷிப் வாங்கலாம்னு..”

“ஸ்காலர்ஷிப்பா… க்ளாஸுக்குப் போகாம… இங்கு நிக்கற. ம். படவா, இங்கேயே நில்லு.”

“சார்..”

“நான் திரும்பி வர வரைக்கும் இங்கேயே நில்லு.. தொலைச்சுடுறேன் உன்னை…”

சைக்கிளை மிதித்தவாறு தலைமையாசிரியர் தெற்குப்பக்கம்  சென்றுவிட்டார்.

கதிரின் அப்பா பயந்து நின்றிருந்தார். வெயிலென்றும் பார்க்காமல் வாய்க்கால் மதகில் அமர்ந்தார். இது என்ன புதிய பிரச்சனை.

பால் இன்ஸ்பெக்டருக்குப் பயந்து வெண்கலச் சொம்பிலிருந்த பாலை வயலில் கொட்டிவிட்டு ஊரைச் சுற்றி பின் பக்கமாக ஓடி வந்து, கொல்லைக்குப் பின்புறம் கற்றாழை வேலியிடுக்கில் தாண்டிக் குதித்து வீட்டுக்கு வந்த நாட்கள் அவருக்கு நினைவுக்கு வந்தன. சிறு விவசாயம்தான். அது சாப்பாட்டிற்குப் போதும். டீக்கடைக்குப் பால் வைக்கும் காசும், இரண்டு மூன்று வீடுகளில் பால் கறக்கிற வேலையும் தான் வீட்டிற்கு வருமானத்தைத் தந்தது.  கதிருக்கு அடுத்துப் பிறந்தவனும், அவனுக்கு அடுத்தப்பிறந்த பெண்ணும் சரியாகப் படிக்கவில்லை. நான்காவதாகப் பிறந்தவள் கொஞ்சம் படிக்கிறாள். எப்படியாவது இருவரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்று பிரம்மபிரயத்தனம் தான் செய்கிறார். இவனைப் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டால்…

நாமே இவனிடம்  உள்ளே போடான்னு சொல்லியிருக்கலாமோ? இவன் பேச்சைக்கேட்டு இங்கே நின்றது தப்பா போச்சே…

கதிருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தலைமையாசிரியர் திரும்பவந்து என்ன சொல்வாரோ? என்ன நடக்குமோ…ஒழுங்கா வகுப்புக்குப் போயிருக்கலாமோ…. வகுப்பாசிரியர் பால்ராஜ் சாருக்கு அவனைப் பற்றி நல்லாத் தெரியும். நல்லா படிப்பதும் தெரியும். ஏன் இப்படிச் செய்தோம்?

அப்பாவைப் பார்த்தான் கதிர். ”அப்பா..”

“நீ கிளாசுக்கு போயிருக்கலாம். நான் வெளியில இருந்திருப்பேன்.. இப்ப என்ன செய்யறது…?”

அரை மணி… ஆயிற்று.  வாட்ச்மேன் கதிர்வேலு காக்கி அரை ட்ரவுசரோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். முத்துக்குமரசாமி தீவிரமான முகத்துடன், ஒவ்வொரு வகுப்பிற்குள்ளும் நுழைந்து வருகைப் பதிவேடுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.   ஏதோ ஒரு வகுப்பில் யாரோ சப்தம் போட்டுப் படிப்பது காதில் விழுந்தது.

இரண்டாவது மணி அடித்து ஓய்ந்தது. பின் பக்கமிருந்த மைதானத்தின் மரத்தடிக்கு ஏழாம் வகுப்பு டீச்சர்  தன் வகுப்பு பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

கதிருக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளங்கை வியர்த்தது. தெற்கையே பார்த்துக் கொண்டிருந்தான். தலைமையாசிரியர் சைக்கிள் தெரிகிறதா …

அதோ.. அவர்தான்… வேகமும் இல்லாமல்.. மெதுவாகவும் இல்லாமல் மிதமான வேகத்தில் மிக அமைதியான முகத்துடன் ஹெட்மாஸ்டர்…

சைக்கிள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தது. சைக்கிளை விட்டு அவர்  இறங்கும்வரை காத்திருந்துவிட்டு,  அப்பாவுடன் மெதுவாகப் பள்ளிக்குள் கதிர் நுழைந்தான். கதிர்வேலு சைக்கிளை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்தார்.

படிக்கட்டில் ஏறி தன் அறைக்குள் நுழைந்தார் தலைமையாசிரியர். அலுவலகத்திலிருந்து ரமணி சார் கையில் நோட்புக்குடன் அவர் அறைக்குள் நுழைந்தார். அவர் ஏதோ விவரம் கேட்கப் பவ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ரமணி. அவனுக்கோ இருப்புக் கொள்ளவில்லை.

பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரையிலும், எப்போதாவது பணம் கட்ட போனதைத் தவிர,  அலுவலகத்திற்குச் சென்றது கிடையாது. அலுவலக ஜன்னல் வழியாகத்தான் அனைத்தும்.

எதைப் பார்த்தாலும் இப்போது பயமாகவே இருந்தது. யார், என்ன கேள்வி கேட்பார்களோ?

“என்னப்பா.. எதற்கு வந்திருக்கீங்க?”  எதிர்பார்த்த கேள்வி வந்துவிட்டது. ரமணி சார் தான் கேட்டார்

”ஹெட்மாஸ்டரைப் பாக்கணும்.   வெயிட் பண்ணச் சொல்லியிருந்தார்”

கேட்டவர்,  உள்ளே சென்று ஏதோ பேசிவிட்டு, திரும்பவும் வெளியில் வந்து “உள்ளே போங்க” என்றார்.

பயந்து கொண்டே அப்பாவுடன் கதிர் உள்ளே நுழைந்தான். முதலில் கண்ணில் பட்டது மேஜையின் மேலிருந்த பிரம்புதான்.

தினமும் ஒருமுறை பள்ளிக்கூடத்தை அவர் சுற்றிவருவார்.  பெரும்பாலும் வகுப்பறைகளை எட்டிப் பார்க்கமாட்டார். ஆனால், திடீரென்று ஏதாவது ஒரு வகுப்பில் நுழைந்து ஜன்னலோரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை, ”படவா.. வேடிக்கையா பார்க்கறே. பாடத்தைக் கவனிடா…” என்று ஒரு திட்டு போட்டுவிட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்துவிடுவார். அந்தப் பிரம்பு அவர் கையில் எப்போதும் இருக்கும். லேட்டா எவனாவது வந்து அவர் கண்ணில் மாட்டினால், கை பழுத்துவிடும்.

அவர் நாற்காலிக்கு நேர் பின்புறம் சிவானந்தரின் பெரிய படம்.  பக்கத்தில் காந்தி.  இந்தப் பக்கம் ஒரு பீரோ மேல் உலக உருண்டை. மேஜையில் ரூல் தடி. பேனாக்கள்.

”சொல்லுடா…”

”சார்… ஸ்காலர்ஷிப் வாங்கி அப்பாட்ட…”

சுளீர்…

ஒருகணம் தலை சுற்றியது. எப்போது அவர் எழுந்து அருகில் வந்தார்,  கையை உயர்த்தினார். கன்னத்தில் அறைந்தார் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.

அவனை அறியாமல்  கை கன்னத்தைத் தடவியது. அவமானத்துடன் சற்றே திரும்பி  கதிர் அப்பாவைப் பார்த்தான்.  ஏன் அவரை இன்று அழைத்து வந்தோம்? அவன் கண்களை விட அவர் கண்களில் அதிகம் நீர். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

”படவா.. பள்ளிக் கூடத்துக்கு படிக்கத்தான வந்த.. அப்புறம் ஏன்  வெளில நின்ன”

”சார் .. இல்ல.. சார்.. பணத்த வாங்கிக் கொடுத்துட்டு கிளாசுக்குப் போகலாம்னு..”

”படவா.. ஸ்காலர்ஷிப்பும் கிடையாது.. ஒன்னும் கிடையாது.. படிக்கிறவங்களுக்குத் தான் அது…”

அவன் கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்து ஓடியது.

கதிரின் அப்பாவிற்கு, வயலில் விளையாடப் போன பையன் கையொடிந்து கதறிய போது தூக்கிக் கொண்டு சுந்தரம் ஆஸ்பத்திரிக்கு ஓடியது நினைவுக்கு வந்தது. ஒருமுறை மாலை நேரத்தில் பக்கத்துக் குட்டிச்சுவரிலிருந்து குதித்து இடது காலில் கருவ முள்ளை ஏற்றிக்கொண்டான். பாதத்தின் இரண்டாவது மூன்றாவது விரலுக்கு நடுவில் ஏறிய முள், காலுக்கு மேற்புறம் நீட்டிக் கொண்டிருந்தது.  எதிர் வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்து முள் வாங்கியால் எடுத்துப்பார்த்து முடியவில்லை.  தூக்கு, சுந்தரம் ஆஸ்பத்திரிக்கு. குளோரபார்ம் கொடுத்துக் கிழித்து முள்ளை எடுத்தார்கள். எதிர்வீட்டுச் சித்தப்பாவின் சைக்கிளில் உட்கார வைத்து வீட்டிற்கு பையனை  அழைத்து வந்தவர், நாவல் குளக்கரை மணலில், சைக்கிளை பாலன்ஸ் பண்ணத் தெரியாமல், இரண்டுபேரும்  கீழே விழுந்தனர்.

கிராமத்து விவசாயியின் அப்பாவி மனது, பையன் அடிவாங்கியதைப் பார்த்து எதற்கு இப்படி என்று கேள்வி கேட்டது? இந்த உதவித் தொகையை அடிவாங்கியா வாங்கணும். நம்மால் சம்பாதிக்க முடியாதா?

இடையில் வேறொரு கிளார்க் ஃபைல் ஒன்றை எடுத்துவந்து கையெழுத்து வாங்கிச் சென்றார். அவன் கன்னத்தில் விழுந்த அந்த அறை எவர் காதிலும் விழுந்ததாகவோ அல்லது எவரையும் எதுவும் செய்ததாகவோ தெரியவில்லை. அல்லது வெளியில் காட்டாமல் இருக்கிறார்களா…? அனைத்தும் இயல்பாக நடந்து கொண்டிருந்தன.

”எந்தக் கிளாஸ்டா நீ…”

”ஒன்பதாம் வகுப்பு, சி செக்‌ஷன்..சார்..”

”ரமணி, யார் அந்தக் கிளாஸ்… அவரைக் கூப்பிடு..”

”படிக்கறது இல்ல.., கிளாசுக்கு வரதில்லை… எதுக்கு உனக்கெல்லாம் ஸ்காலர்ஷிப்.. படவா .. ”

வகுப்பு ஆசிரியர், பால்ராஜ் உள்ளே வந்தவர், கதிரின் அப்பாவைப் பார்த்ததும்,  ”என்ன சின்னப்பிள்ளை இங்க.?” என்றவர்,  தலைமையாசிரியரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

கதிரின் அப்பா அவரைப் பார்த்து கையை உயர்த்தினார். அவர் வீட்டில் அப்பா பால் கறக்கிறாரோ?  முன்னமேயே எப்படித் தெரியும்?  அவர் டவுனிலிருந்து டூவீலரில் தினமும் பள்ளிக்கூடத்திற்கு வருகிறவர்.

அவனையும் பார்த்த பால்ராஜ் சார், சூழலில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவராய், சற்றே நிதானித்து,  ”சார் கூப்பிட்டிங்களா” என்றார்.

”என்ன பால்ராஜ்.. இவன் உங்க கிளாசா?”

”ஆமாம் சார்…”

”கிளாஸ் அட்டெண்ட் பண்ணாம வெளியில் நிக்கறானே… பாக்க மாட்டீங்களா?”

”என்னடா…”

”சார்.. அப்பா கிட்ட ஸ்காலர்ஷிப் பணம் வாங்கி கொடுத்துட்டு அடுத்தப் பீரியட் வரலாம்னு..”

”படவா..”  சொல்லிக் கொண்டே ஓங்கிய கையுடன் அருகில் வந்த தலைமையாசிரியர்,  “படிக்கறதெல்லாம் இல்ல… எத்தனாவது ரேங்க்டா நீ?” என்று கேட்டார்.

அடிக்குப் பயந்து சற்றுப் பின்னுக்கு நகர்ந்த கதிர்,  ’ஃப்ர்ஸ்ட் ரேங்க் சார்..” என்றான்.

”படவா… பொய்யா  சொல்ற”

”இல்ல சார்..”

இடையில் புகுந்த பால்ராஜ் சார்,  ”ஆமாம் சார்.. ஃப்ர்ஸ்ட் ரேங்க்தான்.. நல்லா படிக்கிற பையன்தான்.   ஏன்டா இப்படி செய்த?.”

ஒரு கணம் யோசித்த தலைமையாசிரியர்,  மேஜையருகில் சென்றார்.

காலிங் பெல்லை தட்டிவிட்டு ’’ ரமணி..!” என்று கூப்பிட்டார்.

வேகமாக வந்த ரமணி, “ சார்..”

“இந்தப் பையனுக்கு பணத்தைக் கொடுத்தனுப்பு… ரிஜிஸ்டர் ரெடியா இருக்கா..’

”ஆமா சார்..”

கையெழுத்துப் போட்டு நிமிர்ந்தவர்.. “போடா வாங்கிக்க,.. இனிமே இப்படியெல்லாம் செஞ்ச…  படவா பிரம்பு பழுத்துடும்..”

உள்ளிருந்து கிளார்க் ரமணி கூப்பிட்டார். தலைமையாசிரியருக்கும் பால்ராஜ் சாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அப்பாவும் மகனும் ஆபிஸ் ரூமிற்குள் நுழைந்தனர்.

ரிஜிஸ்டரின் அருகில்,  மூன்று பத்து ரூபாய் நோட்டுகள். அதைப் பார்த்த, இரண்டாம் வகுப்பு மட்டுமே  படித்திருந்த அந்த விவசாயி  இதற்கா இந்த அடி என்று நினைத்துக் கொண்டார். கதிரின் அப்பாவிடம் நோட்டுகளைக் கொடுத்த ரமணி சார்,  “இதுல கையெழுத்துப் போடுங்க”  என்றார்.

அப்பாவைப் பார்த்தான் கதிர். பாவம் இவரை இங்கு அழைத்துவந்து அவமானப்படுத்தி விட்டோமே என்று நொந்துகொண்டான். கைகாட்டிய இடத்தில், மகனின்   பெயருக்கு எதிரில், ஒவ்வொரு எழுத்தாக,  ‘சி.ன்.ன.ப்.பி.ள்.ளை.  என்று தன் பெயரை மெதுவாக எழுதினார்.  பண்படுத்தினால் தானே விவசாயம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருப்பாரோ?