சிறுகதை

என் பெயர் என்ன?

 

– பானுமதி ந

 

கொழு, கொழு கன்றே,

கன்றின் தாயே ,

கன்று மேய்க்கும் இடையா,

இடையன் கைக் கோலே

கோல் சார்ந்த மரமே

மரம் தரும் நிழலே

நிழல் நிற்கும் குதிரை

என் பெயர் என்ன?

ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம். பறந்து பறந்து கன்று முதல் குதிரை வரை எல்லோரையும் கேட்டதாம். குதிரை “ஹி … ஹி” என்று கனைத்தவுடன் ஈக்கு தன் பெயர் நினைவிற்கு வந்ததாம்.

அம்மா சொன்ன கதை.. அவள் குரலின் ஏற்ற இறக்கங்களுடன் இன்றும் விருபாக்ஷியின் காதுகளில் ஒலிக்கிறது.

“எப்படியம்மா ஈக்கெல்லாம் பெயர் உண்டு?” சற்று வளர்ந்தபின் அவள் கேட்பாள்.

”உண்டுடி. நாம் அதை மறந்துடறோம் இல்லாட்டி மறைச்சுடறோம்”

விருபாக்ஷிக்குப் புரியாது. ஆனால் அதற்கு மேல் கேட்கவும் தெரியாது.

அவளது பெயரின் அழகே அவளை மயக்கிக் கொண்டிருந்தது. அதை சுரங்களாக அவள் பகுத்துப் பார்ப்பாள்.

ச ரி க ம,

ரி க ம ப,

க ம ப த,

ம ப த நி,

ப த நி ச….

விருபாக்ஷி, ரூபாக்ஷி. விபாக்ஷி, விக்ஷிபா, விரூபா என்று சர இராகமாக அவை உருக்கொள்ளும். ஒவ்வொன்றும் ஒரு மந்திர அர்த்தத்துடன் முழங்கும். சொல்லிலிருந்து பிரியும் மௌனமாக. பின்… மௌனம் பெற்றெடுத்த சொற்களாக.. அவள் அதிலேயே ஆழ்ந்துவிடுவாள்.

அந்த பெயர் தன்னைத் தனியே நிறுவுவதாக அவள் உணரத் தலைப்பட்டாள். அடர்காட்டின் அந்தரங்கப் பகுதியில் ஒரே ஒரு பூ. நிலவின் வாசம் கொண்டு, மலை அருவியின் தோள் தொட்டு, பசும்புல்லின் திண்மையுடன், உலவும் காற்று. ஓங்கு செந்நெல் ஊடும் கயல் துள்ளியாடும் நீர்நிலை. வான் நிறைந்தவள். தன் பெயரைப் போலவே எண்ணிலடங்கா கண்கள் என வின்மீண்கள் கொண்டவள். செம்பருத்திப் பூவின் நாக்கென நீளும் வேத நெருப்பு .மழை கொணரும் மண்வாசம் .

இந்த எண்ணங்கள் தந்த மன எழுச்சி குகையினுள் ஒளிரும் இருள் போல் அவளை ஆட்கொண்டது.தான் என்றுமே அந்தப் பெயருடன் தான் இருந்திருப்பதாகப் பட்டது. ஆலிலையில் அவன் பாலனாக வந்த நேரம்… இல்லையில்லை.. அதற்கும் முன்னதாக.. அவள் மூன்று கண்களுடன் அவனுக்கு ப்ரணவம் சொல்கையில் விருபாக்ஷி. அவள் கனவின் விரிவெளி தோற்றத்திலும் அவள் அவளேதான்.

தன்னை மணம் செய்பவர் விஸ்வேஸ்வர் என்று பெயர் கொண்டவராக நிச்சயம் இருப்பார் என்றும், ஆனாலும் அவள் தன் பெயராலேயே அறியப்படுவாள் என்றும் அவள் நினைத்தாள். பேழையில் இருந்த வைரங்கள், தோடுகளாக மாற அவள் தன் சர இராகங்களை மறந்தாள். அவள் குழந்தைக்கு தன் பெயர் மறந்த ஈயின் கதையை சொல்லத் துவங்கினாள்.

பொண்டிங்

-ஜேகே –

 

 

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை.

மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

“ஏன் கடவுள் பெயர் வைக்கலாமே? ராம், சிவாஸ், கண்பத் என்று எத்தனை பெயர்கள் இருக்கின்றன? பிள்ளைக்குப்போய் கிரிக்கட் பிளேயர் பெயர் வைப்பார்களா? அப்படியே கிரிக்கட் பிளேயர் என்றாலும் சச்சின், சனத் என்று வைக்கலாமே? எதுக்குப் பொண்டிங்? I don’t like it. Let’s call him… Shivas”

அருண் படித்து படித்துச் சொன்னதை மயூரி கேட்கவில்லை.  அது நானூற்றி ஐம்பத்தாறாவது சண்டையாக இருக்கலாம். கணக்கு மறந்துபோய்விட்டது. ப்ரெஸ்டனில் தீப்பெட்டி சைஸ் வீட்டிலே வாழ்ந்தபோது நடந்த சண்டை அது. ஒரு கட்டத்தில் சண்டை பலத்து ஆளுக்கு ஆள் மாறி மாறி “!@#$ you” என்று கத்தவும், பக்கத்துவீட்டு எரிச்சலில் மாசிடோனியன்காரி உயர் டெசிபலில் “!@#$ you both” என்று கத்தியதும் இன்னமும் அருணுக்கு ஞாபகம் இருக்கிறது. மயூரி அன்று முழுதும் அழுதாள். சாப்பிடவில்லை. விடாப்பிடியாகப் பொண்டிங் என்ற பெயர்தான் வேண்டும் என்றாள். பொண்டிங், பொண்டிங், பொண்டிங். பொண்டிங்.

அருண் நேரத்தைப் பார்த்தான். காலை ஏழு மணி தாண்டியிருந்தது. எட்டு மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பவேண்டும். திங்கள்கிழமையே லேட்டாகப் போகமுடியாது. ஒரு மணி நேரத்துக்குள் பொண்டிங்கைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, வெளிக்கிடுத்தி, தானும் தயாராகி என்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அவளுக்கென்ன ஹாயாக வருவாள். இந்தாப்பிடி என்று கையிலே கொடுத்துவிட்டுப் போயிடுவாள். பிளடி மயூரி. பிளடி சூடானியன். பிளடி…

வாசலில் ஹோர்ன் அடித்தது. மயூரி வந்துவிட்டாள்.

“Hay Arun, how are you mate?”

அந்தச் சூடானியன்தான் இறங்கிவந்தான். காருக்குள் மயூரி கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் சரிபார்ப்பது தெரிந்தது. அருணைக் கணக்கெடுக்கவேயில்லை.

“You alright mate?”

சூடானியனுக்கு வாயைச் சும்மா வைத்துக்கொண்டிருக்கமுடியாது. அருண் பதில் சொல்லவில்லை. அருண் என்றைக்குமே அவனுக்குப் பதில் சொல்லியதில்லை. ஆனாலும் அவன் ஒவ்வொரு திங்கள் காலையும், வெள்ளி மாலையும் தவறாமல் அருணைக் குசலம் விசாரிப்பான்.

“வெட்கம் ரோசம் கெட்ட தடித்த ஆபிரிக்கத் தோல். போ. உன்னுடைய தடிப்புக்கு அவன்தான் சரி. காலில் விழுந்து கிடப்பான். போடி. போ.”

அருணுக்கு சூடானியனைப் பார்க்கும்பொழுதெல்லாம் பற்றிக்கொண்டுவரும். இனிமேல் மயூரி தனியாகத்தான் பொண்டிங்கை அழைத்துவரவேண்டும் என்று ஒருமுறை அவளுக்கு மெசேஜ் பண்ணிக்கூடப்பார்த்தான். அவள் “Mind your business” என்று ரிப்ளை பண்ணினாள். சூடானியனைக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றும். ஏன் மயூரியைப்பற்றி தேவையேயில்லாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? அவள் சூடானியனோடு இருந்தாலோ, பிறேசிலியானோடு இருந்தாலோ நமக்கென்ன? நாம்தானே அவள் வேண்டாமென்று தலைமுழுகிவிட்டோம். அவள் போய்த்தொலைந்ததுதான் எவ்வளவு நல்லது.

அருணுக்கு அவளும் அவனும் பிடித்த இறுதிச்சண்டை ஞாபகம் வந்தது.

அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை. மாலை அருண் வீடு திரும்பியதும் சண்டை வலுப்பட்டது. மயூரி அருணின் ஐபோனை சுத்தியலால் உடைத்து நொறுக்கியதிலிருந்து சண்டை அடுத்த கட்டத்தை எட்டியது. மிகப்பெரிதாக வெடித்து அக்கம்பக்கம் எல்லாம் எட்டிப்பார்த்த சண்டை அது. முன்வீட்டு நாய்கள்கூட இவர்களின் சச்சரவால் குரைக்கத்தொடங்கிவிட்டன. எல்லா வார்த்தைகளுக்கும் “!@#$ing” அடைமொழியானது. மாறிமாறித் திட்டிக்கொண்டேயிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் அருண் மயூரியின் முடியைப்பற்றி முகத்தில் பளாரென்று அறைந்தான். அவள் அசரவில்லை. கையில் கிடைத்த பூச்சாடியால் ஓங்கி ஒரே அடி. அருணின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியது. இவர்கள் சண்டையைப்பார்த்ததில் பொண்டிங் பயத்திலே ஓடிப்போய் பக்கத்துவீட்டுக்குழந்தைகளுடன் ஒட்டிக்கொண்டுவிட்டான். இறுதியில் பொலிஸ் வந்தபின்னரேயே சத்தம் ஓய்ந்தது. பக்கத்துவீட்டுக்காரர்களே பொலிசை அழைத்திருந்தார்கள். பொலிஸ் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. “வன்முறை செய்தால் கேஸ் போடுவோம்” என்றார்கள். “தகாதவார்த்தைகளைப் பேசக்கூடாது. அதுவும் அக்கம்பக்கங்களில் குழந்தைகள் வசிக்கிறார்கள்” என்றனர். இருவருக்கும் குடும்பநல கவுன்சிலிங் ஹோட்லைன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

அதுதான் அருண் மயூரிக்கிடையிலான இறுதிச் சண்டை. அதற்குப்பின்னரெல்லாம் அருணும் மயூரியும் சண்டை பிடிக்கவேயில்லை. அன்றைக்கே மயூரி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள். கூடவே பொண்டிங்கையும் அழைத்துக்கொண்டு. அருண் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பும்போதுங்கூட மயூரி அலட்டிக்கொள்ளாமல் நிதானம் காட்டினாள். பின்னர் எல்லாவற்றையும் அவரவரது வழக்கறிஞர்களுக்கூடாகவே அணுகிக்கொண்டார்கள். எல்லா உடன்படிக்கைகளும் ஓரளவுக்கு சுமூகமாகவே நிகழ்ந்தன. அருணின் வக்கீல். அருண். மயூரியின் வக்கீல். மயூரி. நால்வரும் சந்தித்து, ஹாய் சொல்லி, காலநிலையை நொந்து, கோப்பி குடித்தபடியே விவாகரத்தைப் பேசித்தீர்த்தார்கள். வீட்டை விற்பது என்று முடிவானது. எல்லாமே இரண்டாகப் பிரிந்தன. கோப்பி மெஷின், பிரிட்ஜ், வோஷிங்மெஷின் எல்லாம் அருணுக்குப் போனது. சோபா, டிவி, கட்டில்கள் எல்லாம் மயூரிக்குத் தீர்த்தார்கள். அவளுக்கு அவை எதுவும் தேவையாய் இருக்கவில்லை. மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலேபோதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது. வங்கி வைப்பில் எழுபதுவீதம் தனக்கு வேண்டும் என்றும் அவள் கேட்டாள். அருணின் அவசரத்துக்கு எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னான். கிரெடிட்கார்ட் மீதியைக்கூட அவனே கட்டுவதாக உறுதியளித்தான். விவாகரத்து உடன்பாடு சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

பொண்டிங் யாருக்கு என்ற குழப்பம் வரும்வரையில்.

சூடானியன் பொண்டிங்கைக் கையில் கொடுத்துவிட்டுக் “ஸீ யூ” சொன்னான். இரண்டு நாட்கள்தாம். இரண்டே இரண்டு நாட்கள். ஆனால் அருணால் பொண்டிங்கை விட்டுப் பிரிந்திருக்கவே முடிவதில்லை. என்னவோ தெரியாது. அவனுக்கு இப்போதெல்லாம் பொண்டிங்கை விட்டால் தனக்கு வேறு யாரும் இல்லையோ என்ற எண்ணம் வாட்டத்தொடங்கியிருந்தது. பொண்டிங் மீது அருணுக்கு அப்படி ஒரு பாசம். காலை எழுந்ததும் கை தன்னிச்சையாக அருகில் கிடக்கும் பொண்டிங்கைத்தான் தேடும். அவன் இல்லை என்றதும் சடக்கென்று ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் மயூரிதான் பொண்டிங்மீது மிகவும் பாசமாக இருந்தவள். அவன் குழந்தையாக இருக்கும்போது குளிப்பாட்டி பாலூட்டுவது முதல் எங்குபோனாலும் அவனையும் கொண்டுசெல்வதுவரை மயூரி பொண்டிங்மீது அபரிமிதமான பாசத்தைப் பொழிந்தாள். பொண்டிங் வந்து முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கிடையேயான சண்டைகளின் எண்ணிக்கை நானூற்றி ஐம்பத்தாறிலிருந்து வெறுமனே ஐந்துதான் கூடியிருந்தது. இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும். ஆனால் குளிர்காலம் வந்ததும் எல்லாமே மாற ஆரம்பித்துவிட்டது. இருவருமே பிசியானார்கள். அருணும் மயூரியும் பேசிக்கொள்வதே குறைந்தது. காலையில் அருண் எழும்புவதற்கு முன்னமேயே மயூரி கிளினிக்குக்கு கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு அவள் வீடு திரும்புவதற்குள் அருண் தூங்கிவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இருவரும் முகம் கொடுத்துப் பேசுவார்கள். பொண்டிங்கைக் கவனிக்கும் பொறுப்பும் அருண் தலையிலேயே விழுந்தது. பாலூட்டுவதிலிருந்து சாப்பாடு கொடுப்பது, பொண்டிங்குக்கு ஏதும் சுகவீனம் என்றால் வைத்தியரிடம் கொண்டுபோவது என்று அருணின் வாழ்க்கை வேலை, வேலை முடிந்து வந்தால் பொண்டிங் என்று மாற ஆரம்பித்தது. கூடவே அருணுக்கும் பொண்டிங்குக்கும் இடையில் இன்னதென்று விளக்கமுடியாத பாசம். அருணாலும் பொண்டிங்கை விட்டு இருக்கமுடியாது. பொண்டிங்காலும் அருணை விட்டுக் கணமேனும் இருக்கமுடியாது.

அருண் பொண்டிங்கை அலேக்காகத் தூக்கிக்கொண்டான். இரண்டு நாட்களுக்குப்பின்னர் அப்பாவைக் கண்ட சந்தோசத்தில் பொண்டிங்கின் உடல்பூராவும் சிலிர்த்தது.

“என்னடா கண்ணா, அப்பாவை விட்டிட்டு எப்பிடி இரண்டு நாள் சமாளிச்சாய்?”

பொண்டிங் சந்தோசத்தில் அருணின் கன்னம், நெற்றி, தாடை, கழுத்து என்று முத்தங்களைப் பொழிந்தான். அவன் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. சூடானியன் காரை ஸ்டார்ட் பண்ணி, புறப்படுவதற்கு முன்னர் அருகில் இருந்த மயூரிக்கு எட்டி முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே செய்கிறார்கள். அருணுக்குத் தெரிந்ததுதான். கடைசிவரை மயூரி அருணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பார்க்கமாட்டாள். அவளுக்கு அருணின் ஒவ்வொரு அசைவும் விளங்கும். அருண் எப்போதெல்லாம் அவளைக் கவனிப்பான் என்று அவள் தெரிந்தே வைத்திருந்தாள். வெறுப்பேற்றுவதற்காகவே முத்தம் கொடுத்தார்கள். வெறுப்பேற்றுவதற்காகவே இருவரும் ஒன்றாக வருகிறார்கள். அதில் என்ன சந்தோசம் அவர்களுக்கு? அருணுக்குக் கோபம் வந்தது. பொண்டிங் அருணின் தோளில் தலைவைத்துத் தூங்கிவிட்டான். அருண் மயூரியையும் சூடானியனையுமே நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது இருவருமே அவனைப்பற்றி ஏதாவது புரளிபேசிச் சிரித்துக்கொண்டிருக்கலாம். “He is such a loser” என்று மயூரி அருணைப்பற்றி எள்ளி நகையாடக்கூடும். அந்த சூடானியன் காவிப்பல் தெரியச் சிரிக்கலாம். கார் முழுதும் அவன் வாய் நாறலாம்.  அந்த சூடானியனின் காவி பிடித்த பல்லில் அப்படி என்னத்தைத்தான் மயூரி கண்டாள்? எப்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்? நேற்று வந்த கறுப்பனுக்கு முன்னே எப்படி மயூரி அருணை அவமானப்படுத்தலாம்? அருண் ஆபிரிக்கர்களை கிண்டலடிப்பதை மயூரி என்றைக்கும் ரசித்ததில்லை. ஆ, ஊ என்றவுடன் அருணை ரெசிஸ்ட் என்பாள்.

பொண்டிங் இப்போது அருணின் காதைக்கடிக்க ஆரம்பித்தான். கூசியது.

அவர்களின் நானூற்றி அறுபத்தியிரண்டாவது சண்டை அருணுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. குடும்பப் புகைப்படம் எடுக்கும்போது ஆரம்பித்து மூன்று நாட்கள் இரவு பகலாக நீடித்த சண்டை அது. சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக்கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.  படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான். மயூரி அவனை ஷாவனிஸ்ட் என்று திட்டினாள். “ஏன் குழந்தைக்கு அப்பா பெயர்மாத்திரம் வைக்கவேண்டும்?” என்று வாதம் செய்தாள். சரி, அப்படியென்றால் “பொண்டிங் அருண் மயூரி” என்றாவது இருந்திருக்கவேண்டும் என்றான் இவன். அதுவும் ஆணாதிக்கம் என்றாள் மயூரி. வேண்டுமானால் “பொண்டிங் மயூரி அருண்” என்று மாற்றலாம் என்றாள். சண்டை வெடித்தது. முடிவில் “வெறும் பொண்டிங்கே போதும், முழுப்பெயரே போடவேண்டாம்” என்று அருண் சொன்னான். “குடும்பமே குலைந்துகொண்டிருக்கிறது, இதில என்ன மண்ணுக்கு குடும்பப்படம்” என்று மயூரி கன்வாசை உடைத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள். அன்றிலிருந்து மயூரி எப்போது பார்த்தாலும் பொண்டிங்கை “பொண்டிங் மயூரி” என்றே அழைக்க ஆரம்பித்தாள். வைத்தியசாலைகளில் விண்ணப்பம் நிரப்பும்போது “மாஸ்டர் மயூரி” என்று பொண்டிங்கைப் பதிந்தாள். அருண் எதுக்கு வீண்வேலை என்று இந்த விவகாரத்தை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டான். ஆனால் அதுவே அவனுக்கு ஈற்றில் எமனாக வந்தமைந்தது.

விவாகரத்தின்போது பொண்டிங் யாருக்கென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொண்டிங் தனக்குத்தான் வேண்டும் என்று மயூரி அடம் பிடித்தாள். அருண் எவ்வளவோ வாதாடிப்பார்த்தான். ஆனால் மயூரியிடம் அத்தனை சான்றுகளும் இருந்தன. அவன் உடைத்துப்போட்டதாகச் சொன்ன புகைப்படம் புதிதாக மீள அவதாரம் எடுத்தது. “பொண்டிங் மயூரி” என்று எழுதியிருந்த பெயரே போதுமானதாக இருந்தது. கன்வாஸ் கொம்பனியில் ஆதாரம் கொடுத்தார்கள். வைத்தியசாலைப்பதிவுகளில் எல்லாம் மாஸ்டர் மயூரி என்றிருந்ததும் அவளுக்கு வசதியாகப்போனது. அருணின் நிலைமை கௌரவர்களிடம் நாடு கேட்ட தருமனின் நிலையானது. கெஞ்சிப்பார்த்தான். ஐந்துநாள் கேட்டான். மூன்று நாள் கேட்டான். இரண்டு நாள் கேட்டான். கடைசியில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

வாரநாள்கள் முழுதும் பொண்டிங்கை அருணே பராமரிக்கவேண்டும். வார இறுதி நாட்களில் அவனை மயூரியிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவனுடைய இன்சூரன்ஸ், வைத்தியச்செலவுகள், மயூரி விடுமுறையில் போனால் அவனைக் கவனிப்பது, காப்பகச் செலவு என்று எல்லாவற்றையும் அருணே கவனித்துக்கொள்ளவேண்டும். மயூரிக்கு எப்போது பொண்டிங் வேண்டுமென்று தோன்றினாலும் கொடுத்துவிடவேண்டும். தவிரவும் வாரநாட்களில் பொண்டிங்கை மயூரி பிரிந்திருக்கவேண்டியிருப்பதற்கான இழப்பீடாக நாளுக்கு ஐம்பது டொலர்வீதம் அருண் அவளுக்கு வாரம் இருநூற்றைம்பது டொலர்கள் கொடுக்கவேண்டும். அருணுக்குக் கெட்ட கோபம் வந்தது. முடியவே முடியாது என்று மறுத்தான். மயூரி கேட்கவில்லை. நாளுக்கு முப்பது டொலர் கொடுக்கலாமா என்று அருணின் வழக்கறிஞர் பேரம் பேசிப்பார்த்தார். அவள் மசியவில்லை. ஈற்றில் நாளுக்கு நாற்பத்தேழு டொலர்களுக்கு இணங்கினார்கள்.

அருண் பொண்டிங்கின் முகத்தில் முத்தம்கொடுத்தான். பொண்டிங் உற்சாகம் தாளாமல் மீண்டும் அருணின் முகமெங்கும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். இந்தப் பிள்ளைக்காகச் சொத்தையே எழுதிக்கொடுத்தாலும் தகும் என்று அருணுக்குத் தோன்றியது. மயூரி ஏன் இப்படி மாறிப்போனாள் என்றுதான் தெரியவில்லை. ஏன் அருண்மீது அவளுக்கு அவ்வளவு வன்மம்? அருணின் ஒவ்வொரு டொலரையும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தாள். அருணுடைய பலவீனங்கள் அத்தனையையும் நுணுக்கமாகப் பயன்படுத்தினாள். இத்தனைக்கும் மயூரி ஒரு டென்டிஸ்ட். பணத்துக்குப் பஞ்சமில்லை. பிரேஸ்டனில் அவளுடைய கிளினிக்கில் நாளுக்கு நூறு பேராவது பல்லைக்காட்ட வருகிறார்கள். அப்புறம் எதற்கு அவள் அருணை இம்மி இம்மியாக வறுத்தெடுத்தாள்? அருணைப் பிச்சைக்காரனாக நடுரோட்டில் நிறுத்தவேண்டும் என்று எதற்காகக் கங்கணம் கட்டினாள்? அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தகாலத்தில் மயூரியிடம் அப்படியான குணம் எதனையும் அருண் கண்டானில்லை. பிறகெப்படி? அருணுக்கு மயூரி அப்படி ஏன் செயற்பட்டாள் என்று இறுதிவரைக்கும் புரியவேயில்லை.

மழை பலத்துப்பெய்ய ஆரம்பித்தது. அருண் பெருமூச்சுடன் பொண்டிங்கை அணைத்தபடியே வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு மெதுவாக உள்ளே நுழைய…

“அந்தநாயை நடுவீட்டுக்குள் கூட்டிவரக்கூடாது என்று உனக்கு எவ்வளவுதரம்தான் நான் சொல்லுவது? இனியொருமுறை அது உள்ளுக்குள்ளே வந்துது என்றால் இரண்டு பேருடைய காலையும் முறிக்கவேண்டிவரும். Get out you idiots…”

வீட்டுக்குள்ளிருந்து அலெக்சாந்தராவின் சத்தம் கேட்கவும் பொண்டிங் துணுக்குற்றவனாய் அருணின் பிடியிலிருந்து விலகி ஓடி வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த கூண்டினுள் சென்று ஒளிந்துகொண்டான்.

****

நிழல் தின்றவள்

ந. பானுமதி

கனமான போர்வையென இருள் அவளைச் சூழ்ந்தது. ஒளியின் எந்த ஒரு சாகசமும் செல்லுபடியாகாத இருட்டு. கோளறு வான்வெளி. விண்மீன்கள் உமிழும் ஒளிக் குளிகைகளை வாங்கிப் பரவசப்படுத்த கோள்கள் இல்லை. தானே ஒளிரும் விண்மீன்கள் திகைத்தன. இதென்ன ஒளியை வெறுக்கும் உயிரினங்கள் வந்து விட்டனவா? இல்லை இல்லை… இவைகள் ஒளியை மறுக்கும் கோள்கள்.

ஒளியின் நிழல் அல்லவா இருள். நிழலில் எப்படி ஒளியேற்றுவேன்? ஒளிரும் நிழல்… நிழலில் ஒளி; இரண்டும் சங்கமிக்கும் புள்ளியை இந்த இருள் தாண்டியே தண்டிக்கிறது. ஒளி பரவ விலகும் இருளில்லை இது. இருள் நிறைக்க மறையும் ஒளி. தன் இருப்பின் பயனறியாமல் ஒளி உள் வாங்குகிறது. அருணா தன் சிந்தையின் போக்கை நினைத்து வியந்தாள். நம்மைச் சூழும் இருள் உலகின் மேல் கவிய ஏன் ஆசைப்படுகிறோம்? ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலல்லவா அவை இரண்டும்? அதனதன் நியதியில் அவை அவை அததற்கான மதிப்பைப் பெறுகின்றன. ஒளி இல்லையேல் உயிர்ப்பு இல்லை. ஆனால் அந்த உயிர் பயிராவதோ இருளில். இயக்கம் ஒன்று, அமைதி ஒன்று.

மீண்டும் சிரிப்பு வந்தது அவளுக்கு. அவள் இருளைக் குடைந்து குடைந்து அந்த குகையினுள் இருக்கப் பிறந்திருக்கிறாள். ஆம்… இருக்கத்தான்… வாழ அல்ல. ஒளி இல்லாமல் இந்த இருளிற்கும் அர்த்தமில்லை என்று  புரிகிறது.

குளிர்ந்த ஒளி வீசிய அந்த நாள்… இன்றைய இருளிற்கு வித்திட்ட காலத்தின் நாள். விசையில் அகப்பட்ட பொருள் போல அந்த வேகத்தின் சுழலில் சிக்கிய நாள். இன்றும் அக்கணம் அந்தக்கரணத்தில் நிற்கிறது. திரிசங்குவின் உலகம் போல் தனியானது, ஆனால் அதை சுவர்க்கம் என்று சொல்கிறார்கள். தனிமையானது அப்படி ஆகுமா?

அந்த மாலை அவள் நினைவில் கிளர்ச்சியை உண்டாக்கியது. முழு மதி அன்று. சோம்பும் மேகங்களிடையே சந்திரனும் சற்று சோகமாக வலம் வந்தான். மணல்பரப்பும், சிறு குன்றுகளும் அவன் ஒளி படர, அட்சதை சிதறிய மண மண்டபம் போலவும், சூடக் காத்திருக்கும் மலர் மாலைகள் போலவும் காட்சி அளித்தன.

மூன்று கடல்களின் சங்கமம்; முத்தான கூடல். அலைகள் வெண்ணிலாவைத் தொடும் ஆசையில் மேலெழும்பி, தளர்ந்து, கரையை அறைந்து, அறைந்து திரும்பின.

அவள் மரகதப் பச்சையில் ஒளிர்ந்தாள். மணப்பெண் அலங்காரம். முத்துச் சுடராய் மூக்குத்தி. கண்களில் கனவும், கவிதையும். ஒசிந்த இடையில் வைர ஒட்டியாணம். அணிகலன்கள் அவள் புன்னகை முன் மதிப்பிழந்தன.

காலம் தன் போக்கில் நெய்து கொண்டே இருக்கும் இழையறா ஆடைகளில், பருவங்கள் தம் பதிவைத் திரும்பத் திரும்பச் செய்தாலும் சிலது பொங்குகிறது, சிலது மங்குகிறது, சிலதோ உறைந்துவிடுகிறது.

அவர்களுடைய குடும்பத்தின் தோட்டக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது  உண்மை போல் தோற்றமளித்த கல் குருவியை ஒரு உயிர்க்குருவி அலகால் கொத்திக் கொத்தி புண்ணானதைப் பார்த்தாள். கல் குருவியும், உயிர்க் குருவியும் என்ன ஒரு இணை! நினைவிலேயே சுவைக்கும் ஒளி; நிழல் தின்னும் வாழ்வின் வலி.

அவள் மேல் இருள் மிகக் கனமான போர்வையென இறங்கியது.

ஒளிப்பட உதவி – eugene stickland

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம்2

அன்று  மாலை, தேவைக்கும் அதிகமாகவே குளிரூட்டப்பட்ட அந்த மேரியட் ஹோட்டலின் அறையில், அன்றைய முன்பகலின் கொடிய ஆனால் இனிய  வெற்றியின் பரிசாக ஷாம்பெயினை அருந்திக் கொண்டே தன் பயணப்பையை ஹெண்டர்சன் அடுக்கிக் கொண்டிருந்த போது தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ ஜான், சிரமப்படுத்தி விடவில்லை என்று நினைக்கிறேன், நீ மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது!”, சோக்லோஸின் குரலில் ஓர் உற்சாக துள்ளல்.

ஷாம்பெயினின் நுரை புரைக்கேற, ஹெண்டர்சன் கமறலில் இருமினார். “இதோ பார் மிக்லோஸ், நீ ஆத்திரப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை” என்றபடி பிளாஸ்டிக் கோப்பையை கீழே வைத்துக்கொண்டே திடீரென்று வேர்த்துவிட்ட உள்ளங்கையால் வாயை துடைத்துக் கொண்டார்.

“சேச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை, சொல்லப் போனால், நான் நன்றிதான் சொல்ல வேண்டும் – அந்த குறையை நீ சுட்டிக் காட்டியதற்கு,”  சோக்லோஸ் தொடர்ந்தார். “டாக்ஸியில் விடுதிக்கு திரும்பிப் போகும் போது நீ சுட்டிக்காட்டிய குறையை களைவதற்கு ஒரு வழி தோன்றியது. ஓர் அசாதாரணமான ஆனால் எளிய தீர்வு. ஒரு புதிய ஆராய்ச்சியின் பாதையையே திறந்து விடலாம் என நினைக்கிறேன்”.

“நல்லது, மிக்க மகிழ்ச்சி”, ஹெண்டர்சன் தொலைபேசி வயரை இழுத்தவாறே குளியலறைக்குள் நுழைந்து ஷேவிங் பிளேடுகள், டூத் ப்ரஷ் போன்றவற்றை எடுத்து பயணப்பைக்குள் திணித்தார். “மன்னித்துக் கொள் சோக்லோஸ், இப்போது பேச எனக்கு நேரமில்லை. நான் விமான நிலையம் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்”.

“என்ன, நீ இன்னும் கொஞ்சம்…நாசுக்காக சொல்லியிருந்திருக்கலாம். பரவாயில்லை”.

சோக்லோஸின் குரலில் மதுவின் குழறல் இருந்ததாகப் பட்டது. அந்த எண்ணமே ஹெண்டர்சனுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. பையை மூடிவிட்டு அறையை நோட்டம் விட்டபடி, “சரி, நான் கிளம்புகிறேன் சோக்லோஸ். அடுத்த கருத்தரங்கில் பார்ப்போம். அல்லது, பாஸ்டனில்,” என்றார் சொக்லோஸ்,

ஹெண்டர்சன், இருவருக்கும் பாஸ்டனில்தான் வேலை, சோக்லோஸ் நகரின் பல்கலைக்கழகமொன்றிலும் ஹெண்டர்சன் புறநகரில் தொழில் நுட்பக் கல்லூரியிலும் பணிபுரிந்தார்கள் என்றாலும், ஹெண்டர்சன் கடந்த நான்கு வருடங்களாக சோக்லோஸை  சந்திப்பதை வெற்றிகரமாக தவிர்த்திருந்தார்.

“நாம் சந்திக்கலாம் என்று நினைத்தேன். ஒரு அரை மணி நேரம்? ஹோட்டல் பாரில்?”

“இந்த ஹோட்டலிலா இருக்கிறாய்?” ஹெண்டர்சன் தாளிட்ட தன் அறைக்கதவை பதற்றமாகப் பார்த்துக்கொண்டார் . “நான் இங்கு தங்கியிருப்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“கடவுளே, ஏன் இப்படி பேய்ப்படங்களில் வருபவனைப் போல் பயந்து நடுங்குகிறாய் ஜான்? வீதியின் முனையில் கம்போர்ட் விடுதியில் நான் தங்கி இருக்கிறேன்.  என் நினைவு சரியென்றால், உனக்கு பிடித்த மது ‘வைல்ட் டர்கி பர்போன்’ தானே, அதை நான் வாங்குகிறேன், அங்கு வா சந்திப்போம்”.

“முடியுமென்று தோன்றவில்லை, சோக்லோஸ். பழைய கதைகளை பேச எனக்கும் ஆசைதான், ஆனால் எட்டு முப்பது விமானத்தில் நான் கிளம்பியாக வேண்டும்”.

“ஒரு விஷயம் உன்னுடன் பேச வேண்டுமே”, சோக்லோசின் குரல் தளர்ச்சியும் சோகமுமாய் தொனித்தது. தவிர்க்க முடியாத ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான செய்தியை அறிவிப்பவனின் குரல் அது. “உண்மையில், மரியாவைப் பற்றி”.

மரியாவின் பெயரைக் கேட்டதும் ஹெண்டர்சனின் நெஞ்சில் தோன்றிய நடுக்கம் உடலெங்கும் பரவியது. எரியும் தணலில் வாட்டி சட்டென்று கடலளவு குளிர்நீரில் அமிழ்த்தியது போல் உணர்ந்தார். “அவளைப் பற்றி என்ன?”

சோக்லோஸ் ஆழமான, துயரம் பொதிந்த ஒரு பெருமூச்செறிந்தார். “நிறைய இருக்கிறது, போனில் வேண்டாமே”.

ஏக்கமும், அவநம்பிக்கையும் ஒருசேரக் கலந்த, அவருக்கு ஏற்கனவே பழகிய ஒரு வலி தாக்க ஹெண்டர்சன் படுக்கையில் சரிந்தார். கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை சுவாரசியமின்றி பார்த்துக் கொண்டார் – உடைந்த, வரண்ட தலைமயிர், தொங்கும் தாடைச்சதைகள், இறுக்கிப்பிடிக்கும் மேற்சட்டை, அவருக்கேகூட அருவருப்பூட்டும், அவ்வப்போது பதற்றத்துடன் வெளித்துருத்தும்  அவரது நாக்கு; பார்வையை மெல்ல திருப்பி கொண்டு சொன்னார், “சரி, முப்பது நிமிடங்கள் பொறு, என் விமான நேரத்தை மாற்றி விட்டு வருகிறேன்”.

“பிரமாதம், அதைச் செய் ஜான்.”

——-

மேரியட் ஹோட்டலின் வண்ணங்களை இழந்து கொண்டிருக்கும் முகப்பைக் கடந்து  செஸ் ஜியோர்ஜிஸ் ரெஸ்டாரன்டை நெருங்கிய ஹெண்டர்சன்  வாயிலில் சிறிது தயங்கினார். உணவு விடுதியின் புகை படிந்த கண்ணாடிக்கதவுகளூடாக உள்ளே வரிசையாக ஆட்கள் பாரில் அமர்ந்திருப்பதும், தொலைவில் சோக்லோஸை போன்றொரு உருவம், கீழுதட்டு தாடியுடனும், பளபளக்கும் டையுடனும் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. கதவின் பிடியில் கைவைத்த ஹெண்டர்சன் சட்டென்று விலகி கழிப்பறைக்கு விரைந்தார். பத்திருபது மாடிப்படிகள் ஏறிவந்ததைப் போல படபடக்கும் நெஞ்சுடன் கழிவறைக்குள் நின்று கண்ணை மூடிக்கொண்டார்.  நீண்ட பெருமூச்செறிந்தபடி நின்றிருந்தவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆள் கேள்விக்குறியுடன் பார்க்கத்துவங்க, பொத்தானை அழுத்தி நீரிறைத்துவிட்டு, வாஷ்பேஸினில் முகத்தில் அறைந்து கழுவிக் கொண்டு, செஸ் ஜியோர்ஜிஸை நோக்கி, சோக்லோஸை நோக்கி லாபியைக் கடந்து நடந்தார்.

லூயிஸ்வில் வழியாக புடாபெஸ்ட்டிலிருந்து வந்தவர் மிக்லோஸ் ஸோல்டன் சோக்லோஸ். முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர்களாக அவர்கள் மிச்சிகன் பொறியியல் கல்லூரியில் சந்தித்துக் கொண்ட போது, இருவரும் துடிப்பான, இளம் கணித ஆராய்ச்சியாளர்கள்; கார்ல் மார்க்ஸையும் ஐரிஷ் பியரையும் ஏற்காமல் புறந்தள்ளி விட்டு, கணிதம் கடவுளின் புதிர் விளையாட்டு – மிக விரிவான, மிக அழகான ஓர் விளையாட்டு, விடுகதைகள் போல் – என்பதை விரும்பி ஏற்றவர்கள். முதல் அரையாண்டில் ஏழடி ஆழ பனிப்பொழிவு   கல்லூரியை மூடிய போது, பாக்மன் நூலகத்தில் ஓக் மர மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தவாறு   சோக்லோசும் ஹெண்டர்சனும் மென்மேலும் கடினமான கணிதச் சமன்பாடுகளை, தேர்ந்த பியானிஸ்ட்கள் தங்கள் விரல்களுக்கான பயிற்சிப் பாடல்களை இசைப்பது போன்றலாகவத்துடன் விடுவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அரையாண்டு முடிந்த போது இருவரும் கணிதப்பிரிவுக்கு நான்கு கல் தொலைவில், சோபை இழந்து கொண்டிருந்த ஒரு டச் கலோனியல் வீட்டின் மேற்பாதிக்கு குடிபுகுந்தனர். சோக்லோஸ் தனது விருப்பத்துக்குரிய கணித வல்லுநர் நினைவாக வீட்டிற்கு போயின்கெர் மேனோர் எனப் பெயரிட்டதும், ஆறு வெள்ளிக்கு வாங்கிய அஸ்தி ஸ்புமாண்டே மதுவை ஜன்னலின் நிலையில் ஓங்கி அறைந்து  உடைத்தவாறே உறைந்த டிசம்பர் குளிருக்குள் ஊளையிட்டு சிரித்ததும் அன்றைய நிகழ்வுகள்.

பின்னர் தான் ஹெண்டர்சன் மரியாவைச் சந்தித்தார். வடகிழக்கு போலந்தின் பியலிஸ்டாக் நகரைச் சார்ந்த மரியா சில்கோவ்ஸ்கி. அவளுக்கு கணிதம் பிடிக்கும்; ஆனால் குளியற்தொட்டியில் படுத்துக்கொண்டு அவள் தயாரிக்கும் கியால்பஸாவில் இஞ்சி கூடிவிட்டதா அல்லது கருமிளகு அதிகமா  என்று கவலைப்பட முடியுமேயன்றி கணிதத்தின் மேல் பெரிதான காதலொன்றும் கிடையாது. பின் ஏன் அவள் கணித பட்டப்படிப்பில் சேர்ந்தாள் என்று ஹெண்டர்சனுக்கு புரிந்ததில்லை, அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் கிடையாது. எதற்காக வந்திருந்தாலும் அவள் அங்கு தொடர்ந்து இருப்பதை அவர் விரும்பினார். ஹெண்டர்சன் நூலகத்திற்கு செல்வது குறைய தொடங்கியது. பதிலாக அவரது கட்டிலில் அவளுடன் பின்னிக் கிடப்பதிலும், சார்ல்ஸ் மின்கஸின் இசைக்கோப்புகளை கேட்பதிலும், அவளுடன் ஆவேசமான உறவில் திளைப்பதிலும், தன் பாட்டியிடம் கற்று அவள் சமைக்கும் போலிஷ் உணவுகளை ருசிபார்ப்பதிலும் நாட்கள் சென்றன. கலிஃபோர்னியா மாகாணத்தின் வடிவில் அவள் உடலில் ஒரு மச்சம் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி, சமயத்தில் அடக்கமுடியாமல் அவள் சிரிப்பதை, அவளது நாகரிகமற்ற போலிஷ் உச்சரிப்பு அவளை முரட்டுத்தனமாகவும், அறிவிலியாகவும் காட்டிவிடுமோ என்ற அவளின் விதவிதமான  கவலைகள்  வரை அவர் மரியாவை அணுஅணுவாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார்.

மரியாவின் அவசர குணம் – அணிவதற்கு காலுறைகளை தேர்ந்தெடுப்பது போல் எவ்வித யோசனையுமின்றி சட்டென்று முக்கிய முடிவுகளை எடுத்து விடும் குணம் – ஹெண்டர்சனை எரிச்சலடையச் செய்தாலும்,  அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளும் வேகமும், மனமுவந்து தவறை ஒப்புக் கொள்ளும் தன்மையும் அவரை பொறாமை கொள்ளவும் செய்தது.  மாலைப்பொழுதுகளில் கபுஸ்டா, பிகோஸ், பியரோகி என்று தட்டுகள் நிறைய பெரும் அளவுகளில் மரியா சமைத்தாள். அப்போது, கணிதவியல் கட்டிடத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் திரும்பும் சோக்லோஸ் அவளது போலிஷ் தயாரிப்புகளை ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு, சால்வேஷன் ஆர்மியில் வாங்கிய பழைய சோஃபாவில் அமர்ந்துகொண்டு ஹோகன்’ஸ் ஹீரோஸ் தொடர்களின் மறு ஒளிபரப்புகளை பார்த்தபடி அவர்களுடன் இரவுகளை கழித்ததுண்டு. ஹெண்டர்சனும் சோக்லோஸும் கண்ட்ரோல் தியரியின் விடைகாணப்படாத பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று தங்குதடையற்ற உரத்த உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருக்கையில், மரியா அவள் துவங்கப்போகும் ‘மாலா வார்ஸாவா: லிட்டில் வார்சா – போலிஷ் வீட்டுச் சாப்பாடு’ என்ற ரெஸ்டாரெண்ட் பற்றி  விளையாட்டாய்ப் பேசிக் கொண்டிருப்பாள்.

போயின்கெர் மேனோரில் அவர்கள் வசித்த இரண்டாவது வருடம் முடிந்து மூன்றாம் வருடத்திய கோடை துவங்கிய போது ஹெண்டர்சன் ஒரு அடாப்டிவ்- கண்ட்ரோல் கருத்தரங்குக்காக நெவார்க் போக நேர்ந்தது. மரியா இல்லாத நான்கு நாட்கள். மிதமிஞ்சி குளுமைப்படுத்தப்பட்டிருந்த, கருத்தரங்கு அறையின் பின்பகுதியில் தனது வெற்று குறிப்பேட்டில் அவளது அக்கறையற்ற, நெளிகோடுகள் நிறைந்த கையொப்பத்தை வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஹெண்டர்சன், ‘மரியா ஹெண்டர்சன்’ என்று எழுதிப் பார்த்தார். ஒரு விளக்க முடியாத கிளர்ச்சி. அடுத்த நாள், வெள்ளிக்கிழமை, கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஊர் திரும்ப பரபரப்புடன் முடிவெடுத்தார். அவர் இயல்புக்கு மாறான, உணர்ச்சிவசப்பட்ட ஒரு திடீர் முடிவு.

அந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையத்தில் ஹெண்டர்சன் விரைந்தபோது ஆய்லர் தனது கணித ஆராய்ச்சியொன்றில்  முடிவிலியின் மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்று நிரூபித்த தருணம் போன்ற ஓர் அளவிட முடியாத உயரிய நன்றிப்பெருக்கும், பரவசமும் அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது.  அவரது காலணிகள் நிலையத்தின் டைல்ஸ் பாதிக்கப்பட்ட தரையில் எழுப்பிய சத்தம் கூட அவர் கண்களில் காரணமின்றி நீரை வரவழைத்தது.  வீட்டுக்குள் நுழைந்து சாவியை கதவில் பொருத்தித் திருகும்போது, ஏதோ வழக்கமில்லாத சப்தம் கேட்டது போலிருந்தது. தெரிந்த குரல் ஆனால் கேட்டிராத மாறுபாடு. மனதிலிருந்து அதை விலக்கிவிட்டு, நடுங்கும் கைகளுடன் பூட்டைத் திறந்தார்.

ஹெண்டர்சனின் பை கீழும் விழுந்ததும் மரியா சமையலறை மேடையை விட்டுத் திரும்பிப் பார்த்ததும்  ஓரே  கொடுங்கணம். அவள் சமையலுக்கு அணியும் மேலங்கியைத் தவிர உள்ளே ஒன்றும் அணிந்திருக்கவில்லை. சோக்லோஸ் ஹாலின் தரையில், அருகே ஒரு தட்டில் கொலாப்கியும், நெஞ்சின் மீது அமெரிக்கன் மாத்தமாடிக்ஸ் சஞ்சிகையுமாக, கால்களில் செந்நிற உறைகளைத் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தார்.  ஹெண்டர்சன் அப்பிடியே பின்வாங்கி, கதவை இறுக சாத்திவிட்டு, செய்வதறியாமல் அங்கேயே ஒரு கணம் நின்றார். உள்ளே சோக்லோஸின் தட்டு பைன் மரத்தரையில் விழுந்து சிதறும் சத்தமும், ‘நில்லுங்கள்!’ என்னும் மரியாவின் இறைஞ்சலான, விகாரமான கதறலும் கேட்டது.  படிகளில் தடுமாறி  இறங்கிய ஹெண்டர்சன், இருண்ட முற்றத்தைக் கடந்து தனது அலுவலக அறையின் பாதுகாப்பை தேடி விரைந்து மறைந்தார்.

பின்னர் வந்த தொலைபேசி அழைப்பில் விக்கலும் அழுகையும் தோய்ந்த  போலிஷ் வார்தைகளூடாக மரியா திரும்பத் திரும்ப, ‘செல்லம், நான் ஒரு முட்டாள், என்னை மன்னித்து விடு’ என்று அரற்றிக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவரை திரும்ப வரச் சொல்லவேயில்லை. அன்று சகிக்க முடியாத ஒரு விஷயம் தெளிவாகி  விட்டது: அவள் அவரை நேசித்தாள் ஆனால் அவரை விட சோக்லோஸை அதிகம் நேசித்தாள். மரியாவின் அவசர குணம் அவளைத்  தன் தேர்வை மாற்றிக் கொள்ளச் செய்து விட்டது. ஏனென்று ஹெண்டர்சனுக்கு விளங்கவில்லை; எப்போதுமே பெண்களும் காதலும் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் அவருக்கு பிடிபட்டதில்லை.

மரியாவின் ப்ரா சோக்லோஸின் அறைக்குள் தரையில் சுருண்டு கிடப்பதைப் பார்க்கப் பிடிக்காமலும், அவள் உபயோகிக்கும் சானல் 5 சென்ட்டின் நறுமணம் – கிளாசிக் மணம், ஆனால் சோகம் கமழ்வது- குளியலறைக்குள் சோக்லோஸின் துண்டில் வீசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும் ஹெண்டர்சன் தனது அலுவலகத்திலேயே இரவுகளை கழித்தார்.  வீட்டின் குத்தகை டிசம்பர் மாதம் முடிந்த அன்று,  நள்ளிரவில் துணிகளையும், புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் எட்டு அட்டைப்பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வீட்டைக் காலி செய்து, ஒரு டாக்சி பிடித்து, கல்லூரிக்கு அருகே நதியைத் தாண்டி ஒரு ஸ்டூடியோ வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார். அடுத்த பதினெட்டு மாதங்களில் சோக்லோஸை கருத்தரங்குகளிலோ, ஆய்வறிக்கை விவாதக் கூட்டங்களிலோ சந்திக்க நேர்ந்தால் ஐஸ் ஹாக்கி பற்றியோ அல்லது கண்ட்ரோல் தியரியை பற்றியோ பேசிக்கொள்வார்களே அன்றி மரியாவின் பெயரைக்கூட இருவரும் உச்சரித்துக் கொண்டதில்லை.

ஆனால் இப்போதும் ஹெண்டர்சன் அவருக்கும் அவளுக்குமான உறவின் நினைவுச்சின்னமாக ஒரு பொருளை வைத்திருக்கிறார் – அலமாரியின் கீழ் ட்ராவில் உள்ளே பொதிந்து கிடைக்கும் அவளுடைய இரு இளஞ்சிவப்பு நிற காட்டன் உள்ளாடைகள். சில வெள்ளிக்கிழமை மதியங்களில், அலுவலகம் காலியாகிவிட்டதும், அலுவல் நேரம் முடிந்ததை அறிவிக்கும் மணிக்கூண்டு தனது மென்சோக இசையை வாசித்து முடித்ததும், தனது அறையின் கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் சூரிய ஒளிக்கீற்றில் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அவளது உள்ளாடைகளை ஹெண்டர்சன் தனது மோவாய்க்குக் கீழ் சுருட்டிவைத்துக் கொண்டு இருந்ததுமுண்டு.  சில வருடங்களுக்கு முன்னர்  யதேச்சையாக அவை துவைக்கப்பட்டு விட்டிருந்தாலும், இன்னமும் காய்ந்த இலைகளும் இஞ்சியும் கலந்த மரியாவின் அந்த கிழக்கு ஐரோப்பிய வாடையை அவற்றில் முகர முடிவதான ஓரு பிரமை. பார்க்கும் போதெல்லாம் அவர் மனதை பிழியும் மற்றொரு அடையாளமும் அந்த ஆடைகளில் இருந்தது. அவற்றின் பின்பக்க பட்டியில் நீல நிற மார்க்கர் பேனாவினால் அவள் பொறித்திருந்த பெயர் – ‘மரியா’. அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருக்கும். அவ்வளவு அழகானதும் அவ்வளவு சோகமானதுமான ஒரு பெயரை பார்த்ததே இல்லை என்று நினைத்துக் கொள்வார்.

(தொடரும்)

அத்தியாயம் 1

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

Karl Iagnemma

அத்தியாயம் 1

முழுதும் நிறையாத அந்த கருத்தரங்கு அறையின் பின்னாலிருந்த காலி நாற்காலியொன்றில் ஹெண்டெர்சன் மஞ்சள் நிற குறிப்பேட்டைக் கொண்டு முகத்தை மறைத்தவாறே சரிந்து அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றிலும் கணித வல்லுனர்கள் மூன்று நான்கு பேராய் நின்றபடி ஸ்டைரோபோம் கப்களிலிருந்து காபியை பருகிக்கொண்டு ‘வேரியேஷனல் கால்குலஸ் – செர்மெலோ பிரான்கல் தேற்றம்’ பற்றி கிண்டல் செய்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்களின் ரசமில்லாத நகைச்சுவை, மட்கிய ஆரஞ்சு நிற தரைவிரிப்பும், வசதியற்ற நாற்காலிகளும், சீராக எரியாத மின்விளக்குகளும் கொண்ட அந்த கருத்தரங்கு அறைக்கு பொருத்தமாகவே பட்டது. சரி, இது தான் அக்ரோன் நகரமா என்று எண்ணிக் கொண்டார் ஹெண்டெர்சன். அவர் எண்ணியதை விட மோசமாகவோ நன்றாகவோ அது இருந்து விடவில்லை.

ஒவ்வொரு வருடமும் அதே கருத்தரங்கு; அதே முந்நூறு பேர்; உற்சாகமற்ற நகரங்கள். டான்ஸ்க் ஒரு வருடம்; பெல்பாஸ்ட் அடுத்த வருடம்; இதோ இப்போது அக்ரோன். அடுத்தது எங்கே – மோகதிஷு போல. அல்லது டெஹரான்? ஹெண்டெர்சனுக்கு அரங்கிலிருந்த தெரிந்த முகங்களில் பல பிடிக்காதவை. நேரில், ஈரமான கைகுலுக்கல்களும், நாற்றமடித்த சுவாசங்களும் கரகரத்த குரல்களும் கொண்ட இந்த மனிதர்கள், அவரவர் ஆராய்ச்சி புத்தகங்களின் தடித்த அட்டைகளுக்கிடையே கணிதம் சமன்படுத்திய கோர்வையான குரல்களில் மிக ஏற்புடையவர்களாக தெரிபவர்கள். ஹெண்டெர்சன் தலையை குறிப்பேட்டினுள் புதைத்துக் கொண்டு, சுற்றி நின்றவர்கள் யாரும் பார்த்து விடாதவாறு, முக்கியமாக, பேச்சாளர் சோக்லோஸ் கண்ணில் படாதவாறு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

மணி இரண்டானதும் ‘வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் மாறுபாடுகள்: ஒரு பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை அன்று சமர்ப்பிக்கவிருந்த சோக்லோஸ் மேடை மேலேறி ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்தார். ஹெண்டெர்சன் எதிர்பார்த்ததை விடவும் இன்னும் இளமையாகத் தெரிந்தார் சோக்லோஸ். முன்தலை இன்னும் வழுக்கை விழுந்து விடவில்லை; பெரும்பாலான கணித வல்லுனர்களுக்கே உரிய நெற்றிச் சுருக்கங்கள் இல்லை; நான்கு வருட துணைப் பேராசிரியர் பொறுப்பு சோக்லோஸை அவ்வளவாக பாதிக்காதது அநியாயமாகப் பட்டது.

சோக்லோஸ் குறுந்தாடி வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த, பளபளக்கும் ஊதா நிற டை வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை வாசிப்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாதது என்று நினைத்தார் ஹெண்டர்சன். குறுந்தாடி, சோக்லோஸுக்கு ஒரு பைசாச பாவம் அளிப்பதாக நினைத்துக் கொண்டார்.

“வணக்கம், இங்கு நன்கு தெரிந்த பலர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, சோக்லோஸ் தனது செழுமையான ஹங்கரியன் உச்சரிப்பில் துவங்கினார். ஹெண்டெர்சன் தன்னிச்சையாக நாற்காலிக்குள் இன்னும் புதைந்து கொண்டார். ஆனால் சோக்லோஸ் குறிப்புகளிலிருந்து தன் கண்களை எடுக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் பிரவேசித்து கொண்டிருந்தார் – வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் இப்போதுள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகள், அவை குறித்த முந்தைய ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், டோபுஞ்ஸ்கியின் 1964-இல் வெளிவந்த பிரபலமான தேற்றம்; கிரேக்க கணித வல்லுநர் காலியார்டோஸ் முன்வைத்த, அதிகம் அறியப்படாத தொடர் முடிவுகள் – என ஒரு துல்லியமான, தேர்ந்த, ஒன்றன் பின் ஒன்றான நகர்வு.

கட்டுரையின் இந்தக் கட்டம் கடந்ததும் சோக்லோஸ் குரலைச் செருமிக் கொண்டார். ஓர் அரை சுரம் குரலில் கூட்டிக் கொண்டு தன் சொந்த ஆராய்ச்சியை இப்போது அவர் விவரிக்க ஆரம்பித்தார். அரையிருளில் ஆழ்ந்திருந்த அரங்கை பார்வையால் அளந்த ஹெண்டெர்சனுக்கு இது போன்ற ஆய்வரங்குகளில் நிலவும் சந்தேகம் கலந்த விரோத மனப்போக்கு இல்லாமல் பொருமலுடன் கூடிய ஒரு மரியாதை நிறைந்திருப்பதாகப் பட்டது. தனது குறிப்பேட்டுக்கு பார்வையை திருப்பி கொண்டு, திரையில் தெரியும் சமன்பாடுகளில் எங்கே குறை தெரிகிறது, எந்த மென்மையான பாகம் தெரியும், எங்கே அந்த கூர் ஈட்டியைச் செருகலாம் என நுண்ணிய மன அவதானிப்புடன் காத்திருந்தார்.

‘இறுதி வரைவு மற்றும் முடிவுகள்’ என்ற படியை ப்ரொஜக்டரில் சோக்லொஸ் வைத்ததும், உறக்கத்திலிருந்து விழித்த பாவனையுடன் இருந்த அரங்கைப் பார்த்து “இதனால் தீர்மானிக்க முடிவது என்னவென்றால் வலுவிழந்த நான்-லீனியர் சமன்பாடுகளின் நிலைத்தன்மையை மரபார்ந்த மாறுபாட்டு ஆய்வின் மூலம் தீர்க்கலாம் என்பதே” என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஆனால் வசீகரமான ஒரு புன்னகையுடன் தன் குறிப்புகளிலிருந்து நிமிர்ந்து நோக்கி, “இப்போது யாருக்காவது ஏதேனும் – ”

“ஒரு கேள்வி”, என்றார் ஹெண்டெர்சன் உரத்த குரலில். அவர் குரலில் பதட்டமும் ஆக்ரோஷமும் இருந்ததை மறைத்துக் கொள்ள முயலவில்லை. இந்த ஒரு கணத்திற்காகத்தான் அவர் பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். “அணி H-ன் நேர்மாற்றும் தன்மை குறித்து என்ன கூறுகிறீர்கள்? H ஒருமையாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை.”

சோக்லோஸ் குரல் வந்த அரங்கின் இருண்ட ஆழங்களைப் பார்வையால் துழாவினார். “இன்னும் குறிப்பாக கூற முடியுமா?”

“நிச்சயமாக”. அரங்கில் சில தலைகள் திரும்பி ஹெண்டெர்சனை பார்த்தன. “படி 11-ல் நீங்கள் அணி B ஒரு நேர் அணியாயின் அணி H பன்மைத் தன்மையுடையது என்று வாதிடுகிறீர்கள். ஆனால் B உறுதி செய்ய முடியாத நேர் அணியாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை. இது போன்ற பரவலான அணி மாற்றங்களில், B உறுதி செய்ய இயலாத நேர் அணியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது; அதனால் H ஒற்றை அணியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது; எனவே, நீங்கள் நிறுவும் இந்த முடிவு நேர் மாற்றத்தக்கதல்ல.”

சோக்லோஸ் நிதானித்தார். கட்டுரையின் படிகளை மெதுவாக புரட்டி பக்கம் 11க்கு வந்தார். அந்த படியை ப்ரொஜக்டரில் வைத்துவிட்டு, அரங்கிற்கு முதுகை காட்டியவாறு திரும்பி தலையைத் உயர்த்தி திரையை பார்த்தார். அரங்கில் இப்போது பரவிய இறுக்கமான முணுமுணுப்புகள் ஹெண்டெர்சனுக்கு திரைப்படங்களில் காட்டப்படும் பொது மரண தண்டனை நிறைவேற்றத்தின் நாடகமாக்கலை நினைவுபடுத்தியது. தன்னிச்சையாக தாடியை வருடிக்கொண்டே சோக்லோஸ் தன்முன் நேர்த்தியாக கட்டவிழ்கிற கணிதச் சிக்கலை, தான் சரியென்று கருதிப் பொருத்திய நேர்மாற்ற முறையை, தான் பார்க்கத் தவறிய, ஹெண்டெர்சன் தாக்கிய மிக நுண்ணிய ஆனால் மிக அத்தியாவசியமான அனுமானத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“ஆம், சரிதான்.” சோக்லோஸ் குரலை செருமிக் கொண்டார். கடற்கரை வெயிலில் காய்ந்தவை போல் அவர் காதுகள் தகித்தன. “நீங்கள் சுட்டிக் காட்டும் நேர் மாற்ற அணியின் இந்தக் கட்டுப்பாடு… ஒரு வரையறையே.”

“வரையறையா? அந்தத் தவறான அனுமானத்திற்கு பின் நீங்கள் நிரூபிக்கும் அத்தனை முடிவுகளும் தவறல்லவா?”

அரங்கத்தில் ப்ரஜக்டரின் மெல்லிய உறுமல் தவிர முழு நிசப்தம்.

சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு சோக்லோஸின் தலை விறைப்பாக அசைந்தது. “நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த அனுமானத்திற்கு பின்னான விளைவுகளை நான் இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் என நினைக்கிறேன்.”

அரங்கிலிருந்து வாழ்த்தொலி எழுந்தது. கருத்தரங்குகளில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். இந்த நாளின் நாடகீயம் அடுத்த கருத்தரங்கிலும், அதற்கடுத்ததிலும் மெல்லிய கிசுகிசுத்த குரல்களில் விவாதிக்கப் பெறும். இனி பயம் கலந்த மரியாதையுடன் ஹெண்டெர்சன் பார்க்கப் பெறுவார். கூட்டங்களில் அவரது கணித கட்டுரைகளும் இனி தாக்குதல்களின் இலக்காகலாம். இதெல்லாம் ஹெண்டெர்சன் அறிவார். இந்தக் கூட்டம் முடிந்ததும் அவரிடம் பேசவும் சிலர் காத்திருப்பார்கள் என்பதால், சோக்லோஸ் மீண்டும் வலுவாய்ச் செருமி பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் தன்பால் திருப்பிக் கொள்ளுமுன் ஹெண்டெர்சன் சத்தமின்றி அரங்கின் பின் கதவு வழியே வெளியேறினார்.

(தொடரும்)

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT