சிறுகதை

வண்ணக்கழுத்து பகுதி 3 – திசை அறிதல்

மாயக்கூத்தன்– 

கடலாழத்தில் நீந்த புதிதாக பயிற்சி பெற்றவன் போல, காற்றில் இறங்குவது குறித்து வண்ணக்கழுத்துக்கு இருந்த பயம் போய்விட்டது. அவன் நீண்ட நேரமும், அதிக உயரத்திலும் பறக்கத் துவங்கினான். ஒரே வாரத்தில் விடாமல் அரைமணிநேரம் அவனால் பறக்க முடிந்தது. வீட்டுக் கூரைக்குத் திரும்பும்போது, அவன் தன் அப்பா அம்மாவைப் போலவே அழகாகத் தரையிறங்கினான். கால் கூரையில் பதியும்போது, தன்னை சமநிலைக்கு கொண்டு வர, படபடவென்று இறக்கைகளை பீதியில் அடித்துக் கொள்வது அதற்குப் பிறகு இல்லை.

தொடக்கத்தில் அவனோடு கூடவே பறந்த அப்பாவும் அம்மாவும், இப்போது அவனை விட்டுவிட்டு அவனைவிட அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கினார்கள். பையன், தன் பெற்றோர்கள் பறக்கும் உயரத்திற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தான் என்பதால், அவனை இன்னும் மேலே பறக்க வைக்கத்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்று சில காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். குட்டிப் பயலுக்கு அவர்கள் அருமையான  முன்னுதாரணமாக இருக்க நினைக்கிறார்களாக இருக்கும். ஆனால் கடைசியில் ஜூன் மாத தொடக்கத்தில் ஒருநாள், ஒரு கெட்ட சம்பவத்திற்குப் பிறகு என் எண்ணம் மாறியது. (more…)

சுவை

ஹரன் பிரசன்னா

துபாயின் நீல நிறக் கடலைப் பார்த்தபடி மிக உயர்ந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயர்தர ஹோட்டலில் அமர்ந்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஹத் ஹஸன் தன் பூனைக் கண்களில் அங்கிருக்கும் பெண்களை மேய்ந்துகொண்டே அவ்வப்போது பேசவும் எத்தனித்தான். உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் ஹெட் என்பது அவனது மிடுக்கிலும் திமிரிலும் தெரிந்தது. மென்மையான தலைமயிர் அவன் கண்ணை மறைத்து விழுவதும் அதை மிகப் பொறுமையாக கையால் தள்ளிவிடுவதுமென அவனைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் அவன் மடியில் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கொண்டார் நீல்ஸ்.

ஐந்து நட்சத்திர விடுதிகள் பலவற்றுக்கும் இதுபோன்று அலுவலக விஷயமாக நீல்ஸ் போயிருக்கிறார் என்றாலும் இந்த ஹோட்டலின் பகட்டு அதற்கும் மேலே. முதலில் இதை ஹோட்டல் என்பதே அவதூறு என்று அவருக்குப்பட்டது. இதற்கான சரியான வார்த்தையைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அவரது தாழ்வுணர்ச்சி இப்படி அடிக்கடி எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ஏனோ அவருக்கு தன்னை நினைத்துக் கூச்சமாக இருக்கும். அவரது இந்தியாவும் அவரது திண்டுக்கல்லும் அவரது சக்கம்பட்டியும் அவரது அப்பா பழனிச்சாமியும் அம்மா தாயம்மாவும் இப்போதும் இதோ நிமிடத்தில் அந்த உயர்தர ஹோட்டலில் அவருக்குப் பின்னே ஓர் ஓரத்தில் அமர்ந்து ‘சாப்பிட்டியா தம்பி’ என்று ஒரே குரலில் கேட்பதுபோல் அவருக்கு எப்போதும் தோன்றும். மெல்ல நாசுக்காக யாருக்கும் தெரியாமல் நீல்ஸ் திரும்பிப் பார்த்தார். (more…)

தரகு

ஸ்ரீதர் நாராயணன்

“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”

லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக

“என்ன சார்” என்றான்.

“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.

“எந்தூரு உனுக்கு?” என்றார்.

உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.

“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”

“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”

அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி

‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’ (more…)

டுகாட்டி

சித்ரன் ரகுநாத்

கதிரேசன் மணி பார்த்தான். நிஷாவை இன்னமும் காணோம். அவன் பெஸண்ட் நகரில் அந்த காஃபி ஷாப்பின் போர்டிகோ காத்திருப்புப் பகுதியில் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. அவள் வருகிற சுவடைக் காணோம். அவன் ஏற்கெனவே அவள் மேல் மகா எரிச்சலில் இருந்தான். இப்போது எரிச்சல் கோபமாக உருமாறிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றறியாமல் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். ஆர்டர் எடுக்க அவனைச் சமீபித்த பேரர் பெண்ணிடம் ‘ஒருத்தர் வரணும்’ என்றான்.

நிஷா இன்று நிச்சயமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். அவன் எரிச்சலுக்குக் காரணமே அதுதான். ஊரில் அவனவன் காதலியோடு தினசரி நகர்வலம் வந்துகொண்டிருக்க இவளோ ஒரு முறை பார்த்துக்கொள்வதற்கே இன்றைக்கு நாளைக்கு என்று அலையவிட்டுக் கொண்டிருக்கிறாள். கேட்டால் 1) ஆஃபிஸில் ப்ராஜெக்ட் டெலிவரி, 2) திடீர்னு வீட்ல கெஸ்ட், 3) அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. 4……. என ஆயிரம் காரணங்கள் சொல்வாள். நான் மட்டும் என்ன வெட்டியாகவே இருக்கிறேன்? ஃபோன் செய்தால் முழுசாய் ஒரு நிமிடம்கூடப் பேசாமல் துண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறாள். ’என்னைப் பார்க்கணும்னு உனக்குத் தோணலையாடி?’ என்று கேட்டால் ‘தினம் பாத்துக்கிட்டாத்தான் லவ்வா?’ என்று மடக்குகிறாள். (more…)

திற! – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை

செந்தில் நாதன்

Manto

அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.

காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.

சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார். (more…)