மொழியாக்கம்

யார் இந்த இஸ்மாயில் கதாரே? – ஆடம் கிர்ஷ்

(உலகளாவிய எழுத்தாளர்கள் அனைவரும் புக்கர் பரிசு பெறத் தகுதி கொண்டவர்கள் என்ற புதிய விதிமுறைகளுக்குப்பின் அப்பரிசு இஸ்மாயில் கதாரேவுக்கு 2005ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது Adam Kirsch நியூ யார்க் சன் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)

மேன் புக்கர் பரிசுத்தொகை வழங்குபவர்கள் இனி இப்பரிசு சர்வதேச அளவில் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தபோது அச்செய்தி பரபரப்பும் அவநம்பிக்கையும் கலந்த வரவேற்பு பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை முப்பதாண்டு காலமாக புக்கர் என்று அழைக்கப்பட்டு வந்த அப்பரிசின் கொடையாளர்கள் மாறி அது மேன் புக்கர் என்ற புதிய பெயர் பெற்றிருக்கிறது. இந்த முப்பதாண்டு காலத்தில் இது பிரிட்டனின் மிகவும் பெருமைக்குரிய இலக்கிய விருதாக மாறிவிட்டிருக்கிறது- அமெரிக்காவில் புலிட்சர் பரிசோ நேஷனல் புக் அவார்டோ அங்குப் பெற்றுத் தரக்கூடியதைக் காட்டிலும் அதிக கவனம் அளிப்பதாய் இருக்கிறது. (more…)

இரு குறுங்கதைகள்- லிடியா டேவிஸ்

தலை, இதயம்

இதயம் அழுகிறது.
இதயத்துக்கு உதவ முயற்சி செய்கிறது தலை.
உள்ளதைச் சொல்கிறது தலை, இதயத்திடம் மீண்டும்:
நேசிப்பவர்களை நீ இழக்கவே செய்வாய். அனைவரும் போவார்கள். இந்தப் புவியும்தான் போகும், ஒரு நாள்.
இதயம் ஆசுவாசமடைகிறது, இதன்பின்.
ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் செவிகளில் நீண்ட காலம் நீடிப்பதில்லை.
இதற்கெல்லாம் இதயம் ரொம்பப் புதுசு.
அவர்கள் எனக்கு திரும்பவும் வேண்டும், என்கிறது இதயம்.
இதயத்துக்கு இருப்பதெல்லாம் தலைதான்.
உதவி செய், தலையே. இதயத்துக்கு உதவி செய்.

அவளது கடந்த காலத்திலிருந்து வந்தவன்

என் அப்பா அல்லாத ஒருவனுடன் அம்மா சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன், அவளது கடந்த காலத்திலிருந்து வந்திருக்கிறான் அவன். இந்த “ப்ரான்ஸ்” உடன் அம்மா முறையற்ற உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொள்கிறேன்! “ப்ரான்ஸ்” ஒரு ஐரோப்பியன். அப்பா இல்லாதபோது இவனை அம்மா முறையற்ற வகையில் சந்திக்கக்கூடாது என்று சொல்கிறேன்! ஆனால் நான் பழைய யதார்த்தத்தைப் புதிய யதார்த்தத்துடன் குழப்பிக் கொள்கிறேன்: அப்பா வீடு திரும்ப மாட்டார். அவர் இனி வெர்னான் ஹாலில்தான் இருப்பார். அம்மாவைச் சொல்வதானால், அவள் வயது தொண்ணூற்று-நான்கு. தொண்ணூற்று-நான்கு வயது பெண்ணுக்கு என்ன ஒரு முறையற்ற உறவு இருந்துவிடப் போகிறது? ஆனாலும் என் குழப்பம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்: அவளது உடலுக்கு வயதாகிவிட்டாலும், துரோகம் செய்வதற்கான அவளது ஆற்றல் இன்னும் இளமைத்துடிப்புடன் புதுக் கருக்கு கலையாமல் இருக்கிறது.

நன்றி – Lannon.org 

ஒளிப்பட உதவி – keithcroft.org

நீர்த்தேக்கம்  

காஸ்மிக் தூசி

பேஷ்வாக்கள்
நிறுவிய
மாபெரும்
நீர்த்தேக்கத்தில்
இல்லவே இல்லை
துளி நீர் கூட

வேறெதுவும்
இல்லை
நூற்றாண்டு கால
வண்டல்
தவிர.

000

அருண் கொலாட்கரின் The Reservoir என்ற கவிதை மொழிபெயர்ப்பு

முரளிக்காக ஒரு பாடல்

 காஸ்மிக் தூசி

பாருங்கள்,
மலை முகட்டில்
மேய்வதற்கென
வந்து விட்டது
நிலவு

குதிரை திருடரே
சவாரி செய்யலாம்
என்று மட்டும் நினைக்காதீர்

கந்தோபாவின்
முத்திரை
அதன் பக்கவாட்டில்
தெரிகிறதல்லவா
இடது
காறை எலும்புக்கு கீழே
பச்சை குத்தப்பட்டிருக்கிறதே
அதுதான்
கந்தோபாவின் பெயர்
பாருங்கள்

கிழட்டு பெண்பித்தரே
கந்தோபாவின் பெண்மீது
வைக்காதீர்
கையை

பார்ப்போம்
அதற்குமுன்
உங்கள் பணத்தின்
நிறத்தை

000

அருண் கொலாட்கரின் A Song for Murli என்ற கவிதை மொழிபெயர்ப்பு

அம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி

நகுல்வசன்

கேவலம் துட்டுக்காக இந்த இழவை ஆறு மணிநேரம் செய்ய வேண்டியிருக்கிறது.
தொப்புள் முலை குண்டியெல்லாம் ஜன்னல் வெளிச்சத்தில் காட்ட வைத்து
என் நிறங்களைப் பிழிந்தெடுத்துக் கொள்கிறான். இதில் வலது பக்கம்
தள்ளி நின்று அசையாமல் வேறு இருக்க வேண்டுமாம்.
என் உடம்பை கட்டம் கட்டமாக வரைந்து பிரேம் போட்டு
பெரிய மியூசியத்தில் எல்லாம் தொங்கவிடுவார்கள். பணக்கார்ர்கள்
என் தேவடியாப் படத்தைப் பார்த்து உச்சுக் கொட்டுவார்கள்.
இதறகுப் பேர்தான் கலையாம்.

யார் கண்டது? அவன் தலைவலி அவனுக்கு.
எனக்கோ வயிற்றுப் பிழைப்பு. நான் ஒல்லியாகிக்
கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என் முலைகள்
சற்றே சரிந்து தொங்கத் தொடங்கிவிட்டன,
இந்த ஸ்டூடியோவோ குளிர்ந்து விறைக்கிறது. எலிசபெத் ராணி
என் உடம்பை உற்றுப் பார்ப்பது போல் ஒரு கனவு.
அற்புதம் என்று முணுமுணுத்தபடி அவள் கடந்து செல்கிறாள்.
சிரிப்பு வருகிறது. அவன் பெயர்

ஜார்ஜெ. அவன் ஒரு மேதையாம்.
ஓவியம் சரிவராத வேளைகளில் தன் இயலாமையை
என்னுடம்பின் கதகதப்பில் கரைத்துவிட ஏங்குகிறான்.
சாயத்தில் தூரிகையைத் தோய்த்துத் தோய்த்துக் கிட்டாண்
சட்டத்திற்குள் என்னை புணர்ந்து கொள்கிறான். பாவம்!
அதற்கெல்லாம் அவனுக்கேது காசு. நாங்கள் இருவருமே
ஏழைகள். எதையெதையோ செய்து எப்படியோ
பிழைத்துக் கொள்கிறோம். ஏன் இதைச் செய்கிறாய்,
என்று கேட்டதற்கு, அப்படித்தான் வேறு வழியில்லை,
வாயை மூடு என்று அடக்கிவிட்டான். என் சிரிப்பு
அவனைக் குழப்புகிறது. இந்த கலைஞர்களுக்கு
எப்போதுமே தாங்கள் ஏதோ பிஸதாக்கள்
என்ற பாவனை. மதுவால் வயிற்றை நிரப்பிக்கொண்டு
நான் இரவில் மதுக்கூடங்களில் ஆட வேண்டும்.
ஓவியத்தை முடிந்தபின் ஜம்பமாய் என்னிடம் காட்டுகிறான்,
சிகரெட்டை பற்றவைத்தபடியே.
சரி, மொத்தம் பன்னிரெண்டு ஃபிராங்க்,
என்று அவனிடம் கணக்களித்துவிட்டு என் மேலாடையை
எடுத்துக் கொள்கிறேன், ஓவியமோ என்போலவே இல்லை.​

௦௦

ஒளிப்பட உதவி – Wikiart