விமரிசனம்

ஆதவனின் ‘அந்தி’

வெ. சுரேஷ்

சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு.  அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,  மறதி, கை  நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான,  குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று  வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு  ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.

நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.

அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்  (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து  கொள்ள தொடங்கியது, என்  இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை  படித்தபின்தான் .

அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு  மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச்  செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ்  சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட  சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக்  கொண்டவர்.  கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.

ஆனால் இங்கு அவர்  காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே  பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு  விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.

மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும்  கண்டதும்  ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத்  தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி  விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம்  என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி  இருப்பதைக் காண முடியும்.

முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில்  படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின்  நிழல்  இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும்  பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-

“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”

         இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது  முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன  என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.

மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

ஆதவனின் ‘சிரிப்பு’

வெ.சுரேஷ்

“ஒருத்தரோட சந்தோஷம் பெரும்பாலும், இன்னொருத்தருடைய துக்கமாய் போயிடறதுதான் ஆச்சரியம். இதுக்கு நிவர்த்தியே கிடையாதா?  இன்னொருத்தருடைய  சிரிப்பு, பெரும்பாலும்  நம்முடைய  துக்கத்தை ஏன்  கிளறணும்? ஒருத்தர் சிரிக்கறதப் பாக்கும்போது, நாமும் நாம் எப்பவோ சிரிச்சுண்டிருந்ததையெல்லாம் அப்ப நினைச்சுண்டு சந்தோஷப்படக்கூடாதா?…. ஆனா இந்த விவஸ்தை கெட்ட மனசு, அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலே, இழந்த சுகங்களைத்தான் நினைச்சுக்கறது… தான் அனுபவிச்ச கொடுமைகளையும், அவமானங்களையும் நினைச்சுக்கறது…”, இப்படிப் போகின்றன பங்கஜம்  மாமியின் எண்ணங்கள்.

பங்கஜம்  மாமி, ஆதவனின் ‘சிரிப்பு‘ சிறுகதையின் நாயகி. கணவரை இழந்த மத்திய  வயதைத் தாண்டிய பிராமணப் பெண். மகளும் மாப்பிள்ளையும் மகனும் மாட்டுப் பெண்ணும் இருந்தும் தனியாகவே தன் வாழ்வை தொடர்பவர். அவரின் ஒரு நாள் வாழ்வும், அந்த நாளிலே நடைபெறும் சிறு சிறு சம்பவங்களும், அவரது மொத்த வாழ்வையும் திரும்பத் திரும்ப அசைபோடும்,எண்ண ஓட்டங்களுமே இந்தச் சிறுகதை.

அன்றைய நாளும் என்றும் போல அவரது தோழியும் காவலருமான ‘எல்லாம் தெரிந்த’ மீனாட்சி மாமியால் சமையல் எரிவாயுக் கசிவிலிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுக் கடிந்து கொள்ளப்படுவதிலிருந்து துவங்குகிறது. மீனாட்சி மாமி, மகா சாமர்த்தியசாலி, டில்லியையே ஜெயித்து வந்துவிடுவாள். பங்கஜம் மாமி, சற்றே அசடு. தனித்து வாழும் பங்கஜம்  மாமிக்கு மீனாட்சி மாமிதான் friend, philosopher and guide .அவரை மீறி பங்கஜம் மாமியால் ஏதும் செய்துவிட முடியாது. எப்போதும் இன்னொருவர் நிழலிலேயே தன் வாழ்வை வாழ்ந்தவர் அவர்.

அன்று பம்பாயிலிருந்து வரும் மகளின் கடிதத்தைப் படிப்பதிலிருந்து இறுதியில் மீனாட்சி மாமி மற்றும் ’20ம் நம்பர் ஆத்து’ மாமியோடு கோவிலுக்குப் போவதில் முடிகிறது பங்கஜம் மாமியின் ஒரு நாள். அந்த இடைவெளி மாமியின் மொத்த வாழ்வுக்குமே ஒரு விசாரணை  போல அமைகிறது. முதலில் மேலே சொன்ன வரிகள். .ஆனால், அன்று, அந்த நாளின் முடிவில், எல்லாம் தெரிந்த,  டில்லியையே ஜெயித்து வரக்கூடிய மீனாட்சி மாமி, ஒரு பிஸ்கெட்டை எடுக்கப்போய் தொபுக்கடீரென்று கீழே விழுவதைக் கண்டு சிரிப்பதில் தன்  அன்றைய நாளின் இறுக்கத்தை எல்லாம் களைந்து விடுகிறார் பங்கஜம் மாமி. மேலும், கோவிலில் முருகனை தரிசிக்கும்போது முருகனின் முகத்தில் தெரியும் தேஜஸில் இருப்பது என்ன என்ற பேச்சு வரும்போது, முதன் முறையாக மீனாட்சி மாமியுடன் அவரே அதிசயிக்கும்படி, தைரியமாக முரண்படவும் செய்கிறார். அங்கு முடிகிறது கதை.

இந்தக் கதை விவாதிப்பது, நமது செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் முற்றிலும் நம் சுயம் சார்ந்தே இருக்க முடியுமா என்பதைதான். குறிப்பாக, பெண்கள் தம் சுயம் இழக்காமல் குடும்பம் எனும் அமைப்பைக் காத்து, கொண்டு செல்ல முடியுமா? காலமெல்லாம் தன்  சுயத்தை குடும்பம் எனும் மகா யந்திரத்தில் கரைத்த்துக் கொண்டே வாழும் ஒரு பெண் தன்  வாழ்வின் இறுதியில் அடைவதுதான் என்ன? இவையெல்லாம் பெண்ணியம் சார்ந்த ஆக்ரோஷமான கேள்விகளால் எழுப்பப்படவில்லை. இந்தக் கதையில் மீனாட்சி மாமி தன் இன்றைய நாளின் ஒவ்வொரு கணத்திலும் தன் ஒட்டு மொத்த வாழ்வை சலிப்புடனும், கோபத்துடனும், ஆயாசத்துடனும், சமயங்களில் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், நினைவு கூர்வதில் விரிகிறது

தன் பிறந்த வீட்டிலிருந்து தான் இயல்பாக பெற்று வந்த ருசிகளையும் ரசனைகளையும் கணவனின்  ருசிக்காகவும் மாமியாரின் ரசனைக்காகவும் புகுந்த வீட்டில் ஒவ்வொன்றாக இழப்பது; கலகலப்பாகச் சிரித்து மகிழும் தன் இயல்பான குணம் மாறி, கணவரது வீட்டுக்குரிய இறுக்கமான முசுட்டுத்தனத்தின் பிரதிநிதியாக மாறுவது; தன்  கணவருடன் தன்னை உணர்வு ரீதியாக மிகவும் பிணைத்திருக்கக்கூடிய இசை ரசனையைக்கூட தன்  மாமியாரின் எரிச்சலைத் தவிர்ப்பதற்காகக் கைவிடுவது;  தன் சாப்பாட்டு ருசிகளை, தன் இஷ்ட பிரார்த்தனைப் பாடல்களை, என்று ஒவ்வொரு சிறு கூறாகத் தன் சுயத்தை இழந்த கதையை நினைத்துக் கொண்டே இருக்கிறார் பங்கஜம் மாமி. இதோ இப்போது மீனாட்சி மாமியின் சொற்படி ஆடவேண்டிய கட்டம்.என்றும் நினைத்துக் கொள்கிறார்.

கூடவே தன் அடுத்த தலைமுறை பெண்களான தனது  மகள் மற்றும் மருமகள் இருவரது வாழ்வையும் அசை போடுகிறார். அவர்கள் அவரை விட சுதந்திரமாக இருப்பது போல தோன்றினாலும், அவர்களும், குறிப்பாக மருமகள் தன் கணவனுக்கு இணையாக அவனது நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதிலும், அவர்களுக்கு மது பரிமாறுவதிலும் ஈடுபடுவதுகூட, ஒரு பெண் தன் தனித்துவத்தை பேணுவது என்பதல்லாமல் வேறு ஒரு வகை அடிமைத்தனம் என்றே அவருக்குத் தோன்றுகிறது. மருமகளின் சிரிப்பை நினைவு கூரும்போதுதான், முதலில் சொன்ன அந்த வரிகள் அவர் மனதில் எழுகின்றன.

மன இறுக்கத்தை மேலும் மேலும் கூட்டும் பல்வேறு சம்பவங்களின், நினைவோட்டங்களின் இறுதியில் அவருக்கு ஒரு மாபெரும் விடுதலை அளிப்பது,  அவர் இதுநாள் வரையில் பொத்திப் பொத்தி மறைத்து வைத்திருந்த சிரிப்பு. அன்றைய நாளின் முடிவில் கோவிலுக்குப் போவதற்கு முன் இன்னொரு மாமியின் வீட்டில், பிஸ்கெட் எடுப்பதற்காக குனியும் மீனாட்சி மாமி தொபுக்கடீரென்று விழுவது கண்டு பொங்கி  வந்துவிடும்  அடக்க முடியாத சிரிப்பு. அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அந்தச் சிரிப்பின் மூலம், தான்  வாழ்நாளெல்லாம் பழகி வந்த இறுக்கத்தை ஒரேயடியாக அன்று தொலைத்துவிட்டாரென்று தோன்றுமளவுக்கு சிரிக்கிறார். இதுவரை அப்படி வாய்விட்டு சிரித்திருக்கக்கூடிய, ஆனால் ஒரு போதும் சிரித்திராத சம்பவங்களுக்கெல்லாம் அன்று சேர்த்து வைத்து சிரிக்கிறார். அந்தச் சிரிப்பு தந்த  விடுதலை மனநிலையில், எப்போதும் தான் கட்டுண்டிருக்கும் மீனாட்சி மாமியின் சொற்களைக் கூட மறுத்துப் பேசிவிடுகிறார். திகைத்து நிற்கிறார் மீனாட்சி மாமி.

ஒரு கோணத்தில் இந்தக் கதை ஒரு பங்கஜம் மாமியின் வாழ்க்கை அவரிடமிருந்து பிடுங்கும் சுயத்தை விவாதிக்கிறது. ஆனால்  இன்னும் ஆழமாக யோசித்தால் இது நம் ஒவ்வொருவருக்குமே பொருந்தக்கூடியது. இன்னொருவருக்காக வாழ்வதில். குடும்பத்துக்காக தியாகம் செய்வதில்  நம் சுயம் என்பதை இழப்பது எல்லோர்க்கும் நேர்வதுதானே? நாம் நம் சுயத்தோடு இருந்து, பிறர் சுயத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் வாழ முடியுமா? அதை நாம் நம் குடும்பத்துக்காகவும் பிறருக்காகவும் அணிய நேரும் வேஷங்கள் அனுமதிக்குமா? இதில் வரும் பெண் பாத்திரங்களில் மீனாட்சி மாமி ஒரு ஆதிக்க சுபாவம் மிகுந்த பெண்ணாகத் தோன்றக்கூடும். ஆனால், நுட்பமாகப் பார்க்கும்போது, அவரும், ஒரு பதிவிரதை பிறருக்கு எப்போதும் வழி காட்டுபவர், அவர்களது காவலர் எனும் வேஷத்துக்காக தம் சுயத்தை இழந்தவர் என்றே கண்டு கொள்ளலாம்.

ஆதவன் இறக்கும்போது அவரது வயது 42 தான். அவர் இந்தக் கதையை எழுதும்போது அவருக்கு அதிகம் போனால்  35 வயதே இருந்திருக்க முடியும். ஆனால், நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பிராமணப் பெண்ணின் எண்ண ஓட்டங்களையும் மொழியையும் அவர் சித்தரிக்கும் விதம் பிரமிக்க வைப்பது. குறிப்பாக, பங்கஜம் மாமி தன்  மகளிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் அவர் கொடுக்கும் வியாக்கியானங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் ஆழமான  உளவியல் கூறுகளைக் கொண்டது. அதே போல், அவரது பார்வை வழியே விரியும் அவரது கணவர் பாத்திரத்தின் மூலம், 20ம் நூற்றாண்டின் மத்திய கால கட்ட பிராமணக் குடும்பத் தலைவரது சித்திரத்தை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆதவன்.

ஒரு  வாசிப்பில், எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம்  அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.

பங்கஜம் மாமியின் அன்றைய தினத்தின் இறுதியில் அவருக்கு வரும் சிரிப்பு ஒரு தருணம்தான். அது அடுத்த நாளும் நீடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இயல்போடு கூடிய சுயம் சார்ந்த வெளிப்பாடுகளே அது போன்ற தருணங்களையும் நீட்டிக்குமோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது இந்தக் கதை. இருந்தாலும் அவரவரது சுயம் என்பதுதான் என்ன என்று அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமா என்ன?

ஷோபா சக்தியின் ‘எழுச்சி’

கோகுல் பிரசாத்

சமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா? இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை எல்லாம் வேலை பட்டியலில் பார்க்கத்  திகிலாக இருந்தது. அவற்றுள் வணிக வளாகங்களில் ஆட்களை தடவி சோதனை செய்யும் பணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கையுறைகளை அணிந்தபடி நம்மை நோக்கி பணிவாக வணக்கம் சொல்லி, பாக்கெட்டுகளில் உள்ள சாவிகளை அழுத்தமாக பிடித்து அவை சாவிகள் தான் என உறுதி செய்து கொண்டு ஏனைய பாகங்களை உறுத்தாத மிதமான ஸ்பரிசத்தில் தடவி உள்ளே அனுமதிப்பார்கள். முதலில் சொல்லப்படும் வணக்கம் என்பது அவர்கள் நம் உடலை பரிசோதிப்பதற்கான அனுமதியும் மன்னிப்பும் கலந்த பாவனையில் இருக்கும்.

தமிழ்ச்சூழலில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அநேகமாக இல்லை. கதையின் மையம் இதுவல்ல எனும் போதிலும் ஷோபா சக்தியின் ‘எழுச்சி‘ சிறுகதையில் ஒரு மெல்லிய சித்திரம் உண்டு. இந்தக் கதையில் பாரீஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அகதி ஒருவன் சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வருவான். அங்கே அவனை வலுக்கட்டாயமாக உடற்பரிசோதனைக்கு உள்ளாக்குவார்கள். இவனது பேய்த்தனமான முக பாவங்களில் சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் நிர்வாண சோதனைக்கும் உட்படுத்துவார்கள். விதைப்பைகளை அழுத்தியதில் தீராத வலி ஏற்பட்டு தனக்குள் சுருங்கிப் போவான்.

அவன் இலங்கையில் வாழ்ந்தபோது ஒரு தகராறில் துப்பாக்கியின் பின்பாகத்தால் இவனது விதைப்பைகளை அடித்திருப்பார்கள். மாங்கொட்டை அளவுக்கு அவை வீங்கிப் பெருத்து மரண அவஸ்தைகளை அப்போது அனுபவித்திருப்பான். அதன் பிறகுதான் தீர்மானமெடுத்து பாரீஸ் வந்திருப்பான். சென்னை விமான நிலையத்திலும் சோதனை செய்வார்கள். இதனால் பழைய சம்பவங்கள் நினைவில் வலியுடன் கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே இருப்பான். உளவியல் ரீதியான மன அழுத்தங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அவனது மனம் விதைக் கொட்டைகளையும் சோதனையையுமே சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். பதினைந்து நாட்கள் மனைவியுடன் உல்லாசமாக கழிந்ததில் இவற்றை தற்காலிகமாக மறந்திருப்பான். விடுமுறை தினங்கள் தீர்ந்தபின், மறுபடியும் விமான நிலையம். மீண்டும் சோதனைகள். அவமானமும் ஆற்றாமையும் நொதித்துத் தளும்பும். பாரீஸில் அவனுக்கு அதிர்ச்சிகரமான மாற்றம் காத்திருக்கிறது.

அவன் பணிபுரியும் தொழிற்சாலையின் வாசலில் அவன் வயதையொத்த நபர் அமர்ந்திருப்பார். பணியாளர்கள் புகுந்து வரவேண்டிய இரும்புக் கூண்டு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த நபர் தொழிலாளர்களின் உடலை தழுவி சோதனை செய்வார். இதற்கு முன் இந்தத் தொழிற்சாலையில் இப்படிப்பட்ட வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இதில் இருந்து தப்பிப்பதற்காக இவன் மூன்று நாட்கள் தொழிற்சாலையின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைவான். பின்னர் காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை செய்வதற்கான அவசியங்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டு முன் வாசல் வழியாக நுழையும்படி உத்தரவிடப்படுவான். ‘இது மனித உரிமை மீறல்’ போன்ற கோஷங்கள் நிர்வாகத்திடம் எடுபடாது.

அடுத்த நாள், உள்ளாடை அணியாமல் வருவான். சோதனை செய்பவர் கைகள் இவனது மார்பு வயிறு தொடை என பயணித்து அடிவயிற்றில் திடுக்கிட்டு தயங்கிப் பின்வாங்கும். இவன் ஒரு வெற்றிச் சிரிப்புடன் உள்ளே நுழைவான். மறுநாளும் இதே கதை தான். அடுத்தடுத்த தினங்களில் இவனைக் கண்டாலே சோதனை ஏதுமின்றி அனுமதித்து விடுவார். இதுவும் காமெரா மூலம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சோதனையாளர் தனது சிக்கல்களை சொல்வார். இவனோ, ‘சோதனை செய்வது வேண்டுமானால் தொழிற்சாலை விதியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும் என எந்த நாட்டு சட்டத்திலும் இல்லை’ என மிதப்பாகத் திரிவான். இது குறித்து சட்ட வல்லுனர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு சோதனையாளனை மாற்றுவது என முடிவு செய்து ஒரு கிழவனை பணியில் அமர்த்துவார்கள்.

‘ஆண்டவனே வந்தாலும் சோதிக்காமல் விட மாட்டேன்’ என அவர் வீராப்பாக சூளுரைப்பார். விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பாதாம் கொட்டைகளாக தின்று, தன்னை சோதனை செய்யும் போது பிறப்புறுப்பை விறைப்புடன் வைத்துக் கொள்வான். ஒருவன் மட்டும் சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படும் இரகசியத்தை அறிந்து கொள்ளும் அரேபியத் தொழிலாளர்களும் இவனைப் பின்பற்றி உள்ளாடை அணியாமல் வேலைக்கு வருவார்கள். அந்தக் கிழவர் எத்தனை பிறப்புறுப்புகளைத்தான் தடவுவார்? தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் கடவுளை திட்டி விட்டு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிடுவார்.

இந்த எழுச்சி மெல்ல மெல்ல மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவி, ‘நாம மட்டும் இளிச்சவாயங்களா?’ என அவர்களும் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவார்கள். நாட்டின் பாதுகாப்பா மனிதனின் அடிப்படை உரிமையா என்ற தலைப்பில் இது ஒரு தேசிய விவாதமாக வளர்ந்து, இக்கட்டாய பரிசோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்.

தமிழில் எழுதப்பட்ட சிறந்த பகடிக் கதைகளுள் ஒன்றாக இதைக் கருதுகிறேன். ஷோபா சக்தியின் இலகுவான மொழி கேலியின் அத்தனை நுட்பங்களுடனும் தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. கதையின் தலைப்பு உட்பட திருப்பித் தலைகீழாக்கப்பட்ட சம்பவங்களை வேறொரு தளத்தில் வாசகர்கள் பொருத்திப் பார்க்கலாம். ஆழ் நினைவில் புதைந்துவிட்ட துர்கனவு அசந்தர்ப்பமான சூழலில் அதற்காகவே காத்திருந்தது போல வெடித்துக் கிளம்புகிறது. தாழ்வுணர்ச்சியினால் வீழ்ந்து கொண்டே இருக்கும் மனம் பாலுறவின் லயிப்பில் மட்டும் அதனை மறந்து விடும் சூட்சமம் ஒரு புன்னகையுடன் துலங்குகிறது. ஓயாத மனம் ஆசுவாசம் கொள்கிறது. சிக்கலின் முடிச்சுகளை அவிழ்த்து மீறிச் செல்ல கிட்டிய வாய்ப்பும் பறிபோன பின்னர் அவன் வேலைக்குத் திரும்புவதில்லை.

தொகுப்பு : கண்டி வீரன் 

வெளியீடு : கறுப்புப் பிரதிகள்.

எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’

ரா. கிரிதரன்

பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன.  கதைசொல்லியின் பழைய நினைவுகளாகக் கதை தொடங்குகிறது. நிஜாம் பகுதியில் நடப்பது போலச் சொல்லப்பட்ட கதை பழைய ஹைதராபாத்தின் சாயா கடைகளில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது கதையை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது. டீக்கடை என்றாலே அரட்டை என ஆகிவிட்ட காலத்தில் ரம்மியமான இசையனுபவமும் கலை விவாதங்களும் நடக்கும் பொது அரங்குகளாகவும் அவை இருந்த காலத்தை நினைவூட்டியதில் பாகேஶ்ரீ ராகம் போல ஒரு வித ஏக்கம் நமக்கும் தோன்றியது. நிஜாம் சாம்ராஜ்ஜியத்தின் எச்சங்களாக எஞ்சிய சிலவற்றுள் ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கான இடமும், கலாரசனையும் இருந்தாலும் அவையும் இன்று காணாமல் போய்விட்டதில் மனித மனநிலையின் இறக்கத்தை அசைபோடுகிறது கதையின் பின்புலம்.

பொதுவாக ராகங்களுக்கு என இருக்கும் இயல்புகளில் எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது. சிலவகை ராகங்கள் காலையில் பாட உகந்தவை, சில இரவு நேர ராகங்கள் எனப் பிரித்திருப்பதே ஒருவித வசதிக்காக மட்டுமே தவிர அவை எழுப்பும் உணர்வுகளுக்கும் அந்த நேரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் முழுவதாக நம்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இசையின் இயல்பு அகவயமானதுதான். ஆனால், ராகம் என்பது ஒரு உணர்வுநிலை. அதனால், சில குறிப்பிட்ட வகை மன இயல்புகளோடு இயைந்து போகும் தன்மை கொண்டது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இரவு நேரத்தில் கவிழும் அமைதியில், உலகமே தூங்கும்போது பரமாத்மாவைப்போல சாட்சியாக விழித்துப்பார்க்கும் நிலையில் பாடல்களின் உணர்வுகள் நமது மன இயல்புடன் இணைந்துகொள்ளும். அப்படி இரவின் இயல்பைக் கூட்டும் ராகங்கள் இருக்கலாம். பாடப்பாட ஒருமித்த மன நிலை கூடும்.

பழைய நிஜாம் அரசாட்சியின் மிச்சங்கள் கலாச்சார அடையாளங்களாகவும், கலப்பு மொழியாகவும் எஞ்சி நிற்கும் ஒரு பின்னணியில் நடப்பது கதைக்குப் பெரிய பலத்தைத் தருகிறது. தெலுங்கு, உருது மொழிகளும் கலந்திருப்பது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ரெண்டாவதாக, கதையின் கட்டமைப்பு மிகக் கட்டுக்கோப்பான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது ரசனை சமநிலையைப் பூர்த்தி செய்கிறது. கதையில் எவ்விதமான உணர்ச்சிகளும் தனித்துத் தெரியவில்லை. ஹ, ஹ ஹ என விரக்தியாகத் தெரியும் சிரிப்பு கான் சாகிப் சத்தியம் கேட்டபோதும் கதைசொல்லியின் மனதில் ஒலித்திருக்கலாம். அதே போல, கரானாவுக்கு வாரிசாகத் தனது மகன் உருவாக வேண்டும் எனும் வெறி உருவாவதும் ஒரு அரக்கத்தனமாகத் தெரியாமல் மிக இயல்பான ஒன்றாக ஆசிரியர் காட்டியிருப்பது உணர்ச்சியற்ற கூறல்முறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக்காட்டுகிறது.  இதுவே கதையை ஒரு சமநிலையில் பார்க்க உதவுகிறது. சிறுகதையில் அதீத உணர்வு பாவனைகள் சமநிலையைக் குலைத்துவிடக்கூடும். கற்பூர டப்பாவில் பாதுகாத்த பண வாசனை போல கதையின் இயல்பை மாற்றிவிடும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட சிறப்பியல்புகளே கதை அடுத்த கட்டத்துக்குச் செல்ல தடையாக இருக்கின்றன. உணர்ச்சியற்ற நடையில் கூறப்படும் பெரும்பாலான கதைகளுக்கு நேரும் அவலம்தான் என்றாலும் பல இலக்கியவாதிகள் இக்கட்டத்தை வேறொரு வழியில் தாண்டிவிடுகிறார்கள்.  வாழ்வின் அபத்த நிகழ்வாகவோ, உச்சகட்ட முரண்பாட்டுக் களமாகவோ நிகழ்வுகளைத் தொகுக்கும்போது உணர்ச்சியைக் காட்டாத கதைக்கும் ஆழம் கூடிவிடுவதைப் பார்க்கலாம். “எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது”, எனத் தொடங்கும் ‘மரப்பசு’ நாவல் நாயகியின் உணர்ச்சிகள் வேகக்கார் போட்டி போல உச்சகட்ட தீவிரத்தையே தக்கவைத்திருந்தாலும் கதையை நாடகத்தனமாக மாற்றாமலிருக்க அம்மணியின் இயல்புக்கு மாறான காதலைப் புகுத்தி முரண்பாட்டை அதிகப்படுத்துகிறார் தி.ஜா. இரவு தாமதமாக வருவதால் வெளி கேட்டைத் திறக்காமல் போகும் வீட்டுக்காரம்மாவின் கோபத்தை எதிர்கொள்ளும் அபத்தத்தை விவரிப்பதில் கோபி கிருஷ்ணன் உணர்ச்சியைக் காட்டாது கதையை வாசகர்க்கு கடத்த முடிவதோடு கதாபாத்திரங்களின் ஆழத்துக்கும் புக வழி ஏற்படுத்த முடிகிறது.

பாகேஶ்ரீ கதையில் ஏகலைவன் போல சத்தியம் கொடுத்துவிடும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தில் தொடங்கும் கதை அவனது மனதின் ஆழத்தில் உறங்கும் சோகத்தைக் காட்ட எவ்விதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஹ,.. ஹ… ஹ… எனச் சிரிக்கும் வகையில் ஒருவித விட்டேத்தியான மனநிலையைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமாகச் சொல்லப்படாதது அவனுடன் ஒன்றிவிடமுடியாதபடி தள்ளிவைக்கிறது. கலையின் உச்சகட்டத் தீவிரத்தைக் கைகொள்ளும் ஒருவன் அதன் வெளிப்பாட்டுக்குத் தடைவரும்போது முட்டிப்பார்க்கவோ, உடைந்து நொறுங்கிப்போவதோ, தீவிரமான கழிவிரக்கத்தில் புகுந்துகொள்வதோ இயல்பானது. அவன் பாட முடியாமல் முணுமுணுப்பதாக கதையின் தொடக்கத்தில் வந்தாலும் அந்த சத்தியம் அவனது இயல்பை எப்படி மாற்றியது எனச் சொல்லிவிட்டு பின்கதையில் அதே இசை அவனுடைய குதூகலத்தை ஊட்டியது எப்படி எனச்சொல்லியிருந்தால் பாடல்களில் காட்டப்பட்ட மென்சோகம் சொல்லாமலேயே நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நடக்காததால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களுக்கும் கதைசொல்லியின் உணர்ச்சிக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதுவே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் ஆசிரியரே பாடலின் உணர்வுகளைச் சொல்வது போல அமைந்துவிடுகிறது. ஆசிரியரே பாடலை மென்சோகம் எனச் சொல்லும் தேவையும் ஏற்படுகிறது.

நுண்கலைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் வரும் கதையில் அக உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பு தரவேண்டும்? நுண்கலையின் வெளிப்பாடு எதற்குப் பயன்படவேண்டும் என கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையலாம். திசைகாட்டியைப் போல கதையில் வரும் புறக்காட்சிகள் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், கதைக்கு மேலதிக பொருளை அளிப்பதற்காகவும் பயன்படும். தமிழுக்கு கூடுதலாக அகப்புற சித்தரிப்புகள் ஆடிப்பிம்பமாகப் பார்க்கும் மரபை கதைகளுக்குப் போட்டுப்பார்த்து வளர்த்தெடுத்தும் வழிமுறை கைவசம் உண்டு. அக உணர்வுகளும் புறக்காட்சிகளும் உண்மையில் ஆடிப்பிம்பமாகச் செயல்படும் விதத்தில் ஒருங்கிணையும்போது நம்பகத்தன்மையும் கதைக்கு மேலதிக பொருளையும் அவை கொண்டுகூட்டி அளிக்கும். இக்கதையில் பாடல்களின் தன்மையும் அதன் உணர்வுநிலைகளையும் கதாபாத்திரங்கள் மீது சுமத்திப்பார்ப்பதற்கான  சந்தர்ப்பங்களை ஆசிரியர் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சத்தியம் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாடகீய ஆட்டம் மூலமாகவோ, கதைசொல்லியின் தீவிரத்தன்மையைக் கூட்டும் அகச்சித்தரிப்புகள் மூலமாகவோ, வாழ்வின் முரணைக் காட்டும் விதத்தில் விட்டேத்தியான மனநிலை மூலமாகவோ, அபத்தத்தின் வெளிப்பாடாகவோ இந்த இடைவெளியை அவர் நிரப்பியிருந்தால் பாகேஶ்ரீ மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

பாகேஶ்ரீ சிறுகதை, எஸ். சுரேஷ்

பாகேஶ்ரீ சிறுகதையில் வரும் பாடல்கள்