விமர்சனம்

ராஜவீதி

அ முத்துலிங்கம்

amuthulingam (2)
ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் இல்லை. பயணிகள் தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு நிரையாக வெளியே வந்தனர். ’இவராயிருக்குமோ இவராயிருக்குமோ’ என்று எங்கள் கண்கள் பரபரத்தன. வெள்ளைக்கார முகங்களையும், கறுப்பு முகங்களையும் கழித்துவிட்டு இந்திய முகங்களில் கவனத்தை செலுத்தினோம். அவரை வரவேற்க வாங்கிய பூமாலை வேகமாக வாடிக்கொண்டு வந்தது. அவரைக் காணவில்லை.

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடனை நான் காலம் கழித்துத்தான் கண்டுகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அமெரிக்காவில் திரு சுந்தர ராமசாமியை கண்டு பேசியபோது அவர் நாஞ்சில் நாடன் முக்கியமாக படிக்கவேண்டிய ஏழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். அதன் பின்னர் கையில் கிடைத்த நாஞ்சில் நாடனின் புத்தகங்களை எல்லாம் படித்தேன். சிறுகதைகள் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிறையவே எழுதிக்கொண்டிருந்தார். வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே இத்தனை பெரிய ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இருக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டது.  நான் அத்தனை காலமும் படித்தது எல்லாமே வேறு வகையான எழுத்துக்கள். அவரோ நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதினார். அது புதுமையாக இருந்தது. நகைச்சுவையும் சமூக அக்கறையும் கொண்ட படைப்புகள். முக்கியமாக என்னைக் கவர்ந்தது மரபிலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி.

எப்படியோ தொலைபேசி எண் பெற்று அவருடன் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். கடிதம் எழுதியதும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு பித்துப் பிடித்ததுபோல அலைந்தது நினைவுக்கு வந்தது. இப்படியும் தமிழில் எழுதமுடியுமா என்ற வியப்பு. இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து தவித்தது. முழு மனித வாழ்க்கையும் ஒரு சிறுகதையில் அடங்கிவிட்டது. சாதாரண கதை போலத்தான் அது ஆரம்பித்தது ஆனால் முடிவுக்கு வந்தபோது மனதின் தவிப்பு அடங்கவில்லை.

’கொங்குதேர் வாழ்க்கை’ என்பது கதையின் தலைப்பு. 2000 வருடங்கள் பழமையான சங்கப் பாடல்களில் இருந்து ஒரு வரி. 473 புலவர்கள் பாடிய 2381 சங்கப்பாடல்கள் உள்ளன. அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். ஒரேயொரு பாடல் பாடியவர் இறையனார். அதுதான் ’கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடல். தமிழ் இலக்கியத்தில் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட பாடல் இது ஒன்றுதான். தும்பி மலர் மலராகச் சென்று தேனைத் தேர்ந்து சேகரிப்பது போலத்தான் மனிதன் தன் வாழ்க்கையை தேர்ந்து தேர்ந்து அமைக்கிறான். அவன் சேர்த்த மூட்டையையே அவன் இறுதிவரை சுமக்கிறான்..

சிறுகதை நாலு வரிகளில் சொல்லக்கூடியதுதான். லைன் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக நிற்கின்றன. கதைசொல்லி ஒரு வீட்டில் வாழ்கிறார். சண்டைகள் சச்சரவுகள் என்று குடித்தனக்கார்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கை. அதே சமயம் அங்கே கொண்டாட்டங்களும் இல்லாமல் இல்லை. ஒருநாள் முன்னிரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது திடீரென்று நாதஸ்வரத்தில் சங்கதி சுத்தமான தெய்வீக இசை எழுகிறது. தியாகய்யரின் ’சக்கனி ராஜா’ கீர்த்தனையின் இரண்டு வரிகள். ஏதோ பெரும் இழப்பை சொல்ல வந்ததுபோல அத்தனை சோகமாக அந்த இசை கிளம்புகிறது. ‘ஓ, மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வேறு சந்துகளில் ஏன் நுழைகிறாய்.’

நாதஸ்வரத்தை வாசித்த கிழவர் சமீபத்தில் மனைவியை இழந்தவர். பிரிவு என்ற கொடிய காற்று அவரை அலைக் கழித்திருக்கலாம். முறையிடுவது போல நாதஸ்வரத்தை மேலே உயர்த்திப்பிடித்து மனதை வருடும் இசையை பொழிகிறார். அவருடைய மகள் எங்கிருந்தோ ஓடிவந்து நாதஸ்வரத்தை பிடுங்கிவிடுகிறாள். கிழவர் மன்றாடுகிறார். அவருடைய ஆற்றாமையை வெளிப்படுத்த அவருக்குள் இருந்த ஒரே கலை அதுதான். மகள் அவரை வீட்டினுள்ளே கூட்டிப்போகிறாள். அந்த வாத்தியத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இசை அதுதான். நாதஸ்வரம் தொலைந்ததோ, கடைக்கு வைத்துவிட்டார்களோ அல்லது விறகானதோ என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.

அமெரிக்காவின் ஹார்ப்பர் லீ, மார்கிரெட் மிச்செல் போன்றவர்கள் ஒரே ஒரு நாவல் எழுதி புகழ் பெற்றவர்கள். இந்தியாவின் அருந்ததி ராயும் அப்படித்தான். நாஞ்சில் நாடன் 25 க்கு மேற்பட்ட கட்டுரை, சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என்று எழுதியிருந்தாலும் அவருடைய ’கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதை ஒன்றே அவருக்கு தமிழ் இலக்கியத்தில் நிரந்திரமான ஓர் இடத்தை தருவதற்கு போதுமானது. பல மொழிகளில் எழுதிய பல சிறுகதைகளைப் படித்து ஒப்புநோக்கியபோது ’கொங்குதேர் வாழ்க்கை’ உலக இலக்கியத்தில்  தனி இடம் பெறக்கூடிய கதையாகவே எனக்கு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்ற சொற்றொடர் எங்கே, எப்போது  பிரயோகிக்கப்பட்டாலும் அது உடனே நாஞ்சில் நாடனை என் நினைவுக்கு கொண்டுவரும்.

நண்பர் முழங்கையால் இடித்தார். நாஞ்சில் நாடன் இரண்டு பயணப் பெட்டிகள் நிறைந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். பள்ளிக்கூடம் விட்டு வெளியே ஓடிவரும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி. 20 மணி நேர பயணக் களைப்பு அவர் முகத்தில் தெரியவே இல்லை. அவர் வெளியே வந்த பின்னர் அவர் செய்த காரியம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அப்படியே என்னை ஆலிங்கனம் செய்தார். கண்கள் கலங்கியிருந்தன. இவருக்கு நான் என்ன செய்தேன்? இத்தனை அன்புக்கு நான் அருகதையானவன்தானா? இருபது வருடங்கள் பிரிந்திருந்த அண்ணரைச் சந்திப்பதுபோல உணர்ச்சிகளால் நிறைந்து அவர் முகம் இருந்தது. அத்தனை நாட்களும் பேச்சிலும் எழுத்திலும் நடந்த சந்திப்பு அன்று நேரிலே நிகழ்ந்தது.

அவருடைய நூல்களைப் படிக்கும்போது அவர் பற்றிய ஒரு கற்பனை உருவாகி மனதிலே படிந்திருக்கும். அப்படி ஒன்று என்னிடம் இருந்தது. ஆனால் நேரிலே பார்த்த ஆளுமை மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. என் கற்பனை உருவத்தை பலமடங்கு வியாபிக்க வேண்டியிருந்தது. காலம் கழித்து இவரைச் சந்திக்கிறோமே, எத்தனை வருடங்கள் வீணாகிவிட்டன என்ற நினைப்பே எனக்குள் எழுந்தது. கர்வம் செருக்கு என்ற வார்த்தைகள் நாஞ்சில் நாடன் அறியாதவை. ரொறொன்ரோவில் தங்கிய காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்தித்தார். ஆர்வமாக பார்க்க வந்த எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் நிறைய நேரம் உரையாடினார். அவருடைய பெருந்தன்மை வேறு பிரபல எழுத்தாளர்களில் நான் காணாத ஒன்று.

அவர் ரொறொன்ரோவில் தங்கிய நாட்களில் நடந்த முக்கியமான விசயம் தொடராக ஐந்து நாட்கள் அவர் செய்த கம்பராமாயண விரிவுரைகள்தான். இந்த வாய்ப்பு ரொறொன்ரோ வாழ் மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியது அல்ல. நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் அதே சமயம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர்கள் எத்தனை அரிது என்பது தெரிந்த விசயம். நாஞ்சில் நாடன் கம்பராமாயணம் முழுவதையும் முறையாகப் பாடம் கேட்டவர். கம்பரின் முக்கியமான பாடல்களை எடுத்து அவர் விளக்கிய காட்சி மறக்கக்கூடியது அல்ல.

ராமாயணம் பாடிய கம்பரைப் பற்றி ஒரு கதையுள்ளது. சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். ஒருமுறை சடையப்ப வள்ளல் கம்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அங்கே ஏற்கனவே கூட்டம் சேர்ந்துவிட்டது. சடையப்பருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கம்பருக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. கம்பர் சொன்னார், ’இங்கே இடம் கிடைக்காவிட்டால் என்ன? நான் அவரை வைக்கும் இடத்தில் வைப்பேன்.’ 10,000 பாடல்கள் கொண்ட கம்பருடைய ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேறியது. நூறு பாடல்களுக்கு ஒரு பாடலில் கம்பர் சடையப்ப வள்ளலை வைத்து பாடியிருப்பார். ’நூற்றுக்கு ஒன்று கொஞ்சம் அதிகமில்லையா?’ என்று ஒருவர் கேட்டபோது கம்பர் சாதுர்யமாகப் பதில் சொன்னார். ’ உண்மைதான். சடையப்பர் நூற்றில் ஒருவர் இல்லை. ஆயிரத்தில் ஒருவர்.’ அப்படியே 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயர் வரும்படி கம்பர் பாடல்களை அமைத்தார்.

நாஞ்சில் நாடனுடைய இடம் தமிழ் இலக்கியத்தில் எங்கே நிற்கும்? அவர் நூற்றில் ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா? நிச்சயமாக லட்சத்தில் ஒருவர்தான். இன்னும் பல சிறப்பிதழ்களுக்கு அவர் தகுதியானவர். நாஞ்சில் நாடனுக்கும் பதாகைக்கும் என் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிக்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அவர் முன்னே. மற்றவர்கள் பின்னே

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

குமரன் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueநீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே! அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும்  அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி!

மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா? இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்டம்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம்  வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.

“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது?

ஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க‌ வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்ப‌ம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.

ஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும்? “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த‌ நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார்.  இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா? மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது? இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும்? வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை  நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே?

அடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன்? பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு  “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும்  சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”,  மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்?] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.

எழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக‌ கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…

இலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே!

ஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே! இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே! புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ?) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு!

நாஞ்சில்நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

சிவானந்தம் நீலகண்டன்

nanjil_nadan_spl_issue

‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத்தொகுப்பிற்கான சாகித்ய அகாதமி விருது (2010) இலக்கிய உலகில் வரவேற்கப்பட்டதும், ஊடகங்களில் கொண்டாடப்பட்டதும் அதன்வழியாக அவர்பெயர் இந்தத் தலைமுறை வாசகர்களைச் சென்றடைந்ததும் நாஞ்சில்நாடன் எழுத்துக்களின்மீது அதிக கவனம் ஈர்க்கப்பட முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். அவ்வகையில் விருதுகள் ரிடையர்மெண்ட் பெனிஃபிட் ஆக இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டாலும் முகவரிகளாகவும் இருப்பதில் வாசகனாக மகிழ்ச்சியே. சமீபகாலமாக அவரது படைப்புகள் மறுபதிப்புகள் காண்கின்றன. இந்த நிலையில் அவரது படைப்புகளின் மொழிக்கூறு குறித்தது இக்கட்டுரை.

எட்டுவருடங்களுக்குமுன் தமிழில் புனைவு வாசிப்பது வெட்டிவேலை என்ற முன்முடிவுடன் அந்தப் பக்கமே திரும்பாமலிருந்தவனை ருசிகாட்டி அழைத்துவந்தது தலைகீழ்விகிதங்கள் நாவல். அதன் கதையமைப்பு அல்ல மொழிதான் அத்தூண்டிலைப் போட்டது. அம்மொழி உந்தி இழுத்த வேகத்தில் மற்ற ஐந்து நாவல்களையும் விறுவிறுவென்று வாசிக்கவேண்டியதாயிற்று. பிறகு சிறுகதைகள், கட்டுரைகள் என்று தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கியது இன்றும் கைம்மண்ணளவில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எந்த சிந்தனையுமில்லாமல் வாசித்தவேகத்தில் கவர்ந்த அம்மொழியை அதில் எதுகவர்ந்தது என்று கண்டறியக் கொஞ்சம் ஆராய்ச்சிப்புத்தியோடு இறங்கியபோது தட்டுப்பட்டவைகள் இங்கே.

முதலாவதாக, சிறப்பான ஆனால் அனேகமாக மறைந்துவிட்ட கிராமத்துப் பேச்சுத்தமிழ்  வார்த்தைகள். அவ்வார்த்தைகளை வாசித்ததும் இதைப் பாட்டி பேசுகையில் கேட்டதுண்டே, இதைத் தாத்தா பயன்படுத்தியதுண்டே, எப்படி இதன் பயன்பாடு தேய்ந்தது என்று சிந்தனை முன்பின்னாக ஓட ஆரம்பித்து நாவலின் தொடர்ச்சியை அறுத்த அனுபவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. ‘சதுக்கப்பூதம் ஒன்னுதான் பாக்கி’ என்றவரியிலிருக்கும் பாக்கி அங்கேயே வாசிப்பை நிறுத்தி அனுபவிக்கச்சொல்வது ஒருபக்கமென்றால் ‘நெல்லு காய்ச்சல் போறாது…சாவி ரொம்ப’ என்பதிலிருக்கும் சாவி வேறுவிதமான யோசனைகளைக் கிளப்பியது. இந்தச்’சாவி’ தஞ்சாவூர்ப்பக்கம் கேட்டிருந்த ‘கருக்கா’யை நினைவூட்டியது. பிறகு என்றோ ஒரு நாளில் எதற்கோ குறளை வாசித்துக்கொண்டிருக்கையில் ‘துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று’ என்பதைப் படிக்க நேர்ந்தபோது அதில் கருக்காயைக் கண்டதும் அடைந்த காரணம்புரியாத மகிழ்ச்சிக்கு ஈடுசொல்லவியலாது. அம் மகிழ்ச்சிக்கான விதை நாஞ்சிலின் மொழி போட்டது. இந்தக் கருக்காயை இளநீர் என்ற பொருள்படும், மலையாளத்திலும் நாஞ்சில் நாட்டிலும் வழங்கும் கருக்கு என்று நாஞ்சில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். ஆனால் இது சரியானபடி வளர்ந்து முற்றாமல் கருவிலேயே காயாகிவிட்ட எந்தக் காயையையும் குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கலாம் என்பது என் ஊகம்.

‘காலம்பற எங்க போயிருந்த?’ என்ற அவர் வரி நாம் இப்படித்தானே பேசிக்கொண்டிருந்தோம், எப்போது/ஏன் ‘காலம்பற’வை ‘காலைல’வாக மாற்றிக்கொண்டோம்? என்ற கேள்விகளைக் கொடுத்ததுண்டு. உடனடி விடைகள் இல்லாத இக்கேள்விகள் சிந்தனையைக் கிளறுபவை. தோது, வசக்கேடு, தணுப்பு, அனப்பு, செத்தை, நெரிபிரி(யான வேலை), திராணி, ஆஸ், அத்து என்று நீண்டுகொண்டுபோகும் இச்சொற்பட்டியல் நாஞ்சில் நாவல்களின் மொழிக்கொக்கிகள். தவறிப்பட்டால் வாசகர்கள் சிக்கிக்கொள்வதுறுதி.

இரண்டாவது, ஊடுபாவாக வரும் பழந்தமிழ்ப்பாடல் வரிகளும் குறிப்புணர்த்தும் மற்ற சொல்லாடல்களும். வாசித்தவர் மறக்கவே இயலாத இடமொன்றுண்டு; எல்.ஐ.சி.இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் ஒருபாலிசி எடுக்கவைப்பதற்காக என்னென்னவோ பேசியும் ஆள் வழிக்குவராததால் திருமூலரைத் துணைக்கழைத்து ‘இடப்பக்கம் இறை நொந்ததே என்றார்; கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே’ வை விளக்கிச் சொல்லும் காட்சி. இந்த எழுத்துச் சாமர்த்தியம் சாமான்யமானதல்ல. அதுதரும் இலக்கிய இன்பமும் குறைந்ததல்ல. இன்னோரிடத்தில் “பூலிங்கத்தைப்பார்த்து கண்கள் நீர் மல்கியது. ‘புரந்தாற் கண் நீர்மல்க’ என்று சம்மந்தமில்லாமல் ஞாபகம் வந்தது” என்ற வரிகள் வாசகன் இது குறளாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்துத் தேடிக்கண்டுபிடித்து அனுபவிக்க (குறள் எண் 780) வேண்டுமென்று திட்டமிட்டே விரிக்கப்பட்ட வலைதான். அதேவரியில் சம்’பந்த’ என்றெழுதாமல் பேச்சுக் கொச்சையான சம்’மந்த’ வந்திருப்பதையும் கவனிக்கலாம். இந்நுட்பங்களே நாஞ்சில் எழுத்துக்களிடம் காரணம்புரியாத நெருக்கத்தை நமக்கு உண்டாக்குபவை. ஒரு பெரியப்பா பாத்திரம் என்று நினைவு. அது ‘மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட வெளியினில் வாருங்கள் காணும்’ என்று குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களை நமக்கு அறிமுகம் செய்கிறது.

ஏதோ திருமந்திரம், திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், அகம், புறம், சித்தர்பாடல்கள்தாம் என்றில்லாமல் ஓரிடத்தில் “அவர்தன் ‘மலைத்தோட்ட’ உரையைத் தொடங்கினார்” என்று பஞ்சாயத்து பேசத்தொடங்கும் ஒருவருக்காக எழுதுவது நாஞ்சிலுக்கு இருக்கும் பைபிள் பயிற்சியையும் காட்டுகிறது. அவ்வகையில் இவர் அறிந்ததில் எதையும் கரப்பதில்லை, எழுத்துக்களில் தன்னை வெளிக்காட்டத் தயங்கிக் கரந்துறைவதுமில்லை. ஆங்காங்கே இயல்பாகத் தெறிக்கும் இம்முத்துக்களில் பழமை மட்டுமேதானா  என்றால் அதுவும் இல்லை. ‘பின்னி முடிச்சிடம்மா, பிச்சிப்பூ சூட்டிடம்மா’ என்று கவிமணி தேசியவினாயகத்தை மேற்கோள் காட்டுவது முதல் ‘அதுல போயி என்ன கெடக்கு’ என்ற கண்மணி குணசேகரனின் சொல்லாட்சியைக் கடன்வாங்கி வாசகருக்குத் தருவதுவரை நவீன எழுத்துக்களும் பஞ்சமில்லாமல் பயின்று வருகின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயம். பேச்சுவழக்கிலிருக்கும் கொச்சைத் தமிழ் மொழியும், பழந்தமிழிலக்கிய மொழியும் சடார்சடாரென்று கலந்துங்கட்டியுமாக நுரைத்துக்கொண்டு வருவது ஒருவித மயக்கத்தைத் தருகிறது. நாஞ்சில் படைப்புகளின் மொழி அவ்வகையில் உயர்தர காக்டெயில் மொழி!

மூன்றாவதும் இறுதியானதுமாக நாஞ்சிலின் முத்திரை மொழிநடையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட அடுக்குவிவரச்சொற்கள் (வேறெப்படி எழுதுவது?). ஒருமுறை மா.நன்னன் அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்பதை உதாரணமாக வைத்துக்கொண்டு எவ்வெந்த இடங்களில் ‘முதலான, போன்ற, ஆகிய’ இவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்பதை விளக்கினார். சேரன் ‘முதலான’ மன்னர்கள் என்றோ, சேரன், சோழன் ‘போன்ற’ மன்னர்கள் என்றோ, சேரன், சோழன், பாண்டியன் ‘ஆகிய’ மன்னர்கள் என்றோ எழுதவேண்டுமென்பது அவர் செய்தி. ஆனால் நாஞ்சிலின் முத்திரை இந்த விஷயங்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. Etc., என்று சுருக்கி எழுதப்படும் Etcetera என்ற வார்த்தையை இவர் அறிந்திருக்கவில்லையோ என்று சந்தேகம் வருமளவுக்கு அனைத்தையும் குறிப்பிடுவதே நாஞ்சிலின் அடுக்குவிவரச்சொற்கள். மத்யப்பிரதேச ரயில் நிலையத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் எங்கும் ஒரே தெலி, தெல்கே, ஷிண்டே, ராணே, இன்னும் பிறர் என்று நாஞ்சில் எழுதுவதில்லை. மேலும் தொடர்ந்து பால்கர், போர்லேகர், காம்ளி, காம்ளே, ஆம்பேகர், கார்பாரே, நட்கர்னி, குல்கர்னி, ஷிவ்தார்கர், மோரே, போக்ளே, பாண்டேகர், பண்டார்கர், ஆப்தே, மானே, அம்ராபூர்கர், பாலேகர், பாட்டில், பட்டேகர், பாட்கர் மற்றும் அவர்தம் பெண்டிர் என்றுதான் எழுதுவது வழக்கம். இதுதான் அம்முத்திரை. முதலில் வாசிக்கும் ஒருவருக்கு ஏன் விஷயத்துக்கு வராமல் இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார் என்று தோன்றலாம்; தோன்றும். ஆனால் சொல்லவந்ததை முழுமைசெய்துவிடும் எழுத்தாளனின் பொறுப்பும் அவற்றின்மீதான கவனமும் வாசகரை அசரச் செய்யும்போது அச்சலிப்பு அகன்று அடுத்தது என்ன வரிசை வருமோ என்ற ஆவல் பிறக்கும்.

சூடிய பூ சூடற்க-வைச் சொல்லி ஆரம்பித்த கட்டுரையை அதைச் சொல்லியே முடித்துவிடுவோம். அரசாங்க அலுவலகங்களில் பணியாளர்கள் பொறுப்பற்று நேரத்தை சொந்த விவகாரங்களுக்குச் செலவிடுவதைச் சொல்ல வருபவர் இவ்வாறு எழுதுகிறார்; வங்கிக்கு, மருத்துவரைப் பார்க்க, காய்கனி வாங்க, தேநீர் அருந்த, சிற்றுண்டி தின்ன, சீட்டுப்பணம் கட்ட, ஆயுள்காப்பீட்டுத் தவணை கட்ட, தைக்கக் கொடுத்த துணிகள் வாங்க, பக்கத்து அலுவலக நண்பரிடம் உரையாட, சொந்த வீட்டுக் கொல்லையில் புதர் வெட்டும் செலவுக்கு கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்தது அனுமதிக்கப்பட்டதா என்று மேல்விவரம் கேட்க, தன் சொந்தக் காரணங்களுக்காகப் பின்தொடரும் அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரிக்க…….முடிவதில்லை இம்முத்திரை!

நாஞ்சிலின் மொழி என்றதும் முன்வந்து நின்றது இம்மூன்று கூறுகள். கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து பார்த்தால் இன்னும் நிறைய அம்சங்கள் ஒளிந்துகிடக்கலாம் இம்மொழிக் காதலனின் எழுத்துக்களில். நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்றொரு பொருளுமுண்டு. இந்த நாடன் சொல்லேர் உழவன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம்

சுரேஷ் கண்ணன்

nanjil_nadan_spl_issue

நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்கக் குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை போல அவற்றினூடே ஓர் ஒழுங்கான தொடர்ச்சி இருக்கும், பல்வேறு காலக்கட்டத்தில் பதிவாக்கப்பட்ட  ஒரு தனிநபருடைய புகைப்படங்களின் தொகுப்பைப் போல.   மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதைப் போல எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்தறிய முடியாது என்பது ஒரு நல்ல எழுத்தின் சிறப்பு. அவ்வகையில் புனைவுகள், அபுனைவுகள் என நாஞ்சில் நாடனை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அது சிவதாணுவோ, சுடலையாண்டியோ, பூலிங்கமோ, நாராயணணோ, கும்பமுனியோ அவர்களைத் தாண்டி நாஞ்சில் நாடனை அதில் பார்க்க முடியும். இதையொரு பலவீனமாக சொல்கிறவர்களும் உண்டு. நான் பலம் என்றுதான் சொல்வேன். மற்ற புதினங்களில் இளவயதின் வேகமும் ஏக்கமும் உடைய, திருமணம் ஆகிற, அதன் சிக்கல்களை அனுபவிக்கிற நபர்கள் என்றால் அதன் பரிணாம வளர்ச்சியில், சதுரங்கக் குதிரை புதினத்தில் மணமாகாத ஒரு நடுத்தரவயதுள்ள நபரின்  தனிமையுணரும் கசப்பான அனுபவங்களையும் மனச்சிக்கல்களையும் அறிய முடியும். இதன் கனிந்த தொடர்ச்சிதான் நக்கலும் குத்தலுமாக வெளிப்படுகிற சமகால கும்பமுனி.

நாஞ்சில் நாடனின் உருவாக்கும் நிலப்பரப்பின் பின்னணி பொதுவாக அவர் பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டுப் பின்னணியிலும் தொழிலுக்காக புலம்பெயர்ந்த மஹாராஷ்டிர நகரம் மற்றும் சிற்றூர்களின் பின்னணியிலுமாக அமைந்துள்ளது. இதில் துவக்க கால எழுத்து பிரத்யேகமாக சொந்த ஊரின் பின்னணயிலும் பிறகு உருவாக இடைக்கால எழுத்து  இரண்டின் கலவையாகவும் தொழிலிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு மறுபடியும் பிரத்யேக நாஞ்சில் பிரதேசத்திற்கு திரும்புவதையும் கவனிக்க முடியும். புதினங்களின் வரிசையை இன்னமும் துல்லியமாக வரிசைப்படுத்த வேண்டுமென்றால் கால வரிசையில் முன்பின்னாக உருவாகியிருந்தாலும் என்பிலதனை வெயில் காயும் மற்றும் தலைகீழ் விகிதங்கள் ஆகிய இரண்டு புதினங்களுக்கு இடையே பிரத்யேக  நாஞ்சில் நாட்டு பின்னணியுடன் ஒரு தொடர்ச்சி உள்ளது. எட்டுத்திக்கும் மதயானை, மிதவை, சதுரங்கக் குதிரை ஆகியவற்றின் இடையே பிரதான கதாபாத்திரத்தின் படிநிலையின் வழியே உள்ள தொடர்ச்சியை கவனிக்க முடியும். அவருடைய சிறுகதைகளின் தொகுப்பையும் புனைவு காலம் முடிந்த எழுதப்பட்ட கட்டுரைகளையும் பிறகு கும்பமுனி எனும் பாத்திரங்கள் வழியே உரையாடும் மீண்டும் உருவான சிறுகதைகளையும் இவ்வாறு பிரித்துணர முடியும்.

***

நாரயணன் சாப்பிட்டு விட்டு மாட்டுங்கா சர்க்கிளுக்கு திரும்புவதில் துவங்கும் சதுரங்கக் குதிரை புதினமானது, திருமண உத்தேச உரையாடலுக்காக  ஆர்ட்கேலரி காண்டீனுக்கு அழைக்கப்பட்ட ராதா வராமல் போன காரணம் குறித்து சுய சமாதானம் செய்து கொள்ளும் இறுதிப்புள்ளி வரை வரை துணையல்லாத நாராயணனின் கடுமையான தனிமையை விவரித்துச் செல்கிறது. ஆனால் அதை சுயஇரக்கம் கோரும் வகையில் வறட்சியான மொழியிலும் கையாலாகாத தத்துவ விசாரங்களும் அல்லாமல் இயல்பான நடைமுறைக் காட்சிகளின் விவரணைகளோடு சொல்லிச் சென்றிருப்பதில் நாஞ்சில் நாடனின் எழுத்தாளுமையின் பலம் தெரிகிறது. நாஞ்சில் நாட்டின் பிரத்யேக சொல்லாட்சிகளும் உணவு வகைகளும் சடங்குமுறைகளும் என அந்தப் பிரதேசத்தின் கலாசாரக்கூறுகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. பொருளீட்டுவதற்காக எந்தெந்த பிரதேசங்களுக்கோ பெயர்ந்து கொண்டேயிருந்தாலும் நாஞ்சில் நாடனின் மனம் அவரது சொந்த மண்ணில் நங்கூரமிட்டிருப்பதை உணர முடிகிறது. அதற்காக பல வருட அமெரிக்க வாசத்திலும் பருப்பு சாம்பாரை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைத்தனமும் அவரிடம் இல்லை. நாஞ்சில் நாட்டு உணவு வகைகளான எரிசேரி,புளிசேரி பற்றிய விவரணைகள் ஒருபுறமென்றால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் வடாபாவும் வர்க்கியும் கூட அவர் எழுத்தில் பதிவாகின்றன. கலவர நேரத்தில் பெண்களை லாரியில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைக்கும் வரதாபாய் பற்றிய குறிப்பும் கூட போகிற போக்கில்.

நேர்க்கோட்டு பாணியில் அல்லாமல் நாஞ்சில் நாட்டின் கடந்த காலமும்  மும்பை வாழ்வின் சமகாலமும் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் வாசிப்பின் லகுவில் துளி குழப்பமுமில்லை. தாயின் இறப்பிற்கு கூட நேரத்திற்கு சென்றடைய முடியாத பயண தூரத்தில் உள்ள நடைமுறை அவலமும் ‘அவனுக்கென்ன வெளியூர்ல கைநிறைய சம்பாதிக்கான்’ என்று பொருமும் உறவுகளும் ஒரு சென்ட் பாட்டிலை அல்பமாக பரிசளித்து விட்டு பலவித உழைப்பைச் சுரண்டிக் கொண்டு ‘பிம்ப்’ வேலையையும் பார்க்கச் செய்யும் வெளிநாட்டு தூரத்து உறவும், ராத்திரி சாப்பாட்டிற்கு ரகசிய சப்பாத்திகளை நிக்கர் பாக்கெட்டிற்குள் பொதிந்து வைத்திருந்து ‘அண்ணாச்சி, வேலை ஏதாச்சும் சொல்லுங்களேன்’ எனும் திருநவேலி தம்பியும், வேறு வேறு நிறங்களில் சாக்ஸ் அணிந்திருக்கும் கேயார்வியும் என.. விதவிதமான சூழல்களும் மனிதர்களின் சித்திரங்களும் இந்த நாவலுக்கு உயிரூட்டுகின்றன.

‘ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை, வெயிலில் காயும் தோட்டு உளுந்தின் மீது கட்டையை உருட்டும் போது ஏற்படுவது போன்று ஒன்பது டைப்ரைட்டர்களின் தொடர்ச்சியான ஓசை, மெல்லிய பேச்சொலிகள், தொலைபேசியில், இண்டர்காமில் உரையாடல்கள், தூரத்து கேபின் ஒலிக்கும் பஸ்ஸர், டேபிள் பெல்லை கோபத்துடன் யாரோ அடிக்கும் சத்தம், நாற்காலியை பின்னோக்கி நகர்த்தும் அரவம், பேப்பர் கத்தைகளின் சலசலப்பு’ என்றொரு சிறிய விவரணையின் மூலமே ஓர் அலுவகத்தின் இயக்கத்தை வாசகனின் கண்முன்னே காட்சியாக விரியச் செய்யும் வலிமையை நாஞ்சில் நாடனின் எழுத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பயணம் பற்றிய துல்லியமான விவரணைகளை, சூழல்களை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறெந்த தமிழ் எழுத்தாளராவது பதிவு செய்திருப்பாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் நிற்கும் முதிர்கன்னிகளின் துயரங்களைப் பற்றி சிலபல இலக்கியப்பதிவுகள் உண்டெனினும் ஏறத்தாழ அதைப் போலவே நிற்க நேரும் ஒற்றைச் சேவல்களைப் பற்றிய பதிவுகள் குறைவு. பெருமாள்முருகன் எழுதிய ‘கங்கணம்’ எனும் சமீபத்திய நாவல், திருமணம் ஆகாத கொங்கு சமூகத்து இளைஞன் ஒருவனின்  மனச்சிக்கல்களைப் பற்றி பேசுகிறது. என்றாலும் திருமணம் எனும் நிறுவனத்தின் மூலம் மட்டுமே காமத்தை அடைய முடிகிற பண்பாட்டுச் சூழலைத்தாண்டி உடலின் உந்துதலால் அதிலிருந்து இடறுகிற, தவிர்க்கிற சந்தர்ப்பங்களைப் பற்றிய நாராயணனின் அனுபவங்களும் கூட யோக்கியமாகவே இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. முறையான வயதில் திருமணம் செய்ய முடியாமல் போகிற அத்தைப் பெண்ணை, சில வருடங்கள் கழித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அவள் குளித்து விட்டு வருகிற ஒரு மாலை வேளையில் பார்க்கிற நேரும் போது ஏற்படும் ரகசிய மையலும் பின்னொரு சமயத்தில் அது விநோதமானதொரு கனவின் புணர்ச்சியில் முடியும் ஆழ்மனகுழப்பமும் சங்கடமும் என நிறைவேறா காமத்தின் வெளிப்பாடுகளும் மிக நுட்பமான பகுதிகள்.

நாராயணனின் பயணம் மேற்கொள்ளும் விவரணைங்களின் துல்லியம் அவருடன் வாசகனும் பயணம் செய்யும் அனுபவத்தை நிகழ்த்துகிறது. தாயின் இறப்பிற்காக செல்லும் பயண அனுபவங்களுடனே கூடவே ஊரில் நிகழும் பிரதேச முறைசடங்குகளை, உறவுகளின் உடல்மொழியை மனக்கண் காட்சிகளின் மூலமாக split screen உத்தியில் இணையாக விளக்கிச் செல்லும் பகுதிகள் அருமை. திராவிடக் கட்சிகள் விதைத்த பிராமண வெறுப்பும் சக உறவுகள் உதவி செய்யாத நிலையில் அயல் சமூக மக்கள் எத்தனை நட்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிற புரிதலும். ஓரின ஈர்ப்பு குறித்த ஒவ்வாமை கூட சிறு தடயமாக பதிவாகியிருக்கிறது.

விவசாயத்திற்கு சொற்ப நிலமும் ஒரு வீடும் இருந்தாலும் வறுமையைக் கடக்க மும்பைக்கு புலம் பெயரும் நாராயணன் மனம் முழுக்க ஊர் நோக்கியே இருக்கிறது. உறவுகள் கைவிடுவது முதல் எத்தனையோ காரணங்களால் அவனது திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. ஒருநிலையில் அவனே அதில் ஆர்வமிழந்து போகிறான். இது இயல்பானதுதான். ஆனால் ஒரு நெருடலான விஷயம். புலம்பெயர்ந்த சூழலில் இருந்து ஏன் அவனால் வேறு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லை? தன்னுடைய பிரதேசம் குறித்த சாதி குறித்த அழுத்தமான பிரக்ஞையோடு அவன் இருக்கிறானா என்று தோன்றுகிறது. நாவல் முடியும் இடத்தில் சக பணியாளப் பெண்ணை அவன் திருமண உத்தேசத்துடன் அணுகுவதற்குக் கூட அவள் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்தவளா என்றறியாத நிலையிலும் தன்னுடைய ‘ஊர்க்காரி’ என்கிற பரவசம்தான் காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ இவனுடைய நிலையிலேயே இருக்கும் சக பணியாளனான ‘குட்டினோ’விற்கு கூட தன்னுடைய காதலியை சேர முடியாத ஏக்கமாவது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் நாராயணனுக்கு அதுகூட இல்லை.

ஆனால் இதுவொரு கோணம்தான். ஏனெனில் நாராயணன் அத்தனை சுருங்கிப் போன மனமுடையவனாகவும் இல்லை. மண்ணைப் பிரியும் ஏக்கத்துடன் அகத்தால் அல்லாவிட்டாலும் செல்லுமிடங்களில் எல்லாம் பெளதீக சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயமும் சாமர்த்தியமுள்ளவனாகத்தான் இருக்கிறான். கடுமையான வெயிலில் வறட்சியான பயணத்தின் போது கூட லாரியில் பயணம் செல்லும் சிறுமி புன்னகையுடன் எறியும் கரும்புத் துண்டு அவனுடைய கசப்புகளை தற்காலிகமாவாவது கடக்கத் துணியும் மலர்ச்சியை தருகிறது.

***

புறநகர் ரயில் பயணம் ஒன்றில் செய்தித்தாளுக்காக நாராயணன் அணுகும் ஒரு சிறுவன் தன்னுடைய பிரதேசத்தைச் சார்ந்தவன் என்பதும் சில்லறைப் பணிக்காக புலம் பெயர்ந்தவன் என்றும் தெரிகிறது. அந்த உரையாடல் இப்படியாகப் போகிறது.

“தம்பி திருநவேலியா?”

“திருநவேலிக்குப் பக்கத்திலதான். நாங்குநேரி.. வந்திருக்கேளா?”

“நான் நாகர்கோயிலு. நாங்குநேரி தாண்டித்தான் போகணும்”

“இங்க கம்பெனில வேலை பாக்கேளா?”

“ஆமா… சேல்ஸ்மேனா இருக்கேன்”.

“எனக்கு ஒரு வேலை இருந்தாச் சொல்லுங்களேன்..பத்தாங் கிளாஸ் பாசாகி இருக்கேன். இங்க வந்து எட்டு மாசம் இருக்கும். அந்த அண்ணாச்சிதான் கூட்டியாந்தாரு. .. ரயில்வே கேன்டீன்ல கிளீனர் பாயா இருக்கேன்.  முன்னூறு ருவா சம்பளம்.  வாரம் ஒரு நாள் லீவு உண்டும்.  ஊருக்கு ஓடிராலாம்னு இருக்கு. ..”

“ஊரிலே போயி என்ன செய்வே?”

“அங்க போனா ஆடுதான் மேய்க்கணும். ஒரு வீம்புலதான் இங்க கெடக்கேன்”

***

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. நாராயணனேதான். கோடிக்கணக்கான நாராயணன்களின் ஓர் இளமைச் சித்திரம்.

சிறுகதைகளின் முடிவு- டி. சி. பாய்ல்

(அட்லாண்டிக் இதழில் ஜோ பாஸ்லர் தொகுத்த கட்டுரையின் ஒரு பகுதி)

ரே கார்வர் 1970களில் அயோவா நகரிலிருந்த காலத்திலேயே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அங்கு நான் ஐந்தரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், முதலில் ரைட்டர்ஸ் வர்க்சாப்பில் எம்எப்ஏ படித்தேன், அதன்பின் அங்கு பிஎச்டி செய்து முடித்தேன். அப்போது அவர், வுட் யூ ப்ளீஸ் பி கொயட், ப்ளீஸ்? என்ற அவரது முதல் நூலை மட்டும்தான் பதிப்பித்திருந்தார். அதற்கு முன் எங்களைத் தவிர வேறு யாரும் அவரைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை- அவர் எழுதிய கதைகள் எவ்வளவு மகத்தானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், சிறுபத்திரிக்கைகளில் அவர் எழுதிய ஒவ்வொரு கதையையும் தேடிப் படித்தோம். (more…)