
பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.
கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள். (more…)
