பாவண்ணன் சிறப்பிதழ்

திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]

பாவண்ணன்

popsicle-stick-house

ஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின்  விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.

போட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற  கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமிஇங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.

அது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு  வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.

கையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது.  இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது.  சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க  என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணேஎன்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள்என்னடா செய்றிங்க?” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.

காற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களாஎன்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற?” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடாஎன அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம்எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா?” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா?” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போஎன்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.

ஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.

சந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து  ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம்? புள்ளய காட்டி என்ன பிரயோஜனம்? அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சிஎன்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயாஎன்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.

இருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.

திண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது  ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.

பழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில்அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குதுஎன்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடாஎன்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகுஇல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாருஎன்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமேவாடா, வேகமா போயி பாக்கலாம்என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்?” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.

நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.

கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா?”

மாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.

செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன்? கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ? புத்தி இல்லாத மடயனா நீ? ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”

அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்குவிழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.

என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல? திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”

நான் எங்கக்கா போவன்? எனக்கு ஒருத்தரயும் தெரியாதுக்கா…..”

பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க.  முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”

ஐயோ அக்கா

டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”

அத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

அத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று  கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு  இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.

அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடுஎன்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலைஎன்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகுநாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

மறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே  அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவுஎன்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார்ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமிஎன்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.

மாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில்எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே?” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா?” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.

என்னங்ண்ணே இது? ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணேஎன்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடுஇங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணேஎன்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடாஎன்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போதுஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணேஎன்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போஎன்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.

அடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டிஎன்ன தம்பி? யாரு ஓணும்? யார தேடற?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடிகுடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மாஎன்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இருஎன்றாள் அவள்.

ஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா?” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்என்ன சாப்பாடு சாப்புடற நீ? இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு? ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா?” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போஎன்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில்அண்ணே அண்ணேஎன்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.

என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட? ஏதாச்சும் கோயில் பயணமா?” என்று கேட்டான் மாயாண்டி.

கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு? ஊரு எதுக்கு? அதான் கெளம்பிட்டம்ண்ணே

பக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.

இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணேஎன்றான்.

கனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணேஎன்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடுஎன்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாகசரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா?” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.

புறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான்.  பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

வருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா?. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாருஎன்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடாஎன்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.

ஆண்டாள் அன்று இரவு  எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடிநா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன்? வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு?” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.

போட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம்நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா?” என்று கேட்டான்.

பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு

ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.

ஒனக்கு எதுக்குடா தட்டு?”

என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”

முத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ? ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா?” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.

இரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.

வானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது.  முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பாஎன்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி.  அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.

டேய் பசங்களா, ஏந்துருங்கடா

முத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.

முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா

எங்கம்மா?” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.

பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்

திண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.

கண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமிஎன்னடா?” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.

திடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மாஎன்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.

எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில்சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாருஎன்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா?” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருதுஎன்று சொல்லிவிட்டு சிரித்தான்.

நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை

paakkuthotam-1

லண்டனில் பனிமூட்டம் நிறைந்த நாள் ஒன்றில் குடும்பத்துடன் ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். நாற்பதடி தொலைவுக்கு மேல் இருந்தவை எல்லாமே பனித்திரையால் மறைக்கப்பட்டிருந்தன. ‘பனி மூட்டத்தில் அருகிலிருப்பவை மட்டும் நம் கண்ணுக்குத் தெரிவதும் தொலைவில் உள்ளவை தெரியாததும் ஏன்’ என என் மகன் கேட்டான். வழக்கம் போலவே என் மகளும் அந்தக் கேள்வியை தனதாக்கி ‘ஆமா ஏன்?’ என்றாள். பனிமூட்டத்தை வலைகள் போன்ற திரைச் சீலைகளுக்கு ஒப்பிட்டு விளக்கினேன். ஒன்றோ இரண்டோ மெல்லிய திரைச்சீலைகள் நம் பார்வையை அதிகம் மறைப்பதில்லை. ஆனால் தூரம் செல்லச் செல்ல பல திரைச் சீலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் போடப்பட்டிருக்கும்போது அவை வலைபோல துவாரங்கள் உள்ளவையாய் இருந்தாலும் பல அடுக்குகளாய் இருக்கும்போது பார்வையை மறைக்க ஆரம்பிக்கின்றன.

மனிதக் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குறிப்பாக பல்வேறு வகையான மக்களும் கூடும் இடங்ககளுக்குச் செல்லும் போதும் அந்தத்திரளில் எத்தனை மனித வாழ்க்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் எண்ணம் நமக்கு வந்துபோகும். அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிரம் அனுபவங்கள் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. நம் அருகே இருக்கும் வாழ்க்கையை நாம் நேரடியாக கவனிக்கிறோம். தொலைவில் உள்ளவற்றை திரைச் சீலைகள் அல்லது பனிமூட்டங்கள் மறைக்கின்றன. நாமே நம்முன் இட்டுக்கொள்ளும் திரைச் சீலைகள். அவரவர் தங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் திரைச்சீலைகள்.  கருத்துக்கள், நம்பிக்கைகள், காலம், தூரம் எனும் பனிமூட்டங்கள் நம் கண்களுக்கு பிறரின் வாழ்கையை மறைத்துக்கொண்டே இருக்கின்றன. தனது “பாக்குத்தோட்டம்” சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகளின் வழியே பனிமூட்டம் மெல்ல விலகும்போது கிடைக்கும் காட்சிகளாக பத்து வாழ்கைகளை, அவற்றின் சில கணங்களை நமக்குக் காணத்தருகிறார் பாவண்ணன்.

சைக்கிளில் கூடைகட்டி கோழி விற்பவரின் மகன், பால் வியாபாரியின் குடும்பம், கல்லைக் குடைந்து தொட்டி செய்பவர், திருக்குறளை திருந்தச் சொல்லும் ஒரு இஸ்திரிக்காரர், அரச இலையில் படம் வரைந்து தெருவில் விற்கும் கலைஞர், மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்பவர் என  பல்வேறு வாழ்கைகளை பாக்குத்தோட்டம் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரின் புகைப்படத் தொகுப்பை திறந்து முகங்களை, நிலக்காட்சிகளை, சூழலை காண்பதைப் போல பாக்குத்தோட்டம் தரும் அனுபவம் அமைந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் முதல் கதை ‘சைக்கிள்‘. முதல் வாசிப்பில் எளிதாகத் தோன்றும் கதை. சைக்கிளில் கூடை வைத்து கோழிகளை எடுத்துச் சென்று விற்பவர்களின் சித்திரம் எத்தனை பழமையானதாய் இன்று தோன்றுகிறது? அது ஒரு மறைந்தே போன காலத்தின் சித்திரம். அநேகமாய் இருபது வருடங்களுக்கு முந்தையதாய் இருக்கலாம். கோழி விற்பவரின் மகனுக்கும் சைக்கிளுக்கும் ஒரு உறவு அல்லது பகை உள்ளது. அவனால் சைக்கிள் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் தந்தை வற்புறுத்துகிறார், தெருவில் போட்டு அடிக்கிறார். அவர் தந்தையின் நண்பர் ‘அப்துல்லா மாமா’ அன்பாக சொல்லித் தருகிறார். ஆனாலும் சைக்கிள் கற்றுக்கொள்வதில் ஒரு பிரத்யோகமான சிரமம் அவனுக்கு இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரன் அவன். அவனது தந்தை நம் கலாச்சாரத்தின் தேய்வழக்கான பொறுப்பற்ற குடிகார ஓடுகாலி. கதையின் இறுதியில் அப்பா ஓடிப்போகிறார். சைக்கிளை விற்று அவன் படிப்புக்கு பணம் கட்ட உதவுகிறார் அப்துல்லா மாமா. அவனுக்கு பிறர் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் ஒரு ஏக்கம் தோன்றுகிறது. கதையின் முடிவில் தெருவில் சைக்கிளில் ஒருவர் மணியடித்துச் செல்லும்போது அவன் முகம் மாறுகிறது. இங்கிருந்து கதையை மீள்வாசிப்புசெய்தால் சைக்கிள் ஒரு குறியீடாக மாறிவிடுகிறது. அது அவன் வாழ்க்கையில் இருந்ததும் இல்லாததுமான தந்தையைச் சுட்டும் ஒன்றாகிறது. அவனது கனவுகளுக்கு எதிரான ஒன்றை சுட்டும் ஒன்றாகிறது. ஒருவன் கோழி வியாபாரி ஆவதற்கும் படித்து பட்டம் பெறுவதற்கும் இடையேயான அசாதாரணமான மெல்லிய வித்தியாசத்தை சைக்கிள் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது கதை ‘கல்தொட்டி‘  பால் வியாபாரி ஒருவரின் மகன் சொல்லும் கதை. அவன் வீட்டில் அவனும் அவன் தந்தையும் தவிர அனைவரும் பெண்கள். இரண்டு அத்தைகள், ஆயா மற்றும் அம்மா. மாடுகளை பராமரிப்பதும் பால்கறந்து வைப்பதும் பெண்களின் வேலை. அதை மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்வது அவன் தந்தையின் தொழில். கதைசொல்லும் சிறுவனுக்கு பால் கணக்கெழுதும் வேலை. அவன் தந்தை கண்டிப்பான மனிதர்.  ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒருவர் கதையில் நுழைகிறார். அவர் முன்பு வேலைக்கு இருந்த பண்ணையாரின் பிள்ளைகள் பசுவை விற்றுவிட்டு பஸ்ஸை வாங்கி ஓட்டியதால் அவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. கல்லைக் குடைந்து தொட்டி செய்வது அவரது வேலை. கதையின் துவக்கத்திலேயே கன்றுக்குட்டி மண்தொட்டியை உடைத்துவிட்டதால் கல்தொட்டியின் தேவை இன்றியமையாததாகிறது. கதைசொல்லியின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள அந்த மனிதர் அந்த வீட்டின் பின்பக்கத்தில் தங்கி கல்தொட்டி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். இறுகிக் கடுமையாகி பயனற்று கிடக்கும் ஒரு கல் மெல்ல மெல்ல உடைந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக, தொட்டியாக மாறி வருவதை அந்தக் குடும்பமே வேடிக்கையுடன் பார்க்கிறது. மெல்ல மெல்ல கல்தொட்டி உருவாகி வரும்போதே சின்னச் சின்ன உரையாடல்கள் வழியே கதைசொல்லி சிறுவனுக்கும் கல்தொட்டி செய்பவருக்கும் நட்பு வளர்கிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் மேலே சென்று அந்தச் சிறுவன் ‘வெள்ளைக்கார துரைகளைப்போல’ குளிப்பதற்கு ஒரு குளியல் தொட்டியையும் செய்து கொடுக்கிறார். ஆங்கிலத்தில் ‘ஃபீல் குட்’ என அழைக்கப்படும் இதமான கதையின் முடிவில் அந்தத் தொழிலாளி திடீரென பைசல் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகையில் அந்த வீடே உறைந்து நிற்கிறது. சட்டென ஒரு சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ‘கல்தொட்டி’  இந்தத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை. அதன் பாத்திரங்களின் எளிமை வியப்புக்குரியது . கதை முடிகையில் ஏற்படும் சோகம் பிரிவின்பாலா அல்லது ஏழ்மையின்பாலா என்பது வாசகரே கண்டடைய வேண்டியது.

பாக்குத்தோட்டம்‘ எனும் தலைப்புடைய கதை கர்நாடக பாரம்பரிய நிகழ்த்து கலையான யட்சகானத்தை ரசிக்கும் மூவரின் கதை. கதை சொல்லி, அவரது சக ஊழியர் மற்றும் கிராமத்துச் சிறுவன். இம்மூவரையும் இணைக்கும் புள்ளி யட்சகானம். அது கதாகாலட்சேபம் போன்றதொரு கலை. யாராவது ஒருவருக்கு மட்டுமே விடுப்பு அனுமதி என மேலாளர் சொல்ல. கதைசொல்லியை தன் கிராமத்துக்குச் சென்று யட்சகானம் காண வாய்ப்பளிக்கிறார் சக ஊழியர். கதைசொல்லி கிராமத்துக்குச் சென்று நண்பரின் வீட்டிலேயே தங்கி யட்சகானம் காண்கிறார். அங்கே கிராமத்துச் சிறுவர்கள் பொழுதுபோக்காய் யட்சகானத்தை பழகுவதைக் காண்கிறார். அதில் மிக தத்ரூபமாக நடித்த தலைமைச் சிறுவனோடு உரையாடுகிறார். அப்போது அவன் ‘பாக்குத்தோட்டத்தின்’ கதையை சுருங்கச் சொல்கிறான். அவன் ஏழைச் சிறுவன். அவன் ஏழ்மைக்குக் காரணம் பாக்குத்தோட்டம். அதையும் பிற சொத்துக்களையும் அவனது மூதாதை ஒருவர் சூதாட்டத்தில் இழந்துவிடுகிறார். ஒரு குடும்பத்தின் ஏழ்மை இன்னொருவ‌ரின் செல்வம். அந்த இன்னொருவர் தன் சக ஊழியர் என அறியும்போது கதைசொல்லியின் மனம் திடுக்கிடுகிறது. விழாவின் கடைசி நிகழ்வு திரௌபதி வஸ்திராபரணம். அது கதைசொல்லியை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக நம்மிடையே சொல்லப்படும் ஒரு கதை இன்றும் நம்மிடையே காணக் கிடைக்கிறது. அந்த மாபாரதக் கதையின் மாந்தர்களை தன் கண்முன் நேரடியாகக் காண்கிறார். யட்சகானம் காலத்தின் மேடையில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அதில் அவரும் ஒரு பாத்திரம் என உணர்கிறார்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் வரும் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். மைய பாத்திரங்கள் எல்லாமே ஏதோவொரு திக்கற்ற நிலையில் இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு மனமுவந்து உதவி புரியும் நல்லவர்கள் அல்லது அவர்கள் மீது பரிவு காட்டுபவர்கள். அப்துல்லா மாமாவில் துவங்கி இங்கலீஷ் சார் வரைக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் கதைகளே இத்தொகுப்பிலுள்ளன. அவர்கள் பொருட்டே இக்கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன எனலாம். மனித மனங்களின் அவலங்களையும் இருண்ட பக்கங்களையும் யதார்த்த வாழ்வின் கொடூரங்களையும் மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் காட்டும் இந்நாட்களில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவற்றின் நம்பகத்தன்மை குறித்த அவநம்பிக்கை மிக இயல்பாக எழுகிறது. உண்மையிலேயே இன்றும் தன்னலம் பாராமல் பிறருக்காக மெனக்கெடுபவர்கள் இருக்கிறார்களா? ஆம் என்பதுவே பாவண்ணனின் பதிலாக இருக்கும். பத்தில் எட்டு கதைகள் மானுடம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. மிக எளிதாக சாதாரண ‘நல்லொழுக்கக்’ கதைகள் என வகைப்படுத்தப்பட தகுதியான இந்தக் கதைகளை பாத்திரப் படைப்பின் மூலமும், காட்சி விவரிப்பின் மூலமும் பாவண்ணன் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

பாக்குத்தோட்டத்திலேயே நாடகத்தனமாக தோன்றிய கதை ‘பெரியம்மா‘. இதிலும் ஆதரவற்றவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் என்று கதை சென்றாலும் முழுக்க முழுக்க மனிதனின் நன்மைத்தனத்தை மட்டுமே கொண்டு கதைகள் எழுதப்படும்போது அவை சிக்கலற்றவையாக, வாசிக்க சுவாரஸ்யமற்றவையாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது.  மிகுந்த ஒளியும் குருடாக்குவதுதான்.

பாக்குத்தோட்டம் தொகுப்பில் நான் பெற்றது பல வண்ண வாழ்கைகளின் சித்திரங்கள். அவற்றின் நிதர்சன சிக்கல்கள்.  மனம் சோர்ந்து கைவிடப்படும் சில மனிதர்களின் வாழ்கையில் ஒரு பிடிகிளை கிட்டும் தருணங்களின் விவரிப்புகள். இலக்கியம் என்பது காம குரோத பேதங்களை மட்டுமல்ல அன்பையும், தன்னலமற்ற செயல்களையும்  பேச முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கதைகள். தேடுபவன் கண்டடைவான் எனும் நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.

அமெரிக்க அப்பாச்சே செவ்விந்தியர்களின் குடித்தலைவர்களில் பிரசித்தி பெற்றவராகிய ஜெராணிமோவை வெள்ளையர்கள் ஒரு வினோத கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவரும் ஒரு காட்சிப்பொருள் என்பது வேறொரு சுவாரஸ்யம் என்றாலும் அவர் அங்கே இரு துருக்கியர்கள் வாள் சண்டையிடுவதைக் கண்டு வியக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க தீவிர சண்டைகளை இட்டு பல நூறுபேரைக் கொன்ற ஜெராணிமோவிற்கு அந்தச் சண்டைக் காட்சி வியப்பூட்டுவதாக இருப்பதற்குக் காரணம் அந்த வாள் வீரர்கள் ஒருவர் இன்னொருவரை காயப்படுத்துவதில்லை. அவர்களின் இலக்கு மற்றவரின் தலையை தன் வாளால் தொடுவது மட்டுமே. ஜெராணிமோவிற்கு இரத்தமில்லாத வாள் சண்டை மிக வினோதமானதும் ஆச்சர்யமூட்டுவதுமாயுள்ளது. அதே உணர்வே பாக்குத்தோட்டம் தொகுப்பு எனக்களித்தது. பாவண்ணன் இரத்தமின்றி வாழ்சுழற்றத் தெரிந்த வீரர்.

பன்முக ஆளுமை – பாவண்ணன்

விட்டல் ராவ் 

விட்டல்ராவுடன் (1)

வாழ்நாள் படைப்புச் சாதனைக்கென அங்கங்கே அவ்வப்போது சிறப்பு விருதுகளும் கெளரவங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கவனிக்கும்போது, வயதும், படைப்பாக்கத்தில் தேக்க நிலை தொடர்பாயும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எண்பதுகள் என்பது மிகச் சமீபத்திய காலம்அதுவும் கலையிலக்கிய சங்கதிகளுக்கு. எண்பதுகளில் தோன்றி இந்த கணம் வரை இடையறாது சிறுகதை, கவிதை, நாவல், திரைப்பட விமர்சனம், நூல் விமர்சனம், பல்வேறு உலகியல் விஷயங்களைப் பற்றிய விரிவான ஆழ்ந்த கட்டுரைகள் என்று தொய்வோ தளர்ச்சியோ இன்றி எழுதி வரும் பாவண்னனின் படைப்பாக்க இளமையின்பேரில் ஆச்சரியமும் பொறாமையும்கூட ஏற்படக்கூடும்.

ஆரம்பத்தில் எண்பதுகளில் தீபம் இதழின் பக்கங்களில் படிக்க நேரிட்டபோதே என் கவன ஈர்ப்பின் உள்ளடக்கத்தில் அன்பர் பாவண்ணனும் ஒருவராக இருந்தார். தீபம் அலுவலகத்தோடு நெருக்கமாயிருந்த சமயம். அங்கிருந்த கம்பாசிடர் கையெழுத்துப் பிரதியிலிருந்த கதையொன்றைத் தந்துப் படிக்கச் சொன்னார். மிகவும் நன்றாக வந்திருந்தது. அதுவும் பாவண்ணன் கைவண்ணமே. பிறகு விட்டு விட்டு கண்ணில் படும் போதெல்லாம் தவறாமல் அவரது குறுநாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்து விடுவேன். பாவண்ணன் எல்லா பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். எந்தவொரு புதிய இதழ் ஆரம்பிக்கப்படும்போதும் கவனம் விட்டுப் போகாத படைப்பாளிகளில் இவரும் இருப்பார். வெங்கட் சாமிநாதன் பாவண்ணனைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொல்லுவார், “ சமீபமா பத்துப் பத்திரிகைகள பார்த்ததில ஏழிலியாச்சும் இவர் எழுதி வெளிவந்திருக்கய்யா. நல்லா எழுதறது ஒரு பக்கம், ரொம்ப நல்லவனாயுமிருக்கிறது இன்னும் சந்தோசமாயிடறது, இல்லையா”.

எண்பதுகளில்தீபம்காலம் தொட்டு இம்மாததீராநதியில் அவர் தொடங்கியிருக்கும் கட்டுரைத் தொடர் வரை சீரான நீண்ட இலக்கிய தடத்தைப் பார்க்கையில் பிரமிப்பு கூடிய பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒருமுறை, தீபம் அலுவலகத்தில் நானிருந்த சமயம், எஸ். சங்கரநாராயணன் வந்தார். என்னைப் பார்த்து, “ பாவண்ணன் வந்திருக்காரா?” என்று கேட்டார். இல்லையே என்றேன். இந்த நேரத்துக்கு வர்ரேனு சொல்லியிருந்தார், என்று கூறி உட்கார்ந்தார், எனக்கும் பாவண்ணனை நேரில் பார்க்கலாமே என்று. ஆனால், ஒரு மணி நேரம் கடந்தும் ஆசாமி வரவேயில்லை. சங்கரநாராயணன் எழுந்து போய்விட்டார். அதற்குப் பிறகு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில்தான் முதல் அறிமுகம். வண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் அறிமுகம் தொடர்ந்தது, பெங்களூரில் குடிபுகுந்த பின் அது இறுகித் தொடர்கிறது. காலஞ்சென்ற என் மனைவி ஏராளமாய் வாசிப்பவள். பாவண்ணன் தான் மாதமொருமுறை வீட்டுக்கு வந்து ஏராளமான நூல்களை அவளுக்குப் படிக்கத் தருவார், மருத்துவ மனையில் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை அவருடைய புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள்.

தொகுக்கப்பட்டு நூல் வடிவம் கொண்ட சிறுகதைகளை தற்போது மீள்பார்வையிடும்போது அவற்றின் வடிவமைப்பு, உத்தி, கரு, உள்ளடங்கும் சிறு செய்தி என்பவை மிகச் சிறப்பாக வந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாவண்ணன் தன்னைச் சுற்றிலுமுள்ள யதார்த்த நிகழ்வுகளையும் சலனமற்ற காட்சிகளையும் தீர்க்கமாகப் பார்த்து கிரகிக்கும் போக்கிலேயே இணையாக கனவும், கற்பனையும் கவித்துவமும் ஏற்பட்டு பிரவாகமெடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு அறுபடாது சித்தரிப்பது இவருக்கு இயல்பாகவே கைவருகிறது. இதை அவரது கவிதைப் படைப்புகளில் பளிச்சென காணமுடிகிறது. இவர் தம் கவிதைகள் பலவற்றில் இயற்கையின் எழில் தோற்றங்கள் அடுக்கடுக்காகவெற்று வார்த்தைக் குவியலாக இல்லாமல்அதே சமயம் கவிதைக்கு கவிதை மாறுபட்டும், புதியதாயும், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாமலும் காணக் கிடைக்கின்றன. இவரது கவிதை நடையினின்று சிறுகதை நடை வெகுவாக விலகித் தோன்றுகிறது.

பாவண்ணனின் இலக்கியப் பணியின் மற்றொரு முக்கிய அங்கம் மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவரது மொழிபெயர்ப்பில் அணிவகுப்பவை, எஸ்.எல். பைரப்பாவின்பருவம்’, ராகவேந்திர பாட்டீலின்தேர்என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். தேர்மொழிபெயர்ப்பு நாவலைப் படித்துவிட்டு என் மனைவி மிகவும் பாராட்டிய பிறகே, நான் படித்தேன். கன்னட தலித் சிறுகதைகள் என்ற இவரது பொழிபெயர்ப்பில் வெளிவந்த கதைத் தொகுப்பு மிகவும் சிலாகிக்க வல்லது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான (பருவம்) சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாவண்ணன். நாவலுக்கான இலக்கியச் சிந்தனை பரிசும், சிறுகதைக்குகதாவிருதும் பெற்று கெளரவிக்கப் பட்டவர்.

பாவண்ணனின் கட்டுரையாக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமீபத்தில்தான்ஒட்டகம் கேட்ட இசைகட்டுரைத் தொகுப்பு நூலைப் பார்க்க நேரிட்டாலும், இதழ்கள்தான் அவருடைய கட்டுரைகளை நிறையவே படிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவை. சிறுகதைகளில் இவருடைய கவிதை நடை அவ்வளவாக வாய்ப்புப் பெறாவிட்டாலும், கட்டுரைகளில் அவரது கவித்துவம் ஆங்காங்கே தெறிக்கின்றன. அதிகம் இல்லாவிட்டாலும் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் இவர் பங்கிற்கு இருக்கின்றன. நவீன கன்னட திரைப்படங்கள் இரண்டுக்கான விமர்சனக் கட்டுரைகள் இவரது சினிமா ரசனைக்கு எடுத்துக்காட்டு. அவையிரண்டுமே கன்னட சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர் கிரிஷ் காசரவள்ளி தயாரித்தது. அந்த இரு விமர்சனக் கட்டுரைகளிலும்த்வீபாஎனும் படத்துக்கான பாவண்ணனின் விமர்சனம் அதிசிறப்பாய் வந்திருந்தது. ஒவ்வொரு திரைப்பட விமர்சனமும் அது எழுதப்பட்ட அளவிலேயே முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது என்பதும் விசேஷம். அதைப் போலவே அவர் எழுதிவரும் பிற கட்டுரைகளும் விசேஷ கவனம் கொள்ளத் தக்கவை.

புத்தக விமர்சனம் (நான் மதிப்புரை என்பதை தவிர்க்கிறேன்) திரைப்பட விமர்சனம்போல இருந்துவிடலாகாது என்பது போலவே திரைப்பட விமர்சனமும் நூல் விமர்சனம் போன்றிருக்கக் கூடாது என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. இவ்விஷயம் பாவண்ணனுக்கு வெகு இயல்பாக அமைந்து விடுகிறது. இவர் எழுதி வரும் நூல் விமர்சனம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த நோக்கில் கச்சிதமான சமநிலையோடு எழுதப்படுவது. ஒவ்வொரு நூல் விமர்சனமும், ஒரு விமர்சனத்துக்கும் அப்பால் சென்று அந்த நூலுக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்க்கவல்ல முழு கட்டுரையாக அமைந்திருக்கிறது.

ஒரு விசயத்தை மையமாய்க் கொண்டு எழுதும்போது அதைச் சுற்றி பல்வேறு விஷயங்களையும் கலை இலக்கிய நயத்தோடு சொல்லிக்கொண்டு போகும் வெங்கட் சாமிநாதனின் வழியை ஒட்டி அவரைப் பற்றின கட்டுரைத் தொடரை தீராநதியில் தொடங்கியிருக்கிறார் பாவண்ணன். ஆரம்பப் பக்கங்களே ஆர்வமூட்டுகின்றன. பாவண்ணனின் படைப்பாக்கத்துக்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.    

குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]

Paavannan 21

பதாகை: ஆரம்பத்தில் கவிதை எழுதத்தொடங்கியபோது எண்சீர்விருத்தம், ஆசிரியப்பா வடிவில் எழுதத்தொடங்கி பின்னர் குறுங்காவியங்கள் எழுதியதாக ஒரு பேட்டியில் படித்திருக்கிறேன். நீங்கள் கவிதை எழுதத்தொடங்கியது ஏன்? கவிதையிலிருந்து சிறுகதை எனும் வடிவத்தை கைகொண்டது எப்படி?

பாவண்ணன்: ஏன் தொடங்கினேன் என்கிற கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்வது சிரமம். ஆனால், எப்படித் தொடங்கினேன் என்று விரிவாகச் சொல்லமுடியும். அந்தப் பதிலிலிருந்து இந்தப் பதிலை நோக்கிச் செல்வது ஒருவகையில் எளிதாக இருக்கும். திருக்குறள் வாசிப்புதான் இளம்பருவத்தில் என் இலக்கிய ஆர்வத்துக்கான தொடக்கம். அதைத் தொடர்ந்து வாசித்த பாரதியார் கவிதைகளும் பாரதிதாசன் கவிதைகளும் என்னைக் கவிதைகளின் உலகத்தை நோக்கி அழைத்துச் சென்றன. எங்கள் பள்ளித் தமிழாசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள். ஒரே ஒரு பாடல் வரியை எங்கள் மனத்தில் பதியவைப்பதற்காக ஒரு வகுப்புநேரம் முழுதும் நீளும் அளவுக்கு அந்த வரி சார்ந்த வரலாற்றையே கதையாக எடுத்துச் சொல்வதில் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தார்கள். நளவெண்பாவிலிருந்து எங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த ஒரு நாலுவரி வெண்பாவைச் சொல்லிக் கொடுப்பதற்காக, நளன் சரித்திரத்தையே கதையாகச் சொல்லி விளக்கியவர்கள் அவர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயணம் கதைகளையெல்லாம் அவர்கள்வழியாக நாங்கள் அப்படித்தான் தெரிந்துகொண்டோம். அச்சமயத்தில் எங்கள் ஊரில் திருக்குறள் கழகம் என்னும் பெயரில் இலக்கிய அமைப்பொன்று இயங்கிவந்தது. மாதத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து வரும் பேச்சாளர்கள் அந்த அமைப்பில் உரையாற்றுவது வழக்கம். இரண்டுமூன்று நாட்கள் நடைபெறும் அதன் ஆண்டுவிழாவில் கவியரங்கம், உரையரங்கம், இலக்கியப் பேருரைகள் என நடைபெறும். இந்தப் புறச்சூழலால் உருவான மன எழுச்சியும் கவிதைக்கான மனநிலையை அளிக்கக்கூடியதாக இருந்தது. அப்போது நான் பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் காலை ஏரிக்கரையில் இருந்து திரும்பிவரும்போது தொலைவில் ஒரு நாவல்மரத்தின் அருகில் ஏராளமான காக்கைகள் கூடி இரைச்சலிடும் ஓசையைக் கேட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக நடந்து சென்று அந்த மரத்தை அடைந்தேன். மின்சாரக்கம்பிகளில் சிக்கி உயிரிழந்த காக்கை, குழந்தை எடுக்கமறந்து வைத்துவிட்டுச் சென்ற ஒரு பொம்மைபோல தரையில் கிடந்தது. நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்துபோன காக்கையைச் சுற்றிச்சுற்றி பறந்துவந்தன. ஓர் ஊரே கூடிநின்று அழுவதுபோல இருந்தது அந்த ஓசை. அந்தக் குரல் என்னை என்னவோ செய்தது. பதற்றமாகவும் வேதனையாகவும் இருந்தது. என்னால் சில கணங்களுக்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. வேகமாக நடந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று முழுக்க அந்தக் காட்சியை என் மனம் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் மீண்டும்மீண்டும் உருவாக்கி கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தது. ஆசிரியர் பாடம் நடக்கும்போது கரும்பலகையில் இறந்துபோன அந்தக் காக்கை தெரிந்தது. நண்பர்களோடு மைதானத்தில் விளையாடும்போதும் அதைப் பார்த்தேன். சாலையில் நடக்கும்போதும் அதைப் பார்த்தேன். இரவுநேரத்தில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, சுவரில் படிந்திருந்த நிழலிலும் அதைப் பார்த்தேன். என் மன அழுத்தம் தாளமுடியாததாக இருந்தது. அன்று இரவு அந்த அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். அஞ்சலிக்குறிப்பின் தோற்றத்தைக் கொண்ட அந்தக் கவிதையே என் முதல் கவிதை. மறுநாள் எங்கள் வகுப்பு தமிழாசிரியரிடம் காட்டினேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் அவர் என்னை ஒரு மாணவனாக நடத்தியதே இல்லை. உரிமையுள்ள ஓர் உறவுக்காரர்போலவே நடத்துவார். அந்தக் கவிதை எங்களிடையே இருந்த உறவை மேலும் வலிமையாக்கிவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் எழுதிய கவிதைகளுக்கு அவரே என் வாசகர். அவரே என் விமர்சகர். இப்படித்தான் ஒரு கவிஞனாக நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஏன் தொடங்கினேன் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அன்றைய பதற்றத்தையும் வேதனையையும் கடந்துவர எனக்கு அந்தக் கவிதைதான் உதவியது. அதை ஒரு சிறந்த வழிமுறையாக நான் பயன்படுத்திக்கொண்டேன். கிட்டத்தட்ட என் முதல் சிறுகதையையும் இதே போன்றதொரு சூழலில்தான் எழுதினேன். 1981ஆம் ஆண்டு. தொலைபேசித் துறையில் கர்நாடக மண்டலத்தில் இளம்பொறியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்குச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட நாளில் பெங்களூருக்குச் சென்று திரும்புவதற்குத் தேவையான தொகை என்னிடம் இல்லை. அதைப் புரட்டுவதற்காக எங்கெங்கோ அலைந்தும் தோல்வியே கிடைத்தது. ஒரு கட்டத்தில் என்னால் நேர்காணலுக்குச் செல்லமுடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருந்தது. கடைசி நம்பிக்கையாக ஒரு நண்பனைச் சென்று சந்தித்தேன். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தான். உடனே அந்தப் பணத்துடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றேன். அன்று இரவுப்பயணத்துக்கான பயணச்சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டுக்குச் சென்றேன். நேரம் குறைவாக இருந்தது. உடனே கைப்பெட்டியில் சான்றிதழ்களை எடுத்துவைத்துக்கொண்டு கிளம்பினேன். சாப்பிட நேரமில்லை. பணத்துக்கான அலைச்சலில் அன்றுமுழுக்கவே நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. பெங்களூரில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துகொண்டு கிளம்பிவிட்டேன். மறுநாள் பெங்களூரில் நடந்ததெல்லாம் பெரிய கதை. நிறைய அலைச்சல்கள். மருத்துவச்சான்றிதழ் எடுக்கச் சென்ற இடத்தில் கைச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை சீல் போட்டுத் தருகிறவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க நேர்ந்ததால் அன்றும் சாப்பிடமுடியவில்லை. மீண்டும் இரவுப்பயணம். ஊர் திரும்பி வீட்டுக்கு நடந்து செல்ல சக்தியே இல்லை. சில மாதங்கள் கழித்து அந்த வேலைக்கான பயிற்சிக்குரிய ஆணை கிடைத்து ஐதராபாத் சென்றுவிட்டேன். ஊரையும் பெற்றோரையும் நண்பர்களையும் முதன்முறையாக பிரிந்து வெகுதொலைவு வந்துவிட்டேன். அந்தப் பிரிவு என்னை நொறுக்கிவிட்டது. என்னால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. அந்த நேரத்தில் ஊரில் என் அப்பா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு என் அம்மா மிகவும் துயரத்தில் இருந்தார். என்னுடைய ஓராண்டுப் பயிற்சியில் மூன்று மாதங்கள்மட்டுமே முடிந்திருந்தன. என்னால் என் குடும்பத்துக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமல் இருந்தது. அக்கணங்களில் என் இடத்தில் என் நண்பர்கள் இருந்து பல உதவிகளைச் செய்தார்கள். இருப்பினும் எனக்குள் பெருகிய குற்ற உணர்வுக்கு அளவே இல்லை. ஒருநாள் பயிற்சியிலிருந்து விலகி வீட்டுக்குச் சென்றுவிடலாமா என்றொரு யோசனை வந்தது. எங்கள் வகுப்புப் பொறுப்பாளரைச் சென்று சந்தித்துப் பேசினேன். நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னார். வேலை கிடைக்கவில்லை என்று ஒவ்வொருவனும் நம் நாட்டில் நாயாய் பேயாய் அலைகிறான். நீ என்னடா என்றால் முட்டாள் மாதிரி விட்டுவிடுகிறேன் விட்டுவிடுகிறேன் என்று சின்னப்பிள்ளைமாதிரி அழுதுகொண்டு வந்து நிற்கிறாய், போ, போய் ஒழுங்காக பயிற்சியை முடிக்கிற வேலையைப் பார் என்று புத்தி சொல்லி அனுப்பிவைத்துவிட்டார். அன்று இரவு மனம் மிகவும் உளைச்சலாகவே இருந்தது. மனசுக்குள் பெரிய பட்டிமன்றமே நடைபெற்றது. உறக்கவே வரவில்லை. பயிற்சிப் பொறுப்பாளரின் சொற்கள் மிக அருகில் ஒலிப்பதுபோல ஒலித்தன. அவற்றின் தொடர்ச்சியாக தற்செயலாக எனது நேர்காணல் பயணம் நினைவில் விரிந்தது. இரண்டு முழுநாட்கள் உணவில்லாமல் அலைந்த அலைச்சல் ஞாபகத்துக்கு வந்தது. என்னமோ அக்கணத்தில் பசியோடு உட்கார்ந்திருப்பதுபோல ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிட்டேன். அந்தப் பயணத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனத்தில் மீண்டும் நிகழ்ந்தன. பசியின் எல்லையில் பெட்டியில் தேடித் துழாவி கைக்குக் கிடைத்த பத்து பைசாவுக்கு ஒரு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தோலைத் தூக்கிவீச மனமில்லாமல் வெற்றிலை மடிப்பதுபோல அதையும் மடித்துக் கடித்துத் தின்றதும். தின்று முடித்து திரும்பிய கணத்தில் பேருந்துக்குள்ளிருந்து என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்த இளம்பெண்ணின் பார்வையைக் கண்டு துணுக்குற்றதும் துல்லியமான காட்சிகளாகத் தெரிந்தன. தாங்கமுடியாத ஒரு சுமையைத் தூக்கிவைத்ததுபோல மனம் தத்தளித்தது. அக்கணத்தில்தான் அதை ஒரு சிறுகதையாக எழுத முடிவெடுத்தேன். விடியவிடிய உட்கார்ந்து அதை எழுதிமுடித்தேன். அதற்குப் பிறகுதான் என் மனபாரம் மெல்ல இறங்கியது. தாமதமாகச் சென்றேன். கவிதையாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, எனது மனபாரத்தை சிறிது நேரம் இறக்கிவைத்து இளைப்பாறுவதற்கு உதவும் சுமைதாங்கிக்கற்களாக உதவியிருக்கின்றன.

பதாகை : நாஞ்சில் நாடன் சிறப்பிதழில் வந்த ஒரு கட்டுரையை பாராட்டி, நண்பர் சுனில் கிருஷ்ணனிடம் சோழகக்கொண்டலின் மின்அஞ்சல் முகவரி பெற்றுக் கொண்டீர்கள் என்பது இங்கு நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய கட்டுரையும் ஏறத்தாழ இதே போன்ற ஒரு வறிய பின்னணியை விவரிக்கிறது, அல்லவா? உங்கள் குடும்பம் மற்றும் சமூக பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா? நீங்கள், சோழகக்கொண்டல் போன்றவர்கள் விவரிக்கும் சூழல் முறித்துப் போட்ட வாழ்வுகள் எண்ணற்றவை. உங்களால் எப்படி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும், போராடும் உறுதியையும், கசப்பு தட்டாத பார்வையையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது?

உங்கள் ஆரம்பகட்ட எழுத்து வாழ்வில் வழிநடத்திய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி சொல்ல முடியுமா? இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்ததும் அதன் பல சாத்தியங்களை அறிமுகப்படுத்திய ஆளுமைகள் பற்றி?

பாவண்ணன்: தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அது என்னுடைய நல்லூழ் என்றே சொல்லவேண்டும். நான் படித்த கோவிந்தையர் பள்ளியின் ஆசிரியர் கண்ணன் மிகமுக்கியமானவர். வள்ளலார் பாடல்களை அவர் வகுப்பில் பாடிக் காட்டி பொருள் சொல்வார். ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக உயர்நிலைப்பள்ளிக்கு வந்த பிறகு ராமசாமி, அதியமான், ரங்கநாதன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் என தொடர்ச்சியாக நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுத்தார்கள். அவர்கள் அனைவருமே பாடம் எடுத்ததோடு நின்றதில்லை. பாடத்தோடு தொடர்ச்சியுடைய தகவல்களையும் கதைகளையும் சொன்னார்கள். என் ஆர்வம் எழுத்து சார்ந்து பெருகியிருப்பதைப் புரிந்துகொண்டதும் பிரியத்துடன் பல புத்தகங்களைக் கொடுத்து படிக்கத் தூண்டினார்கள். நான் எழுதிக்கொண்டு செல்லும் கவிதைகளைப் படிப்பதிலோ அல்லது யாப்புத் திருத்தங்கள் செய்துகொடுப்பதிலோ என் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஒருபோதும் சலித்துக்கொண்டதே இல்லை. ஜெயகாந்தனை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். நான் அவசியம் மு.வரதராசனாரைப் படிக்கவேண்டும் என்று அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். அவர்கள் அனைவரையும் மனத்தில் இருத்தி வணங்குகிறேன். இலக்கியம் என்னும் வகைமைக்குள் வந்த பிறகு இராஜேந்திரசோழனும் பிரபஞ்சனும் நான் அவசியமாகப் படிக்கவேண்டிய நூல்களின் பெயர்களைப் பரிந்துரைத்ததுண்டு. ஆனால் தொடர்ச்சியாக உரையாடுவதற்கோ, சாத்தியங்களைத் தெரிந்துகொள்வதற்கோ எனக்கு யாரும் இருந்ததில்லை. சொந்தமாகப் படித்துப்படித்துத்தான் ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. என் வேலை அமைப்பு முதல் காரணம். வேறொரு மாநிலத்தில் வாழ்ந்துகொண்டு அதற்கெல்லாம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளமுடியாது. என்னால். நினைத்த நேரத்தில் சட்டென்று எங்கும் புறப்பட்டுவிட முடியாது. பல சமயங்களில் விடுப்பு நாளிலும் வேலை இருக்கும். அடிக்கடி ஊருக்கு போவதையும் திரும்புவதையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. நண்பர் ஜெயமோகனுடைய அறிமுகத்துக்குப் பிறகு, பல சாத்தியங்களைப்பற்றி உரையாடியிருக்கிறோம். அவர் பாலப்பட்டியிலும் தர்மபுரியிலும் தங்கியிருந்த காலத்தில் பல முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய சந்திப்புகளும் உரையாடல்களும் எனக்குப் பலவகைகளில் உதவியிருக்கின்றன. அதையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடரமுடியாமல் போய்விட்டது.

IMG_35890127086157

பதாகை: நீங்கள் தமிழ் கவிதைகள், சிறுகதைகள் எழுதியதை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் எப்படி வரவேற்றனர்? எவ்விதமான மனநிலைகளை உங்கள் பணியிடத்து நண்பர்களிடையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது?

பாவண்ணன்: என் எழுத்து முயற்சிகளைப் பற்றி என் நண்பர்களுக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. அதே சமயத்தில் அவர்களுக்குள் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. சிறுகதைகளைப்போல கவிதைகளில் தொடர்ச்சியாக நான் பங்களிப்பை நிகழ்த்தவில்லை என்பதுதான் அந்த மனக்குறை. நான் முதன்முதலாக பணிபுரிந்த புதுச்சேரி தொலைபேசி நிலையம் எனக்கு ஏராளமான நண்பர்களைத் தேடித் தந்த இடம். தொலைபேசி நிலையத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் உண்டு. நான் இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தாலும், இரு தரப்பினரும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். எல்லோருமே என் கவிதைகளுக்கு நெருக்கமான வாசகர்கள். ஓய்வு நேரத்தில் படிப்பகத்தில் என் கவிதைகளைப் படித்துவிட்டு விவாதிப்பார்கள். மகேந்திரன் என்றொரு நண்பர் படிப்பதற்காக எனக்கு பல புத்தகங்களை விலைபோட்டு வாங்கி வந்து கொடுப்பார். அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ தொகுப்பை அவர் கொடுத்துத்தான் நான் படித்தேன். மதியழகன் என மற்றொரு நண்பர் தான் வாங்கி வைத்திருந்த பல சிற்றிதழ்களை எனக்குப் படிப்பதற்காக எடுத்துவந்து கொடுப்பார். மாலைநேரக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபடி இரவுநேரத்தில் என்னோடு வேலை செய்த நண்பர் பல ஆங்கில எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் குடும்பத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள். திருமணத்துக்குப் பிறகு என் மனைவி என்னை இயக்கும் உந்துசக்தியாகவே வாழ்கிறார். கர்நாடகத்துப் பணியிடங்களில் என்னை மிகவும் நன்றாக அறிந்த ஒன்றிரண்டு பேர்களைத் தவிர, பலருக்கு என் எழுத்துப் பணிகளைப்பற்றி எதுவும் தெரியாது. ஓர் எழுத்தாளனாக நான் அவர்களிடம் ஒருபோதும் என்னை வெளிப்படுத்துவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு நேர்மையான, அணுகுவதற்கு எளிய ஆள். கொடுத்த வேலையை குறித்த நேரத்துக்கு முன்னாலேயே வேகமாக முடித்துவிடக்கூடியவன். எந்தப் புதிய தொழில்நுட்பத்தையும் எளிதாகத் தெரிந்துகொள்ளக்கூடியவன். அவ்வளவுதான்.

பதாகை: பதாகை வாசகர்களில் பலரும் உங்களைப் பற்றிய தகவல்களை இங்குதான் முதல்முறை வாசிப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களுக்காக, உங்கள் கல்வி, மற்றும் பணிச்சூழல் குறித்து சிறிது விளக்கமாகச் சொல்ல முடியுமா – அதாவது, என்ன படித்தீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்ற விஷயம். மேலும், கடந்த சில மாதங்களாக உங்களைத் தொடர்பு கொண்டதில் நிறைய பயணம் மேற்கொள்கிறீர்கள் என்று தெரிகிறது, சில இடங்களில் தொலைதொடர்பு வசதிகூட இருப்பதில்லை. பணிச்சுமையும் அதிகம் என்று சிலமுறை சொன்னதுண்டு. கடந்த முப்பது ஆண்டுகளில் நீங்கள் எழுதியவை பல்வேறு வகைமைகளில் சாரக்கூடிய ஒரு மிகப்பெரிய body of workஆக இருக்கின்றன. இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது, அதைவிட, உங்கள் நீடித்த படைப்பூக்கத்தின் ரகசியம் என்ன?

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்றோர் படைப்புகளில் தன்னெழுச்சிக்குத் தரும் முக்கியத்துவத்தை கிராஃப்டுக்கும் கொடுத்தார்கள். நீங்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் சிறுகதை என்பதை கிராஃப்ட் எனும் வடிவமாகப் பார்க்கும் போக்கும் அதிகமாக அமைந்திருந்தது இல்லையா?

பாவண்ணன்: சிறுகதையை ஒரு கிராஃப்டாக சுஜாதா சொன்னதுண்டு. அது எந்த விளைவையும் உருவாக்கியதில்லை. அவருடைய ஒரு விளக்கம் என்கிற அளவிலேயே அதை எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் சிறுபத்திரிகை உலகில் அதே வாக்கியத்தைச் சொல்லி விவாதத்தை உருவாக்கியவர்கள் விமர்சகர்களும் விமர்சகர்களாக விரும்பியவர்களும். அது மட்டுமல்ல. எதார்த்தப் படைப்புகளுக்கு எதிர்காலமே கிடையாது, எல்லாம் இனி மாறிவிடும் என்றும் சொல்லப்பட்டது. நியூஸ் ரீல் எழுத்து என்று கேலி செய்யப்பட்டது. இலக்கிய எழுத்து, சாதாரண எழுத்து என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே ஒன்றுதான். கிராப்ஃட் நுட்பத்தை வைத்துக்கொண்டு இதற்கு மாற்றான எழுத்துகளை உருவாக்குவதன் மூலம் தமிழிலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டது. மாயாஜால எழுத்து, அமைப்பியல் எழுத்து என்றெல்லாம் வகைமைகள் கிளம்பிவந்தன. ஆளுக்கொரு வெளிநாட்டு எழுத்தாளரின் பெயரை உச்சரித்தார்கள். நான் எல்லாவற்றையும் கவனித்தேன். பல சமயங்களில் வாயடைத்துப் போய் பார்த்திருக்கிறேன். நாம் கற்றதெல்லாம் எதுவுமில்லையோ என குன்றிப் போயிருக்கிறேன். அதை நான் மறைக்க விரும்பவில்லை. தடுமாற்றத்தில் தவித்திருக்கிறேன். ஓர் ஒற்றையடிப்பாதையில் எந்த அவசரமும் இல்லாமல் நாலாபக்கங்களிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நமக்குப் பின்னால் இரண்டு சக்கர வண்டிகளும் நான்கு சக்கர வண்டிகளும் சர்புர்ரென்று சத்தமெழுப்பியபடி ஒன்றையடுத்து ஒன்றாக வருவதைப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? முதலில் அச்சத்தில் நடுங்கி எல்லாவற்றுக்கும் ஒதுங்கி வழிவிட்டு நின்றுவிடுவோம். அப்புறம் திகைப்போடு சில கணங்கள் வேடிக்கை பார்ப்போம். அதற்கடுத்து நாமே ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டு நடந்துபோய்க்கொண்டே இருப்போம் அல்லவா? அதுபோலத்தான் நடந்தது. தொடக்கத்தில் அந்தப் பேச்சுகளும் விவாதங்களும் என்னைத் திகைக்கவைத்தன என்பதுதான் உண்மை. ஆனால் எதையும் வெறுக்க நினைக்கவில்லை. வெறுப்பது என் இயல்பே அல்ல. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். கிராப்ஃட்டுக்கும் மன எழுச்சிக்கும் உள்ள உறவு எத்தகையதாக இருக்கும் என ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்தேன். பாரதியாரின் கண்ணம்மா பாடல்களை பள்ளிக்கூடப் பாடத்தைப் படிப்பதுபோல ஒரு சிறுமி படித்துக்கொண்டு செல்வதைக் கேட்பதற்கும் ஒவ்வொரு வரியிலும் இழையோடும் பொருளை உள்வாங்கிக்கொண்டு உயிர்ப்போடு ஒரு பெண் பாடுவதைக் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா? ஒரு பாட்டைக்கூட, அதற்கே உரிய தன்னெழுச்சியோடு பாடப்படும்போதுதான் நம் மனசுக்கு உவப்பாக இருக்கிறது. இன்னும் ஒருமுறை பாடமாட்டார்களா, நாம் கேட்கமாட்டோமா என்று தோன்றுகிறது. பாடுகிறவருக்கு இருக்கக்கூடிய தன்னெழுச்சி, அந்தப் பாட்டை எழுதியவருக்கு அதைவிட கூடுதலாகவே இருக்கும். தன்னெழுச்சி இல்லாமலோ, மனம் திறக்காமலோ சொல் பிறப்பதில்லை. அந்தச் சொல்லை ஆற்றல் மிக்க சொல்லாக எழுதவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கனவாக இருக்கிறது. மந்திரம்போல சொல் வந்து விழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார். என் வழி எனக்குத் தெளிவாகவே தெரிந்தது. நான் அந்த வழியிலேயே நடந்தேன்.

பதாகை: உங்களுடைய ஆரம்பகாலக் கதைகளிலிருந்து வாழ்க்கையை அதன் போக்கில் காட்டும் வடிவத்தை நீங்கள் சிரத்தையாக மேம்படுத்தி வந்துள்ளீர்கள் எனும்போது புனைவுகளில் சோதனை முயற்சிகளை உங்கள் மனம் எப்படி எதிர்கொண்டது?

பாவண்ணன்: புதுமையின்மீது எப்போதும் விருப்பம் கொண்டவன் நான். எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் எழுதப்பட்ட சோதனைமுயற்சிகள் மிகமிகக் குறைவானவை. அவை புதுமையை நோக்கிய தாவல் அல்ல. வெறும் பாவனைகள். எவ்விதமான கலைவேட்கையும் இல்லாமல் மொழியார்வமும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட முதிரா முயற்சிகள். தடுமாற்றம் இருந்ததென்றாலும் நான் என் வழியிலேயே மிகமிக மெதுவாக நடந்துகொண்டே இருந்தேன். தேங்கி நின்றுவிடக்கூடாது என்பதனாலேயே என் மனத்தை அக்கணத்தில் மொழிபெயர்ப்பின் பக்கம் திருப்பினேன். அதே நேரத்தில் அம்முயற்சிகளைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தபடி இருந்தேன். மரபான ஒரு வடிவம் தொடர்ச்சியாக கையாளப்பட்டு கையாளப்பட்டு, ஒரு கட்டத்தில் கைப்பழக்கமாகிவிடும்போது ஒரு சலிப்பு உருவாகும் அல்லவா? அந்தச் சலிப்பைக் கடந்துசெல்வது எப்படி என்பதுதான் பிரச்சினை. அது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதைப் புரிந்துகொண்டதும், என்னளவில் அதை நான் எப்படிக் கடந்து செல்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பு வெளிவந்திருந்த சமயம் அது. அந்தத் தொகுப்பின் காலவரிசை அமைப்பு என் பிரச்சினைக்கு விடையாக இருந்தது. சலிப்பு என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு மொழியிலும் எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்னும் உண்மை உறைத்தது. அகச்சிக்கல் சார்ந்து சில கதைகளை எழுதி முடித்ததுமே, முற்றிலும் புற உலக விவரணைகள்சார்ந்து சில கதைகளை எழுதுகிறார் புதுமைப்பித்தன். சட்டென்று தொன்மம் சார்ந்து ஒரு கதை. பிறகு எப்போதோ ஒருமுறை திடீரென கனவுபோல விரியும் ஒரு கதை. அப்புறம் திடீரென நாட்டார்கதையின் சாயலைக் கொண்ட ஒரு கதை. சட்டெனத் திரும்பி புராணம்சார்ந்து ஒரு கதை. அப்புறம் மறுபடியும் அகம்சார்ந்த ஒரு கதை. அவருடைய கதைகளைப் பின்தொடர்ந்தபோது ஒரு குதிரைவீரனின் பயணத்தைத்தான் நினைத்துக்கொண்டேன். கிராமத்துச்சாலை, நகரத்துச்சாலை, மலைப்பாதை, காட்டுவழி, பாறைகள் அடர்ந்த பாதை, பாலைவனத்தின் பாதை என ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கிறான் குதிரைவீரன். அவர் எழுத்து ஒவ்வொன்றும் சோதனைதான். நான் செல்லவேண்டிய திசையின் விவரங்களை அத்தொகுப்பின் வழியாகவே அறிந்துகொண்டேன். நாட்டார்கதை, புராணம், தொன்மம் என என் மனம் தொடும் எல்லைவரையில் சென்று புதிய கதைகளை உருவாக்கினேன். முற்றிலும் புதியதொரு ஆட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட புத்துணர்ச்சியை அக்கதைகளை எழுதியதன் வழியாக அடைந்தேன்.

பதாகை: இன்றைக்கு எழுத வரும் புதியவர்களின் கதைகளைத் தொடர்ந்து படித்து வருபவர் என்பதால் இந்த கேள்வி – பொதுவாக ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் எனப்பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது? சிறுகதைக்கான களன்களின் வறட்சி என இதை எடுத்துக்கொள்வதா அல்லது புதுமைக்கான விழைவாகவா?

பாவண்ணன்: ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை ஒரு பொது மதிப்பீடாக எடுத்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் பதாகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் படித்தேன். புதிய புனைவு வடிவத்தில் ஆர்வமுள்ள படைப்புகளாக ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. மற்ற கதைகள் அனைத்துமே மரபான வடிவத்தில் வாழ்வியல் அனுபவங்களையும் பாடுகளையும் முன்வைத்த சிறுகதைகள். கடந்த ஆண்டு ஜெயமோகன் தளத்தில் இருபது புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்தார். அவர்களிலும் இரண்டுமூன்று பேரைத் தவிர மற்ற எழுத்தாளர்கள் மரபான வடிவத்திலேயே தம் படைப்புகளை எழுதியிருந்தார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவை புத்தம்புதிய களன்களை உடையவை. நாம் எழுதாத களன்கள் ஏராளமானவை இன்னும் உள்ளன. கி.ரா. எழுதிய கோவில்பட்டி வேறு. பூமணி எழுதிய கோவில்பட்டி வேறு. நாளையே வேறொரு எழுத்தாளர் தோன்றி கோவில்பட்டியை எழுதத் தொடங்கினால், அவர் வேறொரு களனைக் காட்டமுடியும். களன்களுக்கு வாழ்க்கையிலும் பஞ்சமில்லை. கதைகளிலும் பஞ்சமில்லை. அதே சமயத்தில் புதிய வடிவத்தை நாடிச் செல்கிறவர்களின் விழைவு என்பது பிழையானதுமல்ல. அது ஒரு முயற்சி. புதிய களனை நாடும் விழைவு எந்த அளவு முக்கியமானதோ, அதே அளவு புதிய வடிவத்தை நாடும் விழைவும் முக்கியமானது. நம் நெஞ்சில் ஒளிரும் சுடரை அந்த அகல் தாங்கவேண்டும்.

pavannan

பதாகை: தமிழ் இலக்கிய சாதனைகள் சிறுகதைகளில் நிகழ்த்தப்பட்டுவிட்டன எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டால் இனி வரும் காலத்தில் கட்டுரை வடிவிலான கதைகளும், சுய அனுபவங்களை எவ்விதமான உட்புகுத்தலும் இல்லாது அந்தந்த வடிவிலேயே எழுதுவதும் சிறுகதைக்கான போக்காகக் கொள்ளலாமா?

பாவண்ணன்: ஒரு சாதனை நிகழ்த்தப்படும் கணத்துக்கு இணையாக, அந்தச் சாதனையைக் கடந்துசெல்லும் வேகமும் இயல்பாகவே நிகழ்கிறது. நிகழ்த்தப்பட்டுவிட்டன என ஓய்தல் என்பதே இல்லை. அது ஒரு தொடர் இயக்கம். புதிய புதிய புள்ளிகளை நோக்கி நம் பயணம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். கட்டுரை வடிவத்திலான கதைகளையும் சுய அனுபவங்களைக் கொண்ட கதைகளையும் எழுதும் போக்கு எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவை முக்கியப் போக்காக மாறாது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டு காலத்துக்காவது இப்போது உள்ள மரபான கதைகூறல் போக்கே முக்கியப் போக்காகத் தொடரும் என்றே எண்ணுகிறேன். அதற்கான காரணம் இதுதான். நம் சமூகம் இன்னும் முற்றிலும் கல்வியறிவு பெறாத சமூகம். அறுபது விழுக்காடு, எழுபது விழுக்காடு என அரசாங்கப் புள்ளிவிவரம் சொன்னாலும் உண்மையான கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகவே இருக்கும். இவர்களில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்கள் மிகமிகக் குறைவானவர்களாகவே இருப்பார்கள். அடுத்த ஆண்டே இந்த எண்ணிக்கையில் ஐந்து விழுக்காடு அதிகரிக்கிறது என வைத்துக்கொள்வோம். அதிகரிக்கும் அந்தக் கூட்டத்தில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்களாகவும் நமக்குச் சிலர் கிடைப்பார்கள். அவர்களில் எழுதுபவர்கள் சிலராகவும் படிப்பவர்கள் சிலராகவும் இருக்கலாம். அவ்வாறு எழுத்தைத் தொடங்கும் சிலர் புதுமைப்பித்தனிலிருந்துதான் தொடங்குவார்கள். அதுதான் இயற்கையாக இருக்கும். அவர் தொடங்கிவைத்த கதைப்போக்கிலிருந்துதான் தொடங்கமுடியும். அந்தப் பயணம்தான் அவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.

பதாகை: இந்திய இலக்கியங்களில் தமிழ் சிறுகதையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? தமிழ் புனைவுகளில் உச்சகட்ட சாதனையாக சிறுகதை வடிவத்தைப் பார்க்கலாமா?

பாவண்ணன்: தமிழ்ச்சிறுகதைகளின் வளர்ச்சி பெருமைக்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது என்றே சொல்வேன். ஆனால் அதை எழுத்தில் எழுதி நிறுவுவதற்கு தன்னலமற்ற ஓர் ஒப்பீட்டாய்வு நிகழவேண்டும். அப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரியவில்லை. சாகித்ய அகாதெமி வழியாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளிவரும் காலாண்டிதழ் இந்திய மொழிகளின் கவிதை, சிறுகதைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாற்பது இதழ்கள் வந்துள்ளன. ஒரு இதழில் ஐந்து முதல் எட்டு சிறுகதைகள் வரை வெளிவருகின்றன. ஐந்து என்றே எடுத்துக்கொண்டாலும் இருநூறு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இந்த இருநூறு சிறுகதைகளில் எத்தனை சிறுகதை தமிழ்க்கதையாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று இருக்கலாம். அவ்வளவுதான். தமிழல்லாத ஓர் இந்திய எழுத்தாளன் எந்தப் படைப்பு முயற்சியும் இல்லாத மொழி என்றே தமிழை நினைக்கிறான். காரவன் ஆங்கில இதழிலும் இருபது இருபத்தைந்து பக்கங்கள் மாநில மொழிப்படைப்புகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நான் அதைப் படித்து வருகிறேன். என் கண்ணில் ஒருமுறை கூட தமிழ்ப்படைப்பு தென்பட்டதில்லை. நாமே எழுதி, நாமே படித்து, நாமே பாராட்டிக்கொள்கிறோம். இந்திய அளவில் வாசகர்களைப் பெறுவது என்பது சந்தைப்படுத்துதல் சார்ந்த ஒரு செயல்பாடு. அதில் ஓர் எழுத்தாளனாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபோதும் இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய புனைவு வடிவங்களில் சாதனை என்பது நாவல் என்பதே என் எண்ணம். கடந்த நூற்றாண்டில் முதல் பாதியில் கவிதை மாபெரும் சாதனையாக இருந்தது. இரண்டாவது பாதியை சிறுகதை வசப்படுத்திக்கொண்டது. இரண்டாயிரத்துக்குப் பிறகான காலம் என்பது நாவல்களின் காலம் என்றே சொல்லவேண்டும்.

பதாகை: ’பொம்மைக்காரி’ சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் “..பல சிறுகதைகளை ..நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” என வகைப்படுத்தியுள்ளீர்கள். இதை இன்னும் விரிவாகச் சொல்லமுடியுமா?

bommaikari

பாவண்ணன்: ஏதேனும் ஒரு அகத்தூண்டுதல்தான் ஒரு படைப்பை எழுதவைக்கிறது. எழுதத் தொடங்கும்வரை என்ன எழுதப் போகிறேன் என எந்த வரையறையும் உருவாவதில்லை. தன்னிச்சையாக கண்ணில் படும் ஏதோ ஒரு காட்சியால் தூண்டப்படும் தருணத்தில் வீணை நரம்பென மனம் அதிர்ந்து உத்வேகம் கொள்கிறது. அதுவே எழுத்து தொடங்கும் தருணம். இதில் வேடிக்கை என்னவென்றால், உத்வேகத்துக்குக் காரணமாக இருந்த காட்சியை எழுதிய தருணங்கள் குறைவானவை என்றே சொல்லவேண்டும். அந்தக் காட்சி நம் மனத்தின் நினைவடுக்குகளில் எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கியிருக்கும் இன்னொரு காட்சியை இழுத்துவந்து நிறுத்திவிடும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம், புத்தம்புதுசாக அன்று காலையில் நிகழ்ந்ததுபோல மீண்டும் நிகழும். ஒரே கணத்தில் அவற்றை இணைக்கும் சரடும் தர்க்கமும் முரணும் கூடிவந்துவிடும். அப்புறம் அந்தப் படைப்பை எழுதுவது எளிதாக இருக்கும். பொம்மைக்காரி தொகுதியில் உள்ள கதைகள் பாதிக்கும் மேல் அப்படிப்பட்டவை. ஒரு கதை உருவான விதத்தை முன்வைத்துச் சொன்னால் உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஒருமுறை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்றிருந்தேன். பார்வையாளர் நேரத்துக்கு முன்னாலேயே சென்றுவிட்டதால் வாசலில் நின்று வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் வண்டியொன்று வந்து நின்றது. அதிலிருந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்மணியை கீழே இறக்கி உள்ளே கொண்டு சென்றார்கள். ஒருசில நொடிகள்தான் அவரைப் பார்த்தேன். என் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. தோளிலிருந்து ஒரு பக்கம் முழுதும் தீக்காயங்கள். புவனா புவனா என்று யாரையோ பெயர்சொல்லி அலறிக்கொண்டே இருந்தார். அடிவயிற்றிலிருந்து எழுந்த அந்த அழுகை மனத்தை உருக்குவதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த ஒரே சொல். இடைவிடாத அழுகை. அலறல். அவ்வளவுதான். அவரை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். என்ன விஷயம் என்று பக்கத்தில் சென்று கேட்டேன். தீவிபத்து என்று மட்டுமே சொன்னார்கள். அந்த உருவமும் குரலும் மீண்டும்மீண்டும் மனத்தில் வந்துகொண்டே இருந்தன. பொதுவாக வலிதாளாது அழுகிறவர்கள் அம்மா என்று சொல்லி அழுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்மணி புவனா என்று சொல்லி அழுததற்கான காரணம் என்னவா இருக்கும் என்பதுதான் என் முதல் யோசனையாக இருந்தது. ஒருவேளை அது அவள் குழந்தையின் பெயராக இருக்கலாம். அந்தக் குழந்தையின் பெயர்தான் புவனாவாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. விபத்தில் இழந்துவிட்ட குழந்தையைத்தான் அவள் அழைத்தபடி இருக்கிறாளோ என்னமோ என்று தோன்றியது. அப்படி வகுத்துக்கொண்ட சமாதானமெல்லாம் ஒரே ஒரு கணம்தான். அடுத்த கணமே அது குலைந்துவிட்டது. விபத்தில் அந்தக் குழந்தையை இழந்திருந்தால், அந்தக் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் வண்டியில் அந்தப் பெண்மணி மட்டும்தானே இருந்தாள். இப்படி கேள்விகள் கிளைவிட்டு கிளைதாவி போய்க்கொண்டே இருந்தன. இரவு முழுதும் அதே சிந்தனை. மறுநாள் காலைநடையின்போதும் அதே சிந்தனை. வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் அந்தப் பெண்மணியை மறந்து, அந்த தீவிபத்தைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். ஏதோ ஒரு கணத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பாக நான் நேருக்கு நேர் பார்த்த தீவிபத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அப்போது நான் துங்கபத்திரை நதிக்கரையோரம் ஒரு வாடகைவீட்டில் வசித்துவந்தேன். கால்வாயின் மற்றொரு பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பு இருந்தது. பெரும்பாலும் தமிழர்களும் தெலுங்குமொழி பேசுகிறவர்களும் வாழ்ந்த பகுதி. நள்ளிரவு நேரத்தில் அங்கே தீவிபத்து நிகழ்ந்துவிட்டது. அதற்கு முதல்நாள்தான் அங்கே வசிக்கும் ஒருவரைச் சந்தித்துவிட்டு வந்தேன். நூற்றுக்கணக்கான குடிசைவீடுகள் எரிந்துவிட்டன. நானும் நண்பர்களும் ஓடினோம். நெருங்கமுடியவில்லை. புகைமண்டலம். வெப்பம். ஒருவித இயலாமையுடன் அந்த ஓலங்களையும் கூக்குரல்களையும் கேட்டபடி நின்றிருந்தோம். தீயணைக்க வந்த வண்டிகளுக்குத் தேவையான உதவிகள் செய்தோம். வந்து நின்ற அவசர ஊர்திகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்கள் ஏற்றப்பட்டார்கள். அலறி அலறி தன் வலிமையெல்லாம் குன்றி ஒரு கேவலைமட்டும் எழுப்பியபடி இருந்த ஒரு பெண்மணியை தூக்கிவந்து ஏற்றினார்கள். அவர்களுடைய குழந்தை விபத்தில் இறந்துவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அம்மாவின் முகம் எனக்கு அருகில் தெரிவதுபோல இருந்தது. நான் எழுதவேண்டிய கதையின் தொடக்கம் அக்கணத்திலேயே முடிவாகிவிட்டது. இந்த விசித்திரம் வழங்கும் பரவசமும் பதற்றமும் புரிந்துகொள்ளமுடியாதவை. ஆனால் ஒரு எழுத்தாளனாக நான் மீண்டும்மீண்டும் சென்று நிற்க விரும்பும் புள்ளி அது. அப்படிப்பட்ட சின்னச்சின்ன கணங்களே இந்த வாழ்வின் அற்புதக்கணங்கள். நிகழ்கால மனஎழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போகும் பயணம் என இதையே குறிப்பிடுகிறேன். இப்படி ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

பதாகை: இது தொடர்பாக இன்னொரு கேள்வி. ஒரு எழுத்தாளனின் நேரடி அனுபவங்கள் அவனது படைப்பில் எப்படி வெளிப்படுகின்றன, எதை எடுத்து எதை விடுகிறான், அனுபவம் எப்படி புனைவாக மாறுகிறது?

பாவண்ணன்: இது பதில் சொல்வதற்கு சற்றே சிக்கலான கேள்வி. தீவிபத்து சம்பவத்தின் ஞாபகத்தைப் புரட்டி எழுதிய ‘பொம்மை’ கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சம்பவம் மட்டுமே அந்தக் கதையில் இல்லை. ஒரு மையத்துக்குத் தேவையான பல விஷயங்களும் அந்தக் கதைக்குள் வந்துவிட்டன. எல்லாமே ஒரு மனப்பழக்கத்தில் வந்துவிடுகின்றன.

பதாகை: பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், பதினெட்டு கட்டுரைத் தொகுப்புகள், இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்திய அகாதெமி உட்பட ஐந்து விருதுகள். இத்தனை தீவிரமாக எழுத்தில் இயங்கும் படைப்பாளிகளை கைவிட்டு எண்ணிவிடலாம். இப்போது திரும்பிப்பார்க்கும்போது உங்கள் ஒட்டுமொத்த இலக்கியப் பயணத்தைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? உங்களுடைய பங்களிப்பைத் தாண்டி தமிழ் இலக்கியத்தின் இடம் எவ்விதம் நகர்ந்திருப்பதாக உணர்கிறீர்கள்?

பாவண்ணன்: நீங்கள் கேட்பது கிட்டத்தட்ட ஒரு சுயமதிப்பீடு. என் பயணம் எனக்கு நிறைவாகவே இருக்கிறது. என் எதிர்பார்ப்புகள் எப்போதும் பெரிதானவை அல்ல. ஒரு வாய் தண்ணீர் என்றொரு கவிதை என் முதல் கவிதைத்தொகுதியில் இருக்கிறது. நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் களைப்புக்கு ஒரே ஒரு வாய் தண்ணீர். அது எங்காவது ஒரு இடத்தில் எனக்குக் கிடைத்தபடியேதான் இருக்கிறது. யாரோ முகம்தெரியாத ஒருவர் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது போதும் எனக்கு. என்னை இந்த மொழியில் நிறுவிக்கொள்ளவோ அல்லது நிரூபித்துக்கொள்ளவோ நான் எழுதத் தொடங்கவில்லை. என் பாரத்தை கரைக்க அல்லது மறந்து கடந்துசெல்ல எழுத்தை நான் அருந்துணையாகக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக படித்த மா.அரங்கநாதனின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. அதன் பெயர் ’சித்தி’ என்று நினைக்கிறேன். ஓடுவதில் மிகவும் விருப்புமுள்ள இளைஞன் ஒரு பயிற்சியாளனால் கண்டடையப்பட்டு மாபெரும் ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்கப்படுகிறான். அவன் காலடித்தடம் படாத மலைப்பாதையே இல்லை. உலக அளவில் நிகழும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அதில் அவனும் கலந்துகொள்கிறான். அவன் பெயர்தான் தேர்வாகும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் நிகழப்போகிறது என எல்லோரும் கணித்திருக்கிறார்கள். அப்போது ஊடகங்கள் அவனிடம் ஒரு நேர்காணல் எடுக்க வருகிறார்கள். ஏன் ஓடுகிறீர்கள், எதற்காக ஓடுகிறீர்கள், ஓடும்போது எப்படி உணர்கிறீர்கள் என்றெல்லாம் மாறிமாறி கேள்வி கேட்கிறார்கள். இவன் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக ‘எனக்குப் பிடித்திருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ’எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ‘என் மனம் நிறைவாக உணர்கிறது, அதனால் ஓடுகிறேன்’ என்றெல்லாம் பதில் சொல்கிறான். ஊடகங்கள் எதிர்பார்க்கும் பதில்களோ, ‘என் தேசத்துக்காக ஓடுகிறேன்’ ‘என் தேசத்தின் பெருமைக்காக ஓடுகிறேன்’, ‘என் தேசத்தின் கெளரவத்தை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்காக ஓடுகிறேன்’ என்பவை போன்றவை. அவன் பயிற்சியாளரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அப்படிப்பட்ட பதில்கள்தான் அவனை களத்தில் வாய்ப்பு கிடைக்க உதவும் என்று நினைக்கிறார். அவனுடைய மாறுபட்ட பதில்கள் அவரை அமைதியிழக்கவைக்கின்றன. அமைதியில்லாமலேயே அவனை காரில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்புகிறார். அப்போது முழுநிலா வானில் சுடர் விடுகிறது. அவன் பூரித்த மனத்துடன், இந்த நிலவொளியில் ஓடினால் எப்படி இருக்கும் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறான். அவர் கோபத்தின் உச்சியில் சட்டென்று காரின் கதவைத் திறந்து ’இறங்கு, இறங்கி ஓடி வா’ என்று சொல்லிவிட்டு அவனை இறக்கிவிடுகிறார். அவன் அவருடைய சொல்லில் உள்ள சீற்றத்தையும் கிண்டலையும் புரிந்துகொள்ளாமல் சட்டென்று இறங்கி நிலவொளியில் மின்னும் பாதையில் ஓடத் தொடங்குகிறான். அந்த முத்துக்கறுப்பனின் மனநிலைதான் எனக்கும். என் மனத்தை உற்சாகத்தால் நிறைத்துக்கொள்வதற்கும் கரைத்துக்கொள்வதற்கும் எனக்குள்ள, எனக்குத் தெரிந்த ஒரே வழி எழுத்து மட்டும்தான். தமிழிலக்கியத்தில் என்னுடைய பங்களிப்பு மிகமிகச் சிறியதுதான். அதை பெரிதாக ஒருபோதும் நான் கருதியதில்லை. கங்கைபோல, யமுனைபோல, காவேரிபோல தமிழிலக்கியம் ஒருபோதும் வற்றாது ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பேராறு. அதன் கரையில் கால்களையும் கைகளையும் நனைத்து குளிர்ச்சியில் மனம் திளைத்தபடியும் கணந்தோறும் மாறும் அதன் அழகைச் சுவைத்து மனம் பறிகொடுத்தபடியும் காலம் கழிக்கும் பயணியாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன்.

பதாகை: உங்கள் முதல் நாவல் “வாழ்க்கை ஒரு விசாரணை”. வாழ்க்கையின் பலதரப்பட்ட முகங்களைக் காட்டும் படைப்பு எனப் பல விமர்சனங்கள் சொன்னாலும், மையக்கருத்தாக நான் நினைத்தது – மனிதர்கள் எப்படி தங்கள் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், சரி-தவறு எனக் கொள்ளாது எப்படி வாழ்வதற்கானப் பாதையை மிக இயல்பாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். உங்கள் படைப்புகளில் தொடர்ந்து இது பேசுபொருளாக அமைந்திருக்கிறது. இது உங்கள் வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா?

பாவண்ணன்: அவற்றைத் தொடக்கவரிகளாகக் கொண்டு இன்னும் சில வரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அறம் கடைபிடிக்கமுடியாத ஒன்றாக, அதே சமயத்தில் கடந்து செல்வதை கறாராகத் தடுக்காத ஒன்றாகவும் இருக்கும் அம்சம் வாழ்வின் மிகப்பெரிய விசித்திரம். அந்த விசித்திரத்தை மீண்டும்மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன். அறம் என்னும் நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை வெறும் அறத்தின் அலகுகளால் மட்டுமே மதிப்பிட்டுவிடமுடியாது. விசை= எடைx வேகம் என்னும் சூத்திரம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கம் ஓர் அலகை வைத்த இயற்கை இன்னொரு பக்கம் இரண்டு அலகுகளை வைத்து விளையாடுகிறது. எடையோ வேகமோ மாறும் தருணத்தில் விசையும் மாறிவிடுகிறது. நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

பதாகை: உங்கள் “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் வரும் காளியப்பன் மிக யதார்த்தமான பாத்திரமாக வந்துள்ளான். திருடி மாட்டிக்கொள்ளும் தம்பி, திருட்டுப்பழி சுமத்திய பண்ணையார், காசுக்கு விசாரணை செய்யும் போலீஸ்காரர்கள், ஓடிப்போனாலும் பணத்தை அனுப்பும் தம்பி என அவனைச் சுற்றிய உலகம் கருணையும் கொடூரமும் நிரம்பியது. அவற்றில் மிதக்கும் ஓடம் போல காளியப்பன் செல்கிறான். அப்படி ஒரு யதார்த்தத்தை தன்மீது படரவிட்டுக் கிடக்கும் சாத்தியம் இக்கால மனிதனிடம் உள்ளதா? இன்னொரு விதமாகக் கேட்கவேண்டுமென்றால் காளியப்பன் இந்த சமூகத்துக்குக் கொடுப்பது என்ன?

பாவண்ணன்: பெங்களூரில் எலெக்ட்ரானிக் சிட்டியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாபெரும் நகரத்தின் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை இங்கேதான் உள்ளன. எப்போதும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். மடிவாளா என்பது இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பகுதி. முக்கியமான காய்கறிச்சந்தை மையம். அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் தம் விளைபொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டுச் செல்லும் இடம். இங்கும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். எலெக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்தவர்கள் மடிவாளா பகுதியை உயர்வானதாகக் கருதுவதில்லை. மடிவாளா பகுதியைச் சேர்ந்தவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டியை உயர்வானதாகக் கருதுவதில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மேல்நடுத்தட்டு, உயர்தட்டுப் பிரிவினர்கள். மடிவாளாவின் இருப்பவர்கள் பெரும்பாலும் கீழ்நடுத்தட்டு, கீழ்த்தட்டுப் பிரிவினர்கள். இருவரும் இருமுனைகள். ‘மடிவாளாவ தாண்டி ஊருக்குள்ள போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள் மடிவாளாகாரர்கள். ‘எலெக்ட்ரானிக் சிட்டிய தாண்டி போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள். இவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்று கேட்பார்கள் அவர்கள். அவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பார்கள் இவர்கள். ஒருவர் கூற்றை ஏற்று இன்னொரு கூட்டத்தை நிராகரித்துவிட முடியுமா என்ன? இருவருடைய பங்களிப்பும் சமூகத்துக்குத் தேவை அல்லவா? இரண்டும் இருவேறு விசைகள். பங்களிப்பு என்பது எல்லாத் தரப்பினர்களாலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வழங்கப்படுவது என்பதற்காக சற்றே விரிவாகச் சொல்லவேண்டியதாகப் போய்விட்டது. இதைப் புரிந்துகொண்டால் காளிப்பனை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இந்த எடுத்துக்காட்டைச் சொல்ல விரும்பினேன். இந்தச் சமூகத்தில் சட்டம் செயல்படாமல் இருக்கும் ஒரு தருணத்தை, அறம் பிழைத்துவிட்ட ஒரு தருணத்தை அடையாளம் காட்டுவதற்காக உள்ள ஒரு சாட்சி காளிப்பன். அறம், அதற்குச் சாதகமான சாட்சிகளால் மட்டும் நினைவூட்டப்படுவதில்லை. பலியாகிவிழும் சாட்சிகளாலும் நினைவூட்டப்படுகிறது அல்லவா?

 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

பதாகை: மனிதர்களின் அலைக்கழிப்புகள், துயரம் போன்ற வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றிப் பேசுவது இலக்கியம் என ஒரு தரப்பு உண்டு. புனைவுகளில் வெளிப்படும் உண்மைக்கும், நம்மை சூழ்ந்துள்ள வாழ்வின் நிதர்சனத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?

பாவண்ணன்: புனைவுகளில் வெளிப்படும் உண்மை , நிதர்சனத்தின் ஒரு சின்ன அலகு மட்டுமே. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் உண்மையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த அலகு எப்படிப்பட்ட அலகு என்பது மிகவும் முக்கியம். சிறகிலிருந்து பிரிந்து, காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்லக்கூடிய இறகாக இருப்பின் அது மிகமிக முக்கியம். வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தையே எப்போதும் புனைவு தன் மையமாகக் கொள்கிறது. அந்த முக்கியத்தன்மையாலேயே அது தன் இலக்கியப்பரப்பில் தன்னை நிறுவிக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் சமயத்தில் எழுதப்பட்ட மண்டோவின் சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பொது நிதர்சனம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மதக்கலவரங்களால் நேர்ந்த அழிவின் சித்திரம் ஒரு பெரிய கொடுங்கனவு. அந்த அலங்கோலக் கொடுமைகளிலிருந்து மண்டோ தன் கதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உண்மையும் நிதர்சனம் பிடித்த கொடியின் நிறத்துக்கு மாறானதாக இருப்பதை உணரலாம். பாத்திரத்தை அவர் இந்து என்றும் இஸ்லாமியன் என்று வகுத்துக்கொண்டாலும், ஓர் அடையாளமாக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார். அவர் சுட்டிக் காட்ட விழைவது எப்போதும் மானுடம் கடந்த உணர்வாகவே இருக்கிறது. ’சஹாய்’ அவருடைய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை. ஓர் இஸ்லாமியக் குடியிருப்புக்கு அருகில், இஸ்லாமியர்களால் சுடப்பட்டு சாகும் தறுவாயில் இருக்கும் ஓர் இந்து நண்பனும் அவனுக்கருகில் செல்லும் இஸ்லாமிய நண்பனும் உரையாடும் இறுதிக்கணத்தையே மண்டோ தன் கதைக்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். இந்து நண்பன் ஒரு காமத்தரகன். இந்து, இஸ்லாம் என மதத்தைக் கடந்து தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு நல்ல விலையைப் பெற்று வருமானத்துக்கு வழிவகுத்துக்கொடுக்கக்கூடிய தரகன் அவன். புரளக்கூட முடியாமல் கண்ணைத் திறந்து ‘பக்கத்தில் வா’ என்று அழைப்பவனுக்கு அருகில் செல்ல தயங்குகிறான் அவன். எங்கே காப்பாற்றச் சொல்லி உதவி கேட்டுவிடுவானோ என்று நடுங்குகிறான். ஓடிச் செல்லவும் அவனால் முடியவில்லை. மனசாட்சியின் குத்தல் தடுக்கிறது. ஒருவித தவிப்புடன் நெருங்கி குனிந்ததும், தன் கோட்டுப் பையில் ஒரு நகைப்பொட்டலம் இருக்கிறதென்றும் அதைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று விலைமகள் சுல்தானாவிடம் சேர்த்துவிடு என்றும் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறான். பொது நிதர்சனம் மதச்சண்டைகளையும் மரணங்களையும் புள்ளிவிவரங்களாக மாற்றிவிடுகின்றன. புனைவுக்காக எடுத்தாளப்படும் உண்மை மதம் கடந்த மானுட உணர்வை முன்வைக்கிறது. தாமரை சேற்றில் பிறக்கிறது என்றாலும் சேற்றின் குணமோ மணமோ ஒருபோதும் அதற்கில்லை என்பது சொல்லிச்சொல்லி பழசாகிவிட்ட உவமை. ஆனாலும் இந்த நேரத்தில் அதுதான் நினைவுக்கு வருகிறது. பொதுநிதர்சனம் சேறு என்றால், புனைவு தன் மையமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மை ஒரு தாமரை.

பதாகை: காலங்காலமாக இலக்கியகர்த்தாக்கள் இலக்கியத்தின் லட்சியத்தைப் பற்றி பேசுகிறார்கள். எதை முன்வைப்பதாக இருக்கவேண்டும் இலக்கியமும் கலையும்? அவற்றை முன்வைக்குமளவு இலக்கியம் முக்கியமானதா?

பாவண்ணன்: சமூகத்தில் ஒருவருடன் இன்னொருவர் உரையாடிக் கொள்ளவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவுமான கருவியாக மனிதன் மொழியைக் கண்டடைந்தான். எழுத்து பழகியதும் எழுத்துக்கும் எண்ணத்துக்கும் இடையிலான இணைப்பையும் புரிந்துகொண்டான். நாளடைவில் இலக்கியம் உருவானது. சமூகத்தின் முகமாக, கண்ணாக அது வளர்ச்சியடைந்தது. ஒரு புனைவு என்பது முக்கியமான ஒரு வாழ்க்கைத்தருணம். வாழ்க்கையைப்பற்றிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அதில் உள்ளது. ஓர் எழுத்தாளன் ஆயிரக்கணக்கான வாழ்க்கைத்தருணங்களை தன் வாழ்நாளில் எழுதுகிறான். இப்படி பல நூறு எழுத்தாளர்கள் இடைவிடாமல் தொடர்ந்து எழுதி எழுதியே இலக்கியம் உருவாகிறது. எண்ணிப் பாருங்கள். கோடிக்கணக்கான வாழ்க்கைத்தருணங்கள் எவ்வளவு மகத்தான தொகை. குறுக்குவெட்டாக, அது இந்தச் சமூகத்தின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இலக்கியங்கள் இலட்சியங்களைத்தான் முன்வைக்கவேண்டும் என கறாரான விதியொன்றும் இல்லை. இலக்கியம் இந்த மண்ணின் மீதுள்ள எதைப்பற்றியதுமாகவும் இருக்கலாம். அதற்கு எவ்விதமான கருத்துத்தடையும் இல்லை. அது இலக்கியமாக நிலைத்திருக்கும் அளவுக்கு இலக்கிய அழகியல்களோடு இருந்தால் போதும். இலக்கியம் முக்கியமானதா என்ற கேள்விக்குப் பதிலாக மகாபாரதம் முக்கியமானதா என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாரதத்தில்தான் எத்தனை எத்தனை அரிய மானுட உச்சங்கள். தியாகங்கள். வெற்றிகள். தோல்விகள். அவமானங்கள். சூளுரைகள். குடிவரலாறுகள். குலவரலாறுகள். நேற்றைய உலகத்தைப் புரிந்துகொள்ள பாரதத்தைப் படிப்பது தவிர வேறு வழியே இல்லை. மகாபாரதம் முக்கியமானது என்னும் முடிவை அப்போது நம் மனம் ஏற்றுக்கொள்வதை உணரலாம். நேற்றைய வரலாற்றையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள மகாபாரதம் முக்கியமானது எனில், இன்றைய வாழ்க்கையையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள நாளைய தலைமுறைக்கு இலக்கியம் துணையாக இருக்காதா என்ன?.

பதாகை: செகாவின் சிறுகதை “பச்சோந்தி” உங்களை மிகவும் பாதித்த கதையாகச் சொல்லியுள்ளீர்கள். அது ஒரு கசப்பானக் கதையல்லவா? வாழ்க்கையில் நடப்பவற்றுக்கு நேரடியாகக் காரணம் கண்டுபிடிக்க இயலாது, ஏதோ ஒரு மறைமுகமான கை ஆட்டுவிப்பதுபோல. உலக இலக்கியத்தில் இந்த ஒரு சுவை மட்டுமே மேலெழும்புகிறதா?

பாவண்ணன்: கசப்பாகவே இருக்கட்டுமே. ஆனால் அந்தக் கசப்பு குவிந்த மையத்தில் நம் முகத்தையும் அடையாளமும் தெரியும்படி வைத்துவிடுகிறது அந்தக் கதை. அந்தக் காவலனின் நிலைப்பாடுகளின் நிகழும் திடீர்மாற்றம் ஒரு கசப்பான புன்னகையை நம் உதடுகளில் படரவைக்கிறது என்பது ஒரு பாதி உண்மைதான். ஏதோ ஒரு கணத்தில் ஓர் அரசு ஊழியனின் அவஸ்தையையும் தனக்கென எவ்விதமான நிலைப்பாடும் இல்லாத முதுகெலும்பற்ற தன்மையையும் அது பட்டும் படாமல் சுட்டிக் காட்டுகிறது என்னும் மறுபாதி உண்மையை நம் மனம் எப்படியோ புரிந்துகொள்ளும். நம் மண்ணில் உள்ள அரசு ஊழியர் நிலையும் அதுதான் அல்லவா? ஓர் அரசாங்க அலுவலகத்தில் மூத்த அதிகாரி சொல்லும் அசட்டு நகைச்சுவைகளுக்கெல்லாம் சிரித்துக்கொண்டும் மேம்போக்காக உதிர்க்கும் தத்துவங்களுக்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டும் அறிவில்லாத விமர்சனங்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டும் மெளனமாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிற எளிய குமாஸ்தா வர்க்கத்தினரை நினைத்துப் பாருங்கள். ஒரு மாற்றுக்கருத்தைக்கூட உங்களால் சுதந்திரமாக வெளிப்படுத்திவிட முடியாது. வெளிப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் நிம்மதியாக உங்களால் வேலை செய்ய முடியாது. நெருப்புக்கு அருகில் இருப்பதுபோலவே இருக்கவேண்டும். உங்களை அறியாமல் நீங்கள் கண்காணிக்கப்பட்டபடியே இருப்பீர்கள். தருணம் பார்த்து, ஆழம் புரியாத ஒரு பள்ளத்தில் நீங்கள் விழவைக்கப் படுவீர்கள். இதுதானே இங்கு நடக்கிறது. செகாவ் தீட்டியிருக்கும் காவலனின் காலடி நிழல் முதுகெலும்பில்லாதவர்களாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் குமாஸ்தாக்களின் பாதம்வரைக்கும் நீண்டுவருவதை என்னால் உணரமுடிகிறது. உண்மையிலேயே செகாவ் மிகப்பெரிய கலைஞர்.

பதாகை: கவிதை, சிறுகதை, நாவல் எனும் உலகத்திலிருந்து கட்டுரைகள் எழுதத்தொடங்கியது எப்போது?

பாவண்ணன்: பெங்களூர் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முக்கியமான நண்பர்களில் ஒருவர் கோ.ராஜாராம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் அமெரிக்கா சென்றார். திண்ணை என்னும் பெயரில் ஓர் இணைய இதழை அவர்தான் முதன்முதலில் தொடங்கினார். நான் அதில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். படித்த புத்தகங்களைப்பற்றிய கட்டுரைகளை நான் அதில் எழுதினேன். ஒரு வாசகனாக அப்புத்தகத்திலிருந்து நான் பெறுவது என்ன என்பதை விரிவாக உரைக்கும் பதிவாகவே ஒவ்வொரு கட்டுரையையும் அமைத்துக்கொண்டேன். ஒரு புத்தகத்துக்கு அரைப்பக்க மதிப்புரைகூட வருவதற்கு இடமில்லாத சூழலில் பக்கக் கட்டுப்பாடுகளே இல்லாமல் நான் விரிவாகவே எழுதினேன். ஒருநாள் பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் நானும் என் நண்பன் பழனியும் உரையாடிக்கொண்டே எங்கள் ஊர் ஸ்டேஷன் பக்கமாக நடந்துகொண்டிருந்தோம். அவனுடைய உறவினர் ஒருவரை இடையில் பார்க்க நேர்ந்தது. பேச்சென அதிகம் எதுவுமில்ல. நலவிசாரிப்பாக ஒன்றிரண்டு வரிகள். அவ்வளவுதான். அவர் போய்விட்டார். நாங்கள் மீண்டும் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினோம். அந்த உறவிக்காரரைப்பற்றி பழனி இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதையெல்லாம் கேட்ட பிறகு எனக்கு ஜானகிராமனின் பாயசம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் அந்தக் கதையை அவனுக்குச் சொல்லி, மனிதர்களின் மனத்தை இயக்கும் விசையைப் பகுத்தறிய முடியாத கையறுநிலையைச் சொன்னேன். நம் மனம் விசித்திரமான ஒரு ஸ்டியரிங். இடது பக்கம் திருப்பினால் இருளுக்கு இழுத்துச் செல்லும். வலதுபக்கம் திருப்பினால் வெளிச்சத்துக்கு இழுத்துச் செல்லும். தடுமாறாமல் பாதையில் ஓட்டத் தெரிந்தவன் மிகப்பெரிய பாக்கியவான் என்று சொன்னேன். நடையிலிருந்து திரும்பும்போது சிறுகதையைப் புரிந்துகொள்வதையும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதையும் இணைத்து எழுதும் அவன்தான் முதன்முதலாக விதைத்தான். ’எனக்குப் பிடித்த கதைகள்’ கட்டுரை வரிசை அப்படித்தான் தொடங்கியது. அவையும் திண்ணை இதழிலேயே வெளிவந்தன. எல்லாமே புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்தை ஒட்டி நிகழ்ந்த மாற்றங்கள்.

பதாகை: கட்டுரைகளும் அபுனைவு இலக்கியங்கள் வழியே சுய அனுபவங்களை வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதும் சாத்தியம் அதிகரித்துள்ளது. தமிழில் சிறுகதைகளின் காலகட்டம் முடிவுக்கு வந்ததாக நினைக்கிறீர்களா?

பாவண்ணன்: அபுனைவு எழுத்துகளின் பெருக்கத்துக்கும் புனைவு எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதன் வழி அதற்கு. இதன் வழி இதற்கு. இப்போது எழுதப்பட்டு வரும் அபுனைவு எழுத்து முயற்சிகளைவிட இன்னும் கூடுதலான முயற்சிகள் தேவை என்பது என் எண்ணம். துறைசார்ந்த வல்லுநரின் அனுபவங்கள் இன்னும் இன்னும் வரவேண்டும். கன்னடத்தில் விஸ்வேஸ்வரய்யா தன் பணிக்கால அனுபவங்களை ஒரு தொகுதியாக எழுதியுள்ளார். அருமையான தொகுப்பு. கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டையும் பெங்களூர் விதான்செளத எனப்படும் சட்டசபையையும் அவரே முன்னின்று கட்டியவர். தமிழில் அப்படிப்பட்ட நேரடி எழுத்து இல்லை. ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் அனுபவங்கள் என்னும் தலைப்பில் வார்த்தை இதழில் ஜெயகாந்தனின் நெருக்கமான நண்பரான குப்புசாமி ஒரு கட்டுரைத்தொடரை எழுதினார். மனத்தைத் தொடும் கட்டுரைகள். அப்படிப்பட்ட எழுத்துகள் இன்னும் இன்னும் வரவேண்டும். ஜெமினி கேண்டீன் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். ஜெமினி ஸ்டுடியோ நடைபெற்று வந்த காலத்தில் அங்கே கேண்டீன் நடத்தியவர் அந்த அனுபவங்களைச் சுவையாக எழுதியுள்ளார். ஒரு புனைகதைக்கு இணையாகப் படிக்கமுடிந்த புத்தகம் அது. பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் பிரபலமான கட்டுரைத்தொகுதி. தில்லி வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களையும் அந்த அனுபவங்களையும் ஒரு கோட்டோவியம்போல தீட்டிக் காட்டும் கட்டுரைகள். ஏ.கே.செட்டியாரின் பயணக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனி அனுபவம். சமீபத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டவரும் சிவாஜி ரசிகர் மன்றத்தின் செயலராகவும் இருந்த சின்ன அண்ணாமலையின் கட்டுரைத்தொகுப்பொன்றைப் படித்தேன். ’சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்னும் தலைப்பில் அது வந்துள்ளது. ஓமந்தூர் ராமசாமி செட்டியார், ராஜாஜி, கல்கி, காமராஜர், டி.கே.சி. என பல ஆளுமைகள் சாதாரணமாக வந்துபோகிறார்கள். வரலாறு அதன் போக்கில் இயங்கியபடி இருக்கிறது. கட்டுரைகள் அதை நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. நல்ல வாசிப்பனுபவம் உள்ளவை. இலக்கியத்தில் இது ஒரு வகைமை. சிறுகதையாக்கம் என்பது முற்றிலும் வேறான நுட்பம். அது இதைத் தேக்கிவிடும் என்பதோ அல்லது இது அதைக் கட்டுப்படுத்திவிடும் என்பதோ, தேவையற்ற அச்சம். இரண்டும் இருவேறு தனிப்பாதைகள். ஒருசில சமயங்களில் ஒரே இடத்தைத் தொடக்கூடிய சாத்தியம் உள்ளவை என்றபோதும்கூட.

பதாகை: ஒரு விஷயத்தை எந்த வடிவில் எழுதுவது என எக்கணத்தில் முடிவு செய்வீர்கள்?

பாவண்ணன்: அகத்தூண்டுதலால் மனம் நிமிரும் கணத்திலேயே, படைப்புக்குரிய வடிவமும் நிழலென அமைந்துவிடுகிறது.

பதாகை: உங்களது கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கும்போது பிரமித்த ஒரு விஷயம் – உங்களுக்கு பலதரப்பட்ட கலைவெளிப்பாடுகளில் இருக்கும் ஆர்வம். ஒரு இடத்தில் “உலக ஞானங்களைக் கண்டு பிரமிக்கிறேன்” அப்படின்னு எழுதறீங்க. இந்த பிரமிப்பின் தொடக்கமாக எதைச் சொல்ல முடியும்?

உங்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ரசனையும் ஞானமும் உண்டு என்று நண்பர் வெ. சுரேஷ் குறிப்பிட்டார். அதே போல், திரை இசையை எல்லாரும் ரசித்தாலும் உங்கள் தேர்வில் ஒரு நுட்பம் தெரியும் என்றார். உங்கள் கதைகளிலும்கூட இசை விவரிக்கப்படுகிறது அல்லவா?

பாவண்ணன்: தெருக்கூத்திலிருந்து அது தொடங்கியது என்று நினைக்கிறேன். என்னோடு சுப்பையா என்றொரு பையன் படித்துவந்தான். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடு தள்ளி அவன் வீடு இருந்தது. அவன் அப்பா ஒரு விவசாயி. அவனை படிக்கவைத்துப் பார்க்கவேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் அவனுக்குச் சரியாக படிப்பு வரவில்லை. என்னைவிட வயதில் மூத்தவன். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு இரண்டு ஆண்டுகளாகப் படித்து ஆறாவது வகுப்பில் என்னோடு படித்தான். வயதில் என்னைவிட மூத்தவன். அவன் எப்படியோ ஒரு கூத்துக்குழுவில் சென்று சேர்ந்துவிட்டான். அவன் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை. அடித்துப் பார்த்தார். திட்டிப் பார்த்தார். பிறகு அவன் தலையெழுத்துப்படியே விட்டுவிட்டார். எங்கள் தெருக்கோவிலில் ஆடித்திருவிழா சமயத்தில் அவனுடைய கூத்துக்குழுதான் ஆட வந்தது. பொதுவாகவே விடியவிடிய உட்கார்ந்து கூத்துப் பார்க்கும் ஆசைகொண்டவன் நான். அன்று அவனுடைய ஆட்டத்தைப் பார்க்கப் போகிறேன் என்னும் எண்ணத்தால் நான் பரபரப்பாகவே இருந்தேன். திரெளபதை வஸ்திராபரணம். சுப்பையாதான் திரெளபதை. என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலாக ஒரு பெண்ணைப்போலவே ஒயில்காட்டி அவன் ஆடிய ஆட்டமும் ஒரு அரசிபோல மிடுக்காக நடந்து காட்டிய கம்பீரமும் என்னை பிரமிக்கவைத்தன. எங்கள் சுப்பையாவா அது என்று வாயைப் பிளந்தபடி பார்த்தேன். வகுப்பில் ஆசிரியர் கேட்கிற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தைகூட பதிலாகச் சொல்ல தெத்தித்தெத்தி திணறக்கூடியவன் காட்டாற்று வெள்ளமென சொல்மழை பொழிவதை வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் பார்த்தேன். அன்று இரவு அவனுடைய இரவு. அவன் முகத்தில் பொங்கிய கோபம். ஆவேசம். ஆரவாரம். அழுகை. கெஞ்சல். அவமானத்தில் உடல்குன்றி நின்ற கோலம். ஆத்திரத்தில் வெடித்தெழும் சாபம். அவனுக்குள் ஏதோ ஒரு தெய்வம் புகுந்து ஆட்டிப்படைப்பதுபோல இருந்தது. நம்பமுடியாமல் சலங்கை கட்டிய அவன் கால்களையும் அவன் ஆட்டத்தையும் உரையாடலையும் பிரமிப்போடு பார்த்தபடி இருந்தேன். வகுப்பில் ஆசிரியரின் பிரம்படிக்காக கையை நீட்டியபடி குனிந்து நிற்கும் சுப்பையா வேறு. ஆவேசத்துடன் அடவுகட்டி ஆடி தலைவிரி கோலத்துடன் சப்தமெடுக்கும் சுப்பையா வேறு. மறுநாள் காலையில் அவனை ஏரிக்கரையில் வேலங்குச்சியால் பல்விளக்கியபடி நின்றிருப்பதைப் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான். ‘பிச்சி ஒதறிட்டடா’ என்று அவன் கையைப் பற்றி அழுத்தி என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். ‘உடுடா உடுடா’ என்று சிரித்தபடி அதை அவன் ஏற்றுக்கொண்டது எனக்கு இன்னும் நினைவுக்கு வந்தது. பிரமித்துப் பார்ப்பது என்பது நாம் ரசிப்பதன் வெளிப்பாடு அல்லவா? கோவிலில் மேளக்காரரும் நாதஸ்வரக்காரரும் போட்டிபோட்டுக்கொண்டு வாசிக்கும்போது எழும் விதம்விதமான தாளக்கட்டுகள் பிரமிக்கவைத்திருக்கின்றன. பாட்டுக்கச்சேரிகள், நடனங்கள், சிலம்பாட்டம் என ஏராளமான தருணங்கள் என்னை மலைக்கவைத்திருக்கின்றன. எனக்கு பெரியம்மா முறையாகக்கூடிய ஒரு அம்மா எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தார். எழுதப் படிக்கத் தெரியாதவர். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பழைய திரைப்படப்பாடல்களை மணிக்கணக்கில் சோகம் இழைந்தோடும் குரலில் பாடுவார். கேட்கும்போது நமக்கு அப்படியே நெஞ்சை அடைத்துக்கொண்டு வரும். கண்ணீர்த்துளிகள் முட்டும். சமீபத்தில்தான் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வாழ்க்கையை ஒருநாள்கூட நிம்மதியாக வாழாத அவருக்கு அந்த இசையையே இயற்கை ஒரு வடிகாலாகக் கொடுத்திருக்கிறதுபோகும் என்று நினைத்துக்கொள்வேன். நாள்தோறும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டபடி வளர்ந்ததுகூட பாட்டின்மீது ஆர்வம் பிறந்ததற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். வாரத்துக்கு ஒரு நாள் புதுச்சேரி கடற்கரையில் டியுப்ளே சிலைக்கு அருகில் பாண்ட் வாசிப்பார்கள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த வாசிப்பு நிகழும். கேட்கக்கேட்க மனம் பறக்கும். அப்படியே நம்மை தூக்கிக்கொண்டு வேறொரு உலகத்திற்குக் கொண்டுபோய் இறக்கிவிடும். எனக்கு அமைந்த சூழல் என்னைச் சுவைக்கத் தெரிந்தவனாக சமைத்தது என்று சொல்லலாம். நீங்கள் எது தொடக்கம் என்றொரு கேள்வியைக் கேட்டதுமே பழைய நினைவுகள் பொங்கிப்பொங்கி வருகின்றன. காதையும் மனசையும் கண்களையும் திறந்துவைத்திருந்தபோது எல்லாமே உள்ளே வந்துவிட்டன.

பதாகை: யுகமாயினி இதழில் வெளிவந்த உங்கள் கட்டுரை (அனுபவத் தொடர்) மிகவும் வித்தியாசமானது.சிறுகதைகள் போலவே தோன்றும் கட்டுரைகள் அவை.(தீரா நதியில் நீங்கள் எழுதிய அந்தக் கட்டுரை தொடரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு இன்னும் துலக்கமாகவே விளங்கும்) இவற்றுக்கும் சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைகளுக்கும் (பள்ளிக் கூடம் போன்றவை) உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா? ஒரு சம்பவத்தை கட்டுரை என்றும் கதை என்றும் எப்படி வகுத்துக் கொள்வீர்கள்?

பாவண்ணன்: கட்டுரைகளைவிட கதைகளுக்கு ஒருசில விழுக்காடுகள் கூடுதலான மதிப்பெண்கள் தரலாம் என்பது என் எண்ணம். ஒரு கட்டுரையின் சாயல் ஒரு கதையிலும் அல்லது ஒரு கதையின் சாயல் ஒரு கட்டுரையிலும் இடம்பெற்றிருக்கலாம். எழுதிச் செல்லும் போக்கில் தவிர்க்கமுடியாமல் அப்படி அமைந்துவிடும். கட்டுரைக்கான சம்பவத்தையும் கதைக்கான சம்பவத்தையும் ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டுதலால்தான் பிரித்து வகுத்துக்கொள்கிறேன். அக்கணத்தில் மனம் செலுத்தும் திசையில் எழுத்து பறந்துபோகிறது. ஏன் அப்படி என்பதைச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை என்றே சொல்வேன். சந்தையில் நீங்கள் காய்கறி வியாபாரிகளைப் பார்த்திருப்பீர்கள். வியாபாரம் இல்லாத நேரங்களில் தனக்கு முன்னால் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் தக்காளி அல்லது கத்தரிக்காய்களில் ஒரு சிலவற்றை எடுத்து ஒரு கூடையில் பிரித்துப் போடுவார். இன்னும் சிலவற்றை எடுத்து வேறொரு கூடையில் போடுவார். இதற்கு ஒரு விலை இருக்கும். அதற்கு ஒரு விலை இருக்கும். எதுவுமோ அழுகலோ அல்லது முற்றிப்போனவையோ அல்ல. அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளவையாகவே இருக்கும். ஆனாலும் இரண்டாக வகுத்தபடியே இருப்பார்கள். வழக்கமாக நான் காய்கறி வாங்கக்கூடிய ஒரு அம்மாவிடம் ’ எல்லாத்தயும் ஒரே கூடையில வச்சி ஒரே விலையில விக்கலாமே? எந்த அடிப்படையில இப்படி பிரிக்கிறீங்க?” என்று ஒரு நாள் கேட்டேன். அந்த அம்மா புன்னகைத்துக்கொண்டே ‘அதெல்லாம் பழக்கம்தாங்க. காயை தொடும்போதே கைக்கும் மனசுக்கும் தெரிஞ்சிடும்ல?’ என்றார் அவர். மேலும் ‘எல்லாம் ஒரு கைப்பழக்கம் மனப்பழக்கம்தான்’ என்றும் சொன்னார். அந்த அம்மாவிடம் கேட்ட அதே சொற்களைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விழைகிறேன். எல்லாம் ஒரு மனப்பழக்கம்தான்.

பதாகை: கபிலர், புரந்தரதாசர், சிலப்பதிகாரம், ஆவுடை அக்காள் பாடல்கள் என சங்க இலக்கியத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை வந்த பக்திப்பாடல்களைப் பற்றிய தீவிரமானக் கட்டுரைகளை முப்பது வருடங்களாக எழுதியுள்ளீர்கள். இந்த காலகட்டத்தில் பலவிதமான ரசனை மற்றும் கோட்பாட்டு விமர்சனங்கள் வந்துபோய்விட்டன. இந்தப் பாதையில் இவ்வகை சங்கம் மற்றும் மரபுக்கவிதைகளுக்கான பார்வை உங்களுக்கு மாறியுள்ளதா?

பாவண்ணன்: கோட்பாட்டு விமர்சனத்தை நான் ஆழமாகப் பயின்றதில்லை. என் பார்வை கோட்பாடு சார்ந்ததல்ல என்பதால், எனக்கு அதில் அதிக நாட்டமும் இருந்ததில்லை. நம்முடைய இலக்கியவளம் ஒரு மாபெரும் புதையல். தேடத்தேட எடுத்தபடி இருக்கலாம். நம்மாழ்வாரின் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. ’அவரவர் விதிவழி அடைய நின்றனரே’ என்றொரு வரி அந்தப் பாட்டில் உண்டு. மறக்கமுடியாத வரி. இறைவனை உணரும் வழி இது என நம்பி நீங்கள் ஒரு வழியில் நடந்துசெல்கிறீர்கள். அந்த வழியாக இருக்குமோ, இந்த வழியாக இருக்குமோ என்றெல்லாம் குழப்பம் கொள்ளவேண்டாம். நீங்கள் தொடங்கிய வழியில் சென்றுகொண்டே இருங்கள். நீங்கள் தேடிய இறைவனை நீங்கள் அடைவீர்கள் என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கும் பக்குவத்தை மறக்கவே முடியாது. மற்றவர்களுக்கு இறைவன் தரிசனம் கிடைக்காதா என்றெல்லாம் வீண்சந்தேகமோ, வீண்குழப்பமோ வேண்டாம். அவரவர்கள் சென்ற வழியில் அவரவர்கள் தேடிய இறைவனை அவரவர்கள் கண்டடைவார்கள். நம் பயணத்தில் தீர்மானமான உறுதியும் பற்றும் இருத்தல் வேண்டும். கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய வழிமுறைகளில் இறைவனைத் தேடிக் கண்டடைகிறார்கள். அவரவருக்கும் அவரவர்களுடைய இறையவர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். சங்கப்பாடல்கள் மீதும் மரபுப்பாடல்கள்மீதும் தீராத விருப்பமுடையவன் நான். எந்த விமர்சனப்பார்வையாலும் அது மாறியதில்லை.

பதாகை: கன்னட வசன மற்றும் கவிதை இலக்கியத்துக்கான அபாரமானத் தொடக்கங்களை உங்கள் கட்டுரைகள் கொடுத்துள்ளன. குறிப்பாக ‘பாட்டும் பரவசமும்’ எனும் கட்டுரையில் அக்கமகாதேவி, மல்லிகார்ஜூனைப் பற்றிப்பாடும் பாடல்களையும் ஆண்டாளின் பாடல்களையும் ஒப்பிட்டு எழுதியது தனிப்பட்ட அளவில் எனக்கு அவரது பாடல்களைத் தேடிக்கண்டடைய உதவியது. பக்தி காலகட்டப்பாடல்களை பரவச நிலையிலிருந்து அணுகியதோடு அப்பாடல்களின் ஆழத்தில் புதைந்துள்ள உணர்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியது. பக்தி, பற்று, நம்பிக்கை போன்றவற்றைத் தாண்டி இப்பாடல்களை எப்படி அணுகுவது?

பாவண்ணன்: நம் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை அத்தகு பாடல்கள் நமக்கு மீண்டும்மீண்டும் உருவாக்கி அளிக்கின்றன. பக்தி, பற்று, நம்பிக்கை நிலைகளிலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதில் நாம் ஏன் தயங்கவேண்டும். அறிவியலும் உளவியலும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் கருவிகள். அவற்றின் துணையோடு அப்பாடல்கள்மீது தாராளமாக ஓர் ஆய்வை நிகழ்த்தலாம். அதனால் எப்படிப்பட்ட பயன் விளையும் என்று தெரியவில்லை. உளவியலின் அடிப்படையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையைப் படித்தேன். காந்தி இளமைக்காலத்தில் பாலியல் விருப்பம் உள்ளவராக இருந்தார். அவர் தன்னுடைய தந்தையார் மரணப்படுக்கையில் இருந்த தருணத்தில் பாலியல் விழைவோடு தன் துணைவியோடு இருக்கச் சென்றுவிட்டார். அவர் பிரிந்துசென்ற தருணத்தில் அவர் தந்தையாரின் உயிர் பிரிந்துவிட்டது. அன்றுமுதல் அவருக்கு பாலியல் சார்ந்த குற்ற உணர்வு ஏற்பட்டது. அதனால்தான் பிரம்மச்சரிய விரதத்தை அவர் அனைவரிடமும் முன்வைத்தார் என்று நீண்டு சென்றது அக்கட்டுரை. பெரிய உளவியல் அறிஞர் என்று சொன்னார்கள் அந்தக் கட்டுரை ஆசிரியரை. கடைசியில் அவருடைய அறிவு, காந்தியை எந்தச் சிமிழுக்குள் கொண்டு வந்து அடைக்கப் பார்க்கிறது, பாருங்கள். நம் மக்கள் அப்படித்தான் அவரைப் பார்க்கிறார்களா? பிரம்மச்சரிய விரதத்தைப் பேசியவர் காந்தி என்பதுதான் காந்தியின் பிரதானமான முகமா? ஆண்டாள் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் பக்தி புதிய அணுகுமுறைகளில் அணுகி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடிய முடிவுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் அவற்றை நிச்சயம் வரவேற்கவேண்டும். ஆனால், தனிப்பட்ட விதத்தில் எனக்கு நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டாளின் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் அணுகுவதே பிடித்திருக்கிறது.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க கனாக்கண்டேன் தோழி

என்னும் பாட்டை நீங்கள் படித்திருப்பீர்கள். என்ன ஒரு திடமான நம்பிக்கை பாருங்கள். இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல, ஏழு பிறவிக்கும் எனக்குரியவன் அவன் என்று எவ்வளவு ஆழமாக நம்புகிறாள் ஆண்டாள். ஒரு பாட்டில் கைத்தலம் பற்றிய மதுசூதனனைச் சொன்னவள், இந்தப் பாட்டில் அவன் குனிந்து திருக்கையால் தன் தாள்பற்றும் கணத்தைக் குறிப்பிடுகிறாள். அதைப் படிக்கும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது. கடவுள் வந்து தன் கால்விரலைத் தொடுவான் என்பதில் அவளுக்கிருக்கும் உறுதியை நினைக்கும்போதே பரவசமாக இருக்கிறது. கடவுள் தன் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பவர்களுக்கு இந்த வரி அளிக்கக்கூடிய ஆறுதலையும் நம்பிக்கையையும் நினைத்துப் பாருங்கள். அந்தப் பரவசத்தை வேறு எதைமுன்னிட்டும் நான் இழக்கத் தயாராக இல்லை.

விட்டல்ராவுடன் (1)பதாகை: ‘திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும்’ எனும் கட்டுரையில் மு.தளையசிங்கத்தின் கோட்டை தொகுப்பு பற்றி எழுதியிருந்தீர்கள். மதுரையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் கல்லூரிப்பெண்களும் ஆண்களும் கேலியாகப் பேசிச் சென்ற கணத்தில் திடுமென உடலைப்பற்றியதாக மாறியதும் தத்தமது நிலையை உணர்ந்து தயங்கும் ஓர் அனுபவக்குறிப்பு வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைக் கடந்து வந்திருப்பான். உங்கள் “தங்கமாலை” சிறுகதையைப் படித்ததும் அதேபோன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. சட்டென சங்க இலக்கியக்கட்டுரையில் தலைவி தலைவனுக்காகக் காத்திருந்து இளைத்தவள் அவன் வந்ததும் விலகிச்செல்லும் சித்திரம் தோன்றியது. இந்திய மண்ணுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் சட்டென மனிதர்களைப் பற்றியதாக எப்படி மாறிவிடுகிறது?

பாவண்ணன்: அது உலகப்பொதுவான உணர்வு என்றே தோன்றுகிறது. பைபிளில் ஒரு கதை உண்டு. தன் கணவனின் நம்பிக்கைக்குரிய வணிகன்மீது காதல் கொண்டு உருகுகிறாள் அவன் மனைவி. அவனோ முதலாளிக்கு துரோகமிழைக்க விரும்பாமால் அவள் அழைப்பை மறுக்கிறான். தன் அழைப்பைப் புறக்கணித்துவிட்ட அவன்மீது அவள் தீரா வஞ்சம் கொள்கிறாள். தன் கணவனிடம் வீண்கதை கட்டுகிறாள். தன் வார்த்தைகளை நம்பும்படி செய்கிறாள். இறுதியில் அந்த வணிகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் கொண்டுவரும்படி தன் கணவனிடம் கேட்டுக்கொள்கிறாள். கிரேக்கப் புராணங்களிலும் இப்படி ஏராளமான கதைகள் உள்ளன.

பதாகை: ‘பருவம்’ போன்ற காலத்தில் மிகப் பின்னே  அமைக்கப்பட்டுள்ள படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் ‘தேர்’ (ராகவேந்திர பாட்டீல்) போன்ற சற்றே பிந்திய காலம்/நிகழ்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள  படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்/சவால்கள் ஏதேனும் உண்டா?

பாவண்ணன்: எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாக இருந்தாலும், ஒரு மொழியில் உள்ள பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் நோக்கத்தையும் தொனியையும் சிதைக்காமல் இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பதுதான் மிகப்பெரிய சவால். முதலில் அது பழமொழிதானா, மரபுத்தொடர்தானா அல்லது உரையாடலின்போக்கில் உள்ள ஒரு வரியா என்பதை உறுதியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும்மீண்டும் வாக்கியங்களைப் படித்துப்பார்ப்பதுதான் ஒரே வழி. ஏற்கனவே கூடி வந்திருக்கும் பொருளோடு எவ்விதத்தில் அது பொருந்திப் போகிறது என்பதையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும். உரையாடலின் போக்கில் அல்லது விவரணையின் போக்கில் ஒரு வரி தீவாக தனித்து நின்றுவிடக்கூடாது. அது வீணான குழப்பத்தைக் கொடுக்கும். என்னைப் பொறுத்தவரையில் மொழிபெயர்க்கும்போது, எனக்குச் சந்தேகமாகத் தோன்றும் இடங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் என் நண்பர்களுடன் கலந்து பேசி தெளிவு பெறுவேன். ஒன்றுக்கு இரண்டு பேரிடம் கேட்டு உறுதி செய்யவும் தயங்கமாட்டேன். ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்த்து முடித்ததும் கன்னட அத்தியாயத்தையும் தமிழ் அத்தியாயத்தையும் அருகருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வாக்கியமாக மாற்றிமாற்றிப் படித்து சரிப்படுத்தி செம்மைப்படுத்திக்கொள்வேன். நேரம் செலவாவதைப் பொருட்படுத்தாமல் ஈடுபடும்போதுதான் ஒரு மொழிபெயர்ப்பு வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கமுடியும்.

பதாகை: ‘பருவம்’ நாவலின் கன்னட மூல பிரதியில் பழங்காலக் கன்னட சொற்றொடர்கள் நிறைய  உபயோகிக்கப்பட்டிருக்கும் என்ற யூகத்தில் கேட்கிறேன், அது தவறாகவும் இருக்கலாம். (உ.ம்  வெண்முரசில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ‘தீச்சொல்’ என்ற பதத்தைப் போல் பருவத்திலும் நவீன கன்னடத்தில் அதிகம் புழங்காத சொற்கள் உபயோகிக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுவதால்). அத்துடன் ஒப்பிடுகையில் ‘தேரில்’ நவீன கன்னடம் அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கலாம்.  அப்படி பழங் கன்னட சொற்களை மொழிபெயர்க்கும் போது நவீனத் தமிழிற்கு நெருக்கமாக செய்வது உகந்ததா அல்லது அவற்றுக்கிணையான பழந் தமிழாகச் மொழிபெயர்ப்பது உகந்ததா?

பாவண்ணன்: ’பருவம்’ மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவலென்றாலும் அது ஒரு நவீன நாவலுக்குரிய எளிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதற்கு மாறாக, ’தேர்’ நாவலும் ஒரு நவீன நாவலென்றாலும் அதன் ஒரு பகுதி முழுக்கமுழுக்க ஒரு நிகழ்த்துகலையின் சாயலைக் கொண்டிருந்தது. அப்பகுதி சற்றே சவால் நிறைந்த பகுதியாகும். மொழிபெயர்க்கும் முன்பாக மூன்றுமுறை அதை வாசித்தேன். மனத்தளவில் என்னை நானே தயாரித்துக்கொள்ள அந்த இடைவெளி உதவியது. கன்னட நிகழ்த்துகலைக்கு இணையாக தெருக்கூத்து நிகழ்த்துகலையின் சாயலை அதற்கே உரிய மொழியுடன் கொண்டு வந்தேன். நானே ஒரு கலைஞனாக என்னை நினைத்துக்கொண்டு உயர்த்திய தொனியில் பாடவும் பேசவும் ஏற்றதாக அப்பகுதியை வடிவமைத்தேன். முற்றிலும் மொழிபெயர்த்து முடித்த பிறகும், கன்னடத்திலும் தமிழிலும் மாறிமாறிப் படித்து மேலும்மேலும் செம்மை செய்தபடியே இருந்தேன். பழைய சொல்லையோ அல்லது புதிய சொல்லையோ, அதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டுபிடிப்பதோடு மட்டும் மொழிபெயர்ப்பு முடிவடைவதில்லை. அதன் பொருத்தப்பாட்டையும் முழு வாக்கியத்தில் அது உருவாக்கும் தொனியையும் உய்த்துணரவேண்டும். கதைப்போக்குக்கும் உத்தேசிக்கப்பட்டிருக்கும் காலத்துக்கும் உகந்ததாகவும் அமைக்கவேண்டும். திரும்பத் திரும்பப் படித்து செம்மை செய்தபடியே இருப்பதன் வழியாகத்தான் ஒரு மொழிபெயர்ப்பைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பதாகை: மொழிபெயர்க்கும் போது அதன் மூல ஆசிரியர்களுடன் உரையாடுவது உண்டா? அப்படியெனில், எந்தளவிற்கு.

பாவண்ணன்: இல்லை, மொழிபெயர்க்கும்போது நான் எந்த மூல ஆசிரியருடனும் உரையாடியதில்லை.

பதாகை: பருவம் கன்னட மூலத்தின் மொழி எப்படிப்பட்டது? கன்னடம் தெரிந்த ஒரு நண்பர், அந்நாவல் இக்காலகட்ட கன்னடத்தில் எழுதப்பட்டது. குறிப்பாக பல colloquial வார்த்தைகள் உள்ளடக்கியதுன்னு சொன்னார். மொழிபெயர்க்கும்போது உங்கள் மொழித்தேர்வும், வார்த்தைத்தேர்வும் எப்படி அமைந்தது?

பாவண்ணன்: ’பருவம்’ நாவல் நவீன நாவலுக்குரிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதிகாசப்பின்னணியில் விசுவாமித்திரரைப்பற்றிய ஒரு நாவல் மகாபிராமணன் என்னும் பெயரில் வந்துள்ளது. அது முழுக்கமுழுக்க செவ்வியல் மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். பைரப்பா அதற்கு நேர்மாறாக தன் பருவம் நாவலை நவீன மொழியிலேயே எழுதியிருந்தார். ஒருவேளை அவர் உருவாக்க நினைத்த தொனி அதற்குக் காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்துக்குரிய பார்வையில் பாரதத்தை அணுகும் ஒரு வாசிப்பை அவர் சாத்தியப்படுத்த நினைத்தார். அதனால் நிகழ்காலத்துக்குரிய மொழியையே அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதனால் நானும் கவனமாக அவர் பயன்படுத்திய சொற்களுக்கு இணையான நிகழ்காலச் சொற்களையே பயன்படுத்தினேன்.

பதாகை: ‘பருவம்’ நூல் பதிப்பில் பல பிழைகள் இருந்ததாக நண்பர் தெரிவித்தார். சாகித்திய அகாதமி வெளியீட்டில் இன்று புதிய பதிப்பு வந்திருக்கிறது என்றாலும் பொதுவாக வரும் பிழைகளை எப்படிக் களைவது? பதிப்பு வந்தபோது அவை உங்கள் கவனத்துக்கு வந்ததா?

பாவண்ணன்: பல வேலைகளுக்கிடையில் முதல் மெய்ப்புப்படியை நானே நேரமொதுக்கி திருத்தங்கள் போட்டு சாகித்திய அகாதெமியிடம் கொடுத்தேன். திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு மீண்டுமொரு முறை எனக்கு மெய்ப்புப்படியை எடுத்துக் கொடுக்கும்படியும் அவற்றை மறுபடியும் வாசித்துத் திருத்திக் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன். அதற்கு அகாதெமி நண்பர் சம்மதித்திருந்தார். இந்தத் தருணத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவிட்டது. பல மாதங்கள் கடந்தன என்றாலும் மெய்ப்புப்படி வரவே இல்லை. அச்சிடத் தேவையான தாள்கள் வாங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும் அதுவரை புதிய நூல்களின் அச்சாக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் முதலில் சொல்லப்பட்டது. பிறகு நிதி ஒதுக்கீடு வரவில்லை என்றும் சொல்லப்பட்டது. அப்படியே இரண்டாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் புத்தகம் அச்சுக்குப் போக இருப்பதாகச் சொன்னார்கள். நான் பதறினேன். இன்னும் திருத்தங்கள் போடும் வேலையே முடியவில்லையே என்று கவலையைத் தெரிவித்தேன். அதெல்லாம் நாங்களே முடித்துவிட்டோம் என்று சொன்னார்கள். நான் இன்னொரு முறை படித்துப் பார்த்து வேறு ஏதேனும் திருத்தம் தேவைப்படுமா என கண்டறிந்து, அவற்றைக் குறிப்பிட்டுத் தருவதாகச் சொன்னேன். நேரம் குறைவாக இருக்கிறது, அச்சுக்குச் செல்லவேண்டும் என்று அவர்கள் அவசரப்பட்டார்கள். இன்னொரு முறை பார்த்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நானும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனால் சில நாட்களுக்குப் பிறகு புதிய மெய்ப்புப்படிகள் வந்தன. முதல் மெய்ப்பில் நான் போட்டுக்கொடுத்திருந்த திருத்தங்களில் எழுபது எண்பது விழுக்காடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன. எஞ்சியவை அப்படியே இருந்தன. மீண்டும் படித்து மீண்டும் திருத்தி அனுப்பிவைத்தேன். சில வாரங்கள் கழித்து எல்லாத் திருத்தங்களும் போடப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்கள். நண்பர்கள் சொல்வதை நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. எல்லா வேலைகளும் சென்னையில் நடந்ததால், என்னால் நேரில் சென்று பார்க்க நேரமோ, அவகாசமோ இல்லாமல் போய்விட்டது. ஒருநாள் புத்தகக்கட்டு வந்தது. பிரித்துப் பார்த்தால் ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவதாக போட்டுக்கொடுத்த திருத்தங்கள் பேருக்கு ஒன்றிரண்டை அங்கொன்று இங்கொன்றாக மட்டுமே போடப்பட்டிருந்தன. மற்றபடி அவை அப்படியே இருந்தன. என் வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். அடுத்த பதிப்பு வரும்போது சரிசெய்துவிடலாம் என்று என்னை அமைதிப்படுத்தினார்கள். அவ்வளவுதான். என் கவனத்துக்கு வராமலேயே இப்போது மறுபதிப்பும் வந்துவிட்டது. மறுபதிப்பு வந்துள்ள செய்தியை விளம்பரம் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும்தான் நானும் அறிந்துகொண்டேன். நான் இன்னும் பார்க்கவில்லை. பிழைதிருத்தம் வேண்டி என்னிடம் அனுப்பாத நிலையில், அநேகமாக முதல் பதிப்பில் உள்ள பிழைகளோடேயே வந்திருக்கிறதா அல்லது யார்மூலமாவது களையப்பட்டு வந்திருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை. சாகித்திய அகாதெமி அமைப்பில்தான் இத்தகு வெளியீட்டுக் கோளாறுகள்.

பதாகை: நீங்கள் வேறு  ஒரு மாநிலத்திற்கு சென்று பணியாற்றி அந்த மொழியை  கற்றுத் தேர்ந்து சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும் மலர்ந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்திலிருந்து  தமிழக அரசின் இருமொழிக் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள். குழந்தைகள் இளவயதிலிருந்தே இன்னும் நிறைய மொழிகளுக்கு அறிமுகம் ஆவதில் அநுகூலம் உண்டா?

பாவண்ணன்: கல்வித்திட்டத்தில் மொழிப்பாடங்களைச் சீரமைப்பதுபற்றிய புதிய சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது என்றே எண்ணுகிறேன். அரசுப்பள்ளிகள் குறைந்துகொண்டே வரும் சூழலில் இந்த நெருக்கடி இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. இப்போதே தனியார் பள்ளிகளில் ஒருவிதமான கல்விமுறையும் அரசு பள்ளிகளில் இன்னொருவிதமான கல்விமுறையும் இயங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பயிற்றுமொழித் தேர்வு உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு மொழிகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றே நினைக்கிறேன். பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் ஒரு பிள்ளையால் தாராளமாக மூன்று மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் பேசுவதும் படிப்பதும் மட்டுமே குழந்தைகளின் உளவளத்தை வளமுடையதாக ஆக்கும். தன்னம்பிக்கை அளவைப் பெருக்கும். அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தலாம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது, விருப்பமொழி என்னும் பாடப்பிரிவில் ஒரு மாணவர் தனக்கு விருப்பமான ஓர் இந்தியமொழியைக் கற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டு காலப் பயிற்சியில் அம்மொழியில் எளிதாக உரையாடமுடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் இருக்கும். இதை நான் எந்த ஊகத்தின் அடிப்படையிலும் சொல்லவில்லை. நேரடியான எடுத்துக்காட்டுகள் உள்ளன. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிவழிப் பள்ளிகள் இன்றும் உள்ளன. பிரான்சின் பாடத்திட்ட அடிப்படையில் அங்கே பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆரம்பக்கல்வி முழுக்க பிரெஞ்சு மொழியில் மட்டுமே எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. என்னுடைய மாமாவின் பிள்ளைகள் அங்கேதான் படித்தார்கள். ஆறாவது வகுப்புக்கு வந்த பிறகுதான் அவர்கள் ஆங்கிலமொழியைக் கற்கத் தொடங்கினார்கள். இரண்டே ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அவர்கள் சொந்தமாகப் பேசவும் எழுதவும் முடிகிற அளவுக்கு தேர்ச்சி பெற்றார்கள். பள்ளியிறுதி வகுப்பில் மற்றொரு உலக மொழியைக் கற்கவேண்டும் என்பதால் ஒருத்தி ஸ்பானிஷ் மொழியையும் இன்னொருவன் ஜெர்மன் மொழியையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொண்டார்கள். பிள்ளைகளுக்கு மொழியை இப்படித்தான் அந்தப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். காலம்காலமாக இந்தக் கற்பித்தல் நடைமுறை அங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மொழிப்பயிற்சி என்பதை இங்கே அரிச்சுவடியிலிருந்து தொடங்கிக் கற்பிப்பதே மரபான வழிமுறையாக உள்ளது. அதற்கு மாறாக, உரையாடலிலிருந்தே ஒரு மொழி கற்பிக்கப்படவேண்டும் என்பது என் கருத்து. சின்னச்சின்ன சொற்களும் சின்னச்சின்ன வாக்கியங்களும் பழகிய பிறகே வாசிப்புக்கும் எழுத்துக்கும் வரவேண்டும். எழுத்து, வாசிப்பு, உரையாடல் என மூன்றையும் ஒரே தருணத்தில் உள்வாங்கிக்கொள்வது குழந்தைப்பருவத்தில் பாரமான செயலாகவே இருக்கும். வீணான மன அழுத்தத்தை உருவாக்கும். தேவையில்லாமல் தன்னம்பிக்கை அளவை அது குறைக்கும்.

வண்ணதாசனுடன்பதாகை: எழுத வந்தபோதும் இப்போதும் உங்களுக்கு பிற எழுத்தாளர்கள் உடனான தொடர்பு எப்படி உள்ளது? உங்கள் படைப்புகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனரா? நீங்கள் பெற்றதும் கொடுத்ததுமான அனுபவங்கள் என்னென்ன?

பாவண்ணன்: நான் எழுத வந்த தொடக்க காலத்தில் மிகக்குறைவான எழுத்தாளர்களுடன் மட்டுமே எனக்குத் தொடர்பிருந்தது. முதலில் நெருக்கமாகப் பழக்கமானவர்கள் இராஜேந்திர சோழனும் பிரபஞ்சனும். அவர்களுடனான நட்பும் உறவும் அப்படியே இன்றும் தொடர்ந்து வருகிறது. என்னுடைய சக எழுத்தாளர்களில் எனக்கு முதலில் அறிமுகமானவர்கள் சுப்ரபாரதிமணியனும் சங்கரநாராயணனும் ஜெயமோகனும். அதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் அறிமுகமானார்கள். மூத்த படைப்பாளி என்கிற வகையில் எனக்கு முதலில் அறிமுகமானவர் ஆ.மாதவன். அவரைத் தொடர்ந்து வண்ணதாசனும் பூமணியும் அறிமுகமானார்கள். அசோகமித்திரனுடனும் சுந்தர ராமசாமியுடனும் மிகவும் பிந்தியே நான் அறிமுகமானேன். தொண்ணூறுகளில் உதகையில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்த ’சோலைகள்’ சந்திப்பிலும் கலாப்ரியா நடத்திய குற்றாலம் பட்டறையிலும் பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். எல்லா உரையாடல்களும் இலக்கியப்படைப்புகள் பற்றிய பொதுவான உரையாடல்களாக இருக்குமே தவிர, என்னுடைய படைப்புகள்பற்றிய தனிப்பட்ட உரையாடலாக அமைந்தது கிடையாது.

விட்டல்ராவுடன் (1)பதாகை: உங்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டது? நீங்கள் சிறுபத்திரிக்கை நடத்தியுள்ளீர்களா?

பாவண்ணன்: இதழாசிரியர்களுடனான உறவை மிகவும் நெருக்கமான ஒன்று எனவும் குறிப்பிடமுடியாது. முற்றிலும் விலகிய உறவு என்றும் சொல்லமுடியாது. என்னால் எழுதமுடியும்போது அவர்களுக்கு எழுதி அனுப்புகிறேன். அவர்களால் வெளியிடமுடியும்போது வெளியிடுகிறார்கள். சில சமயங்களில் ஒன்றிரண்டு இதழ் இடைவெளியிலேயே அனுப்பப்பட்ட என் படைப்பு வெளிவந்துவிடுகிறது. சில சமயங்களில் ஐந்தாறு மாதங்கள் வரைக்கும் கூட காத்திருக்கவேண்டியிருக்கும். நான் சிறுபத்திரிகை எதையும் நடத்தியதில்லை. திசையெட்டும் என்னும் பெயரில் நண்பர் குறிஞ்சிவேலன் மொழியாக்கத்துக்கான ஓர் இதழை குறிஞ்சிப்பாடியிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார். நான் அதற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. ஆனாலும் அவ்விதழின் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற அவருடைய அன்பு விருப்பத்துக்கு நான் உடன்படவேண்டியிருந்தது. அதனால், என் பெயர் அவ்விதழின் ஆசிரியர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது.

பதாகை: நீங்கள் எழுதும் முறை எப்படிப்பட்டது? குறிப்பிட்ட நேரத்தில் தினமும் எழுதுவீர்களா அல்லது உங்கள் மன இயல்புப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவீர்களா?

பாவண்ணன்: அலுவலகத்துக்குச் சென்று திரும்புவதற்கு மட்டுமே பகல்பொழுது முழுவதும் தேவைப்படுகிறது. இரவு ஒன்பதரை முதல் பன்னிரண்டு வரை என்பதே எனக்குரிய நேரம். இலக்கியத்துக்கான நேரம். படிப்பதற்கும் எழுதுவதற்கும் அந்த நேரத்தைத்தான் பயன்படுத்தவேண்டும். எழுதுவதற்கான மனநிலை பொருந்தி வந்திருந்தால் அன்றைய இரவு எழுதுவதற்கான இரவாகிவிடும். அல்லது வாசிப்பதற்கான இரவாகிவிடும்.

பதாகை: இந்த வருடம் வெளியாகும் உங்கள் படைப்புகள்? ஒரு நாவல் எழுதத்தொடங்கி ஐநூறு பக்கம் வந்ததும் நிறுத்தியிருந்ததாகப் படித்திருந்தேன். இந்த வருடம் அது வெளியாகுமா?

பாவண்ணன்: ’மூன்றாவது நதி’ என்னும் தலைப்பில் பத்து புதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று வெளிவரவிருக்கிறது. இதுவரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தொன்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ‘பிரயாணம்’ என்னும் தலைப்பில் வெளிவரவிருக்கிறது. ஒரு நாவல் பாதி வளர்ந்த நிலையில் நின்றுபோயிருப்பது உண்மைதான். இந்த ஆண்டு அதை நெருங்கவே முடியவில்லை. ஓய்வற்ற வேலை. அடுத்த ஆண்டிலாவது தொட்டு முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

பதாகை: கன்னட தலித் இலக்கிய மற்றும் சமூக நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். ராகவேந்திர பாடீலின் தேர் நாவல்கூட சாதியச் சூழலை விவரிக்கும் நாவல்தான். இது போன்ற நூல்களை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி? இது தொடர்பாக இன்னொரு கேள்விதமிழகத்தில் நிலவும் சாதியச் சூழலை உங்கள் படைப்புகளில் போதுமான அளவு பதிவு செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? நீங்கள் என்ன எழுத தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் இது குறித்த எதிர்பார்ப்புகளின் தாக்கம் உண்டா?

பாவண்ணன்: சாதித்தட்டுகளில் இறுதித்தட்டைச் சேர்ந்தவர்களை அடையாளப்படுத்துகிற தலித் என்னும் சொல் புழக்கத்துக்கு வரும் முன்பு தேசிய அளவில் காந்தி ஹரிஜனர்கள் என்னும் சொல்லை உருவாக்கினார். காங்கிரஸ் இயக்கம் ஹரிஜனர்களுக்கு  ஆதரவாக நின்று உழைக்கவேண்டும் என நினைத்தார். நாடு முழுக்க ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. பள்ளிகள் தொடங்குதல், கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், நல்ல இலட்சியங்களுடன் வாழ்வதற்கு துணையாக இருத்தல் என அந்த அமைப்புக்கு நோக்கம் இருந்தது. அந்தச் சங்கத்தை முன்னின்று நடத்தும் பொறுப்பை அவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்று நடத்தவேண்டும் என்று விரும்பினார். அது மூன்று வகைகளில் உதவும் என்பது அவர் எண்ணம். ஒன்று, பல தலைமுறைகளாக தன் மூத்தோர் கடைபிடித்து வந்த தீண்டாமைக் கொடுமைக்கு அது ஒரு பிராயச்சித்தமாக இருக்கும்.  இரண்டாவது, பழகிப்பழகி, மனத்தில் உள்ள சுயசாதிப்பற்றைத் துடைத்தெறிய அது ஒரு வாய்ப்பாக இருக்கும். மூன்றாவதாக, இதுகாறும் தம் மக்களை இழிவுசெய்து வந்த ஒரு கூட்டத்தினர் பழையதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு தம்முடன் கைகோர்த்து நிற்கிறார்கள் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனத்தளவில் ஒரு தன்னம்பிக்கையை வழங்கும். மிகக் குறுகிய காலத்திலேயே காந்தியின் கனவு உண்மையானது. நாடு முழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் தொடங்கப்பட்ட சேவை மையங்கள் மகத்தான வகையில் தம் கடமையை ஆற்றின. சின்ன வயதில் இதை ஒரு நூலில் படித்தேன். அது என் மனத்தில் நன்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. தொடக்கப்பள்ளியில் எனக்கு ஆசிரியராக இருந்த வள்ளலார் பற்றாளரான கண்ணன் அவர்களின் நெருக்கத்தால் சின்ன வயதிலேயே சாதிப்பிரிவுகளில் சிறிதும் நம்பிக்கையோ பற்றோ இல்லாமல் இருக்கப் பழகிக்கொண்டேன். அது அப்படியே நெஞ்சில் ஊன்றிவிட்டது. கடைசித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேலே உள்ள எல்லாச் சாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காலத்தில் சின்ன அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கொடுமையை நிகழ்த்தியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பிதுரார்ஜிதமாக, அந்தப் பாவத்தில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. அந்தப் பங்கை நாம் முதலில் கரைக்கவேண்டும். அத்துடன் அனைவரும் ஒன்றே என்னும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். காந்தி காலத்தில் சேவை மையங்கள் நடத்தப்பட்டதுபோல, நம் காலத்தில் நம்மால் சாத்தியமாகக்கூடிய ஒன்றைச் செய்யவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் செயல்பாட்டாளன் அல்ல. கலைஞன். மொழியில் வாழக்கூடியவன். என் செயல்களை மொழியில் வழியாகவே நிகழ்த்தவேண்டும் என விரும்பினேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் கர்நாடகத்தில் குடியேறியபோது, அது தலித்துகள் எழுச்சியின் உச்சகட்டமாக இருந்தது. முதல் தலித் கவிதை, முதல் தலித் தன்வரலாறு, முதல் தலித் நாவல் என நவீன கன்னட எழுத்துலகில் தலித்துகளின் அடையாளத்தோடு படைப்புகள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருந்தன. மொழியைக் கையாளக்கூடிய ஓர் இலக்கியவாதி என்கிற வகையில், அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். முதல் தலித் கவிதைத்தொகுதியை வெளியிட்டவர் சித்தலிங்கையா. அவருடைய தொகுதியிலிருந்து முக்கியமான கவிதைகளை மொழிபெயர்த்தேன். அவருடன் உரையாடி நான் எடுத்த ஒரு நீண்ட நேர்காணல் நிறப்பிரிகை என்னும் இதழில் வெளிவந்தது. தேவனூரு மகாதேவ எழுதிய நாவலைபசித்தவர்கள்என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். முதல் தலித் சுயசரிதையான அரவிந்த மாளகத்தியின்கவர்ன்மென்ட் பிராமணன்  நூலையும் மொழிபெயர்த்தேன். இப்படியே என் படைப்புகள் தொடர்ந்தன. பல படைப்புகளைப் படித்தாலும் அல்லது என் கவனத்துக்கு வந்தாலும் அவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றையே நான் மொழிபெயர்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறேன். ஒரு படைப்பின் கலைமதிப்பும் மிகவும் முக்கியம் என்பது என் எண்ணம். பசித்தவர்கள் நாவலுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளியில் வெளிவந்ததேர்நாவலை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன். புராணத்தன்மையும் நாட்டாரியல் தன்மையும் சமகாலத்தன்மையும் இணைந்த அந்த நாவலின் கூறுமுறை மிகவும் வசீகரமான ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் சாதியக்கொடுமைகளை அடையாளப்படுத்தும் சிறுகதைகளை நான் தொடக்க காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். இளம்பருவத்தில் நான் எங்கள் ஊர்களில் நான் பார்த்த பல சம்பவங்கள் என் நெஞ்சில் ஆறாத வடுக்களாக உள்ளன. அவற்றிலிருந்து குருதி கசியும் தருணங்களில் அவற்றைப் படைப்புகளாக்குகிறேன். சமீபத்தில், தினகரன் தீபாவளி மலரில் நான் எழுதியகடவுள் அமைத்துவைத்த மேடைசிறுகதை சாதியத்தின் பெயரால் நிகழக்கூடிய கெளரவக்கொலையையே மையமாகக் கொண்டிருப்பதை நீங்கள்  படித்திருக்கலாம்.

பதாகை: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என்று நீங்கள் யாரை எல்லாம் நினைக்கிறீர்கள்பொதுவாக, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாவண்ணன்: என் தலைமுறையை அடுத்து உடனடியாக எழுதத்  தொடங்கியவர்களில் பெருமாள்முருகன், எஸ்.செந்தில்குமார், கண்மணி குணசேகரன், என்.ஸ்ரீராம், உமா மகேஸ்வரி போன்றவர்களும் புதியவர்களில் ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், கீரனூர் ஜாகிர்ராஜா, எஸ்.அர்ஷியா, லட்சுமி சரவணக்குமார், காலபைரவன், சந்திரா போன்றவர்களும் இலங்கை எழுத்தாளர் சயந்தனும் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என எண்ணுகிறேன். யூமா வாசுகி, சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள் தொடக்ககாலத்தில் இருந்த வேகத்துடன் தற்சமயத்தில் வெளிவருவதில்லை என்பது வருத்தக்குரியது.

சில சிறுகதை முகாம்களிலும் பட்டறைகளிலும் பல இளம் எழுத்தாளர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொல்வதுண்டு. எழுதும்போது நம் மகிழ்ச்சி இருமடங்காகிறது. நம் புரிதல் இருமடங்காகிறது. அத்தருணத்தில் நம்மையறியாமலேயே நாம் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கண்டடைகிறோம். ஒரு புதிய புள்ளியில் நம் மனப்படகு கரைசேர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட அனுபவங்களுக்காக நாம் நம் மனத்தைத் திறந்துவைத்திருக்கவேண்டும். நம் மீது குவிகிற கவனத்தின்மீது நம் கவனம் ஒருபோதும் செல்லத் தேவையில்லை. நம் பயணத்தின் திசை எது, எல்லை எது என நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் சொல்வது வழக்கம். அதையே இந்த இடத்திலும் சொல்ல விழைகிறேன்.


பதாகை:வலை தொகுப்பின் பலக் கதைகளில் குழந்தைகள்அவர்களின் உலகமும் , குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆவது என்ற காலப் பயணத்திலும்  குழந்தைமை  உள்ளதுசிறார்களின்  உலகம்/பால்யப் பருவம்அதன் கனவுகள்/நிராசைகள்   உங்களின் எழுத்தை  எந்தளவுக்கு பாதித்துள்ளதுஇப்படி ஒரே தீம்  ஒரு தொகுப்பில் தொடர்ந்து வருவது தன்னிச்சையான அமைவதாஎழுத  ஆரம்பிக்கும் போது பால்யம் குறித்த உங்கள் எழுத்தில் இருந்த பார்வைக்கும் இப்போதுள்ள பார்வைக்கும் ஏதேனும் மாறுதல்களை பார்க்கிறீர்களா? அவ்வுலகம்   குறித்து விரிவான நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா ?

பாவண்ணன்: பால்யத்தில் திளைக்காத படைப்பாளியாக யாருமே இருக்கமுடியாது என்றே எண்ணுகிறேன். எண்பது வயதைக் கடந்துவிட்ட அசோகமித்திரனுடைய சமீபத்திய சிறுகதைத்தொகுதியில் கூட, பால்யத்தில் இருவிரல்களால் தட்டச்சு செய்த நினைவை முன்வைத்து அழகானதொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி தன் எழுபது வயதைக் கடந்த நிலையில் பள்ளிக்கூட கால்பந்தாட்ட நினைவுகளை முன்வைக்கும் நாடார் சார்  சிறுகதையை எழுதியிருந்தார். என்னுடைய ஒவ்வொரு தொகுதியிலும் பால்யம் சார்ந்த ஏதேனும் ஒரு சிறுகதையாவது இடம்பெற்றுவிடுகிறது. அதை என்னால் தவிர்க்கமுடிவதில்லை. உண்மையைச் சொன்னால், இப்போதுதான் பால்ய நினைவுகள் மிகமிகத் துல்லியமாக, அவற்றின் நிறங்களுடன் நினைவில் பொங்கியெழுந்தபடி உள்ளன. நீங்கள் குறிப்பிடுவதுபோலவலைதொகுதியில் பால்யகால நினைவுகளை மையமாகக் கொண்ட கதைகள் சற்றே கூடுதலாகவே இடம்பெற்றுவிட்டன.   தற்செயலாக அப்படி அமைந்துவிட்டன. திட்டமிடல் எதுவும் இல்லை. உங்கள் கேள்வியை ஒட்டி, உண்மையிலேயே பால்யம் தொடர்பாக ஒரு நாவல் எழுதினால் என்ன என்றொரு எண்ணம் இப்போது கிளர்ந்தெழுகிறது. நண்பர்களே, இக்கணத்திலிருந்தே அதை அசைபோடத் தொடங்கிவிட்டேன். காலம் எனக்கு எப்படி துணைசெய்யப் போகிறது எனத் தெரியவில்லை. ஒருவெளை, அப்படி ஒரு நாவலை நான் எழுதினால், அதை பதாகை குழுவினருக்கே சமர்ப்பணம் செய்வேன்.

நன்றி : பதாகையில் தொடர்ந்து எழுதுபவர்களில் ஒருவர், இன்னும் பேசப்பட வேண்டும் என்று தான் விரும்பும் எழுத்தாளர் ஒருவர் குறித்து ஒவ்வொரு காலாண்டும் சிறப்பிதழ் தொகுக்கிறார்.. முதல் காலாண்டிதழில் ஸ்ரீதர் நாராயணன், தான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிறப்பிதழின் பதிப்பாசிரியராக இருந்தார். அடுத்து, நண்பர் சுனில் கிருஷ்ணன், சு வேணுகோபால் குறித்து ஒரு சிறப்பிதழ் தொகுத்தார். இப்போது, தங்களைப் போலவே புதுவையில் பிறந்து புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ரா கிரிதரன் “பாவண்ணன் சிறப்பிதழ்” செய்ய முன்வந்திருப்பதில் ஒரு முக்கியமான் விஷயம் இருக்கிறது. பதாகையில தொடர்புடையவர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள அனைவரும் தமிழகத்துக்கு வெளியே இருக்கிறோம், தமிழும் அதன் மேன்மை வெளிப்படும் தமிழிலக்கியமும்தான் எங்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றன. இது போன்ற சிறப்பிதழ்கள் எங்கள் ஈடுபாட்டுக்கு ஒரு பொருள் தருகின்றன, அது மட்டுமல்ல, சிறிய அளவில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு நெருக்கமாக இருக்கும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதும் அவர்களுடன் உரையாடுவதும் மிகப்பெரும் உற்சாகம் தருகிறது. உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றிகள்.

தாயினும் சாலப்பரிந்து – பாவண்ணனின் ஒட்டகம் கேட்ட இசை கட்டுரை தொகுதி – வாசகனின் பரிந்துரை

தன்ராஜ் மணி

ottagam_kaetta_isai

நிமிடத்திற்கு நூறு அனுபவ பதிவுகள் முகநூலிலும், வலைப்பூக்களிலும் வெளி வரும் இந்நாட்களில் ,அனுபவ பதிவு வ்கை எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமே ஒரு மனச்சோர்வை எனக்களிக்கிறது.

ஆனால் இது பாவண்ணனின் அனுபவ கட்டுரைகள். சொற்களின் நெசவு கைவரப் பெற்றவர் தன் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் பொழுதே இவ்வகை எழுத்துக்களை எவ்வளவு படைப்பூக்கத்துடன் எழுத முடியும் என்பதை உணர முடிகிறது. தன் அனுபவங்களை பதிவுகளாய் வலையேற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இத்தொகுப்பை  அவை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

பெரு நகர வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள், தன் வேலை நிமித்தம் அவர் செல்லும் இடங்களில் அவரை பாதித்த விஷயங்கள் இவையே பல கட்டுரைகளுக்கான கருப்பொருள்.

நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகும் சமூக அவலங்கள்  புறக்கணிக்கும் யதார்த்தங்கள் ,  கண் முன்னால் கரைந்து மறையும் வாழ்க்கை முறை இவையே இக்கட்டுரைகளின் பேசு பொருள்.  

ஒரு சிறுகதையாய் தான் எழுதமுடியாமல் போன அனுபவங்களை கட்டுரையாக்கி இருப்பதாக முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார். இவர் தேர்ந்த கதைசொல்லியாகவும் இருப்பதால் அனைத்து கட்டுரைகளும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஒரு வகையில் அனுபவ கட்டுரை எழுத்தாளர் தன் அனுபவங்களுடன் சேர்த்து தன்னையும் வாசகர் முன் வைக்கிறார். சிலருக்கு சுபாவமாகவே மனிதரின் நற்பண்புகள் மட்டுமே கண்ணில் படும்,  சக ஜீவராசிகள் படும் அல்லல்களும். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

ஒரு புலம் பெயர் பிஹாரிக்கு உதவி புரிதல், சமூகத்தின் ஆகக்கடைசி இடுக்கில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தல், குழந்தையை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் தாயின் துயரை தானும் அடைதல் என பாவண்ணன் எனும் மனிதரின் நல்லியல்புகள் இக்கட்டுரைகளின் பேசுபொருளையும் தாண்டி வெளிப்படுகின்றன.

சமூக பொறுப்புணர்வோடு , பிறருக்கென எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்  நேரம் செலவழிப்பவர்களையும் காண்பது மிக மிக அரிதாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலும் பாவண்ணன் போன்றோர் மனிதமும் , அன்பும் , நெகிழ்வுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே பெரும் ஆசுவாசமளிக்கிறது.

நக்கலும் , நையாண்டியும் , வலிந்து வரவழைக்கப்பட்ட நகைச்சுவையும் இல்லாத அனுபவ கட்டுரைகளை நான் படித்து பல காலங்கள் ஆயிற்று. இவை எதுவுமே இக்கட்டுரைகளில் இல்லை என்பது எனக்கு பேருவகை அளித்தது.

இக்கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நெருங்கிய நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிய நிறைவு. விடை பெறும்போது பிரிய மனதே இல்லாமல், குலுக்கிய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் , அவர்களின் பிரியம் உங்களை நெகிழச் செய்தால், இந்த கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும்.