கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்

பீட்டர் பொங்கல்

இத்தொகுப்பில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’, ஆகிய இரு கதைகளும் கார்த்திக் பாலசுப்ரமணியனை நம்பிக்கை மிகுந்த சிறுகதையாளராக அடையாளப்படுத்துகின்றன, என்கிறார் எம். கோபாலகிருஷ்ணன், தன் முன்னுரையில். இவை போக, ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளையும் மென்பொருள் துறை சார்ந்த களம் காரணமாய் முக்கியமான கதைகளாய் குறிப்பிடுகிறார் (‘ஐ போன் எக்ஸ்’ கதையும் இந்த வரிசையில் வருவதே). இவை போக ‘டொரினா’, ‘விசுவாசம்’ கதைகளும் கவனிக்கத்தக்கவை. பிற கதைகளான ‘யயகிரகணம்’, ‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’, ‘வழிபோக்கன்’, ‘நிழல் தேடும் ஆண்மை’, வேறு சிலரை ஈர்க்கலாம்.

அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்/ திங்களைப் பாம்புகொண் டற்று,’ என்ற குறளின் உரையில் ‘யயகிரகணம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி (கூகுளில் தேடும்போது அது ஒன்றுதான் முதல் பக்கங்களில் கிடைக்கிறது). குறள் அளிக்கும் பொருளில் பொருத்தமாகவே தலைப்பு அமைந்திருக்கிறது. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றும் கதையை குறள் விளக்க பொருள் கொண்டு வாசித்தால், கனம் கொண்டதாகவும் நுட்பமானதாகவும் தோன்றுகிறது. ஆனால் கதையின் வாசிப்புக்கு தலைப்புச் சொல் இந்த அளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. வாசகன் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’ சிறுகதை முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் கொண்டதாக  இருக்கிறது. ‘யயகிரகணம்’ கதையின் தலைப்புச் சொல் நாம் வாசித்த கதையை வேறு வகையில் வாசிக்கச் செய்கிறது என்றால் இந்தக் கதையின் இறுதியில் வரும் சொல் நாம் வாசித்த எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விடுகிறது. ஒரு சொல் இத்தனை முக்கியமாக இருக்கும்போது அது உத்தி சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உணர்வு சார்ந்ததாகவும் இருக்கும்போது அது அளிக்கும் நிறைவு வேறு வகைப்பட்டது.

கார்த்திக் கதைகள் பலவும் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறான ஒரு பார்வையை, முடிவை அளிக்கின்றன, அதைச் செய்யும்போது உணர்வுத் தளத்தைத் தொடும்போது வெற்றி பெறவும் செய்கின்றன. ஆனால் அதே சமயம் கதைசொல்லி தன்னை மையம் கொண்டவராய் பல கதைகளில் இருப்பதால், நம் புரிந்துணர்வுகளுக்கான பாத்திரம் வேறொரருவராய் இருக்கும்போது போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் நொய்டா வழிகாட்டியை நாம் கடைசி வரை வீடு பார்த்துக் கொடுக்கும் ப்ரோக்கர் என்றே நினைக்கிறோம். ஆனால் கடைசி வரை அவனைப் பற்றிப் பேசாமல் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் கதைசொல்லியால் முடிவு ஒரு ஆச்சரிய உணர்வாய் மட்டுமே அமைந்து விடுகிறது. இலக்கிய வாசிப்பில் நம் எதிர்பார்ப்புகள் அதனோடு நிற்பதில்லை. இந்தத் தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக பலராலும் சொல்லப்படும் ‘இரு கோப்பைகள்’ கதையிலும் கதைசொல்லியின் தற்கூற்றுப் பார்வை ஒரு குறையாகவே அமைகிறது. சாவு வீட்டில் அழுகையைப் பார்ப்பவன், அந்த வீட்டில் உள்ளவர்களின் துயரத்தை நமக்கு கடத்தித் தருகிறானா அல்லது அவனது உணர்வுகளைச் சொல்லுவதோடு நின்று விடுகிறானா என்பதில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

மேற்சொன்ன கதைகளைப் போலவே ‘நிழல் தேடும் ஆண்மை’ கதையும் கடைசி வரி திருப்பத்தில் அதன் உரிய பொருள்படுகிறது. மனைவியைப் பிரிந்த கணவனின் பிரிவாற்றாமைதான் கதை என்கையில் கதையின் முடிவில் நாம் அவன் உணர்வுகள் குறித்த புரிதலில்தான் அக்கறை கொண்டிருக்கிறோம், அவனது மனநிலை நாம் அறிந்த ஒன்றே. அதன் ஆச்சரியங்கள் நிறைவளிப்பதில்லை.

மென்பொருள் துறை சார்ந்த கதைகள் என்ற அளவில், ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’, ‘ஐ போன் எக்ஸ்’, ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே வசதியானவர்கள் வாழ்க்கை குறித்து புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட கதைகள் தமிழில் அவ்வளவாக காணப்படுவதில்லை. பொருளாதாரச் சிக்கல்கள், பணம் மட்டும் போதுமா, போன்ற வகையில் எழுதப்பட்ட கதைகளும் செல்கின்றன. மென்பொருள் துறையில் உள்ளவர்கள் வாழ்க்கை முறை சாதாரணர்களின் பார்வையில் பணக்காரத்தனமாக இருக்கிறது என்றாலும் அவர்களில் பலரும் மத்திய வர்க்கத்துக்கு சற்று உயரே சென்றவர்கள், அவ்வளவே. அடிப்படையில் மத்திய வர்க்கத்தினரின் அத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன.

டெட்லைன்கள், அவற்றை வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகள் அளிக்கும் அழுத்தம், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத பெண் நிலை, வேலைக்குப் போகும் பெண்ணைப் பொதுவாகவே சமூகம் எதிர்கொள்ளும் விதம் என்று பலவற்றை ‘பார்வை’ தொடுகிறது. மென்பொருள் துறைக்கே உரிய பிரச்சினைகளைப் பேசும் இக்கதையின் முடிவும் தாக்கம் கொண்டதாக இருக்கிறது. ‘லிண்டா தாமஸ்’ கதையும் மென்பொருள் துறையில் மட்டுமே நிகழக்கூடியது. தன் பணியை வேறொருவருக்கு பயிற்சி அளித்து தாரை வார்ப்பவர் பற்றிய கதை- இதன் பலகீனம், கடைசி வரியில்தான் கதை இன்னது என்று நாம் தெரிந்து கொள்கிறாம். இது கார்த்திக்கின் பலகீனமும்கூட.

‘பொதுப்புத்தி’, ‘ஐபோன் எக்ஸ்’ இரு கதைகளிலும் வரும் இரு முக்கிய பாத்திரங்கள் மென்பொருள் துறையில் கேட்டுக்கு வெளியே நிற்பவர்களும் உள்ளே செல்பவர்களும். இருவருக்கும் உள்ள இடைவெளி இக்கதைகளில் மிக நன்றாகவே வெளிப்படுகிறது, ‘பொதுப்புத்தி’ கதையைவிடக் கூர்மையாய் ‘ஐபோன் எக்ஸ்’ கதையில். ‘ஐபோன் எக்ஸ்’ கதையில் உள்ள நுண்விவரணைகளில் நாம் நல்ல ஒரு கதைசொல்லியைப் பார்க்கிறோம். பொதுவாகவே கதைகள், அவற்றின் முடிவுகள், களம் என்று குறைகள் சொன்னாலும் கார்த்திக் பாலசுப்ரமணியனின் கதைசொல்லலில் குற்றம் காண முடியாது. பெரும்பாலான சமயம் அவரது கதைகள் சுவாரசியமளிக்கத் தவறுவதில்லை.

இலக்கிய வகைமை என்ற அளவில் ‘டொரினோ’ கதை ஏற்கனவே வாசித்து வாசித்து அலுத்துவிட்ட அக்காக்களைப் பற்றியதாக இருப்பதால் முக்கியமில்லாததாக இருக்கலாம். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தவிர, காதலிகளாக இல்லாதபோது, அக்கா, தங்கை, அத்தை, சித்தி, என்று உறவுகளாய்தானே பெண்கள் இருக்க முடியும்? அந்த உறவுகளுக்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்து மறைகிறார்கள் அவர்கள். இவர்களைப் பற்றி எழுதக்கூடாது என்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி பேசப்படாமலே மறையும். எல்லாருக்கும் ஒரே கதைதான் என்றாலும் எத்தனை அம்மா கதைகள் இருக்கின்றனவோ அத்தனை அக்கா கதைகளுக்கும் அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது செண்டிமெண்ட்டாக இருக்கலாம், ஆனால் அக்காக்கள் விஷயத்தில் செண்டிமெண்ட் உண்மையான உணர்வாகவே இருக்கிறது.

‘டொரினோ’ கதை குறித்து எம். கோபாலகிருஷ்ணன் எழுதியிருப்பது குறித்து வேறுபடுகிறேன் என்றால், ‘முடிச்சுகள்’ கதைக்கு அவர் அளிக்கும் வாசிப்பு குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே அளிக்கக்கூடிய வாசிப்பு அது. சாதாரண கதையாக நாம் வாசித்தது எவ்வளவு அபூர்வமான கதையாக இருக்கக்கூடியது என்பதை எம். கோபாலகிருஷ்ணன் எழுதுவது உணர்த்துகிறது.

‘இரு கோப்பைகள்’ கதையில் இன்றுள்ள இணைய இலக்கிய உச்சத்தின் தளத்தைத் தொட்டு விடுகிறார் கார்த்திக் பாலசுப்ரமணியன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு கதைக்காக மட்டுமே இவரை நம்பிக்கைக்குரிய எழுத்தாளராக கருதலாம். ஆனால் அதற்கு முன் அவர் கடைசி வரி ஆச்சரியங்கள் அளிப்பதைத் தவிர்க்க ஒரு வழி கண்டாக வேண்டும். தனிப்பட்ட முறையில், ‘விசுவாசம்’ கதையில் அவரது ஆற்றல்கள் அத்தனையும் பொருந்தி வருவதாய் காண்கிறேன். அதன் கடைசி வரி ஆச்சரியம் கதையில் ஒரு திருப்பமாக அமைந்தாலும் கதைக்கு அன்னியமாக இல்லை, ஒரு வகையில் அந்த முடிவை நோக்கிதான் கதை போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கச் செய்கிறது, கதைகூறலும் யார் மீது அழுத்தம் விழ வேண்டுமோ அவரையே மையம் கொண்டிருக்கிறது. தலைப்பும்கூட கதையின் மையத்திலிருந்து எழுகிறது, அது ஒரு மந்திரத்தன்மை கொண்ட திறப்புச் சாவியாக இல்லை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.